Friday, 7 October 2022

அன்பு


அன்பு

பதிவு 1

அன்பை அறியாத, அன்பை வெளிப்படுத்தாத உயிரினமே இருக்காது.


ஆனாலும், "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற வள்ளுவர் கூடவே "அஃதிலார் .." என்று எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்.


முரண்பாடாகத் தோன்றினாலும், இதுவே யதார்த்தம்.


அன்பு, அதன் விரிவு, அவற்றின் பரிமாணம் போன்றவற்றை புரிந்துகொள்வதில்  சிக்கல்கள் இருப்பதை சிலரிடம் காண்கிறேன்.


நான் 'அறிந்து கொண்டது, புரிந்து கொண்டது, உணர்ந்து கொண்டது' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எனது எண்ணங்களை பதிவிடுகிறேன்.


எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கவில்லை.


இருந்தாலும் ஒரு சிலருக்கு இவை பயன்படலாமே என்ற நப்பாசைதான்.


                  (தொடரும்)


அன்பு

பதிவு 2


மேலே தொடர்வதற்கு முன்பாக நாம் ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருக்கவேண்டி உள்ளது.


வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல வேதனைகளுக்கான காரணம் இதில்தான் அடங்கி இருக்கிறது.


தாயன்பிற்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது என்பார்கள்.

ஆனால், நான் பார்த்தவரையில், எந்தத் தாயுமே தன் குழந்தையிடம் அன்பை வெளிப்படுத்தியதே இல்லை.


உங்களுக்கு இந்தக் கூற்று சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை.


சற்று சிந்தித்துப் பாருங்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டுவது அன்பா அல்லது பாசமா?


இரண்டும் ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இரண்டிற்குமிடையே நிறைய இடைவெளி உள்ளது.


'அன்பே சிவம்' என்று சொன்ன பெரியோர்கள், 'பாசம்' என்று வரும்பொழுது அவர்களது அறிவுரை அதற்கு எதிராக இருக்கிறது.


"பாசவினைகள் பற்றது நீங்கி.." என்கிறது 'கந்தசஷ்டி கவசம்'.


"ஆசைவலைப் பாசத் தகப்பட்டு மாயாமல்..." என்கிறார் பத்திரகிரியார்.


தங்கள் பிள்ளைகளிடம் பாசத்தை காட்டிய பெற்றோர்கள், எந்த இடத்தில் அதிலிருந்து பின்வாங்கி 'இனி நாம் அன்பை மட்டுமே காட்டவேண்டும்' எனக் கற்றுக்கொள்வதே இல்லை; இதுவே வயதான காலத்தில் அவர்கள் படும் துன்பத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது.


                 (தொடரும்)


அன்பு

பதிவு 3


அன்பு அதன் இயல்பில் இனிமையானது; தூய்மையானது; பரிசுத்தமானது; களங்கமற்றது.

அதனால்தான் பிறந்த குழந்தைகளால் கள்ளமில்லாமல் சிரிக்கமுடிகிறது.


அன்பு அதன் இயல்புப்படி ஒரு மூலப்பொருளைப் போன்றது. அதனுடன் மற்றுமொன்றை கலந்தவுடன், அது களங்கப்பட்டதாக மாறி விடுகிறது. அதன்பின் அங்கு களங்கமற்ற அன்பு இருப்பதில்லை.


குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும், 'class-ல first rank வாங்கவேண்டும்' என்பது போன்ற ஆசைகளை ஊட்டி விடுகிறோம்.

விளைவு; அந்தக் கழந்தையிடமிருந்து பரிசுத்தமான அன்பு காணாமல் போய்விடுகிறது. அதன் களங்கமற்ற தன்மையும் மறைந்துவிடுகிறது.


"மீண்டும் குழந்தையாக மாறாதவரையில் ..." என்கிறார் ஏசுபிரான்.

அதன் அர்த்தம் என்ன? 

மீண்டும் குழந்தைக்கே உரிய மனநிலை வந்தால் மட்டுமே, அந்த மனிதனிடம் தூய்மையான அன்பை எதிர்பார்க்க முடியும் என்பதுதான்.

                 (தொடரும்)


அன்பு

பதிவு 4


எந்தவொரு மனிதனும் 'அன்பின்' துணைகொண்டு இரு வேறு திசைகளில் பயணம் செய்ய முடியும்.


ஒரு பயணம் அக உலகம் சார்ந்தது; மற்றொன்று புற உலகம் சார்ந்தது.


அக உலகப் பயணம் பற்றறுக்க உதவும்; புற உலகப் பயணம் ஏற்கனவே உள்ள பற்றை மேலும் வலுப்பெறச் செய்யும்.


புற உலகில் பயணத்தை தொடர்ந்தவர்கள், அறிந்தோ அல்லது அறியாமலோ திசை மாற்றம் பெற்று அக உலகில் நுழைவதும் உண்டு.


பயணம் செய்வோர் எல்லோரும் இலக்கை சென்றடைவார்கள் என்று சொல்ல முடியாது. பாதி வழியில் வழிதவறிப் போனவர்களும் உண்டு.


நாம் அதைப்பற்றி கருத்து ஏதும் கொள்ளாமல், பயணத்தின் பயனாக என்ன நடக்கும் என்பதை மட்டும் பார்ப்போம்.

              (தொடரும்)


அன்பு

பதிவு 5

முதலில் அக உலகப் பயணம் பற்றி பார்ப்போம். புற உலகப் பயணம் சிக்கல் நிறைந்தது. அதை நிதானமாக கையாள வேண்டும்.


சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள் அக உலகப் பயணம் செய்யத் தகுதியானவர்கள். 

ஏனெனில் அவர்கள் இயல்பாகவே தனித்திருக்க விரும்புவார்கள். ஆங்கிலத்தில் அவர்களை 'introvert' என்று அழைப்பார்கள்.


வெளிவுலகத்திலிருந்து நமது கவனத்தை உள்முகமாக திருப்புவதை 'பிரத்யாஹாரம்' என்று சொல்வார்கள்.

வெளிவுலக நாட்டம் உள்ளவர்கள் இந்த நிலையை அடைய நிறைய கஷ்டப்பட வேண்டும்.

ஆனால், சத்துவ குணம் நிறைந்த மனிதர்களுக்கு இது மிகவும் பிரியமான ஒன்றாக இருக்கும்.

எனவே அவர்கள் எந்தவித முயற்சியும் இன்றி, மிக எளிதாக 'பிரத்யாஹாரத்தில்' நுழைந்து விடுவார்கள்.

அதனைத் தொடர்ந்து தாரணை மற்றும் தியானத்தில் பயிற்சியை தொடரும் பொழுது, பற்று (attachment) என்ற ஒன்று அவர்களைவிட்டு விலகிவிடும்.


பற்றறுத்த மனம் கருணை நிறைந்த மனமாக மாறிவிடும்.

           (தொடரும்)


அன்பு

பதிவு 5.1


சத்துவ குணம் இல்லாத மனிதர்களும் 'கருணையை' நோக்கி பயணம் மேற்கொள்ள முடியும். அது எப்படி என்பதை பின்னர் பார்ப்போம்.


அதற்கு முன்னர் "கருணை நிறைந்த மனம்" உள்ளவர் எப்படி இருப்பார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


ஒரு மனிதனிடம் இரக்க உணர்வு இருந்தால், அவன் கருணை உள்ளவன் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில், 'கருணை .. இரக்கம்' இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.


தியான வகுப்புகள் பல இடங்களில் நடப்பதை நாம் பார்க்க முடிகிறது. தியான வகுப்பில் கலந்துகொண்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்கள் அனைவரும் கருணை மனம் படைத்தவர்கள் என்று நினைத்தால் அதுவும் தவறு.


அப்படியானால் கருணை மனம் படைத்தவர்களை, எப்படித்தான் அடையாளம் காண்பது?

அத்தகைய மனிதர்களிடம் கீழ்க்கண்ட பாவனைகள் இருக்கும். அவை - -

1. அவர்களிடம் அஹங்காரம் இருக்காது.

2. எந்த இடத்திலும் தம்மை முன்னிலை படுத்த முயற்சிக்க மாட்டார்கள்.

3. எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் பொறுமையுடன் கையாள்வார்கள்.

4. தம்மை 'கர்த்தா' என நினைக்க மாட்டார்கள்; மாறாக தம்மை இறைவனின் 'கருவி'யாகவே எண்ணுவார்கள்.

5. வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் என எதுவுமே அவர்களை பாதிக்காது.

(இவை ஒரு சில உதாரணங்களே)


               (தொடரும்)

அன்பு

பதிவு 5.2


சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள் 'கருணையை' நோக்கி பயணித்தாலும், எல்லோரும் இலக்கை அடைவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது.


சத்துவ குணம் நிறைந்த மனிதர்களிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) குறைந்து காணப்படும். அவர்களுக்கு புறவுலகில் செயல்பட விருப்பம் இருக்காது.


எனவே அகவுலகில் பயணம் செய்ய 'பிரத்யாஹாரத்தில்' நுழைந்து விடுவார்கள்.


ஆனால், பிரத்யாஹாரத்தில் இருந்து நேரடியாக தாரணைக்கு சென்றுவிட முடியாது.


தாரணை என்பது மனதை ஒருமுகப் படுத்துதலைக் குறிக்கும்.


மனிதனின் ஆழ்மனதில் உள்ள பதிவுகள் குறைந்தால்தான், தன்னை ஒருமுகப் படுத்துவதற்கு மனம் ஒத்துழைக்கும்.


ஆழ்மனப் பதிவுகளைக் குறைப்பதற்கு, மனிதன் அகத்தாய்வில் (introspection) ஈடுபடுவது அவசியம்.


தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு விடைகளைத் தேட வேண்டும். 


இதைக் குறித்துதான் இரமண மகரிஷி "நான் யார்" என்று அறிய முயற்சி செய் என்கிறார்.


இத்தகைய சுயவிசாரணை காரணமாக ஒரு உண்மை புலனாகும்.


அது - -

"நான்" என்று

நான் நினைத்தது


"நான்" இல்லையென்று

நான் அறிந்தது


"நான்" என்ற

அகந்தை அழிந்தது.


இந்த உண்மையை புரிந்துகொண்டபின், தாரணையைக் கடைப்பிடிப்பது எளிதாக இருக்கும்.


தாரணை கைகூடிவிட்டால், தியானம் எளிதாகிவிடும். தியானம் செய்வதை 'ஏகாக்ரக சிந்தனை' என்றும் சொல்வார்கள்.


தான் நினைத்த ஒன்றிலேயே, மனம் ஒன்றிவிடுவதே தியானமாகும்.


தியானத்தின் தீவிரத்தைப் பொறுத்து, ஆழ்மனதில் உள்ள பதிவுகள் ஒவ்வொன்றாக நீங்கிவிடும்.


வாழைத்தாரில் உள்ள காய்கள் பருத்துவரும்போது, அதன் சீப்பின்மேல் படர்ந்திருந்த தோல் கழன்று கீழே விழுவதுபோல், தியானத்தின் தீவிரம் கூடக்கூட, ஆழ்மனதில் உள்ள தேவையில்லாத பதிவுகள் ஒவ்வொன்றாக நீங்கிவிடும்.

(As the man progresses in his "inward expansion", the lower tendencies in him automatically drop off - - Swami Chinmayanantha).

                 (தொடரும்)


அன்பு

பதிவு 6


இறையருள் பெற்றவர்கள் கருணையை மழையெனப் பொழிவார்கள்.


அவர்கள் தேடிச்சென்றது இறையருளை வேண்டி. ஆனால், நமது கண்களுக்கு அவர்களிடமிருந்து வெளிப்படும் கருணை மட்டுமே தெரியும்.


பொருளைத் தேடுபவர்கள் புறவுலக நாட்டம் உடையவர்களாகவும், அருளைத் தேடுபவர்கள் அகவுலக நாட்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.


"பொருள் தேடி புண்பட்டு பொய்யுலகில் வாழாமல்

அருள் தேடி அன்புற்று 

அகமகிழ்வ தெக்காலம்?" 


சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், ஒரு சிலரே அருளைத் தேடுபவர்களாக இருப்பார்கள்.


அதனால்தான் வள்ளுவரும் ".. நோற்பார் சிலர் பலர் நோலாதவர்" என்கிறார்.


சத்துவ குணம் மிகுந்தவர்கள் இயல்பாகவே அருளைத் தேடுபவர்களாக இருந்தாலும், பொருளைத் தேடி ஓடுகின்ற பலரில், ஒருசிலர் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அகவுலக வாழ்க்கைக்கு திரும்புவதும் உண்டு.

அவர்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


                (தொடரும்)

அன்பு

பதிவு 7


எந்தவொரு செயலை செய்வதாக இருந்தாலும், அந்தச் செயலை செய்வதற்கு தேவையான முயற்சியும், முறையான பயிற்சி யும் இருந்தால்மட்டுமே அதனை செவ்வனே செய்யமுடியும்.


அதுமட்டுமின்றி அந்தச் செயலை செய்வதற்கு நாம் காட்டும் முனைப்பும் முக்கியம்.


அத்தகைய முனைப்பை நான்கு நிலைகளாக வகைப்படுத்தியுள்ளார்கள். அவை - - 

மந்த தரம், மந்தம், தீவிரம் மற்றும் அதி தீவிரம்.


ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வழிமுறைகளின் தேவையின்றி அதிர்ச்சி வைத்தியம் மூலம், புறவுலகை விட்டு அகவுலகிற்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்கிறது. பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரிநாதர் போன்றோர் இதற்கு உதாரணமாக இருப்பவர்கள்.


அன்னை சாரதா தேவியைப் பொறுத்தவரை, பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரால் பக்குவப்படுத்தப்பட்டிருந்ததால், தம்மை தாமே அருள் உலகில் பயணம் செய்யும் அளவிற்கு செம்மைப்படுத்திக் கொண்டார்.


மற்றவர்கள் அவர்கள் பெறும் அனுபவங்களின் அடிப்படையிலேயே தேவையான மாற்றங்களை செய்யவேண்டி உள்ளது.


                  (தொடரும்)

அன்பு

பதிவு 8


சென்ற பதிவில் மற்றவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது 'இரஜோ குண வாதிகளையும்', 'தமோகுணவாதிகளையும்' தான் குறிக்கின்றது.


இரஜோ குணவாதிகளிடம்

தன்முனைப்பு அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள்.


இவர்களில் சிலர் மட்டுமே பொதுநலத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் சமூக சேவையில் ஈடுபட்டு பலவித இன்னல்களுக்கும் ஆளாவார்கள்.


புறவுலகில் செயல்புரிதல், அகத்தாய்வு, சுயசிந்தனை - - இம்மூன்றும் இவர்களுக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கும். மனதில் நிம்மதியின்றி ஒருவிதமான தவிப்பில் இருப்பார்கள்.


நல்லதொரு வழிகாட்டியின் துணை கிடைத்தால், தன்முனைப்பு குறைந்து அகவுலகில் பிரவேசித்து விடுவார்கள். ஆனாலும், தன்முனைப்பு குறைவதைப் பொறுத்தே இவர்களுக்கு தியானம் கைகூடும்.


இவர்களைத்தவிர வேறு சில மனிதர்களும் அகவுலக வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பெறுவார்கள். அவர்கள் புறவுலகில் பணிபுரிந்தாலும், புறவுலக நாட்டமின்றி வாழ்ந்து வருவார்கள். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.


'சுயநலவாதிகள்' மற்றும் 'தன்முனைப்பு இல்லாத மனிதர்கள்' - - இவர்கள் புறவுலக வாழ்க்கையில் பலவேறு கனவுகளில் வாழ்ந்துவருவார்கள்.


இறைவனிடம் சரணடைந்தால் மட்டுமே, இவர்களால் அகவுலக வாழ்க்கையில் பிரவேசிக்க முடியும்.


                 (தொடரும்)

அன்பு

பதிவு 9


அகவுலகப் பயணம் பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்லியிருந்தேன்.


இனி சிக்கல்கள் நிறைந்த புறவுலகப் பயணம் பற்றி பார்ப்போம்.


அதற்கு முன் இரண்டு பயணங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


அகவுலகில் இறைவனைத் தேடுகிறோம்; புறவுலகில் இறைவனை வேண்டுகிறோம்.


இறைவனை வேண்டும்பொழுது, அருளைக் கேட்டால் அது அகவுலகப் பயணம் ஆகிவிடும்; பொருளைக் கேட்டால் அது புறவுலகப் பயணமாகிவிடும்.


அருளைத் தேடும் பயணமும், பொருளைத் தேடும் பயணமும் ஒன்றுக்கொன்று எதிர் திசையில் செல்பவை. இரண்டு பாதையிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியாது.

"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு" என்கிறார் வள்ளுவர். 


(செல்வத்தை வேண்டினால் புறவுலகில் பயணம் செய்; ஞானத்தை தேடினால் அகவுலகில் பயணம் செய்).


மனிதன் தனக்குள்ளே பயணித்தால், இறைவனை உணரலாம். (தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் .. திருமூலர்).


தனக்கு வெளியே பயணித்தால் செல்வத்தை சேர்க்கலாம்.


நாம் ஆலயங்களுக்கு செல்கிறோம். அங்கு ஆண்டவனைத் தேடுகிறோமா அல்லது ஆண்டவனிடம் வேண்டுகிறோமா? சற்று சிந்தித்து பாருங்கள். பல உண்மைகள் புரியும்.

                  (தொடரும்)

அன்பு

பதிவு 10


சென்ற பதிவைப் பார்த்ததும், ஆண்டவனிடம் வேண்டுவது தவறு என்று சொல்கிறாரோ என்ற எண்ணம் அன்பர்களுக்கு தோன்றலாம்.


ஆண்டவனிடம் வேண்டுவதில் தவறில்லை; வேண்டிப் பெற்றதை அனுபவிப்பதிலும் தவறில்லை. 


ஆனால், அப்படி அனுபவிக்கும் பொழுது நமது அஹங்காரம் வளராமல் இருக்க, நாம் ஆண்டவனை மறவாமல் இருக்க கற்றுக்கொள்ள

வேண்டும்.


பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார்.. "ஒரு தாய் சமையலறையில் எந்த வேலையில் இருந்தாலும், அவள் கவனமெல்லாம் படுக்கை அறையில் தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையின் மேலேயே பதிந்திருக்கும்".


அதைப்போன்று நாமும் எந்த சூழ்நிலயில் இருந்தாலும், நமது எண்ணம் மட்டும் எப்போதும் இறைவன் மீதே பதிந்திருக்க வேண்டும்.


