நிம்மதியின்மை
‘எல்லாம் இருந்தும், மனதில் நிம்மதி மட்டும் இல்லை’ என்ற எண்ணம், வயதான காலத்தில் பலருக்கும் வருவதைக் காண முடிகிறது.
இதற்கான தீர்வுதான் என்ன?
‘ஞான மார்க்கத்தில்’ பயணிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்காது.
‘கர்ம மார்க்கத்தில்’ செயல்படுபவர்கள் கூட இதைப்பற்றி அதிகமாகக் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் பிறருக்காகத் தங்களை வருத்திக் கொள்பவர்கள். எனவே, தன்னைப் பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.
ஆனால், நம்மில் பெரும்பாலோர் ‘பக்தி மார்க்கத்தை’ கடைப்பிடித்து வாழ்பவர்கள். தவறாமல் தினந்தோறும் கடவுளை வழிபடுகிறவர்கள். இருப்பினும், குறிப்பாக வயதான காலத்தில், மனதில் நிம்மதியின்றிப் புலம்பித் தவிக்கிறார்கள்.
அதற்கு... அந்த நிம்மதியற்ற தன்மைக்கு... அவர்கள்தான் காரணமா? அப்படியானால், அதற்கான காரணம் என்ன?
நான்கு வகையான பக்தர்கள்
“என்னை நான்கு வகையான மனிதர்கள் வழிபடுகிறார்கள்” என்று கிருஷ்ணன் கூறுகிறார்.
“சதுர்விதா பஜந்தே மாம்...”
— பகவத் கீதை 7.16
இதில் “என்னை” மற்றும் “வழிபடுகிறார்கள்” என்ற இரண்டு சொற்களையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
“என்னை” என்று சொல்லும்போது, அது கிருஷ்ணனை மட்டும் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நாம் எந்த உருவத்தை வழிபட்டாலும், அது நமக்குக் கடவுள்தான்.
“வழிபடுகிறார்கள்” என்றால், கோவிலுக்குச் சென்று வழிபடுகிறார்கள் என்று மட்டும் பொருள் கொள்ளக்கூடாது.
சிலர் தமக்குள்ளேயே கடவுளை வழிபடலாம். பூசலார் நாயனார் அதைத்தான் செய்தார்.
“தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்” என்கிறார் திருமூலர்.
சிலர் வழிபாடு என்று எதுவும் செய்ய மாட்டார்கள்; ஆனாலும் அவர்கள் கடவுள் நினைப்பிலேயே காலத்தைக் கழிப்பார்கள். பல சித்தர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
நான்கு வகையான மனிதர்கள் யார்.
1. ஆர்த்தர்
வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் தாங்க முடியாத துன்பத்தைச் சந்தித்து, இறைவனை நாடுபவர்கள்.
2. அர்த்தார்த்தீ
புறவுலக வாழ்க்கையில் செல்வம், வளம், வசதி போன்றவற்றைப் பெற வேண்டும் என்று விரும்பி இறைவனை நாடுபவர்கள்.
3. ஜிஜ்ஞாஸு
இறைவனைப் பற்றியும், இறைத்தன்மையைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இறைவனை நாடுபவர்கள்.
4. ஞானி
மெய்ஞ்ஞானத்தை அடைந்து, இறைத்தன்மையை உணர்ந்தவர்கள்.
இந்த நான்கு வகையினரைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
1. ஆர்த்தர்
வாழ்க்கையில் நாம் காணும் பல மனிதர்களுக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் தாங்க முடியாத துன்பத்தைச் சந்திக்கும்போது, அவர்கள் கடவுளின் கருணையை நாட ஆரம்பித்து விடுகிறார்கள்.
“திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை” என்று ஒரு பழமொழியும் உண்டு அல்லவா?
இராமாயணத்தை இயற்றிய வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகவே அவர் தனது இளமைக்காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்.
ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்று கொண்டிருந்தபோது அவரை ரத்னாகர் வழிமறித்தார்.
நாரதருடன் ஏற்பட்ட அந்தச் சந்திப்பு, அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னரே ரத்னாகர் வால்மீகியாகப் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.
2. அர்த்தார்த்தீ
புறவுலக வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற வேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்களை ‘அர்த்தார்த்தீ’ என்று குறிப்பிடுகிறார் கிருஷ்ணன்.
“போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று சொன்னாலும், இவர்களுக்கு பொதுவாக ‘போதும்’ என்ற மனநிலை வருவதே இல்லை.
மனிதன் ஆசைப்பட்டது கிடைத்துவிட்டால், ஆசை அடங்குவதற்குப் பதிலாக ஆசைகள் பல்கிப் பெருகுவதை நாம் காண்கிறோம். விளைவு?
வாழ்க்கை முடிவுறும் நேரத்தில் புலம்பலும் வேதனையுமே மிஞ்சுகின்றன.
ஒருசிலர் மட்டுமே இறைவனது கருணையால், அவன் தரும் எதிர்பாராத அதிர்ச்சியால், பொருள் நாட்டத்திலிருந்து விடுபட்டு அருளைத் தேடி ஓடுகிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் இதற்கு உதாரணமாகக் கொள்ளப்படலாம்.
3. ஜிஜ்ஞாஸு
இறைவனைப் பற்றியும், இறைத்தன்மையைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களை ‘ஜிஜ்ஞாஸு’ என்று குறிப்பிடுகிறார் கிருஷ்ணன்.
ஆனால், இறைவனைப் புரிந்து கொள்ள விரும்புபவர்களையும் பல வகையாகப் பிரிக்கலாம்.
அவற்றில் மூன்று வகையினரைத் திருமூலர் குறிப்பிடுகிறார்:
கற்ற பசுக்கள்
குழந்தைத்தனமான ஆர்வத்தில், வாழ்வியல் உண்மைகளை அரைகுறையாகப் புரிந்து கொண்டு, பிற மனிதர்களிடம் அவற்றை உளறித் திரிபவர்கள்.
“கற்ற பசுக்கள் கதறித் திரியினும்” என்கிறார் திருமூலர்.
கொற்ற பசுக்கள்
தமக்குத் தேவையானவற்றை, தமக்கு விருப்பமான கோணத்தில் புரிந்து கொண்டு, அவற்றை மூலதனமாக்கி எப்படிச் சம்பாதிப்பது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள்.
“கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்” என்கிறார் திருமூலர்.
முற்ற பசுக்கள்
இறுதி நிலையை அடையும் வரை முயற்சியில் தளராமல் பயணம் செய்து வெற்றி பெறுபவர்கள்.
“முற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்” என்கிறார் திருமூலர்.
