Saturday, 5 September 2026

அன்பு

அன்பு

அன்பு — பாசம் வேறா?

அன்பை அறியாத, அன்பை வெளிப்படுத்தாத உயிரினமே இருக்காது.

ஆனாலும், “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற வள்ளுவர், கூடவே “அஃதிலார்...” என்று எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்.

முரண்பாடாகத் தோன்றினாலும், இதுவே யதார்த்தம்.

அன்பு, அதன் விரிவு, அதன் பரிமாணங்கள் போன்றவற்றைப் புரிந்துகொள்வதில் சிலரிடம் சிக்கல்கள் இருப்பதை நான் காண்கிறேன்.

நான் அறிந்து கொண்டது, புரிந்து கொண்டது, உணர்ந்து கொண்டது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எனது எண்ணங்களை இங்கே பதிவிடுகிறேன்.

எல்லோரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.

இருந்தாலும், ஒரு சிலருக்காவது இவை பயன்படலாமே என்ற நப்பாசைதான்.


மேலே தொடர்வதற்கு முன்பாக, நாம் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டியுள்ளது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல வேதனைகளுக்கான காரணம் இதில்தான் அடங்கி இருக்கிறது.

தாயன்பிற்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது என்பார்கள். தாயிடம் அன்பு இல்லையென்பது அல்ல. நாம் சாதாரணமாக ‘தாயன்பு’ என்று சொல்லும்போது, அதில் அன்புடன் பாசமும் கலந்திருக்கும் அல்லவா?

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டுவது அன்பா? அல்லது பாசமா?

இரண்டும் ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இரண்டிற்கும் இடையே நிறைய இடைவெளி உள்ளது.

அன்பு பொதுவானது; பாசம் வாசம் செய்யுமிடம் ஆழ்மனம். இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.


அன்பே சிவம்

“அன்பே சிவம்” என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். ஆனால், ‘பாசம்’ என்று வரும்போது அவர்களது அறிவுரை அதற்கு எதிராக இருக்கிறது.

“பாசவினைகள் பற்றது நீங்கி...” என்கிறது கந்தசஷ்டி கவசம்.

“ஆசைவலைப் பாசத் தகப்பட்டு மாயாமல்...” என்கிறார் பத்திரகிரியார்.

தங்கள் பிள்ளைகளிடம் பாசத்தைக் காட்டும் பெற்றோர்கள், எந்த நிலையில் அதிலிருந்து பின்வாங்கி, ‘இனி நாம் அன்பை மட்டுமே காட்ட வேண்டும்’ என்று கற்றுக்கொள்வதே இல்லை.

இதுவே வயதான காலத்தில் அவர்கள் படும் துன்பத்திற்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாகிறது.


அன்பின் இயல்பு

அன்பு அதன் இயல்பில் இனிமையானது; தூய்மையானது; பரிசுத்தமானது; களங்கமற்றது.

அதனால்தான் பிறந்த குழந்தையால் கள்ளமில்லாமல் சிரிக்க முடிகிறது.

அன்பு அதன் இயல்புப்படி ஒரு மூலப்பொருளைப் போன்றது.

அன்பு பற்றுடன் கலக்கும்போது, முதலில் ‘ஆசையாக’ மனத்தில் உருவெடுக்கிறது. பின்னர் அது பாசம், பேராசை, காமம் என மாறி, ஆழ்மனம்வரை சென்று விடுகிறது.

அதன்பின் அன்பு தூய்மையாக இருப்பதில்லை.


குழந்தையிடம் இருந்து என்ன எடுத்துக்கொள்கிறோம்?

குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும், “class-ல் first rank வாங்க வேண்டும்” என்பது போன்ற ஆசைகளை நாம் ஊட்டி விடுகிறோம்.

விளைவு?

அந்தக் குழந்தையிடமிருந்த பரிசுத்தமான அன்பு மெல்லக் காணாமல் போகிறது. அதன் களங்கமற்ற தன்மையும் மறைந்து விடுகிறது.

“மீண்டும் குழந்தையாக மாறாதவரையில்...” என்கிறார் ஏசுபிரான்.

அதன் அர்த்தம் என்ன?

மீண்டும் குழந்தைக்கே உரிய கள்ளமற்ற மனநிலை வந்தால் மட்டுமே, அந்த மனிதனிடம் தூய்மையான அன்பை எதிர்பார்க்க முடியும் என்பதுதான்.

(இது என்னுடைய புரிதல்.)


அன்பின் இரு பயணங்கள்

எந்தவொரு மனிதனும் அன்பின் துணைகொண்டு இரு வேறு திசைகளில் பயணம் செய்ய முடியும்.

ஒரு பயணம் அகவுலகம் சார்ந்தது; மற்றொன்று புறவுலகம் சார்ந்தது.

அகவுலகப் பயணம் பற்றறுக்க உதவும்; புறவுலகப் பயணம் ஏற்கனவே உள்ள பற்றை மேலும் வலுப்படுத்தும்.

அகவுலகப் பயணம் நம்மை தூய அன்பில் தக்க வைக்கும்.

புறவுலகப் பயணம் நம்மை தூய அன்பிலிருந்து வெகு தூரம் இழுத்துச் சென்று விடும்.


சத்துவ குணமும் அகவுலகப் பயணமும்

சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள் அகவுலகப் பயணம் செய்யத் தகுதியானவர்கள்.

ஏனெனில், அவர்கள் இயல்பாகவே தனித்திருக்க விரும்புவார்கள். அத்துடன், ‘அகத்தாய்வு’ செய்வதிலும் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

வாழைத்தாரில் உள்ள காய்கள் பருத்து வரும்போது, அதன் சீப்பின்மேல் படர்ந்திருந்த தோல் கழன்று கீழே விழுவதுபோல், அகத்தாய்வில் தீவிரம் கூடக்கூட, பற்றின் காரணமாக ஆழ்மனத்தில் இடம்பெற்ற தேவையில்லாத பதிவுகள் ஒவ்வொன்றாக நீங்கிவிடும்.

“As the man progresses in his inward expansion, the lower tendencies in him automatically drop off.”

— Swami Chinmayananda

பற்றறுத்த மனம் தூய அன்பாக மாறிவிடும்.

அதன்பின் அவர்களிடமிருந்து வெளிப்படுவது கருணையாக இருக்கும்.


தூய அன்புடையவர்களின் பண்புகள்

அத்தகைய மனிதர்களிடம் கீழ்க்கண்ட பாவனைகள் இருக்கும்:

  1. அவர்களிடம் அஹங்காரம் இருக்காது.

