Saturday, 5 September 2026

கருணை பொங்கும் உள்ளம்




கருணை பொங்கும் உள்ளம்


"கருணையும் கடவுளும்"

‘பாவ மன்னிப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்:
“கருணை பொங்கும் உள்ளம் - அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்.”
மிகச் சாதாரணமாகத் தோன்றும் வரிகள். ஆனால், ஆழமான பொருள் நிறைந்தவை.

இதில் முதல் இரண்டு வரிகளுக்கான விளக்கத்தை இந்தத் தொடரின் முடிவில் தருகிறேன். இப்போது கடைசி இரண்டு வரிகளை மட்டும் கொஞ்சம் ஆராய்வோம்.

மூன்றாவது வரியில்,
“கருணை மறந்தே வாழ்கின்றார்”
என்று கவிஞர் சொல்கிறார்.
இங்கே ‘மறந்தே’ என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொள்வது?
‘மறந்தது’ என்றால் என்ன?
தந்தை ஒருவர் தன் குடும்பத்தாருடன் வெளியே கிளம்புகிறார். வீட்டைப் பூட்டிவிட்டு, காருக்கு அருகில் வந்த பிறகுதான், கார் சாவியை எடுத்துவர மறந்துவிட்டது நினைவிற்கு வருகிறது.
‘மறந்துவிட்டார்’ என்றால், கார் சாவி இருக்கிறது; ஆனால் வீட்டிலிருந்து அதை எடுத்துவர மறந்துவிட்டார் என்று பொருள்.
அப்படியானால்,
“கருணை மறந்தே வாழ்கின்றார்”
என்ற வரியில் உள்ள ‘மறந்தே’ என்ற வார்த்தையை எப்படி புரிந்துகொள்வது?
கருணை என்பது ஒரு பொருளாக இருந்தால், எங்கேயோ மறந்து வைத்துவிட்டார் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் கருணை ஒரு பொருள் அல்லவே!
கருணை என்றால் என்ன?
கருணை என்பது நமது உள்ளத்திலிருந்து வெளிப்படும் ஓர் உயர்ந்த மனித உணர்வு.
அப்படியானால், ‘கருணையை மறந்துவிட்டார்’ என்பதன் பொருள் என்ன?
என் பார்வையில், இங்கே ‘மறந்தது’ என்பது கருணை என்ற உயர்ந்த பண்பு மனிதனுக்குள் இருக்கக்கூடும் என்பதையே மறந்துவிட்ட நிலை என்று கொள்ளலாம்.
கருணை என்பது மனிதனிடம் வளர்க்கக்கூடிய ஒரு உயர்ந்த பண்பு. அதை உணர்ந்து, பயிற்சி செய்து, வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியும்.
கருணை பொங்கும் உள்ளமே மனித வாழ்க்கையின் உயர்ந்த இலக்காக இருக்க வேண்டும்.
ஆனால், இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல் வாழும் மனிதன், அதை மறந்துவிட்டு வேறு எதற்காகவோ கடவுளைத் தேடி அலைகின்றானே என்று எண்ணி வருந்துகிறார் கவிஞர்.
உண்மையான பக்தி எது?
உண்மையான பக்தன் என்றால், அவன் உள்ளத்தில் கருணை வளர வேண்டும்.
இறைவனிடம் உண்மையான சரணாகதி மலரும்போது, உள்ளத்தில் கருணையும் இயல்பாக வளரத் தொடங்கும்.
ஆனால் நம்மிடம் அந்த அளவிற்கு சரணாகதி பாவனை இருக்கிறதா?
நாம் இறைவனிடம் சரணடைவதைவிட, பல்வேறு வேண்டுதல்களைத்தானே முன்வைக்கிறோம்?
அதற்கு காரணமாக இருப்பது நமது ஆழ்மனப் பதிவுகள் அல்லவா?
இந்தக் கேள்வியிலிருந்து ஆழ்மனத்தைப் பற்றிய சில கேள்விகள் எழுகின்றன.
ஆழ்மனத்தில் (Subconscious mind) பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன?
அந்தப் பதிவுகளின் அழுத்தம் எவ்வாறு அகங்காரத்தை வலுப்படுத்துகிறது?
‘Super-conscious mind’ என்று ஒன்று உள்ளதே! அது பற்றி என்ன?
ஆழ்மனப் பதிவுகளை எப்படி நீக்குவது?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஆழ்மனம் என்றால் என்ன? அது எவ்வாறு உருவாகிறது? என்பதைப் பார்ப்போம்.
ஆழ்மனம் என்றால் என்ன?
மூளை என்றால் என்ன என்பது நமக்குத் தெரியும்.