இவ்வாறு முழுமையான தெளிவைப் பெற்று, பற்றற்று வாழ்பவர்களையே கிருஷ்ணன் ‘ஞானி’ என்று குறிப்பிடுகிறார்.
நிம்மதியின்மைக்கு அடிப்படைக் காரணம்
நாமெல்லாம் பொதுவாக ‘அர்த்தார்த்தீ’ வகையைச் சேர்ந்தவர்கள்தான்.
நாம் விரும்பினாலும், வாழ்க்கைச் சூழ்நிலை நம்மை எளிமையாக வாழ விடுவதில்லை.
நமக்குத் தேவைகள் அதிகம்; எனவே ஆசைகளும் அதிகம்.
அதன் காரணமாகவே இறைவனிடம்,
“இது வேண்டும்; அது வேண்டும்”
என்று கோரிக்கை வைக்கிறோம்.
நாம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறினால் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, பெற்றவற்றை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம்.
ஆனால், அந்த மகிழ்ச்சி நிலைத்து நிற்கிறதா? நிலைத்து நிற்கிறது என்றால், வயதான காலத்தில் ஏன் புலம்பித் தவிக்கிறோம்?
காரணம், நாம் ஒரு முக்கியமான உண்மையை நினைத்துப் பார்ப்பதில்லை. பட்டினத்தார் கூறுகிறார்: “வாழ்க்கை குடங்கவிழ் நீரின் ஓட்டமென்றே இரு.”
ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு கால அளவு இருக்கிறது.
அது முடிவதற்குள் நாம் பலவற்றை அனுபவித்து மகிழ வேண்டும் என்று நினைக்கிறோம்; மகிழ்ச்சியாக அனுபவிக்கவும் செய்கிறோம்.
அதில் தவறேதும் இல்லை.
ஆனால், எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நாம் அடைய வேண்டியது ‘நிலையான மன அமைதி’ என்பதை மறந்துவிடுகிறோம்.
மன அமைதி எங்கே இருக்கிறது?
‘மன அமைதி’ என்பது பிறரிடம் வேண்டிப் பெறக்கூடிய ஒன்றல்ல.
நாம்தான் அதனைத் தேடி அடைய வேண்டும்.
உண்மையில் அது வெளியில் எங்கும் இல்லை; நமக்குள்ளேயே இருக்கிறது.
அப்படியிருக்க, அதைத் தேடுவதற்கு நாம் ஏன் எந்த முயற்சியும் எடுப்பதில்லை?
காரணங்கள் பல இருக்கலாம்:
அகத்தாய்வு செய்வதற்கு நேரமில்லை. அகத்தாய்வு செய்வது எப்படி என்று தெரியவில்லை.
அகத்தாய்வு செய்ய விருப்பமில்லை.
இது போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், அகத்தாய்வு செய்யாதவரை மன அமைதி கிட்டுவது கடினமே.
பக்தி மார்க்கத்தில் அகத்தாய்வு
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு ஏன் முக்கியம்?
ஞான மார்க்கம் மிகவும் கடினமான ஒன்று. அது கூறும் வாழ்வியல் தத்துவங்களைப் புரிந்து கொள்ளப் பொறுமை மிகவும் அவசியம்.
தத்துவங்களை வெறுமனே படித்தால் மட்டும் போதாது.
அவை கூறும் மெய்ப்பொருளை அறிந்து கொள்ளும் ஆராய்ச்சி மனப்பான்மையும் நம்மிடம் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு திருக்குறளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நமது புரிந்து கொள்ளும் திறன் வளர வளர, குறளின் பொருளும் நமக்குப் பல்வேறு கோணங்களில் விரிவடைவதைக் காணலாம்.
“அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.”
— குறள் 121
இந்தக் குறளின் பொதுவான பொருள் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
ஆனால், ‘அடக்கம்’ என்பது அடக்குதல் காரணமாக வரும் அடக்கமா? அல்லது அடங்குதல் காரணமாக வரும் அடக்கமா?
‘அடக்குதல்’, ‘அடங்குதல்’ ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
இவ்வாறு கேள்வி எழுப்பி, விடையைத் தேடுவதுதான்
அகத்தாய்வின் தொடக்கம்.
கர்ம மார்க்கத்தைப் பொறுத்தவரை, அதில் ஈடுபட விருப்பம் வேண்டும். அதற்கு அதிகமான நேரமும் செலவிட நேரிடலாம்.
கர்ம மார்க்கத்தில் சிந்தனை பெரும்பாலும் பிற மனிதர்களைப் பற்றியதாக இருக்கலாம்.
பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது பலவிதமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். அவை நம்மை நம்மைப் பற்றி சிந்திக்கவும், அகத்தாய்வில் ஈடுபடவும் வைக்கலாம்.
தியான மார்க்கத்தில் பயணம்செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு அகத்தாய்வில் ஆர்வம் இருக்காது.
அதேநேரம், குடும்பத்தின் மீது அதிகமான பாசம் வைத்திருந்தாலும், ‘பிரத்யாஹாரத்தை’ அவ்வளவு எளிதாக மேற்கொள்ள முடியாது.
பிரத்யாஹாரம் சரியாக அமையாதபோது, தியானம் கைகூடுவதும் கடினமாகிவிடும்.
பிரத்யாஹாரம் சரியாக அமைந்துவிட்டால், அவர்கள் ‘தாரணையை’ பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம்.
தாரணையை ஒழுங்காகப் பயிற்சி செய்தால், மனதில் உள்ள சுமைகள் ஒவ்வொன்றாகக் குறைந்து, சலனமற்ற மனநிலையை அடைய முடியும்.
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு என்பது மனதில் தேங்கியிருக்கும் தேவையற்ற சுமைகளைப் பற்றி ஆராய்வதாக இருக்க வேண்டும்.
குறைவான சுமை; இனிமையான பயணம்
இரயிலில் பயணம் செய்பவர்கள் இரயில் பெட்டிகளில் இந்த வாசகத்தைக் கவனித்திருக்கலாம்:
“Less luggage, more comfort;
make the journey pleasant.”
குறைவான சுமை; இனிமையான பயணம்.
இந்த வாசகம் மனத்திற்கும் பொருந்தும். மனதில் பாரம் குறையக் குறைய, உள்ளுக்குள் அமைதி பெருகுவதை நாம் காணலாம்.
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு என்பது அகத்தைப் பற்றிய ஆய்வுதான்.
‘அகத்தில் உள்ள குப்பைகளை எப்படி அகற்றுவது?’ என்று சிந்திப்பதுதான்.
