Friday, 2 March 2018

திருக்குறள் .. வேதாந்தப் பார்வை



                                                  

                    முன்னுரை

இந்த நூல், திருக்குறளுக்கு புதிய உரை எழுதும் முயற்சி அல்ல.

திருவள்ளுவர் கூறிய குறள்களை, சுவாமி சின்மயானந்தரின் அருளால் எனக்குப் புரிந்த வேதாந்தப் பார்வையின் ஒளியில் வாசிக்க முயன்றதன் விளைவு மட்டுமே இது.

இது பாரம்பரிய உரைகளுக்கு மாற்றாக அல்ல; அவற்றிற்கு இணையாக நிற்கும் ஒரு தனிப்பட்ட ஆன்மிகப் பார்வை.

எனவே, இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் "இதே இறுதியான பொருள்" என்று வலியுறுத்தப்படுவதில்லை. வேதாந்தத்தின் ஒளியில் திருக்குறளை வாசிக்க முயன்றதால் ஏற்பட்ட ஒரு ஆன்மிகப் பார்வை மட்டுமே.

இந்தப் புரிதலுக்குக் காரணம் என்னுடைய அறிவோ புலமையோ அல்ல. சுவாமி சின்மயானந்தரின் அருளால் புரிந்ததைப் பணிவுடன் பகிர்கிறேன்.

இந்த முயற்சி, திருக்குறளை நேசிக்கும் வாசகர்களுக்கு ஒரு புதிய சிந்தனைக் கோணத்தை அளித்தால், அதுவே இதன் பயன்.                                         
................................................................

          ஒரு வேண்டுகோள்


இந்த நூலில் திருக்குறளுக்கு அளிக்கப்படும் விளக்கங்களைப் பாரம்பரிய உரைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.

பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களின் விளக்கங்களை மறுப்பதோ, அவை தவறானவை என்று வாதிடுவதோ இந்த நூலின் நோக்கமல்ல. அவரவர் காலம், அனுபவம், சிந்தனைப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் குறளுக்குப் பொருள் கண்டுள்ளனர்.

இங்கு நான் மேற்கொள்வது வேறொரு முயற்சி.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை வேதாந்தப் பார்வையில் அணுகும்போது, அவற்றை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும் என்பதை என் புரிதலின் அடிப்படையில் எடுத்துரைக்கிறேன்.

அத்வைத சித்தாந்தப்படி எனது கருத்துக்களை முன்வைப்பதால், மற்ற சமய மரபுகளோடு இவற்றை ஒப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, இங்கு கூறப்படும் சில விளக்கங்கள் குறளின் நேரடிப் பொருளாகவோ, பாரம்பரிய உரையின் பொருளாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை குறளிலிருந்து நான் பெற்ற வேதாந்தச் சிந்தனைகள் மற்றும் ஆன்மிகப் பயன்பாடுகள்.

ஒரே குறளுக்கு வெவ்வேறு கோணங்களில் பொருள் காண முடியும். அந்த வகையில், பாரம்பரிய விளக்கங்களுக்கு எதிராக அல்லாமல், அவற்றை ஒப்பிடும் நோக்கமுமின்றி, ஒரு வேதாந்தப் பார்வையை மட்டும் இங்கு முன்வைக்கிறேன்.

சில குறட்பாக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எனது கருத்துக்கள் இருப்பதாகத் தெரியலாம். அதற்கு எனது தப்பான புரிதல்கூட காரணமாக இருக்கலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கண்ணோட்டத்திலேயே அடுத்துவரும் விளக்கங்களை வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

................................................................


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
.. திருக்குறள் 7

பாரம்பரிய உரை:-
"தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்."
……………………………………………………………………

இந்த குறள் முதலாவது அத்தியாயத்தில் வருகிறது.

இந்த அத்தியாயத்தில் 'சேர்ந்தார்க் கல்லால்' என்ற வார்த்தைகளைப் போன்று "சேர்ந்தார், சேர்ந்தார்க்கு, சேரா, சேராதார்" என்ற வார்த்தைகளும் வருகின்றன.

'தாள்சேர்ந்தார்' என்பதற்கு 'இறைவனை நினைத்து செயல் புரிதல்' என்று பலரும் பொருள் கூறுகிறார்கள்.

நினைப்பதும், சேர்வதும் ஒன்றா என சந்தேகம் வருகிறது.

பற்றுதல், உணர்ச்சி வசப்படுதல், கனவு காணுதல் போன்ற காரணங்களால் ஆழ்மனத்தில் பதிவுகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக மனிதனுக்கு ஆணவம் (அகங்காரம்) பிறக்கிறது. அந்த நேரங்களில் அவனால் இறைவனை நினைக்கத்தான் முடியம்; அவனது திருவடிகளை மனத்தால் பற்ற முடியாது.

ஆழ்மனத்தில் உள்ள பதிவுகளை நீக்கிவிட்டால், ஆணவமலமும் நீங்கி விடுகிறது. இறைவன் திருவடியை மனத்தால் பற்றிக்கொள்ள முடியும்.

"தாள்சேர்தல்" என்பது இறைவனை அவ்வப்போது நினைப்பது அல்ல; ஆழ்மனப் பதிவுகளால் வலுப்பெற்ற அகங்காரம் வலுவிழந்து, மனம் இறைநிலையில் நிலைபெறுவதாகும். அத்தகைய மனத்தில்தான் மனக்கவலை முற்றிலும் நீங்கும்.
******************************************

“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற்று உலகு”. 
... திருக்குறள் 23

பாரம்பரிய உரை:-
"பிறப்பு, வீடுகளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பில் துறவு மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்தது."
.........................................................................

மனித வாழ்க்கையின் இறுதியான கொள்கையை, இந்தக் குறளுக்கான பொருள் விளக்குகிறது.

இருந்தாலும், நாம் வேறு ஒரு கோணத்திலும் இதற்கான பொருளைப் பார்க்கலாம்.

‘இருமை வகைதெரிந்து’ என்று சொல்லும்பொழுது, அது ‘பொருட்செல்வம்’ மற்றும் ‘அருட்செல்வம்’ இரண்டையும் குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

உலகம் இரு மாறுபட்ட தன்மைகளைக் கொண்டது; 
"திரு வேறு, தெள்ளியராதல் வேறு" என்று வள்ளுவர் சொல்கிறார்.
(குறள் 374). அதாவது செல்வம் வேறு, ஞானம் வேறு என்கிறார்.

ஒன்று பொருட்செல்வத்தைக் குறிக்கிறது; மற்றொன்று அருட்செல்வத்தைக் குறிக்கிறது.
இந்த இரண்டிலும், அருட்செல்வமே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர். (குறள் 241).

அருட்செல்வத்தை நாடி தன் வாழ்க்கையைத் தொடரும் மனிதன், தர்ம நெறிகளுக்குக் கட்டுப்பட்டே தன் வாழ்க்கையை நடத்துவான்; அதனையே ‘அறம்பூண்டார்’ என எடுத்துக்கொள்ளலாம்.

ஒருவேளை, அவன் தர்மநெறிகளுக்குப் புறம்பாக நடக்க நேரிட்டால், அது குற்றமற்ற நன்மைக்காக மட்டுமே இருக்கும். (குறள் 292).

‘தர்ம நெறிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவன்’, அவனே அறியாமல்கூட துறவு மனப்பான்மையை அடையக்கூடும்.

*****************************************

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.   
... திருக்குறள் 24

பாரம்பரிய உரை:-
"அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேலான வீட்டுலகிற்கு ஒரு வித்து ஆவான்."
……………………………………………………………………
"ஓரைந்தும்" என்பதற்கு பலரும் 'மெய், வாய், கண், மூக்கு, செவி' என்ற ஐந்து ஐம்புலன் கருவிகளைக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், அவை அனைத்தும் வெறும் கருவிகள் மட்டுமே. அவை பெறும் செய்திகளை மனத்திற்கு கொண்டு செல்வது ஐம்புலன்கள்தான்.

நாம் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தாலும், மனம் எங்கேயோ சென்றுவிடுகிறதே; அதற்குக் காரணம் ஐம்புலன் கருவிகளா?

கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார் ..
"நீரில் இருக்கும் படகை காற்று அடித்துக்கொண்டு போவதுபோல், புலன்கள் (புத்தியின் வசப்படாத) மனத்தை வெளியே இழுத்துச் சென்றுவிடும்.
.. பகவத் கீதை 2.67

என் பார்வையில், இங்கு அடக்கத்தின் மையம் பொறிகளைக் காட்டிலும் அவற்றின் பின்னுள்ள புலனுணர்ச்சிகளும் அவற்றைத் தொடர்ந்து செல்லும் மனமுமே.

ஆக, அடக்க வேண்டியது ஐம்புலன்களைத்தான். இதற்கு ஒரே வழி மனத்தை புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். (Integrated mind)

அதன்பின்னர், புலன்களால்  புத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனத்தை அவ்வளவு எளிதாக வெளியே இழுத்துச் செல்ல முடியாது.

ஐம்பொறிகள் உலக அனுபவங்களை எதிர்கொள்ளும் வாயில்கள் மட்டுமே;
உலக அனுபவங்களை நோக்கி மனத்தின் மீது அழுத்தம் கொடுப்பவை ஐம்புலன்கள்தான்.

எனவே, அடக்கப்பட வேண்டியது பொறிகள் அல்ல; புலன்களே. 

மனம் புத்தியின் ஆட்சியில் நிலைபெற்றால், அது புலன்களின் அழுத்தத்திற்கு அது அடிபணியாது.
*******************************************
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி   
கணமேயும் காத்தல் அரிது 
... திருக்குறள் 29

பாரம்பரிய உரை:-
“நற்குணம் என்னும் மலையின் மேல் ஏறி நின்ற துறவியின் சினம் நிற்பது சிறு பொழுதே என்றாலும், எவர்க்கும் அதன் விளைவைத் தாங்குதல் முடியாது."
......................................................................

நற்குணம் நிறைந்த சான்றோரிடம் பழி உணர்ச்சி சிறிதும் இருக்காது. பின் எதற்காக “சினம் கொண்டால் தாங்க மாட்டாய்” என்று பொருள் கொள்ள வேண்டும்? அதுவும் நீத்தார் பெருமையை கூறவந்த இடத்தில்.

சினம் எப்பொழுது வெளிப்படுகிறது?

(இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா என்பது நமக்குத் தெரியாது; ஆனாலும் இது குறளின் பொருளைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்)

மந்தரைக்கு இராமன் மேல், அவன் சிறுவனாக இருக்கும்பொழுது, கோபம் வந்தது. அவன் இராஜகுமாரன் அல்லவா; அதனால் அவளால் தனது கோபத்தை வெளிக்காட்ட முடியவில்லை.

