மழலையின் கீதை .. பாகம் 3
பொருளடக்கம்
28. நான்கு வர்ணங்கள்
29. வர்ணங்கள் – விளக்கம் 1
30. வர்ணங்கள் – விளக்கம் 2
31. வர்ணங்கள் – விளக்கம் 3
32. வர்ணங்கள் – விளக்கம் 4
33. வர்ணங்கள் – விளக்கம் 5
34. வர்ணங்கள் – விளக்கம் 6
35. வர்ணங்கள் – விளக்கம் 7
36. வர்ணங்கள் – விளக்கம் 8
………………………………………..
பாகம் III ... வர்ணங்கள்
28. நான்கு வர்ணங்கள்
நான்கு வர்ணங்களைப் பற்றி விரிவாகப்
பார்ப்பதற்கு முன், பொதுவான சில உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கீதையில் புரியாத பல விஷயங்கள் உண்டு. சரியாகப்
புரிந்துகொள்ளப்படாத விஷயங்களும் உண்டு.
ஆனால் மோசமாகப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்கள் எவையென்று பட்டியலிட்டால், அதில்
முதலிடம் பெறுவது இந்த நான்கு வர்ணங்களாகத்தான் இருக்கும்.
நான்கு வர்ணங்களைப் பற்றி மக்கள் சரியாகப்
புரிந்துகொள்ளவில்லையென்றால், அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு என்ன காரணம்?
வேதம் ஓதுபவன் பிராமணன், சண்டை போடுபவன்
க்ஷத்திரியன், வியாபாரம் செய்பவன் வைஷ்யன், கூலிவேலை செய்பவன் சூத்திரன் என
எண்ணினால், மருத்துவர் (Doctor), பொறியாளர் (Engineer) போன்றவர்களை எந்த வர்ணத்தில் சேர்ப்பது?
பகவான் மனிதர்களை நான்கு வர்ணங்களாக எதை
வைத்துப் பிரித்தார்? “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச:” என்றல்லவா சொல்கிறார். குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு
வர்ணங்களாக பிரிக்கிறேன் என்று சொல்கிறார்.
இதிலும் ‘கர்ம’ என்பது செய்யும் தொழில் என்று
எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒருவனது குணத்தை ஒட்டியே அவனது செயல்கள்
இருக்கும் என்றாலும், பல சமயங்களில் அவனால் குணத்தை ஒட்டிய செயல்களில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆழ்ந்து சிந்தித்தால் ‘கர்ம’
என்பதற்கு “மனோபாவம்” (mental attitude) என்பதே சரியான அர்த்தமாக இருக்கமுடியும் என்பது
புரியும். (இதனைப் பற்றி விளக்கமாக பின்னர் பார்ப்போம்).
கீதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்களைச்
சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அது கூறும் வர்ணங்களைப் பற்றி மிகவும்
தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து வரும் பக்கங்களில் வர்ணக்கலப்பினைச்
சரியாகப் புரிந்துகொள்வதற்காக பல கோணங்களில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை
உதாரணத்திற்காக மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அவற்றைப் பற்றி சிந்தித்து, சரியான முடிவுக்கு
வரவேண்டியது தனி மனிதனின் பொறுப்பாகும். பலவிதமான விளக்கங்கள் பல திசைகளிலிருந்தும் வரும்.
அனைத்தையும் உள்வாங்கி, அலசி ஆராய்ந்து, முடிவு செய்யவேண்டியது அந்தந்த மனிதனே;
வேறு யாரும் இதில் தலையிட முடியாது; தலையிடவும் கூடாது.
29. வர்ணங்கள் – விளக்கம் 1
வர்ணங்களைப் பற்றிய பல்வேறு வகையான, விரிவான
விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன் ஒரு மனிதனின் வர்ணம் எப்படி நிர்ணயம்
செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
புறவுலகிலிருந்து நமக்கு வரும் தாக்கங்களின்
காரணமாக நமக்குள் பதிவுகள் ஏற்படுகின்றன. பதிவுகளை ஒட்டி வரும் எண்ணங்கள் நாம் செய்யும் காரியங்களுக்குக் காரணமாக
அமைகின்றன. தொடர்ந்து நிகழும் செயல்கள், பழக்கமாகவும் அதுவே பின்னர் குணமாகவும்
மாறிவிடுகிறது.
புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களின் காரணமாக
ஏற்படும் பதிவுகள் நிகழும் இடம் மனமென்றால், குணங்கள் (வாசனா) பதிவாகும் இடத்தை
ஆழ்மனம் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.
ஒரு மனிதனின் ‘ஆழ்மனப்’ பகுதியில் பதிவாகும்
குணங்களைப் பொறுத்து, அவனது மனோபாவம் (mental attitude) அமைகிறது.
ஒரு மனிதனின் மனதில் எழும் எண்ணம், வாசனா மூலமாக
வரும் எண்ணம் இரண்டிலும் சாதாரணமாக ஒரு இணக்கம் இருக்கும்.
ஆனாலும் புறவுலகிலிருந்து வரும் தொடர் தாக்கங்களின் காரணமாக மனம் மூலம் ஏற்படும்
பதிவுகளில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படும்.
எனவேதான் வர்ணத்தை மனிதனுக்குப் பொருத்தும்
பொழுது, அவனது குணத்தையும், மனோபாவத்தையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள
வேண்டும் என்கிறார்கள்.
அவனுக்குத் திருடுவதுதான் தொழில். அவனது
எண்ணமெல்லாம் திருடுவதில்தான் இருக்கிறது. அவனின் குணமும், மனோபாவமும்
அப்படித்தானே இருக்கும். முனிவர் ஒருவர் ஒரு சோதனையின் மூலம் அவனது கண்களைத்
திறக்கிறார். அவனுக்கு தான் வாழ்ந்து வரும் மோசமான வாழ்க்கைமுறை புரிகிறது.
அவனது மனதிலும், சிந்தனையிலும் மாற்றம் கொண்டுவர
பெரியதொரு நீண்ட தவம் வேண்டியிருந்தது. அதன் பின்னரே அவனால் இராமாயணம் என்ற
அற்புத காவியத்தை இயற்ற முடிகிறது.
ஒருவரின் வர்ணம் ஒன்றிலிருந்து மற்றொன்றாக
மாறுவதற்கு, அவனது குணத்திலும், மனோபாவத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும்.
புதிய அனுபவங்கள், புதிய பதிவுகள், புதிய
செயல்கள், புதிய பழக்கம் என பல நிலைகள்
தாண்டிய பின்னரே, குணத்திலும், அதை ஒட்டிய மனோபாவத்திலும் மாற்றங்கள் கொண்டுவர
முடிகிறது.
அதற்கு எவ்வளவு முயற்சிகள் தேவைப்படுகின்றன.
வரைபடத்தில் வாசனாவும், ஆன்மாவும் எங்கு
வருகின்றன என்று பார்ப்போமா?
30. வர்ணங்கள் – விளக்கம் 2
எந்த சமயத்திலும் தர்மத்தின் (அறம்)
வழியிலிருந்து நழுவாத சான்றோர் ‘சத்துவ’ குணத்தினர்.
எடுத்த காரியத்தை முனைப்புடன் செயல்படுத்தும்
ஆன்றோர் ‘இரஜோ’ குணத்தினர்.
இரண்டிலும் சேராத, சுயமாக சிந்திக்கத்
தெரியாதவர் ‘தமோ’ குணத்தினர்.
இந்த மூன்று குணங்களும், அவற்றிலிருந்து
வெளிப்படும் மனோபாவமும் மனிதர்களின் வர்ணங்களைப் பிரித்துக் காட்டுகின்றன.
தான், தனது என்பதனை மறந்து, தர்மத்தின் வழி
நடக்கும் சான்றோர், பிராமணர் என்று அழைக்கப்படுகிறார். “அறனறிந்து மூத்த
அறிவுடையார்” என்று வள்ளுவர் சொல்லும் பண்புகள் நிறைந்த மனிதராக அவர் இருக்கும்
பட்சத்தில், அவரை ஒரு சிறந்த ‘வழிகாட்டியாக’ எடுத்துக்கொள்ளலாம்.
சான்றோரின் வழிகாட்டுதலுடன், தர்மத்திற்கு
உட்பட்டு செயலாற்றும் ஆன்றோர்,
க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது மற்றும் தனது சொந்தங்களின்
நலத்தை விட, பொது நலத்திலேயே அதிக அக்கறை உள்ளவராக இருப்பார்.
