பதிவு 1
நமது நாடு ஒரு ஆன்மிக பூமி; அத்துடன் இங்கிருப்பது ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பு.
ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சி சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அது "ஆன்மிக அரசியலை" அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும்.
ஆனால் இங்கு "ஆன்மிக அரசியல்" என்று சொன்னாலே, 'நீ ஹிந்துத்வா வாதியா' என்று கேட்கிறார்கள். கூடவே "சங்கி" என்ற பட்டமும் சூட்டி விடுகிறார்கள்.
நமது நாட்டிற்குத் தேவை "ஆன்மிக அரசியல்தான்" என்று நம்புவதால், நான்கூட ஒரு 'சங்கிதான்'.
ஆன்மிகம் இந்து சமயத்தில் மட்டும்தானா இருக்கிறது? பிற சமயங்களிலும் அது இருக்கிறது அல்லவா? சமயங்களுக்கு அப்பாற்பட்டும் ஆன்மிகக் கருத்துக்கள் உள்ளனவே.
ஆன்மிகம் சொல்லும் வாழ்வியல் கருத்துக்கள் எப்படி அரசியலுக்கு உதவும் என்பதைப்பற்றி நிறைய ஆராய வேண்டும்.
இது சம்பந்தமாக ஏற்கனவே சில தொடர்களை 'முகநூலில்' பதிவிட்டுள்ளேன். அதன் மூலம் நான் தெரிந்து கொண்டது, எனதுகருத்துக்கள் நாத்திகவாதிகள், திராவிட சித்தாந்தத்தில் ஊறிய பகுத்தறிவுவாதிகள், ஏன் சில சமயவாதிகளுக்குக்கூடப் பிடிக்கவில்லை என்பதுதான்.
ஆகையால் எனது எண்ணங்களை இந்த நாட்டின் இறையாண்மையைப் பேணிப் பாதுகாக்க
விரும்பும் சங்கிகளுக்காகப் பதிவிடுகிறேன்.
எனவே, இந்தத் தொடர் - - சங்கிகளுக்கு சமர்ப்பணம்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 2
ஒரு ஜனநாயக நாடு சிறப்பாகச் செயல்பட, அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சங்கள்:-
1. நாட்டின் இறையாண்மையை வலுப்பெறச் செய்வது
2. தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது
3. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது
4. மக்கள் வாழ்வியல் நெறிகளை தவறாமல் கடைப்பிடிக்க வலியுறுத்துவது
5. நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் முதலியவை மற்ற ஆதிக்க சக்திகளின் மூலம் சீரழிந்து போகாமல் பார்த்துக் கொள்வது.
நமது நாட்டில் நான்கு அல்லது ஐந்து தேசியக் கட்சிகள் உள்ளன. மற்றவை பெரும்பாலும் மாநிலக் கட்சிகளாக உள்ளன.
மேலே சொன்ன 'ஐந்து' அம்சங்களிலும் எல்லா தேசியக் கட்சிகளும் முழு கவனத்தையும் செலுத்துகின்றன என்று சொல்ல முடியுமா?
'நான்காவதாகவும், ஐந்தாவதாகவும்' சொல்லப்பட்ட அம்சங்களை முறையாகக் கடைப்பிடிப்பதற்கு 'ஆன்மிகக் கருத்துக்கள்' பெரும் உதவியாக இருக்கும்.
அது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 3
ஆன்மிகம் சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றில் அதிக அக்கறை கொள்வதில்லை. ஒவ்வொரு மனிதனும் சமுதாய நலனுக்காக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
மேலை நாட்டு தத்துவ நூல்களிலும் இத்தகையக் கோட்பாடுகளைக் காணலாம். ஆனால், சமயங்களைச் சார்ந்த மறைநூல்கள், கூடவே மனிதன் இறைத்தன்மையை அடைவது பற்றியும் நிறையக் குறிப்புகளைத் தருகின்றன.
சமயங்களுக்கு அப்பாற்பட்டும் பல தத்துவ ஞானிகள் இறைத்தன்மை, மறுபிறப்பு போன்றவற்றைப் பற்றியும் எழுதியதைப் காணலாம். உதாரணத்திற்கு இங்கிலாந்து நாட்டின் ஜேம்ஸ் ஆலன் (James Allen)
என்ற தத்துவ ஞானி எழுதிய
"Master of Destiny" என்ற புத்தகம் அடுத்த பிறவிக்கானத் தலைவிதியை நாம்தான் நமது செயல்களின் மூலம் தயார் செய்கிறோம்; எனவே நமது குணத்தை (character) மேம்படுத்திக் கொள்வதன் மூலம் நல்லதொரு விதியை நாமே படைத்துக் கொள்ளலாம் என்கிறார்.
ஆக, ஆன்மிகம் என்பது சுய ஒழுக்கம், சமுதாயத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணி, இறைத்தன்மையை அடைவதற்கான வழிகள் போன்றவற்றையே அதிகம் போதிக்கின்றன.
அத்துடன் எந்த மாதிரி மனிதன் சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபடுவான் என்பது பற்றியும் குறிப்புகள் தருகின்றன.
நாம்தான் அவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் தகுதியற்ற மனிதர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தி சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் வாய்ப்பினை வழங்குகிறோம்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 4
ஒரு தடவை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு உலகளாவிய அளவில் மாபெரும் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.
அந்தக்குழு தங்களது கருத்துக்கணிப்பு முடிவை 2018-ம் வருடம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதியன்று “Nature Human Behaviour” என்ற பத்திரிகையில் வெளியிட்டது.
அந்த முடிவின்படி, மனிதர்கள் நான்கு வகையானவர்கள் என்று உறுதிப்படுத்தி உள்ளனர் .. அதாவது “Reserved, role model, self-centred and average” என நான்கு பிரிவுகள்.
மனிதனின் செயல்பாடுகளை வைத்து, அவனை வகைப்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளனர். பல்வேறு கட்டத்தில், பல்வேறு குழுக்கள் நீண்ட காலமாக நடத்திவந்த ஒரு பிரச்சனைக்கு, இப்பொழுது நடந்த கருத்துக்கணிப்பு முடிவே சரியானது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த நான்கு வகை மனிதர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 5
நான்கு வகை மனிதர்கள் என்று சொன்னாலும், செயலை வைத்துப் பார்த்தால் மூன்று வகையாகத்தான் இருக்கும்.
எந்தவொரு செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்குமல்லவா? அப்படி அந்த நோக்கத்தைக் கணக்கில் எடுத்தால் மட்டுமே, அது நான்கு வகையாக விரிவடையும்.
நாம் முதலில் செயலை வைத்து மனிதர்களை வகைப்படுத்துவோம்.
உலகில் பல மனிதர்கள் வெளியுலக வாழ்க்கையிலிருந்து விலகி தனிமையில் இருப்பார்கள். அவர்களுக்கு கூட்டம், ஆரவாரம், பணம், புகழ்ச்சி போன்ற எதிலும் ஆர்வம் இருக்காது. அவர்களுக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்கும். அதில் வெற்றிபெற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள்.
ஆனால், வெளியே உள்ள மனிதர்களுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாது; அவர்கள் ஒதுங்கி வாழ்வதால் செயலில் ஆர்வம் இல்லாதவர்கள் என நினைத்துக் கொள்வார்கள்.
நாம் அவர்களை 'un-active' type of people என எடுத்துக் கொள்வோம்.
இவர்களைத் தவிர, வேறு சில மனிதர்களும் .. ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த மனிதர்களும் .. இங்கு வந்து சேர்வார்கள்.
அவர்கள் ..
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 6
முந்தைய பதிவில் சொன்னவர்கள் இயல்பிலேயே தனிமையை விரும்பி ஏற்றிருப்பார்கள்.
இவர்களைத் தவிர வேறு சில மனிதர்களையும் நாம் 'un-active' type of people என எடுத்துக் கொள்ளலாம்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் சுறுசுறுப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் அவர்களை 'அகத்தாய்வில்' தள்ளிவிடும். அதன் தொடர்ச்சியாக 'சுய சிந்தனையில்' ஆழ்ந்து "போதும்" என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள்.
திறமை இருந்தும், செயல்படுவதற்கான ஊக்கம் இருந்தும், மனதில் 'சமநிலையை' அடைந்த நிலையில் ஆரவாரமற்று ஒதுங்கி வாழ ஆரம்பித்து விடுவார்கள். ஆக, அவர்களும் 'un-active' type மனிதர்களாக வாழத் தொடங்குகிறார்கள்.
பல மனிதர்கள் தாங்கள் எண்ணிய குறிக்கோளை அடைய வேண்டும் என்பதற்காக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். எந்தவித தடங்கள்கள்
வந்தாலும் அவற்றை தைரியமாக எதிர்கொண்டு
குறிக்கோளை எட்டும் வரை விடாமல் போராடுவார்கள். இவர்களை 'active' type of people எனச் சொல்லலாம்.
