Monday, 26 February 2018

மழலையின் கீதை .. பாகம் 4

மழலையின் கீதை  ..  பாகம் 4  


                                                               பொருளடக்கம் 


37. மனிதனின் அடுத்த நிலை          
          
                        38. உணர்ச்சியும், உணர்வும்

39. வாசனாவின் கறை

40. நோயும், மருந்தும்

41. வாழ்க்கை நெறியும், வாழ்க்கைத் தரமும்

42. நேற்று, இன்று, நாளை

43. கடமையும், பலனும்

44. வழித்தட மாற்றம்

45. கடலும், அலையும்

46. மனமும், சிலையும்

47. ஒப்பீடு

48. தவறெனத் தெரிந்தால்

49. துணை நலம்

50. சுயமேம்பாட்டிற்கான உத்திகள்

51. அந்தக்கரணங்கள்

52. அந்தக்கரணங்களின் செயல்பாடு (பொதுவான விதிமுறைகள்)

53. நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு

54. இன்பமும், அமைதியும்
......................................................................................................
                                                          


பாகம் iv ... சுய மேம்பாடு


37. மனிதனின் அடுத்த நிலை    

வர்ண தர்மங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட நாம், நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் வர்ணத்தைக் குறிப்பதற்கு அவனது “அந்தக்கரணங்களின்” செயல்பாடுகளே காரணமாக அமைகின்றன.

அவற்றின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்ட நாம், அவற்றை எப்படி மாற்றி அமைப்பது என்ற உண்மைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு மனிதன் எந்த வர்ணத்திலிருந்தாலும் “அந்தக்கரணங்களின்” செயல்பாடுகளை மாற்றி அமைக்கும் வித்தைகளைக் கற்றுக் கொண்டால் மட்டுமே, அவனால் வர்ணப் பிரிவில் உயரமுடியும்; அதற்கு தேவை மன உறுதியும், விடாமுயற்சியும் தான்.

அண்டங்கள் தோன்றி நெருப்பு கோளங்கள் குளிர்ந்தபின், கண்ணுக்கும், புலனுக்கும் தெரிந்தவை கல்லும், மண்ணும்தான். ஆனால் அவற்றிற்கு ஊடேயும் உயிர்நிலை இருந்தது என்றால் யார்தான் ஒப்புக்கொள்வார்கள்?

அடுத்த நிலையில் புல், பூண்டு, செடி, கொடி, மரம் என்று தாவரவியல் தோன்றி வளர்ந்த பொழுது, அவற்றிற்கு உயிர் இருந்தது என்பதோடு, சிறிது உணர்ச்சியும் இருந்தன என்பதை அறிந்து கொள்கிறோம்.

அடுத்து ஊர்வன, நடப்பன, பறப்பன என விலங்கியல் விரிவடைந்தபொழுது, அவற்றிற்கு  உணர்ச்சி மட்டுமல்ல, அறிவும் வேலை செய்வதை தெரிந்து கொள்கிறோம். எந்த நிலையிலும் அவற்றின் உணர்ச்சியே மேலோங்கி இருப்பதையும் புரிந்து கொள்கிறோம்.

பரிணாம வளர்ச்சியில் அடுத்து வந்த மனிதன் உணர்ச்சி, அறிவு இரண்டையும் பயன்படுத்தினாலும், சூத்திர வர்ணத்திலிருந்து மேலே வரவர அவனது உணர்ச்சிகள் அறிவுக்கு கட்டுப்பட்டு இருப்பதைப் பார்க்கிறோம்.

அறிவு வளர வளர உணர்ச்சி கட்டுக்குள் வந்து அடங்குவதைப் பார்க்கும்பொழுது, அடுத்த நிலையில் அறிவு மட்டுமே மேலோங்கி இருக்கும் நிலை வரலாம்  அல்லவா?

அது “அறிவை” அறிவால்  அறியும் நிலையாகும். அந்த நிலையில் திருமூலர் கூறுவது போல் “கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்காக” மாறிவிடும்.



38. உணர்ச்சியும், உணர்வும்

அறிவு மேலோங்கிய நிலையில் ஒரு மனிதனின் உணர்ச்சி எந்த அளவில் இருக்கும்? வரைபடத்தைப் பாருங்கள் –


மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் உணர்ச்சியாகவும், புத்தி மூலமாக  ஏற்படும் பதிவுகள் அறிவாகவும் உருவெடுக்கின்றன.

ஒரு மனிதன் சூத்திர வர்ணத்தில் இருக்கும்பொழுது அறிவு மிகமிகக் குறைவாகவும், உணர்ச்சி மிகுந்தும் காணப்படுகிறது. உணர்ச்சி பெட்டகமும், அறிவு பெட்டகமும் ஒன்றுகொன்று தொடர்பின்றி, இடையே உள்ள தடுப்புச் சுவர் கனமாக மாறிவிடுகிறது.

ஆனால் மனிதன் தன்  வர்ணப்பிரிவில் உயர்ந்து வரும்பொழுது, அவனது உணர்ச்சி பெட்டகத்திற்கும், அறிவு பெட்டகத்திற்கும் உள்ள தடுப்புச் சுவர் மெலிந்து மெலிந்து முடிவில் முழுவதுமாய் கரைந்து போகிறது. இதன் விளைவாக  அவனது உணரச்சிகள் அறிவோடு இரண்டற கலந்து விடுகிறது. அறிவோடு கலந்து விட்ட மனதில் உணர்ச்சிகளுக்கு இடம் கிடையாது.

உணர்ச்சிகள் மனதின் அடித்தளத்திலிருந்து அறிவுக்கு கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் வெளிவரும். எனவே அவை நல்ல உணர்ச்சிகளாகவும் இருக்கலாம்; கெட்ட உணர்ச்சிகளாகவும் இருக்கலாம். ஆனால் மனம் (உணர்ச்சி) புத்தியோடு (அறிவு)  இரண்டறக்  கலந்தபின், அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. அவனிடமிருந்து உணர்வுகள் மட்டுமே வெளிப்படும்.

