Wednesday, 2 September 2026

மழலையின் கீதை


          


       மழலையின் கீதை



           பொருளடக்கம்


மெய்ஞானப் புலம்பல்                    

பகவத் கீதையும், நானும்             

நிலையென ஒன்று                       

முன்னுரை                                          

முகவுரை                                                

  1. ஞானபூமி

  2. சனாதன தர்மம்

  3. தர்மம்

  4. அர்த்த

  5. காம

  6. மோக்ஷ 

  7. சாதுர்வர்ண்யம்

  8. வர்ணாஸ்ரம தர்மம்

  9. தெரிதலும், புரிதலும்

10. மனிதனும், தாக்கமும் 

11. ஐவர் கூட்டணி

12. தாக்கமும், உடலும்

13. தாக்கமும், மனமும்

14. தாக்கமும், புத்தியும்

15. காரணமே காரியம்

16. பதிவும், செயலும்

17. மனமும், புத்தியும் 

18. காரண, காரியம்

19. பற்று 

20. வாசனா

21. ஆன்மா

22. மூன்று குணங்கள்

23. குணங்கள் – விளக்கம் 1

24. குணங்கள் – விளக்கம் 2

25. குணங்கள் – விளக்கம் 3        

26. குணங்கள் – விளக்கம் 4

27. புறச்செயலும், அகச்செயலும்

28. நான்கு வர்ணங்கள்


                                                                  

29. வர்ணங்கள் – விளக்கம் 1




                                                                       30. வர்ணங்கள் – விளக்கம் 2




                                                                       31. வர்ணங்கள் – விளக்கம் 3




                                                                       32. வர்ணங்கள் – விளக்கம் 4




                                                                       33. வர்ணங்கள் – விளக்கம் 5




                                                                       34. வர்ணங்கள் – விளக்கம் 6




                                                                       35. வர்ணங்கள் – விளக்கம் 7




                                                                       36. வர்ணங்கள் – விளக்கம் 8








37. மனிதனின் அடுத்த நிலை          


          


38. உணர்ச்சியும், உணர்வும்




39. வாசனாவின் கறை




40. நோயும், மருந்தும்


41. வாழ்க்கை நெறியும்,      வாழ்க்கைத் தரமும்


42. நேற்று, இன்று, நாளை


43. கடமையும், பலனும்


44. வழித்தட மாற்றம்


45. கடலும், அலையும்


46. மனமும், சிலையும்


47. ஒப்பீடு


48. தவறெனத் தெரிந்தால்


49. துணை நலம்


50. சுயமேம்பாட்டிற்கான உத்திகள்


51. அந்தக்கரணங்கள்


52. அந்தக்கரணங்களின் பொதுவான விதிமுறைகள்


53. நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு


54. இன்பமும், அமைதியும்


55. ஞானம் எனும் நெருப்பு


56. ஞானத்திற்கான பாதை


57. நீரில்லாத ஆறு


58. சச்சிதானந்தம்


59. இருள்சேர் இருவினைகள்


60. தன்முனைப்பு


61. வளர்ச்சியும், மலர்ச்சியும்


62. யான், எனது


63. நான் யார்?


64. இந்த நானும், அந்த நானும்


65. பந்தம்


66. நாமும், நமக்கான பாதையும்


67. மார்க்கமும், யோகமும்


68. பக்தி மார்க்கம்


69. கர்ம மார்க்கம்


70. தியான மார்க்கம்



71. ஞான மார்க்கம்




72. ஞான மார்க்கம் – பாதை 1




73. ஞான மார்க்கம் – பாதை 2




74. ஞான மார்க்கம் – பாதை 3




75. ஞான மார்க்கம் – பாதை 4




76. விழிப்புணர்வு




77. பலூனும் புல்லாங்குழலும்




78. நன்றியுரை



              இணைப்புகள்


குறிப்பு:

இந்த இணைப்புகளில் உள்ள சில பதிவுகள், பல காலகட்டங்களில் நண்பர்கள் மற்றும் அன்பர்கள் எழுப்பிய ஆன்மிகக் கேள்விகளுக்கு எனக்குப் புரிந்தவாறு அளித்த பதில்களின் தொகுப்பாகும்.


எனவே, சில கருத்துகள் வெவ்வேறு கோணங்களில் மீண்டும், மீண்டும் வருவதாகத் தோன்றலாம்.  


ஒரே உண்மையை பல கோணங்களில் சிந்திக்கும்போது, அதன் புரிதல் மேலும் ஆழமடையலாம்தானே!!


1. சிந்தனைக்கு ஒரு விருந்து


2. சனாதன தர்மம் - பாகம் 1


3. சனாதன தர்மம் - பாகம் 2


4. மெய்ப்பொருள் அறிவோம்


 5. சிவலிங்க தியானம் மற்றும் தியான அனுபவம்    


 6. அன்பு


 7. பற்று


 8. நிம்மதியின்மை


 9. வானப்பிரஸ்தம்


10. கருணை பொங்கும் உள்ளம்


11. திருவாசகம் 51.1


12. திருமந்திரம் 85


13. திருமந்திரம் 803


14. திருமந்திரம் 2033


15. ஆற்றில் கிடந்தும் .. பட்டினத்தார்


16. திருக்குறள் .. வேதாந்த பார்வை


17. ஆன்மிக அரசியல்


18. க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்




     

   மெய்ஞானப் புலம்பல்


ஆங்கார இருளகற்றி
ஆணவத்தின் பிறப்பகற்றி
ஓங்கார நாதங்கள்
உரைத்திருப்ப தெக்காலம்?





மாயாப் பிறப்பறுத்து
மன்னன் திருவடிகள்
சேய்தாய் அணைத்தாற்போல்
சேர்த்தணைப்ப தெக்காலம்?

சேய்தாய் அணைத்தாற்போல்
சேர்த்தணைத்து மகிழ்வதற்கு
பேய்போல் மனக்குரங்கை
பெயர்த்தொழிப்ப தெக்காலம்?

பேய்போல் மனக்குரங்கை
பெயர்த்தொழித்து கொல்வதற்கு
தாய்போல் தாரத்தை 
தரம்பிரிப்ப தெக்காலம்?





பாழும் பூவுலகில்
பாவியென ஆகாமல்
சூழும் மயக்கங்கள்
தூரநிற்ப தெக்காலம்?

சூழும் மயக்கங்கள்
தொடர்ந்துவந்து சுற்றாமல்
நாளும் உன்பாதம்
நான்தொழுவ தெக்காலம்?

நாளும் உன்பாதம்
நான்தொழுது அழுதாலும்
வீழும் நாள்வருமுன்
வினையறுப்ப தெக்காலம்?






நீங்கா துனைனினைத்து
நின்னருளைப் பெறுவதற்கு
ஏங்கா துள்ளமதை
எதிர்கொள்வ தெக்காலம்?

ஏங்கா துள்ளமதை
எதிர்கொண்டு செல்வதற்கு
தூங்கா நிலைமறந்து
துயரறுப்ப தெக்காலம்?

தூங்கா நிலைமறந்து
துயரறுத்து வாழ்வதற்கு
தீங்கா செயல்மறந்து
செயல்படுவ தெக்காலம்?






முக்களையின் பொருளறிந்து
முகக்களையின் அருளறிந்து
தெற்கலையின் நாயகனை
சேர்ந்தடைவ தெக்காலம்?

தெற்கலையின் நாயகனை
சேர்ந்தடைந்து பணிவதற்கு
இக்கலையில் நானடைந்த
இடரறுப்ப தெக்காலம்?

இக்கலையில் நானடைந்த
இடரறுத்து சாய்ப்பதற்கு
பொய்க்கலையை வேரறுத்து
புகலடைவ தெக்காலம்?

குறிப்பு:-
முக்களை...ஆணவம், கன்மம், மாயை
தெற்கலையின் நாயகன்... சிவன்






பெண்ணென்று பாராமல்
பேதைமனம் துள்ளாமல்
புண்ணென்று புறவாழ்வை
புரிந்துகொள்வ தெக்காலம்?

புண்ணென்று புறவாழ்வை
புரிந்துகொண்டு வாழ்வதற்கு
விண்ணென்று எனக்கென்று
வினையறுப்ப தெக்காலம்?

விண்ணென்று எனக்கென்று
வினையறுத்து தீர்வதற்கு
கண்ணென்று உனையெண்ணி
களிபுரிவ தெக்காலம்?






பொல்லாத சொற்களெல்லாம்
சொல்லுவதை விட்டுவிட்டு
பொல்லாத மனக்குரங்கை
பொய்த்திருப்ப தெக்காலம்?

பொல்லாத மனக்குரங்கை
பொய்த்திருக்க வைத்துவிட்டு
கல்லாத நூல்கற்று
கண்சொரிவ தெக்காலம்?

கல்லாத நூல்கற்று
கசிந்துருகி யெங்குமிணை
இல்லாத திருவடிகள்
எண்ணுவது மெக்காலம்?




   

பட்டுவிடும் பாண்டமிதை
பார்த்துநிதம் பாவித்து
கெட்டுவிடும் முன்னுன்னை
கிட்டுவது மெக்காலம்?

கெட்டுவிடும் முன்னுன்னை
கிட்டியே மகிழ்வதற்கு
சுட்டுவிடும் எண்ணங்கள்
சுட்டிருப்ப தெக்காலம்?

சுட்டுவிடும் எண்ணங்கள்
சுட்டிருக்கச் செய்வதற்கு
மொட்டுவிடும் ஆசைகளின்
மொட்டழிப்ப தெக்காலம்?






உள்ளம் உருகிநின்று
உன்னினைவாய் ஆவதற்கு
கள்ளம் கருகிநிற்கும்
கருத்தறிவ தெக்காலம்?

கள்ளம் கருகிநிற்கும்
கருத்தறிந்து கொள்வதற்கு
பள்ளம் மேடென்று
பகுத்தறிவ தெக்காலம்?

பள்ளம் மேடென்று
பகுத்தறிந்து பார்ப்பதற்கு
தெள்ளத் தெளிவாக
சிந்திப்ப தெக்காலம்?






பாவியவன் என்றழைத்து
பாரிலுள்ளோர் இகழாமல்
தாவியவன் தாள்பணிந்து
தவமுடிப்ப தெக்காலம்?

தாவியவன் தாள்பணிந்து 
தவமுடித்து ஓய்வதற்கு
மேவியசீர் மேதினியில்
மெய்யறிவ தெக்காலம்?

மேவியசீர் மேதினியில்
மெய்யறிவு கொள்வதற்கு
ஏவியதோர் வாழ்க்கையிதை
எடுத்தெறிவ தெக்காலம்?






மலரிடத்தே ஊடுருவி
மலர்துறக்கும் காற்றேபோல்
மனத்திடையே ஊடுருவி
மனந்துறப்ப தெக்காலம்?

மனத்திடையே ஊடுருவி
மனந்துறக்கக் கற்றாலும்
மனையிடத்தே ஊடுருவி
மனைதுறப்ப தெக்காலம்?

மனையிடத்தே ஊடுருவி
மனைதுறக்க கற்றாலும்
சினையிடத்தே ஊடுருவும்
வினைதுறப்ப தெக்காலம்?






பிறப்பும் இறப்புமற்ற
பெருவெளியில் பிறப்பதற்கு
சிறக்கும் சீர்வளங்கள்
துறந்திருப்ப தெக்காலம்?

சிறக்கும் சீர்வளங்கள்
துறந்திருக்கக் கண்டாலும்
இறக்கும் இப்பிறப்பின்
பிறப்பறுப்ப தெக்காலம்?

இறக்கும் இப்பிறப்பின்
பிறப்பறுக்கக் கற்றாலும்
திறக்கும் மணிக்கதவம்
திறந்திருப்ப தெக்காலம்?






பற்றும் ஆசைகளைப்
பற்றுவதை விட்டுவிட்டு
முற்றும் முதல்வனையே
முன்னினைப்ப தெக்காலம்?

முற்றும் முதல்வனையே
முன்வைத்துப் பார்ப்பதற்கு
தொற்றும் துயரங்கள்
தூரவைப்ப தெக்காலம்?

தொற்றும் துயரங்கள்
தொடராத நிலையதற்கு
சுற்றும் மயக்கங்கள்
துடைத்தெறிவ தெக்காலம்?






மண்ணுலகம் பொன்னுலகம்
மாதரென்ற நிலைமறந்து
விண்ணுலக நாயகனை
வியந்துநிற்ப தெக்காலம்?

விண்ணுலக நாயகனை
வேண்டிநிதம் வியந்திருக்க
புண்ணுலகம் புரிந்துகொண்டு
புள்பறப்ப தெக்காலம்?

புண்ணுலகம் புரிந்துகொண்டு
புள்பறக்கும் நாள்வருமுன்
தன்னுலகம் தான்மறக்கும்
தயைபெறுவ தெக்காலம்?






ஆடுகின்ற பட்டமொன்று
அறுந்துவிழக் கண்டபின்னும்
ஓடுகின்ற பாழ்மனது
ஒடுங்குவது மெக்காலம்?

ஓடுகின்ற பாழ்மனது
ஓடாமல் ஒடுங்கிநிற்க
கூடுகின்ற பேய்க்குணங்கள்
குறைந்தொழிவ தெக்காலம்?

கூடுகின்ற பேய்க்குணங்கள்
குறைந்தொழியக் கண்டாலும்
தேடுகின்ற நாயகனைத்
தெரிந்துகொள்வ தெக்காலம்?






தன்னவன் தன்னில்
தான்மயக்கம் கொள்ளாமல்
தென்னவன் தன்னில்
சிந்தைவைப்ப தெக்காலம்?

தென்னவன் தன்னில்
தெவிட்டாத சிந்தைவைத்து
கண்ணவன் தன்னில்
களித்திருப்ப தெக்காலம்?

கண்ணவன் தன்னில்
களிநடனம் கொண்டுநிதம்
பண்ணவன் தன்னில் 
பணித்திருப்ப தெக்காலம்?






பொருள்தேடி புண்பட்டு
பொய்யுலகில் வாழாமல்
இருள்தேடும் தீவினைகள்
இனிமறப்ப தெக்காலம்?

இருள்தேடும் தீவினைகள்
இனியென்றும் மறந்திருக்க
அருள்தேடி அன்புற்று
அகமகிழ்வ தெக்காலம்?

அருள்தேடி அன்புற்று
அகமகிழ்ந்து என்றும்திரு
வருள்தேடி வழிபட்டு
வயப்படுவ தெக்காலம்?


(புலம்பலுக்கு விடை  ...
      பகவத் கீதையும், நானும்)





   பகவத் கீதையும், நானும்

       (ஒரு முன்னோட்டம்)



அன்பு நண்பர்களுக்கு, 

பகவத்கீதையுடன் எனக்கு பந்தம் எப்படி ஏற்பட்டது என சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், அது ஒரு 'சுய தம்பட்டமாக' தோற்றமளிக்குமோ என்ற எண்ணம் வரும். அதனால் அந்த எண்ணத்தையே மறந்து விடுவேன்.

ஆனால், பகவத்கீதையைப் பற்றி, அதிலும் குறிப்பாக ''வர்ணாஸ்ரம தர்மம்" பற்றி, தவறான எண்ணங்கள், கடுமையான வார்த்தை பிரயோகங்கள், வெறுப்பான உணர்வு முதலியவற்றை பார்க்கும்பொழுது, நமது அனுபவத்தை சொல்லவேண்டும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.




கீதையை ஆதரித்தும், எதிர்த்தும் பலர் பேசுவதை பார்த்து, கீதையை படிப்பதா, வேண்டாமா என சிலர் குழப்பமடைவார்கள். அவர்களுக்கு எனது அனுபவம் பயன்படலாம் என்ற எண்ணம் காரணமாக இந்த முன்னோட்டத்தை, எதனையும் மிகைப்படுத்தாமல், வாசகர்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.


இது என்னுடைய கடமை எனத்
தோன்றுகிறது; இதற்கான பலன்      
"இறைவனின் விருப்பம்".
.....................................................................



கீதையின் உருவாக்கம் பற்றி பலவிதமான கருத்துக்கள் உண்டு. அவைகளைப் பற்றி நான் என்றுமே கவனத்தில் கொள்வதில்லை. அதைப்பற்றி ஆராயவேண்டியது பண்டிதர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்றோர்களே.



"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும  -  அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்கிறார் வள்ளுவர்.

எனவே எனது நோக்கமெல்லாம் கீதை சொல்லும் தத்துவங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே. ஆனால், அது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை.





சுவாமி சின்மயானந்தரிடம் ஒரு அன்பர் கேட்டது, "நான் கீதையை நிறைய தடவை படித்துவிட்டேன்; ஒன்றுமே புரியவில்லை".

அதற்கு சுவாமி சின்மயானந்தர் கூறிய பதில் "நீ கீதைக்குள் புகுந்து ஒரு புண்ணியமும் இல்லை; அது உனக்குள் புகவேண்டும். அப்பொழுது அது அதிசயங்களை நிகழ்த்தும்".

இது நான் அனுபவித்த உண்மை. கீதை எனக்குள் புகுந்தபின், என்னை ஆட்டிப்படைத்த அஹங்காரம் குறையத்தொடங்கிற்று.





"பிடியதன் உருவுமை கொளமிகு கரியது.." ஐந்து வயதில் அந்தப் பாட்டிற்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், சிந்திக்க கற்றுக்கொண்டபின் நமது கவனத்தில் வருபவைகளின் உண்மைத்தன்மையை (மெய்ப்பொருளை) புரிந்துகொள்ள ஆர்வம் காட்டவேண்டும் அல்லவா?



அப்படித்தான் எனக்கு மறைநூல்களில் உள்ள உண்மைத்தன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.



உலகப்பொதுமறையாய் இருந்த 'திருக்குறள்' என்னை ஈர்த்ததில் வியப்பில்லை. அது என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக விளங்கியது.

மதம் சார்ந்த மறைநூல்களில் என் கவனம் சென்றாலும், பகவத்கீதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.




அதற்கு சில காரணங்களும் உண்டு.
அவை - -

1. கீதையின் உருவாக்கம் பற்றி பல கூற்றுக்கள் உண்டு. அதில் ஒன்று 'உபநிடதங்களில் உள்ள தத்துவங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருந்ததால், "பிரம்மசூத்திரம்" எழுதப்பட்டது. அதுவும் கடினமாக இருந்ததால், பகவத்கீதை வியாசரால் எழுதப்பட்டது' என்பதாகும். இது உண்மையென்றால், பகவத்கீதையை சரியாகப் புரிந்துகொண்டால், உபநிடதங்களை படித்ததுபோல் ஆகிவிடும் என்ற எண்ணம் தோன்றியது.

2. திருக்குறளைப் போன்று கீதையும் பல மொழிகளில், பல நாடுகளில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தது.

3. சனாதன தர்மத்தை, குறிப்பாக 'வர்ணாஸ்ரம தர்மத்தை', ஆதரித்தும், எதிர்த்தும் பலர் பேசியது.

4. பலர் எதிர்த்த போதும், அது உலகம் முழுவதும் பலதரப்பட்ட மனிதர்களைக் கவர்ந்தது.



மதம் சம்பந்தப்பட்ட செய்திகள் எதுவாக இருந்தாலும், அவற்றை படித்துவிடுவேன். சில புரியும்; சில புரியாது. இருந்தாலும் படிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை.
 
கையில் கிடைத்த எந்த மறைநூலையும் விட்டுவைத்ததில்லை
(அது Bible-ஆக இருந்தாலும் சரியே).

சிலகாலம் சென்றபின் மதம் என்பது இறைவழிபாடு, சடங்கு, சம்பிரதாயங்கள் மற்றும் வாழ்வியல் தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை புரிந்துகொண்டேன்.




ஒருவழியாக 'திருப்பராய்த்துறை தபோவனம்' வெளியிட்ட பகவத்கீதை புத்தகம் கைக்கு கிடைத்தது. அருமையான புத்தகம். பகவான் இராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகளும் அதில் அடக்கம்.

பின்பு ஶ்ரீ இரமணாஸ்ரமம் வெளியிட்ட புத்தகமும் கிடைத்தது.

பலமுறை படித்தபின்பும் கீதை சொல்லும் மெய்ப்பொருளை புரிந்துகொள்ள இயலவில்லை.


முதன்முதலாக வேறு ஒரு உண்மையை புரிந்துகொண்டேன்.
குறை புத்தகத்தில் இல்லை; என்னிடத்தில்தான் இருந்தது.

"நம்முடைய புரிந்துகொள்ளும் தன்மை என்பது, நமது புரிந்துகொள்ளும் திறமையை பொறுத்தது".

(The level of understanding depends upon the level of understanding).




காரணத்தை உள்ளுக்குள் தேடியபோது, மூன்று முக்கிய சந்தேகங்கள் வெளிப்பட்டன. அவை ..

1. கீதையில் சில இடங்களில் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக தோன்றியது.

2. சில இடங்களில் இடைச்செருகல்கள் இருப்பதுபோல் தெரிந்தது.

3. இரண்டாவது அத்தியாயத்தில் வரும் " கோபம் வந்தால் ஞாபகமறதி வரும்; ஞாபகமறதி வந்தால் புத்திநாசமாகும்" என்பது போன்ற சொற்றொடரை என்னால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை.

 

முதலாவதாக வரும் சந்தேகத்தை பொறுத்தவரை, அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் இதுபோன்ற முரண்பாடுகள் திருக்குறளிலும் உண்டு.

இரண்டாவது வரும் சந்தேகமும் தேவையில்லாதது என நினைத்துக்கொண்டேன்.

ஆனால், மூன்றாவது சந்தேகம் என்னை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. 'நமக்கு கோபம் நிறையவே உண்டு; ஆனால், ஞாபகமறதி மற்றும் புத்திநாசம் போன்றவை இல்லையே! கிருஷ்ணன் ஏன் இப்படி சொல்கிறார்' என நினைத்துக்கொள்வேன்.


இதன் உண்மையான பொருள் புரியாததால், என் முயற்சிகள் அனைத்தும் வீணாய் போனது.

ஆனாலும் எனக்குள் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை. நம்மிடம் உள்ள மெய்ப்பொருளை அறியும் துடிப்பு "அவனுக்கு" தெரியும். எனவே நமது பயணத்தை தொடர ஏதாவது ஒரு வகையில் வழியை காட்டுவான் என்பதில் உறுதியாக இருந்தேன்.   




ஒரு நாள் நண்பர் ஒருவரை சந்தித்தபோது ஒரு புத்தகத்தை கொடுத்து 'இதை படியுங்கள்; உங்களுக்கு மிகவும் பிடிக்கும்' என்றார். அந்த புத்தகத்தின் பெயர் "Kindle Life". புத்தகத்தை எழுதியவர் "சுவாமி சின்மயானந்தர்".

அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து இந்திய வேதங்களின்
மேன்மையை பரப்பிவருபவர் என்பது மட்டுமே அவரைப்பற்றி நான் அறிந்தது.



வீட்டிற்கு வந்ததும் அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ஏதோ குழந்தைகளுக்கு நல்லொழுக்கப்பாடம் எடுப்பதைப்போல் தோன்றியது.

ஒருசில பக்கங்கள் படித்தபின், ஓரிடத்தில் ''The path of the Pleasant" (Preya), "The path of the Good" (Sreya) என இரண்டு பாதைகளை ... அதாவது வழிகளைக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டு வழிகளையும் கீதையில் சொல்லியிருப்பதை அறிந்திருந்தேன்.

அப்பொழுதுதான் புரிந்தது, நமது தரத்திற்கு இறங்கி வந்து, நமக்கு புரியும் வகையில் கீதை பற்றிய பாடத்தை எடுக்கிறார் என்று.

அந்த புத்தகத்தை பலமுறை படித்தபின், கீதையை எப்படி படிக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்.




பகவத்கீதையை எப்படி படிக்கவேண்டும் என்று புரிந்தபின், கீதையை விரைந்து படித்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அது வேறு ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.

பொதுவாக ஒரு பண்டிதர் தத்துவம் நிறைந்த புத்தகத்தை படித்தால், ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார். ஒரே தத்துவத்தை யார் யார் எப்படி பார்க்கிறார்கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுவார்.

நான் பண்டிதன் அல்ல; பண்டிதனாக இருந்தாலும் நான் அதை செய்ய மாட்டேன். என்னுடைய சிந்தனையெல்லாம், அந்த தத்துவங்கள் எந்த நோக்கத்தில் சொல்லப்படுகின்றன என்று அறிவது மட்டும்தான்.

கீதை சொல்லும் மெய்ப்பொருளை உணரும்பொழுது, அது ஒரு மனோதத்துவ நூலாகவே காட்சியளித்தது. இருந்தாலும்
நான் சந்தித்த அனுபவங்கள் நினைவிற்கு வந்து அவற்றுடன் போராட ஆரம்பித்துவிடுவேன். 





கீதை ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் பற்றி கூறுகிறது; இருந்தாலும், அவற்றின் ஊடே மனிதனிடம் இருக்கும் மற்றும் இருக்கவேண்டிய பண்புகள் பற்றி விரிவாக விளக்குகிறது..

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இல்லாதிருப்பதற்கு காரணம், அவர்களின் குணம் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்கும் கர்மமும்தான் காரணம் என்கிறார் கிருஷ்ணன்.




கர்மம் என்று சொல்வதற்கு 'செயல்' என்றே பெரும்பாலோர் அர்த்தம் கற்பிக்கிறார்கள். எனக்கு இதில்தான் பெரிய சந்தேகம் வந்துவிட்டது.

குணம் என்று சொல்லும் பொழுது, அதில் எவ்வித குழப்பமும் இல்லை.
குணம் என்ற வார்த்தை 'குணணீ' என்பதில் இருந்து வந்தது. அது சுபாவத்தைக் குறிப்பது என்றும் ஒரு பொருள் உண்டு.



ஆனால், கர்மம் என்று சொல்லும் பொழுது, அதற்கு செயல் என்று சொல்வது சரிதானா என்ற சந்தேகம் வந்தது.

ஒரே மாதிரியான செயலை இரண்டு நபர்கள் செய்தாலும், அவர்கள் நோக்கம் வேறு வேறாக இருக்கலாம் அல்லவா?


ஒரு ஆசிரியர் மாலை நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்; ஆனால், பணம் வாங்குவதில்லை. மற்றொருவர் பாடமும் எடுக்கிறார்; பணமும் வாங்குகிறார். இங்கு செயல் ஒன்றுதான். நோக்கம் வேறாக இருக்கிறது.

இன்னொன்றையும் கவனிக்கவேண்டி உள்ளது. ஒருவன் சொந்தமாக ஒரு வீடு கட்ட நினைக்கிறான். வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பாக, பலமுறை மனதிற்குள் இந்த இந்த மாதிரியாக கட்டவேண்டும் என நினைத்துப் பார்க்கிறான். வெளியே தெரிவதற்குமுன் செயல் பலமுறை மனதிற்குள் நடந்துவிடுகிறது.

சிலநேரங்களில் மனதில் என்னென்ன செய்யவேண்டும் என்று தோன்றினாலும், அதை செயல்படுத்த முடிவதில்லை.

எனவே, 'கர்மம்' என்பதற்கு செயல் என்று பொருள் கொள்வதைவிட, மனோபாவம் என்று பொருள் கொள்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியது.




நான் தீவிரமாக பகவத்கீதையைப் படிக்க ஆரம்பித்தேன்.  நிறைய எதிர்ப்புகள் வந்தன.

ஒரு நண்பர் 'சைவ சமயத்தை சேர்ந்த நீங்கள் எப்படி கீதையை படிக்கலாம்' என்றார்.

இன்னொரு நண்பர் (கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தவர்) 'கீதை அபின், கஞ்சா போன்றது. உங்களை மயக்கமடைய செய்துவிடும்' என்றார்.
(பின்னாளில் அவரே மயங்கிவிட்டார்)

சிலர் கீதை புத்தகம் வீட்டில் இருந்தால், குடும்பத்தில் கலகம் வரும் என்றனர்.

ஆனாலும் என் முயற்சியை நான் கைவிடவில்லை.



ஆன்மீக தத்துவங்கள் "அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறியவேண்டிய உண்மைகள்".




கீதையில் உள்ள வாழ்வியல் தத்துவங்கள் புரியும் வேளைகளில், கடந்தகால அனுபவங்கள் நெஞ்சில் அலைமோதும். 

அந்த சமயங்களில் என்னை அறியாமலேயே 'சுயபரிசோதனையில்' ஆழ்ந்து விடுவேன். மனம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை எண்ணி வேதனைப்படும். அதை பின்னர் கூறுகிறேன்.




பகவத்கீதையின் மூலம் நான் கற்ற அறிவு சிறிதளவே! அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது.

குழந்தைகள் தாம் கற்றதை பெரியவர்களிடம் சொல்ல விரும்புவது இயற்கை. எனக்கும் அதுபோல ஒரு விருப்பம் தோன்றியது.

மனிதன் எதை நினைக்கிறானோ அதாகவே மாறுகிறான் என்று சொல்வார்கள். ஆனால், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரி நினைக்கிறார்கள். சில நன்மையிலும், சில தீமையிலும் முடிகிறது.

அத்தனையையும் உள்ளடக்கி "Man .. in a nutshell" என்ற தலைப்பில் சில வாக்கியங்கள் எழுதினேன். அவை - -

Man is what he thinks.

He thinks according to the impressions recorded ‘within’.

The impressions are recorded while contacting the objects in the world outside.

So, the objects in the world outside and the way in which they are being contacted make or mar the man.

Think?

மனிதனின் உள்ளே நடைபெறும் இயக்கங்களைப் பற்றி நண்பர்கள் உதவியுடன் ஒரு வரைபடமும் (flowchart) தயார் செய்தேன்.

பின்னர் இரண்டையும் இணைத்து அச்சடித்து நண்பர்களிடம் விநியோகம் செய்தேன். அதனை அலுவலகப் பத்திரிகையிலும் வெளியிட்டேன்.

அதன்பின் எனது பயணம் புதிய தடத்தில் இயங்கவேண்டியதாயிற்று.





எனது துண்டு பிரசுரத்தை பார்த்த சில நண்பர்கள், புத்தகமாக எழுதுங்களேன் என்றார்கள். ஆனால், நான் மறுத்து விட்டேன். அதற்கான காரணங்கள் - -

1. எனக்குத் தெரிந்த ஆன்மீக தத்துவங்கள் மிகவும் குறைவு.

2. எனக்கு மொழி இலக்கணம் எதுவும் தெரியாது.

3. சமஸ்கிருத அறிவு கிடையாது; நான் அறிந்த தத்துவங்கள் எல்லாம் சுவாமி சின்மயானந்தர் எழுதிய உரைகள் மூலமாகவே.

4. ஆன்மீகம் சொல்லும் தத்துவங்களை நான் சரியாகப் புரிந்துகொண்டேனா என்பதும் தெரியாது.




இதற்கிடையில் எனது நண்பர் எனது பிரசுரத்தை அவரது பேராசிரியர் ஒருவரிடம் காட்டியிருக்கிறார். அதை வாங்கி பார்த்தவர் flowchart-ஐ ஊன்றி கவனித்துவிட்டு, எனது நண்பரிடம் 'இந்த அளவிற்கு flowchart தயாரித்திருக்கிறார் என்றால், அவர் நன்கு ஆழமாக சிந்தித்திருக்க வேண்டும். அவற்றை வெளிக்கொண்டுவரவேண்டும்; அவரோடு அது போகக்கூடாது. எனவே, அவரை ஒரு புத்தகம் எழுதச் சொல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்.
(வேடிக்கை என்னவென்றால் இருவரும் கிறிஸ்தவர்கள்)

அதன்பின் நண்பர் என்னை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். வேறுவழியின்றி நானும் எழுத ஆரம்பித்தேன்.





எனது வாழ்க்கை பயணத்தில் பல குருமார்கள் உதவியிருக்கிறார்கள். அவர்களில் 'பத்திரகிரியாரும்' ஒருவர். எனவே அவரது பாடல்களை அடியொற்றி நான் எழுதிய கடவுள் வாழ்த்து - -

"ஆங்கார இருளகற்றி
ஆணவத்தின் பிறப்பகற்றி
ஓங்கார நாதங்கள்
உரைத்திருப்ப தெக்காலம்?".





மாணவப் பருவத்திலேயே 'திருக்குறள்' எனக்குள் புகுந்துகொண்டது.

பகவத்கீதை என்னுள் புக
40 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

இரண்டு நூல்களும் வாழ்வியல் தத்துவங்களை போதிப்பவைதான்.
ஆனால், இரண்டிற்குமிடையே ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.



திருவள்ளுவர் ஒரு நல்ல ஆசானாக நமது இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அத்துடன் ஒதுங்கி விடுகிறார்.

கிருஷ்ணன் அப்படியல்ல; பாரதியார் கூறுவதைப் போல் 'நண்பனாய், மந்திரியாய், நல் ஆசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்' என எல்லா நிலையிலும் நம்மை வழிநடத்துகிறார்.




"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்..." என்ற குறளுக்கிணங்க, கீதையில் உள்ள சுலோகங்களுக்கு பொருளை உணரும்பொழுதெல்லாம் முகத்தில் அறைவது போன்றிருக்கும்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்கள் - - "Knowledge is to know one's own ignorance".


'நான் நல்லதுதானே செய்கிறேன்; உலகம் ஏன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். ஆனால், உலகத்தைப் புரிந்துகொள்ளத் தெரியாத முட்டாளாக இருந்திருக்கிறேன்'
என்று கீதை எனக்கு உணர்த்தியது.

இந்த வரிகளைப் பார்த்ததும்  என் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்று கேட்டேன். 'முதல் தடவையாக உங்களை முட்டாள் என்று ஒத்துக்கொண்டீர்களே, அதற்காகத்தான்' என்றாள்.




கர்மம், கர்ம மார்க்கம், கர்ம யோகம் ஆகியவற்றைப் பற்றி சரியான புரிதல் வேண்டும்.

கர்மம் என்பது செயலைக் குறிக்கும்.

செயல் பொது நலனுக்காக இருந்தால், அது கர்ம மார்க்கம் எனப்படும்.

அதுவே, பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் செய்வதாக இருந்தால், கர்ம யோகமாக மாறிவிடும்.

கர்ம யோக செயல் புரிபவன் ஆத்மாவில் திருப்தி அடைகிறான் என்று கண்ணன் கூறுகிறார்.
(அத்தியாயம் 3 ஸ்லோகம் 17).

அத்துடன் அந்த செயல் நம்மை நமக்கு தெரியாமலே ஞான மார்க்கத்தில் புகுத்திவிடும். 





உங்கள் செயல் பிரதிபலனை எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், இடைஞ்சல்கள் வரும்பொழுது அதை தவிர்ப்பது எப்படி, அதை முறியடிப்பது எப்படி, நாம் எதிர்பார்த்த பலனை பெறவேண்டுமானால் எந்தவகையான சூழ்ச்சியில் ஈடுபடவேண்டும் போன்ற சிந்தனைகள்தான் வரும்.




பிரதிபலனை எதிர்பார்க்காமல் செயல் புரியும் பொழுது, நாம்
 சந்திக்கும் இடைஞ்சல்கள் நம்மை 'அகத்தாய்வு' செய்ய வைத்துவிடும்.


Action, withdrawal and contemplation ஆகிய மூன்று நியதிகளும், அதாவது செயல், மனதை உள்முகமாக திருப்புதல் (பிரத்யாஹாரம்) மற்றும் அகத்தாய்வு (சவிசாரம்) ஆகிய மூன்றும் மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும்.

'சவிசாரம்' என்பது தனக்குள்ளேயே சுயபரிசோதனை செய்து விடையைத் தேடும் செயலாகும். 

சவிசாரத்தில் மனதில் உள்ள கொந்தளிப்புகள் அடங்கி, மனம் அமைதியாக ஆரம்பிக்கும். அதன் எதிரொலியாக அஹங்காரம்   (தன்முனைப்பு) குறைந்து விடும்.

உண்மையான ஆனந்தம் என்றால் என்ன என்று புரிந்து கொள்வோம்.

(இது கீதையின் மூலம் நான் அனுபவித்து உணர்ந்துகொண்ட உண்மை. இது சரிதானா, இல்லையா என்பதை நீங்களும் அனுபவித்து பார்த்துதான் முடிவு செய்யவேண்டும்).




'தர்மம்' என்றால் பிறருக்கு உதவி செய்வது என்று நினைக்கிறோம். அது தவறில்லைதான்.

ஆனால், தர்மம் என்பதற்கு 'ஒரு பொருள் அதற்கே உரிய இயல்போடு செயல்படுவது' என அர்த்தம் கொள்ள வேண்டும். உதாரணம்  --
(தண்ணீர் - குளிர்ச்சி; நெருப்பு - சூடு).

அதேபோல் ஒவ்வொரு மனிதனிடமும் அவனுக்கே உரிய இயல்பு (சுபாவம்) இருக்கும். அதனை 'சுயதர்மம்' என்று கீதை சொல்கிறது.

(ஒரு மனிதன் பிறருக்குரிய தர்மத்தை (பரதர்மம்) கடைப்பிடித்தால், அவனது வாழ்வில் நிம்மதி இருப்பதில்லை; அல்லது அவன் மற்றவர் நிம்மதியை கெடுத்துவிடுவான்)




எனக்கு 'கர்ம மார்க்கத்தில்' அதிகமான ஆர்வம் உண்டு. ஆனால், பொதுநலத்தில் முழு அளவில் ஈடுபட எனது உடல்நிலை ஒத்துழைக்க வில்லை. 'அல்சர்' மற்றும் 'ஆஸ்துமா' இரண்டும் என்னை பாடாய் படுத்தின. இது போதாதென்று என்னிடம் 'அஹங்காரமும்' அதிகமாக இருந்தது. ஆனாலும் சிறிய அளவில் நான் பொதுப்பணிகளில் கவனம் செலுத்தி
வந்தேன்.

நாம் உடல், மனம் என்று சொல்கிறோம். அதனை பருவுடல் மற்றும் நுண்ணுடல் என்றும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் கீதை சொல்கிறது.


எனக்கு நேர்ந்த அனுபவங்களின் காரணமாக, நான் கர்ம மார்க்கத்திலிருந்து விலகி ஞான மார்க்கத்தில் அடியெடுத்து வைத்தபின் (அதுதான் என்னுடைய சுயதர்மமாக இருந்ததோ), என்னிடமிருந்த 'அஹங்காரம்' குறைய ஆரம்பித்தது. காரணம் மனம் ஒரு உண்மையை புரிந்துகொண்டது.

அது - -
"நான்" என்று
நான் நினைத்தது

"நான்" இல்லையென்று
நான் அறிந்தது

"நான்" என்ற
அகந்தை அழிந்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், மனம் அமைதியாகத் தொடங்கியதும் என்னிடமிருந்த 'அல்சர்', 'ஆஸ்துமா' இரண்டும் காணாமல் போய்விட்டன.

ஆக, வாழ்க்கையில் அமைதி நிலவவேண்டும் என்றால், நாம் நமது "சுயதர்மத்தை" கண்டுபிடித்து அதன்படி நடக்கவேண்டும்.
.. அத்தியாயம் 3 ஸ்லோகம் 35 .


(சொந்த அனுபவங்கள் காரணமாகவோ, மற்றவர்கள் சுட்டிக்காட்டியதனாலோ,  
ஒருவனுக்கு தன் தவறு தெரியவரும்பொழுது 
தனது சுபாவத்தை மேம்படுத்த முயற்சி செய்வான்.

முயற்சியைப் பொறுத்து அவனது குணம், மனோபாவம் எல்லாம் மேன்மை அடையும். அவனது வாழ்க்கை முன்னிலும் சிறந்த வாழ்க்கையாக மாறிவிடும்.

வால்மீகியின் கதை இதற்கு ஒரு நல்ல உதாரணம்)





'சுயதர்மம்' என்று சொன்னவுடன் பலரால் அந்த தத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சுயதர்மம், வர்ணம் என்றெல்லாம் சொன்னால் பலருக்கு கோபம் வருகிறது. அது அவர்கள் தவறல்ல; தத்துவங்களின் உண்மை நிலையை மறைத்து, யார் யாரோ  தவறான பொருளை திரித்துக்கூறி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.




சுயதர்மம், வர்ணப்பிரிவு போன்றவைகளை மாற்றமுடியும் என்பதை உணர்ந்துகொள்ள நடந்த சம்பவம் ஒன்றை தெரியப்படுத்துகிறேன். 


சொற்பொழிவு நடத்தும் காலங்களில், சுவாமி சின்மயானந்தர் தங்கியிருக்கும் இடத்தில் 'சத்சங்கமும்' நடைபெறும்.

அப்படி நடைபெற்ற ஒரு சத்சங்கத்தில், ஒருவர் சுவாமியிடம் தான் நிறைய பாவங்கள் செய்துவிட்டேன் என்று சொல்லி வருத்தப்பட்டார்.

அதற்கு சுவாமி கூறியது - -
"நீயா? பாவம் செய்தாயா? யாராலும் பாவம் செய்ய முடியாதே!"

கேட்ட எல்லோருக்கும் அவர் சொன்னது விளங்கவில்லை. அவர் தொடர்ந்தார் - - "Sin is not an action; it is a reaction. பாவம் என்பது செயலல்ல. நாம் ஏதோ செய்கிறோம். அதன் எதிர்வினையாக நாம் நினைப்பதுதான் பாவம். 

நீ ஒரு கொலை செய்தால் அது பாவம் என்று நினைக்கலாம்; ஆனால், போர்க்களத்தில் ஒருவன் பத்து பேரை கொல்கிறான். அவன் தான் பாவம் செய்ததாக நினைப்பதில்லை. மாறாக தனக்கு அரசிடமிருந்து ஏதாவது பரிசு கிடைக்குமா என்று நினைக்கிறான்."

கூடியிருந்தவர்களுக்கு கொஞ்சம் புரிந்தது. பாவம் செய்ததாக சொன்னவர் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். 

அதற்கு சுவாமி "இதுவரை என்னென்ன செய்தாயோ, அதையே தொடர்ந்து செய்" என்றார்.

எல்லோரும் சிரித்துவிட, கேட்டவருக்கு அந்த பதில் கஷ்டமாக இருந்தது.



சுவாமி, கவலைப்படாதே விளக்குகிறேன் என்று சொல்லி தொடர்ந்தார் - -

"நீ ஊருக்கு காரில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறாய். சிறிது தூரம் சென்றபின்தான் தெரிகிறது, நீ தவறான வழியில் செல்கிறாய் என்று. உடனே காரை நிறுத்தினால் என்ன நடக்கும்? கார் கவிழ்ந்து உனக்கும் காயம் ஏற்படும்.

