பதிவு 1
இந்த சொற்றொடர் இந்து சமயத்தை வெறுப்பவர்களின் புலன்களுக்கு மிகவும் தப்பான ஒன்றாகத் தெரிகிறது. இந்து சமயத்தை தாக்குவதற்கு அவர்கள் அதிகம் பயன்படுத்துவதும் இந்த சொற்றொடர்தான்.
இந்த தவறான புரிதல் எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. இந்து சமயத்திற்கும், 'சனாதன தர்மம்' என்பதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 2
எல்லா சமயங்களிலும் தவறான புரிதல்கள் உண்டு; தவறான நடைமுறை பழக்க வழக்கங்களும் உண்டு. அவற்றை கண்டிப்பதில் தவறு இல்லை. அவைகளை களையெடுக்கக் கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும்.
ஆனால், இந்து சமயத்திற்கும் 'சனாதன தர்மம்' என்ற சொற்றொடருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. 'சனாதன தர்மம்' என்பது பொதுவான ஒன்றை குறிக்கும் தத்துவம். எப்படியோ அது இந்து சமயத்தை சார்ந்தது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறான கருத்தாக்கம்.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 3
நான் படித்த பள்ளியில்
(St. Mary's High School, Vickramasingapuram) வாரந்தோறும் நல்லொழுக்க வகுப்புகள் நடக்கும். அதை நடத்தியவர் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஜோசப் அவர்கள். வகுப்பில் அடிக்கடி மஹாபாரத கதைகளை சொல்லி நல்லொழுக்க விதிகளை விளக்குவார்கள். (இப்பொழுது அதுமாதிரி நடக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியாது)
ஒருமுறை அவர்கள் சொன்னது .. "நாங்கள் எங்கள் மதத்தின் அடையாளமாக சிலுவை மாலை அணிகிறோம். இஸ்லாமியர்கள் தொப்பி அணிகிறார்கள். சைவ சமயத்தை கடைப்பிடிக்கிறவர்கள் திருநீறு பூசுகிறார்கள்.
திருநீறு வெறும் மத அடையாளம் மட்டுமல்ல; அது ஒரு மருந்தும் கூட. ஏனெனில், அது உடலில் உள்ள தேவையற்ற நீரை உறிஞ்சி வெளியேற்றிவிடும். எல்லோரும் அதைப் பூசலாம்.
ஆனால், அது ஒரு சமயத்தின் அடையாளமாக மாறிவிட்டதால், எங்களால் அதைப் பூச முடிவதில்லை".
எப்படி பொதுவாக இருக்க வேண்டிய திருநீறு சமய அடையாளமாக மாறிவிட்டதோ, அதைப்போல பொதுவாகக் கருத வேண்டிய 'சனாதன தர்ம' தத்துவமும் சமயம் சார்ந்ததாக மாறிவிட்டது.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 4
இந்த நாட்டில் பல்வேறு சமயங்களில் பல்வேறு வழிபாட்டு முறைகள் தோன்றின. அதேபோல் சடங்குகளும், சம்பிரதாயங்களும் பலவிதமாக இருந்தன. கூடவே வாழ்வியல் தத்துவங்களும் நிறைய சொல்லப்பட்டன. இவற்றில் எங்குமே 'சனாதன தர்மம்' என்ற பெயர் இருக்கவில்லை.
சில சமயங்களில் வாழ்வியல் தத்துவங்களை தனியாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள். உதாரணமாக 'சிவஞான போதம்', 'மாண்டூக்ய உபநிடதம்' போன்ற நூல்களைச் சொல்லலாம். அவையெல்லாம் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும்.
மற்றபடி கடவுள் மீதுள்ள பக்தியை வெளிப்படுத்தும் பல பாடல்களிலும் 'வாழ்வியல் தத்துவங்கள்' இருப்பதைக் காணலாம்.
இத்தகைய வாழ்வியல் கோட்பாடுகள் நிலையானது எது, நிலையற்றது எது என்பதை சுட்டிக் காட்டின. அதைக் குறிக்கும் வகையில்
'சனாதன தர்மம்' என்ற சொற்றொடர் வந்தது. ஆனால், இதற்கும் சமயத்தில் உள்ள சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 5
'சனாதன தர்மம்' என்றால் என்ன என்று பார்ப்போம்.