அது எப்படி முடியும் என்று நினைக்கலாம்.


ஒரு ரயிலில் பயணம் செய்கிறோம். நாம் ரயிலை ஓட்டுவதில்லை. இருந்தாலும் நாம் ரயிலில் பயணம் செய்வதை உணர்கிறோம் அல்லவா?


அதைப்போல வாழ்க்கை நெடுகிலும் ஆழ்மனம் இறைவன் புகழை பாடிக் கொண்டே இருக்கவேண்டும்; நாமும் எந்த வேலையில் இருந்தாலும், அதைப் பற்றிய உணர்வோடு இருக்க வேண்டும்.


"ஆடும் பணியென்று அலைந்து திரிந்தாலும் -இறைவன் புகழ்

பாடும் பணியொன்றில் பயணிப்ப தெக்காலம்?"


                      (தொடரும்)


அன்பு

பதிவு 11

முந்தைய பதிவில் கூறியபடி, வாழ்க்கை நெடுகிலும் நமது ஆழ்மனம் இறைவன் புகழை பாடிக் கொண்டிருக்க, நாமும் நாள் முழுவதும் அதைப் பற்றிய உணர்வோடு இருக்க முடிந்தால், அகவுலகப் பாதையில் பயணம் செய்யாமலே அதன் பயனை அடைந்து விடலாம். 

அருள் நிறைந்த மனிதனாக மாறி, கருணை மழை பொழிய ஆரம்பிக்கலாம்.

எளிதாகத் தோன்றினாலும் நம்மால் இதை நடைமுறைப்படுத்த முடிவதில்லை.

காரணம் ஆழ்மனதில் ஏற்கனவே நிறைய குப்பைகள் உள்ளன. அவற்றை 'வாசனா பதிவுகள்' என்றும், 'ஆணவமலம்' என்றும் சொல்கிறார்கள்.

இவை எப்படி ஆழ்மனதில் குடியேறுகின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம்.

எனது விளக்கம் உங்களுக்கு ஒரு புதிராகத் தோன்றலாம். எனக்கு சரியென்று தோன்றியதால் உங்களிடம் விவரிக்கிறேன். 

அதை ஏற்றுக்கொள்வதா அல்லது மறுப்பதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


                   (தொடரும்)


அன்பு

பதிவு 12


முல்லா தெருவில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அதை பார்த்த நண்பர் "என்ன தேடுகிறீர்கள்" என்றார்.

"வீட்டில் ஊசியைத் தொலைத்து விட்டேன்; அதைத்தான் தேடுகிறேன்" என்றார் முல்லா.

அதை வீட்டில் அல்லவா தேடவேண்டும் என்று கேட்டதற்கு "இங்குதானே வெளிச்சமாக இருக்கிறது" என்று முல்லா பதில் சொன்னார்.

வேடிக்கையாகத் தோன்றினாலும், முல்லா நம்மை பார்த்து பரிகாசம் செய்கிறார்.

உள்ளுக்குள்ளே கடவுளை வைத்துக்கொண்டு, நாம் வெளியே கடவுளைத் தேடுவது கண்டு ஏளனம் செய்கிறார்.


'அன்பே சிவம்' என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். 'அன்பும், சிவமும்' இரண்டல்ல என்கிறார் திருமூலர்.

நம்மிடம் இருப்பது அன்பென்றால், நம்மால் 'சிவத்தை' ஏன் உணர முடியவில்லை?


உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்தால், நம்மிடமிருந்து 'கருணை' மழையெனப் பொங்க வேண்டாமா?

ஏன் அது பொய்த்து விட்டது?


கங்கை நதி புறப்படும் இடத்தில் சுத்தமாகத்தான் இருக்கிறது. அதுதான் கடலிலும் கலக்கிறது. ஆனாலும், அதன் வழிநெடுகிலும் கழிவுகள் சேர்ந்து, அதை மாசுபடுத்தி விடுகிறது.

சுத்தமாக பயணத்தை தொடங்கிய கங்கைநதி பயணத்தின் முடிவில் அசுத்தமான ஒன்றாக மாறி விடுகிறது.


அதேபோல் நமது வாழ்க்கைப் பயணத்திலும், பலவகையான அசுத்தங்கள் புனிதமான 'அன்பை' மூடி மறைத்து விடுகிறது.


தசரதனின் அன்பை, பாசம் மூடியது;

கைகேயியின் அன்பை, பேராசை மூடியது;

இராவணின் அன்பை, காமம் மூடியது;

சகுனியின் அன்பை, கோபம் மூடியது.

நம்முடைய அன்பை, எது மூடியிருக்கிறது?

                (தொடரும்)


அன்பு

பதிவு 13


பதிவு எண் 11-ல் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன் --

"எனது விளக்கம் உங்களுக்கு ஒரு புதிராகத் தோன்றலாம். எனக்கு சரியென்று தோன்றியதால் உங்களிடம் விவரிக்கிறேன்."

இதற்கு ஒரு காரணம் உள்ளது.


கீதையை ஓரளவு புரிந்தபின் எனக்கு இருந்த சில சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக ஒரு ஆன்மீகப் பெரியவரை சந்தித்தேன்.


எனது ஊகங்கள் ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொண்டவர், ஆசை மற்றும் பேராசை போன்றவை வேறுவேறு தளங்களில் இயங்குகின்றன என சொன்னபோது, ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். கூடவே "நீங்கள் தேவையில்லாமல் சிந்திக்கிறீர்கள்" என்றும் கூறினார். 


இருந்தாலும் எனது ஊகம் சரியென்றே எனக்குப் பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டே என் கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

முதலில் மனதின் செயல்பாடுகள் எப்படி அமைகின்றன என்று பார்ப்போம்.

கடலின் மேற்பரப்பில் சிறிது காற்று அடித்தாலும், அலை உருவாகுகிறது. ஆனால் கடலின் அடித்தளத்தில் காற்று மற்றும் அலயின் தாக்கம் எதுவும் தெரிவதில்லை.

கடலுக்கு மேற்பரப்பு மற்றும் அடித்தளம் இருப்பதுபோல், மனதிற்கும் இரண்டு தளங்கள் உள்ளன.

ஒன்றை உணர்வு மனம் என்றும் மற்றொன்றை உணர்வற்ற மனம் என்றும் (அல்லது ஆழ்மனம் என்றும்) சொல்லலாம்.

இரண்டு மனங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பார்ப்போம்.

                  (தொடரும்)


அன்பு

பதிவு 14


புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களினால் ஏற்படும் அனுபவங்களை மூளையில் பதிவிடும்போது அதனை மனம் என்று சொல்கிறோம். 

சில பதிவுகள் சில காலம் தங்கியிருந்து பின் மறைந்து விடுகின்றன. இதனை உணர்வு மனம் என்கிறோம்.

சில பதிவுகள் நீண்ட காலம் நினைவில் தங்கிவிடும். இதனை உணர்வற்ற மனம் அல்லது ஆழ்மனம் என்கிறோம்.

ஆழ்மனதில் பதிவுகள் இரண்டு வழிகளில் நடைபெறும்.

உணர்வு மனதில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் நாம் தொடர்ந்து செய்யும் செயல்கள், நாளடைவில் பழக்கமாக மாறி பின் ஆழ்மனம்வரை சென்றுவிடும். 

செயல்கள் செய்யமுடியாவிட்டாலும், மனம் தொடர்ந்து ஒன்றை நினைத்துக் கொண்டிருந்தாலும், அது ஆழ்மனம்வரை சென்றுவிடுகிறது.


மற்றும் சில நேரங்களில் சில நிகழ்வுகள் நேரடியாக ஆழ்மனம்வரை சென்று அங்கு பதிவுகளை ஏற்படுத்துவதும் உண்டு.

ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகள்தான் ஒரு மனிதனின் சுபாவத்தை, இயல்பை நிர்ணயம் செய்கின்றன.

மனிதன் செய்யும் நல்வினை மற்றும் தீவினைகளுக்கு காரணமாக இருப்பதும் இந்தப் பதிவுகளே.

இந்தப் பதிவுகள்தான் ஒரு மனிதனின் 'ஆணவமலத்திற்கு' காரணமாகிறது. இதனை 'வாசனா' என்றும் சொல்வார்கள்.

'ஆணவமலத்தில்' உள்ள கழிவுகள் நீங்காதவரை, அவை அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்ந்துவரும்.

மனிதன் எடுக்கும் புதிய பிறவிகளில் அவனது விதியை நிர்ணயம் செய்வது இந்தப் பதிவுகளே. இதனையே 'பிரராப்த கர்மா' என்று அழைக்கிறோம்.


                   (தொடரும்)


அன்பு

பதிவு 15


அன்பு தூய்மையானது; பரந்து விரியக்கூடியது; எல்லைகளற்றது.

இருந்தாலும் "தூய அன்பு" என்றும் சொல்கிறார்களே! 


அப்படியானால் 'அன்பு' என்பதற்கும், 'தூய அன்பு' என்பதற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?


யோசித்துப் பார்த்தால் ஒரு வித்தியாசம் தோன்றுகிறது.


ஒரு மனிதன் தன் உறவுகளுடன் அன்பாக நடந்துகொள்கிறான். ஆனால், சக மனிதர்களிடம் வெறுப்பை, கோபத்தை காட்டுகிறான்.

அவனை எப்படி அன்பான மனிதன் என்று சொல்லமுடியும்?


இது "பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா! மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா!" என்று கவிஞர் எழுதிய பாடலை அல்லவா நினைவு படுத்துகிறது.

எதிர்மறை உணர்வுகள் இன்றி, எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிந்தால் அதுவே "தூய அன்பாகும்".


"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே"

என்று தாயுமானவர் பாடுவது "தூய அன்பின்" அடையாளம்.


எல்லா மனிதர்களிடமும் 'அன்பு' இருக்கிறது; அது 'தூய அன்பாக' மாறுவதற்கு எது தடையாக இருக்கிறது?


அதற்கு காரணம் நாமேதான் என்றால், ஒப்புக்கொள்ளும் தைரியம் நம்மிடம் இருக்கிறதா?


                (தொடரும்)


அன்பு

பதிவு 16


மனிதன் ஒரு பொருளை - - அது உயிருள்ள பொருளாக இருந்தாலும் அல்லது உயிரற்ற ஜடப்பொருளாக இருந்தாலும் - - தொடர்ந்து நினைக்கும் பொழுது, அந்த நினைவு பற்றாக (attachment) மாறிவிடுகிறது.


பற்றிய ஒன்று பற்றாகமாறி, அது அந்த மனிதனைப் பற்றி அவனது மனதில் ஆசையாக உருவெடுக்கிறது.


அதன் பின் அவனது மனதில் பயமும், கோபமும் வரக்கூடிய வாய்ப்பு அதிகரித்து விடுகிறது.


இந்த ஆசை என்பது அவனது உணர்வு மனதில் பதிவது. ஒருவேளை அந்த ஆசை நிறைவேறாவிட்டால்கூட, அவன் அதை மறந்துவிடலாம்.


ஆனால், அந்த ஆசை தொடர்ந்து வளருமேயானால், அது ஆழ்மனம்வரை சென்றுவிடும்.


அங்கு அது பாசமாகவோ, பேராசையாகவோ அல்லது காமமாகவோ வேர்கொண்டு விடுகிறது.


மனிதனுக்கு வரும் பலவித பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது இந்த ஆழ்மனப் பதிவுகளே.


இத்தகைய பதிவுகளை அகற்றும் வித்தையைக் கற்றுக்கொண்டுவிட்டால், மனதில் அமைதி குடிகொண்டுவிடும்.


மதம் படைக்கப்பட்டது ஆழ்மனப் பதிவுகளைக் களைவது எப்படி என்று வழிகாட்டுவதற்காகத்தான்.


                (தொடரும்)


அன்பு

பதிவு 17


ஒரு திரைப்பட பாடலில், பிச்சை எடுத்து வாழும் பெண் இவ்வாறு பாடுகிறாள் - -

"ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா - இது 

ஈசனுக்கு ஓய்வுநேர

விளையாட்டம்மா".


அவள் புலம்புவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், நம்மில் பலரும் புலம்புகிறோமே! அது ஏன்?

நம்மிடம் அறிவு இருக்கிறது; சிந்திக்கும் திறனும் இருக்கிறது. இருந்தும் சிந்திக்க மறுக்கிறோமே! அது ஏன்?


"ஏதுக்கு வாழ்வு

என்றெண்ணிப் பாராமல்

சூதுக்குள் வாழ்ந்தும்

சுகமொன்றும் காணாமல்

வாதுக்கு வந்தும்

வழியொன்றும் தேடாமல்

சாவுக்கு வந்து

சவமானார் சஞ்சலத்தில்"


"ஓதியும், உணர்ந்தும்" பின் ஏன் பேதையாய் வாழ்கிறாய் என்கிறார் வள்ளுவர்.


இதற்கான காரணங்கள் பல - -

* தவறான முன்முடிவுகள்

* அவநம்பிக்கை

* காரணங்களை ஆராய தன்னால் முடியாது என்ற எண்ணம்

* எல்லாம் தலைவிதி என்று நினைப்பது


இதுபோன்ற பல காரணங்களினால், நாம் அமைதியைத் தேடும் முயற்சியை விட்டு விடுகிறோம்.


"நான் அன்பான மனிதன்தானே; ஏன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்" என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால், விடைதான் கிடைப்பதில்லை.


இதற்கான காரணத்தை பகவான் கிருஷ்ணர் "மூன்றே" வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார்.

கீதையில் உள்ள அற்புதமான சுலோகங்களில், இதுவும் ஒன்று. 


                  (தொடரும்)


அன்பு

பதிவு 18


கீதையில் அர்ஜுனன் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறான் - -

"கிருஷ்ணா, மனிதன் விருப்பமில்லாமல் இருந்தாலும், எது அவனை பாபம் செய்யத் தூண்டுகிறது?".


கிருஷ்ணன் பதில் சொல்லுகிறார் - -

"ரஜோ குணத்தின் காரணமாக மனதில் எழும் காமமும், குரோதமுமே இதற்கு காரணம். இவையே உனது பரம வைரி என அறிந்துகொள்".

(பகவத்கீதை -- அத்தியாயம் 3; ஸ்லோகம் 36, 37)


'ரஜோ குணம், காமம் மற்றும் குரோதம்' மூன்றும் நமக்கு பரிச்சயமான வார்த்தைகள்தான். ஆனால் மேலோட்டமாக படித்துவிட்டு போய்விடுகிறோம்.


அதனால், நாம் படும் அனைத்து வேதனைகளுக்கும் காரணமாக இருப்பது இவைதான் என்பதைப் புரிந்துகொள்ள மறந்து விடுகிறோம்.


ஆழமாக பார்க்க வேண்டிய விஷயம் இது.


                  (தொடரும்)


அன்பு

பதிவு 19


ஒரு மனிதன் புறவுலகில் ஒரு பொருளை நினைக்கும் பொழுது அல்லது ஒரு பொருளோடு தொடர்புகொள்ளும் பொழுது, அவனது மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து அவனது எண்ணத்திலும், எண்ணங்கள் ஏற்படும் தளங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


ஒரு வாலிபன் உரிய பருவத்தில் ஒரே விஷயத்தை பற்றி பலவகைகளில் நினைக்கக்கூடும்.


அவன் தனக்கு ஒரு மனைவி வேண்டும் என்று நினைத்தால், அது தேவையின் காரணமாக வருவது. அந்த நிலையில் அவனிடம் ஆசையேதும் இருப்பதில்லை. தேவை பூர்த்தியாக வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்.


அவனே ஒரு பெண்ணைப் பார்த்து அவளே தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று நினைத்தால், அது ஆசையாகமாறி உணர்வு மனதில் தங்கிவிடுகிறது.

அதுவே, அவன் அந்தப் பெண்ணைப்பற்றி தொடர்ந்து நினைக்கும்பொழுது, உணர்வற்ற மனம்வரை சென்றுவிடுகிறது.


உணர்வு மனதில் ஆசையாக இருந்தது, உணர்வற்ற மனதை அடைந்தபோது தீவிர ஆசையாக மாறிவிடுகிறது.


உணர்வற்ற மனதில் பதிவு ஏற்பட்டுவிட்டால், அவனது நிம்மதி பறிபோய்விடும்.


அந்த நிலையில் அவனுக்கு பயம் வந்துவிடுகிறது. அவள் தனக்கு கிடைப்பாளா, மாட்டாளா என்று ஏங்க ஆரம்பித்து விடுகிறான்.


ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு வேறுவொரு இடத்தில் திருமணம் என்று தெரிந்தால், உணர்வற்ற மனதில் தீவிர ஆசையாக இருந்த ஒன்று, கோபமாக மாறிவிடுகிறது. அதன்பின் தீவிர ஆசைக்குப் பதிலாக, பழிவாங்கும் எண்ணம் வந்துவிடுகிறது.


               (தொடரும்)


அன்பு

பதிவு 20


சென்ற பதிவில் மனிதனின் உள்ளத்தில் எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்களையும், அவை இடம்பெறும் வேறுவேறு தளங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அது நண்பர்களின் புரிதலுக்காக கொடுக்கப்பட்ட ஒரு உதாரணம் மட்டுமே.


நாம் அதுபோன்ற நிகழ்வுகளை பின்னர் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.


'காமம், குரோதம் மற்றும் ரஜோ குணம்' ஆகிய மூன்றை மட்டும், பாபம் செய்வதிற்கான காரணிகள் என்று கிருஷ்ணன் ஏன் குறிப்பிட்டார் என்பது புரியவேண்டுமானால், அவர் சொல்லும் கூற்றின் ஆழத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


'ரஜோ குணத்தின் காரணமாக வரும் காம, குரோதம்' என்று கிருஷ்ணன் சொல்கிறார். அப்படியானால் சத்துவ குணம் உள்ளவர்களும், தமோ குணம் உள்ளவர்களும் பாபம் செய்ய மாட்டார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.


மூன்று குணங்களையும் சார்ந்தவர்களின் பண்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று தெரிந்தால்தான், கிருஷ்ணன் ஏன் 'ரஜோ' குணத்தை மட்டும் குறிப்பிட்டார் என்பது புரியும்.


அதனைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்.


               (தொடரும்)


அன்பு

பதிவு 21


மனிதன் பாபம் செய்வது எதனால் என்று அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்கிறான்.


நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதலாவது உண்மை, மனிதனால் பாபம் செய்ய முடியாது என்பதுதான்.


பாபம் என்பது செயலல்ல; செயலின் விளைவாக நமக்குள் ஏற்படும் பின்விளைவு.


ஆக, செயல் புரிந்தால் மட்டுமே பாபம் வருவதற்கான வாய்ப்பு உண்டு.


செயல்புரிவதற்கு 'தன்முனைப்பு' (அஹங்காரம்) மிகவும் அவசியம்.


ஒரு மனிதனின் தன்முனைப்பிற்கு அடித்தளமாக இருப்பது, அந்த மனிதனின் 'ஆணவம்'. இதனையே 'வாசனா' என்றும் சொல்கிறார்கள். இதற்கான பதிவுகள் நிகழும் இடத்தை 'ஆழ்மனம்' என்கிறோம்.


சத்துவ குணம் நிறைந்த மனிதன், தனது ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்கி விடுகிறான்; அல்லது பெருமளவு குறைத்து விடுகிறான். எனவே அவனிடம் தன்முனைப்பு இருப்பதில்லை. அவன் இறைவனின் கருவியாக மாறிவிடுகிறான். அதன்பின் அவன் எதைச் செய்தாலும், தன் மூலமாக "அவன்" செயல்புரிகிறான் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறான். அதனால் அவனுக்கு பாபம் செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.


சத்துவ குணம் முழுமை அடையாதவரை, அந்த மனிதனிடம் ரஜோகுண தாக்கமும் இருக்கும். அந்த நிலையில், தன்முனைப்பும் அதனைத் தொடர்ந்து செயல்களும் நடைபெறலாம். அப்படி நடந்தால், அதற்கு காரணமாக இருப்பது அவனிடம் உள்ள ரஜோ குணமே.


                (தொடரும்)


அன்பு

பதிவு 22


"தமோ குணத்தைப்" பொறுத்தவரை நம்மிடையே ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது.

பட்டியலின மக்கள் அனைவரும் 'தமோ குணம்' உள்ளவர்கள் என பலரும் நினைக்கின்றனர். அது மாபெரும் தவறு.


யார் மந்த புத்தியுடனும், சோம்பல் மிகுந்தும் காணப்படுகிறார்களோ, அவர்களை மட்டுமே 'தமோ' குணவாதிகள் என அழைக்கலாம்.


அப்படிப்பட்டவர்கள் இருந்தால், அவர்களிடம் தன்முனைப்பு இருக்காது; இருந்தாலும் அதை அவர்கள் உணரமாட்டார்கள். யாராவது அவர்களை தூண்டிவிட்டால் மட்டுமே, அவர்களால் செயல்பட முடியும். 


மற்றவர்கள் சொன்னதை செய்தோம் என்பதால் அவர்களுக்கு தாம் செய்வது பாபம் என்றுகூடத் தோன்றாது.


மற்றபடி அவர்களும் 'ரஜோ' குணவாதிகள் மாதிரியே நடந்து கொள்வார்கள்.


சுருக்கமாக சொன்னால் - -

அடங்கி இருப்பது -- சத்துவ குணம்.

(தன்முனைப்பு இல்லாதிருப்பது)


ஆடித் திளைப்பது -

ரஜோ குணம்.

(தன்முனைப்பு மிகுந்து இருப்பது)


உறங்கிக் கிடப்பது --

தமோ குணம்.

(தன்முனைப்பு இருப்பதை உணராதிருப்பது)


                (தொடரும்)


அன்பு

பதிவு 23


'ரஜோ' குணத்தைப் பற்றி பார்த்தோம்.

இப்போது 'காம - குரோத' என்ற வார்த்தைகளைப் பற்றி பார்ப்போம்.

கிருஷ்ணன் 'காம' என்று சொல்லும்போது, 'அதீத ஆசை' (lust) என்ற அர்த்தத்தில் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  

அன்பு பொதுவானது. அனைவரிடமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

ஆனால், மனிதன் ஒரு பொருளைப் பற்றி தொடர்ந்து நினைத்தால், அது உணர்வு மனதில் ஆசையாகப் (love) பதிந்து விடுகிறது.

ஆசைப்பட்ட ஒன்றை மேலும் தொடர்ந்து நினைக்கும் பொழுது, அது அதீத ஆசையாக (lust) உணர்வற்ற மனதில் (ஆழ்மனம்) பதிவாகிவிடுகிறது.

அங்கு அது பல பரிமாணங்களாக உருவெடுக்கிறது.

உயிருள்ள பொருளாக இருந்தால் பாசமாகவும், உயிரற்ற பொருளாக இருந்தால் பேராசையாகவும், தான் விரும்பும் பெண்ணாக இருந்தால் காமமாகவும் அழைக்கப் படுகிறது.

அந்தப் பொருள் கையில் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் - - அதில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.


'குரோதம்' என்றால் கோபம் என்று அர்த்தம். 


ஆசை இருந்தால் கோபம் வருவது இயற்கை என்பதால்தான், ரஜோ குணம் நிரம்பப் பெற்ற மனிதனுக்கு காமம், கோபம் இரண்டும் வரும் என்கிறார்.


மனிதனிடம் அன்பு மட்டும் இருந்தால், கோபம் வர வாய்ப்பில்லை; ஆனால், அன்பு ஆசையாக மாறிவிட்டால் கோபம் வருவதை தவிர்க்க இயலாது என்கிறார்.

ஏன் அப்படி சொல்கிறார்?  

வேறொரு இடத்தில் மனதில் ஆசை இருந்தால், பயமும் - கோபமும் தொடர்ந்து வரும் என்கிறார்.

காரணம் -- ஆசைப்பட்ட பொருள் கிடைக்காதோ என்ற பயம், கிடைக்காவிட்டால் கோபம்; ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ, அது தன்னைவிட்டு போய்விடுமோ என்ற பயம், போய்விட்டாலோ கோபம் என விஷயங்கள் மாறி மாறி வந்து அந்த மனிதனை பெறும் துயரத்தில் ஆழ்த்தி விடும்.

                    (தொடரும்)


அன்பு

பதிவு 24


வெளிவுலகப் பொருளோடு மனிதன் தொடர்புகொள்ளும் பொழுது, உணர்வு மனதில் ஆசையும் (love), பின்னர் உணர்வற்ற மனதில் (ஆழ்மனதில்) அதீத ஆசையும் (lust) பதிவாகிவிடுகின்றன.


பல நேரங்களில் புறவுலக தொடர்பு இன்றியும் ஆழ்மனதில் பதிவுகள் ஏற்படுவதுண்டு. இத்தகைய பதிவுகள் மனிதன் தன்னைப்பற்றி ஏதோவொரு வகையில் பெருமிதம் கொள்ளும்போது நிகழ்கின்றன. இவை மனிதனுக்குள் 'கர்வத்தை' உண்டுபண்ணி விடுகின்றன.

ஆழ்மனதில் பதிவாகும் 'கர்வம்' "நானாகவும்", மற்ற பதிவுகள் "என்னுடைய" என்ற பற்றை குறிப்பிடுவதாகவும் அமைந்து விடுகின்றன.

"நான்" மற்றும் "என்னுடைய" - - இந்த இரண்டும்தான் மனிதனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு, அவனது அமைதியை சீரழித்து விடுகின்றன.

                 (தொடரும்)


அன்பு

பதிவு 25


' நான்' எனும்

அஹங்காரமும், அதிலிருந்து வெளிப்படும் 'என்னுடைய' எனும்

பற்றும் இருக்கும் வரை, மனிதனின் மனம் அமைதியால் நிரம்பி வழியாது. அமைதியற்ற மனதால், உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தையும் உணர முடியாது.


சித்தத்தின் மேல் பதியும் இந்தப் பதிவுகளைத்தான், 'ஆழ்மனம்' என்கிறோம்.


இந்தப் பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டால், ஆழ்மனம் பரிசுத்தமாகி, நாமும் இறையருளை உணரத் தொடங்கலாம்.


"இருள்சேர் இருவினையும் சேரா.." என்று வள்ளுவர் சொல்லும்போது இந்தப் பதிவுகளின் நீக்கத்தையே குறிப்பிடுகிறார்.


மதம் இந்தப் பதிவுகளை நீக்குவதற்கு பல வழிமுறைகளைக் கற்றுத்தருகிறது.


அவற்றை ஒவ்வொன்றாக, சுருக்கமாகப் பார்ப்போம்.

நமது இயல்புக்கு ஏற்ற வழியில் முறையாக பயணம் செய்தால், எல்லாராலும் தம்மிடம் பதிந்த பதிவுகளை நீக்க முடியும்.

அதற்கு தேவை முழுமையான முயற்சி மற்றும் முறையான பயிற்சி மட்டுமே!


                 (தொடரும்)


அன்பு

பதிவு 26


சென்ற பதிவில் ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்குவது பற்றி சுருக்கமாக பார்ப்போம் என குறிப்பிட்டிருந்தேன்.


ஆனால், சில அன்பர்களின் கருத்துக்களை அறிந்தபின் நிதானமாகவும், விரிவாகவும் விளக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


மேற்கோள் காட்டும் உதாரணங்களை உண்மை என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அவை புரிதலுக்கு உதவுவதற்காக மட்டுமே வருகின்றன.

அன்பர்களில் யாரும் 'தமோ'குணவாதியாக இருப்பதில்லை. எனவே விளக்கங்களை அளிக்கும்போது, 'சத்துவ' குணம், மற்றும் 'ரஜோ' குணம் இரண்டை மட்டுமே கருத்தில் கொள்கிறேன்.

                   (தொடரும்)


அன்பு

பதிவு 27


நமது சித்தத்தில் ஏற்படும் ஆழ்மனப் பதிவுகளுக்கு நாம்தான் காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.


நமது தவறுகளுக்கு நாம்தான் காரணம் என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே, நாம் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.


அடுத்து, இந்த பதிவுகளால் விளையும் தீமைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம் - -

1. ஆழ்மனதில் பதிவுகள் இருந்தால், அந்த மனிதனால் சலனமற்று இருக்க முடியாது; சலனமுள்ள மனதில் சஞ்சலங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

2. சலனமுள்ள மனதில் அமைதி இருக்காது; அமைதி இல்லாத மனதால் உள்ளிருந்து பெருகும் 'ஆனந்தத்தை' உணர முடியாது.

3. ஆழ்மனப்பதிவுகள் அன்பை மூடிவிடுவதால், அன்பு தூய அன்பாக இருப்பதில்லை; தூய அன்பு இல்லாத மனிதனிடம் 'கருணை' பிறக்காது.

4. ஆழ்மனதில் பதிவுகள் இருக்கும்வரை, இறையருளையும் உணர முடியாது.


                  (தொடரும்)


அன்பு

பதிவு 28


ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல; அதேநேரம் நாம் நினைப்பதைப் போன்று கடினமான காரியமும் அல்ல.

ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டால், முதலில் வந்தால் மட்டுமே பரிசு என்பார்கள். இங்கு அப்படியல்ல; கடைசியில் வந்தாலும் எல்லைக்கோட்டை அடைந்துவிட்டால் போதும். பரிசு நிச்சயம்.


ஆனால், இது தொடர் ஓட்டப் பந்தயம் போன்றது. ஒரு வித்தியாசம். 


தொடர் ஓட்டப் பந்தயத்தில் பிரம்பு போன்ற சிறிய கம்பை கையில் எடுத்துச் சென்று அடுத்து நிற்பவரிடம் கொடுக்கவேண்டும். ஆக, நான்கு வீரர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக ஓடி பந்தய தூரத்தை கடப்பார்கள்.


வாழ்க்கை பந்தயத்தில் ஒரே மனிதர் ஒவ்வொரு பிறவியாக ஓடவேண்டும்.


இந்த ஓட்டம் ஆழ்மனதில் உள்ள பதிவுகள் நீங்குவதுவரை தொடரும்.


இதில் பிரச்சினை என்னவென்றால், நமது ஓட்டம் சரியாக இல்லையென்றால், ஆழ்மனதில் உள்ள அழுக்கு (ஆணவ மலம்) குறைவதற்குப் பதிலாக கூடிவிடும் வாய்ப்பு இருப்பதுதான்.


'புருஷார்த்தா' நன்கு வேலை செய்தால், அழுக்குகள் குறையும்; இல்லையெனில் அழுக்குகள் கூடி, பிறவிகளின் எண்ணிக்கையும் கூட ஆரம்பித்து விடும்.


'புருஷார்த்தா' என்றால் என்ன?


                  (தொடரும்)



அன்பு

பதிவு 29


என் பையன்களிடம் நான் சொல்லிய பலவற்றில் ஒரு வரி "Father should be the first friend of a son". அவர்களும் ஒரு நண்பனைப் போல் என்னுடன் வாதிடுவார்கள்.


ஒருமுறை நான் செய்த ஒரு காரியம் என் பையனுக்கு தவறென்று தோன்றியது. அவன் அதை தவறு என்று சொன்னபோது, நான் அப்படித்தான் செய்வேன் என்றேன்.


நீங்கள் செய்வது தவறென்றால், அதை கண்டிக்கும் உரிமை எனக்கு உண்டு; ஏனெனில் 'நான் உங்கள் மகன்' என்றான்.


'நீ என் மகன் என்று யார் சொன்னது' என்று நான் பதில் கூறவும், அவன் சற்று திகைத்து விட்டான்.


பின்னர் அவனுக்கு விளக்கினேன். இந்தப் பிறவியில் நான் உனக்கு அப்பாதான். போன பிறவியில் வேறொரு அப்பா இருந்திருப்பார். அதற்கு முன்னால் இன்னொரு அப்பா. இப்படி பல அப்பாக்களுக்குப் பிறந்து, இறந்து இப்பொழுது இங்கு வந்து பிறந்திருக்கிறாய்.


உனது முன்பிறவிகளில் பல அப்பாக்களிடமிருந்து நீ கொண்டு வந்திருக்கும் பதிவுகளோடு ஒப்பிடும்போது, என்னிடமிருந்து நீ பெற்ற பதிவு வெறும் 0.01% ஆகக்கூட இருக்கலாம். எனவே அப்பா-மகன் என்று பெரிதாக அலட்டிக் கொள்ளாதே என்றேன்.


பட்டினத்தார் இப்படி புலம்புகிறார் - - 

"அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ

 .......  ..... ......  .....

இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ என்செய் வேன் கச்சி ஏகம்பனே". 


நாம் இந்த மண்ணில் புதிதாக பிறக்கும்பொழுது, பல பிறவிகளில் பல்வேறு பெற்றோரிடமிருந்தும், பல்வேறு அனுபவங்களிலிருந்தும் நாம் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இந்தப் பிறவிக்கு எடுத்து வருகிறோம்.


ஒரே தாய் வயிற்றில் பிறந்தாலும், உடன்பிறப்புகளின் பண்பு மாறுபட்டு இருப்பதற்கு இதுதான் காரணம்.


பிறவியின் ஆரம்பத்தில் நாம் கொண்டுவரும் பதிவுகளை 'பிரராப்த' கர்மம் என்றும், அவற்றை எதிர்கொள்வது 'புருஷார்த்த' கர்மா என்றும் சொல்கிறார்கள்.


                  (தொடரும்)


அன்பு

பதிவு 30


ஒரு மனிதன் பிறக்கும்பொழுது, அவன் முற்பிறவியின் முடிவில் எவற்றையெல்லாம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருந்தானோ, அவற்றையெல்லாம் 'பிரராப்த' கர்மா என்ற பெயரில் தன்னுடைய புதிய பிறவிக்குக் கொண்டுவந்து விடுகிறான்.


இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள்.


இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை எனனவென்றால், நமக்கான விதியை நாம்தான் (முற்பிறவியில்) எழுதி வைத்திருக்கிறோம் என்பதுதான்.


'புருஷார்த்த' கர்மா என்பது நாம் எப்படி பிரராப்த கர்மாவை எதிர்கொள்கிறோம் என்பதைக் குறிக்கிறது.


புருஷார்த்த கர்மாவில், நமது மதியை முறையாகப் பயன்படுத்தினால் ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்க முடியும்; முயற்சி சரியான வழியில் இல்லையென்றால் ஆழ்மனதில் உள்ள பதிவுகள் மேலும் கூடுவதை தவிர்க்க இயலாது. 


இரண்டுமே நம் கையில்தான் உள்ளது.

எனவே எதை சந்திக்கிறோம் என்பது பிரச்சினை அல்ல; அதை எப்படி சந்திக்கிறோம் என்பதுதான் பிரச்சினை.

(What you meet is not the problem; how you meet is the problem).


                     (தொடரும்)


அன்பு

பதிவு 31


புருஷார்த்த கர்மாவை முறையாகப் பயன்படுத்தினால், ஆழ்மனப் பதிவுகளை நீக்க முடியும். அதற்கு தடையாக இருப்பது நமது மனம்தான்.

பட்டினத்தார் தனது மனதை இப்படி திட்டுகிறார் - -

"நீ மனமே

நீற்றைப் புனைந்தென்ன?

நீராடப் போயென்ன?

மாற்றிப் பிறக்க வகை அறிந்தாயில்லை!

மாமறைநூல் ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?

ஆற்றில் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றையே!"


பட்டனத்தார் பாடியது உண்மையில் நம்மை குறித்துத்தான்.


'துறை' என்று எதைக் குறிக்கிறார் என கவலைப்பட தேவையில்லை. ஆழ்மனப் பதிவுகளை (ஆணவ மலத்தை) நீக்கி விட்டாலே, நாம் 'துறையை' அறிந்து கொள்வது மட்டுமல்ல -- துறையின் மேலேறி நிற்பதையும் புரிந்து கொள்வோம்.


முயற்சியும், பயிற்சியும் சரியாக அமைந்துவிட்டால், எல்லாமே எளிதான காரியம்தான். கூடவே முழுமையான அர்ப்பணிப்பு உணர்வும் இருக்க வேண்டும்.

                     (தொடரும்)


அன்பு

பதிவு 32


எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அதை செய்யத் தொடங்குவதற்கு முன்பாக சில பூர்வாங்க வேலைகளை செய்ய வேண்டிவரும்.


அதேபோல் ஆழ்மனப் பதிவுகளை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக, சில விஷயங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆழ்மனதில் பல விதமான அழுக்குகள் இருக்கும். பாசம், பேராசை, காமம், வெறுப்பு, கோபம் என பலவித அழுக்குகள் உண்டு.