  2. எந்த இடத்திலும் தம்மை முன்னிலைப்படுத்த முயற்சிக்க மாட்டார்கள்.

  3. எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் பொறுமையுடன் கையாள்வார்கள்.

  4. தம்மைக் ‘கர்த்தா’ என நினைக்க மாட்டார்கள்; மாறாக, தம்மை இறைவனின் **‘கருவி’**யாகவே எண்ணுவார்கள்.

  5. வெற்றி–தோல்வி, இன்பம்–துன்பம் என எதுவுமே அவர்களை எளிதில் பாதிக்காது.

(இவை ஒரு சில உதாரணங்களே.)

இறையருள் பெற்ற இவர்கள் கருணையை மழையெனப் பொழிவார்கள்.

அவர்கள் தேடிச் சென்றது இறையருளைத்தான். ஆனால், நமது கண்களுக்கு அவர்களிடமிருந்து வெளிப்படும் கருணை மட்டுமே தெரியும்.


புறவுலகிலிருந்து அகவுலகிற்கு

பொருளைத் தேடி ஓடுகின்ற பலருள், சிலருக்கு மட்டுமே அதிர்ச்சி வைத்தியம் மூலம் புறவுலகை விட்டு அகவுலகிற்குத் திரும்பும் வாய்ப்பு கிடைக்கிறது.

பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரிநாதர் போன்றோர் இதற்கு உதாரணமாக இருப்பவர்கள்.

மற்றவர்கள் — அதாவது இரஜோகுணம் மற்றும் தமோகுணம் மேலோங்கியவர்கள் — அவர்கள் பெறும் அனுபவங்களின் அடிப்படையிலேயே தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.


இரஜோகுணம் நிறைந்தவர்கள்

இரஜோகுணம் நிறைந்தவர்களிடம் தன்முனைப்பு அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள்.

இவர்களில் சிலர் மட்டுமே பொதுநலத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் சமூக சேவையில் ஈடுபட்டு பலவித இன்னல்களுக்கும் ஆளாவார்கள்.

புறவுலகில் செயல்படுதல், அகத்தாய்வு, சுயசிந்தனை — இம்மூன்றும் இவர்களுக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கும்.

மனத்தில் நிம்மதியின்றி, ஒருவிதமான தவிப்பில் இருப்பார்கள்.

நல்லதொரு வழிகாட்டியின் துணை கிடைத்தால், தன்முனைப்பு குறைந்து அகவுலகில் நுழைந்து விடுவார்கள்.


புறவுலகில் இருந்தும் அகவுலகில் வாழ்பவர்கள்

இவர்களைத் தவிர, வேறு சில மனிதர்களும் அகவுலக வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

அவர்கள் புறவுலகில் பணிபுரிந்தாலும், புறவுலக நாட்டமின்றி வாழ்ந்து வருவார்கள்.

விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.


அருளைத் தேடுவதா? பொருளைத் தேடுவதா?

இனி சிக்கல்கள் நிறைந்த புறவுலகப் பயணம் பற்றி பார்ப்போம்.

அதற்கு முன், இரண்டு பயணங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

“அகவுலகில் இறைவனைத் தேடுகிறோம்; புறவுலகில் இறைவனை வேண்டுகிறோம்.”

இறைவனை வேண்டும்பொழுது, அருளைக் கேட்டால் அது அகவுலகப் பயணமாகிறது; பொருளைக் கேட்டால் அது புறவுலகப் பயணமாகிறது.

அருளை முதன்மையாகத் தேடும் பயணமும், பொருளை முதன்மையாகத் தேடும் பயணமும் வெவ்வேறு திசைகளில் செல்பவை.

இரண்டையும் வாழ்க்கையில் அனுபவிக்கலாம். ஆனால், எதை முதன்மையாகத் தேடுகிறோம் என்பதுதான் நமது பயணத்தின் திசையை நிர்ணயிக்கிறது.

“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.”

என்கிறார் வள்ளுவர்.

எனது புரிதலில், செல்வத்தை வேண்டினால் புறவுலகை நோக்கிய பயணம்; ஞானத்தைத் தேடினால் அகவுலகை நோக்கிய பயணம்.

அருள், பொருள் என்ற இரண்டு பாதைகளில் எதை முதன்மையாகத் தேடுகிறோம் என்பதுதான் நாம் செல்லும் திசையை நிர்ணயிக்கிறது.


இறைவன் எங்கே?

மனிதன் தனக்குள்ளே பயணித்தால் இறைவனை உணரலாம்.

“தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்...” என்கிறார் திருமூலர்.

தனக்கு வெளியே பயணித்தால் செல்வத்தைச் சேர்க்கலாம்.

நாம் ஆலயங்களுக்குச் செல்கிறோம்.

அங்கு ஆண்டவனைத் தேடுகிறோமா? அல்லது ஆண்டவனிடம் வேண்டுகிறோமா?

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பல உண்மைகள் புரியும்.

ஆண்டவனிடம் வேண்டுவதில் தவறில்லை; வேண்டிப் பெற்றதை அனுபவிப்பதிலும் தவறில்லை.

ஆனால், அப்படி அனுபவிக்கும்போது நமது அஹங்காரம் வளராமல் இருக்கவும், நாம் ஆண்டவனை மறக்காமல் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

அது எப்படி முடியும் என்று நினைக்கலாம்.


ரயில் பயணம்

ஒரு ரயிலில் பயணம் செய்கிறோம்.

நாம் ரயிலை ஓட்டுவதில்லை. இருந்தாலும், நாம் ரயிலில் பயணம் செய்வதை உணர்கிறோம் அல்லவா?

அதைப்போல வாழ்க்கை நெடுகிலும் ஆழ்மனம் இறைவன் புகழைப் பாடிக்கொண்டே இருக்க வேண்டும். நாமும் எந்த வேலையில் இருந்தாலும், அதைப் பற்றிய உணர்வோடு இருக்க வேண்டும்.

“ஆடும் பணியென்று அலைந்து திரிந்தாலும் — இறைவன் புகழ்
பாடும் பணியொன்றில் பயணிப்ப தெக்காலம்?”

வாழ்க்கை நெடுகிலும் நமது ஆழ்மனம் இறைவன் புகழைப் பாடிக்கொண்டிருக்க, நாமும் நாள் முழுவதும் அதைப் பற்றிய உணர்வோடு இருக்க முடிந்தால், அகவுலகப் பாதையில் பயணம் செய்யாமலே அதன் பயனை அடைந்து விடலாம்.

எளிதாகத் தோன்றினாலும், நம்மால் இதை நடைமுறைப்படுத்த முடிவதில்லை.

