Thursday, 6 October 2022

தியானம்


தியானம்

பதிவு 1

"சிவலிங்க தியானம்" என்ற தலைப்பில் முன்னர் ஒரு தொடர் பதிவுகளை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக மீண்டும் சில பதிவுகளை வெளியிட விரும்புகிறேன்.

இந்தப் பதிவுகளுக்குக் காரணமாக இருப்பவை 'அகத்தாய்வு, ஊகம் மற்றும் பயிற்சி' மட்டுமே. எனது ஊகங்கள் சரியா, தவறா என எனக்குத் தெரியாது. அவை சரியென்று சொல்ல எனக்கு எந்த அருகதையும் கிடையாது. தவிர, தியானம் செய்வதற்கு எந்த ஆசிரியரிடமும் நான் பயிற்சியும் பெற்றதில்லை.

இருப்பினும் 'தியானம் செய்வது எப்படி' என்பது நன்கு புரிந்து கொண்டதனால், எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சில பதிவுகள் புரிந்து கொள்வதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் கடினமாகத் தோன்றலாம். புரிந்து, ஏற்றுக் கொண்டவர்கள் இந்த முறையில் பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறேன்.

                   (தொடரும்)


தியானம்

பதிவு 2

மேலே தொடருமுன், "சிவலிங்க தியானம்" தொடரில் சொல்லியதைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

நமது உடலில் பஞ்ச பூதங்கள் சம்பந்தப்பட்ட சுரப்பிகள் ஐந்தும் தண்டு வடத்தை ஒட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ளன. அவற்றைக் கையாளும் சூட்சம "சக்கரங்களும்" தண்டு வடத்திலேயே அமைந்துள்ளன.

அவைகளின் விபரம்:-
நிலம் .. சுரப்பியின் பெயர் - விதைப்பை .. சக்கரத்தின் பெயர் - மூலாதாரம்.

நீர் .. சுரப்பியின் பெயர் - சிறுநீரகம் .. சக்கரத்தின் பெயர் - சுவாதிட்டானம்.

நெருப்பு .. சுரப்பியின் பெயர் - கணையம் .. சக்கரத்தின் பெயர் - மணிப்பூரகம்.

காற்று .. சுரப்பியின் பெயர் -
தைமஸ் .. சக்கரத்தின் பெயர் - அனாகதம்.

ஆகாயம் .. சுரப்பியின் பெயர் - தைராய்டு .. சக்கரத்தின் பெயர் - விசுத்தி

இந்த சுரப்பிகளையும், சக்கரங்களையும் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் சுரப்பி மற்றும் சக்கரத்தின் பெயர்கள் முறையே பிட்யூட்டரி, ஆக்ஞா என அழைக்கப் படுகின்றன.

                   (தொடரும்)


தியானம்

பதிவு 3

பிட்யூட்டரி சுரப்பி தண்டு வடம் மூளையைப் சந்திக்கும் இடத்தில் உள்ளது. ஆனால், அந்த சுரப்பியுடன் தொடர்பு உடைய "ஆக்ஞா" சக்கரம் மட்டும் நெற்றிக்கு வெளியே புருவ மத்தியில் உள்ளது என ஏன் சொல்கிறார்கள் எனத் தோன்றியது. ஒருவேளை பிட்யூட்டரி சுரப்பி இருக்குமிடத்தில் "ஆக்ஞா" சக்கரத்தை நினைவு படுத்துவது கடினம் என நினைத்து "புருவ மத்தியில்" கவனம் வைத்து தியானம் செய்யச் சொன்னார்களோ என்றும் தோன்றியது.

இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட எண்ணி அகத்தாய்வில் ஈடுபட்ட பொழுது, "சிவலிங்கம்" பற்றி புதிய கருத்து ஒன்று தோன்றியது. சிவலிங்கத்தின் தோற்றம் குறித்து பல்வேறு விளக்கங்களைப் பலரும் அளித்துள்ளனர். அவற்றைப் பற்றி சிந்தித்த போது, ஒரு உண்மை புரிந்தது.

புராண வரலாற்றின்படி தாட்சாயினியின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு அதன் தொண்டைப் பகுதி விழுந்த இடம் "அமர்நாத்" குகைக் கோயில் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அங்குதான் வருடத்திற்கு ஒருமுறை பனி லிங்கம் உருவாகிப் பின்னர் மறைந்து விடும் அல்லது கரைந்துவிடும். அந்தப் பனி லிங்கத்தைப் பார்க்கும்போது கவிழ்த்து வைக்கப்பட்ட 'சோதனைக் குழாய்' போன்று தோற்றமளிக்கும்.

இவற்றை உள்வாங்கி சிந்தனை செய்தபொழுது, "சிவலிங்கம்" என்பது பிட்யூட்டரி சுரப்பி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டும் ஒரு குறியீடு மட்டுமே எனத் தோன்றியது.

                   (தொடரும்)


தியானம்

பதிவு 4

ஐந்து சக்கரங்களும் தண்டு வடத்தை ஒட்டி இருக்கும் போது, ஆறாவது சக்கரம் மட்டும் நெற்றியின் வெளிப்புறம் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது.