அதற்கு முதலில் தேவை தனிமை.
முதுமை: சாபமா, வரமா?
வயதான காலத்தில் நாமே தனிமையில் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் இருந்தாலும், மனதளவில் தனித்திருக்கப் பழக வேண்டும்.
அதன் அவசியம் நமக்குத் தெரியவில்லை. அதனால்தான் பிள்ளைகளோ, மற்றவர்களோ நம்மை ஒதுக்கி வைக்கும்போது, தேவையில்லாமல் புலம்பித் தவிக்கிறோம்.
உண்மையில் நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஏனெனில், அகத்தை ஆய்வு செய்ய அவர்கள் நமக்கு நிறைய நேரத்தை ஒதுக்கித் தருகிறார்கள்!
தனிமை ஒரு சாபம் அல்ல.
தன்னைப் பற்றி சிந்திக்க வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் ஒரு வரம்.
முதலில் புரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்
‘அகத்தை எப்படி ஆய்வு செய்ய வேண்டும்?’ என்பதை அறிந்து கொள்வதற்கு முன், சில அடிப்படையான விஷயங்களில் நாம் தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.
அதில் நிச்சயமற்ற தன்மை இருக்கக்கூடாது.
அதற்குப் பின்னர் நாம் செய்ய வேண்டியது எளிமையான பயிற்சிகள்தான்.
1. தனிமை ஒரு வரம்.
வயதான காலத்தில் தனிமை என்பது சாபமல்ல; அது தன்னைப் பற்றி சிந்திக்கக் காலம் அளித்த வரம்.
2. நமக்கு கால அவகாசம் இருக்கிறது
பண்டைய காலத்தைவிட இப்போது மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.
எனவே, அகப்பயிற்சிக்கு நமக்கு கால அவகாசம் இருக்கிறது.
3. பத்து நிமிடப் பரிசோதனை
பத்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து, மனதில் என்னென்ன ஓடுகிறது என்று கவனியுங்கள்.
எத்தனை நினைவுகள் வருகின்றன என்று உத்தேசமாகக் கணக்கிடுங்கள்.
அதில் இறைவனைப் பற்றிய நினைவு இருக்கிறதா என்று பாருங்கள்.
4. ஒரு முக்கியமான கேள்வி
அந்தப் பத்து நிமிடங்களில் ஏதேதோ நினைவுகள் வந்தன; ஆனால் இறைவனைப் பற்றிய நினைவு மட்டும் வரவில்லை என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
ஆழ்மனத்தில் எவ்வளவோ பதிவுகள் தங்கி இருக்கின்றன; ஆனால் இறைவனைப் பற்றிய நினைவு மட்டும் அங்கே ஆழமாகப் பதியவில்லை என்பதுதானே இதன் பொருள்?
நாம் தினந்தோறும் கடவுளை வழிபடுகிறோம்.
இருந்தும் ஆழ்மனத்தில் இறைநினைவு பதியவில்லை என்றால், அதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு உவமை நினைவுக்கு வருகிறது:
ஒரு தாய் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், அவளது கவனம் தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையின் மீதே இருக்கும்.
அதுபோல் நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், ஆழ்மனத்தின் பின்னணியில் இறைநினைவு இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால், மனம் எந்த நிலையிலும் எளிதில் வேதனைப்படாது.
5. கர்மப் பதிவுகளைப் பற்றி சிந்திப்போம்
ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் என மூன்று கர்மங்களைச் சான்றோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவற்றில் ஆகாமியம் மற்றும் சஞ்சிதம் ஆகியவற்றை, வங்கியில் மாத ஆரம்பத்திலும் மாத இறுதியிலும் இருக்கும் கையிருப்புடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.
வங்கியில் உள்ள கையிருப்பு ஒருவனது சேமிப்பில் உள்ள பணம் என்றால், ஆகாமியம் மற்றும் சஞ்சிதம் ஆகியவற்றில் குவிந்து கிடப்பவை ஆழ்மனப் பதிவுகள் என்று இங்கே எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டிற்கும் இடையே நுட்பமான வேறுபாடு இருக்கிறது.
வங்கியில் மாத இறுதியில் பணத்தின் கையிருப்பு அதிகரிக்கப் பாடுபடுகிறோம்.
ஆனால், சஞ்சிதமாகக் குவிந்து கிடக்கும் ஆழ்மனப் பதிவுகளின் எண்ணிக்கையும் அவை ஏற்படுத்தும் அழுத்தமும் குறைவதற்காக நாம் பாடுபட வேண்டாமா?
ஆழ்மனப் பதிவுகள் குறைந்தால்தான் ‘சலனமற்ற மனம்’ என்றால் என்ன என்பது நமக்குப் புரியத் தொடங்கும்.
முயற்சியும், பயிற்சியும்
எனவே, தனிமையில் இருக்க அதிக நேரம் கிடைக்கும்போது, அதனைப் பயன்படுத்தி ஆழ்மனப் பதிவுகளைக் குறைக்க முயற்சி செய்யலாமே?
பயிற்சி 1: நினைவலைகளை வேடிக்கை பாருங்கள்
தெருவில் ஏதேனும் ஊர்வலம் சென்றால் வேடிக்கை பார்ப்போமல்லவா?
அதைப்போல அமைதியாக அமர்ந்து கொண்டு, ஆழ்மனத்தில் ஓடும் நினைவலைகளை வேடிக்கை பார்க்க வேண்டும்.
எந்தக் காரணம் கொண்டும் அவற்றுடன் தொடர்ந்து பயணம் செய்யக்கூடாது.
அவற்றை வெறுமனே கவனியுங்கள்.
நினைவு வந்தது.
அதைப் பார்த்தோம்.
அது போய்விட்டது.
மீண்டும் வேறு நினைவு வந்தது.
அதையும் பார்த்தோம்.
அதனுடன் பயணம் செய்யவில்லை.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், நாளடைவில் சில ஆழ்மனப் பதிவுகளின் தீவிரம் குறையத் தொடங்கலாம்.
இந்தப் பதிவுகள் பெரும்பாலும் நாம் சந்தித்த நிகழ்வுகளுக்கு ஏற்பட்ட உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளால் உருவானவையாக இருக்கலாம்.
Impressions recorded out of emotional reactions or inner resistance to incidents one had experienced.