அறிவுக்கு அடங்காத மனம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்; அறிவோடு கலந்த மனமோ உணர்வுகளை மட்டுமே வெளிபடுத்தும்.

உணர்ச்சிகளை  விட உணர்வுகள்  வெளிப்படுவதே நல்லது; ஏனெனில் உணர்வுகளில் கெட்ட உணர்வு என்று எதுவும் கிடையாது.



39. வாசனாவின் கறை

இறைவனைத் தேடி வெளியில் அலையும் மனிதனால், தனக்குள்ளேயே இருக்கும் ஆன்மாவை ஏன் தரிசிக்க முடியவில்லை? ஆன்மாவை மூடியிருக்கும் வாசனா என்னும் மாயத்திரையில் கறைகள் நிறைந்து. ஆன்மாவின் ஒளியைத் தரிசிக்க முடியாமல் செய்துவிடுகிறது.

உள்ளே காணமுடியாத ஒளியை,  வெளியில் தேடி அலையும் மனிதன் நிரந்தரமல்லாதவற்றை நிஜமென்று நம்பி   பொய்யான இன்பங்களில் மூழ்கி, வாழ்க்கையின் நோக்கத்தையே தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான். நிரந்தரமல்லாத நிஜத்தைத்தான் “மாயை” என்கிறது வேதம்.

கதவைத் திறந்தால்  வெளியே ஓடிச் செல்லும் குழந்தையைப் போல் வெளியே ஓடித்திரியும் மனதை உள்ளே பார்க்கச் செய்யவேண்டும். “வாசனா”வில் படிந்துள்ள கறைகளைக்   களைவதற்கு, மனதை முதலில் உள்முகமாகத் திருப்பவேண்டும். மற்ற முயற்சிகளெல்லாம் அதற்குப் பின்னர்தான்.

முயற்சி செய்தால் வர்ணப்பிரிவில் கொஞ்சம், கொஞ்சமாக உயரலாம்.

வர்ணப்பிரிவில் உயர்ந்த எல்லையை அடைந்தால், ஆன்மாவை அறிந்து கொள்ளலாம்.




 40. நோயும், மருந்தும்


"பிணிக்கு மருந்து பிறமன் –
 அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து”

மனிதனுக்கு வரும் எந்தவொரு நோய்க்கும், மருந்து பிறிதொரு இடத்தில் இருந்து வருகிறது. ஆனால், காதலியால் வரும் நோய்க்கு அவள்தான் மருந்து என்கிறார் வள்ளுவர்.

நோயும் அதுவே, மருந்தும் அதுவே என காதலியை வள்ளுவர் சொல்வது போல், வேறு ஏதாவது உண்டா என்றால் அது மனிதனின் மனம்தான்.

மனிதனை ஆட்டுவித்து அவனை சாத்தானாக மாற்றும்  அவனது மனம்தான், அவனை தெய்வநிலைக்கு உயர்த்தக்கூடிய சக்தியையும் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கான வித்தைகளை மனிதன் அறிந்திருக்க வேண்டும்.

இருள் சூழ்ந்த மனதை, அருள் சுரக்கும் மனமாக மாற்றும் வித்தையை கற்றுத் தருவது ஆன்மிகம்.

எந்த, எந்த வித்தைகளை எல்லாமோ கற்றுக் கொள்ளவேண்டும் என்று துடிக்கின்ற நாம், சுய மேம்பாட்டிற்காக ஆன்மிகம் சொல்லும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அவற்றை தெரிந்துகொள்ளுமுன், நமது வாழ்க்கை பாதையில் நமது பயணத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.



41. வாழ்க்கை நெறியும், வாழ்க்கைத் தரமும்

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவதில் வியப்பில்லை. அதன் நோக்கமே வாழ்வின் இன்பங்களை அனுபவிக்கத்தானே! ஆனால் வாழ்க்கைத் தரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மனிதன் வாழ்க்கை நெறிக்கும் கொடுக்க வேண்டாமா?

ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாழ்க்கைத்தரம், வாழ்க்கை நெறி இரண்டுமே முக்கியம் என்றாலும், இரண்டிற்குமிடையே சில வித்தியாசங்கள் உண்டு.

வாழ்க்கைத்தரம் மரத்தின் கிளை என்றால், வாழ்க்கை நெறி அதன் வேர்.  அது கட்டிடம் என்றால், இது அஸ்திவாரம்.

வாழ்க்கை நெறியை மறந்து, வாழ்க்கைத்தரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் மனிதன் அவனது வர்ணப் பிரிவில் கீழே இறங்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அதே சமயம் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதன் வர்ணப் பிரிவில் மேலே ஏறுகிறான். அதன் காரணமாக, அறிவிற்கெல்லாம் அறிவான பேரறிவைத் தெரிந்து கொள்ள அவனுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.

வர்ணப்பிரிவில் மேலே வருவதற்கு, வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியம்.


42. நேற்று, இன்று, நாளை


நாம் எப்படி இருந்தோம்?             -    அது கடந்த காலம்

நாம் எப்படி இருக்கிறோம்?           -    அது நிகழ்காலம்

நாம் எப்படி இருப்போம்?             -    அது எதிர்காலம்


நாம் எப்படி இருந்தோம் என்பது நடந்து முடிந்த கதை. அதை இப்பொழுது மாற்ற முடியாது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பதுவும் மாற்றமுடியாதது. ஏனெனில் நிகழ்காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கான பதிவுகள் ஏற்கனவே நமக்குள் அரங்கேற்றிவிட்டன. இப்பொழுது மாற்ற முடியாது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து, எதிர்காலத்தில் இப்படித்தான் இருப்போம் என்று சொல்வதும் சரியல்ல. ஏனெனில் எதிர்காலத்தை நம்மால் மாற்ற முடியும். ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் நிகழ்காலத்தில்தான்  நடத்த வேண்டும்.

     “The present is the product of the past;
      The future is the modification of the past in the  present"                       
---   Swami Chinmayaanandhaa  

இறைவன் அருள் இன்றி எதுவும் நடக்க முடியாது என்றாலும், மனிதனின் முயற்சியும் மிகவும் முக்கியம். முயற்சி இல்லாமல் சுயமேம்பாடு இல்லை.