'சனாதன' என்றால் நிரந்தரமானது (eternal) என்று அர்த்தம். நிலையில்லாத பலவற்றை நாம் நிரந்தரம் என நினைக்கிறோம். அதனாலேயே நிம்மதி இன்றி தவிக்க நேரிடுகிறது. எது நிரந்தரம் என்பதை உணர்த்துவதுதான் 'சனாதன தர்மத்தின்' நோக்கம்.
புதிதாக ஒரு வீடு கட்டுகிறோம். அந்த வீடு மற்ற வீடுகளை விட மிகவும் அழகாக இருக்கிறது. அந்த வீடு நினைத்துக் கொள்கிறது .. 'நான் மற்ற வீடுகளை விட எவ்வளவு அழகாக இருக்கிறேன்'. அதற்கு கர்வம் வந்து விடுகிறது. நெடுங்காலம் நான் இப்படி அழகாக இருப்போம் என நினைத்துக் கொள்கிறது. ஒரு சின்ன நில அதிர்வு அதை சாய்த்து விடுகிறது. இப்பொழுதுதான் அதற்குத் தெரிகிறது 'தான் நிரந்தரமல்ல என்பது; பூமி மட்டுமே நிரந்தரம்' என்று. ஆனால், பூமியும் நிரந்திரமாக இருக்கப் போவதில்லை என்று அது அறிந்து கொள்வதில்லை.
நமது நிலையும் அந்த வீட்டைப் போன்றதுதான். நிலையில்லாதவற்றை நிலையாக இருக்கும் என நம்பி, பின்னர் வேதனையில் வாடுகிறோம்.
'சனாதன தர்மம்' எது நிலையானது என நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 6
முதலில் எது நிரந்தரம் என்று சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
வீட்டைப் பொறுத்தவரை, 'தான் நிரந்தரமல்ல; பூமிதான் நிரந்தரம்' என நினைத்துக் கொள்கிறது என பார்த்தோம்.
உண்மையில் பூமியும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. அதேபோல் பால் வழி (milky way), விண்மீன் (galaxy), அண்டம் (universe), பேரண்டம் என விரிந்து பரவும் எதையும் நிரந்தரம் என்று சொல்ல முடியாது!?
எந்தவொரு பொருளை எடுத்தாலும் அதை உருவாக்கியவர் என ஒருவர் இருப்பார். அப்படியானால், இந்த உலகத்தை படைத்தவர் யார்?
ஆக, ஒவ்வொரு விளைவிற்க்கும் பின்னால் ஒரு மூலம் என ஒன்று இருக்கும் -- விதவிதமான ஆபரணங்களுக்குப் பின்னால் மூலப்பொருளாக தங்கம் இருப்பதைப் போல.
இதனை cause & effect theory என்பார்கள். உதாரணமாக --
துணிக்கு மூலம் நூல்; நூலுக்கு மூலம் பஞ்சு;
பஞ்சுக்கு மூலம் பருத்திச் செடி.
எந்த ஒன்றின் பின் எந்தவொரு மூலமும் இல்லையோ (uncaused cause - - because it has no previous cause) அதுவே நிரந்தரமானது.
பலரும் பல பெயரில் அழைத்தாலும் - - சிவம், பரம்பொருள், பரமபிதா, அல்லா என எந்தப் பெயரில் அழைத்தாலும் -- அந்த மூலம் ஒன்றாக மட்டுமே இருக்கும்.
அந்த மூலத்தை எப்படி அறிந்து கொள்வது?
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 7
ஆதி மூலத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா?
அன்பர்கள் புரிந்து கொள்வதற்காக "சிவம், சிவன்" இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
"சிவன்" சைவ சமயத்தை கடைப்பிடிப்பவர்களின் கடவுள். ஆனால், "சிவம்" சைவர்களுக்கு மட்டுமே சொந்தமானதா?
அந்த வார்த்தை அவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் எதை "சிவம்" என்று சொல்கிறார்களோ, அதை மற்றவர்கள் வேறு பெயரில் அழைக்கலாம்.