காரணம், ஆழ்மனத்தில் ஏற்கனவே நிறைய கழிவுகள் உள்ளன.

அவற்றை ‘வாசனாப் பதிவுகள்’ என்றும், ‘ஆணவமலம்’ என்றும் சொல்கிறார்கள்.


முல்லாவின் ஊசி

முல்லா தெருவில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த நண்பர், “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வீட்டில் ஊசியைத் தொலைத்து விட்டேன்; அதைத்தான் தேடுகிறேன்” என்றார் முல்லா.

“அதை வீட்டில் அல்லவா தேட வேண்டும்?” என்று கேட்டதற்கு,

“இங்குதானே வெளிச்சமாக இருக்கிறது!” என்று முல்லா பதில் சொன்னார்.

வேடிக்கையாகத் தோன்றினாலும், முல்லா நம்மைப் பார்த்துப் பரிகாசம் செய்கிறார்.

உள்ளுக்குள்ளே கடவுளை வைத்துக்கொண்டு, நாம் வெளியே கடவுளைத் தேடுவதைக் கண்டு ஏளனம் செய்கிறார்.


அன்பு ஏன் தூய்மையாக இல்லை?

“அன்பே சிவம்” என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.

‘அன்பும் சிவமும் இரண்டல்ல’ என்கிறார் திருமூலர்.

நம்மிடம் இருப்பது அன்பென்றால், நம்மால் ‘சிவத்தை’ ஏன் உணர முடியவில்லை?

உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்தால், நம்மிடமிருந்து கருணை மழையெனப் பொங்க வேண்டாமா?

ஏன் அது பொய்த்து விட்டது?


கங்கை நதியின் பயணம்

கங்கை நதி புறப்படும் இடத்தில் சுத்தமாகத்தான் இருக்கிறது. அதுதான் கடலிலும் கலக்கிறது.

ஆனாலும், அதன் வழிநெடுகிலும் கழிவுகள் சேர்ந்து, அதை மாசுபடுத்தி விடுகின்றன.

சுத்தமாகப் பயணத்தைத் தொடங்கிய கங்கை நதி, பயணத்தின் முடிவில் அசுத்தமான ஒன்றாக மாறிவிடுகிறது.

அதேபோல், நமது வாழ்க்கைப் பயணத்திலும் பலவகையான அசுத்தங்கள் புனிதமான அன்பை மூடி மறைத்து விடுகின்றன.

தசரதனின் அன்பைப் பாசம் மூடியது.

கைகேயியின் அன்பைப் பேராசை மூடியது.

இராவணனின் அன்பைக் காமம் மூடியது.

சகுனியின் அன்பைக் கோபம் மூடியது.

நம்முடைய அன்பை எது மூடியிருக்கிறது?


தூய அன்பு என்றால் என்ன?

அன்பு தூய்மையானது; பரந்து விரியக்கூடியது; எல்லைகளற்றது.

இருந்தாலும் “தூய அன்பு” என்றும் சொல்கிறார்களே!

அப்படியானால், ‘அன்பு’ என்பதற்கும் ‘தூய அன்பு’ என்பதற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?

ஒரு மனிதன் தன் உறவுகளுடன் அன்பாக நடந்துகொள்கிறான். ஆனால், சக மனிதர்களிடம் வெறுப்பையும் கோபத்தையும் காட்டுகிறான்.

அவனை எப்படி அன்பான மனிதன் என்று சொல்ல முடியும்?

இது,

“பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா!
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா!”

என்று கவிஞர் எழுதிய பாடலை அல்லவா நினைவுபடுத்துகிறது?

எதிர்மறை உணர்வுகள் ஏதுமின்றி, எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிந்தால், அதுவே தூய அன்பாகும்.

“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே”

என்று தாயுமானவர் பாடுவது தூய அன்பின் அடையாளம்.

எல்லா மனிதர்களிடமும் ‘அன்பு’ இருக்கிறது.

அது ‘தூய அன்பாக’ மாறுவதற்கு எது தடையாக இருக்கிறது?


அன்பு எவ்வாறு பாசமாகிறது?

மனிதன் ஒரு பொருளையோ, உயிரையோ தொடர்ந்து நினைத்துக்கொண்டிருக்கும்போது, அந்த நினைவு நாளடைவில் பற்றாக மாறுகிறது.

அந்தப் பற்று அவனது மனத்தில் ஆசையாக உருவெடுக்கிறது.

இந்த ஆசை முதலில் அவனது உணர்வு மனத்தில் பதிவாகிறது.

ஒருவேளை அந்த ஆசை நிறைவேறாவிட்டாலும், அவன் காலப்போக்கில் அதை மறந்துவிடலாம்.

ஆனால், அந்த ஆசை தொடர்ந்து வளருமேயானால், அது ஆழ்மனம்வரை சென்றுவிடுகிறது.

அங்கு அது பாசமாகவோ, பேராசையாகவோ அல்லது காமமாகவோ வேரூன்றி விடுகிறது.

மனிதனுக்கு வரும் பலவிதமான பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது இந்த ஆழ்மனப் பதிவுகளே.

இத்தகைய பதிவுகளை அகற்றும் வித்தையைக் கற்றுக்கொண்டுவிட்டால், மனம் அமைதியாகும்; உள்ளத்திலிருந்து தூய்மையான அன்பு வெளிப்படும்.

மதத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று, ஆழ்மனப் பதிவுகளைக் களைவது எப்படி என்று வழிகாட்டுவதற்காகத்தான்.


நாம் ஏன் புலம்புகிறோம்?

ஒரு திரைப்படப் பாடலில், பிச்சை எடுத்து வாழும் பெண் இவ்வாறு பாடுகிறாள்:

“ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா — இது
ஈசனுக்கு ஓய்வுநேர விளையாட்டம்மா.”

அவள் புலம்புவதில் அர்த்தம் இருக்கிறது.

ஆனால், நம்மில் பலரும் புலம்புகிறோமே! அது ஏன்?

நம்மிடம் அறிவு இருக்கிறது; சிந்திக்கும் திறனும் இருக்கிறது.

இருந்தும் சிந்திக்க மறுக்கிறோமே! அது ஏன்?

“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.”

என்கிறார் வள்ளுவர்.

இதற்கான காரணங்கள் பல:

  • தவறான முன்முடிவுகள்

  • அவநம்பிக்கை

  • காரணங்களை ஆராயத் தன்னால் முடியாது என்ற எண்ணம்

  • எல்லாம் தலைவிதி என்று நினைப்பது

இதுபோன்ற பல காரணங்களினால், நாம் அன்பை மீட்டெடுக்கும் முயற்சியையே விட்டுவிடுகிறோம்.