43. கடமையும், பலனும்

“கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்கிறது கீதை. இதனை நையாண்டி செய்பவர்களும் உண்டு. மாதம் பூராவும் வேலை பார்த்துவிட்டு, சம்பளத்தை எதிர்பாராதே என்றால் எப்படி என்பார்கள். கீதாச்சாரியன் உரைக்கு இப்படியா அர்த்தம் கொள்வது?

‘நீ உனக்குள்ள கடமையை செவ்வனே செய்து வா; பலனை எதிர்பார்த்து இருக்காதே; ஏனெனில் நீ எதிர்பார்க்கும் பலன் எப்பொழுது, எவ்விதம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது’ எனப் பெரியோர்கள் சொல்கிறார்கள்.

பலன் என்பதற்கு “லாபம்” என்று ஓர் அர்த்தம் இருப்பதோடு, “விளைவு” என்றும் ஓர் அர்த்தம் உண்டு. கடமையைச் செய்வது மட்டும்தான் நம் கையில் உள்ளது. ஏனெனில் அதன் விளைவு நாம் விரும்பியபடி, நாம் முடிவு செய்வதல்ல.

இன்னுமொரு விளக்கமும் உண்டு.

“செய்’ என்பது நிகழ்காலத்தில் நடப்பது; ‘எதிர்பாராதே’ என்பது எதிர்கால பலன்களுக்காக  காத்திருப்பது. மனிதன் நிகழ்கால நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால நிகழ்வுகளுக்காக கவலைப்பட்டால், அவனது வளர்ச்சி தடைப்படும் என்பதனால் தான், ‘எதிர்பாராதே’ என்கிறது கீதை.

 “Be present in the present”.


                 44. வழித்தட மாற்றம்

சாலையில் செல்லும் வாகனத்தை ஓட்டுபவருக்கும், தண்டவாளத்தில் செல்லும் இரயிலை ஓட்டுபவருக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.

வாகன ஓட்டுனருக்கு வாகனத்தை சாலையின்  ஒரு புறத்திலிருந்து, மறுபுறத்திற்கும், ஒரு சாலையிலிருந்து வேறொரு சாலைக்கும் ஓட்டிச் செல்ல முடியும்.

ஆனால் இரயிலை ஒட்டுபவருக்கோ தடத்தை மாற்றும் அதிகாரம் இல்லை. அவரது கடமை  இரயிலை ஓட்டுவதோடு சரி; தடத்தை மாற்றும் பொறுப்பை வேறு ஒருவர் எடுத்துக் கொள்கிறார்.

ஆன்மிக வாழ்க்கையும் அதைப் போன்றதுதான். நமது குணத்தை மேம்படுத்த முயற்சி செய்தால் மட்டும் போதும். வர்ணப்பிரிவில் உயர்வது மிக இயல்பாக நம்மை அறியாமல் தானே நடைபெறும். அது எப்படி, எப்போது என்று ஏங்கித் தவிக்காத வரையில், நமது வாழ்க்கையில் குழப்பங்கள் இருக்காது.

இந்த உண்மையைத் தெரிந்துகொள்வது சுயமேம்பாட்டிற்கு மிகவும் நல்லது.



                45. கடலும், அலையும்

ஆழ்கடலில் படகு அமைதியாக நிற்கிறது. அதே படகு தரையை நெருங்கும் பொழுது அலைகள் அதிகம் இருப்பதால் தத்தளிக்கிறது.

மனிதனின்  நிலையும் அதுதான். சம்சார சாகரத்தில் சமுதாய அமைப்பு ஏற்படுத்தும் கொந்தளிப்புகள் கடற்கரையின் அருகில் உள்ள அலைகளைப் போன்று அதில் மாட்டிகொண்ட மனிதனைத் தத்தளிக்க வைக்கிறது. அதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.

ஆனால் தனது மனதை அவற்றிலிருந்து விலக்கி இறைவன்பால் செலுத்தினால், ஆட்டமில்லாத அமைதியான வாழ்க்கை அமையும். அப்படிச் செய்யமுடியுமா என்றால் முடியும் என்கிறார் பரமஹம்சர்.

எப்படி வீட்டுவேலையில் ஈடுபட்டிருக்கும் தாயின் மனம் எப்பொழுதும் தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையையே நினைத்துக் கொண்டிருக்கிறதோ, அதைப் போல எந்த வேளையில் ஈடுபட்டிருந்தாலும், நமது மனமும் எப்பொழுதும் இறைவனேயே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்கிறார்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் கொண்டுள்ள உயரிய குறிக்கோளில் மனதை செலுத்தலாம்.

“Be in the ocean; not on the waves”.


              46. மனமும், சிலையும்

ஓவியன் திரைச்சீலையில் ஓவியம் வரைகிறான். சிற்பியோ கல்லில் சிலையினை வடிக்கிறான். இரண்டுமே கலையின் வடிவங்கள்தான். இரண்டுமே நாம் பார்த்து இரசிப்பவைதான். இருந்தாலும் இரண்டிற்குமிடையே முக்கியமான ஒரு வித்தியாசம் உண்டு.    

ஓவியன் திரைச்சீலையில் தனக்குப் பிடித்தமான உருவத்தைக் கொண்டுவர, தேவையான வர்ணங்களை அதில் வரைகிறான்.

சிற்பியோ கல்லில் தனக்குப் பிடித்தமான உருவத்தைக் கொண்டுவர, தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வெளியே தள்ளுகிறான்.

மனிதனின்  செயல்பாடுகள் ஓவியனைப் போன்று இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக ஒரு சிற்பியைப் போன்று இருக்க வேண்டும்.

மனிதன் தான் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறானோ அதுபோல் ஆகமுடியும். அப்படி ஆவதற்கு அவன் செய்ய வேண்டியதெல்லாம் அதற்கு தேவையில்லாத விஷயங்களைத் தன்னிலிருந்து  நீக்குவதுதான்.