இவற்றையெல்லாம் நீக்கவேண்டும் என்று சொன்னதற்கு எனது நண்பர் சொன்னது --

"மற்றதெல்லாம் சரி, சார். பாசத்தை எப்படி நீக்க முடியும்? பாசம் இல்லையென்றால், குடும்ப வாழ்க்கையில் என்ன அர்த்தம் இருக்கிறது?" 


நான் அவரிடம் சொன்னேன் - - "ஊரிலிருந்து உங்கள் பேத்தி விடுமுறையில் வருகிறாள் என்று வைத்துக்கொள்வோம். ஒருவாரம் முன்னதாகவே பரபரப்பாகி விடுவீர்கள்; பேத்தி வந்ததும் அவளுடன் சிரித்துப் பேசி விளையாடுவீர்கள்; கூடவே இன்னும் சில நாட்களுக்குப்பின் ஊருக்கு சென்று விடுவாளே என்று கவலையும் கொள்வீர்கள்; அவள் ஊருக்கு சென்றதும் ஏக்கத்தில் புலம்புவீர்கள். இது பாசத்தின் வெளிப்பாடு".


"மாறாக, உள்ளத்தில் அன்பு மட்டும் இருந்தால், பேத்தி வருவதற்கு முன்பிருந்த பரபரப்பு இருக்காது; சிரித்து விளையாடுவீர்கள் - ஆனால் ஊருக்கு போய்விடுவாளே என்று கவலைப்பட மாட்டீர்கள்; பேத்தி ஊருக்கு போய்விட்டால் ஏங்கவும் மாட்டீர்கள்"


"அன்பு என்பது அடித்தளம் போன்றது. அதன்மேல் 'பாசத்தை' எழுப்பிவிட்டால், பரபரப்பு, கவலை, ஏக்கம் என ஒவ்வொன்றாகத் தொற்றிக் கொள்ளும்.


உள்ளத்தில் அன்பு மட்டுமே இருந்தால், எந்தவித தொற்றுதலுமின்றி விளையாட்டை விளையாட்டாகவே விளையாடலாம்".


இன்றுவரை அவருக்கு அன்பையும், பாசத்தையும் பிரித்தறியத் தெரியவில்லை.


இந்தப் பிரச்சினையை நான் பலரிடமும் கண்டிருக்கிறேன்.  


                      (தொடரும்)



அன்பு

பதிவு 33


நாம் உண்மையிலேயே, இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் தளைகளிலிருந்து விடுபட விரும்பினால், நமக்கு தேவையில்லாத விஷயங்களைப் பற்றி சிந்திப்பதை முதலில் விட்டுவிட வேண்டும்.


நாம் விரும்புவது ஆணவ மலத்தை (ஆழ்மனப் பதிவுகளை) நீக்கவேண்டும் என்பதுதான். பின் எதற்காக தேவையற்ற விஷயங்களைப் பற்றி சிந்திப்பதில் சக்தியை வீணாக்க வேண்டும்?


ஆணவ மலத்தை நீக்குவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.


அது நடந்துவிட்டால் மனம் சலனமின்றி அமைதியாகிவிடும்.


மனம் அமைதியானால், உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை உணர்ந்து கொள்வோம்.


பின்னர் நடைபெற வேண்டியதை இறைவன் பார்த்துக் கொள்வார்.

                     (தொடரும்)


அன்பு

பதிவு 34


ஆழ்மனப் பதிவுகளை நீக்குவதற்கு, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகள் உள்ளன.

அவற்றை முதலில் பார்த்து விடுவோம்.


எல்லா மதங்களும் 'எல்லோரையும் நேசியுங்கள்' என்றுதான் சொல்கின்றன.

‌இருந்தாலும், நம்மால் எல்லோரையும் நேசிக்க முடியாமல் போகலாம். அதற்காக மற்றவர்களை எதற்காக நாம் வெறுக்க வேண்டும்? அதை தவிர்க்கலாம் அல்லவா?

(One cannot love everybody; but, one should not hate anybody)

இவ்வாறு சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.

வளிமண்டலத்தில் (atmosphere) நமது எண்ண அலைகள் சஞ்சாரம் செய்வதுண்டு.


எதிர்மறையான எண்ண அலைகள் வளிமண்டலத்தில் கீழ்நிலையிலும், உயர்வான எண்ண அலைகள் உயர்நிலையிலும் சஞ்சரிக்கும்.


உயர்வான எண்ண அலைகள் மட்டுமே நம்மிடம் இருந்து வருமேயானால், நம்மை அறியாமலே உயர்நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சான்றோர்களின் எண்ண அலைகளால் நாம் ஈர்க்கப்படுவோம்.


மனிதர்கள் இறந்தாலும், அவர்களது எண்ண அலைகள் அவற்றிற்கே உரிய மட்டத்தில் இருந்துகொண்டுதான் இருக்கும்.


எனவே, நாம் நம்மை மேம்படுத்த வேண்டுமென்றால் நமது எதிர்மறை எண்ணங்களை முதலில் துறக்க வேண்டும்.

                  (தொடரும்)


அன்பு

பதிவு 35 


என்னுடன் வேலை பார்த்த நண்பர், தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் தந்தையிடம் கொடுத்து விடுவார். தாயையும், தந்தையையும் நன்கு பராமரித்து வருவதோடு, உரிய மரியாதையும் காட்டி வந்தார். இருந்தாலும் அவரது தந்தை சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு படாத பாடு படுத்துவார்.


ஒருநாள் நண்பர் என்னைக் குறிப்பிட்டு அப்பாவிடம் - -

"ஏம்'பா இந்தப் பாடு படுத்துகிறீர்கள்; சாரைப் பாருங்கள், அவர் பையன் ஏதாவது கேட்டாலும்

'என்னை ஏன் கேக்குற, நீயே முடிவெடுத்துக்கொள். உன்னால் முடியாவிட்டால் மட்டும் என்னிடம் வா' என்று சொல்லிவிடுவார் என இவர் சொல்ல, தந்தையோ "போடா, அவர் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார். நான் பொறுப்பான அப்பாவாக்கும்" என்று பதிலளித்து விட்டார். 


இந்த விஷயத்தில் தவறு யாருடையது. இரண்டு அப்பாக்களும் அவரவர் கொள்கைப்படி நடந்திருக்கிறார்கள்.


இருவர் செயலையும் நண்பர் ஒப்பிட்டு பார்த்ததுதான் தவறு.


ஒப்பீடு என்பது பல நேரங்களில் தேவையில்லாமல் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்திவிடும்.


கூடியமட்டும் ஒப்பீடு செய்வதை தவிர்த்து விடுங்கள்.

               (தொடரும்)


அன்பு

பதிவு 36


விழுப்புரத்தில் வேலை பார்த்த பொழுது, ஒரு அன்பர் என்னைப் பார்த்து கண்டபடி திட்டிவிட்டார். என்னுடன் வேலை பார்த்த பெண் சற்று நடுங்கிவிட்டாள்.


திட்டிய அன்பர் போனபின், அந்தப் பெண் "ஏன் சார், அவர் தேவையில்லாமல் உங்களை திட்டியிருக்கிறார். நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே" என்றாள்.


நான் அவளிடம் "ரயில்வே மேம்பாலத்தில் எப்போதும் இரண்டு பைத்தியங்கள் உட்கார்ந்திருக்கும்; பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அவர்களில் ஒரு பைத்தியம் உங்களைப் பார்த்து தவறாக பேசினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? பதிலுக்கு சண்டையா போடுவீர்களா? பேசாமல் விலகிச் சென்று விடுவீர்கள் அல்லவா? அதேபோல்தான் இதுவும்.


நான் தவறேதும் செய்யாதபோது, என்னைப் பார்த்து ஒருவர் திட்டினால் அதற்காக நான் ஏன் கோபப்பட வேண்டும்.


செய்த தவறுக்கு வருந்த வேண்டியது அவர்; நான் ஏன் வருந்த வேண்டும்" என்றேன்.

*** *** *** ***

நம்மை யாராவது சீண்டினால், பதிலாக ஏதும் செய்யத் தேவையில்லை என்றால் அதனை பொறுத்துக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.


"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" என்கிறார் திருவள்ளுவர்.


அத்துடன் நமது ஆணவமலம் குறைவதற்கு அவர்கள் உதவியாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.


நாம் பொறுமையைக் கடைப்பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள் அவர்கள்.

                     (தொடரும்)


அன்பு

பதிவு 37


"தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்”. (குறள் 202)     


'தீய செயல்கள், தம்மைச் செய்தவனுக்குத் துன்பம் தருதலால், அவை தீயைவிட அதிகமாக அஞ்சத் தக்கவையாகும்'.


தீயவை என்பதற்கு தீய செயல்கள் என பொருள் தரப்பட்டுள்ளது.


ஒரு மனிதன் நம்மை சீண்டும்போது நமக்கு கோபம் வந்தால் அது ஆழ்மனதில் பதிவாகி, நம்மிடம் பழிவாங்கும் எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. 


அதுவே நாம் திருப்பிச் செய்யும் தீச்செயல்களுக்கு காரணமாகி விடுகிறது. 


ஆகவே நமது ஆழ்மனதில் பதிவாகும் கோபம்கூட தீயதுதானே! எனவே கோபத்தை நிறுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். கோபம் ஏன் வருகிறது? 


ஒருவர் நம்மை காயப்படுத்துகிறார். அது நம் மனதில் வேதனையை வரவழைக்கிறது. பின் அதுவே கோபமாக ஆழ்மனதில் தங்கி பழி உணர்ச்சியைத் தூண்டுகிறது.


மற்றவர்கள் நம்மை காயப்படுத்துவதை நம்மால் தவிர்க்க இயலாது; ஆனால், வேதனைப் படுவது நம் மனம்தானே! அதை நாம் தடுத்து நிறுத்தலாம்தானே!


"Anybody can hurt me; but, nobody can harm me".

நாம் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள்களில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும்.


எந்த அளவிற்கு கோபத்தை வரவிடாமல் தடுக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மிடம் உள்ள ஆணவம் குறைந்துவிடும். ஏனெனில், எதிர்மறை உணர்வுகளில் முக்கிய பங்கு வகிப்பது கோபம்தான்.


                (தொடரும்)


அன்பு

பதிவு 38


ஒருமுறை நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தபோது அந்த குடும்பத்தின் தலைவி 'தனது மகள் அடிக்கடி கோபப்படுவதாகவும், தன்னை எதிர்த்து பேசுவதாகவும்' சொல்லி அவளுக்கு தேவையான புத்திமதி கூறுங்கள் எனறாள்.


நான் அந்தப் பெண்ணிடம் கேட்டதற்கு தினம் தினம் ஏதோவொரு வகையில் அம்மா தனது கோபத்தை கிளறி விட்டுவிடுவாள்; அதனால்தான் தனக்கு கோபம் வருகிறது என்றாள்.


நான் "very good; அப்படித்தான் கோபப்படணும்" என்று சொல்லவும் அவளது அம்மா அதிர்ந்து விட்டாள்.


அதன்பின் அம்மாவிடம் நான் சொன்னது - - "உங்கள் மகள் தனியாக சிந்தித்து செயல்படுகிறாள். அதனால்தான் வேறு மாதிரியான உத்தரவை நீங்கள் சொல்லும்போது அவளுக்கு கோபம் வருகிறது.


மகளுக்கு கோபம் வருகிறதே என்று கவலைப்படாமல், அவளால் சுயமாக சிந்திக்க முடிகிறதே என்று சந்தோஷப்படுங்கள். 


அத்துடன் 'அம்மா' என்று இல்லாமல் ஒரு 'தோழியாக' அவளுடன் உறவாடுங்கள்.


மனதளவில் இருவரும் ஒன்றுபட வேண்டும். இல்லையெனில் இருவருமே வருந்த வேண்டிவரும்".


பின்னர் மகளிடம் கூறியது - - "கோபம் வருவது உன்னிடம் நிறைய சக்தி (energy) இருப்பதை காட்டுகிறது. 


கோபம் கொள்ளும்போது சக்தியில் பெரும்பகுதி வீணாக செலவாகிவிடும். எனவே ஆக்கபூர்வமான வழிகளில் சக்தியை செலவழிக்க கற்றுக்கொள்.


சுயமாக சிந்திக்கத் தெரிந்தபின், அம்மாவை அம்மாவாகப் பார்க்காமல் ஒரு ஆருயிர் தோழி என நினைத்து பழகு. உனது கருத்துக்களை அம்மாவிடம் தயங்காமல் பகிர்ந்து கொள். அம்மாவின் அனுபவ அறிவு உனக்கு நல்ல வழியைக் காட்டும்.


அதைவிட்டு வீணே கோபத்தை மட்டும் காட்டினால், அதனால் ஏற்படும் பாதிப்பு உன்னை தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். அது படிப்பில் கவனம் செலுத்துவதற்கு பெருந்தடையாக இருக்கும்."

*** *** *** ***

எதிர்மறை உணர்வுகளில் சக்தி அதிகமாக விரையம் 

ஆவது கோபத்தினால்தான்.


எனவே கோபத்தின் காரணமாக சக்தி வீணாவதை தடுத்து நிறுத்திவிட்டால், அதே சக்தியை ஆக்கபூர்வமான வழிகளில் செலவிடலாம்.

                    (தொடரும்)


அன்பு

பதிவு 39


ஆழ்மனப் பதிவுகளை அகற்ற விரும்பினால், தேவையில்லாத விஷயங்களிலிருந்து விலகக் கற்றுக்கொள்ள வேண்டும். 


அலுவலகத்தில் இருந்து மாலையில் வீட்டுக்கு வருகிறோம். டிபன், காபி என்று முடித்தபின் வெளியே சென்று நண்பர்களை சந்திக்கிறோம். நண்பர்களுடன் ஒரு மணி நேரம் அரட்டை அடித்துவிட்டு வீடு திரும்புகிறோம்.


இந்த நடவடிக்கைகளில் டிபன் சாப்பிடுவது பசியை ஆற்றும்; வெளியில் நடந்தது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது; ஒரு மணி நேரம் அரட்டை அடித்தது??


ஆழ் மனதை வெற்றிகொள்ள நினைப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு தமது சக்தியை வீணாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகத் தெரியாத மனதால், ஒதுங்க முடியாது.


ஒதுங்கத் தெரியாத மனதால், ஒடுங்கவும் முடியாது.


ஒடுங்கத் தெரியாத மனதால், அடங்கவும் முடியாது என்பதை ஆழ்மனதை வெற்றி கொள்ள நினைப்பவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

                    (தொடரும்)


அன்பு

பதிவு 40


ஒருமுறை என் உறவுக்கார பெண் இப்படி கூறினாள் - -

"ஏன் மாமா, எங்க அப்பா இப்படி இருக்கிறார்; படுத்தி எடுக்கிறார்; தாங்க முடியவில்லை".


நான் சொன்னேன் - - "என்ன பண்றது; இலை பழுத்துவிட்டது; காம்பு பழுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்".


அந்தப் பெண்ணின் அப்பா (எனது அத்தான்) உடன் இருந்தார். எல்லாவற்றையும் 

கேட்டுக்கொண்டிருந்தார். மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவர் தன் மனைவியை கூப்பிட்டு "சாப்பாடு ரெடியாயிடுதா; பசிக்குதுன்னு சொல்றான் பாரு; அவனை சாப்பிடச்சொல்" என்று கூறி விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

*** *** *** ***

ஒரு மரத்தை குடும்பம் என எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு மனிதனைப் போன்றது.


மனிதனை எடுத்துக் கொண்டால், இலை அவனது உடல்; காம்பு அவனது மனம்.


இலை (உடல்) பழுத்து காம்பு (மனம்) பழுக்கவில்லை யென்றால், அங்கு பிரச்சினை வரத்தான் செய்யும்.


அரச மரத்தைப் பாருங்கள். இலைக்கு முன்னர் காம்பு பழுத்து, இலைக்கே தெரியாமல் அது உதிர்ந்துவிடும். மரத்திற்கும் வலிக்காது.

*** *** *** ***

மனிதன் இறப்பதற்கு முன்பாக அவனது மனம் இறந்துவிட வேண்டும்.


இதனால்தான் "மனமிறக்க ஞானி பிறக்கிறான்" என்று சொல்கிறார்கள்.


இலைக்கு முன்னர் 'காம்பை' (மனதை) பழுக்க வைப்பது எப்படி என்ற வித்தையை கற்றுக் கொடுப்பது "ஆன்மிகம்" மட்டுமே!


                  (தொடரும்)


அன்பு

பதிவு 41


தொடர் ஓட்டப் பந்தயத்தில் முதலில் ஓடுபவர் இரண்டாவது வீரரிடம் சிறிய கம்பை கொடுத்துவிட்டு ஓட்டத்தை நிறுத்திக் கொள்வார். அதேபோல் ஒவ்வொருவராக ஓடி, கடைசியில் நாலாவது வீரர் எல்லைக்கோட்டை தொடுவார்.


மனித வாழ்க்கையும் ஒரு தொடர் ஓட்டப் பந்தயம் மாதிரிதான்.


அப்பா ஒரு கட்டத்தில் மகனிடம் பொறுப்பை ஒப்படைப்பார். பின் அது பேரன் கைக்கு போகும். ஆக, இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் தொடர் ஓட்டம் மாதிரிதான். ஆனாலும், ஒரு வித்தியாசம் உள்ளது.


மகனிடம் பொறுப்பை கொடுத்த பின்னும் அப்பா தொடர்ந்து ஓடுவார். பொறுப்பு பேரன் கைக்கு போனால்கூட ஓட்டம் நிற்பதே இல்லை.


ஆரம்பத்தில் வசதியைத்தேடி ஓட ஆரம்பிக்கிறோம். பொறுப்பு கைமாறினாலும் ஓட்டம் நிற்க மாட்டேன் என்கிறது.


இதை என்னவென்று சொல்வது?


'வசதியைத்தேடி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்' என்று சொல்லலாமா?

*** *** *** ***

"அகந்தை அழியுமிடம்

ஆண்டவனை அறியுமிடம்"


ஓடிக்கொண்டேயிருந்தால், அகந்தையை (ஆணவத்தை) அழிப்பது எப்படி? ஆண்டவனை அறிவது எப்படி?


ஓட்டத்தை நிறுத்தினால்தானே, மனதால் ஒடுங்கமுடியும்.


உடல் அங்குமிங்கும் ஓடட்டும். அதை நிறுத்த முடியாது. மனதின் ஓட்டத்தை நிறுத்துங்கள். வெற்றி நிச்சயம்.

