திருவாசகம் 51.1
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே"
.. திருவாசகம்
51 அச்சோப் பதிகம்..பாடல் 1
இந்தப் பாடல் பலவிதமான அறநெறிகளை உள்ளடக்கி வைத்துள்ளது.
அவற்றையெல்லாம் சரியாக உள்வாங்கிக் கொண்டால், நமது வாழ்க்கைப் பயணத்தை அமைதியாக, எந்தவித பரபரப்பும் இன்றி, இனிமையாக வழிநடத்த முடியும்.
எனவே மிகவும் நிதானமாகப் பயணிப்போம்.
...............................................................
பின்வரும் கருத்துக்கள்
எனது பார்வையை அடிப்படையாகக் கொண்டவை. இருந்தாலும் கூடியவரை எளிமையாக சொல்ல முயற்சிக்கிறேன்.
...............................................................
முதலில் 'சிவம், சிவன், சீவன்' இவற்றிற்கிடேயே
உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வோம்.
'சிவம்' என்பது உருவமற்ற, வெளிப்படாத இறை சக்தி (unmanifest). பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள, அழியாத, எல்லையற்ற, காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட உன்னத உண்மை அல்லது தூய உணர்வுநிலை; இதுவே உலகின் தோற்றம், நிலைபேறு மற்றும் ஒடுக்கத்திற்கு அடிப்படையான ஒரே மெய்ப்பொருள்.
'சிவன்' என்பது பிரபஞ்சத்தில் வெளிப்பட்ட இறை சக்தி (manifest).
ஒடுக்கத்திற்கான காலம் வரும்போது, இந்த 'வெளிப்பட்ட இறை சக்தி' (சிவன்) 'சிவத்தோடு' ஒடுங்கி விடும்.
தமிழில் இறைவன், கடவுள் என இரண்டு பெயர்கள் உண்டு.
இறைவன் என்பது நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் உருவமற்ற இறை சக்தியைக் குறிக்கும். 'சிவம்', 'பரமபிதா', 'அல்லா', 'பிரம்மம்', 'பரம்பொருள்' என பல பெயர்களில் அழைத்தாலும், இருப்பதென்னவோ வெளிப்படாத (unmanifest) ஒரே சக்திதான் அது.
கடவுள் என்பது பிரபஞ்சத்தில் வெளிப்பட்ட (manifest) இறைசக்தி; சிவன் உட்பட பல்வேறு உருவங்களில் அதனை தெய்வமாக ஏற்று வழிபடுகிறோம். இதனைத்தான் "ஏகன் அநேகன்" என்று சொல்கிறார்கள்.
'சீவன்' என்பது சிவனின் ஒரு பகுதியே (பூரணத்திலிருந்து பூரணம்); எல்லா உயிரினங்களிலும் அது ஒரு உறைக்குள் அடைபட்டு இருக்கிறது. (சீவனை 'ஜீவாத்மா' என்றும் சிவனை 'பரமாத்மா' என்றும் சொல்வதுண்டு).
இந்த உறையிலிருந்து விடுபட்டு 'சீவன்' வெளியேறுவதைத்தான் 'வீடுபேறு' (மோட்சம்/முக்தி) என்று அழைக்கிறார்கள்.
இனி, பாடலின் முதல் இரண்டு வரிகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை"
*************************************
பொருள்:-
"வீடு பேறு அடையும் வழியை (முத்திநெறி) அறியாத
அறிவற்றவர்களுடன் (மூர்க்கர்) சேர்ந்து
தவறான வழியில் (நெறியல்லா நெறி) சென்று கொண்டிருந்த என்னை"
****************************************
மேலே சொன்ன வரிகளுக்காகக் கொடுக்கப்பட்ட பொருள் சரியெனத் தோன்றினாலும்,
"முத்திநெறி" என்ற வார்த்தையை மூன்றாகப் பதம் பிரித்துப் பார்க்க வேண்டும்:-
1. முத்தி
2. நெறி
3. முத்திநெறி
1. முத்தி .. இது ஜீவாத்மா பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது.
2. நெறி .. ஒவ்வொரு மனிதனும் அவனது குடும்பத்திலும், குடும்பத்துக்கு வெளியே சமூகத்திலும் நடந்து கொள்ளும் விதம் தார்மீகமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதைத்தான், வாழ்வியல் நெறி என்று சொல்கிறோம்.