தவிர, விசுத்தி சக்கரம் ஆகாயம் சம்பந்தப்பட்டது என்பதால், உடல் முழுவதும் ஆகாயம் (வெற்றிடம்) பரவி உள்ளது என்றாலும் அதை உணர்ந்து அறியக்கூடிய இடம் தொண்டையின் அடிப்பகுதியில் இருந்து 'உள்நாக்கின்' பின்புறமாக மேலே சென்று மூளையின் அடிப்பாகத்தைத் தொட்டு, பின் நாசிக் துவாரத்தை நோக்கி நகர்ந்து செல்லும் பகுதி மட்டும்தான் என்பதும் புரிந்தது. மூளையின் அடிப்பாகத்தை இந்த வெற்றிடம் தொடும் இடத்தில்தான் 'பிட்யூட்டரி' சுரப்பி உள்ளது. எனவே இங்குதானே அதற்கான "ஆக்ஞா" சக்கரம் இருக்க வேண்டும் என்றும் தோன்றியது.

எனது எண்ணத்திற்கு வலு சேர்ப்பது போல் சித்தர்களின் பாடல்களும் இருப்பதை அறிந்தேன்.

".. அண்ணாக்கி னுள்ளே அகண்ட வெளிகாட்டி.."
.. திருமந்திரம் (599)

"உச்சிக்குக் கீழது உண்ணாக்கு மேலது"  
.. திருமந்திரம் (1780)

"உச்சிக்குப் கீழடியோ.." என அழுகுணிச் சித்தர் பாடுகிறார்.

                        (தொடரும்)


தியானம்

பதிவு 5

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்குத் தொடர்புடைய சக்கரங்கள் இருக்குமிடத்தை எளிதாக ஊகிக்க முடியும். ஆனால், "ஆக்ஞா" சக்கரம் என்று வரும்பொழுது அது இருக்கும் இடத்திற்கு நமது மனதைக் கொண்டு செல்வது கொஞ்சம் சிரமமான காரியம்தான். இங்குதான் "சிவலிங்கம்" என்னும் குறியீடு நமக்கு உதவியாக உள்ளது.

சிவலிங்கத்தில் மொத்தம் நான்கு பாகங்கள். அவை - -
1. பெரிய வடிவில் உள்ள வட்டமான அடித்தட்டு.
2. அடித்தட்டின் மேலே உள்ள தண்டுப் பகுதி.
3. தண்டின் மேலே உள்ள சிறிய வட்டம்.
4. சிறிய வட்டத்தின் நடுப்பகுதியில் பொருந்தி நிற்கும் லிங்கம்.

இப்பொழுது, சிவலிங்கத்தின் அடித்தட்டோடு உங்களின் தோள்பட்டையைப் பொருத்திக் கொள்ளுங்கள்.

அப்படியானால், அடித்தட்டின் மேலே உள்ள தண்டு என்பது உங்களது கழுத்து; தண்டின் மேலே உள்ள சிறிய தட்டைப் போன்றது உங்கள் தாடைப் பகுதி; லிங்கம் என்பது தொண்டையின் அடிப்பகுதியில் இருந்து உள் நாக்கின் பின்புறம் வழியாக மேலே சென்று மூளையின் அடிப்பாகத்தில் முட்டும் வெற்றிடம்தான். 

                     (தொடரும்)


தியானம்

பதிவு 6

சிவலிங்கத்தை மனதில் எண்ணிக்கொண்டு, தோள்பட்டையில் ஆரம்பித்து, பின்பு கழுத்து, தாடை, தொண்டையின் பின்புறமுள்ள வெற்றிடம், அதன் உச்சி என ஒன்றன்பின் ஒன்றாக மனதைக் கொண்டுசென்று இறுதியாக பிட்யூட்டரி சுரப்பியின் அருகில் "ஆக்ஞா" சக்கரம் உள்ளதாக எண்ணி அதை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் அது சரியாகவேப் பட்டது. ஆனால், ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 'வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய' கதையாக, தியானத்திலிருந்து விடுபட்டு மனம் ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டது.

எனது தியான முயற்சியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, மனதில் இரண்டு கேள்விகள் எழுந்தன. 
அவை - -
1. ஆக்ஞா சக்கரம் பிட்யூட்டரி சுரப்பி உள்ள இடத்தில்தான் உள்ளதா?
2. எனது தியானப் பயிற்சியில் ஏதேனும் தவறு உள்ளதா?

தியானப் பயிற்சியில் தான் ஏதோவொரு தவறு இருப்பதாக எண்ணினேன். ஏனெனில், பிட்யூட்டரி சுரப்பி உள்ள இடத்தில்தான் ஆக்ஞா சக்கரமும் இருக்கும் என்ற எனது எண்ணத்தில் எந்தவித மாற்றமுமில்லை.

அப்படியானால், தியானப் பயிற்சியில் என்ன தவறு நேர்ந்தது?

பழையபடி அகத்தாய்வில் இறங்கிவிட்டேன்.

                     (தொடரும்)


தியானம்

பதிவு 7

இரண்டு வழிகளில் அகத்தாய்வு செய்ய முடியும். ஒன்று "தர்க்கம்"; மற்றொன்று "விசாரம்".

"தர்க்கம்" என்பது ஒருவர் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைக் குறிக்கும். "விசாரம்" என்பது சுயமாக சிந்தித்து விடை காண்பதைக் குறிக்கும்.