"சிவம்" என்பது "வெளிப்படாத ஒன்று" (unmanifest); "சிவன்" (வெளிப்பட்ட ஒன்று)
(Manifest).
"வெளிப்பட்ட" ஒன்றை நாம் அறிந்துகொள்ள முடியும். ஏனெனில், அதை ஒரு பொருளாக (object) மாற்றி அதற்கு ஒரு உருவம் கொடுத்து விட்டோம்.
ஆனால், "வெளிப்படாத" ஒன்றை நாம் அறிய முடியாது. ஏனெனில், அது உருவமற்றது. (It is the very subject). இருந்தாலும் சில ஊகங்களின் மூலம் அதை புரிந்துகொள்ள முடியும்.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 8
மனிதன் நல்ல முறையில் வாழவேண்டும் என்பதற்காக, புறவுலகை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து பல்வேறு பிரிவுகளில் பலவித நூல்கள் வெளிவருகின்றன. இவற்றை குறிப்பிடும் விதமாக பொதுவான பெயராக 'விஞ்ஞானம்' என்று சொல்கிறார்கள்.
இதைப் போன்றே மனிதனின் அகவுலகில் நடக்கும் பல்வேறு செயல்களை ஆராய்ந்து, பல சமயங்களில், பல மொழிகளில் பதிவுகள் செய்திருக்கிறார்கள். அதனை மெய்ஞானம் என்று அழைக்கிறார்கள்.
அப்படியானால் மெய்ஞானம் என்பதற்கும், சனாதன தர்மம் என்பதற்கும் இடையே என்ன வித்தியாசம்?
சனாதன தர்மம் என்று சொல்லும்போது, வாழ்வியல் தத்துவங்களை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால், மெய்ஞானத்தில் வாழ்வியல் தத்துவங்தளுடன் பக்தி, ஆகம விதிகள், வழிபாட்டு நெறிமுறைகள் என பலவும் கலந்திருக்கும்.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 9
"சனாதன" என்பது நிரந்தரமான ஒன்றை குறிப்பது என்று பார்த்தோம். அதனை அறிய முடியாது, ஊகங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்றும் பார்த்தோம்.
நாம் ஒரு பொருளைப் பார்த்தால் அதன் உண்மை இயல்பு என்ன என்று அறியலாம். இதனை 'சொரூப லக்கணம்' என்று சிவஞான போதம் சொல்கிறது.
'தர்மம்' என்ற வார்த்தைக்கு உண்மை இயல்பு, பண்பு எனவும் பொருள் கொள்ளலாம். அதாவது 'நிரந்தரம்' என்றால், அதன் உண்மை இயல்பு அல்லது பண்பு என்ன என்பதை உணர்த்துவதாக பொருள் கொள்ளலாம்.
ஒரு பொருளாக இருந்தால் அதன் உண்மை இயல்பை கண்டுகொள்ள முடியும். ஆனால், பரம்பொருள் பொருள் இல்லையே; தவிர அது 'வெளிப்படாத' ஒன்றும் கூட. இருந்தாலும் இதனை ஞானியர் பல்வேறு விதமாக நமக்கு உணர்த்தியிருக்கிறாரகள்.
அவற்றில் சிலவற்றை
பார்ப்போம். பரம்பொருளின் இயல்புகள் என்று சொன்னாலும், எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்துதான் அதனை விளக்க வேண்டியுள்ளது.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 10.1
"ஐம்புலன்களால் உணர முடியாதது"
ஐம்புலன்களால் உணர்வதற்கு பரமாத்மா ஒரு பொருளல்ல. பொருளாக இருந்தால், ஏதாவது ஒரு புலன் மூலம் அதை அறிய முடியும்.
ஆனாலும் ஒரு ஊகத்தின் மூலம் அதை அறிந்து கொள்ள முடியும்.
மின்சாரம் கம்பிகளின் வழியே பாய்ந்து பல்வேறு சாதனங்களை இயக்குகிறது. ஆனாலும், மின்சாரத்தை நம்மால் காண முடிவதில்லை. இருந்தாலும் சாதனங்கள் இயங்குவதை வைத்து 'மின்சாரம்' இருப்பதைப் புரிந்து கொள்கிறோம்.