புத்தி என்றால் என்ன என்பதும் ஓரளவு தெரியும். மூளையின் செயல்பாடுகளில் ஒன்றாக புத்திச் செயல்பாட்டைப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால், மனம் என்றால் என்ன? என்று கேட்டால் ஒரே மாதிரியான பதில் கிடைப்பதில்லை.
ஸ்வாமி சின்மயானந்தர் கூறியதாகப் பிரபலமாக மேற்கோள் காட்டப்படும் ஒரு கருத்து:
“Mind is the impression of the past experiences.”
எளிமையாகச் சொன்னால், கடந்த அனுபவங்களின் பதிவுகளோடு தொடர்புடையதே மனத்தின் செயல்பாடு.
நாம் புறவுலகில் சந்திக்கும் அனுபவங்கள் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றில் சில நமது உடனடி உணர்வு நிலையில் இருக்கின்றன; சில ஆழமாகப் பதிந்து நீண்டகாலம் நம்மை பாதிக்கக்கூடியவையாகின்றன.
இவ்வாறு மனத்தின் செயல்பாட்டை உணர்வு நிலை மற்றும் ஆழ்மனப் பதிவு நிலை என்று எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.
இங்கே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
‘ஆழ்மனம்’ என்பது அந்தக்கரணத்தின் தனி உறுப்பாக வேதாந்தம் வரையறுக்கும் ஒரு புதிய கருவி அல்ல; மனத்தின் ஆழமான பதிவுகளை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு எளிய சொல்லாக இதைப் புரிந்துகொள்வது பொருத்தமானது.
முதல் கேள்வி
ஆழ்மனத்தில் பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன?
ஆழ்மனத்தில் பதிவுகள் எந்தெந்த வழிகளில் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை மனம் ஐம்புலன்களின் உதவியுடன் எதிர்கொள்கிறது.
அதனால் ஏற்படும் அனுபவத்தை மனம் ஏற்றுக்கொள்ளலாம்; அல்லது ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.
மனம் எதிர்கொள்ளும் தாக்கம் வலிமையானதாக இருந்தால், அல்லது அதனுடன் நாம் மீண்டும் மீண்டும் உணர்ச்சியுடன் தொடர்புகொண்டால், அது ஆழமான பதிவாக மாறக்கூடும்.
அந்தப் பதிவுகள் பின்னர் நமது எண்ணங்களையும் செயல்களையும் பாதிக்கக்கூடும்.
ஒரு பாடலின் பதிவு
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டேன்.
அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. குறிப்பிட்ட பாடலை இரண்டொரு தடவைதான் கேட்டிருப்பேன்.
இருந்தாலும் அந்தப் பாடல் என்னை மிகவும் ஈர்த்ததால், அதன் வரிகள் நீண்டகாலம் என் நினைவில் பதிந்து விட்டன.
அந்தப் பாடலில் இருந்து ஒரு சரணம்:
“ஏழடுக்கு மாளிகையில்
இருக்கிற பேர்வழிகள்
எத்தனையோ தப்புத்தண்டா
பண்ணுவாங்க
ஏழை எளியவங்க
இல்லாத காரணத்தால்
ஏதோ சிறு தவறு
பண்ணுவாங்க
இது தெரியும்
அது தெரியாது...”
இது ஆழமான மனப்பதிவு உருவாகும் ஒரு வழி.
அன்பிலிருந்து பற்றாக
வீட்டில் குழந்தை பிறந்தால், அதன் தாய் குழந்தையிடம் அன்பைப் பொழிகிறாள்.
அன்பை வெளிப்படுத்துவதுடன், அந்தக் குழந்தையின் மீது மனப்பற்றும் உருவாகிறது. இது உடல்ரீதியான பற்றல்ல; மனரீதியான பற்றாகும்.
அந்தப் பற்று தொடர்ந்து வலுப்பெறும்போது, அன்புடன் எதிர்பார்ப்பும் கலக்கலாம். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது கவலையும் பயமும் தோன்றலாம்.
இவ்வாறு அன்புடன் கலந்த பற்று, ஆசை, பாசம் போன்ற மனப்போக்குகளாக மாறி ஆழமான பதிவுகளை உருவாக்கக்கூடும்.
நாம் எந்த ஒன்றின் மீது பற்று வைத்தாலும், அது தொடர்ந்து நமது கவனத்தைப் பிடித்துக்கொண்டிருந்தால், அந்தப் பற்றின் பதிவு மேலும் மேலும் வலுவடையலாம்.
அது நம்மிடம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மனம் அதனோடு தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருந்தால் பதிவு ஆழமாகிறது.
ஆசையின் பின்னால் பயமும் கோபமும்
பிரச்சினை என்னவென்றால், ஆசையின் பின்னணியில் பல நேரங்களில் பயமும் கோபமும் இருக்கின்றன.