காமமும் குரோதமும்

“நான் அன்பான மனிதன்தானே; ஏன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்?” என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.

ஆனால், விடைதான் கிடைப்பதில்லை.

இதற்கான காரணத்தை பகவான் கிருஷ்ணர் மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார்.

கீதையில் உள்ள அற்புதமான சுலோகங்களில் இதுவும் ஒன்று.

கீதையில் அர்ஜுனன் ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறான்:

“கிருஷ்ணா, மனிதன் விருப்பமில்லாமல் இருந்தாலும், எது அவனைப் பாபம் செய்யத் தூண்டுகிறது?”

கிருஷ்ணன் பதில் சொல்லுகிறார்:

“இரஜோ குணத்தின் காரணமாக மனத்தில் எழும் காமமும் குரோதமுமே இதற்குக் காரணம். இவையே உனது பரம வைரி என அறிந்துகொள்.”

— *பகவத்கீதை, அத்தியாயம் 3, சுலோகங்கள் 36–37

‘இரஜோ குணம், காமம், குரோதம்’ — மூன்றும் நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள்தான்.

ஆனால், மேலோட்டமாகப் படித்துவிட்டு போய்விடுகிறோம்.

அதனால், நாம் படும் பல வேதனைகளுக்குக் காரணமாக இருப்பவை இவையே என்பதைப் புரிந்துகொள்ள மறந்து விடுகிறோம்.

ஆழமாகப் பார்க்க வேண்டிய விஷயம் இது.


ஏன் இரஜோகுணம்?

‘இரஜோ குணத்தின் காரணமாக வரும் காம, குரோதம்’ என்று கிருஷ்ணன் சொல்கிறார்.

அப்படியானால், சத்துவ குணம் உள்ளவர்களும், தமோ குணம் உள்ளவர்களும் பாபம் செய்ய மாட்டார்களா என்று நினைக்கலாம்.

மூன்று குணங்களையும் சார்ந்தவர்களின் பண்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று தெரிந்தால்தான், கிருஷ்ணன் ஏன் இரஜோகுணத்தை குறிப்பிட்டார் என்பது புரியும்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மை ஒன்று உண்டு:

பாபம் என்பது ஒரு செயல் மட்டுமல்ல; அந்தச் செயலால் நமக்குள் உருவாகும் எதிர்மறையான பின்விளைவையும் குறிக்கிறது.

செயல் புரிந்தால்தான் அதற்கான பின்விளைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

செயல்புரிவதற்கு தன்முனைப்பு — அஹங்காரம் — முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு மனிதனின் தன்முனைப்பிற்கு அடித்தளமாக இருப்பது, அவனது ஆழ்மனத்தில் உள்ள பதிவுகள். இதனையே ‘வாசனா’ என்றும் சொல்கிறார்கள்.


சத்துவ குணம்

சத்துவ குணம் நிறைந்த மனிதன், தனது ஆழ்மனத்தில் உள்ள பதிவுகளை நீக்கிக்கொண்டே வருகிறான்; அல்லது அவற்றின் தாக்கத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்கிறான்.

எனவே, அவனிடம் தன்முனைப்பு குறைந்து கொண்டே போகிறது.

அவன் இறைவனின் கருவியாக மாறுகிறான்.

அதன்பின் அவன் எதைச் செய்தாலும், “தன் மூலமாக அவன் செயல்புரிகிறான்” என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறான்.

அதனால், அவனது செயல்கள் பாபகரமான விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பு மிகவும் குறைகிறது.


தமோ குணம் பற்றிய தவறான புரிதல்

‘தமோ குணத்தை’ பொறுத்தவரை, நம்மிடையே ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது.

பட்டியலின மக்கள் அனைவரும் ‘தமோ குணம்’ உள்ளவர்கள் எனப் பலரும் நினைக்கின்றனர்.

அது மாபெரும் தவறு.

குணங்கள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுபவை அல்ல.

யாரிடம் மந்தம், சோம்பல், அறியாமை போன்றவை அதிகமாகக் காணப்படுகிறதோ, அவர்களிடம் தமோ குணம் மேலோங்கி உள்ளது என்று சொல்லலாம்.

அப்படிப்பட்டவர்களிடம் தன்முனைப்பு வெளிப்படையாகச் செயல்படாமல் இருக்கலாம். ஆனால், அதனால் அவர்கள் செய்யும் செயல்களின் விளைவுகளிலிருந்து அவர்கள் விடுபட்டுவிடுவதில்லை.


காமம் — குரோதம்

இப்போது ‘காமம்–குரோதம்’ என்ற வார்த்தைகளைப் பற்றிப் பார்ப்போம்.

கிருஷ்ணன் ‘காமம்’ என்று சொல்லும்போது, இங்கு ‘அதீத ஆசை’ என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘குரோதம்’ என்றால் கோபம்.

அதீத ஆசை இருந்தால் கோபம் வருவது இயற்கை என்பதால்தான், இரஜோகுணம் நிறைந்த மனிதனிடம் காமமும் குரோதமும் வரும் என்கிறார்.

மனிதனிடம் அன்பு மட்டும் இருந்தால், கோபம் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

ஆனால், அன்பு ஆசையாக, அதுவும் அதீத ஆசையாக மாறிவிட்டால், கோபம் வருவதைத் தவிர்க்க இயலாது.

காரணம்:

ஆசைப்பட்ட பொருள் கிடைக்காதோ என்ற பயம் — கிடைக்காவிட்டால் கோபம்.

ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ, அது தன்னைவிட்டு போய்விடுமோ என்ற பயம் — போய்விட்டாலோ கோபம்.


ஆழ்மனப் பதிவுகளை நீக்குதல்

ஆழ்மனத்தில் உள்ள பதிவுகளை நீக்கிக்கொண்டே வந்தால், அன்பு தூய்மையான அன்பாக மாறும்; நாமும் இறையருளை உணரத் தொடங்கலாம்.

“இருள்சேர் இருவினையும் சேரா...” என்று வள்ளுவர் சொல்லும்போது, இந்தப் பதிவுகளின் நீக்கத்தையே குறிப்பிடுகிறார் என்று நான் எண்ணுகிறேன்.

மதம் இந்தப் பதிவுகளை நீக்குவதற்கு பல வழிமுறைகளைக் கற்றுத்தருகிறது.

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


தன்னடக்கம்

இதைப் பணிவு, நாணம், கூச்சம், தன்னைத் தானே தாழ்த்திக்கொள்ளுதல் எனப் பலவாறாகக் கூறலாம்.