3. முத்திநெறி .. நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளைப் போன்று,
முத்தி நிலையை அடையவும் நமக்கு சில நெறிகள் சொல்லப் பட்டிருக்கின்றன.
அவைகளை முறையாக, செவ்வனே கடைப்பிடித்தால் மட்டுமே
பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை கிடைக்கும்.
அவைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை"
******************************************
"முத்திநெறி" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?
சமயம் சார்ந்த மற்றும் சமயம் சாராத பல வகையான நூல்களும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளைப் பற்றி நிறையப் போதிக்கின்றன.
அவற்றை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்:-
1. சமூகம் சார்ந்த அறநெறிகள். இவை வெளி உலகில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்.
2. பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டு அறநெறிகள். இவை உள்முகப் பயணத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக் காட்டுபவை.
இதைத்தான் "முத்திநெறி" என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
முதல் இரண்டு வரிகளில் மாணிக்கவாசகர் என்ன குறிப்பிடுகிறார்?
"முத்திநெறி என்றால் என்ன என்று அறியாத அறிவற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு நானும் 'சரியற்ற' வாழ்க்கையைக் கடைப்பிடித்து வந்தேன். அப்படி இருந்த என்னை...."
என்று பாடுகிறார்.
"காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார்..." என திருஞானசம்பந்தர் பாடியதைப் போன்று, மாணிக்கவாசகரும் மனம் உருகிப் பலப்பல பாடல்களைப் பாடியுள்ளார்.
இருப்பினும் "நானும் 'சரியற்ற' வாழ்க்கையைக் கடைப்பிடித்து வந்தேன்" என்று சொன்னது ஏன்?
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை"
*****************************************
இறைவனைப் போற்றி, புகழ்ந்து, வியந்து பாடியவர் எதற்காக நானும் 'சரியற்ற' வாழ்க்கையைக் கடைப்பிடித்தேன் என்று கூறுகிறார்?
எந்தவொரு பக்தனும் இரண்டு தளங்களில் தனது பக்தியைக் காட்ட வேண்டி உள்ளது:-
1. இறைவனைப் போற்றி, புகழ்ந்து பாடுவது; மற்றும் தனது வேண்டுதல்களைக் கூறுவது.
2. முக்திநிலையை அடைய, செய்ய வேண்டிய நெறிகளை அறிந்து அதன்படி செயல் படுவது.
ஒருவேளை, ஆரம்பக் கட்டத்தில் அதைப்பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தாரா அல்லது நாம் அந்த நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக இப்படி சொல்கிறாரா? நமக்குத் தெரியாது.
சரி, நமக்கான முத்திநெறி எது என எப்படி தெரிந்து கொள்வது?
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை"
*****************************************
வெளி உலக வாழ்க்கையைப் பொறுத்த வரை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான குறிக்கோள் இருக்கும்.
ஆனால், உள் உலக வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், எல்லாருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்க வேண்டும். அது-- 'பிறப்பு-இறப்பு சூழலில் இருந்து எப்படி வெளியேறுவது?' என்பதுதான்.
அதற்கு ஒரே வழி-- கருவிலிருக்கும் குழந்தையைச் சூழ்ந்திருக்கும சவ்வுப் படலம் போன்று, ஜீவாத்மாவை சூழ்ந்திருக்கும் மாயத் திரை விலக வேண்டும்.
அதற்குத் தடையாக இருப்பது எது என்று அறிந்து அதனை நீக்க நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.
இதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல வழிகளை நமது முன்னோர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அத்தகைய வழிகளைத்தான் "முத்திநெறி" என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
அவற்றில், நமது சுபாவத்திற்கு ஏற்புடைய வழியை நாம் தேர்ந்தெடுத்து அதன்படி
நடக்க வேண்டும்.
இனி, ஒவ்வொரு வழியாக ஆராய்வோம்.
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை"
***************************************
ஒரு மனிதன் 'முக்திநிலை' அடைவதற்கு நிறைய வழிகள் உள்ளன.
அவற்றில் தனது சுபாவத்திற்குரிய வழியைத் தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
சில முக்கியமான வழிகளை அறிந்து கொள்வோம்.
