பற்று
பற்று எப்போது உருவாகிறது?
ஒரு பொருளைப் பற்றி நாம் நினைக்கலாம்; சிந்திக்கலாம்; பேசலாம். அந்தப் பொருளோடு நேரடியாகவோ அல்லது மனதளவிலோ தொடர்பு கொள்ளலாம்.
இதில் எந்த இடத்தில் பற்று வருகிறது என்று சொல்ல முடியுமா?
இதைக் கேள்வியாகக் கேட்டால் பலவிதமான பதில்கள் வரும்.
“படிக்காத மேதை” திரைப்படத்திலிருந்து சில பாடல் வரிகள்:
“பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்;
அதை பிள்ளைக்குமேல் கண்களைப்போல் காத்து வளர்த்தார்...
...
சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை;
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை...”
இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது?
மகன் மீதும், அந்த நாய் மீதும் பற்று இருந்ததா? இருந்தால் யாரிடம் அதிகமாக இருந்தது?
நாயின் மீது அதிகமான பற்று இருந்தது என்றால், அதற்கான காரணம் என்ன?
பற்று உடல் சம்பந்தப்பட்டதா?
மகாபாரதப் போர் நடந்தபோது, துரியோதனனின் சேனையோடு சேர்ந்து போரிட்டு மடிந்தவர்களில் பீஷ்மரும் கர்ணனும் அடங்குவர்.
இவர்களில் கர்ணன் துரியோதனனைத் தன் உயிரினும் மேலாக நேசித்தான். எனவே அவனுக்குத் துரியோதனன் மீது ஆழமான பற்று இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், பீஷ்மருக்கு துரியோதனன் மீது பற்று இருந்தது என்று சொல்ல முடியுமா?
உடல்ரீதியாக அவர் துரியோதனனின் அருகாமையிலேயே வாழ்ந்து வந்தார். ஆனால், அவன்மீது தனிப்பட்ட பற்று கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.
அதே நேரத்தில் அவர் பாண்டவர்களை மிகவும் நேசித்தார். அப்படியானால், அவர்கள் மீது அவருக்குப் பற்று இருந்தது என்று சொல்லலாமா?
குந்திதேவி தன் முதல் குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். ஆனாலும் வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தையை அவளால் மறக்க முடியவில்லை.
ஆக, பற்று என்பது உடல் சம்பந்தப்பட்டதா? அல்லது மனம் சம்பந்தப்பட்டதா?
பற்று மனம் சம்பந்தப்பட்டதுதான் என்று தோன்றுகிறது.
ஆனால், மனதில் ஒன்றைத் தொடர்ந்து நினைப்பதால் மட்டுமே அதை ‘பற்று’ என்று சொல்ல முடியுமா?
நினைவு இருந்தாலே பற்று வந்துவிடுமா?
என் நண்பன் ஒருவன் எனக்குத் துரோகம் செய்துவிட்டான். என்னால் அதை மறக்க இயலவில்லை. அதை நினைக்கும் போதெல்லாம் என் நண்பனும் என் நினைவுக்கு வந்துவிடுகிறான்.
தினம் தினம் அவனை நினைப்பதால், எனக்கு அவன்மேல் பற்று இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
நான் கடவுளைத் தினந்தோறும் வணங்குகிறேன்.
ஒரு நாத்திகனும் நாள்தோறும் “கடவுள் இல்லை” என்று பிரச்சாரம் செய்கிறான். அவனுக்கும் கடவுள் பற்றிய எண்ணம் இருக்கிறது. அதனால் அவனுக்குக் கடவுள்மீது பற்று உள்ளது என்று சொல்ல முடியுமா?
ஆக, மனம் ஒன்றைத் தொடர்ந்து நினைப்பதால் மட்டும் அதன்மீது பற்று இருக்கிறது என்று சொல்ல முடியாது.
அப்படியானால், ஒரு மனிதனிடம் ‘பற்று’ குடிகொண்டுள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது?
நினைவும் ஆசையும்
நமக்கு ஒரு பொருள் தேவையென்று நினைக்கலாம்.
அதைத் தொடர்ந்து நினைக்கும்போது, அந்த நினைப்பு படிப்படியாக ஆசையாக மாறி மனதில் நிலைகொண்டு விடுகிறது.