                     (தொடரும்)


அன்பு

பதிவு 42


ஆன்மீகம் என்று சொன்னவுடன் பலருக்கு தேவையற்ற பயம் வந்துவிடுகிறது.


பலருக்கு அளவுக்கு மீறிய கற்பனை வந்துவிடுகிறது.


இரண்டுமே மறுக்கப்பட வேண்டியவை.

ஆன்மீகம் என்றால் என்ன?


தன்னில் "தன்னை" தானே அறிவது. அவ்வளவுதான்.


எனக்குள் இருக்கும் இறைவனை நானே கண்டுகொள்ள வேண்டும்.    

கண்டு கொள்வது என்றால் நேரடியாக பார்ப்பது என்ற அர்த்தம் அல்ல; எல்லாம் வல்ல இறைவன் எனக்குள்ளும் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்வது.


இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?


ஒரு சிற்பி சிலை வடிக்க என்ன செய்கிறாரோ, அதைத்தான் நாமும் செய்யவேண்டும்.


சிலை வெளிவர சிற்பி, சிலைக்குத் தேவையில்லாதவற்றை செதுக்கி வெளியேற்றுகிறார். சிலை கல்லின் உள்ளேதான் இருந்தது. தேவையற்ற பகுதிகளை நீக்கியதும் சிலை வெளிப்பட்டு விட்டது.


இறைத்தன்மை நம்முள்ளும் இருக்கிறது. அதை உணர நாம் செய்ய வேண்டியது, அதை உணர முடியாமல் மறைத்து நிற்கும் ஆணவ மலத்தை நீக்குவதுதான்.

                    (தொடரும்)


அன்பு

பதிவு 43


சத்துவ குணத்தை உடைய மனிதர்கள் முயற்சி செய்தால், ஆணவ மலத்தை எளிதாக நீக்கி விடலாம். காரணம் அவர்களைப் பொறுத்தவரை ஆழ்மனப் பதிவுகள் நெருப்பை சூழ்ந்துள்ள புகையைப் போன்றது.


ரஜோ குணத்தை பொறுத்தவரை, மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும் --

1. பொதுநலவாதி

2. சுயநலவாதி


அவர்களைப் பொறுத்தவரை, ஆழ்மனப்பதிவுகள் கண்ணாடியில் படிந்த தூசியைப் போன்றது. அது அழுக்காகவும் இருக்கலாம்; அட்டாகவும் இருக்கலாம்.


பதிவுகளை நீக்க அதிக முயற்சி தேவைப்படும். இருந்தாலும் சுயநலம் மிகுந்த மனிதன் தனது முயற்சியில் தோல்வி அடைந்தால், அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.


யாராக இருந்தாலும், சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். அவை இல்லையென்றால், ஆணவ மலத்தை நீக்குவது கடினமான ஒன்றாகும். அவை என்னவென்று பார்ப்போம்.


இனிவரும் பதிவுகளில் உள்ள 'வார்த்தைகளிலோ' அல்லது சொல்லப்படும் 'உதாரணங்களிலோ' சிக்குண்டு விடாதீர்கள். அவை எந்த கோணத்தில் சொல்லப் படுகின்றன என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

                 (தொடரும்)


அன்பு

பதிவு 44


ஆழ்மனப் பதிவுகள் நீங்கி விட்டன என்பதை எப்படி அறிந்து கொள்வது?


ஆழ்மனப் பதிவுகள் நீங்கிவிட்டால் மனதில் சலனங்கள் இருக்காது. உள்ளத்தில் அமைதி நிலவும். நான் கர்த்தா அல்ல என்ற உணர்வு மேலோங்கும். இன்பம் - துன்பம் போன்ற இரட்டைகளிலிருந்து விடுபட்டு விடுவோம்.

மனிதனின் துன்பங்களுக்கு காரணமாக இருப்பது

எது என்று 'பதஞ்சலி' முனிவர் பட்டியலிடுகிறார்.     

அவை - -

1. அவித்யை

2. அஸ்மிதா

3. ராக

4. த்வைஸ்

5. அபிநிவேஷ்


இவற்றில் 'அபிநிவேஷ்' என்பது மனிதனுக்கு ஏற்படும் இச்சையை, அதாவது இல்லாத ஒன்றுக்காக -- வருங்காலத்திலாவது கிடைத்துவிடாதா என்று ஏங்குவதை குறிக்கிறது.


இதற்கு மூலகாரணமாக இருப்பது ராக-துவேஷம், அதாவது மனிதனிடம் உள்ள விருப்பு-வெறுப்பு.


இதற்கான காரணம் 'அஸ்மிதா', அதாவது

'தான்' என்ற உணர்வு.


இதன் காரணமாகவே 'தான்' உண்மையில் யார் என்று தெரியாமல் போய்விடுகிறது. அதைத்தான் விழிப்புணர்வின்மை

(அவித்யை) என்று குறிப்பிடுகிறார்.


ஆணவமலம் நீங்கிவிட்டால், விழிப்புணர்வு வந்துவிடும்.


"நான்" என்று நினைத்தது ''நான் இல்லை" என்ற உண்மை புரிந்துவிடும்.


அதனைத் தொடர்ந்து உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறோம்.


                       (தொடரும்)


அன்பு

பதிவு 45


"Money will not bring you any peace; peace depends upon the mind"

பணம் மகிழ்ச்சியைத் தரும்; நிம்மதியைத் தரும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அது நமது மனதை எந்த அளவுக்கு கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தது.

*** *** *** ***

இனி அடிப்படை தகுதிகள் என்னவென்று பார்ப்போம்.

இப்பொழுது அவை உங்களிடம் இல்லாதிருக்கலாம்.  

முறையான பயிற்சியை மேற்கொண்டால், அந்தத் தகுதிகள் தானே வந்துவிடும்.

*** *** *** ***

"Spiritual person cannot play to the gallery"

மேடை பேச்சாளர்கள் பொதுவாக, என்ன பேசினால் மக்களுக்கு பிடிக்குமோ அதைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.


ஆனால் ஆன்மீகத்தில் பற்றுள்ளவன், எது சரியோ அதை மட்டுமே வலியுறுத்துவான்.


எனவே அடிப்படை தகுதிகளை விளக்கும்போது சொல்லப்படும் கருத்துக்கள் உங்களை சங்கடப் படுத்தும் என்றால், அவற்றை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

                    (தொடரும்)


அன்பு

பதிவு 46


மன அமைதியை விரும்பும் மனிதர்களிடம் இருக்கவேண்டிய தகுதிகள் அல்லது பண்புகளைப் பற்றி

பார்ப்போம்.


*தன்னடக்கம்*

இதை பணிவு, நாணம், கூச்சம், தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளுதல் எனப் பலவாறாகக் கூறலாம்.

சுருக்கமாக சொன்னால் 'தன்னை முன்னிலைப் படுத்தாமல் ஒதுங்கி இருப்பது' என சொல்லலாம்.


இதில் என்ன கஷ்டம் என நினைக்கத் தோன்றும். உண்மையில் பக்குவம் அடையாத மனிதனால், பக்குவம் அடைய விரும்பாத மனிதனால் இதைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம்.

தந்தை வயதான காலத்தில் குடும்ப பொறுப்பை மகனிடம் கொடுத்துவிடுகிறார்.

ஆனால், அவரால் ஒதுங்கி இருக்க முடிகிறதா? வழிகாட்டியாக மாறவேண்டியவர், தொடர்ந்து எஜமானனாக இருக்க விரும்புவது ஏன்?


எனக்குத் தெரிந்த ஒரு அதிகாரி பணி ஓய்வு பெற்றபின், கோயிலுக்கு சென்றவரால் நிம்மதியாக கடவுளை வணங்க முடியவில்லை. காரணம் அலுவலகத்தில் முன்னர் மரியாதை செய்தவர்கள், தன்னை கோயிலில் கண்டுகொள்ளவே இல்லை என்ற கவலைதான்.


தவறு யாருடையது? பணி ஓய்வு பெற்ற பின்பும், பதவியை சுமந்து கொண்டிருப்பது தேவைதானா?


"நேதி நேதி" என்ற வார்த்தை 'பிரஹதாரண்ய உபநிடதத்தில்' வருகிறது. அதாவது நான் "இதுவல்ல, இதுவல்ல" என ஒவ்வொன்றாக ஒதுக்கித் தள்ளுவது.


எதையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ, அதன் காரணமாக வரும் எந்தத் துக்கமும் நம்மை தாக்குவதில்லை என்கிறார் வள்ளுவர் - -

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்".

*** *** *** ***

இந்தப் பண்பினைக் கடைப்பிடிக்க எந்த பயிற்சியும் தேவையில்லை; அறிவுபூர்வமான புரிதலே போதுமானது.


                        (தொடரும்)


அன்பு

பதிவு 47


*பாசாங்கு செய்யாமை*


நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று சொல்வதுண்டு. பொய்யொழுக்கம்?


கீதையில் பகவான் 'மித்யாசாரம்' என்று கூறுகிறார். 'ஆசாரம்' என்றால் ஒழுக்கம்; 'மித்யா' என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக் கொள்ளுதல். ஒழுக்கமின்மை அல்ல; இது பொய்யொழுக்கம். 


ஒரு அறிவிலி தன்னை அறிவாளி எனக் காட்டிக் கொள்வதைப் போன்றது.


இதனைத்தான் 'பாசாங்கு' என்று சொல்வார்கள்.


இவர்கள் 'உள்ளொன்று வைத்து புறமொன்று' பேசுபவர்களாக இருப்பார்கள்.


ஆணவமலம் நீங்க வேண்டுமென்றால், இந்தப் போலித்தனம் இருக்கக்கூடாது.


"தன்னெஞ்சறிவது பொய்யற்க.." என்கிறார் வள்ளுவர்.

                        (தொடரும்)


அன்பு

பதிவு 48


*அஹிம்சை*

அஹிம்சை என்றால் யாரையும் துன்புறுத்தாமல் இருத்தல் என நினைக்கிறோம்.


மனதால்கூட யாரையும் துன்புறுத்தக்கூடாது. அதுதான் அஹிம்சையின் அடையாளம்.


துன்புறுத்தவேண்டும்

என்ற எண்ணம் நமக்கு ஏன் வருகிறது? நாம் கோபம் கொள்வதால்தான் வருகிறது.


ஏதோவொரு சம்பவம் நம்மை காயப்படுத்தும் பொழுது, அதன் காரணமாக நமது ஆழ்மனதில் ஒரு பதிவு நிகழ்ந்து, அந்த நிகழ்வு கோபத்தை தூண்டுகிறது. அந்தப் பதிவு நிகழாமல் பார்த்துக் கொண்டால், நமக்கு கோபமும் வராது; அஹிம்சையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.


இதற்கு ஒரேவழி நாம் விரும்பாத சம்பவங்கள் நடந்தால், அவற்றை உதாசீனம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.


எதிரியைவிட மோசமான எதிரி, எதிரி நம்மை உதாசீனம் செய்வதுதான்.

"Enemy's worst enemy is the ignorance of the enemy's enemy".


இதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நமக்கு கோபம் வரும் வாய்ப்பு குறைந்துவிடும். 


அதனால்தான் புத்தரும் "உதாசீனனாக" இரு என்கிறார்.

                      (தொடரும்)


அன்பு

பதிவு 49


*உடைமைத்தனமின்மை*


நாம் வீடு, கார் என பலவற்றை சொந்தமாக வைத்திருப்போம். ஆனாலும், நமக்கு 'அவற்றின் சொந்தக்காரர்' என்ற உணர்வு இல்லாதிருக்க வேண்டும். 


இதைத்தான் 'உடைமைத்தனமின்மை' என்று சொல்கிறார்கள்.


அவை என்னுடைய உடைமைப் பொருள்கள் என்ற எண்ணம் இருக்குமானால், அவற்றை பற்றிய எண்ணங்களை ஆழ்மனதிலிருந்து நீக்குவது கடினம்.


அவற்றை அனுபவிப்பதில் தவறில்லை; ஆனால், 'உடைமைத்தன்மை' உணர்வு மட்டும் இருக்கக்கூடாது.

(Possess things; but don't have the possessor feeling)


'அஷ்டவக்ர கீதையில்' மஹராஜா ஜனகர் இவ்வாறு கூறுகிறார் - -

"Me nasti kinchan athava me sarvam"

"ஜனகர் என்ற முறையில் பார்த்தால் எதுவுமே என்னுடையது இல்லை; என்னுள் உறையும் இறைவனாகப் பார்த்தால் எல்லாமே என்னுடையதுதான்".


உள்ளிருக்கும் இறைத்தன்மையை உணர வேண்டுமானால், நாம் 'உடைமைத்தன்மை'யிலிருந்து வெளியேறியாக வேண்டும்.


                    (தொடரும்)


அன்பு

பதிவு 50


*உடைமைத்தனமின்மை*

*(பொருளும், உறவும்)*


உடைமைத்தனமின்மை பற்றி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உறவுகளுக்கும் பொருந்தும்தானே என்று ஒருவர் கேட்டிருந்தார்.


உண்மைதான். உடைமைத்தனமின்மை குறித்து பொருளுக்கு சொன்ன கருத்துக்கள் அனைத்தும், உறவுகளுக்கும் பொருந்தும்.


ஆனால், பொருள் - உறவு இரண்டிற்கும் இடையே ஒருசில முக்கிய வித்தியாசங்கள் உண்டு.


பொருளைப் பற்றிய உணர்வு ஆழ்மனதில் பேராசையாகவும், உறவைப் பற்றிய உணர்வு ஆழ்மனதில் பாசமாகவும் பதிவாகிறது.


மற்றும் பற்று (attachment) என்று வரும்போது பொருளைவிட பாசம்தான் முன்னிலை வகிக்கும்.


பொருள் தன் கையை விட்டு சென்று விட்டால், சில காலம் கழித்து அதன் நினைவு ஆழ்மனதில் இருந்து அகன்று விடும்.


ஆனால், உறவு தன்னைவிட்டு அகன்றாலும் (உ.ம். பெண்ணின் திருமணம்), பாசம் ஆழ்மனதிலிருந்து நீங்குவதில்லை.


ஆகவே பாசம் சம்பந்தப்பட்டப் பதிவுகளை ஆழ்மனதிலிருந்து நீக்குவது மிகவும் கடினம்.


                         (தொடரும்)


அன்பு

பதிவு 51


*கூட்டத்திலிருந்து தனிமைக்கு*


கூட்டமாக இருப்பது சத்துவ குண மனிதர்களுக்கு ஒத்து வராத ஒன்று. அவர்கள் பெரும்பாலும் தனிமையையே விரும்புவார்கள்.


தனிமையில் இருப்பது சுய பரிசோதனைக்கும், சுய விசாரணைக்கும் ஏற்றது. 


ரஜோ குணம் நிறைந்த மனிதர்களுக்கு, குறிப்பாக சுயநலம் உள்ளவர்களுக்கு தனிமை என்பது கசப்பான விஷயம்.


யாருமே தன்னுடன் இல்லாமல் தனியாக இருப்பது வேறு; தனிமை என்பது வேறு.


ஆழ்மனப்பதிவுகளை நீக்குவதற்கு அகத்தாய்வு மிகவும் முக்கியம். அது தனிமையில் இருந்தால்தான் முடியும்.


எனவே ஒவ்வொருவரும் சிறிது நேரமாவது 'தனிமையில்' இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

                      (தொடரும்)


அன்பு

பதிவு 52


*சுயத்தை அறிதல்*


பழைய பாடல் ஒன்றில் பாடல் வரி இப்படி இருக்கும் - -

"நானே நானா, யாரோதானா..."


நீ எதுவுமே செய்யவேண்டாம்; 'நான் யார்' என்று உன்னையே கேட்டுப்பார் என்கிறார் இரமண மஹரிஷி.


இதைச் செய்வதற்கு நமக்கு தெளிந்த அறிவு வேண்டும். அதை மூன்று வழிகளில் பெறலாம்.


1. *நேரடி அறிவு*. அதாவது புலன்களின் உதவியின்றி, நமது விவேகத்தின் துணை கொண்டு அறிந்து கொள்வது.

2. *ஊக அறிவு* இங்கும் விவேகம் தேவைப்படுகிறது.


'இது என் வீடு' என்று சொல்லும்போது, வீடு வேறு நான் வேறு என்றாகிறது.


'இது என் உடல்' என்று சொல்லும்போது, நான் உடலுக்கு வேறானவன் என்பது புரிகிறதல்லவா? இது ஊகத்தில் அறிவது.


3. *சான்றோர் வாய்மொழி கேட்டல்*

விவேகமாக சிந்திக்க முடியாதவர்கள் இதனைக் கடைப்பிடிக்கலாம்.


'வாய்மொழி' என்று சொல்லும்போது, அது அவர்கள் வாய்மொழி மூலமாக வந்த நூல்களாகவும் இருக்கலாம்.


இதில் ஒரு பிரச்சனையும் உள்ளது. தவறான மனிதர்களை நாம் சான்றோராகத் தேர்வு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

                    (தொடரும்)


அன்பு

பதிவு 53


*சித்த விருத்தி நிரோத*


மனித வாழ்க்கையின் உச்சக்கட்ட குறிக்கோள் எது என்று கேட்டால், பலவிதமான பதில்கள் வரும்.


"சொர்க்கம், மோட்சம், கைவல்யம், வீடுபேறு" போன்ற பல பதில்கள் வரும்.


ஆனால், நமது பயணம் இவற்றிற்கு முந்தைய நிலையோடு நின்று விடும். கடைசிப் படியை கடக்க இறைவனின் அருள் வேண்டும்

சரி, முந்தைய நிலைக்கு என்ன பெயர் என்றால், அங்கும் பல பதில்கள் வரும். 


இதற்கு பதஞ்சலி முனிவர் விஞ்ஞான ரீதியான ஒரு பெயர் சூட்டியிருக்கிறார். அது "சித்த விருத்தி நிரோத".


சித்தத்திலிருந்து எந்தவித எண்ணங்களும் இனி வருவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலை; காரணம் அங்கு (ஆழ்மனதில்) பதிவுகள் ஏதும் இல்லை என அர்த்தம்.


இருந்த பதிவுகள் அனைத்தும் நீங்கிவிட்டன. இனி மேலும் பதிவுகள் வராது என்ற நிலை.


இந்த நிலையை "நிர்பீஜ சமாதி" என சொல்கிறார் பதஞ்சலி முனிவர்.


இதை எப்படி அடைவது என்றுதான் நாம் பார்க்கப் போகிறோம்.

