Sunday, 30 October 2022

மெய்ஞானப் புலம்பல்

     

   மெய்ஞானப் புலம்பல்


ஆங்கார இருளகற்றி
ஆணவத்தின் பிறப்பகற்றி
ஓங்கார நாதங்கள்
உரைத்திருப்ப தெக்காலம்?
.....     ....‌.    .....     .....     .....

மாயாப் பிறப்பறுத்து
மன்னன் திருவடிகள்
சேய்தாய் அணைத்தாற்போல்
சேர்த்தணைப்ப தெக்காலம்?

சேய்தாய் அணைத்தாற்போல்
சேர்த்தணைத்து மகிழ்வதற்கு
பேய்போல் மனக்குரங்கை
பெயர்த்தொழிப்ப தெக்காலம்?

பேய்போல் மனக்குரங்கை
பெயர்த்தொழித்து கொல்வதற்கு
தாய்போல் தாரத்தை 
தரம்பிரிப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....
பாழும் பூவுலகில்
பாவியென ஆகாமல்
சூழும் மயக்கங்கள்
தூரநிற்ப தெக்காலம்?

சூழும் மயக்கங்கள்
தொடர்ந்துவந்து சுற்றாமல்
நாளும் உன்பாதம்
நான்தொழுவ தெக்காலம்?

நாளும் உன்பாதம்
நான்தொழுது அழுதாலும்
வீழும் நாள்வருமுன்
வினையறுப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

நீங்கா துனைனினைத்து
நின்னருளைப் பெறுவதற்கு
ஏங்கா துள்ளமதை
எதிர்கொள்வ தெக்காலம்?

ஏங்கா துள்ளமதை
எதிர்கொண்டு செல்வதற்கு
தூங்கா நிலைமறந்து
துயரறுப்ப தெக்காலம்?

தூங்கா நிலைமறந்து
துயரறுத்து வாழ்வதற்கு
தீங்கா செயல்மறந்து
செயல்படுவ தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

முக்களையின் பொருளறிந்து
முகக்களையின் அருளறிந்து
தெற்கலையின் நாயகனை
சேர்ந்தடைவ தெக்காலம்?

தெற்கலையின் நாயகனை
சேர்ந்தடைந்து பணிவதற்கு
இக்கலையில் நானடைந்த
இடரறுப்ப தெக்காலம்?

இக்கலையில் நானடைந்த
இடரறுத்து சாய்ப்பதற்கு
பொய்க்கலையை வேரறுத்து
புகலடைவ தெக்காலம்?

குறிப்பு:-
முக்களை...ஆணவம், கன்மம், மாயை
தெற்கலையின் நாயகன்... சிவன்
.....    .....    .....    .....    .....

பெண்ணென்று பாராமல்
பேதைமனம் துள்ளாமல்
புண்ணென்று புறவாழ்வை
புரிந்துகொள்வ தெக்காலம்?

புண்ணென்று புறவாழ்வை
புரிந்துகொண்டு வாழ்வதற்கு
விண்ணென்று எனக்கென்று
வினையறுப்ப தெக்காலம்?

விண்ணென்று எனக்கென்று
வினையறுத்து தீர்வதற்கு
கண்ணென்று உனையெண்ணி
களிபுரிவ தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

சொல்லாத சொற்களெல்லாம்
சொல்லுவதை விட்டுவிட்டு
பொல்லாத மனக்குரங்கை
பொய்த்திருப்ப தெக்காலம்?

பொல்லாத மனக்குரங்கை
பொய்த்திருக்க வைத்துவிட்டு
கல்லாத நூல்கற்று
கண்சொரிவ தெக்காலம்?

கல்லாத நூல்கற்று
கசிந்துருகி யெங்குமிணை
இல்லாத திருவடிகள்
எண்ணுவது மெக்காலம்?
.....     .....     .....     .....     .....     

பட்டுவிடும் பாண்டமிதை
பார்த்துநிதம் பாவித்து
கெட்டுவிடும் முன்னுன்னை
கிட்டுவது மெக்காலம்?

கெட்டுவிடும் முன்னுன்னை
கிட்டியே மகிழ்வதற்கு
சுட்டுவிடும் எண்ணங்கள்
சுட்டிருப்ப தெக்காலம்?

சுட்டுவிடும் எண்ணங்கள்
சுட்டிருக்கச் செய்வதற்கு
மொட்டுவிடும் ஆசைகளின்
மொட்டழிப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

உள்ளம் உருகிநின்று
உன்னினைவாய் ஆவதற்கு
கள்ளம் கருகிநிற்கும்
கருத்தறிவ தெக்காலம்?

கள்ளம் கருகிநிற்கும்
கருத்தறிந்து கொள்வதற்கு
பள்ளம் மேடென்று
பகுத்தறிவ தெக்காலம்?

பள்ளம் மேடென்று
பகுத்தறிந்து பார்ப்பதற்கு
தெள்ளத் தெளிவாக
சிந்திப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....     

பாவியவன் என்றழைத்து
பாரிலுள்ளோர் இகழாமல்
தாவியவன் தாள்பணிந்து
தவமுடிப்ப தெக்காலம்?

தாவியவன் தாள்பணிந்து 
தவமுடித்து ஓய்வதற்கு
மேவியசீர் மேதினியில்
மெய்யறிவ தெக்காலம்?

மேவியசீர் மேதினியில்
மெய்யறிவு கொள்வதற்கு
ஏவியதோர் வாழ்க்கையிதை
எடுத்தெறிவ தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

மலரிடத்தே ஊடுருவி
மலர்துறக்கும் காற்றேபோல்
மனத்திடையே ஊடுருவி
மனந்துறப்ப தெக்காலம்?

மனத்திடையே ஊடுருவி
மனந்துறக்கக் கற்றாலும்
மனையிடத்தே ஊடுருவி
மனைதுறப்ப தெக்காலம்?

மனையிடத்தே ஊடுருவி
மனைதுறக்க கற்றாலும்
சினையிடத்தே ஊடுருவும்
வினைதுறப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

பிறப்பும் இறப்புமற்ற
பெருவெளியில் பிறப்பதற்கு
இறக்கும் இப்பிறப்பின்
பிறப்பறுப்ப தெக்காலம்?

இறக்கும் இப்பிறப்பின்
பிறப்பறுக்கக் கற்றாலும்
திறக்கும் மணிக்கதவம்
திறந்திருப்ப தெக்காலம்?

திறக்கும் மணிக்கதவம்
திறந்து விரிந்தாலும்
சிறக்கும் சீர்வளங்கள்
துறந்திருப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

பற்றும் ஆசைகளைப்
பற்றுவதை விட்டுவிட்டு
முற்றும் முதல்வனையே
முன்னினைப்ப தெக்காலம்?

முற்றும் முதல்வனையே
முன்வைத்துப் பார்ப்பதற்கு
தொற்றும் துயரங்கள்
தூரவைப்ப தெக்காலம்?

தொற்றும் துயரங்கள்
தொடராத நிலையதற்கு
சுற்றும் மயக்கங்கள்
துறந்திருப்ப தெக்காலம்?
.....     ..‌‌‌‌‌...     .....     .....     .....

மண்ணுலகம் பொன்னுலகம்
மாதரென்ற நிலைமறந்து
விண்ணுலக நாயகனை
வியந்துநிற்ப தெக்காலம்?

விண்ணுலக நாயகனை
வேண்டிநிதம் வியந்திருக்க
புண்ணுலகம் புரிந்துகொண்டு
புள்பறப்ப தெக்காலம்?

புண்ணுலகம் புரிந்துகொண்டு
புள்பறக்கும் நாள்வருமுன்
தன்னுலகம் தான்மறக்கும்
தயைபெறுவ தெக்காலம்?
.....     .....     ..‌‌...     .....     .....

ஆடுகின்ற பட்டமொன்று
அறுந்துவிழக் கண்டபின்னும்
ஓடுகின்ற பாழ்மனது
ஒடுங்குவது மெக்காலம்?

ஓடுகின்ற பாழ்மனது
ஓடாமல் ஒடுங்கிநிற்க
கூடுகின்ற பேய்க்குணங்கள்
குறைந்தொழிவ தெக்காலம்?

கூடுகின்ற பேய்க்குணங்கள்
குறைந்தொழியக் கண்டாலும்
தேடுகின்ற நாயகனைத்
தெரிந்துகொள்வ தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

தன்னவன் தன்னில்
தான்மயக்கம் கொள்ளாமல்
தென்னவன் தன்னில்
சிந்தைவைப்ப தெக்காலம்?

தென்னவன் தன்னில்
தெவிட்டாத சிந்தைவைத்து
கண்ணவன் தன்னில்
களித்திருப்ப தெக்காலம்?

கண்ணவன் தன்னில்
களிநடனம் கொண்டுநிதம்
பண்ணவன் தன்னில் 
பணித்திருப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .‌‌‌‌‌....

பொருள்தேடி புண்பட்டு
பொய்யுலகில் வாழாமல்
இருள்தேடும் தீவினைகள்
இனிமறப்ப தெக்காலம்?

இருள்தேடும் தீவினைகள்
இனியென்றும் மறந்திருக்க
அருள்தேடி அன்புற்று
அகமகிழ்வ தெக்காலம்?

அருள்தேடி அன்புற்று
அகமகிழ்ந்து என்றும்திரு
வருள்தேடி வழிபட்டு
வயப்படுவ தெக்காலம்?
.....     .....     .....     .....     ...‌..

Monday, 10 October 2022

பாரதம்





                    பாரதம்



பாரதம் ஒரு ஞானபூமி. ஆன்மீகத்தை பொறுத்தவரை உலக நாடுகளுக்கு அது ஒரு தாயகம்.

மனதில் தோன்றும் குழப்பங்களுக்கு விடை தேடி பல நாட்டினரும் இங்கு வருவதைப் பார்க்கலாம். ஆனால், அதற்காக இங்கிருந்து யாரும் வெளிநாடுகளுக்கு செல்வதில்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆன்மீகம் முக்கியமானதா என்ற சந்தேகம் வரலாம்.  ஆன்மீகம் என்பது ஒரு மதத்தின் தனிச்சொத்து அல்ல; மனிதனை நல்லவனாக வாழச் செய்வதையும், நல்லவனிலிருந்து ஞானத்தை நோக்கி உயர்த்துவதையும் கற்றுத்தரும் வாழ்வியல் தத்துவம்.

அந்த ஆன்மீகம் தனிமனிதனில் மலர்ந்தால் சமூகத்திலும், சமூகத்தில் மலர்ந்தால் நாட்டிலும் அதன் விளைவு தெரியும்.

ஆன்மீகத்தில் மலர்ச்சி அடைந்த மனிதன், பிறரை துன்புறுத்துவதில்லை.

ஆன்மீகத்தில் மலர்ச்சி அடைந்த சமூகம், பிற சமூகத்தினரை கொடுமைப் படுத்துவதில்லை.

ஆன்மீகத்தில் மலர்ச்சி அடைந்த நாடு, அன்னிய நாட்டின் மீது படையெடுப்பதில்லை.





நண்பர் ஒருவரது கேள்வி....
ஆன்மீகம் இந்து மதத்தின் சொத்து என்பது சரியா?

ஆன்மீகம் சொல்லும் வாழ்வியல் தத்துவங்கள் எல்லா மதத்திலும் உண்டு.

பாரத தேசத்தில் சமய நூல்கள் மிக அதிகம். சமய நூல்களுக்கு அப்பாற்பட்டும், பல நூல்கள் உண்டு.

தவிர, இங்கு பல்வேறு சமயங்கள், பல்வேறு மொழிகளில் உள்ளன.
என்னைப் பொறுத்தவரை, பாரதத்தில் தோன்றிய பல்வேறு சமயங்களும், சிந்தனை மரபுகளும், இந்த மண்ணின் ஆன்மீகப் பண்பாட்டோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவையே.


தவிர, ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மைக்கும் ஏற்ப, தனித்தனி வழிமுறைகளை இந்து மதம் எடுத்துரைக்கிறது. 

இவ்வளவு இருந்தும் இந்த நாட்டில் பல்வேறு வகையான குழப்பங்கள் ஏன் நிலவுகின்றன எனத் தோன்றலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.




ஏசுபிரான் "விதைகளைத் தூவினேன்" என்கிறார். 
வள்ளலார் "கடைவிரித்தேன்; கொள்வாரில்லை" என்கிறார். 
நாம் என்ன செய்கிறோம்?

குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர்கள் நல்லதொரு வழிகாட்டியாக வாழ வேண்டும்.

ஆசிரியர்கள் ஒழுக்க விதிகளை கற்றுத்தர வேண்டும்.

பட்டி மன்றங்கள், சொற்பொழிவுகள் நல்லவற்றை மனதில் விதைக்க வேண்டும்.

ஊடகங்கள் வெறும் கேளிக்கையை மட்டும் காட்டாமல், மக்களிடம் தேசியச் சிந்தனையைக் தூண்டுவதற்கு உதவ வேண்டும்.

இவற்றில் குறைபாடு இருந்தால், குழப்பங்கள் இருப்பதும் இயற்கைதானே!

    


ஆன்மீகம் சொல்லும் வாழ்வியல் தத்துவங்கள் மிகச் சிறந்தவை, மனிதனின் மனதில் மலர்ச்சியை உண்டுபண்ணுபவை என்றால், பாமர மனிதன்வரை அவை சென்றடைய வேண்டுமே; ஆனால், அவை ஏன் சென்றடையவில்லை?

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. 
'பாரம்பரிய பண்பாடு, கலை முதலானவை தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக கையாளப் படுகின்றன; ஆனால், பக்கத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கலை, பண்பாடு என எதுவுமே இல்லையே; ஏன்?'.

அதற்கு பெருந்தலைவர் "தஞ்சாவூர்க்காரனை ஒரு வருடம் ராமநாதபுரத்தில் வசிக்கச்சொல்; கலை எப்படி வளரும் என பார்க்கிறேன். தஞ்சாவூர் செழிப்பான பகுதி. அவனுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை. ஆனால், ராமநாதபுரம் அப்படியா? அது ஒரு வறட்சியான பகுதி. சாப்பாட்டிற்கு அவன் போராட வேண்டும். பின் எப்படி அவன் கலையை வளர்ப்பான்?" என்றார்.

பசித்த வயிற்றோடு போராடுபவனிடம் ஆன்மீகம் பற்றி பேச முடியுமா? அதனால்தான் விவேகானந்தர் 'பசித்தவனுக்கு முதலில் உணவு கொடு; மற்றதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்' என்கிறார்.

ஆக, ஆன்மீகம் பரவலாக எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும்.

அதற்கு பொதுநலத்தில் அக்கறை உள்ள மனிதர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். சுயநலவாதிகள் அரசியலுக்கு வரவே கூடாது.

சுயநலம் கொண்டவர்கள் என்று தெரிந்தும், அவர்களுக்காக நாம் ஆதரவு தெரிவிக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நம்மிடமும் சுயநலம் இருக்கிறதோ என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.
 
 
ஒரு நாடு சிறந்த நாடாக உள்ளது என்று சொல்ல வேண்டுமென்றால், அதற்கான அடையாளங்கள் என்ன?

1. அந்த நாட்டின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். 

2. அதனால் ஏற்படும் பயன்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய வேண்டும்.

3. வாழ்வியல் நெறிகளை முழுமையாக எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும்.

4. சமுதாய ஒழுக்கம் நன்கு செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வெறுமனே வீதிகளில் மட்டும் செயல்பட்டால் போதாது.

5. எதிர்மறை சிந்தனைகளை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

6. எல்லாவற்றிலும் முக்கியமாக அனைவரிடமும் அப்பழுக்கற்ற தேசப்பற்று இருக்க வேண்டும்.

இவையெல்லாம் செம்மையாக இருக்க வேண்டுமென்றால், வழிநடத்தும் அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும் உயர்ந்த நோக்கங்களோடு செயல்படவேண்டும்.



அரசியல்வாதி என்றால் யார் என்று நமக்குத் தெரியும். ஆனால், ஆன்மீகவாதி என்றால், அது யாரை குறிக்கிறது?

ஆன்மீகவாதி என்பவன் மதம் சார்ந்த மனிதனா?

மதம் சாராத மனிதன் ஆன்மீகவாதியாக இருக்கமுடியாதா?

மொத்தத்தில் ஆன்மீகம் என்றால் என்ன?

    



ஆன்மீகம் என்றால் என்ன என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விளக்கம் தருவார்கள்.

ஊடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். 'பக்தி மலர்' என்பார்கள்; அதில் ஆன்மீகம் கலந்திருக்கும். 'ஆன்மீக மலர்' என்பார்கள்; அதில் பக்தி கலந்திருக்கும்.

அப்படியானால் பக்தி, ஆன்மீகம் இரண்டும் ஒன்றுதானா? அல்லது வேறு வேறா?

