ஆற்றில் கிடந்தும்
(பட்டினத்தார் பாடலின் வழியாக “மறு கரை” பற்றி ஒரு சிந்தனை)
நம்மில் பெரும்பாலோர் பின்பற்றுவது பக்தி மார்க்கம்.
ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபடுவது, வீட்டில் பூஜை செய்வது, சடங்கு, சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பது என, இவற்றில் மனத் திருப்தியோடு கலந்து கொள்கிறோம்.
‘எல்லாம் அவன் செயல்’ என்பதையும் புரிந்துகொள்கிறோம். ஆனாலும், மனம் தேவையற்ற கவலைகளாலும் பயத்தாலும் அல்லல்படுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.
அதிலும் முதுமை வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்; ‘கவலைப்படுவதே’ முக்கிய வேலையாக மாறிவிடுகிறது.
இதற்குத் தீர்வுதான் என்ன?
பட்டினத்தார் காட்டும் ஒரு கேள்வி
பட்டினத்தார் ஒரு பாடலில் நம்மைத் திட்டுவதுபோலத் திட்டி, மறைமுகமாக ஒரு வழியையும் காட்டுகிறார்.
வாழ்வியல் தத்துவத்தைப் பற்றி பட்டினத்தார் பல கோணங்களில் பாடியுள்ளார்.
“ஒன்றென்றிரு; தெய்வம் உண்டென்றிரு...” என்று பாடும்போது, மனத்திற்கும் நெஞ்சிற்கும் உபதேசம் செய்வதுபோல் அறிவுரை கூறுகிறார்.
ஆனால், அவரே இன்னொரு பாடலில் மனதைக் கடுமையாகக் கடிந்து கொள்கிறார்.
“நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே!
மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?
ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!”
இந்தப் பாடலைப் படிக்கும்போது நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
பட்டினத்தார் உண்மையில் தனது மனத்தைக் கடிந்து கொண்டாரா? அல்லது நம்மைத்தான் — குறிப்பாக பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டவர்களை — கண்டனம் செய்கிறாரா?
இரண்டாவது வரியில்,
“மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை”
என்று கூறியவர், கடைசி வரியில்,
“படித்துறை இருந்தும் வழியறியாமல் அலைகின்றையே!”
என்று மட்டும் சொல்லியிருக்கலாம்.
அதற்குப் பதிலாக,
“ஆற்றில் கிடந்தும்...”
என்ற வார்த்தையையும் சேர்த்து,
“ஆற்றில் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றையே!” என்று ஏன் கூறினார்?
அதிலும் “ஆற்றில் கிடந்தும்” என்ற வார்த்தையில் ஒரு அழுத்தம் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.
கூடவே, குடும்ப வாழ்க்கையை ஏன் ஆற்றோடு ஒப்பிடுகிறார்?
நிச்சயமாக இதற்குப் பின்னால் ஏதாவது காரணம் இருக்கும்.
அது என்ன?
ஐந்து சகோதரர்களின் கதை
பட்டினத்தார் இந்தப் பாடலின் மூலம் பக்தர்களைக் கடிந்து கொள்கிறாரோ என்று முதலில் தோன்றினாலும், “ஆற்றில் கிடந்தும்” என்ற வார்த்தைகளைப் பார்த்தபோது, அவர் வேறு ஏதோ ஒன்றைக் குறிப்பிட விரும்பியிருக்கலாம் என்று தோன்றியது.
அதைப் பற்றி சிந்தித்தபோது, தென்கச்சி திரு. சுவாமிநாதன் அவர்கள் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.
ஒரு வீட்டில் ஐந்து சகோதரர்கள் இருந்தனர். உண்மையில் அவர் குறிப்பிட்டது ஐந்து விரல்களை.
ஒருநாள் அந்தச் சகோதரர்களுக்குள் ஒரு சந்தேகம் வந்துவிட்டது:
“நம்மில் யார் பெரியவர்?”
கட்டை விரல் சொன்னது:
“நான்தான் பெரியவன். கிணற்றில் நீர் இறைக்கும்போது நீங்கள் நால்வரும் ஒரு பக்கம் கயிற்றைப் பிடிக்கிறீர்கள். நான் ஒருவன் மட்டுமே மறுபக்கம் கயிற்றைப் பிடிக்கிறேன். அப்படியானால் நான்தானே பெரியவன்? அது மட்டுமல்ல; பத்திரங்களில் எனது ரேகையை மட்டும்தானே நம்புகிறார்கள்!”