                           47. ஒப்பீடு

சுயமேம்பாட்டில் ஈடுபடும் எந்த மனிதனும் தன்னை அடுத்தவனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. நமக்கு ஒப்பீடு செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும் அவற்றை தவிர்ப்பது நல்லது.

அதோடு மட்டுமல்ல, தன்னைத்தானே ஒப்பீடு செய்வது கூட – கடந்த காலத்தில் எப்படி இருந்தோம், இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்பது போன்ற ஒப்பீடுகளும் – தவிர்க்கப்பட வேண்டியவை.

எந்த மலரும் மற்றொரு மலரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. மரம், செடி, கொடி என்று இயற்கையின் எந்த அம்சத்தை எடுத்துக் கொண்டாலும், அது ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்வதில்லை என்பதைக் காணலாம். தனது வளர்ச்சியின் பல்வேறு நிலைகளையும் அது ஒப்பீடு செய்வதில்லை.

ஒப்பீடு செய்வதால் என்னவாகும்?

ஒப்பீடு செய்யும் பொழுது மனதில் பல்வேறு சந்தேகங்கள் வரும். அதன் காரணமாக மனதில்  சஞ்சலம், வெறுப்பு, கோபம், சுயபச்சதாபம் போன்று பல்வேறு குழப்பங்கள் தோன்றும்.

மனதில் குழப்பங்கள் ஏற்பட்டால், சுயமேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபடுவது மனிதனுக்குக் கடினமான காரியமாகிவிடும்.


           48. தவறெனத் தெரிந்தால்

நாம் தவறு செய்யும் பொழுது அதனை முதன்முதலில் சுட்டிக்காட்டுவது யாராக இருக்கும்? முதன்முதலில் சுட்டிக்காட்டுவது நமது மனமாகத்தான் இருக்கும்.

தவறு என்பது பல நேரங்களில் செயலாக மட்டுமின்றி, விளைவாகவும் இருக்கும்.

நாம் செய்தது தவறு என்று மற்றவர்கள் சொல்லி, நமது மனமும்  அதனை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தால், நாமும் அதனை  ஒப்புக்கொள்கிறோம். இல்லையெனில் நாம் அதனை எளிதில் ஒப்புக்கொள்வதில்லை.

தவறு என்று தெரிந்தவுடன், நமது புத்தியின் மூலம் அதனை உறுதி செய்யவேண்டும். பின்னர் தவறுக்குக் காரணமாக இருந்த செயலைத் திரும்பவும் செய்யாதிருக்க உறுதி பூண வேண்டும். அந்த உறுதியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

உறுதிபூண்டு, பின் அதனைக் கடைப்பிடிக்கத் தவறினால், தவறான செயல் திரும்பத் திரும்ப செய்யப்பட்டு, அதுவே பழக்கமாக மாறி, முடிவில் ஆழ்மனதில் குணமாக பதிவாகிவிடுகிறது.

அதன்பின் நாம் செய்யும், தவறுகளை நம்மால் உணரமுடியாதது மட்டுமல்ல, மற்றவர்கள் சுட்டிக்காட்டும் பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.


                      49. துணை நலம்

சுய மேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபடும்பொழுது, பல நேரங்களில்  என்ன செய்வது என அறியாது தடுமாற நேரிடும். நாம் செல்லும் பாதை சரியானது தானா; அல்லது தவறான பாதையில் செல்கிறோமா என்பதே புரியாது.

அந்த நேரங்களில் நமக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருப்பது சான்றோர் இயற்றிய, காலத்தை வென்ற மறைநூல்களே. இருந்தாலும், பக்குவப்படாத மனமுடைய மனிதனால், சுட்டெரிக்கும் உண்மைகளைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் மறைநூல்களை சந்திக்கும் தைரியம் இருக்காது.

எனவேதான், மறைநூல்களில் புதைந்து கிடக்கும் உண்மைகளைத் தனக்குப் புரியுமாறு எடுத்துரைக்கும் பெரியோரைத் தேடிப் பார்த்து, தெளிந்து, தனக்குத் துணையாக கொள்ள வேண்டும்.

அப்படித் தேர்ந்து தெளிந்த பின், நமது கேள்விகளுக்கு அவர்கள் மூலமாக விடை தேடலாமே தவிர, அவர்களையே சோதிக்கும் நிலைக்கு நாம் போகக்கூடாது.

தக்க பெரியோரின் துணை கிடைத்துவிட்டால், அதுவே சுயமேம்பாட்டில் பாதி வெற்றிதான்.

                                                                                                                                                                                         
50. சுயமேம்பாட்டிற்கான உத்திகள்

மனம் தரும் நோய்க்கு மனமே மருந்து என்று பார்த்தோம். அதை மருந்தாக்குவது எப்படி என்று பார்க்கவேண்டாமா?

கீதை நெடுகிலும், சுயமேம்பாட்டிற்கான உத்திகள் பல இடங்களில் சொல்லபட்டிருக்கின்றன. அவை அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறிய வேண்டிய விஷயங்கள். சரியாகப் புரிந்து கொள்ளாதவரை, அவை புதிர்களாகவே இருக்கும்.

கீதை மனிதர்களை குணங்களின் அடிப்படையில் மூன்று விதமாக பிரிக்கிறது.

சத்துவ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் அடுப்பில் உள்ள புகையைப் போன்றது. ஊதினால் விலகிவிடும் தன்மையது. கறைகளைப் போக்குவது சுலபம் என்கிறது.

இரஜோ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் கண்ணாடியில் படிந்த தூசியைப் போன்றது. தண்ணீர் விட்டுக் கழுவி, துணியை வைத்து சுத்தமாகத் துடைக்க வேண்டும். கறைகளைப் போக்க  சிறிது முயற்சி தேவையென உணர்த்துகிறது.

தமோ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் சினையில் உள்ள கருவைப் போன்றது. கரு வளர, நல்ல போஷாக்கு கொடுத்து, நல்ல முறையில் கவனித்து வர வேண்டும். கறைகளைப்  போக்க கால அவகாசம் தேவையென்பதால், அசாத்திய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்கிறது.

மனிதர்களை குணங்களின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கும் கீதை, குண-கர்மாவின் அடிப்படையில் நான்கு விதமாகப் பிரிக்கிறது.