ஆசைப்பட்ட ஒன்று கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயம்.
கிடைக்கவில்லை என்றால் கோபம்.
கிடைத்துவிட்டாலோ, அது நம்மைவிட்டு போய்விடுமோ என்ற பயம்.
போய்விட்டால், அதற்குக் காரணமானவர் மீது கோபம்.
இவ்வாறு ஆசை → பயம் → கோபம் → மீண்டும் ஆசை என்ற ஒரு சுழற்சி உருவாகலாம்.
ஒரு பதிவு ஆழமாக வேரூன்றிவிட்டால், அந்தச் சுழற்சியிலிருந்து வெளியே வருவது கடினமாகிறது.
மீண்டும் மீண்டும் செய்வதால் உருவாகும் பதிவு
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத்தை மனப்பாடம் செய்கிறார்கள்.
அதன் நோக்கம் என்ன?
குறிப்பிட்ட பாடத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கும்போது, அதைப் பற்றிய நினைவுப் பாதை வலுவடைகிறது. பின்னர் அதை எளிதாக நினைவுகூர முடிகிறது.
அதேபோல், கடவுளை வணங்கும்போது நமக்குப் பிடித்த பாடல்களைப் பாடுகிறோம்.
தொடர்ந்து பாடி வந்தால், அந்தப் பாடல்கள் எளிதாக நினைவிற்கு வரும்.
திருக்குறள் பாடல்களைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்றால், மீள்பயிற்சி உதவும்.
முதல் நாள் முதல் குறளைப் பலமுறை படிக்கலாம்.
மறுநாள் முதல் குறளை ஒருமுறை படித்துவிட்டு, இரண்டாவது குறளைப் பலமுறை படிக்கலாம்.
அடுத்த நாள் முதல் இரண்டு குறள்களையும் ஒருமுறை படித்துவிட்டு, மூன்றாவது குறளைப் பலமுறை படிக்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், படித்த குறள்களின் நினைவுப் பாதை வலுவடையும்.
எதை மீண்டும் மீண்டும் நினைக்கிறோமோ, அதற்கான மனப்பதிவு வலுப்பெறுகிறது.
பழக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன?
குடிப்பழக்கம் இல்லாத ஒருவன் எவ்வாறு குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான்?
நண்பர்களின் வற்புறுத்தலால் முதலில் குடிக்கத் தொடங்கியிருக்கலாம்.
தொடர்ந்து குடித்து வந்தால், அது பழக்கமாகிறது.
பழக்கம் வலுப்பெற்றபோது, சிந்தித்து முடிவு செய்வதற்குமுன்பே அந்தச் செயலுக்கான உந்துதல் தோன்றலாம்.
இதேபோல பீட்சா, புரோட்டா, ஐஸ்கிரீம், அதிக உப்பு அல்லது அதிக கொழுப்பு கொண்ட தின்பண்டங்கள் போன்றவற்றை அளவுக்கு மீறி உண்ணும் பழக்கமும் உருவாகலாம்.
உடல்நலத்திற்கு கேடு என்று தெரிந்திருந்தும், ஏன் மீண்டும் மீண்டும் அவற்றை நாடுகிறோம்?
அதற்கு ஒரு காரணம், அவற்றோடு தொடர்புடைய பழக்கப் பதிவுகள் மற்றும் விருப்பப் போக்குகள் மனத்தில் வலுவடைந்திருப்பதுதான்.
உணர்ச்சியின் வழியாக ஏற்படும் பதிவுகள்
நல்ல அனுபவங்களாக இருந்தாலும், கெட்ட அனுபவங்களாக இருந்தாலும், நாம் அவற்றை மிகுந்த உணர்ச்சியுடன் எதிர்கொள்ளும்போது அவை ஆழமான மனப்பதிவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு சமூகத்தைப் பற்றிய வெறுப்பு, ஒரு சாதியைப் பற்றிய வெறுப்பு, ஒரு மதத்தைப் பற்றிய வெறுப்பு போன்றவையும் இப்படிப்பட்ட ஆழமான மனப்பதிவுகளாலும் தொடர்ந்து ஊட்டப்படும் எண்ணங்களாலும் வலுப்பெறக்கூடும்.
அதனால், உணர்ச்சி பெருக்கை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.
நினைத்துக்கொண்டே இருப்பதும் ஒரு பதிவு
பல நேரங்களில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் உடனடியான மனநிலையோடு முடிந்துவிடுகின்றன.
ஆனால், அவற்றையே திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருந்தால், அந்த அனுபவத்திற்கான மனப்பதிவு மேலும் வலுவடையலாம்.
ஒருவர் நமது மனம் புண்படும்படி பேசிவிடுகிறார்.