பகவான் கிருஷ்ணர் மனிதர்களை இரண்டு வழிகளில் பயணம் செய்பவர்கள் எனக் குறிப்பிடுகிறார்:-
1. வெளி உலகில் பயணிப்பவர்கள் (Extroverts).
2. அக உலகில் பயணம் செய்ய விரும்புகிறவர்கள்
(Introverts).
அகவுலகில் பயணிப்பவர்கள் 'நான் யார்', 'ஞானம் என்றால் என்ன?' போன்ற கேள்விகளுக்கு விடை காண முயற்சி செய்வார்கள்.
அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய (ஞான மார்க்கதிற்கான) முத்தி நெறிகள்:-
1. ஷ்ரவணம் (Sravana - கேட்டல்): குரு அல்லது சாஸ்திரங்கள் மூலம் ஆன்ம ஞானத்தைக் கேட்பது மற்றும் புரிந்துகொள்வது.
2. மனனம் (Manana - சிந்தித்தல்): கேட்ட விஷயங்களை ஆழமாகச் சிந்தித்து, சந்தேகங்களை நீக்கி, உண்மையை உறுதி செய்தல்.
3. நிதித்யாசனம் (Nididhyasana - தியானித்தல்): அறிந்த உண்மையை நடைமுறை வாழ்க்கையில் அனுபவமாக்கி, அதில் நிலைத்திருத்தல்.
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை"
****************************************
வெளி உலகில் பயணிப்பவர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்:-
1. பிறர் நலனிலும் அக்கறை உள்ளவர்கள்.
2. தான், தன் குடும்பம் என வாழ்பவர்கள்.
பிறர் நலனில் அக்கறை உள்ளவர்கள், 'கர்ம' மார்க்கத்தை கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். "கர்மாவை செய்; பலனை எதிர்பார்க்காதே" என்று கிருஷ்ணன் கூறுகிறார். ஆனால், இதை மட்டுமே முத்தி நெறியாக எடுத்துக் கொள்ள முடியாது.
கர்ம மார்க்கத்தில் ஈடுபடும் பொழுது பல விதமான அனுபவங்களை சந்திக்க நேரிடும். அவை மனதில் நிறையக் கேள்விகளை எழுப்பும். அவற்றிக்கான நியாயமான விடைகளைக் கண்டுபிடிக்கும்வரை மனம் நிம்மதி அடையாது.
இது 'செயல்-அகத்தாய்வு-
விசாரம்' (action, withdrawal, contemplation) என ஒரு சுழற்சியாகத் தொடரும். இந்த சுழற்சிதான் 'கர்ம' மார்க்கத்தில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முத்தி நெறி ஆகும்.
இந்த முத்தி நெறியை முறையாகக் கடைப்பிடித்து வந்தால், இவர்கள் முடிவில் அகவுலகில் (ஞான மார்க்கத்தில்) பிரவேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை"
*****************************************
தான், தன் குடும்பம் என்று வாழ்பவர்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடவுளை வழிபடுவதுடன் சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை தவறாமல் கடைப்பிடிப்பார்கள்.
ஆனாலும், இவைகளை 'முத்தி நெறி' என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவை மட்டுமே முக்தி நிலையை அடைய உதவாது.
இவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எனவே இவர்களால் அமைதியாக இருக்க முடியாது.
இவர்களுக்கான 'முத்தி நெறி' சரணாகதி மட்டும்தான். ரிஷி பதஞ்சலி இதனை "ஈஸ்வர பிரணிதானா" (Ishvara Pranidhana) -- அதாவது "இறைவனிடம் சரணடைதல்" என்று கூறுகிறார்.
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை"
**************************************
எல்லாராலும் பயிற்சி செய்யக்கூடிய மார்க்கம் 'தியான மார்க்கம்'.
மற்ற மார்க்கங்களில் பயணம் செய்பவர்கள் மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இதனைப் பயன்படுத்தலாம்.
இதில் மொத்தம் எட்டு அங்கங்கள் உண்டு. அவற்றில் முதல் இரண்டு அங்கங்கள் 'முத்தி நெறி' சம்பந்தமானவை.
'இயமம், நியமம்' என்று அழைக்கப்படும் இவற்றில்,
இயமம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய தீய பழக்கங்கள் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடுகள்; நியமம் என்பது பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் மற்றும் ஆன்மீக பயிற்சிகளைக் குறிக்கின்றன.
