Saturday, 5 September 2026

திருமந்திரம் 85




       திருமந்திரம் 85

“நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.”
— திருமந்திரம் 85
மேலே உள்ள பாடலின் கடைசி இரண்டு வரிகளில் வரும் வார்த்தைகளை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சுவாசமும் மந்திரமும்
நமது சுவாசத்திற்கும், “ஓம் நமசிவாய” எனும் மந்திரத்திற்கும் இடையே ஓர் ஒத்திசைவு இருப்பதாக நான் கருதுகிறேன்.
சுவாசம் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் பொதுவாக ஒரே அளவு நேரத்தில் நடைபெறுவதில்லை. பயிற்சியில், உள்ளிழுக்கும் நேரத்தைவிட வெளிவிடும் நேரத்தை நீட்டிக்கலாம். அந்த வகையில் 1:2 என்ற விகிதத்தை எடுத்துக்கொள்ளலாம்.
“ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தையும் அந்த 1:2 விகிதத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்.
அதாவது,
உள்ளிழுக்கும் மூச்சு — “ஓம்”
வெளிவிடும் மூச்சு — “நமசிவாய”
என்று மனதிற்குள் மௌனமாக உச்சரிக்கலாம்.
மற்ற மந்திரங்கள் அனைத்தும் இதே 1:2 விகிதத்தில் அமைய வேண்டிய அவசியமில்லை. பயிற்சிக்காக, தேவையான அளவில் சிறிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
உதாரணமாக:
அயம் ஆத்மா
ஓம் சரவணாய
ஓம் கிருஷ்ணாய
ஓம் வெங்கடேசாய
நமோ நாராயணாய
ஓ லார்ட்
ஓ ஜீசஸ்
போன்ற மந்திரங்களையும், அவரவர் நம்பிக்கைக்கும் வழிபாட்டு முறைக்கும் ஏற்றவாறு சுவாசத்துடன் இணைத்துப் பயிற்சி செய்யலாம்.
சுவாசத்துடன் மந்திரப் பயிற்சி
இந்த முறையை பிராணாயாமப் பயிற்சியின்போதும் பயன்படுத்தலாம்.
அதேபோல், நாம் சும்மா இருக்கும் மற்ற நேரங்களிலும், சுவாசம் இயல்பாக வந்து போவதைக் கவனித்துக் கொண்டு, அதனுடன் மந்திரத்தையும் மனதிற்குள் இணைத்துக் கொள்ளலாம்.
இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், அது நமது விழிப்பு உணர்வுக்கும் ஆழ்மனப் பதிவுகளுக்கும் இடையே ஒரு வகையான உள் பாதுகாப்பு அரணாக அமையலாம்.
அதன் காரணமாக, ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் எதிர்மறை உணர்ச்சிகள் எழும்பும்போது, அவற்றுடன் உடனடியாக ஒன்றிப் போகாமல் அவற்றைக் கவனிக்கும் திறன் நமக்கு வளரலாம்.
இதனால்தான் மாணிக்கவாசகரும்,
“இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி”
என்று பாடினாரோ?
இனி, இந்தப் பாதுகாப்பு அரண் எவ்வாறு உருவாகிறது என்று பார்ப்போம்.
மந்திரம் மனத்தில் பதிதல்
நாம் தினந்தோறும் தேவாரம், திருவாசகம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஏதாவது ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறோம்.
அவற்றைத் தொடர்ந்து உச்சரித்து வரும்போது, அவை நமது நினைவில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. தேவைப்படும் நேரத்தில் அவற்றை நம்மால் எளிதாக நினைவுகூரவும் முடிகிறது.
இதற்கு ஓர் எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.
நாம் சாப்பிடும் உணவு உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகளின் வழியாகப் பயணிக்கிறது.
அதில் இருந்து தேவையான சத்துக்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவை உடலுக்குத் தேவையான பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆக, ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட செயல்பாடும் எல்லையும் உள்ளது.