சத்துவ குணம் மிகுந்த பிராமணன் விகிதாச்சாரமுறையில் அந்த வர்ணத்தில் கீழ்நிலையில் இருந்தாலும், சுயமேம்பாடு என்பது அவனுக்கு மிக இயல்பாக நடைபெறும்.

சத்துவகுண தாக்கமுள்ள இரஜோகுணவாதியான க்ஷத்திரியன் தர்மநெறிகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பவன்; இருந்தாலும் வாழ்வியல் தத்துவங்கள் அவனுக்குப் புரியாத புதிராகத்தான் இருக்கும். அவை அவனுக்குப் புரிபட வேண்டுமென்றால், சுயமேம்பாட்டு உத்திகளில் அவன் கவனம் செல்லுத்த வேண்டும்.

சத்துவகுண தாக்கத்தை நிராகரிக்கத் துணியும் இரஜோகுவாதியான வைஷ்யன், மண்ணுலக வாழ்க்கைக்கு  முக்கியத்துவம் கொடுப்பவன். தர்ம நெறிகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியற்ற அவன், சுயமேம்பாட்டைப் பற்றி எப்பொழுது கவலைப்படுவான்? பூவுலகம் ஒரு புண்ணுலகம்  என்ற உண்மை அவனுக்கு என்று புரிகிறதோ, அன்றுதான் சுயமேம்பாட்டில் ஆர்வம் ஆரம்பமாகும்.

தமோகுணவாதியான சூத்திரன் சுயமேம்பாடு என்றால் என்னவென்றே தெரியாதவன். ஒருவேளை தக்க பெரியோரின் அருள் கிடைத்து, அவரது தலைமையில் நம்பிக்கை வைத்து அவர் காட்டிய வழியில் தனது பயணத்தைத் தொடர்ந்தால், அவனது சுயமேம்பாடு அவனே அறியாமல் நடந்தேறலாம்.



51. அந்தக்கரணங்கள்

நன்கு யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய சாதனையாக இருந்தாலும், அது முதலில் தோன்றுவது மனதில்தான். (Great things are done first in mind). மனிதன் எதை நினைக்கிறானோ, அதுவாகவே ஆகிறான். அது எப்படி சாத்தியமாகிறது என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

வரைபடத்தைப் பாருங்கள் –--                              
              



நாம் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும், சுயமேம்பாட்டிற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், “அந்தக் கரணங்களின்” செயல்பாட்டினை நன்கு தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

ஆன்மா:
     ஆன்மா என்பது மனிதனுக்கு உயிர் கொடுக்கும் இறைவனின் பிரதிநிதி. மனிதனின் எந்தச் செயலிலும் அது தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. எனவே, அதன் செயல்பாடு நமது கவனத்திற்கு தேவையில்லை.

தாக்கம்:
    மனிதனின் வாழ்நாள் முழுவதும் வெளியிலிருந்து பல்வேறு வகையான தாக்கங்கள் அவனை வந்து அடைந்து கொண்டேயிருக்கின்றன. அதே நேரத்தில் அவனுக்கு உள்ளேயும் பல்வேறு தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
     
அவன் உறங்கும் பொழுது, புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை அவன் அறிய முடியாது.  ஆனாலும், கனவுகளைத் தாண்டி ஆழ்ந்த நித்திரை ஏற்படாதவரை மனதளவில் தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

உடல்:  
        உடல் என்று சொல்லும்பொழுது, நாம் இங்கு குறிப்பிடுவது  ஐந்து புலன்களின் கருவிகளை மட்டுமே. வெளியிலிருந்து வரும் தாக்கங்களை ஐந்து புலன்களின் மூலமாக மனம் உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே, மனிதனால் அவற்றை உணர முடிகிறது. இல்லையென்றால், அந்தத் தாக்கங்கள் மனிதனை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
     
குறிப்பிட்ட பக்குவத்தைப் பெற்றுவிட்ட மனிதனுக்கோ, தாக்கங்கள் மனதை வந்து அடைந்தால் கூட, எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அது எப்படி என்று பின்னர் பார்ப்போம்.

மனம்:
      “அந்தக் கரணங்களின்” மிகவும் புதிரான பகுதி மனம் ஒன்றுதான். அது எப்படி செயல்படும் என்பது அதற்கே புரியாத ஒன்று.

வெளிவுலகிலிருந்து ஐந்து புலன்களின் கருவிகள்  மூலம்  வரும் தாக்கங்களை எதிர்கொள்வது புலன்களாக இருந்தாலும், அவற்றை உள்வாங்கிக் கொள்வது மனம் மட்டுமே. அந்த மனம் அதற்குத் தயாராக இல்லையென்றால் அவனது மனம், புத்தி இரண்டிலும்  எந்தப் பதிவும் ஏற்படுவதில்லை.

மீண்டும் வரைபடத்தைப் பாருங்கள். மனதை ஒட்டி  நிறைய கோடுகள்; தொடர்கோடுகள் மனிதன் அவனுக்குள் ஏற்படுத்தும்   பதிவுகளைக் குறிப்பது; இடைவெளி விட்டு செல்லும் கோடுகள், தான் பெரும் தாக்கத்திற்கு மனிதன் திரும்பச் செய்யும் தாக்கத்தைக் குறிப்பது.

புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை உள்வாங்கிக் கொள்ளும் மனம், அந்தத் தாக்கத்தை விரும்பினால், உணர்ச்சி பெட்டகத்தில் ஒரு பதிவினை ஏற்படுத்துகிறது. மனம் விரும்பும் பொழுது, இப்படி பல பதிவுகள் உணர்ச்சி பெட்டகத்தில் இடம் பெறுகின்றன. வெளி உலகிலிருந்து வரும் தாக்கங்களினால் மனம் பரபரப்பு அடையும் பொழுது, அந்த பதிவுகளே அவன் திருப்பித்தரும் தாக்கங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

புறவுலகிலிருந்து வரும் தாக்கத்தை உள்வாங்கி அதனைப் பரிசீலனை செய்யும் மனம், கூடவே அந்தத் தாக்கத்தைப் புத்திக்கும் அனுப்பிவைக்கிறது.