பக்தி என்பது நம்பிக்கை சார்ந்தது; தவிர அதில் சடங்கு, சம்பிரதாயம், சில நேரங்களில் மூட நம்பிக்கை கூட கலந்திருக்கும்.

ஆன்மீகம் சடங்குகளையோ சம்பிரதாயங்களையோ மட்டுமே சார்ந்தது அல்ல.

.அப்படியானால் மதத்திற்கும், ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் கிடையாதா என்ற சந்தேகம் வரலாம்.

மதத்தில் ஒரு பகுதிதான் ஆன்மீகம். ஆன்மீக உண்மைகளை வெளிப்படுத்தாத மதம் எதுவும் உலகில் கிடையாது.

"மதத்தில் உள்ளது ஆன்மீகம்; மதத்தை கடந்தது ஆன்மீகம்".

மதநம்பிக்கை உள்ள ஞானியர், சான்றோர்கள் தவிர,
மதநம்பிக்கை இல்லாத மனிதர்களும் ஆன்மீக கருத்துக்களை உரைப்பதுண்டு.

வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வியல் நெறிகளை கற்றுக்
கொடுப்பதுதான் ஆன்மீகம்.

   


ஆன்மீகம் வாழ்வியல் தத்துவங்களை/நெறிகளை சொல்கிறது என்றால், பக்தி மார்க்கம் அதை சொல்வதில்லையா என்ற சந்தேகம் வருவது இயற்கையே.

ஆன்மீகத்தில் எல்லாமே பட்டவர்த்தனமாக இருக்கும். 

பக்தி மார்க்கத்தில் பலவற்றை கதையாகச் சொல்வார்கள்; பல சமயங்களில் கதை நம்ப முடியாததாக இருக்கும். ஆனால், அந்தக் கதையில் மெய்ப்பொருள் மறைந்திருக்கும். கதையை சொல்கிறவர் அதை சொல்லவில்லை என்றால், நமக்கு அதில் மறைந்திருக்கும் மெய்ப்பொருள் தெரியாமலே போய்விடும்.



பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஒரு இடத்தில் குழந்தைகளுக்கு "துருவ நட்சத்திரத்தின்" கதையை சொல்லிவிட்டு, பின்னர் அதில் மறைந்திருக்கும் மெய்ப்பொருளை விளக்கினேன். மொத்தமாக பத்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டேன். 

கதைச்சுருக்கம்:-
(அரசர் உத்தானபாதன்: இவர் ஒரு புகழ்பெற்ற அரசர். இவருக்கு சுநீதி, சுருச்சி என இரண்டு மனைவிகள் உண்டு.

சுநீதியின் மகன் துருவன்.

அரசர் உத்தானபாதனுக்கு சுருச்சியிடம் அதிக அன்பு இருந்தது.
எப்போதும் அவளுடனேயே இருப்பான்.

ஒருமுறை சிறுவன் துருவன் தந்தையின் மடியில் உட்கார முயன்றான். ஆனால், சித்தி சுருச்சி அவனைத் தடுத்துவிடுகிறாள். 

மனம் உடைந்த துருவன் விஷ்ணுவை நோக்கிக் காட்டில் கடினமான தவம் இருந்தான். சிறுவனின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு காட்சியளித்து, அவனுக்கு வானத்தில் எக்காலமும் அழியாத 'துருவ நட்சத்திரம்' என்ற உயர் பதவியைத் தந்தார்.)

மெய்ப்பொருள்:- 
ருசிக்கு அடிமைப்பட்டால்,
நீதியை மறந்துவிடுவாய்.

அங்கு ஒரு பெரியவரும் கதையை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் மிகச்சிறந்த பக்திமான். காலை, மாலை இரண்டு வேளையும் தவறாமல் கோயிலுக்கு சென்று வருபவர்.

அவர் என்னிடம் ஒரு விஷயத்தை சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.
அவர் சொன்னது --
"போன வாரம் இந்தக் கோயிலில் ஒருத்தர் ஒன்றரை மணிநேரம் "துருவ நட்சத்திரம்" பற்றி கதாகாலட்சேபம் செய்தார். ஆனால், அதன் பின்னே மறைந்துள்ள மெய்ப்பொருளை கடைசிவரை சொல்லவே இல்லை. இப்படித்தான் நாம் எல்லாவற்றையும் மேலோட்டமாக பேசி, உள்ளே உள்ள பொக்கிஷத்தை மறைத்து விடுகிறோம்.

ஆன்மீகத்தில் இந்தப் பிரச்சினையே இருக்காது. சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லி விடுவார்கள். அவற்றை புரிந்துகொள்ள நாம்தான் சிரமப்பட வேண்டியிருக்கும். 

     


வாழ்வியல் நெறிக்கும், வாழ்வியல் தத்துவத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

வாழ்வியல் நெறி எப்படி நல்லவனாக வாழ்வது என்று சொல்லித் தருகிறது.
வாழ்வியல் தத்துவம் எப்படி ஞான நிலை பெறுவது என்று கற்றுத் தருகிறது.

மண்ணில் பிறந்த எல்லோரும் நல்லவனாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.



இயற்கையின் படைப்பு அப்படித்தான் அமைந்திருக்கிறது. இயற்கை மலரை மட்டும் படைக்கவில்லை; கூடவே முள்ளையும் படைத்து வைத்திருக்கிறது.


நல்லவர்களாக வாழும் மனிதர்களுக்குள்ளும், ஒரு சிலர் மட்டுமே ஞானநிலைவரை பயணிக்க விரும்புகிறார்கள்.


"பலர் அழைக்கப் படுகிறார்கள்; ஒரு சிலரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்".. பைபிள்
(Many are called; few are chosen .. Bible)
All are called; all are chosen என்று சொல்லவில்லை.

கீதையிலும் பகவான் கிருஷ்ணர் அதையே சொல்லுகிறார் ..
"பலரும் என்னைத் தேடுகிறார்கள்; அவர்களுள் ஒரு சிலரே என்னை வந்தடைகிறார்கள்".
.. பகவத் கீதை 7.3

பல மனிதர்கள் நல்லவராக மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதில் தவறேதும் இல்லை.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் -- வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்" என்று வள்ளுவரே சொல்லிவிட்டார்.




ஒரு நாடு உயர வேண்டுமென்றால் அதன் மக்கள் நல்லவர்களாகவும், அவர்களை வழிநடத்துபவர்கள் உயர்ந்த நோக்கமுடையவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படியானால், நல்ல மனிதனையும் உயர்ந்த மனிதனையும் உருவாக்குவது எது? இங்குதான் ஆன்மீகத்தின் பங்கு தொடங்குகிறது.




ஒரு மனிதன் நல்லவனாகத்தான் வாழ்கிறான் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

அவனிடம் கீழ்க்கண்ட பண்புகள் இருந்தால், அவன் நல்லவனாக வாழ்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளலாம் - -

1. எல்லோருடனும் இணக்கமாக நடந்து கொள்வான்.

2. எவருக்கும் தீங்கிழைக்க மாட்டான்.

3. பிடிக்காத நபரிடம் வம்பிழுக்க மாட்டான்; பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடுவான்.

4. அவனிடமிருந்து வன்சொல் எதுவும் வராது.

5. பிறரை வஞ்சித்து வாழ விரும்ப மாட்டான்.

6. சமுதாய நியதிகளை மதித்து நடப்பான்.




ஆனாலும், இப்படிப்பட்ட மனிதர்கள் பாசம் மிகுந்தும் வாழ்ந்து வருவார்கள். அது ஒன்றுதான் பிரச்சினை. 

பாசத்திலிருந்து விலகத் தெரியாததால், பல நேரங்களில் இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.

வாழ்வியல் தத்துவங்களை புரிந்துகொண்டால் மட்டுமே, பாசத்திலிருந்து விடுபட முடியும். 

வாழ்வியல் நெறிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய கடமை, தனி மனிதனுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும், ஏன் அரசுக்கும் கூட உண்டு.

இவற்றை முறையாக கடைப்பிடிக்காத காரணத்தினால்தான், ஒருவருக்கொருவர் இணக்கமான சூழலில் வாழ முடியாமல் தவித்து வருகிறோம்.

    

சமூகம் என்றால் என்ன? தனிமனிதர்கள் பலர் ஒன்றுகூடினால், அது சமூகம் என அழைக்கப்படுகிறது.

சமூகத்தை வழிநடத்துவதற்கு சரியான தலைமை இல்லையென்றால், அந்த சமூகம் எப்படி நடந்துகொள்ளும் என்று யாராலும் கணிக்க முடியாது; தவிர, தலைமைப் பொறுப்பில் உள்ளவர் உணர்ச்சிகளை தூண்டி விடுபவராக இருந்தால் வேறு வினையே வேண்டாம்!?

தனிமனிதர்கள் நல்லவர்களாக இருந்தாலும், சரியான தலைமை இல்லாத சமூகம் தவறான பாதையில் செல்லக்கூடும்.
(Individually, many may be good; but collectively, a society can go wrong.)


இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தனிமனிதன் ஒழுங்காக இருந்தாலும் சமூகத்தை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் நாட்டில் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.


     
ஒரு நாட்டிலுள்ள மதங்கள் நாட்டின் இறையாண்மைக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக செயல்பட வேண்டும். 

மனிதநேயம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என்றெல்லாம் பேசுகிறோம். ஆனாலும் மதத்தின் பெயரால் பலவிதமான பூசல்கள் ஏற்படேகின்றனவே! அது  ஏன்?


     
பல இடங்களில் இருந்தும் இந்துமத விரோதக் கருத்துக்கள் வருவதில் ஆச்சரியம் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமான நோக்கம் இருக்கலாம்.

ஆனால், இந்து மதத்திற்குள்ளேயே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் பலவிதமான வேதனைகளை வெளிப்படுத்துகிறார்களே!? அதை பல்வேறு பிரிவைச் சேர்ந்த மதத் தலைவர்கள் ஒன்றுகூடி சரிசெய்ய வேண்டாமா?

இந்து மதத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்று பட்டியல் போடுவது நமது நோக்கமல்ல. ஆனால், இன்னும் கண்ணுக்குத்
தெரியாத ஒரு (பெர்லின்) சுவர் அனைத்து இந்துக்களையும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்க விடாமல் தடுக்கிறது உண்மைதானே? அதை உடைக்க வேண்டியது மதத்தலைவர்களின் கடமை அல்லவா? அதை ஏன் செய்யத் தயங்குகிறார்கள்?

எங்களுக்கு விதிக்கப்பட்ட பணியை நாங்கள் செவ்வனே செய்து வருகிறோம் என்று அவர்கள் சொல்லலாம். அதில் தவறேதும் இல்லை.

ஆனாலும், கண்ணுக்குத் தெரியாத சுவர் உடைக்கப்படாதவரை இந்துமதத்திலிருந்து பலரையும் பிற மதங்களுக்குத் தாரைவார்க்கும் நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடைபெறும் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்?

"கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்று சொல்வதுண்டு. இதை மதத்தின் தலைவர்கள் உணர்ந்தால் நன்றாக இருக்கும்.


(சிறுவயதில் கேட்ட ஒரு கதை நினைவிற்கு வருகிறது. இப்போது கதை சொல்லவும் ஆள் இல்லை; அப்படியே இருந்தாலும் கதை கேட்க பிள்ளைகளும் விரும்புவதில்லை.

ஒரு வயதான தந்தை தனது முடிவு நெருங்குவதை அறிந்து தனது பிள்ளைகள் அனைவரையும் அழைத்தார். 

சில குச்சிகளை கொண்டுவரச் சொல்லி அவற்றை சேர்த்துக் கட்டச் சொன்னார்.

பின் ஒவ்வொரு பிள்ளையிடமும் அந்தக் கட்டை கொடுத்து, அதை கைகளால் இரண்டாக உடைக்கச்
சொன்னார். யாராலும் அதை உடைக்க முடியவில்லை.

பின்னர் அந்தக் கட்டை அவிழ்த்து விட்டு ஒவ்வொரு குச்சியையும் ஒவ்வொரு பிள்ளையிடம் கொடுத்து அதை உடைக்கப் சொன்னார். 

பிள்ளைகள் அனைவரும் குச்சியை எளிதாக உடைத்து விட்டனர்.

தந்தை பிள்ளைகளிடம் "குச்சிகள் ஒரே கட்டாக இருந்தபோது உங்களால் உடைக்க முடியவில்லை. குச்சிகள் தனித்தனியாக வந்ததும் மிகவும் எளிதாக உடைத்து விட்டீர்கள். உங்கள் வாழ்க்கையும் இதுபோலத்தான். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்வரை உங்களை யாரும் வீழ்த்த முடியாது. இதனைப் புரிந்து கொண்டு எப்போதும் ஒற்றுமையாக வாழுங்கள்" என்றார்.  

இந்து மதத்தில் பல்வேறு மதத்தலைவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்தக்கதை  சமர்ப்பணம்.)



சமூகம் என்று சொல்லிவிட்டு பதிவுகள் மதத்தைப் பற்றி மட்டுமே வருகிறதே என நினைக்கலாம்.

வாழ்வியல் நெறியோடு, வாழ்வியல் தத்துவங்களையும் சொல்வது மதம் சார்ந்த ஆன்மீகவாதிகள்தான். மற்றபடி சமூகம் எல்லா இடத்திலும் உண்டு. அவற்றை நாம் ஆராய வேண்டியதில்லை.

மதவாதிகளுக்கு அவர்களின் முன்னே உள்ள பொறுப்பு என்ன என்று பார்த்தோம்.



வாழ்க்கைத் தரத்தை எடுத்துக்கொண்டால், அரசியல்வாதிகளின் பங்களிப்பு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே அது நன்கு உயரும்.

நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் எல்லோரும் அறிந்ததே. எனவே அவற்றை மீண்டும் விளக்கவேண்டியதில்லை.

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. ஆட்சி செய்பவர் சரியில்லை என மக்கள் நினைத்தால், அடுத்த தேர்தலில் அவரை தோற்கடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படி இருக்கும்போது எதிர் கட்சிகள் எதற்காக தேவையற்ற ஆர்ப்பட்டங்களை நடத்தவேண்டும்? மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக்கூறி அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியில் உள்ளவரை தோற்கடிக்க முயற்சி
செய்யலாமே!

ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும், அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டுமே தவிர, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடாது. பல நேரங்களில் அது ஆபத்தை தோற்றுவிக்கும்.

படித்த மனிதர்களாக இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்டால் அந்த நேரங்களில் அறிவு வேலை செய்யாது; அவர்களுக்கு உண்மைத் தன்மையை அறியும் ஆர்வமும் வராது.

எனவே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், உணர்ச்சிகளைத் தூண்டி விட்டும் ஆதாயம் தேட விரும்புகிறவர்களிடமிருந்து விலகத் தெரிந்தால், அது நாட்டிற்கு மிகவும் நல்லது.

     


நமது நாடு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நமது கலாச்சாரமும், நாம் கடைப்பிடித்து வந்த பண்பாடுகளும் அன்னிய நாடுகளின் படையெடுப்பிற்குப்
பின் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடையத் தொடங்கின. 

நாடு சுதந்திரம் அடைந்தபின்பும், உள் நாட்டிலேயே சில சக்திகள் இவற்றை சீரழிப்பதையேக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு
வருகின்றனர்.

ஆனால், நாம் .. குறிப்பாக இந்து மதத்தில் உள்ள மக்கள் .. பங்காளி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
இது நல்லதுதானா?



நமது நாட்டில் உள்ளதுபோல் சமய நூல்களை வேறு எங்கும் காணமுடியாது. பல்வேறு சமயங்களில், பல்வேறு மொழிகளில் உள்ள வாழ்வியல் தத்துவங்களை கணக்கில் எடுக்க விரும்பினால், ஒரு பிறவி போதாது.

அவை சொல்வது வெறும் அறிவுரைகள் அல்ல; மனித இனத்துக்கே வழிகாட்டும் அறவுரைகள். எனவே அவற்றை போற்றி பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

இது ஒரு ஞான பூமி. வாழ்வியல் நெறிகளைப் பொறுத்தவரை உலகிற்கே வழிகாட்டும் வல்லமை உள்ள பூமி இது.

ஆன்றோரும், சான்றோரும் ஒரணியாக சேர்ந்து செயல்பட்டால் நமது நாட்டின் பெருமை நிலைநாட்டப்படும். 

ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது...

"சிதறிய மேகம் சேர்ந்து திரண்டால்
மழையெனப் பெய்யாதோ?

ஒருதுளி எல்லாம் ஒன்றாய் சேர்ந்தால்    
ஓடையும் ஆகாதோ?

ஓரிரண்டாக ஓடைகள் சேர்ந்தால்
நதியெனப் பாயாதோ?

உதிரிப் பூக்கள் ஒன்றாய் கோர்த்தால்
மாலையும் ஆகாதோ?

