Sunday, 9 August 2026

ஆற்றில் கிடந்தும்

ஆற்றில் கிடந்தும்

நம்மில் பெரும்பாலோர் பின்பற்றுவது "பக்தி மார்க்கம்". ஆலயங்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது, வீட்டில் பூஜை செய்வது, சடங்கு, சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பது, ஆக எல்லாவற்றிலும் மன திருப்தியோடு கலந்து கொள்கிறோம்.

'எல்லாம் அவன் செயல்' என்பதையும் புரிந்து கொள்கிறோம். 

ஆனாலும், மனம் தேவையற்ற கவலைகளினாலும், பயத்தினாலும் அல்லல் படுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. அதிலும் முதுமை வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்; 'கவலைப் படுவதே' முக்கிய வேலையாக மாறிவிடுகிறது. இதற்கு தீர்வுதான் என்ன?



பட்டினத்தார் ஒரு பாடலில் நம்மை திட்டுவதுபோலத் திட்டி, மறைமுகமாக ஒரு வழியையும் காட்டுகிறார்.

வாழ்வியல் தத்துவம் பற்றி பட்டினத்தார் பல கோணங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

"ஒன்றென்றிரு தெய்வம்
உண்டென்றிரு.." என்று பாடும் போது பட்டினத்தார் 'மனமே உனக்கு உபதேசம் இதே', 'நெஞ்சே உனக்கு உபதேசம் இதே' என்று அறிவுரை சொல்கிறார்.

ஆனால், அவரே இன்னொரு பாடலில் மனதைக் கடுமையாகக் கடிந்து கொள்கிறார். அந்தப் பாடல் ..
"நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? 
நீ மனமே 

மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல் 

ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்? 

ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!"



நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. பட்டினத்தார் உண்மையில் அவரது மனதைத்தான் கடிந்து கொண்டாரா அல்லது நம்மைத்தான் (பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டவர்களை) கண்டனம் செய்கிறாரா?

பாடலின் இரண்டாவது வரியில் "மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை" என்று சொன்னவர், கடைசி வரியில் "படித்துறை இருந்தும் வழியறியாமல் அலைகின்றையே!" என்று சொல்லியிருக்கலாம்.

அதற்குப் பதிலாக 'ஆற்றில் கிடந்தும்' என்ற வார்த்தையைக் கூடுதலாகப் சேர்த்து "ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!" என்று ஏன் சொன்னார்?

தவிர, "ஆற்றில் கிடந்தும்" என்ற வார்த்தையில் ஒரு அழுத்தம் தெரிகிறது.

கூடவே 'குடும்ப வாழ்க்கையை' ஏன் 'ஆற்றோடு' ஒப்பிடுகிறார்?

நிச்சயமாக இதற்கு ஒரு காரணம் இருக்கும். அது என்னவாக இருக்கும்?

        
      
பட்டினத்தார் இந்தப் பாடல் மூலம் பக்தர்களைக் கடிந்து கொள்கிறாரோ எனத் தோன்றினாலும், "ஆற்றில் கிடந்தும்" என்ற வார்த்தைகளைப் பார்த்ததும் அவர் ஏதோ குறிப்பிட விரும்புகிறார் எனபது புரிந்தது.

அது என்னவாக இருக்கும் எனச் சிந்தித்த போது,
தென்கச்சி 
திரு. சுவாமிநாதன் அவர்கள் சொன்ன கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.

அந்தக் கதை .. 
ஒரு வீட்டில் ஐந்து சகோதரர்கள் இருந்தனர். (அவர் சகோதரர்கள் என்று சொன்னது ஐந்து விரல்களைத்தான்). சகோதரர்களுக்கிடையே ஒரு சந்தேகம் வந்து விடுகிறது .. 'தங்களுக்குள் யார் பெரியவரென்று?'.

கட்டை விரல் சொல்கிறது .. "நான்தான் பெரியவன். கிணற்றில் நீர் இறைத்தால் நீங்கள் நால்வரும் ஒரு பக்கம் கயிற்றைப் பிடிக்கிறீர்கள்; நான் ஒருவன் மட்டுமே கயிற்றை மறுபக்கம் பிடிக்கிறேன். அப்படியானால் நான்தானே பெரியவன். அது மட்டுமல்ல; பத்திரங்களில் எனது ரேகையை மட்டும்தானே நம்புகிறார்கள்".

சுட்டு விரல் சொல்கிறது ..
"நீ சொல்வது உண்மைதான். ஆனால், மற்றவர்கள் தவறு செய்யும்போது அதை சுட்டிக் காட்டும் தகுதி எனக்கு மட்டும்தானே உள்ளது. எனவே நான்தானே பெரியவன்"

நடு விரல் சொல்கிறது ..
"அதெல்லாம் எதற்கு; எல்லாரும் எழுந்து நிற்போம். யார் பெரியவர் என்பது தானேத் தெரிந்து விடும்".

மோதிர விரல் சொல்கிறது .. "எது எப்படியோ; எல்லாரும் மோதிரத்தை என்மீதுதானே போட்டு அழகு பார்க்கிறார்கள். அப்படியானால் எல்லாரையும் விட நான்தானே உசத்தி".

சுண்டு விரலுக்குத் தன்னைப் பற்றி பெருமையாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. இதைக் கண்டு மற்றவர்கள் எள்ளி நகையாட, அந்தக் கடைக்குட்டி பையன் சோர்வாக ஓர் மரத்தடியில் அமர்ந்து அழ ஆரம்பிக்கிறான். 

அங்கு வந்த நாரதர் அவன் காதில் எதையோ சொல்கிறார். அதைக் கேட்டதும் சுண்டு விரல் மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து சொன்னது..
"நீங்கள் ஆயிரம் சொல்லலாம். ஆனால், கடவுளுக்குப் பக்கத்தில் யார் இருக்கிறார் என்பதுதானே முக்கியம். நாம் எல்லாரும் சேர்ந்து கடவுளை வணங்கும் போது நான்தானே முதலில் நிற்கிறேன். அப்படியானால் நான்தானே பெரியவன்!?".




நாரதர் என்ன சொல்லியிருப்பார்? 
உங்கள் ஐந்து பேரில், நீ மட்டும்தான் கடவுளின் அருகில் இருக்கிறாய். அது தெரியாமல், அண்ணன்களிடம் உள்ள தகுதிகள் போன்று தன்னிடம் ஒன்றும் இல்லையே என்று புலம்புகிறாயே! அதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா என சொல்லியிருக்கலாம்.
          
மேலே சொன்ன கதை நினைவிற்கு வந்ததும், பட்டினத்தார் "ஆற்றில் கிடந்தும்" என்ற வார்த்தைகளை ஏன் குறிப்பிட்டார் என்பது புரிந்தது. 

மேலே சொன்ன கதையில் ஐந்து சகோதரர்கள் என்றால், இங்கு நான்கு சகோதரர்கள் ..
ஞானத்தை தேடுபவர், கர்மத்தில் ஈடுபடுபவர், தியானத்தில் கவனம் செலுத்துபவர் மற்றும் பக்தியில் நாட்டம் கொள்பவர்.

பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டவன் மற்றவர்களைப் பார்த்து, நம்மால் அவர்களைப் போல் ஞான மார்க்கத்திலோ, கர்ம மார்க்கத்திலோ, தியானத்திலோ ஈடுபாடு கொள்ள முடியவில்லையே என்று நினைத்திருக்கலாம். 

அவனைப் பார்த்து பட்டினத்தார் 
'அவர்கள், தாங்கள் ஆற்றங்கரையில் தான் இருக்கிறோம் என்பதை உணராமல், அவர்களுக்கே உரிய வழியில் ஆற்றைத் தேடி வெளியே ஓடுகிறார்கள். முடிவில் இந்த ஆற்றுக்கு வந்துதான் அடுத்த கரையில் ஏற முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் திரும்பி வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. 
நீயோ "எல்லாம் அவன் செயல்" என்று எண்ணி ஆற்றில் இறங்கி விட்டாய். அப்படி இருந்தும், எதிரே இருக்கும் படித்துறையில் ஏறுவதை விடுத்து, வீணே இங்கும் அங்குமாக அலைகின்றாயே' என்று
சொல்வதுபோல் தோன்றியது.



கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு ... "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தானாம்" என்று. 

கையில் இருக்கும் வெண்ணையை உருக்குவதற்குப் பதிலாக, மற்றவர்களைப் பார்த்து அவர்களெல்லாம் நெய் வாங்கக் கடைக்குப் போகிறார்கள்; என்னிடம் நெய் வாங்கப் பணம் இல்லையே என்று புலம்புவதைப் போல, எதிரே இருக்கும் படித்துறையில் ஏறுவதை விடுத்து எதற்காக மற்றவர்களைப் பார்த்துப் புலம்ப வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், "ஆற்றில் கிடந்தும்.." என்று பட்டினத்தார் கூறுகிறார்.

               

                                                                  ஆறு, மனிதனின் வாழ்க்கை இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?

ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். மனிதனின் மனத்திலும் எண்ண அலைகள், சிந்தனை என்று ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கும்.

வெள்ளம் வரும்போது ஆற்றுத் தண்ணீர் கலங்கி காணப்படும். மனிதனிடமும் கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் பொங்கி வழியும் போது, தேவையற்ற தவறான எண்ண அலைகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.




எல்லாம் சரி; ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் உண்டு. மனிதனின் வாழ்க்கையும் இரண்டு கரைகளுக்கு ஊடே தான் பயணம் செய்கிறதா?

"மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை" என்று பட்டினத்தார் கூறும்போது, 'இதே கரையில் மீண்டும் மீண்டும் பிறக்காதே; அடுத்த பிறவியிலாவது மறு கரையில் பிறக்க முயற்சி செய்' எனக் கூறுகிறாரா?




எனது புரிதலில் மறு கரை

(இனி வருவது பட்டினத்தார் பாடலின் நேரடி விளக்கம் அல்ல. 'மறு கரை' என்ற உருவகத்தை அடிப்படையாகக் கொண்டு, அத்வைதக் கோணத்தில் நான் புரிந்து கொண்ட சில சிந்தனைகளைப் பகிர்கிறேன்)

ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை இருப்பது போல், சம்சார பந்தத்தில் உழல்பவனுக்கும் இரண்டு பக்கமும் கரைகள் உண்டா எனக் கேட்டால், ஆமாம், உண்டு என வள்ளுவர் கூறுகிறார்.

வள்ளுவர் கூறுகிறார் ..
"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு"
.. குறள் 374.

ஒன்று பொருள் சார்ந்த உலகம்; மற்றொன்று அருள் சார்ந்த உலகம்.



நாம் அனைவருமே பொருள் சார்ந்த உலகம் இருக்கும் கரையில் தான் பிறந்து வளர்கிறோம். அதிலேயே மடிந்தும் போகிறோம்.
 
பொருள் சார்ந்த உலக வாழ்க்கையை விடுத்து, சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு அருள் சார்ந்த உலகம் நிறைந்த கரையில் பிறக்க நினைத்தாலும், அதனால் கிடைக்கும் பயன்கள் நமக்குத் தெரிவதில்லை.

மறுகரையில் ஏறினால் அவனது மனதில் உள்ள ஆசைகள் ஒவ்வொன்றாக மறைந்து விடும். அவன் "ஆணவம், கன்மம், மாயை" இவற்றிலிருந்து விடுபட்டு விடுவான். 



நமது நோக்கம் நம்மை ஆட்டுவிக்கும்
பொருட்செல்வம் என்ற கரையிலிருந்து விலகி அருட்செல்வம் நிறைந்த கரையை அடைவதுதான் என்பதாக இருக்க வேண்டும். அது ஒன்றே பிறப்பினை உருவாக்கும் ஆசைகளை அறுக்கும் வழியாகும்.

அதனால்தான் வள்ளுவரும் 
"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள"
(குறள் 241) எனப் பாடுகிறார்.


அன்பர் ஒருவர் 'மறு கரையைப்' பற்றி சில கேள்விகளை முன் வைத்தார். இது சம்பந்தமாக நான் முன்னரே நினைத்ததுண்டு. தேவையில்லாமல் அதைப் பற்றி எழுத வேண்டாம் என நினைத்தேன். இப்பொழுது எழுத வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
எனது எண்ணங்கள் "அத்வைத" கோட்பாட்டின் படி நான் புரிந்து கொண்டவை.



"பொருள் தேடி புண்பட்டு
பொய்யுலகில் வாழாமல்
அருள் தேடி அன்புற்று 
அகமகிழ்வ தெக்காலம்?"

ஒரு கரையில் நாம் பிறந்து அங்கு பொருளைத் தேடி ஓடுகிறோம். மறு கரைக்கு சென்று விட்டால் அருள் நம்மைத் தேடி வரும்.

மறு கரையை அடைந்து அதன் பின் இறப்பு வந்தால், அதன்பின் மூன்று விதமான விளைவுகள் ஏற்படும். அவை ..

1. மறு கரையை அடைந்து விட்டோம்; ஆனாலும் மும்மலங்களும் முழுமையாக மறையவில்லை.
அந்த நிலையில் இறப்பு வந்தால், மீண்டும் பிறக்கும்போது அருள் நாட்டம் உள்ள மனிதனாக பிறப்போம்.

2. மும்மலங்களும் ஆழ்மனதிலிருந்து முழுமையாக நீங்கிய பின் (ஜீவாத்மாவை சுற்றியுள்ள மாயத்திரை விலகுமுன் மரணம் நேர்ந்தால்), அந்த மனிதனுக்கு மீண்டும் பிறப்பதற்கான விருப்பம் எதுவும் இருக்காது. அந்த நிலையில் இறைவன் விரும்பினால் மட்டுமே மீண்டும் ஒரு பிறவி வரும். அதுபோன்ற பிறவியில் அவன் ஒரு ஞானியாக, ஒரு சித்தராக அல்லது ஒரு "அவதார புருஷனாக" இந்த பூமியில் வலம் வருவான். 

3. ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியே. இருப்பினும், அது ஒரு மாயத் திரையின் உள்ளே இருப்பதால், அதனை ஜீவாத்மா என பிரித்து உணர்கிறோம்.
ஜீவாத்மாவை சுழ்ந்துள்ள மாயத் திரையின் மீது, நமது வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களைப் பதிவு செய்கிறோம்; அதன் காரணமாக அதனை "ஆழ்மனம்" என்கிறோம். இந்தப் பதிவுகள் அனைத்தும் நீங்கப் பெற்று, அதன்பின் ஜீவாத்மாவைச் சூழ்ந்துள்ள மாயத் திரையும் அழிந்து விட்டால், அந்த மனிதன் மோட்ச நிலையை அடைந்து விடுகிறான். இனி ஜீவாத்மா உடலை விட்டு "சகசிரதளம்" வழியாக வெளியேறி விடும்.

உடலை விட்டு நீங்கிய பின் அது பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடும்.

பின் அந்த மனிதனுக்கு பிறவியேதும் கிடையாது.
(இது என்னுடைய புரிதல் மட்டுமே)




பட்டினத்தார் பக்தனிடம்
'மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதே. நீ ஆற்றில்தானே இருக்கிறாய். எதிர்த்தால் போல் படித்துறை இருக்கிறது. போய் ஒவ்வொரு படியாக ஏறி கரையின் மேலே போக வேண்டியதுதானே' எனக் கூறுகிறார்.

('இரண்டு கரைகள்' என்றதும் அன்பர்களுக்கு பலவிதமான சந்தேகங்கள் வருகின்றன. இரண்டு கரைகள் என்பது உதாரணத்திற்காக சொல்லப்பட்ட ஒன்று. உண்மையில் கரையென்று எதுவும் கிடையாது.

வேண்டுமானால்,
'பந்தங்களில் மாட்டிக் கொண்ட நிலை'; 'பந்தங்களில் இருந்து விலகி விட்ட நிலை' எனச் சொல்லலாம்.)



படித்துறையில் ஏறுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் காட்டுகின்றனர்.

ரிஷி பதஞ்சலி "ஈஸ்வர ப்ரணிதானத்" என்கிறார். அதாவது இறைவனை சரணடைவதின் மூலம் படிகளைக் கடந்து செல்லலாம் என்கிறார்.

பத்திரகிரியார் "ஓசைமணி தீபத்தில் ஒன்றிவிடு" என்கிறார்.

திருவள்ளுவர் "பற்றற்றான் பற்றினை பற்றிக்கொள்" என்கிறார்.

இவை கூட வேண்டாம்; கடவுளை வணங்கும் போது பொருள் சார்ந்த எதையும் வேண்டாமல், அதற்குப் பதிலாக...

"இறைவா, நீ எதைக் கொடுத்தாலும், அதை உன் பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறேன். ஒருவேளை நீ கொடுப்பது எனக்கு மிகுந்த வேதனையைத் தருமானால் அதைத் தாங்கக்கூடிய சக்தியை மட்டும் கொடு" என்று வேண்டுங்கள்; நீங்கள் கரையேறி விடலாம்.

இதைத்தான் 'சரணாகதி' என்று சொல்கிறார்களோ!!








    

 










.





              




 







  















               











.
























 











































           













 

திருமந்திரம் 85


"நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின் 
ஊன்பற்றி நின்ற  உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே"
.. திருமந்திரம் 85

மேலே உள்ள பாடலின் கடைசி இரண்டு வரிகளில் வரும் வார்த்தைகளை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது சுவாசத்திற்கும், "ஓம் நமசிவாய" எனும் மந்திரத்திற்கும் இடையே ஒரு ஒத்திசைவு உள்ளது.

சுவாசம் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் 1:2 என்ற விகிதத்தில் இருக்கும். "ஓம் நமசிவாய" எனும் மந்திரமும் அதே விகிதத்தில் தான் உள்ளது. 
(ஓம் .. 3; நமசிவாய .. 6)


எனவே, மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் போது மௌனமாக "ஓம்" என்று உச்சரியுங்கள்; மூச்சுக் காற்றை வெளி விடும் போது மௌனமாக "நமசிவாய" என்று உச்சரியுங்கள்.

மற்ற மந்திரங்கள் 1:2 என்ற விகிதத்தில் இருக்காது. ஆனால், பயிற்சி செய்யும் பொருட்டு சிறிய மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு - -
அயம் ஆத்மனே
ஓம் சரவணாய
ஓம் கிருஷ்ணாய
ஓம் வெங்கடேச
ஓ லார்ட்
ஓ ஜீசஸ்




இதனை 'பிரணாயாமப் பயிற்சி' செய்யும்போதும் பயன்படுத்தலாம்; சும்மா இருக்கும் மற்ற நேரங்களிலும், மூச்சு வந்து போவதைக் கவனித்து அதனுடன் இந்த மந்திரத்தைச் சேர்த்து சொல்லலாம்.

இந்தப் பயிற்சியை முறையாக செய்து வந்தால், அது உங்களுக்கும், ஆழ்மனப் பதிவுகளுக்கும் இடையே ஒரு நிரந்தரப் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி விடும்.

அதன்பின் ஆழ்மனதில் உள்ள 'எதிர்மறை உணர்ச்சிகளால்' உங்களை உசுப்பேத்த முடியாது.
 
இதனால்தான் மாணிக்கவாசகரும் "இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி" என்று பாடினாரோ?

இனி, பாதுகாப்பு கவசம் எப்படி உருவாகிறது எனப் பார்ப்போம்.




நாம் தினந்தோறும் தேவாரம். திருவாசகம், கந்த சஷ்டி கவசம் என ஏதாவது ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறோம். அவை ஆழ்மனதில் நினைவுப் பெட்டகத்தில் தங்கி விடுகின்றன. தேவைப்படும்போது அவற்றை நம்மால் நினைவுகூற முடிகிறது.

நாம் சாப்பிடும் உணவு உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் வழியாகப் பயணிக்கிறது.

உணவிலிருந்து சத்துக்களைப் பிரித்தெடுத்து அது இரத்தமாக மாறி நாளங்களில்  ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆக, ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது.
ஆனால், நாம் சுவாசத்தோடு "ஓம் நமசிவாய" மந்திரத்தை உச்சரிக்கும்போது என்ன நடக்கிறது?




நாம் சுவாசிக்கும் போது ஆக்சிஜன் மட்டும் வருவதில்லை; கூடவே பிராண வாயுவும் (பிராண சக்தி) உள்ளே வருகிறது. 

பயிற்சியாளரின் அனுபவத்தில், உச்சரிக்கப்படும் மந்திரம் பிராண வாயுவோடு இணைந்து உடல் முழுவதும் பரவியிருப்பது போன்ற ஒரு உணர்வு உருவாகிறது.

பிராண வாயு மட்டுமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லக் கூடிய தன்மை உடையது. ஆக, உடல் பிராண வாயுடன் வரும் மந்திரத்தைப் பற்றிக் கொண்டு விடுகிறது.

இதனைத்தான், இந்தப் பற்றுதலைத் தான் திருமூலர் "..ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்.." எனக் கூறுகிறார்.





அடுத்த வரியில் "தான் பற்றப் பற்ற" என்று சொல்கிறாரே; அந்தத் "தான்" எதைக் குறிக்கிறது?

"தான்" என்பது தன்னுடைய ஊனுடம்பைத்தான் குறிக்கிறது. அப்படி என்றால், "ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்" என்று சொன்னவர் "தான் பற்றப் பற்ற" என மீண்டும் ஏன் சொல்கிறார்?

உடம்பைப் பார்த்து திருமூலர் "ஒரு தடவை மந்திரத்தைப் பற்றிக் கொண்டதும் நிறுத்திவிடாதே. அந்த மந்திரம் உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் பரவ வேண்டும். ஆகவே மீண்டும் மீண்டும் மந்திரத்தைப் பற்றிக் கொண்டே இரு. அப்படிப் பற்றினால்தான் உன்னால் 'தலைப்பட' முடியும்" எனக் கூறுகிறார்.

"தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே". 'தலைப்படும்' என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. நாம் நமக்கே உரிய பாணியில் அதனைப் புரிந்து கொள்வோம்.




உடல் மந்திரத்தை உள்வாங்கி உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் அதனைப் பரவச் செய்து விட்டால், தன்னிச்சையாக அந்த மந்திரம் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.

அத்துடன் நாம் என்ன செயல் செய்து கொண்டிருந்தாலும், அந்த மந்திரம் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.

நாம் அதை உணராமல் இருக்கலாம். ஆனாலும், அது தன்னிச்சையாக உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.



                 
நம் உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் மந்திரத்தை நம்மால் இரு தருணங்களில் உணர முடியும்.

வேலைகள் எதுவுமின்றி சும்மா இருக்கும்போது, நாம் பயிற்சியின் போது  உச்சரித்து வந்த மந்திரம் மூச்சோடு கலந்து தானே முன்வந்து நிற்கும் .. (தலைப்படும் தானே!). தவிர, நமது சுவாசத்தைக் கவனித்தால் அதன் கூடவே பயணிக்கும் மந்திரத்தின் அதிர்வலைகளை உணரலாம். 
சிலரால் அதை உணர முடியாமல் போகலாம்.




ஆனால் இரண்டாவது தருணம் மிகச் சரியாக அதை உணர வைக்கும்.

நமது ஆழ்மனதில்   'எதிர்மறை உணர்ச்சியின்' காரணமாக உருவாகும் பதிவுகள், நமது முதல்தர எதிரிகளாகும். அவை எப்போதும் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நம்மை உசுப்பேத்தி விடத் தயங்காது. அதன் காரணமாக நாமும் சில காரியங்களைச் செய்து பின்னர் அதன் விளைவுகளைச் சந்தித்து வருந்த நேரிடும்.

இப்பொழுதோ அந்தப் பிரச்சினை இருக்காது. ஏனெனில் நம்முள் உச்சரிக்கப்படும் மந்திரம் உணர்வு மனத்திற்கும், ஆழ்மனத்திற்கும் இடையே ஒரு தடுப்பு கவசமாக மாறி 'எதிர்மறை உணர்ச்சிகள்' நம்மை உசுப்பேத்த விடாமல் பார்த்துக் கொள்ளும்        

இதன் காரணமாக, 'எதிர்மறை உணர்ச்சி' பதிவுகள் படிப்படியாக வலிமை இழந்து, சத்துவ குணம் மேலோங்கத் தொடங்கும்.

'எதிர்மறை உணர்ச்சி' பதிவுகள் நீங்க, நீங்க நாமும் நம்மை அறியாமலே சத்துவ குணம் மிக்க மனிதர்களாக மாற ஆரம்பித்து விடுவோம்.




இது தவிர, வேறு ஒரு முக்கிய நன்மையும் நமக்குக் கிட்டும். எந்தவித இடைஞ்சலும் இன்றி நாம் தியானம் செய்ய ஆரம்பித்து விடலாம்.
                        
நாம் செய்த மந்திரத்தோடு இணைந்த மூச்சுப் பயிற்சிக்கும், அட்டாங்க யோகத்தில் வரும் "தாரணைக்கும்" உள்ள வித்தியாசம் என்ன?

"பிரத்தியாகாரம்" என்பது வெளியே சஞ்சரிக்கும் மனதை தடுத்து, அதை உட்பக்கமாக கவனம் செலுத்த வைக்கும் ஒரு செயலாகும். ஏனெனில், மனம் வெளியே செல்லாமல் இருந்தால்தான் நம்மால் "தாரணையைச்" சரியாக கடைப்பிடிக்க முடியும்.
தாரணை வெற்றி பெற வேண்டுமானால் மனதைக் கட்டுக்குள் வைப்பது அவசியமான ஒன்று.
 (It is an act of 'over-powering')

மூச்சுப் பயிற்சியில் இதற்கானத் தேவை எதுவும் இல்லை. காரணம் இந்தப் பயிற்சி மனதின் உதவியின்றி நடப்பது.
(It is an act of 'overcoming')




தாரணையில் நாம் மனதில் ஒருமுக கவனத்தைக் கொண்டுவந்து, அதை தியானம் செய்வதற்காகப் பக்குவப் படுத்துகிறோம். ஏனெனில், தாரணையில் ஈடுபடும்போது மனதை தியான நிலைக்குப் பக்குவப் படுத்த வேண்டுமென்ற ஒரு நோக்கம் இருந்தது. 

ஆனால், நாம் செய்யும் மூச்சுப் பயிற்சியில் அந்த விதமான நோக்கம் எதுவும் கிடையாது. இருப்பினும், பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றால், மனம் அதற்கான பக்குவத்தை அடைந்து விடுகிறது.




நாம் செய்து வந்த மூச்சுப் பயிற்சியினால் கிடைக்கும் இரண்டாவது மிகப்பெரிய நன்மை, நம்மால் எளிதாக தியான நிலையை அடைந்து விட முடியும் என்பதுதான்.

தியானம் செய்வது எப்படி என்று பலரும் பல விதமாகச் சொல்லித் தருகிறார்கள். முறைகள் வேறுபட்டாலும், அவை அனைத்தும் இறுதியில் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன. 
அந்த இலக்கு — 
"அஹங்காரத்தின் அழிவு".





சிவலிங்க தியானம் மற்றும் தியான அனுபவம்


சிவலிங்க தியானம் .....
விசாரத்திலிருந்து அனுபவம் வரை



               முன்னுரை


அன்பு நண்பர்களுக்கு,
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், எந்த யோக மரபின் அதிகாரப்பூர்வ விளக்கங்களாகவோ, சாஸ்திரங்களுக்கு மாற்றாகவோ எழுதப்பட்டவை அல்ல.

இவை அனைத்தும், வேதாந்தத்தின் ஒளியில் சிந்திக்க முயன்ற ஒரு சாதகரின் அகத்தாய்வு, விசாரம், ஊகம் மற்றும் தியான அனுபவங்களின் பதிவுகள் மட்டுமே.

இந்தப் பயணத்தின் தொடக்கம் "சிவலிங்கம்" பற்றிய ஒரு சிறிய கேள்விதான். அந்தக் கேள்வி, ஆக்ஞா சக்கரம், பிராணன், மனம், தியானம் ஆகியவற்றைப் பற்றிய பல புதிய கேள்விகளை எழுப்பியது.

அவற்றிற்கான விடைகளை பிறரிடம் தேடுவதற்குப் பதிலாக, எனக்குள்ளேயே விசாரிக்க முயன்றேன்.

அந்த விசாரத்தின் முதல் கட்டமே "சிவலிங்க தியானம்".

அதன் தொடர்ச்சியாக, நான் மேற்கொண்ட தியானப் பயிற்சியில் ஏற்பட்ட அனுபவங்களும், அதனால் எழுந்த புதிய புரிதல்களும் "தியானம்" என்ற இரண்டாம் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இந்த நூலில் சில கருத்துக்கள் உங்களுடைய புரிதலோடு ஒத்துப்போகலாம்; சில கருத்துக்கள் ஒத்துப்போகாமல் இருக்கலாம். அது இயல்பானதே.

எனவே, இதில் கூறப்பட்டவற்றை இறுதி உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் சொந்த விசாரத்திற்கும், தியானப் பயிற்சிக்கும் இவை ஒரு சிறிய தூண்டுகோலாக இருந்தால், அதுவே இந்த நூலின் நோக்கம் நிறைவேறியதாக நான் கருதுவேன்.

இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் நான் அன்புடன் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று.
என் கருத்துக்களை நம்பாதீர்கள்; விசாரியுங்கள்.

என் அனுபவங்களைப் பின்பற்றாதீர்கள்; நீங்களே அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

*****      *****      *****      *****      *****

1. சிவலிங்க தியானம்  


முதலில் இந்தக் கட்டுரையை எழுத ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், "சிவலிங்கம்" பற்றி கொச்சையாகவும், அருவருப்பாகவும் ஊடகங்களில் பகிர்வுகளைப் பார்க்கும்போது, நமது அனுபவத்தை சொல்வதில் தவறில்லை என நினைத்துக்கொண்டேன். 


ஒரு சில சிவன் கோயில்களைத் தவிர்த்து மற்றெல்லாக் கோயில்களிலும் "சிவலிங்கத்தை" கர்ப்பக்கிருகத்தில் வைத்து வணங்குகிறார்கள். 

பல வெளிநாடுகளிலும் கூட, "சிவலிங்கம்" இருப்பதை ஊடகங்கள் வாயிலாகப் பார்த்திருக்கிறோம்.

பிற தெய்வங்களுக்கான கோயில்களில், சம்பந்தப்பட்ட கடவுளின் சிலையை வைத்து வணங்குகிறார்கள். 

ஆனால், சிவன் கோயிலில் மட்டும் "சிவலிங்கத்தை" வைத்து வணங்குவதை பார்க்கும்போது, வியப்பாக இருக்கும்.

"சிவலிங்கம்" உருவானது எப்படி என்ற கதைகளைப் படித்தாலும், அவற்றை மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனாலும் "சிவலிங்கம்" நமக்கு எதையோ உணர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட குறியீடு என்ற உணர்வு மட்டும் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது.

அது என்னவாக இருக்கும்?





இயல்பாகவே ஆரவாரம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால், எனக்கு 'பிரத்தியாஹாரம்' எளிதில் கைகூடியது.

அதனைத் தொடர்ந்து 'தாரணையும்' எளிதாகவே இருந்தது.

ஆனால், 'தியானப் பயிற்சியில்' மனதால் முழுமையாக இயங்க முடியவில்லை.

காரணம் மனதில் சந்தேகம் எழுந்தால், அதற்கு விடை கிடைக்காவிட்டால் எனது செயல் நின்றுவிடுகிறது. வெறும் நம்பிக்கையை வைத்து எந்த காரியத்திலும் என்னால் பங்கு கொள்ள முடிவதில்லை.




தியானப்பயிற்சியை மேற்கொள்ள முயன்றபோதும், அதே பிரச்சினைதான். மனதில் சில சந்தேகங்கள் வந்துவிட்டன.

அவை..

1. 'தியானம்' என்பது அஷ்டாங்க யோகத்தில் வருகிறது. தியானம் செய்யும்போது, 'ஆக்ஞா' சக்கரத்தில் கவனம் வைக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கும், தியானத்திற்கும் என்ன சம்பந்தம்?

2. 'ஆக்ஞா' சக்கரம் எங்கு இருக்கிறது என்றால், பலவிதமான பதில்கள் வருகின்றன. எதை சரியென்று எடுத்துக் கொள்வது?

3. ஏழு சக்கரங்களில், முதல் ஆறு சக்கரங்களும் முதுகுத் தண்டில் உள்ளன என்றால், 'ஆக்ஞா' சக்கரம் மட்டும் புருவ மத்தியில் உள்ளது என்று ஏன் சொல்லவேண்டும்?

விடை கிடைக்காதபோது, அமைதியில் ஆழ்ந்துவிடுவது எனது பழக்கம். ஒரு சில நாட்கள் கழித்து ஏதோவொரு வழியில் விடை கிடைக்கும்.

இதற்கும் ஒரு விடை கிடைத்தது. அந்த விடை 'உள்ளிருந்து' வந்தது. அப்படி ஒரு விடையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அந்த விடை ..
"சிவத்தை எடு; அவத்தை விடு"





எனக்குள் தோன்றிய விடை, நான் எதிர்பார்க்காத ஒன்று. ஆனாலும், அது ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது.

எனது தேடுதலை சிவலிங்கத்திலிருந்து ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன்.

சிவலிங்கம் என்றவுடன் "சிவனது" நினைவு வருவது இயல்பு. இது ஒன்றுடன் ஒன்று என ஒரு சங்கிலியாகத் தொடர்ந்தது. 



அந்த சங்கிலியின் கண்ணிகள் ..

1. சிவலிங்கம்

2. தியானம் ("சிவன்" எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால்) அவரே ஒரு "தியான மூர்த்தி" தானே!

3. 'ஆக்ஞா' சக்கரம் (தியானத்தில் 'ஆக்ஞா'வில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்)

4. ஏழு சக்கரங்கள் ('ஆக்ஞா'வும் ஒரு சக்கரம்)

5. இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை நாடிகள்

6. முதுகெலும்பு

7. முதுகெலும்பை ஒட்டி உள்ள சுரப்பிகள்

8. பஞ்ச பூதங்கள்

மேலை சொன்ன அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளது.

எனது தேடல் எப்படி பயணித்தது என்று சொல்கிறேன்.




எனக்கிருந்த இரண்டு முக்கிய சந்தேகங்கள் ..

1. தியானத்திற்கும், 'ஆக்ஞா' சக்கரத்திற்கும் என்ன சம்பந்தம்?

2. 'ஆக்ஞா' சக்கரம் எங்கு இருக்கிறது?

சிவலிங்கம் பற்றியும், ஆக்ஞா சக்கரம் பற்றியும் பல விதமான விளக்கங்கள் உள்ளன. இவற்றில் எதை ஏற்றுக்கொள்வது என்று புரியவில்லை.

அத்துடன் 'சிவலிங்கம்' எதையோ சுட்டிக் காட்டுவதாகவும் ஒரு உணர்வு.

எனவே நாமே தேடுவோம் என முடிவுசெய்து விட்டேன்.