அந்தச் சம்பவம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதற்குப் பிறகு,
“அவர் ஏன் அப்படிப் பேசினார்?”
“அப்படிப் பேச அவருக்கு என்ன உரிமை?”
“நான் அவரிடம் அப்படிப் பேச வேண்டியதுதானே?”
என்று மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருந்தால், அந்தச் சம்பவத்தின் தாக்கத்தை நாமே வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கற்பனையாலும் பதிவுகள் உருவாகலாம்
அடுத்தது, கற்பனையில் உருவாகும் பதிவுகள்.
இதிலும் பல வகையான பதிவுகள், அந்தந்த மனிதனின் மனநிலைக்கு ஏற்றவாறு உருவாகின்றன.
இல்லாததை நினைத்து ஏங்குவது,
அடைய முடியாத ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவது,
தேவையில்லாமல் கவலைப்படுவது,
நடக்காத ஒரு நிகழ்வைப் பற்றி பயப்படுவது—
இவை அனைத்தும் மனத்தில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தால், அவற்றின் தாக்கம் வலுவடையலாம்.
‘மனப்பிராந்தி’ என்று பலர் சொல்வதுண்டு.
அது பல நேரங்களில் தேவையற்ற பயத்தையோ, ஆதாரமற்ற கற்பனையையோ குறிக்கிறது.
இவையும் கற்பனையின் வழியாக உருவாகும் மனப்பதிவுகளாக இருக்கலாம்.
இவை அனைத்தும் ஆரம்பத்தில் ஒரு எண்ணமாக மட்டுமே தோன்றுகின்றன.
அதே எண்ணத்தை மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தால், அது நமது மனப்போக்கில் ஆழமாகப் பதியக்கூடும்.
ஆழ்மனப் பதிவுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கு இந்த விளக்கங்கள் போதும் என எண்ணுகிறேன்.
இந்தப் பதிவுகளின் விளைவுகள் என்ன?
இனி, இந்தப் பதிவுகளால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
1. மனம் நண்பனாகவும் எதிரியாகவும்
கிருஷ்ணன் கூறுகிறார்:
“மனமே உனது உற்ற நண்பன்; அதுவே உனது எதிரியும் ஆகலாம்.”
இங்கே ‘மனம்’ என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், நமது பழக்கங்கள், வாசனைகள், மனப்பதிவுகள் ஆகியவை மனத்தின் செயல்பாட்டை பெரிதும் பாதிக்கின்றன.
2. உள்ளார்ந்த அழுத்தம்
உள்ளார்ந்த நெருக்கடி, மன அழுத்தம் போன்றவற்றுக்கும் சில சமயங்களில் ஆழமான மனப்பதிவுகள் காரணமாக இருக்கலாம்.
3. தன்னிலை மறந்த செயல்கள்
மனிதன் சில நேரங்களில் தன்னிலை மறந்து தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறான்.
அத்தகைய செயல்களின் பின்னணியிலும் வலுவான உணர்ச்சிப் பதிவுகள் இருக்கக்கூடும்.
4. தூக்கத்தைக் கெடுக்கும் எண்ணங்கள்
இரவு நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டிய மனதை, கடந்த சம்பவங்களும் கவலைகளும் நாளைய பயங்களும் தூங்கவிடாமல் அல்லல்படுத்துகின்றன.
5. மறுபிறவி பற்றிய ஆன்மிகக் கருத்து
சில ஆன்மிக மரபுகளின்படி, நிறைவேறாத ஆசைகளும் வாசனைகளும் கர்மப் பதிவுகளும் பிறவிச் சுழற்சியோடு தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.
“பெற்றது பொய்யுடல்
முன்செய் வினைப்பயன்...”
என்ற சித்தர் கருத்துகளும் இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றன.
வள்ளுவர்,
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.”
என்கிறார்.
இவை அனைத்தும் ஆழமான ஆன்மிகப் பொருளைக் கொண்டவை.
ஆனால் கர்மா, வாசனை, மனப்பதிவு ஆகிய மூன்றையும் ஒன்றே என்று கூறுவது சரியாகாது. அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை; ஆனால் அவற்றுக்கிடையே வேறுபாடு உண்டு.
6. கருணைக்குத் தடையாக இருப்பது
மிக முக்கியமாக, நமது ‘நான்–எனது’ என்ற பற்றும் பழைய மனப்பதிவுகளும் வலுவாக இருக்கும்போது, பிறரைப் பற்றிய பரந்த பார்வையும் கருணையும் வெளிப்படுவதற்கு தடையாக இருக்கலாம்.
கருணை — இரக்கம்: இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
இரக்கம், கருணை—இரண்டும் நெருங்கிய சொற்கள்.
