Sunday, 6 September 2026

வானப்பிரஸ்தம்




        ஸஸவானப்பிரஸ்தம்


பெரும்பாலான மனிதர்கள் வயதான காலத்தில் மன அமைதி இல்லாமல் தவிப்பதைப் பார்க்கிறோம்.
அவர்களுக்கு ஏதேனும் பயன் அளிக்கலாம் என்ற நம்பிக்கையில், எனது வாழ்க்கையில் நான் பெற்ற சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வானப்பிரஸ்தம் என்றால் என்ன?
வானப்பிரஸ்தம் என்றால் “காட்டிற்குச் சென்று வாழ்வது” என்று பொதுவாகச் சொல்வார்கள்.
ஆனால், மாறிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில், வானப்பிரஸ்தத்திற்கு நாம் வேறுவிதமான பொருளைக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதைப் புரிந்துகொள்வதற்கு முன், நான் சந்தித்த சில அனுபவங்களைப் பார்ப்போம்.
அருகில் இருந்தும் தொலைவில்...
பணி நிமித்தமாக எனக்கு அடிக்கடி இடமாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எல்லாமே எதிர்பாராமல் இயல்பாக நடந்த மாற்றங்கள்தான்.
இதனால் என் மகனும் அடிக்கடி பள்ளிக்கூடத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, அவனைச் சொந்த ஊரில் பாட்டியுடன் தங்கவைத்து அங்கேயே படிக்க வைத்தேன். உறவினர்களும் அவனை நன்கு பார்த்துக்கொண்டார்கள்.
நான் வேலை நிமித்தமாக தூத்துக்குடிக்கு வந்துவிட்டேன். இங்கும் தொடர்ந்து தங்குவேனா என்பது தெரியாத நிலையில், மகனைச் சொந்த ஊரிலேயே படிக்கச் செய்தேன்.
ஒருநாள் என் குடும்ப நண்பர் ஒருவர் என்னிடம், “பையனைச் சொந்த ஊரில் விட்டது தவறு. அவனுக்குப் பெற்றோரிடம் பிரியம் இல்லாமல் போய்விடும்” என்று கூறினார். தன் மகனைத் தன்னுடனேயே வைத்திருப்பதைப் பற்றியும் பெருமையாகச் சொன்னார்.
நான் சிரித்துக்கொண்டே அவரிடம் சொன்னேன்:
“You think that your son is nearer to you; but he is far away from you.
You also think that my son is far away from me; but he is nearer to me.”
அதாவது,
“உங்கள் மகன் உங்கள் பக்கத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் அவன் உங்களைவிட்டு மனதளவில் தூரத்தில் இருக்கலாம்.
என் மகன் என்னைவிட்டு தூரத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் அவன் மனதளவில் என் அருகிலேயே இருக்கலாம்.”
அவர் ஏன் அப்படிச் சொன்னேன் என்று கேட்கவில்லை. இருந்தாலும், அதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.
அனுபவம் உணர்த்திய உண்மை
ஒருவரிடம் அளவுக்கு அதிகமான பாசம் அல்லது பிரியம் வைத்துவிட்டால், அவர் நம்மைவிட்டு மனதளவில் விலகிச் சென்றுவிட்டதைக்கூட நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது.
அதுவே பந்தத்தின் ஒரு வடிவம்.
காலம் மாறும்போது...
நண்பரும் நானும் பணி ஓய்வு பெற்றபின் ஒரே ஊரில் குடியேறினோம்.
ஒருமுறை அவரைப் பார்க்கச் சென்றபோது, அவர் மிகவும் வருத்தமாக இருந்தார்.
காரணம் கேட்டபோது,
“பையன் தூரத்தில் இருந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். நாங்கள் இங்கே தனிமையில் வாழ்கிறோம். உங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை; உங்கள் பையன் கூடவே இருக்கிறான்” என்றார்.
நானும் என் மகனும் ஒரே அப்பார்ட்மெண்டில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தோம்.
நான் சிரித்துக்கொண்டே,
“நீங்கள் முன்பு சொன்னதையே இப்போது மாற்றிச் சொல்கிறீர்கள்” என்றேன்.
பின்னர் சொன்னேன்:
“You think that your son is far away from you; but he is nearer to you.
You also think that my son is nearer to me; but he is far away from me.”
அதாவது,
“உங்கள் மகன் தூரத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் அவன் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறான்.
என் மகன் அருகில் இருக்கிறான் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் நான் அவனிடமிருந்து மனதளவில் விலகியே இருக்கிறேன்.”
அனுபவம் உணர்த்திய உண்மை
வயதான காலத்தில் பிள்ளைகள் நம்மைவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டால், “அவர்கள் அருகில் இல்லையே” என்று நினைத்து வேதனைப்படுகிறோம்.
ஆனால், உண்மையான தொலைவு என்பது இடத்தால் ஏற்படுவதல்ல; மனதால் ஏற்படுவது.
பணம் இருந்தும் அமைதி இல்லையே!
இரண்டொரு மாதங்களுக்குப் பிறகு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.
அவர் மிகவும் சோகமாக இருந்தார். நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லி வருத்தப்பட்டார்.
அவரிடம் நான் சொன்னேன்:
“யாரோ ஒருவர் உங்களை கத்தியால் குத்திவிட்டார் என்பதற்காக, அந்தக் கத்தியை நீங்களே வெளியே எடுத்து மீண்டும் மீண்டும் உங்களைக் குத்திக்கொள்வது சரியா? நடந்த சம்பவத்தை விட்டுவிடுங்கள்.”
அவர் அதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து,
“பணம் இருந்தால் கடைசிக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். இப்போது நிறையப் பணம் இருக்கிறது; ஆனால் மனதில் நிம்மதி இல்லை” என்றார்.
நான் அவரிடம்,
“இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நீங்கள் சரி என்று சொன்னால், நான் தினந்தோறும் வருகிறேன். இருவரும் சேர்ந்து நிம்மதிக்கான வழியைத் தேடுவோம்” என்றேன்.
அதற்கு அவர்,
“நீங்கள் இனி எப்படி நடக்க வேண்டும் என்று சொல்வீர்கள். அது சரியானதாகவே இருக்கும். ஆனால், அதைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லையே” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஓஷோ சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.
நிரம்பிய கோப்பை
ஒரு தத்துவப் பேராசிரியருக்கு வாழ்க்கையைப் பற்றிய பல சந்தேகங்கள் இருந்தன. அவற்றிற்குச் சரியான விளக்கம் யாராலும் கொடுக்க முடியவில்லை.
மலை உச்சியில் வாழும் ஒரு ஜென் துறவியால் மட்டுமே தனது சந்தேகங்களுக்கு விடை அளிக்க முடியும் என்று கேள்விப்பட்டு, மிகவும் கஷ்டப்பட்டு மலையேறி அவரைச் சந்தித்தார்.
அவர் மிகவும் களைப்பாக இருப்பதைக் கண்ட துறவி,
“முதலில் அமருங்கள். உங்களுக்கு சூடாகத் தேநீர் தருகிறேன். அதை அருந்திவிட்டு உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்” என்றார்.
பேராசிரியர் அமர்ந்தார்.
துறவி கோப்பையில் தேநீர் ஊற்றத் தொடங்கினார்.
கோப்பை பாதி நிரம்பியதும் பேராசிரியர்,
“போதும்” என்றார்.
ஆனால் துறவி தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருந்தார்.
தேநீர் கோப்பையைத் தாண்டி தட்டில் வழியத் தொடங்கியது.
பேராசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.
“போதும்! நிறுத்துங்கள்!” என்று சத்தமாகச் சொன்னார்.
துறவி சிரித்துக்கொண்டே,
“கோப்பை நிரம்பிவிட்டது என்பதை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டீர்கள். அதற்கு மேல் தேநீரை ஊற்றினால் அது வழிந்துவிடும் என்பதும் உங்களுக்குத் தெரிகிறது.
அதைப்போலத்தான் உங்கள் மனமும். உங்கள் மனதில் ஏற்கெனவே நிறையக் கேள்விகள் நிரம்பியிருக்கின்றன. நான் கூறும் விளக்கங்களை உள்வாங்குவதற்கு அதில் இடம் இருக்கிறதா?” என்றார்.
பேராசிரியர் திகைத்தார்.
“நீங்கள் சொல்வது உண்மைதான். நான் ஊருக்குச் சென்று என் மனதைக் காலியாக்கிவிட்டு பின்னர் வருகிறேன்” என்றார்.
துறவி மீண்டும் சிரித்தார்.
“மனம் முழுவதும் காலியாகிவிட்டால், சந்தேகமே வராது. பிறகு ஏன் இங்கு வர வேண்டும்?” என்றார்.
அனுபவம் உணர்த்திய உண்மை
நாம் எங்கெங்கோ ஓடுகிறோம். எதை எதையோ தேடுகிறோம். விரும்பியவற்றை அடையவும் செய்கிறோம்.
ஆனால், ஒரு முக்கியமான உண்மையை மட்டும் மறந்துவிடுகிறோம்:
“Money will not bring you peace; peace depends upon the mind.”
பணம் மட்டும் மன அமைதியைத் தராது. மன அமைதியின் ஆதாரம் மனம்தான்.
வானப்பிரஸ்தத்தின் நோக்கம்
இப்போது வானப்பிரஸ்தத்திற்கு வருவோம்.
பண்டைய காலத்தில் வானப்பிரஸ்தம் மேற்கொள்ள விரும்பியவர்கள், தாங்கள் பேணிக்காத்து வந்த பொறுப்புகளைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குச் செல்வார்கள்.
இன்று பிள்ளைகளே வேலை நிமித்தமாகப் பெற்றோரை விட்டுவிட்டு வெளி ஊர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்றுவிடுகிறார்கள்.
ஆக, பெற்றோர்களும் பிள்ளைகளும் அன்றும் பிரிந்தார்கள்; இன்றும் பிரிகிறார்கள்.
ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.
அன்று பெற்றோர்கள் தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள்.
இன்று பெற்றோர்களின் மீது தனிமை திணிக்கப்படுகிறது.
அன்று அவர்கள் தனிமையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன?
பந்தங்களிலிருந்து விடுபடுவதற்காக.
வயதான காலத்தில் மனிதனுக்குத் தேவையானது மன அமைதிதான் என்பதையும், மனம் அமைதியாக இருந்தால்தான் இறையருளை உணர முடியும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
நம்மில் பலரும் இன்று தனிமையில் இருக்கிறோம்.
ஆனால், அது நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட தனிமை அல்ல. எந்த நோக்கத்திற்காக அந்தத் தனிமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் நமக்குத் தெரியவில்லை.
அதனால்தான் தனிமை நமக்கு வேதனையாகிறது.
பந்தம் என்றால் என்ன?
காட்டிற்குச் சென்றால்தான் பந்தங்களிலிருந்து விடுபட முடியுமா?
இல்லை.
முதலில் “பந்தம்” என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் பத்து ஆண்டுகளாக ஒரு வாடகை வீட்டில் வசித்தாலும், அதை “என்னுடைய வீடு” என்று சொல்வதில்லை. “நான் குடியிருக்கும் வீடு” என்றுதான் சொல்கிறோம்.
ஆனால் சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட்டால், அதில் நாம் குடியிருக்காவிட்டாலும், “என்னுடைய வீடு” என்கிறோம்.
ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சுவது உறவின் அடையாளம்.
அதே குழந்தையை அந்த வீட்டில் வேலை செய்யும் ஒருவரும் கொஞ்சலாம். அது உறவு இல்லாத உறவு.
தாய்க்கு அந்தக் குழந்தையிடம் இருக்கும் பற்று காரணமாக, அந்த உறவு பந்தமாக மாறுகிறது.
பந்தம் என்றால் கட்டு, தளை.
ஒரு உயிரையோ, பொருளையோ “என்னுடையது” என்று மனதளவில் பற்றிக்கொள்ளும்போது அது பந்தமாகிறது.
இந்த “என்னுடைய” என்ற உணர்வுக்குக் காரணம் “நான்” என்ற அஹங்காரம்.
“நான்” மற்றும் “என்னுடைய”
மன அமைதிக்கு இடையூறாக இருப்பவை பெரும்பாலும் இந்த இரண்டு காரணிகள்தான்:
“நான்” — அஹங்காரம்.
“என்னுடைய” — பற்று.
“நான்” என்ற உணர்விலிருந்து “என்னுடையது” என்ற உணர்வு உருவாகிறது.
சொந்தப் பொருட்கள், உறவுகள், பதவி, புகழ் என அனைத்திலும் “என்னுடைய” என்ற உணர்வு அதிகரிக்க அதிகரிக்க, பந்தமும் அதிகரிக்கிறது.
அதனால்தான் சான்றோர்கள் கூறுகிறார்கள்:
“Possession of things is not the problem; possessor-feeling is the problem.”
பொருட்களை வைத்திருப்பது பிரச்சினையல்ல; “நான் இதன் உரிமையாளர்” என்ற மனப்பான்மையே பிரச்சினை.
வள்ளுவரும்,
“யான்எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.”
என்று கூறுகிறார்.
அப்படியானால், “என்னுடைய” என்ற உணர்வை எப்படி அகற்றுவது?
பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைப்பது
அந்தக் காலத்தில் வயதானவர்கள் பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு காட்டிற்குச் சென்றதன் ஆழமான நோக்கம் இதுதான்.
“என்னுடைய” என்ற எண்ணம் மனத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகல வேண்டும்.
அதன்பின் “நான்” என்ற அஹங்காரத்தையும் நலிவடையச் செய்ய முடியும்.
குடும்பத்தோடு இருந்துகொண்டே இதைச் செய்வது கடினம். அதனால்தான் அவர்கள் குடும்பச் சூழலிலிருந்து விலகி வாழ்ந்தார்கள்.
ஆனால், புதிய இடத்திற்குச் சென்ற பின்னரும் புதிய பந்தங்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு அழகான எடுத்துக்காட்டு பத்திரகிரியார் வாழ்க்கை.
பத்திரகிரியார் கற்றுக்கொடுத்த பாடம்
பட்டினத்தாரிடம் தீட்சை பெற்ற பத்திரகிரியார், குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூரில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
தினமும் பிச்சை எடுத்து, முதலில் குருவுக்குச் சமர்ப்பித்துவிட்டு பின்னரே உண்பார்.
ஒருநாள் பசியால் வாடிய ஒரு நாய் அவரிடம் வந்தது. அதன் பசியைக் கண்ட அவர், தன்னிடம் இருந்த உணவில் சிறிதளவை அதற்குக் கொடுத்தார்.
அன்றுமுதல் அந்த நாய் அவருடனேயே தங்கிவிட்டது.
ஒருநாள் பட்டினத்தாரிடம் இறைவன் ஏழை வடிவில் வந்து பிச்சை கேட்டார்.
பட்டினத்தார்,
“மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே செல்” என்று கூறினார்.
இறைவன் பத்திரகிரியாரிடம் சென்று,
“கிழக்கு கோபுர வாசலில் இருந்த ஒருவர், மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை இங்கே அனுப்பினார்” என்றார்.
பத்திரகிரியார் அதிர்ச்சியடைந்தார்.
“ஐயோ! இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும், நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே!” என்று வருந்தினார்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்:
வானப்பிரஸ்தம் என்பது பழைய பந்தங்களிலிருந்து மட்டும் விடுபடுவது அல்ல; புதிய பந்தங்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்வதும் ஆகும்.
பிள்ளைகள் வளர்ந்த பின்...
நான் ஒருமுறை ஒரு குடும்ப விழாவில் ஒருவரைச் சந்தித்தேன்.
அவருக்கு சுமார் அறுபத்தைந்து வயது இருக்கும்.
அவர் குடும்பத்தில் தனக்கு ஏற்படும் சில சங்கடங்களைப் பற்றி கூறி, அதிலிருந்து மீள்வதற்கான வழியைக் கேட்டார்.
நான் அவரிடம் இரண்டு வாக்கியங்களைக் கூறினேன்:
“Without ego one cannot grow.”
அவர், “சரிதான்” என்றார்.
பின்னர்,
“With ego one cannot glow.”
என்றேன்.
அதற்கும் அவர், “சரிதான்” என்றார்.
“அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது; அஹங்காரம் இருந்தால் அகமலர்ச்சி அடைய முடியாது என்றால், நாம் எப்போது அஹங்காரத்தை விட வேண்டும்?” என்று கேட்டேன்.
“அதுதான் புரியவில்லை” என்றார்.
அவருக்கு ஒரு சிறிய உதாரணம் சொன்னேன்.
ஒரு வீட்டின் தளம் கட்டப்படும்போது, அதைத் தாங்குவதற்காகப் பலகைகளையும் கம்புகளையும் பயன்படுத்துகிறோம். தளம் நன்றாக உறுதியானதும் அந்தப் பலகைகளையும் கம்புகளையும் அகற்றிவிடுகிறோம்.
அதைப்போலத்தான் பிள்ளைகளும்.
அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும்போது நம்முடைய பாதுகாப்பு அவர்களுக்குத் தேவை.
ஆனால் அவர்கள் வளர்ந்து தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலைக்கு வந்த பிறகும், நாம் அவர்களை சிறு குழந்தைகளாகவே பார்த்துக்கொண்டிருந்தால், நமது பாதுகாப்பே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகிவிடும்.
அவர்களின் வாழ்க்கையில் நாம் தலையிடாமல் விலகி இருந்தாலே பல சங்கடங்கள் குறைந்துவிடும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் ஒரு அழகான உவமை நினைவுக்கு வருகிறது.
விதை முளைத்து செடியாக இருக்கும்போது, ஆடு மாடுகள் அதைத் தின்னாமல் இருக்க வேலி அமைக்க வேண்டும். ஆனால் அந்தச் செடி மரமாக வளர்ந்த பிறகு அந்த வேலியை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் அந்த வேலியே மரத்தின் வளர்ச்சிக்குத் தடையாகிவிடும்.
நாம் பிள்ளைகளிடம் வைத்திருக்கும் அளவுக்கு மீறிய பாசமும் இப்படிப்பட்ட வேலிதானோ?
“நான் யார்?”
“நான்” என்ற அஹங்காரத்தை அகற்றுவது எல்லோராலும் எளிதாகச் செய்யக்கூடிய காரியமல்ல.
ஆனால், “என்னுடைய” என்ற பற்றிலிருந்து விடுபட முயற்சி செய்யலாம்.
அதில் வெற்றி பெறும்போது “நான்” என்ற தன்முனைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடையும்.
இதற்கான முதல் படி அகத்தாய்வு.
இரமண மகரிஷியின் எளிய வழி:
“நான் யார்?”
என்று உனக்குள்ளேயே கேட்டு ஆராய்ந்து பார்.
அதைத் தர்க்க ரீதியாகவும் ஆராயலாம்.
I have a pen.
இங்கே “pen” என்பது object.
The pen has a cover.
இங்கே “pen” என்பது subject.
ஒரு பொருள் ஒரு சமயத்தில் subject ஆகவும் object ஆகவும் வரலாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டாக இருக்க முடியாது.
இப்போது,
I have a body.
என்றால், body என்பது object.
அப்படியானால் “I” என்பது எது?
Think!
“நான்” மற்றும் “உடல்” இரண்டும் ஒன்றல்ல என்ற புரிதலே அகத்தாய்வின் தொடக்கமாக இருக்கலாம்.
நான்கு வழிகள்
“என்னுடைய” என்ற பற்றிலிருந்து விடுபடுவதற்கு பல வழிகள் உள்ளன.
தர்க்க ரீதியாக உண்மையை ஆராய்வது ஞான மார்க்கம்.
பிறரது நலனுக்காகப் பலனை எதிர்பாராமல் செயல்படுவது கர்ம மார்க்கம்.
கடவுளிடம் முழுமையாகச் சரணடைவது பக்தி மார்க்கம்.
மனத்தை ஒருமுகப்படுத்தி அக அமைதியை வளர்ப்பது தியான மார்க்கம்.
எந்த வழியைப் பின்பற்றினாலும், இறுதியில் கிடைப்பது ஞானம்தான்.
Everything ends in wisdom.
பக்தி மார்க்கத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தும், பலரால் பற்றிலிருந்து விடுபட முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
ரிஷி பதஞ்சலி கூறும் “ஈஷ்வர ப்ரணிதானம்” — இறைவனிடம் சரணடைதல் — இங்கே முக்கியமாகிறது.
நாம் கடவுளிடம் பலவற்றைக் கேட்கிறோம்.
ஆனால் உண்மையான சரணாகதி என்பது, அவர் எதைத் தந்தாலும் அதை அவரிடமிருந்து வரும் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வேண்டுவதாகும்.
எளிய வானப்பிரஸ்தம்
இந்த மார்க்கங்களில் முழுமையாகப் பயணிப்பது எல்லோராலும் முடியாது.
அவர்களுக்குக் கூட ஒரு எளிய வழி இருக்கிறது.
முதலில் “un-active” ஆக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதாவது, தன்முனைப்பின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
குடும்பத்தோடு இருந்தாலும், குடும்பச் சூழலில் இருந்து மனதளவில் விலகியிருக்க வேண்டும்.
Be in the family; be far away from the family.
தேவைப்பட்டால் மட்டுமே குடும்ப விவகாரங்களில் தலையிட வேண்டும்.
மன அமைதியை வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மனதை வேடிக்கை பார்ப்பது
சிறு வயதில் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு தேரோட்டத்தைப் பார்த்திருப்போம்.
தேர் ஓடும்போது அதன் பின்னால் ஓடினோம்.
வாலிப வயதில் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தோம்.
வயதானபின் நம்மால் ஓடவும் முடியாது; வடம் பிடித்து இழுக்கவும் முடியாது.
எனவே, வெறுமனே தேர் ஓடுவதை வேடிக்கை பார்க்கிறோம்.
அதைப்போல, வயதான காலத்தில் நமது மனதிற்குள் ஓடும் “தேரையும்” வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களுடன் இருக்கும்போது, நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வெறுமனே கவனியுங்கள்.
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உடனடியாக கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.
நடந்ததை மனதிற்குள் மீண்டும் மீண்டும் அசைபோட வேண்டாம்.
தனிமையில் இருக்கும்போது, ஆழ்மனத்திலிருந்து ஏதேனும் நினைவு வந்தால், அதை விமர்சிக்காமல் ஒரு பார்வையாளனாக கவனியுங்கள்.
அந்த நினைவு மறைந்ததும் அடுத்த நினைவு வரலாம்.
எதனுடனும் பயணம் செய்யாமல், அவற்றை வெறுமனே கவனித்துக்கொண்டிருங்கள்.
நாளடைவில் நினைவுகளின் தாக்கம் குறையத் தொடங்கும்.
மறக்க முடியாத சில நினைவுகள் மனதில் தொடர்ந்து இருக்கலாம். அவற்றை அழிக்க முயற்சி செய்வதற்குப் பதிலாக, அவை நம்மைத் தொந்தரவு செய்யாத நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தேவைப்படும் போது நாம்தான் நினைவுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும்; நினைவுகள் நம்மைப் புரட்டிப் பார்க்க அனுமதிக்கக் கூடாது.
ஒருமுகக் கவனம்
இதற்குப் பிறகு சிறிது நேரம் ஒருமுகக் கவனப் பயிற்சிக்கும் ஒதுக்கலாம்.
தீபம், இஷ்ட தெய்வத்தின் படம் அல்லது நமக்குப் பிடித்த வேறு ஏதேனும் பொருளைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதை சில நிமிடங்கள் கவனமாகப் பாருங்கள்.
பின்னர் கண்களை மூடி, மனக்கண்ணால் அதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
கவனம் சிதறினால் மீண்டும் கண்களைத் திறந்து அந்தப் பொருளைப் பாருங்கள்.
கண்களால் பார்ப்பது, கண்களை மூடி மனக்கண்ணால் பார்ப்பது என இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்தாலே போதும்.
தொடர்ந்து செய்தால், மனத்தை ஒருமுகப்படுத்தும் திறன் வளரத் தொடங்கும்.
இந்தப் பயிற்சியின் நோக்கம், மனத்தை வெறுமையாக்குவது அல்ல.
மனத்தின் மீது நமக்குள்ள அதிகாரத்தை மீண்டும் பெறுவதுதான்.
தியானம் — செய்வதில் தொடங்கி இருப்பதில் முடிகிறது
தாரணை முறையாக வளர்ந்த பிறகு தியானப் பயிற்சிக்குச் செல்லலாம்.
உண்மையில், தியானம் “செய்வதில்” ஆரம்பித்து “இருப்பதில்” முடிவடைகிறது.
முதலில் நாம் தேர்ந்தெடுத்த பொருளின் மீது கவனம் செலுத்துகிறோம்.
ஒரு கட்டத்தில், சும்மா இருக்கும்போதெல்லாம் நமது மனம் தானாகவே அந்த ஒருமுக நிலையில் நிலைக்கத் தொடங்கலாம்.
அதற்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் ஒவ்வொருவரின் உடல் நலம், மனப்பக்குவம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். எனவே அவற்றைத் தெரிந்த குருவின் மேற்பார்வையில் மேற்கொள்வது நல்லது.
பயிற்சி முழுமை அடையும் நிலையில், நாம் “நான் கர்த்தா” என்ற உணர்விலிருந்து விலகி,
“நான் வெறும் கருவி”
என்ற உணர்வுக்கு வரத் தொடங்குகிறோம்.
வானப்பிரஸ்தத்தின் உண்மையான பொருள்
ஆற்றில் மேலே நீரோட்டம் வேகமாக இருந்தாலும், அதன் அடியில் அமைதி இருக்கலாம்.
அதைப்போல, வாழ்க்கையின் மேல்மட்டத்தில் எவ்வளவு சலசலப்பு இருந்தாலும், நமது ஆழ்மனத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதுவே உண்மையான மன அமைதி.
வயதான காலத்தில் வானப்பிரஸ்தம் என்பது காட்டிற்குச் செல்வது மட்டுமல்ல.
குடும்பத்தை விட்டு விலகுவது அல்ல.
குடும்பத்தின் மீது உள்ள பந்தத்திலிருந்து விலகுவது.
பிள்ளைகளை விட்டுவிடுவது அல்ல.
அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ அனுமதிப்பது.
பொருட்களைத் துறப்பது அல்ல.
“என்னுடையது” என்ற மனப்பற்றைத் துறப்பது.
உலகத்தை விட்டு ஓடுவது அல்ல.
உலகத்தின் சலனங்கள் நம்மை ஆட்கொள்ளாத நிலையை அடைவது.
இறுதியில்,
“நான்” என்ற அஹங்காரம் நலிவடைந்து,
“என்னுடைய” என்ற பற்று குறைந்து,
“நான் கர்த்தா அல்ல; கருவி மட்டுமே”
என்ற உணர்வு வளரும்போது, வாழ்க்கையின் பாரமும் குறையத் தொடங்கும்.
அதன்பின் அங்கே “நான்” என்பதும் இல்லை; “தான்” என்பதும் இல்லை.
இருப்பது “இது” மட்டுமே.
அந்த நிலை நமது முயற்சியால் முழுமையாகக் கிடைப்பதல்ல.
அதன்பின் சொல்ல வேண்டியது ஒன்றே:
எல்லாம் அவன் செயல்.