எனது புரிந்து கொள்ளும் திறமைக்கு ஏற்ப, எனது கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினேன்.




மனிதனின் தண்டு வடத்தில் சுழுமுனை நாடி உள்ளது. இதில்தான் குண்டலினி சக்தியை மேலெழும்பச் செய்யும் ஆறு சக்கரங்கள் உள்ளன. 
இந்த ஆறு சக்கரங்களும் தண்டு வடத்தின் கீழேயிருந்து மேல்நோக்கி செல்கின்றன. அவை சூட்சும வடிவில் உள்ளவை. நமது கண்களுக்கு புலப்படுவதில்லை.

அவைகளின் பெயர்கள் ..
1. மூலாதாரம்
2. சுவாதிட்டானம்
3. மணிபூரகம்
4. அநாகதம்
5. விசுத்தி
6. ஆக்ஞா

இவை தவிர உச்சந்தலையில் ஒரு சக்கரம் உண்டு. அந்த ஏழாவது சக்கரத்தின் பெயர் 'சகசிரதளம்'.




'சிவலிங்கம்', அஷ்டாங்க யோகம், ஏழு சக்கரங்கள் மற்றும் குண்டலினி
சக்தி .. இவற்றைப் பற்றி ஞானியர், சான்றோர்கள், பண்டிதர்கள் இவர்களெல்லாம் எழுதியவற்றை தொகுக்க எண்ணினால், பல நூறு பக்கங்கள் தேவைப்படும். அந்த அளவுக்கு ஆழமாகவும், நுணுக்கமாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார்கள்.

இங்கு நான் எனது தேடலை, எனது அனுபவத்தை மட்டுமே பதிவு செய்கிறேன். இது சிறு குழந்தை மணல் வீடு கட்டுவதைப் போன்றது. 

எனவே இதனை மற்றவற்றோடு ஒப்பீடு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.





ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு சுரப்பியுடன் (gland) தொடர்புடையதாக உள்ளது. அத்துடன் முதல் ஐந்து சக்கரங்களும் பஞ்ச பூதங்களுடன் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) தொடர்பு உடையவை என்கிறார்கள். இதனை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

"மூலாதாரம்" 
இது ஏழு சக்கரங்களில் முதலாவதாக வருவது. இது பஞ்சபூத கூறுகளில் ஒன்றான 'நிலத்துடன்' சம்பந்தப் பட்டது என்கிறார்கள்.

மனித உடல் முழுவதும் பஞ்ச பூதங்களின் மூலக்கூறுகளால் ஆனது என்றாலும், மனிதனின் புதிய பிறவிக்கு காரணமாக இருப்பவை ஆணின் 'விந்துப்பை' மற்றும் பெண்ணின் 'கருப்பை'. எனவே இந்த இரண்டு சுரப்பிகளும் மூலாதார சக்கரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்கிறார்கள்.


"சுவாதிட்டானம்"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "நீருடன்" சம்பந்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'சிறுநீரகங்கள்'.


"மணிபூரகம்"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "நெருப்புடன்" சம்பந்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'கணையம்'.


"அனாகதம்"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "காற்றுடன்" சம்பந்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'தைமஸ்'.


"விசுத்தி"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "ஆகாயத்துடன்" சம்பந்தப்பட்டது என்கிறார்கள். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'தைராய்டு'.




விந்துப்பையை 'நிலத்தோடு' சம்பந்தப் படுத்தியதற்கு ஒரு காரணம் உண்டு. 
"... காயமே இது பொய்யடா - வெறும்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த மண்ணுபாண்டம் ஓடடா..." என ஒரு சித்தர் பாடியிருக்கிறார்.
அவர் உடம்பை மண்ணுக்கு சமம் என்கிறார்.

சிறுநீரகங்கள் 'நீரோடு' சம்பந்தப்பட்டது ஏன் என்பது புரிகிறது.

கணையம் 'நெருப்போடு' சம்பந்தப் பட்டது என்று சொல்வதற்கு
என்ன காரணம் இருக்க முடியும்? 

உடம்பு சூடாக இருக்கிறது என்றால், பொதுவாக வயிற்றில்தான் கை வைத்துப் பார்க்கிறோம். எனவே இதுவும் சரியாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.

தைமஸ் 'காற்றோடு' சம்பந்தப் பட்டது என்கிறார்கள். இதுவும் சரியாகவே தோன்றுகிறது.

ஆனால், விசுத்திக்கும் ஆகாயத்திற்கும் என்ன சம்பந்தம்?




"விசுத்தி" சக்கரம் பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான ஆகாயத்துடன் சம்பந்தப்பட்டது என்கிறார்கள். 

ஆகாயம் உடலின் எல்லா இடத்திலும் இருக்கும் என்றாலும், விசுத்தி சக்கரம் அமைந்துள்ள கழுத்தின் மேலே அமைந்துள்ள வெற்றிடத்தை (ஆகாயம்) நம்மால் உணர முடிகிறது.

அத்துடன் 'பருமை' முதல் 'நுண்மை' வரை என்று பார்த்தாலும், ஆகாயம் மற்ற பூதங்களைவிட நுண்மையானது என்பதால் (சொல்லப் போனால் நுண்மையானது என்று கூட வரையறுக்க முடியாது), சுழுமுனை நாடியின் மேல்பகுதியில் வருவதுதான் சரிதான் எனத் தோன்றியது.





மனிதனின் கீழ்த்தாடையிலிருந்து மேலே செல்லும் வெற்றிடம் மூளையின் கீழ் பகுதியில் முட்டி நாசித் துவாரத்தை நோக்கி சென்று விடுகிறது.

கீழ்த்தாடையிலிருந்து மூளையின் கீழ் பகுதிவரை இருக்கும் வெற்றிடத்தை வரைபடமாகப் பார்த்தால், அது பரிசோதனைக் கூடத்தில் இருக்கும் 'சோதனைக் குழாயை' கவிழ்த்து வைத்திருப்பது
போலத் தோன்றும்.

"சிவலிங்கத்தில்" நாம் காணும் "லிங்கமும்" அந்த வடிவில் தானே இருக்கிறது!?





ஒவ்வொரு வருடமும் 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் அமர்நாத் குகையின் உட்புறத்தில் சிவலிங்கத்தின் பனிக்கட்டிச் சிலை மே முதல் ஆகஸ்ட் வரையில் தானாக உருவாகின்றது. இது 'லிங்க' வடிவத்தில் அமைந்திருக்கும். 

அத்துடன் அந்த இடம் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடம் (51 சக்தி பீடங்களில் ஒன்று) என்றும் புராண வரலாறு ஒன்று சொல்கிறது.

அப்படியானால், குகையில் இறங்கும் பனி, தேவியின் தொண்டைப் பகுதியில் விழுந்து, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து குகையின் முகட்டில் முட்டி பனிக்கட்டி சிலையாக காட்சி அளிக்கிறதா?

இந்த உருவகப் படுத்தும் தன்மை, மனிதனின் தொண்டை பகுதிக்கு மேலே இருக்கும் வெற்றிடத்தை 'லிங்கமாக' கருத வேண்டும் என சுட்டிக் காட்டுகிறதா?




லிங்கம் என்பதற்கு எல்லா பொருட்களும் அதில் ஒன்று படும்; பின் அங்கிருந்து உருவாகி தனித்தனியாய் வெளிப்படும் (merge and emerge) என்று அர்த்தம் சொல்கிறார்கள். 

 இதே பண்பு ஆகாயத்திற்கும் (வெளி) உண்டு. மற்ற நான்கு பூதங்களும் இதில் ஒடுங்கி மறைவதும் உண்டு; புதிதாகத் தோன்றுவதும் உண்டு.





"ஆக்ஞா" சக்கரம்

இது மனதோடு சம்பந்தப்பட்டது என்று சொல்கிறார்கள். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பியின் பெயர் 'கபசுரப்பி' (பிட்யூட்டரி சுரப்பி).

(சக்கரங்கள் என்று சொன்னாலும், அவை அனைத்தும் சூட்சுமமானவை; புலன்களால் காண முடியாதவை)




சுழுமுனை நாடியில் உள்ள முதல் ஐந்து சக்கரங்களும் சுழுமுனையில் இருப்பதாக சொன்னவர்கள், இந்த சக்கரம் மட்டும் 'புருவ மத்தியில்' உள்ளது என்று ஏன் சொல்கிறார்கள்?

தொண்டைப் பகுதியில் இருந்து மேல்நோக்கி செல்லும் வெற்றிடம் மூளையின் கீழ் பக்கத்தில் முட்டி நாசி இருக்கும் பக்கமாகத் திரும்புகிறது என பார்த்தோம்.

எனவே மூளையின் கீழ் பகுதியில் வெற்றிடம் முட்டும் இடத்தில் 'ஆக்ஞா' சக்கரம் இருப்பதாக சொன்னால் அது தவறா?

சொல்லப்போனால், இந்த இடமும், புருவ மத்தியும் ஒரே படுக்கைக்கோட்டில் தான் வருகின்றன.





ஒரு சித்தர்
"உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே” எனப் பாடுகிறார்.

உச்சியில் இருக்கும் சக்கரத்தின் பெயர் "சகசிரதளம்". ஆனால் அதற்கும் சுழுமுனை நாடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தவிர, சித்தர் "உச்சிக்கு கீழடியோ" மற்றும் "அண்ணாவுக்கு மேலே வைத்த" என்றதனால், அவர் குறிப்பிடுவது "ஆக்ஞா" சக்கரம் இருக்கும் பகுதி என்று கருதுவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.





"ஆக்ஞா" சக்கரத்திற்கும், "பிட்யூட்டரி" சுரப்பிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

ஆக்ஞா சக்கரத்திற்கு மற்ற சக்கரங்களை ஆளுமை செய்யும் பண்பு உண்டு. அதனால்தான் அதன் பெயர் "ஆக்ஞா" என்று உள்ளது. (தமிழில் ஆணை என்கிறார்கள்)

பிட்யூட்டரி சுரப்பிக்கும் மற்ற சுரப்பிகளை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு. அதனால்தான் அதனை தலைமை சுரப்பி (master gland) என்றும் சொல்கிறார்கள்.




மூளைக்கு கீழே "ஆக்ஞா" சக்கரம் இருக்கும் இடத்தில்
தியானத்தில் கவனம் செலுத்த முடியாது என்பதனால்தான், புருவ மத்தியில் கவனம் செலுத்து என்று சொன்னார்களா?




சிவலிங்கத்தின் வடிவ அமைப்பில், 
தரைப் பகுதியை ஒட்டி ஒரு பரந்த வட்ட வடிவமான பாகம்; அதன்மீது மேலே உள்ள சிறிய வட்ட வடிவத்தை இணைக்கும் ஒரு தூண் போன்ற பகுதி; மேலே உள்ள சிறிய வட்டப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள லிங்கம்.

சிவலிங்கத்தை பார்க்கும்போது எனக்கு அது சுட்சும வடிவில் உள்ள "ஆக்ஞா" சக்கரம் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுவது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது.




"சிவலிங்கத்தின் கீழே உள்ள பரந்த வட்ட வடிவம், அதன்மீது உள்ள தூண், மேலே உள்ள சிறிய வட்டம், அதன் மீது இருக்கும் லிங்கம்" முதலியவை முறையே "மனித உடலின் தோள்பட்டை, கழுத்து, கீழ்த்தாடை, அங்கிருந்து மேலே மூளையின் அடிப்பாகத்தை நோக்கி செல்லும் வெற்றிடம்" ஆகியவற்றை குறிப்பிடுவது போன்ற உணர்வு.

தண்டுவடம் மூளையை சந்திக்கும் இடத்தில்தான் பிட்யூட்டரி சுரப்பியுடன் சம்பந்தப்பட்ட "ஆக்ஞா" சக்கரம் இருக்கக்கூடும் என்றும், "சிவலிங்கத்தின்" அமைப்பு, அதை சுட்டிக்காட்டுவது போல் உள்ளது எனவும் எனக்குத் தோன்றியது.

இந்தக் கருத்து உங்களுக்கும் சரியெனத் தோன்றினால், அந்த இடத்தில் கவனத்தை வைத்து தியானம் செய்யலாம்.



தியானத்தில் அமரும் பொழுது, உங்கள் தோள்பட்டை, கழுத்து, தொண்டைப் பகுதி, அதிலிருந்து மேலே செல்லும் வெற்றிடம் என ஒவ்வொரு இடத்திலும் கவனம் செலுத்தி தண்டுவடம் மூளையை சந்திக்கும் இடத்தை தியானப் பொருளாக மாற்றுங்கள்.

தொண்டைக்குழியிலிருந்து மனம் வெற்றிடத்தை தொடர்ந்து செல்லும்போது, மூளையின் அடிப்பகுதியை சந்தித்ததும் மனம் தானாகவே நின்றுவிடும். ஏனெனில், சுழுமுனை நாடி மூளையை சந்திக்கும் இடத்தை அதனால் உணர முடியும்.




பலரும் பலவித முறைகளில் தியானம் செய்வதுண்டு. ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். இங்கு குறிப்பிட்டுள்ள முறையில் தியானம் செய்தால், அதற்கு என்ன பெயர் வைக்கலாம்?

"சிவலிங்க தியானம்" என்று சொல்லலாமா?



          இடைமுன்னுரை

சிவலிங்க தியானம் தொடரில், சிவலிங்கத்தை ஒரு தியானக் குறியீடாக எனக்குப் புரிந்த விதத்தைப் பகிர்ந்திருந்தேன்.
அந்த விசாரம் அங்கேயே முடிவடையவில்லை.

தியானத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்தபோது, மனம், பிராணன், மூச்சு, ஆக்ஞா சக்கரம், ஒருமுகக் கவனம், அமைதி ஆகியவற்றைப் பற்றிப் பல புதிய கேள்விகள் எழுந்தன.

அவற்றிற்கான விடைகளைத் தேடும் முயற்சியே இந்த இரண்டாம் பகுதி.
எனவே, "தியானம்" என்ற இந்தப் பகுதியை, முதல் பகுதியின் தொடர்ச்சியாகவே வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கும் நான் பகிர்ந்திருப்பது சாஸ்திரத்தின் இறுதி முடிவுகள் அல்ல.

ஒரு சாதகரின் விசாரமும், பயிற்சியும், அனுபவமும் மட்டுமே.

*****      *****      *****      *****      *****   


2.  தியானம்  


"சிவலிங்கம்" என்பது பிட்யூட்டரி சுரப்பி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டும் ஒரு குறியீடு மட்டுமே எனத் தோன்றியது.

ஐந்து சக்கரங்களும் தண்டு வடத்தை ஒட்டி இருக்கும் போது, ஆறாவது சக்கரம் மட்டும் நெற்றியின் வெளிப்புறம் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது.

தவிர, விசுத்தி சக்கரம் ஆகாயம் சம்பந்தப்பட்டது என்பதால், உடல் முழுவதும் ஆகாயம் (வெற்றிடம்) பரவி உள்ளது என்றாலும் அதை உணர்ந்து அறியக்கூடிய இடம் தொண்டையின் அடிப்பகுதியில் இருந்து 'உள்நாக்கின்' பின்புறமாக மேலே சென்று மூளையின் அடிப்பாகத்தைத் தொட்டு, பின் நாசிக் துவாரத்தை நோக்கி நகர்ந்து செல்லும் பகுதி மட்டும்தான் என்பதும் புரிந்தது. 

மூளையின் அடிப்பாகத்தை இந்த வெற்றிடம் தொடும் இடத்தில்தான் 'பிட்யூட்டரி' சுரப்பி உள்ளது. எனவே இங்குதானே சூட்சுமவடிவிலான "ஆக்ஞா" சக்கரமும் இருக்க வேண்டும் என்றும் தோன்றியது.

எனது எண்ணத்திற்கு வலு சேர்ப்பது போல் சித்தர்களின் பாடல்களும் இருப்பதை அறிந்தேன்.

".. அண்ணாக்கி னுள்ளே அகண்ட வெளிகாட்டி.."
.. திருமந்திரம் (599)

"உச்சிக்குக் கீழது உண்ணாக்கு மேலது"  
.. திருமந்திரம் (1780)

"உச்சிக்குப் கீழடியோ.." என அழுகுணிச் சித்தர் பாடுகிறார்.



நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்குத் தொடர்புடைய சக்கரங்கள் இருக்குமிடத்தை எளிதாக ஊகிக்க முடியும். ஆனால், "ஆக்ஞா" சக்கரம் என்று வரும்பொழுது அது இருக்கும் இடத்திற்கு நமது மனதைக் கொண்டு செல்வது கொஞ்சம் சிரமமான காரியம்தான். இங்குதான் "சிவலிங்கம்" என்னும் குறியீடு நமக்கு உதவியாக உள்ளது.




இப்பொழுது, சிவலிங்கத்தின் அடித்தட்டோடு உங்களின் தோள்பட்டையைப் பொருத்திக் கொள்ளுங்கள்.

அப்படியானால், அடித்தட்டின் மேலே உள்ள தண்டு என்பது உங்களது கழுத்து; தண்டின் மேலே உள்ள சிறிய தட்டைப் போன்றது உங்கள் தாடைப் பகுதி; லிங்கம் என்பது தொண்டையின் அடிப்பகுதியில் இருந்து உள் நாக்கின் பின்புறம் வழியாக மேலே சென்று மூளையின் அடிப்பாகத்தில் முட்டும் வெற்றிடம்தான். 

            

சிவலிங்கத்தை மனதில் எண்ணிக்கொண்டு, தோள்பட்டையில் ஆரம்பித்து, பின்பு கழுத்து, தாடை, தொண்டையின் பின்புறமுள்ள வெற்றிடம், அதன் உச்சி என ஒன்றன்பின் ஒன்றாக மனதைக் கொண்டுசென்று இறுதியாக பிட்யூட்டரி சுரப்பியின் அருகில் "ஆக்ஞா" சக்கரம் உள்ளதாக எண்ணி அதை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினேன்.



ஆரம்பத்தில் அது சரியாகவேப் பட்டது. ஆனால், ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 'வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய' கதையாக, தியானத்திலிருந்து விடுபட்டு மனம் ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டது.


எனது தியான முயற்சியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, மனதில் இரண்டு கேள்விகள் எழுந்தன. 
அவை - -
1. ஆக்ஞா சக்கரம் பிட்யூட்டரி சுரப்பி உள்ள இடத்தில்தான் உள்ளதா?

2. எனது தியானப் பயிற்சியில் ஏதேனும் தவறு உள்ளதா?


தியானப் பயிற்சியில் தான் ஏதோவொரு தவறு இருப்பதாக எண்ணினேன். ஏனெனில், பிட்யூட்டரி சுரப்பி உள்ள இடத்தில்தான் ஆக்ஞா சக்கரமும் இருக்கும் என்ற எனது எண்ணத்தில் எந்தவித மாற்றமுமில்லை.

அப்படியானால், தியானப் பயிற்சியில் என்ன தவறு நேர்ந்தது?
பழையபடி அகத்தாய்வில் இறங்கிவிட்டேன்.




இரண்டு வழிகளில் அகத்தாய்வு செய்ய முடியும். ஒன்று "தர்க்கம்"; மற்றொன்று "விசாரம்".

"தர்க்கம்" என்பது ஒருவர் மற்றவர்களுடன் விவாதம்          செய்து, அதன் பின்விளைவாக  அகத்தாய்வு செய்வது.

"விசாரம்" என்பது சுயமாக சிந்தித்து விடை காண்பதைக் குறிக்கும்.




மறைநூல்கள் சொல்லும் கருத்துக்குப் பலரும் பலவிதமான விளக்கங்கள் கொடுப்பதுண்டு. அவற்றில் எது சரியென முடிவு செய்வதில் குழப்பம் வரும் பொழுது, நமது நண்பர்கள், நமக்குத் தெரிந்த அறிஞர்கள் போன்றவர்களுடன் விவாதம் செய்து ஒரு முடிவுக்கு வருவோம். இந்த முறை "தர்க்கம்" என அழைக்கப்படும்.



"விசாரத்தில்" மற்றவர்களின் விளக்கங்களை விட்டுவிட்டு, நமக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடுகிறோம். நமது முயற்சியைப் பொறுத்து, நமக்குள்ளேயே விடையைக் காண முடியும்.

            

முதலில் கண்டபடி திரியும் மனதை ஓரிடத்தில் நிலைநிறுத்தப் பழக்க வேண்டும். அதை "தாரணை" என்கிறார்கள்.

எந்த ஒன்றில் மனதை நிலை நிறுத்தினோமோ, அந்த ஒன்றில் தொடர்ந்து மனதின் கவனத்தை செலுத்தினால் அதுதான் "தியானம்" எனப் பலரும் சொல்வதுண்டு‌. ஆனால், எந்த ஒன்றின் மீது கவனம் செலுத்தினாலும், மனம் தியான நிலையிலிருந்து நழுவி விடுவதைக் காண முடிகிறது.

அதனால்தான் எந்தப் பொருளையும் நினைக்காமல், தியானம் செய்கிறோம் என்ற உணர்வும் இல்லாமல் இருப்பதுவே உண்மையான தியானம் என்கிறார்கள்.

ஆனால், எதையும் நினைக்காமல் தியானம் செய்வது எப்படி என்பது ஒரு புதிராகத் தெரிந்தது.

           


எதையும் நினைக்காமல் தியானம் செய்வது எப்படி என்பது தெரிந்த பின்பும், மனம் நழுவி வெளியே சென்று விடுவதை நிறுத்த முடியவில்லை.

என்னதான் பிரச்சினை என அறிந்து கொள்வதற்காக, கற்றவற்றை அசைபோட ஆரம்பித்தேன். பரீட்சை எழுதப்போகும் மாணவன் தான் படித்த எல்லாப் பாடங்களையும் மீண்டும் திருப்பிப் பார்ப்பதுபோல், நானும் ஏற்கனவே கற்றவற்றை மீண்டும் அசைபோட்டேன். மனதில் நிறைய கேள்விகள் எழுந்தன.


அவை - -
1. மூச்சை உள்ளே இழுக்கும்போது 'ஆக்ஸிஜன்' உள்ளே வருகிறது. ஏன் அதனை பிராண வாயு என்று சொல்கிறோம்?

2. பிராண வாயு என்பதற்கும், பிராணன் என்ற சொல்லுக்கும் என்ன சம்பந்தம்?

3. பிராணன் என்றால் என்ன?

4. பிராணன் என்ற சொல்லுக்கும், பிராண சக்தி என்ற சொல்லுக்கும் இடையே என்ன வேறுபாடு?

5. காற்று, வாயு ‌‌.. இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?

6. நாம் விரும்பாவிட்டாலும் மனம் வெளியே சென்றுவிடுகிறதே! அது எதனால்?

   


மனிதன் "விசார" நிலையில் ஆழ்ந்து விட்டால், அவன் புறவுலக நாட்டத்திலிருந்து விடுபட்டு அகவுலகில் சிந்திக்கத் தொடங்கிவிட்டான் எனலாம். 

இருந்தாலும் எவ்வளவுதான் சிந்தித்தாலும் விடை ஏதும் கிடைக்காதபோது அமைதியாக, மௌனமாக இருந்துவிட வேண்டும். பொறுமையுடன் காத்திருந்தால், விடையை எப்படித் தேடுவது என்று என்றாவது ஒருநாள் தெரிந்து விடும். அதுதான் எனக்கும் நேர்ந்தது.




மனித உடலில் உள்ள ஜீவாத்மாவைப் பல பெயர்களில் குறிப்பிடுவதுண்டு. அதன் மீது ஒன்றன் மேல் ஒன்றாக 
ஐந்து உறைகள் உள்ளன என்றும் சொல்வார்கள். அவை - -
1. உணவு உறை
2. காற்று உறை
3. மன உறை
4. புத்தி உறை
5. ஆனந்தமய உறை

இவைகளில் காற்று உறை உடலுக்கும், மனதிற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது.

இந்தக் காற்றின் பெயரை "பிராணன்" என அழைக்கிறார்கள். இது உடலில் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என ஐந்து பிரிவுகளாகச் செயல்படுகிறது. 
(இதனைப் பத்து பிரிவுகளாகவும் சொல்வதுண்டு)


            

"பிராண" வாயு புறவுலகப் பொருட்களை மனதோடு இணைப்பதற்கு உதவுகிறது.
ஐம்புலன் கருவிகள் (ஐம்பொறிகள்) மூலமாக எது மனிதனை வந்தடைந்தாலும், அது மனதினை அடைவதற்குக் காரணமாக இருப்பது "பிராண" வாயுதான். (It is a faculty of perception)

அத்துடன் மனம் செயல்படுவதற்கும், "பிராண" வாயுவின் இயக்கம் தேவையாக உள்ளது.




பிராணாயாமப் பயிற்சியின் போது 'கும்பகம்' செய்தால், 'கும்பகம்' எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ அவ்வளவு நேரம் மனம் செயலற்று போய்விடும்.

அப்படியானால் மூச்சின் இயக்கம் நிற்கும்போது மட்டும்தான் பிராணனின் இயக்கம் நின்றுவிடுமா?

மூச்சின் இயக்கம் நடைபெறும் போதும், பிராணனின் இயக்கத்தை நிறுத்த முடியாதா?

தியானம் நன்கு நடைபெற, மனதில் எந்த அசைவும் இருக்கக் கூடாது என்கிறார்கள். மனதில் எந்த அசைவும் இருக்கக்கூடாது என்றால், பிராணனின் இயக்கம் நிற்க வேண்டும்.

மூச்சோடு இணைந்து இயங்கும் "பிராணனை" எப்படி தடுத்து நிறுத்துவது?

   



"பிராணன்" என்றால் என்ன, அதன் இயக்கம் எப்படி இருக்கும், மூச்சு வந்து போவதை பிராணவாயு என்று சொல்கிறார்களே; அப்படியானால் மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கும்போது பிராண சக்தியும், ஆக்ஸிஜனும் சேர்ந்தே வருகிறதா; அதேபோல் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது பிராண சக்தியும் கரியமிலவாயுவுடன் சேர்ந்தே வெளியேறுகிறதா எனப் பல சந்தேகங்கள் மனதில் எழுந்தன.




இது சம்பந்தமாக பலரும் பலவித விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் எதை சரியென்று ஏற்றுக் கொள்வது?

மேலும், 'கும்பகம்' செய்யும்போது பிராணன் அசைவற்று நின்றுவிடும் என்கிறார்கள். பிராணன் அசைவின்றி இருந்தால் மனமும் செயலற்று விடும். அது தியானம் செய்வதற்கு ஏற்ற ஒன்றுதான். ஆனால், 'பிராணாயாமம்' செய்யும்போது 'கும்பகம்' ஒரு சில விநாடிகளே நீடிக்கும். பின், அது எப்படி தியானத்திற்குப் பயன்படும்?





ஒரு வழியாக, 'பிராணனைப்' பற்றி திருமூலர் சொல்வதை அறிந்தபின், எனக்கான விடையும் கிடைத்தது.    

"ஏற்றி யிறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை.."
(பிராணனை இழுத்துப் பூரித்து உள்ளே கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர் இல்லை)
.. திருமந்திரம் 571

"திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகிலர் ஆரும்"
(பிராண வாயு ஒடுங்கும் நிலையை எவரும் அறியவில்லை)
.. திருமந்திரம் 720

பிராணனைப் பிடித்து ஒடுக்கும் வழியை எவரும் அறியவில்லை என்கிறார் திருமூலர். கூடவே, பிரணானைப் பிடித்து மனதோடு ஒடுங்கச் செய்ய முடியும் என்றும் சொல்கிறார்.

 "பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப் பிராணன் இருக்கின்.‌"
(பிராணன் வெளியில் செல்லாது மனதோடு அடங்கி இருக்கின்).. திருமந்திரம் 567

"வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்.."
(பிராணனை இழுத்துத் தன்வசப் படுத்தி அடக்கியிருந்தால்..)
.. திருமந்திரம் 569

"ஈர்ஆறு கால்கொண்டு எழுந்த புரவியைப் பேராமல் கட்டிப் பெரிது உண்ண வல்லீரேல்.." 
(புரவியை அதாவது பிராணனை வெளியே விடாமல் கட்டிவைத்தால்..)
.. திருமந்திரம் 722

பிராணனைப் பிடித்து உள்ளே மனதோடு கட்டிப்போடுவது எப்படி என்று எவரும் அறியவில்லை; பிராணனை மனதோடு கட்டிப்போடும் முறையை அறிந்து கொண்டால், உள்ளிருக்கும் பேரொளியைக் காணலாம் எனக் கூறுகிறார் திருமூலர்.

    




திருமந்திரம் 571-ல் "..காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை.." என்று சொன்ன திருமூலர் தொடர்ந்து சொல்கிறார்..
"..காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே".
(‌.. அங்ஙனம் காற்றைக் கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர் இயமனைக் கடக்கும் குறிக்கோள் பெற்றவர் ஆவார்)

காற்றைப் பிடிக்குங் கணக்கறிவார் இல்லை என்று சொன்ன திருமூலர் கூடவே காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்தவர் இயமனை உதைக்கும் வலிமையைப் பெறுவர் என்கிறார்.




இங்கு காற்று என்பது 'பிராணனைக்' குறிக்கிறது. இதனைக் கொஞ்சம் நிதானமாக சிந்திக்க வேண்டும்.

'பிராணன்' என்பது ஒரு வாயு. இது மனித உடலில் பத்து பிரிவாகப் பிரிந்து வேலை செய்கிறது .. ஒரு அரசாங்கத்தில் பல துறைகளுக்கான அமைச்சர்கள் இருப்பதைப்போல. 




பிராணன் பத்து விதமான பெயர்களுடன் இயங்கினாலும், பிராணன் மட்டுமே மனிதனுக்கு வெளியே உள்ள பிரபஞ்ச சக்தியோடு இணைந்து செயல் படும் தன்மை உடையதாக இருக்கிறது. அது மனதிற்கும் புறவுலகப் பொருட்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது.





அதாவது வீட்டில் உள்ள மின் இணைப்பு, வீட்டிலுள்ள மின் சாதனங்களுக்கும் வெளியிலிருந்து வரும் மின்சாரத்திற்கும் இடையே ஒரு இணைப்புக் கருவியாகச் செயல்படுவதைப் போல, பிராணன் பிரபஞ்ச சக்திக்கும் மனிதனின் மனதிற்கும் இடையே ஒரு இணைப்புக் கருவியாகச் செயல்படுகிறது.

அந்தக் கருவியைத்தான் அதாவது பிராணனைத்தான் பிரபஞ்ச சக்தியோடு இணைக்க விடாமல் பிடித்து வைத்தால் கூற்றுவனையும் உதைக்கலாம் என்கிறார் திருமூலர்.

     





"காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்" என்று சொன்ன திருமூலர், காற்றை வயப்படுத்தி 'கும்பகம்' செய்வது எப்படி என்பதற்கும் குறிப்புகள் தருகிறார்.

"மன்மனம் எங்குஉண்டு வாயுவும் அங்குஉண்டு; மன்மனம் எங்குஇல்லை வாயுவும் அங்குஇல்லை.."
(மனம் எங்கு உள்ளதோ, வாயுவும் அதாவது பிராணனும் அங்கு இருக்கும்; மனம் எங்கு இல்லையோ, வாயுவும் அங்கு இருக்காது) 
.. திருமந்திரம் 620


"ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்குஇருக்கில் அடங்கி அடங்கிடும் வாயு.."
(உள்ளம் ஒடுங்கி ஒருமைநிலை அடைந்து நின்றால், பிராணனும் அங்குக் கட்டுப்பட்டு நின்று விடும்) 
... திருமந்திரம் 666



'ஒடுங்கி' என்றால் மனம் அகவுலகில் பிரவேசித்து விட்டது என அர்த்தம். இதைத்தான் 'பிரத்யாஹாரம்' என ரிஷி பதஞ்சலி குறிப்பிடுகிறார்.

ஒடுங்கிய மனம் அங்கேயே இருக்க வேண்டும் என்கிறார் திருமூலர். அப்படி இருந்தால், 'பிராணனும்' உள்ளுக்குள் ஒடுங்கி அடங்கிவிடும் என்கிறார். 

அந்த நிலையில், பிராணன் வெளியுலகில் உள்ள பிரபஞ்ச சக்தியுடன் இணைப்பில் இருக்காது; அதன் காரணமாக மனமும் வெளியில் சென்று சஞ்சரிக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிடும்.





தியானம் செய்ய வேண்டுமானால் மூன்று நிபந்தனைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது:-
1. 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்குமிடத்தில் 'ஆக்ஞா' சக்கரம் இருப்பதாக எண்ணி, அந்த இடத்தில் நமது மனதை நிலைநிறுத்தி தியானிக்க வேண்டும்.
2. தியானம் செய்யும்போது எந்தப் பொருளையும் நினைக்கக்கூடாது.
3. தியானம் செய்யும் நேரங்களில் நமது 'பிராணன்' மனதோடு சேர்ந்து 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்தில் ஒடுங்கி இருக்க வேண்டும்.




மூன்று நிபந்தனைகளையும் படித்தவுடன் நமது மனதில் பல கேள்விகள் வந்துவிடும்‌.
அவற்றிற்கான விளக்கங்களைக் கொடுத்துவிட்டு, பின் 'தியானப் பயிற்சி' பற்றி பார்ப்போம்.

ஏனெனில், குழப்பம் நிறைந்த மனதுடன் தியானம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் நம்மால் எந்தவித வெற்றியையும் காண முடியாது.




மனதில் எழும் முக்கியமான கேள்விகள்- -
1. வால்மீகி, துருவன் போன்றோர் பறவுலகில் இருந்துகொண்டு ஏதோவொன்றை மனதில் நினைத்துத்தானே தவம் செய்தார்கள்; அதன்மூலம் அவர்கள் விரும்பியதை அடைந்தார்களே! அது எப்படி?

2. அதேநேரம் பெரும்பாலான
பயிற்சி நிலையங்களில், ஒரு பொருளில் தொடர்ந்து கவனத்தைச் செலுத்துங்கள்; அதுதான் தியானம் என்கிறார்களே!

3. தியானம், தவம் .. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?





நாம் இல்லற தர்மத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் பெரும்பாலும் 'மன அமைதி' வேண்டியே தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானத்தில் ஈடுபட்டாலும், மனம் பலவித ஆசைகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. எனவே நம்மால் ஒருமுகக் கவனத்துடன் (ஏகாக்கிரக சிந்தனை) தியானம் செய்ய முடிவதில்லை. 

அத்துடன் 'பிராணனும்' மனதுடன் ஒடுங்காமல் இருப்பதால், மனம் மிகவும் எளிதாக தியானத்திலிருந்து நழுவி விடுகிறது.




வால்மீகியும், துருவனும் புறவுலக தியானத்தில்தான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் இருந்தது 'ஒருமுக கவனம்'. அத்துடன் அவர்கள் தியானம் செய்யும் பொழுது இல்லறத்தைப் பற்றி (குடும்பத்தைப் பற்றி) முழுவதுமாக அக்கறையின்றி இருந்து விடுகிறார்கள்.