சுட்டு விரல் சொன்னது:
“நீ சொல்வது உண்மைதான். ஆனால், மற்றவர்கள் தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கு மட்டும்தானே உள்ளது! எனவே நான்தானே பெரியவன்?”
நடு விரல் சொன்னது:
“அதெல்லாம் எதற்கு? எல்லாரும் எழுந்து நிற்போம். யார் பெரியவர் என்பது தானே தெரிந்துவிடும்!”
மோதிர விரல் சொன்னது:
“எது எப்படியோ, எல்லாரும் மோதிரத்தை என்மீதுதானே போட்டு அழகு பார்க்கிறார்கள். அப்படியானால் எல்லாரையும் விட நான்தானே உயர்ந்தவன்?”
சுண்டு விரலுக்குத் தன்னைப் பற்றி பெருமையாகச் சொல்ல எதுவும் தெரியவில்லை.
இதைக் கண்டு மற்றவர்கள் எள்ளி நகையாடினர். அந்தக் கடைக்குட்டி சோர்வாக ஓர் மரத்தடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தது. அப்போது அங்கு வந்த நாரதர் அதன் காதில் ஏதோ சொன்னார்.
அதைக் கேட்டதும் சுண்டு விரல் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து சொன்னது: “நீங்கள் ஆயிரம் சொல்லலாம். ஆனால், கடவுளுக்கு அருகில் யார் இருக்கிறார் என்பதுதானே முக்கியம்? நாம் எல்லாரும் சேர்ந்து கடவுளை வணங்கும்போது நான்தானே முதலில் நிற்கிறேன்! அப்படியானால் நான்தானே பெரியவன்?”
நாரதர் என்ன சொல்லியிருப்பார்?
“உங்கள் ஐந்து பேரில் நீ மட்டும்தான் கடவுளுக்கு அருகில் இருக்கிறாய். அது தெரியாமல், உன் அண்ணன்களிடம் இருக்கும் தகுதிகளைப் போல் உன்னிடம் எதுவும் இல்லையே என்று ஏன் புலம்புகிறாய்?” என்று சொல்லியிருக்கலாம்.
“ஆற்றில் கிடந்தும்” — இதன் பொருள் என்ன?
இந்தக் கதை நினைவுக்கு வந்ததும், பட்டினத்தார் ஏன் “ஆற்றில் கிடந்தும்” என்று குறிப்பிட்டார் என்பது எனக்குச் சற்றுப் புரிந்தது.
மேலே சொன்ன கதையில் ஐந்து சகோதரர்கள். இங்கே, நம்முடைய ஆன்மிகப் பயணத்தில் நான்கு வழிகள் இருப்பதாகக் கொள்ளலாம்:
ஞானத்தைத் தேடுபவர்,
கர்மத்தில் ஈடுபடுபவர்,
தியானத்தில் கவனம் செலுத்துபவர்,
பக்தியில் நாட்டம் கொண்டவர்.
பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்ட ஒருவர், மற்றவர்களைப் பார்த்து,
“என்னால் அவர்களைப்போல் ஞான மார்க்கத்தில் ஈடுபட முடியவில்லையே!
கர்ம மார்க்கத்தில் அவர்களைப்போல் செயல்பட முடியவில்லையே!
தியானத்திலும் என்னால் நிலைத்திருக்க முடியவில்லையே!”
என்று நினைக்கலாம்.
எனது புரிதலில் “மறு கரை”
இனி வருவது பட்டினத்தார் பாடலின் நேரடி விளக்கம் அல்ல.
“மறு கரை” என்ற உருவகத்தை அடிப்படையாகக் கொண்டு, அத்வைதக் கோணத்தில் நான் புரிந்துகொண்ட சில சிந்தனைகளை மட்டுமே இங்கே பகிர்கிறேன்.
பட்டினத்தார் பக்தனிடம்,
“மற்றவர்களைப் பார்த்துக் கவலைப்படாதே.
அவர்கள் தங்களுக்குரிய வழிகளில் தேடிச் செல்கிறார்கள். இறுதியில் இந்த ஆற்றை அடைந்துதான் மறுகரையை அடைய வேண்டும்.
நீயோ ஏற்கனவே இந்த ஆற்றில் இறங்கிவிட்டாய். எதிரே படித்துறை இருக்கிறது. அதில் ஏறி கரையை அடைவதை விட்டுவிட்டு, எதற்காக இங்கும் அங்குமாக அலைகிறாய்?”
