மழலையின் கீதை .. பாகம் 2
பாகம் II … குணங்கள்
பொருளடக்கம்
22. மூன்று குணங்கள்
23. குணங்கள் – விளக்கம் 1
24. குணங்கள் – விளக்கம் 2
25. குணங்கள் – விளக்கம் 3
26. குணங்கள் – விளக்கம் 4
27. புறச்செயலும், அகச்செயலும்
…………………………………………………….
22. மூன்று குணங்கள்
மனிதன் தொடர்ந்து ஒரு பொருளைப் பற்றி நினைக்கும் பொழுது, அவனுக்கு
அதன்மேல் பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையை வளர்க்கிறது.
ஆசையை நிறைவேற்ற அவன் செயல்படுகிறான். தொடர்ந்து செய்யும் செயல்கள் பழக்கமாக மாறி, இறுதியில் அவனது குணத்தை நிர்ணயிக்கின்றன.
மனிதனின் குணங்கள் மூன்று வகைப்படும். அவை சத்துவ குணம், இரஜோ குணம்
மற்றும் தமோ குணம்.
இம் மூன்று குணங்களையும் ஓரளவு சரியாகப் புரிந்து கொள்ள உதவியாக சில
விளக்கங்கள். அவற்றில் சில பாமரத்தனமாக இருந்தாலும், குணங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ள அவை
உதவலாம்.
23. குணங்கள் – விளக்கம் 1
எல்லாம் தெரிந்திருந்தாலும் எதுவுமே தெரியாதவர்போல் இருப்பது, பணிவு (humility), ஆடம்பரத்தை
விரும்பாதது, தனித்து இருக்க விரும்புவது, புகழை வெறுப்பது, அகத்தாய்வில் அதிக
ஈடுபாடு கொள்வது முதலானவை ‘சத்துவ’ குணத்தின் அடையாளம்.
எதையும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம், தன்னால்தான் முடியும் என்ற
தன்முனைப்பு, தான் செய்யும் காரியங்களை எண்ணி பூரிப்பு, ஆரவாரத்தில் ஆர்வம்,
புகழில் ஆசை, மற்றவரை அடக்கி ஆள நினைப்பது முதலானவை ‘இரஜோ’ குணத்தின் அடையாளம்.
சுயமாக சிந்தித்து செயல்பட தெரியாதது, மிகுதியான சோம்பல், பிறரின்
ஆளுமைக்கு கட்டுப்பட்டு அடங்கி வாழ்வது
முதலானவை ‘தமோ’ குணத்தின் அடையாளம்.
இத்தகைய குணங்கள்
உடையவர்களை முறையே சான்றோர், ஆன்றோர்,
மற்றவர் என்று இங்கு குறிப்பிடுகிறோம்.
24. குணங்கள் – விளக்கம் 2
அந்தக் குடும்பத்தில் வயதான பெரியவர் (வயது 70), குடும்பத்தின் தலைவர் அவர். பெரியவரின் மகன் (வயது 40), பெரியவரின் பேரன் (வயது 5). அன்றாட வாழ்க்கையில் இவர்களின்
நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு கற்பனை.
பெரியவர் வாழ்க்கையில் நிறையப் போராடி, மிகுந்த அனுபவங்களைப் பெற்று,
பொறுப்புகளிலிருந்து விலகி, விவேகமாக, விருப்பு வெறுப்பின்றி, தெளிவாக சிந்திக்கத் தெரிந்திருக்கிறார். குடும்ப
வாழ்க்கையில் மகன் சந்திக்கும் போராட்டங்களைப் பார்க்கிறார்; ஆனாலும் எதிலும்
தலையிடுவதில்லை. தன்னால் சமாளிக்க முடியாமல், மகன் தன்னை
நாடிவரும் பொழுது, அவன் கடைப்பிடிக்க வேண்டிய வழியை காட்டி உதவுகிறார்.
மற்றபடி அவரது அன்றாட வாழ்க்கையில் எந்தவித சலனமும் இருப்பதில்லை.
அது ‘சத்துவ குணம்’; கொதித்து அடங்கிய பாலைப் போன்றது.
மகனுக்கோ வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நிலை.
இன்பம், துன்பம்; வெற்றி, தோல்வி என மாறி, மாறி ஏற்படும் நிகழ்வுகளால், ஆனந்தப்
பட்டு, அல்லல்பட்டு வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.
அது ‘இரஜோ குணம்’; கொதித்துக்கொண்டிருக்கும் பாலைப் போன்றது.
பேரனுக்கோ தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று எதுவும்
தெரியாது. விபரம் புரியாமலே அவனுக்கு சிரிப்பும் வரும், அழுகையும் வரும்.
அது ‘தமோ குணம்’; கொதிக்க வைக்கப்படாத பாலைப் போன்றது.
25. குணங்கள் – விளக்கம் 3
அந்தப் புலையனுக்கு!
சின்ன சந்தேகம் - -
“ஏன் சாமி, நான் தொட்டது உங்களையா அல்லது உங்க உடம்பையா?”
கேட்ட ஞானிக்கோ, புதிதாக ஒரு ஞானம் பிறக்கிறது.