வால்மீகி 'மரா' என்ற மரத்தின் பெயரை உச்சரித்து தியானம் செய்தார்; துருவன்
மகா விஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். இருவரது மனமும் புறவுலகில் இருந்தாலும், அவர்களது கவனம் ஒரே பொருளின் மீது ஒடுங்கி, ஒருங்கி இருந்ததால் அவர்களது 'பிராணனும்' மனதுடன் ஒடுங்கி விடுகிறது. எனவே, அவர்களின் தியானத்திற்கு எந்தவொரு இடையூறும் வருவதில்லை.

தொடர்ந்து தொய்வின்றிச் செய்யப்படுவதால், தியானம் "தவம்" என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.

     



"Meditation is not so simple as some Eastern teachers appear to indicate; nor is it as difficult as Westerners sometimes suppose". .. Excerpt from the book "Meditation" published by Sri Ramakrishna Math.
('தியானம்' என்பது கீழை நாட்டில் உள்ள சில ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வளவு எளிமையானது அல்ல; அதேநேரம் மேலை நாடுகளில் உள்ளவர்கள் நினைப்பது போல் அவ்வளவு கடினமானதும் அல்ல)

தியானம் என்றால் என்ன; அதை எப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்டால், பலவிதமான விளக்கங்கள் வரும். தியானம் செய்வதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்று கேட்டாலும், பலவிதமான பதில்கள் கிடைக்கும்.




என்னைப் பொறுத்தவரை தியானத்தை முறையாகச் செய்தால், ஆரம்பத்தில் 'அமைதியான மனம்' என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; முடிவில் 'உள்ளிருந்து பெருகும் ஆனந்தம்' என்றால் என்ன என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

இடையில் என்ன நடக்கும் -- அதை நீங்கள் அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள்.


     


(நான் செய்யும் தியானமுறை பற்றி குறிப்பிடுகிறேன்.

ஏற்கனவே பல முறைகளைக் கடைப்பிடித்துப் பார்த்தேன் ; பலன் ஏதும் இல்லை. தற்பொழுது கடைப்பிடிக்கும் முறை பயனுள்ளதாக உள்ளது. யாருக்கேனும் பயன் படலாம் என எண்ணி இதைப் பொதுவெளியில் பதிவு செய்கிறேன்.

இதுபோல்தான் வேறு இடங்களில் கற்றுக் கொடுக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

முன்னால் சொன்னவற்றில் நிறைய ஊகங்கள் இருந்தன; ஆனால், எனது தியான முறை உண்மையானது.

நான் தியானம் எப்படி செய்கிறேன்; அப்பொழுது என்னில் என்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதைத் தெரிவிக்கிறேன். எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறவர்கள் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

ஆனால், ஓர் எச்சரிக்கை - -
இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக இதனைச் செய்யக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்)

    

மனதை 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்தில் நிலை நிறுத்துவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. ஆனால், மனதில் எதையும் நினைக்காமல் இருப்பது 
எப்படி என்பதுதான் தெரியவில்லை.

'நமசிவாய' மந்திரத்தை மௌனமாக சொன்னாலும், உடனே 'சிவலிங்கம்' நினைவிற்கு வந்துவிடுகிறது. கூடவே 'நடராஜர்' சிலை, 'சிதம்பரம்' கோயில், கைலாயம் என ஒவ்வொன்றாக மனதில் தோன்ற, மனம் நழுவி வெளியே ஓடி விடுகிறது.

மனதின் இயல்பே எதையாவது ஒன்றை நினைப்பதுதான். ஆனால், நினைக்கும் ஒன்றுக்கு உருவம் இருக்கக்கூடாது என்றால், அது எப்படி முடியும் என எண்ணினேன்.




உருவமற்ற ஒன்றை எப்படி நினைக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்தேன்‌.

குழம்பிய நிலையில் இருந்தபோது உபநிடதத்தில் உள்ள மஹாவாக்கியம் என் நினைவிற்கு வந்தது .. "Ayam Atma Brahma" (அயம் ஆத்மா பிரம்மா). "அத்வைதத்தில்" இந்த ஆத்மாவும் பிரம்மமே என பொருள் கூறுவார்கள்.

சிந்திக்க ஆரம்பித்தேன். இந்த இடத்தில் 'பிரம்மா' என்பது 'பரம்பொருளை' குறிக்கிறது.

பரம்பொருளுக்கு உருவம் கிடையாது. ஆனால், 'பிரம்மா' என்ற சொல்லிற்கு 'எப்பொழுதும் விரிவடைந்து கொண்டிருப்பது' (ever expanding) என்ற விளக்கமும் உண்டு.

எனவே 'பிரம்மா' என்று சொன்னவுடன் Milky Way என்னும் galaxy (பால்வெளி) நினைவிற்கு வந்துவிடுகிறது.

பிரம்மாவிற்குப் பதிலாக "ஆத்மாவை" நினைத்தால் என்ன என்று தோன்றியது.

    



"ஆத்மா" என்று சொல்லும்போது எந்தவொரு பொருளும் மனதில் தோன்றவில்லை. எனவே "ஆத்மாவை" நினைத்து தியானம் செய்யலாம் என நினைத்தேன்.

 


"ஆத்மா" என்ற வார்த்தையை எப்படி உபயோகிக்கலாம் என சிந்தித்தேன். "அயம் ஆத்மா" என்பதை சிறிது மாற்றி "அயம் ஆத்மனே" என்று சொல்லிப் பார்த்தேன்.  ஏனெனில் அது மூச்சின் ஓட்டத்திற்கு இசைவாக இருந்தது.

மூச்சின் ஓட்டம் 1:2 என்ற விகிதத்தில் இருக்கும்; "அயம் ஆத்மனே" 3:6 என்ற விகிதத்தில் உள்ளது .. அதாவது 1:2.

எனவே, மூச்சை உள்ளே இழுக்கும்போது 'அயம்' என்றும், மூச்சை வெளிவிடும்போது 'ஆத்மனே' என்றும் .. மௌனமாக உச்சரிப்பேன்.






புதிய முறையில் தியானப் பயிற்சியை ஆரம்பித்தேன்.

வழக்கம்போல 'அர்த்த பத்மாசனத்தில்' அமர்ந்து கொண்டு, தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

முதலில் மூச்சை உள்ளே இழுத்து பின் வெளியே விடுவதில் கவனம் செலுத்தினேன். கூடவே 'அயம் ஆத்மனே' என்றும் மௌனமாக உச்சரித்துக் கொண்டேன்.

இரண்டொரு தடவை உச்சரித்த பின்பு, மூச்சோடு கூட தொண்டையின் உட்புறமும் கவனத்தை செலுத்தினேன்.

அடுத்து மூச்சோடு பயணம் செய்யும் மனதை, அதிலிருந்து விலக்கி
கவனத்தை உள்நாக்கின் பின்புறமும், கடைசியாக 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்திலும்
செலுத்தி, மனதை அந்த இடத்தில் நிலைபெறச் செய்தேன்.

இப்பொழுது மனதில் எந்தவொரு உருவமும் தென்படவில்லை.

பதிலாக "மன்மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு" என்று சொன்ன திருமூலரின் கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்டேன்.




தியானப் பயிற்சியின் ஆரம்ப நிலையில் 'அர்த்த பத்மாசனத்தில்' அமர்ந்து, கைகளைக் கோர்த்து மடியினில் வைத்து, 'அயம் ஆத்மனே' என மௌனமாக உச்சரித்து, தொண்டைக் குழியில் கவனம் வைத்து முடிவில் மனதை 'பிட்யூட்டரி'
சுரப்பி இருக்கும் இடத்தில் நிலை நிறுத்தினேன்.




இப்பொழுது அப்படி இல்லை; நேராக எதையும் உச்சரிக்கத் தேவையின்றி
மனதை 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்தில் நினைத்தவுடன் நிலை நிறுத்த முடிகிறது.

திருமந்திரம் 566-வது பாடலில் திருமூலர் இவ்வாறு கூறுகிறார் ..
"புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே".

பறவையை விட வேகமாக செல்லக்கூடியது 'பிராணன்' என்கிறார். பிராணனை குதிரையோடு (புரவி) ஒப்பிடுவது சித்தர்களின் பழக்கம். காரணம் குதிரையைப் போன்று பிராணனையும் அடக்குவதும் மிகவும் கடினம்.

ஏனெனில், சுற்றித் திரியும் மனதை அடக்குவதே கடினம்; இவ்வளவுக்கும் மனம் நம் உள்ளே தான் உள்ளது. பிராணனோ பிரபஞ்ச சக்தியோடு இணைந்த ஒன்று. எனவே அதை கட்டுக்குள் வைப்பது மிக மிகக் கடினம்.

இருந்தாலும் 'பிராணனை' அடக்குவதற்கு திருமூலர் சொன்னதுதான் "மன்மனம் எங்கு உண்டு; வாயுவும் அங்கு உண்டு".

மனமும், பிராணனும் ஒரே இடத்தில் ஒடுங்கிய பின், உடலில் என்ன நிகழ்வுகள் நடந்தன என்று பார்ப்போம்.

   



இந்த முறையில் 'தியானம்' செய்தபோது உடலில் நடந்த நிகழ்வுகள் புதியதாகத் தோன்றின. அவை ...
1. மூச்சை உள்ளே இழுத்தபோது வழக்கம்போல் மார்புக்கூடு விம்மி கழுத்தை நோக்கி மேலே நகர்ந்தது.

2. மூச்சை வெளியே விடும்போது மார்புக்கூடு இறங்கி பழைய நிலைக்கு வரவில்லை. எந்த அளவிற்கு ஏறி நின்றதோ அந்த அளவிலேயேத் தங்கிவிட்டது.

3. மாறாக, வயிற்றிலிருந்து காற்று வெளியே செல்வது போன்ற உணர்வு; காரணம் வயிறு உள்ளே ஒடுங்கியதுதான்.

4.அடுத்தமுறை மூச்சை இழுக்கும்போது, மார்புக்கூடு மேலும் கொஞ்சம் மேலே ஏறியது.

5. வயிறு இன்னும் கொஞ்சம் உள்ளே ஒடுங்கியது.

6. நான்கு-ஐந்து தடவைகள் மூச்சு உள்ளே வந்து வெளியே சென்றபின், இதற்குமேல் விரிவடைய முடியாது என்ற நிலைக்கு மார்புக்கூடும், இதற்குமேல் ஒடுங்க முடியாது என்ற நிலைக்கு வயிற்றுப் பகுதியும் தள்ளப்பட்டு விட்டன.

7. அதன்பின் மூச்சுக் காற்று உள்ளே வருவதையும், வெளியே செல்வதையும், அடிவயிற்றுப் பகுதியில் ஏற்படும் சிறிய அசைவின் மூலம் மட்டுமே உணர முடிந்தது.

இந்தப் பயிற்சியில் எத்தனை நிமிடங்கள் வேண்டுமானாலும், மனதில் எந்த உருவத்தையும் எண்ணாமல் இருக்க முடிந்தது.

முதன்முதலாக, விழிப்பு நிலையிலும் மனம் 'அமைதியாக' இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

    



மூச்சை உள்ளே இழுக்கும்போது மேலே ஏறிய மார்புக்கூடு கீழே இறங்காமல் இருந்ததற்குக் காரணம், மனதோடு பிராணனையும் பிடித்து வைத்ததுதானா என்ற சந்தேகம் தோன்றியது.

திருமூலரின் பாடல் நினைவிற்கு வந்தது.
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை..."
இதிலிருந்து ஒரு உண்மை புரிந்தது.

மூச்சை உள்ளே இழுக்கும்போது வெளியில் இருந்து வரும் பிராண சக்தி (பிராணன்) மார்புக்கூட்டை மேலே ஏற்றுகிறது; மூச்சை வெளியே விடும்போது பிராண சக்தியின் உதவி இல்லாததால், மார்புக்கூட்டால் கீழே இறங்கமுடியவில்லை.

மார்புக்கூடு கீழே இறங்காத காரணத்தினால்,
 'பிராணன்' மனதோடு கூட 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்குமிடத்தில் ஒடுங்கி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
..... ..... .... .....

இதில் சொல்லப்பட்டக் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்கள், இந்த தியான முறையைப் பயிற்சி செய்யலாம். சுமார் இரண்டு நிமிடங்கள் காலையிலும், மாலையிலும் செய்யலாம்.

தியானம் சரியான முறையில் கடைப்பிடிக்கப் பட்டால், பின்பு தியானம் செய்யும் நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.

ஆனால், ஏற்கனவே சொன்னதுபோல
இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

என்றும் அன்புடன்,
உங்களில் ஒருவன்.

           

                     முடிவுரை

இந்த கட்டுரையை முடிக்கும்போது, மனதில் ஒரு திருப்தியும், ஒரு பணிவும் மட்டுமே இருக்கின்றன.

திருப்தி — எனக்குள் எழுந்த கேள்விகளை என்னால் இயன்ற அளவிற்கு நேர்மையாக விசாரித்துப் பதிவு செய்துள்ளேன்.

பணிவு — நான் கண்டவை அனைத்தும் முழுமையான உண்மைகள் என்று சொல்லும் அருகதை எனக்கு இல்லை.

வேதாந்தம் கூறுவது போல, உண்மை என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் அல்ல; ஒவ்வொருவரும் தாமே அறிந்து கொள்ள வேண்டிய அனுபவம்.

இந்தப் பயிற்சியின் போது நான் குறிப்பிட்டுள்ள அனுபவங்கள், எனது தனிப்பட்ட அனுபவங்கள் மட்டுமே. இதே அனுபவங்கள் அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒவ்வொருவரின் உடல், மனம், சாதனைப் பக்குவம் ஆகியவற்றைப் பொறுத்து அனுபவங்கள் மாறுபடலாம்.

அதனால், இந்த நூலில் உள்ள எந்தக் கருத்தையும் வெறுமனே நம்ப வேண்டாம். அவற்றை உங்கள் சொந்த விசாரத்திற்கும், சாதனைக்கும் உட்படுத்திப் பாருங்கள். உண்மையானது நிலைத்திருக்கும்; உண்மையல்லாதது தானாகவே விலகிவிடும்.

இந்தக் கட்டுரையால் ஒருவருக்காவது தியானத்தின் மீது ஆர்வம் பிறந்தால், மன அமைதியை நோக்கி ஒரு சிறிய அடி எடுத்து வைக்கத் தூண்டப்பட்டால், அல்லது தன்னைப் பற்றிய ஒரு புதிய கேள்வி அவருக்குள் எழுந்தால், அதுவே இந்த எழுத்தின் பலன்.

இந்த நூலை நான் ஒரு ஆசிரியராக எழுதவில்லை. சத்தியத்தைத்
தேடிக்கொண்டிருக்கும் ஒரு சாதகராகவே எழுதியிருக்கிறேன்.

எனது தேடல் இன்னும் தொடர்கிறது.


அன்புடன்,
உங்களில் ஒருவன்


(முன்னுரை, இடைமுன்னுரை மற்றும் முடிவுரை மூன்றையும் வழங்கியது ChatGPT)

          

Saturday, 8 August 2026

மழலையின் கீதை


          இறை வணக்கம்


ஆங்கார இருளகற்றி
    ஆணவத்தின் பிறப்பகற்றி
ஓங்கார நாதங்கள்
     உரைத்திருப்ப தெக்காலம்?


      நிலையென ஒன்று

நிலையில யெனினும்
     நிலையென எண்ணி
நிலை தடுமாறி
     நிலைகொளா மனமே

நிலையென ஒன்று
     நினதுளே உண்டு
நினைவகப் படுத்தி
     நிலைகொள் தினமே


               முன்னுரை

பக்குவப்படாத மனம், பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும்பொழுது புத்தி தடுமாறுகிறது. வேதனை, விரக்தி, கோபம் என எல்லா உணர்ச்சிகளும் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன.

அப்படி ஒரு சோதனை அவனுக்கும் இருந்தது. வியாதிக்கு மருந்தென எண்ணி, கீதையைப் பலமுறை படித்தும் பலனில்லை.

மனத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள். விடைக்காக ஏங்கித் தவித்தபோது, சுவாமி சின்மயானந்தரின் "Kindle Life" புத்தகம் ஒளியைக் காட்டியது. கீதையை எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது.

கீதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்கள் ஓரளவுப் புரிந்தபின், புரிந்ததைப் பிறருடன் பகிர வேண்டும் என்ற குழந்தைக்கே உரிய ஆர்வம் தோன்றியது. மழலையின் மகிழ்ச்சியோடு இந்த நூல் எழுதப்பட்டது. அதனால் இது ஒரு "மழலையின் கீதை".

இது உங்களுக்குப் பிடித்திருந்தால், அதற்குரிய பெருமை அனைத்தும் சுவாமி சின்மயானந்தர் அவர்களேயே சேரும்.

ஒருவேளை வேறுவகையான எண்ணம் தோன்றினால், ஒரு மழலையின் பிதற்றல் என மறந்து விடுங்கள்.


                 முகவுரை

மனம் ஒரு நந்தி மாதிரி. அது இறைவனை மறைக்கவும் செய்யும். இறைவனை தரிசிக்கவும் உதவும்.


ஓர் அகன்ற பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால், செம்மண், சாயம் என ஏதோவொன்று அதில் கரைந்து, கலங்கிய நிலையில் உள்ளது. அத்துடன் அதில் உள்ள தண்ணீரும் அலை அடிப்பது போல் அசைந்துகொண்டே இருக்கிறது.

அந்த சமயம், அந்த பாத்திரத்தில் உள்ள நாணயத்தை நம்மால் பார்க்க இயலுமா?

நாம் நாணயத்தை பார்க்க வேண்டுமென்றால் பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கலங்கிய நிலையில் இருக்கக் கூடாது. சாயம் என்றல்ல; சந்தனம் கூட இருக்கக் கூடாது. அத்துடன் தண்ணீரும் அலைகளின் றி இருக்க வேண்டும்.


மனிதன் பாத்திரம்; மனம் தண்ணீர்; இறைவன் நாணயம்.


மனம் அலைகள் இன்றி இருப்பதற்கு வழிபாடு, தியானம் போன்றவை நிச்சயம் உதவும். ஆனால், மனதில் களங்கம் இருந்தால் நம்மால் உள்ளிருக்கும் இறைவனை தரிசிக்க இயலுமா?

நாம் செய்யும் வழிபாடு, தியானம் போன்றவை மனதை ஒருமுகப்படுத்த உதவும். ஆனால் மனதில் படிந்துவிட்ட களங்கத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்? அது தானாகவே நீங்குமா அல்லது நாம்தான் ஏதேனும் முயற்சி செய்ய வேண்டுமா?

மனம் என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது, அதனை செம்மைப்படுத்த நாம் எந்தெந்த வழிகளைக் கையாள வேண்டும் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்ட விஷயங்கள் நமக்குள் நன்கு பதிய வேண்டும்.

புரிந்துகொண்ட விஷயங்கள் நமக்குள் நன்கு பதிந்துவிட்டால் அதன்பின் அவற்றைக் கடைப்பிடிப்பதும், களைகளைக் களைவதும் முயன்றால் எளிதான காரியமே!

அதெல்லாம் சரி; மனமென்றால் என்ன,  அதன் செயல்பாடு எப்படி இருக்கும், அதைக் கையாளும் வழி என்ன என்பதை எங்கிருந்து தெரிந்து கொள்வது?

மனதைப் பற்றி எல்லா மறை நூல்களும் நிறைய போதனைகள் செய்கின்றன. இருந்தாலும் வேதவியாசர் அருளிய "பகவத்கீதை" எவ்வளவு விரிவாக, விஞ்ஞான பூர்வமாக, மனோதத்துவ ரீதியாக எடுத்துரைக்கிறது!

நாம்தான் அதனை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறோம். காரணம் அதைப் பற்றிய தவறான எண்ணங்கள் -- அது ஒரு கொலைகார நூல், புரட்சி நூல், வைணவ நூல் போன்று பலப்பல தவறான எண்ணங்கள் -- நம்மை ஆட்டிப் படைப்பது தான்.

இதையெல்லாம் மீறி, அதனுள் புகுந்து பார்த்தாலும், கீதையின் தத்துவங்கள் எளிதில் புரிபடுவதில்லை.

கீதையில் உள்ள வாழ்வியல் தத்துவங்கள் ஒரு மழலைக்கே உரிய தொனியில் இங்கே தரப் பட்டிருக்கின்றன.

கீதையில் உள்ள அனைத்து தத்துவங்களும் இதில் இல்லை என்றாலும், அதன் அடிப்படை தத்துவங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பகுதியாகப் படித்து, மனதிற்குள் வாங்கி, நன்கு பதிய வைத்து, புரிந்து, அதன்பின் அடுத்த பகுதிக்கு செல்வது நல்ல பயனைத் தரும்.


பொருளடக்கம்



  1. ஞானபூமி

  2. சனாதன தர்மம்

  3. தர்மம்

  4. அர்த்த

  5. காம

  6. மோக்ஷ 

  7. சாதுர்வர்ண்யம்

  8. வர்ணாஸ்ரம தர்மம்

  9. தெரிதலும், புரிதலும்

10. மனிதனும், தாக்கமும் 

11. ஐவர் கூட்டணி

12. தாக்கமும், உடலும்

13. தாக்கமும், மனமும்

14. தாக்கமும், புத்தியும்

15. காரணமே காரியம்

16. பதிவும், செயலும்

17. மனமும், புத்தியும் 

18. காரண, காரியம்

19. பற்று 

20. வாசனா

21. ஆன்மா

22. மூன்று குணங்கள்

23. குணங்கள் – விளக்கம் 1

24. குணங்கள் – விளக்கம் 2

25. குணங்கள் – விளக்கம் 3                    

26. குணங்கள் – விளக்கம் 4

27. புறச்செயலும், அகச்செயலும்

28. நான்கு வர்ணங்கள்

                                                                        29. வர்ணங்கள் – விளக்கம் 1


                                                                       30. வர்ணங்கள் – விளக்கம் 2


                                                                       31. வர்ணங்கள் – விளக்கம் 3


                                                                       32. வர்ணங்கள் – விளக்கம் 4


                                                                       33. வர்ணங்கள் – விளக்கம் 5


                                                                       34. வர்ணங்கள் – விளக்கம் 6


                                                                       35. வர்ணங்கள் – விளக்கம் 7


                                                                       36. வர்ணங்கள் – விளக்கம் 8




37. மனிதனின் அடுத்த நிலை          

          

38. உணர்ச்சியும், உணர்வும்


39. வாசனாவின் கறை


40. நோயும், மருந்தும்


41. வாழ்க்கை நெறியும், வாழ்க்கைத் தரமும்


42. நேற்று, இன்று, நாளை


43. கடமையும், பலனும்


44. வழித்தட மாற்றம்


45. கடலும், அலையும்


46. மனமும், சிலையும்


47. ஒப்பீடு


48. தவறெனத் தெரிந்தால்


49. துணை நலம்


50. சுயமேம்பாட்டிற்கான உத்திகள்


51. அந்தக்கரணங்கள்


52. அந்தக்கரணங்களின் செயல்பாடு (பொதுவான விதிமுறைகள்)


53. நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு


54. இன்பமும், அமைதியும்


55. ஞானம் எனும் நெருப்பு


56. ஞானத்திற்கான பாதை


57. நீரில்லாத ஆறு


58. சச்சிதானந்தம்


59. இருள்சேர் இருவினைகள்


60. தன்முனைப்பு


61. வளர்ச்சியும், மலர்ச்சியும்


62. யான், எனது


63. நான் யார்?


64. இந்த நானும், அந்த நானும்


65. பந்தம்


66. நாமும், நமக்கான பாதையும்


67. மார்க்கமும், யோகமும்


68. பக்தி மார்க்கம்


69. கர்ம மார்க்கம்


70. தியான மார்க்கம்


71. ஞான மார்க்கம்


72. ஞான மார்க்கம் – பாதை 1


73. ஞான மார்க்கம் – பாதை 2


74. ஞான மார்க்கம் – பாதை 3


75. ஞான மார்க்கம் – பாதை 4


76. விழிப்புணர்வு


77. பலூனும் புல்லாங்குழலும்


78. நன்றியுரை


                                       


                  1. ஞானபூமி

தர்ம பூமி இந்த பூமி. தர்மம் தழைத்தோங்கும் பூமி இது. உலகின் எந்தவொரு நாட்டையும் விட அதிகமாகவே தர்மத்தின் தூதுவர்கள் அவதரிக்கும் பூமி இது. அதனால்தான் இதனை ஞானபூமி என்று அழைக்கிறோம்.



வருடக்கணக்கில் வானம் பொய்த்து விட்டால், நிலத்தடி நீர் மட்டுமல்ல,  அதில் உள்ள விதைகளும் மறைந்து போகின்றன. ஆனால் ஒருமுறை பருவ மழை பெய்து விட்டால், நிலமகள் பச்சைப் போர்வை போர்த்திக் கொள்கிறாள். அதுவரை அந்த விதைகள் அங்குதான் இருந்தன. நம் கண்களுககுத்தான் அவை புலப்படுவதில்லை. அதற்கு ஒரு பருவ மழை தேவைப் படுகிறது.

தர்மத்தின் விதைகளும் அப்படித்தான் இந்த பூமி முழுவதும் தூவிவிடப்பட்டுள்ளன. அவை மனிதர்களுக்குள்ளும் மறைந்து கிடக்கின்றன. மனிதன் தனக்கு வெளியே உள்ள பொருட்களின்பால் பற்று வைப்பதால், அதனால் ஏற்படும் மாயையின் வெப்பத்தில் தாக்குண்டு நிற்பதால், தர்மத்தின் விதைகள் தம்மை வெளிப்படுத்த முடியாமல் அடங்கி இருக்கின்றன. எப்பொழுது ஒருவன் இந்த மண்ணுலகம் ஒரு புண்ணுலகம் என்று புரிந்து கொண்டு, விண்ணுலக சொத்திற்காக ஏங்குகின்றானோ, எப்பொழுது அந்த ஏக்கம் மழையெனப் பெய்கிறதோ,
அப்பொழுது தர்மத்தின் விதைகள் தம்மை வெளிப்படுத்தி அவனைப் போர்த்திக் கொள்கின்றன.
அவன் இம்மையிலும் மறுமையைக் காண ஆரம்பித்து விடுகிறான்.



ஒரு நாட்டில் அதர்மங்கள் மலிந்து கிடக்கின்றன என்றால், அந்த நாட்டின் மக்கள் விண்ணுலக சொத்திற்கு ஏங்கவில்லை என்று அர்த்தம்!? 



             2. சனாதன தர்மம்

இலக்கியத்தில் பாடல்கள் பலவகைப்படும். கற்பனையில் எழுதப்படும் பாடல்கள்; சிலப்பதிகாரம், இராமாயணம், மஹாபாரதம் போன்று வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய பாடல்கள்; தேவாரம், திருவாசகம் போன்று பக்திரசம்  சொட்டும் பாடல்கள்; பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் தாம் பெற்ற அனுபவங்களின் வாயிலாக வெளிப்படுத்திய பாடல்கள் என்று பலவகைப்படும்.


இவற்றில் திருக்குறள் எந்த இரகத்தை சேர்ந்தது? அது பொது நீதிகளையும், வாழ்க்கை நெறிகளையும் போதிப்பது. வேதங்களும் முக்கியமாக அவற்றின் ஒரு அங்கமாகிய உபநிஷதங்களும்   இந்த இரகத்தை சேர்ந்தவைதான். அவை நிரந்தர உண்மைகள் எனப்படும் "சனாதன தர்மத்தை" போதிப்பவை.


உண்மை என்பது வேறு; நிரந்தர உண்மை என்பது வேறு. உண்மை என நாம் நினைப்பவை எல்லாம் நிரந்தர உண்மையாக இருப்பதில்லை. ஒரு மனிதனுக்கு அவன் கட்டிய வீடு உண்மைதான். ஆனால், அந்த வீடு இடிந்து விட்டாலோ அல்லது விற்கப்பட்டுவிட்டாலோ அல்லது அவனே கூட இறந்துவிட்டாலோ, அதன்பின் அந்த வீடு அவனுடையது இல்லை என்பதே உண்மையாகி விடுகிறது. அதாவது அவன் கட்டிய வீடு அவனுடையது இல்லை என்பதே நிரந்தர உண்மையாகும். உடல், மனம், புத்தி உட்பட எதுவுமே அவனுக்கு நிரந்தரமல்ல என்பதுதான் உண்மை.


"ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல .......  நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே" என்று பட்டினத்தார் பாடியதும் இதனால்தானோ?



புறவுலகில் உள்ள பொருட்களை உண்மையென நம்பி, அவற்றின்மேல் பற்று வைக்கும் மனிதனின் மயக்கத்தை தெளிய வைத்து, நிரந்தர உண்மையான பரமாத்மாவின் மீது பற்று வைக்கக் கற்றுக் கொடுப்பதுதான் "சனாதன தர்மம்".


                       3. தர்மம்


வேதத்தில் உள்ள அனைத்து தத்துவங்களையும் ஒரே பிறவியில் புரிந்து கொள்வது என்பது முடியாத காரியம். ஆனாலும் தத்துவங்கள் அத்தனையையும் உள்ளடக்கி வேதம் நான்கே வார்த்தைகளில் சொல்லி விடுகிறது. அவை "தர்ம, அர்த்த, காம, மோக்ஷ" என்பன. அவற்றின் உள் அர்த்தத்தை சிறிது பார்ப்போம்.



 "தர்மம்" என்பது உதவி செய்வதை குறிப்பதல்ல. ஒரு பொருள் மண்ணாக இருந்தாலும், மரம், செடி, கொடியாக இருந்தாலும், எந்த ஜீவனாக இருந்தாலும் அது அதன் இயல்பான குணத்தை ஒத்து இருப்பதுதான் தர்மம் எனப்படும்.

இந்த தர்மம் எல்லா பொருட்களுக்கும், அதனதன் இயல்புக்கு ஏற்ப பொதுவாக இருந்தாலும், மனிதனிடம் மட்டும் அது ஒரே மாதிரி இருப்பதில்லை. அது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஒரே மனிதனிடமும் பருவத்திற்குப் பருவம் மாறுபடும். குழந்தைப் பருவத்தில் கடைப்பிடிக்கப்படும் தர்மம் அடுத்து வரும் பருவங்களில் மாறிவிடும். ஒரே பருவத்திற்குள்ளும் தர்மத்தின் இயல்பு அடிக்கடி மாறுவதைக் காணலாம். அதனால்தான் மனிதனின் சுபாவம் இது, இயல்பு இது என்று வரையறுத்துக்கூற முடிவதில்லை.

 மனிதனிடம் மாறுபட்ட இயல்புகள் இருப்பதனால்தான், தர்மம் பல பெயர்களில் -- சுயதர்மம், பிற தர்மம், மேலான தர்மம், கீழான தர்மம்,  பொதுவான தர்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது



மனிதனை, அவன் கடைப்பிடிக்கும் தர்மத்தை வைத்து வகைப்படுத்தி உள்ளது வேதம். அது பொதுவான அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உளவியல் விதியாகும்.



                     4. அர்த்த


"அர்த்த" என்றால் செல்வம் என்று பொருள். அது வெறும் பணத்தை மட்டும் குறிப்பதல்ல. எதுவெல்லாம் மனிதனுக்கு மயக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதுவெல்லாம் "அர்த்த" என்பதாகும்.



பெரும்பாலும் மனிதனே செல்வத்தைத் தேடிச் செல்கிறான் என்றாலும், பல நேரங்களில் செல்வம் மனிதனைத் தேடிச்சென்று அவனை மயங்க வைக்கிறது. 

செல்வம் கண்ணால் காணக் கூடியதாகவும் இருக்கலாம். கண்ணால் காண முடியாததாகவும் இருக்கலாம். 

பணம், பொன், மண், வீடு, கார் போன்றவைகள் கண்ணால் காணும் செல்வங்கள். அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம் போன்றவைகள் கண்ணால் காண முடியாத செல்வங்கள்.



தனக்கு வெளியே உள்ள செல்வத்தைத் தேடி ஓடும் மனிதன், தனக்கு உள்ளே உள்ள மாபெரும் செல்வத்தை இழக்க நேரிடுவதை அறிவானா?

நாம் வெளியில் தேடும் பொருட்செல்வத்தை விட, உள்ளுக்குள் சுரக்கும் அருட்செல்வம் பெரிதல்லவா?

அதனால்தான் வள்ளுவர்  "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் - பொருட்செல்வம்      பூரியார் கண்ணும் உள" என்கிறார்.


                        5. காமம்

"காமம்" என்பது இன்பம் துய்த்தல் எனப் பொருள்படும். பெரும்பாலும் பெண்ணோடு இணைத்து பேசப்படுவதாயினும் இது எல்லாப் பொருட்களுக்கும் பொருந்தும்.



தேவையில்லாத பொருள் மீதும், தேவைப்பட்ட அல்லது ஆசைப்பட்ட பொருள் மீது அளவிற்கு அதிகமாகவும் ஈடுபாடு கொண்டால் -- உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் கூட -- அது காமமாக உருவெடுக்கிறது.

நல்ல துணிமணிகளின் மேல் ஆசை என்பதனால் தேவையின்றி துணிகளை வாங்கி குவித்தாலோ, நகைகளின் மேல் பிரியம் என்பதற்காக நகைகளை மாற்றிக் கொண்டேயிருந்தாலோ, அது காமம் எனப்படும்.


தொண்டுகள் பல செய்யும் தலைவனிடம், தான் தலைவன் என்ற மமதை இருந்தால், அது கூட காமம்தான்.


ஆஸ்தி, அந்தஸ்து என எதுவாக இருந்தாலும், அதன் காரணமாக ஏற்படும் கர்வம் கூட ஒரு வகையில் காமமே.



நாம் எந்த பொருள் மீது காமம் கொண்டாலும், அது முடிவில் துன்பத்தையே தரும். ஆனால் ஒரே ஒரு பொருள் மட்டும் அதன் மீது நமது காமம் கூடக்கூட அளவற்ற இன்பத்தை தரும்  - அது "இறைவனின் திருவடி"



                    6. மோக்ஷ 

ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்து கலப்பது தான் மோக்ஷம் எனப்படும்.

கலப்பது என்றால் கூட்டத்தில் மேலும் ஒருவர் என்பதாக அல்ல. நீராவி மேகக் கூட்டத்தில் கலந்தாற்போல், ஆற்று நீர் கடலில் கலந்தாற்போல் அது அதன் தனித்தன்மையை இழந்து விட வேண்டும். அதற்கு முன் ஜீவாத்மாவிற்கு வேண்டியது மனிதனிடம் உள்ள பந்தத்திலிருந்து விடுதலை. ஜீவாத்மா தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதில்லை. மனிதன்தான் அதனை பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

அது விடுவிக்கப்படுமுன் மனிதன் மரித்துவிட்டால் மேலும் ஒரு பிறவி தவிர்க்க முடியாததாகிறது.