மாறாக நீ செய்யவேண்டியது:-
1. காரின் வேகத்தை குறைக்க வேண்டும்.
2. அடுத்த திருப்பம் எங்கு வருகிறது என்று பார்த்து காரை திருப்ப வேண்டும்.
3. உன் நினைவு புதிய பாதையை பற்றியதாக இருக்க வேண்டும். 
4. இருந்தாலும், திரும்பும் இடம் வரும்வரை, நீ தவறான பாதையில் தான் செல்லவேண்டியிருக்கும்.

உரிய முயற்சியும், பயிற்சியும் செய்து, உனது சுபாவத்தை மேம்படுத்தும்வரை, பழைய தவறுகள் தொடரும். அதை எண்ணி கலங்காதே".

இப்போது அவர் சொல்வதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்தது.

முத்தாய்ப்பாக அவர் ஒன்று சொன்னார் - -
"You think that you are the sinner and I am the saint; but remember, every saint had a past, every sinner .. a future".
(நீ நினைக்கலாம் .. நீ ஒரு பாவியென்றும்; நான் ஒரு புனிதன் என்றும். ஆனால், ஞாபகத்தில் வைத்துக்கொள் .. ஒவ்வொரு புனிதனுக்கும் கடந்த காலம் என்று ஒன்று உண்டு; ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் என்று ஒன்று உண்டு).

அவர் மறைமுகமாக உணர்த்திய உண்மை... 'கடந்த காலத்தில் நீ பாவியாக இருந்திருக்கலாம்; ஆனாலும் எதிர்காலத்தில் நீயும்  
ஒரு புனிதனாக மாறலாம்' என்பதுதான்.




கீதையில் அத்தியாயம்1, 7, 9, 10, 11  
ஆகியவற்றைத் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் மனிதர்களிடம் இருக்கும் குணம், மனோபாவம், செயல்பாடுகள், பழக்க வழக்கங்களை பற்றியே பேசுகிறார்.

இவற்றின் அடிப்படையிலேயே 'வர்ணாஸ்ரம தர்மத்தை' பற்றி குறிப்பிடுகிறார்.

வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம் என்ற இரண்டையும் இணைத்து 'வர்ணாஸ்ரம தர்மம்' என்கிறார்.




வர்ணாஸ்ரம தர்மம் என்ற வார்த்தைகளை பார்த்ததும், என் நினைவில் நான் சந்தித்த அவலங்கள் அனைத்தும் முன்னே வந்து நின்றன.

அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, வர்ணாஸ்ரம தர்மத்தின் கோட்பாடுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்.



அலுவலகத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பைபிளில் வரும் ஒரு வாசகத்தை குறிப்பிட்டிருந்தேன். அது - "please take away the cup from me, if you be willing"
(என்னிலிருந்து இந்தப் பாத்திரத்தை எடுத்து விடுங்கள்...)

பாத்திரம் என்பதற்கு 'உடல்' என்று அர்த்தம் கற்பித்து என் கட்டுரையை எழுதியிருந்தேன்.

இதைப்பற்றி கிறிஸ்துவர்கள் என்ன நினைப்பார்கள் என எண்ணி ஒரு கிறிஸ்துவ பெரியவரிடம் காண்பித்தேன். அவர் என்னை கடிந்துகொண்டார். "நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு எழுதக்கூடாது; நாங்கள் இதை 'துன்பக்கலம்' என்போம்" என்றார்.

அவர் என் கருத்தை ஏற்காததால், அதை அவர் முன்னிலையிலேயே என் கட்டுரையில் இருந்து நீக்கிவிட்டேன்.




மற்ற மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

இந்து மதம், அது சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதில்லை.

அத்தியாயம் 18 ஸ்லோகம் 63-ல் கிருஷ்ணன் கூறுகிறார் - -
"ஞானத்தைப் பற்றி நான் எல்லாம் சொல்லிவிட்டேன். அதைப்பற்றி நன்றாக ஆராய்ந்து உன் விருப்பம்போல் செயல்படு".

அதனால்தான் நானும் என் இஷ்டத்திற்கு சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்.




அத்தியாயம் 3 ஸ்லோகம் 3-ல் "இந்த பூவுலகில் இரண்டு பாதைகள் உள்ளன; ஒன்று ஞான யோகத்திற்கானது; மற்றொன்று கர்ம யோகத்திற்கானது" என கிருஷ்ணன் கூறுகிறார்.

இதற்கு பலர் பலவித விளக்கங்கள் கொடுத்துள்ளனர். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் 'introvert', 'extrovert' என்ற இரண்டு வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
அத்துடன் அவர்களின் செயல்பாட்டில் விகிதாசார அளவில் நிறைய வேறுபாடு இருக்கும் என்றும் சொல்கிறார்.

ஆக, சிலர் அகவழி நாட்டம் உடையவர்களாகவும் (introvert), சிலர் புறவழி நாட்டம் உடையவர்களாகவும் (extrovert) இருப்பார்கள் என்கிறார்.

மெஞ்ஞானிகள் அகவழி நாட்டம் கொண்டவர்கள். விஞ்ஞானிகளின் செயல்பாடு புறவழியில் சென்றாலும், அவர்களும் அகவழியில் திரிபவர்கள்தான்.

இவர்களது எண்ணம் அனைத்தும் தாங்கள் தேடும் உண்மையினை கண்டுகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.

இவர்களுக்கு பணத்திலோ, புகழிலோ ஆர்வம் இருக்காது.



புறவழி செல்பவர்களில் சிலர் 
பொது நலனுக்காக பாடுபடுவர். 



சிலர் பணம் சேர்ப்பதில் மட்டுமே  கவனம் செலுத்துவர்.




ஞானத்தை தேடுபவர்கள், பொது நலனுக்காக பாடுபடுவர், பணத்தை தேடுபவர்கள் ஆகிய மூவரிடமும் பொதுவாக இருப்பது 'தன்முனைப்பு' மட்டுமே.

தன்முனைப்பு இல்லாத மனிதனிடம்
இந்த தேடுதல் வேட்கை இருக்காது.




நான்கு வர்ணங்கள என்பது மனோதத்துவ அடிப்படையில் சொல்லப்பட்ட ஓர் ஒப்பற்ற அற்புதம். அதை சரியாக புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் தவறாகப் புரிந்துகொள்வது எவ்வளவு பெரிய சமுதாயக்கேடு என்ற ஆதங்கம்தான் என் மனதில் இருந்தது. எனவே, அதன் உண்மைத் தன்மையை எடுத்துச்சொல்வதே என் விருப்பமாக இருந்தது. இதுவே நான் புத்தகம் எழுதக் காரணமாகவும் அமைந்தது.



பின்னர் எனக்கு தெரிந்த ஒருவரிடம் (நன்கு வாசிக்கும் பழக்கம் உள்ளவர்) 
நான் எழுதிய கையெழுத்து பிரதியைக் கொடுத்து, இதை புத்தகமாக வெளியிடலாமா? உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்றேன்.

என் கையெழுத்து பிரதியை பெற்றுக்கொண்டவர், இருதினங்கள் கழித்து என்னை அழைத்தார்.

"இந்துமத தத்துவத்தை இந்த அளவுக்கு யாரும் எளிமையாய் சொன்னதில்லை; கண்டிப்பாக வெளியிடுங்கள்" என்று சொன்னார்.





இந்தப் பதிவு பலருக்கு கோபத்தை வரவழைக்கும் என்பதை தெரிந்தே எழுதுகிறேன். இது என் மனதில் உள்ள வேதனையின் வெளிப்பாடு.

என் கருத்துக்களை கூறும் முன், நான் சந்தித்த இரண்டு அனுபவங்களை சொல்லுகிறேன். (இது ஒரு sample மட்டும்தான்).

1. ஒருமுறை என் மனைவியின் ஊரிலிருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் செல்லலாம் என்று கேட்டுக்கொண்டேன்.

பால்கனியில் படுக்கச்சென்றவரை தடுத்து, இது குளிர்காலம், பனி அதிகமாக இருக்கும், உள்ளே வந்து படுங்கள் என்று வற்புறுத்தி பாய், தலையணை இரண்டும் கொடுத்து கட்டாயப்படுத்தி அதில் படுக்கவும் வைத்தேன


காலையில் மனைவி என்னை எழுப்பி "இங்கே வந்து பாருங்கள்" என்றாள்;  பார்த்தால், பாய், தலையணை  இரண்டையும் சுருட்டி சுவர் ஓரத்தில் வைத்துவிட்டு வெறும் தரையில் படுத்திருக்கிறார்.


2. ஒரு மாணவனிடம் பேசும்போது, அவன் இன்னொரு மாணவனை 'அவங்க' என்றான்.

"என்னப்பா, நீயும் மாணவன்; உன்னைப்போல் அவனும் ஒரு மாணவன். அப்படியிருக்க அவனை ஏன் 'அவங்க' என்று சொல்லுகிறாய்" என்று கேட்டேன். அதற்கு அவன் "அவங்க ஆபீசர் வீட்டு பையன், சார்" என்றான்.




இப்போது எனது கேள்விகள் - -

1. தான் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவன். வீட்டினுள் படுப்பதே தப்பு; அதிலும் அவர்கள் வீட்டு பாய், தலையணையை உபயோகிப்பது மிகப்பெரிய பாவம் என்பது போன்ற உணர்வுகளை அவருக்கு ஏற்படுத்தியது யார்? 

2. குறிப்பிட்ட மாணவனின் தந்தை கடைநிலை ஊழியர். அவர் தனது அதிகாரியை உயர்ந்த நிலையில் வைத்து பார்ப்பது சரியாக இருக்கலாம்.

ஆனால், அவரது மகனும் அதே மனநிலையில் சக மாணவனை பார்க்க வேண்டுமா? அந்த மனநிலை அவனுக்கு ஏன் வந்தது?

3. மத நல்லிணக்கம் என்று சொல்கிறோமே, மனித நல்லிணக்கம் வர என்ன செய்யப்போகிறோம்?

4. வர்ணப்பிரிவு ஒரு மனிதனின் குணத்தையும், மனோபாவத்தையும் வைத்து அடையாளம் கண்டுகொள்வது. இதில் சாதி எங்கிருந்து வந்தது?

5. யாரோ செய்த சதி என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக எந்த மதத் தலைவர்களாவது வருந்துகிறார்களா?

6. இதனை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

7. உடனே, நமக்கு "இராமானுஜர்" போன்றவர்கள் ஞாபகத்திற்கு வரலாம். ஆனால், அவர்களை பின்பற்றுவதாக சொல்பவர்கள், அவர்கள் சொன்னதை தொடர்ந்து பின்பற்றுகிறார்களா?

8. மந்த புத்தி மற்றும் மிகுந்த சோம்பல் உள்ளவர்களை நான்காவது வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்ன கிருஷ்ணன், அவர்கள் தாழ்ந்த சாதி, தீண்டத்தகாதவர்கள் என்று சொன்னாரா? பின், எதற்காக அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள்?

9. நமக்கு சிலரை பிடிக்கவில்லை என்றால், வீட்டிற்குள் வரவேற்க வேண்டாம். ஆனால், என் தெருவுக்குள்ளே வராதே என்பதும், பாதைகளை மறித்து சுவர் எழுப்புவதும் எந்த வகையில் நியாயம்?

10. அத்தியாயம் 18 ஸ்லோகம் 42-ல், ஒரு பிராமணனுக்கு என்னென்ன கடமைகள் உண்டு என கிருஷ்ணன் கூறுகிறார். அவை ...
"மன அடக்கம்,
புலனடக்கம், 
சுயதர்மத்தை கடைப்பிடித்தல், துன்பங்களை பொறுத்துக்           கொள்ளுதல், 
நேர்மை, 
வேதம் - சாஸ்திரம் முதலியவற்றில்   சிரத்தை, 
வேத சாஸ்திரங்களை கற்றல்   மற்றும்  கற்பித்தல்".

குறிப்பிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள் சாதி ரீதியாகவும் தங்களை 'பிராமணர்கள்' என்று சொல்கிறார்களே! 

A) அவர்கள் மேலே சொன்ன தர்மத்தை கடைப்பிடிக்கிறார்களா?

B) இந்துமத கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்வதில், அவர்களின் பங்கு மிகப்பெரியது. அதை நான் மறுக்கவில்லை. 

ஆனால், சடங்கு, சம்பிரதாயங்களை ஒழுங்காக கடைப்பிடித்தாலும், மேலே சொன்ன தர்மங்களை முழுமையாக கடைப்பிடிக்க முடியாதபோது, 'பிராமணன்' என்ற வர்ணப்பிரிவு தங்களின் பிறப்புரிமை என்ற தோற்றத்தை தரலாமா?

C) பிறப்புரிமை எனக் கூறினால், மேலே சொன்ன தர்மங்களை வேறு வர்ணத்தை சேர்ந்தவன் கடைப்பிடித்தால், அவனை பிராமணன் என்று ஏற்றுக்கொள்ள முடியாதே?

11. மாற்று மதத்தினரை குற்றம் சாட்டுவதற்கு முன், நம்மிடம் உள்ள குறைகளை போக்கிக்கொள்ள வேண்டாமா?

12. 'சர்வே பவந்து சுகினஹ,
சர்வே சந்து நிராமயா,
சர்வே பத்ரானி பஷ்யந்து,
மா கஷ்சித் துகபாக் பவேத்‘ !! 

(அனைவரும் இன்புற்று வாழட்டும்; நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருக்கட்டும்; 
அனைவரும் நன்மைகளையும் மங்கலமானவற்றையும் மட்டுமே காணட்டும்; 
யாருக்கும் எக்காலத்திலும் எந்தத் துக்கமும்/துன்பமும் வரக்கூடாது)

ஹிந்து மதத்தின் வேண்டுதல் எல்லாம் பிரபஞ்ச நன்மையைத் தவிர வேறு என்ன இருக்கிறது? 

இதுபோன்று மனித நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஸ்லோகங்கள் பல இந்து சமயங்களில், பல மொழிகளில் கூறப்பட்டுள்ளன. 

பிரபஞ்ச நன்மையை விரும்பும் நாம், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தீண்டத்தகாதவர்களாக கருதி, இன்னமும் தீண்டாமையை கடைப்பிடிக்கிறோமே? இதை எப்போது நிறுத்தப் போகிறோம்? 

13. எங்கள் குடியிருப்பு பகுதியில் புதியதாக ஒரு கோயில் கட்டினார்கள். எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம்; வழிபட இன்னுமொரு கடவுள் வந்துவிட்டாரே! அதனால்தான்.

ஆனாலும், கோயில் நிர்வாகிக்கு ஒரு வருத்தம் இருந்தது. "எங்கள் கோயிலுக்கு எல்லோரும் வந்து தரிசனம் செய்துவிட்டார்கள். நீ ஒருவன்தான் வரவில்லை" என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை.

(பொதுவாக நான் கோயிலுக்கு செல்வதில்லை; ஏனெனில் நான் 'பூசலார் நாயனார்' வழியைப் பின்பற்றுபவன்)

ஆனாலும், என் மனதில் ஒரு பாடல் வரி தோன்றியது - -

"கடவுளை மறப்பது 
பாவமே என்றால்

மனிதனை மறந்து
கடவுளை நினைப்பது
பாவத்தின் பாவம் அன்றோ?").


இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை;
யாராவது பூனைக்கு மணி கட்டுவார்களா!?



        


      
       நிலையென ஒன்று


நிலையில யெனினும்
     நிலையென எண்ணி
நிலை தடுமாறி
     நிலைகொளா மனமே


நிலையென ஒன்று
     நினதுளே உண்டு
நினைவகப் படுத்தி
     நிலைகொள் தினமே



                 முன்னுரை


பக்குவப்படாத மனம், பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும்பொழுது புத்தி தடுமாறுகிறது. வேதனை, விரக்தி, கோபம் என எல்லா உணர்ச்சிகளும் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன.

அப்படி ஒரு சோதனை அவனுக்கும் இருந்தது. வியாதிக்கு மருந்தென எண்ணி, கீதையைப் பலமுறை படித்தும் பலனில்லை.

மனத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள். விடைக்காக ஏங்கித் தவித்தபோது, சுவாமி சின்மயானந்தரின் "Kindle Life" புத்தகம் ஒளியைக் காட்டியது. கீதையை எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது.

கீதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்கள் ஓரளவுப் புரிந்தபின், புரிந்ததைப் பிறருடன் பகிர வேண்டும் என்ற குழந்தைக்கே உரிய ஆர்வம் தோன்றியது. மழலையின் மகிழ்ச்சியோடு இந்த நூல் எழுதப்பட்டது. அதனால் இது ஒரு "மழலையின் கீதை".


சுவாமி சின்மயானந்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு உருவானதுதான் இந்த நூல். இது உங்களுக்குப் பிடித்திருந்தால், அதற்குரிய பெருமை அனைத்தும் சுவாமி சின்மயானந்தர் அவர்களேயே சேரும்.

ஒருவேளை வேறுவகையான எண்ணம் தோன்றினால், ஒரு "மழலையின்" பிதற்றல் என மறந்து விடுங்கள்.




                 முகவுரை


மனம் ஒரு நந்தி மாதிரி. அது இறைவனை மறைக்கவும் செய்யும். இறைவனை தரிசிக்கவும் உதவும்.



ஓர் அகன்ற பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால், செம்மண், சாயம் என ஏதோவொன்று அதில் கரைந்து, கலங்கிய நிலையில் உள்ளது. அத்துடன் அதில் உள்ள தண்ணீரும் அலை அடிப்பது போல் அசைந்துகொண்டே இருக்கிறது.

அந்த சமயம், அந்த பாத்திரத்தில் உள்ள நாணயத்தை நம்மால் பார்க்க இயலுமா?



நாம் நாணயத்தை பார்க்க வேண்டுமென்றால் பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கலங்கிய நிலையில் இருக்கக் கூடாது. சாயம் என்றல்ல; சந்தனம் கூட இருக்கக் கூடாது. அத்துடன் தண்ணீரும் அலைகள் இன்றி இருக்க வேண்டும்.


மனிதன் பாத்திரம்; மனம் தண்ணீர்; இறைவன் நாணயம்.



மனம் அலைகள் இன்றி இருப்பதற்கு வழிபாடு, தியானம் போன்றவை நிச்சயம் உதவும். ஆனால், மனதில் களங்கம் இருந்தால், நம்மால் உள்ளிருக்கும் இறைவனை தரிசிக்க இயலுமா?

நாம் செய்யும் வழிபாடு, தியானம் போன்றவை மனதை ஒருமுகப்படுத்த உதவும். ஆனால் மனதில் படிந்துவிட்ட களங்கத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்? அது தானாகவே நீங்குமா அல்லது நாம்தான் ஏதேனும் முயற்சி செய்ய வேண்டுமா?



மனம் என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது, அதனை செம்மைப்படுத்த நாம் எந்தெந்த வழிகளைக் கையாள வேண்டும் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்ட விஷயங்கள் நமக்குள் நன்கு பதிய வேண்டும்.

புரிந்துகொண்ட விஷயங்கள் நமக்குள் நன்கு பதிந்துவிட்டால் அதன்பின் அவற்றைக் கடைப்பிடிப்பதும், களைகளைக் களைவதும் முயன்றால் எளிதான காரியமே!



அதெல்லாம் சரி; மனமென்றால் என்ன,  அதன் செயல்பாடு எப்படி இருக்கும், அதைக் கையாளும் வழி என்ன என்பதை எங்கிருந்து தெரிந்து கொள்வது?

மனதைப் பற்றி எல்லா மறை நூல்களும் நிறைய போதனைகள் செய்கின்றன. இருந்தாலும் வேதவியாசர் அருளிய "பகவத்கீதை" எவ்வளவு விரிவாக, விஞ்ஞான பூர்வமாக, மனோதத்துவ ரீதியாக எடுத்துரைக்கிறது!



நாம்தான் அதனை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறோம். காரணம் அதைப் பற்றிய தவறான எண்ணங்கள் -- அது ஒரு கொலைகார நூல், புரட்சி நூல், வைணவ நூல் போன்று பலப்பல தவறான எண்ணங்கள் -- நம்மை ஆட்டிப் படைப்பது தான்.

இதையெல்லாம் மீறி, அதனுள் புகுந்து பார்த்தாலும், கீதையின் தத்துவங்கள் எளிதில் புரிபடுவதில்லை.



கீதையில் உள்ள வாழ்வியல் தத்துவங்கள் ஒரு மழலைக்கே உரிய தொனியில் இங்கே தரப் பட்டிருக்கின்றன.

கீதையில் உள்ள அனைத்து தத்துவங்களும் இதில் இல்லை என்றாலும், அதன் அடிப்படை தத்துவங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பகுதியாகப் படித்து, மனதிற்குள் வாங்கி, நன்கு பதிய வைத்து, புரிந்து, அதன்பின் அடுத்த பகுதிக்கு செல்வது நல்ல பயனைத் தரும்.



       

                  1. ஞானபூமி


தர்ம பூமி இந்த பூமி. தர்மம் தழைத்தோங்கும் பூமி இது. உலகின் எந்தவொரு நாட்டையும் விட அதிகமாகவே தர்மத்தின் தூதுவர்கள் அவதரிக்கும் பூமி இது. அதனால்தான் இதனை ஞானபூமி என்று அழைக்கிறோம்.



வருடக்கணக்கில் வானம் பொய்த்து விட்டால், நிலத்தடி நீர் மட்டுமல்ல,  அதில் உள்ள விதைகளும் மறைந்து போகின்றன. ஆனால் ஒருமுறை பருவ மழை பெய்து விட்டால், நிலமகள் பச்சைப் போர்வை போர்த்திக் கொள்கிறாள். அதுவரை அந்த விதைகள் அங்குதான் இருந்தன. நம் கண்களுக்குத்தான் அவை புலப்படுவதில்லை. அதற்கு ஒரு பருவ மழை தேவைப்படுகிறது.



தர்மத்தின் விதைகளும் அப்படித்தான் இந்த பூமி முழுவதும் தூவிவிடப்பட்டுள்ளன. அவை மனிதர்களுக்குள்ளும் மறைந்து கிடக்கின்றன. மனிதன் தனக்கு வெளியே உள்ள பொருட்களின்பால் பற்று வைப்பதால், அதனால் ஏற்படும் மாயையின் வெப்பத்தில் தாக்குண்டு நிற்பதால், தர்மத்தின் விதைகள் தம்மை வெளிப்படுத்த முடியாமல் அடங்கி இருக்கின்றன. 


எப்பொழுது ஒருவன் இந்த மண்ணுலகம் ஒரு புண்ணுலகம் என்று புரிந்து கொண்டு, விண்ணுலக சொத்திற்காக ஏங்குகின்றானோ, எப்பொழுது அந்த ஏக்கம் மழையெனப் பெய்கிறதோ,
அப்பொழுது தர்மத்தின் விதைகள் தம்மை வெளிப்படுத்தி அவனைப் போர்த்திக் கொள்கின்றன.
அவன் இம்மையிலும் மறுமையைக் காண ஆரம்பித்து விடுகிறான்.



ஒரு நாட்டில் அதர்மங்கள் மலிந்து கிடக்கின்றன என்றால், அந்த நாட்டின் மக்கள் விண்ணுலக சொத்திற்கு ஏங்கவில்லை என்று அர்த்தம்!? 




             2. சனாதன தர்மம்


இலக்கியத்தில் பாடல்கள் பலவகைப்படும். கற்பனையில் எழுதப்படும் பாடல்கள்; சிலப்பதிகாரம், இராமாயணம், மஹாபாரதம் போன்று வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய பாடல்கள்; தேவாரம், திருவாசகம் போன்று பக்திரசம்  சொட்டும் பாடல்கள்; பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் தாம் பெற்ற அனுபவங்களின் வாயிலாக வெளிப்படுத்திய பாடல்கள் என்று பலவகைப்படும்.


இவற்றில் திருக்குறள் எந்த இரகத்தைச் சேர்ந்தது? அது பொது நீதிகளையும், வாழ்க்கை நெறிகளையும் போதிக்கிறது.. வேதங்களும், முக்கியமாக அவற்றின் ஒரு அங்கமாகிய உபநிஷதங்களும்   இந்த இரகத்தை சேர்ந்தவைதான். அவை நிரந்தர உண்மைகள் எனப்படும் "சனாதன தர்மத்தை" போதிப்பவை.



உண்மை என்பது வேறு; நிரந்தர உண்மை என்பது வேறு. உண்மை என நாம் நினைப்பவை எல்லாம் நிரந்தர உண்மையாக இருப்பதில்லை. 

ஒரு மனிதனுக்கு அவன் கட்டிய வீடு உண்மைதான். ஆனால், அந்த வீடு இடிந்து விட்டாலோ அல்லது விற்கப்பட்டுவிட்டாலோ அல்லது அவனே கூட இறந்துவிட்டாலோ, அதன்பின் அந்த வீடு அவனுடையது இல்லை என்பதே உண்மையாகி விடுகிறது. அதாவது அவன் கட்டிய வீடு அவனுடையது இல்லை என்பதே நிரந்தர உண்மையாகும். உடல், மனம், புத்தி உட்பட எதுவுமே அவனுக்கு நிரந்தரமல்ல என்பதுதான் உண்மை.

"ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல   ....  நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே" என்று பட்டினத்தார் பாடியதும் இதனால்தானோ?



புறவுலகில் உள்ள பொருட்களை உண்மையென நம்பி, அவற்றின்மேல் பற்று வைக்கும் மனிதனின் மயக்கத்தை தெளிய வைத்து, நிரந்தர உண்மையான பரமாத்மாவின் மீது பற்று வைக்கக் கற்றுக் கொடுப்பதுதான் "சனாதன தர்மம்".



                       3. தர்மம்


வேதத்தில் உள்ள அனைத்து தத்துவங்களையும் ஒரே பிறவியில் புரிந்து கொள்வது என்பது முடியாத காரியம். ஆனாலும் வேதத்தில் கூறப்படும் மனித வாழ்க்கையின் நோக்கங்களை நான்கே வார்த்தைகளில் சுருக்கிச் சொல்லலாம். அவை — தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்.”

அவற்றின் உள் அர்த்தத்தை சிறிது பார்ப்போம்.



 "தர்மம்" என்பது உதவி செய்வதை குறிப்பதல்ல. ஒரு பொருள் மண்ணாக இருந்தாலும், மரம், செடி, கொடியாக இருந்தாலும், எந்த ஜீவனாக இருந்தாலும் அது அதன் இயல்பான குணத்தை ஒட்டி இருப்பதுதான் தர்மம் எனப்படும்.


இந்த தர்மம் எல்லா பொருட்களுக்கும், அதனதன் இயல்புக்கு ஏற்ப பொதுவாக இருந்தாலும், மனிதனிடம் மட்டும் அது ஒரே மாதிரி இருப்பதில்லை. அது மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.


ஒரே மனிதனிடமும் பருவத்திற்குப் பருவம் மாறுபடும். குழந்தைப் பருவத்தில் கடைப்பிடிக்கப்படும் தர்மம் அடுத்து வரும் பருவங்களில் மாறிவிடும். 


ஒரே பருவத்திற்குள்ளும் தர்மத்தின் இயல்பு அடிக்கடி மாறுவதைக் காணலாம். அதனால்தான் மனிதனின் சுபாவம் இது, இயல்பு இது என்று வரையறுத்துக்கூற முடிவதில்லை.



மனிதனிடம் மாறுபட்ட இயல்புகள் இருப்பதனால்தான், தர்மம் பல பெயர்களில் -- சுயதர்மம், பர தர்மம்,  பொதுவான தர்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது



மனிதனை, அவன் கடைப்பிடிக்கும் தர்மத்தை வைத்து வகைப்படுத்தி உள்ளது வேதம். அது பொதுவான அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உளவியல் விதியாகும்.




                     4. அர்த்த


"அர்த்த" என்றால் செல்வம் என்று பொருள். 

ஆன்மீக நோக்கில் பார்க்கும்போது அது வெறும் பணத்தை மட்டும் குறிப்பதல்ல; எதுவெல்லாம் மனிதனுக்கு மயக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதுவெல்லாம் "அர்த்த" என்பதாகும்.


பெரும்பாலும் மனிதனே செல்வத்தைத் தேடிச் செல்கிறான் என்றாலும், பல நேரங்களில் செல்வம் மனிதனைத் தேடிச்சென்று அவனை மயங்க வைக்கிறது. 

செல்வம் கண்ணால் காணக் கூடியதாகவும் இருக்கலாம். கண்ணால் காண முடியாததாகவும் இருக்கலாம். 


பணம், பொன், மண், வீடு, கார் போன்றவைகள் கண்ணால் காணும் செல்வங்கள். 

அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம் போன்றவைகள்  பொருளாகக் கையில் பிடிக்க முடியாத செல்வங்கள்.


தனக்கு வெளியே உள்ள செல்வத்தைத் தேடி ஓடும் மனிதன், தனக்கு உள்ளே உள்ள மாபெரும் செல்வத்தை இழக்க நேரிடுவதை அறிவானா?

நாம் வெளியில் தேடும் பொருட்செல்வத்தை விட, உள்ளுக்குள் சுரக்கும் அருட்செல்வம் பெரிதல்லவா?

அதனால்தான் வள்ளுவர்  "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் - பொருட்செல்வம்      பூரியார் கண்ணும் உள" என்கிறார்.




                        5. காமம்



ஆன்மீக நோக்கில் அர்த்தத்தைப் பார்க்கும்போது "காமம்" என்பது  ஆசை/விருப்பம்/பற்றுடன் கூடிய இன்பநுகர்ச்சி எனப் பொருள்படும்.

பெரும்பாலும் பெண்ணோடு இணைத்து பேசப்படுவதாயினும் இது எல்லாப் பொருட்களுக்கும் பொருந்தும்.


தேவையில்லாத பொருள் மீதும், தேவைப்பட்ட அல்லது ஆசைப்பட்ட பொருள் மீது அளவிற்கு அதிகமாகவும் ஈடுபாடு கொண்டால் -- உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் கூட -- அது காமமாக உருவெடுக்கிறது.


நல்ல துணிமணிகளின் மேல் ஆசை என்பதனால் தேவையின்றி துணிகளை வாங்கி குவித்தாலோ, நகைகளின் மேல் பிரியம் என்பதற்காக நகைகளை மாற்றிக் கொண்டேயிருந்தாலோ, அதுவும்  காமம் எனப்படும்.


தொண்டுகள் பல செய்யும் தலைவனுக்கு தனது பதவி அல்லது அந்தஸ்தின் மீது ஆசை/பற்று இருந்தால் அது கூட காமம்தான்.


ஆஸ்தி, அந்தஸ்து என எதுவாக இருந்தாலும், அதன் காரணமாக ஏற்படும் கர்வம் கூட ஒரு வகையில் காமமே.


நாம் எந்த பொருள் மீது காமம் கொண்டாலும், அது முடிவில் துன்பத்தையே தரும். ஆனால் ஒரே ஒரு பொருள் மட்டும் அதன் மீது நமது காமம் கூடக்கூட அளவற்ற இன்பத்தை தரும். அது --

"இறைவனின் திருவடி"




                    6. மோக்ஷ 

 

ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்து கலப்பது தான் மோக்ஷம் எனப்படும்.


கலப்பது என்றால் கூட்டத்தில் மேலும் ஒருவர் என்பதாக அல்ல. நீராவி மேகக் கூட்டத்தில் கலந்தாற்போல், ஆற்று நீர் கடலில் கலந்தாற்போல் அது அதன் தனித்தன்மையை இழந்து விட வேண்டும். அதற்கு முன் ஜீவாத்மாவிற்கு வேண்டியது மனிதனிடம் உள்ள பந்தத்திலிருந்து விடுதலை.


ஜீவாத்மா தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதில்லை. மனிதன்தான் தன்னுடைய அறியாமை, பற்று, வாசனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.


அது விடுவிக்கப்படுமுன் மனிதன் மரித்துவிட்டால், மேலும் ஒரு பிறவி தவிர்க்க முடியாததாகிறது.

அந்த பந்தத்தின் பெயர்தான் "வாசனா". அதனைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.


தான் இறக்கும் முன்பே ‘வாசனா’ எனும் கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுதான் மனிதனின் தலையாய கடமையாகும்.




             7. சாதுர்வர்ண்யம் 


"சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம், குண கர்ம விபாகச:" 

"நான்கு வர்ணங்களை நான் படைத்தேன் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்ப" என கண்ணன் சொல்கிறான். 

குணம், கர்மம் இரண்டையும் பொறுத்து மனிதனின் "வர்ணம்" வெளிப்படும். கர்மம் என்று சொல்லும்போது வெறும் செயலை மட்டும் குறிக்காமல், அந்தச் செயலுக்குப் பின்னால் இருக்கும் மனோபாவத்தையும் கருத்தில் கொள்வது சாலச்சிறந்தது


ஏனெனில், நாம் செய்யும் செயல்கள் வெளி உலகத்திற்குத் தெரிவதற்கு முன், அதற்கான ஒத்திகை நம் மனதில் நமது மனோபாவத்தின் அடிப்படையில் பலமுறை நடந்து விடுகிறது.



நான்கு வர்ணங்கள் என்பது மனோதத்துவ அடிப்படையில் சொல்லப்பட்ட ஓர் ஒப்பற்ற அற்புதம். அதை சரியாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் தவறாகப் புரிந்து கொள்வது எவ்வளவு பெரிய சமுதாயக்கேடு என்பதை பகுத்தறிவுவாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள் அறிவார்களா?




         8. வர்ணாஸ்ரம தர்மம்


வர்ணங்கள் நான்கு என்பது போல, ஆஸ்ரமத்திலும் நான்கு நிலைகள் உண்டு. ஆகவே வர்ணாஸ்ரம தர்மத்தை வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம் எனப் பிரித்து பொருள் கொள்ள வேண்டும்.


ஆஸ்ரமம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை நான்கு நிலைகளாக, அவனது வாழ்க்கைப் பருவங்களுக்கும் கடமைகளுக்கும் ஏற்பப் பிரித்துக் காட்டுவது. 

ஆனால் வர்ணம் என்பது ஒவ்வொரு மனிதனையும் அவனது குணத்திற்கும், மனோபாவத்திற்கும் ஏற்ப நான்கு பிரிவுகளாகப் பிரிப்பது.

அற்புதமான ஒரு தத்துவம் சரியாகப் புரிந்து கொள்ளப்படாவிட்டால், அது எவ்வாறு சமுதாயச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பதற்கு வர்ண தர்மம் ஒரு அருமையான எடுத்துக்காட்டு.


நான்கு வர்ணங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், குணமும், மனோபாவமும் ஒரு மனிதனிடம் எப்படி ஏற்படுகிறது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.



     9. தெரிதலும், புரிதலும்


ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் என்பது வேறு; புரிந்து கொள்ளுதல் என்பது வேறு. 


ஒரு சிறுவனிடம் சூரியனைத் தெரியுமா என்றால், அவனது விடை தெரியும் அல்லது தெரியாது என்பதாகத்தான் இருக்கும். ஒரு விஷயத்தைப் பற்றி தெரியுமா என்றால் தெரியும் அல்லது தெரியாது என்ற இரண்டு விடைகளில் ஒன்றுதான் வெளிவரும். 



ஆனால், புரிந்து கொள்ளுதலில் பலவிதம் உண்டு. அதே சிறுவனிடம் சூரியனைப் பற்றி என்னவெல்லாம் தெரியும் என்றால், அவன் சொல்லும் பதிலிலிருந்து அவன் எந்த அளவிற்கு சூரியனைப் பற்றி புரிந்து கொண்டிருக்கிறான் என்பது தெரியவரும்.

உதாரணத்திற்கு:-

1. சூரியன் ஒரு மிகுந்த வெப்பமுள்ள கோளம் என்றால்,                                           அது சரியாகப் புரிந்து கொள்ளுதல்.


2. அது ஏன் அந்த நெருப்புக் கோளமாக இருக்கிறது என்று தெரியாது என்றால்,                                அது புரியாதிருத்தல்

3. சூரியன் கிழக்கே உதிக்கும் என்றால்,                                                     அது தோற்றத்தை உண்மையெனத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்.

("சூரியன் கிழக்கே உதிக்கிறது" என்பது தோற்ற உண்மை; பூமி சுழல்வதால் அவ்வாறு தோன்றுகிறது என்பதே முழுமையான புரிதல்)


4. சூரியன் உதிக்கும் போது சிவப்பாகத் தெரியும்; ஆனால் ஏன் என்று தெரியாது என்றால்,              அது அரைகுறையான புரிதல்


வேதம் சொல்லும் உண்மைகளை சரியாகப் புரிந்து கொண்டவர்களை விட, வேறு வகைகளில் புரிந்து கொண்டவர்களே அதிகம்.



    10. மனிதனும், தாக்கமும் 


மனிதன் பிறந்தது முதல், தன் வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றியுள்ள புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த தாக்கங்கள் அவனிடம் வந்து சேர்வதை அவனால் தடுக்க இயலாது. 

அந்த தாக்கங்களின் காரணமாக, அவன் அறிந்தோ அறியாமலோ அவனுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

அந்தத் தாக்கங்களின் காரணமாக, அதற்கு எதிர்வினையாக அவன் செய்யும் காரியங்கள் புறவுலகில் புதிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன

இவ்வாறு தாக்கங்களை வாங்குவதிலும், கொடுப்பதிலும் மனிதன் ஈடுபடும்போது, அவனுக்குள் ஏற்படும் புதுப்புது அனுபவங்களின் சங்கமம் அவனது தலைவிதியையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றுவிடுகிறது.


சமுதாயம் என்பது தனி மனிதர்களின் கூட்டமைப்பு என்பதனால், சமுதாயத்தில் உள்ள அனைத்து மனிதர்களின் அனுபவ சங்கமத்தைப் பொறுத்து, அதன் கலாச்சாரம் மேன்மை பெறுகிறது அல்லது கீழ்மை அடைகிறது.



         11. ஐவர் கூட்டணி 


மனிதன் என்பவன் ஒருவனாகத் தோற்றமளித்த போதிலும், அவனுக்குள் ஐந்து தனித்தனி இயக்கங்கள் நடைபெறுகின்றன. அவை உடல், மனம், புத்தி, ஆழ்மனம் மற்றும் ஆன்மா எனப்படும்.

இவற்றில் ஆன்மா என்பது மனிதனின் உடல், மனம், புத்தி ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சாட்சியாக இருக்கும் ஜீவாத்மா ஆகும்.


பரமாத்மாவே தன் உண்மை என்பதை உணர்ந்து விடுதலை பெறும் வரை, அது அமைதியாகச் சாட்சியாக இருக்கும்.


மற்ற நான்கிற்கும், தனித்தனியாகவோ, ஒன்றுடன் ஒன்று இணைந்தோ அல்லது கூட்டாகவோ செயல்பட வேண்டிய கட்டாயம் உண்டு. 



அவற்றின் செயல்பாட்டினைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு, அந்த மனிதன் தன்னைப் புரிந்தவன் ஆகிறான். 

தன்னைப் புரிந்தவனே தரணியையும் புரிந்தவன் ஆகிறான்.


தன்னில், தன்னை, தானே அறிவது; அதுதானே ஆன்மீகம்.



             12. தாக்கமும், உடலும்


இங்கு உடல் என்று குறிப்பிடுவது, புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்ளும் ஐம்புலன் கருவிகளையும் உள்ளடக்கிய உடலைக் குறிக்கிறது. புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்வது இவைதான். 

ஆனால் கண் பார்க்கிறது; காது கேட்கிறது என்று நாம் சொன்னால்  வேதாந்தம் அதனை ஒப்புக் கொள்வதில்லை.


இருவர் சுவராசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை அழுது கொண்டே அவர்களை கடந்து செல்கிறது. சிறிது நேரம் கழித்து அங்கு வரும் அதன் தாய் அந்த இருவரிடமும் 'ஐயா, என் குழந்தையை பார்த்தீர்களா' என்று கேட்கிறாள். இருவரும் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறினால் அதற்கு என்ன அர்த்தம்? அந்த குழந்தை அவர்களின் கண் முன்னேதான் நடந்து சென்றது; இருந்தும் அவர்கள் அதை ஏன்  பார்க்கவில்லை?


நாம் நன்கு உறங்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தமான பாடல் ரேடியோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் நம்மால் அதை கேட்க முடிவதில்லை; என்ன காரணம்?


உண்மை என்னவெனில் புறவுலக தாக்கங்களை எதிர்கொள்வது உடலாக (ஐம்புலன் கருவிகளாக) இருந்தாலும், அதனால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு இன்னொன்று தேவைப்படுகிறது. அதுதான் "மனம்".



          13. தாக்கமும், மனமும்


"கண் பார்ப்பதில்லை, கண் மூலமாக மனம் பார்க்கிறது; காது கேட்பதில்லை, காது மூலமாக மனம் கேட்கிறது" என்று வேதம் சொல்கிறது. 


எந்தவொரு தாக்கமும் உடல் மூலமாக மனதை அடைந்தால்தான், அதன் மூலம் புதுப்புது அனுபவங்களும், மாற்றங்களும் ஏற்படும். மனக்கதவு திறக்காவிட்டால் எந்தவித அனுபவமும் ஏற்படுவதில்லை. 


மனக்கதவு திறந்திருந்தாலும் மனம் தான் பெறும் தாக்கத்தை  உணர்வுடன் அனுபவித்தால் மட்டுமே அங்கு ஒரு பதிவு நிகழும்.


தினந்தோறும் காலையில் பலகாரம் சாப்பிடுகிறோம். நாக்கு பலகாரத்தின் ருசியை உணருகிறது. அந்தப் பலகாரம் நன்கு பழகிவிட்ட காரணத்தால் அதில் புதிதாக எந்த விருப்பமும் இல்லை. எனவே புதிதாக எந்த பதிவும் அங்கே நிகழ்வதில்லை.


மாறாக, அன்றைய தினம் புதிதாக ஒரு பலகாரம் செய்து பரிமாறினால், நாக்கு அதன் ருசியை உணர்வதோடு மனமும் அதன் சுவையை விரும்பி அனுபவித்தால், அதன் காரணமாக அங்கே புதிதாக ஒரு பதிவு நிகழ்கிறது.