ஆனாலும் நடந்த சம்பவத்தை மீண்டும், மீண்டும் நினைத்துக் கொண்டிருந்ததால், மனதில் இருந்த கோபம் ஆழ்மனம் வரைக்கும் இறங்கிவிடுகிறது. 

அங்கே அது தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கனன்று கொண்டிருக்கிறது. அவள் எதிர்பார்த்த சந்தர்ப்பம், இராமனுக்கு திருமணம் நடந்து, பட்டாபிஷேகத்திற்கு தயாராக நின்ற போது வருகிறது. உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த சினத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறாள்.

ஆக, சினம் வரவேண்டுமென்றால் ஆழ்மனத்தில் அதற்குரிய காரணம் பதிவாகி இருக்கவேண்டும்.

நமக்கு யாரேனும் தீங்கு இழைத்தால், நமக்கு கோபம் வருகிறது. ஆனால் நம்மால் அந்த நேரம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால், அந்த கோபம் நமக்குள் தங்கிவிடுகிறது.

நாமும் கோபம் வருவதற்கு காரணமாக இருந்த சம்பவத்தைப் பத்திரமாக ‘அடைகாக்க’ ஆரம்பித்து விடுகிறோம். 

மீண்டும், மீண்டும் நடந்து முடிந்த சம்பவத்தை நினைக்கும் பொழுது, நமது கோபம் ஆழ்மனம் வரை சென்று விடுகிறது. நாமும் பழிவாங்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

சான்றோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு யாரேனும் தீங்கு செய்தால், சாதாரணமாக கோபம் வராது; அப்படியே வந்தாலும் கணநேரம் கூட அதை ‘அடைகாக்க’ மாட்டார்கள்.

குறளை கீழ்க்கண்டவாறு பிரித்துப் பாருங்கள்: - -

'குணமென்னும் குன்றேறி நின்றார்'

 'வெகுளி(யை) கணமேயும் காத்தல் அரிது’

இன்னொன்றும் சொல்லவேண்டி உள்ளது, குணமென்னும் குன்றேறி நிற்பவர் துறவியாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல; இல்லறத்தில் உள்ளவனும் குணமென்னும் குன்றேறி நிற்கமுடியும்.­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­
*******************************************
“அந்தணர் என்பர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்” ... திருக்குறள் 30  

பாரம்பரிய உரை:-
"எல்லா உயிர்கள் மீதும் அருளுடையவராக நடந்து கொள்வதால், அந்தணர் என்று சொல்லப் பெறுபவர் பற்றினை விட்ட துறவியர் ஆவர்."
 ...........................................................................
பற்றினை விட்ட துறவியர் மட்டுமே அந்தணர் என்று சொல்வது சரியா?

எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அனைவருமே அந்தணர் என்று அழைக்கத்தக்கவர்கள்தானே?

செந்தண்மை பூண்டு ஒழுகுதல் என்றால் என்ன? இல்லறத்தில் உள்ளவர்கள் அப்படி இருக்க முடியாதா?

இல்லறத்தில் உள்ளவர் செந்தண்மை பூண்டவர் என்று எப்படி தெரிந்து கொள்வது?

ஆசை, பாசம் இவற்றிலிருந்து விடுபட்டவர் மட்டுமே செந்தண்மை பூண்டு ஒழுக முடியும். ஏனெனில் இவர்கள் மட்டுமே பற்றின்றி இருப்பார்கள்.

“ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்....” என்கிறார் பத்திரகிரியார். இதிலிருந்து விடுபட்ட இல்லறத்தார் எப்படி இருப்பார்கள்? அதற்கும் அவரே விடை தருகிறார்; அதாவது “..புளியம்பழமும் தோடும்போல்...” என்கிறார்.

இல்லறத்தில் இருந்தாலும் ‘தாமரை இலை தண்ணீராக’ இருப்பார்கள். (Detached Attachment).

பற்றற்ற துறவியர் மட்டுமல்ல,  செந்தண்மை பூண்டு ஒழுகும் குணம் இருந்தால் பற்றின்றி வாழும் இல்லறத்தாரும் அந்தணர்தாம்.
****************************************      

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு ... திருக்குறள் 31

பாரம்பரிய உரை:-
“அறம் மக்களுக்குச் சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும்; எனவே, அவ்வறத்தைக் காட்டிலும் நன்மை தருவது வேறில்லை."
......................................................................

திருவள்ளுவர் சிறப்பையும், செல்வத்தையும் என்றா சொல்லியிருக்கிறார்?

சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும் என்றுதானே சொல்லியிருக்கிறார்.

சிறப்பு என்று சொன்னவர், செல்வம் என்று சொல்லவில்லை; செல்வமும் என்று சொல்லியிருக்கிறார்.

எதனால் இந்த வேற்றுமை?

ஒரு கற்பனை காட்சி:

தாத்தா: இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு, உனக்கு பட்டுப் பாவாடையும், பட்டுச் சட்டையும் வாங்கித் தருகிறேன்.

பேத்தி: அப்ப, பட்டாசு?

தாத்தா: பட்டாசும் வாங்கித் தருகிறேன்.

பாவாடை, சட்டை என்றவர், பட்டாசும் என்று ஏன் சொன்னார்? 

தாத்தாவைப் பொறுத்தவரை பாவாடை, சட்டை இரண்டும்தான் முக்கியம்; இருந்தாலும் பேத்தி கேட்டதால், பட்டாசும் வாங்கித் தருகிறேன் என்கிறார்.

அறத்தின் வழியில் நடந்தால் சிறப்பு ஈனும் என்று சொன்ன வள்ளுவர், அறத்தின் வழியில் நடந்தால் செல்வம் கிடைக்காதா என்று நினைக்கக் கூடும் என்பதால், செல்வமும் ஈனும் என்கிறார்.

இதில் ஒரு மெய்ப்பொருளும் அடங்கி இருக்கிறது. அறத்தின் வழியில் நடந்தால் சிறப்பு வரும். அந்த மனிதனுக்கு அவனது தகுதிக்கு ஏற்ப செல்வமும் வரலாம்; ஆனால் அவனுக்கு அதில் எந்தவித ஈர்ப்பும் ஏற்படாது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
******************************************

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.   
... திருக்குறள் 34

பாரம்பரிய உரை:-
"ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை."
……………………………………………………………………

மனதில் குற்றமில்லாமல் இருப்பதுவே அறம் என்று பொருள சொல்லுகிறார்கள். சரியான கருத்துதான்.

ஆனால், மனதில் மாசு எதுவும் இல்லை என்பதை எப்படி அறிந்து கொள்வது? அதற்கான அடையாளம்
என்று எதைச் சொல்வது?

பகவான் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் 'பாபம் என்று தெரிந்தாலும், மனிதனை எது பாபம் செய்யத் தூண்டுகிறது' என ஒரு கேள்வியை எழுப்புகிறான்.

அதற்கு கிருஷ்ணன் 'இரஜோ குணத்தின் காரணமாக வெளிப்படும் ஆசை, அதன் விளைவாக ஏற்படக் கூடிய கோபம்.. இவைதான் பாபம் செய்வதற்கான காரணிகள்' என்று பதில் கூறுகிறார்.
.. பகவத் கீதை 3.36, 3.37.

ஆழ்மனத்தில் பற்று, உணர்ச்சி பெருக்கு, தேவையற்ற கனவுகள் காரணமாக ஏற்படும் பதிவுகள் கொடுக்கும் அழுத்தம் போன்றவை மனிதனை இரஜோ குணம் மிகுந்தவனாக மாற்றி விடுகிறது.

இரஜோ குணம் முற்றிலுமாக மறையா விட்டாலும், அதனுடைய ஆதிக்கம் பெருமளவில் குறைந்தால்கூட (Sublimation of Ego) அவன் மனத்துக்கண் மாசிலன் என்ற நிலை நோக்கி முன்னேறுகிறான்.

ஆக, "மனத்துக்கண் மாசிலன்" என்பதற்கு வெளிப்புற ஒழுக்கம் மட்டுமே அளவுகோல் அல்ல. மனத்தில் ஆசையும் கோபமும் எந்த அளவுக்கு குறைந்துள்ளன என்பதே அதற்கான உண்மையான அடையாளம். 

ஆசை குறையக் குறைய மனம் சத்துவத்தை அடைகிறது. அத்தகைய மனத்தில்தான் வள்ளுவர் கூறும் "மனத்துக்கண் மாசிலன்" என்ற அறநிலை மலர்கிறது.
****************************************

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை     
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை   
 ... திருக்குறள் 37

பாரம்பரிய உரை:-
“அறத்தின் பயன் இன்னதன்மையுடையது என்று சொல்ல வேண்டியதில்லை; பல்லக்கைச் சுமந்து செல்பவனுக்கும், அதில் ஏறிச் செல்பவனுக்கும் உள்ள வேற்றுமையே அதனைக் காட்டிவிடும்."
......................................................................

இந்தக் குறளுக்கு வேறுவித விளக்கங்களும் உள்ளன.

நாம் சமூக நீதியின் கோணத்தில் இதனைப் பார்ப்போம்.

வள்ளுவர் காலத்தில் பயணம் செய்வதற்கு பல்லக்கு ஒரு முக்கிய வாகனம். அதில் பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள், மதகுரு, மந்திரி மற்றும் பணக்காரர்கள் போன்றோர் போவதுண்டு.

இவர்களில் மதகுரு, மந்திரி இருவரும் அறம் என்றால் என்னவென்று தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

பணக்காரர்களுக்கு அறம் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும், அதனைப் பற்றிய கேள்விஞானம் இருப்பதுண்டு.

இவர்கள், அறம் என்றால் என்னவென்று தெரிந்திருந்தும், கால்களால் நடக்காமல் பல்லக்கில் அமர்ந்து ஊர்ந்து செல்லலாமா; இவர்களிடம் அறத்தைப் பற்றி பேசி என்ன பயன்?

அடுத்தவர்களைத் துன்பப்படுத்தி, அவர்கள் சுமக்கும் பல்லக்கில் ஊர்ந்து செல்பவர்களிடையே அறத்தைப் பற்றி பேசுவது வீண் என்று வள்ளுவர் சொல்கிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது. இதில் ஒரு சமுதாயச் சாடல் தெரிகிறது.

அடுத்தவன் முதுகில் சவாரி செய்பவனிடமும், அடுத்தவன் வயிற்றில் அடித்து பிழைப்பவனிடமும் அறத்தைப் பற்றிப் பேசாதே என்பதே என் கருத்து..
*******************************************

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்      
இல்வாழ்வான் என்பான் துணை 
... திருக்குறள் 42

பாரம்பரிய உரை:-
“துறவியர்க்கும் ஏழைக்கும் ஆதரவின்றி இறந்தவர்க்கும் இல்வாழ்க்கையில் இருப்பவன் துணையாவான்."
.....................................................................