அந்த பந்தத்தின் பெயர்தான் "வாசனா". அதனைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.



"வாசனா" எனும் கூட்டிலிருந்து ஜீவாத்மாவிற்கு தான் இறக்கும் முன்பே விடுதலை அளிப்பதுதான் மனிதனின் தலையாய கடமையாகும்.


             7. சாதுர்வர்ண்யம் 


"சாதுர்வர்ண்யம்" மயா ஸ்ருஷ்டம், குண கர்ம விபாகச:" நான்கு வர்ணங்களை நான் படைத்தேன் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்ப என கண்ணன் சொல்கிறான். நான்கு வர்ணங்கள் என்று சொல்லி ஜாதி பிரிவினையை உண்டு பண்ணி விட்டார்கள் என்று குறைகூறும் பகுத்தறிவாதிகள், குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்ப என்ற சொற்றொடரை ஏன் மறந்துவிட்டார்கள்?


குணம் கர்மம் இரண்டையும் பொறுத்து மனிதனின் "வர்ணம்" வெளிப்படும். கர்மம் என்று சொல்லும் பொழுது செயல் என்று சொல்வதை விட மனோபாவம் என்று பொருள் கொள்வது சாலச்சிறந்தது. ஏனெனில், நாம் செய்யும் செயல்கள் வெளி உலகத்திற்குத் தெரிவதற்கு முன் அதற்கான ஒத்திகை நம் மனதளவில் நமது மனோபாவத்தின் அடிப்படையில் பலமுறை நடந்து விடுகிறது.



நான்கு வர்ணங்கள் என்பது மனோதத்துவ அடிப்படையில் சொல்லப்பட்ட ஓர் ஒப்பற்ற அற்புதம். அதை சரியாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் தவறாகப் புரிந்து கொள்வது எவ்வளவு பெரிய சமுதாயக்கேடு என்பதை பகுத்தறிவுவாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள் அறிவார்களா?


ஆன்மீகவாதிகள் என்று தங்களை கூறி கொள்பவர்கள் கூட (உண்மையான ஆன்மீகவாதிகள் அல்ல) இதனை தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர். 



         8. வர்ணாஸ்ரம தர்மம்


 வர்ணங்கள் நான்கு என்பது போல் ஆஸ்ரமத்திலும் நான்கு நிலைகள் உண்டு. ஆகவே இதனை வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம் எனப் பிரித்து பொருள் கொள்ள வேண்டும்.


ஆஸ்ரமம் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளை நான்கு நிலைகளாக, பருவங்களின் அடிப்படையில் பிரித்துக் காட்டுவது. ஆனால் வர்ணங்கள் என்பது ஒவ்வொரு மனிதனையும் அவனது குணத்திற்கும் மனோபாவத்திற்கும் ஏற்ப நான்கு பிரிவுகளாக பிரிப்பது.


அற்புதமான ஒரு தத்துவம் சரியாக புரிந்து கொள்ளப் படாவிட்டால் அந்த நாட்டின் கலாச்சாரமே சீரழிந்து போகும் என்பதற்கு வர்ண தர்மம் ஒரு அருமையான எடுத்துக்காட்டு.


நான்கு வர்ணங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், குணமும் மனோபாவமும் ஒரு மனிதனிடம் எப்படி ஏற்படுகிறது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.



     9. தெரிதலும், புரிதலும்


ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் என்பது வேறு; புரிந்து கொள்ளுதல் என்பது வேறு. 


ஒரு சிறுவனிடம் சூரியனைத் தெரியுமா என்றால், அவனது விடை தெரியும் அல்லது தெரியாது என்பதாகத்தான் இருக்கும். ஒரு விஷயத்தைப் பற்றி தெரியுமா என்றால் தெரியும் அல்லது தெரியாது என்ற இரண்டு விடைகளில் ஒன்றுதான் வெளிவரும். 


ஆனால், புரிந்து கொள்ளுதலில் பலவிதம் உண்டு. அதே சிறுவனிடம் சூரியனைப் பற்றி என்னவெல்லாம் தெரியும் என்றால், அவன் சொல்லும் பதிலிலிருந்து அவன் எந்த அளவிற்கு சூரியனைப் பற்றி புரிந்து கொண்டிருக்கிறான் என்பது தெரியவரும்.


உதாரணத்திற்கு:-

1. சூரியன் ஒரு நெருப்பு கோளம் என்றால்,

அது சரியாகப் புரிந்து கொள்ளுதல்.

2. எதனால் அந்த நெருப்பு கோளம் எனத் தெரியாது என்றால், 

அது புரியாதிருத்தல். 

3. சூரியன் கிழக்கே உதிக்கும் என்றால், 

அது தோற்றத்தை உண்மையெனத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்.

(சூரியன் கிழக்கே உதிக்கிறது" என்பது தோற்ற உண்மை; பூமி சுழல்வதால் அவ்வாறு தோன்றுகிறது என்பதே முழுமையான புரிதல்)


4. சூரியன் உதிக்கும் போது சிகப்பாக இருக்கும்; ஆனால் ஏன் எனத் தெரியாது என்றால்,

அது அரைகுறையாக புரிந்து கொள்ளுதல்.



வேதம் சொல்லும் உண்மைகளை சரியாகப் புரிந்து கொண்டவர்களை விட, வேறு வகைகளில் புரிந்து கொண்டவர்களே அதிகம்.



    10. மனிதனும், தாக்கமும் 


மனிதன் பிறந்ததிலிருந்து தன் வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றி இருக்கும் புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த தாக்கங்கள் அவனிடம் வந்து சேர்வதை அவனால் தடுக்க இயலாது. 

அந்த தாக்கங்களின் காரணமாக, அவன் அறிந்தோ அறியாமலோ அவனுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

அந்த தாக்கங்களின் காரணமாக அதற்குப் பதிலாக அவன் செய்யும் காரியங்கள் புறவுலகில் புதிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 

இவ்வாறு தாக்கங்களை வாங்குவதிலும், கொடுப்பதிலும் மனிதன் ஈடுபடும் பொழுது, அவன் பெரும் புதுப்புது அனுபவங்களின் சங்கமம் அவனது தலைவிதியையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றுவிடுகிறது.



சமுதாயம் என்பது தனி மனிதர்களின் கூட்டமைப்பு என்பதனால், சமுதாயத்தில் உள்ள அனைத்து மனிதர்களின் அனுபவ சங்கமத்தைப் பொறுத்து, அதன் கலாச்சாரம் மேன்மை பெறுகிறது அல்லது கீழ்மை அடைகிறது.


         11. ஐவர் கூட்டணி 

மனிதன் என்பவன் ஒருவனாகத் தோற்றமளித்த போதிலும், அவனுக்குள் ஐந்து தனித்தனி இயக்கங்கள் நடைபெறுகின்றன. அவை உடல், மனம், புத்தி, ஆழ்மனம் (வாசனா) மற்றும் ஆன்மா எனப்படும்.


இவற்றில் ஆன்மா என்பது மனிதன் இயங்குவதற்கு உயிரை கொடுத்து அவனது செயல்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஜீவாத்மா ஆகும். பரமாத்மாவுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டி விடுதலை கிடைக்கும் வரை, அது அமைதியாக விழித்துக் கொண்டிருக்கும் 



மற்ற நான்கிற்கும், தனித்தனியாகவோ, ஒன்றுடன் ஒன்று இணைந்தோ அல்லது கூட்டாகவோ செயல்பட வேண்டிய கட்டாயம் உண்டு. 

அவற்றின் செயல்பாட்டினைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு, அந்த மனிதன் தன்னை புரிந்தவன் ஆகிறான். 

தன்னை புரிந்தவனே தரணியையும் புரிந்தவன் ஆகிறான்.


தன்னில், தன்னை, தானே அறிவது; அதுதானே ஆன்மீகம்.



             12. தாக்கமும், உடலும்


இங்கு உடல் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களைக் குறிக்கிறது. புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்வது இவைதான். ஆனால் கண் பார்க்கிறது; காது கேட்கிறது என்று நாம் சொன்னால் வேதங்கள் அதனை ஒப்புக் கொள்வதில்லை. ஏன் அப்படி?



இருவர் சுவராசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை அழுது கொண்டே அவர்களை கடந்து செல்கிறது. சிறிது நேரம் கழித்து அங்கு வரும் அதன் தாய் அந்த இருவரிடமும் ஐயா என் குழந்தையை பார்த்தீர்களா என்று கேட்கிறாள். இருவரும் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறினால் அதற்கு என்ன அர்த்தம்? அந்த குழந்தை அவர்களின் கண் முன்னேதான் நடந்து சென்றது; இருந்தும் அவர்கள் ஏன் அதைப் பார்க்கவில்லை?


நாம் நன்கு உறங்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தமான பாடல் ரேடியோவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் நம்மால் அதை கேட்க முடிவதில்லை; என்ன காரணம்?


உண்மை என்னவெனில் புறவுலக தாக்கங்களை எதிர்கொள்வது உடலாக (ஐம்புலன்களாக) இருந்தாலும், அதனால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு இன்னொன்று தேவைப்படுகிறது. அதுதான் "மனம்".


          13. தாக்கமும், மனமும்


கண் பார்ப்பதில்லை, கண் மூலமாக மனம் பார்க்கிறது; காது கேட்பதில்லை, காது மூலமாக மனம் கேட்கிறது என்று வேதம் சொல்கிறது. 


எந்தவொரு தாக்கமும் உடல் மூலமாக மனதை அடைந்தால்தான், அதன் மூலம் புதுப்புது அனுபவங்களும், மாற்றங்களும் ஏற்படும். மனக்கதவு திறக்காவிட்டால் எந்தவித அனுபவமும் ஏற்படுவதில்லை. 

மனக்கதவு திறந்திருந்தாலும் மனம் தான் பெறும் தாக்கத்தை விரும்பி அனுபவித்தால் மட்டுமே அங்கு ஒரு பதிவு நிகழும்.



தினந்தோறும் காலையில் பலகாரம் சாப்பிடுகிறோம். நாக்கு பலகாரத்தின் ருசியை உணருகிறது. அந்தப் பலகாரம் நன்கு பழகிவிட்ட காரணத்தால் அதில் புதிதாக எந்த விருப்பமும் இல்லை. எனவே எந்த பதிவும் அங்கே நிகழ்வதில்லை.

மாறாக, அன்றைய தினம் புதிதாக ஒரு பலகாரம் செய்து பரிமாறினால், நாக்கு அதன் ருசியை உணர்வதோடு மனமும் அதன் சுவையை விரும்பி அனுபவித்தால், அதன் காரணமாக அங்கே புதிதாக ஒரு பதிவு நிகழ்கிறது.


        14. தாக்கமும், புத்தியும்


எந்த ஒரு தாக்கமும் மனதை அடைந்து விட்டால், மனம் மூலமாக பதிவு நிகழ்ந்தாலும், நிகழாவிட்டாலும் அடுத்து புத்தியையும் சென்று அடைகிறது. 

புத்தி தன்னை வந்தடையும் தாக்கத்தைப் பரிசீலித்து அது தனக்கு தேவை என்றால், தானும் ஒரு பதிவினை ஏற்படுத்துகிறது.


மனம் மூலமாக செய்யப்படும் பதிவுகள் உணர்ச்சியையும், சுபாவத்தையும் வெளிப்படுத்துகின்றன. 

அதேபோல் புத்தி மூலமாக செய்யப்படும் பதிவுகள் அறிவையும், ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இந்த இரண்டு பதிவுகளும் மூளையில்தான் நிகழ்கின்றன.


மனம் மற்றும் புத்தி மூலமாக செய்யப்படும் பதிவுகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

1. இரண்டின் மூலமும் பதிவுகள் நிகழ்கின்றன.

2. இரண்டிலும் பதிவுகள் நிகழ்வதில்லை. 

3. ஏதாவது ஒன்றில் மட்டுமே பதிவுகள் நிகழ்கின்றன.


மனிதனுக்குள் பதிவுகள் ஏற்பட மூன்று விஷயங்கள் அவசியமாகின்றன. மனிதன்; புறவுலகில் இருந்து அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏதோ ஒன்று; மனிதனுக்கும் அந்த ஒன்றிற்குமான தொடர்பு. 


இந்த மூன்றும் இணையும் பொழுது அவனுக்குள் ஏற்படும் அனுபவமே அவனுக்குள் பதிவுகளை ஏற்படுத்தி, அவனது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கிறது.


அதனால்தான் சுவாமி சின்மயானந்தர், "Life is a series of experiences" என்று கூறுவார். கீதை மனித வாழ்க்கையை "அனுபவ தாரா" — அனுபவங்களின் தொடர்ச்சியான ஓட்டம் — எனக் காண்கிறது.


"அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் 

ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன் 

ஆண்டவன் கொஞ்சம் அருகினில் வந்து

அனுபவம் என்பதே நான்தான் என்றான்" 

                        --கண்ணதாசன்.



       15. காரணமே காரியம்

நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்குமான காரணம் நமக்குள் ஏற்கனவே பதிவாகி விடுகிறது. அதனால்தான், நம்மால் வேறு மாதிரியாக செயல்பட முடிவதில்லை.


பெட்டியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டுமெனில், ஏற்கனவே அதனை பெட்டியில் போட்டிருக்க வேண்டும். 

பீரோவில் இருந்து துணிமணிகளை எடுக்க வேண்டுமெனில், ஏற்கனவே அவை அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கணிப்பொறியிலிருந்து நமக்கு தேவையான விவரங்கள் வெளிவர வேண்டுமென்றால், அதற்குரிய தொகுப்புகள் உள்ளே செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.


ஒரு மாம்பழம் நம் கைக்கு கிடைத்தால் அதனைப் பிரியமாக சாப்பிடுகிறோம். காரணம் அதன் சுவையைப் பற்றிய பதிவுகள் நமக்குள் இருப்பதுதான். ஒரு வேளை நாம் பார்த்தே இராத ஒரு பழம் நமக்கு கிடைத்தால், அதை தயக்கம் இன்றி சாப்பிடுவோமா? மாட்டோம். ஏனெனில் நம்மிடம் அந்த பழத்தை பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை.

 

பதிவுகள் (காரணம்) நல்லதாக இருந்தால் நம்மிடம் இருந்து வெளிப்படும் காரியமும் நல்லதாக இருக்கும்.

பதிவுகள் (காரணம்) மோசமாக இருந்தால், நம்மிடம் இருந்து வெளிப்படும் காரியமும் மோசமாகவே இருக்கும்.


காரியம் என்பது காரணத்தின் வெளிப்பாடே!



          16. பதிவும், செயலும்


மனம் மூலமாக செய்யப்படும் பதிவுகள் ஒரு மனிதனின் உணர்ச்சியையும், அவனது சுபாவத்தையும் குறிக்கும். 

புத்தி மூலமாக செய்யப்படும் பதிவுகள் ஒரு மனிதனின் அறிவையும், அவனது ஞானத்தையும் குறிக்கும்.

இந்த பதிவும், செயலும் எப்படி நடைபெறுகிறது; மனிதனுக்கு மனிதன் ஏன் வேறுபடுகிறது என பார்ப்போம்.


பள்ளியில் இருந்து வரும்பொழுது பையன் அழுது கொண்டே வருகிறான். அப்பா அவனைப் பார்த்து கேட்கிறார்:

"ஏண்டா அழுகிறாய்?" "ஸ்கூல்ல ஒரு பையன் அடிச்சிட்டாம்'பா"

 "ஏண்டா அவன் முரடனா" "ஆமாம்'பா" 

"நாளை முதல் அவன் பக்கத்தில் உட்காராதே" 

அப்பாவின் கட்டளை முரட்டு பையனின் பக்கத்தில் அமராதே என்ற பதிவினை அவனுக்குள் ஏற்படுத்துகிறது. மறுநாள் அந்தப் பையனை பார்த்ததும் ஏற்கனவே செய்யப்பட்ட பதிவின் காரணமாக என்ன செய்ய வேண்டும் என்பது மனதிற்கு தெரிகிறது. மனம் கட்டளை பிறப்பிக்க உடல் மூலமாக செயல்பாடு நிகழ்கிறது. பையன் முரட்டு பையனை விட்டு விலகி வேறு இடத்தில் அமர்கிறான். இங்கு அப்பாவின் கட்டளைப்படி ஏற்படும் பதிவு "காரணம்"; மறுநாள் விலகி அமரும் செயல் "காரியம்".

இதே பையனிடம் அவனது அப்பா, "ஏண்டா பார்த்துக்கிட்டா இருந்த; பதிலுக்கு அவன் கையை ஒடிக்க வேண்டாமா" என்று சொன்னால், பதிவு வேறு விதத்தில் நிகழும்; செயல் சண்டையில் முடியும்.


மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடுவதன் காரணமாக, அவனது சுபாவங்களும் மாறுபடுகின்றன. ஆனால் புத்தி மூலமாக ஏற்படும் பதிவுகள் எல்லா மனிதர்களிடமும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே இருக்கும்.



           17. மனமும், புத்தியும் 


மனமும், புத்தியும் ஒரு மனிதனுக்குள் இருந்தாலும் இரண்டின் செயல்பாட்டிலும்தான் எத்தனை வேறுபாடுகள்!


மனம் என்பது மனித உடலில் எந்த இடத்தில் உள்ளது என்பது பற்றி உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், உணர்ச்சி வசப்படும் பொழுது இருதயம் அதிகமாக துடிப்பதால் அந்தப் பகுதியே மனம் இருக்கும் இடம் என சொல்லப்படுகிறது. 

எது, எப்படி, எங்கு இருந்தாலும் அது செய்யும் பதிவுகள் மூளையில்தான் நிகழ்கின்றன.


மனம் எந்தவொரு தாக்கத்தை விரும்பினாலும் (ஒருவனை காயப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதுவும் ஒருவகை விருப்பம்தான்) 'தான்' என்ற உணர்வோடு, பற்றுடன் பதிவு செய்கிறது.

புத்தியினால் ஏற்படும் பதிவில் 'தான்' என்ற உணர்வும், பற்றும் கிடையாது.



ஒருவன் தலைசிறந்த அறிவாளியாக இருக்கலாம். ஆனால் அதை நினைத்து அவன் கர்வம் கொண்டால், மனம் மூலம் ஒரு பதிவு நடைபெற்று விடுகிறது.



தன்னை வந்தடையும் தாக்கத்திற்குப் பதிலாக ஒரு செயலை மனிதன் செய்ய விரும்பினால், மனம் அதற்குரிய பெட்டகத்தில் உள்ள பதிவுகளின் படி செயல்படும்; புத்தி அதற்குரிய பெட்டகத்தில் உள்ள பதிவுகளின் படி செயல்படும்.

மனம் புத்தியின் கட்டுப்பாட்டில் இருந்தால், புத்தியிடம் உத்தரவு கேட்டு வாங்கி, அதன்படி செயல்பட உடலுக்கு கட்டளையிடும். கட்டுப்பாடு இல்லாத போது உணர்ச்சியின் அடிப்படையில் மனம் தன்னிச்சையாக செயல்படும். அந்த செயல் சரியானதாக இருக்கும் என சொல்ல முடியாது. 



மனிதன் ஒரு தாக்கத்தைச் சந்திக்கும் பொழுது உணர்ச்சிவசப்பட்டு விட்டால், அந்த சமயத்தில் அவனது மனதிற்கும் புத்திக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது. 


ஒருவன் சட்டம் படித்தவனாக, தர்ம நியாயம் தெரிந்தவனாக இருந்தாலும், ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கிறான். அது எதனால்? காரணம், பெண்ணைக் கண்டபோது மனம் உணர்ச்சிவசப்பட்டு விடுவதால், மனதிற்கும் புத்திக்கும் இடையே உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது. 



அதேபோல் மனமும், புத்தியும் ஒரு தாக்கத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் வெவ்வேறு சமயங்களில் அனுபவிப்பதும் உண்டு.

அவர் ஒரு நேர்மையான நீதிபதி. இரவில் சாப்பிட அமர்கிறார். மனைவி பரிமாறுகிறாள். சாப்பாட்டை பிசைந்து கொண்டே இருக்கிறார். ஆனால் சாப்பிடவில்லை. மனைவியை காரணம் கேட்க 'இன்று ஒரு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை கொடுத்து விட்டேன்; அவன் மனைவி கைக்குழந்தையுடன் அழுது கொண்டிருந்தது மனதை என்னவோ செய்கிறது' என்கிறார்; ஏன்?

நீதிமன்றத்தில் அவர் புத்தி மட்டும் வேலை செய்தது. புத்தியில் உள்ள பெட்டகத்தின் பதிவுகளின் படி தூக்குத்தண்டனை கொடுக்கிறார். அவரது தீர்ப்பினால் அவனது மனைவி துடித்த துடிப்பு காரணமாக அவரது மனதில் ஒரு பதிவு நிகழ்கிறது. இரவில் அது நினைவுக்கு வர சாப்பிட முடியாமல் தவிக்கிறார்.



         18. காரண, காரியம்


ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். இது சாதாரண விஷயம்தானே என நினைக்கலாம். அப்படி நினைத்தால் அது தவறாகும்.

காரண, காரியம் என்பது ஒரு தொடர் சங்கிலியாக நமது வாழ்க்கையையே -- நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ -- மாற்றி அமைக்கிறது. அவை காட்டும் சித்து விளையாட்டுகளை நாம் பொருட்படுத்தாவிட்டால் நமது வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது.



அந்த சிறுவன் அடிக்கடி தந்தை கூட கடைத்தெருவிற்குப் போகிறான்., "அப்பா, அப்பா இந்த கடையில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வா" என்று ஒரு நாளும் கேட்காத அவன் அன்று மட்டும் ஏன் கேட்கிறான்? அன்றைய தினம் பள்ளியில் வைத்து அவனது நண்பன் அந்த கடை ஐஸ்கிரீமை பற்றி சொன்னதுதான் காரணம். அவன் கடைத் தெருவிற்கு போகும் போதெல்லாம் அந்த குறிப்பிட்ட கடையைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் அவனுக்குள் எந்த பதிவும் நடைபெறவில்லை. பள்ளியில் வைத்து நண்பன் சொன்னதும் ஒரு பதிவு நிகழ்கிறது. மாலையில் கடையைப் பார்த்ததும் பதிவு நினைவிற்கு வர அதை வாங்கி சாப்பிடுகிறான். காரணத்தில் இருந்து காரியம்.

நண்பன் சொன்னபோது அந்தக் கடை ஐஸ்கிரீம் பற்றி ஒரு ஊகம்தான் பதிவாகி இருந்தது. அதனை சுவைத்து சாப்பிட்ட பின், ஏற்கனவே உள்ள பதிவு மேலும் அழுத்தம் பெறுகிறது. காரியத்தில் இருந்து காரணம்.

நண்பர்களின் வற்புறுத்துதல் காரணமாக மதுவை ருசி பார்ப்பவன் கடைசியில் குடிகாரனாக மாறுவதும் இதனால்தான். 



இதனைத்தான் "cause and effect theory" என்கிறார்கள். அதாவது காரண காரியம். இதில் காரணம் என்பது நடந்து முடிந்தது. காரியம் என்பது இப்பொழுது நடப்பது. ஆனால் காரியம் நடந்து முடிந்ததும் அதுவே எதிர்கால காரியத்திற்கான காரணமாக மாறிவிடுகிறது.

"The present effect which is because of the past cause becomes, after its effect, the cause for future effect". 

.. Swami Chinmayanandha.

ஏற்கனவே பதிவாகியுள்ள காரணத்தின் காரணமாக இப்பொழுது நிகழும் காரியம், காரியம் முடிந்ததும், நாளைய காரியத்திற்கான காரணமாக மாறிவிடுகிறது.



இப்படி தொடர் சங்கிலியாக நடக்கும் காரண காரிய நிகழ்ச்சிகள் மனிதனின் குணத்தை அல்லவா நிர்ணயம் செய்கின்றன.



                     19. பற்று


சிறுவன் முதல் தடவையாக அப்பாவிடம் ஐஸ்கிரீம் கேட்டதற்கு காரணம், நண்பன் சொன்னதை வைத்து அந்த குறிப்பிட்ட கடையின் ஐஸ்கிரீம் நன்றாக இருக்கும் என ஒரு பதிவு நிகழ்ந்ததுதான். அந்தப் பதிவு நடைபெற்ற பொழுது அவன் அந்த ஐஸ்கிரீமின் சுவையை அறிந்திருக்கவில்லை.

ஒருவேளை அந்த கடையில் வாங்கிய ஐஸ்கிரீம் சுவை அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் அவனிடமிருந்து அந்தப் பதிவு புதுப்பிக்கப்படாமல் மறைந்துவிடும். அந்த ஐஸ்கிரீமின் சுவை அவனுக்கு பிடித்திருந்தால், அவன் அதனை விரும்பிச் சாப்பிடும் பொழுது ஏற்கனவே உள்ளிருந்த பதிவு மேலும் அழுத்தம் பெற்று பற்றாக மாறுகிறது.



ஒரு தாய் தன் குழந்தையை கொஞ்சுகிறாள். அந்த வீட்டின் வேலைக்காரியும் அதனைக் கொஞ்சுகிறாள். ஆனால் ஒரு வித்தியாசம் அந்த வேலைக்காரிக்கு அந்த குழந்தை தன் குழந்தை அல்ல என நன்றாக தெரியும். தான் வேலையை விட்டு நின்று விட்டாலோ அல்லது நிறுத்தப்பட்டுவிட்டாலோ அந்தக் குழந்தையை தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது என்பதும் தெரியும். அதனால்தான் அவள் அந்தக் குழந்தையை கொஞ்சினாலும், அதனிடம் எந்தவிதப் பற்றும் வைப்பதில்லை. அவள் காட்டுவது வெறும் அன்பு மட்டும்தான்.

ஆனால் அதன் தாய்க்கோ அது தன் குழந்தை என்பதால் அதன் மேல் பற்று ஏற்பட்டு விடும் அன்பிற்கு பதிலாக குழந்தையின் மேல் ஆசை வைக்கிறாள். அதாவது அன்பு + பற்று = ஆசை.



பெற்றோர்கள் பையனுக்கு பெண் தேடுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் தட்டிப் போகிறது. கடைசியில் ஒரு பெண்ணை பேசி மணம் முடிக்கிறார்கள். மகனுக்கு ஒரு மனைவி வேண்டும் என்ற தேவை பூர்த்தி ஆகிறது. முன்பு பார்த்த பெண்கள் தட்டிப் போனதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. ஒருவேளை முன்பு பார்த்த பெண் அவனது காதலியாக இருந்து அந்த திருமணம் நின்று போய் இருந்தால் அவனது மனம் என்ன பாடுபடும்? எதனால் அப்படி?

மகன் காதலித்த பெண்ணை பெற்றோருக்கும் பிடித்து திருமணமும் நடந்திருந்தால், மகனின் தேவை மட்டுமல்ல ஆசையும் பூர்த்தியாகிறது. ஏனெனில் அவள், அவன் பற்று வைத்த பெண். அதாவது தேவை + பற்று = ஆசை.



ஆசையே அழிவிற்கு காரணம் என்கிறார் புத்தர். ஆனால் ஆசைக்கு காரணமாக இருக்கும் இந்த பற்றுதான் மனிதனை படுகுழியில் தள்ளுகிறது. சகல துன்பங்களுக்கும் காரணமான இந்தப் பந்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது?


"பற்றுக பற்றற்றான் பற்றினை   - அப்பற்றை                                        பற்றுக பற்று விடற்கு" என்கிறார் வள்ளுவர். 

எளிதில் முடிகிற காரியமா அது?



                     20. வாசனா


நண்பர்கள் கூடி கேலியாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடும். "ஏண்டா, இவன் இந்த கத்து கத்துகிறான்" "விடுடா, போன ஜென்மத்து வாசனையாக இருக்கும்". போன ஜென்மத்தில் கழுதையாக பிறந்திருப்பான்; அதனால்தான் இப்படி கத்துகிறான் என்ற ரீதியில் பேசுவார்கள். 


கேலியாகத் தோன்றினாலும் வாசனாவைப் பற்றிய ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முக்தி கிடைக்கும் வரை ஆன்மாவும், அதனை மாயத்திரையாக சூழ்ந்திருக்கும் வாசனாவும் ஒவ்வொரு பிறவியாக தமது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும். 



"வாசனா" எப்படி உருவெடுக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுமுன்--

வீட்டின் முன் 'ஹால்' முழுவதும் காற்று நிரம்பி இருக்கிறது. ஆனால் கண்ணால் பார்க்க முடிவதில்லை. வெளியில் சென்று விட்டு வந்த அப்பா, அம்மா, மகன் மூவரும் ஹாலில் அமர்கிறார்கள். இப்பொழுது அறையில் மட்டுமின்றி மூவரின் உடலுக்குள்ளும் காற்று இருக்கிறது. 

தந்தை மகனுக்காக தான் வாங்கி வந்த பலூனை ஊதுகிறார். இப்பொழுது அவர் உடலில் இருந்து காற்று பலூனுக்குள்ளும், அறையில் இருந்து காற்று அவருக்குள்ளும் இடம் பெயர் கிறது. 

அறை முழுவதும் நிறைந்துள்ள காற்று நம் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் பலூனுக்குள் அடைப்பட்ட காற்று இடம் பெயர்வது பலூனுக்குள் அடைபட்ட காரணத்தினால் நமக்கு தெரிகிறது. 

ஒருவேளை பலூன் வெடித்து விட்டது என்றால், அப்பொழுது என்ன நடக்கிறது? பலூன் தரையில் விழுகிறது. பலூனுக்குள் இருந்த காற்று பலூன் வெடித்த இடத்திலேயே வெளிக்காற்றுடன் கலந்து விடுகிறது. பின்பு அதனைத் தனியாக நம்மால் உணர முடிவதில்லை. 



அறையில் நிறைந்திருக்கும் காற்றினைப் போல் பரமாத்மா உலகமெங்கும் வியாபித்து இருக்கிறார். ஜீவாத்மாவோ ஒவ்வொரு உடலிலும் 'வாசனா' என்னும் மாய பலூனுக்குள் சிறையுண்டிருக்கிறது. உடல் மரித்தாலும் வாசனா என்னும் பலூன் வெடிக்காத வரை ஜீவாத்மாவிற்கு முக்தி இல்லை. அது மீண்டும் ஒரு பிறவியை எடுக்கிறது.



இந்த வாசனா எங்கிருந்து, எப்படி வருகிறது? அதனை எப்படி வெடிக்கச் செய்வது என அறியும் முன் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக இருப்பது நாம் பெரும் அனுபவங்களே என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? 



இந்த அடிப்படை உண்மையை அறிந்து, நாம் வாழும் பொழுதே வாசனா என்னும் கூட்டை உடைத்து விட்டால் -- அதை நாம் தான் செய்ய வேண்டும் -- ஜீவாத்மா முக்தி பெற்று பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

அதன்பின் அதற்கு பிறவியேதும் கிடையாது.



                     21. ஆன்மா 


தினம், தினம் தூங்கி விழிக்கும் மனிதன் என்றாவது ஒருநாள் நிரந்தரமாக தூங்கி விட்டால், அதன் பின் அந்த மனித உடலுக்கு விழிப்பு கிடையாது. அந்த நேரத்தில் மனிதர்கள் பொதுவாக சொல்வது 'அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்'. அப்படியானால் ஆன்மாவிற்கு சாந்தியற்ற நிலை என ஒன்று இருந்ததா?


'வாளால் வெட்ட முடியாததும், நெருப்பால் சுட முடியாததும், நீரால் நனைக்க முடியாததும், காற்றால் உலர்த்த முடியாததும்' ஆன ஆன்மாவை யாரால் துக்கப்பட வைக்க முடியும்? பின் ஏன் இந்த சாந்தியற்ற நிலை?



அது ஒரு விரிந்து பரந்த வெட்ட வெளி. உற்றுப் பார்த்தால் நடுவில் ஒரே ஒரு வீடு. யாரிடமாவது என்ன தெரிகிறது என்றால் தூரத்தில் ஒரு வீடு தெரிகிறது; அதைச் சுற்றி நாற்புறமும் வெட்ட வெளியாக இருக்கிறது என்பார்கள். 

அப்படியானால் வீடு இருக்கும் இடத்தில் வெட்டவெளி கிடையாதா? ஒருவேளை வீட்டின் சுவர்கள் இடிந்து விட்டால் மீண்டும் அந்த இடம் வெட்ட வெளிதானே! அதுவரை அந்த வெட்டவெளி எங்கு இருந்தது? 

அது அங்கேயேதான் இருந்தது. நாம் வீட்டைப் பார்த்ததால் வெட்டவெளியை மறந்து விட்டோம். "மரத்தை மறைத்தது மாமத யானை" என்ற கதைதான்.



அகிலமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளின் ஒரு பகுதிதான் உடலுக்குள் இருக்கும் ஆன்மாவும். உடலை மட்டும் பார்க்கும் நாம் ஆன்மாவை உணர்வதில்லை; பரமாத்மாவின் ஒரு பகுதிதான் அது என்பதும் புரிவதில்லை.



வீட்டின் சுவர் இடிந்ததும், வீட்டில் இருந்த வெட்டவெளி மீண்டும் வெளியில் உள்ள வெட்டவெளியில் கலந்து விடுகிறது. ஆன்மாவோ மனிதன் மரித்தாலும், வாசனாவின் மாய சிறைக்குள் இருப்பதால், பரமாத்மாவுடன் இணைய முடிவதில்லை. 



மனிதனின் "வாசனா", குண நலன்களை ஒட்டி அமைவதால், அதனில் ஆசை, ஏக்கம், வெறுப்பு, கோபம் போன்ற பல பதிவுகள் மிக ஆழமாகப் பதிவாகி இருக்கும். அதனால் அந்த வாசனா சாந்தியற்ற நிலையில், சூட்சும உடலுடன் ஆன்மாவையும் உள்ளடக்கி உலவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் நாம் வேண்ட வேண்டியது ஆன்மாவிற்கு சாந்தி அல்ல; வாசனாவிற்கான சாந்தியே.



"ஆன்மா" என்பது வாசனாவிற்கும், வாசனா மூலமாக உடலுக்கும் உயிர் கொடுக்கும் ஒரு ஒளி மட்டுமே.




22. மூன்று குணங்கள்

மனிதன் தொடர்ந்து ஒரு பொருளைப் பற்றி நினைக்கும் பொழுது, அவனுக்கு அதன்மேல் பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையை வளர்க்கிறது. ஆசையை நிறைவேற்ற அவன் செயல்படுகிறான். தொடர்ந்து செய்யும் செயல்கள் பழக்கமாக மாறி, இறுதியில் அவனது குணத்தை நிர்ணயிக்கின்றன.







மனிதனின் குணங்கள் மூன்று வகைப்படும். அவை சத்துவ குணம், இரஜோ குணம் மற்றும் தமோ குணம்.

