Saturday, 5 September 2026

சிவலிங்க தியானம்






சிவலிங்க தியானம் — விசாரத்திலிருந்து அனுபவம் வரை


முன்னுரை

அன்பு நண்பர்களுக்கு,
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், எந்த யோக மரபின் அதிகாரப்பூர்வ விளக்கங்களாகவோ, சாஸ்திரங்களுக்கு மாற்றாகவோ எழுதப்பட்டவை அல்ல.
இவை அனைத்தும், வேதாந்தத்தின் ஒளியில் சிந்திக்க முயன்ற ஒரு சாதகரின் அகத்தாய்வு, விசாரம், ஊகம் மற்றும் தியான அனுபவங்களின் பதிவுகள் மட்டுமே.
எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கான விடைகளைத் தேடிச் சென்றபோது, சிவலிங்கம், தியானம், ஆக்ஞா சக்கரம், பிராணன், மனம் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்ற எண்ணங்கள் தோன்றின.
அந்த எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
என் கருத்துக்களை நம்பாதீர்கள்; விசாரியுங்கள்.
என் அனுபவங்களைப் பின்பற்றாதீர்கள்; நீங்களே அனுபவித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
1. சிவலிங்க தியானம்
சிவலிங்கத்தைப் பற்றி சிந்திக்கும்போது, அது வெறும் வழிபாட்டிற்கான ஒரு வடிவம் மட்டும்தானா, அல்லது அதன் மூலம் ஏதாவது நுட்பமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
மனித உருவத்தில் சிவனை வழிபடுவதற்குப் பதிலாக, ஏன் சிவலிங்கத்தை வழிபடுகிறோம்?
இந்தக் கேள்வி என்னை மேலும் சிந்திக்க வைத்தது.
சிவலிங்கத்தின் வடிவத்தை உற்று நோக்கியபோது, அது ஒரு குறியீடாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணம் தோன்றியது.
அந்த எண்ணத்திலிருந்து, மனித உடலின் அமைப்பையும் யோக மரபில் கூறப்படும் சக்கரங்கள், நாடிகள் போன்ற கருத்துக்களையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்க்கத் தொடங்கினேன்.
மனித உடலில் மூலாதாரம் முதல் ஆக்ஞா வரை ஏழு சக்கரங்கள் இருப்பதாக யோக மரபில் கூறப்படுகிறது. இடா, பிங்கலா, சுஷும்னா ஆகிய நாடிகளைப் பற்றியும் யோக நூல்கள் குறிப்பிடுகின்றன.
முதுகுத்தண்டை ஒட்டி அமைந்துள்ள இந்த நுண்ணிய அமைப்புகளைப் பற்றி சிந்திக்கும்போது, உடலின் பல பகுதிகளிலும் உள்ள சுரப்பிகளுடனும் இவற்றை தொடர்புபடுத்திப் பார்க்கும் சில நவீன விளக்கங்கள் இருப்பதை அறிந்தேன்.
அவற்றை இறுதி அறிவியல் உண்மை என்று ஏற்றுக்கொள்ளாமல், அவை எழுப்பும் கேள்விகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு நான் விசாரிக்கத் தொடங்கினேன்.
ஆக்ஞா சக்கரத்தின் இருப்பிடத்தைப் பற்றிய பாரம்பரிய விளக்கங்களையும், பிட்யூட்டரி சுரப்பியின் உடற்கூறு அமைவிடத்தையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்க்கும் எண்ணம் எனக்குள் தோன்றியது.
பிட்யூட்டரி சுரப்பி, மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய நாளமில்லாச் சுரப்பி. பல உடலியல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் அது முக்கியப் பங்கு வகிப்பதால், அதனை ‘தலைமைச் சுரப்பி’ (Master gland) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இவற்றைப் பற்றிச் சிந்தித்தபோது, சிவலிங்கத்தின் வடிவம் ஆக்ஞா பகுதியை ஒரு குறியீடாகச் சுட்டிக்காட்டுவது போல் எனக்குத் தோன்றியது.
அது உண்மையா?
அல்லது இது என்னுடைய மனம் உருவாக்கிய ஒரு தொடர்பா?
இந்தக் கேள்விக்கான இறுதி விடை என்னிடம் இல்லை.
ஆனால், இந்த எண்ணமே என்னைத் தியானத்தை நோக்கி அழைத்துச் சென்றது.
அப்போது திருமூலரின் ஒரு பாடல் என் கவனத்திற்கு வந்தது:
“கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மையும் பிழைப்பித்த வாறே.”
— திருமந்திரம், பாடல் 599
“அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்” என்ற வரி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
“அண்ணாக்கின் உள்ளே” என்று திருமூலர் குறிப்பிடுவது எந்தப் பகுதியை?
அங்கே அவர் சுட்டிக்காட்டும் “அகண்ட ஒளி” எது?
இந்தக் கேள்விகள் எனக்குள் மேலும் பல கேள்விகளை எழுப்பின.