Saturday, 5 September 2026

ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்




         க்ஷத்திரிய தர்மமும்,                 

               கம்யூனிசமும்



தலைப்பு வியப்பாக இருக்கிறது அல்லவா?

க்ஷத்திரிய தர்மம் — ஒரு மனிதனின் பொறுப்புணர்வையும் செயல்பாட்டையும் குறிக்கிறது.

கம்யூனிசம் — இங்கு நான் பயன்படுத்தும் விரிவான பொருளில், ஒரு மனிதனின் சமூக உணர்வைக் குறிக்கிறது.

உண்மையில், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று கைகோர்த்து பயணிக்க வேண்டியவை. ஆனால் நடைமுறையில் அவை எதிரும் புதிருமாகக் காட்சியளிப்பது ஒரு புரியாத புதிராகத் தோன்றுகிறது.
வாழ்க்கையே ஒரு புதிர்தானே!

“Of all the miseries, mystery is the worst misery.” இந்த வாசகத்தை எங்கோ படித்திருக்கிறேன். இதன் ஆசிரியர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கட்டுரையின் தொடக்கத்திற்கு இது பொருத்தமாக இருக்கிறது என்று தோன்றுகிறது.


            முன்னறிமுகம்

இந்த நூலில் பெரும்பாலும் தனிமனித மேம்பாடு, ஆன்மிகம், தர்மம் ஆகியவற்றைப் பற்றியே பேசப்பட்டுள்ளது. அவை சமூக வாழ்விலும் எவ்வாறு வெளிப்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நோக்கிலேயே இந்த இணைப்புக் கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை அரசியல் விமர்சனமாக அல்லாமல், சமூகப் பொறுப்பு பற்றிய ஒரு சிந்தனையாக வாசிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய 
கட்டாயம் யாருக்கும் இல்லை.

நிதானமாகப் படித்து, சிந்தித்து, ஏற்றுக்கொள்ள வேண்டியவற்றை ஏற்றுக்கொண்டு, ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை விட்டுவிடலாம்.


            சமர்ப்பணம்

க்ஷத்திரிய தர்மம் — இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பலருக்கும் பலவிதமான எண்ணங்கள் தோன்றலாம்.
எனக்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முகம்தான் நினைவுக்கு வருகிறது.

பகவத்கீதையில் க்ஷத்திரியனின் இயல்பையும் கடமையையும் விளக்கும் பல குறிப்புகள் உள்ளன.
அவற்றையெல்லாம் காமராஜர் படித்தாரா என்பது நமக்குத் தெரியாது.

அவரது அரசியல் குருவாக விளங்கிய திரு. சத்தியமூர்த்தி அவர்கள் இத்தகைய கருத்துக்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தாரா என்பதும் நமக்குத் தெரியாது.

ஆனால், கீதையில் சொல்லப்படும் பல க்ஷத்திரியப் பண்புகளை அவர் தனது வாழ்வில் நடைமுறையாக வெளிப்படுத்தியவர் என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றற்று வாழ்வது மிகவும் கடினமான ஒன்று.

ராஜபோக வாழ்க்கையிலிருந்தும் பற்றற்று வாழ்ந்து காட்டியவர் ஜனக மகாராஜா. அதனால்தான் அவர் ராஜரிஷி என்று போற்றப்பட்டார்.

காமராஜரோ, நாட்டின் மிக உயர்ந்த அரசியல் பொறுப்புகளில் இருந்தபோதும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.

இன்றும் நல்ல அரசியல்வாதியாக வாழ விரும்புகிறவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

அவரது திருவடிகளை வணங்கி, எனது கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.

                முன்னுரை

க்ஷத்திரிய தர்மம் என்பது பாரம்பரியமாக வர்ணாஸ்ரம தர்மத்தின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.

இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கலாம்.

முதல் குழு வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு முன்முடிவைக் கொண்டவர்கள். அவர்களில் சிலர் அதை ஏற்றுக்கொள்பவர்கள்; சிலர் எதிர்ப்பவர்கள். எனவே, அவர்களுடைய முன்முடிவுகளின் காரணமாக, இந்தக் கட்டுரையில் நான் சொல்லும் சில கருத்துக்கள் இரு தரப்பினருக்குமே எரிச்சலை ஏற்படுத்தலாம்.

இரண்டாவது குழு
வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றி எந்தவித முன்முடிவும் இல்லாதவர்கள். அதைப் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால் குழப்பத்தில் இருப்பவர்கள்.
இவர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு புதிய கோணத்தைத் தரலாம்.

மூன்றாவது குழு “வர்ணாஸ்ரம தர்மம்” என்றால் என்ன என்றே அறியாத இளைய தலைமுறையினர்.
அவர்களுக்கு இது ஒரு புதிய புரிதலைத் தரக்கூடும்.

எனவே அனைவரிடமும் ஒரு பணிவான வேண்டுகோள்:
எனது கருத்துக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாகத் தோன்றினால், அவற்றை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒருவகையில், அதுவும் ஒரு சமூகப் பொறுப்புதானே!
..................................................................


இது மதத்தைப் பற்றிய கட்டுரை அல்ல; ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றியதும் அல்ல.

ஒரு மனிதன் சமூகத்திற்கும் நாட்டிற்கும் எவ்வாறு பொறுப்புடன் வாழ வேண்டும் என்பதையே பேசுகிறது.

க்ஷத்திரிய தர்மம் என்பது வர்ணாஸ்ரம தர்மத்தின் ஒரு பகுதி.
இந்து மரபைப் பற்றிய விவாதங்களில் வர்ணாஸ்ரம தர்மம் முக்கியமான ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. அதைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன.

ஒரு மனிதனின் வர்ணம் பிறப்பால் மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

கீதையில் வர்ணம் குணம் மற்றும் கர்மத்தின் அடிப்படையில் விளக்கப்படுகிறது.
அதைப் புரிந்துகொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

       வர்ணமும், ஆஸ்ரமமும்

“வர்ணாஸ்ரம தர்மம்” என்பதை,
வர்ண தர்மம் + ஆஸ்ரம தர்மம்
என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம்.

க்ஷத்திரிய தர்மம் என்பது வர்ண தர்மத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆஸ்ரம தர்மத்தைப் பற்றி இந்தத் தொடரில் விரிவாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நமது நோக்கம் ஒன்றே: க்ஷத்திரிய தர்மம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வது.

           குணமும் கர்மமும்

கீதையில் கண்ணன்,
“நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டவை;
குண-கர்மத்தின் அடிப்படையில்.”
என்று கூறுகிறார்.

“கர்மம்” என்றால் பொதுவாக “செயல்” என்று பொருள் கொள்கிறோம்.
ஆனால், ஒரு செயலைப் புரிந்துகொள்ள அதன் பின்னால் இருக்கும் மனநிலையையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு சங்கிலி போல பல கூறுகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன:
கடந்த அனுபவங்களின் பதிவுகள்
குணம்
மனோபாவம்
நோக்கம்
ஆசை
சிந்தனை
செயல் — கர்மம்

எனவே, செயலை மட்டும் பார்த்து மனிதனை மதிப்பிட முடியாது; செயலை இயக்கும் குணம், நோக்கம், மனோபாவம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.

    செயலும், மனோபாவமும்

ஒரு அலுவலகத்தில் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். அதில் ஒருவர் லஞ்சம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
மற்றொருவர் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்.

இருவரும் ஒரே அலுவலகத்தில், ஒரே பதவியில், ஒரே வேலையைச் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் மனோபாவம் முற்றிலும் வேறுபட்டது.
அப்படியானால், அவர்களை வெறும் வெளிப்புறச் செயலின் அடிப்படையில் ஒரே வகையாகப் பார்க்க முடியுமா?

இதில்தான் குணம், மனோபாவம், நோக்கம், செயல் ஆகியவற்றின் தொடர்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

      சட்டம், நியாயம், தர்மம்

இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது:


ஒருமுறை நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு சுவாரசியமான கேள்வியை எழுப்பினார்:
சட்டம், நியாயம், தர்மம் — மூன்றும் ஒன்றுதானா? அல்லது வேறுபட்டவையா?


ஒரு கல்லூரி ஆசிரியர் தனியாக ஒரு பயிற்சிப் பள்ளி நடத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவர் கல்லூரியில் பணிபுரிவதால், அந்தப் பள்ளியைத் தனது மனைவியின் பெயரில் நடத்துகிறார்.

சட்டத்தின் பார்வையில், ஆவணங்கள் அவரது மனைவியின் பெயரில் இருப்பதால் அவர் நேரடியாகக் குற்றவாளி என்று நிரூபிக்க முடியாமல் இருக்கலாம்.

ஆனால், உண்மையில் அந்த நிறுவனத்தை அவர்தான் நடத்துகிறார் என்றால், நியாயத்தின் பார்வையில் வேறு கேள்விகள் எழுகின்றன.

அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் வருமானம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்காக அவர் செலவிட்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது தர்மத்தின் பார்வையில் நாம் வேறு ஒரு கோணத்தையும் பார்க்கிறோம்.