ஆன்றோர் சான்றோர் ஓரணி சேர்ந்தால்
மானிடம் வளராதோ?"


இந்த நாடு பாரதம் என்ற பெயராலும், இந்தியா என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ‘பாரதம்’ என்ற பெயர் நமது தொன்மையான பண்பாட்டு நினைவுகளை நமக்கு நினைவூட்டுகிறது.

'பாரதம்’ என்ற பெயர் நமது தொன்மையான பண்பாட்டு நினைவுகளை மீண்டும் எழுப்புமானால், அந்தப் பெயருடன் நமது பழம்பெருமையையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற உத்வேகம் நமக்குள் பிறக்குமோ?”







சனாதன தர்மம் - பாகம் 1

              சனாதன தர்மம் - பாகம் 1




இந்த சொற்றொடர் இந்து சமயத்தை வெறுப்பவர்களுக்கு மிகவும் தவறாகத் தோன்றுகிறது. இந்து சமயத்தை தாக்குவதற்கு அவர்கள் அதிகம் பயன்படுத்துவதும் இந்த சொற்றொடர்தான்.

இந்த தவறான புரிதல் எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. இந்து சமயத்திற்கும், 'சனாதன தர்மம்' என்பதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? 

கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

    

எல்லா சமயங்களிலும் தவறான புரிதல்கள் உண்டு; தவறான நடைமுறை பழக்க வழக்கங்களும் உண்டு. அவற்றை கண்டிப்பதில் தவறு இல்லை.  அவற்றைக் களையெடுக்கக் கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும்.

இன்று 'சனாதன தர்மம்' என்ற சொல் பெரும்பாலும் இந்து சமயத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் அதன் தத்துவப் பொருள் அதைவிட விரிவானது; அது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும் நிரந்தர வாழ்வியல் உண்மைகளைச் சுட்டிக்காட்டுகிறது.


              
நான் படித்த பள்ளியில்  வாரந்தோறும் நல்லொழுக்க வகுப்புகள் நடக்கும். அதை நடத்தியவர் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஜோசப் அவர்கள். வகுப்பில் அடிக்கடி மஹாபாரத கதைகளை சொல்லி நல்லொழுக்க விதிகளை விளக்குவார்கள். (இப்பொழுது அதுமாதிரி நடக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியாது)

ஒருமுறை அவர்கள் சொன்னது .. "நாங்கள் எங்கள் மதத்தின் அடையாளமாக சிலுவை மாலை அணிகிறோம். இஸ்லாமியர்கள் தொப்பி அணிகிறார்கள். சைவ சமயத்தை கடைப்பிடிக்கிறவர்கள் திருநீறு பூசுகிறார்கள்.

திருநீறு வெறும் மத அடையாளம் மட்டுமல்ல; அது ஒரு மருந்தும் கூட. ஏனெனில், அது உடலில் உள்ள தேவையற்ற நீரை உறிஞ்சி வெளியேற்றிவிடும். எல்லோரும் அதைப் பூசலாம்.

ஆனால், அது ஒரு சமயத்தின் அடையாளமாக மாறிவிட்டதால், எங்களால் அதைப் பூச முடிவதில்லை".

எப்படி பொதுவாக இருக்க வேண்டிய திருநீறு சமய அடையாளமாக மாறிவிட்டதோ, அதைப்போல பொதுவாகக் கருத வேண்டிய 'சனாதன தர்ம' தத்துவமும் சமயம் சார்ந்ததாக மாறிவிட்டது.
         
 

இந்த நாட்டில் பல்வேறு சமயங்களில் பல்வேறு வழிபாட்டு முறைகள் தோன்றின. அதேபோல் சடங்குகளும், சம்பிரதாயங்களும் பலவிதமாக இருந்தன. கூடவே வாழ்வியல் தத்துவங்களும் நிறைய சொல்லப்பட்டன. இவற்றில் எங்குமே 'சனாதன தர்மம்' என்ற பெயர் இருக்கவில்லை.

சில சமயங்களில் வாழ்வியல் தத்துவங்களை தனியாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள். உதாரணமாக 'சிவஞான போதம்', 'மாண்டூக்ய உபநிடதம்' போன்ற நூல்களைச் சொல்லலாம். அவையெல்லாம் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும்.

மற்றபடி கடவுள் மீதுள்ள பக்தியை வெளிப்படுத்தும் பல பாடல்களிலும் 'வாழ்வியல் தத்துவங்கள்' இருப்பதைக் காணலாம்.

இத்தகைய வாழ்வியல் கோட்பாடுகள் நிலையானது எது, நிலையற்றது எது என்பதைச் சுட்டிக் காட்டின. அதைக் குறிக்கும் வகையில்
'சனாதன தர்மம்' என்ற சொற்றொடர் வந்தது. ஆனால், இதற்கும் சமயத்தில் உள்ள சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

  

'சனாதன தர்மம்' என்றால் என்ன என்று பார்ப்போம்.

'சனாதன' என்றால் நிரந்தரமானது (eternal) என்று அர்த்தம். நிலையில்லாத பலவற்றை நாம் நிரந்தரம் என நினைக்கிறோம். அதனாலேயே நிம்மதி இன்றி தவிக்க நேரிடுகிறது. எது நிரந்தரம் என்பதை உணர்த்துவதுதான் 'சனாதன தர்மத்தின்' நோக்கம்.

புதிதாக ஒரு வீடு கட்டுகிறோம். அந்த வீடு மற்ற வீடுகளை விட மிகவும் அழகாக இருக்கிறது. அந்த வீடு நினைத்துக் கொள்கிறது .. 'நான் மற்ற வீடுகளை விட எவ்வளவு அழகாக இருக்கிறேன்'. அதற்கு கர்வம் வந்து விடுகிறது. நெடுங்காலம் நான் இப்படி அழகாக இருப்பேன் என நினைத்துக் கொள்கிறது. ஒரு சின்ன நில அதிர்வு அதை சாய்த்து விடுகிறது. இப்பொழுதுதான் அதற்குத் தெரிகிறது 'தான் நிரந்தரமல்ல என்பது; பூமி மட்டுமே நிரந்தரமானது
என்று. ஆனால், பூமியும் நிரந்திரமாக இருக்கப் போவதில்லை என்று அது அறிந்து கொள்வதில்லை.

நமது நிலையும் அந்த வீட்டைப் போன்றதுதான். நிலையில்லாதவற்றை நிலையாக இருக்கும் என நம்பி, பின்னர் வேதனையில் வாடுகிறோம்.

'சனாதன தர்மம்' எது நிலையானது என நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

  

முதலில் எது நிரந்தரம் என்று சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

வீட்டைப் பொறுத்தவரை, 'தான் நிரந்தரமல்ல; பூமிதான் நிரந்தரம்' என நினைத்துக் கொள்கிறது என பார்த்தோம்.

உண்மையில் பூமியும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. அதேபோல் பால்வெளி (Milky Way), விண்மீன் மண்டலங்கள் (galaxies), அண்டம் (universe), பேரண்டம் என விரிந்து பரவும் எதையும் நிரந்தரம் என்று சொல்ல முடியாது.


எந்தவொரு பொருளை எடுத்தாலும் அதை உருவாக்கியவர் என ஒருவர் இருப்பார். அப்படியானால், இந்த உலகத்தை படைத்தவர் யார்?

ஆக, ஒவ்வொரு விளைவிற்கும் பின்னால் ஒரு மூலம் என ஒன்று இருக்கும் -- விதவிதமான ஆபரணங்களுக்குப் பின்னால் மூலப்பொருளாக தங்கம் இருப்பதைப் போல.

இதனை cause & effect theory என்பார்கள். உதாரணமாக --
துணிக்கு மூலம் நூல்; நூலுக்கு மூலம் பஞ்சு; பஞ்சுக்கு மூலம் பருத்திச் செடி.


எதற்கு வேறு எந்த மூலமும் இல்லையோ, அந்த ஆதிமூலமே ‘uncaused cause’ என்று அழைக்கப்படுகிறது. அதுவே நிரந்தரமானது.


பலரும் பல பெயரில் அழைத்தாலும் - - சிவம், பரம்பொருள், பரமபிதா, அல்லா என எந்தப் பெயரில் அழைத்தாலும் -- அந்த மூலம் ஒன்றாக மட்டுமே இருக்கும்.

அந்த மூலத்தை எப்படி அறிந்து கொள்வது?



ஆதி மூலத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா?

அன்பர்கள் புரிந்து கொள்வதற்காக "சிவம், சிவன்" இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

"சிவன்" சைவ சமயத்தை கடைப்பிடிப்பவர்களின் கடவுள்.

'சிவம்’ என்ற வார்த்தை சைவர்களால் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் எதை ‘சிவம்’ என்று அழைக்கிறார்களோ, அதை மற்றவர்கள் வேறு பெயரில் அழைக்கலாம்.


"சிவம்" என்பது "வெளிப்படாத ஒன்று" (unmanifest); "சிவன்" என்பது   "வெளிப்பட்ட ஒன்று" (Manifest).

"வெளிப்பட்ட" ஒன்றை நாம் அறிந்துகொள்ள முடியும். ஏனெனில், அதை ஒரு பொருளாக (object) மாற்றி அதற்கு ஒரு உருவம் கொடுத்து விட்டோம்.

ஆனால், "வெளிப்படாத" ஒன்றை நாம் அறிய முடியாது. ஏனெனில், அது உருவமற்றது. (It is the very subject). இருந்தாலும் சில ஊகங்களின் மூலம் அதை புரிந்துகொள்ள முடியும். 

   

மனிதன் நல்ல முறையில் வாழவேண்டும் என்பதற்காக, புறவுலகை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து பல்வேறு பிரிவுகளில் பலவித நூல்கள் வெளிவருகின்றன. இவற்றை குறிப்பிடும் விதமாக பொதுவான பெயராக 'விஞ்ஞானம்' என்று சொல்கிறார்கள்.

இதைப் போன்றே மனிதனின் அகவுலகில் நடக்கும் பல்வேறு செயல்களை ஆராய்ந்து, பல சமயங்களில், பல மொழிகளில் பதிவுகள் செய்திருக்கிறார்கள். அதனை மெய்ஞானம் என்று அழைக்கிறார்கள்.

அப்படியானால் மெய்ஞானம் என்பதற்கும், சனாதன தர்மம் என்பதற்கும் இடையே என்ன வித்தியாசம்?

சனாதன தர்மம் என்று சொல்லும்போது, வாழ்வியல் தத்துவங்களை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால், மெய்ஞானத்தில் வாழ்வியல் தத்துவங்களுடன் பக்தி, ஆகம விதிகள், வழிபாட்டு நெறிமுறைகள் என பலவும் கலந்திருக்கும்.

     

"சனாதன" என்பது நிரந்தரமான ஒன்றை குறிப்பது என்று பார்த்தோம். அதனை அறிய முடியாது, ஊகங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்றும் பார்த்தோம்.

நாம் ஒரு பொருளைப் பார்த்தால் அதன் உண்மை இயல்பு என்ன என்று அறியலாம். இதனை 'சொரூப லக்கணம்' என்று சிவஞான போதம் சொல்கிறது.

'தர்மம்' என்ற வார்த்தைக்கு உண்மை இயல்பு, பண்பு எனவும் பொருள் கொள்ளலாம். அதாவது 'நிரந்தரம்' என்றால், அதன் உண்மை இயல்பு அல்லது பண்பு என்ன என்பதை உணர்த்துவதாக பொருள் கொள்ளலாம்.

ஒரு பொருளாக இருந்தால் அதன் உண்மை இயல்பை கண்டுகொள்ள முடியும். ஆனால், பரம்பொருள் பொருள் இல்லையே; தவிர அது 'வெளிப்படாத' ஒன்றும் கூட. இருந்தாலும் இதனை ஞானியர் பல்வேறு விதமாக நமக்கு உணர்த்தியிருக்கிறாரகள்.

அவற்றில் சிலவற்றை
பார்ப்போம். பரம்பொருளின் இயல்புகள் என்று சொன்னாலும், எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்துதான் அதனை விளக்க வேண்டியுள்ளது.

      

"ஐம்புலன்களால் உணர முடியாதது"

ஐம்புலன்களால் உணர்வதற்கு பரமாத்மா ஒரு பொருளல்ல. பொருளாக இருந்தால், ஏதாவது ஒரு புலன் மூலம் அதை அறிய முடியும்.
ஆனாலும் ஒரு ஊகத்தின் மூலம் அதை அறிந்து கொள்ள முடியும்.

மின்சாரம் கம்பிகளின் வழியே பாய்ந்து பல்வேறு சாதனங்களை இயக்குகிறது. ஆனாலும், மின்சாரத்தை நம்மால் காண முடிவதில்லை. இருந்தாலும் சாதனங்கள் இயங்குவதை வைத்து 'மின்சாரம்' இருப்பதைப் புரிந்து கொள்கிறோம்.

அதைப்போல, அண்டங்களின் இயக்கத்தை பார்த்து, அவற்றின் பின்னே ஒரு பரம்பொருள் இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஏனெனில் ஒரு பொருள் படைக்கப்பட்டிருந்தால், அதற்குப் பின்னால் ஒரு "கர்த்தா" இருக்க வேண்டுமே!

                      


"எதனுடனும் சம்பந்தம் இல்லாதது"

கீதையில் கண்ணன் சொல்கிறார் - - "அனைத்திலும் நான் இருக்கிறேன்; ஆனால், எதுவும் என்னிடத்தில் இல்லை"

இந்தக் கூற்றை எப்படி புரிந்து கொள்வது?

நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் ஆகாயத்தில் தான் (வெளி) இருக்கின்றன. பொருட்களுக்கு வெளியேயும், பொருட்களுக்கு உள்ளேயும் ஆகாயம் உள்ளது. ஆனாலும் பொருட்கள் இருந்தாலும், மறைந்தாலும் ஆகாயம் எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை.

அதைப்போல படைக்கப்பட்ட பொருட்கள் பெருகினாலும், சுருங்கினாலும் பரம்பொருளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.


நாம் ஒரு வீடு கட்டுகிறோம்; உடனே அது நம் வீடு என்றாகி விடுகிறது. நமக்கு குழந்தை பிறக்கிறது. உடனே நம் குழந்தை என்று ஒரு உறவு (relationship) வந்து விடுகிறது.

இதைப்போன்ற பிரச்சினைகள் பரம்பொருளுக்கு கிடையாது.
வேதாந்தத்தின் ஒரு பார்வையில், பரம்பொருள் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தாலும், எந்த உறவாலும் கட்டுப்படுவதில்லை என்று கூறப்படுகிறது

                         

"பொருளாக அறிய முடியாதது”

தூரத்தில் புகை வருவதைப் பார்த்தால், அங்கு ஏதோ நெருப்பு எரிகிறது என ஊகம் செய்ய முடியும்.

ஆனால், படைக்கப்பட்ட அனைத்தையும் பார்த்து பரமன் இப்படித்தான் இருப்பான் என ஊகிக்க முடியாது.

அத்துடன் பரம்பொருள் உருவமற்றது. நீக்கமற எங்கும் நிறைந்திருப்பது. அதை எப்படி ஊகிக்க முடியும்?

வீட்டின் அறையில் நாற்காலி இருந்தால் அதற்கு ஒரு உருவம் உள்ளது. எனவே ஒரு பொருளாக கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், அறை முழுவதும் நிரம்பியுள்ள காற்று நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. காரணம் அது உருவமற்றது; மற்றும் எங்கும் பரவி இருப்பது.

உருவமற்ற, நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை நம்மால் ஊகிக்க முடிவதில்லை.

அதனால்தான் "நீ உடல் அல்ல: நீ அதுவாக இருக்கிறாய் (தத்துவமஸி)" என்று சொல்கிறார்கள்.
அவன், அவள் என்று சொல்லாமல் "அது" என்று சொல்கிறார்கள்.


"பரம்பொருள்" காலத்திற்கு அப்பாற்பட்டது. அது என்றும் உள்ளது; எங்கும் பரவி இருப்பது. அதனால்தான் நம்மால் அது எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிவதில்லை.

மேலும் நிறைய விளக்கங்கள் உள்ளன. இருந்தாலும் நமது
நோக்கம் நடைமுறை வாழ்க்கையில் "சனாதன தர்மம்" என்ற வார்த்தை எதை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வதுதான்.

"தர்மம்" என்ற வார்த்தைக்கு 'உண்மை' என்ற அர்த்தமும் உண்டு.

"சனாதன தர்மம்" என்றால் "நிரந்தரமான உண்மை" என்று பொருள்படும்.

"நிரந்தரமான உண்மை" என்றால், நிரந்தரம் அல்லாத உண்மையும் இருக்கிறதா என்ற சந்தேகம் வரலாம்.

நாம் நிரந்தரம் என்று நினைக்கும் பலவும், நிரந்தரமாக இருப்பதில்லை என்பதே உ ண்மை.