புத்தி:
   எந்தவொரு தாக்கமும் மனதை வந்தடைந்தால், மனம் பரபரப்பு அடையாத வரையில், அந்தத் தாக்கம் புத்தியையும் சென்று அடைகிறது. அந்தத் தாக்கம் தேவையென புத்தி நினைக்கும் பட்சத்தில், அறிவு பெட்டகத்தில் ஒரு பதிவு நிகழ்கிறது. அதுவே பின்னர் ஞானமாக உருவெடுக்கக் காரணமாகவும்  இருக்கிறது.

ஆழ்மனம்:  
      உணர்ச்சிப் பெட்டகத்தில் ஏற்படும் பதிவுகள், அதனை ஒட்டி அவனால் செய்யப்படும் காரியங்கள் நாளடைவில் பழக்கமாகி பின் அவனது  ஆழ்மனதில் பதிவாகி, அவனது “வாசனா”வாக (குணம்) மாறுகிறது. “வாசனா”வைப் பொறுத்தே ஒரு மனிதனின் சுபாவமும், மனோபாவமும் அமைகின்றன. .

ஆழ்மனதில் இருக்கும் குணமும், மனோபாவமும், ஒரு மனிதனுக்கு உள்ளிருந்தே தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் உள்ள பிரச்னை:

மனம் உணர்ச்சி வசப்படும் பொழுது, அவனது மனதிற்கும், புத்திக்கும்  உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது. அதனால், மனிதன் பரபரப்போடு  செயல்படும் பொழுது, அவனது அறிவு பயன்படாமல் போய்விடுகிறது.  

மனம் பரபரப்பு அடையாமல் இருந்தால், வெளியில் இருந்து வரும் தாக்கத்தை புத்திக்கு அனுப்பி, புத்தியின் கட்டளையைப் பெற்று, அதனைப் பொறுத்து வெளிவுலகில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உணர்ச்சி பெட்டகத்தில் உள்ள சுபாவம் விரைவில் மாறும் தன்மை உடையது; ஆனால், ஆழ்மனதில் பதிவான குணம் நீடித்து நிற்பது.

உணர்ச்சி பெட்டகத்திலிருந்து வரும் தாக்கமும், மனோபாவம் மூலமாக ஏற்படும்  தாக்கமும் ஒன்றுக்கொன்று மாறுபடும் பொழுது மனிதன் குழப்பம் அடைந்து விடுகிறான்.

குழப்பம் அடையும் நேரங்களில், மனிதன் புத்தி சொல்வதைக் கேட்டு நடந்தால், பிரச்னைகளைத்  தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், மனம் பரபரப்பு அடையும் பொழுது, மனம், புத்தி இரண்டிற்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறதே! அதற்கு என்ன செய்வது?           

மனிதனின் “வாசனா” பெட்டகம் நிர்மலமாக இருக்கும்பொழுது, அவன் குண, கர்மாவைக் கடந்த ஞானியாகி விடுகிறான். அவனால் ஆன்மாவின்  ஒளியை உணர முடிகிறது.

அது முடிகின்ற காரியமா என்றால் .நிச்சயம் முடிகின்ற காரியம்தான். மன உறுதியும் முயற்சியும் இருந்தால் எல்லோராலும் முடிகின்ற காரியம்தான்.



52. அந்தக்கரணங்களின் செயல்பாடு  -– பொதுவான விதிமுறைகள்

மனிதனின்  “அந்தக்கரணங்கள்” எப்படி செயல்படுகின்றன என்று பார்த்தோம்.

மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டுமெனில், அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் உள்ள  பொதுவான    விதிமுறைகளை அவன் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.  அவை – -


   ஒரு மனிதனின்  சுயமேம்பாட்டிற்கு, பிறர் வழிகாட்டலாமே தவிர, வேறு எந்த வகையிலும் உதவ முடியாது.

  மனிதனக்குள்ளும் அவனது மனம் ஒத்துழைக்காவிட்டால் எந்த மேம்பாடும் இருக்காது.
   
   புறவுலக தாக்கங்களை மனம் உள்வாங்கிக் கொள்ளாதவரை, அந்தத் தாக்கங்களினால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    மனம் மூலமாக உணர்ச்சி பெட்டகத்தில், “நான், எனது” என்று பற்று கொண்டு பதிவுகள் ஏற்படுவதால், சுபாவம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.

  புத்தியினால் ஏற்படும் பதிவுகள் பற்றற்றவை. அதனால், அந்தப் பதிவுகளினால் மனிதனுக்கு மனிதன் மாறுபாடு இருப்பதில்லை.

  மனம் பரபரப்பு  அடையும் பொழுது அவனது செயல்கள் யாவும் உணர்ச்சியின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த நேரத்தில் அவனது புத்தியே அவனுக்கு உதவ முடியாது. அப்படியானால் மற்றவர்களின் புத்தியினால் எப்படி உதவமுடியும்?

  அறிவுக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும், அறிவுக்குக் கட்டுப்படாமல் நடந்தாலும், எந்தவொரு செயலும்  முதலில் அரங்கேறும் இடம் மனம்தான்.

   மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் மேன்மையடைய, மேன்மையடைய அவனது வர்ணப்பிரிவும் மேன்மை அடைகிறது.

  வர்ணப்பிரிவில் கீழ்நிலையில் இருக்கும் போது, ஒரு மனிதனின் உணர்ச்சி பெட்டகத்திற்கும், அறிவு பெட்டகத்திற்கும் இடையில் உள்ள தடுப்புச் சுவர் மிகவும் கனமாக இருக்கிறது.

  அவன் வர்ணப்பிரிவில் மேலே செல்லச்செல்ல இடையில் உள்ள தடுப்புச் சுவர் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, முடிவில் காணாமல் போய்விடுகிறது.

   அந்த நிலையில், மனிதனின் உணர்ச்சி, அறிவுடன் இரண்டறக்  கலந்து விடுகிறது. அதன்பின், அவனிடம் இருப்பது உணர்ச்சிகள் அல்ல; உணர்வுகள் மட்டுமே.