ஆழ்மனப் பதிவுகளின் அழுத்தம் குறையக் குறைய, மனதிலும் பாரம் குறைவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
பயிற்சி 2: நிறைவேறாத ஆசைகளை ஆராயுங்கள்
வாலிபப் பருவத்தில் நமக்கு நிறைய கனவுகளும் ஆசைகளும் இருந்திருக்கும். எதை எதையோ அடைய விரும்பியிருப்போம்; எதை எதையோ சாதிக்க விரும்பியிருப்போம். பலவற்றில் வெற்றியும் கண்டிருப்போம்.
அதே நேரத்தில், நிறைவேறாத ஆசைகள் மனதை நெருடிக் கொண்டிருக்கலாம்.
இப்போது அவற்றைப் பற்றி நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
வயதான காரணத்தினால் நமது தன்முனைப்பு குறைந்திருக்கலாம்.
தன்முனைப்பு குறைந்துவிட்டால், செயலில் முனைப்புடன் ஈடுபட முடியாமல் போகலாம்.
அப்படியானால், செயல் மூலம் நிறைவேற்ற முடியாத ஆசைகளை விட்டுவிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நிறைவேற்றக்கூடிய ஆசையாக இருந்தாலும், “அது உண்மையில் தேவையா?” என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவை இல்லையெனில் அதனையும் விட்டுவிட வேண்டும்.
மொத்தத்தில், நிறைவேறாத ஆசைகளும், நிறைவேற்றத் துடிக்கும் ஆசைகளும் ஆழ்மனத்தில் தொடர்ந்து சுமையாக இருக்கக் கூடாது.
பயிற்சி 3: பற்றுகளை ஆராயுங்கள்
இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு முன், இதனை ஏன் செய்ய வேண்டும் என்ற புரிதல் மிகவும் அவசியம்.
முதல் பயிற்சி உணர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பதிவுகளைப் பற்றியது.
இரண்டாவது பயிற்சி நிறைவேறாத ஆசைகளைப் பற்றியது.
இனி நாம் பார்க்கப் போவது, நாம் ஆசையுடன் பற்றிக் கொண்டு இறுகப் பிடித்திருக்கும் ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம், பாசம் போன்றவற்றைப் பற்றியது.
எனவே, சரியான புரிதல் இல்லாமல் இந்தப் பயிற்சியை மேற்கொள்வது கடினம்.
பயிற்சி 3.1: சலனமற்ற மனம்
“Success in life is measured by the tranquility of the mind.”
— Swami Chinmayananda
வாழ்க்கையில் வெற்றி என்பது வெளிப்புறச் சாதனைகளால் மட்டுமே அளக்கப்படுவதில்லை. மனத்தின் அமைதியும் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு முக்கியமான அளவுகோல்.
ஒரு மனிதன் சலனமற்ற மனநிலையை அடைந்துவிட்டான் என்பதற்கான சில அடையாளங்கள்:
ஆழ்மனப் பதிவுகள் இல்லாத நிலை அல்லது அவற்றால் சலனம் ஏற்படாத நிலை.
பதிவுகள் இருந்தாலும் அவை மனத்தை ஆட்டிப்படைக்க முடியாத நிலை.
உணர்வு மனம் புத்தியின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிலை.
எந்தச் சூழ்நிலையிலும் அகத்தாய்வை எளிதாக மேற்கொள்ளும் நிலை.
மனதில் சலனங்கள் நிறைந்திருந்தால், சாதாரண மனிதனால் அகத்தாய்வில் ஈடுபடுவது கடினமாக இருக்கும்.
பயிற்சி 3.2: அகத்தாய்வு என்றால் என்ன?
தனக்குள்ளேயே கேள்விகளை எழுப்பி, தனக்குள்ளேயே விடைகளைத் தேடுவதை அகத்தாய்வு என்று சொல்லலாம்.
இதனை ‘விசாரம்’ என்றும் கூறலாம்.
புலன்களின் உதவியின்றி, நமக்குள் எழும் கேள்விகளை ஆராய வேண்டும்.
இந்த முயற்சியில் இரண்டு விதமாகத் தெளிவு கிடைக்கலாம்.
1. விவேகத்தின் மூலம்
சுயசிந்தனையுடன் ஆராய்ந்து, உண்மையைப் புரிந்து கொள்வது.
2. உள்ளிருந்து வரும் தெளிவு
நாம் எவ்வளவுதான் முயன்றாலும், சில கேள்விகளுக்கான விடையை உடனடியாக அறிந்து கொள்ள முடியாமல் போகலாம்.
ஆனால், விடையைத் தேடும் தவிப்பு நம்மிடம் இருந்தால், என்றாவது ஒருநாள் அந்த விடை நமக்குள் இருந்து வெளிப்படலாம்.
எனவே, விடை கிடைக்க வேண்டும் என்ற தவிப்பும், விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தால், தேடல் வீணாகாது.
பயிற்சி 3.3: அகத்தாய்வுக்கு மாற்று வழிகள்
சலனங்கள் நிறைந்த மனம் உடைய மனிதனால் குறிப்பிட்ட பயிற்சியை மேற்கொள்ள முடியாதபோது, அதற்கான மாற்று வழி என்ன?
அகத்தாய்வு செய்வதற்கு இரண்டு மாற்று வழிகளை எடுத்துக் கொள்ளலாம்:
ஊகத்தின் மூலம் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வது.
சான்றோர்களின் வாய்மொழி அறிவுரைகளைக் கேட்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பது.
ஊகத்தின் மூலம் முடிவு
எடுக்கும்போது தவறான முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உண்டு.
எனவே, சான்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பது நல்ல பலனைத் தரலாம்.
ஆனால், உண்மையான சான்றோர்களைக் கண்டுபிடிப்பது எளிதானதல்ல.
எல்லாவற்றிலும் மேலான ஒரு வழி:
அறநூல்களைப் படித்து, அவற்றில் கூறப்பட்ட கருத்துக்களைச் சிந்தித்துப் பார்ப்பது.
இந்த வழி நல்ல பலனைத் தரும்.
பயிற்சி 3.4: ‘நான்’ யார்?
இளமைப் பருவத்தில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகப் பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துகிறோம். அதில் தவறேதும் இல்லை.
ஆனால் முதுமை வந்துவிட்டால், நமது கவனம் முழுவதும் ‘மன நிம்மதியை எவ்வாறு அடைவது?’ என்பதிலேயே இருக்க வேண்டும்.
நம்மால் ஆழ்ந்து சிந்திக்க முடியாமல் போகலாம்.
ஆனால், சிந்திக்கவே தெரியாது என்று சொல்ல முடியுமா?
முன்னோர்கள் கூறிய வாழ்வியல் தத்துவங்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாலே போதும்.
தனிமையில் வாடுகிறேன் என்று சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது.
இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
“என்னுடைய வீடு” என்று சொன்னால், வீடு வேறு; நான் வேறு என்றாகிறது.
“நான்” உரிமையாளன்; “வீடு” என்னுடைய உடமைப் பொருள்.
அதேபோல்,
“என்னுடைய உடம்பு”,
“என்னுடைய மனம்”,
“என்னுடைய புத்தி”
என்று சொல்கிறோம்.
அப்படியானால் உடல், மனம், புத்தி ஆகியவற்றிலிருந்து ‘நான்’ வேறானவன் என்பது புரிகிறது.
அப்படியானால்...
‘நான்’ என்பது யாரைக் குறிக்கிறது?
மேலும், “என்னுடைய உடம்பு” என்று சொல்வதைப் போல் “என்னுடைய ஆன்மா” என்று சொல்ல முடியுமா?
ஆன்மா நமது உடமைப் பொருள் அல்ல. அப்படியானால், ஆன்மா என்பது என்ன?
நம் உடலில் அது ஏன் இருக்கிறது?
அதன் தேவை என்ன?
இவை போன்ற கேள்விகளே அகத்தாய்வின் கதவுகளைத் திறக்கின்றன.
பயிற்சி 3.5: ஆன்மாவைப் பற்றி சிந்திப்போம்
நம்முள் இருக்கும் ஆன்ம சக்தியின் காரணமாகத்தான் நம்மால் இயங்க முடிகிறது.
அதனை இறைசக்தி என்றும் கூறலாம்.
கடவுளைப் ‘பூரணம்’ என்றும், ஆன்மாவைப் ‘பூரணத்திலிருந்து வந்த பூரணம்’ என்றும் கூறுவார்கள்.
திருமூலர் கூறுகிறார்:
“சீவன் எனச் சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே.”
— திருமந்திரம் 2017
அவர் ‘சீவன்’ என்று குறிப்பிடுவது, நாம் ‘ஆன்மா’ என்று குறிப்பிடுவதோடு தொடர்புடையது.
சித்தர்கள் அந்தச் சக்தியை ஜோதி வடிவில் குறிப்பிடுகின்றனர்.
“உச்சிக்குக் கீழடியோ, அண்ணாவுக்கு மேலே
வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே.”
யாரேனும் நமக்கு ஒரு சிறிய உதவி செய்தால் கூட, “நன்றி” என்று சொல்கிறோம்.
ஆனால், நமது வாழ்நாள் முழுவதும் நம்மை இயங்கச் செய்யும் இறையருளை என்றேனும் நினைத்திருக்கிறோமா?
“நித்தம் விளக்கெரிந்தும்
நினைவிலது இல்லையடி.”
எதனால் அதைப் பற்றிய நினைவு நமக்கு இருப்பதில்லை?
“சித்தம் கலங்கியதால்
சிந்தனையும் போனதடி.”
ஆழ்மனப் பதிவுகள் பாசிபோல் சித்தத்தின் மீது படிந்துவிட்டதால், நம்மால் அதைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை.
விளைவு?
“அத்தன் இருப்பிடத்தை
ஆராயத் தெரியாமல்
பெத்தமனம் பித்தாகப்
புலம்பித் தவிக்குதடி.”
வயதான காலத்திலாவது ஆன்மாவைப் பற்றி சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆழ்மனத்தில் உள்ள தேவையற்ற சுமைகள் குறையத் தொடங்கும்.
திருவள்ளுவர் கூறுகிறார்:
“பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு.”
பயிற்சி 3.6: சரணாகதி
ஒருமுறை ஓர் அன்பர் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
“நாங்களெல்லாம் சுயநலவாதிகளாக இருக்கிறோம். உங்களைப் போல் இருக்க முடியவில்லையே”
என்று வருத்தப்பட்டாராம்.
அதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் சிரித்துக்கொண்டே,
“நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். நீங்கள் சுயநலவாதி அல்ல; நான்தான் சுயநலவாதி.
நீங்கள் குடும்பத்திற்காக உழைக்கிறீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். உங்களைப் பற்றி நினைப்பதே இல்லை.
நானோ பிறரைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. என் கவலையெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பிலிருந்து எப்படி விடுபடுவது என்பதுதான்.
ஆகவே நான்தான் சுயநலவாதி.”
என்று கூறினாராம்.
ஒருவகையில் அவர் கூறுவது சரிதானே!
நாம் தனிமையை விரும்பி ஏற்றோமா, அல்லது தனிமையை நோக்கிப் பிறரால் தள்ளப்பட்டோமா என்பதல்ல பிரச்சினை.
இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய அந்த அர்த்தத்தில், ஆன்மிகத்தில் ‘சுயநலம்’ கொண்ட மனிதராக மாற என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பிரச்சினை.
நாம் செய்ய வேண்டியது:
தனிமை ஒரு வரம் என்று நம்புங்கள்.
தனிமையில் இருக்க நேர்ந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
அஹங்காரம் குறையக் குறைய, மன அமைதி உள்ளிருந்து வெளிப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மன அமைதிதான் பிறப்பறுக்கும் பாதையின் நுழைவாயில் என்பதை உணருங்கள்.
தனிமையில் அமர்ந்து, வாழ்க்கையில் நாம் காணும் புதிர்களுக்கான விடைகளை நமக்குள்ளேயே தேட முயற்சி செய்யுங்கள்.
அறநூல்களைப் படியுங்கள்
அறநெறி கூறும் மறைநூல்களைத் தினந்தோறும் படிக்க வேண்டும்.
படித்து, அவை சொல்லும் கருத்துக்களை உள்வாங்கி, அவற்றின் மெய்ப்பொருளை அறிய முயற்சி செய்ய வேண்டும்.
இது கொஞ்சம் கடினமான காரியமாகத் தோன்றலாம்.
குறள் வலியுறுத்தும் அறநெறிகள்
அப்படியானால், அதற்குப் பதிலாக தினமும் ஒரு திருக்குறளைப் படியுங்கள்.
அதில் அறநெறிகளை வலியுறுத்தும் குறட்பாக்கள் நிறைய உள்ளன.
பல குறட்பாக்களை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
பின்னர், அந்தக் குறள் சொல்லும் கருத்தை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் ஒப்பிட்டு அகத்தாய்வு செய்யுங்கள்.
உதாரணமாக:
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.”
— குறள் 7
பாடலைப் படித்தவுடன் புரிந்துவிட்டது என்று முடித்துவிடாதீர்கள்.
அதனை அகத்தாய்வு செய்யுங்கள்.
“தனக்குவமை இல்லாதான்”
நான் சிவனை வணங்குகிறேன்.