இம் மூன்று குணங்களையும் ஓரளவு சரியாகப் புரிந்து கொள்ள உதவியாக சில விளக்கங்கள். அவற்றில் சில பாமரத்தனமாக இருந்தாலும்,  குணங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ள அவை உதவலாம்.



23. குணங்கள் – விளக்கம் 1


எல்லாம் தெரிந்திருந்தும், எதுவும் தெரியாதவர்போல் இருப்பது,
பணிவு (humility), ஆடம்பரத்தை விரும்பாதது, தனித்து இருக்க விரும்புவது, புகழை வெறுப்பது, அகத்தாய்வில் அதிக ஈடுபாடு கொள்வது முதலானவை ‘சத்துவ’ குணத்தின் அடையாளம்.


எதையும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம், தன்னால்தான் முடியும் என்ற தன்முனைப்பு, தான் செய்யும் காரியங்களை எண்ணி பூரிப்பு, ஆரவாரத்தில் ஆர்வம், புகழில் ஆசை, மற்றவரை அடக்கி ஆள நினைப்பது முதலானவை ‘இரஜோ’ குணத்தின் அடையாளம்.


சுயமாக சிந்தித்து செயல்பட தெரியாதது, மிகுதியான சோம்பல், பிறரின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு  அடங்கி வாழ்வது முதலானவை ‘தமோ’ குணத்தின் அடையாளம்.

இத்தகைய குணங்கள் உடையவர்களை   
முறையே சான்றோர், ஆன்றோர், மற்றவர் என்று இங்கு குறிப்பிடுகிறோம்.
      
                                                                                                                 
24. குணங்கள் – விளக்கம் 2

அந்தக் குடும்பத்தில் வயதான பெரியவர் (வயது 70), குடும்பத்தின் தலைவர் அவர். பெரியவரின் மகன் (வயது 40), பெரியவரின் பேரன் (வயது 5). அன்றாட வாழ்க்கையில் இவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு கற்பனை.



பெரியவர் வாழ்க்கையில் நிறையப் போராடி, மிகுந்த அனுபவங்களைப் பெற்று, பொறுப்புகளிலிருந்து விலகி, விவேகமாக, விருப்பு வெறுப்பின்றி, தெளிவாக   சிந்திக்கத் தெரிந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் மகன் சந்திக்கும் போராட்டங்களைப் பார்க்கிறார்; ஆனாலும் எதிலும் தலையிடுவதில்லை. தன்னால் சமாளிக்க முடியாமல், மகன் தன்னை நாடிவரும் பொழுது, அவன் கடைப்பிடிக்க வேண்டிய   வழியை காட்டி உதவுகிறார். மற்றபடி அவரது அன்றாட வாழ்க்கையில் எந்தவித சலனமும் இருப்பதில்லை.

அது ‘சத்துவ குணம்’; கொதித்து  அடங்கிய பாலைப் போன்றது.




மகனுக்கோ வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நிலை. இன்பம், துன்பம்; வெற்றி, தோல்வி என மாறி, மாறி ஏற்படும் நிகழ்வுகளால், ஆனந்தப் பட்டு, அல்லல்பட்டு வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.

அது ‘இரஜோ குணம்’; 
கொதித்துக் கொண்டிருக்கும் பாலைப் போன்றது.




பேரனுக்கோ தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று எதுவும் தெரியாது. விபரம் புரியாமலே அவனுக்கு சிரிப்பும் வரும், அழுகையும் வரும்.

அது ‘தமோ குணம்’;  இன்னும் கொதிக்க வைக்கப்படாத பாலைப் போன்றது.




25. குணங்கள் – விளக்கம் 3


அந்தப் புலையனுக்கு! சின்ன சந்தேகம் - -      

   “ஏன் சாமி, நான் தொட்டது உங்களையா அல்லது உங்க   உடம்பையா?”

கேட்ட ஞானிக்கோ, புதிதாக ஒரு ஞானம் பிறக்கிறது.



கடவுளைக் காண வேண்டுமா, ‘நான் யார்’ என்று உன்னையே கேட்டுப்பார் என்கிறார் இரமண மகரிஷி. ஒரு சிலரே விடை காண முயற்சி செய்கிறார்கள். அவர்களாலும் விடை காண முடியாமல் தடுப்பது எது?

அந்த “நானை” இந்த ‘நானால்’ ஏன் அறிய முடியவில்லை? இந்த ‘நான்’ என்ற அகந்தை, அந்த “நானை” மறந்து விட்டதுதான் காரணம்.

   “அகந்தை அழியும் இடம், ஆண்டவனை அறியும் இடம்”

புரியத் தெரிந்தவனுக்கும், அறியத் தெரியவில்லை! ஏன்?



பெருங்காய டப்பாவில் உள்ள அனைத்து காயத்தையும் எடுத்துவிட்டாலும் கூட, டப்பாவில் உள்ள வாசனை எளிதில் போகாது என்கிறார் பரமஹம்சர். 

அகந்தையும் காயத்தைப் போன்றதுதானோ?


   அடங்கி இருப்பது  சத்துவ குணம்;

   ஆடித் திளைப்பது இரஜோ குணம்;

   உறங்கிக் கிடப்பது  தமோ குணம்.




26. குணங்கள் – விளக்கம் 4

சான்றோர், ஆன்றோர் இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம்?


சான்றோர் அகத்தாய்வில் அதிகம் ஈடுபடுவதால் புறவுலக வாழ்க்கையில் ஈடுபாடு காட்டுவதில்லை. அதையும் மீறி தவிர்க்க முடியாமல் புறவுலகில் செயல்பட நேரிட்டால், இருள் சேர்க்கும் இருவினைகளிலும் பற்றின்றி செயல்படுவார்கள். எடுத்த பதவியை அலங்கரிக்கும் அவர்கள், பதவியின் காரணமாக தம்மை அலங்கரிப்பதில்லை.



ஆன்றோர் பதவியை மட்டுமல்ல, பதவியின் பெயரால் தன்னையும் அலங்கரிக்க விரும்புவர்; ஒவ்வொரு நிலையிலும் தன்னை வெளிப்படுத்தத் துடிப்பவர்.


அதனால்தான், ஆன்றோரைவிட சான்றோர் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். திருவள்ளுவரின் குறள்கள் சான்றோரைப் பெருமைப்படுத்தி சொல்வதை பல இடங்களில் காணலாம்.




சத்துவ குணம் – எல்லாம் தெரிந்திருந்தும் புறவுலகச்
                 செயல்களில் ஆர்வம் இல்லாதிருத்தல்.

இரஜோகுணம்– புறவுலகில் தன்முனைப்புடன் செயல்படுவது.  

தமோகுணம் - புறவுலகில் சுயமாக செயல்படத் தெரியாதது.




27. புறச்செயலும், அகச்செயலும்


ஈசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட அந்த அரசனுக்கு ஆசை. அதை செயலிலும் காட்டினான். கூடவே மனதிற்குள் ஓர் கர்வம், தன்னால்தான் கட்ட முடிகிறது என்று.

அதே ஈசனுக்காக ஆண்டியும் ஒரு கோவில் கட்டினான்; யாரும் அறியாமல், மனதிற்குள்ளாகவே.

இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்க, இறைவனோ பூசலார் நாயனார் என்ற அந்த ஆண்டிக்கே முன்னுரிமை தருகிறார்.




உடலை விற்றுப் பிழைக்கும் பெண் அவள்; இருந்தாலும் தன் செயலுக்கு வருந்தி இறைவனை நோக்கி மனம் நோக அழுது புலம்புகிறாள். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எதிர்புறம் வசிக்கும் துறவியோ, தனது மதச் சடங்குகளைத் தவறாமல் செய்து வந்தாலும், எதிர்வீட்டுப் பெண்ணின் தொழிலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்; அத்துடன் அவளிடம் அவள் எவ்வளவு பாபங்கள் செய்கிறாள் என்று எடுத்துச் சொல்லி, நல்லபடி நடக்க அறிவுரையும் வழங்குகிறார். இருவரும் ஒரே நேரத்தில் இறக்க, பெண் சொர்க்கத்திற்கும், துறவி நரகத்திற்கும் செல்ல நேரிடுகிறது. பரமஹம்சரின் உபமான கதையிது.




இதற்கான காரணங்கள் யாவை?

தொடர்ந்து செய்யப்படும் செயல்கள், பழக்கமாக, பின்னர் குணமாக மாறுகிறது. இருந்தாலும் புறச்செயல்கள் நிகழும் முன்பாகவே, அகத்தளவில் அதிகமாக அவை நடந்தேறிவிடுகின்றன.



ஆகவே, மனிதனின் குணத்தை நிர்ணயிப்பது அவனுடைய புறச்செயல்கள் அல்ல; அகத்தளத்தில் தொடர்ந்து நிகழும் அகச்செயல்களே.




                      


28. நான்கு வர்ணங்கள்

நான்கு வர்ணங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன், பொதுவான சில உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கீதையில் புரியாத பல விஷயங்கள் உண்டு. சரியாகப் புரிந்துகொள்ளப்படாத  விஷயங்களும் உண்டு. ஆனால் மோசமாகப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்கள் எவையென்று பட்டியலிட்டால், அதில் முதலிடம் பெறுவது இந்த நான்கு வர்ணங்களாகத்தான் இருக்கும்.




நான்கு வர்ணங்களைப் பற்றி மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையென்றால், அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு என்ன காரணம்?

வேதம் ஓதுபவன் பிராமணன், சண்டை போடுபவன் க்ஷத்திரியன், வியாபாரம் செய்பவன் வைஷ்யன், கூலிவேலை செய்பவன் சூத்திரன் என எண்ணினால், மருத்துவர் (Doctor), பொறியாளர் (Engineer) போன்றவர்களை எந்த வர்ணத்தில் சேர்ப்பது?




பகவான் மனிதர்களை நான்கு வர்ணங்களாக எதை வைத்துப் பிரித்தார்? “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச:” என்றல்லவா சொல்கிறார். குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரிக்கிறேன் என்று சொல்கிறார்.

இதிலும் ‘கர்ம’ என்பது செய்யும் தொழில் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒருவனது குணத்தை ஒட்டியே அவனது செயல்கள் இருக்கும் என்றாலும், பல சமயங்களில் அவனால் குணத்தை ஒட்டிய செயல்களில் ஈடுபட  வாய்ப்பு கிடைப்பதில்லை. 
ஆழ்ந்து சிந்தித்தால், இங்கு "கர்ம" என்பது வெறும் தொழிலைக் குறிப்பதல்ல; மனிதனின் மனோபாவத்தை வெளிப்படுத்தும் செயல்முறையைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.
 (இதனைப் பற்றி விளக்கமாக பின்னர் பார்ப்போம்).




கீதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அது கூறும் வர்ணங்களைப் பற்றி மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வரும் பக்கங்களில் வர்ணக்கலப்பினைச் சரியாகப் புரிந்துகொள்வதற்காக பல கோணங்களில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை உதாரணத்திற்காக மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அவற்றைப் பற்றி சிந்தித்து, சரியான முடிவுக்கு வரவேண்டியது தனி மனிதனின் பொறுப்பாகும். பலவிதமான  விளக்கங்கள் பல திசைகளிலிருந்தும் வரும். அனைத்தையும் உள்வாங்கி, அலசி ஆராய்ந்து, முடிவு செய்யவேண்டியது அந்தந்த மனிதனே; வேறு யாரும் இதில் தலையிட முடியாது; தலையிடவும் கூடாது.



29. வர்ணங்கள் – விளக்கம் 1

வர்ணங்களைப் பற்றிய பல்வேறு வகையான, விரிவான விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன் ஒரு மனிதனின் வர்ணம் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.



புறவுலகிலிருந்து நமக்கு வரும் தாக்கங்களின் காரணமாக நமக்குள் பதிவுகள் ஏற்படுகின்றன. பதிவுகளை ஒட்டி வரும் எண்ணங்கள்  நாம் செய்யும் காரியங்களுக்குக் காரணமாக அமைகின்றன. தொடர்ந்து நிகழும் செயல்கள், பழக்கமாகவும் அதுவே பின்னர் குணமாகவும் மாறிவிடுகிறது.

புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களின் காரணமாக ஏற்படும் பதிவுகள் நிகழும் இடம் மனமென்றால், குணங்கள் (வாசனா) பதிவாகும் இடத்தை ஆழ்மனம் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.


ஒரு மனிதனின் ‘ஆழ்மனப்’ பகுதியில் பதிவாகும் குணங்களைப் பொறுத்து, அவனது மனோபாவம்  அமைகிறது.



ஒரு மனிதனின் மனதில் எழும் எண்ணம், வாசனா மூலமாக  வரும் எண்ணம்  இரண்டிலும் சாதாரணமாக ஒரு இணக்கம் இருக்கும். ஆனாலும் புறவுலகிலிருந்து வரும் தொடர் தாக்கங்களின் காரணமாக மனம் மூலம் ஏற்படும் பதிவுகளில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படும்.
 
எனவேதான் வர்ணத்தை மனிதனுக்குப் பொருத்தும் பொழுது, அவனது குணத்தையும், மனோபாவத்தையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.



  
ரத்னாகர் என்பவனுக்குத் திருடுவதுதான் தொழில். அவனது எண்ணமெல்லாம் திருடுவதில்தான் இருக்கிறது. அவனின் குணமும், மனோபாவமும் அப்படித்தானே இருக்கும். நாரத முனிவர் ஒரு சோதனையின் மூலம் அவனது கண்களைத் திறக்கிறார். அவனுக்கு தான் வாழ்ந்து வரும் மோசமான வாழ்க்கைமுறை புரிகிறது.

அவனது மனதிலும், சிந்தனையிலும் மாற்றம் கொண்டுவர பெரியதொரு நீண்ட தவம் வேண்டியிருந்தது. அதன் பின்னரே, அவன் வால்மீகி என்ற பெயரில் இராமாயணம் என்ற அற்புத  காவியத்தை இயற்ற முடிகிறது.





ஒருவரின் வர்ணம் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுவதற்கு, அவனது குணத்திலும், மனோபாவத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும்.

புதிய அனுபவங்கள், புதிய பதிவுகள், புதிய செயல்கள், புதிய பழக்கம்  என பல நிலைகள் தாண்டிய பின்னரே, குணத்திலும், அதை ஒட்டிய மனோபாவத்திலும் மாற்றங்கள் கொண்டுவர முடிகிறது.

அதற்கு எவ்வளவு முயற்சிகள் தேவைப்படுகின்றன. 

வரைபடத்தில் வாசனாவும், ஆன்மாவும் எங்கு வருகின்றன என்று பார்ப்போமா?



(இது எளிமைப்படுத்தப்பட்ட இடைநிலை விளக்கப்படம். முழுமையான தொடர்பு வரைபடம் பின்னர் தரப்பட்டுள்ளது)


*** தொடர் கோடு – நேரடியான செயல்பாடு / காரண–காரியத் தொடர்பு.
*** புள்ளிக்கோடு – மறைமுகத் தாக்கம் / பின்னூட்டம் (feedback) / வாசனையின் நுண்ணிய தாக்கம்.






30. வர்ணங்கள் – விளக்கம் 2

எந்த சமயத்திலும் தர்மத்தின் (அறம்) வழியிலிருந்து நழுவாத சான்றோர் ‘சத்துவ’ குணத்தினர்.

எடுத்த காரியத்தை முனைப்புடன் செயல்படுத்தும் ஆன்றோர் ‘இரஜோ’ குணத்தினர்.

இரண்டிலும் சேராத, சுயமாக சிந்திக்கத் தெரியாதவர் ‘தமோ’ குணத்தினர்.

இந்த மூன்று குணங்களும், அவற்றிலிருந்து வெளிப்படும் மனோபாவமும் மனிதர்களின் வர்ணங்களைப் பிரித்துக் காட்டுகின்றன.




தான், தனது என்பதனை மறந்து, தர்மத்தின் வழி நடக்கும் சான்றோர், பிராமணர் என்று அழைக்கப்படுகிறார். “அறனறிந்து மூத்த அறிவுடையார்” என்று வள்ளுவர் சொல்லும் பண்புகள் நிறைந்த மனிதராக அவர் இருக்கும் பட்சத்தில், அவரை ஒரு சிறந்த ‘வழிகாட்டியாக’ எடுத்துக்கொள்ளலாம்.


சான்றோரின் வழிகாட்டுதலுடன், தர்மத்திற்கு உட்பட்டு செயலாற்றும் ஆன்றோர்,  க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது மற்றும் தனது  சொந்தங்களின்  நலத்தை விட, பொது நலத்திலேயே அதிக அக்கறை உள்ளவராக இருப்பார்.


தர்மத்தின் வழியிலிருந்து விலகத் தயங்காத, சுய நலமே முக்கியம் என்ற மன நிலை கொண்டவன் யாராக இருந்தாலும், அவன் வைஷ்யன் என்று அழைக்கப்படுகிறான்.


சுயமாகச் சிந்திக்கவும், பொறுப்பேற்று செயல்படவும் பழகாதவன்,
மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பவன் சூத்திரன் (சேவகன்) எனப்படுகிறான்.




ஒரு மனிதனிடம் மூன்று குணங்களின் தாக்கமும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியானால் அந்த மனிதனின் வர்ணத்தை எப்படி தெரிந்து கொள்வது?

சுருக்கமாக சொன்னால் ---

சத்துவ குணம் நிறைந்தவன்                      ..... பிராமணன்

சத்துவ குணத்தின் தாக்கம் கொண்டு செயல்புரிபவன்.. க்ஷத்திரியன்

சத்துவ குணத்தின் தாக்கமின்றி செயல்புரிபவன் ........... வைஷ்யன்

தமோ குணத்தின் ஆதிக்கம் மிகுந்தவன்           ..... சூத்திரன்


(இதனை ஒரு பொதுவான விளக்கமாக எடுத்துக் கொள்ளவேண்டும்)




31. வர்ணங்கள் – விளக்கம் 3


கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை பாருங்கள்: –





மனம் மூலமாக ஏற்படும் பதிவுகளைப் பொறுத்தே ஒரு மனிதனக்கு எண்ணம், செயல், பழக்கம் என்ற தொடர் சங்கிலி உருவாகி முடிவில் குணமாக மாறுகிறது. குணமும், குணத்திலிருந்து வெளிப்படும் மனோபாவமும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.




ஆனால், மனதில் ஏற்படும் எண்ணங்களும், ஆழ்மனதில் ஏற்படும் எண்ணங்களும்  ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏனெனில் மனதில் ஏற்படும் பதிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்; ஆழ்மனதில்  ஏற்படும் பதிவுகளோ நீடித்து நிலைத்து இருக்கும்.



இவற்றிற்கிடையே முறையான இணக்கம் இல்லையென்றால், அந்த மனிதன் படும் அவஸ்தைக்கு அளவே கிடையாது. அந்த நேரம்தான் அவன் தன்னை சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரமாகும்.
அந்த முரண்பாட்டை உணர்வதே ஆன்மிக வளர்ச்சியின் தொடக்கம்



32. வர்ணங்கள் – விளக்கம் 4

தர்ம, அர்த்த, காம” என்பது வேதம் சொல்லும் தத்துவ சுருக்கம்.  இதனை நான்கு வர்ணத்தாரும் எப்படி கையாளுவார்கள்?



ஒரு மனிதனின் பிறப்பை வைத்தும், அவன் செய்யும் தொழிலை வைத்தும் அவனது வர்ணத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்றால், நாம் சந்திக்கும் மனிதர்களின் வர்ணப்பிரிவினை எப்படித் தெரிந்துகொள்வது?

ஒரு மனிதன் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அவனது சிந்தனை, நடை, பேச்சு, செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டே,
அவனது வர்ணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.



பிராமணன் (வழிகாட்டி): - ஆரவாரத்தை விரும்பாதவன், பணிவோடு (humility) ஒதுங்கி வாழ்பவன், தனிமையை விரும்புகிறவன், புகழுரைக்கு மயங்காதவன், சுய-சிந்தனையில் மூழ்கி இருப்பவன், உணர்ச்சிகளை வென்றவன், அறவழியில் நடப்பவன், ஆசைகளுக்கு அப்பாற்பட்டவன்.

இவனுக்கு “தர்ம” மட்டுமே முக்கியம். தனது சிந்தனை, சொல், செயல்  எல்லாவற்றிற்கும்  தர்மம்  மட்டுமே  முக்கியம். பற்றற்று, விருப்பு – வெறுப்பு இன்றி,   எப்பொழுதும்   தர்மத்தைக்      கடைப்பிடிப்பவன்.

“அர்த்த, காம” பற்றிய கவலை ஏதும் கிடையாது.




க்ஷத்திரியன் (பொதுநலவாதி): - தர்மத்தின்  வழி நடப்பவன், நியாயத்திற்காக போராடுபவன், பிறர் நலம் பேணுபவன், தர்மத்தின் தாக்கம் இருப்பதால், எப்பொழுதும் உயர்வான காரணங்களுக்காக போராடுவதில் தன்னை வருத்திக் கொள்பவன், ஆங்காரத்தை கட்டுப்படுத்த முடியாதவன், எந்த வெற்றியிலும் திருப்தி அடையாதவன், உணர்ச்சி வசப்படுபவன், பெரியோரின் துணையை நாடுபவன், தன்னை மேன்மை படுத்த துடிப்பவன், தன்  பெயருக்குக் களங்கம் வரக் கூடாது என்பதில் அக்கறை செலுத்துபவன்.

இவனுக்கு  “அர்த்த, காம”  இரண்டும் வேண்டும்.  ஆனால்,  அவை  “தர்மத்திற்கு”  உட்பட்டு  இருக்கவேண்டும்.   தர்மத்தை  எதிர்த்து “அர்த்த, காம” என்றால் மனம் சஞ்சலப்படும்.




வைஷ்யன் (சுயநலவாதி): - தனது நலனிலேயே குறியாக இருப்பவன், வலியோரை புகழ்பவன், எளியோரை இகழ்பவன், உணர்ச்சி வசப்படுபவன், புலன்களை கட்டுப்படுத்த முடியாதவன்.

இவனுக்கும்  “அர்த்த, காம”  இரண்டும்  முக்கியம். ஆனால், அவற்றை அடைவதற்கு, “தர்மம்” தடையாக இருக்கிறதென்றால், அதனை ஒதிக்கித்தள்ள  தயங்கமாட்டான். ஏனெனில், இவனுக்கு சுய லாபமே முக்கியம். ஆகவே இவனது முயற்சி அனைத்தும், தனது வசதியைப் பெருக்குவதற்காகவே இருக்கும்.




சூத்திரன் (சேவகன்):- சுயமாக சிந்திக்கத் தெரியாதவன், புலன்களுக்கு அடிமையானவன், வாழ்வின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவன். சோம்பல்      மிகுந்தவன்,      அடுத்தவரின் கட்டளைக்கு  கட்டுப்பட்டு  செயல்படுபவன்.

இவனுக்கு “தர்மம், அர்த்த” இரண்டிலும் ஆர்வம் இருக்காது.




33. வர்ணங்கள் – விளக்கம் 5

ஒரு மனிதனது குணமும், மனோபாவமுமே அவனது வர்ணத்தை நிர்ணயம் செய்கின்றன என்றாலும், அவனது தொழில் பல நேரங்களில் அதனைப் பிரதிபலிப்பதில்லை.



அவன் அந்த பெரிய உணவகத்தில் சர்வராகப் பணியாற்றுகிறான். அங்கு உணவு அருந்த வந்த ஒரு குடும்பம். பாட்டி, மகள், மகளின் ஐந்து வயது மகன், இடுப்பில் கைக்குழந்தை மற்றும் நிறைய ‘லக்கேஜ்’கள். மிகவும் சிரமப்பட்டு உள்ளே வந்து விடுகிறார்கள்.

அவர்கள் தங்களது சாப்பாட்டை முடித்தவுடன், அந்தக் குறிப்பிட்ட சர்வர், அவர்களுக்கு உதவியாக அவ்வளவு உடமைகளையும் சுமந்து சென்று, அவர்களை டாக்ஸியில் ஏற்றிவிட்டு வருகிறான்.   அவர்களின்  பாரத்தைக் குறைப்பதில், அவன் இன்பம் காண்கிறான். அவன் கூட வேலை செய்யும் மற்ற சிப்பந்திகள் அவனைக் கேலி செய்கிறார்கள். அவன் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. அவனது வர்ணம் எதுவென்று சொல்வது?



தொழிலை வைத்துப் பார்த்தால் அவன் சூத்திரன்;

டாக்ஸியில் ஏற்றிவிட்டு, எதையாவது எதிர்பார்த்து, தலையைச்  சொறிந்துகொண்டு நின்றிருந்தால் அவன் வைஷ்யன்;

தனது உடல் வலியைப் பொறுத்துக்கொண்டு, பிறரது கேலியையும் பொருட்படுத்தாது பிறருக்கு உதவுவதால் அவன் க்ஷத்திரியன்.

அவனை க்ஷத்திரியன் என்றுதானே அழைக்கவேண்டும்?




34. வர்ணங்கள் – விளக்கம் 6

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான “வட்டம்” உண்டு. அவனது வாழ்க்கைச் சக்கரம் சுழலும் விதத்தைப்  பொறுத்து அது அமைகிறது. அந்த “வட்டம்”  மனிதனின் வர்ணத்தை எப்படி நிர்ணயம் செய்கிறது?



பிராமணன்: - எந்த வட்டத்திலும் சிக்காதவன்; தனக்கென்று எந்த வட்டமும்  போட்டுக் கொள்வதில்லை; தப்பித் தவறி மற்றவர்கள் அவனைச் சுற்றி வட்டம் ஏதேனும் போட்டாலும், அதனை உடைத்தெறிபவன்.



க்ஷத்திரியன்: - துவக்கம் எந்த வட்டத்தில் இருந்தாலும், காலம் செல்லச் செல்ல தனது வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பவன்.



வைஷ்யன்: - தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு, அதற்குள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்பவன்; பல நேரங்களில் தவறான வழிகளிலும் கூட செல்லத் தயங்காதவன்.



சூத்திரன் : தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொள்ளத் தெரியாதவன்; தனக்காக பிறர் அமைத்துத் தரும் வட்டத்திற்குள் இருந்து கொண்டு உழன்று வருபவன்.



35. வர்ணங்கள் – விளக்கம் 7

மனிதனின் பிறப்பிற்கும் அவனது வர்ணப்பிரிவிற்கும் சம்பந்தம் உண்டு.

மனிதனின் பிறப்பிற்கும் அவனது வர்ணப்பிரிவிற்கும் சம்பந்தம் இல்லை.

மேலே உள்ள இரண்டு கூற்றிலும் எது சரி? இரண்டுமே சரிதான், இருவேறு கோணங்களில் இருந்து பார்த்தால்.




முதலில் மனிதனின் பிறப்பிற்கும், அவனது வர்ணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஏற்கனவே கூறியது போல் ஒரு மனிதனின் குணம், மனோபாவம் இவற்றைப் பொறுத்து, அவனது வர்ணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனோபாவம் குணத்தைப் பொறுத்தது. குணம் எதனைப் பொறுத்தது? குணத்திற்கு ஆதார சுருதியாக இருப்பது சொந்த அனுபவங்களின் காரணமாக ஏற்படும் பதிவுகள்தானே? மனம் பெறும் அனுபவங்களின் காரணமாகவே பதிவுகள் நிகழ்கின்றன. அப்படியானால் அந்த அனுபவங்கள் எந்த வயதில் ஆரம்பமாகின்றன? ஐந்து வயதுக்கும் மேலேதான் ஒரு குழந்தை தானே சுயமாக அனுபவங்களைப் பெறுகிறது. அப்படி இருக்கும்பொழுது, அவனது வர்ணத்தைப் பிறப்போடு எப்படி சம்பந்தப்படுத்த முடியும்?




இப்பொழுது மனிதனின் பிறப்பிற்கும், வர்ணத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பது எப்படி என்று பார்ப்போம்.

மனிதன் இறப்பதற்கு முன், வாசனா கூட்டிற்குள் சிறைப்பட்டிருக்கும் ஆன்மா, கூட்டிலிருந்து விடுதலை அடையவில்லை என்றால், அந்த மனிதனின்  அடுத்த பிறவி தவிர்க்க முடியாததாகிறது. வேதாந்தப் பார்வையில், எந்த வாசனைகளுடன் மனிதன் உடலை விடுகிறானோ, அதே வாசனைகளின் தொடர்ச்சியோடு அடுத்த பிறவியும் அமைகிறது.
 அப்படியானால், மனிதனின் பிறப்பிற்கும், அவனது வர்ணத்திற்கும் சம்பந்தம் உண்டு தானே!




மனிதன் தனது இளமைப் பருவத்தில், குறிப்பாக ‘டீன்-ஏஜ்’ (teenage) பருவத்தில், பலவித குழப்பங்களுக்கு ஆளாகி அல்லல்படுவதற்கான ஆணிவேர் இங்குதான் இருக்கிறது. கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

தோட்டத்தில் ரோஜா மலர்ந்து மணம் பரப்புகிறது. அது மொக்காக இருந்தபோது அதனால் மணம் பரப்ப முடியவில்லை; மொட்டாக மாறியபோதும் முடியவில்லை; ஆனால் அது மலர்ந்ததும், அது நினைத்தாலும், அதனால் மணம் பரப்பாமல் இருக்க முடிவதில்லை.

ஒரு வேளை, அந்த மலர் மலரும் பொழுது, அதற்குள்ளே வேறொரு மணம் நுழைய முயற்சி செய்தால், என்ன ஆகும்?




மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள், மனிதன் பெறும் அனுபவத்தைப் பொறுத்து, மாறிக் கொண்டேயிருக்கும். எனவே அதன் காரணமாக ஏற்படும் சிந்தனைகளும் அடிக்கடி மாறும் தன்மை உடையன. ஆனால் ‘வாசனா’ பெட்டகத்தில் உள்ள பதிவுகள் நீடித்து நிற்பவை. அந்த பதிவுகள் எளிதில் மாறுவதில்லை.



சாதாரணமாக ஒரு மனிதனின் மனதில்  எழும் எண்ணங்களுக்கும், குணம் மற்றும் மனோபாவம் காரணமாக வரும் சிந்தனைகளுக்கும் இடையே இயல்பாக ஒரு இணக்கம் இருக்கவேண்டும்.

ஆனால் “டீன்-ஏஜ்” பருவத்தில் அடியெடுத்து வைக்கும் பருவத்தில், மாறுபாடு -– இப்பிறவியில் புதிதாகப் பதிவாக வேண்டிய குணத்திற்கும், முன் பிறவியில் ஏற்கனவே பதிவாகியிருந்த குணத்திற்கும் இடையேயுள்ள மாறுபாடு – ‘வாசனா’ பெட்டகத்தில் அதாவது ஒரே இடத்திலேயே வருகிறது. அந்த நேரத்தில் எழும் பிரச்சனைகள் மிகவும் ஆழமானவை.

நல்லதொரு வழிகாட்டுதல் இல்லையென்றால், அந்த இளமைப் பருவம் எவ்வளவு சிதலமடைந்து விடுகிறது!?



36. வர்ணங்கள் – விளக்கம் 8                    
வர்ணக் கலப்பின் தன்மைகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், பிராமண, சூத்திர வர்ணங்களைச் சேர்ந்தவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால் க்ஷத்திரிய, வைஷ்ய வர்ணங்களைச் சேர்ந்தவர்களை மற்றவர்களால் மட்டுமல்ல, அவர்களாலேயே கூட புரிந்து கொள்வது கடினமான ஒன்று.

இருந்தாலும் இருவருக்குமிடையே  உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை இனம் பிரித்துப் பார்ப்போமா?



இரஜோ குணம்:     இருவருக்கும் பொதுவானது.

தர்மம்:              இருவருக்கும் அதன் அர்த்தம் தெரியும்; இருந்தாலும் எப்பொழுதும் தர்மத்தின் வழி நடக்க விரும்புவன் க்ஷத்திரியன் மட்டுமே.

அர்த்த, காம:        இருவருக்கும் நாட்டமுண்டு; இருப்பினும், அவற்றை  அடைவதற்கு தர்மம் தடையாக இருந்தால், அதனை  விலக்கிவிட வைஷ்யன் தயங்கமாட்டான்.

பெரியோர் துணை:  க்ஷத்திரியன் சான்றோரின் துணையை நாடி நிற்பவன்.

போராடும் குணம்:   இருவருக்கும் பொதுவானது;  ஆனாலும் தோல்வி    வரும் எனத் தெரிந்தால்,  வைஷ்யன் போராட்டத்தில்  இருந்து ஒதுங்கிவிடுவான்.     
             
மானம் காத்தல்:   க்ஷத்திரியன் இதில் கவரிமானைப் போன்றவன்.  எதை     இழந்தாலும், மானத்தை இழக்க விரும்ப மாட்டான்.




 க்ஷத்திரியனுக்கும் வைஷ்யனுக்கும் இடையேயான மிகப் பெரிய வேறுபாடு திறமையில் அல்ல; தர்மத்தின் மீது கொண்டுள்ள பற்றில்தான் இருக்கிறது.






37. மனிதனின் அடுத்த நிலை    

வர்ண தர்மங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட நாம், நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் வர்ணத்தைக் குறிப்பதற்கு அவனது “அந்தக்கரணங்களின்” செயல்பாடுகளே காரணமாக அமைகின்றன.

அவற்றின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்ட நாம், அவற்றை எப்படி மாற்றி அமைப்பது என்ற உண்மைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு மனிதன் எந்த வர்ணத்திலிருந்தாலும் “அந்தக்கரணங்களின்” செயல்பாடுகளை மாற்றி அமைக்கும் வித்தைகளைக் கற்றுக் கொண்டால் மட்டுமே, அவனால் வர்ணப் பிரிவில் உயரமுடியும்; அதற்கு தேவை மன உறுதியும், விடாமுயற்சியும் தான்.




அண்டங்கள் தோன்றி நெருப்பு கோளங்கள் குளிர்ந்தபின், கண்ணுக்கும், புலனுக்கும் தெரிந்தவை கல்லும், மண்ணும்தான். ஆனால் அவற்றிற்கு ஊடேயும் உயிர்நிலை இருந்தது என்றால் யார்தான் ஒப்புக்கொள்வார்கள்?

அடுத்த நிலையில் புல், பூண்டு, செடி, கொடி, மரம் என்று தாவரவியல் தோன்றி வளர்ந்த பொழுது, அவற்றிற்கு உயிர் இருந்தது என்பதோடு, சிறிதளவு உணர்வும் இருந்தது
என்பதை அறிந்து கொள்கிறோம்.

அடுத்து ஊர்வன, நடப்பன, பறப்பன என விலங்கியல் விரிவடைந்தபொழுது, அவற்றிற்கு  உணர்ச்சி மட்டுமல்ல, அறிவும் வேலை செய்வதை தெரிந்து கொள்கிறோம். எந்த நிலையிலும் அவற்றின் உணர்ச்சியே மேலோங்கி இருப்பதையும் புரிந்து கொள்கிறோம்.