சுருக்கமாகச் சொன்னால்:

‘தன்னை முன்னிலைப்படுத்தாமல் ஒதுங்கி இருப்பது’ என்று சொல்லலாம்.

இதில் என்ன கஷ்டம் என்று நினைக்கத் தோன்றும்.

உண்மையில், பக்குவம் அடையாத மனிதனால், அல்லது பக்குவம் அடைய விரும்பாத மனிதனால், இதைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம்.

தந்தை வயதான காலத்தில் குடும்பப் பொறுப்பை மகனிடம் கொடுத்துவிடுகிறார்.

ஆனால், அவரால் ஒதுங்கி இருக்க முடிகிறதா?

வழிகாட்டியாக மாற வேண்டியவர், தொடர்ந்து எஜமானனாக இருக்க விரும்புவது ஏன்?

எனக்குத் தெரிந்த ஒரு அதிகாரி, பணி ஓய்வு பெற்ற பிறகு கோயிலுக்குச் சென்றார்.

அவரால் நிம்மதியாகக் கடவுளை வணங்க முடியவில்லை.

காரணம்?

அலுவலகத்தில் முன்பு தனக்கு மரியாதை செய்தவர்கள், தன்னை கோயிலில் கண்டுகொள்ளவே இல்லை என்ற கவலைதான்.

தவறு யாருடையது?

பணி ஓய்வு பெற்ற பின்பும் பதவியைச் சுமந்துகொண்டிருப்பது தேவையா?


‘நேதி நேதி’

“நேதி நேதி” என்ற வார்த்தை பிருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிறது.

அதாவது, “நான் இதுவல்ல; இதுவல்ல” என்று ஒவ்வொன்றாக ஒதுக்கித் தள்ளுவது.

எதையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ, அதன் காரணமாக வரும் எந்தத் துக்கமும் நம்மைத் தாக்குவதில்லை என்கிறார் வள்ளுவர்:

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.”

இந்தப் பண்பைக் கடைப்பிடிக்க எந்தப் பெரிய பயிற்சியும் தேவையில்லை.

அறிவுபூர்வமான புரிதலே போதுமானது.


பாசாங்கு செய்யாமை

நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று சொல்வதுண்டு.

பொய்யொழுக்கம்?

கீதையில் பகவான் ‘மித்யாசாரம்’ என்று கூறுகிறார்.

‘ஆசாரம்’ என்றால் ஒழுக்கம்.

‘மித்யா’ என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக்கொள்வது.

அது ஒழுக்கமின்மை அல்ல; பொய்யொழுக்கம்.

ஒரு அறிவிலி தன்னை அறிவாளி எனக் காட்டிக்கொள்வதைப் போன்றது.

இதைத்தான் ‘பாசாங்கு’ என்று சொல்வார்கள்.

இவர்கள் ‘உள்ளொன்று வைத்து புறமொன்று’ பேசுபவர்களாக இருப்பார்கள்.

ஆணவமலம் நீங்க வேண்டுமென்றால், இந்தப் போலித்தனம் இருக்கக்கூடாது.

“தன்னெஞ்சறிவது பொய்யற்க...” என்கிறார் வள்ளுவர்.


அஹிம்சை

அஹிம்சை என்றால் யாரையும் துன்புறுத்தாமல் இருத்தல் என நினைக்கிறோம்.

ஆனால், மனத்தால்கூட யாரையும் துன்புறுத்த நினைக்கக்கூடாது. அதுதான் அஹிம்சையின் அடையாளம்.

துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏன் வருகிறது?

நாம் கோபம் கொள்வதால்தானே வருகிறது?

ஏதோவொரு சம்பவம் நம்மைக் காயப்படுத்தும்போது, அதன் காரணமாக நமது ஆழ்மனத்தில் ஒரு பதிவு ஏற்படுகிறது. அந்தப் பதிவு பின்னர் கோபத்தைத் தூண்டுகிறது.

அந்தப் பதிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டால், நமக்குக் கோபம் வரும் வாய்ப்பும் குறையும்.

இதற்கு ஒரு வழி — நாம் விரும்பாத சம்பவங்கள் நடந்தால், அவற்றை உதாசீனம் செய்யக் கற்றுக்கொள்வது.

எதிரியைவிட மோசமான எதிரி, எதிரியின் செயலைப் பற்றிக்கொண்டு நாமே நம்மைத் துன்புறுத்திக் கொள்வதுதான்.

வாழ்க்கையில் இதைக் கடைப்பிடித்தால், நமக்குக் கோபம் வரும் வாய்ப்பு குறைந்துவிடும்.

அதனால்தான் புத்தரும் உதாசீனமாக இரு என்று அறிவுறுத்துகிறார்.


உடைமைத்தன்மையின்மை

நாம் வீடு, கார் எனப் பலவற்றைச் சொந்தமாக வைத்திருப்போம்.

ஆனாலும், நமக்கு ‘அவற்றின் சொந்தக்காரர்’ என்ற உணர்வு இல்லாதிருக்க வேண்டும்.

இதைத்தான் ‘உடைமைத்தன்மையின்மை’ என்று சொல்கிறார்கள்.

‘இவை என்னுடைய உடைமைப் பொருள்கள்’ என்ற எண்ணம் இருக்குமானால், அவற்றைப் பற்றிய எண்ணங்களை ஆழ்மனத்திலிருந்து நீக்குவது கடினம்.

அவற்றை அனுபவிப்பதில் தவறில்லை.

ஆனால், ‘உடைமைத்தன்மை’ என்ற உணர்வு மட்டும் இருக்கக்கூடாது.

Possess things; but don't have the possessor feeling.

அஷ்டாவக்ர கீதையில் மன்னர் ஜனகர் இவ்வாறு கூறுவதாகக் குறிப்பிடப்படுகிறது:

“Me nasti kinchan athava me sarvam.”

ஜனகர் என்ற முறையில் பார்த்தால் எதுவுமே என்னுடையது இல்லை; என்னுள் உறையும் இறைத்தன்மையைப் பார்த்தால் எல்லாமே என்னுடையதுதான்.

உள்ளிருக்கும் இறைத்தன்மையை உணர வேண்டுமானால், நாம் ‘உடைமைத்தன்மை’யிலிருந்து வெளியேறியாக வேண்டும்.


உடைமைத்தன்மை — பொருளுக்கும் உறவுக்கும்

உடைமைத்தன்மையின்மை குறித்து சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உறவுகளுக்கும் பொருந்தும்தானே என்று ஒருவர் கேட்டிருந்தார்.

உண்மைதான்.