மறைநூல்கள் சொல்லும் கருத்துக்குப் பலரும் பலவிதமான விளக்கங்கள் கொடுப்பதுண்டு. அவற்றில் எது சரியென முடிவு செய்வதில் குழப்பம் வரும் பொழுது, நமது நண்பர்கள், நமக்குத் தெரிந்த அறிஞர்கள் போன்றவர்களுடன் விவாதம் செய்து ஒரு முடிவுக்கு வருவோம். இந்த முறை "தர்க்கம்" என அழைக்கப்படும்.

"விசாரத்தில்" மற்றவர்களின் விளக்கங்களை விட்டுவிட்டு, நமக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடுகிறோம். நமது முயற்சியைப் பொறுத்து, நமக்குள்ளேயே விடையைக் காண முடியும்.

நாம் அறிந்துகொண்ட விடையை மற்றவர்களிடம் சொல்லலாம்; அதில் தவறில்லை. ஆனால், அவர்களும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.

                (தொடரும்)


தியானம்

பதிவு 8

முதலில் கண்டபடி திரியும் மனதை ஓரிடத்தில் நிலைநிறுத்தப் பழக்க வேண்டும். அதை "தாரணை" என்கிறார்கள்.

எந்த ஒன்றில் மனதை நிலை நிறுத்தினோமோ, அந்த ஒன்றில் தொடர்ந்து மனதின் கவனத்தை செலுத்தினால் அதுதான் "தியானம்" எனப் பலரும் சொல்வதுண்டு‌. ஆனால், எந்த ஒன்றின் மீது கவனம் செலுத்தினாலும், மனம் தியான நிலையிலிருந்து நழுவி விடுவதைக் காண முடிகிறது.

அதனால்தான் எந்தப் பொருளையும் நினைக்காமல், தியானம் செய்கிறோம் என்ற உணர்வும் இல்லாமல் இருப்பதுவே உண்மையான தியானம் என்கிறார்கள்.

ஆனால், எதையும் நினைக்காமல் தியானம் செய்வது எப்படி என்பது ஒரு புதிராகத் தெரிந்தது.

                   (தொடரும்)


தியானம்

பதிவு 9

எதையும் நினைக்காமல் தியானம் செய்வது எப்படி என்பது தெரிந்த பின்பும், மனம் நழுவி வெளியே சென்று விடுவதை நிறுத்த முடியவில்லை.

என்னதான் பிரச்சினை என அறிந்து கொள்வதற்காக, கற்றவற்றை அசைபோட ஆரம்பித்தேன். பரீட்சை எழுதப்போகும் மாணவன் தான் படித்த எல்லாப் பாடங்களையும் மீண்டும் திருப்பிப் பார்ப்பதுபோல், நானும் ஏற்கனவே கற்றவற்றை மீண்டும் அசைபோட்டேன். மனதில் நிறைய கேள்விகள் எழுந்தன.

அவை - -
1. மூச்சை உள்ளே இழுக்கும்போது 'ஆக்ஸிஜன்' உள்ளே வருகிறது. ஏன் அதனை பிராண வாயு என்று சொல்கிறோம்?
2. பிராண வாயு என்பதற்கும், பிராணன் என்ற சொல்லுக்கும் என்ன சம்பந்தம்?
3. பிராணன் என்றால் என்ன?
4. பிராணன் என்ற சொல்லுக்கும், பிராண சக்தி என்ற சொல்லுக்கும் இடையே என்ன வேறுபாடு?
5. காற்று, வாயு ‌‌.. இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?
6. நாம் விரும்பாவிட்டாலும் மனம் வெளியே சென்றுவிடுகிறதே! அது எதனால்?

                   (தொடரும்)


தியானம்

பதிவு 10

(இனி வரும் பதிவுகளில் நான் ஊகித்து அறிந்தவைகளும் இடம் பெறும். எனவே உங்களுக்கும் அவை சரியெனத் தோன்றினால் மட்டும், அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆனால், எனது தியானப் பயிற்சி உண்மையானது. அதில் என்ன நடந்தது எனப் பின்னர் விவரிக்கிறேன்.)

மனிதன் "விசார" நிலையில் ஆழ்ந்து விட்டால், அவன் புறவுலக நாட்டத்திலிருந்து விடுபட்டு அகவுலகில் சிந்திக்கத் தொடங்கிவிட்டான் எனலாம். 

இருந்தாலும் எவ்வளவுதான் சிந்தித்தாலும் விடை ஏதும் கிடைக்காதபோது அமைதியாக, மௌனமாக இருந்துவிட வேண்டும். பொறுமையுடன் காத்திருந்தால், விடையை எப்படித் தேடுவது என்று என்றாவது ஒருநாள் தெரிந்து விடும். அதுதான் எனக்கும் நேர்ந்தது.

மனித உடலில் உள்ள ஜீவாத்மாவைப் பல பெயர்களில் குறிப்பிடுவதுண்டு. அதன் மீது ஒன்றன் மேல் ஒன்றாக 
ஐந்து உறைகள் உள்ளன என்றும் சொல்வார்கள். அவை - -
1. உணவு உறை
2. காற்று உறை
3. மன உறை
4. புத்தி உறை
5. ஆனந்தமய உறை

இவைகளில் காற்று உறை உடலுக்கும், மனதிற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது.