                     (தொடரும்)


அன்பு

பதிவு 54


மனிதனின் இயல்பான குணம் "அன்பு". 


மனிதன் புறவுலகில் நாட்டம் கொண்டவுடன், அன்பு மாசடைந்த ஒன்றாக மாறி விடுகிறது. 


விளைவு? கருணையாக மாற்றம் பெறவேண்டிய அன்பு, பாசமாகவும், பேராசையாகவும், காமமாகவும் உருமாறி விடுகிறது.


புறவுலகில் சஞ்சரிப்பதை விட்டு அகவுலகுக்கு போகலாம் என்றால், மனதில் பாசம் இல்லாது போய்விடுமோ என்ற பயம் பலரிடம் இருக்கிறது.


உண்மைதான்; பாசம் போய்விடும், ஆனால் அன்பு (தூய்மையான அன்பு) இருக்கும் என்றால், அந்தக் கூற்றில் நம்பிக்கை வருவதில்லை. 


தவிரவும் எந்த நேரத்தில் புறவுலக வாழ்க்கையில் இருந்து திரும்ப வேண்டும் என்பதும் தெரிவதில்லை.


குடும்பத்தில் பாசம் நிறைந்த மனிதனாக வாழ்ந்தாலும், தன்னை நம்பி மற்றவர்கள் இல்லை என்ற நிலையிலாவது அகவுலக வாழ்க்கைக்குத் திரும்பலாம் அல்லவா?


அகவுலகப் பயணம் என்றாலும், புறவுலக வாழ்க்கையும் இருந்து கொண்டுதான் இருக்கும். அதனால் குடும்பத்தை விட்டு, உறவுகளை விட்டு பிரிந்து விடுவோம் என்று பயப்படத் தேவையில்லை.


"அஞ்சும் அடக்கு, அடக்கு என்பர் அறிவிலார் .... ....

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே" -- என்கிறார் திருமூலர்.


அகவுலகப் பயணத்தின் காரணமாக ஐம்புலன்களை அடக்க வேண்டியதில்லை. ஆனால், அத்தகைய மனிதனால் ஆழ்மனதில் பதிவுகள் நிகழாமல் தடுக்க முடியும் என்கிறார் திருமூலர்.


இதனால் ஏற்படும் பயன்கள் - -

*குடும்பத்தில் சச்சரவு குறையும்.

*மனதில் சாந்தம் நிலவும்.

*உயர்வாண எண்ண அலைகள் உருவாகும்.

*அவை நம்மை அறியாமலே பலருக்கு நன்மை பயக்கலாம்.

*அமைதி கண்ட மனம் உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை உணரும் காலம் வரும்.

*பிறவிச் சூழலில் இருந்து விடுபடும் வாய்ப்பும் உருவாகும்.

                      (தொடரும்)


அன்பு

பதிவு 55


மனிதன் பிறக்கும் போது பிரராப்த கர்மாவுடன், அதாவது பழைய பிறவிகளில் எஞ்சியுள்ள ஆழ்மனப் பதிவுகளோடுதான் பிறக்கிறான்.


அவை வானத்தில் படரும் மேகம்போல சித்தத்தின் மேலாக படர்ந்திருக்கும்.


அவற்றை 'ஆணவம்' என்றும், 'வாசனா' என்றும் சொல்வார்கள்.


இந்தப் பதிவுகளின் காரணமாகவே, 'நான்' என்னும் அஹங்காரமும், 'என்னுடைய' என்ற பற்றும் வருகின்றன.


'நான்' என்பதை மரத்தின் வேரென எடுத்துக்கொண்டால், 'என்னுடைய' என்பது மரத்தின் கிளையாகும்.


கிளைகளை வெட்டுவதைவிட, வேரை வெட்டுவது நல்ல பலனைத்தரும்.


சில வழிமுறைகள் கிளைகளைத்தான் வெட்டும். வேரை வெட்டாதவரை, மீண்டும் கிளைகள் வளர்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள், ரஜோ குணத்தில் உள்ள பொதுநல வாதிகள், ரஜோ குணத்தில் உள்ள சுயநல வாதிகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி வழிமுறைகள் உண்டு.


இருந்தாலும் எல்லோரும் கடைப்பிடிக்கக்கூடிய பொதுவான வழிமுறைகளை முதலில் பார்த்து விடுவோம்.

                       (தொடரும்)


அன்பு

பதிவு 56


*பார்வையாளனாக இருப்பது*

நமக்கு தினந்தோறும் செய்யக்கூடிய கடமைகள் உண்டு. அத்துடன் நாம் ஏற்றுக்கொண்ட மற்றும் ஒப்புக்கொண்ட கடமைகளும் உண்டு.

அவற்றை செயல்படுத்தும் பொழுது நமக்கு பிடிக்காத இடைஞ்சல்கள் வரலாம். அதேபோல் மற்ற சமயங்களிலும் நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கலாம்.


அதுபோன்ற சமயங்களில் பதிலளிக்க (respond) வேண்டியிருந்தால், நாம் பதில் அளிக்கவேண்டும்.

இல்லையெனில், எந்தவித எதிர்வினையும் (react) செய்யாமல் வெறுமனே ஒரு பார்வையாளனாக இருந்துவிட வேண்டும்.


இது எளிதானதாகத் தோன்றினாலும் கடைப்பிடிக்கக் கஷ்டமாக இருக்கும்.


ஏனெனில், எதிர்வினையாற்றி பழக்கப்பட்டிருந்த மனதை 'சும்மா வேடிக்கை பார்' என்று சொன்னால் அது கேட்காது. நாம்தான் கொஞ்சம் விழிப்பாக இருந்து அதை நாம் விரும்பியபடி செயல்பட வைக்க வேண்டும்.


இது சரியாக நடந்தால், நடைபெறும் சம்பவம் நம் மனதில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் ஆழ்மனப் பதிவு ஏற்படுவதும் தவிர்க்கப் படும்.

                     (தொடரும்)


அன்பு

பதிவு 57


*வேடிக்கைபார் .. தொடராதே*


நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கும் போது, 'பார்வையாளனாக' இருப்பது எப்படி என்று பார்த்தோம்.

பல சமயங்களில் சம்பவங்கள் நடக்காவிட்டாலும், நாம் பார்வையாளனாக இருக்க நேரிடும்.


உணர்வு மனதிற்கு நான்கு வாசல்கள் உண்டு. (ஒரு கற்பனை தான்).


மனம் ஒரு வாசல் வழியாக புலன்களின் துணையோடு புறவுலகை தொடர்பு கொள்கிறது.


ஒரு வாசல் வழியாக அது புத்தியோடு தொடர்பு கொள்கிறது.


மற்றொரு வாசல், அது தான் பெறும் அனுபவங்களை பதிவு செய்யும் அறையோடு தொடர்பு கொள்கிறது.


இன்னொரு வாசல், ஆழ்மனம் உணர்வு மனதோடு தொடர்பு கொள்வதற்கு. (உணர்வு மனதால் ஆழ்மனதை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது).


ஆழ்மனதில் உள்ள பதிவுகளின் தன்மைக்கு ஏற்ப, அது உணர்வு மனதை தூண்டிவிட்டுக்கொண்டேயிருக்கும்.


உணர்வு மனம் வேறு வேலைகளில் மூழ்கியிருந்தால், அந்தத் தூண்டுதல்களைக் கவனிக்காது. 


வேறு வேலைகள் இல்லாதபோது, உணர்வுமனம் ஆழ்மனதிலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப கனவுகள் காண ஆரம்பித்துவிடும். 


அது புதிய வீடு கட்டுவதாக, எதிரியை பழிவாங்குவதாக, விடுமுறையில் எப்படியாவது ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதாக -- இப்படி பலவிதமான கனவுகளாக இருக்கலாம்.


அதுபோன்ற சமயங்களில் புத்தியின் துணைகொண்டு ஆராய்ந்து பார்த்து, அவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்றால் நாம் விலகிி நின்று மனதின் கனவுகளை மூன்றாவது மனிதன்போல வேடிக்கை பார்க்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாம் மனதுடன் சேர்ந்து பயணம் செய்யக்கூடாது.


அப்படி செய்தால் உணர்வு மனம் நம்மை தவறான வழியில் நடக்கவைத்துவிடும்.


மனம் காணும் கனவுகளை நாம் ஆதரிக்கவில்லை என்பது தெரிந்ததும், மனம் அடங்க ஆரம்பிக்கும்.


ஆழ்மனதிற்கும் தான் தூண்டுவதால் எதுவும் நடக்காது என்பது தெரிந்ததும், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி விடும்.

                     (தொடரும்)


அன்பு

பதிவு 58


*எளிமையாக இரு*

'எளிமையாக இரு' என்றால் ஏழையாக இரு என்று அர்த்தமில்லை. 


எளிமை என்றால் தேவையில்லாத செலவினங்களைக் குறைப்பது மற்றும் ஆடம்பரமான செலவுகளைத் தவிர்ப்பது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். 


இதற்கும் ஆழ்மனப் பதிவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம். 


ஒரு சிறிய விழா. வீட்டிலேயே நடத்தலாம். இருந்தாலும் நம்மிடம் உள்ள வசதியின் காரணமாக வெளியே ஒரு மண்டபம் எடுத்து விமரிசையாக கொண்டாடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.


விழாவிற்கு வந்தவர்கள் விழா நன்றாக நடந்தது என்று சொல்லி பாராட்டிவிட்டுப் போவார்கள். அது நமது அஹங்காரத்தை இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்கும்.


அதற்குப் பதிலாக விழாவை வீட்டில் எளிமையாக நடத்தி அதில் மிச்சமாகும் பணத்தை வைத்து அன்னதானம் செய்யலாம்; ஒரு ஏழை மாணவனின் படிப்பிற்கு உதவலாம்; அல்லது ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் விளையும் பயன்கள் - -

1. நமது அஹங்காரம் மேலும் வலுப்பெறுவதைத் தவிர்த்துவிடலாம்.

2. நாம் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டிருப்போம். (இதுவும் ஒரு கருத்து தான்). வட்டத்திற்கு உள்ளே இருப்பவர்களுடன் நமக்கு ஒரு பந்தம் (பற்று) இருக்கும். ஆனால், வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களுடன் நமக்கு எந்த பந்தமும் இருக்காது. ஆக, நாம் வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு உதவும்பொழுது, அது நமது அகஉலகப் பயணத்திற்கு (இறைத்தன்மையை அறிவதற்கு) மிகவும் உதவியாக இருக்கும். அத்துடன் நமது அஹங்காரம் நலிவடையவும் இது உதவும்.


இது சம்பந்தமாக மேலும் நாம் அறிய வேண்டியது - -

1. விஞ்ஞானிகள், அறிஞர்கள் எனப் பலரும் வட்டத்திற்கு வெளியே வேலை செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களில் பலருக்கு இறை நம்பிக்கை ஒன்றும் பெரிதாக இருக்காது. எனினும் அவர்களை அறியாமலே அகஉலகில் பிரவேசித்து விடுவார்கள். அதனால்தான் அவர்களும் நம்மை மீறிய 'இறை சக்தி' ஒன்று உண்டு என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

2. அரசியல்வாதிகள் மற்றும் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள் என்று பலர் வட்டத்திற்கு வெளியே வேலை செய்தாலும், அவர்களது நோக்கமெல்லாம் சுயநலம் நிரம்பியதாக இருந்தால் அவர்களால் அகஉலகில் பிரவேசிக்க முடியாது. 

                    (தொடரும்)


அன்பு

பதிவு 59


*மௌனமாக இரு *

"Be silent, by silencing the action;

Be silent, by silencing the thought;

Be silent, by silencing the mind;

Be silent, without knowing the silence".


தினசரி வாழ்வில் நாம் சும்மா இருக்க வேண்டிய நேரங்களும் வரும். 


அந்த மாதிரி நேரங்களில் நாம் தேவையற்ற செயல்களில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


அதே மாதிரி தேவையற்ற எண்ணங்கள் எழாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  


இது இரண்டும் ஒழுங்காக நடைபெற வேண்டுமென்றால், அது போன்ற சமயங்களில் மனம் மௌனமாக இருந்தால்தான் முடியும் . 


அதன்பின் நாம் மௌனமாக இருப்பது தெரியாமலே மௌனமாக இருக்க வேண்டும். 


ஆனால், மனதால் மௌனமாக இருக்க முடியாது. ஆழ்மனம் உணர்வு மனதை சும்மா இருக்க விடாது. 


தேவையற்றதை மனம் சிந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால், மனதை வேறு திசையில் திருப்ப வேண்டும். 

என்ன செய்யலாம்? 

                     (தொடரும்)


அன்பு

பதிவு 60


*நிலையில் திரியாது*


"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது" -- வள்ளுவர்.

'நிலையில் திரியாது' என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. நாம் நமக்குத் தேவையான கோணத்தில் பார்ப்போம்.


வள்ளுவர் 'அடங்கியான்' என்று குறிப்பிடுகிறார். அவர் 'அடக்கியான்' என்று சொல்லவில்லை.


'அடங்கியது' என்றால், அது அதுவாக அடங்கியதாகப் பொருள்படும்.


'அது' என்றால் எது? உடலா அல்லது மனமா?


உடல் அடங்கியது என்றால், அது சவமாகிவிட்டதாக அர்த்தம். ஆகவே வள்ளுவர் மனதையே குறிப்பிடுகிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.


மனம் 'நிலையில் திரியாது அடங்கியது' என்கிறார். ஏன் அப்படி கூறுகிறார்?


மனம் சாதாரணமாக ஒரு நிலையில் நிற்காது. எங்காவது சுற்றிக்கொண்டேயிருக்கும். அது அதனுடைய இயல்பு.


நிலையில் திரியாமல் அடங்கி நிற்கும் மனமே, தியானம் செய்வதற்கு உகந்தது. மனம் அடங்கிவிட்டால் 'தியானம்' செய்வது மிகவும் எளிதான ஒன்றுதான். 


மனதை நிலையில் திரியாது ஒருநிலைப் படுத்த மேற்கொள்ளும் பயிற்சிதான் 'தாரணை' எனப்படும்.


மனம் ஓரளவு பக்குவப்பட்ட பின்புதான், அதனால் புறவுலகைவிட்டு ஒதுங்கி உள்ளுக்குள் ஒடுங்க முடியும். அந்த நிலையில்தான் "தாரணையை" மேற்கொள்ள முடியும்.


இருந்தாலும் அதற்கு முன்னரே சின்ன சின்ன பயிற்சிகள் மூலம், நாம் மனதை பக்குவப்படுத்த முயற்சி செய்யலாம்.


உதாரணத்திற்காக இரண்டு பயிற்சிகளைப் பற்றி குறிப்பிடுகிறேன். ஒன்று சாதனத்தை பயன்படுத்தி செய்வது; மற்றொன்று சாதனத்தின் உதவியின்றி செய்வது. இது மாதிரி, உங்களுக்கு எது சாத்தியமோ, அதன்படி நீங்கள் பயிற்சி செய்யலாம்.


சும்மா இருக்கும் நேரங்களில் செய்யலாம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரத்தை அதற்காக ஒதுக்கினால் நல்லது.

                       (தொடரும்)


அன்பு

பதிவு 61


"Mind will succumb to the thing to which it is repeatedly diverted"


மனதால் ஒரு இடத்தில் தொடர்ந்து இருக்கமுடியாது. அது ஒன்றிலிருந்து மற்றொன்று எனத் தாவிக்கொண்டே யிருக்கும். அதனால்தான் "மனம் ஒரு குரங்கு" என்கிறார்கள்.


அதே நேரம், அதை திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை மாத்திரம் நினைக்க வைத்தால், அது அதற்கு பழக்கமான ஒன்றாக மாறிவிடும்.


'தாரணையில்' அதைத்தான் செய்கிறார்கள்.


நாம் செய்யப்போகும் பயிற்சியும் 'தாரணை' போன்றதுதான்.


இந்தப் பயிற்சிகள் பெரியோர்கள் சொன்னதுதான். உங்களுக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.

*** *** *** ***

*சாதனத்துடன் கூடிய பயிற்சி*


உங்களுக்கு சவுகரியமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  

எல்லா நாட்களிலும் ஒரே நேரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.


ஒரு சிறிய அகல் விளக்கை ஏற்றுங்கள். தீபத்தின் ஒளியில் விளக்கு தெரியாத மாதிரி சின்ன விளக்காக இருந்தால் நல்லது.


விளக்கு உங்கள் கண்ணுக்கு நேராக அல்லது சிறிது குறைவான உயரத்தில் இருக்க வேண்டும்.


எரியும் தீபத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிடம் உற்றுப் பாருங்கள். கவனம் வேறு எங்கும் செல்லக்கூடாது.


பிறகு கண்ணை மூடிக்கொண்டு (அழுத்தமாக அல்ல; லேசாக) அந்த தீபத்தின் ஒளியை மனக்கண்ணால் தொடர்ந்து பாருங்கள்.


திடீரென்று மனம் வேறு எங்கோ செல்வதை உணர்வீர்கள்.

 

அப்போது கண்ணைத் திறந்து பயிற்சியை முதலிலிருந்து ஆரம்பியுங்கள்.


இது பழக்கத்திற்கு வந்த பிறகு, சும்மா இருக்கும் நேரங்களில் கண்ணை மூடிக்கொண்டு தீபத்தின் ஓளியை மனக்கண்ணால் காண முயற்சி செய்யுங்கள்.


*சாதனங்களின் உதவியின்றி செய்யும் பயிற்சி*


பல காரணங்களால் சிலரால் குறிப்பிட்ட நேரங்களிலோ அல்லது ஏதேனும் சாதனங்களின் உதவிகொண்டோ பயிற்சியை செய்வது முடியாததாக இருக்கலாம்.


அத்தகைய மனிதர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.


சும்மா இருக்கும் நேரங்களில் (வீட்டிலா, வெளியிலா என்பது பிரச்சினையே அல்ல) தனது மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். 


மூச்சு பயிற்சி ஏதும் செய்யக்கூடாது. வெறுமனே மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.


கவனிப்பது சரியாக இருந்தால், அடிவயிறு இறங்கி ஏறுவதையும், மார்புப் பகுதி விரிந்து சுருங்குவதையும் உணரலாம். 


இதை தொடர்ந்து கடைப்பிடித்தால், இது பழக்கத்திற்கு வந்துவிடும்.


இதுபோன்ற பயிற்சிகள் மனதில் குறிப்பிட்ட பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மனம் சும்மா இருக்கும் வேளைகளில் அங்குமிங்கும் அலைபாய்வது குறையும்.