அப்படியானால் "நிரந்தரமான உண்மை" என்பது எது?

  

இராமகிருஷ்ண மடம் சார்பாக "Meditation" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதில் ஓரிடத்தில் கட்டுரை ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார் ..
"மனிதன் ஆசைப்படுவதை அடைய முடிவதில்லை;
ஆசைப்பட்டது கிடைத்தாலும் அதை உடமை கொள்ள முடிவதில்லை;
உடமை கொள்ள முடிந்தாலும் அதை சந்தோஷமாக அனுபவிக்க முடிவதில்லை;
ஒருவேளை சந்தோஷம் கிடைத்தாலும் அது நீடித்து நிலைப்பதில்லை".

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு .."Of all the mysteries, misery is the worst mystery"

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு புதிர்களில், துயரம் ஏன் வருகிறது என்பதுதான் மோசமான, புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது.

இந்த புதிருக்கு விடை எங்கு இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதுதான் "சனாதன தர்மம்" 


புதியதாக ஒரு கார் வாங்குகிறோம். அதை ஓட்டும்போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. ஆனால், அந்த சந்தோஷம் ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே வரும். முடிவில் அதை நினைத்து மனதில் எந்த சந்தோஷமும் இருக்காது.

அதைவிட நல்லதொரு காரைப் பார்த்தால் நமது சந்தோஷம் காணாமல் போய்விடும்.

சில நேரங்களில் அதே கார் நமக்கு துக்கத்தை கொடுக்கும் சந்தர்ப்பங்களும் நேரிடலாம்.

பொதுவாகவே, வெற்றியின் பின்னே தோல்வியும், இன்பத்தின் பின்னே துன்பமும் ஒளிந்திருக்கும்.

ஆசை கொண்ட மனிதன் அவதியையும் சந்திக்க நேரிடுவதை தவிர்க்க இயலாது.

இதற்கு மாற்றாக "ஆனந்தம்" என்ற ஒன்று உண்டு. ஒருதடவை அதை உணர்ந்து கொண்டால், அதன்பின் வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் என எதுவும் மனிதனை பாதிக்காது.

அதற்கான வழிகளை சுட்டிக் காட்டும் வழிகாட்டிதான் "சனாதன தர்மம்".

   

கண்ணாடியின் மேல் படிந்த தூசி (அழுக்கு, அட்டு) போன்று, நமது சித்தத்தில் உள்ள மாயத்திரையின் மேல் படர்ந்துள்ள தூசியின் காரணமாகத்தான் நம்மால் உள்ளிருந்து வரும் ஒளியை (ஆனந்தத்தை) உணர முடிவதில்லை.

  
கண்ணாடியில் படிந்த தூசியை எளிதாகத் துடைத்து விடலாம். ஆனால், சித்தத்தின் மேல் படிந்த தூசியை எப்படித் துடைப்பது?

சித்தத்தின் மேலே படிந்திருப்பது நமது அனுபவங்களின் காரணமாக நாம் ஏற்படுத்திய பதிவுகள்தான். சைவ சித்தாந்த மரபில் இதனுடன் தொடர்புடைய கருத்துகளை ‘ஆணவ மலம்’ போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர். அதை முற்றிலும் நீக்கிவிட்டால், மனம் சலனமின்றி காணப்படும்.

" ... மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று தாயுமானவர் சொல்லும்போது, இந்த 'ஆணவ மல' நீக்கத்தையே குறிப்பிடுகிறார்.

'ஆணவமலம்' நீங்கிய பின் மனம் அமைதியாகி விடும். அதன்பின் விருப்பு-வெறுப்பு, இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி போன்ற இரட்டைகளைப் பற்றி அது கவலைப்படுவதில்லை.

அமைதியான மனம் "சித்தத்தின்" உள்ளிருந்து பெருகும் "ஆனந்தத்தை" உணரத் தொடங்கும்.


இந்த உண்மை அறியப்பட வேண்டிய ஒன்றல்ல; உணரப் பட வேண்டிய ஒன்று. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

We have to realise that
we have to realise "THAT"


"சனாதன தர்மம்" எந்த மதத்திற்கும் சொந்தமானதல்ல.

அது அறிவியல் பூர்வமாக நமக்குள் இருக்கும் "ஆன்மா" மட்டுமே உண்மையானது என்கிறது.

நமது நாடு ஒரு ஞான பூமி. மனிதன் "ஆனந்த நிலையை" உணர்வதற்கு இங்கு எல்லா மொழிகளிலும் மறைநூல்கள் நிறைந்திருப்பதைக் காணலாம். 

மறைநூல்கள் தவிர இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் சமயத்திற்கு அப்பாற்பட்டு "திருக்குறள்" போன்ற நூல்களும் உண்டு.

அவைகள் உபயோகிக்கும் வார்த்தைகள் வேறுபடலாம்; விளக்கங்கள் வேறுபடலாம். ஆனால், அவைகளின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். 
அது - -

மனிதனின் மனதில் வளரும் 'அளவு கடந்த ஆசைகள்' முடிவில் அவனுக்குத் துன்பத்தையே தரும். 
சித்தத்தை சுத்திசெய்து மனதை அமைதி அடையச் செய்தால், அவனது மனதில் அன்பு மட்டுமே குடியிருக்கும்; அதன்பின் அவனால் 'உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை உணர முடியும்' என்பதுதான்.

ஆசை கொண்ட மனம் - அது
அவதிகளின் களம்!
அன்பு கண்ட மனம் - அது
ஆனந்தத்தின் வசம்!!

  


சென்னை நகரத்தைக் காண விரும்பிய நண்பனைக் கூட்டிக் கொண்டு போய் சென்னை நகரத்தின் எல்லா இடங்களையும் அவனுக்குக் காட்டுகிறோம்.

எல்லா இடத்தையும் சுற்றி பார்த்தவன் "இங்கு குடியிருப்புகள், அலுவலகங்கள், கல்லூரிகள், தியேட்டர்கள் போன்று எல்லாவற்றையும் காட்டினீர்கள். ஆனால் சென்னை எங்கே இருக்கிறது என்று காட்டவே இல்லையே" என்று சொன்னால், அவனை என்னவென்று சொல்வது?

சித்தத்தை தூய்மைப்படுத்தும்  
மனிதன் நிலையான "ஆனந்தம்" எங்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறான். அதற்குத் தேவையான விளக்கங்கள் பல்வேறு சமய நூல்களில், பல்வேறு மொழிகளில் இடம் பெற்றுள்ளன. அவற்றை சுட்டிக்காட்டும் பொதுவான சொற்றொடர்தான் "சனாதன தர்மம்".

அறிவியல் நூல்கள் பல பாடப் பிரிவுகளில் உள்ளன. அவைகளைச் சுட்டிக் காட்டுவதற்கு "விஞ்ஞானம்" என்கின்ற வார்த்தையைப் பயன் படுத்துகிறோம்.

அதைப் போன்றே, மனிதன் மனதில் எந்தவித சலனமுமின்றி அமைதியாக வாழ்வதற்கு, அதன் மூலம் இறைத்தன்மையை உணர்வதற்கு பல சமய நூல்களில் பல பாடல்கள் உள்ளன. தவிர "சிவஞான போதம்" போன்ற நூல்கள் மனிதனின் ஆணவத்தை அழித்து சித்த சுத்திக்கான போதனைகளை இயம்புகின்றன. இத்தகைய நூல்களைச் சுட்டிக் காட்டுவதற்கு "சனாதன தர்மம்" என்ற சொற்றொடரைப் பயன் படுத்துகிறார்கள்.

சமய நூல்களில் உள்ள தவறுகளை, குறைகளை சுட்டிக் காட்டினால், அவற்றை பரிசீலனை செய்யலாம். அதை விடுத்து "சனாதன தர்மம்" என்ற சொற்றொடரை வைத்துக்கொண்டு சமயங்களை பழித்துக் கூறுபவர்களை என்னவென்று சொல்வது?

"சனாதன தர்மம்" என்ற பெயரைக் கேட்டதும், அது இந்து மதத்தை -- அதிலும் குறிப்பாக வேதங்களை -- சார்ந்தது எனப் பலரும் நினைப்பதுண்டு.

உண்மையில் அதன் கோட்பாடு மிகவும் தெளிவானது.

எந்த சமய நூல்களில் இருந்தாலும், சமய நூல்களுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அவற்றில் சொல்லப்பட்ட கருத்து எல்லா மனிதர்களுக்கும், எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும். அத்துடன் அது என்றும் நிரந்தர உண்மையாக இருக்க வேண்டும். எனவே இதில் காலத்திற்கேற்ப மாறக்கூடிய சடங்கு, சம்பிரதாயங்கள், ஆகம விதிகள் எதுவும் அடங்காது.

Saturday, 8 October 2022

தேசியமும், தெய்வீகமும்



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 1

சட்டை நைந்து விட்டது. எந்த நேரத்திலும் கிழிந்து விடலாம்.

சட்டை கிழிவதற்குமுன் மனதை "நிர்மலமாக" மாற்ற வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் மனதில் ஏதோவொரு பாரம் அழுத்திக்கொண்டே இருக்கிறது.

அந்த பாரத்திற்கு காரணம் நான் மட்டும்தானா; அல்லது வேறு ஏதாவதா?

காரணம் வெளியில்தான் உள்ளது என்றால், நான்தான் தேவையில்லாமல் சுமந்துகொண்டு இருக்கிறேனா?

மனம் தகுந்த 'பக்குவ' நிலையை அடையாததுதான் அதற்கு காரணமா?

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 2

மனிதனின் 'ஆழ்மனதில்' பதிவுகள் இல்லாதிருக்க வேண்டும்; ஒருவேளை பதிவுகள் நினைவலைகளாகத் தங்கியிருந்தாலும், அவற்றிலிருந்து எண்ணங்கள் பீறிட்டு கிளம்பாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவனது மனம் 'நிர்மலமாக' இருப்பதாக அர்த்தம்.

அப்படி இல்லையெனில், அந்த மனிதனிடமிருந்து 'நான்' எனும் அஹங்காரம் முழுவதுமாக மறையவில்லை என்று புரிந்து கொள்ளலாம். அத்துடன் அவனிடம் 'என்னுடைய' எனப்படும் பற்றும் குடிகொண்டிருக்கும்.    

'நிர்மலம்' என்ற வார்த்தையில் வரும் 'மலம்' என்பது மனதில் தங்கியுள்ள அழுக்கைக் குறிக்கிறது.

நாம் செய்யும் நல்ல காரியங்களைப் பற்றிய நினைவுகள் மனதில் தங்கினால்கூட, அவையும் அழுக்குகள்தாம்.

அதனால்தான், "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு" என்று வள்ளுவர் கூறுகிறார். (நல்வினையும் இருள் சேர்க்கும் என்கிறார்).

நாம் 'நிர்மலம்' என்று சொல்வதைத்தான் 'மனமிறத்தல்' என்று தாயுமானவர் பாடுகிறார்..
"சினம் இறக்க கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றாலும்
மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே".
           
"கூண்டுவிடுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல், மாண்டுவிடு முன்னேனான் மாண்டிருப்ப தெக்காலம்?" எனப் புலம்பும் 'பத்திரகிரியாரும்' மனதில் கொள்வது இந்த 'மல' நீக்கத்தையே.

மனதில் உள்ள 'அழுக்கை' பல்வேறு சமயங்கள் பல்வேறு வார்த்தைகளில் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், எல்லாவற்றிற்கும் மூலமாய் இருப்பது மனிதனின் "ஆணவம்" மட்டுமே.

இந்த "நான்" என்னும் ஆணவத்திலிருந்துதான், "என்னுடைய" என்னும் பற்றும் (attachment) பிறக்கிறது.

ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம், தியான மார்க்கம் போன்ற மார்க்கங்கள் மனிதனின் 'ஆணவ மலத்தை' நீக்குவதற்கான வழிகளைக் காட்டுகின்றன.

அத்துடன், ஆணவ மலம் நீங்கிவிட்டதை அடையாளம் காண பல குறிப்புகளையும் சொல்கின்றன. 

அவைகளில் சில முக்கிய குறிப்புகளைப் பார்ப்போம்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 3

1. பற்றறுத்தல் 

எல்லா மனிதர்களுக்கும் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று இருப்பார்கள்.

அவர்களுடன் உறவில் இருந்தாலும், 'தாமரை இலை தண்ணீரைப்போல்' ஒட்டியும், ஒட்டாமலும் இருக்க முடிந்தால் (relation-less relationship), அதுவே பற்றறுத்து வாழ்வதன் அடையாளம். இதனை வலியுறுத்தும் விதமாக "..... புளியம்பழமும் தோடும்போல் ஆவதினி எக்காலம்?" என்கிறார் பத்திரகிரியார்.

(Be in the family; be far away from the family)

இதன்படி வாழும்
மனிதன் 'பாசத்தளை'யிலிருந்து நீங்கி விடுகிறான்.

2. உடைமைத்தனம் 
இல்லாதிருத்தல் 

பொருள் ஈட்டுவதும், 
ஈட்டிய பொருட்களைக் கொண்டு இன்பம் துய்ப்பதும், மனிதனின் இயல்பான நடவடிக்கைதான். அதில் தவறேதும் இல்லை.

அதேசமயம், நாம் அனுபவிக்கும் பொருட்கள் நிரந்தரமாக நம்முடன் இருக்கப் போவதில்லை என்ற உண்மையையும் உணர்ந்திருக்க வேண்டும். (இது மனித உறவுகளுக்கும் பொருந்தும்).

ஆக, உடைமைப் பொருட்களை அனுபவிக்க வேண்டும்; கூடவே எந்த நேரமும் அவை நம் கையை விட்டுப் போகலாம் என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டபின், உடைமைத்தனமின்மை என்ற பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

"ஊரும் சதமல்ல, உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல ..." என்ற பட்டினத்தாரின் கூற்றைப் புரிந்து கொண்டு, அனுபவிக்கவும் மற்றும் விலகி நிற்கவும் பழகிக் கொள்ள வேண்டும். விலகி நிற்கக் கற்றுக் கொண்டால், பிரியும்போது மனதில் வேதனை வராது.

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல், அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர்.

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 4

3. உதாசீனம்

நமது வாழ்நாள் முழுவதும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி கருத்துக்கள் சொல்வதை தவிர்க்க இயலாது.

அந்தக் கருத்துக்கள் நமது பண்பு நிலையை மேம்படுத்த உதவுமென்றால், அவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். இல்லையெனில் அவற்றை உதாசீனம் செய்ய வேண்டும்.

ஏனெனில், நம்மை புகழ்ந்து சொல்வதை உள்வாங்கிக் கொண்டால், நாம் தற்பெருமை அடையக்கூடும். அது நமது ஆணவத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.

மாறாக, நம்மை இகழ்ந்து பேசுவதை உள்வாங்கிக் கொண்டால், நமக்கு பழியுணர்ச்சி ஏற்படலாம்; அல்லது சுயபச்சாதாபம் நேரிடலாம். இரண்டுமே நமது ஆணவ மலத்தை நீக்கவிடாமல் இடையூறு செய்யலாம்.

எனவே, மற்றவர் நம்மை போற்றுவதையும், தூற்றுவதையும் உதாசீனம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.

4. தேவையும், ஆசையும் 

ஒரு மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்தால் போதும் என வாழும் போது, அவனை அறியாமலே அவனுக்கு 'போதும்' என்ற மனநிலை (contentment) வந்து விடுகிறது. போதும் என்ற மனநிலையில் அவனது 'ஆணவம்' குறையத் தொடங்கி விடும். அதனால்தான் பெரியோர்கள் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று சொல்கிறார்கள்.

மாறாக, அவன் ஆசைகள் வசப்பட்டு வாழ்வானேயானால், ஆசைகள் பூர்த்தியாக, பூர்த்தியாக மேலும் மேலும் ஆசைகள் வளர்ந்துகொண்டேயிருக்கும். அது அவனது ஆணவத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்கும்.

எனவே, ஆணவ மலத்தை நீக்க விரும்பும் மனிதன் தனது தேவையைப் பூர்த்தி செய்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

"தேவைக்கு ஆசைப்படு; ஆசைக்கு ஆசைப்படாதே"

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 5

5. அறிவும், ஆணவமும் 

மனிதன் பெறும் அறிவை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 

சிலருக்கு அவர்கள் பெறும் அறிவு பெருமை, புகழ், பணம் போன்றவற்றை சேர்க்கும். அதேநேரம் அது அவர்களது ஆணவத்திற்கு வலுவூட்டவும் செய்யும்.

வேறு சிலருக்கோ அவர்கள் பெறும் அறிவு அவர்களை பணிவு  நிறைந்த மனிதர்களாக மாற்றும்.  காரணம் அது  அவர்களை 'நாம் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்' என்பதை உணர வைக்கும்.  (Knowledge is to know one's own ignorance .. Dr. Radhakrishnan).