இந்த உதாரணம் ஒரு விஷயத்தை நமக்குக் காட்டுகிறது:
சட்டம் என்பது வெளிப்புற ஒழுங்கை நிர்ணயிக்கிறது.
நியாயம் என்பது நேர்மை மற்றும் உரிமையைப் பார்க்கிறது.
தர்மம் என்பது கடமை, அறம், பொதுநலம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பரந்த பார்வை.

ஆனால் இவை ஒன்றுக்கொன்று முற்றிலும் பிரிந்தவை என்றும் கூற முடியாது.

ஒரு நல்ல சமுதாயத்தில் சட்டமும் நியாயமும் தர்மமும் இயன்றவரை ஒன்றையொன்று ஆதரிக்க வேண்டும்.

க்ஷத்திரிய தர்மம் — யாருக்காக?

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு.
மன்னர் அல்லது சர்வாதிகாரி ஆட்சி செய்யும் நாட்டில், ஆட்சியாளர் மக்களைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தினால், ஒரு கட்டத்தில் புரட்சி ஏற்படலாம்.

ஜனநாயகத்தில் நமக்கு வேறு ஒரு வழி இருக்கிறது. ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடம் உள்ளது.

ஆனால் ஒரு கேள்வி: 
நாம் சரியான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறோமா?
தவறான மனிதர்கள் ஆட்சிக்கு வருவதற்கு காரணம் என்ன?

என் பார்வையில், அதற்கான காரணங்களில் ஒன்று:
க்ஷத்திரிய தர்மம் என்றால் என்ன என்பதைப் பற்றிய தெளிவின்மை.

மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிவிட்டோம்.
ஆனால், ஆட்சியில் அமரப்போகிறவர் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் நாம் போதுமான கவனம் செலுத்தியிருக்கிறோமா?

வளங்கள் இருந்தும் முன்னேற்றம் ஏன் இல்லை?

நமது நாட்டில் இயற்கை வளங்கள் உள்ளன.
நீர்வளம் உள்ளது.
வேளாண்மைக்கான பரந்த வாய்ப்புகள் உள்ளன.
அறிவாற்றல் மிக்க இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர்.

இருந்தும், நமது நாட்டின் முழுத் திறன் இன்னும் வெளிப்படவில்லை.
இதற்கு ஒரே காரணம் என்று கூறுவது மிக எளிமையான முடிவாகிவிடும்.

ஆனால், நல்ல நிர்வாகம், நேர்மை, நீண்டகாலத் திட்டமிடல், சட்டத்தின் ஆட்சி, சமூக ஒற்றுமை, பொறுப்புணர்வுள்ள அரசியல் ஆகியவை ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன.

இதில்தான் க்ஷத்திரிய தர்மத்தின் முக்கியத்துவம் தெரிகிறது.

இஸ்ரேல் — ஒரு சிந்தனைக்கான உதாரணம்

இஸ்ரேல் ஒரு சிறிய நாடு.
அதன் வரலாறும் புவியியல் சூழலும் பல்வேறு சவால்களால் நிரம்பியவை.
இருந்தும், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்மை போன்ற பல துறைகளில் அது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இதற்கான காரணங்களை ஒரே ஒரு “க்ஷத்திரிய தர்மம்” என்ற கருத்துக்குள் அடக்கிவிட முடியாது.
ஆனால், பாதுகாப்பு உணர்வு, ஒற்றுமை, பொறுப்பு, கடின உழைப்பு, நாட்டின் நலனுக்காகத் தனிநபர் பங்களிப்பு போன்ற பண்புகள் எந்த நாட்டுக்கும் வலிமையைத் தரும்.

இதுவே நான் “க்ஷத்திரிய தர்மம்” என்று அழைக்கும் மனப்பாங்குடன் ஒத்துப்போகிறது.

கோட்பாடு மாறாது;
விதிமுறைகள் மாறலாம்

க்ஷத்திரிய தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான சட்டப் புத்தகம் அல்ல.

அது ஒரு வாழ்வியல் கோட்பாடு.
அதன் அடிப்படைப் பண்புகள் காலத்தைக் கடந்து செல்லலாம்.

ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும் விதிமுறைகள் காலத்திற்கேற்ப மாற வேண்டும்.

ஒரு காலத்தில் அரசியல் சூழ்நிலையில் எழுந்த கோஷங்கள், பின்னர் காலம் மாறியதும் பொருளற்றதாகிவிடலாம்.

பழைய கோஷங்களைப் பிடித்துக்கொண்டு இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

காலம் மாறும்போது, தர்மத்தின் அடிப்படை நோக்கம் மாற வேண்டியதில்லை; ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் முறை மாற வேண்டும்.

வர்ணத்தைத் தொழிலோடு மட்டும் இணைக்க முடியுமா?

ஒரு காலத்தில்,
வேதம் ஓதுபவன் — பிராமணன்
போர் புரிபவன் — க்ஷத்திரியன்
வாணிபம் செய்பவன் — வைஸ்யன்
என்று எளிமையாக விளக்கப்பட்டது.

அப்படியானால் இன்றைய மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் போன்றவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது?

அதேபோல், தெருவில் சண்டை போடுகிற அனைவரையும் க்ஷத்திரியர்கள் என்று சொல்ல முடியுமா?

நிச்சயமாக முடியாது. எனவே, வர்ணத்தை வெறும் தொழிலுடன் இணைத்து புரிந்துகொள்வது போதுமானதல்ல.

திருவள்ளுவர்,
“அந்தணர் என்போர் அறவோர்...”
என்று கூறுகிறார்.
இதனைப் பிறப்புச் சார்ந்த அடையாளமாக மட்டும் வாசிக்காமல், அறவழியில் வாழ்பவரின் பண்புச் சார்ந்த அடையாளமாகவும் வாசிக்கலாம்.

அதேபோல், க்ஷத்திரியன் என்பவன் வெறுமனே போர் புரிபவன் அல்ல.
நியாயத்திற்காக நிற்பவன், பொறுப்பை ஏற்றுக்கொள்பவன், பொதுநலனுக்காகச் செயல்படுபவன் என்ற பரந்த பொருளில் க்ஷத்திரிய தர்மத்தைப் புரிந்துகொள்ளலாம்.

    இன்றைய க்ஷத்திரியன்

இன்றைய சூழலில், குறிப்பாக அரசியல் தளத்தில் செயல்படும் ஒருவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

சில அடிப்படை விதிகளைப் பார்க்கலாம்:
நியாயத்திற்காகப் போராட வேண்டும்.
தனிப்பட்ட பலனை மட்டுமே நோக்கமாகக் கொள்ளக் கூடாது.
பொதுநலனுக்காகத் தனிப்பட்ட சிரமங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
நாட்டின் இறையாண்மைக்கும் அரசியலமைப்புக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
தேசத்தின் பாதுகாப்பில் அக்கறை கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும்.
நாட்டின் பண்பாடு, கலை, மொழி, மரபு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றை காலத்திற்கேற்ப மேம்படுத்த வேண்டும்.
அதிகாரத்தை தனிப்பட்ட சொத்தாகக் கருதாமல், பொதுமக்கள் ஒப்படைத்த பொறுப்பாகக் கருத வேண்டும்.

க்ஷத்திரிய தர்மமும் கம்யூனிசமும்

இங்கே ஒரு கேள்வி எழுகிறது.
“நியாயத்திற்காகப் போராட வேண்டும்” என்றால், கம்யூனிசமும் அதைத்தானே வலியுறுத்துகிறது?
அப்படியானால் கம்யூனிசமும் க்ஷத்திரிய தர்மமும் ஒன்றுதானா?
இல்லை.

ஆனால், அவற்றுக்கிடையே ஒரு முக்கியமான ஒற்றுமையை நான் பார்க்கிறேன்.
க்ஷத்திரிய தர்மம் — தனிமனிதனின் பொறுப்புணர்வை வலியுறுத்துகிறது.
கம்யூனிசம் — சமூக சமத்துவம் மற்றும் பொதுவுடைமை போன்ற சமூக-பொருளாதாரக் கருத்துகளை வலியுறுத்தும் ஒரு தத்துவ/அரசியல் மரபு.

ஆனால் இங்கே நான் “கம்யூனிச உணர்வு” என்ற சொல்லை இன்னும் விரிவான பொருளில் பயன்படுத்துகிறேன்:
“சமூகத்திடமிருந்து நான் பெறுவதைவிட, சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும்” என்ற மனப்பான்மை.
இந்த உணர்வு இருந்தால், ஒருவன் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவன் சமூகத்திற்கு பயனுள்ளவனாக இருக்க முடியும்.

தனிமனித மாற்றமா? 
சமூக மாற்றமா?

வர்ணாஸ்ரம தர்மத்தின் பார்வையில், மனிதன் தன் இயல்பிற்கேற்ப தன் கடமையைச் சரியாகச் செய்தால் சமூக அமைப்பும் நன்றாக இயங்கும்.

சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் அரசியல் தத்துவங்கள், சமூக அமைப்பை மாற்றுவதன் மூலம் மனித வாழ்க்கையையும் மாற்ற முயல்கின்றன.

இரண்டிலும் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது:
முதலில் மாற வேண்டியது மனிதனா?
அல்லது சமூக அமைப்பா?
என் பார்வையில் இரண்டும் தேவை.
மனிதன் மாறாமல் அமைப்பை மட்டும் மாற்றினால், பழைய பிரச்சினைகள் புதிய வடிவத்தில் திரும்பி வரலாம்.

அமைப்பு மாறாமல் மனிதனிடம் மட்டும் மாற்றத்தை எதிர்பார்த்தாலும், அவனுடைய முயற்சிக்கு எல்லைகள் இருக்கும்.

எனவே, தனிமனித மாற்றமும் சமூக மாற்றமும் ஒன்றுக்கொன்று துணையாக இருக்க வேண்டும்.

நான்கு தன்மைகள் — ஒரு சுவாரசியமான ஆய்வு

சில ஆண்டுகளுக்கு முன்பு Nature Human Behaviour இதழில் வெளியான ஒரு ஆய்வு, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோரைக் கொண்ட நான்கு பெரிய தரவுத் தொகுப்புகளை ஆய்வு செய்து, குறைந்தது நான்கு குறிப்பிடத்தக்க personality clusters இருப்பதாகக் கூறியது. 

அவை Average, Reserved, Self-centred, Role model எனப் பெயரிடப்பட்டன.
ஆனால் இதை நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
இது “உலகில் மனிதர்கள் நான்கு வகை மட்டுமே” என்று நிரூபித்த ஆய்வு அல்ல. பின்னர் வெளியான ஒரு ஆய்வு, அந்த நான்கு வகைகளில் பெரும்பாலான மனிதர்கள் தெளிவாகப் பொருந்தவில்லை என்றும், இந்த வகைப்பாடு முழுமையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டியது.

எனவே, இந்த ஆய்வை வர்ணாஸ்ரம தர்மத்திற்கான அறிவியல் நிரூபணம் என்று நான் கூறவில்லை.
அதற்குப் பதிலாக, மனிதர்களின் இயல்புகளில் காணப்படும் வேறுபாடுகளைப் பற்றி சிந்திக்க உதவும் ஒரு நவீன உதாரணமாக மட்டுமே எடுத்துக்கொள்கிறேன்.

பிராமணன், க்ஷத்திரியன், வைஸ்யன், சூத்திரன் — ஒரு மனப்பாங்குப் பார்வை
இந்த நான்கு வர்ணங்களையும் பிறப்போடு இணைக்காமல், மனிதனின் இயல்பு, திறன், பொறுப்பு, செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் ஒரு தத்துவ மாதிரியாகப் பார்க்கலாம்.

ஆனால் நவீன personality ஆய்வுகளின் நான்கு clusters-ஐ இந்த நான்கு வர்ணங்களோடு நேரடியாக ஒன்றுக்கு ஒன்று சமமாக்குவது சரியாகாது.

என் பார்வையில், ஒரு ஒப்பீடு செய்ய வேண்டுமானால் அது இவ்வாறு இருக்கலாம்:

பிராமண இயல்பு:
அறிவை நாடுபவர்.
ஆழ்ந்து சிந்திப்பவர்.
பிறருக்கு நல்வழி காட்டுபவர்.
அதிகாரத்தையும் செல்வத்தையும் விட ஞானத்திற்கும் அமைதிக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்.

க்ஷத்திரிய இயல்பு:
செயலில் இறங்குபவர்.
அநீதியைக் கண்டு அமைதியாக இருக்க முடியாதவர்.
பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்.
பொதுநலனுக்காகத் தன்னை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்.

வைஸ்ய இயல்பு:
பொருளாதார நடவடிக்கைகளில் திறமை கொண்டவர்.
உற்பத்தி, வாணிபம், வள உருவாக்கம் போன்றவற்றில் ஈடுபடுபவர்.
இவரிடமும் பொதுநல உணர்வு இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.
செல்வம் உருவாக்குவது குற்றமல்ல; செல்வத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதே முக்கியம்.

சூத்திர இயல்பு:
குறிப்பிட்ட பணிகளைச் செயல்படுத்தும் திறன் கொண்டவர்.
சமூகத்தின் பல முக்கியப் பணிகளும் இவர்களின் உழைப்பின் மூலம் நடைபெறுகின்றன.

எனவே “சூத்திரன் = தாழ்ந்தவன்” என்ற புரிதல் முற்றிலும் தவறானது.
ஒரு சமுதாயத்தின் எந்தப் பணியும் மற்றொரு பணியை விட மனித மதிப்பில் உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்று கருதக்கூடாது.

க்ஷத்திரிய தர்மத்தைப் பின்பற்றுபவர்கள்

க்ஷத்திரிய தர்மத்தைப் பின்பற்றும் மனிதர்களை மூன்று வகையாகப் பார்க்கலாம்:
தனியாகச் செயல்படுபவர்கள்.
குழுவாகச் செயல்படுபவர்கள்.
அரசியலில் இறங்கி செயல்படுபவர்கள்.

தனியாகப் பொதுச்சேவையில் இறங்கும் ஒருவன் பலவிதமான அதிர்ச்சிகளைச் சந்திக்க நேரிடும்.
அவற்றைக் கண்டு துவண்டு விடக்கூடாது.
சில நேரங்களில் வெளி உலகம் நமக்குக் கொடுக்கும் எதிர்ப்புகளே நம்மை அகத்தாய்வு நோக்கித் தள்ளுகின்றன.
“நான் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறேன்?”
“என்னுடைய எதிர்பார்ப்பு என்ன?”
“நான் உண்மையிலேயே பொதுநலனுக்காகத்தானா செயல்படுகிறேன்?”
என்று நம்மையே கேட்டுக்கொள்ளத் தொடங்கினால், பொதுச்சேவை நம்முடைய தன்மை வளர்ச்சிக்கும் ஒரு வாய்ப்பாக மாறிவிடுகிறது.

அரசியல்வாதியைத் தேர்ந்தெடுப்பது யார்?

ஒருவன் தன்னை அரசியல்வாதியாக முன்னிறுத்தும்போது, அவன் க்ஷத்திரிய தர்மத்தைப் பின்பற்றுகிறானா என்பதை ஆராய வேண்டியது மக்களின் பொறுப்பு.

அவன் பொதுநலனுக்காகச் செயல்படுகிறானா?
அதிகாரத்தைத் தனிப்பட்ட பலனுக்காகப் பயன்படுத்துகிறானா?
சட்டத்தை மதிக்கிறானா?
எதிர்க்கட்சியினரையும் மனிதர்களாக மதிக்கிறானா?
தன் தவறை ஒப்புக்கொள்ளத் தயாரா?
பொது நிதியைப் பாதுகாக்கிறானா?
எதிர்காலத் தலைமுறையை நினைத்துச் செயல்படுகிறானா?
இத்தகைய கேள்விகள்தான் ஒரு அரசியல்வாதியின் தரத்தை அளவிட வேண்டும்.

ஒருவன் தகுதியற்றவன் என்று தெளிவாகத் தெரிந்தால், அவனைத் தேர்தல் மூலம் அரசியல் பொறுப்பிலிருந்து விலக்குவது மக்களின் ஜனநாயக உரிமையும் பொறுப்பும் ஆகும்.

அது நமது சந்ததியினருக்குச் செய்யும் ஒரு நன்மையாகும்.

கம்யூனிச உணர்வு என்றால் என்ன?

எல்லா மனிதர்களாலும் க்ஷத்திரிய தர்மத்தை ஒரே அளவில் கடைப்பிடிக்க முடியாது.
ஆனால், ஒவ்வொருவரிடமும் ஒரு அளவாவது சமூகப் பொறுப்பு உணர்வு இருக்க வேண்டும்.
அதைத்தான் நான் இங்கே “கம்யூனிச உணர்வு” என்று அழைக்கிறேன்.

எனக்குப் பிடித்த எளிய வரையறை:
“சமூகத்திலிருந்து நான் பெறுவதைவிட, சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும்.”
(One’s return to society should be more than what one receives from it.)
இந்த உணர்வு ஒவ்வொரு மனிதனிடமும் விதையாக இருக்கிறது. அது வளர வேண்டும்.

ஒரு சிறிய அனுபவம்

பல வருடங்களுக்கு முன்பு “அறிவொளி இயக்கம்” போன்ற ஒரு முயற்சியில் நான் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன்.

நாங்கள் வசித்த இடத்திற்கு அருகில் இருந்த குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுப்பதே அதன் நோக்கம்.

முதல் நாள் நிறைய பேர் வந்தார்கள்.
அடுத்த நாள் பெண்கள் மட்டும் வகுப்பறையில் இருக்க, சில ஆண்கள் வெளியில் இருந்து கேலி செய்தார்கள்.

அதன் விளைவாக அடுத்த நாளே பெண்களின் வருகையும் குறைந்துவிட்டது.

சரியான திட்டமிடல் இல்லாததால் அந்த முயற்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

என்னுடன் இன்னொரு இளைஞரும் பாடம் கற்பிக்க வந்திருந்தார்.
அவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்.

ஒருநாள் அவரிடம் நான் கேட்டேன்:
“நான் துறைமுகத்தில் வேலை பார்க்கிறேன். இதை ஒரு சேவையாக நினைத்து இங்கே வருகிறேன். நீங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியிருக்க, ஏன் இங்கே வருகிறீர்கள்?”