நினைப்புக்கும் ஆசைக்கும் இடையே உருவாகும் மனப்பிணைப்பையே ‘பற்று’ என்று அழைக்கலாம்.
நாம் யாரிடமாவது அன்பை வெளிப்படுத்தும்போது, அந்த அன்பு படிப்படியாக எதிர்பார்ப்பாகவும் ஆசையாகவும் மாறுவதற்கும் இந்தப் பற்றுதான் காரணமாகிறது.
நினைவு எழும் இடம் மனம்; அது ஆசையாக மாறும் நிகழ்வும் நடைபெறும் இடம் மனம்தான்.
அப்படி இருக்கும்போது, இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்ற சந்தேகம் வருகிறதல்லவா?
நினைவிற்கும் பற்றிற்கும் இடையே உள்ள இடைவெளி
நினைவும் ஆசையும் இரண்டும் மனதில்தான் தோன்றுகின்றன என்றாலும், அவை ஒன்றல்ல.
நினைவு என்பது ஒரு பொருளை மனம் நினைவுகூர்வது.
ஆனால், அந்த நினைவுடன் “இது எனக்கு வேண்டும்”, “இது என்னுடையதாக இருக்க வேண்டும்”, “இது இப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற எதிர்பார்ப்பும் உரிமை உணர்வும் சேரும்போது பற்று உருவாகிறது.
எல்லோரிடமும் நினைவு இருக்கும்.
ஆனால், நினைவெல்லாம் பற்றாக மாறுவதில்லை.
அன்பு இருக்கலாம்; ஆனால் அந்த அன்பில் உரிமை உணர்வும் எதிர்பார்ப்பும் கலந்துவிட்டால் அது பற்றாக மாறுகிறது.
அதனால்தான் அன்புக்கும் பற்றுக்கும் இடையே மிக நுட்பமான வேறுபாடு உள்ளது.
பற்று எவ்வாறு பந்தமாகிறது?
நினைவாக இருந்த ஒன்று ஆசையாக மாறிவிட்டால், அந்த ஆசை நம்மையும் அறியாமல் ஒரு மாயவலையைப் பின்ன ஆரம்பித்துவிடும்.
இதுதான் நினைவிற்கும் ஆசைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம்.
நாம் ஒன்றைப் பற்றி தொடர்ந்து நினைத்தால், அது ஆசையாக மாறலாம்.
இந்த நிலையில், நாம் ஆசைப்படுவது தவறு என்று உணர்ந்தால் அதிலிருந்து விலகிவிட முடியும்.
இல்லையெனில், ஆசை கொண்ட மனம் நம்மையும் அறியாமல் வலை பின்னி, ஆழ்மனதில் பாசம், பேராசை, காமம் போன்ற பதிவுகளை உருவாக்கிவிடும்.
காதல் வயப்பட்ட இளைஞனிடம் கேட்டால், அவன் பொதுவாகச் சொல்வது:
“ஒரு நட்போடுதான் பழகினேன். எப்போது அது காதலாக மாறியது என்றே தெரியவில்லை.”
இதுதான் பற்று எவ்வாறு படிப்படியாக பந்தமாகிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.
பின்னர் அந்தப் பந்தத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்.
அதனால்தான் பட்டினத்தார்,
“ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்...”
என்று புலம்புகிறார்.
எனவே, நமக்கு வரும் பல துன்பங்களுக்குக் காரணமாக இருப்பது இந்தப் பற்றுதான்.
பற்றறுப்பது எளிதல்ல
உண்மையில் ‘பற்றறுப்பது’ என்பது எளிதான காரியமல்ல.
தீவிரமான முயற்சியும், தொடர்ச்சியான பயிற்சியும் இருந்தால் மட்டுமே அதனைச் சாதிக்க முடியும்.
பற்றற்ற நிலை என்பது வெளியில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடுவது அல்ல.
பொருட்களோடும், மனிதர்களோடும் தொடர்பில் இருந்துகொண்டே, அவற்றால் மனம் கட்டுப்படாத நிலையே பற்றற்ற நிலை.
பற்றற்றவரை எப்படிக் கண்டறிவது?
நாம் சந்திக்கும் பல நூறு பேர்களில் ஒரு சிலரே பற்றற்ற மனிதர்களாக இருப்பார்கள்.
அவர்களும் தங்களை ‘பற்றற்றவர்’ என்று பிரகடனப்படுத்துவதில்லை.