        14. தாக்கமும், புத்தியும்


எந்த ஒரு தாக்கமும் மனதை அடைந்து விட்டால், மனம் மூலமாக பதிவு நிகழ்ந்தாலும்,  நிகழாவிட்டாலும், அது அடுத்து புத்தியையும் சென்றடைகிறது.


“புத்தி தன்னை வந்தடையும் தாக்கத்தைப் பரிசீலித்து, அது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று கருதினால், தானும் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது.”



மனம் மூலமாக செய்யப்படும் பதிவுகள் உணர்ச்சியையும், சுபாவத்தையும் வெளிப்படுத்துகின்றன. 

அதேபோல் புத்தி மூலமாக செய்யப்படும் பதிவுகள் அறிவையும், புரிதலையும் வெளிப்படுத்துகின்றன.”


மனம் மற்றும் புத்தி மூலமாக செய்யப்படும் பதிவுகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

1. இரண்டின் மூலமும் பதிவுகள் நிகழ்கின்றன.

2. இரண்டிலும் பதிவுகள் நிகழ்வதில்லை. 

3. ஏதாவது ஒன்றில் மட்டுமே பதிவுகள் நிகழ்கின்றன.


மனிதனுக்குள் பதிவுகள் ஏற்பட மூன்று விஷயங்கள் அவசியமாகின்றன. மனிதன்; புறவுலகில் இருந்து அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏதோ ஒன்று; மனிதனுக்கும் அந்த ஒன்றிற்குமான தொடர்பு. 



இந்த மூன்றும் இணையும் பொழுது அவனுக்குள் ஏற்படும் அனுபவமே அவனுக்குள் பதிவுகளை ஏற்படுத்தி, அவனது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கிறது.


அதனால்தான் சுவாமி சின்மயானந்தர், "Life is a series of experiences" என்று கூறுவார். கீதை மனித வாழ்க்கையை "அனுபவ தாரா" — அனுபவங்களின் தொடர்ச்சியான ஓட்டம் — எனக் காண்கிறது.


"அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்                           ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்                          

ஆண்டவன் கொஞ்சம் அருகினில் வந்து                                                              அனுபவம் என்பதே நான்தான் என்றான்" 

                        --கண்ணதாசன்.



       15. காரணமே காரியம்


நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்குமான காரணம் நமக்குள் ஏற்கனவே பதிவாகி விடுகிறது. அதனால்தான், அந்தப் பதிவுகளின் தாக்கத்திலிருந்து உடனடியாக வேறு மாதிரியாகச் செயல்படுவது நமக்கு எளிதாக இருப்பதில்லை.


பெட்டியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டுமெனில், ஏற்கனவே அதனை பெட்டியில் போட்டிருக்க வேண்டும். 

பீரோவில் இருந்து துணிமணிகளை எடுக்க வேண்டுமெனில், ஏற்கனவே அவை அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கணிப்பொறியிலிருந்து நமக்கு தேவையான விவரங்கள் வெளிவர வேண்டுமென்றால், அதற்குரிய தொகுப்புகள் உள்ளே செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.



ஒரு மாம்பழம் நம் கைக்கு கிடைத்தால் அதனைப் பிரியமாக சாப்பிடுகிறோம். காரணம் அதன் சுவையைப் பற்றிய பதிவுகள் நமக்குள் இருப்பதுதான். 

ஒரு வேளை நாம் பார்த்தே இராத ஒரு பழம் நமக்குக் கிடைத்தால், அதை தயக்கமின்றி சாப்பிடுவோமா? ஒருவேளை தயங்கலாம். ஏனெனில் அந்தப் பழத்தைப் பற்றிய பதிவுகள் நம்மிடம் இல்லை.


பதிவுகள் (காரணம்) நல்லதாக இருந்தால் நம்மிடம் இருந்து வெளிப்படும் காரியமும் நல்லதாக இருக்கும்.

பதிவுகள் (காரணம்) மோசமாக இருந்தால், நம்மிடம் இருந்து வெளிப்படும் காரியமும் மோசமாகவே இருக்கும்.


காரியம் என்பது காரணத்தின் வெளிப்பாடே!



          16. பதிவும், செயலும்


இந்தப் பதிவும் செயலும் எவ்வாறு நடைபெறுகின்றன; மனிதனுக்கு மனிதன் ஏன் வேறுபடுகின்றன என்பதைப் பார்ப்போம்.




பள்ளியில் இருந்து வரும்பொழுது பையன் அழுது கொண்டே வருகிறான். அப்பா அவனைப் பார்த்து கேட்கிறார்: "ஏண்டா அழுகிறாய்?"

 "ஸ்கூல்ல ஒரு பையன் அடிச்சிட்டாம்'பா"

 "ஏண்டா அவன் முரடனா"

 "ஆமாம்'பா" 

"நாளை முதல் அவன் பக்கத்தில் உட்காராதே" 

அப்பாவின் கட்டளை 'முரட்டு பையனின் பக்கத்தில் அமராதே' என்ற பதிவினை அவனுக்குள் ஏற்படுத்துகிறது. மறுநாள் அந்தப் பையனைப் பார்த்ததும் ஏற்கனவே செய்யப்பட்ட பதிவின் காரணமாக என்ன செய்ய வேண்டும் என்பது மனதிற்கு தெரிகிறது. மனம் கட்டளையிட, உடல் மூலமாகச் செயல்பாடு நிகழ்கிறது



பையன் முரட்டுப் பையனை விட்டு விலகி வேறு இடத்தில் அமர்கிறான். இங்கு அப்பாவின் கட்டளைப்படி ஏற்படும் பதிவு "காரணம்"; மறுநாள் விலகி அமரும் செயல் "காரியம்".



இதே பையனிடம் அவனது அப்பா, "ஏண்டா பார்த்துக்கிட்டா இருந்த; பதிலுக்கு அவன் கையை ஒடிச்சிருக்க வேண்டாமா" என்று சொன்னால், பதிவு வேறு விதத்தில் நிகழும்; செயல் சண்டையில் முடியும்.




மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடுவதன் காரணமாக, மனிதர்களின்  சுபாவங்களும் மாறுபடுகின்றன.

ஆனால் புத்தி மூலமாக ஏற்படும் பதிவுகள், மனப்பதிவுகளைப் போல மனிதனுக்கு மனிதன் அதிகமாக மாறுபடுவதில்லை.


 



           17. மனமும், புத்தியும் 


மனமும், புத்தியும் ஒரு மனிதனுக்குள் இருந்தாலும் இரண்டின் செயல்பாட்டிலும்தான் எத்தனை வேறுபாடுகள்!


மனம் என்பது மனித உடலில் எந்த இடத்தில் உள்ளது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. உணர்ச்சிவசப்படும் பொழுது இருதயம் அதிகமாகத் துடிப்பதால், பொதுவாக மனம் அங்கே இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், மனம் செய்யும் பதிவுகள் மூளையுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.


மனம் எந்தவொரு தாக்கத்தை விரும்பினாலும் (ஒருவனை காயப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அது கூட ஒருவகை விருப்பம்தான்) 'தான்' என்ற உணர்வோடு அதை பதிவு செய்கிறது.

ஒருவன் தலைசிறந்த அறிவாளியாக இருக்கலாம். ஆனால் அதை நினைத்து அவன் கர்வம் கொண்டால்கூட, மனம் மூலம் ஒரு பதிவு நடைபெற்று விடுகிறது.


புத்தியினால் ஏற்படும் பதிவில் 'தான்' என்ற உணர்வு கிடையாது.



தன்னை வந்தடையும் தாக்கத்திற்குப் பதிலாக ஒரு செயலை மனிதன் செய்ய விரும்பினால், மனம் அதற்குரிய பெட்டகத்தில் உள்ள பதிவுகளின் படி செயல்படும்; புத்தி அதற்குரிய பெட்டகத்தில் உள்ள பதிவுகளின் படி செயல்படும்.


மனம் புத்தியின் கட்டுப்பாட்டில் இருந்தால், புத்தியிடம் உத்தரவு கேட்டு வாங்கி, அதன்படி செயல்பட உடலுக்கு கட்டளையிடும். 

கட்டுப்பாடு இல்லாத போது உணர்ச்சியின் அடிப்படையில்  தன்னிச்சையாக செயல்படும். அந்த செயல் சரியானதாக இருக்கும் என சொல்ல முடியாது. 

ஏனெனில், உணர்ச்சி மனத்தை ஆட்கொள்ளும்போது, புத்தியுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்படுகிறது; அதனால் புத்தியில் இருக்கும் சரியான அறிவு அந்த நேரத்தில் உதவிக்கு வருவதில்லை.


ஒருவன் சட்டம் படித்தவனாக, தர்ம நியாயம் தெரிந்தவனாக இருந்தாலும், ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கிறான்.  காரணம், பெண்ணைக் கண்டபோது மனம் உணர்ச்சிவசப்பட்டு விடுவதால், மனதிற்கும் புத்திக்கும் இடையே உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது. 


அதேபோல் மனமும், புத்தியும் ஒரு தாக்கத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் வெவ்வேறு சமயங்களில் அனுபவிப்பதும் உண்டு.

அவர் ஒரு நேர்மையான நீதிபதி. இரவில் சாப்பிட அமர்கிறார். மனைவி பரிமாறுகிறாள். சாப்பாட்டை பிசைந்து கொண்டே இருக்கிறார். ஆனால் சாப்பிடவில்லை. மனைவி காரணம் கேட்க 'இன்று ஒரு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை கொடுத்து விட்டேன்; அவன் மனைவி கைக்குழந்தையுடன் அழுது கொண்டிருந்தது மனதை என்னவோ செய்கிறது' என்கிறார்; ஏன்?

நீதிமன்றத்தில் அவர் புத்தி மட்டும் வேலை செய்தது. புத்தியில் உள்ள பெட்டகத்தின் பதிவுகளின் படி தூக்குத்தண்டனை கொடுக்கிறார். அவரது தீர்ப்பினால் அவனது மனைவி துடித்த துடிப்பு காரணமாக அவரது மனதில் ஒரு பதிவு நிகழ்கிறது. இரவில் அது நினைவுக்கு வர சாப்பிட முடியாமல் தவிக்கிறார்.



         18. காரண, காரியம்


ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். இது சாதாரண விஷயம்தானே என நினைக்கலாம். அப்படி நினைத்தால் அது தவறாகும்.


காரண, காரியம் என்பது ஒரு தொடர் சங்கிலியாக நமது வாழ்க்கையையே -- நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ -- மாற்றி அமைக்கிறது. அவை காட்டும் சித்து விளையாட்டுகளை நாம் பொருட்படுத்தாவிட்டால், நமது வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.


அந்தச் சிறுவன் அடிக்கடி தந்தையுடன் கடைத்தெருவிற்குப் போகிறான். "அப்பா, அப்பா இந்த கடையில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வா" என்று ஒரு நாளும் கேட்காத அவன், அன்று மட்டும் ஏன் கேட்கிறான்? அன்றைய தினம் பள்ளியில்  அவனது நண்பன் அந்த கடை ஐஸ்கிரீமை பற்றி சொன்னதுதான் காரணம்.

அவன் கடைத் தெருவிற்குப் போகும் போதெல்லாம் அந்த குறிப்பிட்ட கடையைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் அவனுக்குள் எந்த பதிவும் நடைபெறவில்லை. பள்ளியில் வைத்து நண்பன் சொன்னதும் ஒரு பதிவு நிகழ்கிறது. மாலையில் கடையைப் பார்த்ததும் பதிவு நினைவிற்கு வர அதை வாங்கி சாப்பிடுகிறான். காரணத்தில் இருந்து காரியம்.


நண்பன் சொன்னபோது அந்தக் கடை ஐஸ்கிரீம் பற்றி ஒரு ஊகம்தான் பதிவாகி இருந்தது. அதனை சுவைத்து சாப்பிட்ட பின், ஏற்கனவே உள்ள பதிவு மேலும் அழுத்தம் பெறுகிறது. காரியத்தில் இருந்து காரணம்.


நண்பர்களின் வற்புறுத்துதல் காரணமாக மதுவை ருசி பார்ப்பவன் கடைசியில் குடிகாரனாக மாறுவதும் இதனால்தான். 


இந்தக் காரண–காரியத் தொடரைத்தான் ‘cause and effect’ என்கிறார்கள். அதாவது காரண காரியம். இதில் காரணம் என்பது நடந்து முடிந்தது. காரியம் என்பது இப்பொழுது நடப்பது. ஆனால் காரியம் நடந்து முடிந்ததும் அதுவே எதிர்கால காரியத்திற்கான காரணமாக மாறிவிடுகிறது.



"The present effect which is because of the past cause becomes, after its effect, the cause for future effect". 

.. Swami Chinmayanandha.

(ஏற்கனவே பதிவாகியுள்ள காரணத்தின் காரணமாக இப்பொழுது நிகழும் காரியம், காரியம் முடிந்ததும், நாளைய காரியத்திற்கான காரணமாக மாறிவிடுகிறது)


இப்படி தொடர் சங்கிலியாக நடக்கும் காரண காரிய நிகழ்ச்சிகள்தான் மனிதனின் குணத்தை நிர்ணயம் செய்கின்றன.



                     19. பற்று


சிறுவன் முதல் தடவையாக அப்பாவிடம் ஐஸ்கிரீம் கேட்டதற்கு காரணம், நண்பன் சொன்னதை வைத்து அந்த குறிப்பிட்ட கடையின் ஐஸ்கிரீம் நன்றாக இருக்கும் என ஒரு பதிவு நிகழ்ந்ததுதான். அந்தப் பதிவு நடைபெற்ற பொழுது அவன் அந்த ஐஸ்கிரீமின் சுவையை அறிந்திருக்கவில்லை.

ஒருவேளை அந்த கடையில் வாங்கிய ஐஸ்கிரீம் சுவை அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் அவனிடமிருந்து அந்தப் பதிவு மேலும் வலுப்பெறாமல் போய்விடும்


 

அந்த ஐஸ்கிரீமின் சுவை அவனுக்கு பிடித்திருந்தால், அவன் அதனை விரும்பிச் சாப்பிடும் பொழுது ஏற்கனவே உள்ளிருந்த பதிவு மேலும் அழுத்தம் பெற்று பற்றாக மாறுகிறது.



ஒரு தாய் தன் குழந்தையை கொஞ்சுகிறாள். அந்த வீட்டின் வேலைக்காரியும் அதனைக் கொஞ்சுகிறாள். 

ஆனால் ஒரு வித்தியாசம் அந்த வேலைக்காரிக்கு அந்த குழந்தை தன் குழந்தை அல்ல என நன்றாகத் தெரியும். தான் வேலையை விட்டு நின்று விட்டாலோ அல்லது நிறுத்தப்பட்டுவிட்டாலோ அந்தக் குழந்தையை தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது என்பதும் தெரியும். அதனால்தான் அவள் அந்தக் குழந்தையை கொஞ்சினாலும், அவள் காட்டுவது அன்பு மட்டும்தான்;  அதைத் தன் குழந்தை என்ற பற்றுடன் அணுகுவதில்லை


ஆனால் அதன் தாய்க்கோ அது தன் குழந்தை என்பதால் அதன் மேல் பற்று ஏற்படுகிறது. அன்பிற்கு பதிலாக குழந்தையின் மேல் ஆசை வைக்கிறாள். அதாவது அன்பு + பற்று = ஆசை.




பெற்றோர்கள் பையனுக்கு பெண் தேடுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் தட்டிப் போகிறது. கடைசியில் ஒரு பெண்ணை பேசி மணம் முடிக்கிறார்கள். மகனுக்கு ஒரு மனைவி வேண்டும் என்ற தேவை பூர்த்தி ஆகிறது. முன்பு பார்த்த பெண்கள் தட்டிப் போனதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை.


ஒருவேளை முன்பு பார்த்த பெண் அவனது காதலியாக இருந்து அந்த திருமணம் நின்று போய் இருந்தால் அவனது மனம் என்ன பாடுபடும்? எதனால் அப்படி?


மகன் காதலித்த பெண்ணை பெற்றோருக்கும் பிடித்து திருமணமும் நடந்திருந்தால், மகனின் தேவை மட்டுமல்ல ஆசையும் பூர்த்தியாகிறது. ஏனெனில் அவள், அவன் பற்று வைத்த பெண். அதாவது தேவை + பற்று = ஆசை.


ஆசையும் பற்றுதலும் துன்பத்திற்கு வழிவகுக்கும் என்கிறார் புத்தர்.  ஆசைக்கு காரணமாக இருக்கும் இந்த பற்றுதான், ஒரு பந்தத்தை ஏற்படுத்தி மனிதனை படுகுழியில் தள்ளுகிறது. சகல துன்பங்களுக்கும் காரணமான இந்தப் பந்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது?


தேவை வாழ்க்கையை நடத்தும்; பற்று வாழ்க்கையைத் தொலைத்து விடும்


"பற்றுக பற்றற்றான் பற்றினை             - அப்பற்றை                                        பற்றுக பற்று விடற்கு"            என்கிறார் வள்ளுவர். 

எளிதில் முடிகிற காரியமா அது?



                     20. வாசனா


நண்பர்கள் கூடி கேலியாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடும். "ஏண்டா, இவன் இந்த கத்து கத்துகிறான்" "விடுடா, போன ஜென்மத்து வாசனையாக இருக்கும்". போன ஜென்மத்தில் கழுதையாக பிறந்திருப்பான்; அதனால்தான் இப்படி கத்துகிறான் என்ற ரீதியில் பேசுவார்கள். 


கேலியாகத் தோன்றினாலும் வாசனாவைப் பற்றிய ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முக்தி கிடைக்கும் வரை ஆன்மாவும், அதனைச்  சூழ்ந்திருக்கும் மாயத்திரையின்மீது படர்ந்திருக்கும் வாசனாவும் ஒவ்வொரு பிறவியாக தங்களது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும். 



"வாசனா" எப்படி உருவெடுக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுமுன்--

வீட்டின் முன் 'ஹால்' முழுவதும் காற்று நிரம்பி இருக்கிறது. ஆனால் கண்ணால் பார்க்க முடிவதில்லை. வெளியில் சென்று விட்டு வந்த அப்பா, அம்மா, மகன் மூவரும் ஹாலில் அமர்கிறார்கள். இப்பொழுது அறையில் மட்டுமின்றி மூவரின் உடலுக்குள்ளும் காற்று இருக்கிறது. 

தந்தை மகனுக்காக தான் வாங்கி வந்த பலூனை ஊதுகிறார். இப்பொழுது அவர் உடலில் இருந்து காற்று பலூனுக்குள்ளும், அறையில் இருந்து காற்று அவருக்குள்ளும் இடம் பெயர்கிறது. 

அறை முழுவதும் நிறைந்துள்ள காற்று நம் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் பலூனுக்குள் அடைப்பட்ட காற்று இடம் பெயர்வது பலூனுக்குள் அடைபட்ட காரணத்தினால் நமக்கு தெரிகிறது. 

ஒருவேளை பலூன் வெடித்து விட்டது என்றால், அப்பொழுது என்ன நடக்கிறது? பலூன் தரையில் விழுகிறது. பலூனுக்குள் இருந்த காற்று பலூன் வெடித்த இடத்திலேயே வெளிக்காற்றுடன் கலந்து விடுகிறது. பின்பு அதனைத் தனியாக நம்மால் உணர முடிவதில்லை. 



அறையில் நிறைந்திருக்கும் காற்றினைப் போல் பரமாத்மா உலகமெங்கும் வியாபித்து இருக்கிறார். பரமாத்மாவோடு வேறுபாடில்லாத ஆன்மா, அதனைச் சூழ்ந்திருக்கும் மாயை மற்றும் வாசனைகளின் காரணமாக, தனித்த ஜீவாத்மாவாகத் தோன்றுகிறது.  உடல் மரித்தாலும், வாசனாப் பதிவுகள் நீங்காதவரை ஜீவாத்மாவிற்கு முக்தி இல்லை. அது மீண்டும் ஒரு பிறவியை எடுக்கிறது.


இந்த வாசனா எங்கிருந்து, எப்படி வருகிறது? அதனை எப்படி நீக்குவது  என அறியும் முன் வாசனைகளின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது நாம் பெறும் அனுபவங்களே என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? 


இந்த அடிப்படை உண்மையை அறிந்து, நாம் வாழும் பொழுதே வாசனாப் பதிவுகளை நீக்கிவிட்டால் (அதை நாம் தான் செய்ய வேண்டும்), ஜீவாத்மா முக்தி பெற்று, பரமாத்மாவே தன் உண்மை என்பதை உணர்கிறது. அதன்பின் அதற்கு பிறவி ஏதும் இல்லை.”


குறிப்பு:-

இந்த நூலில், வாசனாப் பதிவுகள் தொடர்ந்து சேமிக்கப்பட்டிருக்கும் மனத்தின் ஆழமான நிலையையே ‘ஆழ்மனம்’ என்று குறிப்பிடுகிறோம்.

வேதாந்தத்தில் இதற்குச் சமமான கருத்தை விளக்க ‘வாசனா’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.






                     21. ஆன்மா 


தினம், தினம் தூங்கி விழிக்கும் மனிதன் என்றாவது ஒருநாள் நிரந்தரமாக தூங்கி விட்டால், அதன் பின் அந்த மனித உடலுக்கு விழிப்பு கிடையாது. அந்த நேரத்தில் மனிதர்கள் பொதுவாக சொல்வது 'அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்'. அப்படியானால் ஆன்மாவிற்கு சாந்தியற்ற நிலை என ஒன்று இருந்ததா?


"வாளால் வெட்ட முடியாததும், நெருப்பால் சுட முடியாததும்,          நீரால் நனைக்க முடியாததும், காற்றால் உலர்த்த முடியாததும்"    ஆன ஆன்மாவை யாரால் துக்கப்பட வைக்க முடியும்? பின் ஏன் இந்த சாந்தியற்ற நிலை?



அது ஒரு விரிந்து பரந்த வெட்ட வெளி. உற்றுப் பார்த்தால் நடுவில் ஒரே ஒரு வீடு. யாரிடமாவது என்ன தெரிகிறது என்றால் தூரத்தில் ஒரு வீடு தெரிகிறது; அதைச் சுற்றி நாற்புறமும் வெட்ட வெளியாக இருக்கிறது என்பார்கள். 

அப்படியானால் வீடு இருக்கும் இடத்தில் வெட்டவெளி கிடையாதா? ஒருவேளை வீட்டின் சுவர்கள் இடிந்து விட்டால் மீண்டும் அந்த இடம் வெட்ட வெளிதானே! அதுவரை அந்த வெட்டவெளி எங்கு இருந்தது? 

அது அங்கேயேதான் இருந்தது. நாம் வீட்டைப் பார்த்ததால் வெட்டவெளியை மறந்து விட்டோம். "மரத்தை மறைத்தது மாமத யானை" என்ற கதைதான்.


அகிலமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளே, உடலுக்குள் ஆன்மாவாகத் தோன்றுகிறது. உடலை மட்டும் பார்க்கும் நாம் ஆன்மாவை உணர்வதில்லை.


வீட்டின் சுவர் இடிந்ததும், வீட்டில் இருந்த வெட்டவெளி மீண்டும் வெளியில் உள்ள வெட்டவெளியில் கலந்து விடுகிறது. 


ஆனால், ஆன்மாவை சூழ்ந்திருக்கும் மாயத்திரையின்மீது படர்ந்திருக்கும் வாசனாப் பதிவுகளின் காரணமாக,  மனிதன் மரித்தாலும், ஆன்மாவைச் சூழ்ந்திருக்கும் வாசனாப் பதிவுகள் நீங்காதவரை, ஜீவாத்மா என்ற தனித்தன்மை நீங்குவதில்லை.


மனிதனின் "வாசனா", குண நலன்களை ஒட்டி அமைவதால், அதனில் ஆசை, ஏக்கம், வெறுப்பு, கோபம் போன்ற பல பதிவுகள் அங்கு பதிவாகி இருக்கும். அதனால் அந்த வாசனைகளுடன் கூடிய சூட்சும உடல் தொடர்ந்து இயங்கும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் நாம் வேண்ட வேண்டியது ஆன்மாவிற்கான சாந்தி அல்ல; வாசனாவிற்கான சாந்தியே.


ஆன்மா என்பது உடல், மனம், புத்தி ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு ஒளி கொடுக்கும் சைதன்யம்.






22. மூன்று குணங்கள்


மனிதன் தொடர்ந்து ஒரு பொருளைப் பற்றி நினைக்கும் பொழுது, அவனுக்கு அதன்மேல் பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையை வளர்க்கிறது. ஆசையை நிறைவேற்ற அவன் செயல்படுகிறான். தொடர்ந்து செய்யும் செயல்கள் பழக்கமாக மாறி, இறுதியில் அவனது குணத்தை உருவாக்குகின்றன.

ஆழ்மனத்தில் ஏற்படும் பதிவுகளை 'வாசனா' பதிவுகள் என்று சொல்கிறார்கள்.
இந்தப் பதிவுகள்தான் ஒரு மனிதனின் குணத்தை உருவாக்குவதற்கான காரணிகளாக உள்ளன.
 




மனிதனின் குணங்கள் மூன்று வகைப்படும். அவை சத்துவ குணம், இரஜோ குணம் மற்றும் தமோ குணம்.


இந்த மூன்று குணங்களையும் ஓரளவு சரியாகப் புரிந்து கொள்ள உதவியாக சில விளக்கங்கள். அவற்றில் சில மிகவும் எளிமையாக இருந்தாலும்,  குணங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ள அவை உதவலாம்.

இந்த மூன்று குணங்களும் ஒவ்வொரு மனிதரிடமும் வெவ்வேறு அளவில் கலந்தே இருக்கும்; அவற்றில் எந்தக் குணம் மேலோங்குகிறது என்பதில்தான் மனிதனின் இயல்பு வெளிப்படுகிறது.



23. குணங்கள் – விளக்கம் 1


நிறைய தெரிந்திருந்தும், எதுவும் தெரியாதவர்போல் இருப்பது,
பணிவு (humility), ஆடம்பரத்தை விரும்பாதது, தனித்து இருக்க விரும்புவது, புகழை வெறுப்பது, அகத்தாய்வில் அதிக ஈடுபாடு கொள்வது முதலானவை ‘சத்துவ’ குணத்தின் அடையாளம்.



எதையும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம், தன்னால்தான் முடியும் என்ற தன்முனைப்பு, தான் செய்யும் காரியங்களை எண்ணி பூரிப்பு, ஆரவாரத்தில் ஆர்வம், புகழில் ஆசை, மற்றவரை அடக்கி ஆள நினைப்பது முதலானவை ‘இரஜோ’ குணத்தின் அடையாளம்.



சுயமாகச் சிந்தித்துச் செயல்படத் தெரியாதது, மிகுதியான சோம்பல், பிறரின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு  அடங்கி வாழ்வது முதலானவை ‘தமோ’ குணத்தின் அடையாளம்.


இத்தகைய குணங்கள் உடையவர்களை   
முறையே சான்றோர், ஆன்றோர், மற்றவர் என்று இங்கு குறிப்பிடுகிறோம்.
      
                                                                                                                 
24. குணங்கள் – விளக்கம் 2



அந்தக் குடும்பத்தில் வயதான பெரியவர் (வயது 70). அவர்தான் குடும்பத்தின் தலைவர்.
பெரியவரின் மகன் (வயது 40), பெரியவரின் பேரன் (வயது 5).

 அன்றாட வாழ்க்கையில் இவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு கற்பனை.



பெரியவர் வாழ்க்கையில் நிறையப் போராடி, மிகுந்த அனுபவங்களைப் பெற்று, பொறுப்புகளிலிருந்து விலகி, விவேகமாக, விருப்பு வெறுப்பின்றி, தெளிவாக   சிந்திக்கத் தெரிந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் மகன் சந்திக்கும் போராட்டங்களைப் பார்க்கிறார்; ஆனாலும் எதிலும் தலையிடுவதில்லை. 
மகனால் சமாளிக்க முடியாமல் தன்னை நாடிவரும் பொழுது,
அவன் கடைப்பிடிக்க வேண்டிய வழியைக் காட்டி உதவுகிறார். மற்றபடி அவரது அன்றாட வாழ்க்கையில் எந்தவித சலனமும் இருப்பதில்லை.

அது ‘சத்துவ குணம்’; கொதித்து  அடங்கிய பாலைப் போன்றது.




மகனுக்கோ வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நிலை. இன்பம், துன்பம்; வெற்றி, தோல்வி என மாறி, மாறி ஏற்படும் நிகழ்வுகளால், ஆனந்தப் பட்டு, அல்லல்பட்டு வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.

அது ‘இரஜோ குணம்’; 
கொதித்துக் கொண்டிருக்கும் பாலைப் போன்றது.




பேரனுக்கோ தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று எதுவும் தெரியாது. விபரம் புரியாமலே அவனுக்கு சிரிப்பும் வரும், அழுகையும் வரும்.

அது ‘தமோ குணம்’;  இன்னும் கொதிக்க வைக்கப்படாத பாலைப் போன்றது.




25. குணங்கள் – விளக்கம் 3


அந்தப் புலையனுக்கு! சின்ன சந்தேகம்  ... 
  “ஏன் சாமி, நான் தொட்டது உங்களையா அல்லது உங்க உடம்பையா?”

கேட்ட ஞானிக்கோ, புதிதாக ஒரு ஞானம் பிறக்கிறது.







கடவுளைக் காண வேண்டுமா? ‘நான் யார்?’ என்று உன்னையே கேட்டுப் பார், என்கிறார் இரமண மகரிஷி.
ஒரு சிலரே விடை காண முயற்சி செய்கிறார்கள். 
அவர்களால் விடையைக் காண முடியாமல் தடுப்பது எது?



அந்த “நானை” இந்த ‘நானால்’ ஏன் அறிய முடியவில்லை? இந்த ‘நான்’ என்ற அகந்தை, அந்த “நானை” மறந்து விட்டதுதான் காரணம்.

   “அகந்தை அழியும் இடம், ஆண்டவனை அறியும் இடம்

புரியத் தெரிந்தவனுக்கும், அறியத் தெரியவில்லை! ஏன்?

பெருங்காய டப்பாவில் உள்ள பெருங்காயம் அனைத்தையும் எடுத்துவிட்டாலும்கூட, டப்பாவில் உள்ள வாசனை எளிதில் போகாது...
என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். 

அகந்தையும் காயத்தைப் போன்றதுதானோ?



   அடங்கி இருப்பது  சத்துவ குணம்;

   ஆடித் திளைப்பது இரஜோ குணம்;

   உறங்கிக் கிடப்பது  தமோ குணம்.




26. குணங்கள் – விளக்கம் 4


சான்றோர், ஆன்றோர் இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம்?


சான்றோர் அகத்தாய்வில் அதிகம் ஈடுபடுவதால் புறவுலக வாழ்க்கையில் ஈடுபாடு காட்டுவதில்லை. அதையும் தாண்டி தவிர்க்க முடியாமல் புறவுலகில் செயல்பட நேரிட்டால், இருள் சேர்க்கும் இருவினைகளிலும் பற்றின்றி செயல்படுவார்கள். எடுத்த பதவியை அலங்கரிக்கும் அவர்கள், பதவியின் காரணமாக தம்மை அலங்கரிப்பதில்லை.



ஆன்றோர் பதவியை மட்டுமல்ல, பதவியின் பெயரால் தம்மையும் அலங்கரிக்க விரும்புவர்; ஒவ்வொரு நிலையிலும் தம்மை வெளிப்படுத்தத் துடிப்பவர்.


அதனால்தான், ஆன்றோரைவிட சான்றோர் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்

திருவள்ளுவர் சான்றோரைப் பெருமைப்படுத்திச் சொல்வதைப் பல குறள்களில் காணலாம்.”

சத்துவ குணம் – எல்லாம் தெரிந்திருந்தும் புறவுலகச் செயல்களில் ஆர்வம் இல்லாதிருத்தல்.

இரஜோ குணம் – புறவுலகில் தன்முனைப்புடன் செயல்படுவது.

தமோ குணம் – புறவுலகில் சுயமாகச் செயல்படத் தெரியாதது.









27. புறச்செயலும், அகச்செயலும்


ஈசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட அந்த அரசனுக்கு ஆசை. அதைச் செயலிலும் காட்டினான். கூடவே மனதிற்குள் ஓர் கர்வம், தன்னால்தான் கட்ட முடிகிறது என்று.

அதே ஈசனுக்காக ஆண்டியும் ஒரு கோவில் கட்டினான்; யாரும் அறியாமல், மனதிற்குள்ளாகவே.

இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகத்திற்கு நாளைக்    குறிக்க, இறைவனோ பூசலார் நாயனார் என்ற அந்த ஆண்டிக்கே முன்னுரிமை தருகிறார்.





உடலை விற்றுப் பிழைக்கும் பெண் அவள்; இருந்தாலும் தன் செயலுக்கு வருந்தி இறைவனை நோக்கி மனம் நோக அழுது புலம்புகிறாள். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எதிர்புறம் வசிக்கும் துறவியோ, தனது மதச் சடங்குகளைத் தவறாமல் செய்து வந்தாலும், எதிர்வீட்டுப் பெண்ணின் தொழிலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்; அத்துடன் அவளிடம் அவள் எவ்வளவு  பாபங்களைச்     செய்கிறாள் என்று எடுத்துச் சொல்லி, நல்லபடியாக நடக்க அறிவுரையும் வழங்குகிறார்.

இருவரும் ஒரே நேரத்தில் இறக்க, பெண் சொர்க்கத்திற்கும், துறவி நரகத்திற்கும் செல்ல நேரிடுகிறது. பரமஹம்சரின் உபமான கதையிது.


இதற்கான காரணங்கள் யாவை?

தொடர்ந்து செய்யப்படும் செயல்கள், பழக்கமாகி, பின்னர் குணமாக மாறுகிறது. இருந்தாலும் புறச்செயல்களைவிட மிக அதிகமாக அகத்தளவில் நிகழ்வுகள் நடந்தேறிவிடுகின்றன.



ஆகவே, மனிதனின் குணத்தை நிர்ணயிப்பது அவனுடைய புறச்செயல்கள் அல்ல; அகத்தளத்தில் தொடர்ந்து நிகழும் அகச்செயல்களே.




                      


28. நான்கு வர்ணங்கள்

நான்கு வர்ணங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன், பொதுவான சில உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டியது 
 அவசியம்.



கீதையில் புரியாத பல விஷயங்கள் உண்டு. சரியாகப் புரிந்துகொள்ளப்படாத  விஷயங்களும் உண்டு. ஆனால் மோசமாகப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்கள் எவையென்று பட்டியலிட்டால், அதில் முதலிடம் பெறுவது இந்த நான்கு வர்ணங்களாகத்தான் இருக்கும்.




நான்கு வர்ணங்களைப் பற்றி மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையென்றால், அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு என்ன காரணம்?


வேதம் ஓதுபவன் பிராமணன், சண்டை போடுபவன் க்ஷத்திரியன், வியாபாரம் செய்பவன் வைஷ்யன், கூலிவேலை செய்பவன் சூத்திரன் என எண்ணினால், மருத்துவர் (Doctor), பொறியாளர் (Engineer) போன்றவர்களை எந்த வர்ணத்தில் சேர்ப்பது?




பகவான் மனிதர்களை நான்கு வர்ணங்களாக எதை வைத்துப் பிரித்தார்? “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச:” என்றல்லவா சொல்கிறார். குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரிக்கிறேன் என்று சொல்கிறார்.


இதிலும் ‘கர்ம’ என்பது செய்யும் தொழில் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒருவனது குணத்தை ஒட்டியே அவனது செயல்கள் இருக்கும் என்றாலும், பல சமயங்களில் அவனால் குணத்தை ஒட்டிய செயல்களில் ஈடுபட  வாய்ப்பு கிடைப்பதில்லை. 

ஆழ்ந்து சிந்தித்தால், இங்கு "கர்ம" என்பது வெறும் தொழிலைக் குறிப்பதல்ல; மனிதனின் மனோபாவத்தை வெளிப்படுத்தும் செயல்முறையைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.
 (இதனைப் பற்றி விளக்கமாக பின்னர் பார்ப்போம்).




கீதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அது கூறும் வர்ணங்களைப் பற்றி மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வரும் பக்கங்களில் வர்ணக்கலப்பினைச் சரியாகப் புரிந்துகொள்வதற்காக பல கோணங்களில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை உதாரணத்திற்காக மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
(விளக்கம் 5-ல் வருவது, உண்மையில் நடைபெற்ற ஒரு சம்பவம்)


அவற்றைப் பற்றி சிந்தித்து, சரியான முடிவுக்கு வரவேண்டியது தனி மனிதனின் பொறுப்பாகும். பலவிதமான  விளக்கங்கள் பல திசைகளிலிருந்தும் வரும். அனைத்தையும் உள்வாங்கி, அலசி ஆராய்ந்து, முடிவு செய்யவேண்டியது அந்தந்த மனிதனே; வேறு யாரும் இதில் தலையிட முடியாது; தலையிடவும் கூடாது.




29. வர்ணங்கள் – விளக்கம் 1

வர்ணங்களைப் பற்றிய பல்வேறு வகையான, விரிவான விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன் ஒரு மனிதனின் வர்ணம் எப்படி 
தீர்மானிக்கப்படுகிறது
 என்பதை அறிந்து கொள்வது 
மிகவும் அவசியம்.



புறவுலகிலிருந்து நமக்கு வரும் தாக்கங்களின் காரணமாக நமக்குள் பதிவுகள் ஏற்படுகின்றன. பதிவுகளை ஒட்டி வரும் எண்ணங்கள்  நாம் செய்யும் காரியங்களுக்குக் காரணமாக அமைகின்றன. தொடர்ந்து நிகழும் செயல்கள், பழக்கமாகவும் அதுவே பின்னர் குணமாகவும் மாறிவிடுகிறது.


புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களின் காரணமாக ஏற்படும் பதிவுகள் நிகழும் இடம் மனமென்றால், குணங்கள்  பதிவாகும் இடத்தை ஆழ்மனம் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.

(ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாயத் திரையின் மேற்பரப்பில் பதிவாவதை குணம் என்கிறோம்; அதைத்தான் வாசனாப் பதிவுகள் என்றும் சொல்கிறார்கள். 
பதிவுகள் நிகழும் இடத்தை ஆழ்மனம் என்றும், (Subconscious-mind) என்றும் சொல்கிறோம்)




ஒரு மனிதனின் ‘ஆழ்மனப்’ பகுதியில் பதிவாகும் குணங்களைப் பொறுத்து, அவனது மனோபாவம்  அமைகிறது.


ஒரு மனிதனின் மனதில் எழும் எண்ணங்களுக்கும், வாசனாப் பதிவுகள் மூலம் வரும் எண்ணங்களுக்கும் சாதாரணமாக ஒரு இணக்கம் இருக்கும்.”
ஆனாலும் புறவுலகிலிருந்து வரும் தொடர் தாக்கங்களின் காரணமாக மனம் மூலம் ஏற்படும் பதிவுகளில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படும்.


 
எனவேதான் வர்ணத்தை மனிதனுக்குப் பொருத்தும் பொழுது, அவனது குணத்தையும், அதன் காரணமாக உருவாகும் மனோபாவத்தையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.



  
ரத்னாகர் என்பவனுக்குத் திருடுவதுதான் தொழில். அவனது எண்ணமெல்லாம் திருடுவதில்தான் இருக்கிறது. அவனின் குணமும், மனோபாவமும் அப்படித்தானே இருக்கும். நாரத முனிவர் ஒரு சோதனையின் மூலம் அவனது கண்களைத் திறக்கிறார். அவனுக்கு "தான்" வாழ்ந்து வரும் மோசமான வாழ்க்கைமுறை புரிகிறது.

அவனது மனதிலும், சிந்தனையிலும் மாற்றம் கொண்டுவர  நீண்ட தவம் வேண்டியிருந்தது. அதன் பின்னரே, அவனால் வால்மீகி என்ற பெயரில் இராமாயணம் என்ற அற்புத  காவியத்தை இயற்ற முடிகிறது.





ஒருவரின் வர்ணம் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுவதற்கு, அவனது குணத்திலும், மனோபாவத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும்.

புதிய அனுபவங்கள், புதிய பதிவுகள், புதிய செயல்கள், புதிய பழக்கங்கள்  என பல நிலைகள் தாண்டிய பின்னரே, குணத்திலும், அதை ஒட்டிய மனோபாவத்திலும் மாற்றங்களைக் கொண்டுவர முடிகிறது.

அதற்கு எவ்வளவு முயற்சிகள் தேவைப்படுகின்றன. 

வரைபடத்தில் வாசனாவும், ஆன்மாவும் எங்கு வருகின்றன என்று பார்ப்போமா?





(தொடர்கோடுகள் மனிதன் அவனுக்குள் ஏற்படுத்தும் பதிவுகளைக் குறிப்பது; 
இடைவெளி விட்டு செல்லும் கோடுகள், தான் பெரும் தாக்கத்திற்குப் பதிலாக மனிதன் திரும்பச் செய்யும் தாக்கத்தைக் குறிப்பது)



30. வர்ணங்கள் – விளக்கம் 2

எந்த சமயத்திலும் தர்மத்தின் (அறம்) வழியிலிருந்து நழுவாத சான்றோர் ‘சத்துவ’ குணத்தினர்.

எடுத்த காரியத்தை முனைப்புடன் செயல்படுத்தும் ஆன்றோர் ‘இரஜோ’ குணத்தினர்.

இரண்டிலும் சேராத, சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர் ‘தமோ’ குணத்தினர்.

இந்த மூன்று குணங்களும், அவற்றிலிருந்து வெளிப்படும் மனோபாவமும்தான் மனிதர்களின் வர்ணங்களைப் பிரித்துக் காட்டுகின்றன.


தான், தனது என்ற எண்ணங்களை மறந்து, தர்மத்தின் வழி நடக்கும் சான்றோர் பிராமணர் என்று அழைக்கப்படுகிறார். “அறனறிந்து மூத்த அறிவுடையார்” என்று வள்ளுவர் சொல்லும் பண்புகள் நிறைந்த மனிதராக அவர் இருக்கும் பட்சத்தில், அவரை ஒரு சிறந்த ‘வழிகாட்டியாக’ எடுத்துக்கொள்ளலாம்.