அவர் மிகவும் நேர்மையாகச் சொன்னார்:
“இங்கே பாடம் எடுத்ததற்காக ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள். நான் வேலைக்கான நேர்காணலுக்குச் செல்லும்போது அந்தச் சான்றிதழ் எனக்கு உதவுமே!”

நாங்கள் இருவரும் ஒரே வேலையைத்தான் செய்தோம்.
ஆனால் எங்கள் நோக்கம் வேறுபட்டிருந்தது.

இதில்தான் செயலும் நோக்கமும் வேறுபடுகின்றன.
செயல் ஒன்றாக இருந்தாலும், அதன் பின்னால் இருக்கும் நோக்கம் மனிதனின் குணத்தை வெளிப்படுத்துகிறது.

கந்து வட்டியிலிருந்து ஒரு பாடம்

எனக்குத் தெரிந்த சிலர் கந்து வட்டியில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று ஒரு சிறிய நிதி நிறுவனத்தைத் தொடங்கினேன்.
நண்பர்கள் என்னை நம்பிப் பணம் கொடுத்தார்கள்.

குறைந்து வரும் நிலுவைத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும் முறையில் பணத்தை வழங்கினேன்.
நிறுவனம் நான் நினைத்ததைவிட நன்றாகவே நடந்தது.

அப்போது நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம்.
எனக்கு நன்கு தெரிந்த ஒரு கூலித் தொழிலாளி, ₹1,000 கடன் வாங்கி, வாரந்தோறும் ₹100 வட்டி செலுத்தி வந்தார்.

எனது திட்டத்தை அவரிடம் விளக்கினேன். அவருக்கு நான் சொன்னது முழுமையாகப் புரியவில்லை.
“நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும்” என்று மட்டும் கூறினார்.

அவரிடம் ₹1,000 கொடுத்து,
“நீங்கள் பழைய கடனை அடைத்துவிடுங்கள். வழக்கம்போல எனக்கு வாரந்தோறும் ₹100
திருப்பிக் கொடுங்கள். உங்கள் கடனும் விரைவில் அடைந்துவிடும்”
என்று சொன்னேன்.

முதல் மாதம் ₹300 கட்டினார்.
இரண்டாவது மாதம் ₹500 கட்டினார்.
மூன்றாவது மாதத்தில் கடன் முழுவதும் அடைந்துவிட்டது.
அவர் செலுத்திய மொத்த வட்டியும் மிகக் குறைவாக இருந்தது.

ஆனால், கடைசி நிலுவைத் தொகையை நான் கேட்டுத்தான் வாங்க வேண்டியிருந்தது.
அதற்காக அவரைக் கடிந்து கொண்டேன்.

அவர் என்னைப் பார்த்து,
“ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசம், சார்!” என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஏன்?” என்று கேட்டேன்.
அவர் சொன்னார்:
“எனக்குக் கடன் கொடுத்த கந்து வட்டிக்காரர் ரொம்ப நல்லவர். வட்டி மட்டும்தான் வாங்குவார்; அசலைத் திருப்பிக் கேட்கவே மாட்டார். நீங்கள் அசலையும் திரும்ப வாங்கிக்கொண்டீர்களே!”

அவரது பதிலைக் கேட்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அந்தச் சம்பவம் எனக்கு ஒரு விஷயத்தை உணர்த்தியது:
ஒரு மனிதனுக்கு உதவுவது மட்டும் போதாது; அவனுக்கு பொருளாதார அறிவையும் கொடுக்க வேண்டும்.

க்ஷத்திரிய தர்மமும் சமூக உணர்வும்

இதனால் எனக்கு ஒரு பெரிய பாடம் கிடைத்தது. சமூக நலனை விரும்புவது மட்டும் போதாது.
அதற்குத் தேவையான அறிவும், ஒழுங்கும், பொருளாதாரப் புரிதலும், செயல்திறனும் வேண்டும்.
அதனால்தான் நான் க்ஷத்திரிய தர்மத்தையும் சமூக உணர்வையும் ஒன்றுக்கொன்று எதிரானவையாகப் பார்க்கவில்லை.

மாறாக, அவை ஒன்றை ஒன்று பூர்த்தி செய்ய வேண்டியவை என்று நினைக்கிறேன்.

இறுதியாக — ஒரு வேண்டுகோள்

க்ஷத்திரிய தர்மம் என்பது ஒரு மதக்கோட்பாடு என்று நான் பார்க்கவில்லை.

பொறுப்புணர்வுடன் வாழும் மனிதனின் வாழ்க்கை நெறி என்றே பார்க்கிறேன்.

அதேபோல், இக்கட்டுரையில் நான் “கம்யூனிச உணர்வு” என்று கூறுவது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பதல்ல.

“நான் மட்டும்” என்ற எண்ணத்தைத் தாண்டி, “நாமும்” என்று சிந்திக்கும் சமூக உணர்வே அது.

ஒருவன் தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது தவறல்ல.
தன் வாழ்க்கையை முன்னேற்றுவது தவறல்ல.
செல்வம் சேர்ப்பதும் தவறல்ல.

ஆனால் அவன் தன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்:
“இந்தச் சமூகத்திடமிருந்து நான் இவ்வளவு பெற்றிருக்கிறேன். அதற்குத் திருப்பிக் கொடுக்க நான் என்ன செய்திருக்கிறேன்?”

அந்தக் கேள்வி ஒவ்வொரு மனிதனிடமும் எழ வேண்டும்.
க்ஷத்திரிய தர்மம் நமக்கு செயல்படக் கற்றுக்கொடுக்கிறது.
சமூக உணர்வு நமக்கு யாருக்காகச் செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
ஒன்று இல்லாமல் மற்றொன்று முழுமையடையாது.
க்ஷத்திரிய தர்மம் + சமூகப் பொறுப்பு = பொறுப்புள்ள குடிமகன்.

அத்தகைய குடிமக்கள் அதிகரிக்கும்போது,
ஜனநாயகம் வலிமை பெறும்.
சமூகம் வளம் பெறும்.
நாடு உயர்வு பெறும்.

அதுவே இந்தக் கட்டுரையின் நோக்கம்.


ஆன்மிக அரசியல்




திருக்குறள் வழி ஆன்மிக அரசியல்


                  முன்னுரை

இந்த இணைப்பில் உள்ள கருத்துகள், ‘மழலையின் கீதை’ நூலில் விளக்கப்பட்டுள்ள ஆன்மிக வாழ்வியல் கோட்பாடுகளை சமூக மற்றும் அரசியல் நிர்வாகத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு சிந்தனை முயற்சியாகும்.

இவை வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்காக எழுதப்பட்டவை. எனவே, இவற்றை ஆராய்ந்து, தமக்குச் சரியெனத் தோன்றுவதை ஏற்றுக்கொள்வது வாசகர்களின் விருப்பம்.
......................................................................


ஆன்மிக அரசியல் என்றால் என்ன?

நமது நாடு ஆன்மிகச் சிந்தனைகளில் ஆழமாக வேரூன்றிய ஒரு நாடு. அதே நேரத்தில், நாம் ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பின் கீழ் வாழ்கிறோம்.

ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சி சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அரசியல் அதிகாரத்துடன் தனி மனித ஒழுக்கமும், சமூகப் பொறுப்பும், அறநெறியும் இணைந்திருக்க வேண்டும்.

இதைத்தான் நான் “ஆன்மிக அரசியல்” என்று அழைக்கிறேன்.

நமது நாட்டிற்குத் தேவை ஆன்மிகத்தை அரசியலின் மீது திணிப்பது அல்ல; மாறாக, ஆன்மிகம் வலியுறுத்தும் சுயக்கட்டுப்பாடு, அறம், பொறுப்பு, பற்றின்மை, பிறர்நலம், நேர்மை ஆகிய பண்புகளை அரசியல் நிர்வாகத்தில் கொண்டு வருவது.

ஆன்மிகம் இந்து சமயத்தில் மட்டும்தானா இருக்கிறது?
இல்லை. பிற சமயங்களிலும் ஆன்மிகச் சிந்தனைகள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல், சமயங்களுக்கு அப்பாற்பட்ட தத்துவ ஞானிகளிடமும் மனிதனின் ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, பிறர்நலம், இறைத்தன்மை போன்ற கருத்துகளைப் பார்க்க முடிகிறது.

எனவே, இங்கு நான் பயன்படுத்தும் “ஆன்மிகம்” என்பது எந்த ஒரு சமயத்திற்கும் மட்டும் உரியதல்ல.

அது மனிதன் தன்னைத்தானே செம்மைப்படுத்திக் கொண்டு, சமூக நலனுக்குப் பயன்படும் வகையில் வாழ்வதற்கான ஒரு பார்வை.

நல்லாட்சியின் அடிப்படைகள்

ஒரு ஜனநாயக நாடு சிறப்பாகச் செயல்படுவதற்கு அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன:
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது.
தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது.
மக்கள் சட்டத்தையும் அறநெறியையும் மதித்து வாழ்வதற்கான சூழலை உருவாக்குவது.
நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மொழிகள் மற்றும் பல்வேறு மரபுகளைப் பாதுகாப்பது.
நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்வது.
எதிர்காலப் பிரச்சினைகளை முன்கூட்டியே உணர்ந்து செயல்படுவது.

இதில் குறிப்பாக தனி மனித ஒழுக்கம், சமூகப் பொறுப்பு, பண்பாட்டுப் பாதுகாப்பு, எதிர்காலச் சிந்தனை போன்றவற்றில் ஆன்மிகக் கருத்துக்கள் பெரும் உதவியாக இருக்கலாம். அது எப்படி என்பதைப் பார்ப்போம்.

ஆன்மிகம் என்ன கற்றுக் கொடுக்கிறது?

ஆன்மிகம் வெறும் சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றிலேயே தங்கி விடுவதில்லை.

மனிதன் எப்படி வாழ வேண்டும்?
சமுதாயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? தனது ஆசைகளையும் கோபத்தையும் எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
பிறருடைய நலனில் எவ்வாறு அக்கறை கொள்ள வேண்டும்?
தன்னைவிட உயர்ந்த ஒரு நோக்கத்திற்காக எவ்வாறு வாழ வேண்டும்?

இத்தகைய கேள்விகளுக்குத்தான் ஆன்மிகம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

சமயங்களைச் சாராத தத்துவ நூல்களிலும் இதுபோன்ற கருத்துகள் காணப்படுகின்றன.

அதே நேரத்தில், சமய மறைநூல்கள் மனிதனின் ஒழுக்க வாழ்க்கையோடு, இறைத்தன்மையை அடைவது பற்றியும் பேசுகின்றன.

           குணமும் விதியும்

இங்கிலாந்தைச் சேர்ந்த தத்துவ எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலன் தனது The Mastery of Destiny என்ற நூலில் செயல்கள், குணம், விதி ஆகியவற்றின் தொடர்பைப் பற்றி பேசுகிறார். மனிதனின் செயல்கள் அவனுடைய குணத்தை உருவாக்குகின்றன; குணத்தின் மூலம் அவனுடைய எதிர்காலமும் வடிவமைக்கப்படுகிறது என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.

இந்தக் கருத்து நமது கர்மக் கோட்பாட்டுடன் சில இடங்களில் ஒத்த சிந்தனையைத் தருகிறது.
ஆக, ஆன்மிகம் என்பது சுய ஒழுக்கம், சமூகப் பொறுப்பு, மனித குண மேம்பாடு, இறைத்தன்மையை நோக்கிய பயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறது.

அத்துடன், எப்படிப்பட்ட மனிதன் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடுவான்? என்ற கேள்விக்கும் அது விடை தருகிறது.

மனிதர்களின் நான்கு வகைகள்

2018-ஆம் ஆண்டு Nature Human Behaviour இதழில் வெளியான ஒரு ஆய்வு, உலகம் முழுவதிலிருந்தும் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட questionnaire responses-ஐ ஆய்வு செய்து, personality traits அடிப்படையில் நான்கு குறிப்பிடத்தக்க clusters இருப்பதாகக் குறிப்பிட்டது:

Reserved
Role model
Self-centered
Average

இந்த ஆய்வு neuroticism, extraversion, openness, agreeableness, conscientiousness ஆகிய ஐந்து personality dimensions-ஐ அடிப்படையாகக் கொண்டது.

இதை ஒரு முழுமையான மனித வகைப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், மனிதர்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ள ஒரு சிந்தனைக்கருவியாக இதைப் பயன்படுத்தலாம்.

நமது சமூக மற்றும் அரசியல் சிந்தனைக்கு ஏற்ற வகையில் இந்த நான்கு வகைகளையும் சற்றுத் தனிப்பட்ட முறையில் பார்க்கலாம்.

1. Reserved — ஒதுங்கி வாழ்பவர்கள்
சிலர் இயல்பிலேயே அமைதியான வாழ்க்கையை விரும்புவார்கள்.
கூட்டம், ஆரவாரம், பணம், புகழ் போன்றவற்றில் அவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்காது.
ஆனால் அதனால் அவர்கள் செயலற்றவர்கள் என்று அர்த்தமில்லை.

தங்களுக்கு முக்கியமான ஒரு நோக்கம் இருந்தால், அதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கக்கூடியவர்களாக இருக்கலாம்.

வெளியுலகிற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் போகலாம். எனவே, இவர்களை “செயலற்றவர்கள்” என்று முடிவு செய்துவிடக் கூடாது.

நமது பார்வையில், இவர்களை “தனிமையை விரும்பும் செயல்பாட்டாளர்கள்” என்று அழைக்கலாம்.

2. Role Model — முன்மாதிரியானவர்கள்
சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர்கள்.
இவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கலாம்.
ஆனால் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் ஒரு கட்டத்தில் அவர்களை அகத்தாய்விற்குள் அழைத்துச் செல்லலாம்.
அதன் தொடர்ச்சியாக, “போதும்” என்ற மனநிலையை அடைந்து, வெளிப்புற ஆரவாரத்திலிருந்து விலகி அமைதியாக வாழத் தொடங்கலாம்.

அவர்கள் திறமையையும் செயலாற்றும் ஆற்றலையும் இழந்தவர்கள் அல்ல.

செயலுக்குள் இருந்தபடியே மனத்தில் சமநிலையை அடைந்தவர்கள்.
தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்தாலும், பிறரை வஞ்சிக்காமல் பொருள் ஈட்டி, தேவைக்கு அதிகமானதை சமூக நலனுக்குப் பயன்படுத்துபவர்களையும் இந்தப் பிரிவில் சேர்க்கலாம்.

3. Self-Centered — சுயநல நோக்கமுடையவர்கள்
சிலர் தாங்கள் எண்ணிய குறிக்கோளை அடைவதற்காக மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.
தடைகள் வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வார்கள்.
குறிக்கோளை அடையும் வரை விடாமல் போராடுவார்கள்.
இவர்களும் active வகையைச் சேர்ந்தவர்களே.

ஆனால் அவர்களுடைய செயல்களின் மையத்தில் தனிப்பட்ட நலம் மட்டுமே இருந்தால், அவர்களை சுயநல நோக்கமுடையவர்கள் என்று கூறலாம்.

அரசியலில் இத்தகைய மனிதர்கள் அதிகாரத்தை மக்களுக்காகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக,  தங்களுடைய நலனுக்காகப் பயன்படுத்தும் அபாயம் உண்டு.

4. Average — பிறரைச் சார்ந்து வாழ்பவர்கள்
சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க முடியாதவர்கள்.
யாரையாவது தலைவராகவோ, குருவாகவோ ஏற்றுக்கொண்டு, அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள்.

தங்களுடைய சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளாமல், ஒருவரை முழுமையாகச் சார்ந்திருப்பது சமூகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமான நிலை அல்ல.

அரசியலுக்கு யார் வர வேண்டும்?

இந்த நான்கு வகைகளையும் அரசியல் கோணத்தில் பார்த்தால், நேரடி அரசியலில் பெரும்பாலும் இரண்டு வகையான மனிதர்களே அதிகமாகக் காணப்படலாம்:
பொதுநல நோக்கமுடையவர்கள்
மற்றும்
தன்நல நோக்கமுடையவர்கள்.

முதல் முறையாக வாக்களிக்கும் போது, ஒரு வேட்பாளர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்து கொள்வது எளிதல்ல.

ஆனால், ஒருவர் ஆட்சிக்கு வந்த பிறகு அவரது செயல்பாடுகள் தெளிவாகத் தெரியத் தொடங்குகின்றன.
அதன்பிறகும் மக்கள் அதே தவறான தேர்வை மீண்டும் மீண்டும் செய்வார்களானால், அது ஒரு தனி நபரின் தவறு மட்டுமல்ல; வாக்காளர்களின் பொறுப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

எனவே, ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது உரிமை மட்டுமல்ல.
அது ஒரு பொறுப்பும் கூட.

ஆன்மிகம் அரசியலுக்கு எவ்வாறு உதவும்?

பொது நலத்தில் அக்கறை கொண்ட ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவருக்கு ஆன்மிகம் எவ்வாறு உதவ முடியும்?

அதற்கு முதலில் ஆன்மிகம் என்றால் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்மிகம் — ஒரு வாழ்வியல்
ஆன்மிகம் மனிதன் எப்படி வாழ வேண்டும், சமுதாயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

இதுபோன்ற கருத்துகள் சமயம் சாராத நூல்களிலும் உள்ளன.

ஆனால் நமது நாட்டில் இத்தகைய வாழ்வியல் கருத்துகளைப் போதித்த பலரும் கூடவே இறைவனைப் பற்றியும், இறைத்தன்மையை அடைவது பற்றியும் கூறியுள்ளனர்.
அதனால் அவை சமயச் சூழலோடு இணைந்து விட்டன.

இவற்றைத் தெரிந்துகொள்ள நாம் எல்லா மறைநூல்களையும் படிக்க வேண்டிய அவசியமில்லை.
அவற்றைப் புரிந்துகொள்வதும் எளிதல்ல.

ஆனால் திருவள்ளுவர் அவற்றில் பலவற்றை மிக எளிமையாகவும் இனிமையாகவும் கூறியிருக்கிறார்.

