சிவலிங்க தியானம்
பதிவு 1
அன்புள்ள நண்பர்களுக்கு,
இனிவரும் ஒரு சில பதிவுகள் "சிவலிங்கத்துடன்" தொடர்புடையவை.
முதலில் இவற்றை பதிவிட ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், "சிவலிங்கம்" பற்றி கொச்சையாகவும், அருவருப்பாகவும் ஊடகங்களில் பகிர்வுகளைப் பார்க்கும்போது, நமது அனுபவத்தை சொல்வதில் தவறில்லை என நினைத்துக்கொண்டேன்.
"சிவலிங்கம்" பற்றிய பதிவுகளாகத் தோன்றினாலும், முடிவில் சொல்லப்போகும் கருத்து, 'தியானம்' செய்ய விரும்புகிறவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
இதுவரை வந்த பதிவுகள் அனைத்தும், நான் கற்றதையும், கற்றுப் புரிந்ததையும் வைத்து எழுதப்பட்டவை.
ஆனால், இந்தப் பதிவுகளைப் பொறுத்தவரை, இதில் கற்றலுமில்லை; கற்றுப் புரிந்ததுமில்லை.
ஊகங்களின் அடிப்படையில் எனக்குள் தோன்றியதை இந்தப் பதிவுகள் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
சிவனடியார்கள் அனைவர் மனதிலும் 'சிவலிங்கத்தை' நினைக்கும் பொழுது உன்னதமான எண்ணங்கள் இருக்கும்.
என்னுடைய பதிவுகள் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றினால், அவற்றை புறந்தள்ளி விடுங்கள்.
(தொடரும்)
சிவலிங்க தியானம்
பதிவு 2
ஒரு சில சிவன் கோயில்களைத் தவிர்த்து மற்றெல்லாக் கோயில்களிலும் "சிவலிங்கத்தை" கர்ப்பக்கிருகத்தில் வைத்து வணங்குகிறார்கள்.
பல
வெளிநாடுகளிலும் கூட, "சிவலிங்கம்" இருப்பதை ஊடகங்கள் வாயிலாகப் பார்த்திருக்கிறோம்.
பிற தெய்வங்களுக்கான கோயில்களில், சம்பந்தப்பட்ட கடவுளின் சிலையை வைத்து வணங்குகிறார்கள்.
ஆனால், சிவன் கோயிலில் மட்டும் "சிவலிங்கத்தை" வைத்து வணங்குவதை பார்க்கும்போது, வியப்பாக இருக்கும்.
"சிவலிங்கம்" உருவானது எப்படி என்ற கதைகளைப் படித்தாலும், அவற்றை மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனாலும் "சிவலிங்கம்" நமக்கு எதையோ உணர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட குறியீடு என்ற உணர்வு மட்டும் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது.
அது என்னவாக இருக்கும்?
(தொடரும்)
சிவலிங்க தியானம்
பதிவு 3
இயல்பாகவே ஆரவாரம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால், எனக்கு 'பிரத்தியாஹாரம்' எளிதில் கைகூடியது.
அதனைத் தொடர்ந்து 'தாரணையும்' எளிதாகவே இருந்தது.
ஆனால், 'தியானப் பயிற்சியில்' மனதால் முழுமையாக இயங்க முடியவில்லை.
காரணம் மனதில் சந்தேகம் எழுந்தால், அதற்கு விடை கிடைக்காவிட்டால் எனது செயல் நின்றுவிடுகிறது.
வெறும் நம்பிக்கையை வைத்து எந்த காரியத்திலும் என்னால் பங்கு கொள்ள முடிவதில்லை.
தியானப்பயிற்சியை மேற்கொள்ள முயன்றபோதும், அதே பிரச்சினைதான். மனதில் சில சந்தேகங்கள் வந்துவிட்டன.
அவை..
1. 'தியானம்' என்பது அஷ்டாங்க யோகத்தில் வருகிறது. தியானம் செய்யும்போது, 'ஆக்ஞா' சக்கரத்தில் கவனம் வைக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கும், தியானத்திற்கும் என்ன சம்பந்தம்?
2. 'ஆக்ஞா' சக்கரம் எங்கு இருக்கிறது என்றால், பலவிதமான பதில்கள் வருகின்றன. எதை சரியென்று எடுத்துக் கொள்வது?
3. ஏழு சக்கரங்களில், முதல் ஆறு சக்கரங்களும் முதுகுத் தண்டில் உள்ளன என்றால், 'ஆக்ஞா' சக்கரம் மட்டும் புருவ மத்தியில் உள்ளது என்று ஏன் சொல்லவேண்டும்?