சான்றோரின் வழிகாட்டுதலுடன், தர்மத்திற்கு உட்பட்டு செயலாற்றும் ஆன்றோர்,  க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தன் மற்றும் தன் சொந்தங்களின் நலத்தை விட, பொது நலத்திலேயே அதிக அக்கறை உள்ளவராக இருப்பார்.








தர்மத்தின் வழியிலிருந்து விலகத் தயங்காத, சுயநலமே முக்கியம் என்ற மனநிலை கொண்டவன் யாராக இருந்தாலும், அவன் வைஷ்யன் என்று அழைக்கப்படுகிறான்.




சுயமாகச் சிந்திக்கவும், பொறுப்பேற்று செயல்படவும் பழகாதவன்,
மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பவன் சூத்திரன் (சேவகன்) எனப்படுகிறான்.




ஒரு மனிதனிடம் மூன்று குணங்களின் தாக்கமும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியானால் அந்த மனிதனின் வர்ணத்தை எப்படி தெரிந்து கொள்வது?


சுருக்கமாக சொன்னால் ---

சத்துவ குணம் நிறைந்தவன்                      ..... பிராமணன்

சத்துவ குணத்தின் தாக்கம் கொண்டு செயல்புரிபவன்.. க்ஷத்திரியன்

சத்துவ குணத்தின் தாக்கமின்றி செயல்புரிபவன் ........... வைஷ்யன்

தமோ குணத்தின் ஆதிக்கம் மிகுந்தவன்           ..... சூத்திரன்


(இதனை ஒரு பொதுவான விளக்கமாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்)




31. வர்ணங்கள் – விளக்கம் 3


கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பாருங்கள்.





மனம் மூலமாக ஏற்படும் பதிவுகளைத் தொடர்ந்து, ஒரு மனிதனுக்கு எண்ணம், செயல், பழக்கம் என்ற தொடர் சங்கிலி உருவாகி, முடிவில் ஆழ்மனதில் குணமாக மாறுகிறது.
குணமும், குணத்திலிருந்து வெளிப்படும் மனோபாவமும் உணர்வு மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.




ஆனால், உணர்வு மனதில் ஏற்படும் எண்ணங்களும், ஆழ்மனதில் ஏற்படும் எண்ணங்களும்  ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏனெனில் உணர்வு மனதில் ஏற்படும் பதிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்; ஆழ்மனதில்  ஏற்படும் பதிவுகளோ நீடித்து நிலைத்து இருக்கும்.




இவற்றிற்கிடையே முறையான இணக்கம் இல்லையென்றால், அந்த மனிதன் படும் அவஸ்தைக்கு அளவே கிடையாது. அந்த நேரம்தான் அவன் தன்னை சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரமாகும்.
அந்த முரண்பாட்டை உணர்வதே ஆன்மிக வளர்ச்சியின் தொடக்கம்



32. வர்ணங்கள் – விளக்கம் 4

தர்ம, அர்த்த, காம” என்பது வேதம் சொல்லும் தத்துவச்  சுருக்கம்.  இதனை நான்கு வர்ணத்தாரும் எப்படி கையாளுவார்கள்?



ஒரு மனிதனின் பிறப்பை வைத்தும், அவன் செய்யும் தொழிலை வைத்தும் அவனது வர்ணத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்றால், நாம் சந்திக்கும் மனிதர்களின் வர்ணப்பிரிவினை எப்படித் தெரிந்துகொள்வது?

ஒரு மனிதன் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அவனது சிந்தனை, நடை, பேச்சு, செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டே,
அவனது வர்ணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.




பிராமணன் (வழிகாட்டி): - ஆரவாரத்தை விரும்பாதவன், பணிவோடு (humility) ஒதுங்கி வாழ்பவன், தனிமையை விரும்புகிறவன், புகழுரைக்கு மயங்காதவன், சுயசிந்தனையில் மூழ்கி இருப்பவன், உணர்ச்சிகளை வென்றவன், அறவழியில் நடப்பவன், ஆசைகளுக்கு அப்பாற்பட்டவன்.

இவனுக்கு “தர்ம” மட்டுமே முக்கியம். தனது சிந்தனை, சொல், செயல்  எல்லாவற்றிற்கும்  தர்மம்  மட்டுமே  முக்கியம். பற்றற்று, விருப்பு – வெறுப்பு இன்றி,   எப்பொழுதும்   தர்மத்தைக்      கடைப்பிடிப்பவன்.

“அர்த்த, காம” பற்றிய கவலை ஏதும் கிடையாது.




க்ஷத்திரியன் (பொதுநலவாதி): - தர்மத்தின்  வழி நடப்பவன், நியாயத்திற்காக போராடுபவன், பிறர் நலம் பேணுபவன், தர்மத்தின் தாக்கம் இருப்பதால், எப்பொழுதும் உயர்வான காரணங்களுக்காக போராடுவதில் தன்னை வருத்திக் கொள்பவன், ஆங்காரத்தைக் கட்டுப்படுத்த முடியாதவன், எந்த வெற்றியிலும் திருப்தி அடையாதவன், உணர்ச்சி வசப்படுபவன், பெரியோரின் துணையை நாடுபவன், தன்னை மேன்மைப்படுத்தத் துடிப்பவன், தன்  பெயருக்குக் களங்கம் வரக் கூடாது என்பதில் அக்கறை செலுத்துபவன்.

இவனுக்கு  “அர்த்த, காம”  இரண்டும் வேண்டும்.  ஆனால், அவை ‘தர்மத்திற்கு’ உட்பட்டிருக்க வேண்டும்
தர்மத்தை  எதிர்த்து “அர்த்த, காம” என்றால் மனம் சஞ்சலப்படும்.




வைஷ்யன் (சுயநலவாதி): - தனது நலனிலேயே குறியாக இருப்பவன், வலியோரை புகழ்பவன், எளியோரை இகழ்பவன், உணர்ச்சி வசப்படுபவன், புலன்களை கட்டுப்படுத்த முடியாதவன்.

இவனுக்கும்  “அர்த்த, காம”  இரண்டும்  முக்கியம். ஆனால், அவற்றை அடைவதற்கு, “தர்மம்” தடையாக இருக்கிறதென்றால், அதனை ஒதிக்கித் தள்ள  தயங்கமாட்டான். ஏனெனில், இவனுக்கு சுய லாபமே முக்கியம். ஆகவே இவனது முயற்சி அனைத்தும், தனது வசதியைப் பெருக்குவதற்காகவே இருக்கும்.




சூத்திரன் (சேவகன்):- சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவன், புலன்களுக்கு அடிமையானவன், வாழ்வின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவன், சோம்பல்      மிகுந்தவன், அடுத்தவரின் கட்டளைக்குக்  கட்டுப்பட்டுச்  செயல்படுபவன்.

இவனுக்கு “தர்மம், அர்த்த” இரண்டிலும் ஆர்வம் இருக்காது.





33. வர்ணங்கள் – விளக்கம் 5

ஒரு மனிதனின் குணமும், மனோபாவமுமே அவனது வர்ணத்தை நிர்ணயம் செய்கின்றன; அவனது தொழில் பல நேரங்களில் அதனைப் பிரதிபலிப்பதில்லை.



அவன் அந்த பெரிய உணவகத்தில் சர்வராகப் பணியாற்றுகிறான். அங்கு உணவு அருந்த ஒரு குடும்பம் வந்தது
பாட்டி, மகள், மகளின் ஐந்து வயது மகன், இடுப்பில் கைக்குழந்தை மற்றும் நிறைய ‘லக்கேஜ்’கள். மிகவும் சிரமப்பட்டு உள்ளே வந்து விடுகிறார்கள்.

அவர்கள் தங்களது சாப்பாட்டை முடித்தவுடன், அந்தக் குறிப்பிட்ட சர்வர், அவர்களுக்கு உதவியாக அவர்களுடைய உடமைகள் அனைத்தையும் சுமந்து சென்று
அவர்களை டாக்ஸியில் ஏற்றிவிட்டு வருகிறான்.   அவர்களின்  பாரத்தைக் குறைப்பதில், அவன் இன்பம் காண்கிறான்.

 அவன் கூட வேலை செய்யும் மற்ற சிப்பந்திகள் அவனைக் கேலி செய்கிறார்கள். அவன் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. அவனது வர்ணம் எதுவென்று சொல்வது?



தொழிலை வைத்துப் பார்த்தால் அவன் சூத்திரன்;

டாக்ஸியில் ஏற்றிவிட்டு, எதையாவது எதிர்பார்த்து, தலையைச்  சொறிந்துகொண்டு நின்றிருந்தால் அவன் வைஷ்யன்;

தனது உடல் வலியைப் பொறுத்துக்கொண்டு, பிறரது கேலியையும் பொருட்படுத்தாமல் பிறருக்கு உதவுவதால் அவன் க்ஷத்திரியன்.

அவனை க்ஷத்திரியன் என்றுதானே அழைக்கவேண்டும்?




34. வர்ணங்கள் – விளக்கம் 6

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான “வட்டம்” உண்டு. அவனது வாழ்க்கைச் சக்கரம் சுழலும் விதத்தைப்  பொறுத்து அது அமைகிறது. அந்த “வட்டம்”  மனிதனின் வர்ணத்தை எப்படி நிர்ணயம் செய்கிறது?



பிராமணன்: - எந்த வட்டத்திலும் சிக்காதவன்; தனக்கென்று எந்த வட்டமும்  போட்டுக் கொள்வதில்லை; தப்பித் தவறி மற்றவர்கள் அவனைச் சுற்றி வட்டம் ஏதேனும் போட்டாலும், அதனை உடைத்தெறிபவன்.



க்ஷத்திரியன்: - துவக்கம் எந்த வட்டத்தில் இருந்தாலும், காலம் செல்லச் செல்ல தனது வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பவன்.



வைஷ்யன்: - தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு, அதற்குள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்பவன்; பல நேரங்களில் தவறான வழிகளில்  செல்வதற்கும் தயங்காதவன்.



சூத்திரன் : தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொள்ளத் தெரியாதவன்; தனக்காகப் பிறர் அமைத்துத் தரும் வட்டத்திற்குள் இருந்து கொண்டு உழன்று வருபவன்.



35. வர்ணங்கள் – விளக்கம் 7

மனிதனின் பிறப்பிற்கும் அவனது வர்ணப்பிரிவிற்கும் சம்பந்தம் உண்டு.

மனிதனின் பிறப்பிற்கும் அவனது வர்ணப்பிரிவிற்கும் சம்பந்தம் இல்லை.

மேலே உள்ள இரண்டு கூற்றிலும் எது சரி? இரண்டுமே சரிதான், இருவேறு கோணங்களில் இருந்து பார்த்தால்.





முதலில் மனிதனின் பிறப்பிற்கும், அவனது வர்ணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஏற்கனவே கூறியது போல் ஒரு மனிதனின் குணம், மனோபாவம் இவற்றைப் பொறுத்து, அவனது வர்ணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனோபாவம் குணத்தைப் பொறுத்தது. குணம் எதனைப் பொறுத்தது? குணத்திற்கு ஆதாரமாக இருப்பது சொந்த அனுபவங்களின் காரணமாக ஏற்படும் பதிவுகள்தானே? மனம் பெறும் அனுபவங்களின் காரணமாகவே பதிவுகள் நிகழ்கின்றன. அப்படியானால் அந்த அனுபவங்கள் எந்த வயதில் ஆரம்பமாகின்றன? ஐந்து வயதுக்கு மேலேதான் ஒரு குழந்தை சுயமாக அனுபவங்களைப் பெறுகிறது. அப்படி இருக்கும்பொழுது, அவனது வர்ணத்தைப் பிறப்போடு எப்படி சம்பந்தப்படுத்த முடியும்?




இப்பொழுது மனிதனின் பிறப்பிற்கும், வர்ணத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பது எப்படி என்று பார்ப்போம்.

மனிதன் இறப்பதற்கு முன், வாசனா கூட்டிற்குள் சிறைப்பட்டிருக்கும் ஆன்மா, கூட்டிலிருந்து விடுதலை அடையவில்லை என்றால், அந்த மனிதனின்  அடுத்த பிறவி தவிர்க்க முடியாததாகிறது. வேதாந்தப் பார்வையில், எந்த வாசனைகளுடன் மனிதன் உடலை விடுகிறானோ, அதே வாசனைகளின் தொடர்ச்சியோடு அடுத்த பிறவியும் அமைகிறது.

 அப்படியானால், மனிதனின் பிறப்பிற்கும், அவனது வர்ணத்திற்கும் சம்பந்தம் உண்டு தானே!





மனிதன் தனது இளமைப் பருவத்தில், குறிப்பாக ‘டீன்-ஏஜ்’ (teenage) வயதில், பலவித குழப்பங்களுக்கு ஆளாகி அல்லல்படுவதற்கான ஆணிவேர் இங்குதான் இருக்கிறது. கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

தோட்டத்தில் ரோஜா மலர்ந்து மணம் பரப்புகிறது. அது மொக்காக இருந்தபோது அதனால் மணம் பரப்ப முடியவில்லை; மொட்டாக மாறியபோதும் முடியவில்லை; ஆனால் அது மலர்ந்ததும், அது நினைத்தாலும், அதனால் மணம் பரப்பாமல் இருக்க முடிவதில்லை.

ஒரு வேளை, அந்த மலர் மலரும் பொழுது, அதற்குள்ளே வேறொரு மணம் நுழைய முயற்சி செய்தால், என்ன ஆகும்?




மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள், மனிதன் பெறும் அனுபவத்தைப் பொறுத்து, மாறிக் கொண்டேயிருக்கும். எனவே அதன் காரணமாக ஏற்படும் சிந்தனைகளும் அடிக்கடி மாறும் தன்மை உடையன. ஆனால் ‘வாசனா’ பெட்டகத்தில் உள்ள பதிவுகள் நீடித்து நிற்பவை. அந்த பதிவுகள் எளிதில் மாறுவதில்லை.



சாதாரணமாக ஒரு மனிதனின் மனதில்  எழும் எண்ணங்களுக்கும், குணம் மற்றும் மனோபாவம் காரணமாக வரும் சிந்தனைகளுக்கும் இடையே இயல்பாக ஒரு இணக்கம் இருக்க வேண்டும்.


ஆனால் “டீன்-ஏஜ்” பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது,
இப்பிறவியில் புதிதாகப் பதிவாக வேண்டிய குணத்திற்கும், முன் பிறவியில் ஏற்கனவே பதிவாகியிருந்த குணத்திற்கும் இடையே ஏற்படும் மாறுபாடு
‘வாசனா’ பெட்டகத்தில் அதாவது ஒரே இடத்திலேயே வருகிறது. அந்த நேரத்தில் எழும் பிரச்சனைகள் மிகவும் ஆழமானவை.

நல்லதொரு வழிகாட்டுதல் இல்லையென்றால், அந்த இளமைப் பருவம் எவ்வளவு சிதலமடைந்து விடுகிறது!?



36. வர்ணங்கள் – விளக்கம் 8                    
வர்ணக் கலப்பின் தன்மைகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், பிராமண, சூத்திர வர்ணங்களைச் சேர்ந்தவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

 ஆனால் க்ஷத்திரிய, வைஷ்ய வர்ணங்களைச் சேர்ந்தவர்களை மற்றவர்களால் மட்டுமல்ல, அவர்களாலேயே கூட புரிந்து கொள்வது கடினமான ஒன்று.

இருந்தாலும் இருவருக்குமிடையே  உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை இனம் பிரித்துப் பார்ப்போமா?



இரஜோ குணம்:     இருவருக்கும் பொதுவானது.

தர்மம்:   இருவருக்கும் அதன் அர்த்தம் தெரியும்; இருந்தாலும் எப்பொழுதும் தர்மத்தின் வழி நடக்க விரும்புபவன் க்ஷத்திரியன் மட்டுமே.

அர்த்த, காம:  இருவருக்கும் நாட்டமுண்டு; இருப்பினும், அவற்றை  அடைவதற்கு தர்மம் தடையாக இருந்தால், அதனை  விலக்கிவிட வைஷ்யன் தயங்கமாட்டான்.

பெரியோர் துணை:  க்ஷத்திரியன் சான்றோரின் துணையை நாடி நிற்பவன்.

போராடும் குணம்:   இருவருக்கும் பொதுவானது;  ஆனாலும் தோல்வி    வரும் எனத் தெரிந்தால்,  வைஷ்யன் போராட்டத்தில்  இருந்து ஒதுங்கிவிடுவான்.     
             
மானம் காத்தல்:   க்ஷத்திரியன் இதில் கவரிமானைப் போன்றவன்.  எதை     இழந்தாலும், மானத்தை இழக்க விரும்ப மாட்டான்.




 க்ஷத்திரியனுக்கும் வைஷ்யனுக்கும் இடையேயான மிகப் பெரிய வேறுபாடு திறமையில் அல்ல; தர்மத்தின் மீது கொண்டுள்ள பற்றில்தான் இருக்கிறது.






37. மனிதனின் அடுத்த நிலை    

வர்ண தர்மங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட நாம், நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் வர்ணத்தை நிர்ணயிப்பதற்கு அவனது “அந்தக்கரணங்களின்” செயல்பாடுகளே காரணமாக அமைகின்றன.

அவற்றின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்ட நாம், அவற்றை எப்படி மாற்றியமைப்பது என்ற உண்மைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.



ஒரு மனிதன் எந்த வர்ணத்திலிருந்தாலும் “அந்தக்கரணங்களின்” செயல்பாடுகளை மாற்றி அமைக்கும் வித்தைகளைக் கற்றுக் கொண்டால் மட்டுமே, அவனால் வர்ணப் பிரிவில் உயர முடியும்; அதற்குத் தேவை மன உறுதியும், விடாமுயற்சியும் தான்.




அண்டங்கள் தோன்றி நெருப்பு கோளங்கள் குளிர்ந்தபின், கண்ணுக்கும், புலனுக்கும் தெரிந்தவை கல்லும், மண்ணும்தான். ஆனால் அவற்றினூடேயும்   உயிர்நிலை இருந்தது என்றால் யார்தான் ஒப்புக்கொள்வார்கள்?


அடுத்த நிலையில் புல், பூண்டு, செடி, கொடி, மரம் என்று  தாவர உலகம்   தோன்றி வளர்ந்த பொழுது, அவற்றிற்கு உயிர் இருந்தது என்பதோடு, சிறிதளவு உணர்வும் இருந்தது
என்பதை அறிந்து கொள்கிறோம்.


அடுத்து ஊர்வன, நடப்பன, பறப்பன என விலங்கியல் விரிவடைந்தபொழுது, அவற்றிற்கு உணர்ச்சி மட்டுமல்ல, அறிவும் செயல்படுவதைத் தெரிந்துகொள்கிறோம்.
எந்த நிலையிலும் அவற்றின் உணர்ச்சியே மேலோங்கி இருப்பதையும் புரிந்து கொள்கிறோம்.



பரிணாம வளர்ச்சியில் அடுத்து வந்த மனிதன் உணர்ச்சி, அறிவு இரண்டையும் பயன்படுத்தினாலும், சூத்திர வர்ணத்திலிருந்து மேலே வரவர அவனது உணர்ச்சிகள் அறிவுக்குக் கட்டுப்பட்டு இருப்பதைப் பார்க்கிறோம்.




அறிவு வளர வளர உணர்ச்சி கட்டுக்குள் வந்து அடங்குவதைப் பார்க்கும்பொழுது, அடுத்த நிலையில் அறிவு மட்டுமே மேலோங்கி இருக்கும் நிலை வரலாம்  அல்லவா?

அது “அறிவை” அறிவால்  அறியும் நிலையாகும். அந்த நிலையில் திருமூலர் கூறுவது போல் “கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்காக” மாறிவிடும்.




38. உணர்ச்சியும், உணர்வும்


அறிவு மேலோங்கிய நிலையில் ஒரு மனிதனின் உணர்ச்சி எந்த அளவில் இருக்கும்? 

வரைபடத்தைப் பாருங்கள்.


மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் உணர்ச்சியாகவும், புத்தி மூலமாக  ஏற்படும் பதிவுகள் அறிவாகவும் உருவெடுக்கின்றன.


ஒரு மனிதன் சூத்திர வர்ணத்தில் இருக்கும்பொழுது அறிவு மிகமிகக் குறைவாகவும், உணர்ச்சி மிகுந்தும் காணப்படுகிறது. உணர்ச்சி பெட்டகமும், அறிவு பெட்டகமும் ஒன்றுகொன்று தொடர்பின்றி, இடையே உள்ள தடுப்புச் சுவர் கனமாக மாறிவிடுகிறது.




ஆனால் மனிதன் தன்  வர்ணப்பிரிவில் உயர்ந்து வரும்பொழுது, அவனது உணர்ச்சி பெட்டகத்திற்கும், அறிவு பெட்டகத்திற்கும் உள்ள தடுப்புச் சுவர் மெலிந்து மெலிந்து முடிவில் முழுவதுமாய் கரைந்து போகிறது. இதன் விளைவாக  அவனது உணர்ச்சிகள் அறிவோடு இரண்டற கலந்து விடுகின்றன. அறிவோடு கலந்து விட்ட மனதில் உணர்ச்சிகளுக்கு இடம் கிடையாது.




உணர்ச்சிகள் மனதின் அடித்தளத்திலிருந்து அறிவுக்குக் கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் வெளிவரும். எனவே அவை நல்ல உணர்ச்சிகளாகவும் இருக்கலாம்; கெட்ட உணர்ச்சிகளாகவும் இருக்கலாம். 


ஆனால் மனம்  புத்தியோடு  இரண்டறக்  கலந்தபின், அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. அவனிடமிருந்து உணர்வுகள் மட்டுமே வெளிப்படும்.





அறிவுக்கு அடங்காத மனம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்; அறிவோடு கலந்த மனமோ உணர்வுகளை மட்டுமே 
வெளிப்படுத்தும்.




உணர்ச்சிகளை  விட உணர்வுகள்  வெளிப்படுவதே நல்லது; ஏனெனில் உணர்வுகளில் கெட்ட உணர்வு என்று எதுவும் கிடையாது.



39. வாசனாவின் கறை


இறைவனைத் தேடி வெளியில் அலையும் மனிதனால், தனக்குள்ளேயே இருக்கும் ஆன்மாவை ஏன் தரிசிக்க முடியவில்லை? ஆன்மாவை மூடியிருக்கும்  மாயத்திரையின் மேல் வாசனா என்னும் கறைகள் நிறைந்து, ஆன்மாவின் ஒளியைத் தரிசிக்க முடியாமல் செய்துவிடுகிறது.




உள்ளே காண முடியாத ஒளியை,  வெளியில் தேடி அலையும் மனிதன் நிரந்தரமல்லாதவற்றை நிஜமென்று நம்பி   பொய்யான இன்பங்களில் மூழ்கி, வாழ்க்கையின் நோக்கத்தையே தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறான்.
நிரந்தரமல்லாததை நிரந்தரமானது என்று தவறாகக் கருதுவதே "மாயை" என வேதம் கூறுகிறது.


 

கதவைத் திறந்தால்  வெளியே ஓடிச் செல்லும் குழந்தையைப் போல் வெளியே ஓடித்திரியும் மனதை உள்நோக்கித் திருப்ப வேண்டும்.

 ஆழ்மனதில் படிந்துள்ள வாசனா கறைகளைக் களைவதற்கு, மனதை முதலில் உள்முகமாகத் திருப்பவேண்டும். மற்ற முயற்சிகளெல்லாம் அதற்குப் பின்னர்தான்.



முயற்சி செய்தால் வர்ணப்பிரிவில் கொஞ்சம் கொஞ்சமாக உலாம்.
வர்ணப்பிரிவின் உச்ச நிலையை அடைந்தால், ஆன்மாவை உணர்ந்து கொள்ளலாம்.




 40. நோயும், மருந்தும்


"பிணிக்கு மருந்து பிறமன் –
 அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து”

மனிதனுக்கு வரும் எந்தவொரு நோய்க்கும், மருந்து பிறிதொரு இடத்தில் இருந்து வருகிறது. ஆனால், காதலியால் வரும் நோய்க்கு அவள்தான் மருந்து என்கிறார் வள்ளுவர்.



நோயும் அதுவே, மருந்தும் அதுவே எனக் காதலியை வள்ளுவர் சொல்வது போல், வேறு ஏதாவது உண்டா என்றால், அது மனிதனின் மனம்தான்.




மனிதனை ஆட்டுவித்து அவனை சாத்தானாக மாற்றும்  அவனது மனம்தான், அவனை தெய்வநிலைக்கு உயர்த்தக்கூடிய சக்தியையும் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கான வித்தைகளை மனிதன் அறிந்திருக்க வேண்டும்.



இருள் சூழ்ந்த மனதை, அருள் சுரக்கும் மனமாக மாற்றும் வித்தையைக் கற்றுத் தருவதுதான் ஆன்மிகம்.



எந்தெந்த வித்தைகளை எல்லாமோ கற்றுக் கொள்ளவேண்டும் என்று துடிக்கின்ற நாம், சுய மேம்பாட்டிற்காக ஆன்மிகம் சொல்லும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?


 அவற்றைத் தெரிந்துகொள்ளுமுன், நமது வாழ்க்கைப் பாதையில் நமது பயணத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.



41. வாழ்க்கை நெறியும், வாழ்க்கைத் தரமும்


ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவதில் வியப்பில்லை. அதன் நோக்கமே வாழ்வின் இன்பங்களை அனுபவிக்கத்தானே! ஆனால் வாழ்க்கைத் தரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, மனிதன் வாழ்க்கை நெறிக்கும் கொடுக்க வேண்டாமா?



ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாழ்க்கைத் தரம், வாழ்க்கை நெறி இரண்டுமே முக்கியம் என்றாலும், இரண்டிற்குமிடையே சில வித்தியாசங்கள் உண்டு.




வாழ்க்கைத் தரம் மரத்தின் கிளை என்றால், வாழ்க்கை நெறி அதன் வேர்.  அது கட்டிடம் என்றால், இது அஸ்திவாரம்.



வாழ்க்கை நெறியை மறந்து, வாழ்க்கைத் தரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் மனிதன் தனது வர்ணப் பிரிவில் கீழே இறங்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.



அதே சமயம் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதன் வர்ணப் பிரிவில் மேலே ஏறுகிறான். அதன் காரணமாக, அறிவிற்கெல்லாம் அறிவான பேரறிவை உணர்ந்துகொள்ள அவனுக்கு நிறைய வாய்ப்புகள் அமையும்.





வர்ணப்பிரிவில் மேலே வருவதற்கு, வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியம்.





42. நேற்று, இன்று, நாளை


நாம் எப்படி இருந்தோம்?            
      -    அது கடந்த காலம்

நாம் எப்படி இருக்கிறோம்?       
    -    அது நிகழ்காலம்

நாம் எப்படி இருப்போம்?            
 -    அது எதிர்காலம்



நாம் எப்படி இருந்தோம் என்பது நடந்து முடிந்த கதை. அதை இப்பொழுது மாற்ற முடியாது.


நாம் எப்படி இருக்கிறோம் என்பதை இப்பொழுது மாற்ற முடியாது. ஏனெனில் நிகழ்காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கான பதிவுகள் ஏற்கனவே நமக்குள் பதிந்துவிட்டன.   



நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து, எதிர்காலத்தில் இப்படித்தான் இருப்போம் என்று சொல்வதும் சரியல்ல. ஏனெனில் எதிர்காலத்தை நம்மால் மாற்ற முடியும். ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் நிகழ்காலத்தில்தான்  நடத்த வேண்டும்.

     “The present is the product of the past;
      The future is the modification of the past in the present"                       
---   Swami Chinmayanandha    




இறைவன் அருள் இன்றி எதுவும் நடக்க முடியாது என்றாலும், மனிதனின் முயற்சியும் மிகவும் முக்கியம். முயற்சி இல்லாமல் சுயமேம்பாடு இல்லை.



43. கடமையும், பலனும்


“கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்கிறது கீதை. இதனை நையாண்டி செய்பவர்களும் உண்டு. மாதம் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, சம்பளத்தை எதிர்பாராதே என்றால் எப்படி என்பார்கள். கீதாச்சாரியன் உரைக்கு இப்படியா அர்த்தம் கொள்வது?



‘நீ உனக்குரிய கடமையை செவ்வனே செய்து வா; பலனை எதிர்பார்த்து இருக்காதே; ஏனெனில் நீ எதிர்பார்க்கும் பலன் எப்பொழுது, எவ்விதம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது’ எனப் பெரியோர்கள் சொல்கிறார்கள்.



பலன் என்பதற்கு “லாபம்” என்று ஓர் அர்த்தம் இருப்பதோடு, “விளைவு” என்று ஓர் அர்த்தமும் உண்டு. கடமையைச் செய்வது மட்டும்தான் நம் கையில் உள்ளது. ஏனெனில் அதன் விளைவு நாம் விரும்பியபடி அமைவது அல்ல; அதை நாம் முடிவு செய்வதும் அல்ல.”




இன்னுமொரு விளக்கமும் உண்டு.
“செய்’ என்பது நிகழ்காலத்தில் நடப்பது; ‘எதிர்பாராதே’ என்பது எதிர்காலப் பலன்களுக்காக  காத்திருப்பது. 

மனிதன் நிகழ்கால நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால நிகழ்வுகளுக்காக கவலைப்பட்டால், அவனது வளர்ச்சி தடைப்படும் என்பதனால் தான், ‘எதிர்பாராதே’ என்கிறது கீதை.
 “Be present in the present”.



                 44. வழித்தட மாற்றம்


சாலையில் செல்லும் வாகனத்தை ஓட்டுபவருக்கும், தண்டவாளத்தில் செல்லும் இரயிலை ஓட்டுபவருக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.


வாகன ஓட்டுநரால் வாகனத்தைச் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கும், ஒரு சாலையிலிருந்து வேறொரு சாலைக்கும் ஓட்டிச் செல்ல முடியும்.”


ஆனால் இரயிலை ஓட்டுபவருக்கோ தடத்தை மாற்றும் அதிகாரம் இல்லை. அவரது கடமை  இரயிலை ஓட்டுவதோடு சரி; தடத்தை மாற்றும் பொறுப்பை வேறு ஒருவர் எடுத்துக் கொள்கிறார்.




ஆன்மிக வாழ்க்கையும் அதைப் போன்றதுதான். நமது குணத்தை மேம்படுத்த முயற்சி செய்தால் மட்டும் போதும். வர்ணப்பிரிவில் உயர்வது மிக இயல்பாக நம்மை அறியாமலேயே தானே நடைபெறும். அது எப்படி, எப்போது என்று ஏங்கித் தவிக்காத வரையில், நமது வாழ்க்கையில் குழப்பங்கள் ஏதும் இருக்காது.

இந்த உண்மையைத் தெரிந்துகொள்வது சுயமேம்பாட்டிற்கு மிகவும் நல்லது.



                45. கடலும், அலையும்


ஆழ்கடலில் படகு அமைதியாக நிற்கிறது. அதே படகு கரையை நெருங்கும் பொழுது அலைகள் அதிகம் இருப்பதால் தத்தளிக்கிறது.



மனிதனின்  நிலையும் அதுதான். சம்சார சாகரத்தில் சமுதாய அமைப்பு ஏற்படுத்தும் கொந்தளிப்புகள் கடற்கரையின் அருகில் உள்ள அலைகளைப் போன்று அதில் மாட்டிக்கொண்ட மனிதனைத் தத்தளிக்க வைக்கிறது. அந்தச் சம்சார சாகரத்திலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.



ஆனால் தனது மனதை அவற்றிலிருந்து விலக்கி இறைவன்பால் செலுத்தினால், ஆட்டமில்லாத அமைதியான வாழ்க்கையை அமைக்க முடியும். அப்படிச் செய்ய முடியுமா என்றால் முடியும் என்கிறார் பரமஹம்சர்.

எப்படி வீட்டுவேலையில் ஈடுபட்டிருக்கும் தாயின் மனம் எப்பொழுதும் தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையையே நினைத்துக் கொண்டிருக்கிறதோ, அதைப் போல எந்த வேளையில் ஈடுபட்டிருந்தாலும், நமது மனமும் எப்பொழுதும் இறைவனேயே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்கிறார்.



இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் கொண்டுள்ள உயரிய குறிக்கோளில் மனதை செலுத்தலாம்.

Be in the ocean; not on the waves”.




              46. மனமும், சிலையும்


ஓவியன் திரைச்சீலையில் ஓவியம் வரைகிறான். சிற்பியோ கல்லில் சிலையை வடிக்கிறான். இரண்டுமே கலையின் வடிவங்கள்தான். இரண்டுமே நாம் பார்த்துப் பார்த்து இரசிப்பவைதான். இருந்தாலும் இரண்டிற்குமிடையே முக்கியமான ஒரு வித்தியாசம் உண்டு.    




ஓவியன் திரைச்சீலையில் தனக்குப் பிடித்தமான உருவத்தைக் கொண்டுவர, தேவையான வர்ணங்களை அதில் தீட்டுகிறான்.

   .

சிற்பியோ கல்லில் தனக்குப் பிடித்தமான உருவத்தைக் கொண்டுவர, தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வெளியே தள்ளுகிறான்.

மனிதனின்  செயல்பாடுகள் ஓவியனைப் போன்று இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக ஒரு சிற்பியைப் போன்று இருக்க வேண்டும்.



மனிதன் தான் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறானோ அதுபோல் ஆகமுடியும். அப்படி ஆவதற்கு அவன் செய்ய வேண்டியதெல்லாம் தனக்குத் தேவையில்லாத விஷயங்களைத் தன்னிலிருந்து  நீக்குவதுதான்.


  47. ஒப்பீடு

சுயமேம்பாட்டில் ஈடுபடும் எந்த மனிதனும் தன்னை அடுத்தவனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. நமக்கு ஒப்பீடு செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அதோடு மட்டுமல்ல, தன்னைத்தானே ஒப்பிட்டுப் பார்ப்பது கூட – கடந்த காலத்தில் எப்படி இருந்தோம், இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்பது போன்ற ஒப்பீடுகளும் – தவிர்க்கப்பட வேண்டியவை.

எந்த மலரும் மற்றொரு மலரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. மரம், செடி, கொடி என்று இயற்கையின் எந்த அம்சத்தை எடுத்துக் கொண்டாலும், அது
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்பதைக் காணலாம். தனது வளர்ச்சியின் பல்வேறு நிலைகளையும் அது ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.




ஒப்பீடு செய்வதால் என்னவாகும்?

ஒப்பீடு செய்யும் பொழுது மனதில் பல்வேறு சந்தேகங்கள் வரும். அதன் காரணமாக மனதில் சஞ்சலம், வெறுப்பு, கோபம், சுயபச்சாதாபம் போன்று பல்வேறு குழப்பங்கள் தோன்றும்.

மனதில் குழப்பங்கள் ஏற்பட்டால், சுயமேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபடுவது மனிதனுக்குக் கடினமான காரியமாகிவிடும்.








           48. தவறெனத் தெரிந்தால்


நாம் தவறு செய்யும் பொழுது அதனை முதன்முதலில் சுட்டிக்காட்டுவது யாராக இருக்கும்? முதன்முதலில் சுட்டிக்காட்டுவது நமது மனமாகத்தான் இருக்கும்.

தவறு என்பது பல நேரங்களில் செயலாக மட்டுமின்றி, விளைவாகவும் இருக்கும்.



நாம் செய்தது தவறு என்று மற்றவர்கள் சொல்லி, நமது மனமும்  அதனை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தால், நாமும் அதனை  ஒப்புக்கொள்கிறோம். இல்லையெனில் நாம் அதனை எளிதில் ஒப்புக்கொள்வதில்லை.



தவறு என்று தெரிந்தவுடன், நமது புத்தியின் மூலம் அதனை உறுதி செய்ய வேண்டும். பின்னர் தவறுக்குக் காரணமாக இருந்த செயலைத் திரும்பவும் செய்யாதிருக்க உறுதி பூண வேண்டும். அந்த உறுதியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.



உறுதிபூண்டு, பின் அதனைக் கடைப்பிடிக்கத் தவறினால், தவறான செயல் திரும்பத் திரும்ப செய்யப்பட்டு, அதுவே பழக்கமாக மாறி, முடிவில் ஆழ்மனதில் குணமாக பதிவாகிவிடுகிறது.

அதன்பின் நாம் செய்யும் தவறுகளை நம்மால் உணர முடியாதது மட்டுமல்ல, மற்றவர்கள் சுட்டிக்காட்டும் பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.


                      49. துணை நலம்


சுயமேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபடும்பொழுது, பல நேரங்களில்  என்ன செய்வது என அறியாது தடுமாற நேரிடும். நாம் செல்லும் பாதை சரியானது தானா, அல்லது தவறான பாதையில் செல்கிறோமா என்பதே புரியாது.

அந்த நேரங்களில் நமக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருப்பது சான்றோர் இயற்றிய, காலத்தை வென்ற மறைநூல்களே. இருந்தாலும், பக்குவப்படாத மனமுடைய மனிதனால், சுட்டெரிக்கும் உண்மைகளைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் மறைநூல்களை சந்திக்கும் தைரியம் இருக்காது.



எனவேதான், மறைநூல்களில் புதைந்து கிடக்கும் உண்மைகளைத் தனக்குப் புரியுமாறு எடுத்துரைக்கும் பெரியோரைத் தேடிப் பார்த்து, தெளிந்து, தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.

அப்படித் தேர்ந்து தெளிந்த பின், நமது கேள்விகளுக்கு அவர்கள் மூலமாக விடை தேடலாமே தவிர, அவர்களையே சோதிக்கும் நிலைக்கு நாம் போகக்கூடாது.

தக்க பெரியோரின் துணை கிடைத்துவிட்டால், அதுவே சுயமேம்பாட்டில் பாதி வெற்றிதான்.

                                                                                                                                                                                         
50. சுயமேம்பாட்டிற்கான உத்திகள்


மனம் தரும் நோய்க்கு மனமே மருந்து என்று பார்த்தோம். அதை மருந்தாக்குவது எப்படி என்று பார்க்கவேண்டாமா?



கீதை நெடுகிலும், சுயமேம்பாட்டிற்கான உத்திகள் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறிய வேண்டிய விஷயங்கள். சரியாகப் புரிந்து கொள்ளாதவரை, அவை புதிர்களாகவே இருக்கும்.



கீதை மனிதர்களை குணங்களின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கிறது.

சத்துவ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் அடுப்பில் உள்ள புகையைப் போன்றது. ஊதினால் விலகிவிடும் தன்மையது. கறைகளைப் போக்குவது சுலபம் என்கிறது.


இரஜோ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் கண்ணாடியில் படிந்த தூசியைப் போன்றது. தண்ணீர் விட்டுக் கழுவி, துணியை வைத்து சுத்தமாகத் துடைக்க வேண்டும். கறைகளைப் போக்கச் சிறிது முயற்சி தேவையென உணர்த்துகிறது.


தமோ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் சினையில் உள்ள கருவைப் போன்றது. கரு வளர, நல்ல போஷாக்கு கொடுத்து, நல்ல முறையில் கவனித்து வர வேண்டும். கறைகளைப் போக்கக் கால அவகாசம் தேவையென்பதால், அசாத்திய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்கிறது.




மனிதர்களை குணங்களின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கும் கீதை, குண-கர்மாவின் அடிப்படையில் நான்கு விதமாகப் பிரிக்கிறது.

சத்துவ குணம் மிகுந்த பிராமணன் விகிதாச்சாரமுறையில் அந்த வர்ணத்தில் கீழ்நிலையில் இருந்தாலும், சுயமேம்பாடு என்பது அவனுக்கு மிக இயல்பாக நடைபெறும்.

சத்துவகுண தாக்கமுள்ள இரஜோகுணவாதியான க்ஷத்திரியன் தர்மநெறிகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பவன்; இருந்தாலும் வாழ்வியல் தத்துவங்கள் அவனுக்குப் புரியாத புதிராகத்தான் இருக்கும். 
அவை அவனுக்குப் புரிபட வேண்டுமென்றால், சுயமேம்பாட்டு உத்திகளில் அவன் கவனம் செலுத்த வேண்டும்.

சத்துவகுண தாக்கத்தை நிராகரிக்கத் துணியும் இரஜோகுணவாதியான வைஷ்யன், மண்ணுலக வாழ்க்கைக்கு  முக்கியத்துவம் கொடுப்பவன். தர்ம நெறிகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியற்ற அவன், சுயமேம்பாட்டைப் பற்றி எப்பொழுது கவலைப்படுவான்? 
பூவுலகம் ஒரு புண்ணுலகம் என்ற உண்மை அவனுக்கு எப்போது புரிகிறதோ, அன்றுதான் சுயமேம்பாட்டில் ஆர்வம் ஆரம்பமாகும்.”



தமோகுணவாதியான சூத்திரன் சுயமேம்பாடு என்றால் என்னவென்றே தெரியாதவன். ஒருவேளை தக்க பெரியோரின் அருள் கிடைத்து, அவரது தலைமையில் நம்பிக்கை வைத்து அவர் காட்டிய வழியில் தனது பயணத்தைத் தொடர்ந்தால், அவனது சுயமேம்பாடு அவனே அறியாமல் நடந்தேறலாம்.




51. அந்தக்கரணங்கள்


நன்கு யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய சாதனையாக இருந்தாலும், அது முதலில் தோன்றுவது மனதில்தான். (Great things are done first in mind). மனிதன் எதை நினைக்கிறானோ, அதுவாகவே ஆகிறான். அது எப்படி சாத்தியமாகிறது என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.



வரைபடத்தைப் பாருங்கள்.            

அந்தக்கரணங்களின் செயல்பாடுகள்            
              



(தொடர்கோடுகள் மனிதன் அவனுக்குள் ஏற்படுத்தும் பதிவுகளைக் குறிப்பது; 
இடைவெளி விட்டு செல்லும் கோடுகள், தான் பெறும் தாக்கத்திற்கு மனிதன் திரும்பச் செய்யும் தாக்கத்தைக் குறிப்பது)

 


நாம் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும், சுயமேம்பாட்டிற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், 
“அந்தக்கரணங்களின்” செயல்பாட்டினை நன்கு தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.