திருக்குறள் — வாழ்வியல் கையேடு

தனி மனிதன் தனது வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்பதை அறத்துப்பாலிலும், சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பொருட்பாலிலும் திருவள்ளுவர் விளக்குகிறார்.

அவற்றை முறையாக உள்வாங்கி, அதன்படி வாழத் தொடங்கினால், ஒரு சாதாரண மனிதன்கூட ஒரு முன்மாதிரியான மனிதனாக மாற முடியும்.

அதனால்தான் இந்தத் தொடரில் திருக்குறளை அரசியல் கோணத்திலும் பார்க்க விரும்புகிறேன்.

தினமும் மூன்று குறள்கள்

அறத்துப்பாலும் பொருட்பாலும் சேர்த்து 108 அதிகாரங்கள் உள்ளன; மொத்தம் 1080 குறள்கள்.

ஒரு நாளைக்கு மூன்று குறள்கள் படித்தால், ஒரு வருடத்தில் இப்பகுதியை முழுமையாகப் படித்துவிடலாம். தினமும் பதினைந்து நிமிடங்கள் போதுமானது.

அடுத்த வருடம் மீண்டும் முதலிலிருந்து படிக்கலாம்.
அப்போது புதிய பொருள் தோன்றலாம்.
ஏன்?
நூல் மாறவில்லை; நாம் மாறியிருக்கிறோம்.
நமது புரிதல் வளர வளர, அதே குறளுக்குள் புதிய பரிமாணங்கள் தோன்றுகின்றன.

தனி மனித வெற்றியும் நாட்டின் வெற்றியும்

ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டான் என்பதை எதை வைத்து நிர்ணயம் செய்வது?
பணமா?
புகழா?
அந்தஸ்தா?
அதிகாரமா?

சுவாமி சின்மயானந்தர் கூறியதாகப் பரவலாக மேற்கோள் காட்டப்படும் ஒரு கருத்து:
“Success in life is measured by the tranquility of the mind.”
அதாவது,
மன அமைதியே வாழ்க்கையின் வெற்றிக்கான ஒரு முக்கியமான அளவுகோல்.

பதஞ்சலியின்,
“யோகஶ் சித்தவ்ருத்தி நிரோதஃ”
என்ற சூத்திரமும் மனத்தின் அலைச்சலை அடக்கும் யோகநிலையைப் பற்றிப் பேசுகிறது.

அப்படியானால் ஒரு நாட்டின் வெற்றிக்கான அளவுகோல் என்ன?
என் பார்வையில்,
மக்கள் ஒன்றுபட்டு வாழ்கிறார்களா?
ஒருவரை ஒருவர் மதிக்கிறார்களா?
சட்டத்தின் முன் சமத்துவம் இருக்கிறதா?
அரசு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறதா?
எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படுகிறதா?
என்பவையும் அந்த அளவுகோல்களில் அடங்கும்.

ஒன்றுபடுதல் — நாட்டின் வலிமை

ஒரு நல்ல கருத்து இவ்வாறு கூறப்படுகிறது:
Coming together is the beginning;
Keeping together is the progress;
Working together is the success.
தமிழில்:
ஒன்றாகச் சேர்வது தொடக்கம்;
ஒன்றுபட்டு இருப்பது முன்னேற்றம்;
ஒருமித்த நோக்குடன் செயல்படுவது வெற்றி.

இந்தியாவின் மிகப்பெரிய வலிமைகளில் ஒன்று அதன் பல்வகைத் தன்மை.

மதங்கள், மொழிகள், இனங்கள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள், பண்பாடுகள் எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே அரசியலமைப்பின் கீழ் ஒரே தேசமாக வாழ்வது நமது பெரும் சாதனை.

எனவே, வேறுபாடுகளை அழிப்பது அல்ல; வேறுபாடுகளுக்குள் ஒருமைப்பாட்டை உருவாக்குவதுதான் நல்ல அரசியலின் நோக்கம்.

எதிர்காலத்தை முன்கூட்டியே காணும் அறிவு

திருவள்ளுவர் கூறுகிறார்:
“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.”
— குறள் 429

ஆட்சியில் இருப்பவன் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடாது.

எதிர்காலத்தில் என்ன பிரச்சினைகள் வரலாம் என்று முன்கூட்டியே சிந்தித்து, அவை பெரிதாக மாறுவதற்கு முன்பே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதுவே நல்ல நிர்வாகம்.இன்றைய அரசியலில் இதனைப் பல துறைகளுக்குப் பயன்படுத்தலாம்:
கலாச்சார மாற்றங்கள்
சாதி மற்றும் சமூகப் பிளவுகள்
மக்கள் தொகை தொடர்பான சவால்கள்
வறுமை மற்றும் சமத்துவமின்மை
சட்டம் மற்றும் ஒழுங்கு
போதைப் பொருள் பழக்கம்
சுற்றுச்சூழல் பாதிப்பு
தேசிய பாதுகாப்பு
இணையவழி தவறான தகவல்கள்
சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை
இவற்றை உணர்ச்சியின் அடிப்படையில் அல்ல; தரவு, சட்டம், அறம், மனிதநேயம் ஆகியவற்றின் அடிப்படையில் கையாள வேண்டும்.

      கலாச்சாரப் பாதுகாப்பு

ஒரு நாட்டின் கலாச்சாரம் தானாகவே பாதுகாக்கப்படாது.

அடுத்த தலைமுறைக்கு அதை அறிமுகப்படுத்த வேண்டும்.

“இளமையில் கல்” என்பது இதற்குப் பொருத்தமான பழமொழி.

குழந்தைப் பருவத்தில் அவர்கள் ஆர்வத்துடனும் விரைவாகவும் கற்றுக்கொள்வார்கள்.

எனவே, நமது மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அறநெறி, நாட்டின் வரலாறு ஆகியவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியம்.

இதற்காக பெரிய கட்டிடங்கள் மட்டுமே தேவை என்று அவசியமில்லை.
அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், சிறிய சமூகக் கல்வி மையங்கள், வாசிப்பு வட்டங்கள், கலாச்சாரப் பயிற்சிகள் போன்றவற்றின் மூலமும் இதைச் செய்யலாம்.

“Unschooling” என்ற சொல்லை இங்கு பயன்படுத்த வேண்டுமானால், அதன் வழக்கமான கல்வியியல் பொருளைத் தவறாகப் புரியவிடாமல், பள்ளிக் கல்விக்கு வெளியே நடைபெறும் சமூக அடிப்படையிலான கற்றல் முயற்சிகள் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

அத்தகைய இடத்தில் ஆசிரியர் வெறும் பாடம் சொல்லுபவராக இல்லாமல், மாணவர்களுக்கு வாழ்வின் முன்மாதிரியாக மாறும்போது அவர் உண்மையான குரு நிலையை அடைகிறார்.

முதலில் தன் குற்றத்தைப் பார்ப்போம்

திருவள்ளுவர் கூறுகிறார்:
“ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.”
— குறள் 190

பிறருடைய குற்றத்தைப் பார்ப்பதற்கு முன் தன்னுடைய குற்றத்தையும் அதே அளவு கவனமாகப் பார்க்க வேண்டும்.

அதற்குப் பிறகு அவர் இன்னும் தெளிவாகக் கூறுகிறார்:
“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.”
— குறள் 436

அரசியலிலும் இதுவே பொருந்தும்.
“அவர்கள் தவறு செய்கிறார்கள்” என்று கூறுவதற்கு முன்,
“நாம் சரியாகச் செய்கிறோமா?”
என்று கேட்கும் மனப்பான்மை வேண்டும்.

சாதி — பிறப்பா? குணமா?

நம் சமூகத்தின் முக்கியமான சவால்களில் ஒன்று சாதிப் பிரிவினை.

சிலர் இதற்குக் காரணமாக வர்ணாஸ்ரம தர்மத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இங்கு ஒரு வேறுபாட்டை நினைவில் கொள்ள வேண்டும். வர்ணம் என்பது குணம், இயல்பு, திறன், செயல்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவ வகைப்பாடாக விளக்கப்படுகிறது.

நடைமுறையில் உருவான பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பை அதனுடன் அப்படியே ஒன்றாக்குவது கருத்தியல் ரீதியாக எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமாகிவிடும்.

எது எப்படியிருந்தாலும், பிறப்பின் அடிப்படையில் மனிதனை உயர்ந்தவன்–தாழ்ந்தவன் என்று மதிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

திருவள்ளுவர் கூறுகிறார்:
“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்.”
— குறள் 973

மனிதனின் உயர்வு பிறப்பால் அல்ல; அவனுடைய பண்பாலும் செயலாலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

  சட்டம் அனைவருக்கும் ஒன்று

சாதி, மதம், மொழி, இனம் எதுவாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உணர்வு வலுப்பெற வேண்டும்.

சில நிர்வாகச் சான்றுகளுக்காக சமூக வகைப்பாடுகள் தேவைப்படலாம். ஆனால் குழந்தைகளின் மனதில் சிறு வயதிலிருந்தே, “இந்தப் பெயரால் நான் உயர்ந்தவன்; அந்தப் பெயரால் அவன் தாழ்ந்தவன்” என்ற எண்ணம் உருவாகாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம்.

அதேபோல், பொதுப் பயன்பாட்டுக்கான இடங்கள் அதிகரிக்க வேண்டும்.

சமூகப் பிரிவினையை வலுப்படுத்தும் அமைப்புகளுக்குப் பதிலாக, அனைவரும் சமமாகப் பயன்படுத்தக்கூடிய பொது வசதிகள் உருவாக வேண்டும்.

    வருமுன் காப்பதே நல்லாட்சி

திருவள்ளுவர் கூறுகிறார்:
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.”
— குறள் 435

எதிர்காலப் பிரச்சினைகளை முன்கூட்டியே உணர்ந்து செயல்படாதவனின் வாழ்க்கை அழியும் என்கிறார்.

தனி மனிதனுக்குச் சொன்னாலும், இதை அரசுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

மக்கள் தொகை, வேலைவாய்ப்பு, உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல், நகரமயமாக்கல் போன்ற பல பிரச்சினைகளை அரசுகள் நீண்டகாலக் கணக்கில் அணுக வேண்டும்.

அரசியலின் வெற்றி அடுத்த தேர்தலை வெல்வதில் மட்டும் இல்லை; அடுத்த தலைமுறையை பாதுகாப்பாக விட்டுச் செல்வதிலும் இருக்கிறது.

     ஸஸவருவாயும் செலவும்

திருவள்ளுவர் கூறுகிறார்:
“ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை;
போகாறு அகலாக் கடை.”
— குறள் 478

வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் கேடு இல்லை.

இந்தக் கருத்து ஒரு குடும்பத்திற்கும் பொருந்தும்; ஒரு அரசுக்கும் பொருந்தும்.

அரசு வருவாயைப் பெறுவது மட்டுமல்ல; அதை எங்கு செலவிடுகிறது என்பதும் முக்கியம்.
வறியவர்களுக்கு உதவும் நலத்திட்டங்கள் அவசியமானவை.
ஆனால், உதவி உண்மையில் தேவைப்படுகிறவரைச் சென்றடைகிறதா?

அரசின் வளங்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறதா?

திட்டங்கள் நீண்டகால நன்மையை உருவாக்குகிறதா? என்பதையும் மதிப்பிட வேண்டும்.

நலத்திட்டம் என்பது செலவு அல்ல; சரியான இடத்தில் செய்யப்பட்ட முதலீடாக இருக்க வேண்டும்.

“கொலையிற் கொடியார்” — அரசியல் வாசிப்பு

திருவள்ளுவர் கூறுகிறார்:
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.”
— குறள் 550

இந்தக் குறளுக்கு பலவிதமான விளக்கங்கள் உள்ளன.

நான் இதனை அரசியல் கோணத்தில் சிந்திக்கும்போது, ஒரு கேள்வி எழுகிறது:

ஒரு மனிதனைக் கொல்வதைவிட ஒரு சமூகத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ பெரும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் எவை?

அவை நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதாக இருக்கலாம்.
சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுவதாக இருக்கலாம்.
வன்முறையைத் தூண்டுவதாக இருக்கலாம்.
அரசியலமைப்புச் சட்டத்தையும் நாட்டின் இறையாண்மையையும் திட்டமிட்டு பாதிப்பதாக இருக்கலாம்.

ஆனால், இவற்றில் எதற்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதை தனிநபரின் கருத்து தீர்மானிக்கக் கூடாது.
சட்டமும் நீதித்துறையும் அரசியலமைப்பும் தீர்மானிக்க வேண்டும்.

வள்ளுவர் “களை” என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறார்.
நாட்டில் தீங்கு விளைவிக்கும் செயல்களை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்துவது அரசின் கடமை.

ஆனால் அதே நேரத்தில்,
கருத்து வேறுபாடு = தேசத்துரோகம்
என்று கருதுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

கருத்து வேறுபாட்டையும் சட்டவிரோதச் செயலையும் தெளிவாகப் பிரித்தறிய வேண்டும்.

வெளிப்படையான பகையும் மறைந்த நோக்கமும்

திருவள்ளுவர் கூறுகிறார்:
“தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.”
— குறள் 828

வெளியில் அன்பாகத் தோன்றியும் உள்ளுக்குள் தீய நோக்கம் கொண்டிருப்பவர்களைப் பற்றிய எச்சரிக்கையாக இதைப் பார்க்கலாம்.

அரசியலிலும் இது பொருந்தும்.
ஆனால் ஒருவருடைய உள்ளநோக்கை ஊகித்துக் கொண்டு குற்றவாளி என்று முடிவு செய்வது சரியல்ல.

செயல், ஆதாரம், சட்டம் — இவற்றின் அடிப்படையில்தான் அரசு முடிவு எடுக்க வேண்டும்.இதுவே ஜனநாயகத்தின் பாதுகாப்பு.

அரசின் செல்வம் மக்களுக்காக

திருவள்ளுவர் கூறுகிறார்:
“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.”
— குறள் 44

தவறான வழியில் பொருள் ஈட்டக்கூடாது. ஈட்டிய பொருளைத் தக்க முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இதை அரசின் நிர்வாகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.
ஆட்சியாளர்கள்:
ஊழலைத் தவிர்க்க வேண்டும்.
மக்களை அநியாயமாகச் சுரண்டக்கூடாது.
வருவாயை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
வறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதுகாக்க வேண்டும்.
எதிர்காலத் தேவைகளுக்குச் சேமிக்க வேண்டும்.
இதுவே நல்ல நிதி நிர்வாகம்.

கல்வி — நாட்டின் எதிர்கால முதலீடு

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கெல்லாம் இனிது.”
— குறள் 68

குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெற்றோருக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கே மகிழ்ச்சி தருகிறது.

அதனால் கல்வி என்பது ஒரு தனிநபரின் உரிமை மட்டுமல்ல.
அது நாட்டின் எதிர்கால முதலீடு.

ஒரு பொன்மொழி ஆசிரியர்களை நான்கு நிலைகளாகப் பிரிக்கிறது:
A poor teacher tells.
An average teacher explains.
A good teacher demonstrates.
An excellent teacher inspires.

இதில் கடைசி நிலைதான் மிக முக்கியமானது.
தகவலைக் கொடுப்பவர் ஆசிரியர்;
ஆர்வத்தை எழுப்புபவர் குரு.
குழந்தையின் உள்ளத்தில் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை எழுப்பும் ஆசிரியர்களை உருவாக்குவது அரசின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று.

பயனற்ற சொற்கள்

திருவள்ளுவர் கூறுகிறார்:
“பயனில்சொல் பாராட்டுவானை மகன்எனல்;
மக்கட் பதடி எனல்.”
— குறள் 196

பயனற்ற சொற்களைப் பேசிக்கொண்டிருப்பவரை வள்ளுவர் கடுமையாகக் கண்டிக்கிறார்.

அரசியலில் இது இன்னும் முக்கியமானது. ஏனெனில் அரசியல்வாதியின் வார்த்தைகள் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடும்.

மக்களைப் பிரிப்பதற்காகப் பேசப்படும் சொற்கள்,
பிறரை அவமதிப்பதற்காகப் பேசப்படும் சொற்கள்,
பொய்யான தகவல்களைப் பரப்பும் சொற்கள்,
வெறும் சத்தத்தை உருவாக்கும் சொற்கள் —
இவை அனைத்தும் நாட்டின் சிந்தனைத் தரத்தைத் தாழ்த்தக்கூடும்.

ஆயிரம் மலர்கள் இருந்தாலும், அவற்றை மாலையாக இணைக்க நூல் தேவை.

அதேபோல், மதம், மொழி, இனம், பண்பாடு எனப் பல வேறுபாடுகளைக் கொண்ட மக்களை ஒருமைப்படுத்துவது அரசியல் தலைமையின் முக்கியப் பொறுப்பு.
அரசியல்வாதி அந்த நூலாக இருக்க வேண்டும்; கத்தியாக அல்ல.

  பிறருக்குக் கேடு நினைக்காதே

திருவள்ளுவர் கூறுகிறார்:
“மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.”
— குறள் 204

இந்தக் குறளை நான் ஒரு முக்கியமான ஆன்மிக விதியாகப் பார்க்கிறேன்.

நமது செயல் நமது எண்ணத்திலிருந்து பிறக்கிறது.
பல நேரங்களில் செயல் வெளியில் நல்லதாகத் தோன்றலாம்; ஆனால் அதன் பின்னால் இருக்கும் நோக்கம் வேறாக இருக்கலாம்.

அதனால்தான் வள்ளுவர் எண்ணத்தையே எச்சரிக்கிறார்.
“கெடுவான் கேடு நினைப்பான்” என்ற பழமொழியையும் இதனுடன் ஒப்பிடலாம்.

பிறருக்குத் தீங்கு நினைப்பவன் உடனடியாகத் துன்பப்படாமல் இருக்கலாம்.

ஆனால் அந்த எண்ணம் அவனுடைய மனத்தையே முதலில் விஷமாக்குகிறது.

அதனால்,
பிறரை வெறுப்பதைவிட, அவரிடமிருந்து விலகுவது மேல்.

கேடு நினைப்பதைவிட, நம்மை நாமே காப்பது மேல்.