சுயமாக சிந்தித்து செயல்பட முடியாதவர்களை 'in-active' type of people எனச் சொல்லலாம். இவர்கள் பெரும்பாலும் யாரோ ஒருவரை தனது தலைவனாக/குருவாக ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் தவறைச் சுட்டிக் காட்டினாலும் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 7
'active' type மனிதர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
ஒருவர் ஊருக்காக உழைப்பவர்; மற்றவர் தான், தன் குடும்பம் என்று உறவுக்காக உழைப்பவர்.
ஆக நான்கு வகை மனிதர்களை இவ்வாறு வகைப் படுத்தலாம் - -
Reserve:- ஒதுங்கி வாழ்பவர்கள்.
Role-model:- சமூகத்தின் நலனுக்காக தன்னை வருத்தி உழைப்பவர்கள்.
Self-centred:- தான் மற்றும் தன்னுடைய குடும்பத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்பவர்கள்.
(தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்தாலும், பிறரை வஞ்சிக்காமல் சம்பாதித்து தேவைக்கு மேல் உள்ள பணத்தை சமூக நலனுக்காக செலவு செய்தால், அவர்களை role-model என்றே அழைக்கலாம்).
Average:- சுய சிந்தனை, சுய முயற்சி ஏதுமின்றி பிறரைச் சார்ந்து வாழ்பவர்கள்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 8
முந்தைய பதிவில் சொன்ன நான்கு வகை மனிதர்களுள், ஒதுங்கி வாழ்பவர்கள் (Reserve) நேரடி அரசியலில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
சுய சிந்தனை மற்றும் தன்முனைப்பு இல்லாதவர்கள் (Average) அரசியலுக்கு வந்தாலும், அவர்களால் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது.
ஆக, சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட பொதுநலவாதி (role-model), 'தான், தன்னுடையக் குடும்பம்' என்று வாழும் சுயநலவாதி (self-centred) இருவரும்தான் அரசியலுக்கு வருவார்கள்.
இருவரில் யாரை நாம் தேர்வு செய்ய வேண்டும்? முதன் முதலில் வாக்களிக்கும் போது தேர்தலில் நிற்கும் வேட்பாளர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் 'சுயநலவாதி' என்று தெரிந்த பிறகும், அவரை மீண்டும், மீண்டும் தேர்தலில் வெற்றிபெற வைத்தால் நம்மை என்னவென்று சொல்வது?
மறைந்த அமெரிக்க ஜனாதிபதி, ஜான் கென்னடி இவ்வாறு குறிப்பிடுகிறார் --
"Once fooled, it is not your mistake; Again fooled definitely it is your mistake".
முதல்முறையாக ஒருவர் உன்னை முட்டாளாக்கினால், அது உன்னுடைய தவறல்ல; ஆனால், மீண்டும் உன்னை முட்டாளாக்க இடம் கொடுத்தால், நிச்சயம் அது உன்னுடைய தவறுதான் என்கிறார்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 9
பொது நலத்தில் ஆர்வமுள்ள மனிதன் அரசியலுக்கு வந்தால், அவனுக்கு ஆன்மிகம் எவ்வாறு உதவ முடியும்?
அதற்கு முதலில் ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
BJP-யின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் பின்புலமாக உள்ள RSS-தான் என்றால், அதற்கு என்ன காரணம்?
BJP கட்சி அரசியல் சார்ந்தது என்றால், RSS ஆன்மிகக் கருத்துக்களை உள்ளடக்கியது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் நலிவடையக் காரணமாக இருப்பது, RSS போன்றதொரு அமைப்பு .. தனி மனித ஒழுக்கம், தேசப் பற்றை வலியுறுத்தும் தன்மை போன்ற காரணிகள் உள்ள அமைப்பு .. இல்லாததுதான் என்றால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அதுதான் உண்மை.
சரி, ஆன்மிகம் எவற்றையெல்லாம் வலியுறுத்துகிறது?
இனி வருவது எனது சொந்தக் கருத்துக்கள். வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்களின் மூலம் உணர்ந்து கொண்டவை. சரியென்று தோன்றினால் மட்டும் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 10
ஆன்மிகம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், சமுதாயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நமக்கு வழி காட்டுகிறது.
இதுபோன்றக் கருத்துக்கள் சமயம் சாராத நூல்களிலும் உண்டு. பின் எதற்காக ஆன்மிகத்தை மதத்தோடு இணைத்தார்கள்.
நமது நாட்டில் பல சமய நூல்களில் இத்தகையக் கருத்துக்களைச் சொன்னவர்கள், கூடவே இறைவனைப் பற்றியும், இறைத்தன்மையை அடைவது பற்றியும் எழுதியுள்ளார்கள். எனவே இவை மதம் சார்ந்தவையாக மாறி விட்டன.
இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் சமய நூல்களைக் தேட வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே கிடைத்தாலும் பல கருத்துக்களை நாம் சரியாகப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.
ஆனால், திருவள்ளுவர் தனது திருக்குறளில் இத்தகையக் கருத்துக்களை மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும் சொல்லியிருக்கிறார்.
தனி மனிதன் தனது வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டுமென்று "அறத்துப் பாலிலும்", சமுதாயத்தில் எப்படி நடக்க வேண்டுமென்று "பொருட்பாலிலும்" சொல்லியிருக்கின்றார்.
அவற்றை முறையாக உள்வாங்கி, அதன்படி நடக்க ஆரம்பித்தால் எந்தவொரு சாதாரண மனிதனும் மிகச் சிறந்த உதாரண புருஷனாக (role-model) வலம் வருவான்.
அவற்றின் அடிப்படையில் நமது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்வோம்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பரிசீலனை செய்வோம்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 11
நமது நாட்டில் பல்வேறு சமயங்கள்; ஒவ்வொன்றிலும் பலப்பல நூல்கள். இவற்றில் எதைப் படிப்பது என்பதில் குழப்பம். அப்படியே ஏதாவது ஒரு நூலைப் படித்தாலும், மறைநூல் சொல்லும் வாழ்வியல் கருத்துக்களை உள் வாங்குவது மிகுந்த சிரமமாகத் தெரியும்.
இந்தக் குறையை திருக்குறள் தீர்த்து வைக்கிறது. உலகின் பல மொழிகளில் வெளியிடப் பட்டுள்ள தமிழகத்தின் பொக்கிஷம் அது.
அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலும் மொத்தம் 1080 குறள்கள். ஒரு நாளில் 3 குறள்கள் படித்தாலும் ஒரு வருடத்தில் முடித்து விடலாம். தினந்தோறும் அதற்காக 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.
அடுத்த வருடம் மீண்டும் முதலிலிருந்து படியுங்கள். மாறுபட்ட அர்த்தங்கள் தோன்றலாம். காரணம் .. நமது புரிந்து கொள்ளும் திறமை கூடக்கூட நமது புரிந்து கொள்ளும் தன்மையும் கூடக்கூடும்.
(The level of understanding will depend upon the level of understanding).
திருக்குறளின் பொருட்பால் மட்டுமே அரசியல் சார்ந்தது என்றாலும், தனி மனித ஒழுக்கமும் அவசியம் என்பதால் அறத்துப்பால் குறள்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 12
மேலே தொடர்வதற்கு முன், ஒரு தனி மனிதனின் வெற்றி எதில் அடங்கியுள்ளது; ஒரு நாட்டின் வெற்றி எதில் அடங்கியுள்ளது எனப் பார்க்க வேண்டும்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டான் என்பதை எதை வைத்து நிர்ணயம் செய்வது? பணமா, புகழா, அந்தஸ்தா, அதிகாரமாக .. எதை வைத்து அளவிடுவது.
சுவாமி சின்மயானந்தர் சொல்கிறார் ---
"Success in life is measured by the tranquility of the mind"
இதே கருத்தை ரிஷி பதஞ்சலியும் குறிப்பிடுகிறார் --- "சித்த விருத்தி நிரோத"
இதுபோன்ற கருத்துக்களைப் பலரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
எந்த சூழ்நிலையிலும் மனதில் எந்தவித சலனங்களும் இல்லாதிருந்தால் அதுதான் உண்மையான வெற்றி என்கிறார்கள்.
அப்படியானால் ஒரு நாட்டின் வெற்றிக்கான அளவுகோல் எது?
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 13
ஒரு நாட்டின் வெற்றிக்கான அளவுகோல் என்று எதைச் சொல்வது?
நாட்டின் வெற்றிக்கான அளவுகோல் இதுதான் ...
"Coming together is the beginning;
Keeping together is the progress;
Working together is the success."
(ஒன்றாக சேர்வது ஆரம்பம்; ஒன்றாக இணைந்து இருப்பது முன்னேற்றம்; ஒன்றாக -- ஒருமித்த கருத்துடன் -- வேலை செய்வது வெற்றி)
நமது நாட்டில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றனரா? அப்படியானால் எல்லோராலும் "I am an Indian; I love India" என்று சொல்ல முடிகிறதா?
"I am an Indian; I love India"
என்று அதிகமாக எந்தக் கட்சியின் தொண்டர்கள் சொல்கிறார்கள் என்று பார்த்தால், முதலிடம் பெறுவது எந்தக் கட்சியாக இருக்கும்?