பரிணாம வளர்ச்சியில் அடுத்து வந்த மனிதன் உணர்ச்சி, அறிவு இரண்டையும் பயன்படுத்தினாலும், சூத்திர வர்ணத்திலிருந்து மேலே வரவர அவனது உணர்ச்சிகள் அறிவுக்கு கட்டுப்பட்டு இருப்பதைப் பார்க்கிறோம்.




அறிவு வளர வளர உணர்ச்சி கட்டுக்குள் வந்து அடங்குவதைப் பார்க்கும்பொழுது, அடுத்த நிலையில் அறிவு மட்டுமே மேலோங்கி இருக்கும் நிலை வரலாம்  அல்லவா?

அது “அறிவை” அறிவால்  அறியும் நிலையாகும். அந்த நிலையில் திருமூலர் கூறுவது போல் “கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்காக” மாறிவிடும்.



38. உணர்ச்சியும், உணர்வும்

அறிவு மேலோங்கிய நிலையில் ஒரு மனிதனின் உணர்ச்சி எந்த அளவில் இருக்கும்? வரைபடத்தைப் பாருங்கள் –


மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் உணர்ச்சியாகவும், புத்தி மூலமாக  ஏற்படும் பதிவுகள் அறிவாகவும் உருவெடுக்கின்றன.


ஒரு மனிதன் சூத்திர வர்ணத்தில் இருக்கும்பொழுது அறிவு மிகமிகக் குறைவாகவும், உணர்ச்சி மிகுந்தும் காணப்படுகிறது. உணர்ச்சி பெட்டகமும், அறிவு பெட்டகமும் ஒன்றுகொன்று தொடர்பின்றி, இடையே உள்ள தடுப்புச் சுவர் கனமாக மாறிவிடுகிறது.




ஆனால் மனிதன் தன்  வர்ணப்பிரிவில் உயர்ந்து வரும்பொழுது, அவனது உணர்ச்சி பெட்டகத்திற்கும், அறிவு பெட்டகத்திற்கும் உள்ள தடுப்புச் சுவர் மெலிந்து மெலிந்து முடிவில் முழுவதுமாய் கரைந்து போகிறது. இதன் விளைவாக  அவனது உணரச்சிகள் அறிவோடு இரண்டற கலந்து விடுகிறது. அறிவோடு கலந்து விட்ட மனதில் உணர்ச்சிகளுக்கு இடம் கிடையாது.




உணர்ச்சிகள் மனதின் அடித்தளத்திலிருந்து அறிவுக்கு கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் வெளிவரும். எனவே அவை நல்ல உணர்ச்சிகளாகவும் இருக்கலாம்; கெட்ட உணர்ச்சிகளாகவும் இருக்கலாம். ஆனால் மனம் (உணர்ச்சி) புத்தியோடு (அறிவு)  இரண்டறக்  கலந்தபின், அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. அவனிடமிருந்து உணர்வுகள் மட்டுமே வெளிப்படும்.




அறிவுக்கு அடங்காத மனம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்; அறிவோடு கலந்த மனமோ உணர்வுகளை மட்டுமே வெளிபடுத்தும்.




உணர்ச்சிகளை  விட உணர்வுகள்  வெளிப்படுவதே நல்லது; ஏனெனில் உணர்வுகளில் கெட்ட உணர்வு என்று எதுவும் கிடையாது.



39. வாசனாவின் கறை

இறைவனைத் தேடி வெளியில் அலையும் மனிதனால், தனக்குள்ளேயே இருக்கும் ஆன்மாவை ஏன் தரிசிக்க முடியவில்லை? ஆன்மாவை மூடியிருக்கும் வாசனா என்னும் மாயத்திரையின் மேல் கறைகள் நிறைந்து. ஆன்மாவின் ஒளியைத் தரிசிக்க முடியாமல் செய்துவிடுகிறது.




உள்ளே காணமுடியாத ஒளியை,  வெளியில் தேடி அலையும் மனிதன் நிரந்தரமல்லாதவற்றை நிஜமென்று நம்பி   பொய்யான இன்பங்களில் மூழ்கி, வாழ்க்கையின் நோக்கத்தையே தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான்.
நிரந்தரமல்லாததை நிரந்தரமானது என்று தவறாகக் கருதுவதே "மாயை" என வேதம் கூறுகிறது.


 

கதவைத் திறந்தால்  வெளியே ஓடிச் செல்லும் குழந்தையைப் போல் வெளியே ஓடித்திரியும் மனதை 
மனதை உள்நோக்கித் திருப்ப வேண்டும்.

 “வாசனா”வில் படிந்துள்ள கறைகளைக்   களைவதற்கு, மனதை முதலில் உள்முகமாகத் திருப்பவேண்டும். மற்ற முயற்சிகளெல்லாம் அதற்குப் பின்னர்தான்.

முயற்சி செய்தால் வர்ணப்பிரிவில் கொஞ்சம், கொஞ்சமாக உயரலாம்.
வர்ணப்பிரிவின் உச்ச நிலையை அடைந்தால், ஆன்மாவை அறிந்து கொள்ளலாம்.




 40. நோயும், மருந்தும்


"பிணிக்கு மருந்து பிறமன் –
 அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து”

மனிதனுக்கு வரும் எந்தவொரு நோய்க்கும், மருந்து பிறிதொரு இடத்தில் இருந்து வருகிறது. ஆனால், காதலியால் வரும் நோய்க்கு அவள்தான் மருந்து என்கிறார் வள்ளுவர்.

நோயும் அதுவே, மருந்தும் அதுவே என காதலியை வள்ளுவர் சொல்வது போல், வேறு ஏதாவது உண்டா என்றால் அது மனிதனின் மனம்தான்.




மனிதனை ஆட்டுவித்து அவனை சாத்தானாக மாற்றும்  அவனது மனம்தான், அவனை தெய்வநிலைக்கு உயர்த்தக்கூடிய சக்தியையும் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கான வித்தைகளை மனிதன் அறிந்திருக்க வேண்டும்.



இருள் சூழ்ந்த மனதை, அருள் சுரக்கும் மனமாக மாற்றும் வித்தையை கற்றுத் தருவது ஆன்மிகம்.



எந்த, எந்த வித்தைகளை எல்லாமோ கற்றுக் கொள்ளவேண்டும் என்று துடிக்கின்ற நாம், சுய மேம்பாட்டிற்காக ஆன்மிகம் சொல்லும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அவற்றை தெரிந்துகொள்ளுமுன், நமது வாழ்க்கை பாதையில் நமது பயணத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.



41. வாழ்க்கை நெறியும், வாழ்க்கைத் தரமும்

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவதில் வியப்பில்லை. அதன் நோக்கமே வாழ்வின் இன்பங்களை அனுபவிக்கத்தானே! ஆனால் வாழ்க்கைத் தரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மனிதன் வாழ்க்கை நெறிக்கும் கொடுக்க வேண்டாமா?



ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாழ்க்கைத்தரம், வாழ்க்கை நெறி இரண்டுமே முக்கியம் என்றாலும், இரண்டிற்குமிடையே சில வித்தியாசங்கள் உண்டு.



வாழ்க்கைத்தரம் மரத்தின் கிளை என்றால், வாழ்க்கை நெறி அதன் வேர்.  அது கட்டிடம் என்றால், இது அஸ்திவாரம்.



வாழ்க்கை நெறியை மறந்து, வாழ்க்கைத்தரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் மனிதன் அவனது வர்ணப் பிரிவில் கீழே இறங்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.



அதே சமயம் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதன் வர்ணப் பிரிவில் மேலே ஏறுகிறான். அதன் காரணமாக, அறிவிற்கெல்லாம் அறிவான பேரறிவைத் தெரிந்து கொள்ள அவனுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.



வர்ணப்பிரிவில் மேலே வருவதற்கு, வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியம்.


42. நேற்று, இன்று, நாளை


நாம் எப்படி இருந்தோம்?             -    அது கடந்த காலம்

நாம் எப்படி இருக்கிறோம்?           -    அது நிகழ்காலம்

நாம் எப்படி இருப்போம்?             -    அது எதிர்காலம்


நாம் எப்படி இருந்தோம் என்பது நடந்து முடிந்த கதை. அதை இப்பொழுது மாற்ற முடியாது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பதுவும் மாற்றமுடியாதது. ஏனெனில் நிகழ்காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கான பதிவுகள் ஏற்கனவே நமக்குள் அரங்கேற்றிவிட்டன. இப்பொழுது மாற்ற முடியாது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து, எதிர்காலத்தில் இப்படித்தான் இருப்போம் என்று சொல்வதும் சரியல்ல. ஏனெனில் எதிர்காலத்தை நம்மால் மாற்ற முடியும். ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் நிகழ்காலத்தில்தான்  நடத்த வேண்டும்.

     “The present is the product of the past;
      The future is the modification of the past in the  present"                       
---   Swami Chinmayaanandhaa  




இறைவன் அருள் இன்றி எதுவும் நடக்க முடியாது என்றாலும், மனிதனின் முயற்சியும் மிகவும் முக்கியம். முயற்சி இல்லாமல் சுயமேம்பாடு இல்லை.



43. கடமையும், பலனும்

“கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்கிறது கீதை. இதனை நையாண்டி செய்பவர்களும் உண்டு. மாதம் பூராவும் வேலை பார்த்துவிட்டு, சம்பளத்தை எதிர்பாராதே என்றால் எப்படி என்பார்கள். கீதாச்சாரியன் உரைக்கு இப்படியா அர்த்தம் கொள்வது?



‘நீ உனக்குள்ள கடமையை செவ்வனே செய்து வா; பலனை எதிர்பார்த்து இருக்காதே; ஏனெனில் நீ எதிர்பார்க்கும் பலன் எப்பொழுது, எவ்விதம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது’ எனப் பெரியோர்கள் சொல்கிறார்கள்.



பலன் என்பதற்கு “லாபம்” என்று ஓர் அர்த்தம் இருப்பதோடு, “விளைவு” என்றும் ஓர் அர்த்தம் உண்டு. கடமையைச் செய்வது மட்டும்தான் நம் கையில் உள்ளது. ஏனெனில் அதன் விளைவு நாம் விரும்பியபடி, நாம் முடிவு செய்வதல்ல.



இன்னுமொரு விளக்கமும் உண்டு.
“செய்’ என்பது நிகழ்காலத்தில் நடப்பது; ‘எதிர்பாராதே’ என்பது எதிர்கால பலன்களுக்காக  காத்திருப்பது. மனிதன் நிகழ்கால நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால நிகழ்வுகளுக்காக கவலைப்பட்டால், அவனது வளர்ச்சி தடைப்படும் என்பதனால் தான், ‘எதிர்பாராதே’ என்கிறது கீதை.

 “Be present in the present”.



                 44. வழித்தட மாற்றம்

சாலையில் செல்லும் வாகனத்தை ஓட்டுபவருக்கும், தண்டவாளத்தில் செல்லும் இரயிலை ஓட்டுபவருக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.

வாகன ஓட்டுனருக்கு வாகனத்தை சாலையின்  ஒரு புறத்திலிருந்து, மறுபுறத்திற்கும், ஒரு சாலையிலிருந்து வேறொரு சாலைக்கும் ஓட்டிச் செல்ல முடியும்.

ஆனால் இரயிலை ஒட்டுபவருக்கோ தடத்தை மாற்றும் அதிகாரம் இல்லை. அவரது கடமை  இரயிலை ஓட்டுவதோடு சரி; தடத்தை மாற்றும் பொறுப்பை வேறு ஒருவர் எடுத்துக் கொள்கிறார்.




ஆன்மிக வாழ்க்கையும் அதைப் போன்றதுதான். நமது குணத்தை மேம்படுத்த முயற்சி செய்தால் மட்டும் போதும். வர்ணப்பிரிவில் உயர்வது மிக இயல்பாக நம்மை அறியாமல் தானே நடைபெறும். அது எப்படி, எப்போது என்று ஏங்கித் தவிக்காத வரையில், நமது வாழ்க்கையில் குழப்பங்கள் இருக்காது.



இந்த உண்மையைத் தெரிந்துகொள்வது சுயமேம்பாட்டிற்கு மிகவும் நல்லது.



                45. கடலும், அலையும்

ஆழ்கடலில் படகு அமைதியாக நிற்கிறது. அதே படகு தரையை நெருங்கும் பொழுது அலைகள் அதிகம் இருப்பதால் தத்தளிக்கிறது.



மனிதனின்  நிலையும் அதுதான். சம்சார சாகரத்தில் சமுதாய அமைப்பு ஏற்படுத்தும் கொந்தளிப்புகள் கடற்கரையின் அருகில் உள்ள அலைகளைப் போன்று அதில் மாட்டிகொண்ட மனிதனைத் தத்தளிக்க வைக்கிறது. அதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.

ஆனால் தனது மனதை அவற்றிலிருந்து விலக்கி இறைவன்பால் செலுத்தினால், ஆட்டமில்லாத அமைதியான வாழ்க்கை அமையும். அப்படிச் செய்யமுடியுமா என்றால் முடியும் என்கிறார் பரமஹம்சர்.




எப்படி வீட்டுவேலையில் ஈடுபட்டிருக்கும் தாயின் மனம் எப்பொழுதும் தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையையே நினைத்துக் கொண்டிருக்கிறதோ, அதைப் போல எந்த வேளையில் ஈடுபட்டிருந்தாலும், நமது மனமும் எப்பொழுதும் இறைவனேயே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்கிறார்.



இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் கொண்டுள்ள உயரிய குறிக்கோளில் மனதை செலுத்தலாம்.

“Be in the ocean; not on the waves”.




              46. மனமும், சிலையும்

ஓவியன் திரைச்சீலையில் ஓவியம் வரைகிறான். சிற்பியோ கல்லில் சிலையினை வடிக்கிறான். இரண்டுமே கலையின் வடிவங்கள்தான். இரண்டுமே நாம் பார்த்து இரசிப்பவைதான். இருந்தாலும் இரண்டிற்குமிடையே முக்கியமான ஒரு வித்தியாசம் உண்டு.    




ஓவியன் திரைச்சீலையில் தனக்குப் பிடித்தமான உருவத்தைக் கொண்டுவர, தேவையான வர்ணங்களை அதில் வரைகிறான்.

சிற்பியோ கல்லில் தனக்குப் பிடித்தமான உருவத்தைக் கொண்டுவர, தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வெளியே தள்ளுகிறான்.



மனிதனின்  செயல்பாடுகள் ஓவியனைப் போன்று இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக ஒரு சிற்பியைப் போன்று இருக்க வேண்டும்.



மனிதன் தான் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறானோ அதுபோல் ஆகமுடியும். அப்படி ஆவதற்கு அவன் செய்ய வேண்டியதெல்லாம் தனக்குத் தேவையில்லாத விஷயங்களைத் தன்னிலிருந்து  நீக்குவதுதான்.




                           47. ஒப்பீடு

சுயமேம்பாட்டில் ஈடுபடும் எந்த மனிதனும் தன்னை அடுத்தவனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. நமக்கு ஒப்பீடு செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும் அவற்றை தவிர்ப்பது நல்லது.




அதோடு மட்டுமல்ல, தன்னைத்தானே ஒப்பீடு செய்வது கூட – கடந்த காலத்தில் எப்படி இருந்தோம், இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்பது போன்ற ஒப்பீடுகளும் – தவிர்க்கப்பட வேண்டியவை.




எந்த மலரும் மற்றொரு மலரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. மரம், செடி, கொடி என்று இயற்கையின் எந்த அம்சத்தை எடுத்துக் கொண்டாலும், அது ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்வதில்லை என்பதைக் காணலாம். தனது வளர்ச்சியின் பல்வேறு நிலைகளையும் அது ஒப்பீடு செய்வதில்லை.



ஒப்பீடு செய்வதால் என்னவாகும்?
ஒப்பீடு செய்யும் பொழுது மனதில் பல்வேறு சந்தேகங்கள் வரும். அதன் காரணமாக மனதில்  சஞ்சலம், வெறுப்பு, கோபம், சுயபச்சதாபம் போன்று பல்வேறு குழப்பங்கள் தோன்றும்.

மனதில் குழப்பங்கள் ஏற்பட்டால், சுயமேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபடுவது மனிதனுக்குக் கடினமான காரியமாகிவிடும்.




           48. தவறெனத் தெரிந்தால்

நாம் தவறு செய்யும் பொழுது அதனை முதன்முதலில் சுட்டிக்காட்டுவது யாராக இருக்கும்? முதன்முதலில் சுட்டிக்காட்டுவது நமது மனமாகத்தான் இருக்கும்.

தவறு என்பது பல நேரங்களில் செயலாக மட்டுமின்றி, விளைவாகவும் இருக்கும்.



நாம் செய்தது தவறு என்று மற்றவர்கள் சொல்லி, நமது மனமும்  அதனை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தால், நாமும் அதனை  ஒப்புக்கொள்கிறோம். இல்லையெனில் நாம் அதனை எளிதில் ஒப்புக்கொள்வதில்லை.



தவறு என்று தெரிந்தவுடன், நமது புத்தியின் மூலம் அதனை உறுதி செய்யவேண்டும். பின்னர் தவறுக்குக் காரணமாக இருந்த செயலைத் திரும்பவும் செய்யாதிருக்க உறுதி பூண வேண்டும். அந்த உறுதியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

உறுதிபூண்டு, பின் அதனைக் கடைப்பிடிக்கத் தவறினால், தவறான செயல் திரும்பத் திரும்ப செய்யப்பட்டு, அதுவே பழக்கமாக மாறி, முடிவில் ஆழ்மனதில் குணமாக பதிவாகிவிடுகிறது.



அதன்பின் நாம் செய்யும் தவறுகளை நம்மால் உணரமுடியாதது மட்டுமல்ல, மற்றவர்கள் சுட்டிக்காட்டும் பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.


                      49. துணை நலம்

சுய மேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபடும்பொழுது, பல நேரங்களில்  என்ன செய்வது என அறியாது தடுமாற நேரிடும். நாம் செல்லும் பாதை சரியானது தானா; அல்லது தவறான பாதையில் செல்கிறோமா என்பதே புரியாது.

அந்த நேரங்களில் நமக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருப்பது சான்றோர் இயற்றிய, காலத்தை வென்ற மறைநூல்களே. இருந்தாலும், பக்குவப்படாத மனமுடைய மனிதனால், சுட்டெரிக்கும் உண்மைகளைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் மறைநூல்களை சந்திக்கும் தைரியம் இருக்காது.



எனவேதான், மறைநூல்களில் புதைந்து கிடக்கும் உண்மைகளைத் தனக்குப் புரியுமாறு எடுத்துரைக்கும் பெரியோரைத் தேடிப் பார்த்து, தெளிந்து, தனக்குத் துணையாக கொள்ள வேண்டும்.

அப்படித் தேர்ந்து தெளிந்த பின், நமது கேள்விகளுக்கு அவர்கள் மூலமாக விடை தேடலாமே தவிர, அவர்களையே சோதிக்கும் நிலைக்கு நாம் போகக்கூடாது.

தக்க பெரியோரின் துணை கிடைத்துவிட்டால், அதுவே சுயமேம்பாட்டில் பாதி வெற்றிதான்.

                                                                                                                                                                                         
50. சுயமேம்பாட்டிற்கான உத்திகள்

மனம் தரும் நோய்க்கு மனமே மருந்து என்று பார்த்தோம். அதை மருந்தாக்குவது எப்படி என்று பார்க்கவேண்டாமா?



கீதை நெடுகிலும், சுயமேம்பாட்டிற்கான உத்திகள் பல இடங்களில் சொல்லபட்டிருக்கின்றன. அவை அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறிய வேண்டிய விஷயங்கள். சரியாகப் புரிந்து கொள்ளாதவரை, அவை புதிர்களாகவே இருக்கும்.



கீதை மனிதர்களை குணங்களின் அடிப்படையில் மூன்று விதமாக பிரிக்கிறது.

சத்துவ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் அடுப்பில் உள்ள புகையைப் போன்றது. ஊதினால் விலகிவிடும் தன்மையது. கறைகளைப் போக்குவது சுலபம் என்கிறது.


இரஜோ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் கண்ணாடியில் படிந்த தூசியைப் போன்றது. தண்ணீர் விட்டுக் கழுவி, துணியை வைத்து சுத்தமாகத் துடைக்க வேண்டும். கறைகளைப் போக்க  சிறிது முயற்சி தேவையென உணர்த்துகிறது.


தமோ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் சினையில் உள்ள கருவைப் போன்றது. கரு வளர, நல்ல போஷாக்கு கொடுத்து, நல்ல முறையில் கவனித்து வர வேண்டும். கறைகளைப்  போக்க கால அவகாசம் தேவையென்பதால், அசாத்திய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்கிறது.




மனிதர்களை குணங்களின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கும் கீதை, குண-கர்மாவின் அடிப்படையில் நான்கு விதமாகப் பிரிக்கிறது.

சத்துவ குணம் மிகுந்த பிராமணன் விகிதாச்சாரமுறையில் அந்த வர்ணத்தில் கீழ்நிலையில் இருந்தாலும், சுயமேம்பாடு என்பது அவனுக்கு மிக இயல்பாக நடைபெறும்.

சத்துவகுண தாக்கமுள்ள இரஜோகுணவாதியான க்ஷத்திரியன் தர்மநெறிகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பவன்; இருந்தாலும் வாழ்வியல் தத்துவங்கள் அவனுக்குப் புரியாத புதிராகத்தான் இருக்கும். அவை அவனுக்குப் புரிபட வேண்டுமென்றால், சுயமேம்பாட்டு உத்திகளில் அவன் கவனம் செல்லுத்த வேண்டும்.

சத்துவகுண தாக்கத்தை நிராகரிக்கத் துணியும் இரஜோகுணவாதியான வைஷ்யன், மண்ணுலக வாழ்க்கைக்கு  முக்கியத்துவம் கொடுப்பவன். தர்ம நெறிகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியற்ற அவன், சுயமேம்பாட்டைப் பற்றி எப்பொழுது கவலைப்படுவான்? பூவுலகம் ஒரு புண்ணுலகம்  என்ற உண்மை அவனுக்கு என்று புரிகிறதோ, அன்றுதான் சுயமேம்பாட்டில் ஆர்வம் ஆரம்பமாகும்.

தமோகுணவாதியான சூத்திரன் சுயமேம்பாடு என்றால் என்னவென்றே தெரியாதவன். ஒருவேளை தக்க பெரியோரின் அருள் கிடைத்து, அவரது தலைமையில் நம்பிக்கை வைத்து அவர் காட்டிய வழியில் தனது பயணத்தைத் தொடர்ந்தால், அவனது சுயமேம்பாடு அவனே அறியாமல் நடந்தேறலாம்.




51. அந்தக்கரணங்கள்

நன்கு யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய சாதனையாக இருந்தாலும், அது முதலில் தோன்றுவது மனதில்தான். (Great things are done first in mind). மனிதன் எதை நினைக்கிறானோ, அதுவாகவே ஆகிறான். அது எப்படி சாத்தியமாகிறது என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.


வரைபடத்தைப் பாருங்கள் –--                              
              

குறிப்பு: திடக்கோடு நேரடியான செயல்பாட்டைக் குறிக்கிறது. புள்ளிக்கோடு மறைமுகமான அல்லது நுண்ணிய உளவியல் தாக்கத்தைக் குறிக்கிறது.


நாம் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும், சுயமேம்பாட்டிற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், “அந்தக் கரணங்களின்” செயல்பாட்டினை நன்கு தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.




ஆன்மா:
     ஆன்மா என்பது மனிதனுக்கு உயிர் கொடுக்கும் இறைவனின் பிரதிநிதி. மனிதனின் எந்தச் செயலிலும் அது தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. எனவே, அதன் செயல்பாடு நமது கவனத்திற்கு தேவையில்லை.




தாக்கம்:
    மனிதனின் வாழ்நாள் முழுவதும் வெளியிலிருந்து பல்வேறு வகையான தாக்கங்கள் அவனை வந்து அடைந்து கொண்டேயிருக்கின்றன. அதே நேரத்தில் அவனுக்கு உள்ளேயும் பல்வேறு தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
     
அவன் உறங்கும் பொழுது, புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை அவன் அறிய முடியாது.  ஆனாலும், கனவுகளைத் தாண்டி ஆழ்ந்த நித்திரை ஏற்படாதவரை மனதளவில் தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.





உடல்:  
        உடல் என்று சொல்லும்பொழுது, நாம் இங்கு குறிப்பிடுவது  ஐந்து புலன்களின் கருவிகளை மட்டுமே. வெளியிலிருந்து வரும் தாக்கங்களை ஐந்து புலன்களின் மூலமாக மனம் உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே, மனிதனால் அவற்றை உணர முடிகிறது. இல்லையென்றால், அந்தத் தாக்கங்கள் மனிதனை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
     
குறிப்பிட்ட பக்குவத்தைப் பெற்றுவிட்ட மனிதனுக்கோ, தாக்கங்கள் மனதை வந்து அடைந்தால் கூட, எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அது எப்படி என்று பின்னர் பார்ப்போம்.





மனம்:
      “அந்தக் கரணங்களின்” மிகவும் புதிரான பகுதி மனம் ஒன்றுதான். அது எப்படி செயல்படும் என்பது அதற்கே புரியாத ஒன்று.

வெளிவுலகிலிருந்து ஐந்து புலன்களின் கருவிகள்  மூலம்  வரும் தாக்கங்களை (எதிர்கொள்வது புலன்களாக இருந்தாலும்)  உள்வாங்கிக் கொள்வது மனம் மட்டுமே. அந்த மனம் அதற்குத் தயாராக இல்லையென்றால்
அவனது மனத்திலும் புத்தியிலும் எந்தப் பதிவும் ஏற்படுவதில்லை

 



(மீண்டும் வரைபடத்தைப் பாருங்கள். மனதை ஒட்டி  நிறைய கோடுகள்; தொடர்கோடுகள் மனிதன் அவனுக்குள் ஏற்படுத்தும்   பதிவுகளைக் குறிப்பது; இடைவெளி விட்டு செல்லும் கோடுகள், தான் பெரும் தாக்கத்திற்கு மனிதன் திரும்பச் செய்யும் தாக்கத்தைக் குறிப்பது)




புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை உள்வாங்கிக் கொள்ளும் மனம், அந்தத் தாக்கத்தை விரும்பினால், உணர்ச்சி பெட்டகத்தில் ஒரு பதிவினை ஏற்படுத்துகிறது. மனம் விரும்பும் பொழுது, இப்படி பல பதிவுகள் உணர்ச்சி பெட்டகத்தில் இடம் பெறுகின்றன. வெளி உலகிலிருந்து வரும் தாக்கங்களினால் மனம் பரபரப்பு அடையும் பொழுது, அந்த பதிவுகளே அவன் திருப்பித்தரும் தாக்கங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

புறவுலகிலிருந்து வரும் தாக்கத்தை உள்வாங்கி அதனைப் பரிசீலனை செய்யும் மனம், கூடவே அந்தத் தாக்கத்தைப் புத்திக்கும் அனுப்பிவைக்கிறது.




புத்தி:
   எந்தவொரு தாக்கமும் மனதை வந்தடைந்தால், மனம் பரபரப்பு அடையாத வரையில், அந்தத் தாக்கம் புத்தியையும் சென்று அடைகிறது. அந்தத் தாக்கம் தேவையென புத்தி நினைக்கும் பட்சத்தில், அறிவு பெட்டகத்தில் ஒரு பதிவு நிகழ்கிறது. அதுவே பின்னர் ஞானமாக உருவெடுக்கக் காரணமாகவும்  இருக்கிறது.




ஆழ்மனம்:  
      உணர்ச்சிப் பெட்டகத்தில் ஏற்படும் பதிவுகள், அதனை ஒட்டி அவனால் செய்யப்படும் காரியங்கள் நாளடைவில் பழக்கமாகி பின் அவனது  ஆழ்மனதில் பதிவாகி, அவனது குணமாக (வாசனா) மாறுகிறது. ஒரு மனிதனின் குணத்தைப் பொறுத்தே அவனது சுபாவமும், மனோபாவமும் அமைகின்றன. .

ஆழ்மனதில் இருக்கும் குணமும், மனோபாவமும், ஒரு மனிதனுக்கு உள்ளிருந்தே தாக்கத்தை ஏற்படுத்தும்.




அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் உள்ள பிரச்னை:

மனம் உணர்ச்சி வசப்படும் பொழுது, அவனது மனதிற்கும், புத்திக்கும்  உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது. அதனால், மனிதன் பரபரப்போடு  செயல்படும் பொழுது, அவனது அறிவு பயன்படாமல் போய்விடுகிறது.  




மனம் பரபரப்பு அடையாமல் இருந்தால், வெளியில் இருந்து வரும் தாக்கத்தை புத்திக்கு அனுப்பி, புத்தியின் கட்டளையைப் பெற்று, அதனைப் பொறுத்து வெளிவுலகில் தாக்கத்தை ஏற்படுத்தும்.




உணர்ச்சி பெட்டகத்தில் உள்ள சுபாவம் விரைவில் மாறும் தன்மை உடையது; ஆனால், ஆழ்மனதில் பதிவான குணம் நீடித்து நிற்பது.




உணர்ச்சி பெட்டகத்திலிருந்து வரும் தாக்கமும், மனோபாவம் மூலமாக ஏற்படும்  தாக்கமும் ஒன்றுக்கொன்று மாறுபடும் பொழுது மனிதன் குழப்பம் அடைந்து விடுகிறான்.

குழப்பம் அடையும் நேரங்களில், மனிதன் புத்தி சொல்வதைக் கேட்டு நடந்தால், பிரச்னைகளைத்  தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், மனம் பரபரப்பு அடையும் பொழுது, மனம், புத்தி இரண்டிற்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறதே! அதற்கு என்ன செய்வது?         


  

மனிதனின் “ஆழ்மனத்தில்” உள்ள  பெட்டகம் நிர்மலமாக இருக்கும்பொழுது, அவன் குண, கர்மாவைக் கடந்த ஞானியாகி விடுகிறான். அவனால் ஆன்மாவின்  ஒளியை உணர முடிகிறது.




அது முடிகின்ற காரியமா என்றால் .நிச்சயம் முடிகின்ற காரியம்தான். மன உறுதியும் முயற்சியும் இருந்தால் எல்லோராலும் முடிகின்ற காரியம்தான்.





52. அந்தக்கரணங்களின் செயல்பாடு  -– பொதுவான விதிமுறைகள்

மனிதனின்  “அந்தக்கரணங்கள்” எப்படி செயல்படுகின்றன என்று பார்த்தோம்.

மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டுமெனில், அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் உள்ள  பொதுவான    விதிமுறைகளை அவன் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.  அவை – -


   ஒரு மனிதனின்  சுயமேம்பாட்டிற்கு, பிறர் வழிகாட்டலாமே தவிர, மற்றபடி  வேறு எந்த வகையிலும் உதவ முடியாது.



  மனிதனுக்குள்ளும் அவனது மனம் ஒத்துழைக்காவிட்டால் எந்த மேம்பாடும் இருக்காது.


   
   புறவுலக தாக்கங்களை மனம் உள்வாங்கிக் கொள்ளாதவரை, அந்தத் தாக்கங்களினால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.



    மனம் மூலமாக உணர்ச்சி பெட்டகத்தில், “நான், எனது” என்று பற்று கொண்டு பதிவுகள் ஏற்படுவதால், சுபாவம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.



  புத்தியினால் ஏற்படும் பதிவுகள் பற்றற்றவை. அதனால், அந்தப் பதிவுகளினால் மனிதனுக்கு மனிதன் மாறுபாடு இருப்பதில்லை.



  மனம் பரபரப்பு  அடையும் பொழுது அவனது செயல்கள் யாவும் உணர்ச்சியின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த நேரத்தில் அவனது புத்தியே அவனுக்கு உதவ முடியாது. அப்படியானால் மற்றவர்களின் புத்தியினால் எப்படி உதவமுடியும்?



  அறிவுக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும், அறிவுக்குக் கட்டுப்படாமல் நடந்தாலும், எந்தவொரு செயலும்  முதலில் அரங்கேறும் இடம் மனம்தான்.



   மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் மேன்மையடைய, மேன்மையடைய அவனது வர்ணப்பிரிவும் மேன்மை அடைகிறது.




  வர்ணப்பிரிவில் கீழ்நிலையில் இருக்கும் போது, ஒரு மனிதனின் உணர்ச்சி பெட்டகத்திற்கும், அறிவு பெட்டகத்திற்கும் இடையில் உள்ள தடுப்புச் சுவர் மிகவும் கனமாக இருக்கிறது.

  அவன் வர்ணப்பிரிவில் மேலே செல்லச்செல்ல இடையில் உள்ள தடுப்புச் சுவர் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, முடிவில் காணாமல் போய்விடுகிறது.

   அந்த நிலையில், மனிதனின் உணர்ச்சி, அறிவுடன் இரண்டறக்  கலந்து விடுகிறது. அதன்பின், அவனிடம் இருப்பது உணர்ச்சிகள் அல்ல; உணர்வுகள் மட்டுமே.




  பற்றில்லாமல் செய்யும் காரியங்கள் புதிய பதிவினை ஏற்படுத்தாது. அத்துடன் “ஆழ்மனத்தில்” ஏற்கனவே இருந்தப் பதிவுகளும் ஒவ்வொன்றாக அழிந்துவிடுகின்றன.




  பற்றை விட்டவனிடம் “நான், எனது” என்ற எண்ணம் மறைந்து போகிறது. “தன்னை” மறந்த மனிதன் ஞானியாகிறான். “மனம் இறக்க, ஞானி பிறக்கிறான்” என்பது இதனால்தான்.



  பற்றை விட்டவனை ‘வெப்பம், குளிர்; இன்பம், துன்பம்; வெற்றி, தோல்வி” என்று எதுவுமே பாதிப்பதில்லை. நல்வினை, தீவினை என்று எதுவுமே அவனுக்குக் கிடையாது.




     மனிதனின் வர்ணப்பிriவு நான்குதான் என்றாலும், ஒரே வர்ணத்திலும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் குணத்திற்கும், மனோபாவத்திற்கும் ஏற்ப அவற்றின் விகிதாச்சாரம் மாறுபடும்.




  ஒரு மனிதனின் வர்ணம் அவனது குணம், மனோபாவம் இவற்றின் அடிப்படையிலேயே அமைகிறது. ஆனாலும், உணர்ச்சி பெட்டகத்தில் அன்றாடம் ஏற்படும் பதிவுகளைப் பொறுத்து மற்ற வர்ணங்களுக்குரிய தாக்கங்களும் ஏற்படலாம். அவை பழக்கத்துக்கு வந்து, “வாசனா” பெட்டகத்தில் பதிவாகாதவரை பிற வர்ணத்தாக்கங்கள் நிரந்தரமற்றவையே.