இந்தக் காற்றின் பெயரை "பிராணன்" என அழைக்கிறார்கள். இது உடலில் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என ஐந்து பிரிவுகளாகச் செயல்படுகிறது. 
(இதனைப் பத்து பிரிவுகளாகவும் சொல்வதுண்டு)

இந்தப் பிராணனைப் பற்றிதான் நாம் அதிகமாக ஆராயப் போகிறோம்.

                     (தொடரும்)


தியானம்

பதிவு 11

"பிராண" வாயு புறவுலகப் பொருட்களை மனதோடு இணைப்பதற்கு உதவுகிறது.
ஐம்புலன் கருவிகள் (ஐம்பொறிகள்) மூலமாக எது மனிதனை வந்தடைந்தாலும், அது மனதினை அடைவதற்குக் காரணமாக இருப்பது "பிராண" வாயுதான். (It is a faculty of perception)

அத்துடன் மனம் செயல்படுவதற்கும், "பிராண" வாயுவின் இயக்கம் தேவையாக உள்ளது.

பிராணாயாமப் பயிற்சியின் போது 'கும்பகம்' செய்தால், 'கும்பகம்' எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ அவ்வளவு நேரம் மனம் செயலற்று போய்விடும்.

அப்படியானால் மூச்சின் இயக்கம் நிற்கும்போது மட்டும்தான் பிராணனின் இயக்கம் நின்றுவிடுமா?

மூச்சின் இயக்கம் நடைபெறும் போதும், பிராணனின் இயக்கத்தை நிறுத்த முடியாதா?

தியானம் நன்கு நடைபெற, மனதில் எந்த அசைவும் இருக்கக் கூடாது என்கிறார்கள். மனதில் எந்த அசைவும் இருக்கக்கூடாது என்றால், பிராணனின் இயக்கம் நிற்க வேண்டும்.

மூச்சோடு இணைந்து இயங்கும் "பிராணனை" எப்படி தடுத்து நிறுத்துவது?

                   (தொடரும்)


தியானம்

பதிவு 12

"பிராணன்" என்றால் என்ன, அதன் இயக்கம் எப்படி இருக்கும், மூச்சு வந்து போவதை பிராணவாயு என்று சொல்கிறார்களே; அப்படியானால் மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கும்போது பிராண சக்தியும், ஆக்ஸிஜனும் சேர்ந்தே வருகிறதா; அதேபோல் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது பிராண சக்தியும் கரியமிலவாயுவுடன் சேர்ந்தே வெளியேறுகிறதா எனப் பல சந்தேகங்கள் மனதில் எழுந்தன.

இது சம்பந்தமாக பலரும் பலவித விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் எதை சரியென்று ஏற்றுக் கொள்வது?

மேலும், 'கும்பகம்' செய்யும்போது பிராணன் அசைவற்று நின்றுவிடும் என்கிறார்கள். பிராணன் அசைவின்றி இருந்தால் மனமும் செயலற்று விடும். அது தியானம் செய்வதற்கு ஏற்ற ஒன்றுதான். ஆனால், 'பிராணாயாமம்' செய்யும்போது 'கும்பகம்' ஒரு சில விநாடிகளே நீடிக்கும். பின், அது எப்படி தியானத்திற்குப் பயன்படும்?

'பிராணனைப்' பற்றி திருமூலர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

                      (தொடரும்)


தியானம்

பதிவு 13

"ஏற்றி யிறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை.."
(பிராணனை இழுத்துப் பூரித்து உள்ளே கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர் இல்லை)
.. திருமந்திரம் 571

"திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகிலர் ஆரும்"
(பிராண வாயு ஒடுங்கும் நிலையை எவரும் அறியவில்லை)
.. திருமந்திரம் 720

பிராணனைப் பிடித்து ஒடுக்கும் வழியை எவரும் அறியவில்லை என்கிறார் திருமூலர். கூடவே, பிரணானைப் பிடித்து மனதோடு ஒடுங்கச் செய்ய முடியும் என்றும் சொல்கிறார்.

 "பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப் பிராணன் இருக்கின்.‌"
(பிராணன் வெளியில் செல்லாது மனதோடு அடங்கி இருக்கின்).. திருமந்திரம் 567

"வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்.."
(பிராணனை இழுத்துத் தன்வசப் படுத்தி அடக்கியிருந்தால்..)
.. திருமந்திரம் 569

"ஈர்ஆறு கால்கொண்டு எழுந்த புரவியைப் பேராமல் கட்டிப் பெரிது உண்ண வல்லீரேல்.." 
(புரவியை அதாவது பிராணனை வெளியே விடாமல் கட்டிவைத்தால்..)
.. திருமந்திரம் 722

பிராணனைப் பிடித்து உள்ளே மனதோடு கட்டிப்போடுவது எப்படி என்று எவரும் அறியவில்லை; பிராணனை மனதோடு கட்டிப்போடும் முறையை அறிந்து கொண்டால், உள்ளிருக்கும் பேரொளியைக் காணலாம் எனக் கூறுகிறார் திருமூலர்.