அதே நேரத்தில், நாம் பலரைப் பற்றற்றவர்கள் என்று தவறாகவும் நினைக்கக்கூடும்.
ஒருவர் சாத்திரங்களை நன்கு கற்றிருக்கலாம்; அவற்றை நன்கு விளக்கும் திறமையும் பெற்றிருக்கலாம். அதனாலேயே அவரைப் பற்றற்ற மனிதர் என்று நாம் எண்ணிவிடக்கூடாது.
“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா...”
என்று வள்ளுவர் உரைக்கிறார்.
அதேபோல், ‘தவ வேடம்’ பூண்ட அனைவரும் பற்றற்றவர்களே என்று நினைப்பதும் தவறு.
அப்படியானால், பற்றற்ற மனிதர்களை அடையாளம் காண்பது எப்படி?
நமது சாத்திர நூல்களிலும், அவற்றைப் பற்றிய சான்றோர்களின் உரைநூல்களிலும், பற்றற்ற மனிதர் எவ்வாறு நடந்துகொள்வார், அவரது மனோபாவம் எப்படி இருக்கும் என்பதுபற்றி நிறைய குறிப்புகள் உள்ளன.
அவற்றிலிருந்து எனக்குத் தெரிந்த சில குறிப்புகளைத் தருகிறேன்.
எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைதான்.
நீங்களே அவற்றின் மெய்ப்பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
பற்றற்ற மனிதர்களை அடையாளம் காண உதவும் சில குறிப்புகள்
1. குடும்பத்தில் இருந்தாலும், மனத்தில் பற்றின்றி இருப்பார்கள்
Though they live in the family, they will be mentally free from possessiveness towards the family.
குடும்பத்தில் வசித்து வந்தாலும், குடும்பத்தின் மீது உடமை உணர்வோ, அளவுக்கு மீறிய பற்றோ இல்லாமல் இருப்பார்கள்.
2. பார்வையாளராக இருப்பார்கள்
They will remain a silent witness to what happens around them.
தன்னைச் சுற்றி நடப்பவற்றை உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு அணுகாமல், ஒரு பார்வையாளரைப் போலக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
3. எதிர்வினை அல்ல; பதில்-வினை
They will not react impulsively; they will respond only when necessary.
எந்தவொரு செயலுக்கும் உடனடி எதிர்வினை ஆற்ற மாட்டார்கள். தேவைப்படும் போது மட்டுமே நிதானமாகப் பதிலளிப்பார்கள்.
4. வெளியே செயல்பட்டாலும், உள்ளே அமைதியாக இருப்பார்கள்
They will remain inwardly quiet while being active in the outer world.
வெளியுலகில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், உள்ளத்தில் பரபரப்பின்றி அமைதியாக இருப்பார்கள்.
5. தனிமையை விரும்புவார்கள்
They will be comfortable in solitude.
தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். தனிமை அவர்களுக்கு சுமையாக இருக்காது.
6. நிகழ்காலத்தில் இருப்பார்கள்
They will always be present in the present.
எப்பொழுதும் நிகழ்காலத்திலேயே இருப்பார்கள்.
கடந்ததைப் பற்றிய வருத்தத்திலும், வரப்போகிறதைப் பற்றிய கவலையிலும் மனதை இழந்து விடமாட்டார்கள்.
7. வருத்தமும் எதிர்பார்ப்பும் இருக்காது
They regret nothing, expect nothing and accept everything.
எதற்கும் வருந்த மாட்டார்கள்; எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்; எது வந்தாலும் அதைச் சமநிலையுடன் ஏற்றுக்கொள்வார்கள்.
8. பலனை எதிர்பாராமல் செயல்படுவார்கள்
They perform action without personal desire for the result.
செயலில் ஈடுபடும்போது, அதன் பலனில் தனிப்பட்ட விருப்பத்தையோ எதிர்பார்ப்பையையோ வைத்திருக்க மாட்டார்கள்.
9. பற்றற்ற பற்றுடன் பழகுவார்கள்
They maintain detached attachment.
மற்றவர்களுடன் அன்புடன் பழகுவார்கள்; ஆனால் அவர்கள்மீது மனப்பற்றை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
10. பந்தமற்ற உறவைப் பேணுவார்கள்
They maintain relationships without possessiveness.