உடைமைத்தன்மை குறித்து பொருளுக்குச் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உறவுகளுக்கும் பொருந்தும்.

ஆனால், பொருள்–உறவு இரண்டிற்கும் இடையே ஒருசில முக்கிய வித்தியாசங்கள் உண்டு.

ஆழ்மனத்தில் பொருளைப் பற்றிய உணர்வு பேராசையாகவும், உறவைப் பற்றிய உணர்வு பாசமாகவும் பதிவாகிறது.

மேலும், பற்று என்று வரும்போது, பொருளைவிட பாசம்தான் முன்னிலை வகிக்கும்.

பொருள் தன் கையைவிட்டு சென்றுவிட்டால், சில காலம் கழித்து அதன் நினைவு ஆழ்மனத்திலிருந்து அகன்று விடலாம்.

ஆனால், உறவு தன்னைவிட்டு அகன்றாலும் — உதாரணமாக, பெண்ணின் திருமணம் — பாசம் எளிதில் ஆழ்மனத்திலிருந்து நீங்குவதில்லை.

ஆகவே, பாசம் சம்பந்தப்பட்ட பதிவுகளை ஆழ்மனத்திலிருந்து நீக்குவது மிகவும் கடினம்.


கூட்டத்திலிருந்து தனிமைக்கு

கூட்டமாக இருப்பது சத்துவ குணம் நிறைந்த மனிதர்களுக்கு ஒத்துவராத ஒன்று.

அவர்கள் பெரும்பாலும் தனிமையையே விரும்புவார்கள்.

தனிமையில் இருப்பது சுயபரிசோதனைக்கும், சுயவிசாரணைக்கும் ஏற்றது.

இரஜோகுணம் நிறைந்த மனிதர்களுக்கு, குறிப்பாக சுயநலம் உள்ளவர்களுக்கு, தனிமை என்பது கசப்பான விஷயம்.

யாருமே தன்னுடன் இல்லாமல் தனியாக இருப்பது வேறு; தனிமை என்பது வேறு.

ஆழ்மனப் பதிவுகளை நீக்குவதற்கு அகத்தாய்வு மிகவும் முக்கியம்.

அது தனிமையில் இருந்தால்தான் எளிதாக முடியும்.

எனவே, ஒவ்வொருவரும் சிறிது நேரமாவது ‘தனிமையில்’ இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.


சுயத்தை அறிதல்

பழைய பாடல் ஒன்றில் ஒரு பாடல் வரி இப்படி இருக்கும்:

“நானே நானா, யாரோதானா...”

“நீ எதுவுமே செய்ய வேண்டாம்; ‘நான் யார்?’ என்று உன்னையே கேட்டுப்பார்” என்கிறார் இரமண மகரிஷி.

இதைச் செய்வதற்கு நமக்குத் தெளிந்த அறிவு வேண்டும்.

அதை மூன்று வழிகளில் பெறலாம்.

1. நேரடி அறிவு

அதாவது, புலன்களின் உதவியின்றி அறிந்துகொள்வது.

புலன்களின் உதவியின்றி அறிந்துகொள்வது என்றால் என்ன?

எனது நண்பனிடம் பரமாத்மா, ஜீவாத்மா பற்றி விளக்குவதற்கு ‘ஆற்று நீர்–குடத்து நீர்’ உதாரணத்தைக் குறிப்பிட்டேன்.

அதாவது, குடத்து நீரை ஆற்றில் கொட்டிவிட்டால் குடத்து நீர் தனது தனித்தன்மையை இழந்து ஆற்று நீரோடு கலந்துவிடுவது போல, ஜீவாத்மாவும் அதனை மூடியிருக்கும் திரை விலகிவிட்டால் பரமாத்மாவோடு ஒன்றாகக் கலந்துவிடும் என்றேன்.

அவனுக்கு அது புரிந்தது.

இருந்தாலும், குதர்க்கமாக ஒரு கேள்வியை எழுப்பினான்:

“குடத்து நீரை கரையில் கொட்டினால், அது ஆற்று நீரோடு கலக்காதே!”

அவன் ஏற்றுக்கொள்ளும்படியாக வேறு எதைச் சொல்லலாம் என்று சிந்தித்தேன்.

பதில் தெரியாதபோது ‘விசார’ நிலைக்குச் சென்றுவிடுவேன்.

உடனே பதில் கிடைக்கவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் பதில் தோன்றும்.

பதில் யார் மூலம் வந்தது என்று தெரியாது.

நிச்சயமாக அது விவேகமாகச் சிந்தித்து அறிந்த பதிலாக இருக்காது.

அப்படித் தோன்றிய பதில்:

“அறை முழுவதும் காற்றால் நிரம்பி உள்ளது. அறையில் காற்றடைக்கப்பட்ட ஒரு பலூன் பறந்துகொண்டிருக்கிறது. திடீரென பலூன் வெடித்துவிட்டால், பலூனுக்குள் இருந்த காற்று வெளிக்காற்றோடு இரண்டறக் கலந்துவிடும்.

இதுதான் புலன்களின் உதவியின்றிப் பெறப்படும் ‘நேரடி அறிவு’.”

இந்த உதாரணத்தை நண்பன் முழுமனதோடு ஏற்றுக்கொண்டான்.

2. ஊக அறிவு

இதற்கு விவேகம் தேவைப்படுகிறது.

‘இது என் வீடு’ என்று சொல்லும்போது, வீடு வேறு; நான் வேறு என்றாகிறது.

‘இது என் உடல்’ என்று சொல்லும்போது, நான் உடலுக்கு வேறானவன் என்பது புரிகிறதல்லவா?

இது ஊகத்தின் மூலம் பெறப்படும் அறிவு.

3. சான்றோர் வாய்மொழி கேட்டல்

விவேகமாகச் சிந்திக்க முடியாதவர்கள் இதனைக் கடைப்பிடிக்கலாம்.

‘வாய்மொழி’ என்று சொல்லும்போது, அது அவர்கள் வாய்மொழியாகப் பெற்ற நூல்களாகவும் இருக்கலாம்.

இதில் ஒரு பிரச்சினையும் உள்ளது.

தவறான மனிதர்களை நாம் சான்றோராகத் தேர்வு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


பார்வையாளனாக இருப்பது

நமக்கு தினந்தோறும் செய்யக்கூடிய கடமைகள் உண்டு.

அத்துடன், நாம் ஏற்றுக்கொண்ட மற்றும் ஒப்புக்கொண்ட கடமைகளும் உண்டு.

அவற்றைச் செயல்படுத்தும்போது நமக்குப் பிடிக்காத இடையூறுகள் வரலாம்.