ஆனால், நாம் சுவாசத்தோடு மந்திரத்தையும் தொடர்ந்து இணைத்துக் கொள்ளும்போது என்ன நடக்கிறது?
சுவாசம், பிராணன், மந்திரம்
நாம் சுவாசிக்கும்போது ஆக்சிஜன் உள்ளே வருகிறது. யோக மரபில், இதனுடன் பிராண சக்தியும் தொடர்புபடுத்தப்படுகிறது.
நாம் மந்திரத்தைச் சுவாசத்துடன் தொடர்ந்து இணைத்துப் பயிற்சி செய்யும்போது, அந்த மந்திரம் பிராண சக்தியுடன் இணைந்து உடல் முழுவதும் பரவுவது போன்ற ஓர் உள்ளுணர்வு ஏற்படலாம்.
இது எனது அனுபவத்தின் அடிப்படையிலான விளக்கம்.
மந்திரம் உடல் முழுவதும் பரவுகிறது என்று கூறுவது அறிவியல் ரீதியான உடலியல் விளக்கம் அல்ல; ஆன்மிகப் பயிற்சியில் ஏற்படும் ஒரு நுண்ணிய அனுபவமாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனது அனுபவத்தில், மந்திரமும் சுவாசமும் தொடர்ந்து ஒன்றோடு ஒன்று இணைந்து செல்லும்போது, உடல் முழுவதும் அந்த மந்திரத்தின் ஓர் அதிர்வு இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.
இதைத்தான் திருமூலர்,
“ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்”
என்று கூறுவதாக எனக்குத் தோன்றுகிறது.
“தான்பற்றப் பற்ற” — அந்த “தான்” யார்?
அடுத்த வரியில் திருமூலர்,
“தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே”
என்று கூறுகிறார்.
இங்கே வரும் “தான்” எதைக் குறிக்கிறது?
எனது புரிதலில், இங்கு அது தனக்குரிய உடம்பைச் சுட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு கேள்வி எழுகிறது.
ஏற்கனவே,
“ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்”
என்று கூறிவிட்டார்.
அப்படியிருக்க, மீண்டும்
“தான்பற்றப் பற்ற”
என்று ஏன் கூற வேண்டும்?
இதனை நமக்கே உரிய பாணியில் புரிந்து கொள்வோம்.
உடம்பு மந்திரத்தை உள்வாங்கிக் கொண்டுவிட்டது என்பதோடு நிறுத்திக் கொள்ளாதே. அந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் பற்றிக் கொண்டே இரு. தொடர்ந்த பயிற்சியால் அந்த மந்திரம் உடலிலும் மனத்திலும் ஆழமாகப் பதியட்டும்.
அப்படிப் பற்றிப் பற்றித்தான் அது ஒரு கட்டத்தில் “தலைப்படும்” — தானாகவே முன்வந்து நிற்கும்.
“தலைப்படும்” — தானாக முன்வருதல்
“தலைப்படும்” என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன.
நாம் நமக்கே உரிய பாணியில் அதனைப் புரிந்து கொள்வோம்.
தொடர்ந்து மந்திரத்தைச் சுவாசத்துடன் இணைத்துப் பயிற்சி செய்து வந்தால், ஒரு கட்டத்தில் அந்த மந்திரத்தை நாம் முயற்சி செய்து உச்சரிக்க வேண்டிய அவசியம் குறைந்து விடலாம்.
மந்திரம் தானாகவே நினைவில் எழத் தொடங்கும்.
நாம் எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும், மனத்தின் ஓர் அடுக்கில் அந்த மந்திரம் ஓடிக்கொண்டிருப்பது போன்ற அனுபவம் ஏற்படலாம்.
நாம் அதை எப்போதும் உணர்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை.
ஆனால், அது நமது மனத்தில் ஒரு பின்னணி ஓட்டமாகத் தொடர்ந்து இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படலாம்.
இரண்டு தருணங்களில் அதை உணரலாம்
உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் இந்த மந்திரத்தை நம்மால் குறிப்பாக இரண்டு தருணங்களில் உணர முடியும்.