கடவுளைக் காண வேண்டுமா, ‘நான் யார்’ என்று உன்னையே கேட்டுப்பார்
என்கிறார் இரமண மகரிஷி. ஒரு சிலரே விடை காண முயற்சி செய்கிறார்கள். அவர்களாலும்
விடை காண முடியாமல் தடுப்பது எது?
அந்த “நானை” இந்த ‘நானால்’ ஏன் அறிய முடியவில்லை? இந்த ‘நான்’
என்ற அகந்தை, அந்த “நானை” மறந்து விட்டதுதான் காரணம்.
“அகந்தை அழியும் இடம், ஆண்டவனை அறியும் இடம்”
புரியத் தெரிந்தவனுக்கும், அறியத் தெரியவில்லை! ஏன்?
பெருங்காய டப்பாவில் உள்ள அனைத்து காயத்தையும் எடுத்துவிட்டாலும் கூட,
டப்பாவில் உள்ள வாசனை எளிதில் போகாது என்கிறார் பரமஹம்சர்.
அகந்தையும் காயத்தைப்
போன்றதுதானோ?
அடங்கி
இருப்பது சத்துவ குணம்;
ஆடித் திளைப்பது
இரஜோ குணம்;
உறங்கிக்
கிடப்பது தமோ குணம்.
26. குணங்கள் – விளக்கம் 4
சான்றோர், ஆன்றோர் இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம்?
சான்றோர் அகத்தாய்வில் அதிகம் ஈடுபடுவதால் புறவுலக வாழ்க்கையில்
ஈடுபாடு காட்டுவதில்லை. அதையும் மீறி தவிர்க்க முடியாமல் புறவுலகில் செயல்பட
நேரிட்டால், இருள் சேர்க்கும் இருவினைகளிலும் பற்றின்றி செயல்படுவார்கள். எடுத்த
பதவியை அலங்கரிக்கும் அவர்கள், பதவியின் காரணமாக தம்மை அலங்கரிப்பதில்லை.
ஆன்றோர் பதவியை மட்டுமல்ல, பதவியின் பெயரால் தன்னையும் அலங்கரிக்க
விரும்புவர்; ஒவ்வொரு நிலையிலும் தன்னை வெளிப்படுத்தத் துடிப்பவர்.
அதனால்தான், ஆன்றோரைவிட சான்றோர் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
திருவள்ளுவரின் குறள்கள் சான்றோரைப் பெருமைப்படுத்தி சொல்வதை பல இடங்களில்
காணலாம்.
சத்துவ குணம் – எல்லாம்
தெரிந்திருந்தும் புறவுலகச்
செயல்களில் ஆர்வம் இல்லாதிருத்தல்.
இரஜோகுணம்– புறவுலகில் தன்முனைப்புடன் செயல்படுவது.
தமோகுணம் - புறவுலகில் சுயமாக
செயல்படத் தெரியாதது.
27. புறச்செயலும், அகச்செயலும்
ஈசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட அந்த அரசனுக்கு ஆசை.
அதை செயலிலும் காட்டினான். கூடவே மனதிற்குள் ஓர் கர்வம், தன்னால்தான் கட்ட
முடிகிறது என்று.
அதே ஈசனுக்காக ஆண்டியும் ஒரு கோவில் கட்டினான்; யாரும்
அறியாமல், மனதிற்குள்ளாகவே.
இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்க,
இறைவனோ பூசலார் நாயனார் என்ற அந்த ஆண்டிக்கே முன்னுரிமை தருகிறார்.
உடலை விற்றுப்
பிழைக்கும் பெண் அவள்; இருந்தாலும் தன்
செயலுக்கு வருந்தி இறைவனை நோக்கி மனம் நோக அழுது புலம்புகிறாள். அந்தப்
பெண்ணின் வீட்டிற்கு எதிர்புறம் வசிக்கும் துறவியோ, தனது மதச் சடங்குகளைத் தவறாமல்
செய்து வந்தாலும், எதிர்வீட்டுப் பெண்ணின் தொழிலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்; அத்துடன் அவளிடம் அவள் எவ்வளவு
பாபங்கள் செய்கிறாள் என்று எடுத்துச் சொல்லி, நல்லபடி நடக்க அறிவுரையும் வழங்குகிறார்.
இருவரும் ஒரே நேரத்தில் இறக்க, பெண் சொர்க்கத்திற்கும், துறவி நரகத்திற்கும் செல்ல
நேரிடுகிறது. பரமஹம்சரின் உபமான கதையிது.
இதற்கான காரணங்கள் யாவை?
தொடர்ந்து செய்யப்படும் செயல்கள், பழக்கமாக, பின்னர் குணமாக
மாறுகிறது. இருந்தாலும் புறச்செயல்கள் நிகழும் முன்பாகவே, அகத்தளவில் அதிகமாக அவை
நடந்தேறிவிடுகின்றன.
ஆகவே, மனிதனின் குணத்தை நிர்ணயிப்பது அவனுடைய புறச்செயல்கள் அல்ல; அகத்தளத்தில் தொடர்ந்து நிகழும் அகச்செயல்களே.
No comments:
Post a Comment