அப்படிச் சொல்ல மறுப்பவர்களை அல்லது தயங்குபவர்களை என்ன செய்வது?
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 14
"I am an Indian; I love India"
என்று சொல்ல மறுப்பவர்களை அல்லது தயங்குபவர்களை என்ன செய்வது?
"I am an Indian; I love India" என்று சொல்ல மறுப்பவர்கள் அல்லது தயங்குபவர்கள் அரசு நிர்வாகத்தில் பங்கு வகித்தால் அது நாட்டின் இறையாண்மைக்கு தீங்கிழைக்காதா?
அத்தகைய மனிதர்களுக்கு வாக்குரிமை அளித்தால், நாட்டின் இறையாண்மைக்கு ஆதரவாக உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா?
இதற்குத் தீர்வுதான் என்ன?
சட்ட வல்லுநர்கள்தான் விடை காண வேண்டும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 15
நமது நாட்டில் - -
மதங்கள், வழிபாட்டு முறைகள், மொழிகள்,
இனங்கள், பழக்க
வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே நாடாக ஒருமைப் நாட்டுடன் வளர்ந்து வருவது, எந்த நாட்டிலும் பார்க்க முடியாத அதிசயம்.
எந்தவொரு நாட்டிற்கும் எதிரிகள் இருப்பார்கள். நமது நாட்டிற்கும் எதிரிகள் உண்டு. அதை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது.
ஆனால், உள்நாட்டிலேயே துரோகிகள் இருந்தால், அது நாட்டின் இறையாண்மையைபாதிக்காதா? அவற்றையெல்லாம் அடையாளம் கண்டு சரி செய்ய வேண்டாமா?
துரோகிகள் மட்டுமின்றி நாட்டின் சட்டங்களுக்குப் பயப்படாமல் வலம் வருபவர்கள் எத்தனையோ பேர் உள்ளனரே? அதற்கானக் காரணம் என்ன?
ஒரே காரணம்தான். அது ..
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 16
நாட்டின் சட்டங்களுக்குப் பயப்படாமல் பல மனிதர்கள் வலம் வருவதற்கான காரணம் என்ன? ஒரே ஒரு காரணம்தான். அது -- India is a soft country.
'Soft Country' என்றால் என்ன? நாட்டில் சட்டங்கள் கடுமையாக இருக்கலாம். ஆனால், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஒரு உறுதியான நிலைப்பாடு இருக்காது.
செய்த குற்றங்களுக்கு உரிய காலத்தில் தண்டனை வழங்கவில்லையென்றால் -- தேவையில்லாமல் ஜாமீன், வழக்குகளை நீடிக்க வேண்டுமென்பதற்காகவே வேண்டி பெறப்படும் வாய்தாக்கள் போன்ற காரணங்களினால் தண்டனை பெறுவது தாமதமானால், அதுவே 'soft country' என்பதற்கான அடையாளம்.
இது போன்ற தாமதங்கள் இருந்தால், குற்றங்கள் குறையப் போவதில்லை. பலம் பொருந்திய, ஆளுமை நிறைந்த ஆட்சி இருந்தால் மட்டுமே, நாட்டில் குற்றச் செயல்கள் குறைவதற்கான வழி பிறக்கும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 17
தனி மனிதனுக்கும், அரசுக்கும் திருக்குறள் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்று பார்ப்பதற்கு முன், நாம் ஒரு முக்கிய விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பாடலை சுருக்கமாக சொல்லும்போது, அது சூத்திரமாக மாறிவிடும். அந்த நிலையில் அது சொல்லும் கருத்து எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கும். எனவே அதில் 'பயனிலை' (verb) இருக்காது.
உதாரணத்திற்கு முதல் குறளைப் பாருங்கள். இது எதற்காக என்றால் எல்லாக் காலங்களிலும் பொருந்தக்கூடிய ஒன்றை 'பயனிலை' இல்லாமல் சொல்வதுதான் சிறப்பு.
இரண்டாவதாக, சூத்திரம் என்று வரும்போது அதனைப் பலவிதமாகப் பொருள் கொள்ளலாம். சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அர்த்தம் தவறானதொரு பொருளைத் தந்துவிடும்.
உதாரணத்திற்கு - -
"அந்தணர் என்போர் அறவோர்.."
நேரடி அர்த்தம் .. "அந்தணர் என்பவர்கள் அறவழியில் நடப்பவர்கள்" எனப் பொருள் கொள்ளலாம். அப்படியானால் அந்தணர் அல்லாதவர்கள் அறவழியில் நடக்க மாட்டார்களா என்று சந்தேகம் வந்துவிடும்.
இதற்குப் பதிலாக "அறவழியில் நடப்பவர்கள் அனைவரும் அந்தணர்கள்" என்று பொருள் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அது சரியான அர்த்தத்தைக் கொடுக்கும்.
ஆகவே, திருக்குறள் சொல்லும் அறிவுரைகளைக் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 18
நான் இந்தத் தொடரை நாட்டின் இறையாண்மையை நேசிக்கும் 'மனிதர்களுக்காக' எழுதுகிறேன்.
எனவே, மற்றவர்களின் மாறுபட்ட/எதிர் கருத்துக்கள் என்னை காயப்படுத்தப் போவதில்லை.
எனது கருத்துக்கள் யாருக்கேனும் வருத்தத்தைத் தருமானால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு எழுத்தாளரின் கடமை வாசகர்களைச் சிந்திக்கவைக்கத் தூண்ட வேண்டும். (The foremost duty of the writer is to provoke the readers to think).
சொல்லப்போனால், நான் எழுத்தாளர் அல்ல; நாட்டின் இறையாண்மையை நேசிக்கும் ஒரு இந்தியன்; அவ்வளவுதான்.
திருவள்ளுவர் கூறுகிறார் --
"நகுதல் பொருட்டு அன்று நட்டல் - மிகுதிக்கண் மேல்சென்று இடித்தல் பொருட்டு" .. (குறள் 784)
எனது கருத்துக்கள் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், நான் எந்தக் கோணத்தில் சொல்கிறேன் என்பதைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 19
"எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்"
.. குறள் 429
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவன் சிறந்த அறிவாளியாக இருந்து, தான் சந்திக்கும் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக் கூடாது; எதிர்காலத்தில் எந்தவிதமான பிரச்சினைகள் வரும் என எதிர்பார்த்து, அவைகள் வராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை இப்பொழுதே எடுக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பிற்காலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் திருவள்ளுவர்.
அப்படியானால் நாம் சந்திக்கும் மற்றும் சந்திக்கப் போகும் பிரச்சினைகள் என்னென்ன? ---
* கலாச்சார சீரழிவு
* சாதிப்பிரிவினை
* மக்கள் தொகைப் பெருக்கம்
* வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்கும் ரேஷன் பொருள் வழங்குதல்
* சட்டம், ஒழுங்கைக் கடைப் பிடிப்பதில் பலவீனம்
* மக்களை மதம் மாற்றத் துடிக்கும் இயக்கங்கள்
* சிறுபான்மை மக்களுக்கு சலுகை என்ற பெயரில், பெரும்பான்மை மக்களை வஞ்சிப்பது
* நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் பல்வேறு அமைப்புகளைக் களை எடுக்காதது
பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவற்றையெல்லாம் சரிசெய்ய ஆட்சியாளர்கள் சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
எதிர்ப்பு வரும்; ஆனாலும் நாட்டின் நலன் கருதி கடினமான முடிவுகளை எடுப்பது ஆட்சியில் இருப்பவரின் கடமையாகும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 20
நமது நாட்டில் கலாச்சார சீரழிவு எப்படி ஏற்பட்டது?
அந்நிய ஆதிக்கத்தில் என்ன நடந்தது என ஆராய வேண்டாம். நாடு விடுதலை பெற்ற பின் நமது கலாச்சாரத்தைப் பேணி பாதுகாக்க என்ன செய்தோம்?
முஸ்லிம் மதத் தலைவர்கள் மதராஸாக்களை நிறுவி பிள்ளைகளுக்கு அவர்களது கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தார்கள்.
ஆங்கில மிஷனரிகள் பள்ளிக்கூடங்களை நிறுவி அவர்களது கலாச்சாரத்தைப் பரப்பினார்கள். கூடவே மத மாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்து சமய மடாதிபதிகள் என்ன செய்தார்கள்? அங்கும் இங்குமாக சில பள்ளிகள் இருக்கலாம். ஆனால் கிராமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்?
"இளமையில் கல்" என்பது பழமொழி. ஏனெனில் இளம் வயதில் குழந்தைகள் ஆர்வமாகவும், விரைவாகவும் எதையும் கற்றுக் கொள்வார்கள்.
அந்த இளம் பருவத்தில் போதிக்க வேண்டியதை போதிக்காமல் விட்டுவிட்டு, நாட்டின் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று புலம்புவது சரியா?
சரி, போனது போகட்டும். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களைக் கட்டுவது சாத்தியமா? இல்லைதான்; ஆனால், அதற்கு ஒரு வழி இருக்கிறது.