‘இறந்தார்க்கும்’ என்பதற்கு ஆதரவின்றி (உடல்) இறந்தவர்கள் என்று சொல்வது சரிதானா?

உடல் இறப்பது ஒன்றுதான் இறப்பா? வேறுவகையான இறப்பு என்று எதுவும் இல்லையா?

“சினம் இறக்கக் கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே” என்பதற்கு என்ன பொருள்?

பாரம்பரியமாக ‘இறந்தார்’ என்பது உடலால் இறந்தவர்களைக் குறிக்கும். ஆனால் ‘மனம் இறத்தல்’ என்ற ஆன்மிகக் கருத்தையும் வள்ளுவரின் இந்தக் குறளோடு இணைத்துப் பார்க்க முடியுமா என்ற ஒரு சிந்தனை இங்கு எழுகிறது.

இரமண மகரிஷி வாலிபப் பருவத்தில், அண்ணாமலையில் கடும் தவம் செய்த பொழுது, அவர் மனம் இறந்த நிலையில் இருந்தார். பிச்சை எடுத்து உடலைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாத நிலையில் அவர் இருந்தார். அப்பொழுது பல இல்லறத்தார்கள் அவரைப் பராமரித்து வந்தனர்.

ஆக, உடல் இறந்த மனிதருக்கல்ல, மனம் இறந்த மனிதருக்கு இல்வாழ்வான் துணைநிற்க வேண்டும். ஏனெனில் மனம் இறந்த துறவியர்கள் இல்லறத்தான் இருக்கும் வீடுதேடி வந்து பிச்சை கேட்கமாட்டார்கள்.
*****************************************
அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.   
... திருக்குறள் 72

பாரம்பரிய உரை:-
"அன்பில்லாதவர் எப்பொருளையும் தாமே அனுபவிப்பர். அன்புடையவர் தம் பொருள் மட்டுமன்று, தமது உடலையும் பிறர்க்கு உரிமையாக்குவர்."
...........................................................................


'அன்பிலார் எல்லாந் தமக்குரியர்'
... இந்த வார்த்தைகளை மாற்றிப்போட்டால், என்ன தெரிகிறது?

'எல்லாம் தமக்குரியர்' என்று நினைப்பவர் 'அன்பிலா மனிதர்' என நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?

அன்பு என்று சொல்லும்பொழுது மனிதர்களை இரண்டு வகையாகப் 
பிரிக்கலாம்.

1. தாம் நேசிக்கும் மனிதர்களிடம் மட்டும் அன்பு வைப்பவர்கள்;.

2. தாம் நேசிக்கும் மனிதர்களிடம் அன்பு வைப்பதுடன், பிறரையும் நேசிப்பவர்கள்.

இதில், முதலில் குறிப்பிட்ட மனிதர்களையே ‘அன்பிலார்’ என்று
எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

இரண்டாவதாக வரும் மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்?
பழைய பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது ...
“பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக இருப்பவர் தெய்வமடி; தன்
பசியைக் கருதாது பிறர்க்கு கொடுப்போர்கள் தெய்வத்தின்  
தெய்வமடி”.

*****************************************

அடக்கம் அமரருள் உய்க்கும்  அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்                    ...  திருக்குறள் 121

பாரம்பரிய உரை:-
“அடக்கம்  என்னும் பண்பு ஒருவனைத் தேவர் நடுவே கொண்டு சேர்க்கும்; அடங்காமை என்னும் குணம் நரகத்தில் தள்ளிவிடும்."
………………………………………………………………………

இந்த குறளில் உள்ள ‘அடக்கம்’ என்ற வார்த்தையை கொஞ்சம் ஆராய வேண்டி உள்ளது.

கீழே கொடுத்துள்ள வார்த்தை ஜோடிகளைப் பாருங்கள்:-

          அடக்கு                  அடங்கு
          அடக்குதல்           அடங்குதல்
          அடக்காமை         அடங்காமை
          அடக்கம்                 ?????????

கேள்விக்குறி உள்ள இடத்தில் என்ன வார்த்தையைப் போடவேண்டும்?
அங்கும் ‘அடக்கம்’ என்ற வார்த்தைதானே வரும்.

மேலே உள்ள குறளில் ‘அடங்காமை’ என்ற வார்த்தை வருவதினால், இங்கு ‘அடக்கம்’ என்பது ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கத்தைதானே குறிக்கும்.

அடங்குதல்’ என்று சொல்லும்பொழுது, மனம் அடங்குவதையே, அதாவது ஒரு மனிதனின் ‘தன்முனைப்பு’ (அகங்காரம்) அடங்குவதையே குறிப்பிடுகிறோம்.

‘அடங்குதல்’ காரணமாக வரும் ‘அடக்கம்’, எந்த மனிதனுக்கு சாத்தியமாகும்?

குணத்தைப் பொறுத்து மனிதனை மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவர்களில் யாருக்கு இந்த ‘அடக்கம்’ கைகூடும்?


மற்றவரின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு நடக்கும் மனிதன் அடக்கமாக நடந்துகொள்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அந்த ‘அடக்கம்’ அடங்குதல் காரணமாக வரும் அடக்கமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

தன்முனைப்பு மிக்கவனாக உள்ள மனிதனின் செயலில்  பரபரப்பும், மனத்திற்குள் கொந்தளிப்பும் இருந்துகொண்டே இருக்கும். அத்தகைய மனிதனிடம் அடக்கத்தை எதிர்பார்க்க முடியாது. .

‘சத்துவ’ குணம் உள்ள மனிதனிடம் மட்டுமே, ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கத்தை காணமுடியும். 

ஆனால் இங்கும், திருவள்ளுவர் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறார்.

‘சத்துவ’ குணம் உள்ளவர்களிடம் இயல்பாகவே ஆன்மிக விசயங்களை கற்றுக்கொள்வதிலும், அவற்றில் உள்ள மெய்ப்பொருளை உணர்வதிலும், தான் உணர்ந்ததை பிறருக்கு எடுத்துச் சொல்வதிலும் ஒரு ஆர்வம் இருக்கும். அதனாலேயே அவர்களிடம் ‘அடங்குதல்’ காரணமாக வரும் ‘அடக்கமும்’ இருக்கும் என்று சொல்லமுடியாது என்கிறார் அவர். 

குறள் 834 -ஐ பாருங்கள்:
“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்  
தானடங்காப்
பேதையின் பேதையார் இல்”.

இங்கும் அவர் ‘தானடக்கா’ என்று சொல்லவில்லை; ‘தானடங்கா’ என்றுதான் சொல்லுகிறார்.

அதாவது ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கத்தைதான் அவர் குறிப்பிடுகிறார்.
*****************************************

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
... திருக்குறள் 124

பாரம்பரிய உரை:-
"தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்."
……………………………………………………………………
'நிலையில் திரியாதவன் தோற்றம்' என்று சொல்லாமல், 'அடங்கியான்' என்ற வார்த்தையை இடையில் சேர்க்க காரணம் என்ன?

'நிலையில் திரியாது' இருக்கும் ஒருவன் என்றேனும் ஒருநாள், நிலை தடுமாறி மீண்டும் 'நிலையில் திரிய' ஆரம்பித்துவிடலாம்.

அகத்தளவில் மனம் அடங்கினால் மட்டுமே, அவனால் தொடர்ந்து 'நிலையில் திரியாமல்' இருக்க முடியும்.

மனம் எப்போது அடங்கும்? ஆணவமலம் நலிவடைந்தால் மட்டுமே, மனம் அடங்கும்.

ஒருமுறை மனம் அடங்கிவிட்டால், அதன்பின் அவன் நிலையில் திரிய மாட்டான்.

ஆணவமலம் இருக்கும் வரை மனம் அலைபாயும். மனம் அலைபாயும் வரை நிலையில் திரியாமை உறுதியாக இருக்காது. 

ஆணவமலம் நலிவடைந்து மனம் அடங்கிய பிறகு, நிலையில் திரியாமை அவனது இயல்பாகிவிடும்.
*******************************************

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து
 ... திருக்குறள் 125

பாரம்பரிய உரை:-
“அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நல்லதாகும்; அவெல்லாருக்குள்ளும் செல்வர்க்கே அது மற்றொரு செல்வமாகும் சிறப்பினையுடையது."
......................................................................

இந்த குறள் ‘அடக்கமுடைமை’ என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது. ‘அடக்கமுடைமை’ என்று சொல்லும்பொழுது, அடங்குதல் காரணமாக வரும் அடக்கம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதே அதிகாரத்தில் ஒரு குறளில் “கற்றடங்கல் ஆற்றுவான்” என்று வள்ளுவர் சொல்கிறார். கற்றால் மட்டும் போதாது; மனம் அடங்கவேண்டும் என்கிறார்.

மனம் எப்பொழுது அடங்கும்? மனம் இறந்தால் மட்டுமே மனம் அடங்கும். சற்று விரிவாகப் பார்ப்போம்.

‘பணிதல்’ என்பது போலியாக இருக்கலாம்; நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம்; வேறு எந்தக் காரணமாகவும் இருக்கலாம்; ஆனால் அது உண்மையான ‘பணிதலாக’ இருக்கமுடியாது.

'பணிவு'  ஒரு மனிதனின் சுபாவமாக இருப்பதற்கு என்னசெய்ய வேண்டுமென்று இந்த குறளில் ஒரு குறிப்பு தருகிறார் வள்ளுவர்.

“அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து” என்பதை, புதிய கோணத்தில் பார்க்கத் தோன்றுகிறது. (இந்தப் பார்வை ஒரு மாறுபட்ட கோணத்தில் வருகிறது)

இதை
 “அவர் உள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து” என்று பிரித்துப் பொருள்கொண்டால் நமக்கு உண்மை விளங்கும்.

“உள்ளும் செல்வர்க்கே” என்பதை ‘அகத்தாய்வில் ஈடுபடுபவர்க்கே’ என்று எடுத்துக்கொண்டால், அதனால் விளையும் பலன்கள் ஒன்றன் பின் ஒன்றாக நமக்குத் தெரியவரும்.

ஒரு மனிதன் அகத்தாய்வில் ‘அதி தீவிரத்துடன்’ முழு மூச்சாக ஈடுபடும்பொழுது, அந்த அகத்தாய்வு அவனை ஆத்ம விசாரம்வரை கொண்டு செல்லுமானால் அவனது ‘தன்முனைப்பு’ சிறிது, சிறிதாக குறையத் தொடங்கும்.

அத்துடன் அவன், ‘என்னுடைய’ என்னும் பற்றிலிருந்து விடுபட்டு ‘உடமைத்தனம்’ இல்லாதவனாக மாற ஆரம்பிக்கிறான்.