ஆன்மா:

ஆன்மா மனிதனின் செயல்களில் நேரடியாக ஈடுபடுவதில்லை. எனவே, அந்தக்கரணங்களின் செயல்பாட்டை விளக்கும் இந்தப் பகுதியில் அதன் செயல்பாட்டை விரிவாகப் பார்க்கத் தேவையில்லை


     

தாக்கம்:
    மனிதனின் வாழ்நாள் முழுவதும் வெளியிலிருந்து பல்வேறு வகையான தாக்கங்கள் அவனை வந்து அடைந்து கொண்டேயிருக்கின்றன. அதே நேரத்தில் அவனுக்கு உள்ளேயும் பல்வேறு தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
     
அவன் உறங்கும் பொழுது, புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை அவன் அறிய முடியாது.  ஆனாலும், கனவுகளைத் தாண்டி ஆழ்ந்த நித்திரை ஏற்படாதவரை மனதளவில் தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.





உடல்:  

இங்கு ‘உடல்’ என்று சொல்லும்பொழுது, நாம் ஐம்புலன் கருவிகளை மட்டுமே குறிப்பிடுகிறோம்.
 வெளியிலிருந்து வரும் தாக்கங்களை ஐந்து புலன்களின் மூலமாக மனம் உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே, மனிதனால் அவற்றை உணர முடிகிறது. இல்லையென்றால், அந்தத் தாக்கங்கள் மனிதனை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
     
குறிப்பிட்ட பக்குவத்தைப் பெற்றுவிட்ட மனிதனுக்கோ, தாக்கங்கள் மனதை வந்து அடைந்தால் கூட, எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அது எப்படி என்று பின்னர் பார்ப்போம்.
.



மனம்:
      “அந்தக் கரணங்களின்” மிகவும் புதிரான பகுதி மனம் ஒன்றுதான். அது எப்படி செயல்படும் என்பது அதற்கே புரியாத ஒன்று.



ஐம்புலன்கள் மூலம் வரும் தாக்கங்களை மனம் உள்வாங்கிக் கொள்கிறது.
அந்த மனம் அதற்குத் தயாராக இல்லையென்றால்
அவனது மனதிலும் புத்தியிலும் எந்தப் பதிவும் ஏற்படுவதில்லை




புறவுலகிலிருந்து வரும் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும் மனம்,
அந்தத் தாக்கத்தை விரும்பினாலோ, வெறுத்தாலோ, உணர்ச்சிப் பெட்டகத்தில் ஒரு பதிவு ஏற்படுகிறது.
இப்படி பல பதிவுகள் உணர்ச்சி பெட்டகத்தில் இடம் பெறுகின்றன. 

வெளி உலகிலிருந்து வரும் தாக்கங்களினால் மனம் பரபரப்பு அடையும் பொழுது, அந்த பதிவுகளே அவன் திருப்பித்தரும் தாக்கங்களுக்குக் காரணமாக அமைகின்றன.



புறவுலகிலிருந்து வரும் தாக்கத்தை உள்வாங்கி அதனைப் பரிசீலனை செய்யும் மனம், கூடவே அந்தத் தாக்கத்தைப் புத்திக்கும் அனுப்பிவைக்கும்.




புத்தி:

   எந்தவொரு தாக்கமும் மனதை வந்தடைந்தால், மனம் பரபரப்பு அடையாத வரையில், அந்தத் தாக்கம் புத்தியையும் சென்று அடைகிறது.
அந்தத் தாக்கம் தேவையென புத்தி நினைக்கும் பட்சத்தில், அறிவுப் பெட்டகத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது.

அந்த அறிவு, பின்னர் சரியான புரிதலுக்கு வழிவகுக்கலாம்.


 .

ஆழ்மனம்:  
      உணர்ச்சிப் பெட்டகத்தில் ஏற்படும் பதிவுகள், அதனை ஒட்டி அவனால் செய்யப்படும் காரியங்கள் நாளடைவில் பழக்கமாகி, பின் அவனது  ஆழ்மனதில் பதிவாகி, அவனது குணமாக (வாசனா) மாறுகிறது. ஒரு மனிதனின் குணத்தைப் பொறுத்தே அவனது சுபாவமும், மனோபாவமும் அமைகின்றன. .

ஆழ்மனதில் இருக்கும் குணமும், மனோபாவமும், ஒரு மனிதனின் மனதில் உள்ளிருந்தே தாக்கத்தை ஏற்படுத்தும்.


குறிப்பு:-

(சித்தத்தின்மேல் பதிவுகள் நிகழ்ந்தால், தமிழில் 'ஆழ்மனம்' என்றும்
ஆங்கிலத்தில் 'Subconscious-mind'
என்றும் சொல்கிறோம்.
ஆனால்,
வேதத்தில் ஆழ்மனம் என்று சொல்வதற்கான வார்த்தை கிடையாது.
அது, சித்தத்தின் மேல் படரும் பதிவுகளை "வாசனா" என்று மட்டுமே சொல்கிறது)



அந்தக்கரணங்களின் செயல்பாடுகளும், அதில் உள்ள பிரச்சினைகளும்

மனம் உணர்ச்சி வசப்படும் பொழுது, மனதிற்கும் புத்திக்கும் இடையிலான தொடர்பு செயலிழந்து விடுகிறது.
அதனால், மனிதன் பரபரப்போடு  செயல்படும் பொழுது, அவனது அறிவு பயன்படாமல் போய்விடுகிறது.  




மனம் பரபரப்பு அடையாமல் இருந்தால் மட்டுமே, வெளியில் இருந்து வரும் தாக்கத்தை புத்திக்கு அனுப்பி, புத்தியின் கட்டளையைப் பெற்று, அதனைப் பொறுத்து வெளிவுலகில் பதிலாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.




உணர்ச்சி பெட்டகத்தில் உள்ள சுபாவம் விரைவில் மாறும் தன்மை உடையது; ஆனால், ஆழ்மனதில் பதிவான குணம் நீடித்து நிற்பது.


உணர்ச்சி பெட்டகத்திலிருந்து வரும் தாக்கமும், மனோபாவம் மூலமாக ஏற்படும்  தாக்கமும் ஒன்றுக்கொன்று மாறுபடும் பொழுது மனிதன் குழப்பம் அடைந்து விடுகிறான்.



குழப்பம் அடையும் நேரங்களில், மனிதன் புத்தி சொல்வதைக் கேட்டு நடந்தால், பிரச்னைகளைத்  தீர்த்துக் கொள்ளலாம். 

ஆனால், மனம் பரபரப்பு அடையும் பொழுது, மனம், புத்தி இரண்டிற்கும் உள்ள தொடர்பு செயலிழந்து விடுகிறதே! அதற்கு என்ன செய்வது?         


  

மனிதனின் “ஆழ்மனத்தில்” உள்ள  பெட்டகம் நிர்மலமாக மாறும்பொழுது, அவன் குண-கர்மங்களைக் கடந்த ஞானியாகி விடுகிறான்.
அவனால் ஆன்மாவின்  ஒளியை உணர முடிகிறது.




அது முடிகின்ற காரியமா என்றால் .நிச்சயம் முடிகின்ற காரியம்தான். மன உறுதியும், முயற்சியும், அதற்கான பயிற்சியும் இருந்தால் எல்லோராலும் முடிகின்ற காரியம்தான்.





52. அந்தக்கரணங்களின் செயல்பாடு  -– பொதுவான விதிமுறைகள்


மனிதனின்  “அந்தக்கரணங்கள்” எப்படி செயல்படுகின்றன என்று பார்த்தோம்.


மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டுமெனில், அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் உள்ள  பொதுவான    விதிமுறைகளை அவன் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.  



 ஒரு மனிதனின்  சுயமேம்பாட்டிற்கு, பிறர் வழிகாட்டலாமே தவிர, மற்றபடி  வேறு எந்த வகையிலும் உதவ முடியாது.



  மனிதனுக்குள்ளும் அவனது மனம் ஒத்துழைக்காவிட்டால் எந்த மேம்பாடும் இருக்காது.


   
   புறவுலகத் தாக்கங்களை மனம் உள்வாங்கிக் கொள்ளாதவரை, அந்தத் தாக்கங்களினால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.



    மனம் மூலமாக உணர்ச்சி பெட்டகத்தில், “நான், எனது” என்று பற்று கொண்டு பதிவுகள் ஏற்படுவதால், சுபாவம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.



  புத்தியினால் ஏற்படும் பதிவுகள் பற்றற்றவை. அதனால், அந்தப் பதிவுகளினால் மனிதனுக்கு மனிதன் மாறுபாடு இருப்பதில்லை.



  மனம் பரபரப்பு  அடையும் பொழுது அவனது செயல்கள் யாவும் உணர்ச்சியின் அடிப்படையிலேயே இருக்கும். 

அந்த நேரத்தில் அவனது புத்தியே அவனுக்கு உதவ முடியாது. அப்படியானால், மற்றவர்களின் புத்தியினால் எப்படி உதவ முடியும்?





  அறிவுக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும், அறிவுக்குக் கட்டுப்படாமல் நடந்தாலும், எந்தவொரு செயலும்  முதலில் அரங்கேறும் இடம் மனம்தான்.



   மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் மேன்மையடைய, மேன்மையடைய அவனது வர்ணப்பிரிவும் மேன்மை அடைகிறது.




  வர்ணப்பிரிவில் கீழ்நிலையில் இருக்கும்போது, ஒரு மனிதனின் உணர்ச்சி பெட்டகத்திற்கும், அறிவு பெட்டகத்திற்கும் இடையில் உள்ள தடுப்புச் சுவர் மிகவும் கனமாக இருக்கிறது.

  அவன் வர்ணப்பிரிவில் மேலே செல்லச்செல்ல இடையில் உள்ள தடுப்புச் சுவர் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, முடிவில் காணாமல் போய்விடுகிறது.



   அந்த நிலையில், மனிதனின் உணர்ச்சி, அறிவுடன் இரண்டறக்  கலந்து விடுகிறது. அதன்பின், அவனிடம் இருப்பது உணர்ச்சிகள் அல்ல; உணர்வுகள் மட்டுமே.




  பற்றில்லாமல் செய்யும் காரியங்கள் புதிய பதிவினை ஏற்படுத்தாது. அத்துடன் “ஆழ்மனத்தில்”  இருக்கும் பதிவுகளும் ஒவ்வொன்றாக அழிந்துவிடுகின்றன.




  பற்றை விட்டவனிடம் “நான், எனது” என்ற எண்ணம் மறைந்து போகிறது. “தன்னை” மறந்த மனிதன் ஞானியாகிறான். 

“மனம் இறக்க, ஞானி பிறக்கிறான்” என்பது இதனால்தான்.



  பற்றை விட்டவனை ‘வெப்பம், குளிர்; இன்பம், துன்பம்; வெற்றி, தோல்வி” என்று எதுவுமே பாதிப்பதில்லை. நல்வினை, தீவினை என்று எதுவுமே அவனுக்குக் கிடையாது.




     மனிதனின் வர்ணப்பிரிவு நான்குதான் என்றாலும், ஒரே வர்ணத்திலும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் குணத்திற்கும், மனோபாவத்திற்கும் ஏற்ப அவற்றின் விகிதாச்சாரம் மாறுபடும்.




  ஒரு மனிதனின் வர்ணம் அவனது குணம், மனோபாவம் இவற்றின் அடிப்படையிலேயே அமைகிறது. ஆனாலும், உணர்ச்சி பெட்டகத்தில் அன்றாடம் ஏற்படும் பதிவுகளைப் பொறுத்து மற்ற வர்ணங்களுக்குரிய தாக்கங்களும் ஏற்படலாம். 

அவை பழக்கத்துக்கு வந்து, “வாசனா” பெட்டகத்தில் பதிவாகாதவரை
பிறவர்ண தாக்கங்கள் நிரந்தரமற்றவையே.




   மனிதனின் உயர்விற்கு மனம், புத்தி இரண்டுமே முக்கியம். என்றாலும், அவை இருக்குமிடம் உடல் அல்லவா? எனவே மனிதன், சுயமேம்பாட்டிற்காண முயற்சியில் ஈடுபடுவதற்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம்.




ஆன்மா உடலுடன் இருப்பதாகத் தோன்றினாலும், தனித்து இருக்கிறது.
உடலில் உள்ள இயக்கத்திற்கு அது ஆதாரமாக இருந்தாலும், எதனுடனும் அதற்கு பந்தம் கிடையாது. 

மனிதனின் எந்த இயக்கமும் அதனைப் பாதிப்பதில்லை; அதுவும் மனிதனின் எந்த இயக்கத்தையும் பாதிக்காது.





53. நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு


“நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு”    இவற்றை சுய மேம்பாட்டிற்கு எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்பதற்கு முன், இவை எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.




நோக்கம்:
          நாம் எந்தக் காரியத்தை செய்தாலும், அதற்கு ஒரு காரணம் இருக்குமல்லவா? அதைத்தான் நோக்கம் (Motive) என்று சொல்கிறோம். 

நோக்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால், காரியம் ஆற்றும் எண்ணம் மனிதனுக்குத் தோன்றுவதில்லை. 

அம்மாதிரி காரியம் ஆற்றும் எண்ணத்தைத்  தோற்றுவிப்பதில் “உணர்ச்சி” பெட்டகத்திற்கும், ஆழ்மனத்தில் உள்ள “வாசனா” பதிவுகளின் காரணமாக எழும் மனோபாவத்திற்கும் பெரும்பங்கு உண்டு.





செயல்:
     செயலில் இரண்டு வகை உண்டு. ஒன்று பிறர் சொல்லி நாம் செய்வது, மற்றொன்று நமக்கு நாமே ஆணையிட்டுக்கொண்டு செய்வது. சுயமேம்பாட்டில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இரண்டாவதை மட்டுமே.




விளைவு:
     செயல் நிகழ்காலம் என்றால், நோக்கம் என்பது இறந்த காலம், விளைவு என்பது எதிர்காலம்.

    நோக்கம் என்பது நமக்குள் நாம் செய்யும் பதிவுகளின் சங்கமத்தின் காரணமாக வருவது. செயல் என்பது அவற்றின் எதிரொலி. இரண்டுமே நம் கையில் உள்ளது. 


ஆனால் நாம் செய்யும் செயல்களின் விளைவு எப்படி இருக்கும் என நம்மால்  உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், அது நாம் விரும்பிய படியும் இருக்கலாம்; வேறு வகையிலும் இருக்கலாம். ஒரே செயலுக்குப் பல வகையான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.




பின்விளைவு:
    நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் அதற்கு ஒரு விளைவு இருக்கும். நாம் செய்யும் செயலால் ஏற்படும் விளைவின் காரணமாக வரும் பின்விளைவு நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தினால், அதனை ஆராய வேண்டியது நமது கடமை.

நோக்கம், செயல், விளைவு மூன்றிலும் காலவித்தியாசம் இருப்பதால், விளைவு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே ஊகிக்கவும் முடியாது.
மூன்றிலும் முறையான இணக்கம் இருந்தால், நாம் எண்ணிய நோக்கத்திற்கேற்ப விளைவு அமைந்திருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.




விளைவு நம் எண்ணத்திற்கு மாறாக இருந்து, அதனால் ஏற்படும் பின்விளைவு நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால், நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்

 (ஒருவேளை  ‘பின்விளைவுஎந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால், அந்த மனிதன் சுயமேம்பாட்டை மறந்துவிட வேண்டியதுதான்).





நமது செயலால் வெளிப்படும் விளைவு தவறாக இருந்தால், அதற்குக் காரணம் நமது நோக்கமா அல்லது செயலா என்று பார்க்கவேண்டும்.

நோக்கம் சரியாக இருந்து, செயல் தவறாக இருந்தால் அதற்காக கலங்க வேண்டியதில்லை. வாழ்க்கை என்பதே ‘அனுபவதாரா’தானே! தவறான செயலால் நேர்ந்த அனுபவத்தின் காரணமாக, அடுத்தமுறை சரியாக செயல்படலாம். தவறு வந்துவிடுமே என்று பயந்து செயல்படாமல் இருந்தால்,  சுயமேம்பாடு தடைப்பட்டு விடும்.




நோக்கமே தவறெனத் தெரிந்தால், அங்குதான் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். தவறான நோக்கம் உருவாகக் காரணமாக இருந்த பதிவின் ஆணிவேரைக் கண்டுபிடித்து, அதனை உடனடியாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் சுயமேம்பாடு   தடைப்படுவது மட்டுமல்ல, அதில் பின்னடைவும் ஏற்படும்.





சுயமேம்பாட்டு உத்தியில், தவறான செயலை சரிசெய்வதை விட, தவறான நோக்கத்தை  சரிசெய்வது தான் பிரதானமாக இருக்கிறது.


நமது தவறைப் புரிந்து கொண்டபின், நாம் செய்ய வேண்டியவை

அகத்தாய்வு:
     எப்பொழுது நம் செயலால் வரும் பின்விளைவு நமக்குள் ஒரு    தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அப்பொழுது நமக்குள்ளேயே ஆராயவேண்டும். நமக்குள் நாம் ஏற்படுத்தியிருந்த பதிவுகளை நன்கு ஆராயவேண்டும். மிகவும் நிதானமாக, பதட்டமில்லாமல் ஆராயவேண்டும். அந்த வேலையை மனம் தானே செய்யாமல் புத்திக்கு கொடுத்துவிட வேண்டும்.



கண்டுபிடித்தல்
     புத்தி நிதானமாக  ஆராய்ச்சி (அகத்தாய்வு) செய்து எந்தப் பதிவில் தவறு நேர்ந்துள்ளது என்று கண்டுபிடிக்கவேண்டும். அந்தத் தவறான பதிவுக்குக் காரணமாக இருந்தது, புறவுலகப் பொருளா, அல்லது அதனுடன் நாம் வைத்திருந்த தொடர்பா   என்பதனையும் கண்டுபிடிக்க வேண்டும்.


 



நிராகரிப்பு:
            புறவுலகப் பொருளோ அல்லது அத்துடனான நம்முடைய தொடர்போ  எதுவானாலும் சரி, தவறான பதிவிற்குக் காரணமாக இருந்தது எதுவெனக் கண்டுபிடித்தவுடன், உடனே அதனை நிராகரித்து விட வேண்டும். ஒத்தி போட்டுவிட்டால், நிராகரிக்கும் எண்ணம் மறைந்து போகும் வாய்ப்பு உண்டு.




புதிய சேர்க்கை:
     நாம் நிராகரித்த ஒன்று எதுவாக இருந்தாலும் அதனை அனுபவிக்க அல்லது புதுப்பிக்க ஒரு நேரம் ஒதுக்கியிருப்போம். அந்த நேரத்தை, கண்டிப்பாக ஒரு பயனுள்ள அனுபவத்திற்காக ஒதுக்கவேண்டும். எந்தக் காரணத்தை  கொண்டும் மறக்கக்கூடாத விஷயம் இது.





54. இன்பமும், அமைதியும்


மனித வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துவிடவேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், உண்மையான இன்பம் எதில் இருக்கிறது?



ஐம்புலன்களின் உதவியுடன், புறவுலகப் பொருட்களோடு இன்பம் கொள்வது ஒருவகை. ஆனால், எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், அதனுடன் நமக்குள்ள தொடர்பு கூடக் கூட, அதனை அனுபவிக்கும்  பொழுது ஏற்படும் இன்பத்தின் அளவு குறைந்துகொண்டே போகிறது. நாளடைவில் இன்பம் அளிப்பதற்குப் பதிலாக, அதுவே நமக்குப் பலவித சங்கடங்களையும் உண்டுபண்ணும்.




இன்னொரு வகை இன்பம் உண்டு. மற்றவர்களுக்காக நாம் சில காரியங்களைச் செய்யும் பொழுது, அதனால் அவர்கள் பயனடைந்து மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து,  நாம் இன்பம் கொள்வது.



முதலில் சொன்ன இன்பம் சிறிது நேரமே நீடித்து நிற்பதோடு, மீண்டும், மீண்டும் இன்பம் துய்ப்பதற்கான காரியத்தில் ஈடுபடுத்தி, முடிவில் வேதனைக்கும் வழிவகுக்கும்.

இரண்டாவது வகை இன்பமோ, நம்மை பரவசத்தில் ஆழ்த்தி, நீண்ட காலம் நம் நினைவில் நிற்கும். ஆனாலும் இவ்வகை இன்பங்கள் நமக்குள் ஒருவகை இறுமாப்பை வளர்க்கவும் வாய்ப்பு உண்டு.



இவை இரண்டிலும் சேராத மூன்றாவது வகை இன்பம் ஒன்று உண்டு. அது நிலையான இன்பத்தைத் தருவதோடு, பூவுலக வாழ்க்கையையே சொர்க்கமாக மாற்றிவிடும். அது என்ன?




இன்பத்திற்கு எதிர்ப்பதமாக எதனைச் சொல்கிறோம்? துன்பம் என்றுதானே சொல்கிறோம். இதனையே ‘இன்பம் = துன்பம் இல்லை’ என்றும் சொல்லலாம் அல்லவா?

 துன்பம் இல்லாத நிலையில் மனம் எப்படி இருக்கும்? அமைதியாகத்தானே இருக்கும்? ஆக,

இன்பம்     =    துன்பம் இல்லை

  துன்பம் இல்லை  = மன அமைதி

ஃ மன அமைதி  =    இன்பம்

எவ்வளவு எளிதாக இருக்கிறது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இது முடியுமா?

முடியும், ஒரே ஒரு பேருண்மையை உணர்ந்தால் - - அது   

ஆசை கொண்ட மனம்  -  அது
அவதிகளின் களம்;

அமைதி கண்ட மனம்  -  அது
ஆனந்தத்தின் வசம்.


அனுபவித்தால் மட்டுமே தெரியும் உண்மை இது. சொல்லப்போனால், சுயமேம்பாட்டின் உச்சக்கட்ட குறிக்கோளே இதுதான்.


                 



55. ஞானம் எனும் நெருப்பு 


“ஞானம் என்ற நெருப்பு  சகல கர்மங்களையும் எரித்துவிடும்” என்று சொல்கிறார் கிருஷ்ணன். இதனைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டும்.




‘கர்மங்கள்’ என்று சொல்லும் பொழுது வெறுமனே செயல்கள் மட்டுமல்ல, மனதிலிருந்து எழும் கர்மங்களுக்கு காரணமாக இருக்கும் எண்ணங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


ஞானம் என்ற நெருப்பு செயல், எண்ணங்கள் மட்டுமின்றி, நம்மிடம் உள்ள அஹங்காரத்தையும் முற்றிலுமாக அழித்துவிடும்.


எல்லாம் சரி; நாம் ‘ஞானத்தை’ நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?





ஒரு பூந்தோட்டத்தை நெருங்கும் பொழுது மலர்களின் வாசத்தை உணர்வது போல, அருவிக்கரையை நெருங்கும் பொழுது அருவி  விழுவதின் சத்தத்தைக் கேட்பது போல, சில அறிகுறிகளைக் கொண்டு நாம் ஞானத்தின் பாதையில் முன்னேறுவதைப் புரிந்து கொள்ளலாம்.



ஒருசில அறிகுறிகளைத் தெரிந்து கொள்வோம்: -
     
     பற்றின்மை

     பணிவு (humility)

     உள்ளார்ந்த அமைதி
     
     உடைமைத்தனமின்மை

     தனிமையை  விரும்புதல்

     எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை

     எதிர்கொள்ளும் எதனையும் இறைவனின் பிரசாதமாக
                    ஏற்றுக்கொள்ளுதல்
   
  இணக்கமாகவும், இளக்கமாகவும் நடந்து கொள்ளுதல்    
              
     ‘கர்த்தா’ என்ற நிலையிலிருந்து விடுபட்டு,
 "அவனது கருவி" என்ற நினைவில் செயல்படுதல்
             
     விருப்பு-வெறுப்பு போன்ற இருமைகளில் இருந்து விடுதலை


இந்த அறிகுறிகளில் சிலவற்றையாவது நாம் பெற்றிருப்பதாக உணர்ந்தால், நாம் ஞானத்தின் பாதையில் முன்னேறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.






ஞானம் அடைவதற்கான  பாதை ஒன்றா அல்லது பல பாதைகள் உண்டா? 

பல பாதைகள் என்றால், நமக்கான பாதை எது? அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பாதை மட்டும் தெரிந்தால் போதுமா? அதில் எப்படி பயணம் செய்வது என்று தெரிய வேண்டாமா?

முதலில் தெரிய வேண்டியது நாம் யார்? நமக்கான பாதை எது? என்பதுதான். அதனைத் தெரிந்துகொண்ட பின்னர்தான் பயணம் செய்வதைப் பற்றி முயற்சி செய்ய வேண்டும்.






56. ஞானத்திற்கான பாதை

ஞானம் பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும், பொதுவாக மக்கள் பயன்படுத்துவது நான்கு வழிகளைத்தான். அவை - -

1.   ஞான     மார்க்கம்

2.   கர்ம        மார்க்கம்

3.   பக்தி       மார்க்கம்

4.  தியான   மார்க்கம்

.     
இந்த நான்கு மார்க்கங்களில் நமக்கு உரிய மார்க்கம் எது என  அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.



அதற்கு நாம் யார் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். நாம் யார் என்பதை அறிந்து கொண்டால்தான் நமக்கான பாதை எது என்பது புலப்படும்.



நாம் யார் என்பதையும், நமக்கான பாதை எது என்பதையும் அறிந்துகொண்ட பின், நமக்கான பாதையில் எப்படி பயணம் செய்ய வேண்டும் என்றும் புரிந்து கொள்ளவேண்டும்.




பலரும் ஞானம் பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால் தமக்கான பாதை எது என்று தெரியாமலும், தெரிந்தாலும் சரியான வகையில் பயணம் செய்கிறோமா என்பது புரியாததாலும், தமது குறிக்கோளை அடைய முடியாமல் தவித்து, முடிவில் கடவுளையே குறை சொல்லும் அளவுக்கு சென்று விடுகிறார்கள்.




57. நீரில்லாத ஆறு

நதியில் தண்ணீர் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அதனை ஆறு என்று சொல்கிறோம். ஆற்றில் தண்ணீர் இல்லையென்றால், அந்த நேரத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த இடத்தை பார்த்தால், அந்த இடத்தை என்ன பெயர் சொல்லி அழைப்போம்? ஆற்றுப்படுகை என்றுதானே.


அந்த ஆற்றின் கரைகள் இரண்டும் நீக்கப்பட்டுவிட்டால், அப்பொழுது அதனை என்னவென்று சொல்வோம். அதுவும் பூமியின் ஒரு பகுதிதானே.


ஆற்றின் கரைகள் இல்லாதிருந்தால் (அதுவும் பூமியின் மேல்தான் இருக்கிறது), அப்பொழுது அந்த இடத்திற்கு ஆறு என்ற பெயர் இருக்குமா?





ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஒரு பகுதிதான். ஆற்றுக்குக் கரை இருப்பது போல, ஜீவாத்மாவைச் சுற்றி ஒரு மாயத்திரை இருப்பதால் அதனைத் தனியாகப் பிரித்துப் பார்க்கிறோம்.

அந்த மாயத்திரையை இல்லாமல் செய்வது நமது கையில் இல்லை. ஆனால் அது இல்லாமல் போகவேண்டுமென்றால், அதன்மேல் எந்தவித அழுக்குகளும் இல்லாமல் செய்யவேண்டியது நமது கடமை. அதை நாம்தான் செய்ய வேண்டும்.

 மற்றவர்கள் யாரும் நமக்கு உதவி செய்ய முடியாது; அவர்களால் நமக்கு வழி மட்டுமே காட்ட முடியும்.

 



58. சச்சிதானந்தம்

‘சத்’, ‘சித்’, ‘ஆனந்தம்’ என்ற மூன்று வார்த்தைகளின் கூட்டு வார்த்தையே ‘சச்சிதானந்தம்’ என்பது.



‘சத்’ என்பது எப்போதும் உள்ளது என்பதைக் குறிக்கிறது. அதற்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் கிடையாது.

‘சித்’ என்பது அறிவு அல்லது சைதன்யத்தைக் குறிக்கிறது. பரமாத்மாவின் சைதன்யம் மாயத்திரையால் சூழப்பட்டு, நமது உடலுக்குள் இருந்து கொண்டு நமது இயக்கத்திற்கு சக்தி கொடுக்கிறது என்றால், அதுவே ‘சித்’ என்று அழைக்கப்படுகிறது.




சித்தைச் சூழ்ந்துள்ள மாயத்திரையுடன் கூடிய நிலையையே 'சித்தம்' என்கிறோம்.
,



அந்த மாயத்திரையின் மீது மனத்தின் மூலம் பதிவுகள் (வாசனா) ஏற்படும் போது, அதனை 'ஆழ்மனம்' என்று அழைக்கிறோம்




‘ஆனந்தம்’ என்பது  ‘சித்’ எப்பொழுதும்  ஆனந்தமாகவே இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

‘சித்’ எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது என்றால், நம்மால்  ஏன் அதை உணர முடிவதில்லை?





கண்ணாடியில் முகம் சரியாகத் தெரியவில்லை என்றால், கண்ணாடி அழுக்காக இருக்கிறது என்கிறோம்.

உண்மையில் கண்ணாடி அழுக்காக இருக்கிறதா அல்லது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா?

அடுத்த கேள்வி: கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா?

அடுத்த கேள்வி: கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு படர்ந்திருக்கிறதா?

ஆக, கண்ணாடியில் நமது முகம் தெரியவில்லை என்றால், அதற்கு காரணமாக இருப்பது கண்ணாடியா அல்லது அதன்மேல் படர்ந்துள்ள அழுக்கா?



கண்ணாடியின் மேல் முதலில் தூசிதான் படிகிறது. அதுவே பின்னர் அழுக்காக மாறுகிறது. உரிய சமயத்தில் அதைத் துடைக்காவிட்டால் அதுவே அட்டாகவும்  மாறி விடுகிறது.





கண்ணாடியின் மேல் படிந்த தூசி (அழுக்கு, அட்டு) போன்று, நமது சித்தத்தில் உள்ள மாயத்திரையின் மேல் படர்ந்துள்ள தூசியின் காரணமாகத்தான் நம்மால் உள்ளிருந்து வரும் ஒளியை (ஆனந்தத்தை) உணர முடிவதில்லை.




59. இருள்சேர் இருவினைகள்


புதிதாக ஓர் அணையைக் கட்டி விவசாயத்திற்காக ஒரு நீர்வழிப் பாதையை ஏற்படுத்தும் போது என்ன நடக்கிறது?

பரந்து, விரிந்த நிலப்பகுதியில் ஒரு சிறு பகுதியை நீர்வழிப் பாதையாக்க  முடிவு செய்தால் அந்த குறிப்பிட்ட பகுதியில் நிலத்தை வெட்டி, இருபுறமும் கரைகளை அமைக்கின்றனர். அதன்பின் அந்த இடத்தை ஆற்றுப்படுகை என்றும், தண்ணீர் ஓடினால் ஆறு என்றும் அழைக்கிறோம்.


நீக்கமற எங்கும் வியாபித்திருக்கும் பரமாத்மா, மாயத்திரைக்குள் கட்டுப்பட்டு மனித உடலுக்குள் இருக்கும்பொழுது ஜீவாத்மா என்றும், மாயத்திரையின் மீது பதிவுகள் ஏற்படும் பொழுது ஆழ்மனம் என்றும் அழைக்கிறோம்.”



இந்த ஆழ்மனப் பதிவுகள்தான் ஆன்ம ஒளியை உணர முடியாமல் அதனை  மறைத்து விடுவதோடு, மனிதனின்  மறுபிறவிக்கும்  காரணமாக அமைகின்றன.




தீவினைகள் காரணமாக ஏற்படும் பதிவுகள் மட்டுமல்ல, நல்வினைகள் காரணமாக ஏற்படும் பதிவுகளும்  நமது ஆழ்மனதில் பரவும் இருளுக்கு காரணமாக இருக்கின்றன.

அதனால்தான் திருவள்ளுவர்  
“இருள்சேர் இருவினையும் சேரா – இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”            - - என்கிறார்.




60. தன்முனைப்பு

மனிதனின் ஆழ்மனப் பதிவுகளைக்  “வாசனா” என்று சொல்கிறோம். அந்த வாசனாவின் தன்மையைப் பொறுத்து, ஒரு மனிதனின் அஹங்காரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.



அஹங்காரம் என்றால் திமிர் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், இங்கு அஹங்காரம் என்பது ஒரு மனிதனின் தன்முனைப்பை மட்டுமே குறிக்கிறது.



எங்கு தன்முனைப்பு இருக்கிறதோ, அங்கு ஆசை கண்டிப்பாக வெளிப்படும். அந்த ஆசையின் அளவும், தன்முனைப்பின் தீவிரத்தைப் பொறுத்து இருக்கும்.

எங்கு ஆசை இருக்கிறதோ, அங்கு அதனைத் தொடர்ந்து பயமும், கோபமும் வருவது தவிர்க்க முடியாது.

ஆசை இருந்தால், ஆசைப்பட்ட பொருள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம்; கிடைக்காவிட்டால் கிடைக்கவில்லையே என்ற  கோபம்.

ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ  அது தன்னைவிட்டுப் போய்விடுமோ என்ற பயம்; போய்விட்டாலோ அதனால்  ஏற்படும்  கோபம்.

இவை அனைத்தும் ஒன்றை ஒன்று தொடர்ந்து வரக்கூடியவை.



வரைபடத்தைப் பாருங்கள் - -


                        


பயம், கோபம் போன்றவை எதிர்மறை உணர்ச்சிகள். இவையெல்லாம் இருக்கக்கூடாது என்றால், அஹங்காரத்தை விட்டால்தான் முடியும். ஆனால், தன்முனைப்பு இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு வளர்ச்சி என்பதும்  இருக்கமுடியாது. இதற்கு வழிதான் என்ன?





61. வளர்ச்சியும், மலர்ச்சியும்


அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது;
 அஹங்காரம் இருந்தால்  மலர முடியாது.


அஹங்காரம் (தன்முனைப்பு) ஒரு மனிதனுக்குத் தேவையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். ஏனெனில் - -
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், தன்முனைப்பு மிகவும் அவசியம்; தன்முனைப்பு இல்லையென்றால் அவனால் முனைப்புடன் செயலில் இறங்க முடியாது. முனைப்பு இல்லாத செயல் நாம் ஆசைப்படும் விளைவை கொடுக்காது.



தன்முனைப்பு ஆசையைத் தூண்டக்கூடியது; அதே நேரம் தன்முனைப்பு உள்ள மனிதனிடம் அமைதியை எதிர்பார்க்க முடியாது. அமைதி இல்லாத மனதில் அகமலர்ச்சி மலர முடியாது.



ஒரு மனிதனின் ஆழ்மனதில் உள்ள வாசனா பதிவுகள் அனைத்தும் நீங்கினால் மட்டுமே, அந்த மனிதன் தனது சித்தத்தின் உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.



மலர்ச்சி என்று சொல்லும்போது, நாம் வாசனாவில் உள்ள பதிவுகளின் நீக்கத்தையே மனதில் கொள்ளவேண்டும்.



அமைதி தரும் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று தவிக்கும் மனிதன் மட்டுமே ஞானம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடமுடியும். மற்றவர்கள் முயற்சி செய்தாலும், அதில் வெற்றி பெறுவது கடினம்.




62. யான், எனது

“யான்எனது என்னும் செருக்கு அறுப்பான்  வானோர்க்கு               உயர்ந்த உலகம் புகும்”. – - திருவள்ளுவர் 

தன்முனைப்பு, செருக்கு (திமிர் என்றும் சொல்லலாம்) இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?



ஒரு மனிதன் தன்முனைப்புடன் செயலில் இறங்கும்பொழுது, அதன் விளைவாக பொன், பொருள் என்று சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். அவனது வாழ்க்கைத் தரமும் உயர ஆரம்பிக்கிறது.

தான் நினைத்ததை சாதிக்க முடிந்ததன் காரணமாக அவனுக்கு தன்னை நினைத்தே ஒரு பெருமிதம் வந்துவிடுகிறது. அது தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அதன்கூடவே, அவனையும் அறியாமல் ஒரு விதமான செருக்கும் வந்துவிடுகிறது.




‘நான்’ மற்றும்  ‘என்னுடைய’ என்னும் இந்த உணர்வுகளே மனிதனின் அமைதி குலைவதற்கு காரணமாகின்றன.



வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மனிதன், ‘நான்' மற்றும் 'என்னுடைய’ என்ற உடைமைத்தனத்திலிருந்து  விடுதலை ஆகாத வரை அவனால் அமைதியையும், அதனால் வரும் ஆனந்தத்தையும் உணர முடியாது.



‘நான்’, ‘எனது’ என்ற இந்த இரண்டு கட்டுகளிலிருந்தும் விடுபடுவது, ஞானம் அடைய விரும்பும் மனிதனுக்கு மிகவும் அவசியம்.




63. நான் யார்?

ஞானம் பெறுவது எப்படி என்று பகவான் ரமண மகரிஷியிடம் கேட்டால், அதெல்லாம் தேவையில்லை; தனியாக அமர்ந்து ‘நான் யார்’ என்று உன்னையே கேட்டுக்கொண்டு, விடையையும் தேடு   என்று சொல்வார். 



பெரும்பாலும் ‘நாம் யார்’ என்று தெரியாமலே, நமது வாழ்நாளைக் கழித்துவிடுகிறோம். இதில் உள்ள மறைந்திருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள சில விளக்கங்களைப் பார்ப்போமா?



இது என்னுடைய வீடு என்று சொல்லும்பொழுது, வீடு உடைமைப் பொருளாகவும், நான் அதன் உரிமையாளனாகவும் இருக்கிறேன். வேறு வகையில் சொன்னால் வீடு பார்க்கப்படும் பொருளாகவும், நான் பார்ப்பவனாகவும் இருக்கிறேன். இது என்னுடைய உடம்பு என்றால், அதன் உரிமையாளன் யார்? அதனைப் பார்ப்பவன் யார்?




ஒரு வீடு கட்டும்பொழுது, கல், மணல், சிமெண்ட், இரும்புக் கம்பி, மரம்  இப்படி பல பொருட்களை உபயோகித்து, முடிவில் அவை சுவராகவும், தளமாகவும், கூரையாகவும், கதவாகவும், ஜன்னலாகவும்  மாறி விடுகின்றன. ஆனால், இவற்றில் எது அந்த வீட்டின் உரிமையாளனாக குடியிருக்கிறது? இவற்றிற்குச் சம்பந்தம் இல்லாத யாரோ ஒருவர்தானே, அந்த வீட்டில் குடியிருக்கமுடியும்?




இந்த உடம்பும் தோல், சதை, எலும்பு, இரத்தம்  போன்று பல  பொருட்களாலும், 
மனம், புத்தி, ஆழ்மனம் போன்ற நுண்ணுடல்களாலும்
 உருவாக்கப்பட்டதென்றால், இவற்றில் எது இந்த உடலில் வசிக்க முடியும்? வேறு ஏதோ ஒன்றுதானே இந்த உடலில் வசிக்க முடியும்?



‘நான் யார்’ என்ற கேள்விக்கான  பதில் இங்குதான் ஆரம்பமாகிறது.




64. இந்த நானும், அந்த நானும்


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ‘நான்’கள் உள்ளன.


ஒன்று உண்மையான நான். மற்றொன்று உண்மையான 'நான்’   நானில்லை என்பதை  அறியாத நான்.



உண்மையை அறியாத நானிடம், உண்மையான நானைக் கண்டுபிடிக்க  ‘நான் யார்’ என்ற விசாரத்தில் (சிந்தனையில்) இறங்கு என்கிறார் பகவான் இரமண மகரிஷி.

ஆனால், வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதனால் முடிகிற காரியமா இது?




அந்த உண்மையான ‘நானை’ கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், இப்பொழுது நாம் எந்த வர்ணப் பிரிவில் இருக்கிறோம்; நமக்கான பாதை எது என்பதை அறிய வேண்டும்.



அவற்றை அறிவதற்கு முன்னால், அந்த முயற்சியில் ஈடுபட முடியாத அளவிற்கு நம்மைத் தடுக்கும் காரணி எது  என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.



அந்தக் காரணியை  அறிந்துகொண்ட பின், அதனை  நீக்கத் தயாராக இருக்கிறோமா என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக இல்லையென்றால், நமது முயற்சி எந்தவித பலனையும் தராது.



"உடம்பு 'என்னுடையது' என்றால், 'நான்' உடம்பாக இருக்க முடியாதே"




65. பந்தம்

‘சொந்தபந்தம்’ மற்றும் ‘பந்தபாசம்’ என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘சொந்தபாசம்’ என்ற வார்த்தையை  எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா?



மனிதன் தனக்குப் பிறந்த குழந்தையிடம் அன்பு வைப்பதோடு அதனுடன் பற்றும் கொண்டுவிடுகிறான். அதன்பின் அவனுக்கு அந்தக் குழந்தையின் மீது இருப்பது அன்பு அல்ல, ஆசை.


அதே மனிதன் தனது வீட்டிற்கு காவலாக (தேவையென எண்ணி) ஒரு நாயை வளர்க்கிறான். எங்கிருந்தோ வாங்கியது. இருந்தாலும் நாளாக நாளாக அவனுக்கு அதன்மீது பற்று வந்துவிடுகிறது. அதன்பின் அவனுக்கு அந்த நாயிடம் இருப்பது ஆசையாக மாறிவிடுகிறது.

இந்தப் பற்றுதான் முதலில் ஆசையாக உருவாகி, பின்னர்...”
 பின்னர் அதுவே உயிருள்ள ஜீவனாக இருந்தால் பாசமாகவும், பொருளாக இருந்தால்   பேராசையாகவும், பெண்ணாக இருந்தால்  காமமாகவும்  மாறி விடுகிறது.


இதனைத்தான் பந்தம் என்று சொல்கிறார்கள் (இதனையே கட்டு என்றும், தளை என்றும் சொல்வதுண்டு).



ஞான மார்க்கத்தின் வெற்றியே, இந்த பந்தத்திலிருந்து விடுபடுவதில்தான் இருக்கிறது.


வரைபடத்தைப் பாருங்கள் - -



அன்பும், தேவையும் இயற்கையானவை. ஆனால் அவற்றோடு பற்று கலந்தவுடன் ஆசை உருவாகிறது. அந்த ஆசை, பற்றை மேலும் வலுப்படுத்துகிறது. அவ்வாறு வலுப்பெற்ற பற்று, பாசமாகவோ, பேராசையாகவோ, காமமாகவோ வெளிப்படுகிறது


ஆக, மனிதனிடம் உள்ள பந்தத்திற்கு மூலகாரணமாக இருப்பது இந்த பற்றுதான். ஞானமார்க்கத்திற்குத் தடையாக இருப்பதும் இந்த பற்றுதான்.
  