அதேபோல், மற்ற சமயங்களிலும் நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கலாம்.

அதுபோன்ற சமயங்களில் பதிலளிக்க (respond) வேண்டியிருந்தால், நாம் பதிலளிக்க வேண்டும்.

இல்லையெனில், எந்தவித எதிர்வினையும் (react) செய்யாமல், வெறுமனே ஒரு பார்வையாளனாக இருந்துவிட வேண்டும்.

இது எளிதானதாகத் தோன்றினாலும், கடைப்பிடிக்கக் கஷ்டமாக இருக்கும்.

ஏனெனில், எதிர்வினையாற்றிப் பழக்கப்பட்ட மனத்தை ‘சும்மா வேடிக்கை பார்’ என்று சொன்னால் அது கேட்காது.

நாம்தான் கொஞ்சம் விழிப்பாக இருந்து, அதை நாம் விரும்பியபடி செயல்பட வைக்க வேண்டும்.

இது சரியாக நடந்தால், நடைபெறும் சம்பவம் நம் மனத்தில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அதனால், ஆழ்மனப் பதிவுகளில் மேலும் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.


வேடிக்கை பார் — தொடராதே

நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கும்போது, ‘பார்வையாளனாக’ இருப்பது எப்படி என்று பார்த்தோம்.

பல சமயங்களில் சம்பவங்கள் நடக்காவிட்டாலும், நாம் பார்வையாளனாக இருக்க நேரிடும்.

உணர்வு மனதிற்கு நான்கு வாசல்கள் உண்டு. (இது ஒரு கற்பனைதான்.)

மனம் ஒரு வாசல் வழியாகப் புலன்களின் துணையோடு புறவுலகைத் தொடர்புகொள்கிறது.

ஒரு வாசல் வழியாக அது புத்தியோடு தொடர்புகொள்கிறது.

மற்றொரு வாசல், அது பெறும் அனுபவங்களைப் பதிவு செய்யும் அறையோடு தொடர்புகொள்கிறது.

இன்னொரு வாசல், ஆழ்மனம் உணர்வு மனத்தோடு தொடர்புகொள்வதற்கானது.

(உணர்வு மனத்தால் ஆழ்மனத்தை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியாது.)

ஆழ்மனத்தில் உள்ள பதிவுகளின் தன்மைக்கு ஏற்ப, அது உணர்வு மனத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.

உணர்வு மனம் வேறு வேலைகளில் மூழ்கியிருந்தால், அந்தத் தூண்டுதல்களைக் கவனிக்காது.

வேறு வேலைகள் இல்லாதபோது, உணர்வு மனம் ஆழ்மனத்திலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப கனவுகளைக் காண ஆரம்பித்துவிடும்.

அது புதிய வீடு கட்டுவதாக இருக்கலாம்; எதிரியைப் பழிவாங்குவதாக இருக்கலாம்; விடுமுறையில் எப்படியாவது ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதாக இருக்கலாம் — இப்படி பலவிதமான கனவுகளாக இருக்கலாம்.

அதுபோன்ற சமயங்களில் புத்தியின் துணைகொண்டு ஆராய்ந்து பார்த்து, அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என்றால், நாம் விலகி நின்று மனத்தின் கனவுகளை மூன்றாவது மனிதனைப்போல வேடிக்கை பார்க்க வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் நாம் மனத்துடன் சேர்ந்து பயணம் செய்யக்கூடாது.

அப்படி செய்தால், உணர்வு மனம் நம்மைத் தவறான வழியில் நடத்திச் செல்லக்கூடும்.

மனம் காணும் கனவுகளை நாம் ஆதரிக்கவில்லை என்பது தெரிந்தால், மனம் அடங்க ஆரம்பிக்கும்.

ஆழ்மனத்திற்கும், தான் தூண்டுவதால் எதுவும் நடக்காது என்பது தெரிந்ததும், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி விடும்.


எளிமையாக இரு

‘எளிமையாக இரு’ என்றால் ஏழையாக இரு என்று அர்த்தமில்லை.

எளிமை என்றால் தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது; ஆடம்பரமான செலவுகளைத் தவிர்ப்பது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதன்மூலம் நமது அஹங்காரம் வலுப்பெறுவதைத் தவிர்க்கலாம்.


மௌனமாக இரு

“Be silent, by silencing the action;
Be silent, by silencing the thought;
Be silent, by silencing the mind;
Be silent, without knowing the silence.”

தினசரி வாழ்வில் நாம் சும்மா இருக்க வேண்டிய நேரங்களும் வரும்.

அந்த மாதிரியான நேரங்களில் நாம் தேவையற்ற செயல்களில் இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், தேவையற்ற எண்ணங்கள் எழாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இது இரண்டும் ஒழுங்காக நடைபெற வேண்டுமென்றால், அது போன்ற சமயங்களில் மனம் மௌனமாக இருந்தால்தான் முடியும்.

அதன்பின், நாம் மௌனமாக இருப்பதே தெரியாமல் மௌனமாக இருக்க வேண்டும்.


மனத்தைப் பழக்கப்படுத்துதல்

எவ்வளவுதான் முயன்றாலும், மனத்தால் மௌனமாக இருக்க முடியாது.

ஆழ்மனப் பதிவுகள் உணர்வு மனத்தைச் சும்மா இருக்க விடாது.

தேவையற்றதை மனம் சிந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால், மனத்தை வேறு திசையில் திருப்ப வேண்டும்.

என்ன செய்யலாம்?

சின்னச் சின்ன பயிற்சிகள் மூலம் நாம் மனதைப் பக்குவப்படுத்த முயற்சி செய்யலாம்.

உதாரணத்திற்காக இரண்டு பயிற்சிகளைப் பற்றி குறிப்பிடுகிறேன்.

ஒன்று சாதனத்தைப் பயன்படுத்திச் செய்வது; மற்றொன்று சாதனத்தின் உதவியின்றிச் செய்வது.

இது மாதிரி, உங்களுக்கு எது சாத்தியமோ, அதன்படி நீங்கள் பயிற்சி செய்யலாம்.

சும்மா இருக்கும் நேரங்களில் செய்யலாம்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரத்தை அதற்காக ஒதுக்கினால் நல்லது.

இந்தப் பயிற்சிகள் பெரியோர்கள் சொன்னதுதான்.

உங்களுக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.

“Mind will succumb to the thing to which it is repeatedly diverted.”

மனதால் ஒரு இடத்தில் தொடர்ந்து இருக்க முடியாது.

அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எனத் தாவிக்கொண்டே இருக்கும்.