அதுதான் "unschooling" மூலம் நடத்தக்கூடிய பயிற்சி வகுப்புகள்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 21
"Unschooling" என்றால் என்ன? அது 'ஒரு அர்ப்பணிப்பு உணர்வு உள்ள ஆசிரியர்' மூலம், அந்தந்த கிராமங்களிலேயே நடக்கும் பயிற்சிக் கூடம். அதில் பல நன்மைகள் உண்டு. அவை ---
* ஐந்தாம் வகுப்பு வரை படிக்கலாம்.
* கிராமத்தை விட்டு படிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டாம்.
* யூனிபார்ம் தேவையில்லை.
* கல்விக் கட்டணம் குறைவாக இருக்கும்.
* அரசு அங்கீகாரம் தேவையில்லை.
* கல்வித்துறை மூலம் எந்தவித இடையூறும் இருக்காது.
* குழந்தைகள் விரும்பும் விளையாட்டை விளையாடலாம்.
* விளையாட்டாகவே பாடங்களையும் படிக்கலாம்.
* விளையாட்டாகவே படிப்பதால், பாடங்களை குறிகிய காலத்திலேயேப் படித்து விடலாம்.
* குறிப்பிட்ட காலத்தில்தான் பரீட்சை எழுத வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
* பாரம்பரிய பண்பாடுகளைக் கற்றுக் கொள்ளலாம்.
* தனியாகப் படித்தும் (private study) பரீட்சை எழுதலாம் என்பதால் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்வதில் எந்தவித சிரமமும் இருக்காது.
இவை தவிர, வேறு ஒரே முக்கிய பயனும் உண்டு. எனக்கு ஏற்பட்ட ஒரு சின்ன அனுபவம், அதைப் புரிந்து கொள்ள உதவும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 22
ஒரு நாள் எனது மூத்த அதிகாரி என்னைக் கூப்பிட்டார். நான் போனதும், அவர் சொன்னது ---
"என் மகனிடம் (கல்லூரிப் படிப்பை முடித்திருந்தான்) ஒரு விஷயம் பற்றிக் கூறி அவனது அபிப்பிராயம் என்னவென்று கேட்டேன். அதற்கு அவன் 'சாரிடம்' கேட்டு சொல்கிறேன் என்றான். யாருடா உங்கள் 'சார்' எனக் கேட்டேன். அவன் உங்கள் பெயரைக் கூறினான்".
இதனைச் சொன்னவர் சிரித்துக் கொண்டே என் மகனுக்கு என்ன மந்திரம் போட்டீர்கள் என்று கேட்டார்.
எந்த மந்திரமும் போடவில்லை. உங்கள் மகனும் என்னுடன் அதிகமான தொடர்பில் இருந்தது கிடையாது. ஆனால், அவனது நண்பன் என்னுடன் தினசரிப் பேசுவான். ஒருவேளை அவன் மூலமாக என்னைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் வந்திருக்கலாம் என்றேன்.
அதிகம் பழகாத மனிதரிடம் கூட நல்லதொரு எண்ணம் வர முடியுமென்றால், பல வருடங்களாக ஒரு ஆசிரியரிடம் பாடங்கள் கற்றும், மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையே அது ஏன் ஏற்படுவதில்லை? ஆசிரியரிடம் 'அர்ப்பணிப்பு' உணர்வு இல்லாததுதான் காரணமா?
"Unschooling" மூலம் குழந்தைகள் படிக்கும் போது, இந்தப் பிரச்சினை வராது. மாறாக ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே ஒரு அன்பு கலந்த நெருக்கம் ஏற்படும். அதை என்ன பெயரிட்டு அழைப்பது?
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 23
ஒரு அன்பர் சுவாமி சின்மயானந்தர் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார் ..
"Reverend Father" என்று சொல்கிறார்களே; "Reverend" என்றால் என்ன அர்த்தம்?
அவர் கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அகராதியில் 'பயபக்தி', 'அன்பிற்குரிய', 'மரியாதைக்குரிய', 'மதிப்பிற்குரிய' என்றெல்லாம் அர்த்தங்கள் உள்ளன.
பதிலாக சுவாமி சின்மயானந்தர் சொன்னது ..
"One may love his father, but he may not have any respect for him; because he is a drunkard. One may give respect to a scientist, yet he may not love him.
Where love and respect join together, it is reverence"
(வார்த்தைக்கு வார்த்தை அவர் சொன்னதை என்னால் கூற முடியவில்லை. ஆனாலும், கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை)
எங்கு அன்பும், மரியாதையும் ஒன்றாக இணைகிறதோ, அதைத்தான் reverence என்கிறார் சின்மயானந்தர்.
இப்போது உள்ள கல்விச் சூழலில் ஆசிரியருக்கு மாணவனிடமிருந்து 'அன்பும், மரியாதையும்' கிடைக்கிறதா?
அப்படிக் கிடைத்தால் அவர் ஆசிரியர் அல்ல; 'குரு' என்று அழைக்கத் தக்கவர்.
பண்டைய காலத்தில் அது இருந்ததால்தான், குருகுலப் பாடசாலை என்று அழைத்தார்கள்.
கிராமப்புற ஓராசிரியர் பயிற்சிப் பள்ளியும் 'குருகுலமாய்' மாறிவிட்டால், அதுவே வளமான எதிர்காலத்திற்கான அடையாளம்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 24
"ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"
.. குறள் 190
பிறர் மீதுள்ளக் குற்றத்தைப் பார்ப்பதைப் போல தன் மீதுள்ளக் குற்றத்தையும் பார் என்கிறார் வள்ளுவர்.
அப்படியானால் பிறர் மீதுள்ளக் குற்றங்களைச் சுட்டிக்காட்டக் கூடாதா என்றால், காட்டலாம்; ஆனால், அதற்கொரு விதி இருக்கிறது. அதை மட்டும் நீ கடைப்பிடித்தால் இறைவன் கூட உன்னில் குற்றம் காண முடியாது என்கிறார் வள்ளுவர்.
"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கின்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு"
.. குறள் 436
நம் மீதுள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டு எது என்றால், அது 'சாதிப் பிரிவினைதான்'.
சாதிப்பிரிவினை என்று சொன்னாலே, 'வர்ணாஸ்ரம தர்மம்தான்' அதற்கு காரணம் எனச் சொல்கிறார்கள். உண்மையில் அந்தக் கருத்து சரிதானா?
வர்ணாஸ்ரம தர்மத்திற்கும் நடைமுறையில் உள்ள சாதிப் பிரிவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
வர்ணாஸ்ரமத்தில் உள்ள நான்கு பிரிவுகளும் குணத்தையும், செயலையும் அடிப்படையாகக் கொண்டு
(செயல் என்று சொல்வதைவிட 'நோக்கம்' என்று சொல்வது சரியாக இருக்கும்) உருவாக்கப்பட்டது. ஆனால், சாதிப் பெயர்கள் பிறப்பை வைத்து தீர்மானம் செய்யப் படுகிறது.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், சாதியின் பெயரால் மனிதர்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று சொல்லும் கொடுமை இன்னமும் இருக்கிறது அல்லவா? அத்தகைய மனப்போக்கை நீக்குவது நமது கடமை அல்லவா?
அதற்கான வழிதான் என்ன ?
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 25
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது பிறப்பை வைத்து வருவதல்ல. அது குணத்தின் அடிப்படையில் அமைய வேண்டிய ஒன்று.
பிறப்பை வைத்து நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று சொல்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
அதனால்தான் வள்ளுவரும்
"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் - கீழிருந்தும் கீழல்லார் கீழலல்லவர்" என்று கூறுகிறார்.
.. குறள் 973
அரசு இது சம்பந்தமாக இரண்டு காரியங்களைச் செய்யலாம்.
பல காரணங்களால் சாதிப் சான்றிதழ் இப்போதும் தேவைப் படுகிறது. ஆனால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது, சாதிப் பெயருக்குப் பதிலாக OC, BC, MBC, SC, ST என்று குறிப்பிடலாம். கூடவே, ஏழை மாணவர்களின் எதிர் கால நலனைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை OC எனக் குறிப்பிட வேண்டும்.
மற்றொன்று, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பொது மயானங்களை அமைக்க வேண்டும். எல்லா வசதிகளையும் உள்ளடக்கி அழகான பூந்தோட்டம் போன்று காட்சியளிக்க வேண்டும்.
மேலும் பொது மயானங்கள் அமைத்தபின், ஊரிலுள்ள ஒவ்வொரு சாதிக்கும் சொந்தமான மயானங்களைக் கையகப் படுத்தி, அடர் வனக் காடுகளாக மாற்ற வேண்டும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 26
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்"
.. குறள் 435
எதிர்காலத்தில் என்னென்னப் பிரச்சினைகள் வரும் எனச் சிந்தித்து அவற்றை வரவிடாமல் தடுக்காதவனின் வாழ்க்கை, எரிகின்றத் தீயின் முன் வைக்கோலை வைத்தது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.