   “...பாசவினைகள் பற்றது நீங்கி”          - -    கந்தசஷ்டி கவசம்.
 (பற்றது நீக்கி .. என்று சொல்லவில்லை)

   “... அப்பற்றை பற்றுக பற்று விடற்கு”    - -    திருக்குறள்
(பற்றை விடற்கு .. என்று சொல்லவில்லை)

   “ஆசைவலைப்  பாசத் தகப்பட்டு மாயாமல்....” – பத்திரகிரியார்





66. நாமும், நமக்கான பாதையும்

ஞானம் பெறுவதற்கு நான்கு முக்கிய வழிகள் உள்ளன என்று ஏற்கனவே பார்த்தோம்.


இவற்றில் ஒரு வழி நமக்குரிய பாதையாக இருக்கவேண்டும். அது நமது வர்ணப்பிரிவிற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும். வேறு பாதைகளைப் பயன்படுத்த விரும்பினால், அது நடைமுறை வாழ்க்கைக்கு உதவி செய்வதாக இருக்கவேண்டும்.




உதாரணத்திற்கு ஒரு மருத்துவரை எடுத்துக்கொள்வோம். தனக்கு வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை; ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்படுகிறார். பொதுநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால்,
அவரை 'கர்ம' மார்க்கத்தில் ஈடுபடும் ஒரு க்ஷத்திரியன் என்றே அழைக்கலாம்



 ஆனால், அவர் மத நம்பிக்கை உள்ளவராக இருந்து, மாதத்தில் பத்து நாட்கள், ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தால் அவரது க்ஷத்ரிய தர்மம் என்னாவது? அவர் கடைப்பிடிக்கும் பக்தி மார்க்கம், அவரது க்ஷத்ரிய தர்மத்திற்கு உதவியாக இருக்கவேண்டாமா?





நமது வர்ணப்பிரிவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற பாதையில் பயணத்தை தொடங்குகிறோம் என்றாலும், அந்தப் பாதையின் அடிப்படை விதியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.”

அவை - -

“அறிந்து வருவது     ஞான மார்க்கம்

அறியாமல் வருவது  பக்தி மார்க்கம்

அடிபட்டு வருவது    கர்ம மார்க்கம்

கஷ்டப்பட்டு வருவது  தியான மார்க்கம்”





67. மார்க்கமும், யோகமும்

ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் என்றும் சொல்வார்கள்; ஞான யோகம், கர்ம யோகம் என்றும் சொல்வார்கள். ஏன் இந்த வித்தியாசம்?



மார்க்கம் என்பது நாம் பயணம் செய்யும் பாதையைக் குறிக்கிறது; பாதையின் முடிவில் எல்லைக்கோட்டை அடைந்தால்,  மார்க்கம் யோகத்தில் முடிகிறது என்றும் சொல்லலாம். யோகம் என்ற வார்த்தைக்கு இணைதல் (இறைவனோடு, பிரம்மத்தோடு) என்றும் சொல்வதுண்டு.



மார்க்கம் என்பது சரியான பாதையாக இருந்து, நாமும் நமது பயணத்தைச்  சரியான முறையில் தொடர்ந்தால், நாம் யோகத்தின் வழியில் இருக்கிறோம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.



ஒவ்வொரு மார்க்கத்திற்கும் வெவ்வேறு நெறிமுறைகள் இருக்கின்றன; அவற்றில் சில கடைப்பிடிக்க மிகவும் எளிதானவைதான். இருந்தாலும் அவற்றை சரியாகக்  கடைப்பிடிக்காதவரையில் மார்க்கம் யோகமாக இருக்க முடியாது.



ஒவ்வொரு மார்க்கமாகப் பார்ப்போம்.





68. பக்தி மார்க்கம்

“அறியாமலேயே வருவது பக்தி மார்க்கம்.”


இருக்கும் எல்லா மார்க்கங்களிலும் மிகவும் எளிதானது பக்தி மார்க்கம்தான். பெருவாரியான மக்கள் கடைப்பிடிக்கும் மார்க்கமும் இதுவே.


நான் பக்தி மார்க்கத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறேன். நாள் தவறாமல் கோவிலுக்குச் சென்று வருகிறேன். தவறாமல் விரதங்கள், அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் கடைப்பிடிக்கிறேன். அப்படியானால், நான் பக்தி யோகத்தில்தானே இருக்கிறேன் என்று சொல்லலாம். ஆனால், இதுவே பக்தி யோகத்தில் இருக்கிறேன் என்று சொல்வதற்குப் போதுமானதாகுமா?


பக்தி மார்க்கத்தில் ஈடுபடும் மக்களில் பெரும்பாலோர் மனதில் அமைதி இல்லாமல் உழன்று வருவதற்கு என்ன காரணம்? பக்தி மார்க்கத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தும், அவர்களால் பற்று என்னும் தளையிலிருந்து ஏன் விடுபட முடியவில்லை?


“பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”
— திருவள்ளுவர்
பற்றின் காரணமாக வரும் ஆசாபாசங்களை விடுவதற்கு, கடவுளின் திருவடியைப் பற்றிப் பக்தி செய்ய வேண்டும் என்கிறார்கள்.
மீண்டும் ஒருமுறை திருக்குறளைப் பாருங்கள். அதில் “பற்று விடற்கு” என்றுதான் வருகிறது; “பற்றை விடற்கு” என்று வரவில்லை. அதாவது, பற்றை நாம் வலுக்கட்டாயமாகத் துறக்க முடியாது; ஆனால் கடவுளின் திருவடியைப் பற்றிக்கொண்டால், மற்ற பற்றுகள் நம்மைவிட்டு விலகிவிடும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.


அதே நேரம், திருமூலர் சொல்வது வேறாக இருக்கிறது. அவர் சொல்வது:
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.”
பற்றின் காரணமாக வரும் ஆசாபாசங்களிலிருந்து விடுபடுவதற்கு இறைவனின் திருவடியைப் பற்றினாலும், அதுவும் ஓர் ஆசையாக மாறிவிடுமே என்கிறார் திருமூலர்.

ஆசை இல்லாத மனதில்தான் அமைதியும், அதனைத் தொடர்ந்து ஆனந்தமும் கிடைக்கும் என்கிறார்.


இந்தப் புதிருக்கான விடையை ரிஷி பதஞ்சலி தருகிறார். அதற்கு அவர் தரும் மந்திரம் “ஈஷ்வர ப்ரணிதானாத்”. அதாவது, கடவுளிடம் சரணடைவதன் மூலம் என்கிறார்.
நினைத்துப் பாருங்கள். நாம் கடவுளிடம் எதை எதையோ வேண்டுகிறோம்; ஆனால் கடவுளிடம் சரணடைகிறோமா?

சரணடைவது என்றால் என்ன?
அவர் எதைத் தந்தாலும் அதனை அவரிடமிருந்து வரும் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைத் தந்தருள வேண்டும் என்று மட்டும் வேண்டினால், அதுவே உண்மையான சரணாகதி ஆகும்.

சரணாகதி ஒன்றே பக்தி மார்க்கம் முழுமை அடைய உதவும்.




69. கர்ம மார்க்கம்

“அடிபட்டு வருவது கர்ம மார்க்கம்.”

க்ஷத்திரியன், அதாவது பொது நலனில் அக்கறை கொண்ட மனிதன், கர்ம மார்க்கத்தில் பலனை எதிர்பார்க்காமல் ஈடுபட முடியும்.

பொது நலனில் அக்கறை கொண்ட மனிதன் சமூகத்தில் செயல்படும்போது, அவனுக்குப் பலவிதமான சோதனைகள் வர வாய்ப்புண்டு. அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு நல்ல வழிகாட்டியின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும்.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.”
— திருவள்ளுவர்


ஒரு செயல், அந்தச் செயல் புறவுலகில் ஏற்படுத்தும் விளைவு, அதனால் ஏற்படும் விரும்பத்தகாத பின்விளைவு—இவற்றின் காரணமாக, வெளியில் ஓடும் அவனது மனம் உள்முகமாகத் திரும்பி, அகத்தாய்வில் ஈடுபட வேண்டிவரும்.


விளைவு, பின்விளைவு, மனதை உள்முகமாகத் திருப்புதல், அகத்தாய்வு போன்றவை ஒரு தொடர் சங்கிலியாக வந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் அவனுக்கு ஒரு நல்ல வழிகாட்டியின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும்.

அதனால்தான்,
“உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.”
என்கிறார் திருவள்ளுவர்.






70. தியான மார்க்கம்


“கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்” .


நம்மைச் சுற்றி பல இடங்களில் ஆசனம், பிராணாயாமம்  மற்றும் தியான வகுப்புகள்  நடைபெறுவதை பார்க்கிறோம். ஆனாலும் நம்மால் உள்ளிருக்கும் மையத்தை ஏன் நெருங்க முடியவில்லை?

ஆசனம், பிராணாயாமம் இரண்டுமே நமது உடலுக்கும், மனதிற்கும் நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகளைக் களைவதில் அவை நேரடியாக உதவுவதில்லை.”




தியானத்தைப் பொறுத்தவரை  அதனை ஒரு பயிற்சியாக செய்யமுடியாது; எந்தவித முயற்சியும் இன்றி ஏகாந்தமாக இருப்பதே தியானம் என்று சொல்லப்படுகிறது.
 இருந்தாலும், தியான வகுப்புகள் என்று சொல்வதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது.


“அம்மா, பசிக்கிறது” என்று பையன் சொன்னால், “கொஞ்சம் பொறு, இட்லி அவித்துத் தருகிறேன்” என்று அம்மா சொல்கிறாள். உண்மையில் அம்மா இட்லி அவிக்கிறாளா, அல்லது இட்லிக்காக மாவை அவிக்கிறாளா? மாவைத்தான் அவிக்கிறாள்; இருந்தாலும் முடிவில் அந்த மாவு இட்லி ஆகும் என்ற எண்ணத்திலேயே “இட்லி அவித்துத் தருகிறேன்” என்று கூறுகிறார். இது நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதைப்போன்று, தியான நிலையை அடைவதற்கான ஒரு பயிற்சியை தருவதைத்தான் ‘தியான வகுப்புகள்’ என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் பயிற்சியை ‘தாரணை’ என்று அழைத்தால் அதுவே சரியாக இருக்கும்.


இந்த மூன்று பயிற்சிகளும் ‘தியான’ நிலையை அடைவதற்கு முழுமையாக உதவ முடியாததற்கு என்ன காரணம்?

தியான மார்க்கத்தில் முழுமை அடைவதற்கு, ரிஷி பதஞ்சலி எட்டு படிநிலைகளைக் கூறுகிறார்.” அவை, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு படிநிலைகள்.

இவை ஒவ்வொன்றாகக் கடக்கப்பட வேண்டியவை. சத்துவ குணம் நிறைந்த மனிதன்  மட்டுமே   நேரடியாக   ‘தாரணை’   நிலைக்குப் போகமுடியும். 
ஏனெனில்   ‘பிரத்யாஹாரம்’      என்பது அவனுக்கு இயல்பான ஒன்று.

ஆசனத்தையும், பிராணாயாமத்தையும் பயிற்சி செய்கிறவர்கள் தியான நிலை வரைக்கும் போக எண்ணினால், அவர்கள் நிச்சயம்  யமம், நியமம் இரண்டையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும். 

யமம், நியமம் என்றால் என்ன என்பதை ஒரு குறள் அழகாக குறிப்பிடுகிறது.

     “செய்தக்க அல்ல செயக்கெடும் – செய்தக்க
      செய்யாமை யானும் கெடும்”.            - - திருவள்ளுவர்

இந்த இரண்டு கட்டளைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அந்த மனிதனால் தியான நிலையை அடைவது மிகவும் கடினம். அவனது பாதை, இலக்கை சென்று அடைய உதவாது.

எட்டு படிநிலைகளில் ஒன்றான  ‘பிரத்யாஹாரம்’ என்பது, வெளியில் ஓடும் மனதை அகத்தாய்வுக்காக உள்முகமாகத் திருப்புவதையே குறிக்கிறது.

முதல் இரண்டு படிநிலைகளான   ‘யமம் மற்றும் நியமம்’ ஆகியவற்றை கடைப்பிடிக்க முடியாத மனிதனால், ‘பிரத்யாஹாரத்தை’ மேற்கொள்ள  முடியுமா?




71. ஞான மார்க்கம்


"அறிந்து வருவது ஞான மார்க்கம்"


  அறிவுபூர்வமாக ஞானம் அடைவதற்கு பல படிகள் தாண்டவேண்டி உள்ளது.


தெரிதல், அறிதல், புரிதல், தெளிதல், தெள்ளத் தெளிதல், உணர்தல் எனப் பல  நிலைகளைத் தாண்டவேண்டி உள்ளது.



தெரிந்து கொள்வது என்பது எல்லோராலும் முடிவதுதான்.



ஆனால் தெரிந்த விஷயங்களைப்  பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கு, வெறும் அறிவு மட்டும் போதாது.
விஷயங்களைப் பற்றிய உண்மைகளை பகுத்தறியத்
 தெரிந்திருக்க வேண்டும். அதற்கான விவேகம் இல்லையென்றால் நாம் அறிவது சரியாக இருக்காது. விவேகம் உள்ள மனிதனும், உணர்ச்சி வசப்படுகிறவனாக இருந்தால், அவனது விவேகம் சரியான முறையில் செயல்பட முடியாது.




அறிந்துகொண்ட உண்மைகளை நடைமுறைப்படுத்தும் பொழுதுதான், அதனால் ஏற்படும் அனுபவங்களின் மூலமாக நமக்கு சரியான
 புரிதல் ஏற்படும்.



அறிந்துகொண்ட விஷயங்களைப் புரிந்துகொண்டபின், மேலும் மேலும்  கிடைக்கும் அனுபவங்களின் மூலம் நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.




தெளிந்தால் மட்டும் போதாது; தெள்ளத் தெளிய வேண்டும் என்கிறார் திருமூலர். தெள்ளத் தெளிந்தால் மட்டுமே ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை தெரியவரும் என்கிறார்.

“.....தெள்ளத் தெளிந்தாற்கு சீவன் சிவலிங்கம்”           - -        திருமூலர்.

அதாவது, ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை விளங்கும் என்கிறார்.




ஜீவாத்மாவைப் பற்றிய உண்மைகளை அறிவையும் விவேகமான சிந்தனையையும் கொண்டு புரிந்து தெளிய முடியும்
ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகள்  (நல்வினைப் பதிவுகளாக இருந்தாலும், தீவினைப் பதிவுகளாக இருந்தாலும்) நீங்காதவரை ஞானம் பெறுவது என்பது முடியாத காரியம்.
அதுவரை ஞானத்தைப் பற்றிய புரிதல் மட்டுமே இருக்கும்.



ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்க, நாம் என்னென்ன செய்யவேண்டும் என்று கீதை நெடுகிலும் நிறைய குறிப்புகள் உள்ளன.

இருந்தாலும் நாம் எந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்ந்தால் அந்த இலக்கை அடையலாம், முடிவான இலக்கு எப்போது, எப்படி அடையப்படும் என்று ரிஷி பதஞ்சலி விரிவாக எடுத்துரைக்கிறார்.

அதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.



72. ஞான மார்க்கம் – பாதை 1


"இனி வரும் அத்தியாயங்களில், ரிஷி பதஞ்சலி யோக சூத்திரங்களில் கூறப்படும் சமாதி நிலைகளை எளிமையாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்."


ஞான மார்க்கத்தில் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது, ஆழ்மனதில் உள்ள பதிவுகளே. ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகளுக்குக் காரணமாக இருப்பது நமது உணர்வு மனமே.

 எனவே, சுத்திகரிப்பு வேலையை முதலில் உணர்வு மனதிலிருந்தே தொடங்க வேண்டும் என்கிறார் ரிஷி பதஞ்சலி.



உணர்வு மனதில் உள்ளவை வெறும்  எண்ணங்கள் மட்டுமே. அவை நமக்கு  ஏற்படும் அனுபவங்களால் மட்டும் பெறப்பட்டவை அல்ல. நம்மைச் சுற்றி இருப்பவர்களால்  – நமது பெற்றோர் முதற்கொண்டு நண்பர்கள் வரை – நமக்குள் திணித்து வைத்தவைகளும் சேர்ந்தே இருக்கும். அத்துடன், அவற்றில் பலவும் நமது உணர்ச்சிகளைத் தூண்டுபவையாகவே இருக்கும்.



மனதில் உணர்ச்சிகள் அதிகரிக்க அதிகரிக்க, நாம் உணர்வு மனதுடன் ஒன்றிவிடுகிறோம். அதன்பின், உணர்வு மனம் நமக்கு எஜமானனாக மாறிவிடுகிறது. அதனால்தான், நாம் எதிர்கொள்ளும் தாக்கங்களுக்கு உடனுக்குடன், சற்றும் சிந்திக்காமல், உணர்வு மனமே எதிர்விளைவுகளை உண்டுபண்ணுகிறது.




ஒரு மனிதன் அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், உணர்ச்சிவசப்படுபவனாக இருந்தால், அவனது மனம் புத்தியின் ஆலோசனையைப் பெறாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து, தானே ஒரு பின்விளைவை ஏற்படுத்திவிடுகிறது.”






எனவே, முதலில் உணர்வு மனதில்  பதிவாகியுள்ள எண்ணங்களில் உள்ள  அசுத்தங்களை நீக்க  நாம் 'சவிதர்க்க சமாதி’ என்ற பாதையில் பயணிக்க வேண்டும்.


“சவிதர்க்க” என்பதை பிரித்து, ‘தர்க்க’, ‘விதர்க்க’ மற்றும் ‘சவிதர்க்க’ என ஒவ்வொன்றாக அவற்றின்  பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.


இதில், ‘தர்க்க’ என்பது விவாதத்தைக் குறிக்கிறது. விவாதம் என்பது பல நேரங்களில் பலருடன் பல்வேறு காரனங்களுக்காக ஏற்படுகிறது. ஆனால், அது ‘விதர்க்கமாக’ இருக்க வேண்டும் என்கிறார்.



தர்க்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று குதர்க்கம்; மற்றொன்று விதர்க்கம்.


மக்கள் ‘தான்’ என்ற உணர்வோடும், உணர்ச்சி மிகுந்தும்  விவாதத்தில் கலந்து கொண்டால், பெரும்பாலும் அது ‘குதர்க்கத்தில்’ தான் முடியும். அத்தகைய விவாதத்தில்  ஒரு நியாயமான முடிவுக்கு வருவது மிக கடினம்.



‘விதர்க்கம்’ என்று சொல்லும்பொழுது,  விவாதத்தில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் ஒரு ஒத்திசைவு இருக்கும். அவர்கள் விவாதத்தின் கருப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவேண்டும் என்பதில், எல்லோருக்குமிடையே ஒரு உடன்பாட்டுத்தன்மை இருக்கும்.




விதர்க்கத்தில் கருப்பொருள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால், ‘சவிதர்க்கம்’ என்று வரும்பொழுது, அதிலிருந்து தனது குணத்தின் பண்புகளை எப்படி உயர்த்திக் கொள்வது என்பது மட்டுமே ஒரு மனிதனின் நோக்கமாக இருக்கவேண்டும்.



ஆக, சவிதர்க்கத்திற்கு உதவியாக இருப்பது நண்பர்களாக இருக்கலாம்; சத்சங்கமாக இருக்கலாம்; ஏன், ஒரு புத்தகமாக கூட இருக்கலாம். ஆனால் நோக்கம்  என்பது ஒன்றே ஒன்றுதான்; தனது குணத்தின் பண்புகளை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதுதான் அது.




‘சவிதர்க்க சமாதி’ பாதை என்றால், அது போய்ச்சேரும் இடத்தை  ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார். அந்த இடத்தை அடைந்துவிட்டோம் என்பதை அறிந்துகொள்வதற்கு சில குறிப்புகளை தெரிந்துகொள்வோம்- -
 
     உணர்வு மனதிலிருந்து அஹங்காரம் குறையத் தொடங்கும்.

     வெளியில் ஓடி புறவுலகில் இருக்கும் ஆரவாரம், பரபரப்பு இவற்றை இரசிப்பதிலிருந்து உணர்வு மனம் விலக ஆரம்பிக்கும். 

     உணர்ச்சிகளை அடக்கிவைப்பதற்கு பதிலாக, உணர்ச்சிகள் அடங்க                ஆரம்பிக்கும்.
   
     உணர்ச்சிகள் அடங்குவதன் காரணமாக, உணர்வு மனம்                         தன்னிச்சையாக முடிவெடுக்காமல் புத்தியைக் கலந்து                    செயல்பட ஆரம்பிக்கும்.

     உணர்ச்சியின் காரணமாக  எதிர்விளைவுகள் குறைய                      ஆரம்பிக்கும்.

     நான் என்பது மனமல்ல என்ற உண்மை புரிய ஆரம்பிக்கிறது; அதன் காரணமாக மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறோம்.

    விவேகம் மிகுந்து காணப்படுவதால் பற்றற்ற தன்மை (வைராக்கியம்) வளர ஆரம்பிக்கும்.

    உணர்வு மனதில் உள்ள அசுத்த எண்ணங்களை வெளிப்படுத்தக்                  கூடிய  பதிவுகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.

  ஜீவாத்மாவைப் பற்றிய உணர்வே இல்லாதிருந்த மனிதன், ஆன்மாவைப்     பற்றி சிந்திக்கத் தொடங்குகிறான்         

அவனது பகுத்தறியும் தன்மையில் தெளிவான பார்வை கிடைக்கும்  .
 

வரைபடத்தைப் பாருங்கள்.

வரை படத்தில் உள்ள ‘சவிதர்க்க சமாதி’ என்பது ஞானமார்க்கத்தில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பாதையைக் குறிக்கிறது.

அந்தப் பாதையில் மனிதன் முறையாகப் பயணம் செய்தால், அவன் சென்று அடையும் இடம் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார்.

யதார்த்த உலகில் வாழும் மனிதனுக்கு ‘சவிதர்க்க சமாதியில்’ ஈடுபட நேரம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். 

சவிதர்க்க சமாதியில் ஈடுபட நேரம் இருந்தாலும், அதில் ஈடுபடும் மனிதனுக்கு புத்தி மற்றும் பகுத்தறியும் தன்மை முழுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

மற்றவர்களுக்கு ஞானம் பற்றிய மெய்ப்பொருளை அடையவேண்டும் என்கின்ற ஆர்வம் தீவிரமாக இருந்தால், தகுந்த சான்றோரை நாடித் தெரிந்துகொள்ள வேண்டும்.

 ஏனெனில், பல நேரங்களில் நாம் யாரை நாடிச் செல்கிறோமோ, அவருக்கு  அதற்குரிய தகுதி இல்லாதிருக்கலாம். அதனால், அதன் உண்மைத்தன்மையைப் பற்றிய சிந்தனை இல்லாமலேயே, நமக்கு நிறையப் பாடம் எடுப்பார்கள்.”



‘குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவீழு மாறே”             - - திருமூலர்



சம்பிரஞ்ஞாத சமாதி நிலையை அடைந்த மனிதனுக்கு நிறையவே குழப்பங்கள் வரும். ஏனெனில், அவனது உணர்ச்சி, உணர்வுமனதிலிருந்து வெளியேற ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் ஆன்மாவைப் பற்றிய முழுமையான தெளிவு இல்லாததால் அவனுக்குப் பல இடத்திலிருந்தும் நெருக்கடிகள் வரும். 


தனது பயணத்தின்  அடுத்தடுத்த பாதைகளை அவன் தைரியமாக  தொடரவேண்டும். இல்லையேல் நிலைகுலைந்து போகும் வாய்ப்பு உண்டு.


தன்மீதும், தனது முயற்சிகளின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு பயணத்தைத் தொடரவேண்டும்.


“தானே தனக்குப் பகைவனும் நட்டானும்;
தானே தனக்கு மறுமையும் இம்மையும்;
தானே  தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்;
தானே தனக்கு தலைவனும் ஆமே”             - - திருமூலர்


இதற்கு, அறத்தின் இயல்பை அறிந்து சிறந்த அறிவுடையவரது உறவைத் தேடி தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.


“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை                                திறனறிந்து தேர்ந்து கொளல்              - - திருவள்ளுவர்






 73. ஞான மார்க்கம் – பாதை 2

மனிதன் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ நிலையை அடைந்தவுடன், அவனது மனம்  புத்தியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துகொள்ள ஆரம்பிக்கிறது.

 


 அத்துடன் அவனது அஹங்காரம் குறையக்  குறைய, அவன் புறவுலகின் யதார்த்த நிலைகளைப் புரிந்துகொண்டு அதனுடன் இசைவாகவும், இணக்கமாகவும்  நடந்துகொள்ள ஆரம்பிக்கிறான்.

ஒவ்வொரு நிகழ்வையும் பகுத்தறிவின் துணையுடன் தர்க்கம் செய்வதிலிருந்து விலக ஆரம்பித்துவிடுகிறான்.



 எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்வதை விட்டுவிடுவதால், அவனது மனதில் உணர்ச்சிகள் பொங்கிப் பெருகுவது நின்றுவிடுகிறது. மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும்  குறைய ஆரம்பிக்கிறது.


சவிதர்க்க சமாதியின் காரணமாக, அவனுக்குள் வாழ்வியல் உண்மைகளைப் பற்றிய தெளிவு கிடைக்கிறது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக சவிதர்க்க சமாதியிலிருந்து விடுபட்டு, ‘நிர்விதர்க்க சமாதியில்’ நுழைந்துவிடுகிறான்.


‘நிர்விதர்க்க சமாதியில்’ தர்க்கம் நின்றுவிடுகிறது. அவன்    அகத்தாய்வில் கவனம் செலுத்துகிறான். 


ஆனாலும், அந்த அகத்தாய்வு அவன் மனதில் சேகரித்து வைத்திருக்கும் எண்ணங்களின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த எண்ணங்களோ பல பேரிடமிருந்து கடன் வாங்கியவைகள்; அவற்றில் அவர்களது சொந்தக் கருத்துகளும் இடம் பெற்றிருக்கும். 


கடன்வாங்கிய எண்ணங்களாக இருந்தாலும், புறவுலகில் செயல்படுவது குறைந்து, அகத்தாய்வில் நாட்டம் அதிகமாவதால்  நாளடைவில் அவனது மனம், அவனையும் அறியாமலே புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது.


 மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதால், அதனை ‘ஒருங்கிணைந்த மனம்’ என்றும் சொல்லலாம்.


சுத்தமான எண்ணங்களால் அவனது மனம் நிரம்பி இருந்தாலும், புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அதனால் தன்னிச்சையாக இயங்க முடியாது. 

அது பதிவுகள் இருந்தும் இல்லாதது போல ஆகிவிடுகிறது. மனம் புத்தியுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் நிலையில் அது ‘அசம்பிரஞ்ஞாத சமாதி’ என்று அழைக்கப்படுகிறது.


வரைபடத்தைப் பாருங்கள்:-




இந்த நிலையிலும், அவனது மனம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் குழப்பத்தில் இருக்கும்

மனதில் ஏற்படும் குழப்பங்களையும், வேதனைகளையும் தாங்கிக்கொள்ள அவன் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் அவனால் அடுத்த பாதைக்குள் நுழைய முடியும்.



74. ஞான மார்க்கம் – பாதை 3

‘அசம்பிரஞ்ஞாத சமாதி’  அடைந்த மனிதனின் மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. அவனது உணர்வு மனதில் சுத்தமான எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.


 என்றாலும், ஒருவகையில் அவை அசுத்தமான எண்ணங்களே. ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை மற்றவர்களிடமிருந்து இரவலாகப் பெற்றவை.


‘அசம்பிரஞ்ஞாத சமாதி’  நிலையை அடைந்த மனிதனுக்கு ஒரு தவிர்க்க முடியாத குழப்பம் வரும். அதுவரை அவனது உணர்வு மனம் தன்னிச்சையாக முடிவு எடுத்தது. அத்துடன் அது எடுக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை  ஆழ்மனதால் தூபம் போடப்பட்டதாக இருக்கும்.


இப்பொழுதோ அது புத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஆழ்மனதில் இருந்து வரும் ஆலோசனைகளை அதனால் நிறைவேற்ற முடியாது; ஏனெனில் புத்தியிலிருந்து வரும் ஆலோசனைகள் வேறுவிதமாக இருக்கக்கூடும்.


ஒரு இரண்டும்கெட்டான் நிலையில் இருக்கின்ற காரணத்தால், மனதில் குழப்பங்கள் உருவாகும். மேலும், அவனது மனமும் செயல்படும்  நிலையிலிருந்து செயல்பட விரும்பாத தன்மைக்கு மாறிக்கொண்டிருக்கும்.


செயல்பட விரும்பாத தன்மையில், மனம் அமைதியாக இருக்கும்பொழுது, அந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்தி மனிதன் ‘சவிசார சமாதி’ என்னும் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கவேண்டும்.

'விசாரம்’ என்பது ஆராயும் சிந்தனையைக் குறிக்கிறது.
இந்த சிந்தனை ஆராய்ச்சி செய்யும் பாவனையுடன் இருக்கவேண்டும். மேலும் இந்த சிந்தனையில் எந்த விதமான உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.



உணர்வு மனம் முன்னால்  செய்த சிந்தனைகளுக்கும், இப்பொழுது  மேற்கொள்ளவிருக்கும் சிந்தனைகளுக்கும் வித்தியாசம் உண்டு.



முன்பு நாம் உணர்வு மனதில் சேகரித்து வைத்திருந்த எண்ணங்களின் அடிப்படையில் நமது சிந்தனை இருந்தது. அந்த எண்ணங்கள் நம்முடையதாகவும் இருக்கலாம்; பிறரிடமிருந்து  வாங்கியவையாகவும் இருக்கலாம்.


இப்பொழுது செய்யப்படும் சிந்தனையோ  நமக்குள்ளேயே வாழ்வியல் புதிர்களுக்கு விடை தேடும் விதமாக இருக்கும். உணர்வு மனதில் இருந்த சலனங்கள் பெருமளவில் குறைந்திருப்பதால், நம்மால் தெளிவாக சிந்திக்க முடிகிறது.


நம்மால் தெளிவான முடிவிற்கு வர முடியாதபோது, சான்றோரிடமோ அல்லது சத் சங்கங்களில் கலந்தோ தெளிவு பெற முடிகிறது.


விசாரத்தில் நமது சிந்தனைக்குத் தேவையான கருப்பொருள் புறவுலகில் இருந்து மட்டுமல்ல, ஆழ்மனதில் இருந்தும்  பெறப்படுகிறது. 


விசாரத்தில் தெளிவு கூடக்கூட, அதுவே ‘சவிசாரமாக’ மாறிவிடுகிறது. அதாவது ஆழ்மனதில் உள்ள அசுத்தமான பதிவுகளும் ஒவ்வொன்றாக வெளியேறிவிடுகின்றன. பின்னர்   சுத்தமான பதிவுகள் மட்டுமே அதில் தங்கியிருக்கும்.


‘சவிசார சமாதி’ எனும் பாதையில் பயணம் செய்தால், பாதையின் முடிவில் அவன் அடையும் இடம் ‘சபீஜ சமாதி’.

வரைபடத்தைப் பாருங்கள்:-



‘சபீஜ சமாதி’ நிலையை அடைந்த மனிதனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) பெருமளவில் குறைந்துவிடுகிறது. “தான்” என்கிற உணர்வு மறைந்து “தன்னைப்” பற்றிய நினைவு மட்டும் இருக்கிறது.



75. ஞான மார்க்கம் – பாதை 4

‘சபீஜ சமாதி’ நிலையில் அவனது சிந்தனை இன்னமும் புறவுலகப் பொருட்களையும், அவற்றால் ஆழ்மனதில் ஏற்படும் அனுபவங்களையும் நோக்கியே இருக்கும்.”


மெய்ப்பொருள் பற்றிய உண்மையை அறிந்திருந்தாலும், அவனால் புறவுலக சிந்தனையிலிருந்து விடுபட முடிவதில்லை.


‘நிர்விசார சமாதியின்’ பாதையில்  அவன் பயணத்தை ஆரம்பித்தவுடன், சிந்தனை இல்லாமல் பொருட்களைப் பார்க்கக் கற்றுக் கொள்கிறான். புலன்களின் உதவியின்றி அறிந்துகொள்ளும் திறனில் அவன்  மேன்மை அடைகிறான்.



வாழ்க்கையில் அவன் செயல் புரிந்தாலும், செயல் புரியாவிட்டாலும் அனைத்தையும் சாட்சி பாவத்துடன்   பார்க்க ஆரம்பிக்கிறான்.

சாட்சி பாவத்திற்கு வந்தவுடன், அவனுக்கு தியான நிலை இயல்பாகவே கைகூடிவரும். மனதில் எந்த எண்ணமும் இல்லாமல், அவனால் தியானத்தில் இருக்கமுடிகிறது.

“எண்ணமில்லாத நிலையே உண்மையான தியானம்”
(Meditationless meditation is the Real Meditation ... Swami Chinmayanandha)


எண்ணம் பற்றிய எண்ணமும் இல்லாத நிலையில், அவன்  ‘நிர்பீஜ சமாதி’ என்ற இலக்கை வந்தடைகிறான்.



பேரண்டத்துடன் அவனுக்கு ஓர் ஒத்திசைவு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு பேருண்மையும்  அவனுக்குப் புரிகிறது.   அது - - -

“இது இல்லாத போது, 'அது' இருக்கிறது”        
               

வரைபடத்தைப் பாருங்கள்:-




‘நிர்பீஜ சமாதி’ நிலையை அடைந்தவுடன், உள்ளிருந்து வரும் இறையருளை  உணரத் தொடங்குகிறான்.



76. விழிப்புணர்வு

நாம்  பார்ப்பது எதுவாக இருந்தாலும், அது பொருளாக இருக்கும்; அல்லது பொருளில் இருந்து வந்ததாக இருக்கும்,

‘இருட்டு’ என்பது பொருளா அல்லது பொருளிலிருந்து வந்ததா? இரண்டுமே இல்லை.



மாலை நேரம் வந்ததும் கிழக்கிலிருந்து மேற்காக இருட்டு பரவுகிறது. ஆனால் நமது வீட்டில், விளக்கு எரிந்துகொண்டிருந்தால், அந்த இருட்டு நமது வீட்டிற்குள் வருவதில்லை. நமது வீட்டை கடந்து சென்றாலும்கூட, அதனால் நம் வீட்டிற்குள் நுழைய முடிவதில்லை. 

நாம் ‘இருட்டு’ என்று நடைமுறை பழக்கத்தில் சொல்வதாக இருந்தாலும், உண்மையில் அது வெளிச்சத்தின் இல்லாமையே.


ஒரு மனிதனுக்கு உண்மையான ஞானம் ஏற்படும்பொழுது, அதனை ‘விழிப்புணர்வு’ (வித்யா) என்று சொல்வார்கள்.


விழிப்புணர்வு இல்லாதபோது, அதனை விழிப்புணர்வின்மை (அவித்யா) என்று சொல்வார்கள்.




நாம் உபயோகிக்கும் பல பொருட்கள், உடல்நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் நாம் அவற்றை ஏன் உபயோகிக்கிறோம்? உடல்நலத்திற்கு கேடு என்ற உண்மை தெரிந்தும், அவற்றை உபயோகிப்பதைத்தான் விழிப்புணர்வின்மை என்கிறோம்.

விழிப்புணர்வு என்பது உண்மையைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல; தெரிந்த உண்மைக்கு ஏற்ப வாழ்வதாகும்.



எல்லாம் அவன் செயல்” என்று நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொண்டால், அது விழிப்புணர்வுதான். ஆனால், நாம் விரும்பாத ஒன்று நடக்கும்பொழுது வருந்துகிறோமே; அப்படியானால், நாம் உண்மையிலேயே அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோமா









77. பலூனும், புல்லாங்குழலும்

ஞானம் பெறுவது முதல்படி என்றால், விழிப்புணர்வு ஞானத்தின் பாதையில் கடைசிப்படி என்று சொல்லலாம்.


விழிப்புணர்வு பற்றி அறிந்துகொண்டவர்கள், உண்மையிலேயே விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார்களா  என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?




பலூன், புல்லாங்குழல் இரண்டுமே காற்றில் இயங்குவதுதான். ஆனாலும், அவற்றிற்கிடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

பலூனில் காற்று அடைக்கப்பட்டால், அது தன் விருப்பம்போல் பறக்க ஆரம்பித்துவிடும். ஒரு நூலில் அதை இணைத்தாலும், அந்த நூலையும் சேர்த்து இழுத்துக்கொண்டு பறக்கும்.

புல்லாங்குழலும்  காற்றில் இயங்குவதுதான். இருந்தாலும் அது தன்னிச்சையாக வாசிப்பதில்லை. அதற்கு, அதனை எடுத்து வாசிப்பதற்கு, வேறு ஒருவர் வேண்டும்.



நாம் பலூனாக இருக்கிறோமா அல்லது புல்லாங்குழலாக இருக்கிறோமா? நாம் புல்லாங்குழலாக இருக்கிறோம் என்றால், நம்மை அவன் கையில் ஒப்படைத்துவிட வேண்டும்.




நம்மை இசைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது அவனது விருப்பம். 

கருவியே வேண்டாம் என்று நினைத்தாலும், அதுவும் அவனது  விருப்பமே. 



பலூனாக இருக்கும் நாம், எப்பொழுது புல்லாங்குழலாக மாறுகிறோமோ, அன்றுதான் விழிப்புணர்வு என்றால் என்னவென்றும், அதனால் வரும் ஆனந்தத்தையும் புரிந்துகொள்வோம்.




78

நன்றியுரை

இதுவரை இதனுடன் பயணித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இந்திய வேதங்கள் ஒரு மாபெரும் பாற்கடல். வேதவியாசர் அருளிய பகவத்கீதையோ ஒரு அமுதக் கலசம்.

அதில் நான் பருகியது ஒரு துளி மட்டுமே; ஆனால் அந்த ஒரு துளியே என் வாழ்க்கையை மாற்றுவதற்கு போதுமானதாக இருந்தது.
அதனைச் சுவைக்கக் கற்றுத் தந்தவர் ‘சுவாமி சின்மயானந்தா’ அவர்களே.

எந்த மழலையும் தான் புதிதாக கற்றுக் கொண்டதை மற்றவர்களிடம் சொல்லிக்காட்டத் துடிக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது, அதற்கே உரிய கூச்சத்துடன், தனக்குத் தெரிந்ததை சொல்லிக்காட்டும். அந்த மழழையின் கூற்றில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், நாம் அவற்றைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவோம்.

எனது குழந்தைத்தனமான கூற்றிலும் பல குறைகள் இருக்கலாம்; இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள்.

 ஏனெனில்,
இது ஒரு “மழலையின்" கீதை.

                                           நன்றியுடன்,

                                           A. Packiam










Sunday, 30 August 2026

Real-Being


                  REAL-BEING


From being a human-being, one must ultimately become aware of one's
REAL-BEING.

What must one do to attain this?


In every human-being, there appear to be two observers:
The observer associated with the ego — the individual person.
The silent observer beyond the ego — Consciousness itself.


Through our experiences and through our contact with holy books and holy people, we may gradually come to recognise this silent observer as the Consciousness that illumines our entire life.

Can we call this individual experience of Consciousness the REAL-BEING?
Not exactly.


According to the principle of Advaita, what we experience as Consciousness within ourselves is not separate from the Ultimate Reality. It is only seemingly limited by the body, mind, and ego.

The Absolute Consciousness may be called the REAL-BEING.

Different people call this Ultimate Reality by different names according to their faith—Brahman, Sivam, the Father in Heaven, Allah, and so on.

The Absolute Reality is beyond manifestation. When viewed in relation to manifestation, we may speak of Pure Consciousness, which illumines all beings.



For the sake of understanding, we may compare these with the ocean:-

Absolute Consciousness — the Ocean

Pure Consciousness manifesting in creation — the Waves

Individual consciousness apparently limited by the body and mind — the Foam
The foam appears to be separate, yet it is nothing but water.



Likewise, the individual appears to be separate, yet the Consciousness that illumines the individual is never truly separate from Pure Consciousness.



At the level of ordinary life, we indulge in various activities, resulting in action, reaction, response, and experience.
At the same time, we behave as observers and witness the happenings taking place around us.

But the Consciousness that illumines us does not itself act.

It gives the body and mind the capacity to function, yet it remains untouched by their activities.

It illumines not only the happenings of the outer world but also the thoughts, emotions, and movements taking place within us.


The problem arises when the ego identifies itself with all these activities and says:
“I am doing.”
“I am experiencing.”
“This is happening to me.”

Therefore, the first step is to weaken and eventually transcend of this ego-centred identification. 

But merely eliminating the gross feeling of ego is not the end.

Even after the sense of doership begins to disappear, the body and mind may continue to function in the outer world.
Physically, we may perform various activities; but inwardly, we remain unattached to them.


When action is performed without egoistic identification and without the feeling of personal doership, no new binding impressions are created. Thus, the creation of fresh vasanas gradually comes to an end.



Even when the feeling of doership disappears, there may still appear to be an observer witnessing the happenings of the world. This is a significant stage.

One must continue, with perseverance, the disciplines that helped weaken the ego until even the subtle sense of individuality loses its hold.


The individual self does not literally travel somewhere and merge with another Reality.

Rather, the apparent limitation gradually disappears.

Just as the foam does not have to travel anywhere to become water, the individual does not have to travel anywhere to become Brahman.



It was never anything other than That.
The individual is covered by various sheaths, or layers.

As identification with these sheaths gradually disappears, the individual ceases to experience himself merely as a limited person.

When even the subtle identification with the bliss-sheath is transcended, the sense of being a separate observer also disappears.


Then there is no ego left to say:
“I am observing Consciousness.”
There is only Consciousness.
This is the state of the liberated sage—the Jeevan-mukta.


Such a sage continues to live and function in the world, but without the sense of individuality, ownership, or doership.

The body may act.
The mind may respond.
The world may continue to appear.
But inwardly, there is no separate person claiming: “I am the doer.”


What, then, happens after the death of such a liberated sage?

Advaita says that there is no individual entity left to undergo another birth.

The apparent individuality has already lost its separate identity.


Therefore, liberation is not the journey of a small consciousness into a great Consciousness.

It is the removal of the mistaken idea that Consciousness was ever divided.