அறிவு ஒரு மனிதனின் வாழ்க்கை வளம்பெற உதவும். அதேநேரம் அந்த அறிவு அவனுக்கு பணிவையும் கற்றுத் தருவதாக இருக்க வேண்டும்.  இல்லையெனில் அவனது ஆணவம் மேலும் வலுப்பெற்றுவிடும்.
         
6. நாயினும் கடையேன் 

அருட்செல்வர் மாணிக்கவாசகர் இறைவனிடம் தன்னை 'நாயினும் கடையேன்' என்று வர்ணிக்கிறார். பல இடங்களில் தன்னை 'நாயென' குறிப்பிடுகிறார். அதற்கு பல விதமான விளக்கங்களை பெரியோர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது - -
** நம்மை எந்த நிலையிலும் முன்னிலைப் படுத்தாமல் இருக்க வேண்டும்.
** எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டும்.
** அடக்கமாக இருக்க வேண்டும்.
** மிகுந்த பணிவுடன்  (humility) நடந்துகொள்ள வேண்டும்.
** கூட்டத்தில் இருந்தாலும் மனதளவில் ஒதுங்கி இருக்க வேண்டும்.
** விருப்பு - வெறுப்பு போன்றவகைகளிலிருந்து விலகி மனதை எப்போதும்  சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவைகளை முறையாகக் கடைப்பிடித்தால், மனிதனிடம் உள்ள ஆணவ மலம் அழிந்துவிடும்.

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 6

முந்தைய பதிவுகளில் சொல்லப்பட்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், நம்மிடம் உள்ள 'ஆணவம்' கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிடுவதை உணரலாம். 

முழுவதும் கரைந்துவிட்டால், அதைத்தான் 'நிர்மலம்' என்று சொல்கிறார்கள். (இந்த நிலையை "துரியம்" என்று வடமொழியிலும், "துரியாதீதம்" என்று சைவ சமயத்திலும் குறிப்பிடுகிறார்கள்)

இந்தப் பதிவு நீக்கத்தையே 'மனமிறத்தல்' என்று அருட்செல்வர் மாணிக்கவாசகரும்
குறிப்பிடுகிறார்.

மனிதனின் 'ஆழ்மனதில்' உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கி விட்டால், அவன் "ஜீவன் முக்தன்" எனப் பெயர் பெற்று விடுகிறான். 

ஆனால், இதற்கென்று சில படிநிலைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றாக கடக்கப்பட வேண்டும்.
             
நாம் மனம் என்று பொதுவாகச் சொன்னாலும், அது 'உணர்வு மனம்' மற்றும் 'உணர்வற்ற மனம்' என இரண்டு பிரிவாக செயல்படுகிறது. உணர்வற்ற மனதை 'ஆழ்மனம்' என்றும் சொல்வார்கள்.

புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்வது 'உணர்வு மனம்' மட்டுமே. அப்படியானால் 'ஆழ்மனதில்' பதிவுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம்.

'ஆன்மா' என்பது இறைவனின் ஒரு பகுதியாக அல்லது ஒரு பிரதிநிதியாக நமக்குள் இருந்து, நாம் இயங்குவதற்கு சக்தி அளிக்கிறது. 

அது ஒரு மாய உறைக்குள் இருக்கிறது. அதனை 'சித்தம்' என்று சொல்வார்கள். அதனால்தான்
".. சித்தத்தின் 
உள்ளே சிவலிங்கம் காட்டி.." என விநாயகர் அகவலில் ஔவையார் பாடுகிறார்.

இந்த சித்தத்தின் மேல் பதிவுகள் நிகழும்போது, அதை 'ஆழ்மனம்' என்கிறோம்.

இந்த ஆழ்மனப் பதிவுகளை 'வாசனா' என்று வடமொழியில் சொல்கிறார்கள்.

சைவ சமயத்தில் இதனை ஆணவமலம் என்றும், இதனை நீக்கவே மாயை, கன்மம் இரண்டும் செயல்படுகின்றன என்றும் சொல்கிறார்கள்.

சித்தத்தின் மேல் படிந்துள்ள 'ஆணவமலத்தை' நீக்குவதைத்தான், 'சித்த சுத்தி' என்று அழைக்கிறோம்.

'ஆழ்மனதில்' பதிவுகள் எவ்வாறு நிகழ்கின்றன? பதிவுகளை நீக்க வேண்டிய அவசியம் என்ன?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 7

"Sow a thought .. reap an action;
Sow an action .. reap a habit;
Sow a habit .. reap a character;
Sow the character .. reap your destiny"
  .. (from the book "Meditation" published by Shri Ramakrishna Mission)

"எந்த ஒன்றை தொடர்ந்து நினைக்கிறோமோ, அதையே செயலாக மாற்றுகிறோம்; தொடர்ந்து நடைபெறும் செயல், நமது பழக்கமாக மாறுகிறது; தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் பழக்கம், நமது குணத்தை தீர்மானிக்கிறது; நாம் கட்டிக் காக்கும் குணமே, (அடுத்த பிறவிக்கான) நமது தலைவிதியை நிர்ணயம் செய்கிறது".

புறவுலகிலிருந்து வரும் தாக்கம், அதன் விளைவாக நாம் செய்யும் பதில்வினை (response) அல்லது எதிர்வினை (reaction) ஆகியவை பதிவு ஆவது நமது 'உணர்வு மனதில்தான்'.

நம்மால் ஒரு செயல் தொடர்ந்து நடைபெறுமானால், நாளடைவில் அது பழக்கமாக மாறி நமது 'ஆழ்மனதில்' ஒரு பதிவை ஏற்படுத்திவிடும்.

உணர்வு மனதில் உள்ள பதிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
இந்தப் பதிவுகளே இச்சைகளைத் தூண்டி நம்மை செயலில் ஈடுபட வைக்கின்றன.

மனிதனின்
மறுபிறப்பிற்கு காரணமாக இருப்பதும் இந்தப் பதிவுகளே. இதைத்தான் 'வாசனா' என்றும், 'ஆணவமலம்' என்றும் சொல்கிறார்கள்.

'மனமிறத்தல்' என்று 
சொல்லும்பொழுது, அவர்கள் குறிப்பிடுவது இந்த 'ஆணவமல' நீக்கத்தை தான்.  
            
'ஆணவமலம்' நீங்குவதற்கு முன்னால், உணர்வு மனம் தன்னிச்சையாக செயல்படுவது நிற்கவேண்டும்.

உணர்வு மனம் மூன்று நிலைகளில் செயல்படும் தன்மை உடையது.

உணர்வு மனம் பல நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு, புத்தியை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும். அதற்கு ஆழ்மனதிலிருந்து கிளம்பும் இச்சைகளின் உந்துதலும் ஒரு காரணமாக இருக்கும்.

இரண்டாவது நிலையில் உணர்வு மனம் தேவையெனத் தோன்றினால், புத்தியை கலந்து ஆலோசிக்கும். இருந்தாலும், பல நேரங்களில் அது புத்தியின் ஆலோசனையை உதறித் தள்ளி வேறு விதமான முடிவையும் எடுக்கும்.

மூன்றாவது நிலையில் உணர்வு மனம் புத்தியோடு இணைந்து கொள்கிறது (This is called integrated-mind). இப்போது அதனால் தன்னிச்சையாக இயங்க முடியாது. எனவே 'ஆழ்மனதிலிருந்து' வரும் இச்சைகள் 'உணர்வு மனதிற்கு' எவ்வித உந்துதலையும் கொடுக்க முடியாமல் வலுவிழந்து விடும்.

இதன் பின்னரே, ஆழ்மனதில் உள்ள ஆணவம் கொஞ்சம் கொஞ்சமாக கரையக் தொடங்கும்.

இது இல்லறத்தில் வாழும் மனிதர்களுக்கான உளவியல் விதி. மரத்தின் கிளைகளையும், மரத்தையும் வெட்டிவிட்டு பின்னர் மரத்தின் வேரை அப்புறப்படுத்த முயற்சிப்பதைப் போன்றது.

துறவறத்தை மேற்கொண்டவர்களுக்கு உணர்வு மனதைப் பற்றிய கவலை ஏதும் கிடையாது.

அவர்களது முயற்சியும், பயிற்சியும் நேரடியாக மரத்தை வேரோடு அகற்றுவதற்கு வழிவகுக்கும்.

இல்லறவாசி, துறவு மேற்கொண்டார் இருவரின் செயல்பாட்டினால் ஏற்படும் விளைவில் ஒரு வித்தியாசம் உண்டு. 
அது !?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்
.
பதிவு 8

துறவு வாழ்க்கையை 
மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் 'தியானம்' செய்வதிலேயே
கவனம் செலுத்துவார்கள். 

நாம் பொதுவாக அவர்கள் தவம் செய்கிறார்கள் என்று சொன்னாலும், அவர்கள் தியானத்திலேயே இருப்பார்கள்.

இயல்பாகவே அவர்களிடம் 'நான்', 'என்னுடைய' போன்ற எண்ணங்கள் இருக்காது. எனவே,
அவர்களது 'உணர்வு மனம்' எந்தவித பதிவும் இல்லாதிருக்கும்.

அவர்களிடம் முற்பிறவியின் காரணமாக வரும் 'ஆணவமலம்' இருந்தாலும், தியானத்தின் விளைவாக அது முற்றிலும் அழிந்துவிடும்.

ஆழ்மனப் பதிவுகள் இல்லாததால், சித்தம் சுத்தி அடைந்து உள்ளிருந்து பெருகும் உள்ளொளியில் இரண்டறக் கலந்து விடுகிறார்கள். 

அதனால் அவர்களை நாம் 'அவதார புருஷர்கள்' என்று அழைக்கிறோம்.

அவர்களைப் பொறுத்தவரை 'மனமிறத்தல்' என்பது முழுமை அடைந்து விடுகிறது.

இல்லறத்தில் இருந்துகொண்டு, ஆணவமலத்தை அழிக்க முயல்பவர்கள் முழுமையாக வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனாலும் !?
     
இல்லற வாழ்வில் இருப்பவர்கள் 'ஆணவமலத்தை' நீக்குவதில், பயிற்சியை உணர்வு மனதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

முழுமையான முயற்சியும், முறையானப் பயிற்சியும் இருந்தால், உணர்வு மனதை புத்தியோடு ஒருங்கிணைக்க முடியும் (Integrated mind).

அவ்வாறு ஒருங்கிணைக்க முடிந்தால், ஆழ்மனதில் உருவாகும் இச்சைகள் வலுவிழந்து விடும்.

இச்சைகள் வலுவிழந்தாலும் 'ஆழ்மனதில்' உள்ள பதிவுகள் மறைவதில்லை. ஆகவே, 'ஆணவமல' நீக்கம் முழுமை அடைவதில்லை.

இல்லறத்தில் இருந்துகொண்டு, ஒரு சிலரே 'ஆணவமலத்தை' முழுமையாக அழித்தவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களைப் பொறுத்தவரை, ஆணவம் குறைந்திருக்கும். அதேநேரம், ஆழ்மனதில் உள்ள பதிவுகள் நினைவலைகளாகத் தங்கிவிடும். இச்சைகள் வலுவிழந்த காரணத்தினால், நினைவுகள் எண்ணங்களாக (ஆசைகளாக) உருவெடுக்காது.

இதைத்தான் ரிஷி பதஞ்சலி "சித்த விருத்தி நிரோத" என்று கூறுகிறார். "யோகம்" என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் இதுதான்.

இந்தநிலையில் அந்த மனிதனை ஞானி என்று சொல்லமுடியாது. ஆனால், அவனிடம் 'சத்துவ குணம்' மேலோங்கி இருக்கும்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 9

இனிவரும் பதிவுகளில் கொஞ்சம் 'சுயபுராணம்' கலந்திருக்கும். அவை வருவது எனது மனநிலையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எனது மனநிலையை புரிந்து கொண்டால்தான், நான் எந்த நோக்கத்தோடு வரக்கூடியப் பதிவுகளை வெளியிடுகிறேன் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.
..... ..... ..... .....

இனிவரும் பதிவுகள் கொஞ்சம் சிக்கலானவை. நிதானமாக பயணிப்போம்.
..... ..... ..... .....
'ஆணவமலத்தை' முழுமையாக அழிப்பதற்காக, முன்னோர்கள் பல்வேறு குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

அவற்றில் முக்கியம் என நான் கருதிய சில குறிப்புகளை முந்தைய பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அவைகள் --
* பற்றறுத்தல்
* உடைமைத்தனம் இல்லாதிருந்தால்
* உதாசீனம் செய்தல்
* தேவைக்கு மட்டும் ஆசைப்படுவது
* அறிவு பணிவை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் 
* மற்றவர் முன் தன்னை முன்னிலை படுத்தாமல், தாழ்த்திக் கொள்ளுதல்

இந்தக் குறிப்புகளை முறையாகக் கையாண்டால், ஆழ்மனப் பதிவுகள் நீங்கிவிடும் என்றும் சொல்லியிருந்தேன்.

மேலேசொன்ன குறிப்புகளை நான் நன்கு கடைப்பிடித்ததாக
எண்ணிக்கொண்டேன். ஆனாலும் முழுமையான பயன் கிட்டவில்லை.

இதற்கான காரணத்தை கண்டறிய என்னையே நான் 'சுயபரிசோதனை' செய்தேன்.

அதன் விளைவாக, ஆழ்மனப் பதிவுகள் இரண்டு விதமாக இருப்பதை கண்டு கொண்டேன். 

சில பதிவுகள் நம்முடன் நேரடியாக சம்பந்தப் பட்டிருக்கும். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோர் நேரடி சம்பந்தம் உள்ளவர்கள். ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம் போன்றவையும் இதில் அடங்கும்.

சில பதிவுகள் நம்மிடம் தொடர்பில் உள்ளதாக இருக்கும்; ஆனால் நேரடி சம்பந்தம் எதுவும் இருக்காது. சாதி, இனம், கட்சி, சமூகம் போன்றவை இதில் அடங்கும்.

உதாரணத்திற்கு ஒரு கட்சியை எடுத்துக் கொள்வோம். அதில் நேரடி சம்பந்தம் யாருக்கு உண்டு? தலைவர், செயலாளர் போன்றவர்களை உள்ளடக்கிய நிர்வாகக் குழுவிற்கு அந்தக் கட்சியில் நேரடி சம்பந்தம் உண்டு. கட்சியில் ஒரு தொண்டன் என்ற முறையில் எனக்கு என்ன நேரடி சம்பந்தம் இருக்க முடியும்? வேண்டுமானால் நான் எனக்கு தோன்றும் கருத்துக்களை சொல்லலாம். மற்றபடி நேரடியாக என்னால் எதுவும் செய்ய முடியாது.

               ( தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 10

நேரடி சம்பந்தம் உள்ள பதிவுகளைப் பொறுத்தவரை, எனது முயற்சியும் பயிற்சியும் நல்ல பலனைத் தந்தது. அதன் விளைவாக அவற்றிலிருந்து எவ்வித "சித்த விருத்தியும்" நிகழ்வதில்லை.

அவை சம்பந்தமாக நிகழ்காலத்தில் எது நடந்தாலும், அதை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால், நேரடி சம்பந்தம் இல்லாத பதிவுகளிலிருந்து கிளம்பி வரும் எண்ணங்களை தடுக்க முடியவில்லை.

அந்தப் பதிவுகளை ஆராய்ந்து பார்த்தால், சில பதிவுகள் 'தேசம்' சம்பந்தப் பட்டதாகவும், சில பதிவுகள் 'சமயம்' சார்ந்ததாகவும் இருப்பது தெரிய வந்தது.

பதிவுகளிலிருந்து கிளம்பி வரும் எண்ணங்களை ஆராய்ந்தால், அவை பெரும்பாலும் மனதில் வேதனையைத் தருவதாகவே இருந்தது.

இந்த வேதனைகள் எதனால் வருகின்றன? அவைகள் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

நேரடி சம்பந்தம் இருந்தால் ஏதாவது செய்ய முடியும். நேரடி சம்பந்தம் இல்லாத நிலையில் என்ன செய்ய முடியும்?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முன்னோர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று பார்த்தால், இரண்டு விதமான விடைகள் கிடைக்கின்றன.

பற்று மிகுந்தவர்கள் தங்கள் கருத்துக்களை கோபமாக கூறியிருக்கிறார்கள்.  

(உ.ம்) சாத்திரங்கள் வேண்டா, சதுர்மறைகள் ஏதுமில்லை, தோத்திரங்கள் இல்லை, உளந்தொட்டு நின்றால் போதுமடா
.. பாரதியார்

பற்றற்ற ஞானியர் கருணை நிறைந்த மனதுடன் அறிவுரையாக கூறியிருக்கிறார்கள்.
 