விடை கிடைக்காதபோது, அமைதியில் ஆழ்ந்துவிடுவது எனது பழக்கம். ஒரு சில நாட்கள் கழித்து ஏதோவொரு வழியில் விடை கிடைக்கும்.
இதற்கும் ஒரு விடை கிடைத்தது. அந்த விடை 'உள்ளிருந்து' வந்தது. அப்படி ஒரு விடையை நான் எதிர்பார்க்கவே இல்லை.
அந்த விடை ..
"சிவத்தை எடு; அவத்தை விடு"
(தொடரும்)
சிவலிங்க தியானம்
பதிவு 4
எனக்குள் தோன்றிய விடை, நான் எதிர்பார்க்காத ஒன்று. ஆனாலும், அது ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது.
எனது தேடுதலை சிவலிங்கத்திலிருந்து ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன்.
சிவலிங்கம் என்றவுடன் "சிவனது" நினைவு வருவது இயல்பு. இது ஒன்றுடன் ஒன்று என ஒரு சங்கிலியாகத் தொடர்ந்தது.
அந்த சங்கிலியின் கண்ணிகள் ..
1. சிவலிங்கம்
2. தியானம் ("சிவன்" எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால்) அவரே ஒரு "தியான மூர்த்தி" தானே!
3. 'ஆக்ஞா' சக்கரம் (தியானத்தில் 'ஆக்ஞா'வில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்)
4. ஏழு சக்கரங்கள் ('ஆக்ஞா'வும் ஒரு சக்கரம்)
5. இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை நாடிகள்
6. முதுகெலும்பு
7. முதுகெலும்பை ஒட்டி உள்ள சுரப்பிகள்
8. பஞ்ச பூதங்கள்
மேலை சொன்ன அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளது.
எனது தேடல் எப்படி பயணித்தது என்று சொல்கிறேன்.
சிவலிங்க தியானம்
பதிவு 5
எனக்கிருந்த இரண்டு முக்கிய சந்தேகங்கள் ..
1. தியானத்திற்கும், 'ஆக்ஞா' சக்கரத்திற்கும் என்ன சம்பந்தம்?
2. 'ஆக்ஞா' சக்கரம் எங்கு இருக்கிறது?
சிவலிங்கம் பற்றியும், ஆக்ஞா சக்கரம் பற்றியும் பல விதமான விளக்கங்கள் உள்ளன. இவற்றில் எதை ஏற்றுக்கொள்வது என்று புரியவில்லை.
அத்துடன் 'சிவலிங்கம்' எதையோ சுட்டிக் காட்டுவதாகவும் ஒரு உணர்வு.
எனவே நாமே தேடுவோம் என முடிவுசெய்து விட்டேன்.
எனது புரிந்து கொள்ளும் திறமைக்கு ஏற்ப, எனது கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினேன்.
மனிதனின் தண்டு வடத்தில் சுழுமுனை நாடி உள்ளது. இதில்தான் குண்டலினி சக்தியை மேலெழும்பச் செய்யும் ஆறு சக்கரங்கள் உள்ளன.
இந்த ஆறு சக்கரங்களும் தண்டு வடத்தின் கீழேயிருந்து மேல்நோக்கி செல்கின்றன. அவை சூட்சும வடிவில் உள்ளவை. நமது கண்களுக்கு புலப்படுவதில்லை.
அவைகளின் பெயர்கள் ..
1. மூலாதாரம்
2. சுவாதிட்டானம்
3. மணிபூரகம்
4. அநாகதம்
5. விசுத்தி
6. ஆக்ஞா
இவை தவிர உச்சந்தலையில் ஒரு சக்கரம் உண்டு.
அந்த ஏழாவது சக்கரத்தின் பெயர் 'சகசிரதளம்'.
(தொடரும்)
சிவலிங்க தியானம்
பதிவு 6
'சிவலிங்கம்', அஷ்டாங்க யோகம், ஏழு சக்கரங்கள் மற்றும் குண்டலினி
சக்தி .. இவற்றைப் பற்றி ஞானியர், சான்றோர்கள், பண்டிதர்கள் இவர்களெல்லாம் எழுதியவற்றை தொகுக்க எண்ணினால், பல நூறு பக்கங்கள் தேவைப்படும். அந்த அளவுக்கு ஆழமாகவும், நுணுக்கமாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார்கள்.