தர்மத்தின் வழியிலிருந்து விலகத் தயங்காத, சுய
நலமே முக்கியம் என்ற மன நிலை கொண்டவன் யாராக இருந்தாலும், அவன் வைஷ்யன் என்று
அழைக்கப்படுகிறான்.
சுயமாகச் சிந்திக்கவும், செயல்படவும்
தெரியாதவன், மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பவன் சூத்திரன் (சேவகன்)
எனப்படுகிறான்.
ஒரு மனிதனிடம் மூன்று குணங்களின் தாக்கமும்
இருந்துகொண்டே இருக்கும். அப்படியானால் அந்த மனிதனின் வர்ணத்தை எப்படி தெரிந்து
கொள்வது?
சுருக்கமாக சொன்னால் –-
சத்துவ குணம் நிறைந்தவன் ..... பிராமணன்
சத்துவ குணத்தின் தாக்கம் கொண்டு செயல்புரிபவன்.. க்ஷத்திரியன்
சத்துவ குணத்தின் தாக்கமின்றி செயல்புரிபவன் ........... வைஷ்யன்
தமோ குணத்தின் ஆதிக்கம் மிகுந்தவன் ..... சூத்திரன்
(இதனை ஒரு பொதுவான விளக்கமாக எடுத்துக்
கொள்ளவேண்டும்)
31. வர்ணங்கள் – விளக்கம் 3
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை பாருங்கள்: –
மனம் மூலமாக ஏற்படும் பதிவுகளைப் பொறுத்தே ஒரு மனிதனக்கு எண்ணம், செயல், பழக்கம் என்ற தொடர் சங்கிலி உருவாகி முடிவில் குணமாக மாறுகிறது. குணமும், குணத்திலிருந்து வெளிப்படும் மனோபாவமும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால், மனதில் ஏற்படும் எண்ணங்களும், ஆழ்மனதில்
ஏற்படும் எண்ணங்களும் ஒரே மாதிரியாக
இருப்பதில்லை. ஏனெனில் மனதில் ஏற்படும் பதிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்;
ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகளோ நீடித்து
நிலைத்து இருக்கும்.
இவற்றிற்கிடையே முறையான இணக்கம் இல்லையென்றால்,
அந்த மனிதன் படும் அவஸ்தைக்கு அளவே கிடையாது. அந்த நேரம்தான் அவன் தன்னை
சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரமாகும்.
32. வர்ணங்கள் – விளக்கம் 4
“தர்ம, அர்த்த, காம” என்பது வேதம் சொல்லும்
தத்துவ சுருக்கம். இதனை நான்கு வர்ணத்தாரும் எப்படி கையாளுவார்கள்?
ஒரு மனிதனின் பிறப்பை வைத்தும், அவன் செய்யும்
தொழிலை வைத்தும் அவனது வர்ணத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்றால், நாம்
சந்திக்கும் மனிதர்களின் வர்ணப்பிரிவினை எப்படித் தெரிந்துகொள்வது?
ஒரு மனிதன் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும்,
அவனது நடை, உடை, பாவனைகளை வைத்தும், பழக்கவழக்கங்களை
வைத்தும், அவனது வர்ணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.
பிராமணன் (வழிகாட்டி): - ஆரவாரத்தை விரும்பாதவன், நாணத்தோடு (humility) ஒதுங்கி வாழ்பவன், தனிமையை விரும்புகிறவன்,
புகழுரைக்கு மயங்காதவன், சுய-சிந்தனையில் மூழ்கி இருப்பவன், உணர்ச்சிகளை வென்றவன்,
அறவழியில் நடப்பவன், ஆசைகளுக்கு அப்பாற்பட்டவன்.
இவனுக்கு “தர்ம” மட்டுமே முக்கியம். தனது
சிந்தனை, சொல், செயல் எல்லாவற்றிற்கும் தர்மம்
மட்டுமே முக்கியம். பற்றற்று,
விருப்பு – வெறுப்பு இன்றி,
எப்பொழுதும் தர்மத்தைக்
கடைப்பிடிப்பவன்.
“அர்த்த, காம” பற்றிய கவலை ஏதும் கிடையாது.