‘உடமைத்தன்மையின்மையின்' அளவு பூரணமாகும்பொழுது, 
அவனது ஆழ்மனம் நிர்மலமாகிறது. 

இப்பொழுது அந்த மனிதனிடம் இருப்பது உண்மையான, போலித்தனமில்லாத “பணிவு”; அதனை “நாணம்” என்றும் சொல்லலாம்.

இந்தப் பணிவு, அந்த மனிதனுக்கு ஒரு ‘அணிகலனாக’ மாறிவிடுகிறது; “அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு” என்கிறார் வள்ளுவர்.

இதுவே எல்லா செல்வத்தையும் விட பெரிய செல்வம் என எண்ணுகிறேன்.
******************************************

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.  
... திருக்குறள் 126  

பாரம்பரிய உரை:-
"ஆமை தன் உறுப்புகளை உள்ளே இழுப்பதுபோல ஒருவன் ஒரு பிறப்பில் ஐம்பொறிகளையும் அடக்குவானெனில், அஃது அவனை அடுத்த ஏழு பிறப்புகளிலும் தீமையிலிருந்து பாதுகாக்கும்."
.....................................................................

ஐம்பொறிகளை அடக்குவது என்றால் என்ன? ஐம்பொறிகளை அடக்க முடியுமா என்ன?

கண்ணால் பார்க்கிறோம், காதால் கேட்கிறோம் என்று சொல்வார்கள். ஆனால் கண்ணால் பார்க்க முடியுமா அல்லது காதால் கேட்கத்தான் முடியுமா?

ஒரு சம்பவம் நடக்கும்பொழுது, கண் அதைப் பார்க்கிறது; காதும் அங்கு நடக்கும் உரையாடல்களைக் கேட்கிறது. ஆனால் அந்த நேரத்தில், குறிப்பிட்ட மனிதனின் மனம் அங்கு இல்லையென்றால், அந்த மனிதனால் நடைபெற்ற சம்பவத்தை நினைவு கூற முடியுமா?

உண்மையில் கண்ணும், காதும் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உதவும் கருவிகளே. அவற்றின் பின்னே ஐம்புலன்கள் உள்ளன. அவை ஐம்புலன்கருவிகளுக்கும், மனதிற்கும் இடையே இணைப்புபாலமாக செயல்படுபவை.

‘ஐந்தடக்கல்’ என்று சொல்லும்பொழுது, அது ஐம்புலன்களின் அடக்கத்தையே குறிக்கிறது. ஆனால், ஐம்புலன்கள் எப்பொழுது அடங்கும்?

மனிதனிடம் உள்ள தன்முனைப்பு, அதன் தீவிரத் தன்மையிலிருந்து குறையும்பொழுது மட்டுமே, அவனது மனம் அடங்க ஆரம்பிக்கும். மனம் அடங்க, அடங்க, அது புறவுலகிலிருந்து ஒதுங்க ஆரம்பிக்கும்; அதன்பின் அது ஒடுங்கவும் ஆரம்பித்துவிடும்.

மனம் ஒடுங்க, ஒடுங்க, அது ஊமையாகிவிடுகிறது; அப்போழுது மட்டுமே, ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கின்றன.

அதனால்தான் ‘பத்திரகிரியாரும்’ - -
ஆமை வருமாட்கண்டு 
ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு 
ஒடுங்குவ  தெக்காலம்? – என்று பாடுகிறார்.
******************************************

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"
... திருக்குறள்129

பாரம்பரிய உரை:-
"ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது."
…………………………………………………………………

இந்தக் குறளுக்கான பொருள் சரியாகவே உள்ளது. ஆனாலும், 'தீயால் சுட்ட புண்', 'நாவால் சுட்ட வடு' இரண்டிற்கும் இடையே ஒரு மெய்ப்பொருள் மறைந்துள்ளது.

தீயால் சுடும் போது, அதனால் தோல், அதன் உள்ளே உள்ள சதை இரண்டும் பாதிக்கப் படுகின்றன. நாளடைவில் தீக்காயம் குணமானாலும், தோலில் உள்ள வடு நீங்காது; இருப்பினும் உள்ளே உள்ள சதைப்பகுதி முற்றிலும் ஆறிவிடும்.

தீக்காயம் புறத்தே நிகழ்ந்த நிகழ்வு. நாவினால் சுட்ட வடு நெஞ்சில் நிகழ்கிறது? அதை நெஞ்சில் நிகழ்த்தியது யார்?

கொடிய வார்த்தைகளை கொட்டியவனால் நெஞ்சில் காயத்தை ஏற்படுத்த முடியாது. அதை ஏற்படுத்துவது நமது மனமே!?

பாஞ்சாலி கொடிய வார்த்தைகளை கொட்டவில்லை; கேலியாக சிரித்தாள்.அதை பொருட்படுத்தாமல் இருக்கத் தெரியாததால், அது துரியோதனன் மனத்தில் நீங்காத வடுவாக மாறிவிடுகிறது.

ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. குடும்ப விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். என் உறவினர் ஒருவரும் வந்திருந்தார். அவருக்கு என்னை பிடிக்கும்; என்னை கேலி செய்வது மிகவும் பிடிக்கும்.

நான் அணிந்திருந்த செருப்பை பார்த்துவிட்டு "ஏண்டா, முருங்கை மரத்தில் கட்ட வேண்டிய செருப்பை இப்படி கால்ல போட்டிருக்க?"
(நான் செருப்பு வாங்கினால் அது பழுதடையும் வரை மாற்றுவதில்லை. ஆனால், அவரோ அடிக்கடி புது செருப்பு வாங்கி விடுவார்)

அவர் கேலியாக சொன்னாலும், நாலு பேர் முன்னாலே சொன்னால், நமக்கு கோபம் வருவது சகஜம் தானே!?

ஆனால், நான் கூறிய பதில் "சத்தம் போட்டு சொல்லாதீர்கள்; இந்த செருப்பையே அங்கே இருந்துதான் எடுத்து வந்தேன்". எனது உறவினர் உட்பட அங்கிருந்த அனைவரும்
 உடனே சிரித்து விட்டார்கள்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது:- 
தீ போன்றவைகளால் ஏற்படும் காயத்தை நம்மால் தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால், நெஞ்சில் வடு ஏற்படுவதும், ஏற்படாமல் போவதும் நம் கையில் தான் உள்ளது.

அதற்கு நாம் செய்ய வேண்டியது. தீய சொற்களை 'எப்படி உதாசீனம் செய்வது' என்று கற்றுக் கொள்வதுதான்.

*****************************************

“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”.     
... திருக்குறள் 202   

பாரம்பரிய உரை:-
"தீய செயல்கள், தம்மைச் செய்தவனுக்குத் துன்பம் தருதலால், அவை தீயைவிட அதிகமாக அஞ்சத் தக்கவையாகும்."
……………………………………………………………………....
தீயவை என்பதற்கு தீய செயல்கள் என பொருள் தரப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தீய செயல்கள் செய்வதற்கு காரணமாக இருப்பது அவன் மனதில் உள்ள தீய எண்ணங்கள். (உ.ம். பொறாமை, வெறுப்பு, பழியுணர்ச்சி போன்றவை). இந்த எண்ணங்களுக்கு காரணமாக இருப்பது அவனுக்குள்  அனுபவங்கள் மூலமாக ஏற்படும் பதிவுகள்.

ஒவ்வொரு மனிதனிடமும் உணர்வு மனம், உணர்வற்ற மனம் என்று இரண்டு வகை உண்டு. உணர்வற்ற மனத்தை ஆழ்மனம் என்றும் சொல்வதுண்டு.

உணர்வு மனத்தில் ஏற்படும் பதிவுகள் மாறிக்கொண்டேயிருக்கும். ஆனால், ஆழ்மனத்தில் ஏற்படும் பதிவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும். இதில்தான் தீய எண்ணங்கள் உருவாக காரணமாக இருக்கும் பதிவுகளும் ஏற்படுகின்றன.

இத்தகைய பதிவுகளைத்தான் தீயினும் அஞ்சத்தக்கவைகளாக நினைக்கவேண்டும்.
****************************************

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு           
... திருக்குறள் 215

பாரம்பரிய உரை:-
உலகத்தார் நன்றெனக் கொண்டவற்றை விரும்பிச் செய்யும் அறிவாளியின் செல்வம் ........”
....................................................................

“பேரறிவாளன்” என்றால் என்ன?

ஓரறிவு, ஈரறிவு என்ற வரிசைப்படிப் பார்த்தால் மனிதன் ஆறறிவு படைத்தவன். இருந்தாலும் அவனும் சிற்றறிவாளன்தான். ஏனெனில் ஆறாவது அறிவைத் தொடர்ந்து, ஏழாவது அறிவு, எட்டாவது அறிவு என்றெல்லாம் சொல்கிறார்களே!

அப்படியானால், பேரறிவாளன் என்பவன் யார்?

எவனொருவன் பேரறிவை, இறைத்தன்மையை அறிந்துகொள்கிறானோ, அவனே பேரறிவாளன் ஆகிறான் என்பது எனது எண்ணம்.

அத்தகைய மனிதனின் செல்வம் மட்டுமே ஊருணி நீராக உலகத்தாருக்கு பயன்படும்.

மற்றவர் செய்யும் ஈகை, பயனை எதிர்பார்க்கும் தன்மை உடையதாகவும் இருக்கலாம் அல்லவா?
*****************************************

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.       
... திருக்குறள் 216  

பாரம்பரிய உரை:-
"பிறருக்கு உதவி செய்பவனிடத்தில் செல்வம் உண்டாகுமானால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிக்க மடத்தில் பழம் பழுத்தது போன்றதாகும்."

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 
 ... திருக்குறள் 217  

பாரம்பரிய உரை:-
"உதவி செய்யும் பெருந்தன்மை யுடையவனிடத்தில் செல்வம் உண்டானால், அது, தனது எல்லா உறுப்புகளும் மருந்தாகி நோயைத் தவறாது தீர்க்கும் மரம் போன்றதாகும்."
......................................................................

இந்த இரண்டு குறள்களுக்கும், வேறு ஒரு கோணத்திலும் பொருள்கொள்ள முடியும்.

இந்தக் குறள்களை இலக்கியச் செல்வத்திற்கும் உவமையாகப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

கவி கம்பனிடம் ஒரு செல்வம் இருந்தது; ஆனால் அது ஒரு நயனுடையான் கண்ணில் பட்டபொழுதுதான் உலகுக்கு அறிமுகமானது. 