  பற்றில்லாமல் செய்யும் காரியங்கள் புதிய பதிவினை ஏற்படுத்தாது. அத்துடன் “வாசனா”வில் ஏற்கனவே இருந்தப் பதிவுகளும் ஒவ்வொன்றாக அழிந்துவிடுகின்றன.

  பற்றை விட்டவனிடம் “நான், எனது” என்ற எண்ணம் மறைந்து போகிறது. “தன்னை” மறந்த மனிதன் ஞானியாகிறான். “மனம் இறக்க, ஞானி பிறக்கிறான்” என்பது இதனால்தான்.

  பற்றை விட்டவனை ‘வெப்பம், குளிர்; இன்பம், துன்பம்; வெற்றி, தோல்வி” என்று எதுவுமே பாதிப்பதில்லை. நல்வினை, தீவினை என்று எதுவுமே அவனுக்குக் கிடையாது.

     மனிதனின் வர்ணப்பிriவு நான்குதான் என்றாலும், ஒரே வர்ணத்திலும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் குணத்திற்கும், மனோபாவத்திற்கும் ஏற்ப அவற்றின் விகிதாச்சாரம் மாறுபடும்.

  ஒரு மனிதனின் வர்ணம் அவனது குணம், மனோபாவம் இவற்றின் அடிப்படையிலேயே அமைகிறது. ஆனாலும், உணர்ச்சி பெட்டகத்தில் அன்றாடம் ஏற்படும் பதிவுகளைப் பொறுத்து மற்ற வர்ணங்களுக்குரிய தாக்கங்களும் ஏற்படலாம். அவை பழக்கத்துக்கு வந்து, “வாசனா” பெட்டகத்தில் பதிவாகாதவரை பிற வர்ணத்தாக்கங்கள் நிரந்தரமற்றவையே.

   மனிதனின் உயர்விற்கு மனம், புத்தி இரண்டுமே முக்கியம். என்றாலும், அவை இருக்குமிடம் உடலில் அல்லவா? எனவே மனிதன், சுய மேம்பாட்டிற்காண முயற்சியில் ஈடுபடுவதற்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம்.

  ஆன்மா உடலுக்குள்தான் இருக்கிறது; ஆனால் தனித்து இருக்கிறது. உடலில் உள்ள இயக்கத்திற்கு அது ஆதாரமாக இருந்தாலும், எதனுடனும் அதற்கு பந்தம் கிடையாது. மனிதனின் எந்த இயக்கமும் அதனைப் பாதிப்பதில்லை; அதுவும் மனிதனின் எந்த இயக்கத்தையும் பாதிக்காது




53. நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு

“நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு”    இவற்றை சுய மேம்பாட்டிற்கு எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்பதற்கு முன், இவை எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

நோக்கம்:
          நாம் எந்தக் காரியத்தை செய்தாலும், அதற்கு ஒரு காரணம் இருக்குமல்லவா? அதைத்தான் நோக்கம் (Motive) என்று சொல்கிறோம். நோக்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால், காரியம் ஆற்றும் எண்ணம் மனிதனுக்குத் தோன்றுவதில்லை. அம்மாதிரி காரியம் ஆற்றும் எண்ணத்தை தோற்றுவிப்பதில் “உணர்ச்சி” பெட்டகத்திற்கும், “வாசனா”வின் காரணமாக எழும் மனோபாவத்திற்கும் பெரும்பங்கு உண்டு.

செயல்:
     செயலில் இரண்டு வகை உண்டு. ஒன்று பிறர் சொல்லி நாம் செய்வது, மற்றொன்று நமக்கு நாமே ஆணையிட்டுக்கொண்டு செய்வது. சுயமேம்பாட்டில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இரண்டாவதை மட்டுமே.

விளைவு:
     செயல் நிகழ்காலம் என்றால், நோக்கம் என்பது இறந்த காலம், விளைவு என்பது எதிர்காலம்.

    நோக்கம் என்பது நமக்குள் நாம் செய்யும் பதிவுகளின் சங்கமத்தின் காரணமாக வருவது. செயல் என்பது அவற்றின் எதிரொலி. இரண்டுமே நம் கையில் உள்ளது. ஆனால் நாம் செய்யும் செயல்களின் விளைவு எப்படி இருக்கும் என நம்மால்  உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், அது நாம் விரும்பிய படியும் இருக்கலாம்; வேறு வகையிலும் இருக்கலாம். ஒரே செயலுக்குப் பல வகையான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

பின்விளைவு:
    நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் அதற்கு ஒரு விளைவு இருக்கும். நாம் செய்யும் செயலால் ஏற்படும் விளைவின் காரணமாக வரும் பின்விளைவு நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தினால், அதனை ஆராய வேண்டியது நமது கடமை.

நோக்கம், செயல், விளைவு மூன்றிலும் காலவித்தியாசம் இருப்பதால், விளைவு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே ஊகிக்கவும் முடியாது.
மூன்றிலும் முறையான இணக்கம் இருந்தால், நாம் எண்ணியபடியே எல்லாம் நடக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

விளைவு நம் எண்ணத்திற்கு மாறாக இருந்து, அதனால் ஏற்படும் பின்விளைவு நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால், நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  (ஒருவேளை  ‘பின்விளைவுஎந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால், அந்த மனிதன் சுயமேம்பாட்டை மறந்துவிட வேண்டியதுதான்).

நமது செயலால் வெளிப்படும் விளைவு தவறாக இருந்தால், அதற்குக் காரணம் நமது நோக்கமா அல்லது செயலா என்று பார்க்கவேண்டும்.

நோக்கம் சரியாக இருந்து, செயல் தவறாக இருந்தால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. வாழ்க்கை என்பதே ‘அனுபவதாரா’தானே! தவறான செயலால் நேர்ந்த அனுபவத்தின் காரணமாக, அடுத்தமுறை சரியாகச் செயல்படலாம். தவறு வந்துவிடுமே என்று பயந்து செயல்படாமல் இருந்தால்,  சுயமேம்பாடு தடைப்பட்டு விடும்.