அதைப்போல, அண்டங்களின் இயக்கத்தை பார்த்து, அவற்றின் பின்னே ஒரு பரம்பொருள் இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஏனெனில் ஒரு பொருள் படைக்கப்பட்டிருந்தால், அதற்குப் பின்னால் ஒரு "கர்த்தா" இருக்க வேண்டுமே!
பதிவு 10.2
"எதனுடனும் சம்பந்தம் இல்லாதது"
கீதையில் கண்ணன் சொல்கிறார் - - "அனைத்திலும் நான் இருக்கிறேன்; ஆனால், எதுவும் என்னிடத்தில் இல்லை"
இந்தக் கூற்றை எப்படி புரிந்து கொள்வது?
நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் ஆகாயத்தில் தான் (வெளி) இருக்கின்றன. பொருட்களுக்கு வெளியேயும், பொருட்களுக்கு உள்ளேயும் ஆகாயம் உள்ளது. ஆனாலும் பொருட்கள் இருந்தாலும், மறைந்தாலும் ஆகாயம் எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை.
அதைப்போல படைக்கப்பட்ட பொருட்கள் பெருகினாலும், சுருங்கினாலும் பரம்பொருளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.
நாம் ஒரு வீடு கட்டுகிறோம்; உடனே அது நம் வீடு என்றாகி விடுகிறது. நமக்கு குழந்தை பிறக்கிறது. உடனே நம் குழந்தை என்று ஒரு உறவு (relationship) வந்து விடுகிறது.
இதைப்போன்ற பிரச்சினைகள் பரம்பொருளுக்கு கிடையாது.
படைத்ததோடு சரி; மற்றபடி எவ்வித சம்பந்தமும் இருப்பதில்லை.
பதிவு 10.3
"ஊகிக்க முடியாதது"
தூரத்தில் புகை வருவதைப் பார்த்தால், அங்கு ஏதோ நெருப்பு எரிகிறது என ஊகம் செய்ய முடியும்.
ஆனால், படைக்கப்பட்ட அனைத்தையும் பார்த்து பரமன் இப்படித்தான் இருப்பான் என ஊகிக்க முடியாது.
அத்துடன் பரம்பொருள் உருவமற்றது. நீக்கமற எங்கும் நிறைந்திருப்பது. அதை எப்படி ஊகிக்க முடியும்?
வீட்டின் அறையில் நாற்காலி இருந்தால் அதற்கு ஒரு உருவம் உள்ளது. எனவே ஒரு பொருளாக கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், அறை முழுவதும் நிரம்பியுள்ள காற்று நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. காரணம் அது உருவமற்றது; மற்றும் எங்கும் பரவி இருப்பது.
உருவமற்ற, நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை நம்மால் ஊகிக்க முடிவதில்லை.
அதனால்தான் "நீ உடல் அல்ல: நீ அதுவாக இருக்கிறாய் (தத்துவமஸி)" என்று சொல்கிறார்கள்.
அவன், அவள் என்று சொல்லாமல் "அது" என்று சொல்கிறார்கள்.
பதிவு 10.4
"பரம்பொருள்" காலத்திற்கு அப்பாற்பட்டது. அது என்றும் உள்ளது; எங்கும் பரவி இருப்பது. அதனால்தான் நம்மால் அது எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிவதில்லை.
மேலும் நிறைய விளக்கங்கள் உள்ளன.
இருந்தாலும் நமது
நோக்கம் நடைமுறை வாழ்க்கையில் "சனாதன தர்மம்" என்ற வார்த்தை எதை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வதுதான்.
"தர்மம்" என்ற வார்த்தைக்கு 'உண்மை' என்ற அர்த்தமும் உண்டு.
"சனாதன தர்மம்" என்றால் "நிரந்தரமான உண்மை" என்று பொருள்படும்.
"நிரந்தரமான உண்மை" என்றால், நிரந்தரம் அல்லாத உண்மையும் இருக்கிறதா என்ற சந்தேகம் வரலாம்.