இது தனி மனிதனைக் குறித்து எழுதியக் குறள் என்றாலும், நாட்டை ஆள்பவனுக்கும் இது பொருந்தும்.
நமது நாடு எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பிரச்சினைகள் நிறைய இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது 'மக்கள் தொகைப் பெருக்கம்'.
வளர்ந்த நாடுகளில் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் சராசரியாக எவ்வளவு மக்கள் வசிக்கின்றனர்; நமது நாட்டில் எவ்வளவு மக்கள் வசிக்கிறார்கள்; இரண்டு விகிதாச்சாரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று பார்த்தால் உண்மை நிலவரம் புரியும்.
அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, மக்கள் தொகைப் நெருக்கத்தைப் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அரசின் கடமை அல்லவா?
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 27
"ஆகா றளவிட்ட தாயினும்
கேடில்லை போகா றகலாக் கடை" .. குறள் 478
(ஒருவனுக்குப் பொருள் வரும் வழிகள் மிகக் குறைவாக இருந்தாலும் செலவினங்கள் பெருகாமல் கட்டுக்குள் இருக்குமானால் அவனுக்கு எக்கேடும் இல்லை)
இந்தக் குறள் ஆட்சியாளனுக்கும் பொருந்தும்.
வெளி நாட்டுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் பாக்கி என்று எதுவுமிலலை என்ற நிலையில் ஒரு நாடு இருந்தால், அதுவே அந்த
நாடு வளமான நாடு என்பதற்கான அடையாளம் ஆகும்.
ஆனால், வெளி நாட்டுக்குத் திருப்பி அளிக்க வேண்டியக் கடனைத் திருப்பி அளிக்க முடியாத நிலையில் ஒரு நாடு இருந்தால், அந்த நாடு தேவையற்றச் செலவினங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம் அல்லவா?
அத்தகையச் செலவினங்கள் ஒன்றா, இரண்டா .. நாம் பட்டியலிட. இருப்பினும் சிலவற்றைப் பற்றி ஆராய்வோம்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 28
தேவையற்ற செலவுகள் எவை என்று பார்த்தால், நிறையச் சொல்லலாம்.
சிலவற்றை மட்டும் பார்ப்போம்:-
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வழங்குவது நல்லதே. ஆனால், வசதி படைத்த மனிதர்களுக்கும் அவற்றை வழங்குவது சரியா?
அதேபோல், சைக்கிள், மடிக்கணினி போன்றவற்றை வசதியானக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏன் இலவசமாக வழங்க வேண்டும்?
அரசியலுக்கு வருபவர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என வருபவர்கள்; மற்றொன்று அரசியலை வைத்து தனது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வருபவர்கள்.
இவர்கள் MP, MLA போன்ற பதவிக்கு வரும்போது அவர்களுக்குப் பலவகையில் செலவு செய்ய நேரிடலாம். அதற்காக ஊதியம் வழங்குகிறோம். ஆனால், பதவிக் காலம் முடிந்தபின் எதற்காகப் பென்ஷன் வழங்க வேண்டும்? அப்படியே வழங்குவதாக இருந்தாலும், கோடியில் புரளும் சீமான்களுக்கும் பென்ஷன் வழங்குவது தேவையா?
ராஜ்ய சபா, legislative council போன்றவற்றில் அதிக உறுப்பினர்கள் தேவையா?இவற்றில் உள்ள உறுப்பினர்களின் முக்கியப் பணி, லோக் சபா, legislative assembly-ல் உள்ளவர்கள் தவறான சட்டங்கள் எதையும் இயற்ற விடாமல் கண்காணிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு விவேகமாக மற்றும் சட்டபூர்வமாகச் சிந்திக்கத் தெரிந்த ஒருசில சான்றோர்களே போதுமே!
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 29
"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்"
.. குறள் 550.
இந்தக் குறளுக்கு பலர் பலவிதமானக் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
நான் வேறு விதமாகப் பொருள் கொள்கிறேன்.
"கொலையிற் கொடியார்" என்றால் என்ன? கொலை செய்வதை விடக் கொடிய காரியம் என்று எதைச் சொல்லலாம்.
ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்தால், நிச்சயம் இறந்தவனின் குடும்பம் பாதிக்கப்படும்.
குடும்பம் பாதிக்கப் படுவதற்குப் பதிலாக, ஒரு சமூகமேப் பாதிக்கப் பட்டால், அதற்குக் காரணமாக இருப்பவர் 'கொலையிற் கொடியார்'தானே!
சமூகத்திற்கும் பதிலாக நாடேப் பாதிக்கப் பட்டால், அதற்குக் காரணமானவர்களை என்னவென்று சொல்வது?
சிலர் செய்யும் காரியங்களால் நாடே பாதிப்படைகிறது என்றால், அதற்கான அடையாளம் என்னென்ன?
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 30
நமது நாட்டைப் பொறுத்தவரை 'கொலையை விடக் கொடிய செயல்' எது?
நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரத்தை சீரழிப்பது, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொள்வது, தேசத்தின் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிப்பது, உள்நாட்டில் கலவரங்களை உண்டு பண்ணுவது எனப் பலவற்றைப் சொல்லலாம்; இருந்தாலும் எவையெல்லாம் 'கொலையினும் கொடியது' என்று அரசியல் கட்சிகளும், சட்ட வல்லுநர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.
"வேந்தொறுத்தல்" என்றால் வேந்தன் உரியத் தண்டனையைக் கொடுத்து,
அது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
அதற்கு உதாரணமாக "களை" எடுப்பதைப் பற்றிச் சொல்கிறார்.
ஆனால், வேந்தன் நாட்டில் உள்ளக் களைகளை நீக்குவதற்கு இரண்டு முறைகளைக் கையாள வேண்டும்.
அவை ---
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 31
முந்தைய பதிவில் வேந்தன் நாட்டில் உள்ளக் களைகளை நீக்குவதற்கு இரண்டு விதமான முறைகளைக் கையாள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதற்குக் காரணம் நாட்டைக் கெடுக்க முயற்சிக்கும் களைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அவை ---
1. நாட்டில் அமைதியைக் குலைக்க வேண்டும்; முடிந்தால் நாட்டைத் துண்டாட வேண்டும் என நினைத்து மக்களிடையே விஷத்தை விதைப்பவர்கள்.
2. அதை அமுதமென்று நம்பி தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள்.
இரண்டாவது 'களை' நம் கண்களுக்குத் தெரியும்; முதலாவது 'களை' நம் கண் முன்னே வராது.
இரண்டாவது வகை மனிதர்களைத் திருத்துவது சிரமம்தான். ஆனாலும் அவர்களிடம் உண்மையைப் புரிய வைத்துவிட்டால், பின்னர் அது போன்றத் தவறுகளைச் செய்ய மாட்டார்கள். இதற்குக் கூட சில தண்டனைகள் தேவைப் படலாம்.
முதல் வகை மனிதர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள் ---
"நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் - ஞானத்தங்கமே.."
அவர்களை எளிதில் கண்டு கொள்ள முடியாது.
அதனால்தான் வள்ளுவரும் இந்தக் குறளைத் தருகிறார்--
"தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து" .. குறள் 828
மதம், இனம், கட்சி என எல்லா இடங்களிலும் இவர்கள் இருப்பார்கள்.
இவர்களைத் குறித்து,
"அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் காட்டவே
எண்ணம் கொண்ட பாவிகள்" எனத் திட்டித் தீர்க்கிறார் ஒரு கவிஞர்.
இவர்களை இனம் கண்டு உரிய தண்டனை கொடுத்து, விஷம் நிறைந்தக் கருத்துக்களை மீண்டும் கூற இயலாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது வேந்தனின் தலையாயக் கடமையாகும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 32
"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்" .. குறள் 44
வாழ்க்கை நன்கு அமைய, திருவள்ளுவர் இரண்டு விதிகளைக் குறிப்பிடுகிறார்.
1. பழிக்கு அஞ்சி பொருள் ஈட்ட வேண்டும்.
2. ஈட்டிய பொருளைப் பகுத்து உண்ண வேண்டும்.
இந்த விதிகளை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், தவறான வழிகளில் பொருள் ஈட்டக் கூடாது; ஈட்டியப் பொருளிலும் தன் தேவைக்குப் போக மிஞ்சியதைத் தேவைப்படும் இடங்களில் பகிர்ந்தளிக்க வேண்டும்.
தனி மனிதனைக் குறித்து சொன்னாலும், இந்த விதிகளை ஆட்சி செய்பவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
முதலாவதாக, ஊழல் எதுவும் செய்யக்கூடாது.
இரண்டாவதாக, மக்களைத் துன்புறுத்தாமல் பொருள் ஈட்ட வேண்டும்.
மூன்றாவதாக, ஈட்டிய பொருள் அடித்தட்டு மக்களுக்கும் பயன் படுவதாக இருக்க வேண்டும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 33
"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது" .. குறள் 68
(பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்)
சிறு வயதில் குழந்தைகளுக்குக் கற்றுக் கொள்ளும் திறமை அதிகமாக இருக்கும். அந்தப் பருவத்தில், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதில் ஆசிரியருக்குப் பெரும் பங்குண்டு.