எனவே, சிவன்தான் எனக்குத் “தனக்குவமை இல்லாதவன்” என்று கூறலாம்.
வேறு ஒருவருக்கு பெருமாள் அப்படிப்பட்டவராகத் தோன்றலாம்.
யார் யாருக்கு எது இஷ்ட தெய்வமோ, அதைப் பொறுத்து “தனக்குவமை இல்லாதவன்” மாறுபடலாம்.
நம்மில் பலர் பல தெய்வங்களை வணங்குகிறோம். அவற்றில் ஏதாவது ஒரு தெய்வத்தை, நமது மனம் முழுமையாகச் சரணடையக்கூடியதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருவருக்கு ஹனுமான் இவ்வாறு இருக்கலாம்.ஹனுமான் கடவுள் அல்ல என்று ஒருவர் கருதினாலும், அவரைப் பொறுத்தவரை ஹனுமான்தான் “தனக்குவமை இல்லாதவன்” என்ற நிலையில் இருக்கலாம்.
பல மனிதர்கள் கிராம தேவதைகளை வணங்குகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை அவைதான் “தனக்குவமை இல்லாதவை”.
ஆக, “தனக்குவமை இல்லாதவன்” என்பது, நமது மனம் யாரிடம் முழுமையாகச் சரணடைகிறது என்பதைப் பொறுத்தது.
“தாள்சேர்ந்தார்க்கல்லால்”
“தனக்குவமை இல்லாதவன் திருவடிகளைச் சேராதவரை மனக்கவலைகளை மாற்றுதல் அரிது” என்கிறார் வள்ளுவர்.
திருவடிகளைச் சேருதல் என்றால் என்ன?
உடல்ரீதியாகச் சேர முடியாது.
மனதால் அவனது திருவடிகளைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
வெகு தொலைவில் இருக்கும் நெருங்கிய உறவுகளின் நினைவாகவே நாம் இருக்கிறோம் அல்லவா?
அதைப்போல், தனக்குவமை இல்லாதவனின் நினைவும் நம் மனதில் நிலைத்திருக்க வேண்டும்.
வள்ளுவர் “சேர்ந்தார்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
நாம் கோவிலுக்குச் செல்கிறோம்; கடவுளை வணங்குகிறோம்; பின்னர் வீட்டிற்கு வந்து விடுகிறோம்.
ஆனால் “சேர்ந்தார்” என்பது வேறு.
சேர வேண்டிய இடத்தைச் சேர்ந்த பின் அங்கிருந்து மனம் திரும்பாமல் இருப்பதுதான் இங்கே நோக்கம்.
தனக்குவமை இல்லாதவனைத் தொடர்ந்து மனதால் பற்றிக் கொண்டிருந்தால், என்றேனும் ஒருநாள் அவனது நினைவு நமது ஆழ்மனதில் நிலைத்துவிடும்.
அதன்பின் அவன் நம்மைவிட்டு பிரிவதே இல்லை.
அதனால்தான் மாணிக்கவாசகர்,
“இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி”
என்கிறார்.
உங்களாலும் அவரைப்போல் கூற முடியும். முயற்சி செய்யுங்கள்.
“மனக்கவலை மாற்றல் அரிது”
இறைவனது திருவடியைச் சேர்ந்தால் மனதில் உள்ள கவலைகள் நீங்கிவிடும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். அது எப்படி நடக்கும்?
அன்பு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.
ஆனால், எந்த ஒன்றின் மீதும் பற்று வைத்தால், அது ஆசையாக மாறலாம்.
பின்னர் அதுவே பாசமாகவும், பேராசையாகவும் மாறலாம்.
நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டுதான் வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
சான்றோர்கள் அந்த வட்டத்தை உடைத்து விடுகிறார்கள்.
பொது நலத்தில் நாட்டம் உள்ளவர்கள் தங்கள் வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், பலூனை ஊத ஊத அது உடைந்து விடுவது போல், அவர்களது வட்டமும் உடைந்து விடுகிறது.
மற்றவர்கள் பாசம், பேராசை போன்ற காரணங்களால் தங்களது வட்டத்தைச் சுருக்கிக் கொள்கிறார்கள்.
அதன் காரணமாக அவர்களிடம் உள்ள அன்பு தூய்மையற்ற அன்பாக மாறிவிடுகிறது.
தூய்மையற்ற அன்பு துயரங்களைச் சந்திப்பதும், விளைவிப்பதும் இயல்பானதே.
நம்மைச் சுற்றியுள்ள வட்டம் சுருங்குவதன் காரணமாகவே சமூகத்தில் பலவிதமான பாகுபாடுகளும் மோதல்களும் உருவாகின்றன என்று இதனை விரிவாகப் புரிந்து கொள்ளலாம்.
வள்ளுவர், “மனத்துக்கண் மாசிலன் ஆதல்...” என்று கூறுகிறார்.
நம்மைச் சுற்றியுள்ள வட்டம் விரிவடைய வேண்டும்.
பின்னர் அது உடைபட வேண்டும்.
அதற்கான ஒரு வழி, ஆழ்மனதில் உள்ள தேவையற்ற சுமைகளைக் குறைப்பது. இறைவன் மீது மனத்தை நிலைநிறுத்துதல்.
ஒரு பொதுவான விதி உண்டு:
“Mind will succumb to the thing to which it is repeatedly diverted.”
எந்த ஒன்றின் மீது நாம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோமோ, மனம் படிப்படியாக அந்த ஒன்றோடு ஒன்றிவிடும்.
நாம் வணங்கும் ஒன்றின் மீது தொடர்ந்து நமது கவனத்தைச் செலுத்தி வந்தால், நமது மனம் அதன் திருவடிகளைப் பற்றிக் கொள்ளும்.
பின்னர் அதன் நினைவாகவே மனம் இருப்பின், பற்றுதல் காரணமாக முன்னர் உருவான பல பதிவுகள் படிப்படியாகத் தங்கள் ஆற்றலை இழக்கலாம்.
நம்மிடம் உள்ள அன்பும் மாசற்ற அன்பாக மாறத் தொடங்கலாம்.
இதன் தொடர்ச்சியாக இன்னொரு குறளைப் பார்ப்போம்.
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.”
— குறள் 4
‘வேண்டுதல், வேண்டாமை என எதுவுமே இல்லாத இறைவனின் திருவடியைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் துன்பம் இல்லை’ என்கிறார் வள்ளுவர்.
வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் கலந்ததுதானே?
அப்படியிருக்க, வள்ளுவர் ‘துன்பமே இல்லை’ என்று கூறுவது எப்படி?