                      (தொடரும்)


தியானம்

பதிவு 14

திருமந்திரம் 571-ல் "..காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை.." என்று சொன்ன திருமூலர் தொடர்ந்து சொல்கிறார்..
"..காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே".
(‌.. அங்ஙனம் காற்றைக் கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர் இயமனைக் கடக்கும் குறிக்கோள் பெற்றவர் ஆவார்)

காற்றைப் பிடிக்குங் கணக்கறிவார் இல்லை என்று சொன்ன திருமூலர் கூடவே காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்தவர் இயமனை உதைக்கும் வலிமையைப் பெறுவர் என்கிறார்.

இங்கு காற்று என்பது 'பிராணனைக்' குறிக்கிறது. இதனைக் கொஞ்சம் நிதானமாக சிந்திக்க வேண்டும்.

'பிராணன்' என்பது ஒரு வாயு. இது மனித உடலில் பத்து பிரிவாகப் பிரிந்து வேலை செய்கிறது .. ஒரு அரசாங்கத்தில் பல துறைகளுக்கான அமைச்சர்கள் இருப்பதைப்போல. 

பிராணன் பத்து விதமான பெயர்களுடன் இயங்கினாலும், பிராணன் மட்டுமே மனிதனுக்கு வெளியே உள்ள பிரபஞ்ச சக்தியோடு இணைந்து செயல் படும் தன்மை உடையதாக இருக்கிறது. அது மனதிற்கும் புறவுலகப் பொருட்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது.

அதாவது வீட்டில் உள்ள மின் இணைப்பு, வீட்டிலுள்ள மின் சாதனங்களுக்கும் வெளியிலிருந்து வரும் மின்சாரத்திற்கும் இடையே ஒரு இணைப்புக் கருவியாகச் செயல்படுவதைப் போல, பிராணன் பிரபஞ்ச சக்திக்கும் மனிதனின் மனதிற்கும் இடையே ஒரு இணைப்புக் கருவியாகச் செயல்படுகிறது.

அந்தக் கருவியைத்தான் அதாவது பிராணனைத்தான் பிரபஞ்ச சக்தியோடு இணைக்க விடாமல் பிடித்து வைத்தால் கூற்றுவனையும் உதைக்கலாம் என்கிறார் திருமூலர்.

                     (தொடரும்)

தியானம்

பதிவு 15

"காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்" என்று சொன்ன திருமூலர், காற்றை வயப்படுத்தி 'கும்பகம்' செய்வது எப்படி என்பதற்கும் குறிப்புகள் தருகிறார்.

"மன்மனம் எங்குஉண்டு வாயுவும் அங்குஉண்டு; மன்மனம் எங்குஇல்லை வாயுவும் அங்குஇல்லை.."
(மனம் எங்கு உள்ளதோ, வாயுவும் அதாவது பிராணனும் அங்கு இருக்கும்; மனம் எங்கு இல்லையோ, வாயுவும் அங்கு இருக்காது) 
.. திருமந்திரம் 620

"ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்குஇருக்கில் அடங்கி அடங்கிடும் வாயு.."
(உள்ளம் ஒடுங்கி ஒருமைநிலை அடைந்து நின்றால், பிராணனும் அங்குக் கட்டுப்பட்டு நின்று விடும்) .. திருமந்திரம் 666

'ஒடுங்கி' என்றால் மனம் அகவுலகில் பிரவேசித்து விட்டது என அர்த்தம். இதைத்தான் 'பிரத்யாஹாரம்' என ரிஷி பதஞ்சலி குறிப்பிடுகிறார்.

ஒடுங்கிய மனம் அங்கேயே இருக்க வேண்டும் என்கிறார் திருமூலர். அப்படி இருந்தால், 'பிராணனும்' உள்ளுக்குள் ஒடுங்கி அடங்கிவிடும் என்கிறார். 

அந்த நிலையில், பிராணன் வெளியுலகில் உள்ள பிரபஞ்ச சக்தியுடன் இணைப்பில் இருக்காது; அதன் காரணமாக மனமும் வெளியில் சென்று சஞ்சரிக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிடும்.

                      (தொடரும்)


தியானம்

பதிவு 16

தியானம் செய்ய வேண்டுமானால் மூன்று நிபந்தனைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது:-
1. 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்குமிடத்தில் 'ஆக்ஞா' சக்கரம் இருப்பதாக எண்ணி, அந்த இடத்தில் நமது மனதை நிலைநிறுத்தி தியானிக்க வேண்டும்.
2. தியானம் செய்யும்போது எந்தப் பொருளையும் நினைக்கக்கூடாது.
3. தியானம் செய்யும் நேரங்களில் நமது 'பிராணன்'
மனதோடு சேர்ந்து ஆக்ஞா சக்கரத்தில் ஒடுங்கி இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை அறிந்தவுடன் நமது மனதில் நிறையக் கேள்விகள் எழும். எனவே அவற்றைப் பற்றிய உண்மைகளை முதலில் தெரிந்து கொள்வோம். பின்னர் தியானம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ஏனெனில், குழப்பம் நிறைந்த மனதுடன் தியானம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் நம்மால் எந்தவித வெற்றியையும் காண முடியாது.