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும் அதேபோலத்தான்; மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்ற மறுத்துவிட்ட சம்பவம், ஒளவையார் கவனத்திற்கு வந்தபொழுதுதான் அது பொற்றாமரைக் குளத்தில் அரங்கேறியது.
(இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா என்பது தெரியாது; ஆனாலும் குறளை விளக்குவதற்கு ஏற்றதாக உள்ளது)

ஆக, இந்த இரண்டு குறள்களுக்கும், ‘செல்வம் நயனுடையான் கண்ணில் பட்டபொழுது’, ‘செல்வம் பெருந்தகையான் கண்ணில் பட்டபொழுது’ என்றும் பொருள் சொல்லலாம்.
*******************************************
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. 
 ... திருக்குறள் 220

பாரம்பரிய உரை:-
"பிறர்க்கு உதவி செய்வதால் பொருட்கேடு உண்டாகும் என்றால், ஒருவன் தன்னை விற்றாயினும் வாங்கும் தகுதி உடையது அது."
..........................................................................

‘பிறர்க்கு உதவி செய்வதை’ வைத்து ஒருவனை ஒப்புரவாளன் என்று சொல்ல முடியுமா?

தவறான வழிகளில் பணம் சேர்த்து, அதிலிருந்து ஒருவன் உதவி செய்தால் அதனை ‘ஒப்புரவு’ என்று நினைக்க முடியுமா?

தனது நலனை, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல், பிறரது நலனுக்காக பாடுபடுபவர்களைத்தானே ‘ஒப்புரவாளர்கள்’ என்று சொல்ல முடியும்.

மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்றோரை அல்லவா ‘ஒப்புரவாளர்கள்’ என்று சொல்ல வேண்டும்.
*****************************************

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். 
... திருக்குறள் 243 

பாரம்பரிய உரை:-
"உயிர்களிடத்தில் கருணையுள்ள மனமுடையவர்கள், இருள் நிறைந்த துன்பமுடைய நரகத்தில் செல்லமாட்டார்."
...........................................................................

‘இன்னா உலகம்’ என்றுதான் வள்ளுவர் சொல்கிறார்; உலகம் முழுவதும், அந்த மனிதனைப் பொறுத்தவரை, துன்பத்தால் நிரம்பியிருக்கிறது போன்ற உணர்வைத் தரும் என்கிறார்.


அருள் நிறைந்த மனிதனுக்கு, உலகத்தில் துன்பம் என்பதே கிடையாது என்கிறார்.

அப்படியானால் அவர்கள் உலகத்தில் துன்பம் எதையும் சந்திக்க மாட்டார்களா என்ன?

‘அன்பு’ என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது.

இருந்தாலும் மனிதர்கள் இரண்டு வகையானவர்கள் என்கிறார் வள்ளுவர். “திரு வேறு; தெள்ளியராதல் வேறு” என்கிறார்.

அதாவது பொருளைத் தேடி ஓடுபவர்கள்; அருளைத் தேடி ஓடுபவர்கள் என இரண்டாகப் பிரிக்கிறார்.

பொருளைத் தேடி ஓடும் மனிதர்கள், பொதுவாக ‘பேராசை’, ‘பாசம்’, ‘காமம்’ போன்ற தளைகளில் மாட்டிக்கொண்டு, தான் நினைத்ததை அடையவேண்டும் என்று போராடுபவர்களாக இருப்பார்கள்.
 
நினைத்ததை அடையமுடியவில்லை என்றால், அவர்கள் படும் துன்பம் இருள் நிறைந்த உலகம் போன்று தோன்றும்.

மாறாக, அருளைத் தேடி ஓடும் மனிதனோ, எந்தவித தளைகளிலும் மாட்டிக்கொள்ளதவனாக இருப்பான்; இறைவனின் திருவருளைத் தேடி ஒடுபவனாக இருப்பதால், கருணை நிறைந்த மனிதனாக அவன் மாறி விடுவான். அதன்பின் அவனுக்குத் துன்பம் வந்தால்கூட, அதையும் அவன் இறைவன் தரும் பிரசாதமாகவே எடுத்துக்கொள்வான்.

அவனைப் பொருத்தவரை ‘இருள் சேர்ந்த இன்னா உலகம்’ என்பதே கிடையாது.

*****************************************

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
 ... திருக்குறள் 266   

பாரம்பரிய உரை:-
"தவம் செய்கின்றவரே தமக்கு உறுதியாகிய நற்செயலைச் செய்பவராவர்; தவம் செய்யாதவர் ஆசையாகிய வலையில் சிக்கித் தமக்குத் தீமை செய்பவராவர்."
.....................................................................  
‘தவம் செய்கின்றவரே’ என்று சொல்லும்பொழுது, தியானம் செய்கிறவர்கள் மற்றும் துறவிகள் மட்டுமே என்று நினைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

அத்துடன் ‘தவம் செய்யாதவர் தீமை செய்பவராவர்’ என்பதும் சரியான பொருளைத் தருவதாகத் தெரியவில்லை.

தவம் செய்பவர்கள் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்; அவர்கள் பெரும்பாலும் துறவு நிலையை விரும்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் தமது இயல்புக்குத் தகுந்த செயல்களில்தான் ஈடுபடுவார்கள்; அதனையே ‘தங்கருமம்’ என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதேநேரம், ‘உயிர்க்குறுகண் செய்யாமை தவத்திற்கு உரு’ (குறள் 261) என்று வள்ளுவர் சொல்வதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?

குறள் 374-ல் ‘திருவேறு தெள்ளியராதலும் வேறு’ என்கிறார். அதாவது, வாழ்க்கைத் தரத்தில் (செல்வத்தில்) நாட்டமுள்ளவர்கள், வாழ்க்கை நெறியில் (ஞானத்தில்) நாட்டமுள்ளவர்கள் என மனிதர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்.

செல்வத்தில் நாட்டமுள்ளவர்களில், சிலர் வாழ்வியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செல்வம் சேர்க்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

மற்றவர்கள் வாழ்வியல் நெறி முறைகளுக்குக் கட்டுப்படாமலும் செல்வம் சேர்க்க விரும்புவார்கள். அவர்களிடம் ஆசை மிகுந்து காணப்படும்.  

வாழ்வியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்புரிபவர்கள், ‘உயிர்க்குறுகண்’ செய்யமாட்டார்கள். எனவே, அவர்கள், இல்லற தர்மத்தில் இருந்தாலும், தவம் செய்பவர்களே என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

நெறிமுறைகளுக்குக் கட்டுப்படாத மற்றவர்கள் மட்டுமே, தமக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் தீமை புரிபவர்களாக இருப்பார்கள்.
­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­******************************************

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோவா தவர்.             
… திருக்குறள் 270  

பாரம்பரிய உரை:-
"உலகத்தில் செல்வமுடையவர் சிலரும், செல்வமில்லாதவர் பலருமாக இருப்பதற்குக் காரணம், தவம் செய்கின்றவர் சிலரும், தவம் செய்யாதவர் பலருமாக இருத்தலே."
...................................................................

இந்தக் குறள் "தவம்" என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது.

தவம் செய்பவருக்கு நோக்கம் ஞானம் பெறுவதாக இருக்குமே அல்லாது, செல்வம் பெறுவதற்காக இருக்காது.

குறள் 267, துன்பம் சுடச் சுட தவம் செய்பவருக்கு ஞானம் கைகூடும் என்றுதான் சொல்கிறது. 

எனவே,  
“உலகத்தில் செல்வமுடையவர் சிலரும், செல்வமில்லாதவர் பலருமாக இருப்பதற்குக் காரணம்” என்பதற்குப் பதிலாக

“உலகத்தில் ஞானமுடையவராக சிலரும், ஞானமில்லாதவராகப் பலருமாக இருப்பதற்குக் காரணம்” என்று சொல்வதுதான் சரியோ எனத் தோன்றுகிறது.

********************************************

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.    
 … திருக்குறள் 292  

பாரம்பரிய உரை:-
"குற்றமற்ற நன்மையை உண்டாக்குமானால், பொய்யான சொற்களும் உண்மை என்று நினைக்கத்தக்க இடத்தைப் பெறுவனவாகும்."
......................................................................

‘வாய்மை’ என்ற அதிகாரத்தில் வரும் ‘பொய்’ என்ற சொல்லுக்கு, பொய் பேசுவது, பொய்யை நினைப்பது போன்றே அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அர்த்தம் மட்டும் போதுமா?

பொய்யான சொற்கள் மட்டுமல்ல, பொய்யான, தவறான – இன்னும் சொல்லப்போனால் உண்மைக்குப் புறம்பான – செயல்கள்கூட பொய்ம்மைதான். தவறான எண்ணங்கள் மனத்தில் தோன்றினால்கூட, அதுவும் பொய்ம்மைதான்.

கர்ணன் அம்பு எய்தபொழுது, அர்ஜுனனைக் காப்பதற்காக கிருஷ்ணர் தேரைக் காலால் அழுத்தியதும் பொய்ம்மைதானே!? 

மல்யுத்தத்தில் பீமன் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக தனது தொடையைத் தட்டிக் காட்டியதும் பொய்ம்மைதானே!?

எனவே, பொய்ம்மை என்பதற்கு, ‘உண்மைக்குப் புறம்பான’ என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும் அல்லவா?
*****************************************

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
... திருக்குறள் 293

பாரம்பரிய உரை:-
"நெஞ்சாரப் பொய் பேசாதீர்; பேசினால் பேசியவன் நெஞ்சே அவனைத் தண்டிக்கும். ஒருவன் தனது மனசாட்சிக்கு மாறாகப் பொய் கூறலாகாது. அவ்வாறு பொய் கூறினால் பின்னர் தானே வருந்த நேரிடும்."
...........................................................................

இந்தக் குறள் “வாய்மை” என்ற அதிகாரத்தில் வருகிறது.

இதில் ‘பொய்ம்மை’, ‘பொய்யற்க’, ‘பொய்த்தபின்’, ‘பொய்யாது’, ‘பொய்யாமை’ போன்ற வார்த்தைகளுக்கு ‘பொய் பேசுதல்’ என்றே பொருள் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் ‘மனம், மொழி, மெய்’ மூன்றின் மூலமாகவும் 'பொய்ம்மை' நடைபெறலாம்.

தவிர, ஒருவனிடம் 'வாய்மை' இல்லாமல் இருந்தால் அதுவும் பொய்ம்மைதான் எனத் தோன்றுகிறது.


நண்பர் ஒருவர் வெளியூர் செல்லும்போது, பாதுகாப்பு கருதி  தம்மிடம் உள்ள நகையை கொடுத்துச் செல்கிறார். சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறார். அவர் நம்மிடம் நகையை கொடுத்தது யாருக்கும் தெரியாது; நாம் யாரிடமும் இதைப்பற்றி சொல்லாது மறைத்துவிட்டால், அதை என்னவென்று சொல்வது? அதுவும் ‘பொய்ம்மை’தானே..
*******************************************
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்    
பற்றி விடாஅ தவர்க்கு
... திருக்குறள் 347

பாரம்பரிய உரை:-
“பற்றுக்களைப் விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத் துன்பங்கள் விடாமல் இறுகப்பற்றி நிற்கும்."
......................................................................
குறளுக்கான பொருள் சரியாக இருந்தாலும், எதிர்மறையாக இல்லாமல், நேரடியாகவே பொருள் கொள்ளலாமே. எப்படி?