தவிரவும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், மனம் ஒடுங்குவதும், அகத்தாய்வை நாடும் காலத்தில் 'தாரணையை' மேற்கொள்வதும் மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும்.


"Success in life is measured by the tranquility of the mind"

-- Swami Chinmayanandha


                   (தொடரும்)


அன்பு

பதிவு 62


'நான்' மற்றும் 'என்னுடைய' என்ற இரண்டு உணர்வுகளையும் தன்னிலிருந்து நீக்குவதுதான், பிறவித் துன்பத்தை நீக்க விரும்பும் மனிதனின் தலையாய கடமையாகும்.


இதற்காக நான்கு மார்க்கங்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அவற்றில் நமது சுபாவத்திற்கு பொருத்தமான மார்க்கத்தை தேர்வு செய்து அதன்படி நடந்தால், நிச்சயம் அதில் வெற்றி பெறலாம். 


இது எந்த விதத்தில் செயல்படும் என்பதை புரிந்துகொள்ள, 'வட்டம்' என்ற ஒரு கருத்தின் மூலம் விளக்க விரும்புகிறேன். (இது புரிந்துகொள்ள உதவும் ஒரு கருத்தாக்கம் மட்டுமே).


நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டிருக்கிறோம்.


அதில் 'நான்' என்பது மையப்புள்ளி. 'என்னுடையது' என்று எதையெல்லாம் நினைக்கிறோமோ, அவையெல்லாம் நம் வட்டத்துக்குள் வந்து விடும். மற்றவை வட்டத்திற்கு வெளியே தங்கிவிடும்.


வட்டத்தில் உள்ள எல்லா புள்ளிகளும் (நான் உட்பட) வட்டத்திற்குள் இல்லை என்ற நிலை வந்தால், ஆழ்மனம் முழுவதுமாக நீக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம்.


இவற்றை ஒவ்வொரு மார்க்கமும் எப்படி நீக்குகிறது என்று பார்ப்போம்.


'வட்டம்' ஒரு மரம் என்று எடுத்துக் கொண்டால், 'நான்' அதனுடைய வேர்; 'என்னுடைய' என்பது அதனுடைய கிளைகள்.


'ஞான மார்க்கம்' வட்டத்தில் உள்ள வேரை (நான்) வெட்டி வீழ்த்தி விடும். அதன் காரணமாக கிளைகள் (என்னுடைய) தானாகவே வாடிவிடும்.


'கர்ம மார்க்கத்தை' கடைப்பிடிக்கும் மனிதன் பொதுநலவாதியாக இருப்பான். எனவே அவனது கவனமெல்லாம் வட்டத்திற்கு வெளியேதான் இருக்கும். அவனுக்கு 'நான்' மற்றும் 'என்னுடைய' என்ற இரண்டிலும் கவனம் செலுத்த நேரமிருக்காது. இதன் காரணமாக அவை நாளடைவில் வலுவிழந்து நலிந்துவிடும்.


'பக்தி மார்க்கத்தை' கடைப்பிடிக்கும் மனிதன், இறைவனிடம் 'சரணாகதி' அடையாத வரையில் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியாது. சரணாகதியை முழு மனதுடன் கடைப்பிடித்தால், 'நான்' மற்றும் 'என்னுடைய' என்ற இரண்டும் அவனை விட்டு விலகிவிடும்.


'தியான மார்க்கம்' ஒழுங்காகக் கடைப்பிடிக்கப் பட்டால் மட்டுமே, அதற்குரிய பலன் கிடைக்கும்.


                     (தொடரும்)


அன்பு

பதிவு 63


சத்துவ குணம் நிறைந்த மனிதன் என்று சொல்லும்போது, அவனிடம் சத்துவ குணம் மட்டுமே இருக்கும் என்று அர்த்தமில்லை. மற்ற குணங்களும் கலந்தே இருக்கும்.


விகிதாசாரத்தில் சத்துவ குணம் மிகுந்து காணப்பட்டால், அவனை சத்துவ குணவாதி என்கிறோம்.


சத்துவ குணம் நிறைந்த மனிதன் இயல்பாகவே தனிமையை விரும்புகிறவனாக இருப்பான்.


அவனுக்கு மறைநூல்கள் சொல்லும் வாழ்வியல் தத்துவங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும்.


அவற்றில் உள்ள தத்துவங்கள் புரியப் புரிய, அவன் உள்ளுக்குள் ஒடுங்க ஆரம்பித்து விடுவான்.


அதன்பின் 'தாரணையும்' எளிதாக கைகூடும். அதனைத் தொடர்ந்து 'தியானத்தையும்' கடைப்பிடிக்க ஆரம்பித்து விடுவான்.


ஒருவேளை குடும்ப சூழ்நிலை மற்றும் பிற சூழ்நிலை காரணங்களினால் மனம் ஒடுங்க மறுத்தால், ஞானம் மூலம் விழிப்புணர்வு பெறுவது தடைப்படும்.


விழிப்புணர்வு பெறமுடியாத நிலையில், அந்த மனிதனால் வெறுமனே 'கற்ற பசுவாக' மட்டுமே இருக்க முடியும். 'முற்ற பசுவாக' வாழ முடியாது. (திருமந்திரம் 2015)


                      (தொடரும்)


அன்பு

பதிவு 64


ரஜோ குணத்தை பொறுத்தவரை அதில் இரண்டுவித மனிதர்கள் உண்டு -- பொதுநலவாதி மற்றும் சுயநலவாதி.


பொதுநலவாதிக்கு உகந்தது 'கர்ம மார்க்கம்'; சுயநலவாதிக்கு உகந்தது 'பக்தி மார்க்கம்'.


ஆனால், யார் பொதுநலவாதி, யார் சுயநலவாதி என்று கண்டறிவது சற்று சிரமமானது.


ஏனெனில், பொதுநலவாதி என்று சொல்பவர்களுக்குள் சுயநலவாதிகளும், சுயநலவாதி என்று சொல்பவர்களுக்குள் பொதுநலவாதிகளும் இருப்பார்கள்.


தனது வட்டத்தில் உள்ளவர்களைப் பற்றி கவலைப்படாமல், வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களுக்காக தனது நேரத்தை செலவளித்தால், அவன் பொதுநலவாதிதான்.


இவர்கள் 'கர்ம மார்க்கத்தில்' பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமலும், தன்னை முன்னிலைப்படுத்த முயலாமலும், தங்கள் சேவையை தொடர்ந்து செய்து வந்தால், இவர்கள் பெறும் அனுபவங்கள் இவர்களை 'அகத்தாய்வில்' தள்ளிவிடும்.


அதுபோன்ற சமயங்களில் இவர்களுக்கு தக்க பெரியோர்களின் துணையும் கிடைத்தால், சத்துவ குணத்தை அடைந்து விடுவார்கள்.


தவிர, தனது வட்டத்தில் உள்ளவர்களைப் பற்றி அக்கறை இல்லாதிருப்பதால், 'என்னுடைய' என்ற கிளைகள் வாடி உதிர்ந்து விடும். 


'கர்ம பலனை' எதிர்பார்க்காது சேவை செய்து வந்தால் 'நான்' என்னும் வேரும் அழிந்துவிடும்.


சில மனிதர்கள், பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களுக்காக பாடுபட முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் தர்மத்திற்கு உட்பட்டு வாழ விரும்புவார்கள். எந்த சூழ்நிலையிலும் தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைக்க மாட்டார்கள்.


பொதுசேவையில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முடியாவிட்டாலும், சின்ன சின்ன வேலைகளில் மற்றவர்க்கு உதவ முன்வருவார்கள்.


இவர்களையும் பொதுநலவாதிகள் என்றே கருதலாம்.


இவர்கள் 'பக்தி மார்க்கத்தில்' சரணாகதி மனப்பான்மையுடன் ஈடுபட வேண்டும்.


தவிர, இவர்கள் தர்மத்திற்கு உட்பட்டு வாழ்வதால், 'தியான மார்க்கத்தில்' உள்ள முதலிரண்டு அங்கங்களை (யமம், நியமம்) ஒழுங்காக கடைப்பிடிப்பார்கள். எனவே, இவர்கள் 'தியான மார்க்கத்திலும்' தம்மை ஈடுபடுத்தலாம்.


                      (தொடரும்)


அன்பு

பதிவு 65


ரஜோ குணத்தில் உள்ளவர்களை பொதுநலவாதி, சுயநலவாதி என இரண்டாகப் பிரிக்கலாம் என்று சொல்லியிருந்தோம்.


பொதுநலவாதியைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். சுயநலவாதியைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.


தான், தன் குடும்பம் என்று வாழ்பவர்கள் அனைவரையும் சுயநலவாதிகள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.


பல்வேறு காரணங்களால் பலரால் தனது வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு சேவை செய்ய முடியாமல் போகலாம்.


அப்படியானால், சுயநலவாதிகளை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?


பிறரைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள், தவறான வழியில் பணத்தை சேர்ப்பவர்கள், வருமானத்தை குறைத்துக்காட்டி வரி ஏய்ப்பு செய்பவர்கள், சுருக்கமாக சொன்னால் 'தர்மத்தின்' வழியில் செல்லாதவர்கள் அனைவருமே சுயநலவாதிகள்தான்.


இவர்கள் ஞான உபதேசங்களைக் கேட்கலாம். ஆனால், 'ஞான மார்க்கத்தில்' ஈடுபட முடியாது.


பொதுசேவையில் இவர்கள் ஈடுபடலாம். ஆனால், அது 'கர்ம மார்க்கமாக' இருக்காது.


இவர்களால் 'தியான மார்க்கத்தில்' முதல் இரண்டு அங்கங்களை (யமம், நியமம்) சரிவர கடைப்பிடிக்க முடியாது. எனவே 'தியான மார்க்கமும்' கைகொடுக்காது.


மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவை நிரம்பி வழிவதால், 'இறைவனிடம் சரணாகதி' அடைவதும் இயலாத ஒன்று.


ஏதாவது ஒரு மார்க்கத்தில் செல்வதற்கு தகுதியாகாதவரை, இவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கலாம். 

ஆனால், மகிழ்ச்சி எந்த நேரத்திலும் காணாமல் போய்விடலாம்.


எனவே,

வாழ்க்கையில் 'அமைதி' வேண்டுமென்றால், ஏதாவது ஒரு மார்க்கத்தில் பயணம் செய்யத் தகுந்தவராக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.


                      (தொடரும்)


அன்பு

பதிவு 66


முக்கிய மார்க்கங்கள் நான்குதான் என்றாலும், இவற்றின் உதவியின்றியும் நாம் 'விழிப்புணர்வு' பெறமுடியும்.


ஒருசில உதாரணங்கள் - -


1. நமக்கு தேவை இல்லாதவற்றை நீக்குவது.

2. ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழப் பழகுவது.

3. ஓய்வு நேரங்களில் எதையும் நினைக்காமல் இருப்பது.

4. மனதில் எழும் தேவையற்ற எண்ணங்களை உதாசீனப் படுத்துவது.

5. தனிமையில் (தனியாக அல்ல) இருக்கப் பழகுவது.

(Be in the family; be far away from the family)

6. தன்னைச் சுற்றி கூட்டம் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வது.

7. ஆழ்ந்து சுவாசிக்க கற்றுக்கொள்வது (deep breathing).

8. எந்த செயல் செய்தாலும், மனமும் அங்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது.

(Be present in the present)


இதுபோன்று பலவித பயிற்சிகளை நமது அனுபவத்தில் கண்டுபிடித்து, அவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.


                        (தொடரும்)


அன்பு

பதிவு 67


"Actionlessness because of thoughtlessness


Thoughtlessness because of desirelessness


Desirelessness because of egolessness


Egolessness because of vasanalessness"

... Swami Chinmayanantha


ஆழ்மனதில் (வாசனா) பதிவுகள் இருந்தால், 'நான்' என்கிற உணர்வு மேலோங்கும்.


அதன் காரணமாக ஆசை, எண்ணங்கள், செயல் என ஒவ்வொன்றாகத் தொடரும்.


நாம் செயல்புரியும் பொழுது, நாம் பிறரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவோம்.


அதற்குப் பதிலாக அவர்கள் செய்யும் காரியம் நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, ஆழ்மனதில் புதியதொரு பதிவை ஏற்படுத்த வழி வகுக்கும்.


இந்த சுழற்சி நின்றால் மட்டுமே மனதில் அமைதி வரும்.


அதற்குத் தேவை, உண்மையில் 'நான்' யார் என்று அறிந்து, அதனால் வரும் விழிப்புணர்வை உணர வேண்டும்.


விழிப்புணர்வு வந்தவுடன் 'அஹங்காரம்' இல்லாது போய்விடும்.


அப்படியானால், அதன்பின் நம்மால் செயல்பட முடியாதா?


விழிப்புணர்வு பெற்றவர்கள் தங்கள் ஆயுட்காலம் முடியும்வரை செயல் புரிந்தார்களே; அது எப்படி நடந்தது?


                          (தொடரும்)


அன்பு

பதிவு 68


தொடர்ந்து பயணித்து வரும் அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு.


அன்பு, விழிப்புணர்வு இரண்டும் வேறு வேறாகத் தோன்றினாலும், அவற்றிற்கிடையே நெருங்கிய சம்பந்தம் உண்டு.


நான் 'அன்பு' பற்றி எழுதும்போது, நான் அறிந்தது, புரிந்தது மற்றும் அனுபவத்தில் உணர்ந்தது ஆகியவற்றின் அடிப்படையில் எழுதினேன்.


'விழிப்புணர்வு' பற்றி எழுதும்போது, அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன் என்று சொல்லமுடியாது.


'நான்' என்று எதை நினைக்கிறேனோ, அது உண்மையான நானில்லை என்பதை புரிந்துகொண்டேன். ஆனால், உணர்வதற்கு அது மட்டும் போதாதே!


ஆக, உண்மையை உணராமலேயே என் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னதான் எளிய நடையில் கூறினாலும்,

என்னுடைய கருத்துக்கள் பண்டிதர்களின் கருத்துக்கு மாறுபட்டதாகக்கூட இருக்கலாம்.


எனவே, அந்தக் கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லையேல் புறந்தள்ளி விடுங்கள்.


ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

*** *** *** ***

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோளும்கூட

- - ஆன்மீகத்தில் 'தெளிவது' என்பதற்கும், 'தெள்ளத்தெளிவது' என்பதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.


'தெளிவது' என்றால் உங்களுக்குள் எழுந்த சந்தேகங்களுக்கு, உங்களுக்கு விடை தெரிந்துவிட்டது; நீங்கள் தெளிவடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.


'தெள்ளத்தெளிவது' என்றால், பிறர் கேட்கும் கேள்விகளுக்கும் உங்களால் விடை அளிக்கமுடியும் என்று அர்த்தம்.


"எனது சந்தேகங்களுக்கு எல்லாம் விடை கிடைத்துவிட்டது" என்று 'தெளியும்வரை', "சிவஞானபோதம், மாண்டுக்ய உபநிஷத், அஷ்டவக்கர கீதை, J.K.-ன் சொற்பொழிவுகள்" போன்ற நூல்களை படிக்காதீர்கள். அவை உங்கள் புரிதலைக் குழப்பிவிடும்.


அவையெல்லாம் ஆன்மீகத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்ற பிறகு படிக்க வேண்டிய நூல்கள். 


'தெளிதல்' நிலையிலிருந்து, 'தெள்ளத் தெளிதல்' நிலைக்கு உங்களை கொண்டு செல்வதற்கு அவை பேருதவியாக இருக்கும்.


                         (தொடரும்)


அன்பு

பதிவு 69


நமது மனம் 'கருணை' நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், நமக்கு 'விழிப்புணர்வு' பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.


விழிப்புணர்வு என்றால் என்ன? அந்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்வோம்?


நீங்கள் விழிப்புணர்வு பெற்ற மனிதராக இருந்தால், சமூகத்தில் இணக்கமாகவும், மனதில் எந்தவித இறுக்கமும் இன்றி இளக்கமாகவும், தளர்வாகவும் இருப்பீர்கள். 


விழிப்புணர்வு பெற என்ன செய்ய வேண்டுமென்றால், பல்வேறு பதில்கள் வரும்.


மீராவைக் கேட்டால், கிருஷ்ணனை நினைத்து பாடிக்கொண்டிருந்தால் போதும் என்பார்.


ரமண மஹரிஷி, 'நான் யார்' என்ற கேள்விக்கு விடையைத்தேடு என்பார்.


பூசலார் நாயனாரோ, வெறுமனே உட்கார்ந்து கொண்டு மனதிற்குள் இறைவனுக்கு ஒரு கோயிலைக் கட்டு என்பார்.


புத்தரோ, வெறுமனே ஒரு பார்வையாளனாக இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிரு என்பார்.


J.K.-யிடம் கேட்டால், எதுவும் செய்ய வேண்டாம்; ஏற்கனவே நீ அதுவாகத்தான் இருக்கிறாய் என்பார்.


வழி வேறு வேறாக இருக்கலாம். ஆனால், எல்லோரும் போய்ச்சேரும் இடம் ஒன்றுதான். பாதையின் முடிவில் எல்லோரும் வந்துசேரும் எல்லைக்கோடு ஒன்றாகத்தான் இருக்கும்.


நாம் எந்த வழியில் சென்றாலும், நமது முன்னேற்றத்தை அறிந்து கொள்வது எப்படி என்று பதஞ்சலி முனிவர் அழகாக விளக்குகிறார்.


'விழிப்புணர்வு' என்றால் என்ன என்று புரிந்து கொள்வது கொஞ்சம் சிக்கலானது; இருந்தாலும், பதஞ்சலி சொன்ன சூத்திரங்களின் துணைகொண்டு புரிந்து கொள்வோம். 


மெதுவாக பயணிப்போம்.


                         (தொடரும்)


அன்பு

பதிவு 70


குழந்தை பிறக்கும் போது, அன்பு அதன் இயல்பாக இருக்கும். ஆனாலும், முற்பிறவியின் முடிவில் இருந்த ஆழ்மனப் பதிவுகள் 'பிரராப்த கர்மா' என்ற பெயரில் தொடர்ந்து வருவதால், அன்பு 'தூய அன்பாக' இல்லாமல் மாசுடன் கூடிய அன்பாக இருக்கும்.


இந்த மாசுதான் மனிதனை 'விழிப்புணர்வு' அற்றவனாக ஆக்குகிறது.