ஆனால், இவற்றுக்கிடையே ஒரு நுண்ணிய வேறுபாட்டைக் காணலாம்.
இரக்கம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைப் பார்த்து எழும் உணர்ச்சி.
ஒருவர் துன்பப்படுவதைக் கண்டால் நமக்கு இரக்கம் ஏற்படுகிறது.
கொடிய மனம் கொண்ட மனிதனிடம்கூட சில சூழ்நிலைகளில் இரக்கம் தோன்றலாம்.
பேரிடர் காலங்களில் பலரும் இரக்கம் காட்டுவதைப் பார்க்கிறோம்.
ஆனால் கருணை அதைவிட ஆழமான உள்ளப்பண்பாக இருக்கலாம்.
அது குறிப்பிட்ட ஒரு சம்பவத்திற்கான தற்காலிக உணர்ச்சியாக மட்டும் இல்லாமல், பிற உயிர்களின் துன்பத்தை உணரும் நிலையான மனப்பக்குவமாக வளரலாம்.
அதை வெளியில் பறைசாற்ற வேண்டிய அவசியமில்லை.
அது அமைதியாக உள்ளத்தில் இருக்கலாம்.
எனவே, எல்லா மனிதர்களிடமும் இரக்கம் இருக்கிறதா என்று கேட்டால், சில சூழ்நிலைகளில் அது தோன்றலாம் என்று சொல்லலாம்.
ஆனால் கருணை ஒரு நிலையான உள்ளப்பண்பாக வளர்ந்திருக்கிறதா? என்றால், அதற்கு ஆன்மிகப் பயிற்சியும் மனச் சுத்தியும் தேவைப்படுகின்றன.
இரண்டாவது கேள்வி
ஆழ்மனப் பதிவுகள் எவ்வாறு அகங்காரத்தை வலுப்படுத்துகின்றன?
இங்கே ஒரு திருத்தத்தை முதலில் செய்துகொள்வோம்.
ஆழ்மனப் பதிவுகள் நேரடியாக அகங்காரமாக மாறுவதில்லை.
ஆனால், அவை நமது விருப்பு–வெறுப்புகளையும் ஆசைகளையும் பயங்களையும் வலுப்படுத்துகின்றன. அவற்றின் அழுத்தம் அதிகரிக்கும்போது, “நான் இப்படித்தான்”, “எனக்கு இது வேண்டும்”, “எனக்கு இது வேண்டாம்”, “என்னுடையது” என்ற தன்முனைப்பு வலுப்படலாம்.
ரிஷி பதஞ்சலியின் யோக மரபில், வாசனைகள் மற்றும் சம்ஸ்காரங்கள் மனத்தில் விதைபோன்ற நிலையில் இருப்பதாக விளக்கப்படுகிறது.
அதனால் அவற்றை ‘பீஜம்’—விதை என்று உருவகமாகப் புரிந்துகொள்ளலாம்.
அந்த விதைகள் உகந்த சூழ்நிலை கிடைக்கும்போது மீண்டும் எண்ணங்களாகவும் செயல்களாகவும் வெளிப்படுகின்றன.
ரஜோ குணம் மிகுந்த மனிதனிடம் இந்தத் தன்முனைப்பின் வேகம் அதிகமாகக் காணப்படலாம்.
சத்துவம் வளரும்போது மனம் தெளிவடைகிறது; விருப்பு–வெறுப்புகளின் பிடி தளர்கிறது; அதனால் அகங்காரத்தின் வெளிப்பாடும் நலிவடையத் தொடங்குகிறது.
நான்காவது கேள்வி
ஆழ்மனப் பதிவுகளை எப்படி நீக்குவது?
இந்தக் கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்.
ஆழ்மனப் பதிவுகளை நாம் கட்டளையிட்டு அழித்துவிட முடியாது.
அவற்றின் மீது நமது பற்றும் அடையாளப்படுத்தலும் குறையும்போது, அவற்றின் வலிமை குறைகிறது.
பின்னர் அவை மெதுவாக நம்மை ஆட்டிப்படைக்கும் சக்தியை இழக்கின்றன.
திருமூலர் கூறுகிறார்:
“பாச வினைகள் பற்றது நீங்கி...”
‘பற்றது நீங்கி’ என்று பாடுகிறார்.
வள்ளுவர்,
“பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.”
என்கிறார்.
‘பற்றை விடு’ என்று மட்டும் அவர் கூறவில்லை.
எதைப் பற்ற வேண்டும்? எதைப் பற்றினால் மற்ற பற்றுகள் விடும்? என்பதைக் காட்டுகிறார்.
பத்திரகிரியார் கேட்கிறார்:
“ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தில் ஒன்றிநிற்ப தெக்காலம்?”