ஒரு பொன்மொழி ஆசிரியர்களை நான்கு விதமாகப் பிரித்துக் காட்டுகிறது.
அது ---
A poor teacher tells;
An average teacher explains;
A good teacher demonstrates;
An excellent teacher inspires.
குழந்தைகளுக்கு ஆசிரியரின் மீது அன்பும், மரியாதையும் வரவேண்டுமென்றால், அவர் குழந்தைகள் மனதில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உண்டு பண்ண வேண்டும்.
அத்தகையத் தாக்கத்தை உண்டு பண்ணாத காரணத்தினால்தான், மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் நடந்து கொள்கிறார்கள்.
"..மன்னுயிர்க் கெல்லாம் இனிது" என்று சொன்ன வள்ளுவர், மறைமுகமாக இன்னொன்றையும் வலியுறுத்துவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
"..தம்மின்தம் மக்கள் அறிவுடைமை" குறையத் தொடங்கினால், மாநிலத்து
மன்னுயிர்க்கு இனிது நடக்காது; மாறாக கேடுதான் வரும் என்கிறார்.
எனவே ஆசிரியப் பெருமக்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொண்டு, மாணவர்கள் தங்களைக் 'குருவாகப்' பார்க்கும்படி நடந்துகொள்ள வேண்டும்; அரசும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 34
"பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்"
.. குறள் 196
(பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்ல வேண்டும்)
பொதுவாகத் தனது கருத்துக்களை இனிமையான முறையில் கூறும் வள்ளுவர், ஒரு சிலப் பாடல்களில் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கிறார். அவற்றில் இந்தப் பாடலும் ஒன்று.
பயனில்லாத சொற்களைச் சொல்லும் ஒருவன், அதனைப் பிறர் ரசிக்கக் கண்டால், தன்னைத்தானேப் பாராட்டத் தொடங்குவான். பிறகு அது ஒரு தொடர்கதையாக மாறிவிடும்.
அதுபோன்ற மனிதர்களை உற்று நோக்கினால், நமக்கு ஒரு உண்மை புரியும்.
அவர்களைச் சுற்றி துதிபாடும் கூட்டம் ஒன்று உருவாகி விடும். பிறரைப் பற்றி நையாண்டி பேசுவது ஒரு பழக்கமாக மாறிவிடும்.
எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே அங்கு ஆட்சி செய்யும்.
இத்தகைய மனிதர்களால் சமுதாயத்திற்கு எந்தவித நல்லதும் நடக்காது. அதனால்தான் அத்தகைய மனிதர்களைப் "பதர்" எனக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
சமுதாயத்தில் எல்லா மட்டங்களிலும் இது போன்ற மனிதர்கள் இருப்பதுண்டு. ஆனாலும் இத்தகைய மனிதர்கள் அரசியலில் நுழைவது விரும்பத்தகாத ஒன்று.
அதற்கான காரணம் என்ன?
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 35
ஆயிரம் மலர்கள் நம் கண் முன்னே இருந்தாலும், நூல் என்ற ஒன்று இல்லையென்றால் நம்மால் அவற்றை மாலையாகக் கட்ட முடியாது.
சிதறிக் கிடக்கும் பூக்களைச் போல், நாட்டிலுள்ள மக்களும் மதம், மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பலப்பல பிரிவுகளாக இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைப்பது அரசியல்வாதிகளே!?
அவர்கள்தானே நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டியவர்கள்!
மக்கள் எல்லோரும் மலர்கள் என்றால், அரசியல்வாதி உறுதியான நூலாக இருக்க வேண்டும்.
அவன் பயனற்ற சொற்களைச் சொல்வதில் ஆர்வமாக இருந்து அவனது அதிகாரத்தின் கீழ் ஆட்சி நடக்குமென்றால், அந்த ஆட்சி நல்லாட்சியாக அமையுமா?
பயனற்ற சொற்களைப் பேசியே வாழும் ஒரு மனிதனால் ஆக்கபூர்வமாக சிந்திக்க இயலுமா?
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 36
"மறந்தும் பிறன்கேடு சூழற்க - - சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு" .. குறள் 204
(பிறருக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது; எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்)
'அறம்' என்ற வார்த்தையை வட மொழியில் 'தர்மம்' எனக் கூறுவார்கள். இரண்டு வார்த்தைகளையும் நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம்.
இந்த இடத்தில், 'அறம்' என்றால் 'இயற்கையின் நியதி' என்று எடுத்துக் கொள்வோம்.
நமது செயல்கள் என்பது நமது எண்ணங்களின் வெளிப்பாடு. ஆனாலும், பல நேரங்களில் நமது செயல் நல்லதாகத் தோன்றலாம். ஆனால் நமது நோக்கம் வேறுவிதமாக இருக்கும்.
அதனால்தான் வள்ளுவர் செயல்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், எண்ணங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.
இந்தப் பாடலில் வரும்
"பிறன்கேடு சூழற்க" என்ற வார்த்தைகள் நிகழ் காலத்தையும், "அறஞ்சூழும்"
என்ற வார்த்தை எதிர் காலத்தையும் குறிப்பவை.
"சூழற்க - சூழின்" -- எண்ணாதே - எண்ணினால் என ஒரு அறிவுரையாகச் சொல்லும் வள்ளுவர், "சூழும்" என்று சொல்லும்போது, இயற்கையின் நியதிப்படி எதிர் காலத்தில் உனக்குக் கேடு நடக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு -- "கெடுவான் கேடு நினைப்பான்". இதைக் கொஞ்சம் மாற்றிப் சொன்னால், இதன் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது --
"கேடு நினைப்பான் கெடுவான்". முன்னது ஊகம்; பின்னது நிச்சயம்.
இயற்கையின் நியதியில் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும்.
இது தனி மனிதனுக்கும், அரசியல்வாதிக்கும் எவ்வாறு நிகழும் எனப் பார்ப்போம்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 37
பிறருக்குக் கேடு செய்யும் பல மனிதர்கள் பின்னாளில் துயரங்களுக்கு ஆளாவதைப் பார்த்திருப்போம். அதே நேரம்
பிறரை வஞ்சித்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் மனிதர்களையும் பார்க்கிறோம். அப்படியானால், வள்ளுவர் சொல்வது தவறா எனத் தோன்றலாம்.
இந்த இடத்தில் 'சந்தோஷம்', 'மன நிம்மதி' இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
பிறருக்குத் கேடு நினைப்பவன், பிறரை வஞ்சித்து வாழ்பவன் மற்றவர் முன்னிலையில் சந்தோஷமாக இருப்பதைக் காணலாம். ஆனால், தனிமையில் இருக்கும்போது மனதில் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பான். அது நமக்குத் தெரியாது.
மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக் கூடாது என்பதனால்தான், "பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே" என்று சான்றோர்கள் சொல்கிறார்கள்.
.... .... .... ....
தனி மனிதர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும்.
இப்போது ஆட்சி என்பது அரசியல்வாதி கையில் உள்ளது. முன்னர் அரசர்கள் கையில் இருந்தது.
அவர்கள் ஏன் அந்நிய மற்ற சக்திகளிடம் தோற்றுப் போனார்கள்? "மறந்தும் பிறன் கேடு சூழற்க" என்ற வள்ளுவர் வாக்கை மறந்ததுதான் காரணம்.
.... .... .... ....
நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், நாம் அவரிடமிருந்து ஒதுங்கிக் கொள்ளலாம். அது தவறில்லை. ஆனால், அவருக்கு சாபம் விடுவது, கேடு நினைப்பது போன்றவை எதிர் காலத்தில் நமது நிம்மதியைக் குலைத்து விடும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 38
"ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து" .. குறள் 220
(பிறருக்கு உதவி செய்வதால் தனக்குக் கேடு (அல்லது வறுமை) வரலாம் என்று தெரிந்தாலும், அவன் தன்னை விற்றாவது அவ்வுதவியை செய்யத் தயங்கக் கூடாது)
உதவி என்றால், பிறருக்குப்
பணம் கொடுத்து உதவுவது, மற்றும் தேவைப்பட்டால் உடல் உழைப்பைக் கொடுப்பது எனத் தோன்றலாம்.
ஆனால், ஒரு அரசியல்வாதியைப் பொறுத்தவரை, அவரால் பல வழிகளில் உதவ முடியும். ஒரு சின்னக் கற்பனை ...
தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் மது விலக்கை அமுல்படுத்த தயக்கம் காட்டுகின்றன. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
அடுத்த தேர்தலில் வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து மது விலக்கை அமுல் படுத்தினால், என்ன நடக்கும்?
பல குடும்பத் தலைவிகளும், பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களும் தலைமைப் பொறுப்பில் உள்ள ஆட்சியாளரை மனதாரப் பாராட்டுவார்கள்; ஏன்? சட்டத் திருத்தத்தின் மூலம், அவர் செய்த உதவி அப்படிப் பட்டது.