(உ.ம்) நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே .. .. .. .. .. ஆற்றிற் கிடந்துந் துறையறியாமல் அலைகின்றையே!
.. .. .. .. பட்டினத்தார்

இதிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. தவறினைக் கண்டால் பற்றுள்ள மனிதன் கோபம் கொள்கிறான். பற்றற்ற மனிதன், தவறினைச் சுட்டிக் காட்டினாலும், கோபம் கொள்வதில்லை.

'சமூகம்' சார்ந்த கருத்துருக்களை பலரும் தருவதைப் பார்த்திருக்கிறோம்.

அதேபோல், 'சமயம்' சார்ந்த கருத்துக்களையும் பலரும் தந்துள்ளனர்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 11

சமூகம் என்பது தனி மனிதர்களின் கூட்டம். தேசம் என்பது பல சமூகங்களை ஒருங்கிணைப்பது.

சமயம் (மதம்) என்பது தனித்தனியாக, ஒவ்வொரு மனிதனின் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் பொருத்து இயங்குவது.  

நமது நாட்டில் பல மதங்கள், மதங்களுக்குள் பல பிரிவுகள் என பல்வேறு அமைப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் உள்ளடக்கி 'இந்து மதம்' என்று அழைக்கிறோம்.

ஒரு நல்ல தேசம் மக்களிடம் தேசிய உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஆதாரமாக இருப்பது 'நாட்டுப்பற்று'.

அதேபோல் சமயங்களை பொறுத்தவரை, அவை மக்களிடம் 'அன்பை' விதைக்க வேண்டும். 

"அன்பின் வழியது உயிர்நிலை .." என்கிறார் வள்ளுவர்.

அன்பு நிறைந்த மக்கள் வாழும் நாட்டில்தான் தெய்வீகம் மலரும்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 12

'சுயபரிசோதனை'. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் நமக்குத் தோன்றுவது, ஒவ்வொரு மனிதனும் அடிக்கடி தனக்குத்தானே சுயபரிசோதனை (அகத்தாய்வு) செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

உண்மையில் ஒவ்வொரு அமைப்பும் -- அது சமூகம் சார்ந்த அமைப்பாக
இருக்கலாம் அல்லது சமயம் சார்ந்த அமைப்பாக இருக்கலாம் -- அடிக்கடி நாட்டில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்து சுயபரிசோதனையில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம்.

அத்துடன் அவை எடுக்கும் எந்த முடிவும் தேச நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் தேசத்தின் வளர்ச்சியிலும், தெய்வீகத்தின் மலர்ச்சியிலும் வீழ்ச்சி ஏற்படுவதை தவிர்க்க இயலாது. 

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 13

"தேக அபிமானம், லோக அபிமானம், சாஸ்திர அபிமானம்" மூன்றையும் விட்டுவிட வேண்டும் என்று ஆதி சங்கரர் சொல்கிறார்.

ஆனால், தேசத்தைப் பற்றிய எண்ணங்களும், சாஸ்திரத்தைப் பற்றிய எண்ணங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை எப்படி நிறுத்துவது?

நம்மைச் சுற்றி நடக்கும் தவறுகளைப் பார்க்கும்போது, மனம் வேதனைப் படுகிறது. ஆனால், நம்மால் நேரடியாக எதுவும் செய்ய இயலாத நிலையில் யாரிடம் முறையிடுவது?

நேரடி சம்பந்தம் இருந்த காரணத்தால், குடும்ப உறுப்பினர்/உறவுகள்/நண்பர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் செய்வது தவறு என்று தோன்றினால் நேரடியாக சொல்லிவிடுவேன். அதன்பின் அதைப்பற்றி எவ்வித எண்ணமும் வராது.

சிலர் 'உனக்கு ஏன் இந்த வேலை' என்பார்கள். 

ஒருவேளை அது எனது இயல்பான குணமாக இருக்கலாம்.

பாரதி "ரௌத்திரம் பழகு" என்கிறார்.

திருவள்ளுவர் "நகுதற் பொருட்டன்று நட்டல்
மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு" என்கிறார்.

இவர்களது உரைகளைப் பார்த்தபின், நாம் பேசியதில் தவறில்லை என எண்ணிக் கொள்வேன்.

ஆனால், நமக்கு நேரடி சம்பந்தம் இல்லாத இடத்தில் தவறுகள் நடந்தால், யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால், ஆழ்மனதிலிருந்து கிளம்பும் உணர்வுகளை, எண்ணங்களை வெளியே சொல்லி விட்டால், 'சித்த விருத்தி' நின்றுவிடுமோ என்று நினைக்கிறேன்.

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 14

தேசியம், தெய்வீகம் இரண்டும் சிறப்பாக செயல்படுவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில்தான் முடியும். 

அதிலும் சமயம் சார்ந்த வாழ்வியல் நெறிகள் நமது நாட்டில் மிகவும் அதிகம். அவை உலகிற்கே வழிகாட்டக் கூடியவை. அவைகளை அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

ஆனால், நாம் அதைப்பற்றி போதுமான கவனம் வைத்திருக்கிறோமா என்று கேட்டால், பதில் சொல்வது கொஞ்சம் கடினம்தான்.

ஒரு சிறிய உதாரணம்; எத்தனை தவறுகள் --

* இந்துக் கோயில்களை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் விட்டது.

* பல ஆலயங்களை முறையான பராமரிப்பு இன்றி பாழடித்தது.

* அறநிலையத் துறையில் மாற்று மதத்தினரை பதவியில் அமர்த்தியது.

* வருடாந்திர வரவு, செலவு கணக்குகளை பொதுமக்களுக்கு தெரிவிக்காதது.

* முக்கியமாக கோயில்களின் வருமானம் எப்படி செலவழிக்கப்பட்டது என்பதை பொதுமக்களிடம் சொல்லாதது.

* குத்தகை பாக்கி விபரங்கள் எதுவும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லாதது.

* கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு பற்றி பொதுமக்கள் எதுவும் அறியாதிருப்பது.

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 15

எனது மனதில் தவறெனத் தோன்றும் விஷயங்களைத் தெரிவிக்கிறேன்.

நாம் கடந்த கால நிகழ்வுகளை ஆராயப் போவதில்லை. அது தேவை இல்லாதது.

கடந்த காலம் முடிந்த கதை; நிகழ்காலம் கடந்த காலத்தின் தொடர்ச்சி .. அதில் எந்த மாறுபாடும் இருக்காது.

நாம் எதையாவது மாற்ற நினைத்தால், அதை வருங்காலத்தில் தான் செய்யமுடியும்.
ஆனால், அதற்கான ஏற்பாட்டை நிகழ்காலத்தில் செய்ய வேண்டும்.

"மாற்றங்கள் - எதிர்காலம்; ஏற்பாடு - நிகழ்காலம்".

கடந்தகால நிகழ்வுகள்,
நிகழ்கால நிகழ்வுகளுக்கான காரணங்கள்.

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கக் கூடாது என நினைத்தால், அதற்கான ஏற்பாட்டை நிகழ்காலத்தில் செய்ய வேண்டும்.

(The present is the product of the past; the future is the modification of the past in the present .. Swami Chinmayanantha)

அப்படி செய்தால் மட்டுமே நாம் விரும்பும் நிகழ்வை எதிர்காலத்தில் காண முடியும்.
***** ***** *****   
சிறுவயதில் கேட்ட கதை. (இப்போது கதை சொல்லவும் ஆள் இல்லை; அப்படியே இருந்தாலும் கதை கேட்க பிள்ளைகளும்
விரும்புவதில்லை)

ஒரு வயதான தந்தை தனது முடிவு நெருங்குவதை அறிந்து தனது பிள்ளைகள் அனைவரையும் அழைத்தார். 

சில குச்சிகளை கொண்டுவரச் சொல்லி அவற்றை சேர்த்துக் கட்டச் சொன்னார்.

பின் ஒவ்வொரு பிள்ளையிடமும் அந்தக் கட்டை கொடுத்து, அதை கைகளால் இரண்டாக உடைக்கச்
சொன்னார். யாராலும் அதை உடைக்க முடியவில்லை.

பின்னர் அந்தக் கட்டை அவிழ்த்து விட்டு ஒவ்வொரு குச்சியையும் ஒவ்வொரு பிள்ளையிடம் கொடுத்து அதை உடைக்கப் சொன்னார். 

பிள்ளைகள் அனைவரும் குச்சியை எளிதாக உடைத்து விட்டனர்.

தந்தை பிள்ளைகளிடம் "குச்சிகள் ஒரே கட்டாக இருந்தபோது உங்களால் உடைக்க முடியவில்லை. குச்சிகள் தனித்தனியாக வந்ததும் மிகவும் எளிதாக உடைத்து விட்டீர்கள். உங்கள் வாழ்க்கையும் இதுபோலத்தான். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்வரை உங்களை யாரும் வீழ்த்த முடியாது. இதனைப் புரிந்து கொண்டு எப்போதும் ஒற்றுமையாக வாழுங்கள்" என்றார்.  

இப்பொழுது இந்தக் கதையை எதற்காக சொல்ல வேண்டும்?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 16

அந்நியர் முன்னர் படையெடுத்து வந்தபோது, நமது தேசத்தில் பல மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். 

அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால், நமது தேசம் அந்நியர் கைக்கு சென்று விட்டது.

இது வரலாறு சொல்லும் உண்மை.

இதே போன்றதொரு நிலைமை இந்து மதத்திற்குள்ளும் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

நமது தேசத்தின் பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அழிப்பதில் அந்நிய சக்திகள் மட்டுமல்ல, உள்நாட்டு சக்திகளும் செயல்புரிவதை முழுமையாக உணர்ந்திருக்கிறோமா?

கம்பன், காளிதாசன், பாஸ்கரன், பாணினி, சங்கரர், இளங்கோ, வள்ளுவர், பாண்டியர்கள், சோழர்கள், அசோகர், சிவாஜி ஆகியோரின் சாதனைகளைப் போற்றி புகழ்ந்துவிட்டு பாரதி இவ்வாறு உள்ளம் எரியக் கூறுகிறார்
 - -
"அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து 

ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர் 

முன்னம் நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்

பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்

என்ன கூறிமற்று எங்ஙன் உணர்த்துவேன்".

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபின் கல்வி அனைவருக்குமாய் பரவலாக்கப் பட்டது. உண்மை.

ஆனால், நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கினார்களே! நாம் உணர்ந்தோமா?

நாடு சுதந்திரம் அடைந்தபின்னும் இதுதானே நடக்கிறது. நாம் தூங்கிக்கொண்டு தானே இருக்கிறோம்?

பொதுவாக இந்து மதம் என்று சொன்னாலும், நாம் தனித்தனி குச்சியாகத்தானே செயல்படுகிறோம்!?

'இந்து மதம்' என்று சொல்லும்போது இந்த நாட்டில் தோன்றிய அனைத்து மதங்களையும் கருத்தில் கொள்கிறேன்.

இங்கு வெவ்வேறு சமயங்கள் உள்ளன. அவை சொல்லும் வழிமுறைகளில் நிறைய மாறுபாடு இருக்கலாம்.

ஆனால், எல்லா சமயங்களும் முடிவான குறிக்கோளாக ஒரே பரம்பொருளைத்தானே சொல்கின்றன.

அதனால்தானே "ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க" என்கிறோம்.

'குச்சியாக' இருக்கும் நாம், ஒரே 'கட்டாகவும்' செயல்பட எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?

ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு மதத்தலைவர்கள் உள்ளனர்.

அவர்கள் கடைப்பிடிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் வேறு வேறாக இருக்கலாம்.

ஆனால், இந்த நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை காக்க அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டாமா?

ஒருவேளை 'விறகுக்கட்டும், குச்சியும்' என்ற கதை அவர்களுக்குத் தெரிந்திருக்காதோ?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 17

கடந்த காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்று ஆராய்ந்து பார்ப்பதை விடுத்து, இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதுதான் நமது ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என எண்ணுகிறேன்.

முதலில் நமது மனநிலையில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அதன் பின்னரே சமூகத்தில் நாம் செய்ய வேண்டியதைப் பற்றி சிந்திக்கலாம்.

"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் 
என்குற்றமாகும் இறைக்கு" என வள்ளுவர் கூறுகிறார். 

சிந்தித்துப் பார்த்தால், ஒரு சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

இது எனது சொந்த கருத்து. அன்பர்கள் விருப்பு, வெறுப்பு இன்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 18

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். 

ஒவ்வொரு பறவைக்கும் அதனதன் குஞ்சு பொன் குஞ்சு தான்.
அதில் தவறேதும் இல்லை.

காக்கையின் குஞ்சு கருப்பாகத்தான் உள்ளது என்று நமக்குத் தெரியும். ஆனாலும், காக்கை குஞ்சின் மேல் உள்ள பாசத்தால் அதனை 'பொன் குஞ்சு' என்று சொன்னால் நாம் அதைத் தவறென்று
சொல்லலாமா? 

அதே சமயம், அந்தக் காக்கை தன் குஞ்சு "மட்டும்தான்" பொன் குஞ்சு என்று சொன்னால், மற்ற பறவைகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

நான் தினமும் சிவனை வழிபடுகிறேன். சரி.

எனக்கு சிவன் தான் கடவுள். சரி.

என்னைப் பொறுத்தவரை சிவன் தான் முழுமுதற் கடவுள். சரி.

சிவன் "மட்டுமே" முழுமுதற் கடவுள். இது எப்படி சரியாகும்?

எனக்கு சிவன் முழுமுதற் கடவுளாகக் தோன்றுவதுபோல், வேறு ஒருவருக்கு வேறுவொரு கடவுள் முழுமுதற் கடவுளாகத் தோன்றலாம் அல்லவா?

அப்படியானால் "மட்டுமே" என்ற வார்த்தை பிரயோகம் சரிதானா?

ஒரு மனிதன் "மட்டுமே" என்று கூறினால், அவன் அறிந்து உணர வேண்டிய பல விஷயங்கள் அவனால் அறிய முடியாமல் போய்விடும். 

அது அவனது ஆன்மீக வளர்ச்சிக்குத் தடையாகிவிடாதா?

தவிர, "மட்டுமே" என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தால், அங்கு சச்சரவுகளுக்கு பஞ்சம் ஏதும் இருக்காதே!?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 19

இந்து மதத்தில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால், ஒரே வார்த்தைக்கு பல்வேறு விதமான விளக்கங்களைத் பலரும் சொல்வதுதான்.

இதில் உள்ள நன்மை என்னவென்றால், நமக்கு சரியெனத் தோன்றும் விளக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

அதற்காக மற்ற விளக்கங்களைத் தவறென்று கருத முடியாது.

உதாரணத்திற்கு ..
* யோகம் என்றால் என்ன?
* பிறவிகள் எத்தனை?
* மறுபிறவி என்பது எதைக் குறிக்கிறது?
என்று கேட்டுப்பாருங்கள்.

விதவிதமான பதில்கள் வரும். எதையும் தவறென்று நம்மால் சொல்லமுடியாது. அவற்றை பரிசீலனை செய்ய வேண்டியது பண்டிதர்களின் வேலை.

நம்முடைய வேலை, நமக்கு ஏற்புடைய பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சில காலம் கழித்து, நமது புரிதலின் தன்மை மாறும்போது வேறுவொரு விளக்கம் சரியெனத் தோன்றலாம்.

நமக்கு உடன்பாடு இல்லாத கருத்தை மற்றவர்கள் கூறினால், அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். மறுப்பு தெரிவிக்க விரும்பினால், உள்ளத்தில் எந்தவித வெறுப்பும் இன்றி பதிலளிக்க வேண்டும்.

ஓஷோ அவர்கள் அழகாக சொல்லுகிறார் ..

"ஒரு செருப்புக் கடைக்கு போகிறோம்.
அங்கு பலவித அளவுகளில், விதவிதமான அமைப்புகளில் செருப்புகள் இருக்கும்.

நம் காலுக்குப் பொருத்தமான, 
 நமக்குப் பிடித்த அமைப்பில் உள்ள செருப்பை நாம் வாங்கிக் கொள்கிறோம். 

அதற்காக மற்ற செருப்புகளைத் தேவையில்லை என்றோ, இழிவானவை என்றோ நினைக்கக் கூடாது. அவை வேறு பலருக்குப் பொருந்தக்கூடும்". 

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 20

"மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று சொல்வார்கள். இதில் "மாதா, பிதா" இரண்டும் தமிழ் சொற்களா?

‌பழைய இலக்கியங்களைப் பார்த்தால், நம் முன்னோர்கள் வடமொழியை நன்கு அறிந்திருந்தார்கள் என்பது தெரியவரும். அத்துடன் அந்த மொழியில் உள்ள வார்த்தைகளை தங்கள் நூல்களில் எந்தவித தயக்கமுமின்றி கையாண்டிருப்பதையும் காணலாம்.
‌அப்படியிருக்க எதற்கு தேவையில்லாமல்
‌அவற்றை வெறுக்க வேண்டும்?
‌சில அன்பர்கள் சித்தாந்தம் உயர்ந்ததா, வேதாந்தம் உயர்ந்ததா என்று சர்ச்சை செய்வதை பார்த்திருக்கிறேன்.
‌எதற்கு இது மாதிரியான தேவையற்ற சர்ச்சைகள்?