The wave appears to be separate.
The foam appears to be separate.
But both are only water.
Likewise, the individual appears to be separate.
But in Reality, there is only the REAL-BEING.


The seeker must strive to transcend the ego and all identification with the body and mind.

Beyond that point, there is no separate individual left to witness the disappearance of individuality.

There is no one left to say:
“I have merged with the Absolute.”

There is only— REAL-BEING.


Saturday, 29 August 2026

ஆன்மா

                  ஆன்மா


              முன்னுரை

தலைப்பு "ஆன்மா" என்று இருந்தாலும், இந்தத் தொடர் "மனம்" பற்றியதுதான்.

"சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.‌."
".. தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்"
"ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி.."
என்றெல்லாம் நமது சமய நூல்களில் கூறப்பட்டிருந்தாலும், நம்முள் இருக்கும் இறைவனை/இறை சக்தியை தரிசனம் செய்ய முடியாமல் அல்லது உணர முடியாமல் தடுக்கும் காரணிகள் எவை?

அத்தகையக் காரணிகளை அகற்றுவது எப்படி?

அவற்றை அகற்றி விட்டால், சித்தத்தின் உள்ளிருக்கும் உள்ளொளியைத் தரிசிக்க முடியுமா?

இந்தத் தொடரில் இவற்றைப் பற்றித்தான் ஆராயப் போகிறோம்.

இவற்றில் சமய நூல்களில் இருந்து நான் புரிந்து கொண்டதும், எனது சொந்த ஊகங்களும் கலந்துள்ளன. எனவே நீங்கள் அனுபவித்து உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
..................................................................


                      
நம்மை உள்ளிருந்து இயக்குவது "ஆன்மா" என்கிறார்களே; அப்படியானால் அதைப் பார்க்க முடியுமா? இது ஒரு நண்பரின் கேள்வி.

வாளால் வெட்டமுடியாததும், நெருப்பால் சுடமுடியாததும், நீரால் நனைக்க முடியாததும், காற்றால் உலர்த்த முடியாததுமான ஆன்மாவிற்கு எந்தவித உருவமும் கிடையாது; அதனால் அதைப் பார்க்கவும் முடியாது. ஆனால், அதை உணர முடியும்.

அதற்கு முன்னால் நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது "ஆன்மாவை" உணர்ந்து கொள்ள வேண்டுமானால், அதற்கான வழிகளை மற்றவர்கள் எடுத்துச் சொல்லலாம். ஆனால் ஆன்மாவை உணர்வதற்கான முயற்சிகளை நாம்தான் மேற்கொள்ள வேண்டும். 




ஆன்மாவைப் பற்றி எழுதுவதென்றால் நிறைய எழுதலாம். ஆனாலும், நம் புரிதலுக்கு எது தேவையோ அந்த அளவில் நிறுத்திக் கொள்வோம்.

நமக்கு உள்ளே இருப்பதை "ஜீவாத்மா" என்றும், நமக்கு வெளியே "பரமாத்மா" இருக்கிறார் என்றும் சொல்கிறோம். ஏன் இந்த வேறுபாடு?

ஒரு பெரிய மைதானத்தின் நடுவே ஒரு வீடு மட்டும் இருந்தால், பொதுவாக நாம் சொல்வது 'தூரத்தில் ஒரு வீடு தெரிகிறது; சுற்றிலும் வெட்ட வெளியாக (space) இருக்கிறது' என்பதுதான்.
அப்படியானால் வீட்டின் உள்ளே வெட்டவெளி இல்லையா? ஒருவேளை வீட்டின் சுவர் இடிந்துவிட்டால் அது இருந்த இடமும் வெட்டவெளி தானே!

வீடு இருந்ததனால் வெட்டவெளி என்கிறோம். இல்லையெனில் அது வெறும் 'வெளிதான்' (space).

பரமாத்மா மற்றும் ஜீவாத்மா வின் தொடர்பும் இதைப் போன்றதுதான். உடலை விட்டுவிட்டால் அங்கு ஜீவாத்மா இல்லை; இருப்பது பரமாத்மா மட்டுமே. 

சொல்லப்போனால் பரமாத்மா என்று சொல்வது கூட தவறுதான். வெறுமனே "ஆத்மா" தான்; பரம்பொருளின் மறுபெயர் என்றும் சொல்லலாம்.

இந்துக்கள் பரம்பொருள் என்று சொல்வதைத்தான் கிருஸ்தவர்கள் பரமபிதா என்கிறார்கள்; முஸ்லிம்கள் அல்லா என்கிறார்கள். வார்த்தைகள் வேறு வேறாக இருக்கலாம்; அவற்றிற்குப் பொதுவான பெயர் ஒன்று உண்டு .. அதுதான் "இறைவன்". அதனால்தான் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று சொன்ன மாணிக்கவாசகர் எல்லா நாட்டையும் குறிப்பிடும் போது 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று பாடுகிறார்.

ஜீவாத்மா மற்றும் பரமாத்மா என்ற இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்து கொள்வதற்காக, வீடு மற்றும் வெட்டவெளி இரண்டையும் உதாரணமாகக் குறிப்பிட்டோம். ஆனால், அதில் ஒரு மாறுபாடு உள்ளது.

 

மனிதன் இறந்தவுடன் அவனது உடலை விட்டுப் பிரிந்த 'ஜீவாத்மா', வீட்டின் சுவர் இடிந்தவுடன் வீட்டினுள் இருந்து வெளியேறும் வெளி (space) இரண்டையும் ஒப்பிட்டதில் ஒரு மாறுபாடு உள்ளது. 

ஜீவாத்மா உடலை விட்டு வெளியேறினாலும், அது பரமாத்வுடன் இணையாமல் தனியாகவே இருக்கும். மேலே கூறிய உதாரணத்தில் சிறிய மாற்றம் செய்தால், அதை நாம் புரிந்து கொள்ளலாம்.

வீட்டின் சுவர் இடிந்து விழும் சமயத்தில் வீட்டின் உள்ளே இங்கும் அங்குமாக பறந்து கொண்டிருந்த ஒரு பலூன்,  வீட்டை விட்டு வெளியேறினால் வெட்ட வெளியில் அது தனியாகப் பறந்து கொண்டிருக்கும். அதைப்போன்று, உடல் மரித்தபின் உடலிலிருந்து வெளியேறிய ஜீவாத்மா, பரமாத்வுடன் இணையாமல் தனியாகவே பயணிக்கும். காரணம் அது கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாயத் திரையின் உள்ளே இருப்பதுதான்.

உடல் மரித்தாலும் மாயத்திரை கிழிபடாததால் (!) ஜீவாத்மாவால் பரமாத்வுடன் இணைய முடிவதில்லை.

இதைப் பற்றி மேற்கொண்டு நாம் ஆராயப் போவதில்லை. ஏனெனில், நமது நோக்கம் 'ஆன்மாவை' எப்படி உணர்வது என்பது மட்டும்தான்.

கண்ணுக்குப் புலப்படாத மாயத்திரையினால் மூடப்பட்ட ஜீவாத்மாவை நாம் "சித்தம்" என அழைக்கிறோம்.



"சித்தம்" என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

வீட்டில் உள்ள ஒரு குழல் விளக்கை (Tube light) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருப்பது என்ன ?

குழல் விளக்கு கண்ணாடியால் ஆன ஒரு உருவம். விளக்கின் உள்ளே மெர்குரி நீராவியும், ஒரு வகையான வாயுவும் கலந்துள்ளன. மின் இணைப்பு கிடைத்ததும் மெர்குரி ஒளிர்கிறது. அதன் ஒளி அதனை மூடியுள்ள கண்ணாடித் தகடை ஊடுறுவி வெளியே வெளிச்சத்தைக் பாய்ச்சுகிறது.

ஜீவாத்மாவின் இருப்பும் இதைப் போன்றதே. கண்ணுக்குப் புலனாகாத ஒரு மாயத் திரையின் உள்ள ஜீவாத்மா உள்ளது. அதைத்தான் நாம் "ஆன்மா" என்று அழைக்கிறோம்.

அதுதான் மனிதன் இயங்குவதற்கான சக்தியைக் கொடுக்கிறது. அதனில் இருந்து வெளிப்படும் ஒளியானது மனிதனை ஆட்கொண்டு அவனைப் பரவசப் படுத்தக் கூடியது. அதனால்தான்
மாணிக்கவாசகர் இவ்வாறு பாடுகிறார் ..
"..ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மய
தேனினைச் சொரிந்து.."
(.. என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து..)

    


மாணிக்கவாசகர் "உள்ளொளி பெருக்கி" என்கிறார். உள்ளொளி பெருகும் இடம் ஆன்மாதான். ஆனாலும் நேரடியாகப் பொருள் கொள்ளக்கூடாது.


பிரபஞ்சம் முழுவதும் பரம்பொருளின் இறை சக்தி பரவி உள்ளது. அது நாத, விந்து .. அதாவது ஒலியும் ஒளியும் கலந்தது. அதன் ஒரு பகுதிதான் நம்முள் "ஆன்மாவாக" உள்ளது. அதைத்தான் நாம் ஜீவாத்மா என்றும் சொல்கிறோம்.


அது கண்ணுக்குப் புலப்படாத ஒளியால் நிரம்பப் பெற்றது. மேற்கொண்டு பெருக வேண்டிய அவசியமில்லை. ஆனால், மாணிக்கவாசகர் ஏன் "உள்ளொளி பெருக்கி" என்கிறார்?


ஆன்மாவின் ஒளி சித்தத்தின் மாயத் திரையைத் தாண்டி பெருக்கெடுத்து தன்னைப் பரவசப்படுத்த வேண்டும் என்கிறார். அதனை 'அழியாத ஆனந்தமயத் தேன்' என்கிறார்.


அப்படியானால், இந்தப் பாடலைப் பாடும் பொழுது 'உள்ளொளி' பெருக்கெடுத்து அவரை ஆட்கொள்ள வில்லையா? அல்லது, நம்மை மனதில் கொண்டு நமக்காக அந்த வேண்டுதலை வைத்தாரா?


எது எப்படியோ, 'ஆன்மாவின் உள்ளொளி' சித்தத்திற்கு வெளியே பெருக்கெடுத்து நம்மைப் பரவசப்படுத்த விடாமல் தடுப்பது எது?


    

நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பலவிதமான அனுபவங்களையும் உள்வாங்கிக் கொள்ளும் பொழுது, அவை நமது சித்தத்தின் மீது பதிந்து விடுகின்றன. அவைகளை 'வினைப் பயன்கள்' என்றும் சொல்வார்கள்.


சித்தத்தின் மீது பதிவுகள் ஏற்படும் பொழுது, அதனை ஆழ்மனம் (sub-conscious mind) என்று கூறுகிறோம். அதை உணர்வற்ற மனம் (unconscious mind) என்றும் சொல்வதுண்டு.


அவை நல்வினைப் பயன்களாகவும் இருக்கலாம்; தீவினைப் பயன்களாகவும் இருக்கலாம். இந்த இருவினைப் பதிவுகளின் எண்ணிக்கை கூடக்கூட, நமது மனதில் எழும் 'அஹங்காரம்' அதிக அழுத்தம் பெற்று விடுகிறது.

அதன் காரணமாக சித்தத்தின் உள்ளிருந்து வரக்கூடிய ஒளியை நம்மால் உணர முடிவதில்லை.


அதனால்தான் வள்ளுவரும்  "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" எனக் கூறுகிறார்.

  


ஆழ்மனப் பதிவுகளின் செயல்பாடு, மேகக் கூட்டத்தின் செயல்பாட்டைப் போன்றதுதான்.


மேகங்கள் ஒன்றுகூடி சூரியனை மறைத்தால் சூரியன் கண்ணுக்குத் தெரியாது; ஆனால், மேகங்கள் இல்லாத போது சூரியனின் வெளிச்சத்தைக் காண முடியும். மேகக் கூட்டத்தின் வீச்சும், அடர்த்தியும் அதிகமாக இருந்தால், சூரியன் இருப்பதையே நம்மால் உணர முடியாது.


அதேபோல், ஆழ்மனப் பதிவுகள் அதிகமாக, அதிகமாக நம்மால் சித்தத்தின் உள்ளொளியை நம்புவதுகூட கடினமாகி விடும்.


ஆழ்மனப் பதிவுகள் அதிகமாகும் பொழுது நமது "நான்" என்கிற எண்ணமும் வலுப்பெற்று விடும். கூடவே "என்னுடைய" என்பதில் உள்ள எண்ணிக்கையும், அவற்றின்பால் உள்ள பற்றும் (attachment) அதிகரித்து விடும். நம்மிடம் உள்ளொளி பற்றிய எந்த எண்ணமும் இருக்காது.


ஆன்மாவில் ததும்பும் உள்ளொளியை உணர வேண்டுமானால், "நான்" மற்றும் "என்னுடைய" என்ற இரண்டும் நம்மை விட்டு விலக வேண்டும்.


    


ஆழ்மனதில் உள்ள பதிவுகளின் காரணமாக உருவாகும் "நான்" என்ற அஹங்காரம், அதைத் தொடர்ந்து ஏற்படும் "என்னுடைய" என்ற பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக களைவதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் நல்ல பலன்களைக் காண முடியும்.


"நான்" மற்றும் "என்னுடைய" என்கின்ற இரண்டும் நீங்கும் பொழுது, ஆன்மாவை உணர்ந்து கொள்வது எப்படி நடைபெறும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.


ஆன்மாவை .. இறை சக்தியை மூன்று விதமாக உணர முடியும் என்பது எனது கருத்து. இது சான்றோர்கள் மற்றும் ஞானியர்களின் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கலாம். ஒரு சாதாரண மனிதனாக எனது கருத்தைச் சொல்கிறேன்.




எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்மையை மூன்று வழிகளில் அறிந்து கொள்ளலாம் என்கிறார் ரிஷி பதஞ்சலி. அவை ..

1. பிரத்தியட்சம்:- நேரடி அறிவு. புலன்களின் உதவியின்றி நேரடியாக அறிந்து கொள்வது.

2. அனுமானம்:- ஊக அறிவு. ஊகித்து அறிந்து கொள்வது.

3. ஆகமம்:- சான்றோர் வாய்மொழி மூலம் அறிந்து கொள்வது.


ஆன்மாவைப் பற்றியும் ஆன்ம ஒளி பற்றியும் சித்தர்களும், ஞானிகளும் நிறைய சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் மற்றும் ஞானிகளின் பாடல்களை சான்றோர்கள் விளக்கிச் சொல்வதைத் கேட்டு ஆன்மாவைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்ள விரும்பினால், அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டால் மட்டுமே நம்மால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். அதற்கான வழி என்ன என்று பார்ப்போம்.


அதற்கான முயற்சியில் வெற்றி பெரும் பொழுது, 'உள்ளார்ந்த மன அமைதி' (inner-peace) மற்றும் 'நிரந்தரமான ஆனந்தம்' (eternal bliss) ஆகிய இரண்டையும் ஊக அறிவால் உணர்ந்து கொள்ளலாம்.


இந்த இரண்டு உணர்வுகளும் ஏற்படும் இடம் ஆழ்மனம்தான். அங்கு முதலில் வருவது 'உள்ளார்ந்த மன அமைதி' என்றால் இறுதியில் வருவது 'நிரந்தரமான ஆனந்தம்'. இவை இரண்டிற்கும் இடையே வேறு சில நிகழ்வுகளும் நடக்கலாம். நாம் அதைப்பற்றி ஆராயப் போவதில்லை.


மூன்றாவதாக வருவது 'ஆன்ம ஒளி'. அது புலன்களின் உதவியின்றி நேரடியாக அறியக்கூடிய ஒன்று. 


ஒரு மனிதனின் குண்டலினி சக்தி சகசிரதளத்தை அடைகிற பொழுது, கூடவே இறையருளும் இருந்தால், அந்தக் காட்சி காணக் கிடைக்கும்.


நாம் சாதாரண மனிதர்கள். எனவே முதலில் சொல்லப்பட்ட இரண்டு விஷயங்களைப் (புரிதல் மற்றும் புரிதலினால் வரும் ஊகம்) பற்றி சிறிது சிந்திப்போம்.


 


காலையில் பொழுது விடிந்தவுடன் வீட்டிற்குள் வெளிச்சம் பரவுவதைத் பார்க்கிறோம். சூரியன் அடிவானத்தில் இருந்து வெளியே வந்துவிட்டது; அதனின்று புறப்பட்ட ஒளி வீட்டிற்குள் வெளிச்சத்தைக் தருகிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.


மேகக் கூட்டங்கள் சூரியனை மறைத்திருந்தாலோ, வீட்டின் ஐன்னல் கதவுகள் சாத்தியிருந்தாலோ வீட்டிற்குள் வெளிச்சம் வராது என்பதும் நமக்குத் தெரியும்.


சூரியன், மேகக் கூட்டங்கள், ஜன்னல் எல்லாமே பொருட்கள். எல்லாமே நம்மால் காணக்கூடியவை. எனவே வீட்டிற்குள் வெளிச்சம் வருவதற்கான காரணம் நம்மால் புரியக் கூடியதுதான்.


ஆனால், ஆன்மா என்பது பொருளல்ல; எனவே அதிலிருந்து பரவும் சூட்சும ஒளியை உணரத்தான் முடியும்.


ஆன்மா ஒளியை தரிசிக்கும் நிகழ்வு நமது 'குண்டலினி' சக்தி 'சகசிரதளத்தை' அடையும் பொழுது நிகழக் கூடிய ஒன்று. அது இறையருள் இருந்தால் மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்வு.


நம்மைப் பொறுத்தவரை முதலில் சொன்ன இரண்டும் 

.. உள்ளார்ந்த அமைதி (inner- peace), நிரந்தரமான ஆனந்தம் (eternal bliss) .. நமக்கு கைகூடினால் நமது வாழ்க்கை நல்ல முறையில் முற்றுப் பெற்றது என்பதை உணர்ந்து கொள்வோம். 

    


ஆன்மாவின் ஒளியை உணர்வதற்கு ஒவ்வொரு மார்க்கத்திலும் நாம் என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம். 


முதலில் 'தியான மார்க்கம்'.

தியான மார்க்கத்தை எட்டு அங்கங்களாகப் பிரித்துள்ளார்கள்.


இயமம், நியமம், ஆசனம், பிராணாயமம் ஆகியவற்றை ஒரு பகுதியாகவும், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை மற்றொரு பகுதியாகவும் பிரித்துள்ளார்கள்.


ப்ரத்யாஹாரம் என்பது இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பாலம் போன்றது.


தியானப் பயிற்சியில் ஈடுபடும் அனைவரும் 'மன அமைதி' பெறுகிறார்களா என்றால் அது சந்தேகம்தான். மன அமைதியே இல்லாதபோது 'நிரந்தரமான ஆனந்தத்தை' எப்போது உணர்வார்கள்?


இந்த இடர்பாடு பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் என எல்லாவற்றிலும் உண்டு. அவற்றின் காரணத்தை சிறிது ஆராய்வோம்.


இந்த இடர்பாடு ஏற்படுவதற்கான காரணம் எதுவென்று தெரிந்தால், அதைத் தீர்ப்பதற்கான விடையையும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?


இயமம், நியமம் இரண்டிலும் வாழ்வியல் அற நெறிகளை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் எனச் சொன்ன பதஞ்சலி முனிவர், அடுத்து ஆசனம், பிரணாயாமம் பற்றி எடுத்துரைக்கிறார்.


இந்த நான்கு அங்கங்களின் பயிற்சிகளும் உணர்வு மனதின் வெளியே புறவுலகில் நடைபெறக்கூடியவை.


இந்த நான்கு அங்கங்களையும் முறையாகப் பின்பற்றினால் உணர்வு மனம் அமைதியாகி விடும். அத்துடன் உணர்வு மனம் தன்னிச்சையாக முடிவு எடுக்காமல் புத்தியைக் கலந்தாலோசித்து செயல்படும் பக்குவத்தையும் அடைந்துவிடும்.


இதுவே போதுமானது என்ற மனநிலைக்கு மனிதன் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இது போதாது என்கிறார் ரிஷி பதஞ்சலி. மனிதன் அகவுலகில் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன என வலியுறுத்துகிறார்.


அதற்காக 'ப்ரத்யாஹாரம்' என்ற அங்கத்தைப் பற்றிச் சொல்லி, மனிதனை அகவுலகில் பிரவேசிக்கத் தூண்டுகிறார்.


இந்த இடத்தில் ஒரு முக்கியமான சூத்திரத்தைக் குறிப்பிடுகிறார். 

"தத்: க்ஷியதே ப்ரகாசாவரணம்"(பின்பு ஒளியைத் தடுத்துள்ள மறைப்பை அகற்றுவது வருகிறது)


இந்த சூத்திரத்தில் 'அகவுலகில்' எதற்காகப் பிரவேசிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தைச் சொல்லுகிறார். 


தியானத்தில் ஈடுபடுபவர்கள் அவர் சொல்லும் காரணத்தின் முழு ஆழத்தையும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.


இந்த சூத்திரத்தில் உள்ள மூன்று வார்த்தைகளைக் கொஞ்சம் ஆராய வேண்டும். அவை .."ஒளி, மறைப்பு, அகற்றுவது".


'ஒளி' என்பது ஆன்மாவின் ஒளியைக் குறிக்கிறது. "ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி" எனப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.


'மறைப்பு' .. உள்ளே இருக்கும் ஒளி சித்தத்தின் ஊடுருவி வெளியே வரும் பொழுது, நமக்கு நிரந்தரமான ஆனந்தம் கிட்டும்; ஆனால், அந்த ஒளியை வெளியே வரவிடாமல் தடுக்கும் 'மறைப்பு' எது? சித்தத்தின் மேல் படர்ந்திருக்கும் 'ஆழ்மனப் பதிவுகள்தான்' உள்ளொளியை வெளியே வரவிடாமல் தடுக்கின்றன.


'அகற்றுவது' .. தியானம் செய்வதின் முக்கிய நோக்கமே ஆழ்மனதில் படிந்துள்ளப் பதிவுகளை நீக்குவதுதான்.


சூரியன் தனது ஒளிக் கதிர்களை எல்லாத் திசைகளிலும் பரப்புகிறது. நாம் வீட்டிலுள்ள ஜன்னல்களை மூடி வைத்துவிட்டு, என் வீட்டிற்குள் வெளிச்சம் வரவில்லை என்றால் அதை சரியென்று சொல்ல முடியுமா? ஜன்னல்களைத் திறக்காதது நம் தவறுதானே!? ஜன்னல்களைத் திறந்தாலேப் போதும்; சூரிய ஒளியை "உள்ளே வா" என்று அழைக்க வேண்டியதில்லை.


ஆன்மா ஒளியும் 'மின்காந்த அலைகள்' போன்று சித்தத்தில் உள்ள மாயத்திரையை ஊடுருவி நமது உடல் முழுவதும் பரவி நமக்கு 'எல்லையற்றப் பரவசத்தை' ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால், அதற்குத் தடையாக இருப்பது நமது சித்தத்தின் மேல் படிந்துள்ள ஆழ்மனப் பதிவுகளே. நம்மால் ஏற்படுத்தப்பட்ட ஆழ்மனப் பதிவுகளே, நமக்குள் இருக்கும் உள்ளொளியை உணர விடாமல் தடுக்கும் மறைப்பாகச் செயல்படுகின்றன.


இந்த மறைப்பை நீக்குவதற்காக நாம் செய்யும் பயிற்சியே 'தியானம்' எனப்படும்.


ஆழ்மனப் பதிவுகள் என்று எதைச் சொல்கிறோம்? நாம் செய்யும் 'தியானம்' சித்தத்தில் படர்ந்துள்ள மறைப்பை அகற்றுகிறதா? இல்லையெனில் அதற்கானக் காரணங்கள் என்ன?


 

ஒரு மனிதன் பிறக்கும் போது அவனது முற்பிறவி முடியும் தருவாயில் எஞ்சியிருந்த ஆழ்மனப் பதிவுகளுடனேயேப் பிறக்கிறான் எனச் சமய நூல்கள் சொல்கின்றன.


இந்தப் பிறவியில் ஆசையின் காரணமாக அவன் செயல்படும்போது, அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் மேலும் மேலும் ஆசைகளைத் தூண்டி விடுகின்றன. உணர்வு மனதில் உள்ள ஆசைகள் தீவிரமடையும்போது, அவை ஆழ்மனதில் புதிய பதிவுகளை ஏற்படுத்துகின்றன.


ஆழ்மனப் பதிவுகள் பெரும்பாலும் பாசம், பேராசை மற்றும் காமம் சம்பந்தப் பட்டதாகவே இருக்கும்.


இத்துடன் கூடவே, அவனது எதிர்பார்ப்பிற்கு மாறாக சம்பவங்கள் நடக்கும்போது ஆழ்மனதில் கோபம், வெறுப்பு, விரக்தி, பழியுணர்ச்சி போன்ற பல எதிர்மறை உணர்வுகளும் பதிவாகும்.


இந்த ஆழ்மனப் பதிவுகளைத்தான் 'ஆணவ மலம்' என்றும், வடமொழியில் 'வாசனா' என்றும் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்துதான் ஒரு மனிதனின் 'அஹங்காரம்' உருவெடுக்கிறது.


கூடிநிற்கும் மேகக் கூட்டங்கள் சூரியனின் ஒளியை மறைத்து நிற்பது போல், ஆழ்மனப் பதிவுகள் ஆன்மாவின் உள்ளொளியை நாம் உணர முடியாமல் ஒரு 'மறைப்பை' ஏற்படுத்தி விடுகின்றன.


நாம் 'தியானம்' செய்வதின் நோக்கம், ஆழ்மனப் பதிவுகள் ஏற்படுத்தும் 'மறைப்பை' அகற்றுவதாக இருக்க வேண்டும். 


   


நமக்கு தியானம் செய்வதற்கு பல விதமான நோக்கங்கள் இருக்கலாம். எந்த நோக்கமாக இருந்தாலும், ஆழ்மனப் பதிவுகள் குறையவில்லை என்றால் தியானம் செய்வதன் பயனை நாம் முழுமையாக அடையவில்லை என்பதுதான் உண்மை.


தாரணை, தியானம், சமாதி என்ற மூன்றினுள், 'சமாதி' கைகூடுவது நமது கையில் இல்லை; அது இறையருளைப் பொறுத்தது.


தியானம் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று என்றால், அதற்காக நாம் செய்யும் முயற்சிகளைத் தாரணை என்று சொல்லலாம்.


தாரணையில் நாம் நமது சிந்தனையை ஒரே ஓர் பொருளின் மீது நிலை நிறுத்த முயற்சிக்கிறோம். அதில் தேர்ச்சி பெற்றபின் அந்த ஒரு பொருளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவதைத் தியானம் என்று சொல்கிறோம். 


ஆனால், குறிப்பிட்டப் பொருளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் மனம் எங்கோ ஓடிவிடுகிறதே! அதற்கானக் காரணம் என்ன?


   


நமது முன்னோர்கள் மனதை நுண்ணுடல் என்று சொல்கிறார்கள். உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல் படுவதால் உடலை பருவுடல் என்றும், மனதை நுண்ணுடல் என்றும் சொல்கிறார்கள்.


ஆனால், மனம் உண்மையில் இரண்டு இடங்களில் செயல்படுகிறது.


மனம் உடலோடு இணைந்து புறவுலகில் செயல்படும் பொழுது, அதனை உணர்வு மனம் (conscious mind) என்று அழைக்கிறோம். அதே மனம் அகவுலகில் சித்தத்தின் மேல் பாசம், பேராசை எனப் பல வகைகளில் பரவி நிற்கும்போது அதனை உணர்வற்ற மனம்/ஆழ்மனம் (unconscious mind/ sub-conscious mind) என அழைக்கிறோம்.


மனதிற்கு அகம், புறம் என இரண்டு பகுதிகள் உண்டா என சந்தேகம் வரலாம். திருக்குறள் 786-ஐப் பாருங்கள். ..

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" என்கிறார் வள்ளுவர்.

நெஞ்சம் என்றால் மனம். 'நெஞ்சத்து அகம்' என்று அவர் சொல்வதால், 'நெஞ்சத்து புறம்' என ஒன்று இருக்கும்தானே!?

   



ஒரே பொருளின் மீது கவனத்தைக் குவிப்பதை "தாரணை" என்று சொல்கிறார்கள். அதன் நோக்கம் மற்றவற்றின் மீது நமக்கிருக்கும் ஈர்ப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.


"தாரணை" மூலம் நமது முயற்சியில் வெற்றியடைந்ததும், நாம் "தியானப் பயிற்சி" செய்ய ஆரம்பிக்கிறோம். ஆனால், பலருக்கு அதில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போய் விடுகிறது என்பதும் உண்மைதானே!? அதற்கான காரணம் என்ன?


தியானம் அகவுலகில் நடைபெறுகிறது; ஆனால், நாம் கவனம் செலுத்தும் பொருள் புறவுலகில் இருக்கிறது என்ற நிலை இருந்தால் தியானம் தோல்வியில்தான் முடியும்.


தியானப் பயிற்சி வெற்றியடைய வேண்டுமென்றால் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன ..

1. நாம் தியானிக்கும் பொருள் புறவுலகில் இருந்தாலும், அதை அகவுலகில் மட்டும் காண வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மனம் குறிப்பிட்டப் பொருள் சார்ந்த புறவுலகிற்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. நாம் அகவுலகில் இருக்கும் உருவமற்ற ஒன்றில் கவனத்தைக் குவித்தது "தியானம்" செய்யலாம். ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம், அனாகதச் சக்கரம் என இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தி தியானம் செய்யலாம்.

ஆக்ஞா சக்கரம் புருவ மத்தியில் உள்ளது. ஆனால் நாம் அதனை உடலுக்கு வெளியே இருப்பதாக நினைக்கக் கூடாது. புருவ மத்தியின் உட்புறம் கவனத்தை செலுத்த வேண்டும். இந்த வழி நல்ல பலனைத் தரும்.


தியானம் நன்கு செயல்பட்டால், உள்ளொளி யின் பெருக்கத்தை உணர முடியும். அது என்னவென்று பின்னர் பார்ப்போம்.

      


தியானம் முறையாகச் செய்வது எப்படி என்று பார்த்தோம். இப்போது, ஞான மார்க்கத்தில் நமது பயிற்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பார்ப்போம்.


ஞான மார்க்கத்தில் வெற்றி அடைய, அதற்குத் தீவிரமான மற்றும் முழுமையான முயற்சி இருக்க வேண்டும்.

அத்துடன் சுயமாக ஆராய்ந்து பார்க்கும் தெளிவும் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவித முன்முடிவிற்கும் இடம் கொடுக்கக்கூடாது.


"கற்க கசடற.." என வள்ளுவர் கூறுகிறார். முதலில் எதனைக் கற்க வேண்டுமோ அதனை 'ஐயம் திரிபு அற' கற்க வேண்டும். கற்றலில் எந்தவித சந்தேகமும் இருக்கக்கூடாது. ஒரு உதாரணம் பார்த்து விடுவோம்.


 "அந்தணர் என்போர் அறவோர்.." என வள்ளுவர் குறிப்பிடுகிறார். உடனே 'அந்தணர் மட்டுமே அறவழியில் நடப்பவர்கள்' எனப் பொருள் கொள்ளக்கூடாது. 'அறவழியில் நடப்பவர்கள் அனைவரும் அந்தணர்களே' எனப் பொருள் கொள்ள வேண்டும்.


 


நாம் கேட்டது, படித்தது எதுவாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள மெய்ப்பொருளை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகப் படிக்கக் கூடாது. ஒரு உதாரணம் ..

"சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும் .." -- சிறப்பு என்று சொன்ன வள்ளுவர், செல்வம் என்று சொல்லாமல் 'செல்வமும்' என்று ஏன் சொன்னார்?


அறவழியில் நடந்தால் சிறப்பு உன்னைத் தேடி வரும் என்கிறார் வள்ளுவர். நாம் 'அப்படியானால் செல்வம் வராதா' எனக் கேட்டால் செல்வமும் வரும் என்கிறார். இதன் பொருள் என்ன ? செல்வத்தை விட 'சிறப்பே' சிறந்தது என வலியுறுத்துகிறார் வள்ளுவர். இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் 'அறவழியில் நடந்தால் சிறப்பும் வரும், செல்வமும் வரும்' என நினைத்தால் அது தவறல்லவா?


இதையெல்லாம் சரியாகக் கடைப்பிடித்தபின், நாம் கவனம் செலுத்த வேண்டியது 'அகத்தாய்வு' (சுய பரிசோதனை).

    


அகத்தாய்வில் முக்கிய பங்கு வகிப்பது 'சுய-பரிசோதனை' (introspection).

சுய-பரிசோதனையில் நாம் எதிலெல்லாம் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறோம் எனக் கண்டு பிடிக்க வேண்டும்       (Detection).


நமக்கு மாலை வேளைகளில் கடைத்தெருவில் ஒரு மணி நேரம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பழக்கம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அது நமது ஆன்மிகப் பயணத்திற்கு எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை எனத் தெரிந்ததும் அந்தப் பழக்கத்தை விட்டுவிடத் தயங்கக் கூடாது (negation).


அந்தப் பழக்கத்தை விட்டு விடுவதோடு நமது கடமை முடிந்து விடாது; நாம் அந்த நேரத்தை நமது ஆன்மிக

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு உபயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.(Substitution).

   


ஞானத்தைத் தேடும் பயணத்தில் நாம் மூன்று நிலைகளில் மாறி, மாறி பயணம் செய்ய வேண்டும்.


அவற்றை 'கேட்டல், சிந்தித்தல் மற்றும் தெளிதல்' எனச் சொல்வார்கள். இதனை வடமொழியில் "Sravana, Manana and Nididhyasana" என்று சொல்வார்கள்.


சைவத்தில் சரியை, கிரியை, யோகம் என மூன்று வழிகளில் நாம் செயல்பட வேண்டும் என்பார்கள். ஞான வேட்கையைப் பொறுத்தவரை 'கேட்டல்' என்பதை ஞானத்தில் சரியை

என்றும், 'சிந்தித்தல்' என்பதை ஞானத்தில் கிரியை என்றும், 'தெளிதல்' என்பதை ஞானத்தில் யோகம் என்றும் சொல்வார்கள்.


'கேட்டல்' என்று சொல்லும் பொழுது, அதில் 'பார்த்தல்' மற்றும் 'படித்தல்' என்பனவும் அடங்கும்.


ஆக, நாம் பல வழிகளில் ஞானம் பற்றிய நெறிமுறைகளை அறிந்திருப்போம். அறிந்தபின் அவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.


அதில் சந்தேகம் எழுந்தால், தக்க சான்றோரைப் பார்த்து உரிய விளக்கங்களைக் கேட்டுப் பெறவேண்டும்.


அதன்பின் நாம் அறிந்து கொண்ட உண்மைகளை எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை 'தெளிதல்' என்று சொல்கிறார்கள்.


திருமூலர் இன்னும் ஒரு படி மேலே போய் 'தெள்ளத் தெளிதல்' வேண்டும் என்பார்.

 


ஞானம் என்றால் என்ன என்று முதல் முறையாகத் தெரிந்ததும், நாம் கற்றவற்றை மீண்டும் மீண்டும் அசைபோட வேண்டும். அந்த சமயங்களில் நமக்கு நிறைய சந்தேகங்கள் வரலாம்.


அவற்றைப் பற்றி ஆழமாக சிந்தித்து, நமக்குள்ளேயே விடையைத் தேட வேண்டும். இந்தப் பழக்கம் நமக்கு நல்ல பலனைத் தரும். 


நமக்குள்ளேயே விடையைத் தேடுவதால் மனம் புறவுலகில் சஞ்சரிப்பது குறையும். ஆழ்மனதில் இருந்து நமது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் தேவையற்றப் பதிவுகள் நலிவடையத் துவங்கும்.


நமது சந்தேகங்களுக்கு உடனே விடை கிடைக்காவிட்டால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். வேறொரு நாள் விடை தானாகத் தோன்றும்.


நமக்குள்ளேயே சிந்தித்து விடை தேடுவதை, ரிஷி பதஞ்சலி 'சவிசாரம்' எனக் கூறுகிறார்.


'சுயமாக சிந்திக்கும்' பழக்கம் இருந்தால் மட்டுமே, உள்ளத்தில் ஞானம் பற்றிய 'தெளிவு' பிறக்கும்.


       


ஞான மார்க்கத்தில் பயணம் செய்வது எனத் தீர்மானித்து விட்டால், நாம் மேற்கொண்டிருக்கும் கருத்துதான் சரியென எண்ணக்கூடாது.


நாம் வைத்திருக்கும் கருத்துக்கு மாற்றாக ஒரு கருத்து இருப்பது தெரிந்தால், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதனைப் புறந்தள்ளக் கூடாது.


ஆராய்ந்து பார்த்தபின் அந்தக் கருத்து சரியெனத் தோன்றினால், அதனை ஏற்றுக் கொள்ளத் தயங்கக் கூடாது.


பிறரது கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் நமக்குப் பிடிக்கவில்லை என்றால், நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம்; ஆனால், அவற்றை பொய் என்று சொல்லக்கூடாது.


எந்தவிதக் கருத்தாக இருந்தாலும், அது தவறெனத் தோன்றினால் மாறுபட்ட கோணங்களில் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.


ஞான மார்க்கத்தில் பயணிக்கும்போது, எல்லைக் கோட்டை எப்போது அடைவோம் என்ற எண்ணம் வரவே கூடாது. அது நமது முயற்சியில் தளர்வை உண்டாக்கி விடும்.




'கர்ம மார்க்கம்' என்றால் என்ன? 'பலனை எதிர்பார்க்காமல், நமது கடமைகளை நிறைவேற்றுவதுதான் கர்ம மார்க்கம்' என பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.


இதில் மூன்று கருத்துக்கள் உள்ளடங்கி உள்ளன:-

1. கர்மாவைச் செய், அதனால் ஏற்படப் போகும் விளைவு (result) இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்காதே எனப் பொருள் கொள்ளலாம்.

2. கர்மாவைச் செய், அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என எதிர்பார்க்காதே எனவும் பொருள் கொள்ளலாம்.

3. கர்மாவைச் செய் என்பது நிகழ்காலத்தைக் குறிக்கிறது; எதிர்பார்க்காதே என்பது எதிர் காலத்தைக் குறிக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என சிந்திக்க ஆரம்பித்தால், மனம் பலவற்றையும் நினைக்கக் கூடும். அதனால் நாம் செய்ய வேண்டிய வேலையில் முழு கவனத்தோடு ஈடுபட முடியாது. அதனால்தான் கடமையில் மட்டும் கவனம் செலுத்து என்கிறார்.                                                 (Be present, in the 'present').


பலர் 'கர்ம மார்க்கம்' என்பது, பொது வாழ்க்கையில் ஈடு படுபவர்களுக்குத்தான் பொருந்தும் என்கிறார்கள்.

பொது வாழ்க்கையில் இருந்து விலகி, இல்லற வாழ்வில் இருப்பவர்களும் 'கர்ம மார்க்கத்தை' கடைப்பிடிக்க முடியும் என்று நான் நினைப்பதுண்டு.

குடும்பத்தில் எந்த செயல் செய்தாலும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்தால், அதுவும் கர்ம மார்க்கம்தான்.

யாருக்காவது உதவி செய்கிறோம். அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து நன்றியையோ, விசுவாசத்தையோ எதிர்பார்க்காமல் இருந்தால் அது கர்ம மார்க்கத்தான்.

அவ்வளவு ஏன்? பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம்; நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்றால் நமக்கு பெருமைதானே என்றெல்லாம் நினைக்காமல், எங்களுக்குப் பிறந்த பிள்ளைகள், முடிந்த அளவிற்குப் படிக்க வைக்க வேண்டியது எங்களின் கடமை என்ற அளவோடு நிறுத்திக் கொண்டால், அதுவும் கர்ம மார்க்கந்தான்.


திருநாவுக்கரசர் தேவாரத்தில் இவ்வாறு பாடுகிறார் ..

".. தன் கடன் அடியேனையும் தாங்குதல்  

என் கடன் பணி செய்து கிடப்பதே".

(உனது கடன் என்னைப் பார்த்துக் கொள்வது; என் கடன் எப்போதும் பணிசெய்வது. பணி செய்த பின் அதற்கு என்று கூலி எதுவும் எதிர் பார்க்காமல் சும்மா கிடப்பது. அதுதான் அடியவர்களின் வேலை)

 

எந்தப் பணி செய்தாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய முடிந்தால், நாமும் "கர்ம மார்க்கத்தில்" இருக்கிறோம் என எடுத்துக் கொள்ளலாம்.


'பக்தி மார்க்கம்' கடைப்பிடிக்க மிகவும் எளிதானது. ஆனால், இறைவனிடம் 'சரணாகதி' அடையும் பக்குவம் இருந்தால் மட்டுமே அது பலன் தரும்.

 'சரணாகதி' எப்படி இருக்க வேண்டும்? மாணிக்கவாசகர் சொல்கிறார் ...

"வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!

.... .... .... .... ....

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?"


நமக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்துவிட்டு அதற்கானப் பலன்களை இறைவனது பொறுப்பில் விட்டு விட்டால், அதுவே 'சரணாகதி' எனக் கொள்ளலாம்.


இந்த மார்க்கங்கள் தவிர, மனம் பக்குவம் அடைவதற்கு அதாவது மனம் அமைதியை அடைவதற்கு வேறு பல வழிகளும் உள்ளன. நமக்குப் பொருத்தமான வழியைக் கண்டுபிடித்து, அதை முறையாகக் கடைப்பிடித்தாலும் மனதை பக்குவம் அடையச் செய்யலாம்.

    


ஆன்மாவைப் நேரில் பார்க்க முடியாது; ஏனெனில் அதற்கென்று உருவம் எதுவும் கிடையாது. அது ஒளியால் நிரம்பப் பெற்றது. அதை தரிசனம் செய்த மகான்கள் பலருண்டு.


நாம் சாதாரண மனிதர்கள்; நாம் அதை உணர்வது எப்படி என்பதைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்வோம்.


உணர்வது என்றால் ஐம்புலன் கருவிகளின் துணைகொண்டு உணர்வது என எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஊகத்தின் மூலம் அறிந்து கொள்வது.


முதலாவதாக நமக்கு அதைப் பற்றிய புரிதல் வேண்டும். பின் உண்மைத் தன்மையை எளிதாக ஊகித்து அறிந்து கொள்ளலாம்.