இங்கு நான் எனது தேடலை, எனது அனுபவத்தை மட்டுமே பதிவு செய்கிறேன். இது சிறு குழந்தை மணல் வீடு கட்டுவதைப் போன்றது.
எனவே இதனை மற்றவற்றோடு ஒப்பீடு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
***** ***** *****
ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு சுரப்பியுடன் (gland) தொடர்புடையதாக உள்ளது. அத்துடன் முதல் ஐந்து சக்கரங்களும் பஞ்ச பூதங்களுடன் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) தொடர்பு உடையவை என்கிறார்கள்.
இதனை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
"மூலாதாரம்"
இது ஏழு சக்கரங்களில் முதலாவதாக வருவது.
இது பஞ்சபூத கூறுகளில் ஒன்றான 'நிலத்துடன்' சம்பந்தப் பட்டது என்கிறார்கள்.
மனித உடல் முழுவதும் பஞ்ச பூதங்களின் மூலக்கூறுகளால் ஆனது என்றாலும், மனிதனின் புதிய பிறவிக்கு காரணமாக இருப்பவை ஆணின் 'விந்துப்பை' மற்றும் பெண்ணின் 'கருப்பை'. எனவே இந்த இரண்டு சுரப்பிகளும் மூலாதார சக்கரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்கிறார்கள்.
"சுவாதிட்டானம்"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "நீருடன்" சம்பந்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'சிறுநீரகங்கள்'.
"மணிபூரகம்"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "நெருப்புடன்" சம்பந்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'கணையம்'.
"அனாகதம்"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "காற்றுடன்" சம்பந்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'தைமஸ்'
(தொடரும்)
சிவலிங்க தியானம்
பதிவு 7
"விசுத்தி"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "ஆகாயத்துடன்" சம்பந்தப்பட்டது என்கிறார்கள். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'தைராய்டு'.
விந்துப்பையை 'நிலத்தோடு' சம்பந்தப் படுத்தியதற்கு ஒரு காரணம் உண்டு.
"... காயமே இது பொய்யடா - வெறும்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த மண்ணுபாண்டம் ஓடடா..." என ஒரு சித்தர் பாடியிருக்கிறார்.
அவர் உடம்பை மண்ணுக்கு சமம் என்கிறார்.
சிறுநீரகங்கள் 'நீரோடு' சம்பந்தப்பட்டது ஏன் என்பது புரிகிறது.
கணையம் 'நெருப்போடு' சம்பந்தப் பட்டது என்று சொல்வதற்கு
என்ன காரணம் இருக்க முடியும்?
உடம்பு சூடாக இருக்கிறது என்றால், பொதுவாக வயிற்றில்தான் கை வைத்துப் பார்க்கிறோம். எனவே இதுவும் சரியாகத்தான் தோன்றுகிறது.
தைமஸ் 'காற்றோடு' சம்பந்தப் பட்டது என்கிறார்கள். இதுவும் சரியாகவே தோன்றுகிறது.
ஆனால், விசுத்திக்கும் ஆகாயத்திற்கும் என்ன சம்பந்தம்?
"விசுத்தி" சக்கரம்
பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான ஆகாயத்துடன் சம்பந்தப்பட்டது என்கிறார்கள்.
ஆகாயம் உடலின் எல்லா இடத்திலும் இருக்கும் என்றாலும், விசுத்தி சக்கரம் அமைந்துள்ள கழுத்தின் மேலே அமைந்துள்ள வெற்றிடத்தை (ஆகாயம்) நம்மால் உணர முடிகிறது.
அத்துடன் 'பருமை' முதல் 'நுண்மை' வரை என்று பார்த்தாலும், ஆகாயம் மற்ற பூதங்களைவிட நுண்மையானது என்பதால் (சொல்லப் போனால் நுண்மையானது என்று கூட வரையறுக்க முடியாது), சுழுமுனை நாடியின் மேல்பகுதியில் வருவதுதான் சரி.
மனிதனின் கீழ்த்தாடையிலிருந்து மேலே செல்லும் வெற்றிடம் மூளையின் கீழ் பகுதியில் முட்டி நாசித் துவாரத்தை நோக்கி சென்று விடுகிறது.
கீழ்த்தாடையிலிருந்து மூளையின் கீழ் பகுதிவரை இருக்கும் வெற்றிடத்தை வரைபடமாகப் பார்த்தால், அது பரிசோதனைக் கூடத்தில் இருக்கும் 'சோதனைக் குழாயை' கவிழ்த்து வைத்திருப்பது
போலத் தோன்றும்.