க்ஷத்திரியன் (பொதுநலவாதி): - தர்மத்தின்
வழி நடப்பவன், நியாயத்திற்காக போராடுபவன், பிறர் நலம் பேணுபவன், தர்மத்தின்
தாக்கம் இருப்பதால், எப்பொழுதும் உயர்வான காரணங்களுக்காக போராடுவதில் தன்னை
வருத்திக் கொள்பவன், ஆங்காரத்தை கட்டுப்படுத்த முடியாதவன், எந்த வெற்றியிலும்
திருப்தி அடையாதவன், உணர்ச்சி வசப்படுபவன், பெரியோரின் துணையை நாடுபவன், தன்னை
மேன்மை படுத்த துடிப்பவன், தன்
பெயருக்குக் களங்கம் வரக் கூடாது என்பதில் அக்கறை செலுத்துபவன்.
இவனுக்கு
“அர்த்த, காம” இரண்டும்
வேண்டும். ஆனால், அவை
“தர்மத்திற்கு” உட்பட்டு இருக்கவேண்டும். தர்மத்தை
எதிர்த்து “அர்த்த, காம” என்றால் மனம் சஞ்சலப்படும்.
வைஷ்யன் (சுயநலவாதி): - தனது நலனிலேயே குறியாக இருப்பவன், வலியோரை
புகழ்பவன், எளியோரை இகழ்பவன், உணர்ச்சி வசப்படுபவன், புலன்களை கட்டுப்படுத்த
முடியாதவன்.
இவனுக்கும்
“அர்த்த, காம” இரண்டும் முக்கியம். ஆனால், அவற்றை அடைவதற்கு, “தர்மம்” தடையாக
இருக்கிறதென்றால், அதனை ஒதிக்கித்தள்ள தயங்கமாட்டான்.
ஏனெனில், இவனுக்கு சுய லாபமே முக்கியம். ஆகவே இவனது முயற்சி அனைத்தும், தனது
வசதியைப் பெருக்குவதற்காகவே இருக்கும்.
சூத்திரன் (சேவகன்):- சுயமாக சிந்திக்கத் தெரியாதவன், புலன்களுக்கு
அடிமையானவன், வாழ்வின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவன். சோம்பல் மிகுந்தவன், அடுத்தவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு செயல்படுபவன்.
இவனுக்கு “தர்மம், அர்த்த” இரண்டிலும் ஆர்வம்
இருக்காது.
33. வர்ணங்கள் – விளக்கம் 5
ஒரு மனிதனது குணமும், மனோபாவமுமே அவனது வர்ணத்தை
நிர்ணயம் செய்கின்றன என்றாலும், அவனது தொழில் பல நேரங்களில் அதனைப்
பிரதிபலிப்பதில்லை.
அவன் அந்த பெரிய உணவகத்தில் சர்வராகப் பணியாற்றுகிறான்.
அங்கு உணவு அருந்த வந்த ஒரு குடும்பம். பாட்டி, மகள், மகளின் ஐந்து வயது மகன்,
இடுப்பில் கைக்குழந்தை மற்றும் நிறைய ‘லக்கேஜ்’கள். மிகவும் சிரமப்பட்டு உள்ளே
வந்து விடுகிறார்கள்.
அவர்கள் தங்களது சாப்பாட்டை முடித்தவுடன்,
அந்தக் குறிப்பிட்ட சர்வர், அவர்களுக்கு உதவியாக அவ்வளவு உடமைகளையும் சுமந்து
சென்று, அவர்களை டாக்ஸியில் ஏற்றிவிட்டு வருகிறான். அவர்களின்
பாரத்தைக் குறைப்பதில், அவன் இன்பம் காண்கிறான். அவன் கூட வேலை செய்யும்
மற்ற சிப்பந்திகள் அவனைக் கேலி செய்கிறார்கள். அவன் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதே
இல்லை. அவனது வர்ணம் எதுவென்று சொல்வது?
தொழிலை வைத்துப் பார்த்தால் அவன் சூத்திரன்;
டாக்ஸியில் ஏற்றிவிட்டு, எதையாவது
எதிர்பார்த்து, தலையைச் சொறிந்துகொண்டு
நின்றிருந்தால் அவன் வைஷ்யன்;
தனது உடல் வலியைப் பொறுத்துக்கொண்டு, பிறரது
கேலியையும் பொருட்படுத்தாது பிறருக்கு உதவுவதால் அவன் க்ஷத்திரியன்.
அவனை க்ஷத்திரியன் என்றுதானே அழைக்கவேண்டும்?