இதில்தான் ஒரு நுட்பம் இருக்கிறது.
மனதில் ஆசைகள் இல்லாதவருக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயமும் கவலையும் குறையும்.
ஆனால், நாம் விரும்பாத ஒன்று நடந்துவிட்டால் அது நம்மைத் துன்பத்தில் ஆழ்த்தலாம்.
வள்ளுவர் இன்னும் ஆழமாகச் சொல்கிறார்.
“வேண்டும்” என்ற ஆசையை விட்டுவிடுவதைப் போல, “வேண்டாம்” என்ற வெறுப்பையும் விட்டுவிட்டால் என்ன நடக்கும்?
எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், அவை நமது மனத்தை ஆட்டிப்படைக்க முடியாது.
அதுவே மன அமைதிக்கான அடிப்படை.
புளியங்காயும் புளியம்பழமும்
பற்றை விட்டுவிட்டால் உறவுகளை விட்டு விலகி விடுவோமோ என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.
அது தேவையற்ற சந்தேகம்.
உறவுகளிடம் முன்புபோலவே நடந்து கொள்ளலாம்.
ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு.
பற்று உள்ளவனுக்கும், பற்றை விட்டவனுக்கும் வெளிப்புறச் செயல்களில் பெரிய வித்தியாசம் இருக்க வேண்டியதில்லை;
வித்தியாசம் உள்ளேதான்.
பற்று உள்ளவனிடம் உடல்ரீதியான ஈடுபாடும் மனரீதியான ஈடுபாடும் இருக்கும்.
பற்றை விட்டவனிடம் உடல்ரீதியான ஈடுபாடு இருக்கலாம்; ஆனால் மனம் அதில் ஒட்டிக் கொள்ளாது.
இது புளியங்காய்க்கும் புளியம்பழத்துக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.
புளியங்காய் தோட்டுடன் ஒட்டியே இருக்கும்.
புளியம்பழமோ தோட்டுக்குள் இருந்தாலும், அதனுடன் ஒட்டாமல் விலகியே இருக்கும்.
அதனால்தான் பத்திரகிரியார்,
“புளியம்பழமும் தோடும்போல்
ஆவதினி எக்காலம்”
என்று புலம்புகிறார்.
முறையாகப் பயிற்சி செய்தால், உணர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பதிவுகளும், நிறைவேறாத ஆசைகளால் உருவான பதிவுகளும் தங்கள் பிடியை இழக்கலாம்.
அதேபோல், ‘தனக்குவமை இல்லாதவன்’ மீது நமது மனம் நிலைபெறும்போது, முன்பு இருந்த பற்றுகளின் தாக்கமும் குறையத் தொடங்கலாம்.
அதன்பின், வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள் நம்மை முன்புபோல் துன்பத்தில் ஆழ்த்தாமல் இருக்கலாம்.
விவேகமும் வைராக்கியமும்
முதுமையில் நேரம் நிறைய இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி அகத்தாய்வு செய்யுங்கள் என்றால், நாம் ஏன் தயங்க வேண்டும்?
விவேகம், வைராக்கியம் — இந்த இரண்டு சொற்களின் பொருளையும், அவற்றின் தொடர்பையும் சரியாகப் புரிந்து கொண்டால், அகத்தாய்வு செய்வதில் தயக்கம் வராது.
விவேகம் என்றால், பொருட்களின் உண்மைத்தன்மையைச் சுயசிந்தனை மூலம் பகுத்தறிவது என்று கொள்ளலாம்.
முதலில் நமது பழக்கவழக்கங்களை ஆராயக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதனை ‘சுயபரிசோதனை’ (introspection) என்று சொல்லலாம்.
இதன் வழியாக உணர்ச்சிப் பதிவுகளையும், இச்சை மற்றும் கனவுகளால் உருவான பதிவுகளையும் குறைக்க முயல்கிறோம்.
பற்றுதல் காரணமாக உருவான பதிவுகளை நீக்குவதற்கு, மனத்தை ‘தனக்குவமை இல்லாதவனை’ நோக்கித் திருப்ப வேண்டும் என்று பார்த்தோம்.
இதனை மட்டும் விவேகம் என்று சொல்ல முடியாது.
இது மனத்தின் திசையை மாற்றுவது.
இதனுடன் விவேகமும் சேர்ந்தால்தான் முயற்சி நல்ல பலனைத் தரும்.
விவேகத்தின் மூலம் புறவுலகின் நிலையாமையைப் புரிந்து கொள்கிறோம்.
இந்தப் புரிதல் உள் உலகில் பயணம் செய்வதை எளிதாக்குகிறது.
இறுதியில் நாம் அடைய வேண்டிய மன அமைதியை நோக்கி அது நம்மை அழைத்துச் செல்கிறது.
விவேகத்தின் மூலம் பற்றின்மை வளர்கிறது; பற்றின்மை வளர வளர, புரிந்து கொள்ளும் திறனும் வலுப்பெறுகிறது.
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருப்பதால், நாம் விவேகமாகச் சிந்திப்பதை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.
சரணாகதி என்றால் என்ன?
“பொறுப்புகள் இருக்கும்போதே சரணாகதியை முழுமையாகப் பெறுவது எப்படி?” என்று ஓர் அன்பர் கேட்டிருந்தார்.
இதற்கான விளக்கம் கொடுப்பது கடினமான ஒன்று. ஏனெனில், சரணாகதி என்பது மனதளவில் கடைப்பிடிக்கும் ஒரு பாவனை.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான மனம் இருப்பதில்லையே!
இருந்தாலும்,
“புரியவைக்க முடியாத ஒன்றைப் புரியவைக்க முயற்சிப்பது ஒரு ஆன்மிகவாதியின் கடமை.”
சரணாகதி என்பது ஒரு பாவனை.
அதைப் பொறுப்புகள் இருக்கும்போதும் கடைப்பிடிக்க முடியும். நான் அதை எப்படிக் கடைப்பிடித்தேன் என்பதை விளக்குகிறேன்.
அதன் மூலம் சரணாகதி பற்றி ஓரளவு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
எனது வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:
குடும்ப வாழ்க்கை
அலுவலக வாழ்க்கை
ஆன்மிக வாழ்க்கை
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, என் தந்தையின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினேன். அதாவது, தந்தையின் வழிகாட்டுதலுக்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன்.
அலுவலக வாழ்க்கையைப் பொறுத்தவரை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அரசியல் தூய்மையை முன்மாதிரியாகக் கொண்டேன்.
அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் மனதைச் செம்மைப்படுத்தின.