இத்தகைய உதவியையும் 'ஒப்புரவு' என்று அழைக்கலாம்தானே!?
அதேநேரம் இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் சாராய ஆலை அதிபர்கள், அவர்கள் மூலம் கமிஷன் பெற்றவர்கள், மதுபான விற்பனைக்கான கடைகளை நடத்தியவர்கள், போதைக்கு அடிமையாய் இருந்தவர்கள், மற்றும் ஒரு சில மாணவ-மாணவியர் உட்பட பலரும் பாதிக்கப் படுவார்கள். அவர்களில் யாரேனும் ஆட்சியாளரைப் பழி வாங்கத் துடிக்கலாம் அல்லவா?
அவர்கள் மூலம் கேடு வர வாய்ப்பு இருப்பது தெரிந்தாலும், இதுபோன்ற 'ஒப்புரவை' உயிருக்கு பங்கம் வந்தாலும் பரவாயில்லை எனத் துணிந்து செய்ய வேண்டுமென்கிறார் வள்ளுவர்.
மேலே சொன்னது கற்பனை; நடந்த நிகழ்வு ஒன்றைப் பார்ப்போமா? அதன்மூலம் 'ஒப்புரவின்' மேன்மையை நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒப்புரவை நிகழ்த்தியது நமது பாரதப் பிரதமர்; ஆனால், தூக்கமில்லாமல் தவித்தது எனது நண்பர்.
அது ...
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 39
கடந்த ஏப்ரல் மாதக் கடைசியில் நமது பிரதமர் காஷ்மீர் சென்று 20000 கோடி ரூபாய்க்கான நலத்திட்டங்களைத் துவக்கிவைத்தார்.
அவர் சென்றதற்கு மறுநாள் எனது நண்பரை தற்செயலாகக் பார்க்க நேர்ந்தது. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், 'நேற்று இரவு முழுவதும் சரியாகத் தூங்க முடியவில்லை' என்றார். ஏன் என்று கேட்டதற்கு 'காஷ்மீர் சென்றிருக்கும் பிரதமர் நல்ல படியாக ஊர் (டெல்லி) திரும்ப வேண்டுமே என்ற கவலைதான்' என்றார். அந்த அளவிற்கு அவருக்கு ஏன் கவலை வந்தது?
நமது பிரதமர் இயற்றிய 'முத்தலாக்' தடைச்சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த அதிகாரத்தை திரும்பப் பெற்றது ஆகிய இரண்டு சீர்திருத்தங்களும் அவருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பலரிடம் கோபத்தை உண்டு பண்ணியது.
இந்தத் திருத்தங்கள் பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய 'ஒப்புரவு'.
ஆனால், அதை விரும்பாதவர்களுக்கு!?
அவர்களால் ஏதாவது ஒரு இடையூறு வரலாம் எனத் தெரிந்தாலும், நல்லதைச் செய்யத் தயங்காதே; அதுவே உண்மையான 'ஒப்புரவு' என்கிறார் வள்ளுவர்.
ஒவ்வொரு அரசியல்வாதியும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதி இது!
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 40
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு" .. குறள் 212
(ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
.. மு. வரதராசனார்
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப் படுவோர்க்கு உதவுவதற்கே.
.. சாலமன் பாப்பையா
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
.. கலைஞர்)
இந்தக் குறளில் வரும் "தக்கார்" என்ற வார்த்தைக்குப் பொதுவாக 'நல்லவர், அறிஞர், சான்றோர்' என்றெல்லாம் பொருள் சொல்வதுண்டு.
ஆனால், இங்கு மூன்று விதமான பொருட்கள் தரப்பட்டுள்ளன.
திருக்குறளுக்கு உரை எழுதிய
திரு. மு. வரதராசனார் அவர்கள் "தக்கவர்க்கு" எனச் சொல்லுகிறார். ஆனால், "தக்கவர்" என யாரைச் சொல்வது?
பட்டிமன்ற நடுவர்
திரு. சாலமன் பாப்பையா அவர்கள் "பொருள் தேவைப் படுவோர்" எனச் சொல்லுகிறார்.
கலைஞர் அவர்களோ "தகுதியுடையோர்" எனக் குறிப்பிடுகிறார்.
ஆக, உதவி பெற வேண்டியவர் "உதவி தேவைப் படுகிறவராகவும், அதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராகவும்" இருக்க வேண்டும் எனப் பொருள் கொள்ளலாமா?
நாட்டை ஆள்பவன் யாரைத் "தக்கார்" என அடையாளம் காண வேண்டும்?
"பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்று சொல்வார்கள். பிச்சை இடுவதற்கே சரியானப் பாத்திரம்தானா என அறிந்துகொள்ள வேண்டுமென்றால், உதவி செய்யும் பொழுது "தக்காரை" சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா?
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 41
நாட்டை ஆள்பவர்கள் யாரைத் "தக்கார்" என அடையாளம் காண வேண்டும்?
"தக்கார்" என்பவன் தகுதி உள்ளவனாகவும், தேவை என்ற நிலையில் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
நாட்டின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் வருவாயைப் பயன்படுத்த வேண்டும். மற்றும் எதிர் காலத் தேவைகளுக்கும் வருவாயிலிருந்து பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
மீதமுள்ளப் பணத்தைத்
தான் "தக்காருக்கு" உதவியாகக் கொடுக்க முடியும்.
ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தேவையற்ற மற்றும் அநாவசியமான செலவினங்களைத் தவிர்ப்பது அவர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 42
"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் - மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்"
.. குறள் 214
(ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்)
"ஒத்தது அறிவான்" .. இந்த உலகம் எதை சரியென்று ஏற்றுக் கொண்டதோ அல்லது ஏற்றுக் கொள்ளுமோ, அதை அறிந்து கொண்டவன் எனப் பொருள் கொள்ளலாம்.
ஒரு மனிதனிடம் விதவிதமாக 10 கார்கள் இருந்தால், அது சரியா? வெறும் மோகம் மட்டுமே!?
அதற்குச் செலவிடும் பணத்தை தக்கார்க்கு கொடுத்து உதவலாம். அந்தச் செயலை உலகம் உவந்து ஏற்றுக் கொள்ளும். அவன்தான் உயிர் வாழத் தகுதியானவன் என்கிறார் வள்ளுவர்.
மாறாக தன் சுகம் மட்டுமே முக்கியம் என்று நினைப்பவனை "செத்த பிணத்திற்கு சமம்" என்று வசை பாடுகிறார்.
இதிலிருந்து ஆட்சியாளன் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
மாடமாளிகைகள் இருப்பதால் மட்டுமே, ஒரு நாட்டை வளமான நாடு என்று சொல்லக்கூடாது. வளமான நாடு என்றால் அங்கு குடிசைகளும் இருக்கக்கூடாது. இருந்தால், அது வளம் குன்றிய வறுமையான நாட்டைப் போன்றதுதான் -- உயிர்ப்பில்லாதது என்கிறார் வள்ளுவர்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 43
"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி" .. குறள் 226
(வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்)
இந்தக் குறள் தனி மனிதனைக் குறித்துப் பாடியது. இருப்பினும் இதில் சொல்லப்பட்ட கருத்து ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.
நாட்டை ஆள்பவன் வருவாயைப் பெருக்கலாம்; பலவிதமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தலாம். வளரும் நாடாக இருந்ததை வளர்ந்த நாடாகவும் மாற்றி விடலாம். வருங்காலத் தேவைக்காக நிறைய சேமித்தும் வைக்கலாம்.
ஆனால், நாட்டில் வசதிகளை மேம்படுத்திய ஆட்சியாளன், வறிய நிலையில் வாழும் மக்களின் கடும் பசியைப் போக்கினால் மட்டுமே அவன் நாட்டிற்காக சேமித்து வைத்த செல்வம் அனைத்தும் பிற்காலத்தில் உதவியாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 44
"புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்"
.. குறள் 237
(தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?)
அரசியலுக்கு வரும் மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் --
1. சேவை மனப்பான்மை
2. பணம் சம்பாதிக்கும் ஆசை
3. பதவி சுகம்
இந்த மூன்று வகை மனிதர்களில்,
பணத்திற்காகவும், பதவி சுகத்திற்காகவும் ஆட்சியில் அமர்ந்தால் அவர்களால் புகழைச் சம்பாதிக்க முடியாது. எனவே நிச்சயம் மக்களால் இகழப்படுவார்கள்.
அது இயற்கையான ஒன்று. அதுபோன்ற சமயங்களில் அவர்கள் தம்மைத் திருத்திக் கொள்ளாமல், இகழ்ந்து பேசும் மக்களை நொந்து என்ன பயன் என்கிறார் வள்ளுவர்.
சேவை மனப்பான்மையுடன் ஆட்சி செய்பவனைத் தேடி புகழ் வந்தடையும். ஆனால் அவனையும் இகழ்ந்து பேசும் மனிதர்கள் இருப்பார்கள். அதை நினைத்து மனம் நொந்து போகக்கூடாது என்கிறார் வள்ளுவர்.