34. வர்ணங்கள் – விளக்கம் 6
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு
வகையான “வட்டம்” உண்டு. அவனது வாழ்க்கைச் சக்கரம் சுழலும் விதத்தைப் பொறுத்து அது அமைகிறது. அந்த “வட்டம்” மனிதனின் வர்ணத்தை எப்படி நிர்ணயம் செய்கிறது?
பிராமணன்: - எந்த வட்டத்திலும் சிக்காதவன்; தனக்கென்று
எந்த வட்டமும் போட்டுக் கொள்வதில்லை;
தப்பித் தவறி மற்றவர்கள் அவனைச் சுற்றி வட்டம் ஏதேனும் போட்டாலும், அதனை உடைத்தெறிபவன்.
க்ஷத்திரியன்: - துவக்கம் எந்த வட்டத்தில் இருந்தாலும்,
காலம் செல்லச் செல்ல தனது வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பவன்.
வைஷ்யன்: - தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு,
அதற்குள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்பவன்; பல நேரங்களில் தவறான வழிகளிலும்
கூட செல்லத் தயங்காதவன்.
சூத்திரன் : தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொள்ளத்
தெரியாதவன்; தனக்காக பிறர் அமைத்துத் தரும் வட்டத்திற்குள் இருந்து கொண்டு உழன்று
வருபவன்.
35. வர்ணங்கள் – விளக்கம் 7
மனிதனின் பிறப்பிற்கும் அவனது
வர்ணப்பிரிவிற்கும் சம்பந்தம் உண்டு.
மனிதனின் பிறப்பிற்கும் அவனது
வர்ணப்பிரிவிற்கும் சம்பந்தம் இல்லை.
மேலே உள்ள இரண்டு கூற்றிலும் எது சரி? இரண்டுமே
சரிதான், இருவேறு கோணங்களில் இருந்து பார்த்தால்.
முதலில் மனிதனின் பிறப்பிற்கும், அவனது
வர்ணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது எப்படி என்று பார்ப்போம்.
நாம் ஏற்கனவே கூறியது போல் ஒரு மனிதனின் குணம்,
மனோபாவம் இவற்றைப் பொறுத்து, அவனது வர்ணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனோபாவம்
குணத்தைப் பொறுத்தது. குணம் எதனைப் பொறுத்தது? குணத்திற்கு ஆதார சுருதியாக
இருப்பது சொந்த அனுபவங்களின் காரணமாக ஏற்படும் பதிவுகள்தானே? மனம் பெறும்
அனுபவங்களின் காரணமாகவே பதிவுகள் நிகழ்கின்றன. அப்படியானால் அந்த அனுபவங்கள் எந்த
வயதில் ஆரம்பமாகின்றன? ஐந்து வயதுக்கும் மேலேதான் ஒரு குழந்தை தானே சுயமாக
அனுபவங்களைப் பெறுகிறது. அப்படி இருக்கும்பொழுது, அவனது வர்ணத்தைப் பிறப்போடு
எப்படி சம்பந்தப்படுத்த முடியும்?
இப்பொழுது மனிதனின் பிறப்பிற்கும்,
வர்ணத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பது எப்படி என்று பார்ப்போம்.
மனிதன் இறப்பதற்கு முன், வாசனா கூட்டிற்குள்
சிறைப்பட்டிருக்கும் ஆன்மா, கூட்டிலிருந்து விடுதலை அடையவில்லை என்றால், அந்த
மனிதனின் அடுத்த பிறவி தவிர்க்க
முடியாததாகிறது. எந்த வர்ணத்தைக் கொண்டிருக்கும் பொழுது, ஆன்மா மானிட உடலை
விடுத்ததோ, அதே வர்ணத்தோடு புதிய பிறவியை எடுக்கிறது. அப்படியானால், மனிதனின்
பிறப்பிற்கும், அவனது வர்ணத்திற்கும் சம்பந்தம் உண்டு தானே!
மனிதன் தனது இளமைப் பருவத்தில், குறிப்பாக
‘டீன்-ஏஜ்’ (teenage) பருவத்தில், பலவித குழப்பங்களுக்கு ஆளாகி
அல்லல்படுவதற்கான ஆணிவேர் இங்குதான் இருக்கிறது. கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வேண்டிய
விஷயம் இது.
தோட்டத்தில் ரோஜா மலர்ந்து மணம் பரப்புகிறது.