நாம் நிரந்தரம் என்று நினைக்கும் பலவும், நிரந்தரமாக இருப்பதில்லை என்பதே உ ண்மை.
அப்படியானால் "நிரந்தரமான உண்மை" என்பது எது?
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 11
இராமகிருஷ்ண மடம் சார்பாக "Meditation" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில் ஓரிடத்தில் கட்டுரை ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார் ..
"மனிதன் ஆசைப்படுவதை அடைய முடிவதில்லை;
ஆசைப்பட்டது கிடைத்தாலும் அதை உடமை கொள்ள முடிவதில்லை;
உடமை கொள்ள முடிந்தாலும் அதை சந்தோஷமாக அனுபவிக்க முடிவதில்லை;
ஒருவேளை சந்தோஷம் கிடைத்தாலும் அது நீடித்து நிலைப்பதில்லை".
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ..
"Of all the mysteries, misery is the worst mystery"
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு புதிர்களில், துயரம் ஏன் வருகிறது என்பதுதான் மோசமான, புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது.
இந்த புதிருக்கு விடை எங்கு இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதுதான் "சனாதன தர்மம்"
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 12
புதியதாக ஒரு கார் வாங்குகிறோம். அதை ஓட்டும்போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. ஆனால், அந்த சந்தோஷம் ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே வரும். முடிவில் அதை நினைத்து மனதில் எந்த சந்தோஷமும் இருக்காது.
அதைவிட நல்லதொரு காரைப் பார்த்தால் நமது சந்தோஷம் காணாமல் போய்விடும்.
சில நேரங்களில் அதே கார் நமக்கு துக்கத்தை கொடுக்கும் சந்தர்ப்பங்களும் நேரிடலாம்.
பொதுவாகவே, வெற்றியின் பின்னே தோல்வியும், இன்பத்தின் பின்னே துன்பமும் ஒளிந்திருக்கும்.
ஆசை கொண்ட மனிதன் அவதியையும் சந்திக்க நேரிடுவதை தவிர்க்க இயலாது.
இதற்கு மாற்றாக "ஆனந்தம்" என்ற ஒன்று உண்டு. ஒருதடவை அதை உணர்ந்து கொண்டால், அதன்பின் வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் என எதுவும் மனிதனை பாதிக்காது.
அதற்கான வழிகளை சுட்டிக் காட்டும் வழிகாட்டிதான் "சனாதன தர்மம்".
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 13
அறை முழுவதும் இரவு நேரத்தில் குழல் விளக்கின் வெளிச்சம் பரவியிருக்கிறது.
அந்த வெளிச்சம் குழலை மூடியிருக்கும் கண்ணாடியிலிருந்து வருகிறதா? அல்லது உள்ளிருக்கும் வெளிச்சம் கண்ணாடியை ஊடுருவி அறை முழுவதும் பரவியிருக்கிறதா?
குழல் விளக்கின் மேல் ஒரு அழுக்குத் துணியைப் போர்த்தி விட்டால், வெளிச்சம் கண்ணுக்குத் தெரியுமா?
இதன் உண்மைத் தன்மையை நன்கு உள்வாங்கிக் கொண்டால், "சச்சிதானந்தம்" என்ற வார்த்தையின் பொருளை உணர்ந்து கொள்ளலாம்.
தேவையில்லாமல் இந்த வார்த்தையை படங்களில் மோசமாக கையாண்டிருப்பார்கள்.
"சச்சிதானந்தம்" என்றால் என்ன என்று பார்ப்போம்.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 14
‘சத்’, ‘சித்’, ‘ஆனந்தம்’ என்ற மூன்று வார்த்தைகளின் கூட்டு வார்த்தையே ‘சச்சிதானந்தம்’ என்பது.
‘சத்’ என்பது எப்போதும் உள்ளது என்பதைக் குறிக்கிறது. அதற்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் கிடையாது.
‘சித்’ என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியான ஜீவாத்மாவைக் குறிக்கிறது. பரமாத்மாவின் ஒரு பகுதி மாயத்திரையால் சூழப்பட்டு நமது உடலுக்குள் இருந்து கொண்டு நமது இயக்கத்திற்கு சக்தி கொடுக்கிறது என்றால், அதுவே ‘சித்’ என்று அழைக்கப்படுகிறது.