ஆசை வலை பின்னி நம்மைப் பாசத்தில் தள்ளிவிடுகிறது.
அதிலிருந்து தப்பிக்க என்ன வழி?
“ஓசைமணி தீபத்தில் ஒன்றி நிற்க வேண்டும்” என்கிறார்.
அதாவது, மனத்தை இறைச் சிந்தனையில் நிலைநிறுத்த வேண்டும்.
பதஞ்சலி கூறும் ஈஸ்வரப் பிரணிதானம்—இறைவனிடம் அர்ப்பணித்தல் அல்லது சரணாகதி—இதனோடு தொடர்புடையது.
மனம் இறைநினைவில் தொடர்ந்து நிலைபெறும்போது, தேவையற்ற மனப்பதிவுகளின் மீது நாம் செலுத்தும் கவனம் குறைகிறது. அவற்றின் வலிமையும் படிப்படியாகக் குறையலாம்.
மனம் இறைநினைவால் நிரம்பும்போது, பாசத்தின் பிடி தளர்ந்து, தூய்மையான அன்பு வெளிப்படுவதற்கான இடம் உருவாகிறது.
மூன்றாவது கேள்வி
Super-conscious mind என்றால் என்ன?
‘Super-conscious mind’ பற்றி ஒரு அன்பர் கேட்டிருக்கிறார்.
இந்தத் தொடருக்கும் ‘Super-conscious mind’-க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற சந்தேகம் வரலாம்.
நிச்சயமாக சம்பந்தம் உண்டு—ஆனால் முதலில் சொற்களைத் தெளிவுபடுத்திக் கொள்வோம்.
Conscious mind — உணர்வு நிலை மனம்.
Subconscious mind — ஆழ்மனப் பதிவுகள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் நிலை.
இவை உளவியலில் பல்வேறு விதங்களில் விவாதிக்கப்படும் கருத்துகள்.
ஆனால் Super-conscious mind என்பது நவீன அறிவியலில் ஒரே மாதிரியான அறிவியல் வரையறையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தனி ‘மனம்’ அல்ல.
ஆன்மிக மரபுகளில், சாதாரண உணர்வு நிலைக்கும் அதற்குக் கீழுள்ள மனப்பதிவு நிலைக்கும் அப்பாற்பட்ட உயர்ந்த விழிப்புணர்வு நிலையை விளக்குவதற்கு இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதை நான் எவ்வாறு புரிந்துகொள்கிறேன் என்பதைப் பார்ப்போம்.
“மனம் இறங்குதல்” என்றால் என்ன?
தாயுமானவர் பாடுகிறார்:
“மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே.”
இங்கே ‘மனமிறக்க’ என்றால் மனமே இல்லாமல் போய்விட வேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது.
மனம் இருக்கும்.
ஆனால், மனதை ஆழமான பதிவுகளின் மூலம் ஆட்டிப்படைக்கும் ‘நான்’ என்ற அகங்காரமும், ‘எனது’ என்ற மமகாரமும் நலிந்து, அவற்றின் தன்முனைப்பு வெகுவாகக் குறைய வேண்டும்.
அதன்பின் அந்த மனிதனின் இயக்கத்தில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
ஒன்று
ஆழமான மனப்பதிவுகளின் கட்டாய உந்துதலுக்கு அடிமையாகாமல், புலன்கள் தரும் ஒவ்வொரு தாக்கத்தையும் உடனடியாக விருப்பு–வெறுப்புடன் எதிர்கொள்ளாமல், அவற்றைத் தெளிவாகக் கவனிக்க முடியும்.
புறவுலகில் நிகழ்வதைப் பார்க்கும்போது, அதன் பின்னணியில் உள்ள காரணிகளையும் புரிந்துகொள்ளும் திறன் வளர்கிறது.
இரண்டு
அவனது இயக்கத்தில் பெரிய மாற்றங்கள் இருந்தாலும், அதன் பின்னணியில் இருப்பது தனிப்பட்ட அகங்காரத்தின் உந்துதல் அல்ல.
சித்தத்தின் ஆழத்திலிருந்து எழும் உள்ளொளி, தெளிவு, விழிப்புணர்வு அவனை வழிநடத்தத் தொடங்குகிறது.
இந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலையை நான் “Super-consciousness” என்று புரிந்துகொள்கிறேன்.
இது எனது தனிப்பட்ட ஆன்மிக விளக்கம்; இதை அறிவியல் ரீதியாக வரையறுக்கப்பட்ட ஒரு தனி ‘மனம்’ என்று கூறவில்லை.
‘நான்’ முதல் ‘எனது’ வரை
பொதுவாக நாம் எல்லோரும் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
இது ஒரு கற்பனை உருவகம்.