   ஸஒப்புரவு -- அரசின் உதவி

திருவள்ளுவர் கூறுகிறார்:
“ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.”
— குறள் 220

பிறருக்கு உதவி செய்வதால் தனக்கே இழப்பு வந்தாலும் உதவத் தயங்கக்கூடாது என்பதே குறளின் மையச் சிந்தனை.

ஒரு தனி மனிதனுக்கு இது பொருந்துவது போலவே, அரசுக்கும் ஒரு வகையில் பொருந்தலாம்.

உதாரணமாக, ஒரு அரசு ஒரு சமூகத் தீமையைத் தடுக்கும் கடுமையான சட்டத்தை கொண்டு வந்தால், சிலருக்கு உடனடி இழப்பு ஏற்படலாம்.
ஆனால் அதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாக்கப்படுமானால், அது பொதுநலத்தை நோக்கிய ஒப்புரவு என்று பார்க்கலாம்.

ஆட்சியாளன் எல்லோரையும் மகிழ்விப்பவன் அல்ல.
நீண்டகால பொதுநலனை முன்னிறுத்தி, நியாயமான முடிவுகளை எடுப்பவனே நல்ல ஆட்சியாளர்.

           “தக்கார்” யார்?

“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.”
— குறள் 212

“தக்கார்” என்ற சொல்லுக்கு நல்லவர், சான்றோர், தகுதியுடையவர் போன்ற பல பொருள்கள் கூறப்படுகின்றன.

அரசின் பார்வையில், உதவி தேவைப்படுபவரும், அந்த உதவியைச் சரியாகப் பயன்படுத்தக்கூடியவரும் “தக்கார்”
என்று ஒரு நிர்வாகப் பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.

“பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்ற பழமொழியைப் போல, உதவி செய்யும் போது தகுதியையும் தேவையையும் ஆராய வேண்டும்.

அரசின் வருவாய் முதலில்:
நாட்டின் பாதுகாப்பு,
அடிப்படை வசதிகள்,
கல்வி,
சுகாதாரம்,
கட்டமைப்பு,
எதிர்கால முதலீடுகள்
போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

அதன்பின், உண்மையில் தேவைப்படுகிறவர்களுக்கு உதவி சென்றடைய வேண்டும்.

  வளமான நாடு என்றால் என்ன?

“ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.”
— குறள் 214
தனிப்பட்ட செல்வத்தை மட்டுமே சேர்த்துக் கொண்டிருப்பதை விட, சமூகத்திற்குப் பயன்படும் வகையில் வாழ்வதே சிறந்தது என்ற கருத்தை இந்தக் குறளில் காணலாம்.
அதேபோல் ஒரு நாட்டையும் பார்க்கலாம்.
மாடமாளிகைகள் உயர்ந்து நிற்பதால் மட்டும் ஒரு நாடு வளமானதாகிவிடாது.
அங்கு வாழும் சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா?
அவன் பசியின்றி வாழ்கிறானா?
அவனுடைய குழந்தைக்கு கல்வி கிடைக்கிறதா?
சுகாதார வசதி கிடைக்கிறதா?
பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கிறதா?
என்பதுதான் உண்மையான கேள்வி.
பசியைத் தீர்ப்பதே முதன்மை
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.”
— குறள் 226
நாட்டின் கட்டமைப்பு வளர வேண்டும்.
பொருளாதாரம் வளர வேண்டும்.
வருவாய் பெருக வேண்டும்.
எதிர்காலத்திற்குச் சேமிக்க வேண்டும்.
ஆனால், இவை அனைத்திற்கும் நடுவில் பசியால் தவிக்கும் மனிதன் இருக்கக்கூடாது.
வறியவரின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதே ஒரு நல்ல அரசின் முதன்மையான கடமைகளில் ஒன்று.
அரசியல்வாதியின் புகழ்
“புகழ்பட வாழாதார் தந்நோவார்; தம்மை
இகழ்வாரை நோவது எவன்?”
— குறள் 237
அரசியலுக்கு வருபவர்களின் நோக்கங்கள் வேறுபடலாம்:
சேவை மனப்பான்மை.
பொருள் சம்பாதிக்கும் ஆசை.
பதவி மற்றும் அதிகாரத்தின் மீது ஆசை.
சேவை மனப்பான்மையுடன் செயல்படுபவனைப் புகழ் தேடி வரலாம்.
ஆனால் அவரையும் சிலர் விமர்சிக்கலாம்.
அதனால் மனம் தளர வேண்டியதில்லை.
அதே நேரத்தில், விமர்சனம் வந்தால் அதை முழுவதுமாக நிராகரிக்கவும் கூடாது.
நியாயமான விமர்சனத்திலிருந்து கற்றுக்கொள்வதும் தலைமைப் பண்பே.
திருவள்ளுவர் கூறுகிறார்:
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.”
— குறள் 151
ஊழலற்ற அரசியல்
“சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.”
— குறள் 311
செல்வம் கிடைத்தாலும் பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கை.
அரசியலில் இதனை ஒரு எளிய விதியாக மாற்றலாம்:
“அதிகாரம் கிடைத்தாலும் ஊழல் செய்யாதே.”
ஆனால் அதைவிட உயர்ந்த நிலை ஒன்று உண்டு.
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.”
— குறள் 315
பிறருடைய துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும் மனம் அரசியல்வாதிக்குத் தேவை.
மேலும்,
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.”
— குறள் 319
என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.
வலிமையான அரசின் ஆறு அடையாளங்கள்
திருவள்ளுவர் கூறுகிறார்:
“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.”
— குறள் 381
ஒரு வலிமையான அரசுக்கு ஆறு அடிப்படைகள்:
வலிமையான படை
நல்ல குடிமக்கள்
வளமான பொருளாதாரம்
திறமையான அமைச்சு
நம்பகமான நட்பு
வலிமையான அரண்
இவற்றுடன் ஒரு நல்ல ஆட்சியாளனுக்குத் தேவையான பண்புகளையும் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
அறிவு.
துணிவு.
இரக்கம்.
முயற்சி.
காலத்தை உணர்ந்து செயல்படுதல்.
அறநெறி.
குற்றமின்மை.
வீரம்.
மானம்.
காட்சிக்கு எளிமை.
கடுஞ்சொல் கூறாமை.
கடும் சொற்களையும் பொறுத்துக் கொள்ளும் பக்குவம்.
நிதி ஆதாரங்களை முறையாக நிர்வகிக்கும் திறன்.
இவை அனைத்தும் இன்றைய நல்லாட்சிக்கும் பொருந்தக்கூடியவை.
ஆட்சியாளனுக்கு ஊன்றுகோல்
திருவள்ளுவர் கூறுகிறார்:
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.”
— குறள் 415
வழுக்கும் இடத்தில் ஊன்றுகோல் உதவுவது போல, ஒழுக்கமுள்ளவர்களின் அறிவுரை உதவும்.
ஆட்சியாளனுக்கு அறிவுரை கூறுபவர்கள் வெறும் ஆதரவாளர்களாக இருக்கக்கூடாது.
அவர் தவறு செய்தால் “இது தவறு” என்று சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
அமைச்சர்கள் வேகமாகச் செயல்பட வேண்டியவர்கள்.
அவர்களுக்கு அறிவுரை கூறுபவர்கள் நிதானமாகவும் விவேகமாகவும் சிந்திக்க வேண்டும்.
ஆனால் இங்கும் வள்ளுவரின் எச்சரிக்கை பொருந்துகிறது:
ஊன்றுகோல் வலிமையானதாக இருந்தால்தான் அது உதவும்.
அதாவது அறிவுரை வழங்குபவர்களும் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி குறைவாக இருந்தாலும் அனுபவ அறிவு மிகுந்த ஒருவர் சான்றோராக இருக்கலாம்.
அதேபோல், உயர்ந்த பதவியில் இருப்பவர் சான்றோராகவே இருப்பார் என்று கருதவும் முடியாது.
தவறிலிருந்து கற்றுக்கொள்வது
“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.”
— குறள் 434
நல்ல ஆட்சியாளர் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்.
தவறு நடக்கலாம்.
ஆனால் அந்தத் தவறிலிருந்து கற்றுக்கொண்டு, மீண்டும் அதே தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
துணிந்து செயல்படுவதில் ஏற்படும் நல்லநோக்குடைய தவறையும், தனநலத்திற்காகச் செய்யப்படும் குற்றத்தையும் ஒன்றாகக் கருதக்கூடாது.
தவறு செய்தால் திருத்திக்கொள்;
குற்றம் செய்யாதே;
குற்றம் நடந்தால் மறைக்காதே.
இதுவே நல்ல நிர்வாகத்தின் அடிப்படை ஒழுக்கமாக இருக்கலாம்.
திருக்குறளும் பகவத்கீதையும்
திருக்குறளையும் பகவத்கீதையையும் நான் இரண்டு பெரிய ஆன்மிகக் களஞ்சியங்களாகப் பார்க்கிறேன்.
இரண்டிற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
திருக்குறள், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
அது வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளையும் சமூக நெறிகளையும் கூறுகிறது.
பகவத்கீதை, வாழ்க்கையின் சிக்கல்களுக்குள் சிக்கியிருக்கும் மனிதன் எவ்வாறு தன்னை உயர்த்திக்கொள்ளலாம் என்பதைப் பல்வேறு பாதைகளின் மூலம் காட்டுகிறது.
கர்மம்.
பக்தி.
தியானம்.
ஞானம்.
ஒவ்வொரு மனிதனும் தன் இயல்புக்கேற்ற வழியைப் பயன்படுத்தி உயர முடியும் என்று கீதை வழிகாட்டுகிறது.
Everything ends in Wisdom.
வாழ்க்கையில் தவறிவிட்டவர்களுக்கும் கீதை நம்பிக்கையை அளிக்கிறது.
தவறு செய்தவன் என்ன செய்ய வேண்டும்?
மனத்தை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும்?
செயலில் இருந்தபடியே பற்றின்றி எப்படி வாழ வேண்டும்?
என்பதற்கெல்லாம் அது வழிகாட்டுகிறது.
இறுதியாக...
திருக்குறளை மேற்கோள் காட்டி இன்னும் நிறைய எழுதலாம்.
ஆனால், பெரியவர்கள் கூறுவதுபோல்,
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.”
எனவே, இந்தத் தொடரை இத்துடன் நிறுத்துகிறேன்.
இருப்பினும் ஒரு தனிப்பட்ட கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
திருக்குறளும் பகவத்கீதையும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் நூல்கள் அல்ல.
ஒன்று வாழ்க்கையின் நெறியை காட்டுகிறது.
மற்றொன்று வாழ்க்கையின் நெருக்கடிக்குள் இருந்து விடுபடும் வழிகளை காட்டுகிறது.
ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டு மற்றொன்றைத் தவிர்க்க வேண்டியதில்லை.
இரண்டையும் ஆழமாகப் படித்தால், ஒன்று நம்மை நல்ல மனிதனாக வாழச் செய்யும்.
மற்றொன்று அந்த நல்ல வாழ்க்கையின் வழியாக நம்மை நாமே அறிந்துகொள்ளச் செய்யும்.
அதுவே எனக்குக் கிடைத்த அனுபவப் புரிதல்.
இந்தக் கட்டுரையில் கூறப்பட்ட அரசியல் கருத்துகள் அனைத்தும் என் தனிப்பட்ட சிந்தனைகளே.
உங்களுக்கு உடன்பாடு இல்லாத இடங்களில் உடனடியாக மறுப்பதற்குப் பதிலாக,
“இவர் எந்தக் கோணத்தில் இதைப் பார்க்கிறார்?”
என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
திருவள்ளுவர் நட்பைப் பற்றி கூறுகிறார்:
“நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.”
— குறள் 784
உண்மையான நட்பு என்பது வெறுமனே பாராட்டுவது அல்ல.
தவறு தெரிந்தால் சுட்டிக்காட்டுவதும் ஆகும்.
அதேபோல், உண்மையான வாசிப்பும் வெறுமனே ஏற்றுக்கொள்வது அல்ல.
சிந்திப்பதும், ஆராய்வதும், ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் — அனைத்தும் வாசகரின் உரிமைகள்.
நான் எழுத்தாளர் அல்ல.
நாட்டின் நலனையும், மனிதனின் ஆன்மிக உயர்வையும் விரும்பும் ஒரு சாதாரண மனிதன்.
அவ்வளவுதான்.

என்றும் அன்புடன்,
உங்களில் ஒருவன்.



 

ஆற்றில் கிடந்தும்




            ஆற்றில் கிடந்தும்
(பட்டினத்தார் பாடலின் வழியாக “மறு கரை” பற்றி ஒரு சிந்தனை)


நம்மில் பெரும்பாலோர் பின்பற்றுவது பக்தி மார்க்கம்.

ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபடுவது, வீட்டில் பூஜை செய்வது, சடங்கு, சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பது என, இவற்றில் மனத் திருப்தியோடு கலந்து கொள்கிறோம்.

‘எல்லாம் அவன் செயல்’ என்பதையும் புரிந்துகொள்கிறோம். ஆனாலும், மனம் தேவையற்ற கவலைகளாலும் பயத்தாலும் அல்லல்படுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

அதிலும் முதுமை வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்; ‘கவலைப்படுவதே’ முக்கிய வேலையாக மாறிவிடுகிறது.
இதற்குத் தீர்வுதான் என்ன?

பட்டினத்தார் காட்டும் ஒரு கேள்வி

பட்டினத்தார் ஒரு பாடலில் நம்மைத் திட்டுவதுபோலத் திட்டி, மறைமுகமாக ஒரு வழியையும் காட்டுகிறார்.

வாழ்வியல் தத்துவத்தைப் பற்றி பட்டினத்தார் பல கோணங்களில் பாடியுள்ளார்.

“ஒன்றென்றிரு; தெய்வம் உண்டென்றிரு...” என்று பாடும்போது, மனத்திற்கும் நெஞ்சிற்கும் உபதேசம் செய்வதுபோல் அறிவுரை கூறுகிறார்.

ஆனால், அவரே இன்னொரு பாடலில் மனதைக் கடுமையாகக் கடிந்து கொள்கிறார்.

“நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே!
மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?
ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!”

இந்தப் பாடலைப் படிக்கும்போது நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
பட்டினத்தார் உண்மையில் தனது மனத்தைக் கடிந்து கொண்டாரா? அல்லது நம்மைத்தான் — குறிப்பாக பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டவர்களை — கண்டனம் செய்கிறாரா?

இரண்டாவது வரியில்,
“மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை”
என்று கூறியவர், கடைசி வரியில்,
“படித்துறை இருந்தும் வழியறியாமல் அலைகின்றையே!”
என்று மட்டும் சொல்லியிருக்கலாம்.

அதற்குப் பதிலாக,
“ஆற்றில் கிடந்தும்...”
என்ற வார்த்தையையும் சேர்த்து,
“ஆற்றில் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றையே!” என்று ஏன் கூறினார்?

அதிலும் “ஆற்றில் கிடந்தும்” என்ற வார்த்தையில் ஒரு அழுத்தம் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.
கூடவே, குடும்ப வாழ்க்கையை ஏன் ஆற்றோடு ஒப்பிடுகிறார்?
நிச்சயமாக இதற்குப் பின்னால் ஏதாவது காரணம் இருக்கும்.
அது என்ன?

   ஐந்து சகோதரர்களின் கதை

பட்டினத்தார் இந்தப் பாடலின் மூலம் பக்தர்களைக் கடிந்து கொள்கிறாரோ என்று முதலில் தோன்றினாலும், “ஆற்றில் கிடந்தும்” என்ற வார்த்தைகளைப் பார்த்தபோது, அவர் வேறு ஏதோ ஒன்றைக் குறிப்பிட விரும்பியிருக்கலாம் என்று தோன்றியது.

அதைப் பற்றி சிந்தித்தபோது, தென்கச்சி திரு. சுவாமிநாதன் அவர்கள் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.

ஒரு வீட்டில் ஐந்து சகோதரர்கள் இருந்தனர். உண்மையில் அவர் குறிப்பிட்டது ஐந்து விரல்களை.

ஒருநாள் அந்தச் சகோதரர்களுக்குள் ஒரு சந்தேகம் வந்துவிட்டது:
“நம்மில் யார் பெரியவர்?”

கட்டை விரல் சொன்னது:
“நான்தான் பெரியவன். கிணற்றில் நீர் இறைக்கும்போது நீங்கள் நால்வரும் ஒரு பக்கம் கயிற்றைப் பிடிக்கிறீர்கள். நான் ஒருவன் மட்டுமே மறுபக்கம் கயிற்றைப் பிடிக்கிறேன். அப்படியானால் நான்தானே பெரியவன்? அது மட்டுமல்ல; பத்திரங்களில் எனது ரேகையை மட்டும்தானே நம்புகிறார்கள்!”

சுட்டு விரல் சொன்னது:
“நீ சொல்வது உண்மைதான். ஆனால், மற்றவர்கள் தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கு மட்டும்தானே உள்ளது! எனவே நான்தானே பெரியவன்?”

நடு விரல் சொன்னது:
“அதெல்லாம் எதற்கு? எல்லாரும் எழுந்து நிற்போம். யார் பெரியவர் என்பது தானே தெரிந்துவிடும்!”

மோதிர விரல் சொன்னது:
“எது எப்படியோ, எல்லாரும் மோதிரத்தை என்மீதுதானே போட்டு அழகு பார்க்கிறார்கள். அப்படியானால் எல்லாரையும் விட நான்தானே உயர்ந்தவன்?”

சுண்டு விரலுக்குத் தன்னைப் பற்றி பெருமையாகச் சொல்ல எதுவும் தெரியவில்லை.

இதைக் கண்டு மற்றவர்கள் எள்ளி நகையாடினர். அந்தக் கடைக்குட்டி சோர்வாக ஓர் மரத்தடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தது. அப்போது அங்கு வந்த நாரதர் அதன் காதில் ஏதோ சொன்னார்.

அதைக் கேட்டதும் சுண்டு விரல் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து சொன்னது: “நீங்கள் ஆயிரம் சொல்லலாம். ஆனால், கடவுளுக்கு அருகில் யார் இருக்கிறார் என்பதுதானே முக்கியம்? நாம் எல்லாரும் சேர்ந்து கடவுளை வணங்கும்போது நான்தானே முதலில் நிற்கிறேன்! அப்படியானால் நான்தானே பெரியவன்?”