                    (தொடரும்)


தியானம்

பதிவு 17

மூன்று நிபந்தனைகளைப் படித்தவுடன் நமது மனதில் பல கேள்விகள் வந்துவிடும்‌.
அவற்றிற்கான விளக்கங்களைக் கொடுத்துவிட்டு, பின் 'தியானப் பயிற்சி' பற்றி பார்ப்போம்.

மனதில் எழும் முக்கியமான கேள்விகள்- -
1. வால்மீகி, துருவன் போன்றோர் பறவுலகில் இருந்துகொண்டு ஏதோவொன்றை மனதில் நினைத்துத்தானே தவம் செய்தார்கள்; அதன்மூலம் அவர்கள் விரும்பியதை அடைந்தார்களே! அது எப்படி?
2. அதேநேரம் பெரும்பாலான
பயிற்சி நிலையங்களில், ஒரு பொருளில் தொடர்ந்து கவனத்தைச் செலுத்துங்கள்; அதுதான் தியானம் என்கிறார்கள். ஆனால், அதில் கவனம் சிதறி விடுகிறதே! அது ஏன்?
3. தியானம், தவம் .. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

நாம் இல்லற தர்மத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் பெரும்பாலும் 'மன அமைதி' வேண்டியே தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானத்தில் ஈடுபட்டாலும், மனம் பலவித ஆசைகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. எனவே நம்மால் ஒருமுகக் கவனத்துடன் (ஏகாக்கிரக சிந்தனை) தியானம் செய்ய முடிவதில்லை. அத்துடன் 'பிராணனும்' மனதுடன் ஒடுங்காமல் இருப்பதால், மனம் மிகவும் எளிதாக தியானத்திலிருந்து நழுவி விடுகிறது.

வால்மீகியும், துருவனும் தியானத்தில்தான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் இருந்தது 'ஒருமுக கவனம்'. அத்துடன் அவர்கள் தியானம் செய்யும் பொழுது இல்லறத்தைப் பற்றி (குடும்பத்தைப் பற்றி)
முழுவதுமாக அக்கறையின்றி இருந்து விடுகிறார்கள்.

வால்மீகி 'மரா' என்ற மரத்தின் பெயரை உச்சரித்து தியானம் செய்தார்; துருவன்
மகா விஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். இருவரது மனமும் புறவுலகில் இருந்தாலும், அவர்களது கவனம் ஒரே பொருளின் மீது ஒடுங்கி, ஒருங்கி இருந்ததால் அவர்களது 'பிராணனும்' மனதுடன் ஒடுங்கி விடுகிறது. எனவே, அவர்களின் தியானத்திற்கு எந்தவொரு இடையூறும் வருவதில்லை.

தொடர்ந்து தொய்வின்றிச் செய்யப்படுவதால், தியானம் "தவம்" என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.

                    (தியானம்)


தியானம்

பதிவு 18

"Meditation is not so simple as some Eastern teachers appear to indicate; nor is it as difficult as Westerners sometimes suppose". .. Excerpt from the book "Meditation" published by Sri Ramakrishna Math.
('தியானம்' என்பது கீழை நாட்டில் உள்ள சில ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வளவு எளிமையானது அல்ல; அதேநேரம் மேலை நாடுகளில் உள்ளவர்கள் நினைப்பது போல் அவ்வளவு கடினமானதும் அல்ல)

தியானம் என்றால் என்ன; அதை எப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்டால், பலவிதமான விளக்கங்கள் வரும். தியானம் செய்வதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்று கேட்டாலும், பலவிதமான பதில்கள் கிடைக்கும்.

என்னைப் பொறுத்தவரை தியானத்தை முறையாகச் செய்தால், ஆரம்பத்தில் 'அமைதியான மனம்' என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; முடிவில் 'உள்ளிருந்து பெருகும் ஆனந்தம்' என்றால் என்ன என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

இடையில் என்ன நடக்கும் -- அதை நீங்கள் அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள்.

                      (தொடரும்)


தியானம்

பதிவு 19

அடுத்து வரும் பதிவுகளில் நான் செய்யும் தியானம் பற்றி குறிப்பிடுகிறேன்.

ஏற்கனவே பல முறைகளைக் கடைப்பிடித்துப் பார்த்தேன் ; பலன் ஏதும் இல்லை. தற்பொழுது கடைப்பிடிக்கும் முறை பயனுள்ளதாக உள்ளது. யாருக்கேனும் பயன் படலாம் என எண்ணி இதைப் பொதுவெளியில் பதிவு செய்கிறேன்.

இதுபோல்தான் வேறு இடங்களில் கற்றுக் கொடுக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

முன் பதிவுகளில் சொன்னதில் நிறைய ஊகங்கள் இருந்தன; ஆனால், எனது தியான முறை உண்மையானது.

நான் தியானம் எப்படி செய்கிறேன்; அப்பொழுது என்னில் என்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதைத் தெரிவிக்கிறேன். எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறவர்கள் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

ஆனால், ஓர் எச்சரிக்கை - -
இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக இதனைச் செய்யக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

                    (தொடரும்)



தியானம்

பதிவு 20

மனதை 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்தில் நிலை நிறுத்துவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. ஆனால், மனதில் எதையும் நினைக்காமல் இருப்பது 
எப்படி என்பதுதான் தெரியவில்லை.