அதனால்தான் “மனம் ஒரு குரங்கு” என்கிறார்கள்.

அதே நேரம், அதைத் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை மட்டுமே நினைக்க வைத்தால், அது அதற்குப் பழக்கமான ஒன்றாக மாறிவிடும்.


சாதனத்துடன் கூடிய பயிற்சி

உங்களுக்கு வசதியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

எல்லா நாட்களிலும் ஒரே நேரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு சிறிய அகல் விளக்கை ஏற்றுங்கள்.

சின்ன விளக்காக இருந்தால் நல்லது.

விளக்கு உங்கள் கண்ணுக்கு நேராக அல்லது சிறிது குறைவான உயரத்தில் இருக்க வேண்டும்.

எரியும் தீபத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிடம் உற்றுப் பாருங்கள்.

கவனம் வேறு எங்கும் செல்லக்கூடாது.

பிறகு கண்களை மூடிக்கொண்டு — அழுத்தமாக அல்ல, லேசாக — அந்தத் தீபத்தின் ஒளியை மனக்கண்ணால் தொடர்ந்து பாருங்கள்.

திடீரென்று மனம் வேறு எங்கோ செல்வதை உணர்வீர்கள்.

அப்போது கண்களைத் திறந்து, பயிற்சியை முதலிலிருந்து ஆரம்பியுங்கள்.

இது பழக்கத்திற்கு வந்த பிறகு, சும்மா இருக்கும் நேரங்களில் கண்களை மூடிக்கொண்டு, தீபத்தின் ஒளியை மனக்கண்ணால் காண முயற்சி செய்யுங்கள்.


சாதனங்களின் உதவியின்றி செய்யும் பயிற்சி

பல காரணங்களால், சிலரால் குறிப்பிட்ட நேரங்களிலோ அல்லது ஏதேனும் சாதனங்களின் உதவியோடோ பயிற்சியைச் செய்வது முடியாமல் இருக்கலாம்.

அத்தகைய மனிதர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

சும்மா இருக்கும் நேரங்களில் — வீட்டிலா, வெளியிலா என்பது பிரச்சினையே அல்ல — தமது மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

மூச்சுப் பயிற்சி ஏதும் செய்யக்கூடாது.

வெறுமனே மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.

(கீழே வருவது என் அனுபவம்.)

மூச்சோடு கலந்து, உங்களுக்குப் பிடித்த மந்திரத்தை, மௌனமாகவும் நாக்கு அசையாமலும் சொல்லுங்கள்.

உதாரணமாக, உங்களுக்குப் பிடித்த மந்திரம் “ஓம் நமசிவாய” என்றால், மூச்சை உள்ளே இழுக்கும்போது “ஓம்” என்றும், மூச்சை வெளியே விடும்போது “நமசிவாய” என்றும் மனத்தில் சொல்லிக்கொள்ளலாம்.

இந்தப் பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது.

நாளடைவில், இந்த மந்திரம் உணர்வு மனத்திற்கும் ஆழ்மனத்திற்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர்போலச் செயல்படத் தொடங்கலாம்.

அதன்பின், ஆழ்மனப் பதிவுகள் உணர்வு மனத்தைத் தூண்டுவது குறையலாம்.

அவரவர் விருப்பப்படி பிற மந்திரங்களையும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக:

ஓம் சரவணாய
நமோ நாராயண
ஓ ஜீசஸ்

இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், இது பழக்கமாகிவிடும்.

இதுபோன்ற பயிற்சிகள் மனத்தில் குறிப்பிட்ட பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மனம் சும்மா இருக்கும் வேளைகளில் அங்குமிங்கும் அலைபாய்வது குறையும்.


முடிவுரை

குழந்தை பிறக்கும்போது, அன்பு அதன் இயல்பாகவே வெளிப்படுகிறது.

ஆனாலும், முற்பிறவியிலிருந்து தொடரும் கர்மப் பதிவுகள், ‘பிராரப்த கர்மா’ என்ற வடிவில் அதன் வாழ்க்கையைத் தாக்குவதால், அந்த அன்பு பின்னர் பலவிதமான மாசுகளால் மூடப்படுகிறது.

மனிதன் தனது சக்தியைப் புறவுலகில் செலுத்தும்போது, மாசுடன் கூடிய அன்பு பாசமாகவும், பேராசையாகவும், காமமாகவும் — அதாவது அதீத ஆசையாகவும் — உருவெடுத்து அவனை நிலைகுலையச் செய்துவிடுகிறது.

அதே சக்தி அகவுலகில் நுழைந்தால், அன்போடு கலந்திருந்த மாசு நீங்கி, அது தூய அன்பாக மாறி, அவனை கருணை நிரம்பிய மனிதனாக மாற்றிவிடுகிறது.

மனிதனிடமிருந்த அன்பு தூய அன்பாக மாறும்போது, அந்த மனிதன் விழிப்புணர்வின் ஆரம்ப நிலையை அடைகிறான்.

அவனிடம் இருந்த விழிப்புணர்வு முழுமை அடையும்போது, அவனது உள்ளம் கருணையால் நிரம்பி வழிய ஆரம்பித்துவிடும்.

அவன் மக்களால் மதிக்கப்படும் மகானாக அடையாளம் காணப்படுவான்.

சித்தத்தின் மீது படர்ந்திருந்த பதிவுகள் நீங்கிய காரணத்தால், அவனது ஆழ்மனம் — உணர்வற்ற மனம் — சித்தத்திலிருந்து நீங்கிவிடுகிறது.

‘இறந்தார்க்கும்’ என்று வள்ளுவர் சொல்வது இவர்களைக் குறித்துத்தான் என நான் எண்ணுகிறேன்.

சித்தத்திலிருந்த மறைப்பு — ஆழ்மனம் — விலகியதால், இறையருள் அவனைச் சூழ்ந்துகொள்கிறது.

அவனும் உள்ளிருந்து — bliss sheath — பெருகும் ஆனந்தத்தை உணர்ந்துகொள்கிறான்.

“சினம் இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே”

என்று பாடுகிறார் தாயுமானவர்.

“மனம் இறக்க ஞானி பிறக்கிறான்” என்று சொல்வதும் இதனால்தான்.

ஆழ்மனப் பதிவுகள் நீங்கிய நிலையில், அவனது உணர்வு மனம் தூய அன்பின் காரணமாக கருணையால் நிரம்பி வழிகிறது.

“கருணை பொங்கும் உள்ளம் — அது கடவுள் வாழும் இல்லம்.”

— கவிஞர் கண்ணதாசன்

No comments:

Post a Comment