இதை நவீன உடற்கூறியலுடன் நேரடியாக ஒன்றாக்கிவிட முடியாது என்பதை நான் அறிவேன்.
ஆனால், இந்தப் பாடல் எனது அகத்தாய்வுக்கு ஒரு புதிய திசையைத் தந்தது.
இவ்வாறு விசாரித்தபோது, சிவலிங்கத்தின் வடிவத்தை ஒரு தியானக் குறியீடாக எடுத்துக்கொண்டு, அதன் வழியாக மனத்தை உள்நோக்கிக் கொண்டு செல்ல முயற்சிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
அப்படியானால், இந்த முறைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
“சிவலிங்க தியானம்” என்று சொல்லலாமா?
இடைமுன்னுரை
“சிவலிங்க தியானம்” என்ற முதல் பகுதியில், சிவலிங்கத்தை ஒரு தியானக் குறியீடாக எனக்குப் புரிந்த விதத்தைப் பகிர்ந்திருந்தேன்.
அந்த விசாரம் அங்கேயே முடிவடையவில்லை.
சிவலிங்கத்தை ஒரு குறியீடாக வைத்துக்கொண்டு தியானத்தில் அமர்ந்தபோது, மனம் எவ்வாறு அமைதியடைகிறது? பிராணனுக்கும் மனத்திற்கும் என்ன தொடர்பு? மூச்சின் இயக்கத்திற்கும் மனத்தின் இயக்கத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கேள்விகள் எழுந்தன.
அந்தக் கேள்விகளுடன் நான் மேற்கொண்ட தியான அனுபவத்தை இப்போது பகிர்கிறேன்.
இங்கும் நான் பகிர்ந்திருப்பது சாஸ்திரத்தின் இறுதி முடிவுகள் அல்ல.
ஒரு சாதகரின் விசாரமும், பயிற்சியும், அனுபவமும் மட்டுமே.
2. தியானம்
தியானத்தில் அமரும் பொழுது, அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்து, கைகளை மடியில் வைத்துக்கொண்டு, மனதிற்குள் “அயம் ஆத்மனே” என்ற சொல்லை மூச்சுடன் இணைத்துக்கொண்டேன்.
மூச்சை உள்ளே இழுக்கும்போது “அயம்” என்றும், மூச்சை வெளியே விடும்போது “ஆத்மனே” என்றும் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டேன்.
அவ்வாறு செய்யும்போது, முதலில் என் கவனம் தொண்டைப் பகுதியிலும், பின்னர் நாக்கின் உள்ள்பகுதியிலும் சென்று, அங்கிருந்து உள்நோக்கி நகர்ந்து, பிட்யூட்டரி சுரப்பி இருக்கும் பகுதியை நோக்கிச் சென்றது.
சில நேரங்களில், அந்தச் சொல்லைத் தொடர்ந்து உச்சரிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.
மனம் ஒரு சொல்லையோ, உருவத்தையோ, எண்ணத்தையோ பற்றிக்கொள்ளாமல் அமைதியாக இருக்கத் தொடங்கியது.
அந்த அனுபவத்தைப் பற்றி சிந்தித்தபோது, திருமூலரின் மற்றொரு பாடல் நினைவுக்கு வந்தது:
“பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.”
— திருமந்திரம், பாடல் 567
“பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்” என்ற வரி, பிராணனுக்கும் மனத்திற்கும் இடையே ஏதோ ஒரு நுட்பமான தொடர்பு இருப்பதாக என்னைச் சிந்திக்க வைத்தது.
தியானத்தில் மனம் அமைதியாகும் போது, மூச்சின் இயக்கத்திலும் சில மாற்றங்களை நான் கவனித்தேன்.
நான்கு, ஐந்து தடவைகள் மூச்சு உள்ளே வந்து வெளியே சென்றபின், இதற்குமேல் விரிவடைய முடியாது என்ற நிலைக்கு மார்புக்கூடும், இதற்குமேல் ஒடுங்க முடியாது என்ற நிலைக்கு வயிற்றுப் பகுதியும் சென்றுவிட்டன.
அதன்பின், மூச்சுக் காற்று உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும், அடிவயிற்றுப் பகுதியில் ஏற்படும் மிகச் சிறிய அசைவின் மூலம் மட்டுமே உணர முடிந்தது.
முதன்முதலாக, விழிப்பு நிலையிலேயே மனம் “அமைதியாக” இருப்பதை உணர்ந்துகொண்டேன்.
மூச்சை உள்ளே இழுக்கும்போது மேலே ஏறிய மார்புக்கூடு, வெளியே மூச்சை விடும்போது உடனடியாகக் கீழே இறங்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
அதனுடன், மனத்தையும் பிராணனையும் ஒரே இடத்தில் நிலைநிறுத்தியதால்தான் இவ்வாறு ஏற்பட்டதா என்ற சந்தேகமும் தோன்றியது.
அப்போது திருமூலரின் இன்னொரு பாடல்:
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.”
— திருமந்திரம், பாடல் 571
இந்தப் பாடலை நினைத்துப் பார்த்தபோது, மூச்சு, பிராணன், மனம் ஆகியவற்றுக்கு இடையே ஏதோ ஒரு நுட்பமான தொடர்பு இருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெற்றது.