‘சித்’ மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள மாயத்திரை (ஆனந்தமய கோசம்) இரண்டையும் சேர்த்து ‘சித்தம்’ என்றும் சொல்வதுண்டு.
‘ஆனந்தம்’ என்பது ‘சித்’ எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
‘சித்’ எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது என்றால், நம்மால் ஏன் அதை உணர முடிவதில்லை?
கண்ணாடியில் முகம் சரியாகத் தெரியவில்லை என்றால், கண்ணாடி அழுக்காக இருக்கிறது என்கிறோம்.
உண்மையில் கண்ணாடி அழுக்காக இருக்கிறதா அல்லது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா?
அடுத்த கேள்வி: கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா?
அடுத்த கேள்வி: கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு படர்ந்திருக்கிறதா?
ஆக, கண்ணாடியில் நமது முகம் தெரியவில்லை என்றால், அதற்கு காரணமாக இருப்பது கண்ணாடியா அல்லது அதன்மேல் படர்ந்துள்ள அழுக்கா?
கண்ணாடியின் மேல் முதலில் தூசிதான் படிகிறது. அதுவே பின்னர் அழுக்காக மாறுகிறது. உரிய சமயத்தில் அதை துடைக்காவிட்டால் அதுவே அட்டாகவும் மாறி விடுகிறது.
கண்ணாடியின் மேல் படிந்த தூசி (அழுக்கு, அட்டு) போன்று, நமது சித்தத்தில் உள்ள மாயத்திரையின் மேல் படர்ந்துள்ள தூசியின் காரணமாகத்தான் நம்மால் உள்ளிருந்து வரும் ஒளியை (ஆனந்தத்தை) உணர முடிவதில்லை.
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 15
கண்ணாடியில் படிந்த தூசியை எளிதாகத் துடைத்து விடலாம். ஆனால், சித்தத்தின் மேல் படிந்த தூசியை எப்படித் துடைப்பது?
சித்தத்தின் மேலே படிந்திருப்பது நமது அனுபவங்களின் காரணமாக நாம் ஏற்படுத்திய பதிவுகள்தாம். அதனை "ஆணவ மலம்" என்கிறார்கள்.
அதை முற்றிலும் நீக்கிவிட்டால், மனம் சலனமின்றி காணப்படும்.
" ... மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று தாயுமானவர் சொல்லும்போது, இந்த 'ஆணவ மல' நீக்கத்தையே குறிப்பிடுகிறார்.
'ஆணவமலம்' நீங்கிய பின் மனம் அமைதியாகி விடும். அதன்பின் விருப்பு-வெறுப்பு, இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி போன்ற இரட்டைகளைப் பற்றி அது கவலைப்படுவதில்லை.
அமைதியான மனம் "சித்தத்தின்" உள்ளிருந்து பெருகும் "ஆனந்தத்தை" உணரத் தொடங்கும்.
"ஜீவாத்மாவை" மூடியிருக்கும் மாயத்திரையை "ஆனந்தமய கோசம்" என்று சொல்வது இதனால்தான்.
இந்த உண்மை அறியப்பட வேண்டிய ஒன்றல்ல; உணரப் பட வேண்டிய ஒன்று. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
We have to realise that
we have to realise "THAT"
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 16
"சனாதன தர்மம்" எந்த மதத்திற்கும் சொந்தமானதல்ல.
அது அறிவியல் பூர்வமாக நமக்குள் இருக்கும் "ஆன்மா" மட்டுமே உண்மையானது என்கிறது.
நமது நாடு ஒரு ஞான பூமி. மனிதன் "ஆனந்த நிலையை" உணர்வதற்கு இங்கு எல்லா மொழிகளிலும் மறைநூல்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்.
மறைநூல்கள் தவிர இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் சமயத்திற்கு அப்பாற்பட்டு "திருக்குறள்" போன்ற நூல்களும் உண்டு.