நோக்கமே தவறெனத் தெரிந்தால், அங்குதான் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். தவறான நோக்கம் உருவாகக் காரணமாக இருந்த பதிவின் ஆணிவேரைக் கண்டுபிடித்து, அதனை உடனடியாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் சுயமேம்பாடு   தடைப்படுவது மட்டுமல்ல, அதில் பின்னடைவும் ஏற்படும்.

சுயமேம்பட்டு உத்தியில், தவறான செயலை சரிசெய்வதை விட, தவறான நோக்கத்தை  சரிசெய்வது தான் பிரதானமாக இருக்கிறது.

நமது தவறைப் புரிந்து கொண்டபின், நாம் செய்யவேண்டியவை

அகத்தாய்வு:
     எப்பொழுது நம் செயலால் வரும் பின்விளைவு நமக்குள் ஒரு    தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அப்பொழுது நமக்குள்ளேயே ஆராயவேண்டும். நமக்குள் நாம் ஏற்படுத்தியிருந்த பதிவுகளை நன்கு ஆராயவேண்டும். மிகவும் நிதானமாக, பதட்டமில்லாமல் ஆராயவேண்டும். அந்த வேலையை மனம் தானே செய்யாமல் புத்திக்குக் கொடுத்துவிட வேண்டும்.

கண்டுபிடித்தல்
     புத்தி நிதானமாக  ஆராய்ச்சி (அகத்தாய்வு) செய்து எந்தப் பதிவில் தவறு நேர்ந்துள்ளது என்று கண்டுபிடிக்கவேண்டும். அந்தத் தவறான பதிவுக்குக் காரணமாக இருந்தது, புறவுலகப் பொருளா அல்லது அதனுடன் நாம் வைத்திருந்த தொடர்பா   என்பதனையும் கண்டுபிடிக்க வேண்டும்.

நிராகரிப்பு:
            புறவுலகப் பொருளோ அல்லது அத்துடன் ஆன நம்முடைய  தொடர்போ  எதுவானாலும் சரி, தவறான பதிவிற்குக் காரணமாக இருந்தது எதுவெனக் கண்டுபிடித்தவுடன், உடனே அதனை நிராகரித்து விட வேண்டும். ஒத்தி போட்டுவிட்டால், நிராகரிக்கும் எண்ணம் மறைந்து போகும் வாய்ப்பு உண்டு.

புதிய சேர்க்கை:
     நாம் நிராகரித்த ஒன்று எதுவாக இருந்தாலும் அதனை அனுபவிக்க அல்லது புதுப்பிக்க ஒரு நேரம் ஒதுக்கியிருப்போம். அந்த நேரத்தை, கண்டிப்பாக ஒரு பயனுள்ள அனுபவத்திற்காக ஒதுக்கவேண்டும். எந்தக் காரணத்தை  கொண்டும் மறக்கக்கூடாத விஷயம் இது.



54. இன்பமும், அமைதியும்

மனித வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துவிடவேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், உண்மையான இன்பம் எதில் இருக்கிறது?

ஐம்புலன்களின் உதவியுடன், புறவுலகப் பொருட்களோடு இன்பம் கொள்வது ஒருவகை. ஆனால், எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும், அதனுடன் நமக்குள்ள தொடர்பு கூடக் கூட, அதனை அனுபவிக்கும்  பொழுது ஏற்படும் இன்பத்தின் அளவு குறைந்துகொண்டே போகிறது. நாளடைவில் இன்பம் அளிப்பதற்குப் பதிலாக, அதுவே நமக்குப் பலவித சங்கடங்களையும் உண்டு பண்ணுகிறது.

இன்னொரு வகை இன்பம் உண்டு. மற்றவர்களுக்காக நாம் சில காரியங்களைச் செய்யும் பொழுது, அதனால் அவர்கள் பயனடைந்து மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து,  நாம் இன்பம் கொள்வது.

முதலில் சொன்ன இன்பம் சிறிது நேரமே நீடித்து நிற்பதோடு, மீண்டும், மீண்டும் இன்பம் துய்ப்பதற்கான காரியத்தில் ஈடுபடுத்தி, முடிவில் வேதனைக்கும் வழிவகுக்கும்.

இரண்டாவது வகை இன்பமோ, நம்மை பரவசத்தில் ஆழ்த்தி, நீண்ட காலம் நம் நினைவில் நிற்கும். ஆனாலும் இவ்வகை இன்பங்கள் நமக்குள் ஒருவகை இறுமாப்பை வளர்க்கவும் வாய்ப்புகள் உண்டு.

இவை இரண்டிலும் சேராத மூன்றாவது வகை இன்பம் ஒன்று உண்டு. அது நிலையான இன்பத்தைத் தருவதோடு, பூவுலக வாழ்க்கையையே சொர்க்கமாக மாற்றிவிடும். அது என்ன?

இன்பத்திற்கு எதிர்ப்பதமாக எதனைச் சொல்கிறோம்? துன்பம் என்றுதானே சொல்கிறோம். இதனையே ‘இன்பம் = துன்பம் இல்லை’ என்றும் சொல்லலாம் அல்லவா? துன்பம் இல்லாத நிலையில் மனம் எப்படி இருக்கும்? அமைதியாகத்தானே இருக்கும்? ஆக,

           இன்பம்                         =    துன்பம் இல்லை

           துன்பம் இல்லை               =    மன அமைதி

                      ஃ மன அமைதி     =    இன்பம்

எவ்வளவு எளிதாக இருக்கிறது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இது முடியுமா?

முடியும், ஒரே ஒரு பேருண்மையை உணர்ந்தால் - - அது   

ஆசை கொண்ட மனம்  -  அது
அவதிகளின் களம்;

அமைதி கண்ட மனம்  -  அது
ஆனந்தத்தின் வசம்.


அனுபவித்தால் மட்டுமே தெரியும் உண்மை இது. சொல்லப்போனால், சுயமேம்பாட்டின் உச்சக்கட்ட குறிக்கோளே இதுதான்.

No comments:

Post a Comment