என்று சொல்வதுபோல் எனக்குத் தோன்றியது.
இதில் “ஆற்றில் கிடந்தும்” என்ற வார்த்தைதான் என்னை மிகவும் கவர்ந்தது.
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு:
“கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தானாம்!”
கையில் இருக்கும் வெண்ணையை உருக்கினால் நெய் கிடைத்துவிடும்.
ஆனால், அதைச் செய்யாமல், மற்றவர்கள் நெய் வாங்கக் கடைக்குச் செல்வதைப் பார்த்து,
“என்னிடம் நெய் வாங்கப் பணம் இல்லையே!” என்று புலம்பிக்கொண்டிருப்பது எவ்வளவு வேடிக்கையானது?
அதைப்போலத்தான் நாமும்.
நமக்குக் கிடைத்திருக்கும் பக்தி, சரணாகதி, இறைநம்பிக்கை ஆகியவற்றை பயன்படுத்தி முன்னேறுவதை விட்டுவிட்டு, மற்றவர்கள் பின்பற்றும் வழிகளைப் பார்த்து நம்மிடம் அது இல்லையே என்று கவலைப்படுகிறோம்.
அதைத்தான் பட்டினத்தார்,
“ஆற்றில் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றையே!” என்று சுட்டிக்காட்டுகிறாரோ என்று தோன்றியது.
ஆறும் மனித வாழ்க்கையும்
ஆற்றுக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை இருக்கிறது.
ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். மனிதனின் மனத்திலும் எண்ணங்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள் என ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கும்.
வெள்ளம் வரும்போது ஆற்று நீர் கலங்கி காணப்படும். அதேபோல், மனிதனிடமும் கோபம், பயம், ஆசை போன்ற உணர்ச்சிகள் பொங்கி வழியும்போது, மனத்தில் தேவையற்ற எண்ண அலைகள் உருவாகின்றன.
ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது.
மனமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஆனால் ஆற்றின் நோக்கம் கடலை அடைவது. மனத்தின் நோக்கம் என்ன?
இதுதான் நாம் நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
இரண்டு கரைகள் உண்டா?
ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் இருக்கின்றன. மனித வாழ்க்கைக்கும் இரண்டு கரைகள் இருக்கின்றனவா?
“மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை” என்று பட்டினத்தார் கூறும்போது,
“இதே கரையில் மீண்டும் மீண்டும் பிறக்காதே; அடுத்த பிறவியிலாவது மறுகரையில் பிறக்க முயற்சி செய்”
என்று அவர் கூறுகிறாரா?
இது பட்டினத்தாரின் நேரடி பொருள் என்று நான் கூறவில்லை.
ஆனால், இந்த உருவகம் ஒரு சிந்தனைக்கு வழிவகுக்கிறது.
பொருள் சார்ந்த கரையும் அருள் சார்ந்த கரையும்
வள்ளுவர் கூறுகிறார்:
“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.”
— குறள் 374
இக்குறளின் மரபுவழிப் பொருள், செல்வம் உடையராதலும் தெளிந்த அறிவுடையராதலும் வேறுபட்ட ஊழால் அமையும் என்பதாகும்.
ஆனால், “மறு கரை” என்ற உருவகத்தைப் பற்றி சிந்திக்கும்போது, இதனை என் ஆன்மிகப் புரிதலில் வேறு விதமாகவும் பார்க்கத் தோன்றியது.
ஒரு கரை — பொருளை முதன்மையாகக் கொண்ட வாழ்க்கை.
மற்றொரு கரை — அருளை முதன்மையாகக் கொண்ட வாழ்க்கை.
நாம் பெரும்பாலும் பொருள் சார்ந்த வாழ்க்கைக் கரையில்தான் பிறந்து வளர்கிறோம்.
அதிலேயே பொருளைத் தேடுகிறோம். அதிலேயே ஓடுகிறோம். பல நேரங்களில் அதிலேயே கவலையோடும் பயத்தோடும் வாழ்கிறோம்.
அதிலேயே இறந்தும் போகிறோம்.
ஆனால், அந்த வாழ்க்கையிலிருந்து விலகி, அருளை நோக்கி நகரும்போது என்ன நிகழ்கிறது?
ஆசைகள் தளரத் தொடங்குகின்றன.