முதலாவது—
வேலைகள் எதுவுமின்றி சும்மா இருக்கும்போது, நாம் பயிற்சியின் போது சுவாசத்துடன் இணைத்து உச்சரித்து வந்த மந்திரம் தானாகவே முன்வந்து நிற்கலாம்.
“தலைப்படும் தானே!”
மேலும், நமது சுவாசத்தைக் கவனித்தால், அதனுடன் பயணிக்கும் மந்திரத்தின் நுண்ணிய அதிர்வையும் உணர முடியும்.
சிலருக்கு இந்த அனுபவம் ஏற்படாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் பயிற்சியில் முன்னேற்றமில்லை என்று கருத வேண்டியதில்லை.
இரண்டாவது தருணம் — எதிர்மறை உணர்ச்சி எழும்பும்போது
ஆனால் இரண்டாவது தருணம் மிக முக்கியமானது.
நமது ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் சில எதிர்மறை உணர்ச்சிப் பதிவுகள் நமது செயல்களைப் பாதிக்கக்கூடும்.
அவை உள்ளுக்குள் கனன்று கொண்டிருப்பது போன்றும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது மீண்டும் மேலெழுவது போன்றும் தோன்றலாம்.
அப்போது நாம் அவற்றுடன் ஒன்றிப் போனால், கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளின் தூண்டுதலுக்கு ஏற்ப சில செயல்களைச் செய்து, பின்னர் அதன் விளைவுகளைச் சந்தித்து வருந்த நேரிடலாம்.
ஆனால் மந்திரப் பயிற்சி தொடர்ந்து ஆழமாகியிருந்தால், அந்த உணர்ச்சி எழும் தருணத்திலேயே நம்முள் ஒரு நினைவூட்டல் தோன்றலாம்.
மூச்சுடன் இணைந்த மந்திரம் நம்முடைய கவனத்தை மீண்டும் உள்ளே திருப்பி,
“உணர்ச்சி எழுகிறது; ஆனால் நான் அந்த உணர்ச்சி அல்ல”
என்ற இடைவெளியை உருவாக்க உதவலாம்.
அந்த இடைவெளிதான் பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது.
இதன் காரணமாக எதிர்மறை உணர்ச்சிப் பதிவுகளுடன் உடனடியாக ஒன்றிப் போகும் பழக்கம் படிப்படியாகக் குறையலாம்.
அவை வலிமை இழக்கத் தொடங்கும்போது, சத்துவ குணம் மேலோங்கத் தொடங்கும்.
எதிர்மறை உணர்ச்சிப் பதிவுகளின் பிடி குறையக் குறைய, நாமும் நம்மை அறியாமலேயே சத்துவ குணம் மிக்க மனிதர்களாக மாற ஆரம்பிக்கலாம்.
தியானத்திற்கான மனப்பக்குவம்
இதுதவிர, வேறு ஒரு முக்கியமான நன்மையும் கிடைக்கிறது.
தியானத்திற்குத் தேவையான மனப்பக்குவம் இயல்பாகவே வளரத் தொடங்குகிறது.
இங்கே ஒரு கேள்வி எழுகிறது.
நாம் செய்து வரும் மந்திரத்தோடு இணைந்த சுவாசப் பயிற்சிக்கும், அட்டாங்க யோகத்தில் வரும் “தாரணைக்கும்” என்ன வித்தியாசம்?
பிரத்தியாகாரம் — தாரணை
அட்டாங்க யோகத்தில் பிரத்தியாகாரம் என்பது புலன்களின் வெளிப்புறச் சஞ்சாரத்தைக் குறைத்து, மனத்தின் கவனத்தை உள்ள்நோக்கித் திருப்பும் நிலையாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
அதன் பின்னர் தாரணை வருகிறது.
தாரணையில் மனதை ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தில் ஒருமுகப்படுத்துகிறோம்.
இதற்கு மனத்தின் சிதறலைக் குறைத்து, அதை ஒரு திசையில் நிலைநிறுத்தும் பயிற்சி தேவைப்படுகிறது.