அவைகள் உபயோகிக்கும் வார்த்தைகள் வேறுபடலாம்; விளக்கங்கள் வேறுபடலாம். ஆனால், அவைகளின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்.
அது - -
மனிதனின் மனதில் வளரும் அளவு கடந்த ஆசைகள் முடிவில் அவனுக்குத் துன்பத்தையே தரும். சித்தத்தை சுத்திசெய்து மனதை அமைதி அடையச் செய்தால், அவனது மனதில் அன்பு மட்டுமே குடியிருக்கும்; அதன்பின் அவனால் 'உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை உணர முடியும்' என்பதுதான்.
ஆசை கொண்ட மனம் - அது
அவதிகளின் களம்!
அன்பு கண்ட மனம் - அது
ஆனந்தத்தின் வசம்!!
(தொடரும்)
சனாதன தர்மம்
பதிவு 17
சென்னை நகரத்தைக் காண விரும்பிய நண்பனைக் கூட்டிக் கொண்டு போய் சென்னை நகரத்தின் எல்லா இடங்களையும் அவனுக்குக் காட்டுகிறோம்.
எல்லா இடத்தையும் சுற்றி பார்த்தவன் "இங்கு குடியிருப்புகள், அலுவலகங்கள், கல்லூரிகள், தியேட்டர்கள் போன்று எல்லாவற்றையும் காட்டினீர்கள். ஆனால் சென்னை எங்கே இருக்கிறது என்று காட்டவே இல்லையே" என்று சொன்னால், அவனை என்னவென்று சொல்வது?
சித்தத்தை சுத்தி செய்யும் மனிதன் நிலையான "ஆனந்தம்" எங்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறான். அதற்குத் தேவையான விளக்கங்கள் பல்வேறு சமய நூல்களில், பல்வேறு மொழிகளில் இடம் பெற்றுள்ளன. அவற்றை சுட்டிக்காட்டும் பொதுவான சொற்றொடர்தான் "சனாதன தர்மம்".
அறிவியல் நூல்கள் பல பாடப் பிரிவுகளில் உள்ளன. அவைகளைச் சுட்டிக் காட்டுவதற்கு "விஞ்ஞானம்" என்கின்ற வார்த்தையைப் பயன் படுத்துகிறோம்.
அதைப் போன்றே, மனிதன் மனதில் எந்தவித சலனமுமின்றி அமைதியாக வாழ்வதற்கு, அதன் மூலம் இறைத்தன்மையை உணர்வதற்கு பல சமய நூல்களில் பல பாடல்கள் உள்ளன. தவிர "சிவஞான போதம்" போன்ற நூல்கள் மனிதனின் ஆணவத்தை அழித்து சித்த சுத்திக்கான போதனைகளை இயம்புகின்றன. இத்தகைய நூல்களைச் சுட்டிக் காட்டுவதற்கு "சனாதன தர்மம்" என்ற சொற்றொடரைப் பயன் படுத்துகிறார்கள்.
சமய நூல்களில் உள்ள தவறுகளை, குறைகளை சுட்டிக் காட்டினால், அவற்றை பரிசீலனை செய்யலாம். அதை விடுத்து "சனாதன தர்மம்" என்ற சொற்றொடரை வைத்துக்கொண்டு சமயங்களை பழித்துக் கூறுபவர்களை என்னவென்று சொல்வது?
"சனாதன தர்மம்" என்ற பெயரைக் கேட்டதும், அது இந்து மதத்தை -- அதிலும் குறிப்பாக வேதங்களை -- சார்ந்தது எனப் பலரும் நினைப்பதுண்டு.
உண்மையில் அதன் கோட்பாடு மிகவும் தெளிவானது.
எந்த சமய நூல்களில் இருந்தாலும், சமய நூல்களுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அவற்றில் சொல்லப்பட்ட கருத்து எல்லா மனிதர்களுக்கும், எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும். அத்துடன் அது என்றும் நிரந்தர உண்மையாக இருக்க வேண்டும். எனவே இதில் காலத்திற்கேற்ப மாறக்கூடிய சடங்கு, சம்பிரதாயங்கள், ஆகம விதிகள் எதுவும் அடங்காது.
( முற்றும்)
No comments:
Post a Comment