நாரதர் என்ன சொல்லியிருப்பார்?

“உங்கள் ஐந்து பேரில் நீ மட்டும்தான் கடவுளுக்கு அருகில் இருக்கிறாய். அது தெரியாமல், உன் அண்ணன்களிடம் இருக்கும் தகுதிகளைப் போல் உன்னிடம் எதுவும் இல்லையே என்று ஏன் புலம்புகிறாய்?” என்று சொல்லியிருக்கலாம்.

“ஆற்றில் கிடந்தும்” — இதன் பொருள் என்ன?

இந்தக் கதை நினைவுக்கு வந்ததும், பட்டினத்தார் ஏன் “ஆற்றில் கிடந்தும்” என்று குறிப்பிட்டார் என்பது எனக்குச் சற்றுப் புரிந்தது.

மேலே சொன்ன கதையில் ஐந்து சகோதரர்கள். இங்கே, நம்முடைய ஆன்மிகப் பயணத்தில் நான்கு வழிகள் இருப்பதாகக் கொள்ளலாம்:
ஞானத்தைத் தேடுபவர்,
கர்மத்தில் ஈடுபடுபவர்,
தியானத்தில் கவனம் செலுத்துபவர்,
பக்தியில் நாட்டம் கொண்டவர்.


பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்ட ஒருவர், மற்றவர்களைப் பார்த்து,
“என்னால் அவர்களைப்போல் ஞான மார்க்கத்தில் ஈடுபட முடியவில்லையே!
கர்ம மார்க்கத்தில் அவர்களைப்போல் செயல்பட முடியவில்லையே!
தியானத்திலும் என்னால் நிலைத்திருக்க முடியவில்லையே!”
என்று நினைக்கலாம்.

ஆனால், அவரிடம் ஏற்கனவே ஒரு பெரிய வாய்ப்பு இருக்கிறது.
“எல்லாம் அவன் செயல்” என்ற உணர்வுடன் அவர் வாழத் தொடங்கினால்.

  எனது புரிதலில் “மறு கரை”

இனி வருவது பட்டினத்தார் பாடலின் நேரடி விளக்கம் அல்ல.

“மறு கரை” என்ற உருவகத்தை அடிப்படையாகக் கொண்டு, அத்வைதக் கோணத்தில் நான் புரிந்துகொண்ட சில சிந்தனைகளை மட்டுமே இங்கே பகிர்கிறேன்.

பட்டினத்தார் பக்தனிடம்,
“மற்றவர்களைப் பார்த்துக் கவலைப்படாதே.
அவர்கள் தங்களுக்குரிய வழிகளில் தேடிச் செல்கிறார்கள். இறுதியில் இந்த ஆற்றை அடைந்துதான் மறுகரையை அடைய வேண்டும்.
நீயோ ஏற்கனவே இந்த ஆற்றில் இறங்கிவிட்டாய். எதிரே படித்துறை இருக்கிறது. அதில் ஏறி கரையை அடைவதை விட்டுவிட்டு, எதற்காக இங்கும் அங்குமாக அலைகிறாய்?”
என்று சொல்வதுபோல் எனக்குத் தோன்றுகிறது.

இதில் “ஆற்றில் கிடந்தும்” என்ற வார்த்தைதான் என்னை மிகவும் கவர்ந்தது. 

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு:
“கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தானாம்!”
கையில் இருக்கும் வெண்ணையை உருக்கினால் நெய் கிடைத்துவிடும்.
ஆனால், அதைச் செய்யாமல், மற்றவர்கள் நெய் வாங்கக் கடைக்குச் செல்வதைப் பார்த்து,
“என்னிடம் நெய் வாங்கப் பணம் இல்லையே!” என்று புலம்பிக்கொண்டிருப்பது எவ்வளவு வேடிக்கையானது?

அதைப்போலத்தான் நாமும்.
நமக்குக் கிடைத்திருக்கும் பக்தி, சரணாகதி, இறைநம்பிக்கை ஆகியவற்றை பயன்படுத்தி முன்னேறுவதை விட்டுவிட்டு, மற்றவர்கள் பின்பற்றும் வழிகளைப் பார்த்து நம்மிடம் அது இல்லையே என்று கவலைப்படுகிறோம்.

அதைத்தான் பட்டினத்தார்,
“ஆற்றில் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றையே!” என்று சுட்டிக்காட்டுகிறாரோ என்று தோன்றுகிறது.

   ஆறும் மனித வாழ்க்கையும்

ஆற்றுக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை இருக்கிறது.

ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். மனிதனின் மனத்திலும் எண்ணங்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள் என ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கும்.

வெள்ளம் வரும்போது ஆற்று நீர் கலங்கி காணப்படும். அதேபோல், மனிதனிடமும் கோபம், பயம், ஆசை போன்ற உணர்ச்சிகள் பொங்கி வழியும்போது, மனத்தில் தேவையற்ற எண்ண அலைகள் உருவாகின்றன.

ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது.
மனமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஆனால் ஆற்றின் நோக்கம் கடலை அடைவது. மனத்தின் நோக்கம் என்ன?

இதுதான் நாம் நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
இரண்டு கரைகள் உண்டா?
ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் இருக்கின்றன. மனித வாழ்க்கைக்கும் இரண்டு கரைகள் இருக்கின்றனவா?

“மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை” என்று பட்டினத்தார் கூறும்போது,
“இதே கரையில் மீண்டும் மீண்டும் பிறக்காதே; அடுத்த பிறவியிலாவது மறுகரையில் பிறக்க முயற்சி செய்”
என்று அவர் கூறுகிறாரா?

இது பட்டினத்தாரின் நேரடி பொருள் என்று நான் கூறவில்லை.
ஆனால், இந்த உருவகம் ஒரு சிந்தனைக்கு வழிவகுக்கிறது.

பொருள் சார்ந்த கரையும் அருள் சார்ந்த கரையும்

வள்ளுவர் கூறுகிறார்:
“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.”
— குறள் 374

இக்குறளின் மரபுவழிப் பொருள், செல்வம் உடையராதலும் தெளிந்த அறிவுடையராதலும் வேறுபட்ட ஊழால் அமையும் என்பதாகும்.

ஆனால், “மறு கரை” என்ற உருவகத்தைப் பற்றி சிந்திக்கும்போது, இதனை என் ஆன்மிகப் புரிதலில் வேறு விதமாகவும் பார்க்கத் தோன்றுகிறது.

ஒரு கரை — பொருளை முதன்மையாகக் கொண்ட வாழ்க்கை.
மற்றொரு கரை — அருளை முதன்மையாகக் கொண்ட வாழ்க்கை.

நாம் பெரும்பாலும் பொருள் சார்ந்த வாழ்க்கைக் கரையில்தான் பிறந்து வளர்கிறோம்.

அதிலேயே பொருளைத் தேடுகிறோம். அதிலேயே ஓடுகிறோம். பல நேரங்களில் அதிலேயே கவலையோடும் பயத்தோடும் வாழ்கிறோம்.
அதிலேயே இறந்தும் போகிறோம்.

ஆனால், அந்த வாழ்க்கையிலிருந்து சற்றுச் சற்றாக விலகி, அருளை நோக்கி நகரும்போது என்ன நிகழ்கிறது?

ஆசைகள் தளரத் தொடங்குகின்றன.
பற்றுகள் குறையத் தொடங்குகின்றன.

“நான்” மற்றும் “எனது” என்ற உணர்வு மெல்ல மெல்ல பலவீனமடைகிறது.
அதுவே எனக்குப் “மறு கரையை நோக்கிய பயணம்.”

அருட்செல்வமே உண்மையான செல்வம்

அதனால்தான் வள்ளுவர் கூறுகிறார்:
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.”
— குறள் 241

நம்மை ஆட்டுவிக்கும் பொருட்செல்வம் நிறைந்த கரையிலிருந்து விலகி, அருட்செல்வம் நிறைந்த கரையை நோக்கிச் செல்வதே நமது ஆன்மிக நோக்கமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், பொருளைப் பற்றிய ஆசை தொடர்ந்து புதிய பற்றுகளை உருவாக்குகிறது.

அருளை நோக்கிய பயணம், அந்தப் பற்றுகளைத் தளரச் செய்கிறது.
“மறு கரை” — பிறவிக்குப் பிந்தைய இடமா?


இங்கே இன்னொரு கேள்வி எழுகிறது

மறு கரையை அடைந்துவிட்டால் என்ன நடக்கும்?
இதற்கு நான் புரிந்துகொண்ட விதத்தில் மூன்று நிலைகளைப் பார்க்கிறேன்.
1. பயணம் தொடங்கியிருக்கிறது; ஆனால் முழுமை அடையவில்லை
ஒருவர் ஆன்மிக நாட்டம் பெற்றிருக்கலாம்.
பக்தி வளர்ந்திருக்கலாம்.
பொருளாசை குறைந்திருக்கலாம்.
ஆனால், பழைய மனப்பதிவுகளும் பற்றுகளும் முழுமையாக நீங்காமல் இருக்கலாம்.
அந்த நிலையில் மரணம் ஏற்பட்டால், அந்த ஆன்மிக நாட்டம் அடுத்த பிறவியிலும் தொடரும் என்ற நம்பிக்கை இந்திய ஆன்மிக மரபுகளில் காணப்படுகிறது.

2. பந்தங்கள் பெருமளவு நீங்கிய நிலை
ஒருவருடைய ஆசைகளும் பற்றுகளும் பெருமளவு தளர்ந்து, தனிப்பட்ட விருப்பத்தால் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற உந்துதல் இல்லாத நிலை ஏற்படலாம்.
அப்படிப்பட்டவரின் பிறப்பு, சாதாரணமான ஆசை–பற்று சார்ந்த பிறவியிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.

ஞானிகள், சித்தர்கள் போன்ற மகான்களின் பிறப்பை இவ்வகையில் சில ஆன்மிக மரபுகள் விளக்குகின்றன.

இதை நான் ஒரு ஆன்மிகப் புரிதலாகவே பார்க்கிறேன்; கட்டாயமான கோட்பாடாக அல்ல.

3. முழுமையான விடுதலை
இறுதியில், தனித்த “நான்” என்ற அடையாளமே முற்றிலும் நீங்கும்போது, அதுவே மோட்சம்.
அத்வைதத்தின் பார்வையில் இதை,
“ஜீவாத்மா எங்கோ சென்று பரமாத்மாவுடன் கலந்து விடுகிறது”
என்று மட்டும் கூறுவது துல்லியமான விளக்கம் அல்ல.

ஏனெனில், அத்வைதத்தின் அடிப்படைப் புரிதலில் ஜீவனுக்கும் பிரம்மத்திற்கும் உண்மையில் இரண்டுத்தன்மை இல்லை.

மாயையாலும் அவித்யையாலும் தனித்தன்மை இருப்பதுபோல் தோன்றுகிறது.

அந்தத் தவறான அடையாளம் நீங்கும்போது, “நான் வேறு; இறைவன் வேறு” என்ற உணர்வே மறைகிறது.

அதுவே ஞானம். அதுவே விடுதலை.

உண்மையில் இரண்டு கரைகள் இல்லை இதனால் ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகிறது.
“மறு கரை” என்பது உண்மையில் எங்கோ இருக்கும் ஒரு புவியியல் இடம் அல்ல.

இரண்டு கரைகள் என்று சொல்வதும் ஒரு உருவகம் மட்டுமே.

ஒரு நிலையில் நாம் பந்தங்களில் சிக்கியிருக்கிறோம்.
மற்றொரு நிலையில் பந்தங்களிலிருந்து விடுபடுகிறோம்.

எனவே,
“பந்தங்களில் மாட்டிக்கொண்ட நிலை”
மற்றும்
“பந்தங்களிலிருந்து விலகிவிட்ட நிலை”
என்று சொல்வதே இன்னும் பொருத்தமாக இருக்கலாம்.

இறுதியில், அத்வைதத்தின் பார்வையில் “மறு கரை” கூட இல்லை; கரையற்ற நிலையே உண்மை.

படித்துறைக்கு பல வழிகள்
படித்துறையில் ஏறுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் காட்டுகின்றனர்.
பதஞ்சலி,
“ஈஸ்வர ப்ரணிதானம்”
என்று கூறுகிறார் — இறைவனிடம் தன்னை அர்ப்பணிப்பது ஒரு வழி.

பத்திரகிரியார்,
“ஓசைமணி தீபத்தில் ஒன்றிவிடு”
என்று கூறுகிறார்.

திருவள்ளுவர்,
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”
என்று கூறுகிறார்.

வழிகள் பல. ஆனால் நோக்கம் ஒன்றுதான்: பற்றிலிருந்து விடுபடுதல்.

          எளிய சரணாகதி

இவை எதுவும் நம்மால் செய்ய முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் இறைவனை வணங்கும்போது பொருள் சார்ந்த எதையும் கேட்காமல் இருக்க முயற்சி செய்யலாம்.

அதற்குப் பதிலாக இப்படிக் கேட்கலாம்:
“இறைவா, நீ எதைக் கொடுத்தாலும் அதை உன் பிரசாதமாக ஏற்றுக்கொள்கிறேன். ஒருவேளை நீ கொடுப்பது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தாலும், அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை மட்டும் எனக்குக் கொடு.”

இது ஒரு சிறிய பிரார்த்தனை.
ஆனால் அதன் பின்னால் ஒரு பெரிய மாற்றம் இருக்கிறது.

“எனக்கு இது வேண்டும்; அது வேண்டாம்” என்ற மனநிலையிலிருந்து,
“நீ கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்”
என்ற மனநிலைக்கு நாம் நகர்கிறோம். அதுதான் சரணாகதியின் தொடக்கம்.

     “ஆற்றில் கிடந்தும்...”

இப்போது பட்டினத்தாரின் அந்த வரியை மீண்டும் படித்துப் பார்ப்போம்:

“ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!”
நாம் ஏற்கனவே ஆற்றில் இருக்கிறோம்.
படித்துறையும் நமக்கு எதிரிலேயே இருக்கிறது.

ஆனால், நாம் மட்டும் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.

மற்றவர்கள் எந்த வழியில் செல்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
“அவர்களுக்கு ஞானம் இருக்கிறது; எனக்கு இல்லை.”
“அவர்களால் தியானம் செய்ய முடிகிறது; என்னால் முடியவில்லை.”
“அவர்கள் பெரிய சாதனை செய்துவிட்டார்கள்; நான் ஒன்றும் செய்யவில்லை.”
என்று நம்மை நாமே குறை கூறிக்கொள்கிறோம்.

அதற்குப் பதிலாக, பட்டினத்தார் நம்மிடம் சொல்வது இதுவாக இருக்கலாம்:
“நீ இருக்கும் இடத்திலிருந்தே தொடங்கு. உனக்குக் கிடைத்த வழியிலேயே தொடங்கு.
மற்றவர்களைப் பார்த்துக் கவலைப்படாதே. எதிரிலேயே படித்துறை இருக்கிறது.
ஒரு படி ஏறு. பிறகு இன்னொரு படி ஏறு. அவ்வளவுதான்.”

அந்த முதல் படி நம்பிக்கையாக இருக்கலாம்.
அடுத்த படி சரணாகதியாக இருக்கலாம்.
அதற்கடுத்த படி பற்றின்மையாக இருக்கலாம். இறுதியில்,
“நான் ஏறுகிறேன்” என்ற எண்ணம்கூட இல்லாமல் போகலாம்.

அப்போது...ஆறு எங்கே? கரை எங்கே? கரையேறியது யார்?
என்று கேட்க வேண்டியதில்லை.

அதுவே, ஒருவேளை, “மறு கரை” என்ற உருவகத்தின் உண்மையான நோக்கமாக இருக்கலாம்.