‘நான்’ என்று சொல்லும்போது அது ஒரு புள்ளி போன்றது.
ஆனால் அதனுடன் ‘எனது’ என்ற ஒன்று வந்துவிட்டால்—அது உயிருள்ள பொருளாக இருந்தாலும், உயிரற்ற பொருளாக இருந்தாலும்—ஒரு வட்டம் உருவாகிறது.
என்னுடைய வீடு.
என்னுடைய மனைவி.
என்னுடைய கணவன்.
என்னுடைய குழந்தைகள்.
என்னுடைய சொத்து.
என்னுடைய பதவி.
என்னுடைய புகழ்.
என்னுடைய கருத்து.
என்னுடைய மதம்.
என்னுடைய சாதி.
என்னுடைய நாடு.
இவ்வாறு ‘எனது’ என்பதன் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ‘நான்’ என்ற தன்முனைப்பைச் சுற்றியுள்ள வட்டமும் பெரிதாகிறது.
‘எனது’ அதிகரிக்க அதிகரிக்க, அகங்காரத்தின் பிடியும் வலுப்படுகிறது.
அகங்காரமும் கருணையும்
அகங்காரம் வலுவாக இருக்கும் மனிதனிடம் கருணை வெளிப்படுவது கடினமாக இருக்கலாம்.
ஏனெனில், அகங்காரம் பெரும்பாலும் “நான்–எனது” என்ற குறுகிய வட்டத்தைச் சுற்றி இயங்குகிறது.
கருணையோ அந்த வட்டத்தைத் தாண்டி பிற உயிர்களையும் உள்ளடக்குகிறது.
மனிதனிடம் கருணை மலர வேண்டுமென்றால், அவனுடைய அகங்காரத்தின் பிடி தளர வேண்டும்.
அதற்கு, ‘எனது’ என்று பற்றிக்கொண்டிருக்கும் பொருட்கள் மற்றும் உறவுகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்ல; அவற்றின் மீது உள்ள மனப்பற்றும் குறைய வேண்டும்.
இறுதியில், ‘எனது’ என்ற உணர்வின் பிடி தளரும்போது, வட்டமும் மறைந்து விடுகிறது.
வட்டத்தை விட்டு வெளியேறியவர்கள்
சிலர் அந்த வட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல், குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறி ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ரமண மகரிஷி, ஆதி சங்கரர் போன்றவர்கள் இளமையிலேயே உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள்.
இன்னும் சிலர் வாழ்க்கையில் சந்தித்த அதிர்ச்சிகளால் அந்த வட்டத்தைத் துறக்கிறார்கள்.
பட்டினத்தாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது “காதறுந்த ஊசி.”
பத்திரகிரியாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது “கழுமரம்.”
அருணகிரிநாதருக்கு ஏற்பட்ட வாழ்க்கை அதிர்ச்சியும் அவருடைய ஆன்மிகத் திருப்பத்திற்கு காரணமானதாக மரபில் கூறப்படுகிறது.
புத்தரைப் போன்றவர்கள் தங்களைத் துளைத்துக்கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை தேடி உலக வாழ்க்கையின் வட்டத்தைத் தாண்டிச் சென்றார்கள்.
இல்லறத்தில் இருந்தால் கருணை மலராதா?
அப்படியானால், இந்த வட்டத்தில் சிக்கித் தவிக்கும் இல்லறவாசிகளின் உள்ளத்தில் கருணை மலர வாய்ப்பே இல்லையா?
நிச்சயமாக இருக்கிறது.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் என நம்மால் வணங்கத்தக்க பலர் இருந்திருக்கிறார்கள்.
அவர்களில் இல்லறவாசிகளும் இருந்தனர்.
அவர்கள் எந்த நிலையில் உயர்ந்து நின்றார்கள்?
நம்மிடம் இல்லாத ஒரு சிறப்பு அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லவா?
அது என்ன?
நம்மிடம் இருக்கும் ஒன்று அவர்களிடம் வலுவாக இல்லை என்பதுதான் காரணம்.
அது நம்மை ஆட்டிப்படைக்கும் அகங்காரம்.
அவர்கள் இல்லறத்தை விட்டுவிடவில்லை என்றாலும், இல்லறப் பொருட்களை ‘எனது’ என்று பற்றிக்கொண்டு வாழவில்லை.
ஜனகரின் வாழ்க்கை
ஜனக மகாராஜா ஒரு நாட்டையே ஆட்சி செய்தார்.
இருந்தும் பற்றற்ற நிலையில் வாழ முடிந்தவர் என்று ஆன்மிக மரபுகள் அவரைப் போற்றுகின்றன.
அவரிடம் இருந்த ‘எனது’ பொருட்களின் எண்ணிக்கை நம்மைவிட எவ்வளவோ அதிகம்.