“பற்றினைப் பற்றாதவரை, இடும்பைகள் பற்றாது” – இது நேரடியாகவும், எளிதாகவும் இருக்கிறதல்லவா?
*****************************************

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
.... திருக்குறள் 350

பாரம்பரிய உரை:-
"பற்றற்ற கடவுளின் பக்தியை மனத்திற் கொள்ளுதல் வேண்டும். ஆசாபாசங்களை விடுவதற்குப் பற்றப்படுவதாகிய கடவுளைப் பக்தி செய்தல் வேண்டும்."
……………………………………………………………………...
“ஆசாபாசங்களை விடுவதற்கு” என்பதற்குப் பதிலாக “ஆசாபாசங்கள் உன்னை விடுவதற்கு” என்று இருக்கவேண்டும்.

“பற்று விடற்கு” என்றுதான் வள்ளுவர் கூறுகிறார்; “பற்றை விடற்கு” என்று சொல்லவில்லை.

‘கந்த சஷ்டி கவசத்தில்”, ‘பாச வினைகள் பற்றது நீங்கி’ என்றுதான் வருகிறது; ‘பற்றினை நீக்கி’ என்று வரவில்லை.

உலகப் பொருட்களில் நாம் கொண்ட ‘பற்றை’, நம்மால் நீக்க முடியாது. இறைவன்பால் பக்தியைச் செலுத்தி, அதன் காரணமாக அவன்மேல் நம் பற்றினை வளர்த்தால், உலகப் பொருட்களில் நாம் கொண்ட பற்றின் காரணமாக ஏற்பட்ட ஆசாபாசங்கள் நம்மை விட்டு விலகிவிடும்.

வாழைத்தாரில் காய்கள் பருத்து வளரும்பொழுது, அந்தக் காய்களின் ஒவ்வொரு ‘சீப்பின்’ மேலும் படர்ந்திருந்த தோல்கள், ஒவ்வொன்றாக உதிர்ந்து விடுவதுபோல், இறைவன்பால் நமது பக்தி வளர, வளர, நம்மைப் பிடித்திருக்கும் ‘ஆசாபாசங்கள்’ ஒவ்வொன்றாக விலகிவிடும்.

அது சரி! இறைவன்பால் நாம் கொண்ட பக்தி எப்பொழுது வளரும்? வேண்டுதல் ஏதுமின்றி, எப்பொழுது இறைவனிடம் சரணாகதி அடைகிறோமோ, அப்பொழுது மட்டுமே நமது பக்தி வளரும்.

இந்தக் குறளில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

குறளை மூன்று பகுதிகளாகப் பிரித்து, அது கூறும் உட்பொருளைப் பார்ப்போம்.

1. பற்று விடற்கு
2. பற்றுக பற்றற்றான்   
    பற்றினை
3. அப்பற்றைப் பற்றுக

"பற்று உன்னை விட்டு நீங்குவதற்கு, பற்றற்றான் பற்றினைப் பற்றுக" என்று மட்டும் சொல்லாமல், கூடவே "அப்பற்றைப் பற்றுக" என்று கூடுதலாக வள்ளுவர் ஏன் சேர்த்தார்?

பொதுவாக நாம் குறிப்பிட்ட வேளைகளில் இறைவனை வணங்குகிறோம். மற்ற நேரங்களில் நாம் நமது வேலைகளில் மூழ்கி விடுகிறோம். அந்த நேரங்களில் நாம் இறைவனை நினைக்கிறோமா?

இறைவன் மீது நாம் வைக்கும் பற்றை, நாம் இறைவனை வணங்காத நேரங்களிலும் விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார். அது முடிகிற காரியமா?

ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் .. ஒரு தாய் எந்த வேலையில் இருந்தாலும் அவள் கவனமெல்லாம் தொட்டிலில் உறங்கும் குழந்தையின் மேலேயே இருக்கும். அதேபோன்று நாமும் எந்த வேலை செய்துகொண்டு இருந்தாலும், நமது கவனம் எப்போதும் இறைவன் மீது இருக்க வேண்டும்".

இதைக் குறிக்கும் விதமாகத்தான் "அப்பற்றை பற்றுக" என்கிறார் வள்ளுவர்.

******************************************

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
... திருக்குறள் 352
   
பாரம்பரிய உரை:-
"மயக்கத்தினின்று தெளிந்து குற்றம் தீர்ந்த மெய்யறிவுடயவருக்கு அம்மெய்யறிவு துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும்."
...........................................................................
“மருள்நீங்கி” என்று வள்ளுவர் சொல்கிறார். “மருள்” என்பதற்கு மயக்கம் என்று பொருள் சொல்கிறார்கள். உண்மையில் மயக்கம் என்பது என்ன?

நிலையில்லாதவற்றை நிலையென எண்ணுவதும், நிலையான ஒன்றை நினைக்காமல் இருப்பதும்தான் உண்மையான மயக்கம் ஆகும். மற்ற மயக்கங்கள் அனைத்தும் இதிலிருந்து வருவதுதான்.

இந்த மயக்கம் (மருள்) நீங்கிவிட்டால், இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்கிறார் வள்ளுவர்.

“இருள்நீங்கி” என்பதற்கு, துன்பம் நீங்கி என பொருள் தரப்பட்டுள்ளது. உண்மையான இருள் என்பது, “நான்”, “எனது” என்ற எண்ணம்தான்.

“நான்”, “எனது” என்ற எண்ணம் இருக்கும் வரையில், நமக்கு துன்பம் ஏதாவது ஒரு வழியில் வந்துகொண்டிருக்கும்.

அந்த எண்ணம் இல்லாதபோது, எந்த துன்பம் வந்தாலும், அது 
உடல்ரீதியான வேதனையாகத் தோன்றலாம்; ஆனால் அதனுடன் மன அடையாளப்படுத்தல் இல்லாததால் அது உள்துன்பமாக மாறாது

“நான்”, “எனது” என்ற எண்ணம் இல்லாத மனிதன் மட்டுமே, “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்று சொல்லமுடியும்.                        
*******************************************

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. ... திருக்குறள் 355  

பாரம்பரிய உரை:-
"எந்தப் பொருள் என்ன இயல்புடையதாக காணப்பட்டாலும், அந்தப் பொருளின் உள்ளே உள்ள உண்மைப் பொருளை அறிந்துகொள்வதே தெளிந்த அறிவாகும்."

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. ... திருக்குறள் 423   

பாரம்பரிய உரை:-
"எப்பொருளை எத்தகையோர் சொல்லக் கேட்டாலும், அப்பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவாகும்."
......................................................................

ஆன்மிகப் பார்வையில் ‘மெய்ப்பொருள்’ என்பதை நிலையற்ற தோற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் நிலையான உண்மை என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த நோக்கத்தில் இந்த விளக்கத்தை தருகிறேன்.

வள்ளுவர் ‘மெய்ப்பொருள்’ என்று சொல்வதற்கு, ‘உண்மைப் பொருள்’ என்று அர்த்தம் சொல்வது சரிதானா? மெய், உண்மை என்கிற இரண்டு சொற்களுக்கும் ஒரே அர்த்தம்தானா?

‘மெய்’ என்ற சொல்லுக்கு எதிர்மறையாக ‘பொய்’ என்று சொல்கிறோம்; ‘உண்மை’ என்ற சொல்லுக்கும் எதிர்மறையாகவும் ‘பொய்’ என்றுதான் சொல்கிறோம். அதனாலேயே ‘மெய்’ மற்றும் ‘உண்மை’ என்கிற இரண்டு சொற்களும் ஒரே பொருளைத்தான் தரும் என்று சொல்லலாமா?

‘உண்மை’ என்று நாம் சொல்வது, எப்பொழுதும் உண்மையாக இருப்பதில்லை; ஆனால் ‘மெய்’ என்று சொல்லும்பொழுது, அது எப்பொழுதும் உண்மையாக இருப்பது என்று அர்த்தம்.

நாம் உண்மை என்று நினைப்பது அல்லது முடிவுசெய்வது நிரந்தரமான, மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘மெய்ப்பொருள்’ என்று வள்ளுவர் சொல்கிறாரோ?

******************************************

ஆராஇயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.   
... திருக்குறள் 370

பாரம்பரிய உரை:-
"ஒருபோதும் நிரம்பாத இயல்புடைய அவாவை ஒருவன் ஒழித்தால், அந்நிலை, அப்பொழுதே அவனுக்கு எப்பொழுதும் ஒரே நிலைமையுடையாதாகிய இன்பத்தைத் தரும்."
...........................................................................

இன்பம் எப்பொழுதும் ஒரே நிலைமையுடையது அல்ல; இன்பம் என்பது நிரந்தரமானதும் அல்ல. எந்த நேரத்திலும் அது துன்பமாக மாறலாம்.

‘இயற்கை’ என்பதற்கு ‘இன்பம்’ என்பதற்கு பதிலாக, ‘ஆனந்தம்’ என்று எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், ஆனந்தம் ஒன்றே நிரந்தரமானது; மாற்றமில்லாதது.

இன்பம் என்பதற்கு எதிர்ப்பதமாக துன்பம் இருப்பது போல், வேதாந்தத்தில் ஆனந்தம் என்பதற்கு எதிராக எதுவும் கிடையாது.

அது மனிதன் விழிப்புணர்வு பெற்ற நிலையில், அவனது உள்ளிருந்து வெளிப்படுவது. (அதனால்தான் சத் + சித் + ஆனந்தம் என்கிறார்கள்).

அவா (முற்றுமாக) அறுந்த நிலையில், அது உள்ளிருந்து பெருகுவதை உணர்கிறோம்; அதை உணர்ந்தபின், இன்பம்-துன்பம் போன்ற இரட்டைகளிலிருந்து விலகிவிடுகிறோம்; அதன்பின்  எதுவும் நம்மை பாதிப்பதில்லை.

இன்பம் எதன் காரணமாகவோ வருவது; ஆனந்தம் என்பதோ எதுவும் இல்லாத நிலையிலும், அவா நீங்கியபின் வருவது.

ஒருதடவை அந்த ‘ஆனந்த’ ஊற்றை உணர்ந்து கொண்டால், அதன்பின் அது நிரந்தரமாக குடிகொண்டுவிடும்.

*******************************************

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.   
... திருக்குறள் 396   

பாரம்பரிய உரை:-
"மணலிடத்திலுள்ள கேணி தோண்டிய அளவுக்கேற்ப நீர் ஊறும்; அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற அளவுக்கேற்ப அறிவு பெருகும்."
...........................................................................

குறளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் சரியானதுதான் என்பதுபோல் தோன்றினாலும், ‘பெருகும் அறிவு’ என்று சொல்லாமல் ‘ஊறும் அறிவு’ என்று வள்ளுவர் சொல்வதன் அர்த்தம் என்ன?

பொதுவாக நாம் பெற்றிருக்கும் அறிவு, பெரும்பாலும் வெளியிலிருந்து வந்ததாகத்தான் இருக்கும். கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும் மற்றும் பல நூல்களைப் படித்தும் தெரிந்து கொண்டவைதான்.

தெரிந்து கொண்டவைகளை உள்ளே பதிவு செய்யும்பொழுது, நமது மனம், உண்மைக்கு மாறாக, அதற்கே உரிய முறையில் திருத்தியும், பதிவு செய்திருக்கலாம். ஆக, நமது அறிவின் பெருக்கம் அனைத்தும் வெளியிலிருந்து வந்தவைதான்.

அவற்றை நாம் உபயோகிப்பது என்பது, தொட்டியில் தண்ணீரை ஊற்றி, பின் அதனைக் கோரி உபயோகிப்பதைப் போன்றதுதான்.

அதனை ‘ஊறும் அறிவு’ என்று எப்படிச் சொல்லமுடியும்?

மணல் கேணியில் தண்ணீர் ஊற்றெடுக்கத் தயாராக உள்ளது; இறைக்க, இறைக்க ஊறும்தான்.

ஆனால் தண்ணீர் வெளிப்படமுடியாமல் மணலால் மூடப்பட்டிருக்கும்பொழுது, மூடியுள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. அதன்பின் மட்டுமே, நம்மால் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் நீரை உபயோகிக்க முடியும்.

நமக்குள்ளும், ஒரு பேரறிவு ஊற்றாக பெருக்கெடுத்து நமக்குப் பெரும்பயனைக் கொடுக்கத் தயாராக உள்ளது. ஆனால், காமம், வெகுளி, மயக்கம் போன்ற மனக்கழிவுகள், மணலைப்போன்று பேரறிவை உணரமுடியாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.

கற்கவேண்டிய அனைத்தையும் கற்று, சித்தத்தின் மேல் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றினால், அதன் காரணமாக உள்ளிருந்து பெருகும் அறிவே, ‘ஊறும் அறிவு’ எனப்படும்.

*****************************************

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.  
... திருக்குறள் 420

பாரம்பரிய உரை:-
"செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?"
……………………………………………………………………

வேறு சிலர், செவியால் நுகரப்படும் சுவைகளை மனமும், புத்தியும் உணர வேண்டும் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

இந்தக் குறளை இன்றைய உளவியல் மொழியில் விரிவாகப் பார்க்கும்போது, என் சிந்தனை வேறாக உள்ளது.

மனம் என்று சொல்லும்போது, மனிதனிடம் 'உணர்வு மனம்', 'ஆழ்மனம்' என இரண்டு மனங்கள் உண்டு. 

செவியால் கேட்ட ஒரு கருத்து, அந்த நேரத்தில் உணர்வு மனத்தில் தோன்றிய அனுபவமாக மட்டும் நின்றுவிடக்கூடாது. அது நல்ல கருத்தாக இருந்தால் ஆழ்மனம்வரை சென்று அங்கு பதிய வேண்டும்.

ஏனெனில், உணர்வு மனத்தில் தோன்றும் பல உணர்வுகள் காலப்போக்கில் மறைந்து போகலாம். ஆனால் ஆழ்மனத்தில் பதிந்த கருத்துகள் நமது சிந்தனையிலும், பண்பிலும், செயலிலும் பின்னர் நன்கு வெளிப்படக்கூடும்.

எனவே, செவியால் நுகரப்படும் சுவையின் பயன், கேட்ட அந்தக் கணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியில் மட்டும் இல்லை; அது நம் ஆழ்மனத்தில் பதிந்து, நம்மை மாற்றுவதில்தான் இருக்கிறது.

செவியால் கேட்டது உணர்வு மனத்தோடு நின்றுவிடாமல், ஆழ்மனம்வரை சென்று அதில் பதிந்தால்தான் அது செவிச் சுவையாகும்.
********************************************

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.    
... திருக்குறள் 452 

பாரம்பரிய உரை:-
"தண்ணீர் சேர்ந்த நிலத்தின் இயல்புக்கேற்ப மாறுபட்டு நிற்கும்; அதைப்போல மக்களின் அறிவும் தாம் சேர்ந்த இனத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்."
......................................................................

இந்தக் குறள் ‘சிற்றினம் சேராமை’ என்கிற அதிகாரத்தின் கீழ் வருகிறது.
இந்த அதிகாரத்தில் ‘இனம்’, ‘இனநலம்’, ‘இனந்தூய்மை’ ‘சிற்றினம்’ மற்றும் ‘தீயினம்’ போன்ற வார்த்தைகள் வருகின்றன.

எல்லாவற்றிற்கும் பொருள் கூறும்பொழுது ‘இனம்’ என்ற வார்த்தையே உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.

‘இனம்’ என்று சொல்லும்பொழுது, குறிப்பிட்ட மனிதனுடன் இருக்கும் மக்கள் எனப் பொருள்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. பலரும் இப்படியே நினைக்கவும் கூடும்.

இனம் என்ற சொல்லை வெறும் மனிதக் கூட்டமாக மட்டுமல்லாமல், ஒருவரின் மனம் சார்ந்திருக்கும் சிந்தனைச் சூழலாகவும் பார்க்கலாம்.

மேலே சொன்ன குறளில், நீரைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார். நீரைச் சேர்ந்த இனமென்று எதைச் சொல்லலாம். பனி, பனித்துளி, நீராவி அனைத்தும் நீரைச் சேர்ந்தவைதான்; ஏன், மேக கூட்டத்தையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

இன்னும் சொல்லப்போனால், நதி, ஆறு, குளம், குட்டை, அருவி, ஓடை, வாய்க்கால், கடல் போன்றவைகளையும்கூட இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால், நிலம் நீரின் இனத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதது. வள்ளுவர் ஏன் அதைக் குறிப்பிடுகிறார்?

உடலை விற்றுப் பிழைக்கும் பெண் அவள்; இருந்தாலும் தன் செயலுக்கு வருந்தி இறைவனை நோக்கி மனம் நோக அழுது புலம்புகிறாள். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எதிர்புறம் வசிக்கும் துறவியோ, தனது மதச் சடங்குகளைத் தவறாமல் செய்து வந்தாலும், எதிர்வீட்டுப் பெண்ணின் தொழிலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்; அத்துடன் அவளிடம் அவள் எவ்வளவு பாபங்கள் செய்கிறாள் என்று எடுத்துச் சொல்லி, நல்லபடி நடக்க அறிவுரையும் வழங்குகிறார். இருவரும் ஒரே நேரத்தில் இறக்க, பெண் சொர்க்கத்திற்கும், துறவி நரகத்திற்கும் செல்ல நேரிடுகிறது. பரமஹம்சரின் உபமான கதையிது.
இந்த உபமானக் கதையின்படி, உடலை விற்றுப் பிழைக்கும் பெண்ணுடன் இருந்தது ‘நல்லினம்’; துறவியுடன் இருந்ததோ ‘தீயினம்’.

இனம் என்று சொல்லும்பொழுது, கூட இருப்பவர்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது; மனித மனம் எதைச் சார்ந்திருக்கிறதோ, அதுவே அவனது இனத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­******************************************

நாள்தோறும் நாடுக மன்னன், வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு”. 
... திருக்குறள் 520

பாரம்பரிய உரை:-
"தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்."
.........................................................................

வினைசெய்வான் என்பதற்கு தொழில் செய்கின்றவன் என்று சொல்வது முழுமையாக இல்லையெனத் தோன்றுகிறது.

இன்றைய காலத்திற்கு ஏற்ப விரிவுபடுத்திப் பார்த்தால், விவசாயி, தொழில் செய்கின்றவன், வணிகன் ஆகிய மூவருமே வினை செய்பவர்கள்தான்.

விவசாயி நிலத்தில் விளைபொருட்களை உற்பத்தி செய்கிறான்; தொழில் செய்கின்றவன் தனக்குரிய இடத்தில் பொருளை உற்பத்தி செய்கிறான்; வணிகன் அந்தப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறான்.
ஆக, மூவருமே வினைசெய்பவர்கள்தான்.

ஆகையால் மன்னன் நாள்தோறும் இந்த மூவருடைய நிலைமையையும் ஆராய வேண்டும்.

*****************************************

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.  
... திருக்குறள் 550

பாரம்பரிய உரை:-
"கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டிப்பது, பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்."
……………………………………………………………………
"கொலையிற் கொடியாரை" என்று சொல்லும்பொழுது 'கொலை செய்வதைவிட கொடுமையான செயல் புரிபவர்களை' என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா?

தேச நலனுக்கு துரோகம் செய்பவர்கள், அயல்நாட்டுக்காக உளவு பார்ப்பவர்கள், போதைப்பொருள் விற்பனை மூலம் பலருடைய வாழ்க்கையைச் சீரழிப்பவர்கள், பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களைச் செய்பவர்கள் போன்றோர்கள் 'கொலையிற் கொடியார்'தானே!?

பயிரைக் காப்பாற்றக் களையை அகற்றுவது போல, நல்ல குடிமக்களையும் சமூகத்தையும் காப்பாற்ற, சமூகத்தின் உயிரோட்டத்தையே அழிக்கும் அளவுக்கு கொடிய செயல்களைச் செய்பவர்களை வேந்தொறுத்தல் அரசின் கடமையல்லவா?

"வேந்தொறுத்தல்” என்பது அரசன் தன் விருப்பப்படி ஒருவரைக் கொல்வது அல்ல; சமூகத்தின் பாதுகாப்பிற்காக, அரசின் சட்டப்படியான தண்டனைகளை வழங்கும் கடமையாகும்.
*******************************************

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும். 
 ... திருக்குறள் 619

பாரம்பரிய உரை:-
"முயன்ற தொழில் ஊழ்வயத்தால் கருதிய பயனைக் கொடுக்கவில்லையாயினும், அம்முயற்சி உடம்பை வருத்திய அளவுக்குக் கூலி தரும்."
...........................................................................

இங்கு 'மெய்’ என்பதற்கு ‘உடம்பு’ என்று பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது.


ஞானியர் ‘மனத்தையும்’ உடம்பின் ஒரு பகுதிதான் என்கிறார்கள்.
அவர்கள் ‘உடல்’ ‘மனம்’ இரண்டையும் ‘பரு-உடல்’ மற்றும் ‘நுண்-உடல்’ என்று அழைக்கிறார்கள்.