அந்த அனுபவத்தை, பிராணனும் மனமும் ஒரே இடத்தில் நிலைபெற்றதன் விளைவாக இருக்கலாம் என்று நான் அப்போது புரிந்துகொண்டேன்.
மேலும், என் கவனம் பிட்யூட்டரி சுரப்பி இருக்கும் பகுதியை நோக்கி உள்நோக்கிச் சென்றபோது, பிராணனும் மனமும் அந்தப் பகுதியில் ஒடுங்கியிருப்பது போன்ற ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது.
இது எனது தியான அனுபவத்திலிருந்து நான் பெற்ற ஒரு புரிதல் மட்டுமே. இதனை உடலியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்று நான் கூறவில்லை.
மனம் அமைதியாகும்போது, மூச்சின் இயக்கமும் நுண்மையாக உணரப்படுவது எனக்கு வியப்பாக இருந்தது.
அப்போது மீண்டும் திருமூலரின் மற்றொரு பாடல் நினைவுக்கு வந்தது:
“மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.”
— திருமந்திரம், பாடல் 620
இந்தப் பாடலில், மனமும் வாயுவும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகக் கூறப்படுவது என் அனுபவத்தைப் பற்றி மேலும் விசாரிக்கத் தூண்டியது.
ஆனால் இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
யோக மரபில் கூறப்படும் “பிராணன்” என்பதை உடலில் செல்லும் ஆக்சிஜனோ, கார்பன் டை ஆக்சைடோ அல்லது வெறும் மூச்சுக் காற்றோடு நேரடியாக ஒன்றாகக் கருத முடியாது.
அதேபோல், தியானத்தின் போது நான் உணர்ந்த மார்பின் இயக்கத்தையும், பிராணனின் இயக்கத்திற்கான அறிவியல் விளக்கம் என்று கூற முடியாது.
அது எனக்குக் கிடைத்த தனிப்பட்ட அனுபவம் மற்றும் அதிலிருந்து நான் மேற்கொண்ட விசாரம் மட்டுமே.
எனவே, இந்தத் தியானத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள் இயல்பான மூச்சுடன், உடலுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்காமல் பயிற்சி செய்வது நல்லது.
மூச்சை வலுக்கட்டாயமாக இழுக்கவோ, தடுத்து நிறுத்தவோ கூடாது.
தலைசுற்றல், மார்பு வலி, மூச்சுத்திணறல் அல்லது வேறு அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாகப் பயிற்சியை நிறுத்த வேண்டும்.
ஏற்கனவே இரத்த அழுத்தம், இதயம் அல்லது சுவாசம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள், இத்தகைய மூச்சு சார்ந்த பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன் தகுதியான மருத்துவரிடமும், அனுபவமுள்ள தியான ஆசிரியரிடமும் ஆலோசனை பெறுவது நல்லது.
தியானத்தின் ஆரம்பத்தில், காலை மற்றும் மாலை தலா இரண்டு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து பயிற்சி செய்யலாம் என்று நான் கருதுகிறேன்.
பின்னர், உடலும் மனமும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மெதுவாக நேரத்தை அதிகரிக்கலாம்.
இங்கு நோக்கம் மூச்சை அடக்குவது அல்ல.
மனம் அமைதியடைவதே நோக்கம்.
முடிவுரை
இந்தக் கட்டுரையை முடிக்கும்போது, மனதில் ஒரு திருப்தியும், ஒரு பணிவும் மட்டுமே இருக்கின்றன.
திருப்தி — நான் சிந்தித்த ஒரு கேள்வி, என்னை இன்னொரு கேள்விக்குக் கொண்டு சென்றது.
ஒரு கேள்வி, இன்னொரு விசாரத்தை உருவாக்கியது.
விசாரம், என்னைத் தியானத்திற்கு அழைத்துச் சென்றது.
தியானம், எனக்குள் ஒரு சிறிய அனுபவத்தைத் தந்தது.
பணிவு — அந்த அனுபவத்தை வைத்து, “இதுதான் உண்மை” என்று கூறுவதற்கு எனக்கு இன்னும் எந்தத் தகுதியும் இல்லை.
வேதாந்தம் கூறுவது போல, உண்மை என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் அல்ல; ஒவ்வொருவரும் தாமே அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
அதனால், இந்தக் கட்டுரையில் நான் கூறிய கருத்துகளை வாசிக்கும் நண்பர்கள் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
விசாரியுங்கள்.
தியானியுங்கள்.
உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை நீங்களே கவனியுங்கள்.
உண்மையானது நிலைத்திருக்கும்; உண்மையல்லாதது தானாகவே விலகிவிடும்.
இந்தக் கட்டுரையை நான் ஒரு ஆசிரியராக எழுதவில்லை.
சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு சாதகராகவே எழுதியிருக்கிறேன்.





No comments:

Post a Comment