ஆனால், அவற்றின் மீது அவர் கொண்டிருந்த மனப்பற்று குறைந்திருந்தது.
நம்மிடம் உள்ள பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவற்றின் மீது உள்ள பற்று அதிகமாக இருக்கலாம்.
எனவே, பொருட்களின் எண்ணிக்கையல்ல பிரச்சினை; அவற்றின் மீது உள்ள மனப்பற்றுதான் பிரச்சினை.
சரணாகதி
ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனிடம் சரணடைந்தவர்கள்.
இறைவனிடம் முழுமையான சரணாகதி மலரும்போது, தனிப்பட்ட அகங்காரத்தின் பிடி இயல்பாகவே தளரத் தொடங்குகிறது.
ஆனால், பல்வேறு காரணங்களால் நம்மால் முழுமையாகச் சரணடைய முடியவில்லை என்றால்?
அடுத்து என்ன செய்யலாம்?
தினந்தோறும் சில மணித்துளிகளை ஒதுக்கி அகத்தாய்வு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.
முறையாகச் செய்து வந்தால், சில வாழ்வியல் உண்மைகள் நமக்குப் புரியத் தொடங்கும்.
‘எனது’ என்று எதையெல்லாம் நினைக்கிறோமோ, அவற்றின் மீது கொண்ட மனப்பற்றும் படிப்படியாகக் குறையலாம்.
ஆக்ஞா சக்கரம் குறித்து
நாளடைவில் நமது எண்ண ஓட்டம் ஆக்ஞா சக்கரத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும் என்று யோக மரபில் கூறப்படுகிறது.
ஆக்ஞா சக்கரத்தை இறைவனின் இருப்பிடம் என்று நேரடியாகக் கூறுவது எல்லா வேதாந்த மரபுகளுக்கும் பொதுவான கருத்தல்ல.
ஆனால், யோக மற்றும் சித்த மரபுகளில் அது உயர்ந்த விழிப்புணர்வின் அடையாளமாகவும், உள்நோக்கிச் செல்லும் நிலையைக் குறிக்கும் உருவகமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த உள்நோக்கம் ஆழமடையும்போது, ‘நான்–எனது’ என்ற குறுகிய வட்டம் தளர்ந்து, பிற உயிர்களையும் தன்னோடு தொடர்புடையவையாக உணரும் மனப்பக்குவம் வளரலாம்.
அங்கேதான் கருணை மலரத் தொடங்குகிறது.
அதனால்தான் கவிஞர் கூறுகிறார்:
“கருணை பொங்கும் உள்ளம் - அது
கடவுள் வாழும் இல்லம்.”
கருணை எப்போது பொங்கும்?
இப்போது தொடக்கத்தில் பார்த்த அந்த நான்கு வரிகளையும் மீண்டும் நினைவுகூர்வோம்:
“கருணை பொங்கும் உள்ளம் - அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்.”
கடவுளைத் தேடி கோயிலுக்குச் செல்லலாம்.
தியானம் செய்யலாம்.
மந்திரம் சொல்லலாம்.
பூஜை செய்யலாம்.
வேதாந்தத்தைப் படிக்கலாம்.
குருவின் உபதேசத்தைக் கேட்கலாம்.
ஆனால் இவை அனைத்தும் நமது உள்ளத்தை மாற்றுவதற்கான வழிகளாக இருக்க வேண்டும்.
‘நான்’ என்ற அகங்காரமும், ‘எனது’ என்ற மமகாரமும் குறையத் தொடங்கும்போது, உள்ளம் விசாலமாகிறது.
உள்ளம் விசாலமானால் பிறருடைய துன்பத்தை உணரும் திறன் வளர்கிறது.
அந்த உணர்வு செயலாக வெளிப்படும்போது கருணை மலர்கிறது.
அந்தக் கருணை தனிப்பட்ட ஒருவரிடம் மட்டும் அல்லாமல், எல்லா உயிர்களிடமும் பரவும்போது அது தூய அன்பாகிறது.
அதனால்தான் கவிஞர், மிக எளிய இரண்டு வரிகளில் மிகப் பெரிய ஆன்மிக உண்மையைச் சொல்கிறார்:
கருணை பொங்கும் உள்ளமே கடவுள் வாழும் இல்லம்.
கடவுளை வெளியில் தேடிக்கொண்டே இருப்பதற்கு முன்,
நமது உள்ளத்தில் கருணை இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொள்வோம்.
கருணை மலரத் தொடங்கிய இடத்தில்தான்
‘நான்’ சுருங்கி, ‘நாம்’ விரிவடைகிறது.
அங்கேதான் இறைநினைவும் ஆழமடைகிறது.


No comments:

Post a Comment