'நமசிவாய' மந்திரத்தை மௌனமாக சொன்னாலும், உடனே 'சிவலிங்கம்' நினைவிற்கு வந்துவிடுகிறது. கூடவே 'நடராஜர்' சிலை, 'சிதம்பரம்' கோயில், கைலாயம் என ஒவ்வொன்றாக மனதில் தோன்ற, மனம் நழுவி  வெளியே ஓடி விடுகிறது.

மனதின் இயல்பே எதையாவது ஒன்றை நினைப்பதுதான். ஆனால், நினைக்கும் ஒன்றுக்கு உருவம் இருக்கக்கூடாது என்றால், அது எப்படி முடியும் என எண்ணினேன்.

ஒருவழியாக அதற்கும் விடை கிடைத்தது!?

                    (தொடரும்)


தியானம்

பதிவு 21

உருவமற்ற ஒன்றை எப்படி நினைக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்தேன்‌.

குழம்பிய நிலையில் இருந்தபோது உபநிடதத்தில் உள்ள மஹாவாக்கியம் என் நினைவிற்கு வந்தது .. "Ayam Atma Brahma" (அயம் ஆத்மா பிரம்மா). "அத்வைதத்தில்" இந்த ஆத்மாவும் பிரம்மமே என பொருள் கூறுவார்கள்.

சிந்திக்க ஆரம்பித்தேன். இந்த இடத்தில் 'பிரம்மா' என்பது 'பரம்பொருளைக்' குறிக்கிறது.

பரம்பொருளுக்கு உருவம் கிடையாது. ஆனால், 'பிரம்மா' என்ற சொல்லிற்கு 'எப்பொழுதும் விரிவடைந்து கொண்டிருப்பது' (ever expanding) என்ற விளக்கமும் உண்டு.

எனவே 'பிரம்மா' என்று சொன்னவுடன் Milky Way என்னும் galaxy (பால்வெளி) நினைவிற்கு வந்துவிடுகிறது.

பிரம்மாவிற்குப் பதிலாக "ஆத்மாவை" நினைத்தால் என்ன என்று தோன்றியது.

                   (தொடரும்)


தியானம்

பதிவு 22

"ஆத்மா" என்று சொல்லும்போது எந்தவொரு பொருளும் மனதில் தோன்றவில்லை. எனவே "ஆத்மாவை" நினைத்து தியானம் செய்யலாம் என நினைத்தேன்.

நான் 'பிராணாயாமம்' செய்யும்போது "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தையும் சேர்த்து சொல்வது வழக்கம்.

உள்ளிழுக்கும் மூச்சும், வெளியில் விடும் மூச்சும் 1:2 என்ற விகிதத்தில் இருக்கும். "ஓம் நமசிவாய" மந்திரமும் அதே விகிதத்தில் இருப்பதால், பிராணாயாமம் செய்யும்போது "ஓம் நமசிவாய" மந்திரத்தையும் சேர்த்தே சொல்லுவேன்.

"ஆத்மா" என்ற வார்த்தையை எப்படி உபயோகிக்கலாம் என சிந்தித்தேன். "அயம் ஆத்மா" என்பதை சிறிது மாற்றி "அயம் ஆத்மனே" என்று சொல்லிப் பார்த்தேன். அது மூச்சுப் பயிற்சிக்கும் இசைவாக இருந்தது.

புதிய முறையில் தியானப் பயிற்சியை ஆரம்பித்தேன்.

                    (தொடரும்)

தியானம்

பதிவு 23

வழக்கம்போல 'அர்த்த பத்மாசனத்தில்' அமர்ந்து கொண்டு, தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

முதலில் மூச்சை உள்ளே இழுத்து பின் வெளியே விடுவதில் கவனம் செலுத்தினேன். கூடவே 'அயம் ஆத்மனே' என்றும் மௌனமாக உச்சரித்துக் கொண்டேன்.

இரண்டொரு தடவை உச்சரித்த பின்பு, மூச்சோடு கூட தொண்டையின் உட்புறமும் கவனத்தை செலுத்தினேன்.

அடுத்து மூச்சோடு பயணம் செய்யும் மனதை, அதிலிருந்து விலக்கி
கவனத்தை உள்நாக்கின் பின்புறமும், கடைசியாக 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்திலும்
செலுத்தி, மனதை அந்த இடத்தில் நிலைபெறச் செய்தேன்.

இப்பொழுது மனதில் எந்தவொரு உருவமும் தென்படவில்லை.

பதிலாக "மன்மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு" என்று சொன்ன திருமூலரின் கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்டேன்.

                   (தொடரும்)


தியானம்

பதிவு 24

தியானப் பயிற்சியின் ஆரம்ப நிலையில் 'அர்த்த பத்மாசனத்தில்' அமர்ந்து, கைகளைக் கோர்த்து மடியினில் வைத்து, 'அயம் ஆத்மனே' என மௌனமாக உச்சரித்து, தொண்டைக் குழியில் கவனம் வைத்து முடிவில் மனதை 'பிட்யூட்டரி'
சுரப்பி இருக்கும் இடத்தில் நிலை நிறுத்தினேன்.