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல், தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் எனக் கூறுகிறார் வள்ளுவர்.
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை" .. குறள் 151
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 45
"சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்" .. குறள் 311
(மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்)
நீ மாசற்ற மனிதனாய் இருக்க விரும்பினால் யாருக்கும் 'கேடு' செய்யாதே என்று சொன்ன வள்ளுவர், அரசியல்வாதியிடம் என்ன சொல்லியிருப்பார்?
நீ மாசற்ற அரசியல்வாதியாக வாழ விரும்பினால், 'ஊழல்' செய்யாதே என்று சொல்லியிருப்பார்!?
மாசற்ற அரசியல்வாதியாக இருந்தால் மட்டும் போதாது;
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தையும் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனைய வேண்டும் என்கிறார்.
"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை" .. குறள் 315
இதையெல்லாம் விட்டுவிட்டு பிறருக்குத் தீங்கு செய்தால், பின்னாளில் உனக்கும் அதைப்போன்றதொரு தீங்கு வந்து சேரும் எனவும் எச்சரிக்கிறார்
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்"
.. குறள் 319
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 46
"படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு"
.. குறள் 381
ஒரு அரசு உண்மையாகவே வலிமையான அரசாகத்தான் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள 'ஆறு அடையாளங்கள்' அந்த நாட்டில் இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே அதனை வலிமையான அரசாகக் கருத முடியும் என்கிறார் வள்ளுவர்.
அவை - -
* ஆற்றல் மிகுந்த படை,
* நல்ல குடிமக்கள்
* குறையா வளம்
*குறை எதுவும் சொல்ல
முடியாத அமைச்சு
*பிரிக்க முடியாத நட்பு
*மோதி அழிக்க முடியாத
அரண்
"இறைமாட்சி" என்ற அதிகாரத்தில், மேலே சொன்ன குறளில் வலிமையான அரசுக்கான அடையாளங்கள் எவையெனக் குறிப்பிட்ட வள்ளுவர், மீதி ஒன்பது பாடல்களிலும் ஆட்சியாளர்களுக்கு இருக்க
வேண்டிய தகுதிகள்/பண்புகள் பற்றிக் குறிப்பிடுகிறார். கூடவே வரி வசூல் சம்பந்தமாகவும் சில விதிகளை வலியுறுத்துகிறார்.
அவை - -
.. துணிவு
.. இரக்க சிந்தனை
.. அறிவாற்றல்
.. உயர்ந்த குறிக்கோளை
எட்டும் முயற்சி
.. காலத்தை வீணடிக்காமல்
விரைந்து செயலாற்றுதல்
.. அறிவுடைமை
.. அறநெறி தவறாமை
.. குற்றமேதும் செய்யாமை
.. வீரமும், மானமும்
இணைந்த ஆட்சி
.. காட்சிக்கு எளிமையாய்
இருத்தல்
.. கடுஞ்சொல் கூறாத
பக்குவம்
.. காதில் விழும் கடும்
சொற்களையும் பொறுத்துக்
கொள்ளுதல்
.. முறையாக நிதி
ஆதாரங்களை வகுத்து,
அரசாங்கக்
கருவூலத்திற்கான
வருவாயைப் பெருக்கி,
அதைப் பாதுக்காத்து,
திட்டமிட்டுச் செலவிடுவது.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 47
"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்" .. குறள் 415
(வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்)
'ஒழுக்கம் உடையாரின் அறிவுரை' என்ற வள்ளுவர் கூற்றை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
நமது நாட்டைப் பொறுத்தவரை பிரதம மந்திரி முக்கிய இடத்தில் இருப்பவர்; அவருக்கு உறுதுணையாக பல துறைகள் சார்ந்த அமைச்சர்கள் உண்டு.
இவர்களுக்கு "ஊன்றுகோலாக" செயல்பட வேண்டியவர்கள் ராஜ்ய சபா உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள்.
இவர்களது அறிவுரை அமைச்சர்களுக்கு அவசியம் தேவை. ஏனெனில், அமைச்சர்கள் வேகமாகச் செயல்பட வேண்டியவர்கள். ஊன்றுகோலாய் இருப்பவர்கள் விவேகமாக, நிதானமாக சிந்திப்பவர்கள்.
ஆனால், இங்கு வள்ளுவர் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறார். பொதுவாக ஊன்றுகோலாய் இருப்பவர்கள் சான்றோர்களாக இருக்க வேண்டும். ஆனால், பல சமயங்களில் சான்றோர்களாகக் காட்சி தருபவர்கள் ஒழுக்கமற்றவர்களாகவும் இருப்பார்கள். இதனை "மித்யாச்சாரம்" என்கிறார் பகவான் கிருஷ்ணர் - - அதாவது "பொய்யொழுக்கம்" என்கிறார்.
எனவேதான் ஊன்றுகோலாய் இருப்பவர்கள் ஒழுக்கம் நிறைந்த மனிதர்களாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
ஒழுக்கத்தில் சிறந்த மனிதர் படிக்காதவராகக்கூட இருக்கலாம். ஆனால், அவரது அனுபவ அறிவு அவரை சான்றோராக ஆக்கிவிடும்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 48
"குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை"
.. குறள் 434
(குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்)
நான் முன்பு பொதுப்பணித் துறையில் வேலை பார்த்த பொழுது, ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தனக்குக் கீழ் வேலை பார்க்கும் பொறியாளர்களுக்குக் கொடுக்கும் புத்திமதி இது--
"If you want to avoid audit don't do any work".
அவர் வேடிக்கையாகச் சொன்னாரா அல்லது உண்மையாகச் சொன்னாரா என எனக்குத் தெரியாது.
ஆனால், வேலை செய்யாமலே காலத்தை ஓட்டிய பலரை நான் பார்த்திருக்கிறேன். பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.
நல்ல ஆட்சியாளன் என்பவன் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும். தவறுகள் நேரிடலாம்; மீண்டும் அதுபோன்ற தவறுகள் நடைபெறா வண்ணம் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கூறிய ஒரு பொன்மொழி - -
"Risk must be undertaken and mistake be committed in good faith".
துணிந்து ஒரு காரியத்தில் இறங்கினால், சில நேரங்களில் அது தவறாக முடியலாம். அதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம்
என்கிறார் வள்ளுவர். மறுமுறை அதை சரியாகச் செய்து விடலாம்.
ஆனால், பழிச்சொல்லுக்கு ஆளாகும் விதமாக குற்றம் ஏதும் செய்து விடாதே என எச்சரிக்கிறார். ஏனெனில் அது அழிவைத் தரும் பகையாக மாறிவிடும் என்கிறார் வள்ளுவர்.
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 49
திருக்குறளை மேற்கோள் காட்டி இன்னும் நிறையப் பதிவிடலாம். ஆனால், பெரியோர்கள் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று சொல்கிறார்கள். எனவே இத்துடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன்.
இருப்பினும் இது சம்பந்தமாக எனது தனிப்பட்ட கருத்து ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
நமது நாட்டிலிருந்து வெளியான நூல்களில் அந்நிய மொழிகளில் அதிகமாக மொழி பெயர்க்கப் பட்ட நூல்கள் எவை எனப் பார்த்தால், "திருக்குறளும், பகவத்கீதையும்" முதலாவதாக வரும் என நினைக்கிறேன்.
பலர் பகவத்கீதையை மதநூல் என்பார்கள். அது மதநூல் அல்ல; மதத்திலிருந்து வெளிவந்த ஒரு ஆன்மிக நூல் மட்டுமே.
திருக்குறள், பகவத்கீதை இரண்டுமே ஆன்மிகக் களஞ்சியங்கள். ஆனாலும், அவற்றிற்கிடையே ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது.
அது - -
(தொடரும்)
ஆன்மிக அரசியல்
பதிவு 50
திருக்குறள் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்; எப்படி வாழக்கூடாது எனக் கோடிட்டுக் காட்டுகிறது. அது சம்பந்தமாக சில விதிகளையும் வரையறுத்துக் கூறுகிறது.
ஆனால், பகவத்கீதை ஒரு மனிதன் 'வாழ்வாங்கு வாழ விரும்பினால்', அவன் என்ன செய்ய வேண்டும் எனப் பல வழிகளைச் சுட்டிக் காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனும் அவனது இயல்புக்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணத்தைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
வாழ்க்கையில் நல்ல முறையில் வாழ முடியாமல் வீழ்ந்து விட்டவர்களுக்கும், அதற்கான காரணங்கள் என்னவென்று சொல்வதோடு, அவன் செய்த தவறுகளிலிருந்து மீண்டு வர
அவன் என்ன செய்ய வேண்டும் என்றும் பகவத்கீதை சொல்கிறது.
இரண்டு நூல்களையும் நன்கு புரிந்து கற்று வந்தால் நல்ல பயனை அடைய முடியும் என்பது எனக்கு அனுபவம் உணர்த்திய உண்மை.
நன்றி.
என்றும் அன்புடன்,
உங்களில் ஒருவன்.
No comments:
Post a Comment