அது மொக்காக இருந்தபோது அதனால் மணம் பரப்ப முடியவில்லை; மொட்டாக மாறியபோதும்
முடியவில்லை; ஆனால் அது மலர்ந்ததும், அது நினைத்தாலும், அதனால் மணம் பரப்பாமல்
இருக்க முடிவதில்லை.
ஒரு வேளை, அந்த மலர் மலரும் பொழுது, அதற்குள்ளே வேறொரு மணம் நுழைய முயற்சி செய்தால், என்ன ஆகும்?
ஒரு வேளை, அந்த மலர் மலரும் பொழுது, அதற்குள்ளே வேறொரு மணம் நுழைய முயற்சி செய்தால், என்ன ஆகும்?
மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள், மனிதன் பெறும் அனுபவத்தைப்
பொறுத்து, மாறிக் கொண்டேயிருக்கும். எனவே அதன் காரணமாக ஏற்படும் சிந்தனைகளும்
அடிக்கடி மாறும் தன்மை உடையன. ஆனால் ‘வாசனா’ பெட்டகத்தில் உள்ள பதிவுகள் நீடித்து
நிற்பவை. அந்த பதிவுகள் எளிதில் மாறுவதில்லை.
சாதாரணமாக ஒரு மனிதனின் மனதில் எழும் எண்ணங்களுக்கும், குணம் மற்றும் மனோபாவம்
காரணமாக வரும் சிந்தனைகளுக்கும் இடையே இயல்பாக ஒரு இணக்கம் இருக்கவேண்டும்.
ஆனால் “டீன்-ஏஜ்” பருவத்தில் அடியெடுத்து
வைக்கும் பருவத்தில், மாறுபாடு -– இப்பிறவியில் புதிதாகப் பதிவாக வேண்டிய
குணத்திற்கும், முன் பிறவியில் ஏற்கனவே பதிவாகியிருந்த குணத்திற்கும் இடையேயுள்ள
மாறுபாடு – ‘வாசனா’ பெட்டகத்தில் அதாவது ஒரே இடத்திலேயே வருகிறது. அந்த நேரத்தில்
எழும் பிரச்சனைகள் மிகவும் ஆழமானவை.
நல்லதொரு வழிகாட்டுதல் இல்லையென்றால், அந்த
இளமைப் பருவம் எவ்வளவு சிதலமடைந்து விடுகிறது.
36. வர்ணங்கள் – விளக்கம் 8
வர்ணக் கலப்பின் தன்மைகளைச் சரியாகப் புரிந்து
கொண்டால், பிராமண, சூத்திர வர்ணங்களைச் சேர்ந்தவர்களை எளிதில் அடையாளம்
கண்டுகொள்ளலாம். ஆனால் க்ஷத்திரிய, வைஷ்ய வர்ணங்களைச் சேர்ந்தவர்களை மற்றவர்களால்
மட்டுமல்ல, அவர்களாலேயே கூட புரிந்து கொள்வது கடினமான ஒன்று.
இருந்தாலும் இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை இனம்
பிரித்துப் பார்ப்போமா?
இரஜோ குணம்:
இருவருக்கும் பொதுவானது.
தர்மம்: இருவருக்கும்
அதன் அர்த்தம் தெரியும்; இருந்தாலும் எப்பொழுதும் தர்மத்தின் வழி நடக்க விரும்புவன்
க்ஷத்திரியன் மட்டுமே.
அர்த்த, காம: இருவருக்கும்
நாட்டமுண்டு; இருப்பினும், அவற்றை அடைவதற்கு
தர்மம் தடையாக இருந்தால், அதனை விலக்கிவிட
வைஷ்யன் தயங்கமாட்டான்.
பெரியோர் துணை: க்ஷத்திரியன்
சான்றோரின் துணையை நாடி நிற்பவன்.
போராடும் குணம்: இருவருக்கும் பொதுவானது; ஆனாலும் தோல்வி வரும் எனத் தெரிந்தால், வைஷ்யன் போராட்டத்தில் இருந்து ஒதுங்கிவிடுவான்.
மானம் காத்தல்: க்ஷத்திரியன்
இதில் கவரிமானைப் போன்றவன். எதை இழந்தாலும், மானத்தை இழக்க விரும்ப மாட்டான்.
No comments:
Post a Comment