".. தர்க்க வாதத்தை விட்டு.." எனப் பாடுகிறார் திருமூலர். (திருமந்திரம் 51)
‌எனக்கு என் சித்தாந்தம்தான் உயர்ந்தது என்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே?

பல சக்திகள் இந்து மதத்தை சீரழிக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன என்பது நாம் அறிந்ததே.
‌இந்த நேரத்தில், இந்து மத ஒற்றுமையை காக்க வேண்டிய நாம், பங்காளி சண்டை போடுவது சரியா?
‌ (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 21

இந்து மதத்தை பழித்துப் பேசுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பவற்றில் "சாதி" அமைப்பும் ஒன்று.

இந்த சாதி அமைப்பு தொழிலை வைத்து உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

அப்படியானால் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் தொழில் செய்பவர்களை எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது?

தொழிலை வைத்து சாதி, பிறப்பை வைத்து சாதி என்றால், மேற்சொன்ன மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்திருந்தால் யாருக்கு எந்த சாதி என்று எப்படி சொல்வது?

இதைவிட கொடுமையான விஷயம், 'மேல் சாதி', 'கீழ் சாதி' என்று உயர்வு, தாழ்வு பார்ப்பது?

இது தவறு என்று தோன்றியதால் தானே ..

"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் .. கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்" என்று வள்ளுவர் பாடினார்.

"வையகம் காப்பவரேனும் - சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்தே - பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்" என்கிறார் பாரதியார்.

"சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி" என்று பாடுகிறார் ஔவையார்.

அவர்களுக்கு இருந்த கோபம், ஏன் மடாதிபதிகளுக்கும், மதத் தலைவர்களுக்கும் வர மறுக்கிறது?

அவர்கள் பிறப்பை வைத்துத்தான் சாதி என்பதை ஏற்றுக் கொள்ளுகிறார்களா?

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 22

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை".
..  ஔவையார்

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை ஒன்று உண்டு.

நாட்டில் ஒரு நல்ல காரியம் செய்ய எண்ணினால் அதன் பயன் கடைக்கோடி கிராமத்தையும் சென்றடைய வேண்டும். அது நகரத்தோடு நின்றுவிடக்கூடாது.

அதேபோல் சமய நூல்களில் கொட்டிக் கிடக்கும் வாழ்வியல் தத்துவங்கள் மனிதனிடம் நற்பண்புகளை வளர்க்கும் வல்லமை பெற்றவை.

அந்த தத்துவங்களை பலரும் விளக்கமாக சொல்லுகிறார்கள். ஆனால், அவை கடைக்கோடி மனிதன் வரை போய் சேருகிறதா?

தத்துவங்களை கடைக்கோடி மனிதனிடம் சேர்க்க
முடியவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன?

தத்துவங்களை கடைக்கோடி மனிதனிடம் ஏன் சொல்லக்கூடாது என்றால்,  'அவர்களால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது' என்பார்கள். 

அது சரிதான். ஆனால், அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக சொல்லலாம் அல்லவா?

‘மாதா உடல் சலித்தாள் 

வல்வினையேன் கால் சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே-நாதா

இருப்பையூர் வாழ்சிவனே 

இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாழாமற் கா’

என்ற  பட்டினத்தாரின் பாடலை ஒட்டி கண்ணதாசன் அவர்கள் எளிமையான வார்த்தைகளை வைத்து எழுதிய பாடல் - -

‘பெற்றவள் உடல் சலித்தாள்

பேதை நான் கால் சலித்தேன்

படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா-பாவி

மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா’

கண்ணதாசன் பாடல் வரிகளைக் புரிவதற்கு, அகராதி எதுவும் தேவையில்லை அல்லவா?

அதேமாதிரி, கடைக்கோடி மக்களுக்குப் புரியும் வகையில் பாடம் எடுத்தால் என்ன?

வேதபாடசாலைகள் நடத்தத் தெரிந்த நமக்கு, கடைக்கோடி மக்களின் பிள்ளைகளுக்காக ஏன் எதுவும் செய்ய முடியவில்லை?
    
                       (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 23

மதத் தலைவர்கள், மடாதிபதிகள் போன்றோர் தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை நித்திய கைங்கரியங்கள் எனப்படும்.

அவர்கள் நடத்தும் வேதபாடசாலைகள்
அவர்களுக்கு கடமையாகும்.

ஆனால், கடைக்கோடி மக்களுக்காக கிராமங்கள் தோறும் குருகுல பாடசாலை அமைத்தால் அதை கடமை என்று சொல்லமுடியுமா?

இதுபோன்ற செயல்கள் நடந்தால், அதை பரபோகார செயல் என்றுதானே சொல்வார்கள்.

இவ்வாறு செய்யப்படும் காரியங்களைத்தான் "பரோபகாரம் இதம் சரீரம்" என்று சொல்கிறார்களோ? 
 
கடைக்கோடி மக்களை நாம் அரவணைக்கத் தவறினால், பிறர் அவர்களை தம்பக்கம் இழுக்க முயற்சி செய்யத்தான் செய்வார்கள்.

இதனைத் தடுக்க வேண்டுமென்றால் மதத்தலைவர்களும், மடாதிபதிகளும் கடைக்கோடி மக்களிடம் கருணை காட்ட வேண்டும்.

அதன் முதல் நடவடிக்கையாக கிராமங்கள் தோறும் (குருகுல) பாடசாலைகள் அமைக்க வேண்டும். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தலாம். 

கல்விக் கட்டணம் இன்றி, இலவசமாக சாப்பாடு போட்டு எல்லா குழந்தைகளையும் "வாசுதேவ குடும்பத்து" பிள்ளைகளாக நடத்துங்கள்.

அத்துடன் நமது பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை பற்றி எளிய முறையில் கதைகளாக சொல்லிக் கொடுக்கலாம்.

நமது புராண இதிகாசங்களில் நிறைய கதைகள் இருக்கின்றன. அவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

திருக்குறள், தேவாரம், திருவாசகம் மற்றும் பல நன்னெறி நூல்களில் உள்ள எளிமையான பாடல்களை கற்றுக் கொடுக்கலாம்.

இதுபோன்ற பள்ளிகள் சில இடங்களில் நடக்கின்றன. அவைகளை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டுவர வேண்டும்.

இதையெல்லாம் செய்தால் அவர்களின் பண்பு நிலையில் நிறைய மாற்றங்கள் வரும். அத்துடன் அவர்கள் 'விசுவாசமான' மாணவர்களாக மாறலாம் அல்லவா? 

விசுவாசம் என்பது பக்தியை விட உயர்ந்த பண்பு தானே!

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 24

எந்த ஒரு நாட்டிற்கும் சாதி அமைப்பு தேவையில்லைதான். 

சாதி அமைப்பை ஒழிக்க அரசு என்ன செய்யலாம்?

இனி எந்த இடத்திலும் சாதிப் பெயரை உபயோகிக்கக் கூடாது என்று அரசு ஆணையிட்டால், பல இடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வரக்கூடும். காரணம் வேறு வேறாக இருக்கலாம்; ஆனால் எதிர்ப்பு நிச்சயம் வரும்.

ஆக, சாதியை ஒழிப்பதற்கு முதல் கட்டமாக பிறப்பு சான்றிதழில் சாதிப் பெயருக்குப் பதிலாக 'forward, backward, most backward, others' எனக் குறிப்பிடலாம். (தேவைப்பட்டால், 'no caste' என்றுகூட ஒரு பிரிவை சேர்த்துக் கொள்ளலாம்)

இதையே மற்ற இடங்களிலும் உபயோகிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இந்த முறையை கடைப்பிடித்தால் நான்கு பிரிவுகள் மட்டுமே புழக்கத்திற்கு வந்துவிடும். 

தனிப்பட்ட முறையில் மனிதர்கள் எந்த சாதியில் இருந்தாலும், பொது இடத்தில் இந்த நான்கில் ஒன்றையே குறிப்பிட வேண்டும் என்ற நிலை வரவேண்டும்.

பின்னர் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்து, நான்கு பிரிவுகளையும் ஒவ்வொன்றாக இணைக்க முயற்சிக்கலாம்.

சாதி அமைப்பை ஒழிப்பதற்கு அரசுக்கு இன்னொரு முக்கிய கடமையும் உள்ளது.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 25

(எனது மனதில் உள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடாகத்தான் இந்த தொடரை வெளியிட்டு வருகிறேன். இருந்தாலும் தேவையற்ற கொடூர கொரோனா கிருமியின் காரணமாக பலர் உயிர் துறந்துவரும் நேரத்தில் இந்தப் பதிவை வெளியிடுவதற்கு வருந்துகிறேன்)

சாதிப் பிரிவினையை ஒழிக்க வேண்டுமென்றால் நாட்டிலுள்ள எல்லா ஊர்களிலும் (தேவைக்கேற்ப) மின்மயானங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அங்கு தகனமேடை தவிர்த்து உள் அரங்கு ஒன்றும், வெளி அரங்கு ஒன்றும் இருக்க வேண்டும்.

வெளி அரங்கில் அவரவர் வழக்கப்படி சடங்குகளை செய்து கொள்வதற்கு அனுமதிக்கலாம்.

ஆனால், உள் அரங்கில் நடைபெறும் சடங்கு ஒரே விதமாக இருக்க வேண்டும்.

தேவையான மின்மயானங்கள் அமைத்த பின்னர், சாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மயானங்களை அரசுடமை ஆக்க வேண்டும்.

அந்த இடங்களில் மரங்களை நடலாம். முடிந்தால் அடர் காடுகளை உருவாக்கலாம்.

இவை மட்டும் போதுமா என்றால், போதாது என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும், இந்த நடவடிக்கைகள் சாதிப் பிரிவினையைக் குறைக்க பெருமளவில் உதவலாம்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 26

கோயில் திருவிழாக்கள், பொதுக்கூட்டம், சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் பொதுமக்கள் நிறைய கூடுவதுண்டு.

அந்த நேரங்களில் நம் அருகில் உள்ளவர் என்ன சாதி என்று பார்ப்பதில்லை.

ஆனால், நமது இடத்திற்கு வந்துவிட்டால், இந்த தெருவுக்குள் வராதே என்கிறோம்.

ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் வேறு வேறாக இருக்கலாம். எனவே, என் வீட்டிற்குள் வராதே என்று சொல்லலாம்; ஆனால், என் தெருவிற்குள் வராதே என்று எப்படி சொல்ல முடியும்?

பல நூறு வருடங்களாக அடக்கி வைத்ததன் காரணமாக, சிலருக்கு மற்றவர் மேல் ஆத்திரமும், கோபமும் வருவது இயற்கையே.

மதத்தலைவர்கள் அப்படிப்பட்ட மக்களை அன்புடன் அரவணைத்து பரிவுடன் நடந்து கொண்டால், அவர்களின் ஆத்திரமும், கோபமும் குறையலாம் அல்லவா?

"வாசுதேவக் குடும்பம்" என்று உலகமெங்கும் சொல்லி வருகிறோம். ஆனால், உள்ளூரில் அதைக் கடைப்பிடிக்க மறந்துவிடுகிறோமே!
அது ஏன்?

               (தொடரும்)




தேசியமும், தெய்வீகமும்

பதிவு 27

ரேஷன்கார்டு குடும்ப உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையாகவும் இருந்து வந்திருக்கிறது.

"ஆதார்" கார்டு வந்தபின் அந்த அவசியம் இல்லை என்றாகிவிட்டது. பின் எதற்காக எல்லோரும் ரேஷன்கார்டு வைத்திருக்க வேண்டும்?

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன்கார்டு என்ற திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் என்ன?

சொந்தத்தில் கார் வைத்திருக்கிறவர்கள், வருமான வரி கட்டுகிறவர்கள், குறிப்பிட்ட அளவிற்கு மேல், உதாரணமாக 1500 சதுர அடி, சொந்தமாக வீடு உள்ளவர்கள் போன்ற மனிதர்களுக்கு ரேஷன்கார்டு எதற்காக கொடுக்க வேண்டும்?

இதுபோன்ற பல அளவீடுகளை வைத்து ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், அதனால் சேமிக்கப்படும் பணத்தை ஆக்கப்பூர்வமான வழியில் செலவிடலாமே! 

               (தொடரும்)


               

தேசியமும், தெய்வீகமும்

பதிவு 28

நமது நாட்டில் கல்வி திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் வேண்டியிருக்கிறது.

கல்வி என்பது 
மாணவர்கள் நலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் பெரும்பாலான இடங்களில் அப்படி இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

மாணவர்களின் தேவையை மூன்று விதமாகப் பிரிக்கலாம் ..
1. அடிப்படை கல்வி
2. துறைசார்ந்த கல்வி
3. நன்னெறி வளர்க்கும் கல்வி

குறிப்பிட்ட வகுப்பு வரை அடிப்படை கல்வி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அதில் தாய்மொழிப் பாடம், ஆங்கிலப் பாடம், விருப்பப்பட்ட பிறமொழிப் பாடம் மற்றும் கணக்குப் பாடம் ஆகியவை இருக்க வேண்டும்.

தாய்மொழிப் பாடத்திலேயே சமூகம் சார்ந்த விஷயங்களை .. சுகாதாரம், சுற்றுச்சூழல், இயற்கை வளம் போன்ற விஷயங்களை .. கற்றுக் கொடுக்கலாம்.

துறைசார்ந்த கல்வியில், மாணவனுக்கு சம்பந்தம் இல்லாத எந்தப் பாடமும் இருக்கக் கூடாது.

"அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒவ்வொரு மாணவனும் அவனது துறையில் நன்கு பயிற்சி பெற்றவனாக வரவேண்டும்.

நன்னெறி வளர்க்கும் பாடங்கள் எல்லா வகுப்புகளிலும் இடம் பெற்றிருக்க வேண்டும். இதில் அடங்கியுள்ள பாடத் திட்டங்கள் நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நீதி போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

               (தொடரும்)




தேசியமும், தெய்வீகமும்

பதிவு 29

மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் அரசு கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

B. P.-யை எடுத்துக் கொள்ளுங்கள். அது 80 - 120 என இருக்க வேண்டும் என்கிறார்கள். என் உறவினர் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் (Systolic pressure)
140 என இருந்தது.

இது அதிகமாக என்றால், உங்கள் வயதைப் பொறுத்தவரை இது அதிகமில்லை என்றார். அதாவது 100 + வயது வரை இருக்கலாம் என்றார். உறவினருக்கு வயது 60. எனவே இது அதிகமில்லை என்றார்.

சமீபத்தில் ஒரு பதிவில் 80 - 120 என்பது முன்னர் வேறு விகிதத்தில் இருந்தது. பன்னாட்டு மருந்து கம்பெனிகள் பயன்பெறும் பொருட்டு, இதன் விகிதம் 80 - 120 என மாற்றப் பட்டது என வெளியாகியிருந்தது.

இதேமாதிரி, சர்க்கரை வியாதியைப் பற்றியும் நிறைய மாறுபட்ட கருத்துகள் உண்டு.

இது சம்பந்தமாக பல செய்திகளை சொல்லலாம். ஆனால், எனது கேள்வி இதுவல்ல.

துறைசார்ந்த வல்லுனர்களே மாறுபட்ட கருத்துக்களை சொல்லும்போது அதை ஆராய வேண்டியது அரசின் கடமை அல்லவா?

முடிவான, தெளிவான ஒரு கருத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 30

மருத்துவத்தைப் பொறுத்தவரை allopathy என்னும் ஆங்கில மருத்துவம் முதற்கொண்டு பலவகை மருத்துவ முறைகள் உண்டு.

இவை தவிர பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் பலரும் மருத்துவம் செய்து வருகிறார்கள்.

தொழில் ரீதியாக மருத்துவராக இல்லாமல் இருந்தும், சிலர் வைத்தியம் செய்வது உண்டு.

நான் சந்தித்த இரண்டு அனுபவங்கள் ..

1. அன்று எனக்குப் பயங்கர வயிற்றுக் கடுப்பு. வயிற்று வலியும் அதிகமாக இருந்தது. வயிற்றை யாரோ பிசைவது போன்ற வேதனை.

மறுநாள் பரீட்சை எழுதப் போகவேண்டும். அன்று இரவு என் தந்தை ஒருவரைக் கூட்டிவந்தார். அவரிடம் எனது வியாதியைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

வந்தவர் என்னை சோதித்து விட்டு, என் தந்தையிடம் ஒரு வாழைப்பழம் வாங்கி வரச் சொன்னார்.