   மனிதனின் உயர்விற்கு மனம், புத்தி இரண்டுமே முக்கியம். என்றாலும், அவை இருக்குமிடம் உடலில் அல்லவா? எனவே மனிதன், சுய மேம்பாட்டிற்காண முயற்சியில் ஈடுபடுவதற்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம்.



  ஆன்மா உடலுக்குள்தான் இருக்கிறது; ஆனால் தனித்து இருக்கிறது. உடலில் உள்ள இயக்கத்திற்கு அது ஆதாரமாக இருந்தாலும், எதனுடனும் அதற்கு பந்தம் கிடையாது. மனிதனின் எந்த இயக்கமும் அதனைப் பாதிப்பதில்லை; அதுவும் மனிதனின் எந்த இயக்கத்தையும் பாதிக்காது




53. நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு

“நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு”    இவற்றை சுய மேம்பாட்டிற்கு எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்பதற்கு முன், இவை எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.




நோக்கம்:
          நாம் எந்தக் காரியத்தை செய்தாலும், அதற்கு ஒரு காரணம் இருக்குமல்லவா? அதைத்தான் நோக்கம் (Motive) என்று சொல்கிறோம். நோக்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால், காரியம் ஆற்றும் எண்ணம் மனிதனுக்குத் தோன்றுவதில்லை. அம்மாதிரி காரியம் ஆற்றும் எண்ணத்தை தோற்றுவிப்பதில் “உணர்ச்சி” பெட்டகத்திற்கும், ஆழ்மனத்தில் உள்ள “வாசனா” பதிவுகளின் காரணமாக எழும் மனோபாவத்திற்கும் பெரும்பங்கு உண்டு.





செயல்:
     செயலில் இரண்டு வகை உண்டு. ஒன்று பிறர் சொல்லி நாம் செய்வது, மற்றொன்று நமக்கு நாமே ஆணையிட்டுக்கொண்டு செய்வது. சுயமேம்பாட்டில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இரண்டாவதை மட்டுமே.




விளைவு:
     செயல் நிகழ்காலம் என்றால், நோக்கம் என்பது இறந்த காலம், விளைவு என்பது எதிர்காலம்.

    நோக்கம் என்பது நமக்குள் நாம் செய்யும் பதிவுகளின் சங்கமத்தின் காரணமாக வருவது. செயல் என்பது அவற்றின் எதிரொலி. இரண்டுமே நம் கையில் உள்ளது. ஆனால் நாம் செய்யும் செயல்களின் விளைவு எப்படி இருக்கும் என நம்மால்  உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், அது நாம் விரும்பிய படியும் இருக்கலாம்; வேறு வகையிலும் இருக்கலாம். ஒரே செயலுக்குப் பல வகையான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.




பின்விளைவு:
    நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் அதற்கு ஒரு விளைவு இருக்கும். நாம் செய்யும் செயலால் ஏற்படும் விளைவின் காரணமாக வரும் பின்விளைவு நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தினால், அதனை ஆராய வேண்டியது நமது கடமை.

நோக்கம், செயல், விளைவு மூன்றிலும் காலவித்தியாசம் இருப்பதால், விளைவு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே ஊகிக்கவும் முடியாது.
மூன்றிலும் முறையான இணக்கம் இருந்தால், நாம் எண்ணியபடியே எல்லாம் நடக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.



விளைவு நம் எண்ணத்திற்கு மாறாக இருந்து, அதனால் ஏற்படும் பின்விளைவு நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால், நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்

 (ஒருவேளை  ‘பின்விளைவுஎந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால், அந்த மனிதன் சுயமேம்பாட்டை மறந்துவிட வேண்டியதுதான்).




நமது செயலால் வெளிப்படும் விளைவு தவறாக இருந்தால், அதற்குக் காரணம் நமது நோக்கமா அல்லது செயலா என்று பார்க்கவேண்டும்.

நோக்கம் சரியாக இருந்து, செயல் தவறாக இருந்தால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. வாழ்க்கை என்பதே ‘அனுபவதாரா’தானே! தவறான செயலால் நேர்ந்த அனுபவத்தின் காரணமாக, அடுத்தமுறை சரியாகச் செயல்படலாம். தவறு வந்துவிடுமே என்று பயந்து செயல்படாமல் இருந்தால்,  சுயமேம்பாடு தடைப்பட்டு விடும்.




நோக்கமே தவறெனத் தெரிந்தால், அங்குதான் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். தவறான நோக்கம் உருவாகக் காரணமாக இருந்த பதிவின் ஆணிவேரைக் கண்டுபிடித்து, அதனை உடனடியாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் சுயமேம்பாடு   தடைப்படுவது மட்டுமல்ல, அதில் பின்னடைவும் ஏற்படும்.




சுயமேம்பட்டு உத்தியில், தவறான செயலை சரிசெய்வதை விட, தவறான நோக்கத்தை  சரிசெய்வது தான் பிரதானமாக இருக்கிறது.




நமது தவறைப் புரிந்து கொண்டபின், நாம் செய்யவேண்டியவை

அகத்தாய்வு:
     எப்பொழுது நம் செயலால் வரும் பின்விளைவு நமக்குள் ஒரு    தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அப்பொழுது நமக்குள்ளேயே ஆராயவேண்டும். நமக்குள் நாம் ஏற்படுத்தியிருந்த பதிவுகளை நன்கு ஆராயவேண்டும். மிகவும் நிதானமாக, பதட்டமில்லாமல் ஆராயவேண்டும். அந்த வேலையை மனம் தானே செய்யாமல் புத்திக்குக் கொடுத்துவிட வேண்டும்.



கண்டுபிடித்தல்
     புத்தி நிதானமாக  ஆராய்ச்சி (அகத்தாய்வு) செய்து எந்தப் பதிவில் தவறு நேர்ந்துள்ளது என்று கண்டுபிடிக்கவேண்டும். அந்தத் தவறான பதிவுக்குக் காரணமாக இருந்தது, புறவுலகப் பொருளா அல்லது அதனுடன் நாம் வைத்திருந்த தொடர்பா   என்பதனையும் கண்டுபிடிக்க வேண்டும்.




நிராகரிப்பு:
            புறவுலகப் பொருளோ அல்லது அத்துடன் ஆன நம்முடைய  தொடர்போ  எதுவானாலும் சரி, தவறான பதிவிற்குக் காரணமாக இருந்தது எதுவெனக் கண்டுபிடித்தவுடன், உடனே அதனை நிராகரித்து விட வேண்டும். ஒத்தி போட்டுவிட்டால், நிராகரிக்கும் எண்ணம் மறைந்து போகும் வாய்ப்பு உண்டு.




புதிய சேர்க்கை:
     நாம் நிராகரித்த ஒன்று எதுவாக இருந்தாலும் அதனை அனுபவிக்க அல்லது புதுப்பிக்க ஒரு நேரம் ஒதுக்கியிருப்போம். அந்த நேரத்தை, கண்டிப்பாக ஒரு பயனுள்ள அனுபவத்திற்காக ஒதுக்கவேண்டும். எந்தக் காரணத்தை  கொண்டும் மறக்கக்கூடாத விஷயம் இது.





54. இன்பமும், அமைதியும்

மனித வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துவிடவேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், உண்மையான இன்பம் எதில் இருக்கிறது?



ஐம்புலன்களின் உதவியுடன், புறவுலகப் பொருட்களோடு இன்பம் கொள்வது ஒருவகை. ஆனால், எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும், அதனுடன் நமக்குள்ள தொடர்பு கூடக் கூட, அதனை அனுபவிக்கும்  பொழுது ஏற்படும் இன்பத்தின் அளவு குறைந்துகொண்டே போகிறது. நாளடைவில் இன்பம் அளிப்பதற்குப் பதிலாக, அதுவே நமக்குப் பலவித சங்கடங்களையும் உண்டுபண்ணுகிறது.




இன்னொரு வகை இன்பம் உண்டு. மற்றவர்களுக்காக நாம் சில காரியங்களைச் செய்யும் பொழுது, அதனால் அவர்கள் பயனடைந்து மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து,  நாம் இன்பம் கொள்வது.



முதலில் சொன்ன இன்பம் சிறிது நேரமே நீடித்து நிற்பதோடு, மீண்டும், மீண்டும் இன்பம் துய்ப்பதற்கான காரியத்தில் ஈடுபடுத்தி, முடிவில் வேதனைக்கும் வழிவகுக்கும்.

இரண்டாவது வகை இன்பமோ, நம்மை பரவசத்தில் ஆழ்த்தி, நீண்ட காலம் நம் நினைவில் நிற்கும். ஆனாலும் இவ்வகை இன்பங்கள் நமக்குள் ஒருவகை இறுமாப்பை வளர்க்கவும் வாய்ப்புகள் உண்டு.



இவை இரண்டிலும் சேராத மூன்றாவது வகை இன்பம் ஒன்று உண்டு. அது நிலையான இன்பத்தைத் தருவதோடு, பூவுலக வாழ்க்கையையே சொர்க்கமாக மாற்றிவிடும். அது என்ன?

இன்பத்திற்கு எதிர்ப்பதமாக எதனைச் சொல்கிறோம்? துன்பம் என்றுதானே சொல்கிறோம். இதனையே ‘இன்பம் = துன்பம் இல்லை’ என்றும் சொல்லலாம் அல்லவா? துன்பம் இல்லாத நிலையில் மனம் எப்படி இருக்கும்? அமைதியாகத்தானே இருக்கும்? ஆக,

இன்பம்     =    துன்பம் இல்லை

  துன்பம் இல்லை  = மனஅமைதி

ஃ மன அமைதி     =    இன்பம்

எவ்வளவு எளிதாக இருக்கிறது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இது முடியுமா?

முடியும், ஒரே ஒரு பேருண்மையை உணர்ந்தால் - - அது   

ஆசை கொண்ட மனம்  -  அது
அவதிகளின் களம்;

அமைதி கண்ட மனம்  -  அது
ஆனந்தத்தின் வசம்.


அனுபவித்தால் மட்டுமே தெரியும் உண்மை இது. சொல்லப்போனால், சுயமேம்பாட்டின் உச்சக்கட்ட குறிக்கோளே இதுதான்.


                 



55. ஞானம் எனும் நெருப்பு 

“ஞானம் என்ற நெருப்பு  சகல கர்மங்களையும் எரித்துவிடும்” என்று சொல்கிறார் கிருஷ்ணன். இதனைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டும்.

‘கர்மங்கள்’ என்று சொல்லும் பொழுது வெறுமனே செயல்கள் மட்டுமல்ல, மனதிலிருந்து எழக்கூடிய  எண்ணங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


ஞானம் என்ற நெருப்பு செயல், எண்ணம் மட்டுமின்றி, நம்மிடம் உள்ள அஹங்காரத்தையும் முற்றிலுமாக அழித்துவிடும்.


எல்லாம் சரி; நாம் ‘ஞானத்தை’ நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?




ஒரு பூந்தோட்டத்தை நெருங்கும் பொழுது மலர்களின் வாசத்தை உணர்வது போல, அருவிக்கரையை நெருங்கும் பொழுது அருவி  விழுவதின் சத்தத்தைக் கேட்பது போல, சில அறிகுறிகளைக் கொண்டு நாம் ஞானத்தின் பாதையில் முன்னேறுவதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒருசில அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்: -
     
     பற்றின்மை

     பணிவு (humility)

     உள்ளார்ந்த அமைதி
     
     உடைமைத்தனமின்மை

     தனிமையை  விரும்புதல்

     எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை

     எதிர்கொள்ளும் எதனையும் இறைவனின் பிரசாதமாக
                    ஏற்றுகொள்ளுதல்
   
  இணக்கமாகவும், இளக்கமாகவும் நடந்து கொள்ளுதல்    
              
     ‘கர்த்தா’ என்ற நிலையிலிருந்து விடுபடுதல்
             
     விருப்பு-வெறுப்பு போன்ற இருமைகளில் இருந்து விடுதலை

இந்த அறிகுறிகளில் சிலவற்றையாவது நாம் பெற்றிருப்பதாக உணர்ந்தால், நாம் ஞானத்தின் பாதையில் முன்னேறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.





ஞானம் அடைவதற்கான  பாதை ஒன்றா அல்லது பல பாதைகள் உண்டா? 

பல பாதைகள் என்றால், நமக்கான பாதை எது? அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பாதை மட்டும் தெரிந்தால் போதுமா? அதில் எப்படி பயணம் செய்வது என்று தெரிய வேண்டாமா?

முதலில் தெரிய வேண்டியது நாம் யார்? நமக்கான பாதை எது? என்பதுதான். அதனைத் தெரிந்துகொண்ட பின்னர்தான் பயணம் செய்வதைப் பற்றி முயற்சி செய்ய வேண்டும்.




56. ஞானத்திற்கான பாதை

ஞானம் பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும், பொதுவாக மக்கள் பயன்படுத்துவது நான்கு வழிகளைத்தான். அவை - -

1.   ஞான     மார்க்கம்

2.   கர்ம        மார்க்கம்

3.   பக்தி       மார்க்கம்

4.  தியான மார்க்கம்

.     
இந்த நான்கு மார்க்கங்களில் நமக்கு உரிய மார்க்கம் எது என  அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.



அதற்கு நாம் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். நாம் யார் என்பதை அறிந்து கொண்டால்தான் நமக்கான பாதை எது என்பது புலப்படும்.

நாம் யார் என்பதையும், நமக்கான பாதை எது என்பதையும் அறிந்து கொண்டபின், நமக்கான பாதையில் எப்படி பயணம் செய்ய வேண்டும் என்றும் புரிந்து கொள்ளவேண்டும்.




பலரும் ஞானம் பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால் தமக்கான பாதை எது என்று தெரியாமலும், தெரிந்தாலும் சரியான வகையில் பயணம் செய்கிறோமா என்பது புரியாததாலும், தமது குறிக்கோளை அடைய முடியாமல் தவித்து, முடிவில் கடவுளையே குறை சொல்லும் அளவுக்கு சென்று விடுகிறார்கள்.




57. நீரில்லாத ஆறு

நதியில் தண்ணீர் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அதனை ஆறு என்று சொல்கிறோம். ஆற்றில் தண்ணீர் இல்லையென்றால், அந்த நேரத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த இடத்தை பார்த்தால், அந்த இடத்தை என்ன பெயர் சொல்லி அழைப்போம்? ஆற்றுப்படுகை என்றுதானே.

அந்த ஆற்றின் கரைகள் இரண்டும் நீக்கப்பட்டுவிட்டால், அப்பொழுது அதனை என்னவென்று சொல்வோம். அதுவும் பூமியின் ஒரு பகுதிதானே.

ஆற்றின் கரைகள் இல்லாதிருந்தால் (அதுவும் பூமியின் மேல்தான் இருக்கிறது), அப்பொழுது அந்த இடத்திற்கு ஆறு என்ற பெயர் இருக்குமா?





ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஒரு பகுதிதான். ஆற்றுக்கு கரை இருப்பது போல, ஜீவாத்மாவைச் சுற்றி ஒரு மாயத்திரை இருப்பதால் அதனைத் தனியாக பிரித்துப் பார்க்கிறோம்.

அந்த மாயத்திரையை இல்லாமல் செய்வது நமது கையில் இல்லை. ஆனால் அது இல்லாமல் போகவேண்டுமென்றால், அதன்மேல் எந்தவித அழுக்குகளும் இல்லாமல் செய்யவேண்டியது நமது கடமை. அதை நாம்தான் செய்ய வேண்டும். மற்றவர்கள் யாரும் நமக்கு உதவி செய்ய முடியாது; அவர்களால் நமக்கு வழி மட்டுமே காட்ட முடியும்.

 



58. சச்சிதானந்தம்

‘சத்’, ‘சித்’, ‘ஆனந்தம்’ என்ற மூன்று வார்த்தைகளின் கூட்டு வார்த்தையே ‘சச்சிதானந்தம்’ என்பது.



‘சத்’ என்பது எப்போதும் உள்ளது என்பதைக் குறிக்கிறது. அதற்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் கிடையாது.




‘சித்’ என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியான ஜீவாத்மாவைக் குறிக்கிறது. பரமாத்மாவின் ஒரு பகுதி மாயத்திரையால்   சூழப்பட்டு நமது உடலுக்குள் இருந்து கொண்டு நமது இயக்கத்திற்கு சக்தி கொடுக்கிறது என்றால், அதுவே ‘சித்’ என்று அழைக்கப்படுகிறது.




சித்தைச் சூழ்ந்துள்ள மாயத்திரையுடன் கூடிய நிலையையே 'சித்தம்' என்கிறோம்.
,



அந்த மாயத்திரையின் மீது மனத்தின் மூலம் பதிவுகள் (வாசனைகள்) ஏற்படும் போது, அதனை 'ஆழ்மனம்' என்று அழைக்கிறோம்




‘ஆனந்தம்’ என்பது  ‘சித்’ எப்பொழுதும்  ஆனந்தமாகவே இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

‘சித்’ எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது என்றால், நம்மால்  ஏன் அதை உணர முடிவதில்லை?




கண்ணாடியில் முகம் சரியாகத் தெரியவில்லை என்றால், கண்ணாடி அழுக்காக இருக்கிறது என்கிறோம்.

உண்மையில் கண்ணாடி அழுக்காக இருக்கிறதா அல்லது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா?

அடுத்த கேள்வி: கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா?

அடுத்த கேள்வி: கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு படர்ந்திருக்கிறதா?

ஆக, கண்ணாடியில் நமது முகம் தெரியவில்லை என்றால், அதற்கு காரணமாக இருப்பது கண்ணாடியா அல்லது அதன்மேல் படர்ந்துள்ள அழுக்கா?

கண்ணாடியின் மேல் முதலில் தூசிதான் படிகிறது. அதுவே பின்னர் அழுக்காக மாறுகிறது. உரிய சமயத்தில் அதை துடைக்காவிட்டால் அதுவே அட்டாகவும்  மாறி விடுகிறது.




கண்ணாடியின் மேல் படிந்த தூசி (அழுக்கு, அட்டு) போன்று, நமது சித்தத்தில் உள்ள மாயத்திரையின் மேல் படர்ந்துள்ள தூசியின் காரணமாகத்தான் நம்மால் உள்ளிருந்து வரும் ஒளியை (ஆனந்தத்தை) உணர முடிவதில்லை.




59. இருள்சேர் இருவினைகள்


புதிதாக ஓர் அணையைக் கட்டி விவசாயத்திற்காக ஓரு நீர்வழிப் பாதையை ஏற்படுத்தும் போது என்ன நடக்கிறது?

பரந்து, விரிந்த நிலப்பகுதியில் ஒரு சிறு பகுதியை நீர்வழிப் பாதையாக்க  முடிவு செய்தால் அந்த குறிப்பிட்ட பகுதியில் நிலத்தை வெட்டி, இருபுறமும் கரைகளை அமைக்கின்றனர். அதன்பின் அந்த இடத்தை ஆற்றுப்படுகை என்றும், தண்ணீர் ஓடினால் ஆறு என்றும் அழைக்கிறோம்.




நீக்கமற எங்கும் வியாபித்திருக்கும் பரமாத்மாவின் ஒரு பகுதி, மாயத்திரைக்குள் கட்டுப்பட்டு மனித உடலுக்குள் இருக்கும்பொழுது ஜீவாத்மா (சித்தம்) என்றும், மாயத்திரையின் மீது பதிவுகள் ஏற்படும் பொழுது ஆழ்மனம் என்றும் அழைக்கிறோம்.




இந்த ஆழ்மனப் பதிவுகள்தான் ஆன்ம ஒளியை உணர முடியாமல் அதனை  மறைத்து விடுவதோடு, மனிதனின்  மறுபிறவிக்கும்  காரணமாக அமைகின்றன.




தீவினைகள் காரணமாக ஏற்படும் பதிவுகள் மட்டுமல்ல, நல்வினைகள் காரணமாக ஏற்படும் பதிவுகளும் (கண்ணாடியின் மேல் படர்ந்த தூசியைப் போன்று) நமது ஆழ்மனதில் பரவும் இருளுக்கு காரணமாக இருக்கின்றன.

அதனால்தான் திருவள்ளுவர் தனது குறளில் -

“இருள்சேர் இருவினையும் சேரா – இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”            - - என்கிறார்.




60. தன்முனைப்பு

மனிதனின் ஆழ்மனப் பதிவுகளைக்  “வாசனா” என்று சொல்கிறோம். அந்த வாசனாவின் தன்மையைப் பொறுத்து, ஒரு மனிதனின் அஹங்காரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.



அஹங்காரம் என்றால் திமிர் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், இங்கு அஹங்காரம் என்பது ஒரு மனிதனின் தன்முனைப்பை மட்டுமே குறிக்கிறது.



எங்கு தன்முனைப்பு இருக்கிறதோ, அங்கு ஆசை கண்டிப்பாக வெளிப்படும். அந்த ஆசையின் அளவும், தன்முனைப்பின் தீவிரத்தைப் பொறுத்து இருக்கும்.

எங்கு ஆசை இருக்கிறதோ, அங்கு அதனைத் தொடர்ந்து பயமும், கோபமும் வருவது தவிர்க்க முடியாது.

ஆசை இருந்தால், ஆசைப்பட்ட பொருள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம்; கிடைக்காவிட்டால் கிடைக்கவில்லையே என்ற  கோபம்.

ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ  அது தன்னைவிட்டு போய்விடுமோ என்ற பயம்; போய்விட்டாலோ அதனால்  ஏற்படும்  கோபம்.

இவை அனைத்தும் ஒன்றை ஒன்று தொடர்ந்து வரக்கூடியவை.



வரைபடத்தைப் பாருங்கள் - -


                        


பயம், கோபம் போன்றவை எதிர்மறை உணர்ச்சிகள். இவையெல்லாம் இருக்கக்கூடாது என்றால், அஹங்காரத்தை விட்டால்தான் முடியும். ஆனால். தன்முனைப்பு இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு வளர்ச்சி என்பதும்  இருக்கமுடியாது. இதற்கு வழிதான் என்ன?





61. வளர்ச்சியும், மலர்ச்சியும்


(அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது;
 அஹங்காரம் இருந்தால்  மலர முடியாது)


அஹங்காரம் (தன்முனைப்பு) ஒரு மனிதனுக்குத் தேவையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். ஏனெனில் - -
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், தன்முனைப்பு மிகவும் அவசியம்; தன்முனைப்பு இல்லையென்றால் அவனால் முனைப்புடன் செயலில் இறங்க முடியாது. முனைப்பு இல்லாத செயல் நாம் ஆசைப்படும் விளைவை கொடுக்காது.



தன்முனைப்பு ஆசையைத் தூண்டக்கூடியது; அதே நேரம் தன்முனைப்பு உள்ள மனிதனிடம் அமைதியை எதிர்பார்க்க முடியாது. அமைதி இல்லாத மனதில் அகமலர்ச்சி மலர முடியாது.



ஒரு மனிதனின் ஆழ்மனதில் உள்ள வாசனா பதிவுகள் அனைத்தும் அழிந்துவிடும்பொழுது மட்டுமே, அந்த மனிதன் தனது சித்தத்தின் உள்ளே இருக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.



மலர்ச்சி என்று சொல்லும்போது, நாம் வாசனாவில் உள்ள பதிவுகளின் நீக்கத்தையே மனதில் கொள்ளவேண்டும்.



அமைதி தரும் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதன் மட்டுமே ஞானம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடமுடியும். மற்றவர்கள் முயற்சி செய்தாலும், அதில் வெற்றி பெறுவது கடினம்.




62. யான், எனது

“யான்எனது என்னும் செருக்கு அறுப்பான்  வானோர்க்கு               உயர்ந்த உலகம் புகும்”. – - திருவள்ளுவர் 

தன்முனைப்பு, செருக்கு (திமிர் என்றும் சொல்லலாம்) இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?



ஒரு மனிதன் தன்முனைப்புடன் செயலில் இறங்கும்பொழுது, அதன் விளைவாக பொன், பொருள் என்று சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். அவனது வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பிக்கிறது.

தான் நினைத்ததை சாதிக்கமுடிந்ததன் காரணமாக அவனுக்கு தன்னை நினைத்தே ஒரு பெருமிதம் வந்து விடுகிறது. அது தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அதன்கூடவே, அவனையும் அறியாமல் ஒரு விதமான செருக்கும் வந்து விடுகிறது.



‘நான்’ மற்றும்  ‘என்னுடைய’ என்னும் இந்த உணர்வுகளே மனிதனின் அமைதி குலைவதற்கு காரணமாகின்றன.



வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மனிதன் பாடுபடுவதில் தவறு இல்லை; வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதனால் ஏற்படும் சுகத்தை அனுபவிப்பதிலும் தவறு இல்லை. 

ஆனால் ‘என்னுடைய’ என்ற உடைமைத்தனத்திலிருந்து அவன் விடுதலை ஆகாத வரை அவனால் அமைதியும், அதனால் வரும் ஆனந்தத்தையும் உணர முடியாது.



‘நான்’, ‘எனது’ என்ற இந்த இரண்டு கட்டுகளிலிருந்தும் விடுபடுவது, ஞானம் அடைய விரும்பும் மனிதனுக்கு மிகவும் அவசியம்.




63. நான் யார்?

ஞானம் பெறுவது எப்படி என்று பகவான் ரமண மகரிஷியிடம் கேட்டால், அதெல்லாம் தேவையில்லை; தனியாக அமர்ந்து ‘நான் யார்’ என்று உன்னையே கேட்டுக்கொண்டு, விடையையும் தேடு   என்று சொல்வார். 



பெரும்பாலும் ‘நாம் யார்’ என்று தெரியாமலே, நமது வாழ்நாளைக் கழித்துவிடுகிறோம். இதில் உள்ள மறைந்திருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள சில விளக்கங்களைப் பார்ப்போமா?



இது என்னுடைய வீடு என்று சொல்லும்பொழுது, வீடு உடைமைப் பொருளாகவும், நான் அதன் உரிமையாளனாகவும் இருக்கிறேன். வேறு வகையில் சொன்னால் வீடு பார்க்கப்படும் பொருளாகவும், நான் பார்ப்பவனாகவும் இருக்கிறேன். இது என்னுடைய உடம்பு என்றால், அதன் உரிமையாளன் யார்? அதனைப் பார்ப்பவன் யார்?



ஒரு வீடு கட்டும்பொழுது, கல், மணல், சிமெண்ட், இரும்புக் கம்பி, மரம்  இப்படி பல பொருட்களை உபயோகித்து, முடிவில் அவை சுவராகவும், தளமாகவும், கூரையாகவும், கதவு, ஜன்னலாகவும்  மாறி விடுகின்றன. ஆனால், இவற்றில் எது அந்த வீட்டின் உரிமையாளனாக குடியிருக்கிறது? இவற்றிற்கு சம்பந்தம் இல்லாத யாரோ ஒருவர்தானே, அந்த வீட்டில் குடியிருக்கமுடியும்?



இந்த உடம்பும் தோல், சதை, எலும்பு, இரத்தம்  போன்று பல  பொருட்களால் உருவாக்கப்பட்டதென்றால், இவற்றில் எது இந்த உடலில் வசிக்க முடியும்? வேறு ஏதோ ஒன்றுதானே இந்த உடலில் வசிக்க முடியும்?



‘நான் யார்’ என்ற கேள்விக்கான  பதில் இங்குதான் ஆரம்பமாகிறது.




64. இந்த நானும், அந்த நானும்


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ‘நான்’கள் உள்ளன.


ஒன்று உண்மையான நான்; மற்றொன்று ‘நான்’ என்று நினைக்கின்ற நான்; உண்மையில் நானில்லை என்பதை  அறியாத நான்.



உண்மையை அறியாத நானிடம், உண்மையான நானைக் கண்டுபிடிக்க  ‘நான் யார்’ என்ற விசாரத்தில் (சிந்தனையில்) இறங்கு என்கிறார் பகவான் இரமண மகரிஷி.

ஆனால், வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதனால் முடிகிற காரியமா இது.



அந்த உண்மையான ‘நானை’ கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், இப்பொழுது நாம் எந்த வர்ணப் பிரிவில் இருக்கிறோம்; நமக்கான பாதை எது என்பதை அறிய வேண்டும்.



அவற்றை அறிவதற்கு முன்னால், அந்த முயற்சியில் ஈடுபட முடியாத அளவிற்கு நம்மைத் தடுக்கும் காரணி எது  என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்தக் காரணியை  அறிந்துகொண்டபின், அதனை  நீக்கத் தயாராக இருக்கிறோமா என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக இல்லையென்றால், நமது முயற்சி எந்தவித பலனையும் தராது.



"உடம்பு 'என்னுடையது' என்றால், 'நான்' உடம்பாக இருக்க முடியாதே"




65. பந்தம்

‘சொந்தபந்தம்’ மற்றும் ‘பந்தபாசம்’ என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘சொந்தபாசம்’ என்ற வார்த்தையை  எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா?



மனிதன் தனக்குப் பிறந்த குழந்தையிடம் அன்பு வைப்பதோடு அதனுடன் பற்றும் கொண்டுவிடுகிறான். அதன்பின் அவனுக்கு அந்த குழந்தையின் மீது இருப்பது அன்பு அல்ல, ஆசை.


அதே மனிதன் தனது வீட்டிற்கு காவலாக (தேவையென எண்ணி) ஒரு நாயை வளர்க்கிறான். எங்கிருந்தோ வாங்கியது. இருந்தாலும் நாளாக, நாளாக அவனுக்கு அதன்மேல் பற்று வந்துவிடுகிறது. அதன்பின் அவனுக்கு அந்த நாயிடம் இருப்பது ஆசையாக மாறிவிடுகிறது.


இந்தப் பற்றுதான், முதலில் ஆசையாகவும் பின்னர் அதுவே உயிருள்ள ஜீவனாக இருந்தால் பாசமாகவும், பொருளாக இருந்தால்   பேராசையாகவும், பெண்ணாக இருந்தால்  காமமாகவும்  மாறி விடுகிறது.


இதனைத்தான் பந்தம் என்று சொல்கிறார்கள் (இதனையே கட்டு என்றும், தளை என்றும் சொல்வதுண்டு).

ஞான மார்க்கத்தின் வெற்றியே, இந்த பந்தத்திலிருந்து விடுபடுவதில்தான் இருக்கிறது.


வரைபடத்தைப் பாருங்கள் - -



அன்பும், தேவையும் இயற்கையானவை. ஆனால் அவற்றோடு பற்று கலந்தவுடன் ஆசை உருவாகிறது. அந்த ஆசை, பற்றை மேலும் வலுப்படுத்துகிறது. அவ்வாறு வலுப்பெற்ற பற்று, பாசமாகவோ, பேராசையாகவோ, காமமாகவோ வெளிப்படுகிறது


ஆக, மனிதனிடம் உள்ள பந்தத்திற்கு மூலகாரணமாக இருப்பது இந்த பற்றுதான். ஞானமார்க்கத்திற்குத் தடையாக இருப்பதும் இந்த பற்றுதான்.
  
   “...பாசவினைகள் பற்றது நீங்கி”          - -    கந்தசஷ்டி கவசம்.
 (பற்றது நீக்கி .. என்று சொல்லவிலலை)

   “... அப்பற்றை பற்றுக பற்று விடற்கு”    - -    திருக்குறள்
(பற்றை விடற்கு .. என்று சொல்லவில்லை)

   “ஆசைவலைப்  பாசத் தகப்பட்டு மாயாமல்....” – பத்திரகிரியார்





66. நாமும், நமக்கான பாதையும்

ஞானம் பெறுவதற்கு நான்கு முக்கிய வழிகள் உள்ளன என்று ஏற்கனவே பார்த்தோம்.


இவற்றில் ஒரு வழி நமக்குரிய பாதையாக இருக்கவேண்டும். அது நமது வர்ணப்பிரிவிற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும். வேறு பாதைகளைப் பயன்படுத்த விரும்பினால், அது நடைமுறை வாழ்க்கைக்கு உதவி செய்வதாக இருக்கவேண்டும்.



உதாரணத்திற்கு ஒரு மருத்துவரை எடுத்துக்கொள்வோம். தனக்கு வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை; ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்படுகிறார். பொதுநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அவரை ஒரு க்ஷத்திரியன் என்றுதான் அழைக்கவேண்டும். ஆனால், மத நம்பிக்கை உள்ளவராக இருந்து, மாதத்தில் பத்து நாட்கள், ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தால் அவரது க்ஷத்ரிய தர்மம் என்னாவது? அவர் கடைப்பிடிக்கும் பக்தி மார்க்கம், அவரது க்ஷத்ரிய தர்மத்திற்கு உதவியாக இருக்கவேண்டாமா?



நமது வர்ணப்பிரிவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற பாதையில் பயணத்தை தொடங்குகிறோம் என்றாலும், அந்தப் பாதையின் அடிப்படை விதியினைத் தெரிந்துகொள்ளவேண்டும். 

அவை - -

“அறிந்து வருவது     ஞான மார்க்கம்

அறியாமல் வருவது  பக்தி மார்க்கம்

அடிபட்டு வருவது    கர்ம மார்க்கம்

கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்”





67. மார்க்கமும், யோகமும்

ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் என்றும் சொல்வார்கள்; ஞான யோகம், கர்ம யோகம் என்றும் சொல்வார்கள். ஏன் இந்த வித்தியாசம்?



மார்க்கம் என்பது நாம் பயணம் செய்யும் பாதையைக் குறிக்கிறது; பாதையின் முடிவில் எல்லைக்கோட்டை அடைந்தால்,  மார்க்கம் யோகத்தில் முடிகிறது என்றும் சொல்லலாம். யோகம் என்ற வார்த்தைக்கு இணைதல் (இறைவனோடு, பிரம்மத்தோடு) என்றும் சொல்வதுண்டு.



மார்க்கம் என்பது சரியான பாதையாக இருந்து, நாமும் சரியான முறையில் நமது பயணத்தைத் தொடர்ந்தால், நாம் யோகத்தின் வழியில் இருக்கிறோம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.



ஒவ்வொரு மார்க்கத்திற்கும் வேறுவேறு நெறிமுறைகள் இருக்கின்றன; அவற்றில் சில கடைப்பிடிக்க மிகவும் எளிதானவைதான். இருந்தாலும் அவற்றை சரியாகக்  கடைப்பிடிக்காதவரையில் மார்க்கம் யோகமாக இருக்க முடியாது.

ஒவ்வொரு மார்க்கமாக பார்ப்போம்.




68. பக்தி மார்க்கம்

"அறியாமல் வருவது பக்தி மார்க்கம்"

இருக்கும் எல்லா மார்க்கங்களிலும் மிகவும் எளிதானது பக்தி மார்க்கம்தான். பெருவாரியான மக்கள் கடைப்பிடிக்கும் மார்க்கமும் இதுவே.