ஒருவகையில், இது மனத்தின் அலைச்சல்களை வலிமையுடன் கட்டுப்படுத்தும் முயற்சி போன்றது.
சுவாசத்துடன் கூடிய மந்திரப் பயிற்சி
ஆனால் நாம் செய்து வரும் சுவாச–மந்திரப் பயிற்சியில் மனத்தை வலுக்கட்டாயமாக ஒருமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சுவாசம் இயல்பாக நடைபெறுகிறது.
அதனுடன் மந்திரத்தை இணைத்துக் கொள்கிறோம்.
மீண்டும் மீண்டும் செய்யப்படும் இந்தப் பயிற்சியால், மனம் மெல்ல மெல்ல அதனுடன் பழகுகிறது.
அதாவது, தாரணையில் மனத்தை ஒருமுகப்படுத்த முயல்கிறோம்.
இந்தப் பயிற்சியில், மூச்சும் மந்திரமும் தொடர்ந்து ஒன்றாகச் செல்லும் பழக்கத்தின் மூலம் மனம் இயல்பாக ஒருமுகப்படத் தொடங்குகிறது.
இதனை நான்
“over-powering” அல்ல; “overcoming”
என்று வேறுபடுத்திப் பார்க்கிறேன்.
தியானம் — முயற்சியிலிருந்து இயல்புக்கு
தாரணையில் நாம் மனதில் ஒருமுகக் கவனத்தைக் கொண்டு வந்து, அதை தியானத்திற்குப் பக்குவப்படுத்துகிறோம்.
ஏனெனில், தாரணையின் நோக்கமே மனத்தை ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தில் நிலைநிறுத்துவதாகும்.
ஆனால் நாம் செய்து வரும் சுவாச–மந்திரப் பயிற்சியில், “இப்போது நான் தியான நிலையை அடைய வேண்டும்” என்ற கட்டாய நோக்கம் அவசியமில்லை.
இருப்பினும், பயிற்சி தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறும்போது, மனம் அதற்கான பக்குவத்தைத் தானாகவே அடைந்து விடுகிறது.
இதனால், நாம் செய்துவரும் மூச்சுப் பயிற்சியின் இரண்டாவது மிகப்பெரிய நன்மை—
நம்மால் எளிதாக தியான நிலைக்குச் செல்ல முடிவது.
தியானத்தின் இறுதி நோக்கம்
தியானம் செய்வது எப்படி என்று பலரும் பலவிதமாகச் சொல்லித் தருகிறார்கள்.
முறைகள் வேறுபடலாம்.
ஒருவர் மந்திரத்தைப் பயன்படுத்தலாம்.
மற்றொருவர் மூச்சைக் கவனிக்கலாம்.
இன்னொருவர் ஒரு உருவத்தைத் தியானிக்கலாம்.
வேறு ஒருவர் “நான் யார்?” என்ற விசாரணையில் ஈடுபடலாம்.
முறைகள் வேறுபட்டாலும், அவை அனைத்தும் இறுதியில் ஒரே இலக்கை நோக்கிச் செல்லக்கூடியவை.
அந்த இலக்கு—
“அஹங்காரத்தின் அழிவு.”
அதாவது, “நான் செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்”, “இது எனது” என்ற தனிப்பட்ட அடையாளத்தின் பிடி படிப்படியாகக் குறைந்து, இறுதியில் உண்மையான சுயத்தை அறியும் நிலையை அடைவது.
அங்கே மந்திரத்தைச் சொல்ல வேண்டியவன் இல்லை.
மூச்சைக் கவனிக்க வேண்டியவன் இல்லை.
தியானம் செய்ய வேண்டியவன் இல்லை.
“நான்” என்ற தனி உணர்வின் பிடி தளர்ந்த இடத்தில், தியானம் செய்வது என்ற செயலும் தியானிப்பவன் என்ற தனி உணர்வும் மெல்ல மறைந்து விடுகின்றன.
அதுவே தியானத்தின் பயணம்.



No comments:

Post a Comment