திருமந்திரம் 2033




அஞ்சும் அடக்கு
“அஞ்சும் அடக்கு, அடக்கு” என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடுக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.”
— திருமந்திரம் 2033
“அஞ்சும் அடக்கு” என்றால் என்ன?
ஐம்புலன்களை அடக்கினால், அவை அறிவற்ற சடப்பொருளைப் போன்றதாகிவிடும்; மேலும், ஐந்தையும் முற்றிலும் அடக்கிய தேவர்கள்கூட இல்லை என்கிறார் திருமூலர்.
கூடவே, ஐந்தையும் அடக்காமல் அவற்றை முறையாகக் கையாளும் உபாயத்தையும் தான் அறிந்து கொண்டதாகக் கூறுகிறார்.
திருவள்ளுவர், பத்திரகிரியார் போன்றோர் கூறியிருப்பவற்றைப் பார்க்கும்போது, அவை திருமூலரின் கருத்துக்கு எதிரானவை போல முதலில் தோன்றுகின்றன.
ஐந்தடக்கம்
“ஒருமையுள் ஆமைபோல்
ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து.”
— திருக்குறள் 126
திருவள்ளுவர் “ஐந்தடக்கல்” என்று கூறுகிறார். எந்த ஐந்து என்பதை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், விளக்கவுரை எழுதுபவர்களில் சிலர் அதை ஐம்பொறிகள் என்று குறிப்பிடுகிறார்கள்.
அதேபோல் பத்திரகிரியாரும்,
“ஆமை வரும் ஆட்கண்டு
ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு
ஒடுங்குவது மெக்காலம்?”
— பத்திரகிரியார் 19
என்று பாடுகிறார்.
இதற்கும் சில உரையாசிரியர்கள் “பஞ்சேந்திரியங்களை ஒடுக்கி” என்று விளக்கம் அளிக்கிறார்கள்.
இதைப் போன்றதொரு கருத்து பகவத்கீதையிலும் வருகிறது:
“ஆமை தன் உடல் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதுபோல், எவன் தன் புலன்களை அவற்றின் விஷயங்களிலிருந்து மீட்டுக் கொள்கிறானோ, அவனுடைய அறிவு நிலைபெற்றதாகும்.”
— பகவத்கீதை 2.58
மேலே கூறப்பட்டவற்றைப் பார்க்கும்போது, கீதை சொல்லும் கருத்தே திருமூலரின் கருத்துடன் முரண்படாமல் புரிந்து கொள்ளக்கூடியதாகத் தோன்றுகிறது.
அது எப்படி என்று பார்ப்போம்.
ஆரம்பநிலையும் அறுதிநிலையும்
திருவள்ளுவரும், பத்திரகிரியாரும், கீதையும் கூறுவது ஆரம்ப நிலையில் மனிதன் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி என்று எடுத்துக் கொள்ளலாம்.
திருமூலர், அதற்கு அடுத்த நிலையில் ஏற்பட வேண்டிய உண்மையான புரிதலை வெளிப்படுத்துகிறார்.
ஆரம்பத்தில் புலன்களைப் பின்தொடராமல் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.
ஆனால் இறுதியில் புலன்களை அழித்துவிடுவது நோக்கமல்ல.
புலன்கள் இயங்கட்டும்;
அவற்றின் பின்னால் மனம் ஓடாமல் இருக்கட்டும்.
இதுவே இங்கு முக்கியமான வேறுபாடு.
சுபாவமும் பழக்கமும்
மனிதனின் சுபாவம் மற்றும் பழக்கம் பற்றி இரண்டு பழமொழிகள் உள்ளன:
பிறவி குணத்தை மாற்ற முடியாது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
இந்த இரண்டையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
பலர் தங்களுடைய பிறவிக் குணங்களையும், பழக்கங்களையும் மாற்றிய வரலாறு இருக்கிறது.
இதற்குச் சம்பந்தமாக ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு:
“Habits die hard.”
நேரடியாக மொழிபெயர்க்காமல் சொல்வதாக இருந்தால்,
“பழக்கம் என்பது எளிதாக மாற்றக்கூடிய ஒன்றல்ல.”
என்று கூறலாம்.
இதிலிருந்து ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
பழக்கத்தை மாற்றுவது கடினமாக இருக்கலாம்;
ஆனால் மாற்ற முடியாதது அல்ல.
ஆகவே, நாம் மாற்ற வேண்டியது ஐம்புலன்களை அல்ல.
அவற்றை இயக்கும் மனப்போக்கைத்தான்.
ஐம்புலன்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
மாற்ற வேண்டியது ஐம்புலன்களின் செயல்பாடுதான் என்று கூறினால், முதலில் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனின் செயல்பாடுகளுக்கும் ஐம்புலன்களுக்கும் என்ன சம்பந்தம்?
பகவத்கீதை கூறுகிறது:
“உன்னை நீயே கட்டுப்படுத்தி வளர்ச்சி அடைய முடிந்தால், நீயே உனக்கு நண்பன்; உன்னை நீயே கட்டுப்படுத்த முடியாமல் வீழ்ச்சி அடைந்தால், நீயே உனக்கு எதிரி.”
— பகவத்கீதை 6.5–6.6
இங்கே இரண்டு கேள்விகள் எழுகின்றன:
1. கட்டுப்படுத்துதல் என்றால் என்ன?
2. யாரை அல்லது எதைக் கட்டுப்படுத்த வேண்டும்?
ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், மனிதனைத் தவறான செயல்களுக்கு இழுத்துச் செல்வது ஐம்புலன்கள்தான் என்று முதலில் நினைக்கத் தோன்றலாம்.
ஆனால் எந்தவொரு உந்துதலும் இல்லாமல் ஐம்புலன்களால் தாமாகவே அவ்வாறு செயல்பட முடியாது.
அப்படியானால், அவற்றின் பின்னணியில் இருக்கும் காரணி எது?
புலன்களும் வாசனைகளும் — ஒரு மாயச் சுழற்சி
ஒருபுறம் பார்த்தால், ஆழ்மனத்தில் உள்ள பதிவுகள் புலன்களின் மூலம் மனிதனைப் புறவுலகை நோக்கி இழுக்கின்றன.
மறுபுறம் பார்த்தால், புலன்களின் மூலம் பெறப்படும் அனுபவங்களே மனத்தில் புதிய பதிவுகளை உருவாக்குகின்றன.
இது “கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?” என்ற கதையைப் போன்றது.
ஒரு வகையில் இது ஒரு மாயச் சுழற்சி.
புற உலகிலிருந்து உள்ளுக்கும்,
உள்ளுக்குள் இருந்து புற உலகுக்கும்
என்று இந்தச் சுழற்சி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சுழற்சி ஏற்படுத்தும் தொல்லைகளைப் புரிந்து கொண்டு, ஐம்புலன்களை எவ்வாறு கையாள்வது என்பதைத் தெரிந்து கொண்டால், வாழ்க்கையை மிகுந்த அமைதியுடன் நடத்த முடியும்.
ஆனால் அந்தச் சுழற்சியைப் புரிந்து கொள்வதற்கு முன்னால், நாம் இன்னொரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐம்புலன்கள் என்றால் என்ன?
ஐம்புலன்கள் என்றால் சிலர்,
“மெய், வாய், கண், மூக்கு, செவி”
என்று கூறுவதுண்டு.
இவை உண்மையில் ஐம்பொறிகள் — sense organs.
அதாவது, உடலின் உணர்வுக் கருவிகள்.
ஐம்புலன்கள் (senses) என்பது இந்தக் கருவிகளின் மூலம் புறவுலகிலிருந்து தகவல்களைப் பெறும் உணர்வுச் செயல்முறையுடன் தொடர்புடையவை.
எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்,
மனதை ஒரு அதிகாரி என்று வைத்துக் கொண்டால்,
ஐம்புலன்கள் அதன் உதவியாளர்கள்;
ஐம்பொறிகள் அவர்களுக்கான கருவிகள்.
மனம் எதையாவது விரும்பத் தொடங்கினால், புலன்கள் உடனே அதற்கான தகவல்களைத் தேடத் தொடங்குகின்றன.
ஒரு கார் உதாரணம்
புதியதாக ஒரு கார் வாங்க வேண்டும் என்று மனம் நினைத்தால் போதும்.
உடனே கண்கள் விளம்பரங்களைப் பார்க்கத் தொடங்கும்.
காதுகள் பிறர் கூறும் தகவல்களைக் கேட்கும்.
கைகள், காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அதன் அனுபவத்தைப் பெறும்.
மூக்கு, அதன் வாசனையைக்கூட உணரலாம்.
இவ்வாறு புலன்கள் தங்களுக்குக் கிடைக்கும் வழிகளில் தகவல்களைச் சேகரித்து மனத்திடம் கொண்டு சேர்க்கின்றன.
கார் வாங்கும்வரை, அல்லது கார் வாங்க வேண்டாம் என்று முடிவு எடுக்கும் வரை, இந்தச் செயல்முறை தொடர்ந்து நடைபெறலாம்.
அதேபோல்,
“நாமும் கொஞ்சம் குடித்தால் என்ன?”
என்று மனத்தில் ஓர் எண்ணம் தோன்றினால், அதற்குத் தேவையான தகவல்களைத் தேடுவதிலும் புலன்கள் உதவத் தொடங்கலாம்.
அவற்றுக்கு நாம் அதிக இடம் கொடுத்தால், மனத்தின் விவேகமான முடிவை விட ஆசையின் உந்துதல் வலுப்பெறலாம்.
அதனால் நாம் விரும்பாத செயல்களைக்கூடச் செய்ய நேரிடலாம்.
இதைத்தான் கீதையும் எச்சரிக்கிறது:
“மனம் அலைந்து திரியும் புலன்களைப் பின்தொடர்ந்தால், காற்று நீரில் செல்லும் படகை அடித்துச் செல்வதுபோல், அந்தப் புலன்கள் மனிதனுடைய புத்தியையும் அடித்துச் சென்று விடுகின்றன.”
— பகவத்கீதை 2.67
புறத்திலிருந்து அகத்திற்கு
இனி, உள்ளும் புறமும் நடைபெறும் அந்தச் சுழற்சியைப் பார்ப்போம்.
புறவுலகில் மனிதனுக்கு ஏற்படும் அனுபவங்கள் பெரும்பாலும் புலன்களின் வாயிலாகவே அவனை வந்தடைகின்றன.
புலன்கள் செயல்படாவிட்டால், புறவுலகிலிருந்து வரும் பல்வேறு தகவல்கள் மனத்தை அடையாது.
எனவே, இந்தச் சுழற்சியின் ஆரம்பப் புள்ளியாக புலன்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம்.
ஒரு பள்ளி மாணவனிடம் அவனுடைய சக மாணவன்,
“குறிப்பிட்ட அந்தக் கடையில் ஐஸ்கிரீம் மிகவும் நன்றாக இருக்கும்”
என்று கூறுகிறான்.
1. புறவுலகிலிருந்து தாக்கம்
அந்தத் தகவல் அவனது புலன்களின் வழியாக மனத்தில் பதிவாகிறது.
மறுநாள் தந்தையுடன் கடைத்தெருவுக்குச் செல்லும்போது,
“அந்தக் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்”
என்ற எண்ணம் அவனிடம் தோன்றுகிறது.
2. எண்ணம் மற்றும் ஆசை
பின்னர் தந்தையிடம் கேட்டு, அந்தக் கடையில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுகிறான்.
3. ஆசை செயலாகிறது
ஐஸ்கிரீம் அவனுக்குப் பிடித்துவிடுகிறது.
அதனால் தினந்தோறும் அதைச் சாப்பிடத் தொடங்குகிறான்.
4. தொடர்ந்து செய்யப்படும் செயல் பழக்கமாகிறது
தொடர்ந்து நடைபெறும் செயல், காலப்போக்கில் மனத்தில் ஆழமான பதிவை உருவாக்கக்கூடும்.
இவ்வாறு,
புற உலகம் → புலன்கள் → மனம் → ஆசை → செயல் → மீண்டும் பதிவு
என்ற பயணம் நடைபெறுகிறது.
அகத்திலிருந்து புறத்திற்கு
இப்போது இதற்கு எதிரான பயணத்தைப் பார்ப்போம்.
யோக–வேதாந்த மரபில், ஆழ்மனப் பதிவுகளை வாசனைகள் என்று குறிப்பிடுவது உண்டு.
மரபுவழி பார்வையில், மனிதன் பிறக்கும்போதே சில வாசனைகளுடன் பிறக்கிறான்; அவை முற்பிறவிகளில் இருந்து தொடர்ந்தவை என்று கருதப்படுகிறது.
அந்த வாசனைகள் மனிதனுடைய சுபாவம், விருப்பம், மனப்போக்கு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதனை ஒரு தொடர் வரிசையாகப் பார்ப்போம்:
1. வாசனைகள் அஹங்காரத்தை வலுப்படுத்துகின்றன.
2. அஹங்காரம் ஆசைகளை உருவாக்குகிறது.
3. ஆசைகளின் அடிப்படையில் சுபாவமும் மனப்போக்கும் வெளிப்படுகின்றன.
4. ஆசைகளின் உந்துதலால் மனம் புலன்கள் மற்றும் புலனுறுப்புகளின் துணையுடன் புறவுலகில் செயல்படுகிறது.
5. அந்தச் செயல்களின் விளைவுகளை மீண்டும் புலன்களின் மூலம் மனம் அனுபவிக்கிறது.
6. அந்த அனுபவங்கள் புதிய பதிவுகளை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு,
வாசனை → அஹங்காரம் → ஆசை → செயல் → அனுபவம் → புதிய பதிவு
என்ற மற்றொரு சுழற்சி உருவாகிறது.
இந்தச் சுழற்சிகள் தொடர்ந்து நடைபெறும்போது, அவை மனிதனுடைய எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்கின்றன.
முற்பிறவி–மறுபிறவி பற்றிய விளக்கங்கள் யோக–வேதாந்த மரபைச் சார்ந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
“அஞ்சும் அடக்கு” — உண்மையில் எதை அடக்குவது?
திருமூலர், திருவள்ளுவர், பத்திரகிரியார் ஆகியோர் கூறிய “ஐந்தடக்கம்” போன்ற கருத்துகள் கீதையிலும் காணப்படுகின்றன.
கீதையில் கிருஷ்ணர், புலன்களைப் பற்றிய ஆசையின் ஓட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
குறிப்பாக,
“எனவே முதலில் புலன்களை அடக்கி, ஞானத்தையும் விவேகத்தையும் அழிக்கும் இந்தக் காமத்தை வெல்.”
— பகவத்கீதை 3.41
என்று கூறுகிறார்.
இந்த வார்த்தைகளை நேரடியாகப் பொருள் கொண்டு, “ஐம்புலன்களை அழித்துவிடு” என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஐம்பொறிகளை வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுப்படுத்தலாம்.
ஆனால் புலனறியும் திறனை அழிப்பது ஆன்மிகத்தின் நோக்கமல்ல.
அவற்றை இயக்கும் ஆசை, பற்றுதல், வாசனை, மனப்போக்கு ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் புலன்களின் செயல்பாடு இயல்பாகவே கட்டுப்பாட்டுக்குள் வரும்.
மனமும் புத்தியும்
உணர்வு மனம் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியது.
அது உணர்ச்சியின் வேகத்தில் செல்லாமல் இருந்தால், தேவையற்ற ஆசைகள் மனத்தில் தொடர்ந்து தோன்றாமல் இருந்தால், புலன்களும் கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்கும்.
அதற்கு மனம் தனித்து இயங்காமல், புத்தியின் விவேகத்திற்குக் கீழ்ப்படிந்து செயல்பட வேண்டும்.
மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், புலன்களால் ஏற்படும் தூண்டுதல்களையும் வாசனைகளால் எழும் உந்துதல்களையும் நாம் உடனடியாகப் பின்பற்றாமல் இருக்க முடியும்.
ஆனால் ஆழ்மனப் பதிவுகள் ஒரே நாளில் மறைந்து விடுவதில்லை.
அவை தொடர்ந்து நம்மைத் தொந்தரவு செய்யலாம்.
எனவே, அவற்றின் பிடியைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.
“பாவம் என்று தெரிந்தும் ஏன் செய்கிறான்?”
இதற்குச் சம்பந்தமாக அர்ஜுனன் பகவான் கிருஷ்ணனிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறான்:
“மனிதன் செய்யக்கூடாது என்று தெரிந்திருந்தும், ஏதோ ஒரு சக்தியால் கட்டாயப்படுத்தப்பட்டவனைப் போலத் தவறு செய்வது ஏன்?”
— பகவத்கீதை 3.36
அதற்குக் கிருஷ்ணர்,
“இரஜோ குணத்திலிருந்து எழும் காமமும், அதிலிருந்து உருவாகும் கோபமும் இதற்குக் காரணம். இவையே அவனுடைய எதிரிகள்.”
— பகவத்கீதை 3.37
என்று கூறுகிறார்.
ஒரு மனிதனிடம் இரஜோ குணம் மேலோங்கும்போது, ஆசைகளும் அதிகரிக்கலாம்.
ஆசைகள் பெருகும்போது, புலன்கள் அந்த மனிதனை மேலும் மேலும் புறவுலகை நோக்கி இழுத்துச் செல்லலாம்.
ஆசை நிறைவேறாதபோது கோபமும் உருவாகலாம்.
இந்த நிலையில் மனிதன் தன் புத்தியின் அறிவுரையைப் புறக்கணித்து, மனத்தின் உந்துதலுக்கேற்ப செயல்படக்கூடும்.
யோக–வேதாந்தப் பார்வையில், வாசனைகள் மற்றும் அவற்றிலிருந்து எழும் அஹங்கார–ஆசைச் சுழற்சி குணங்களின் வெளிப்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
அகத்தாய்வு
ஆழ்மனத்தில் உள்ள பதிவுகள் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தால், உணர்வு மனம் மீண்டும் புத்தியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, தனித்து இயங்க நேரிடலாம்.
ஆகவே, ஆழ்மனப் பதிவுகளின் பிடியைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இதுசம்பந்தமாக இன்னொரு முக்கியமான உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உணர்வு மனம் புறவுலகில் பிரவேசிக்க புலன்களின் உதவி தேவை.
ஆனால் அகவுலகைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினை இல்லை.
அகத்தில் சிந்தனை செய்வதாக இருந்தாலும், தன்னைத் தானே ஆய்வு செய்வதாக இருந்தாலும், அல்லது ரமண மகரிஷி கூறியபடி,
“நான் யார்?”
என்று விசாரிப்பதாக இருந்தாலும், அங்கே புலன்களின் பங்கு அவசியமானதல்ல.
எனவே, தினந்தோறும் குறைந்தது அரைமணி நேரமாவது அகத்தாய்வுக்கு ஒதுக்குவது, மனத்தின் இயல்பைப் புரிந்து கொள்ளவும், புலன்களின் மீது நமக்குள்ள சார்பைக் குறைக்கவும் நல்லதொரு வழியாக இருக்கலாம்.
அஞ்சும் அடக்கு — இறுதிப் புரிதல்
இப்போது திருமூலரின்,
“அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே”
என்ற வார்த்தைக்கு மீண்டும் வருவோம்.
“அஞ்சும் அடக்கு” என்பது ஐம்புலன்களை அழிப்பது அல்ல.
புலன்கள் அவற்றின் இயல்பான பணியைச் செய்யட்டும்.
ஆனால் அவற்றின் பின்னால் ஓடும் மனத்தைப் புரிந்து கொள்வோம்.
மனத்தை இயக்கும் ஆசைகளைப் புரிந்து கொள்வோம்.
ஆசைகளுக்குப் பின்னால் இருக்கும் வாசனைகளைப் புரிந்து கொள்வோம்.
வாசனைகளின் பிடி குறையும்போது, மனம் தெளிவடையும்.
மனம் தெளிவடைந்தால், புத்தியின் விவேகம் வெளிப்படும்.
புத்தியின் விவேகம் விழித்தெழுந்தால், புலன்கள் நமக்கு எஜமானர்களாக இல்லாமல், நமது கருவிகளாக மாறிவிடும்.
அப்போது,
புலன்களை அடக்க வேண்டியதில்லை;
அவை தாமாகவே அடங்கி நிற்கும்.
இதுவே,
“அஞ்சும் அடக்கு”
என்பதன் ஆழமான பொருளாக இருக்கலாம்.
ஐம்புலன்களை வெல்வது என்பது
அவற்றை அழிப்பதல்ல;
அவற்றின் பின்னால் ஓடும் மனத்தை வெல்வதே.