உறவுகளைப் பேணுவார்கள்; ஆனால் அந்த உறவுகளில் உரிமை உணர்வும் உடமைத்தன்மையும் கலக்க விடமாட்டார்கள்.
11. உடமை உணர்வு இருக்காது
They have no possessive feeling.
“இது என்னுடையது”, “அவர் என்னுடையவர்” என்ற உடமை உணர்வு அவர்களிடம் இருக்காது.
12. பொறுமை இழக்க மாட்டார்கள்
They do not easily lose patience.
எந்தச் சூழ்நிலையிலும் எளிதில் பொறுமை இழக்க மாட்டார்கள்.
13. புறப்பொருட்களால் கவரப்பட மாட்டார்கள்
They are not carried away by the attractions of the outer world.
புறவுலகில் உள்ள கவர்ச்சிகரமான பொருட்களால் மனத்தை இழந்து விடமாட்டார்கள்.
14. மனநிறைவுடன் இருப்பார்கள்
They maintain a sense of contentment.
“இருப்பது போதும்” என்ற மனநிறைவுடன் இருப்பார்கள்.
15. காய்ந்த சருகைப் போல இருப்பார்கள்
They move like a dry leaf carried by the wind.
காற்றில் அலையும் காய்ந்த சருகைப்போல, சூழ்நிலைகளுக்கு ஏற்ப எந்தவிதமான தனிப்பட்ட எதிர்ப்பும் இன்றி செயல்படுவார்கள்.
16. சுயநல நோக்கம் இருக்காது
Their actions will be free from selfish motives.
அவர்களின் செயல்களுக்குப் பின்னால் தனிப்பட்ட சுயநல நோக்கம் இருக்காது.
17. உணவில் அளவைக் கடைப்பிடிப்பார்கள்
They will be moderate in eating.
உணவில் அளவைக் கடைப்பிடிப்பார்கள். விருப்பம்போல் உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாடற்ற ஆசைக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.
18. விருப்பு–வெறுப்பைக் கடந்திருப்பார்கள்
They will live with dispassion.
விருப்பு, வெறுப்பு ஆகியவற்றால் மனம் அலைக்கழிக்கப்படாமல், சமநிலையுடன் இருப்பார்கள்.
19. எளிமையும் பணிவும் இருக்கும்
Their outlook will be simple and their behaviour humble.
அவர்களின் அணுகுமுறை எளிமையாகவும், நடத்தை பணிவாகவும் இருக்கும்.
20. எளிதில் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்
They will not have emotional outbursts, as the mind is guided by an integrated intellect.
மனம் புத்தியுடன் இணைந்து செயல்படுவதால், எளிதில் உணர்ச்சிவசப்பட்டு வெடிக்க மாட்டார்கள்.
21. சேவையில் சுயநலம் இருக்காது
There will be no selfishness in their service.
அவர்களின் சேவையில் சுயநலத்திற்கு இடம் இருக்காது.
22. ஆனந்தம் உள்ளிருந்து வரும்
They will always remain inwardly happy, because their happiness comes from within.
ஆனந்தம் புறப்பொருட்களிலிருந்து வருவதில்லை; அது உள்ளிருந்து எழுவது என்பதை உணர்ந்திருப்பதால், சூழ்நிலைகள் மாறினாலும் உள்ளார்ந்த மகிழ்ச்சியை இழக்க மாட்டார்கள்.
பின் குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வெறும் பட்டியலாகப் படித்துவிட்டு விட்டுவிடாதீர்கள்.
ஒவ்வொரு குறிப்பும் உணர்த்தும் மெய்ப்பொருளை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
மெய்ப்பொருளை அறிந்து கொண்டால், ‘பற்றற்ற’ மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
மேலும் ஒரு முக்கியமான விஷயம்:
‘பற்றற்ற’ மனிதர்கள் துறவறத்தில் மட்டுமல்ல; இல்லறத்திலும் இருக்கக்கூடும்.
உண்மையான பற்றின்மை என்பது உறவுகளை விட்டுவிடுவதல்ல.
உறவுகளுக்குள் இருந்துகொண்டே, அவற்றால் மனம் கட்டுப்படாமல் இருப்பதே பற்றின்மை.
அதுவே உண்மையான சுதந்திரம்.
No comments:
Post a Comment