ஓஷோ சொன்ன முல்லாவின் கதை.. நண்பர் ஒருவர் முல்லாவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்பொழுது முல்லா அவரது பையனுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். நண்பரை வரவேற்ற முல்லா 'பையனுடன் பேசிக்கொண்டிருங்கள், தேநீர் போட்டு கொண்டு வருகிறேன்' என்றார். நண்பர் 'இவனுடைய அம்மா இல்லையா' எனக் கேட்டதற்கு 'அவள் சமையலில் மும்முரமாக இருக்கிறாள்; நானே தேநீர் போட்டு கொண்டு வருகிறேன்' என்றார்.


அவர் சமையலறைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில், சமையலறையில் ஏதோ கீழே விழுந்தது நொறுங்கிய சத்தம் கேட்டது. நண்பர் பதறிப் போனார்.


முல்லாவின் மகன் 'ஒன்றுமில்லை, அம்மா எதையோ கைதவறிக் கீழே போட்டுவிட்டாள்' என்றான்.


நண்பருக்கு ஒரே ஆச்சரியம். 'எப்படி அம்மா என்று சொல்கிறாய்' என நண்பர் கேட்க, 'அப்பா கீழே போட்டிருந்தால், இந்நேரம் அம்மா அப்பாவை திட்டியிருப்பாளே' என சர்வ சாதாரணமாகக் கூறினான்.


அவனுக்கு இதைப்போல பல சம்பவங்களைப் பார்த்ததால் ஒரு புரிதல் இருந்தது; அதனால் எளிதாக உண்மைத் தன்மையை உணர முடிந்தது.

முல்லாவின் பையனைப் பொறுத்தவரை புரிந்து கொள்வதற்கான அனுபவங்களும், ஊகிப்பதற்கான நிகழ்வும் புறவுலகில் நடந்தன.


ஆனால், நமக்கோ புரிதல், ஊகம் எல்லாமே அகவுலகம் சார்ந்தவை. எனவே புரிதல் பற்றிய விபரங்களை சான்றோர் சொல்வதைத் கேட்டு அதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதில் பிரச்சினை என்னவென்றால் சான்றோர் சொல்வதை நாம் தவறாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு.


ஒரு சீடன் தன் குருவிடம் 'எனக்கு எப்போது மன அமைதி கிடைக்கும்' எனக் கேட்டான். குரு அவனிடம் 'நான்' இருக்கும் வரை உனக்கு மன அமைதி கிடைக்காது' என்றார். சீடன் 'குருவே, நீங்கள் இருப்பதற்கும் எனது மன அமைதிக்கும் என்ன சம்பந்தம்' எனக் கேட்க, குருவோ சிரித்துக் கொண்டே 'உன்னிடத்தில் "நான்" என்ற அஹங்காரம் இருக்கும்வரை மன அமைதி கிட்டாது' என்றார்.


பத்திரகிரியார் இவ்வாறு பாடுகிறார்: ".. மாண்டு விடும் முன்னே 'நான்' மாண்டிருப்ப தெக்காலம்?".


இனி உணர்தல் எப்படி நடைபெறுகிறது என்று பார்ப்போம்.


    


'அஹங்காரம்' என்ற வார்த்தை ஒரு மனிதனின் தன்முனைப்பைக் குறிப்பது. அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.


முதலாவதாக 'தன்முனைப்பு' இருப்பதையே அறியாத நிலை (Non-recogonition of ego). இந்த நிலை மனிதர்கள் சுயமாக சிந்தித்துப் செயல்பட மாட்டார்கள். யாராவது உசுப்பி விட்டால் ஆவேசமாகச் செயலில் இறங்குவார்கள். தவறான மனிதர்களின் கைப்பாவையாக மாறும்போது, இவர்களால் சமூகத்திற்கு கெடுதல்தான் நடக்கும்.


இரண்டாவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு உத்வேகத்துடன் இருக்கும் (inflated ego). அதன் காரணமாக செயல் புரிவதில் தீவிரமான ஆர்வம் காட்டுவார்கள். செயல் புரிந்து எதிர்பார்த்த விளைவும் கிடைத்துவிட்டால், தன்முனைப்பு நிறைந்த மனிதன், கர்வம் கொண்ட மனிதனாக மாறிவிடும் ஆபத்தும் உண்டு.


மூன்றாவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு குறைந்து காணப்படும் (sublimated ego). எனவே இவர்களிடம் செயலூக்கம் எதுவும் இருக்காது.


நான்காவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு எதுவும் இருக்காது. இவர்களின் குண்டலினி சக்தி சகசிரதளத்தின் வாசலில் இறையருளை நாடி நிற்கும். இந்த நிலை மனிதர்களுக்கே உள்ளொளியைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


முன்னர் சொன்ன நான்கு மார்க்கங்கள் வழியாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியாகவோ முறையாக, முழுமூச்சுடன் பயிற்சி செய்து வந்தால் சில வாழ்வியல் உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.


'முழுமூச்சுடன்' என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? வடமொழியில் இதனை "முமுக்ஷு" (mumukshu) என்று சொல்வார்கள்.


இதைப் பற்றி விளக்கம் கேட்டபோது, ராமகிருஷ்ண பரமஹம்சர் இவ்வாறு விளக்குகிறார் --"உன் தலையைப் பிடித்துக் தண்ணீருக்குள் அமுக்கினால், தண்ணீருக்குள் இருந்து வெளியே வர எப்படிப் போராடுவாய்? அதைப் போன்றதுதான் 'முமுக்ஷு' என்பதும்".


முயற்சி, முறையானப் பயிற்சி மற்றும் வாழ்வியல் உண்மைகளை அறிய வேண்டும் என்ற தவிப்பு அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றால் வெற்றி நிச்சயம்.

(To know the 'Truth', be true to know)

    

'தன்முனைப்பு' இருப்பதையே அறிந்து கொள்ள முடியாத முதல் நிலை மனிதர்களால், வாழ்வியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள இயலாது.


வாழ்வியல் உண்மைகளை, முயற்சி செய்தால் புரியக் கூடியவர்கள்  இரண்டாவது வகை மனிதர்களே!


மூன்றாவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு குறைந்து காணப்படும். எனவே அவர்களுககு வாழ்வியல் உண்மைகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.


நாலாவது வகை மனிதர்கள் தன்முனைப்பிலிருந்து முழுமையாக விடுபட்டவர்கள். அவர்கள் வாழ்வியல் உண்மைகள் அனைத்தையும் அறிந்து, வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் போன்ற இரட்டைகளைக் கடந்தவர்கள். 


ஆக, வாழ்வியல் உண்மைகளை அறிய வேண்டியவர்கள் தன்முனைப்பு நிரம்பப் பெற்ற இரண்டாவது வகை மனிதர்கள் மட்டுமே!


தன்முனைப்பு நிரம்பப் பெற்ற மனிதர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


ஒரு பிரிவினர் பொதுநலத்தில் நாட்டமுள்ளவர்கள். பிறருக்காகத் தன்னை வருத்திக் கொள்ளவும் தயங்காதவர்கள். பொது வாழ்க்கையில் நிறைய இன்னல்களைச் சந்திப்பவர்கள். அதன் காரணமாக சுய சிந்தனையில் ஈடுபடும் எண்ணம் அடிக்கடித் தோன்றும். அதுவே அவர்களுக்கு வாழ்வியல் உண்மைகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.


மற்றுமொரு பிரிவினர் 'தான் உண்டு, தன் குடும்பம் உண்டு' என வாழ்பவர்கள் (Self-centred). யாருக்கும் தீங்கிழைக்க விரும்ப மாட்டார்கள். தங்களது உழைப்பை மட்டும் நம்பி வாழ்பவர்கள். "போதும்" (contentment) என்ற நிலை வரும்போது அகத்தாய்வில் ஈடுபட்டால் வாழ்வியல் உண்மைகளை அறிந்து கொள்வார்கள்.


மூன்றாவது பிரிவு மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள் (Selfish). இவர்களிடம் ஆசை அதிகமிருக்கும். அதன் காரணமாக தவறான வழிகளிலும் பணம் சேர்ப்பதில் குறியாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வியல் உண்மைகளை அறிந்து கொள்ள நேரமும் இருக்காது; அதைப் பற்றிய ஆர்வமும் இருக்காது.


இனி நாம் அறிந்து கொள்ளவிருக்கும் வாழ்வியல் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்.


     


அகத்தாய்வில் ஈடுபடும் மனிதனுக்கு 'பகுத்து, ஆராய்ந்து' அறியும் தகுதி இருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் தகுதியுடைய சான்றோரைத் தன்னுடைய வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

(தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை)

 .. குறள் 444.


அகத்தாய்வில் ஈடுபடும்போது பல வாழ்வியல் உண்மைகள் நமக்குத் தெரியவரும்.

அவை - -

1. எதை எதையோ அறிந்து கொண்ட நான், "நான் யார்" என்று அறியாமலேயே வாழ்ந்து வருகிறேனே! 'எவ்வளவு பெரிய முட்டாள் நான்' என்று நினைக்கத் தோன்றும்.

(Knowledge is to know one's own ignorance ..Dr. Radhakrishnan)

2. யோசித்துப் பார்த்தால், இறைசக்திக்கு முன்னால் 'தான்' ஒன்றுமே இல்லையெனத் தோன்றும்.(I am nothing before the almighty)

3. 'நான்' என்பது இந்த உடல் அல்ல என்பது புரியும்.(I am not the body)

4. என்னுள் இருக்கும் ஆன்மாவே உண்மையான "நான்" என்பது புரியவரும்.

(I am not the body with a soul;I am the soul in a body)

5.  நான் கர்த்தா (Doer) அல்ல; "அவனால்" இயக்கப் படும் கருவி (Tool) மட்டுமே என உணர்ந்து கொள்வோம்.

(என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை

- இனித்தெய்வமே

உன் செயலே என்று உணரப் பெற்றேன்) .. பட்டினத்தார்.


 


வாழ்க்கையில் "அகத்தாய்வு" எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். "உள்ளொளி" நமக்குள் பரவி பரவசத்தை ஏற்படுத்துவதை நாம் உணர்வதற்கு இதுவே ஆரம்பப் புள்ளி.


அகத்தாய்வில் நாம் சுயபரிசோதனை செய்கிறோம்; ஆனால், எந்தவித தெளிவான முடிவிற்கும் வரமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை.


அகத்தாய்வு செய்வது முதலில் கடினமாகத் தோன்றினாலும், தொடர்ந்து செய்து வந்தால் அது பழக்கமாகி விடும். அதன்பின் நாம் சும்மா இருக்கும் வேளைகளிலும் நம்மை அறியாமலே அகத்தாய்வில் ஈடுபடுவதைக் காணலாம்.


அகத்தாய்வில் நாம் அகவுலகில் இருப்பதால், அந்த நேரத்தில் புறவுலகில் சஞ்சரிப்பது நின்று விடுகிறது.




"நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்                                மலையினும் மாணப்  பெரிது"

.. குறள் 124.

இந்தக் குறள் "இல்லறவியலில்" வருகிறது.



அகத்தாய்வில் ஈடுபடும் நேரங்களில் நாம் "நிலையில் திரியாது".. அதாவது புலன்வழியே புறவுலகிற்குச் செல்லாது .. அகவுலகில் நின்று விடுகிறோம். இது தொடர்ந்தாலே, மனம் புலன்களின் பிணைப்பிலிருந்து விடுபட்டு உள்ளுக்குள் ஒடுங்கி, அடங்க ஆரம்பித்துவிடும். மனம் அடங்க, அடங்க நாமும் 

பற்றிலிருந்து விடுபட்டு விடுவோம்.

நம்மை அறியாமலே நடக்கும் நிகழ்வு இது.

(தினந்தோறும் எல்லாரையும், எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறோம்; நம்மைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமே!?)


    


ஞான மார்க்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியது 'அகத்தாய்வு' என்றால், கர்ம மார்க்கத்தில் 'பலனை எதிர்பாராது செயல் படுதல்', பக்தி மார்க்கத்தில் 'சரணாகதி', மற்றும் தியான மார்க்கத்தில் 'ஒருமுக கவனம்'; இவற்றில்

தீவிரமாக ஈடுபடும்போது நமக்குள் நிறைய மாற்றங்கள் நிகழத் தொடங்கும்.



"எண்ணி எண்ணி எண்ணமற" .. இதன் அர்த்தம் என்ன?

அகத்தாய்வில் 'சுயசிந்தனை' முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சுயசிந்தனையில் நாம் அறிந்து கொண்ட வாழ்வியல் உண்மைகளைத் திரும்பத்திரும்ப அசைபோட வேண்டும். அதன் காரணமாக நமது தன்முனைப்பின் தீவிரம் குறையத் தொடங்கும். அதன்பின் செயல் புரிவதில் உள்ள ஊக்கமும் குறைந்து விடும். 


தன்முனைப்பின் தீவிரம் குறையக் குறைய, நம்மிடம் உள்ள தேவையற்ற எண்ணங்களும் ஆழ்மனதிலிருந்து மறைந்து விடும்.


       


ஆராய்ந்து பகுத்து அறிவதை 'விவேகம்' என்றும், பற்றற்ற தன்மையை 'வைராக்யம்' என்றும் வடமொழியில் கூறுவார்கள்.


விவேகம் மற்றும் வைராக்யம் இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்பு உண்டு.


விவேகத்தின் துணை கொண்டு சுயசிந்தனையில் முன்னேற்றம் காணும்போது, நமக்குள் பற்றற்ற தன்மை வளரும். பற்றற்ற தன்மை கூடக்கூட விவேகமும் கூர்மை அடையும்.


பற்றற்ற நிலையில் உறவுகளிடம் இருந்த பாசம் நீங்கி, அன்பு மட்டுமே இருக்கும்.


பொருட்களைப் பொறுத்த வரை,  அவை நமக்குச் சொந்தமானதாக இருக்கலாம்; ஆனால், அந்தப் பொருட்களின் மீது இருந்த "உடைமைத்தன்மை" என்ற உணர்வு நீங்கிவிடும்.


பாசமும், உடைமைத் தன்மையும் நீங்கிய நிலையில், "உள்ளொளி" சித்தத்தின் வெளியே பரவத் தொடங்கும். இதன் காரணமாக நமது மனோபாவத்திலும், செயலிலும் பல மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.


     


"வாழ்வை நினைந்தபின்

தாழ்வை நினைப்பது 

வாழ்வுக்கு நேராமோ -

நன்னெஞ்சே

தாழ்வு பிறர்க்கு எண்ண

தான் இழிவான் என்ற

சாத்திரம் கேளாயோ -

நன்னெஞ்சே"

.. பாரதியார்


நாம் நமது பயிற்சிகளில் வெற்றிகண்டால், நமது ஆழ்மனதில் இருந்த எதிர்மறை உணர்ச்சிகள் கரைந்து போய்விடும்.


உறவுகளிடம் இருந்த பாசத்திலிருந்து விடுபடுவோம்; உறவுகள் மட்டும் நினைவலைகளாகத் தங்கியிருக்கும்.


நமக்குச் சொந்தமான பொருட்களின் மேலிருந்த உடைமைத்தன்மையும் மறைந்து போய்விடும்.


ஆழ்மனதில் காமம் மட்டும் மிஞ்சியிருக்கும். காமம் என்றால் ஆண்-பெண் உறவைக் குறிப்பது எனப் பொருள் கொள்ளக்கூடாது. அது 'இச்சை' .. அதாவது நாம் விரும்புகின்ற ஒன்றை, நம்மிடம் இல்லாத ஒன்றை அடைய முடியவில்லையே என்ற கவலை; நாம் செய்ய விரும்பியதை செய்ய முடியவில்லையே என்ற கவலை. பொதுவாக இந்த காம உணர்வுதான் கடைசியாக வெளியேற வேண்டிய ஒன்றாக இருக்கும்.


இருந்தாலும் சித்தத்தை மறைத்திருந்தப் பெரும்பாலான அழுக்குகள் மறைந்து விட்ட காரணங்களினால், "உள்ளொளி" நம்முள் பரவி நம்மிடம் பல மாற்றங்களை ஏற்படுத்துவதை நம்மால் உணர முடியும்.


நமக்கு யாராவது தீங்கு இழைத்தால், அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நினைக்காவிட்டாலும் மனதில் ஒரு வெறுப்புணர்வு தங்கியிருக்கும். 

இப்போதோ அது மறைந்து, தேவை ஏற்பட்டால் நமக்குத் தீங்கு இழைத்தவனுக்குக் கூட உதவி செய்யத் தயங்க மாட்டோம்.

"இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்                                   என்ன பயத்ததோ சால்பு"

.. குறள் 987


  


பொதுவாக எல்லா மனிதர்களிடமும் 'சத்துவ குணம்', 'இரஜோ குணம்' மற்றும் 'தமோ குணம்' மூன்றும் கலந்தே இருக்கும்.


'இரஜோ குணம்' அதிக விகிதத்தில் இருந்தால், அந்த மனிதனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) தீவிரமாக இருக்கும். தன்முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் அடைந்தால், அவன் அதை நினைத்து பெருமையும் கொள்வான். சிறிது கவனக் குறைவு இருந்தாலும், அதுவே அவனை கர்வம் மிக்க மனிதனாக மாற்றிவிடும் அபாயமும் உண்டு.


கர்வம் கொண்ட மனிதன், பின்னர் பிறர் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பானா என்பது சந்தேகமே.


அர்ஜுனன் கிருஷ்ணனிடம் "பாபம் என்று தெரிந்தும் மனிதன் ஏன் தவறான செயல்களில் ஈடுபடுகிறான்" என வினவுகிறான். அதற்கு கிருஷ்ணன் "ஆசைதான்" என்கிறார். ஆசைக்குக் காரணம் இரஜோ குணத்தின் காரணமாக உத்வேகம் பெறும் அஹங்காரம் எனவும் கூறுகிறார்.


அதே மனிதன் வாழ்வியல் உண்மைகளை அறிந்து கொண்டபின், அவனது

"உள்ளொளி" சித்தத்தின் வெளியேப் பரவத் தொடங்குகிறது. இரஜோ குணத்தின் விகிதம் குறைந்து, சத்துவ குணத்தின் விகிதம் அதிகரித்து விடும்.


செயல் புரிவதில் தீவிரமாக இருந்தவன் (Active) செயல் புரிவதில் ஆர்வம் இல்லாதவனாக (un-active) மாறிவிடுவான்.


தன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்தவன் மனதளவில் ஒடுங்கி விடுகிறான். பெருமை அடைவதில் கூச்சம், தன்னை முன்னிலைப் படுத்துவதில் நாணம் போன்றவை அவனில் தோன்ற ஆரம்பித்து விடும்.


இத்தகைய நாணம் சான்றோர்க்கு அணிகலன் என்கிறார் வள்ளுவர் ...

"அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை"

.. குறள் 1014


அவனது நடவடிக்கைகளில் 'பணிவு' (humility) காணப்படும். எல்லாத் தகுதியும் இருந்தும், "நாயினும் கடையேன்" என்று மாணிக்கவாசகர் சொன்னது இந்தப் பணிவின் காரணமாகத்தான்.


              

ஒரு அன்பர் 'ஒடுங்குதல்' பற்றி சில சந்தேகங்களைக் கேட்டார். 


புறவுலகிலிருந்து கவனத்தை அகவுலகிற்குத் திருப்புவதைத்தான் 'ஒடுங்குதல்' என்கிறோம். இதனை வடமொழியில்

'பிரத்தியாஹாரம்' என்பார்கள். 'ஒடுங்குதல்' என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரி நிகழ்வதில்லை.


சிலர் இயல்பாகவே 'ஒடுங்குதல்' மனப்பான்மையுடன் பிறப்பார்கள். (உதாரணம் .. திரு. J. Krishnamurti; சுருக்கமாக J.K. என்பார்கள்)


சிலர் விரும்பி இளம் வயதிலேயே 'ஒடுங்குதலை' முன்னெடுப்பார்கள். (உதாரணம் .. பகவான் ரமண மஹரிஷி))


சிலர் பக்தி மார்க்கத்தில் இருந்து பின் 'ஒடுங்குதல்' நிலைக்கு வந்து விடுகிறார்கள். (உதாரணம் .. வள்ளலார்)


சிலரைப் பொறுத்தவரை அவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியான சம்பவம், அவர்களின் மனதை ஒடுங்கச் செய்து விடுகிறது. (உதாரணம் .. பட்டினத்தார்)


நாமோ சாதாரண மனிதர்கள். நமக்குள்ளும் ..

ஞான மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு 'ஒடுங்குதல்' இயல்பான ஒன்றாக இருக்கும்.


கர்ம மார்க்கத்தில் உள்ள மனிதர்களுக்கு ஏற்படும் அனுபவங்களே, அவர்களை 'ஒடுங்குதல்' நிலைக்குத் தள்ளிவிடும்.


தியான மார்க்கத்தில் இறங்குகிறவர்கள் 'ஒடுங்குதலை' வலிய ஏற்றுக் கொள்ள வேண்டும்.


மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் 'மனம் ஒடுங்குவதால்' ஏற்படும் நன்மைகளைப் புரிந்து கொண்டு அதில் ஈடுபாடு காட்டினால் தான் உண்டு.


ஒரு மனிதன் ஆன்மிகத்தில் 'விழிப்புணர்வு' பெற வேண்டுமானால், 'ஒடுங்குதல்தான்' ஆரம்ப புள்ளி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  


ஒரு மனிதன் அகத்தாய்வின் போது 'சுயசிந்தனையில்' ஈடுபடுவதற்கு, தனிமையில் இருப்பது மிகவும் அவசியம்.


புறவுலகில் சுயசிந்தனையில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களை/மற்றவற்றை சார்ந்தே இருக்கவேண்டி வரும். அகவுலகிலோ தனிமையில் இருப்பது கட்டாயம். இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


தனிமையில் இருப்பது (aloneness); தனியாக இருப்பது (loneliness) .. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.


தனியாக இருப்பதாக உணர்பவன் எதையாவதை நினைத்து வருத்தத்தில் இருப்பான் அல்லது புலம்பிக் கொண்டிருப்பான். ஆனால், தனிமை என்பது நாம் விரும்பி ஏற்பது. தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ள தெரியாதவனால் சுயசிந்தனையில் ஈடுபட முடியாது.

(Be independent while being inter-dependent in order to become indifferent)

அகவுலகில் நுழைய விரும்புகிறவன் குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும் சுயசிந்தனை செய்வதற்காகத் தன்னைத் தனிமைப் படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.


ஆரம்பத்தில் 'தனிமைப் படுத்துவது' என்பது ஒரு கஷ்டமான செயலாக இருக்கக் கூடும். தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அது பழக்கத்திற்கு வந்துவிட்டால் பின் அது நமது இயல்பாக மாறிவிடும். அதன்பின் ஆரவாரமான செயல்கள், கூட்டங்கள் போன்றவற்றில் இருந்து நாம் விலக ஆரம்பித்து விடுவோம்.


சுயசிந்தனையில் வெற்றி பெற்று ஆழ்மனப் பதிவுகள் நலிவடைந்தால், நமது எந்தச் செயலும் நம்மை பாதிக்காது; ஏனெனில் நாம் பயனை எதிர்பார்த்து செயலில் இறங்குவதில்லை.

"Indifferent to the fruits of action, ever content and utterly independent, he is inactive even while engaged in activity"

.. The Bhagavad Gita (4.20)


  


நாம் அறிந்து கொள்ளும் வாழ்வியல் உண்மைகள் நம்மிடம் சுய கட்டுப்பாட்டை உண்டுபண்ணும். தவிர, "போதும்" (contentment) என்ற மன நிலைக்கும் வந்து விடுவோம். 


உணர்வு மனம் அமைதியாகி புத்தியுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும். அதன்பின் நாம் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையிலும் எதிர்வினை (re-action) காட்ட மாட்டோம். தேவைப்பட்டால் மட்டும் பதில் வினை (response) ஆற்றுவோம்.


ஆழ்மனதில் இருந்த எதிர்மறை உணர்வுகள் மறைந்து விடும். உறவுகளிடம் இருந்த பாசமும், பொருட்களின் மேல் இருந்த உடைமைத் தன்மையும் நீங்கி விட, அவை வெறும் நினைவலைகளாகத் தங்கி விடும். மிஞ்சி இருப்பது "இச்சை" மட்டும் தான்.


ஆனால், உணர்வு மனம் அடங்கி விட்ட காரணத்தால், ஆழ்மனதில் உள்ள இச்சைகள் உணர்வு மனதில் எந்தவித கிளர்ச்சியையும் உண்டு பண்ணுவதில்லை.


உள்ளத்தில் சமநிலை வந்து விடும். வெறுப்பு உணர்வு என்று எதுவும் நம்மிடம் இருக்காது. தாயுமானவர் சொன்னது போல்

"எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே 

அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" என்று நினைக்க ஆரம்பித்து விடுவோம்.


எல்லா சூழ்நிலைகளிலும், சலனங்கள் ஏதுமின்றி மனம் அமைதியாகவே இருக்கும். 

வாழ்க்கையில் உண்மையான வெற்றி என்பது இதுவே.

"Success in life is measured by the tranquility of the mind"

.. Swami Chinmayananda.


     


'தனிமையில் இருப்பது, சுயசிந்தனையில் ஈடுபடுவது, சுயபரிசோதனை செய்வது' ..

அமைதி கண்ட மனம், உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை உணர வேண்டுமென்றால், இந்த மூன்றையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.


சுயசிந்தனையைத் தொடர்ந்து செய்துவர, 'மெய்ப்பொருளை' அறிவதில் நமது திறமை மேலும் மேலும் வலுப்பெறும். 


ஒரு உதாரணம் ..

"ஆமை வரும் ஆட்கண்டு ஐந்தடக்கஞ் செய்தாற்போல்

ஊமை உருக்கொண்டு ஒடுங்குவது மெக்காலம்?"

.. பத்திரகிரியார்.

ஆமையைப் போன்று நாமும் ஐந்து பொறிகளையும் அடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் பொருள் கூறுகிறார்கள்.


("ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்.." என்ற குறளுக்கும் இந்த விதமாகத்தான் பொருள் கூறுகிறார்கள்)


இந்தப் பாடலில் வரும் "ஊமை உருக்கொண்டு" என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.


"ஊமை" என்றவுடன் பேச மட்டும் கூடாது என நினைத்தால் அது தவறு; இங்கு எல்லாப் பொறிகளையும் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றும், "ஒடுங்குவது" என்றால் எந்தப் பொறிவழியேயும் வெளியே போகாதே என்று பொருள் கொள்ள வேண்டும்.


அது மட்டும்தானா? மனம் எதை எதையோ நினைத்து வெளியே ஓடி விடுகிறதே; அப்படி இருந்தால் மனம் எப்படி ஒடுங்கும்?


  


நாம் பொறிகளின் வழியே நமது சக்தியைச் செலவு செய்வதாக எண்ணுகிறோம். உண்மையில் அதிகமான சக்தியை 'மனம்' மூலமே வீணாக்குகிறோம்.


ஆழ்மனம் எப்போதும் ஏதாவது கிளர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடியது. இருந்தாலும் ஆழ்மனதிலிருந்தப் பதிவுகள் நலிவடைந்து விட்ட காரணத்தினால் அவற்றால் நமது சக்தியை வீணாக்க முடியாது.


ஆனாலும், மனம் மூன்று வழிகளில் நமது சக்தியை இழக்கச் செய்யும். அவை ..

"Regrets of the past, anxiety for the future and excitement in the present"

.. Swami Chinmayananda.

கடந்த காலத்தில் நடந்து விட்ட செயல்களை எண்ணி வருந்துவது, எதிர் காலத்தில் என்ன நடக்குமோ என எண்ணி அச்சப் படுவது, நிகழ் காலத்தில் பரபரப்பாக செயல்படுவது.


இந்த மூன்றில் எது நம்மிடம் இருந்தாலும், நம்மிடம் இன்னும் 'அஹங்காரம்' இருக்கிறது என்றுதான் அர்த்தம்.


நமது அகவுலகில் தொடர்ந்து பயணம் செய்தால்தான், 'அஹங்காரம்' என்ற நிலையிலிருந்து 'அஸ்மிதா' என்ற நிலைக்கும், அதிலிருந்து 'அஸி' என்ற நிலைக்கும் செல்ல முடியும்.


'அஸி' என்று சொன்னவுடன் 'தத்வமஸி' என்ற வார்த்தை நினைவிற்கு வருகிறதா!?


    


தன்முனைப்பின் தீவிரம் குறையக் குறைய நமது பண்பு நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சில பதிவுகளில் பார்த்தோம். மற்றவற்றை நீங்களே அனுபவித்து உணர்ந்து கொள்ளுங்கள்.


அதைப் பற்றியே தொடர்ந்து பதிவிட்டால், நாம் இலக்கைத் தவற விட்டு விடுவோம்.


தன்முனைப்பு (அஹங்காரம்) முற்றிலும் நீங்கி விட்டதை எப்படி அறிந்து கொள்வது?


முதலாவதாக 'என்னுடைய' என்ற எண்ணம் எழக்கூடாது.

'என்னுடைய' என்ற எண்ணம் எழுந்தாலே, உள்ளே 'நான்' எனும் அஹங்காரம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.


'எனக்கு ஒரு மகன் இருந்தால், என்னுடைய மகன் என்றுதானே சொல்ல முடியும்?' என நீங்கள் கேட்கலாம்.


'என்னுடைய' என்ற வார்த்தை இரண்டு விதமான பொருளைக் கொடுக்க முடியும்; ஒன்று 'உறவைக் குறிப்பது' (relationship). மற்றொன்று 'பற்றைக் குறிப்பது' (attachment). 'என்னுடைய'

என்று சொல்லும்போது, அங்கு 'உறவு' இருக்கலாம்; 'பற்று' இருக்கக் கூடாது.


"தேக அபிமானம், லோக அபிமானம், சாஸ்திர அபிமானம்' ஆகிய மூன்றையும் விட்டு விடச் சொல்கிறார் சங்கரர்.


"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்' என்கிறார் திருமூலர்.


இரண்டாவதாக வருவது 'இச்சைகளின்' நீக்கம்.


   


தனிப்பட்ட முறையில் விருப்பங்கள் என்று எதுவும் இல்லை என்று ஆனபின், 'என்னுடைய' எனும் மமகாரமும், இச்சைகளை, அதாவது நிறைவேறாத ஆசைகளைப் பற்றிய எண்ணமும் எப்பொழுது நம்மைவிட்டு நீங்குகிறதோ, அப்போது நாம் அஹங்காரமற்ற மனிதர்களாக மாறி விடுவோம். 


"எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்து விட்டு மமகாரம் இல்லாதவனாக, அஹங்காரமற்றவனாக, சிறிதளவு ஆசையும் (இச்சையும்) இல்லாதவனாக ஸஞ்சரிக்கிறானோ, அவனே அமைதியை (சாந்தியை) அடைகிறான்".

.. பகவத் கீதை (2.71)


ஆனால் நாம் அஹங்காரம் அற்றவர்களாக மாறிவிட்டோம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?


இதை இரண்டு விதத்தில் புரிந்து கொள்ளலாம்.

 

எதையும் நினைத்து வருந்தாமல் (Regretting nothing), எதையும் எதிர்பார்க்காமல் (expecting nothing), வருவது எதுவாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் எதிர்கொள்வது (accepting everything) போன்ற மனநிலை நம்மிடம் இருந்தால், நம்மிடம் அஹங்காரம் இல்லை என எடுத்துக் கொள்ளலாம். இது ஊகத்தை அடிப்படையாகக் கொண்டது.


மற்றொன்று ரிஷி பதஞ்சலி கூறுவது.


      


அஹங்காரம் உள்ள மனிதனிடம் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அவை புறவுலகைச் சார்ந்ததாகவும் இருக்கும்; அகவுலகைச் சார்ந்ததாகவும் இருக்கும்.


முதலில் வருவது "சவிதர்க்க சமாதி" என்கிறார் ரிஷி பதஞ்சலி. இது 'புறவுலகில்' நடப்பது. சமாதி என்றால் 'புத்தி சமநிலையில்' இருப்பதைக் குறிக்கிறது. அதாவது புத்தி சமநிலையில், எந்தவிதமான உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காத நிலையில் இருக்கும் போது, 'சவிதர்க்கம்' நடைபெற வேண்டும் என்கிறார்.


'தர்க்கம்' என்றால், விவாதம் என்று அர்த்தம். 'விதர்க்கம்' என்றால், ஒருவருக்கொருவர் இணக்கமான சூழ்நிலையில் நடைபெறும் விவாதம் என்று அர்த்தம். 'சவிதர்க்கம்' என்றால், இணக்கமான சூழ்நிலையில் தன்னுடைய பண்புகள் மேலும் மேன்மை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெறும் விவாதம் என்று அர்த்தம்.


பொதுவாக இதுபோன்ற விவாதங்களில் வாழ்வியல் தத்துவங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களும், அவர்களது கேள்விகளுக்குத் தகுந்த விடையளிக்கக் கூடிய சான்றோரும் இருப்பதுண்டு.


இனி கேட்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை அடைந்தால், அதனை 'நிர்விதர்க்க சமாதி' என்று அழைக்கிறார்.


தேவையான விளக்கங்களைத் கேட்டுத் தெளிந்தபின், அந்த மனிதன் அடுத்த நிலைக்கு செல்கிறான். அது "சவிசார சமாதி".


  


"சவிசாரம்" என்பது 'அகவுலகில்' நடப்பது; அதாவது சுயசிந்தனையில் ஈடுபடும் மனிதன் தனக்குள்ளேயேக் கேள்விகளைக் கேட்டு, அவற்றிற்கான விடைகளையும் கண்டு பிடிக்கிறான். அவனுள் இருந்த இச்சைகளும் நீங்கி விடுகின்றன.


அதன்பின் ஒரு உண்மையை, ஏற்கனவே புரிந்திருந்த உண்மையை, மனப்பூர்வமாக உணர்ந்து கொள்கிறான். அது ..


"நான்" என்று

நான் நினைத்தது

"நான்" இல்லையென்று

நான் அறிந்தது

"நான்" என்ற

அகந்தை அழிந்தது.


இப்பொழுது 'அஹங்காரம்' அவனைவிடடு முழுமையாக நீங்கி விடுகிறது. அவன் "சபீஜ சமாதி" என்ற நிலையை அடைகிறான்.


"சபீஜ சமாதி" என்றால் 'விதைகளுடன் கூடிய சமாதி' என்று ரிஷி பதஞ்சலி கூறுகிறார். ஆனாலும், அவன் தனது பயணத்தை இன்னும் தொடர வேண்டும் என்கிறார் அவர்.


அஹங்காரம் நீங்கிய பின், மனிதன் 'மன அமைதி'  (peace of mind) என்றால் என்னவென்று உணர்ந்து கொள்கிறான். இருந்தாலும், அவன் தனது பயணத்தை தொடரவில்லை என்றால் மீண்டும் 'அஹங்காரம்' அவனைத் தொற்றிக் கொள்ளும் என எச்சரிக்கிறார்.

   


இந்த இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம் வரலாம்.


ஆழ்மனதில் இருந்த எதிர்மறை உணர்ச்சிகளும், இச்சைகளும் நீங்கி விட்டன.

நம்மைச் சார்ந்த உறவுகளும், பொருட்களும் எந்தவித கிளர்ச்சிகளையும் உண்டு பண்ண முடியாத அளவிற்கு வெறும் நினைவலைகளாகத் தங்கி விட்டன. பின் எதற்காக ரிஷி பதஞ்சலி எச்சரிக்கை மணி அடிக்கிறார்?


எந்தவொரு மனிதனது ஆழ்மனதிலும் நிறையப் பதிவுகள் காணப்படும். இந்தப் பதிவுகளைத்தான் ரிஷி பதஞ்சலி 'விதைகள்' என்கிறார்.  


"விதைகளுடன் கூடிய" என்று ஏன் சொல்லுகிறார்? நாம்தான் எல்லா விதைகளையும் நீக்கி விட்டோமே அல்லது வலுவிழக்கச் செய்து விட்டோமே என நினைக்கலாம். 


ஆனால், கண்ணுக்குத் தெரியாத, அறிவிற்கும் புலப்படாதப் பதிவுகள் இன்னும் நிறைய விதைகள் இருக்கலாம் என்கிறார்.


கர்ணனுக்கு தனது தாய் யார் என்றே தெரியாது; தனது தாய் என்று தெரியாமலே, அவன் குந்தி தேவியிடம் "ராஜ மாதா" என மரியாதையுடன் நடந்து கொள்கிறான். தன் கண் முன்னாலேயே இருப்பவள், என்றாவது ஒருநாள் பெரிய விதையாக மாறி .. நான்தான் உன்னுடைய "அம்மா" என்ற உண்மையைக் கூறி .. தன்னுடைய ஆழ்மனதில் ஒரு பெரிய பூகம்பத்தையே உருவாக்கப் போகிறாள் என்பதை அவன் அறிந்திருந்தானா?


  


"நான்" எனும் அஹங்காரத்தைத் துறந்து விட்ட மனிதன், 'அஸ்மிதா' என்ற நிலைக்கு வந்து விடுகிறான்.


'அஸ்மிதா' என்ற நிலையில் அவனிடம் "நான்" எனும் அஹங்காரம் இல்லை என்றாலும், 'தன்னைப் பற்றிய உணர்வு' மட்டும் மிஞ்சியிருக்கும்.


'அஸ்மிதா' நிலையில் அவன் அழிக்க வேண்டியது, அவனால் கண்டுகொள்ள முடியாத ஆழ்மனப் பதிவுகளைத்தான். 


ஆழ்மனப் பதிவுகளைப் பனிப்பாறையோடு (iceberg) ஒப்பிடலாம். தன்னால் கண்டுகொள்ளப்பட்டப் பதிவுகளை நீக்கி விட்டான்; அல்லது வலுவிழக்கச் செய்து விட்டான்.


புலன்களுக்குப் புலப்படாத பதிவுகளை மட்டும் நீக்க வேண்டும். அதற்கு ஒரே வழி 'தியானம்' மட்டும்தான்.


முறையாகத் தியானத்தை பயிற்சி செய்து வந்தால், ஆழ் மனதில் இருந்த அனைத்து பதிவுகளும் மடிந்து விடுகின்றன.


ஆன்மாவை சுழ்ந்திருக்கும் மாயத்திரையை "ஆனந்த உறை    (bliss sheath) என்பார்கள். திரையின் மேல் பரவியிருந்த அனைத்து பதிவுகளும் நீங்கிய பின், சித்தத்தின் உள்ளிருந்து பெருகும் ஒளி அவனைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும்.

அதன்பின் அவனுக்கு இந்தப் பூவுலகில் வேண்டுவது என்று எதுவுமே கிடையாது.


இதைத்தான் "மனமிறக்க ஞானி பிறக்கிறான்" எனச் சொல்கிறார்கள்.


வேதாந்தத்தின் நோக்கமும் இதுவே. திருமூலர் அருளியப் பாடலைப் பாருங்கள்:-


"வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்

வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்

வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்த இடம்

வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே."

.. திருமந்திரம் 229


இதுவரை தியானத்தை ஒரு பயிற்சியாக செய்து வந்தோம். 'அஸ்மிதா' நிலைக்கு வந்தபின், தியானம் நமது இயல்பாக மாறிவிட வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதன் பின்னணியில் தியானம் தொடர்ந்து தன்னிச்சையாக நடைபெற வேண்டும். நாம் தியானம் செய்கிறோம் என்ற உணர்வு கூட நம்மிடம் இருக்கக்கூடாது.

(Meditation-less meditation is the real meditation .. Swami Chinmayananda)


அவன் தனது தியானத்தைத் தொடர்ந்து செய்து வர 'அஸ்மிதா' என்ற நிலையிலிருந்து 'அஸி' என்ற நிலைக்குச் சென்று விடுவான்.


இருந்தாலும் ஒரே சிலரே 'அஸி' நிலைக்கு செல்ல முடியும். 



நம்மால் 'அஸ்மிதா' என்ற நிலையை அடைவதே மிகக் கடினம். இருந்தாலும், ஒரு மனிதன் 'அஸி' நிலையை அடைந்தால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.


"தத்வமஸி" என்ற மஹா வாக்கியத்தை கேள்விப் பட்டிருப்போம். (ஐயப்பன் கோவில் நுழைவு வாசலில் தத்வமஸி என எழுதப் பட்டிருக்கும்). நான்கு மஹா வாக்கியங்களில் அதுவும் ஒன்று.


"தத்+தவம்+அஸி" .. 

'நீ அதுவாக இருக்கிறாய்' எனப் பொருள் படும்.


தொடர்ந்து தியானம் செய்துவர, இறையருள் இருந்தால் 'அஸி' நிலையை அடையலாம்.


இந்தப் பாடலைப் பாருங்கள்:-

"தன்னில் தானறியா

 தனியாக இருந்தானாம்

 தன்னில் தானறியத்

 தான்மட்டும் இருந்தானாம்"


பாடலின் பொருள் :-

"தன்னில் (இருந்தானாம்)" .. எனக்குள்ளே இருக்கின்றான்.

"தானறியா (இருந்தானாம்)" .. நான் அறிய முடியாதவாறு, தரிசிக்க முடியாதவாறு மறைவாக இருக்கின்றான்.

"தனியாக இருந்தானாம்"..தனியாக, ஒரு ஒளியாக இருக்கின்றான்; நான் இயங்குவதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றான்; ஆனாலும், அவன் என்னுடைய எந்த செயலிலும் பங்கு கொள்வதில்லை; வெறுமனே சாட்சியாக இருக்கின்றான்.


"தன்னில்" .. எனக்குள்ளே "தானறிய" .. நான் அவனது ஒளியைத் தரிசித்தபோது "தான்மட்டும் இருந்தானாம்" ..

அவனது ஒளியைத் தரிசித்த பின், அவன் மட்டும் இருக்கின்றான். நான் அங்கு இல்லை; ஏன்?


இறை ஒளியைத் தரிசித்த மனிதன் 'தன்னைப்' பற்றிய உணர்வையும் மறந்து ஒரு "சித்தனாகி" விடுகிறான்; அல்லது பட்டினத்தார், வள்ளலார் போன்று "அவனில் அல்லது அவனது ஜோதியில்" இரண்டறக் கலந்து விடுகிறான்.


இந்த நிலைதான் 'அஸி' எனப்படும்.