நான் பக்தி மார்க்கத்தை ஒழுங்காக கடைப்பிடிக்கிறேன். நாள் தவறாமல் கோவிலுக்கு சென்று வருகிறேன். 
தவறாமல் விரதங்கள், அனுஸ்டானங்கள் எல்லாவற்றையும் கடைப்பிடிக்கிறேன். அப்படியானால் நான் பக்தி யோகத்தில்தானே இருக்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் இதுவே பக்தி யோகத்தில் இருக்கிறேன் என்று சொல்வதற்கு போதுமானதாகுமா?


பக்தி மார்க்கத்தில் ஈடுபடும் மக்களில் பெரும்பாலோர் மனதில் அமைதி இல்லாமல் உழன்று வருவதற்கு என்ன காரணம்? பக்தி மார்க்கத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தும், அவர்களால் பற்று என்னும் தளையிலிருந்து ஏன்  விடுபடமுடியவில்லை?

“பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”.                - -    திருவள்ளுவர்

பற்றின் காரணமாக வரும் ஆசாபாசங்களை விடுவதற்கு, கடவுளின் திருவடியைப் பற்றி பக்தி செய்யவேண்டும் என்கிறார்கள்.


மீண்டும் ஒருமுறை திருக்குறளைப் பாருங்கள். அதில் “பற்று விடற்கு” என்றுதான் வருகிறது; “பற்றை விடற்கு” என்று வரவில்லை. அதாவது பற்றை நாம் துறக்க முடியாது; ஆனால் கடவுளின் திருவடியைப் பற்றினால், பற்று நம்மை விட்டுவிடும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.



அதே நேரம், திருமூலர் சொல்வது வேறாக இருக்கிறது. அவர் சொல்வது -

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

 ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
                  
                 ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
                 
                 ஆசை விடவிட ஆனந்த மாமே”.

பற்றின் காரணமாக வரும் ஆசாபாசங்களிலிருந்து விடுபடுவதற்கு, இறைவனின் திருவடியைப் பற்றினால், அதுவும் ஆசையாக மாறிவிடுமே என்கிறார் திருமூலர். 

ஆசை இல்லாத மனதில்தான் அமைதியும் அதனைத் தொடர்ந்து ஆனந்தமும் கிடைக்கும் என்கிறார்.



இந்தப் புதிருக்கான விடையை, ரிஷி பதஞ்சலி தருகிறார். அதற்கு அவர் தரும் மந்திரம் “ஈஷ்வர ப்ரணிதானாத்”. அதாவது கடவுளிடம் சரணடைவதன் மூலம் என்கிறார்.



நினைத்துப் பாருங்கள், நாம் கடவுளிடம் எதை எதையோ வேண்டுகிறோம்; ஆனால் கடவுளிடம் சரணடைகிறோமா?

சரணடைவது என்றால் என்ன? அவர் எதைத் தந்தாலும் அதனை அவரிடம் இருந்து வரும் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தர வேண்டும் என்று மட்டும் வேண்டினால், அதுவே உண்மையான  சரணாகதி ஆகும்.

சரணாகதி ஒன்றே பக்தி மார்க்கம் முழுமை அடைய உதவும்.





69. கர்ம மார்க்கம்

"அடிபட்டு வருவது கர்ம மார்க்கம்"

க்ஷத்ரியன், அதாவது பொது நலனில் அக்கறை உள்ள மனிதன் மட்டுமே 
கர்ம மார்க்கத்தில் (பலனை எதிர்பார்க்காமல்) ஈடுபடமுடியும்.


பொது நலனில் அக்கறை உள்ள மனிதன் சமூகத்தில் செயல்படும் பொழுது, அவனுக்கு பலவிதமான சோதனைகள் வர வாய்ப்புண்டு. அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு வழிகாட்டியின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும்.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”       - - திருவள்ளுவர்


செயல், அந்த செயல்  புறவுலகில் ஏற்படுத்தும்  விளைவு, அதனால் ஏற்படும் விரும்பத்தகாத பின்விளைவு இவற்றின் காரணமாக அவன்  வெளியில் ஓடும் மனதை உள்முகமாகத் திருப்பி, அகத்தாய்வில் ஈடுபட வேண்டிவரும்.



 விளைவு, பின்விளைவு, மனதை உள்முகமாகத் திருப்புதல், அகத்தாய்வு  போன்ற காரியங்கள் ஒரு தொடர் சங்கிலியாக வந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் அவனுக்குக் கண்டிப்பாக ஒரு நல்ல வழிகாட்டியின் உதவி தேவைப்படும்.


“உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்”  என்கிறார் திருவள்ளுவர்.





70. தியான மார்க்கம்


“கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்” .


நம்மைச் சுற்றி பல இடங்களில் ஆசனம், பிராணாயாமம்  மற்றும் தியான வகுப்புகள்  நடைபெறுவதை பார்க்கிறோம். ஆனாலும் நம்மால் உள்ளிருக்கும் மையத்தை ஏன் நெருங்கக்கூட முடியவில்லை?

ஆசனம், பிராணாயாமம் இரண்டுமே நமது உடலுக்கும், மனதிற்கும் நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் ஆழ்மனதில் உள்ள பதிவுகளைக் களைவதில் அவை எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.



தியானத்தைப் பொறுத்தவரை  அதனை ஒரு பயிற்சியாக செய்யமுடியாது; எந்தவித முயற்சியும் இன்றி ஏகாந்தமாக இருப்பதே தியானம் என்று சொல்லப்படுகிறது.
 இருந்தாலும், தியான வகுப்புகள் என்று சொல்வதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது.



“அம்மா, பசிக்கிறது” என்று பையன் சொன்னால், “கொஞ்சம் பொறு, இட்லி அவித்துத் தருகிறேன்” என்று அம்மா சொல்கிறாள். உண்மையில் அம்மா இட்லி அவிக்கிறாளா, அல்லது இட்லிக்காக மாவை அவிக்கிறாளா? மாவுதான் அவிக்கிறாள்; இருந்தாலும் முடிவில் அந்த மாவு இட்லி ஆகும் என்ற எண்ணத்திலேயே “இட்லி அவித்துத் தருகிறேன்” என்று கூறுகிறார். இது நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதைப்போன்று, தியான நிலையை அடைவதற்கான ஒரு பயிற்சியை தருவதைத்தான் ‘தியான வகுப்புகள்’ என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் பயிற்சியை ‘தாரணை’ என்று அழைத்தால் அதுவே சரியாக இருக்கும்.



இந்த மூன்று பயிற்சிகளும் ‘தியான’ நிலையை அடைவதற்கு முழுமையாக உதவ முடியாததற்கு என்ன காரணம்?



தியான மார்க்கத்தில் முழுமை அடைவதற்கு, ரிஷி பதஞ்சலி எட்டு படிநிலைகளை அமைத்திருக்கிறார். அவை, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு படிநிலைகள்.



இவை ஒவ்வொன்றாக கடக்கப்படவேண்டியவை. சத்துவ குணம் நிறைந்த மனிதன்  மட்டுமே   நேரடியாக   ‘தாரணை’   நிலைக்குப் போகமுடியும். 
ஏனெனில்   ‘பிரத்யாஹாரம்’      என்பது அவனுக்கு இயல்பான ஒன்று.



ஆசனத்தையும், பிராணாயாமத்தையும் பயிற்சி செய்கிறவர்கள் தியான நிலை வரைக்கும் போக எண்ணினால், அவர்கள் நிச்சயம்  யமம், நியமம் இரண்டையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும். 



யமம், நியமம் என்றால் என்ன என்பதை ஒரு குறள் அழகாக குறிப்பிடுகிறது.

     “செய்தக்க அல்ல செயக்கெடும் – செய்தக்க
      செய்யாமை யானும் கெடும்”.            - - திருவள்ளுவர்

இந்த இரண்டு கட்டளைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அந்த மனிதனால் தியான நிலையை அடைவது மிகவும் கடினம். அவனது பாதை, இலக்கை சென்று அடைய உதவாது.



எட்டு படிநிலைகளில் ஒன்றான  ‘பிரத்யாஹாரம்’ என்பது, வெளியில் ஓடும் மனதை அகத்தாய்வுக்காக உள்முகமாக திருப்புவதையே குறிக்கிறது.

முதல் இரண்டு கட்டளைகளான ‘யமம் மற்றும் நியமம்’ ஆகியவற்றை கடைப்பிடிக்க முடியாத மனிதனால், ‘பிரத்யாஹாரத்தை’ மேற்கொள்ள  முடியுமா?




71. ஞான மார்க்கம்


"அறிந்து வருவது ஞான மார்க்கம்"


  அறிவு பூர்வமாக ஞானம் அடைவதற்கு பல படிகள் தாண்டவேண்டி உள்ளது.


தெரிதல், அறிதல், புரிதல், தெளிதல், தெள்ளத் தெளிதல், உணர்தல் எனப் பல  நிலைகளைத் தாண்டவேண்டி உள்ளது.



தெரிந்து கொள்வது என்பது எல்லோராலும் முடிவதுதான்.



ஆனால் தெரிந்த விஷயங்களைப்  பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கு, வெறும் அறிவு மட்டும் போதாது.
விஷயங்களைப் பற்றிய உண்மைகளை பகுத்து அறிய தெரிந்திருக்க வேண்டும். அதற்கான விவேகம் இல்லையென்றால் நாம் அறிவது சரியாக இருக்காது. விவேகம் உள்ள மனிதனும், உணர்ச்சி வசப்படுகிறவனாக இருந்தால், அவனது விவேகம் சரியான முறையில் செயல்பட முடியாது.



அறிந்துகொண்ட உண்மைகளை நடைமுறைப் படுத்தும் பொழுதுதான், அதனால் ஏற்படும் அனுபவங்களின் மூலமாக நமக்கு முறையான புரிதல் ஏற்படும்.

அறிந்துகொண்ட விஷயங்களைப் புரிந்துகொண்டபின், மேலும் மேலும்  கிடைக்கும் அனுபவங்களின் மூலம் நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.



தெளிந்தால் மட்டும் போதாது; தெள்ளத் தெளிய வேண்டும் என்கிறார் திருமூலர். தெள்ளத் தெளிந்தால் மட்டுமே ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை தெரியவரும் என்கிறார்.

“.....தெள்ளத் தெளிந்தாற்கு சீவன் சிவலிங்கம்”           - -        திருமூலர்.

அதாவது, ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை விளங்கும் என்கிறார். இதுவே உணர்தல் எனப்படுகிறது.



ஜீவாத்மாவைப் பற்றிய உண்மைகளை அறிவையும், விவேகமான சிந்தனையைக்கொண்டும் புரிந்து தெளிய முடியும். ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகள்  (நல்வினைப் பதிவுகளாக இருந்தாலும், தீவினைப் பதிவுகளாக இருந்தாலும்) இருக்கும்வரை ஞானம் பெறுவது என்பது முடியாத காரியம்.

ஆழ்மனதில் உள்ள அனைத்து பதிவுகளையும்  நீக்கினால் மட்டுமே, ஞானம் கைகூடும். அதுவரை ஞானத்தைப் பற்றிய புரரிதல் மட்டுமே இருக்கும்.



ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்க, நாம் என்னன்ன செய்யவேண்டும் என்று கீதை நெடுகிலும் நிறைய குறிப்புகள் உள்ளன.

இருந்தாலும் நாம் எந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்ந்தால் அந்த இலக்கை அடையலாம், முடிவான இலக்கு எப்போது, எப்படி அடையப்படும் என்று ரிஷி பதஞ்சலி விரிவாக எடுத்துரைக்கிறார்.

அதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.



72. ஞான மார்க்கம் – பாதை 1


"இனி வரும் அத்தியாயங்களில், ரிஷி பதஞ்சலி யோக சூத்திரங்களில் கூறப்படும் சமாதி நிலைகளை எளிமையாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்."


ஞான மார்க்கத்தில் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது, ஆழ்மனதில் உள்ள பதிவுகளே. ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகளுக்குக் காரணமாக இருப்பது நமது உணர்வு மனமே.

 எனவே, சுத்திகரிப்பு வேலையை முதலில் உணர்வு மனதிலிருந்தே தொடங்கவேண்டும் என்கிறார் ரிஷி பதஞ்சலி.

உணர்வு மனதில் உள்ளவை வெறும்  எண்ணங்கள் மட்டுமே. அவை நமக்கு  ஏற்படும் அனுபவங்களால் மட்டும் பெறப்பட்டவை அல்ல. நம்மை சுற்றி இருப்பவர்களால்  – நமது பெற்றோர் முதற்கொண்டு நண்பர்கள் வரை – நமக்குள் திணித்து வைத்தவைகளும் சேர்ந்தே இருக்கும். அத்துடன், அவற்றில் பலவும் நமது உணர்ச்சிகளைத் தூண்டுபவையாகவே இருக்கும்.

மனதில் உணர்ச்சிகள் அதிகரிக்க அதிகரிக்க, நாம் உணர்வு மனதுடன் ஒன்றிவிடுகிறோம். அதன்பின், உணர்வு மனம் நமக்கு எஜமானனாக மாறிவிடுகிறது. அதனால்தான், நாம் எதிர்கொள்ளும் தாக்கங்களுக்கு உடனுக்குடன், சற்றும் சிந்திக்காமல், மனமே  எதிர்விளைவை உண்டுபண்ணுகிறது


ஒரு மனிதன் அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், உணர்ச்சிவசப் படுகிறவனாக இருந்தால், அவனது மனம் புத்தியை கலந்து கொள்ளாமல்  தன்னிச்சையாக   முடிவு எடுத்து, தானே ஒரு பின்விளைவை  ஏற்படுத்தி விடுகிறது.

எனவே, முதலில் உணர்வு மனதில்  பதிவாகியுள்ள எண்ணங்களில் உள்ள  அசுத்தங்களை நீக்க  நாம் “சவிதர்க்க சமாதியை” கடைப்பிடிக்கவேண்டும் என்கிறார்.



“சவிதர்க்க” என்பதை பிரித்து, ‘தர்க்க’, ‘விதர்க்க’ மற்றும் ‘சவிதர்க்க’ என ஒவ்வொன்றாக அவற்றின்  பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.


இதில், ‘தர்க்க’ என்பது விவாதத்தைக் குறிக்கிறது. விவாதம் என்பது பல நேரங்களில் பலருடன் பல்வேறு காரனங்களுக்காக ஏற்படுகிறது. ஆனால், அது ‘விதர்க்கமாக’ இருக்கவேண்டும் என்கிறார்.

தர்க்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று குதர்க்கம்; மற்றொன்று விதர்க்கம்.



மக்கள் ‘தான்’ என்ற உணர்வோடும், உணர்ச்சி மிகுந்தும்  விவாதத்தில் கலந்து கொண்டால், பெரும்பாலும் அது ‘குதர்க்கத்தில்’ தான் முடியும். அத்தகைய விவாதத்தில்  ஒரு நியாயமான முடிவுக்கு வருவது மிக கடினம்.



‘விதர்க்கம்’ என்று சொல்லும்பொழுது,  விவாதத்தில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் ஒரு ஒத்திசைவு இருக்கும். அவர்கள் விவாதத்தின் கருப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவேண்டும் என்பதில், எல்லோருக்குமிடையே ஒரு உடன்பாட்டுத்தன்மை இருக்கும்.



விதர்க்கத்தில் கருப்பொருள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால், ‘சவிதர்க்கம்’ என்று வரும்பொழுது, அதிலிருந்து தனது குணத்தின் பண்புகளை எப்படி உயர்த்திக் கொள்வது என்பது மட்டுமே ஒரு மனிதனின் நோக்கமாக இருக்கவேண்டும்.



ஆக, சவிதர்க்கத்திற்கு உதவியாக இருப்பது நண்பர்களாக இருக்கலாம்; சத்சங்கமாக இருக்கலாம்; ஏன், ஒரு புத்தகமாக கூட இருக்கலாம். ஆனால் நோக்கம்  என்பது ஒன்றே ஒன்றுதான்; தனது குணத்தின் பண்புகளை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதுதான் அது.


‘சவிதர்க்க சமாதி’ பாதை என்றால், அது போய்ச்சேரும் இடத்தை  ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார். அந்த இடத்தை அடைந்துவிட்டோம் என்பதை அறிந்துகொள்வதற்கு சில குறிப்புகளை தெரிந்துகொள்வோம்- -
 
     உணர்வு மனதிலிருந்து அஹங்காரம் குறையத் தொடங்கும்.

     வெளியில் ஓடி புறவுலகில் இருக்கும் ஆரவாரம், பரபரப்பு இவற்றை இரசிப்பதிலிருந்து உணர்வு மனம் விலக ஆரம்பிக்கும். 

     உணர்ச்சிகளை அடக்கிவைப்பதற்கு பதிலாக, உணர்ச்சிகள் அடங்க                ஆரம்பிக்கும்.
   
     உணர்ச்சிகள் அடங்குவதன் காரணமாக, உணர்வு மனம்                         தன்னிச்சையாக முடிவெடுக்காமல் புத்தியைக் கலந்து                    செயல்பட ஆரம்பிக்கும்.

     உணர்ச்சியின் காரணமாக  எதிர்விளைவுகள் குறைய                      ஆரம்பிக்கும்.

     நான் என்பது மனமல்ல என்ற உண்மை புரிய ஆரம்பிக்கிறது; அதன் காரணமாக மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறோம்.

    விவேகம் மிகுந்து காணப்படுவதால் பற்றற்ற தன்மை (வைராக்கியம்) வளர ஆரம்பிக்கும்.

    உணர்வு மனதில் உள்ள அசுத்த எண்ணங்களை வெளிப்படுத்தக்                  கூடிய  பதிவுகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.

  ஜீவாத்மாவைப் பற்றிய உணர்வே இல்லாதிருந்த மனிதன், ஆன்மாவைப்     பற்றி சிந்திக்கத் தொடங்குகிறான்           .

     பகுத்தறியும் தன்மையில் தெளிவான பார்வை கிடைக்கும்.

வரைபடத்தைப் பாருங்கள்:-

வரை படத்தில் உள்ள ‘சவிதர்க்க சமாதி’ என்பது ஞானமார்க்கத்தில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பாதையைக் குறிக்கிறது.

அந்தப் பாதையில் மனிதன் முறையாகப் பயணம் செய்தால், அவன் சென்று அடையும் இடம் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார்.

யதார்த்த உலகில் வாழும் மனிதனுக்கு ‘சவிதர்க்க சமாதியில்’ ஈடுபட நேரம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். சவிதர்க்க சமாதியில் ஈடுபட நேரம் இருந்தாலும், அதில் ஈடுபடும் மனிதனுக்கு புத்தி மற்றும் பகுத்தறியும் தன்மை முழுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

மற்றவர்களுக்கு ஞானம் பற்றிய மெய்ப்பொருளை அடையவேண்டும் என்கின்ற ஆர்வம் தீவிரமாக இருந்தால், தகுந்த சான்றோரை நாடித் தெரிந்துகொள்ள வேண்டும்.

 ஏனெனில், பல நேரங்களில் நாம் யாரை நாடிச் செல்கிறோமோ, அவருக்கு  அதற்குரிய தகுதி இல்லாதிருக்கலாம். அதனால், அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல், நமக்கு நிறையப் பாடம் எடுப்பார்கள்.


‘குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவீழு மாறே”             - - திருமூலர்



சம்பிரஞ்ஞாத சமாதி நிலையை அடைந்த மனிதனுக்கு நிறையவே குழப்பங்கள் வரும். ஏனெனில், அவனது உணர்வு, உணர்வுமனதிலிருந்து நகர ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் ஆன்மாவைப் பற்றிய முழுமையான தெளிவு இல்லாததால் அவனுக்குப் பல இடத்திலிருந்தும் நெருக்கடிகள் வரும். தனது பயணத்தின்  அடுத்தடுத்த பாதைகளை அவன் தைரியமாக  தொடரவேண்டும். இல்லையேல் நிலைகுலைந்து போகும் வாய்ப்பு உண்டு.
தன்மீதும், தனது முயற்சிகளின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு பயணத்தைத் தொடரவேண்டும்.


“தானே தனக்குப் பகைவனும் நட்டானும்;

தானே தனக்கு மறுமையும் இம்மையும்;

தானே  தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்;

தானே தனக்கு தலைவனும் ஆமே”             - - திருமூலர்


இதற்கு, அறத்தின் இயல்பை அறிந்து சிறந்த அறிவுடையவரது உறவைத் தேடி தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.


“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்”.                - - திருவள்ளுவர்






 73. ஞான மார்க்கம் – பாதை 2

மனிதன் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ நிலையை அடையும்பொழுது, அவனது மனம்  புத்தியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துகொள்ள ஆரம்பிக்கிறது.

 அத்துடன் அவனது அஹங்காரம் குறையக்  குறைய, அவன் புறவுலகின் யதார்த்த நிலைகளைப் புரிந்துகொண்டு அதனுடன் இசைவாகவும், இணக்கமாகவும்  நடந்துகொள்ள ஆரம்பிக்கிறான்.

ஒவ்வொரு நிகழ்வுகளையும் பகுத்தறிவின்  துணையுடன் தர்க்கம் செய்வதிலிருந்து விலக ஆரம்பித்துவிடுகிறான். 

 எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்வதை விட்டுவிடுவதால், அவனது மனதில் உணர்ச்சிகள் பொங்கிப் பெருகுவது நின்றுவிடுகிறது. மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும்  குறைய ஆரம்பிக்கிறது.

சவிதர்க்க சமாதியின் காரணமாக, அவனுக்குள் வாழ்வியல் உண்மைகளைப் பற்றிய தெளிவு கிடைக்கிறது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக சவிதர்க்க சமாதியிலிருந்து விடுபட்டு, ‘நிர்விதர்க்க சமாதியில்’ நுழைந்துவிடுகிறான்.

‘நிர்விதர்க்க சமாதியில்’ தர்க்கம் நின்றுவிடுகிறது. அகத்தாய்வில் கவனம் செலுத்துகிறான். 

ஆனாலும், அந்த அகத்தாய்வு அவன் மனதில் சேகரித்து வைத்திருக்கும் எண்ணங்களின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த எண்ணங்களோ பல பேரிடம் இருந்து வாங்கியவைகள்; அவற்றில் அவர்களது சொந்தக் கருத்துகளும் இடம் பெற்றிருக்கும். 

கடன்வாங்கிய எண்ணங்களாக இருந்தாலும், புறவுலகில் செயல்படுவது குறைந்து, அகத்தாய்வில் நாட்டம் அதிகமாவதால்  நாளடைவில் அவனது மனம், அவனையும் அறியாமலே புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது.


 மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதால், அதனை ‘ஒருங்கிணைந்த மனம்’ என்றும் சொல்லலாம்.

சுத்தமான எண்ணங்களால் அவனது மனம் நிரம்பி இருந்தாலும், புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அதனால் தன்னிச்சையாக இயங்க முடியாது. 

அது பதிவுகள் இருந்தும் இல்லாதது போல ஆகிவிடுகிறது. மனம் புத்தியுடன் தன்னை இணைத்து கொள்ளும் நிலையில் அது ‘அசம்பிரஞ்ஞாத சமாதி’ என்று அழைக்கப்படுகிறது.


வரைபடத்தைப் பாருங்கள்:-



இந்த நிலையிலும், அவனது மனம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு குழப்பத்தில் இருக்கும். மனதில் ஏற்படும் குழப்பங்களையும், வேதனைகளையும் தாங்கிக்கொள்ள அவன் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் அவனால் அடுத்த பாதைக்குள் நுழைய முடியும்.



74. ஞான மார்க்கம் – பாதை 3

‘அசம்பிரஞ்ஞாத சமாதி’  அடைந்த மனிதனின் மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. அவனது உணர்வு மனதில் சுத்தமான எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.

 என்றாலும், ஒருவகையில் அவை அசுத்தமான எண்ணங்களே. ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை மற்றவர்களிடமிருந்து இரவலாகப் பெற்றவை.


‘அசம்பிரஞ்ஞாத சமாதி’  நிலையை அடைந்த மனிதனுக்கு ஒரு தவிர்க்க முடியாத குழப்பம் வரும். அதுவரை அவனது உணர்வு மனம் தன்னிச்சையாக முடிவு எடுத்தது. அத்துடன் அது எடுக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை  ஆழ்மனதால் தூபம் போடப்பட்டதாக இருக்கும்.


இப்பொழுதோ அது புத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஆழ்மனதில் இருந்து வரும் ஆலோசனைகளை அதனால் நிறைவேற்ற முடியாது; ஏனெனில் புத்தியிலிருந்து வரும் ஆலோசனைகள் வேறுவிதமாக இருக்கும்.


ஒரு இரண்டும்கெட்டான் நிலையில் இருக்கின்ற காரணத்தால், மனதில் குழப்பங்கள் உருவாகும். மேலும், அவனது மனமும் செயல்படும்  நிலையிலிருந்து செயல்பட விரும்பாத தன்மைக்கு மாறிக்கொண்டிருக்கும்.


செயல்பட விரும்பாத தன்மையில், மனம் அமைதியாக இருக்கும்பொழுது, அந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்தி மனிதன் ‘சவிசார சமாதி’ என்னும் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கவேண்டும்.


‘விசாரம்’ என்பது சிந்தனையைக் குறிக்கிறது. இந்த சிந்தனை ஆராய்ச்சி செய்யும் பாவனையுடன் இருக்கவேண்டும். மேலும் இந்த சிந்தனையில் எந்த விதமான உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.



உணர்வு மனம் முன்னால்  செய்த சிந்தனைகளுக்கும், இப்பொழுது  மேற்கொள்ளவிருக்கும் சிந்தனைகளுக்கும் வித்தியாசம் உண்டு.



முன்பு நாம் உணர்வு மனதில் சேகரித்து வைத்திருந்த எண்ணங்களின் அடிப்படையில் நமது சிந்தனை இருந்தது. அந்த எண்ணங்கள் நம்முடையதாகவும் இருக்கலாம்; பிறரிடமிருந்து வாங்கியவையாகவும் இருக்கலாம்.


இப்பொழுது செய்யப்படும் சிந்தனையோ  நமக்குள்ளேயே வாழ்வியல் புதிர்களுக்கு விடை தேடும் விதமாக இருக்கும். உணர்வு மனதில் இருந்த சலனங்கள் பெருமளவில் குறைந்திருப்பதால், நம்மால் தெளிவாக சிந்திக்க முடிகிறது.


நம்மால் தெளிவான முடிவிற்கு வரமுடியாத போது, சான்றோரிடமோ அல்லது சத் சங்கங்களில் கலந்தோ தெளிவு பெற முடிகிறது.


விசாரத்தில் நமது சிந்தனைக்குத் தேவையான கருப்பொருள் புறவுலகில் இருந்து மட்டுமல்ல, ஆழ்மனதில் இருந்தும்  பெறப்படுகிறது. 


விசாரத்தில் தெளிவு கூடக்கூட, அதுவே ‘சவிசாரமாக’ மாறிவிடுகிறது. அதாவது ஆழ்மனதில் உள்ள அசுத்தமான பதிவுகளும் ஒவ்வொன்றாக வெளியேறிவிடுகிறது. சுத்தமான பதிவுகள் மட்டுமே அதில் உள்ளன.


‘சவிசார சமாதி’ எனும் பாதையில் பயணம் செய்தால், பாதையின் முடிவில் அவன் அடையும் இடம் ‘சபீஜ சமாதி’.

வரைபடத்தைப் பாருங்கள்:-



‘சபீஜ சமாதி’ நிலையை அடைந்த மனிதனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) பெருமளவில் குறைந்துவிடுகிறது. “தான்” என்கிற உணர்வு மறைந்து “தன்னைப்” பற்றிய நினைவு மட்டும் இருக்கிறது.



75. ஞான மார்க்கம் – பாதை 4

‘சபீஜ சமாதி’ நிலையில் மனிதனுக்கு இன்னமும் சிந்தனை புறவுலகப் பொருட்கள், அவற்றால் ஆழ்மனதில் ஏற்படும்  அனுபவங்கள் இவற்றை நோக்கியே இருக்கும். 


மெய்ப்பொருள் பற்றிய உண்மையை அறிந்திருந்தாலும், அவனால் சிந்தனையிலிருந்து விடுபட முடிவதில்லை.


‘நிர்விசார சமாதியின்’ பாதையில்  அவன் பயணத்தை ஆரம்பித்தவுடன், சிந்தனை இல்லாமல் பொருட்களைப் பார்க்கக் கற்றுக் கொள்கிறான். புலன்களின் உதவியின்றி அறிந்துகொள்ளும் திறனில் அவன்  மேன்மை அடைகிறான்.


வாழ்க்கையில் அவன் செயல் புரிந்தாலும், செயல் புரியாவிட்டாலும் அனைத்தையும் சாட்சி பாவத்துடன்   பார்க்க ஆரம்பிக்கிறான்.

சாட்சி பாவத்திற்கு வந்தவுடன், அவனுக்கு தியான நிலை இயல்பாகவே கைகூடிவரும். மனதில் எந்த எண்ணமும் இல்லாமல், அவனால் தியானத்தில் இருக்கமுடிகிறது.

“எண்ணமில்லாத நிலையே உண்மையான தியானம்”
(Meditationless meditation is the Real Meditation ... Swami Chinmayanandha)

எண்ணம் பற்றிய எண்ணமும் இல்லாத நிலையில், அவன்  ‘நிர்பீஜ சமாதி’ என்ற இலக்கை வந்தடைகிறான்.

பேரண்டத்துடன் அவனுக்கு ஓர் ஒத்திசைவு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு பேருண்மையும்  அவனுக்குப் புரிகிறது.   அது - - -

“இது இல்லாத போது, அது இருக்கிறது”        
               

வரைபடத்தைப் பாருங்கள்:-




‘நிர்பீஜ சமாதி’ நிலையை அடைந்தவுடன், உள்ளிருந்து வரும் இறையருளை  உணரத்தொடங்குகிறான்.



76. விழிப்புணர்வு

நாம்  பார்ப்பது எதுவாக இருந்தாலும், அது பொருளாக இருக்கும்; அல்லது பொருளில் இருந்து வந்ததாக இருக்கும்,

‘இருட்டு’ என்பது பொருளா அல்லது பொருளிலிருந்து வந்ததா? இரண்டுமே இல்லை.

மாலை நேரம் வந்ததும் கிழக்கிலிருந்து மேற்காக இருட்டு பரவுகிறது. ஆனால் நமது வீட்டில், விளக்கு எரிந்துகொண்டிருந்தால், அந்த இருட்டு நமது வீட்டிற்குள் வருவதில்லை. நமது வீட்டை கடந்து சென்றாலும்கூட, அதனால் நம் வீட்டிற்குள் நுழைய முடிவதில்லை. 

நாம் ‘இருட்டு’ என்று நடைமுறை பழக்கத்தில் சொல்வதாக இருந்தாலும், உண்மையில் அது வெளிச்சத்தின் இல்லாமையே.




ஒரு மனிதன் ஞான நிலை அடையும்பொழுது, அதனை ‘விழிப்புணர்வு’ (வித்யா) என்று சொல்வார்கள்.

விழிப்புணர்வு இல்லாதபோது, அதனை விழிப்புணர்வின்மை (அவித்யா) என்று சொல்வார்கள்.



நாம் உபயோகிக்கும் பல பொருட்கள், உடல்நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் நாம் அவற்றை ஏன் உபயோகிக்கிறோம்? உடல்நலத்திற்கு கேடு என்ற உண்மை தெரிந்தும், அவற்றை உபயோகிப்பதைத்தான் விழிப்புணர்வின்மை என்கிறோம்.


“எல்லாம் அவன் செயல்” என்று நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொண்டால், அது விழிப்புணர்வுதான். நாம் விரும்பாத ஒன்று நடக்கும்பொழுது, நாம் வருந்துகிறோமே; அதற்கு என்ன பெயர்?



77. பலூனும், புல்லாங்குழலும்

ஞானம் பெறுவது முதல்படி என்றால், விழிப்புணர்வு ஞானத்தின் பாதையில் கடைசிப்படி என்று சொல்லலாம்.


விழிப்புணர்வு பற்றி அறிந்துகொண்டவர்கள், உண்மையிலேயே விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார்களா  என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?



பலூன், புல்லாங்குழல் இரண்டுமே காற்றில் இயங்குவதுதான். ஆனாலும், அவற்றிற்கிடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

பலூனில் காற்று அடைக்கப்பட்டால், அது தன் விருப்பம்போல் பறக்க ஆரம்பித்துவிடும். ஒரு நூலில் அதை இணைத்தாலும், அந்த நூலையும் சேர்த்து இழுத்துக்கொண்டு பறக்கும்.

புல்லாங்குழலும்  காற்றில் இயங்குவதுதான். இருந்தாலும் அது தன்னிச்சையாக வாசிப்பதில்லை. அதற்கு, அதனை எடுத்து வாசிப்பதற்கு, வேறு ஒருவர் வேண்டும்.



நாம் பலூனாக இருக்கிறோமா அல்லது புல்லாங்குழாக இருக்கிறோமோ? புல்லாங்குழலாக இருக்கிறோம் என்றால், நாம் நம்மை அவன் கையில் ஒப்படைத்துவிடவேண்டும். நாம் கருவி, அவன் இசைப்பவன் என்றாகிவிடவேண்டும்.


நம்மை இசைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது அவனது விருப்பம். 
கருவியே வேண்டாம் என்று நினைத்தாலும், அதுவும் அவனது  விருப்பமே. 
பலூனாக இருக்கும் நாம், எப்பொழுது புல்லாங்குழலாக மாறுகிறோமோ, அன்றுதான் விழிப்புணர்வு என்றால் என்னவென்றும், அதனால் வரும் ஆனந்தத்தையும் புரிந்துகொள்வோம்.




78

நன்றியுரை

இதுவரை இதனுடன் பயணித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இந்திய வேதங்கள் ஒரு மாபெரும் பாற்கடல். வேதவியாசர் அருளிய பகவத்கீதையோ ஒரு அமுதக் கலசம்.

அதில் நான் பருகியது ஒரு துளி மட்டுமே; ஆனால் அந்த ஒரு துளியே என் வாழ்க்கையை மாற்றுவதற்கு போதுமானதாக இருந்தது.
அதனைச் சுவைக்கக் கற்றுத் தந்தவர் ‘ஸ்வாமி சின்மயானந்தா’ அவர்களே.

எந்த மழலையும் தான் புதிதாக கற்றுக் கொண்டதை மற்றவர்களிடம் சொல்லிக்காட்டத் துடிக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது, அதற்கே உரிய கூச்சத்துடன், தனக்குத் தெரிந்ததை சொல்லிக்காட்டும். அந்த மழழையின் கூற்றில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், நாம் அவற்றைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவோம்.

இவனது குழந்தைத்தனமான கூற்றிலும் பல குறைகள் இருக்கலாம்; இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள். ஏனெனில்,
இது ஒரு “மழலையின் கீதை”

                                           நன்றியுடன்,

                                           A. Packiam