பற்றுகள் குறையத் தொடங்குகின்றன.
“நான்” மற்றும் “எனது” என்ற உணர்வு மெல்ல மெல்ல பலவீனமடைகிறது.
அதுவே எனக்குப் “மறு கரையை நோக்கிய பயணம்" எனத் தோன்றியது.
அருட்செல்வமே உண்மையான செல்வம்
அதனால்தான் வள்ளுவர் கூறுகிறார்:
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.”
— குறள் 241
நம்மை ஆட்டுவிக்கும் பொருட்செல்வம் நிறைந்த கரையிலிருந்து விலகி, அருட்செல்வம் நிறைந்த கரையை நோக்கிச் செல்வதே நமது ஆன்மிக நோக்கமாக இருக்க வேண்டும்.
ஏனெனில், பொருளைப் பற்றிய ஆசை தொடர்ந்து புதிய பற்றுகளை உருவாக்குகிறது.
அருளை நோக்கிய பயணம், அந்தப் பற்றுகளைத் தளரச் செய்கிறது.
“மறு கரை” — பிறவிக்குப் பிந்தைய இடமா?
இங்கே இன்னொரு கேள்வி எழுகிறது.
மறு கரையை அடைந்துவிட்டால் என்ன நடக்கும்?
இதற்கு நான் புரிந்துகொண்ட விதத்தில் மூன்று நிலைகளைப் பார்க்கிறேன்.
1. பயணம் தொடங்கியிருக்கிறது; ஆனால் முழுமை அடையவில்லை
ஒருவர் ஆன்மிக நாட்டம் பெற்றிருக்கலாம்.
பக்தி வளர்ந்திருக்கலாம்.
பொருளாசை குறைந்திருக்கலாம்.
ஆனால், பழைய மனப்பதிவுகளும் பற்றுகளும் முழுமையாக நீங்காமல் இருக்கலாம்.
அந்த நிலையில் மரணம் ஏற்பட்டால், அந்த ஆன்மிக நாட்டம் அடுத்த பிறவியிலும் தொடரும் என்ற நம்பிக்கை இந்திய ஆன்மிக மரபுகளில் காணப்படுகிறது.
2. பந்தங்கள் பெருமளவு நீங்கிய நிலை.
ஒருவருடைய ஆசைகளும் பற்றுகளும் பெருமளவு தளர்ந்து, தனிப்பட்ட விருப்பத்தால் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற உந்துதல் இல்லாத நிலை ஏற்படலாம்.
அப்படிப்பட்டவரின் பிறப்பு, சாதாரணமான ஆசை–பற்று சார்ந்த பிறவியிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.
ஞானிகள், சித்தர்கள் போன்ற மகான்களின் பிறப்பை இவ்வகையில் சில ஆன்மிக மரபுகள் விளக்குகின்றன.
இதை நான் ஒரு ஆன்மிகப் புரிதலாகவே பார்க்கிறேன்; கட்டாயமான கோட்பாடாக அல்ல.
3. முழுமையான விடுதலை
இறுதியில், தனித்த “நான்” என்ற அடையாளமே முற்றிலும் நீங்கும்போது, அதுவே மோட்சம்.
அத்வைதத்தின் பார்வையில் இதை,
“ஜீவாத்மா எங்கோ சென்று பரமாத்மாவுடன் கலந்து விடுகிறது”
என்று மட்டும் கூறுவது துல்லியமான விளக்கம் அல்ல.
ஏனெனில், அத்வைதத்தின் அடிப்படைப் புரிதலில் ஜீவனுக்கும் பிரம்மத்திற்கும் உண்மையில் இரண்டு தன்மை இல்லை.
மாயையாலும் அவித்யையாலும் தனித்தன்மை இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தத் தவறான அடையாளம் நீங்கும்போது, “நான் வேறு; இறைவன் வேறு” என்ற உணர்வே மறைகிறது.
அதுவே ஞானம். அதுவே விடுதலை.
உண்மையில் இரண்டு கரைகள் இல்லை இதனால் ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகிறது.
“மறு கரை” என்பது உண்மையில் எங்கோ இருக்கும் ஒரு புவியியல் இடம் அல்ல.
இரண்டு கரைகள் என்று சொல்வதும் ஒரு உருவகம் மட்டுமே.
ஒரு நிலையில் நாம் பந்தங்களில் சிக்கியிருக்கிறோம்; மற்றொரு நிலையில் பந்தங்களிலிருந்து விடுபடுகிறோம்.