அதன் காரணமாகப் பொது வாழ்க்கையிலும் கர்ம மார்க்கத்தைப் பின்பற்ற முடிந்தது.
ஆன்மிகத்தைப் பொறுத்தவரை எனக்கு நிறைய குருமார்கள் உதவினர். திருவள்ளுவர் முதற்கொண்டு சுவாமி சின்மயானந்தர் வரை பலர் எனக்கு வழிகாட்டினார்கள்.
ஆனால், நான் சரணடைந்தது பகவத் கீதையிடம்.
நாம் யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறோம் என்பது முக்கியமல்ல.
அவர்கள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கிறோமா என்பதுதான் முக்கியம்.
சரணாகதிக்கு ஒரு சிறிய அனுபவம்
பல வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம்.
எனது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார்.
நான் முடியாது என்று மறுத்துவிட்டேன்.
“எல்லாரும் இதைச் செய்கிறார்கள்; நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?” என்றார்.
நான் அவரிடம், “என் அப்பாவுக்குப் பிடிக்காததை நான் செய்ய மாட்டேன்”
என்றேன்.
அவர், “உங்கள் அப்பா என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார்?”
என்றார்.
நான், “இல்லை. அவர் காலமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது”
என்றேன்.
எனது பதிலைக் கேட்டதும் அவர் மௌனமாகிவிட்டார்.
சரணாகதி என்றால் என்ன என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன்.
வழிகாட்டி தேவை
நமக்கான வழிகாட்டியைத் தேடி, அவரைத் துணையாகக் கொண்டு நமது பயணத்தைத் தொடர வேண்டும்.
அவர் கூறும் கருத்துக்களை உள்வாங்கி, நிதானமாக அவற்றை நமது அனுபவங்களுடன் ஒப்பிட்டு அகத்தாய்வு செய்ய வேண்டும்.
அகத்தாய்வு செய்யும்போது நமக்குச் சில தெளிவுகள் பிறக்கும்.
“தெள்ளத் தெளிந்தார்க்கு...” என்கிறார் திருமூலர்.
தெளிவு பிறந்தால் பற்றற்ற தன்மை வளரும்.
பற்றற்ற தன்மை வளரும்போது புரிந்து கொள்ளும் திறனும் கூடும்.
விவேகமும் வைராக்கியமும் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து, நம்மை மன அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும். ஆகவே, நமக்கான வழிகாட்டியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
திருவள்ளுவர், நமக்கான வழிகாட்டி எப்படி இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளின் “பெரியாரைத் துணைக்கோடல்” அதிகாரத்தில் விரிவாகக் கூறுகிறார்.
பெரியோரின் துணை
“The company of the wise is the surest remedy to cool down the bosom to a state of peace and happiness when it is in conflagration, fed by desires and hatreds, attachments and yearnings.”
— Swami Chinmayananda, Talks on Sankara’s Vivekachoodamani
திருவள்ளுவர் திருக்குறளில் பெரியோர்களை ஏன் வழித்துணையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
அந்த அதிகாரத்தில் நாட்டை ஆளும் அரசனுக்குப் பெரியோரின் துணை எவ்வளவு அவசியம் என்பதை அவர் கூறுகிறார்.
இருந்தாலும், அவர் கூறும் கருத்துக்கள் நமக்கும் பொருந்தும்.
‘பெரியவர்’ என்றால் வயதானவர் என்று நினைக்கக் கூடாது.
நம்மைவிட ஆன்மிகச் சிந்தனையில் தெளிவாக இருப்பவரே பெரியவர்.
பெரியோரின் துணை எதற்காக வேண்டும்?
பொதுவாக மனிதர்கள் இன்பம்–துன்பம், விருப்பு–வெறுப்பு, வெற்றி–தோல்வி என இரு முனைகளுக்கு இடையே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால் மனதில் நிம்மதி இல்லாமல் புலம்பித் தவிக்க நேரிடுகிறது.
இந்தப் புலம்பலில் இருந்து விடுபட்டு மன அமைதியை அடைவதற்கான வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுபவர்களைத்தான் ‘பெரியோர்’ என்று கொள்ளலாம்.
எனவே, தக்க பெரியார் ஒருவரைக் கண்டுபிடித்து அவரை வழித்துணையாகக் கொள்ளுங்கள்.
உங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்களுக்கு உரிய விடைகளைத் தேட அவருடைய வழிகாட்டுதல் உதவும்.
மன அமைதி....எப்படி அறிவது?
மேலே சொன்ன பயிற்சிகளை முழு மனதோடு செய்து வந்தால், நிச்சயம் மனதில் உள்ள பாரம் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
நீங்களும் ‘மன அமைதி’ என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்.
அது வந்து கொண்டிருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது?
அதற்கான சில அடையாளங்கள்:
1. சமம் — Sama
Calmness of the mind
மனம் கொந்தளிப்பு இன்றி அமைதியாக இருக்கும்.
2. தமம் — Dama
Self-control
உணர்ச்சிகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.
3. உபரதி — Uparati
Self-withdrawal
தேவைப்படும்போது மனத்தைப் புறவுலகில் அலைந்து திரிவதிலிருந்து திரும்பப் பெற முடியும்.
4. திதிக்ஷா — Titikṣā
Forbearance
சகித்துக் கொள்ளும் தன்மை வளரும்.
5. சிரத்தா — Śraddhā
The capacity to know the truth
மெய்ப்பொருளை அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதற்கான திறனும் வளரத் தொடங்கும்.
6. சமாதானம் — Samādhāna
Tranquility
மனம் சலனமின்றி ஒருமுகமாகவும் அமைதியாகவும் இருக்கும்.
இவை ஷட் சம்பத்தி (Ṣaṭ-sampatti) எனப்படும் ஆறு உள்தகுதிகளுடன் தொடர்புடையவை.
நிம்மதியின்மையின் மூல காரணம்
நாம் அமைதியின்றித் தவிப்பதற்கு மூல காரணமாக இருப்பது நம்மிடம் இருக்கும் அஹங்காரம். இதனை ஆணவம் என்றும் அகந்தை என்றும் சொல்வார்கள்.
அஹங்காரத்தின் தீவிரம் குறையக் குறைய, மன அமைதி வளரத் தொடங்கும்.
அஹங்காரம் முற்றிலும் அழிந்துவிட்டால் என்ன நடக்கும்?
அங்குதான் நமது வாழ்க்கையின் எல்லைக்கோடு ஆரம்பமாகிறது.
“அகந்தை அழியுமிடம்
ஆண்டவனை அறியுமிடம்.”
No comments:
Post a Comment