ஆக, தான் எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றியடைய, உடலை மட்டுமல்ல தன்னுடைய மனத்தையும் வருத்த தெரிந்திருக்க வேண்டும்.

மனத்தை வருத்துவது என்றால் என்ன? மனிதன் முயற்சியில் ஈடுபடும்பொழுது, மனத்தை வேறு எங்கும் அலைபாயவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அது ஒன்றே மனதை வருத்துவதற்கு அடையாளம்.
*****************************************

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத் தோடு ஒத்துக் கொளல்
... திருக்குறள் 702

பாரம்பரிய உரை:-
"ஒருவன் மனத்தில் நினைத்திருப்பதை எவ்வித ஐயமும் இன்றி, முகக்குறிப்பைக் கொண்டே சரியாக உணரவல்லவனின் ஆற்றலைத் தெய்வத்திற்கு நிகராக மதிக்க வேண்டும்."
……………………………………………………………………...
இதேபோன்ற கருத்தை பலரும் சொல்கிறார்கள். 

இங்கு என்னுடைய பார்வை முற்றிலும் வேறாக உள்ளது. 

இந்தக் குறளை நான் பார்க்கும் கோணம் ...
"அகத்தது உணர்வானை" ...
அகத்து அது உணர்வானை -- அதாவது 
(அகத்தில்) தனக்குள்
(அது) அதை, ஆன்மாவை அதன் மூலம் பரம்பொருளை
உணர்வானை, உணர்ந்து அறிபவனை

ஒரு மனிதனால் தனக்குள் இருக்கும் இறைநிலையை (ஆன்மாவை) உணர முடியுமானால், அவன தெய்வத்திற்கு ஒப்பாக மதிக்கத் தக்கவன் என நினைக்கிறேன்.

இது சரியா, இல்லையா என்று சான்றோர்கள்தான் ஆராய வேண்டும்.

****************************************

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு            
... திருக்குறள் 786

பாரம்பரிய உரை:-
“ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று; அன்பால் மனமும் மலர நட்புக் கொள்வதே நட்பாகும்."
......................................................................

இதை வேதாந்த உளவியல் கோணத்தில் பார்க்கும்போது, வேறுவிதமான எண்ணங்கள் தோன்றுகின்றன.

இந்தக் குறளில் மூன்று வார்த்தைகளை சற்று விரிவாகப் பார்க்கவேண்டி உள்ளது.

அவை ‘முகம்’, ‘நெஞ்சம்’ மற்றும் ‘நெஞ்சத்து அகம்’.

மனிதனின் உருவம் ஐந்து உறைகளால் போர்த்தப்பட்டது என்று மறை ஞானிகள் சொல்கிறார்கள். அவை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

அவற்றிற்கு முறையே உணவு உறை, காற்று உறை, மன உறை, புத்தி உறை மற்றும் ஆனந்தமய உறை என்று பெயர் சூட்டயுள்ளார்கள்.

இவற்றில் உணவு உறை மற்றும் காற்று உறை இரண்டும் உடலைச் சார்ந்து இருப்பவை.

ஞானியர் உடலைப் பருவுடல் என்றும், மனத்தை நுண்ணுடல் என்றும் சொல்கிறார்கள்.

மனம் என்று சொல்லும்பொழுது அதனை உணர்வு மனம் என்றும், உணர்வற்ற மனம் (ஆழ்மனம்)  என்றும் பிரித்துச் சொல்வார்கள். .

ஆனந்தமய உறையின் மேல் பதிவுகள் படரும்போது, அது ஆழ்மனம் என்று அழைக்கப் படுகிறது. அந்தப் பதிவுகளின் தன்மையைப் பொறுத்து ஒரு மனிதனின் அகங்காரம் தன்முனைப்பாகவும், திமிராகவும், செருக்காகவும் உருவெடுக்கிறது.

உணர்வு மனம் மூலமாகவே ஆழ்மனத்தில் பதிவுகள் நிகழ்கின்றன. ஆழ்மனப் பதிவுகளின் அடிப்படையில் புறவுலகில் செயல்பட விரும்பினாலும் அதுவும் உணர்வு மனம் மூலமாகவே நடைபெறவேண்டும். 

நெஞ்சம் என்பது பொதுவாக மனதைக் குறிக்கும். வள்ளுவர் ‘நெஞ்சத்து அகம்’ என்று சொல்வதால் ‘நெஞ்சத்துப் புறம்’ என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?

அகம் என்பது உள்ளே உள்ளதைக் குறிப்பது; புறம் என்பது வெளியே உள்ளதைக் குறிப்பது.

அப்படியானால், ஆழ்மனத்தை அகம் என்றும், உணர்வு மனத்தை புறம் என்றும் சொல்லலாம் அல்லவா?

முகத்தில் ஏற்படும் “நக”, உணர்வு  பலநேரங்களில் போலியாகவோ, உண்மையான உணர்வுகளை மறைத்தோ (சூழ்நிலைக்கு ஏற்ப) வெளிப்படுத்துவதாகவே இருக்கும். 

எனவே, வள்ளுவர் "அகநக" என்று  சொல்லும்போது, அது ஆழ்மனத்தில் ஏற்பட வேண்டிய "நக" என்பதுபோல் நினைக்கத் தோன்றுகிறது.

******************************************

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
... திருக்குறள் 972

பாரம்பரிய உரை:-
"எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்."
……………………………………………………………………

மனிதர்கள் எல்லாரும் சமம் என்று சொல்பவர்கள், குறளின் முதல் வரியைக் குறிப்பிடுவார்கள்.

ஆனால், மனிதர்கள் செய்யும் தொழிலைப் பொறுத்து அவர்களது சிறப்பு மாறுபடும் என்று சொல்பவர்கள் பகவத் கீதையில் வரும் "குண, கர்ம விபாகசஹ" என்ற சொற்றொடரை மேற்கோள் காட்டுவார்கள். 

பொதுவாக 'கர்ம' என்றால் 'செய்யும் தொழில்' என்று அர்த்தம் என சொல்வதுண்டு. ஆனால், இந்த இடத்தில் அது தவறு எனத் தோன்றுகிறது. .

குறளில் வள்ளுவர் 'செய்தொழில் வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'செய்தொழில் வேற்றுமையான்' எனக் கூறுகிறார். 'வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'வேற்றுமையான்' என ஏன் கூறுகிறார்? 

சிலர் 'தொழில் செய்பவரின் திறமையைப் பொறுத்து, சிறப்பானது வேறுபடும்' என்று சொல்கிறார்கள்.

ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்ய பல மந்திரிகள் இருப்பார்கள். அதில் சிலர் நாட்டு நலனுக்காக உழைப்பார்கள்; சிலர் தங்களது வீட்டு நலனுக்காக உழைப்பார்கள்.

அவர்களின் தொழில் (கர்மம்)  ஒன்றாக இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் நோக்கத்தில் மாறுபாடு இருக்கிறது அல்லவா?

ஆக, 'வேற்றுமையான்' என்பதற்கு 'செய்யும் தொழிலின் பின்னே மறைந்திருக்கும் நோக்கத்தைப் பொறுத்து தொழில் செய்பவர்களின் சிறப்பு மாறுபடும்' என்றும் சொல்லலாம் அல்லவா?

செய்தொழிலின் சிறப்பு, தொழிலின் வெளிப்புற வடிவத்தால் மட்டும் அல்ல; அதன் பின்னுள்ள நோக்கத்தாலும் மதிப்பிடப்படலாம்.
****************************************

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை    
... திருக்குறள் 1014  

பாரம்பரிய உரை:-
"நிறைகுணமுடையவர்க்கு, செய்யத்தகாதவற்றைச் செய்ய நாணுதல் ஓர் அணி போன்றதாகும்."
......................................................................

இந்தக் குறள், நாணுடைமை என்கிற அதிகாரத்தின் கீழ் வருகிறது. இதில் உள்ள பத்து பாடல்களுக்கும் பொருள் விளக்கம் சொல்லும்பொழுது, 'நாணம்' என்ற வார்த்தையே உபயோகிக்கப் பட்டுள்ளது.

நாணம் என்ற வார்த்தைக்கு நாணம், வெட்கம், கூச்சம் என்று பல அர்த்தங்கள் உள்ளன. ஆங்கில மொழிபெயர்ப்பில் shame என்ற வார்த்தை கையாளப் பட்டுள்ளது. அதற்கு கூச்சம் என்ற பொருள் இருந்தாலும், அவமானம் என்ற பொருளையும் மக்கள் தவறாக எடுத்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது.

வள்ளுவர் நாணம் என்று சொல்லும்பொழுது, மேலே சொல்லப்பட்ட அர்த்தங்கள் சரியாக இருக்க முடியுமா?

ஒரு அறிவில்லாத மனிதனை, அறிஞர்கள் சபையில் பேசச் சொன்னால், அவனுக்கு கூச்சமாக இருக்கும்; அதனை வள்ளுவர் சொல்லும் நாணத்தோடு ஒப்பிட முடியுமா?

திருமணப் பெண்ணுக்கு, மணவறையில் அமர்ந்திருக்கும் பொழுது ஒருவித நாணம் இருக்கும்; அதனை வள்ளுவர் சொல்லும் நாணத்தோடு ஒப்பிடமுடியுமா?

அப்படியானால் வள்ளுவர் சொல்லும் நாணம் எத்தகையது?

‘சான்றோர்’ என்பவர் யார்? ‘கற்றடங்கல் ஆற்றுவான்’ என்கிறார் வள்ளுவர். கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்று, மனம் அடங்கியவனை சான்றோர் என்கிறார். அத்தகைய சான்றோரின் பண்பு எப்படி இருக்கும்?

 ‘.....நாயினும் கடையேன்’
 ‘.....தொண்டருக்குத் தொண்டரென’
 ‘.....மனமிறக்க கல்லாற்கு வாயேன் பராபரமே’
 ‘தன்னைத் தாழ்த்திகொள்பவன் உயர்த்தபடுவான்’
 ‘மீண்டும் குழந்தையாக மாறாதவரையில்.......’

மனம் இறந்த மனிதனிடம் தற்பெருமை, தன்னைப்பற்றிய பெருமிதம், தன்முனைப்பு என்று எதுவுமே இருக்காது. அவன் இறைவனின் கருவியாக மாறிவிடுகிறான். அதன்பின் அவனால் எந்தவித ஆடம்பரத்தையும், புகழ்ச்சியையும் விரும்பமுடியாது.

‘சித்தத்திலிருந்து எந்தவித விருத்தியும்’ எழாதிருந்தால், அவன் மனதளவில் ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையாக மாறிவிடுகிறான்.

அதன்பின், அவனிடமிருந்து வெளிப்படும் நாணம், அவனது  இயல்பாகவே இருக்கும்.

அது, தன்னில் தன்னைக் கரைத்துவிட்ட நிலையில் வருவது. 
******************************************