எனவே,
“பந்தங்களில் மாட்டிக்கொண்ட நிலை”
மற்றும்
“பந்தங்களிலிருந்து விலகிவிட்ட நிலை”
என்று சொல்வதே இன்னும் பொருத்தமாக இருக்கலாம்.
இறுதியில், அத்வைதத்தின் பார்வையில் “மறு கரை” கூட இல்லை; கரையற்ற நிலையே உண்மை.
படித்துறைக்கு பல வழிகள்
படித்துறையில் ஏறுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் காட்டுகின்றனர்.
பதஞ்சலி,
“ஈஸ்வர ப்ரணிதானம்”
என்று கூறுகிறார் — இறைவனிடம் தன்னை அர்ப்பணிப்பது ஒரு வழி.
பத்திரகிரியார்,
“ஓசைமணி தீபத்தில் ஒன்றிவிடு”
என்று கூறுகிறார்.
திருவள்ளுவர்,
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”
என்று கூறுகிறார்.
வழிகள் பல. ஆனால் நோக்கம் ஒன்றுதான்: பற்றிலிருந்து விடுபடுதல்.
எளிய சரணாகதி
இவை எதுவும் நம்மால் செய்ய முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் இறைவனை வணங்கும்போது பொருள் சார்ந்த எதையும் கேட்காமல் இருக்க முயற்சி செய்யலாம்.
அதற்குப் பதிலாக இப்படிக் கேட்கலாம்:
“இறைவா, நீ எதைக் கொடுத்தாலும் அதை உன் பிரசாதமாக ஏற்றுக்கொள்கிறேன். ஒருவேளை நீ கொடுப்பது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தாலும், அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை மட்டும் எனக்குக் கொடு.”
இது ஒரு சிறிய பிரார்த்தனை;
ஆனால் அதன் பின்னால் ஒரு பெரிய மாற்றம் இருக்கிறது.
“எனக்கு இது வேண்டும்; அது வேண்டாம்” என்ற மனநிலையிலிருந்து,
“நீ கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்”
என்ற மனநிலைக்கு நாம் நகர்கிறோம். அதுதான் சரணாகதியின் தொடக்கம்.
“ஆற்றில் கிடந்தும்...”
இப்போது பட்டினத்தாரின் அந்த வரியை மீண்டும் படித்துப் பார்ப்போம்:
“ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!”
நாம் ஏற்கனவே ஆற்றில் இருக்கிறோம்.
படித்துறையும் நமக்கு எதிரிலேயே இருக்கிறது.
ஆனால், நாம் மட்டும் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.
மற்றவர்கள் எந்த வழியில் செல்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
“அவர்களுக்கு ஞானம் இருக்கிறது; எனக்கு இல்லை.”
“அவர்களால் தியானம் செய்ய முடிகிறது; என்னால் முடியவில்லை.”
“அவர்கள் பெரிய சாதனை செய்துவிட்டார்கள்; நான் ஒன்றும் செய்யவில்லை.”
என்று நம்மை நாமே குறை கூறிக்கொள்கிறோம்.
அதற்குப் பதிலாக, பட்டினத்தார் நம்மிடம் சொல்வது இதுவாக இருக்கலாம்:
“நீ இருக்கும் இடத்திலிருந்தே தொடங்கு. உனக்குக் கிடைத்த வழியிலேயே தொடங்கு.
மற்றவர்களைப் பார்த்துக் கவலைப்படாதே. எதிரிலேயே படித்துறை இருக்கிறது.
ஒரு படி ஏறு. பிறகு இன்னொரு படி ஏறு. அவ்வளவுதான்.”
அந்த முதல் படி நம்பிக்கையாக இருக்கலாம்.
அடுத்த படி சரணாகதியாக இருக்கலாம்.
அதற்கடுத்த படி பற்றின்மையாக இருக்கலாம்.
இறுதியில், “நான் ஏறுகிறேன்” என்ற எண்ணம்கூட இல்லாமல் போகலாம்.
அப்போது...ஆறு எங்கே? கரை எங்கே? கரையேறியது யார்?
என்று கேட்க வேண்டியதில்லை.
அதுவே, ஒருவேளை, “மறு கரை” என்ற உருவகத்தின் உண்மையான நோக்கமாக இருக்கலாம்.
No comments:
Post a Comment