சுருக்கமாக சொல்வதாக இருந்தால், குறள் 466-ல் திருவள்ளுவர் சொல்வதைப் பின்பற்றினால் போதும்.
அந்தக் குறள் ...
"செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க செய்யாமை யானும் கெடும்".
செய்யக்கூடாத செயல்களைச் செய்வதனாலும், செய்யத்தக்க நற்செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும், ஒருவன் வாழ்வு கெடும் (அழியும்) என்று இக்குறள் கூறுகிறது.
ஆக, இந்த இரண்டு நெறிகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், தியான மார்க்கம் முக்தி நிலையை அடைய எந்த விதத்திலும் உதவி செய்யாது.
இனி, அடுத்த இரண்டு வரிகளைப் பார்ப்போம்.
"பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்".
(பக்தி நெறி அறிவித்து பழைய வினைகள் மாறும் வண்ணம்)
********************************************
பாடலில் "பத்திநெறி அறிவித்து" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
விளக்கவுரை எழுதியவர்கள் "பக்தி வழியை அறிவித்து" என்று எழுதியுள்ளார்கள்.
'பக்தி வழி', 'பக்தி நெறி'... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மதத்தில் 'சடங்கு' 'சம்பிரதாயம்' மற்றும் 'ஆன்மீகம்' இருப்பது போன்று, பக்தியிலும் 'சடங்கு', 'சம்பிரதாயம்' மற்றும் 'பக்தி நெறி' மூன்றும் உள்ளன.
சடங்கு, சம்பிரதாயம் ஆகிய இரண்டும் இந்துக்களுக்கு மட்டுமே உரியது. பக்தி நெறி அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியது.
எப்படி மதத்தில் கூறப்பட்டுள்ள ஆன்மீகக் கருத்துக்கள அனைத்து மக்களுக்கும் பொதுவானதோ, அதைப்போன்று பக்திவழியில் உள்ள பக்தி நெறி வலியுறுத்தும் 'சரணாகதியும்' அனைத்து மக்களுக்கும் பொதுவானது
(Surrender to the alter... Bible)
பக்தி நெறி (சரணாகதி) எப்படி பழைய வினைகளை எப்படி நீக்கும்?
நம்மைச் சுற்றி நடக்கும் பல நிகழ்வுகள் நமக்குள் நினைவலைகளாகத் தங்கி விடுகின்றன. அவை அவ்வப்போது நம்மை தொந்திரவு செய்யும் வாய்ப்புகள் உண்டு.
இறவனிடம் சரணாகதி அடைந்து விட்டால், நமது எண்ணம் முழுவதும் இறைவனிடமே தங்கி விடுகிறது. அதன் காரணமாக பழைய நினைவுகள் அனைத்தும் வலுவிழந்து விடுகின்றன.
இனி கடைசி வரிகள்!?
"சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன்..."
பொருள்:-
இறைவன் (அத்தன்) எனது சித்த மலங்களை (மன அழுக்கு) அறுத்து, சிவமாகவே (சிவம் ஆக்கி) மாற்றி, என்னைத் தன் அடிமையாக ஏற்றுக்கொண்டார்.
****************************************
நமது வாழ்க்கை இயங்குவதற்கு காரணமாக இருக்கும் உயிர் சக்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாயத்திரை (bliss sheath) இரண்டும் சேர்ந்து சித்தம் என அழைக்கப் படுகிறது.
இந்த உயிர்சக்தியைத்தான் ஜீவாத்மா (soul) என்று அழைக்கிறோம்.
"The kingdom of heaven is within you" என்று சொல்வதும் இந்த உயிர்சக்தியைக் குறித்துத் தான்.
உயிர்சக்தியை மூடியுள்ள திரை விலகியதும், அது உடலின்று வெளியேறி சிவத்தோடு (இறைவனோடு) கலந்து விடும். ஆனால், அதற்குத் தடையாக இருப்பது திரையின் மேல் படிந்துள்ள பதிவுகள். அதனை 'சித்த மலம்' என்கிறார் மாணிக்கவாசகர்.
எதற்காக 'மலம்' என்று குறிப்பிடுகிறார்?
"சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன்..."
******************************************
மாணிக்கவாசகர் 'சித்த மலம்' என்று எதைச் சொல்லுகிறார்?