தந்தை வந்ததும், பழத்தில் ஒரு சிறு பகுதியில் தான் கொண்டுவந்திருந்த வெற்றிலை மடிப்பிலிருந்து ஒரு சிறு உருண்டையை பொதிந்து என்னை வாயில் போட்டு விழுங்கச் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து 'பையன் தூங்கட்டும்' என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நானும் நன்கு தூங்கி விட்டேன்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் வியாதியின் அறிகுறியே இல்லை.

2. நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள முந்திய நாளே அவரது ஊருக்கு சென்று விட்டோம்.

அன்று இரவு நண்பர்கள் அனைவரும் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தோம்.

நண்பர் (மணமகன்) சிறுநீர் கழிக்க முயன்றிருக்கிறார்; ஆனால், முடியவில்லை. நீர்க் கடுப்பு என நினைத்துக் கொண்டேன்.

இருட்டு நேரம் என்பதால், ஒரு வேலையாள் 'பெட்ரோமாக்ஸ்' விளக்குடன் எங்களுடன் வந்திருந்தார்.

அவர் நண்பரிடம் 'என்ன மாப்பிள்ளை, விடிந்தால் கல்யாணம் .. இப்படி கஷ்டப்படுறீங்களே' என்று கேலியாகக் கூறியவர், விளக்கு வெளிச்சத்தில் இங்கும் அங்குமாக எதையோத் தேடியவர் ஒரு செடியிலிருந்து சில இலைகளைப் பறித்து கையில் வைத்து கசக்கினார். பின் அந்த கசக்கிய இலைகளைச் சுருட்டி நண்பரின் இரண்டு காது மடல்களிலும் வைத்தார்.

ஐந்து நிமிடங்கள் கழிந்தபின், அவர் நண்பரிடம் 'மாப்பிள்ளை, இப்போது முயன்று பாருங்கள்' என்றார். நண்பரும் எந்தவித சிரமமும் இன்றி சிறுநீர் கழித்தார்.

உதாரணத்திற்காக இரண்டு அனுபவங்களை மட்டும் கூறுகிறேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் அன்பர்கள் வாழ்விலும் நிகழ்ந்திருக்கலாம்.

இது சம்பந்தமாக அரசு செய்ய வேண்டிய கடமை ஒன்று உள்ளது.

                   (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 31

பல வருடங்களுக்கு முன்னர் "Arigo .. the man with rusted knife" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை "Reader's digest" பத்திரிகையில் வெளிவந்தது.

அந்தக் கட்டுரை Arigo என்ற மனிதருக்கு இருந்த அமானுஷ்ய சக்தியைப் பற்றியது.
அவர், அவருக்கே தெரியாத அந்த சக்தியின் உதவியினால், பலரது நோய்களை குணப்படுத்தி வந்தார்.

அதைக் கேள்விப்பட்ட
அமெரிக்கா (Arigo அர்ஜென்டீனா நாட்டை சேர்ந்தவர்) ஒரு புதிய ஆஸ்பத்திரி கட்டி, ஒரு மருத்துவ குழுவையும் அனுப்பி Arigo-வுடன் இணைந்து பணியாற்ற ஏற்பாடு செய்தது. அதனுடைய நோக்கம் Arigo-விடம் இருந்த அமானுஷ்ய சக்தியின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்பதுதான்.

('விதி வலியது' என்பதற்கிணங்க, 
Mr. Arigo-வின் மரணம் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடந்தது. அது ஒரு தனிக்கதை)

ஒரு தனிமனிதனின் அமானுஷ்ய சக்தியை ஆராயத் துடித்தது அமெரிக்கா.

நமது நாட்டில் மருத்துவ படிப்பு ஏதுமின்றி,
பலர் மக்களின் பலவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வெற்றியும் பெற்று வருகிறார்கள்.

அரசு உரிய மருத்துவ குழுவினை அமைத்து சம்பந்தப் பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களது சிகிச்சையின், அதன் பலனின் உண்மைத் தன்மையை அறிய முயற்சி செய்யலாம் அல்லவா?

தேவைப்பட்டால், அந்த சிகிச்சை முறைகளை அங்கீகரித்து, அந்த முறையை உரிய முறையில் சந்தைப் படுத்த முயற்சி செய்யலாம் அல்லவா?

அது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்தானே! 

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 32

ஒரு ஜனநாயக நாட்டில் வேட்பாளர் தேர்வு என்பது மிகவும் முக்கியமானது.

வாக்களிக்க செல்லும்போது, பொதுநலத்தில் நாட்டம் உள்ள வேட்பாளர்களை மட்டும் தேர்வு செய்தால், அது நாட்டிற்கு நல்லது.

ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன?

தனக்குக் கிடைக்கும் அன்பளிப்புகள்(!), கிடைக்கப்போகும் இலவசங்கள், சாதி, மதம் போன்றவற்றைப் பார்த்து வாக்களித்தால், அது நாட்டிற்கு நல்லதா?

இந்தத் தவறை யார் சரி செய்ய வேண்டும்?

அரசியல்வாதி, அரசியலோடு தொடர்புடைய தொழிற்சங்க நிர்வாகிகள், மதத் தலைவர்கள் போன்றோர் தானே இதை சரிசெய்ய வேண்டும்? ஆனால், அவர்களே வாக்காளர்களைத் தவறாக வழிநடத்தினால் என்ன செய்வது?

ஊடகங்களாவது நல்வழி காட்டுமா என்றால், பெரும்பாலான ஊடகங்கள் நெறிதவறியே நடக்கின்றன.

இதற்கு ஒரே மாற்று, தேர்தல் விதிமுறைகளில் இரண்டு சீர்திருத்தங்கள் செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது ..
1. வேட்பாளர்கள் பெயரின்றி கட்சிகள் மட்டும் பங்கு கொள்ளும் தேர்தல்.
2. சுழற்சி முறையில் நடைபெறும் தேர்தல்

               (தொடரும்)

தேசியமும்,

தேசியமும், தெய்வீகமும்

பதிவு 33

வேட்பாளர்கள் பெயரின்றி கட்சிகள் மட்டும் தேர்தலில் போட்டியிட்டால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

ஒரு மாநிலத்தில் 250 சட்டசபை தொகுதிகள் உள்ளன என எடுத்துக்கொள்வோம்.

ஒரு கட்சி 100 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக இருந்தால், 100 பெயர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிட வேண்டும்.

உரிய தணிக்கைக்குப்பின் அந்தப் பட்டியலை தேர்தல் ஆணையம் ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

விகிதாச்சார முறைப்படியான தேர்தலாக இது இருக்காது; ஏனெனில், நாட்டில் பல கட்சிகள் இயங்குவதால் இது நடைமுறை சாத்தியமற்றது.

இந்தப் புதியமுறை தேர்தல் வழக்கம் போலவே நடைபெறும். வாக்குச் சீட்டில் வேட்பாளர் பெயர் மட்டும் இருக்காது.

பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தேசியக் கட்சிகளும், மாநிலத்திற்கான தேர்தலில் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் போட்டியிடலாம்.

தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் எவை என்பதற்கான விதிகளை மத்திய-மாநில அரசுகளும்,
தேர்தல் ஆணையமும் இணைந்து முடிவு செய்ய வேண்டும். 

இந்தப் புதிய முறையினால் ஏற்படும் பயன்கள் என்னவென்று பார்ப்போம்.

1. நூறு தொகுதிகளில் போட்டியிடும் கட்சியின் ஒரு தொகுதி புதுக்கோட்டை என வைத்துக்கொள்வோம்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. மணி என்பவரின் பெயர், அந்தக் கட்சி அளித்த பெயர் பட்டியலில் 100-வது இடத்தில் இருந்தால் என்ன நடக்கும்?

புதுக்கோட்டை தொகுதியில் அந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், 100 இடங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, திரு. மணி அவர்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்கும் என்பதால், அவர் தன் சொந்தப் பணத்தை செலவு செய்வாரா?

பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்களும், சொந்தப் பணத்தை செலவிடத் தேவையில்லை என நினைப்பார்கள்.

பட்டியலில் நடு பகுதியில் உள்ளவர்களுக்கோ, இது 'இரண்டும் கெட்டான்' நிலையாக இருக்கும்.

வேட்பாளராக நிற்க விரும்புகிறவர்களிடம், "நீங்கள் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்" என கேட்க முடியாத நிலைக்கு கட்சித் தலைமை தள்ளப்படும்.

ஆக, மொத்தத்தில் தேர்தல் சமயத்தில் நடக்கும் பணப்பட்டுவாடா பெரிதும் குறைந்துவிடும்.

2. எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர் கட்சி மாறினால், அந்தப் பதவி பட்டியலில் உள்ள அடுத்த நபருக்குப் போய்விடும்.

3. இதன்காரணமாக குதிரை பேரம் நடத்த
முடியாது.

4. பதவியில் இருப்பவர் இறந்து போனால், மறுதேர்தல் தேவை இருக்காது. பட்டியலில் உள்ள அடுத்த நபர் அந்த இடத்தில் அமர்த்தப் படுவார்.  

5. ஆட்சி கவிழ்ப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கட்சித் தலைமை முடிவெடுத்து, மொத்தமாக வேறு கட்சிகளுடன் இணைந்தால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

அப்படியானால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபின் ஐந்து வருடங்களுக்கு அசைக்க முடியாது என்ற நிலை வந்தால், அது நல்லதா என்ற கேள்வி வரலாம். அவர்களது ஆட்சியில் நிறைய குறைபாடுகள் இருந்தால், அதற்கு மாற்று என்ன எனத் தோன்றலாம்.

அதற்கு மாற்று "சுழற்சி முறை தேர்தல் தான்"!?

               (தொடரும்)




தேசியமும்,
தெய்வீகமும்

பதிவு 34

ஆங்கிலத்தில் 'tenterhook' என்றொரு வார்த்தை உண்டு.

'எப்பொழுதும் ஒருவித பதற்றத்தோடும், பயத்தோடும், என்ன நடக்குமோ என்ற கவலையோடும் இருப்பதையும்' சுட்டிக் காட்டுவதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. 

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், ஐந்து வருடங்களுக்கு நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணம் வரக்கூடாது. அந்த எண்ணம் வந்துவிட்டால், அது தவறு செய்ய நிறைய இடம் கொடுத்துவிடும்.

இதற்கான ஒரே நிவாரணி தான் 'சுழற்சி முறை தேர்தல்'. இது எப்படி நடைபெறவேண்டும் என்று பார்ப்போம்.

ஒரு மாநிலத்தில் 250 சட்டசபைத் தொகுதிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் வருடம்தோறும் 50 இடங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும். 50 இடங்களும் அனைத்து மாவட்டங்களிலும் இடம் பெறுவதாக இருக்க வேண்டும்.

ஐந்து வருடங்களில் அனைத்து தொகுதிகளும் இடம் பெற்றுவிட வேண்டும். (இதே முறையை பாராளுமன்றத் தேர்தலுக்கும் பயன்படுத்தலாம்) 

இதனால் விளையும் பயன் என்ன? ஆட்சியில் இருப்பவர்களுக்கு 'ஐந்து வருடம் .. நாம் எதுவும் செய்யலாம். நம்மை யாரும் எதுவும் கேட்க முடியாது' என்ற எண்ணம் வராது. தவறாக ஆட்சி செய்தால் ஒரே வருடத்தில் பதவி பறிபோய்விடுமோ என்ற பயம் இருக்கும்.

உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் 'சுழற்சி' முறையிலா தேர்தல் நடக்கிறது? பின் எதற்காக நமது நாட்டில் மட்டும் இந்த 
முறையில் தேர்வு நடத்த நினைக்க வேண்டும்?  

உண்மைதான். பிற ஜனநாயக நாடுகளில் இந்த முறை இல்லைதான். 

ஆனால், அங்கு அரசியல்வாதிகளிடமும், ஊடகங்கள் மத்தியிலும் "தேசிய" உணர்வு இருக்கிறதே? இங்கு அது எல்லா மட்டங்களிலும் இருக்கிறதா?

சாதிய உணர்வு, மத உணர்வு, இன 
உணர்வு, மொழி உணர்வு போன்றவை நம்மைப் பிடித்து ஆட்டும் போது, நாம் "தேச நலனை" காற்றில் பறக்க விட்டு விடுகிறோமே!

மக்களிடம் அன்பை விதைக்க வேண்டிய நாம், நல்ல அறிவுரைகளை வழங்க வேண்டிய நாம், அவர்கள் மனதில் வெறுப்பை விதைத்து கோபத்தை வளர்த்து விடுகிறோமே; இது சரியா?

இது தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பதை மதவாதிகளும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் ஏன் உணர்வதில்லை?

தேச நலனில் அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் கையில் ஐந்து வருடத்திற்கு ஆட்சியைக் கொடுக்கலாமா?

அவர்களுக்கு தேச நலனில் அக்கறை ஏற்பட வேண்டுமென்றால், 'சுழற்சிமுறை தேர்தல்' ஒன்றே சரியான நிவாரணம் ஆகும்.  

               (தொடரும்)




தேசியமும்,
தெய்வீகமும்

பதிவு 35

ஒரு நாட்டின் கலாச்சாரம் எப்படி உருவாகிறது?

நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களே நமது கலாச்சாரமாக மாறுகிறது.

இதேபோன்று அனைத்து மக்களும் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களே ஒரு நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயம் செய்கின்றன. 

ஆனால், நமது நாட்டில் மக்கள் மதம், மொழி, இனம், சாதி என பல்வேறு குழுக்களாக இயங்குகின்றனர். எனவே எல்லா மக்களுக்கும் ஒத்துப்போகும் ஒரே மாதிரியான கலாச்சாரத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

எது எப்படி இருந்தாலும் நாம் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் கடைப்பிடிக்கும் கலாச்சாரத்தில் என்ன வித்தியாசம் இருந்தாலும், அது நாட்டின் இறையாண்மையை பாதிக்கக்கூடாது.

தவிர, நமது நாடு ஒரு ஆன்மீக பூமி. இந்த நாட்டின் ஆன்மீகம் மிகவும் பழமையானது. உலகிற்கே வழிகாட்டும் சக்தி வாய்ந்தது. நமது நாட்டின் மக்கள் கடைப்பிடிக்கும் கலாச்சாரம் அதனை சீரழிக்காமல் இருக்க வேண்டும்.

"Success in life is in keeping the head above the storms of the heart" .. Swami Chinmayanantha.

வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் போது, மனதில் கொந்தளிப்பு வருவது இயற்கையே.

ஆனால், மனிதன் அதில் சிக்கிக் கொள்ளாமல், அவனது புத்தி விவேகமாக சிந்திக்க இடம் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மனம் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்தால், அது எதிர்வினை (reaction) ஆற்றும். அது பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கும்.

உணர்ச்சி வசப்படாமல் இருந்தால்தான், மனிதனால் விவேகமாக சிந்திக்க முடியும். அதன் விளைவாக (தேவைப்பட்டால்) அவனிடமிருந்து வருவது பதில்வினையாக மட்டுமே (response) இருக்கும்.

மொத்தத்தில் மனிதன் எதிர்வினை ஆற்றவில்லை என்றால், பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாக இருக்கும்.

மனிதர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்க, உணர்ச்சி வசப்பட்டாலும் எதிர்வினை ஆற்றாமல் இருக்கக் கற்றுக் கொண்டால், நாட்டின் கலாச்சாரம் மேன்மை அடைந்துவிடும்.

இதை, மதவாதிகளும், அரசியல்வாதிகளும், ஊடக நெறியாளர்களும் எப்போது புரிந்து கொள்கிறார்களோ, அப்போதுதான் நமது நாட்டில் 'தேசியம் வளரும்; தெய்வீகம் மலரும்'.

               (தொடரும்)

தேசியமும்,
தெய்வீகமும்

பதிவு 36

"Things which cannot be said, but should be said, must be said.

சொல்ல விரும்பிய, ஆனால் சொல்லத் தயங்கிய விஷயங்களை, சொல்லிவிட்டேன்.
(சின்ன சின்ன விஷயங்களை முன்னரே சொல்லிவிட்டேன்).

(Google search-ல் "piththantnv@blogspot.com" என்ற வலைத்தளத்திலும் எனது பெரும்பான்மையான பதிவுகளைப் பார்க்கலாம்)

மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு.

கண்ணாடியில் படிந்திருந்த தூசியை துடைத்தாகிவிட்டது. மேற்கொண்டு தூசி படியாமல் இருக்க இறைவன்தான் அருள் செய்ய வேண்டும்.

"சித்த விருத்தி நிரோத" கைகூடுவதும், கைகூடாமல் இருப்பதும், "அவன்" கையில்தான் உள்ளது!?
..................................
"கற்றது நன்னெறி
கனிந்திடும் நற்பயன்
மற்றது வருவதோ
மன்னவன் அருட்பயன்"

என்றும் அன்புடன்,
நன்றி; வணக்கம்.