இப்பொழுது அப்படி இல்லை; நேராக .. எதையும் உச்சரிக்கத் தேவையின்றி ..
மனதை 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்தில் நினைத்தவுடன் நிலை நிறுத்த முடிகிறது.

திருமந்திரம் 566-வது பாடலில் திருமூலர் இவ்வாறு கூறுகிறார் ..
"புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே".

பறவையை விட வேகமாக செல்லக்கூடியது 'பிராணன்' என்கிறார். பிராணனை குதிரையோடு (புரவி) ஒப்பிடுவது சித்தர்களின் பழக்கம். காரணம் குதிரையைப் போன்று பிராணனையும் அடக்குவதும் மிகவும் கடினம்.

ஏனெனில், சுற்றித் திரியும் மனதை அடக்குவதே கடினம்; இவ்வளவுக்கும் மனம் நம் உள்ளே தான் உள்ளது. பிராணனோ பிரபஞ்ச சக்தியோடு இணைந்த ஒன்று. எனவே அதை கட்டுக்குள் வைப்பது மிக மிகக் கடினம்.

இருந்தாலும் 'பிராணனை' அடக்குவதற்கு திருமூலர் சொன்னதுதான் "மன்மனம் எங்கு உண்டு; வாயுவும் அங்கு உண்டு".

மனமும், பிராணனும் ஒரே இடத்தில் ஒடுங்கிய பின், உடலில் என்ன நிகழ்வுகள் நடந்தன என்று பார்ப்போம்.

                    (தொடரும்)


தியானம்

பதிவு 25

இந்த முறையில் 'தியானம்' செய்தபோது உடலில் நடந்த நிகழ்வுகள் புதியதாகத் தோன்றின. அவை ...
1. மூச்சை உள்ளே இழுத்தபோது வழக்கம்போல் மார்புக்கூடு விம்மி கழுத்தை நோக்கி மேலே நகர்ந்தது.
2. மூச்சை வெளியே விடும்போது மார்புக்கூடு இறங்கி பழைய நிலைக்கு வரவில்லை. எந்த அளவிற்கு ஏறி நின்றதோ அந்த அளவிலேயேத் தங்கிவிட்டது.
3. மாறாக, வயிற்றிலிருந்து காற்று வெளியே செல்வது போன்ற உணர்வு; காரணம் வயிறு உள்ளே ஒடுங்கியதுதான்.
4.அடுத்தமுறை மூச்சை இழுக்கும்போது, மார்புக்கூடு மேலும் கொஞ்சம் மேலே ஏறியது.
5. வயிறு இன்னும் கொஞ்சம் உள்ளே ஒடுங்கியது.
6. நான்கு-ஐந்து தடவைகள் மூச்சு உள்ளே வந்து வெளியே சென்றபின், இதற்குமேல் விரிவடைய முடியாது என்ற நிலைக்கு மார்புக்கூடும், இதற்குமேல் ஒடுங்க முடியாது என்ற நிலைக்கு வயிற்றுப் பகுதியும் தள்ளப்பட்டு விட்டன.
7. அதன்பின் மூச்சுக் காற்று உள்ளே வருவதையும், வெளியே செல்வதையும், அடிவயிற்றுப் பகுதியில் ஏற்படும் சிறிய அசைவின் மூலமே உணர முடிந்தது.

இந்தப் பயிற்சியில் எத்தனை நிமிடங்கள் வேண்டுமானாலும், மனதில் எந்த உருவத்தையும் எண்ணாமல் இருக்க முடிந்தது.

முதன்முதலாக, விழிப்பு நிலையிலும் மனம் 'அமைதியாக' இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

                    (தொடரும்)


தியானம்

பதிவு 26

மூச்சை உள்ளே இழுக்கும்போது மேலே ஏறிய மார்புக்கூடு கீழே இறங்காமல் இருந்ததற்குக் காரணம், மனதோடு பிராணனையும் பிடித்து வைத்ததுதானா என்ற சந்தேகம் தோன்றியது.

திருமூலரின் பாடல் நினைவிற்கு வந்தது.
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை..."
இதிலிருந்து ஒரு உண்மை புரிந்தது.

மூச்சை உள்ளே இழுக்கும்போது வெளியில் இருந்து வரும் பிராண சக்தி (பிராணன்) மார்புக்கூட்டை மேலே ஏற்றுகிறது; மூச்சை வெளியே விடும்போது பிராண சக்தியின் உதவி இல்லாததால், மார்புக்கூட்டால் கீழே இறங்கமுடியவில்லை.

மார்புக்கூடு கீழே இறங்காத காரணத்தினால்,
 'பிராணன்' மனதோடு கூட 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்குமிடத்தில் ஒடுங்கி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
..... ..... .... .....

இதில் சொல்லப்பட்டக் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்கள், இந்த தியான முறையைப் பயிற்சி செய்யலாம். சுமார் இரண்டு நிமிடங்கள் காலையிலும், மாலையிலும் செய்யலாம்.
தியானம் சரியான முறையில் கடைப்பிடிக்கப் பட்டால், பின்பு தியானம் செய்யும் நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.

ஆனால், ஏற்கனவே சொன்னதுபோல
இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

என்றும் அன்புடன்,
உங்களில் ஒருவன்.

No comments:

Post a Comment