வீட்டில் தேவையற்ற பொருள் கீழே கிடந்தால் அதை 'குப்பை' என்கிறோம்; சுவற்றில் படர்ந்திருந்தால் 'ஒட்டடை' என்கிறோம்; கண்ணாடியில் படிந்திருந்தால் 'தூசி' என்கிறோம். 'சித்த மலம்' எதைக் குறிக்கிறது?
நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமான பின்பு, அதன் சாரம் இரத்தத்தோடு கலந்தவிடுகிறது. மிச்சமுள்ள சக்கையை உடல் கழிவுப் பொருளாக வெளியேற்றி விடுகிறது.
உடலில் தங்கியுள்ள கழிவை மலம் என்று சொல்வதைப்போல், மனம் மூலமாக சித்தத்தின் மீது தங்கும் தேவையற்ற கழிவுகளை மாணிக்கவாசகர் 'சித்த மலம்' என்கிறார்.
சித்தத்தின் மீது தங்கும் கழிவுகளைப் பொதுவாக மூன்று விதமாகப் பிரிக்கலாம்:-
1. பற்றுதல் காரணமாக ஏற்படும் பதிவுகள்.
2. உணர்ச்சியின் காரணமாக ஏற்படும் பதிவுகள்.
3. கனவுகள்/கற்பனைகள்
காரணமாக ஏற்படும் பதிவுகள்.
இவை மூன்றும் நீரில் படர்ந்திருக்கும் பாசியைப் போன்று, சித்தத்தின் மீது படர்ந்து விடுகின்றன.
இவைகளுக்கும் சித்தத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றாலும்,
இவை சித்தத்தின் உள்ளிருக்கும் 'ஜீவாத்மாவை' பரமாத்வுடன் இணைய விடாமல் தடுக்கும் தடைக் கற்களாக மாறி விடுகின்றன.
"சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன்..."
********************************************
சித்தத்தின் மீது படர்ந்து விடும் பதிவுகளை நீக்கத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த என்னை
"பத்திநெறி அறிவித்து பழைய வினைகள் நீங்கும் வண்ணம்" என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.
உரை எழுதியவர்கள் "பக்தி வழி அறிவித்து" என்று சொல்கிறார்கள். அப்படியானால் 'பக்திவழி' மற்றும் 'பக்திநெறி' இரண்டும் ஒன்றுதானா?
பக்தி மார்க்கம் சொல்லும் பல வழிகளில் ஒன்றாக 'பக்திநெறியும்' இருக்கலாம். என்றாலும் பக்திவழியில் செல்பவர்கள் அனைவரும் பக்திநெறியைக் கடைப்பிடிப்பவர்கள் என்று சொல்ல முடியாது.
சுருக்கமாகச் சொன்னால், பக்திவழி காட்டும் அறநெறி "சரணாகதி". இதனை இறைவனிடம் சரணடைதல் (ஈஸ்வர ப்ரணிதானா) என்று திருமூலர் கூறுகிறார்.
நாம் எவ்வளவுதான் கடவுளை வழிபட்டாலும், கடவுளிடம் 'சரணாகதி' அடையாதவரை சித்தத்தின் மீது பரவியிருக்கும் தடைக்கற்கள் மறையப் போவதில்லை.
எனவே, கடவுள் வழிபாட்டில் நாம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறி 'சரணாகதி' என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.
பின் குறிப்பு :-
'சரணாகதி' பற்றி ஒரு சிறிய விளக்கம். சரணாகதி பற்றிய தெளிவு இன்னும் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.
...............................................................
'சரணாகதி' என்பது முதலில் பயிற்சியாகவும் முடிவில் அது இயல்பாகவும் இருக்க வேண்டும்.
****************************************
(விளக்கவுரை ChatGPT)
சரணாகதி ...
முதலில் பயிற்சி; பின்னர் இயல்பு.
ஆரம்பத்தில் அது முயற்சியுடன் கூடிய பயிற்சி--
“நான் விடுவேன்” என்ற தீர்மானம்.
முடிவில் அது இயல்பு—
“நான் இல்லை” என்ற அமைதி.
பிடித்துக் கொள்வது பழக்கம்; விடுவது பயிற்சி;
விடப்பட்டே இருப்பது இயல்பு.
பயிற்சி தொடர்ந்தால்,
இயல்பு தானாக மலரும்.
அங்கே சரணாகதி செய்யப்படுவதில்லை—
அது வாழப்படுகிறது.