மனிதன் தனது சக்தியை புறவுலகில் செலுத்தும்போது, மாசுடன் கூடிய அன்பு பாசமாக, பேராசையாக, காமமாக (அதீத ஆசை) உருவெடுத்து அவனை நிலைகுலையச் செய்துவிடுகிறது.


அதே சக்தி அகவுலகில் நுழைந்தால், அன்போடு கலந்திருந்த மாசு நீங்கி தூய அன்பாக மாறி அவனை கருணை நிரம்பிய மனிதனாக மாற்றி விடுகிறது.


மனிதனிடமிருந்த அன்பு தூய அன்பாக மாறும் பொழுது, அந்த மனிதன் விழிப்புணர்வின் ஆரம்ப நிலையை அடைகிறான்.


அவனிடம் இருந்த விழிப்புணர்வு முழுமை அடையும் பொழுது, அவனது உள்ளம் கருணையால் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.


அவன் மக்களால் மதிக்கப்படும் மகானாக அடையாளம் காணப்படுவான்.


                       (தொடரும்)



அன்பு

பதிவு 71


மனிதன் சுயமேம்பாடு அடைவதற்கு 'ஒதுங்குதல்', 'ஒடுங்குதல்', 'மறத்தல்' மற்றும் 'இறத்தல்' ஆகிய நான்கு பண்புகளை ஒன்றன்பின் ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டுமென்று வேறு ஒரு இடத்தில் சொல்லியிருந்தேன். 


அதையே இங்கு கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சொல்ல விரும்புகிறேன்.


முதலில் 'ஒதுங்குதல்' என்றால் என்ன?; அதை எப்படி கடைப்பிடிப்பது என்று பார்ப்போம்.


மனித மனம் இங்கும் அங்கும் அலைபாயக் கூடியது. அது அலைபாய்வதற்கான காரணம் என்ன? "அபிநிவேஷ்"தான் காரணம் என்கிறார் பதஞ்சலி.


அபிநிவேஷ் என்றால் இச்சை என்று பொருள். இல்லாத ஒன்றுக்காக, இயலாத ஒன்றுக்காக ஏங்குவது என்று அர்த்தம். எப்போதும் எதிர்கால கனவில் இருப்பது. இதன் காரணமாகவே, மனதில் விருப்பும், வெறுப்பும் வளர்கின்றன.


ஒரு மனிதனுக்கு வேலை ஏதும் இல்லையென்றால், மனம் அவனை புறவுலகை நோக்கி எங்காவது இழுத்துச் சென்றுவிடும். அந்த நேரங்களில் புறவுலகில் ஈடுபாடு இன்றி ஒதுங்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.


புறவுலகில் இருந்து மட்டுமல்ல, என்னுடையது என்று எதையெல்லாம் நினைக்கிறோமோ அவற்றிலிருந்தும் ஒதுங்கத் தெரிந்திருக்க வேண்டும்.


ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அன்று. 


'சள சளவென்று பேசிக்கொண்டும், இஷ்டத்துக்கு ஊரை சுற்றிக்கொண்டும்' இருக்கும் மனம், நாம் சொல்வதை கேட்குமா என்ன?


அது எஜமானனாகவும், நாம் அது சொல்கிறபடி ஆடும் பணியாளராகவும் அல்லவா நடந்து கொள்கிறோம்! அதை மாற்ற முயல்வது ஒன்றும் சாதாரண விஷயமல்ல.


ஆரம்பத்தில் ஒரு நிமிட நேரம் ஒதுக்க முடிந்தாலே அதிசயம்தான். நாம்தான் கடுமையாகப் போராடி மனதை வழிக்கு கொண்டுவர வேண்டும்.


கொஞ்ச காலம் போராடினால், பின்னர் மனம் தானாக ஒத்துழைக்க ஆரம்பித்துவிடும்.


தினந்தோறும் சிறிது நேரம் ஒதுக்கினால் போதும். அந்த நேரத்தில் 'மனதை ஒருமுகப்படுத்த' முயற்சி செய்ய வேண்டும்.


ஒருமுகப்படுத்துதல் என்றால் என்ன? தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றின் மீது தொடர்ந்து கவனத்தை செலுத்தவேண்டும்.


ஒருமுறை ஒரு மனிதர் தனக்கு தான் வளர்க்கும் கன்றுக்குட்டியின் மீதுதான் அதிகப் பிரியம் என்றார். அதற்கு பகவான் ராமகிருஷ்ணர் "அதன்மேலேயே தியானம் செய்" என்று சொல்லிவிட்டார்.


எதன்மீது தியானம் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த குறிப்பிட்ட ஒன்றின் மீது, முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்த முடிகிறதா என்பதே முக்கியம்.


இதையே 'தாரணையிலும்' செய்கிறோம். ஆனால், அது மனம் ஒடுங்கியபின் செய்வது. எனவே இதனை தாரணைக்கானப் பயிற்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


சத்துவ குணம் நிறைந்த மனிதன் அகவுலக நாட்டம் கொண்டவன். எனவே, அவனுக்கு இது ஒரு எளிய காரியமே.


பொதுநலவாதியை பொறுத்தவரை, அவன் வட்டத்திற்கு வெளியே அதிக கவனம் செலுத்துபவன். அத்துடன் அவனுக்கு சத்துவ குணத்தின் தாக்கமும் இருக்கும். எனவே, அவனுக்கும் மனதை ஒருமுகப்படுத்துவது என்பது கடினமான ஒன்றாக இருக்காது.


சுயநலவாதிக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில், அவன் வட்டத்திற்கு வெளியே வேலை செய்தாலும் அவனது மனதால் 'என்னுடைய' என்ற நிலையிலிருந்து ஒதுங்க முடியாது. குறிப்பிடதக்க அளவில் முயற்சியும், பயிற்சியும் இருந்தாலன்றி, அவனால் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது.


புறவுலகை விட்டு ஒதுங்கினால், ஒதுங்கியபின் மனதை ஒருமுகப் படுத்த முயற்சி செய்வதால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன?


                        (தொடரும்)


அன்பு 

பதிவு 72


புறவுலகைவிட்டு ஒதுங்கியபின், வெளியே ஓடும் மனதை நிறுத்திப் பிடித்து ஒருமுகப் படுத்துவதில் பழக்கப் படுத்தினால், அதனால் கிடைக்கும் பயன்களில் சிலவற்றை பார்ப்போம் - -


1. சள சளவென்று பேசிக்கொண்டும், கண்டபடி ஊரை சுற்றிக்கொண்டும் இருந்த மனம், அமைதியாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளும்.

2. எஜமானனாக இருந்து நம்மை ஆட்டிப்படைத்த மனம், தானாக உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பதை விட்டுவிடும்.

3. மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

4. ஆழ்மனதில் இருந்து எந்தவித தூண்டுதல்கள் வந்தாலும், உணர்வு மனம் புத்தியை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்காது.   

5. மனம், புறவுலகில் தேவையில்லாத விஷயங்களில் கலந்து கொள்வதிலிருந்து விலகிவிடும்.

6. அதன் காரணமாக அவற்றிலிருந்து வரக்கூடிய பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" - - திருவள்ளுவர்.

7. மனிதனுக்கு அகத்தாய்வில் ஆர்வம் உண்டாகும்.

8. வாழ்க்கையில் பலவற்றையும் நினைத்துக் கொண்டிருந்த மனிதன், முதன் முதலாக தன்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பிப்பான்.

9. அகத்தாய்வில் ஈடுபட ஈடுபட உணர்வு மனதில் உள்ள தேவையற்ற பதிவுகள் நீங்கிவிடும்.

10. உணர்வு மனதில் இருந்த அழுக்குகள் நீங்கிய நிலையில், அது புத்தியுடன் இணைந்து ஒருங்கிணைந்த மனமாக மாறிவிடும்.

11. அதன்பின் ஆழ்மனதில் இருந்து வரும் தூண்டுதல்களால், உணர்வு மனதை தன்னிச்சையாக இயங்க வைக்க முடியாது.

12. அதன் விளைவாக, ஆழ்மனதில் இருந்த பதிவுகள் ஒவ்வொன்றாக நலிவடையத் துவங்கும்.


                          (தொடரும்)


அன்பு

பதிவு 73


கட்டாயப் படுத்தியதன் காரணமாக ஒதுங்கி இருக்கக் கற்றுக்கொண்ட மனம், தானாகவே தனிமையை விரும்பி அகவுலகில் பிரவேசிக்க ஆரம்பிக்கிறது. இதனை 'ஒடுங்குதல்' என அழைக்கலாம். 


பதஞ்சலி இதனை 'பிரத்யாஹாரம்' என்கிறார். அதாவது, புறவுலகில் சஞ்சரிக்கும் மனம் அகவுலகில் அடியெடுத்து வைப்பதைத்தான் பிரத்யாஹாரம் என்கிறார்.


ஒடுங்க கற்றுக்கொண்ட மனம் 'தாரணை'யில் இறங்கவேண்டும்.

ஆனால், மனம் நிச்சிந்தையாக இருந்தால் மட்டுமே அது கைகூடும்.


முதன்முதலாக வாழ்க்கை என்றால் என்ன என்று அறிய முற்படுகிறான். தாரணையில் கவனம் செலுத்த முடியாமல், மனதில் நிறைய கேள்விகள் எழும். 


அந்தக் கேள்விகள் அனைத்தும் பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் போன்றோர்களிடமிருந்து இரவல் வாங்கிய அறிவின் அடிப்படையில் அமைந்த கேள்விகள். 


விடைகளைத் தெரிந்துகொள்ள மறைநூல்களை நாடுகிறான். வழிகாட்டுவதற்கு சான்றோரைத் தேடுகிறான்.


இதனை பதஞ்சலி 'சவிதர்க்க சமாதி' என்கிறார். தனது பண்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சி என்கிறார்.


கேள்விகளுக்கான விடைகள் கிடைத்தபின் அவனது பண்புநிலை மாற்றம் அடைகிறது. அவன் தர்க்கம் செய்வதை விட்டுவிடுகிறான். இதனை பதஞ்சலி 'நிர்விதர்க்க சமாதி' என்கிறார். 


தேவையற்ற விஷயங்களில் கலந்துகொள்வதை விட்டு விடுகிறான்.


அவனது உணர்வு மனதில் இருந்த அசுத்தங்கள் நீங்கி, சுத்த மனமாக மாறிவிடுகிறது. மனம் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறது.


அத்துடன் தன்னிச்சையாக முடிவெடுக்காமல், புத்தியைக் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கிறது.


                       (தொடரும்)


அன்பு

பதிவு 74


மனம் ஒடுங்கக் கற்றுக்கொண்டபின்,அந்த மனிதனால் 'தாரணையில்' மனம் ஒன்றி ஈடுபட முடிகிறது. 


தாரணையில் மனம் ஒரு பொருளின் மீது கவனம் செலுத்தி, தன்னை ஒருமுகப் படுத்த முயற்சிக்கிறது.


மனம் ஒடுங்குவதற்கு முன்னால் செய்த பயிற்சிக்கு, முயற்சியும் தேவைப்பட்டது. இப்போது அது தேவையில்லை.


வாழ்க்கையைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டு, பின் தன்னைப்பற்றி - - "நான் யார்" என்று சிந்திக்க தொடங்குகிறான்.


தனக்குள்ளேயே கேள்வியைக் கேட்டு, அதற்கான விடையை சுயசிந்தனை மூலம் அடைய முயற்சிக்கிறான்.


பதஞ்சலி இதனை 'சவிசார சமாதி' எனக் கூறுகிறார்.


'சவிசார சமாதி' அவனுக்கு மாபெறும் உண்மை ஒன்றை உணர்த்துகிறது.


அது - -

Everything is nothing except one thing which is the

 'in-thing'.


"சித்தமிசை குடிகொண்ட இறைவனைத் தவிர வேறு எதுவும் சதமல்ல" என்பதை உணர்ந்து கொள்கிறான்.


"என்செயலாவது யாதொன்றுமில்லை; இனித் தெய்வமே!

உன்செயலேயென்று உணரப் பெற்றேன்.." என்று பட்டினத்தார் பாடிய பாடலின் பொருள் அவனுக்கு விளங்குகிறது.


அவனிடமிருந்த ஆசாபாசங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக விலகிவிடுகின்றன. 


"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்ற குறளுக்கான அர்த்தத்தையும் புரிந்து கொள்கிறான்.


அத்துடன் 'நான்' என்னும் அஹங்காரமும் கரைந்து போகிறது.


நாம் 'மறத்தல்' என்று குறிப்பிட்டது, நான் என்னும் அஹங்காரம் மறைந்து போவதைத் தான்.


இனி அவனிடம் இருப்பது தூய அன்பு மட்டுமே. 


"துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் .." என்ற குறளுக்கு துறவியர்க்கும், ஏழைக்கும், ஆதரவின்றி இறந்தவர்க்கும் என்று பொருள் சொல்கிறார்கள்.


இதில் 'துறவி' என்பதற்குப் பதிலாக 'அஹங்காரத்தை துறந்த துறவி' என்று பொருள்கொண்டால் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை அஹங்காரத்தை துறக்காமல் துறவு வேடம் பூண்டவர்கள் எனக் கூறலாம்.

("இறந்தார்க்கும்" என்றால் என்ன என்று வரும் பதிவில் காணலாம்)


"நான்" என்று நினைத்தது உண்மையான "நான்" இல்லை என அறிந்ததும், அவனது அஹங்காரம் "அஸ்மிதாவாக" மாறி விடுகிறது. 


'அஸ்மிதா' என்றால் "நான்" என்று நினைத்தது பொய் என புரிந்துவிட்டது. இருந்தாலும், தன்னைப் பற்றிய உணர்வு இன்னமும் கரையாமல் இருக்கிறது என்று அர்த்தம்.


"நான்" என்பது பொய் என்பது தெரிந்த பின்பும், இறைவனை வேறாகப் பார்க்கும் நிலையைத்தான் 'அஸ்மிதா' என்கிறார்கள்.


ஆறு கடலைப் பார்த்துவிட்டது; ஆனாலும் கடலில் கலக்கவில்லை என்று பொருள்.


இந்நிலையை பதஞ்சலி "சபீஜ சமாதி" என்கிறார். அதாவது விதைகளுடன் கூடிய சமாதி என்கிறார்.


விழிப்புணர்வு ஆரம்ப நிலையில்தான் உள்ளது; இன்னமும் முழுமை அடையவில்லை என்கிறார்.


ஏன் அவ்வாறு சொல்கிறார்?


                          (தொடரும்)


அன்பு

பதிவு 75


"சவிசார சமாதி" மனிதனின் அஹங்காரத்தை முழுமையாக நீக்கி விடுகிறது.


அதன் காரணமாக அவனுக்கு தன்முனைப்பு இல்லாமல் போய்விடுகிறது. செயல்புரிவதில் ஆர்வமின்றி, தனிமையை விரும்ப ஆரம்பித்து விடுகிறான்.


தினசரி கடமைகள், ஒப்புக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொண்ட கடமைகள் தவிர மற்ற நேரங்களில் மனம் 'தியானத்தில்' ஆர்வம் காட்டுகிறது.


'சவிசார சமாதியின்' விளைவாக அவன் 'சபீஜ சமாதியை' அடைகிறான் என்று சொல்லியிருந்தோம். 


அதை விதையுடன் கூடிய சமாதி என பதஞ்சலி ஏன் சொன்னார் என்று பார்ப்போம்.


ஆழ்மனம் (உணர்வற்ற மனம்) என்பது கடலில் உள்ள பனிப்பாறையைப் போன்றது.


'நான்' மற்றும் 'என்னுடைய' என்ற இரண்டும் கடல் மட்டத்திற்கு மேலே உள்ள பனிப்பாறையைப் போன்றது.


மேலே இருந்தவை விதைகளிலிருந்து முளைத்து வந்தவை. 'சவிசார சமாதியில்' அவற்றை அகற்றி விட்டோம்.


ஆனால், கடலுக்கு கீழே மறைந்திருக்கும் பனிப்பாறையைப் போல், நமக்கு புலப்படாத பல விதைகள் இன்னமும் ஆழ்மனதில் இருக்கலாம். உரிய சந்தர்ப்பம் வராததால், அவை முளைக்காமல் உள்ளன.


நாம் கொஞ்சம் அசந்தாலும், அவை முளைத்து நம்மில் அஹங்காரத்தை உருவாக்கி விடும்.


இதனை தவிர்க்க நாம் 'நிர்விசார சமாதியை' கடைப்பிடித்து மனதில் எந்தவித சிந்தனையும் வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும்.


அதற்கு ஒரேவழி தியானம்தான். அதுவும் எந்த ஒன்றையும் நினைக்காமல், தியானம் செய்கிறோம் என்ற உணர்வும் இல்லாமல், தியானம் செய்யப் பழகவேண்டும்.


"Meditationless meditation is the real meditation" -- Swami

Chinmayanantha.


இதனை முறையாகத் தொடர்ந்து கடைப்பிடித்தால், அந்த மனிதன் 'நிர்பீஜ சமாதியை' அதாவது விதைகள் அற்ற சமாதியை அடைந்து விடுகிறான்.


இந்த நிலையில், விழிப்புணர்வு முழுமை பெறுகிறது. 


சித்தத்தின் மீது படர்ந்திருந்த பதிவுகள் நீங்கிய காரணத்தால், அவனது ஆழ்மனம் (உணர்வற்ற மனம்) சித்தத்தில் இருந்து நீங்கி விடுகிறது. 


('இறந்தார்க்கும்' என்று வள்ளுவர் சொல்வது இவர்களைக் குறித்துத்தான்)


சித்தத்திலிருந்த மறைப்பு (ஆழ்மனம்) விலகியதால், இறையருள் அவனை சூழ்ந்துகொள்கிறது.


அவனும் உள்ளிருந்து (bliss sheath) பெருகும் ஆனந்தத்தை உணர்ந்து கொள்கிறான். 


"சினம் இறக்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று பாடுகிறார் தாயுமானவர்.


"மனமிறக்க ஞானி பிறக்கிறான்" என்று சொல்வதும் இதனால்தான்.  


ஆழ்மனம் இறந்த நிலையில், அவனது உணர்வு மனம் கருணையால் நிரம்பி வழிகிறது.

*** *** *** ***

"கருணை பொங்கும் உள்ளம் -அது 

கடவுள் வாழும் இல்லம்"  

--கவிஞர் கண்ணதாசன்.


‌              .. முற்றும் ..

No comments:

Post a Comment