"சிவலிங்கத்தில்" நாம் காணும் "லிங்கமும்" அந்த வடிவில் தானே இருக்கிறது!?
(தொடரும்)
சிவலிங்க தியானம்
பதிவு 8
சென்ற பதிவில் மனிதனின் தொண்டைப் பகுதியிலிருந்து மூளையின் அடிப்பாகம் வரை உள்ள வெற்றிடத்தின் அமைப்பு, 'சிவலிங்கத்தில்' காணப்படும் "லிங்கம்" போன்று தோற்றமளிக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன்.
ஒவ்வொரு வருடமும்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும்
அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கத்தின் பனிக்கட்டிச் சிலை மே முதல் ஆகஸ்ட் வரையில் தானாக உருவாகின்றது. இது 'லிங்க' வடிவத்தில் அமைந்திருக்கும்.
அத்துடன் அந்த இடம் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடம் (51 சக்தி பீடங்களில் ஒன்று) என்றும் புராண வரலாறு ஒன்று சொல்கிறது.
அப்படியானால், குகையில் இறங்கும் பனி தேவியின் தொண்டைப் பகுதியில் விழுந்து, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து குகையின் முகட்டில் முட்டி பனிக்கட்டி சிலையாக காட்சி அளிக்கிறதா?
இந்த உருவகப் படுத்தும் தன்மை, மனிதனின் தொண்டை பகுதிக்கு மேலே இருக்கும் வெற்றிடத்தை 'லிங்கமாக' கருத வேண்டும் என சுட்டிக் காட்டுகிறதா?
பல இடங்களில் 'லிங்கத்தை' மட்டுமே (முழுமையான சிவலிங்க உருவமின்றி) வழிபடும் வழக்கமும் உண்டு.
லிங்கம் என்பதற்கு எல்லா பொருட்களும் அதில் ஒன்று படும்; பின் அங்கிருந்து உருவாகி தனித்தனியாய் வெளிப்படும் (merge and emerge) என்று அர்த்தம் சொல்கிறார்கள்.
இதே பண்பு ஆகாயத்திற்கும் (வெளி) உண்டு. மற்ற நான்கு பூதங்களும் இதில் ஒடுங்கி மறைவதும் உண்டு; புதிதாகத் தோன்றுவதும் உண்டு.
(தொடரும்)
சிவலிங்க தியானம்
பதிவு 9
ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மூன்று வழிகளில் அறிந்து கொள்ளலாம்.
அவை - -
1. நேரடி அறிவு ( பிரத்தியட்ஷம்)
இது புலன்களின் உதவியின்றி நேரடியாக அறிந்து கொள்வது.
2. ஊக அறிவு (அனுமானம்)
இது ஊகத்தின் அடிப்படையில் அறிவது. தெளிந்த அறிவும், பகுத்தறியும் தன்மையும் இல்லையெனில், நாம் உண்மையென அறிந்தது தவறாகவும் இருக்கலாம்.
3. உரிய சான்றோர் வாய்மொழி கேட்டு அறிந்து கொள்வது (ஆகமம்)
இதுவும் கொஞ்சம் சிக்கலானது. தகுதியற்றவர்களை கேட்டு, அதன்படி நடக்க ஆரம்பித்தால் தவறு நேர்ந்து விடலாம்.
..... ..... ..... .....
'சிவலிங்கம்' பற்றியும், 'ஆக்ஞா' சக்கரம் பற்றியும் எனது கருத்துக்கள் ஊக அடிப்படையில் அமைந்தவை. அவற்றில் தவறும் இருக்கலாம்.
இருந்தாலும், எனது 'தியானப் பயிற்சிக்கு' அவை பெரிதும் உதவியாக இருந்தன. எனது கருத்துக்களை நம்புகிறவர்கள், அவற்றைப் பயன்படுத்தி 'தியானப் பயிற்சியில்' ஈடுபடலாம்.
..... ..... ..... .....
"ஆக்ஞா"
இது மனதோடு சம்பந்தப்பட்டது என்று சொல்கிறார்கள். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பியின் பெயர் 'கபசுரப்பி' (பிட்யூட்டரி சுரப்பி).
சுழுமுனை நாடியில் உள்ள முதல் ஐந்து சக்கரங்களும் சுழுமுனையில் இருப்பதாக சொன்னவர்கள், இந்த சக்கரம் மட்டும் 'புருவ மத்தியில்' உள்ளது என்று ஏன் சொல்கிறார்கள்?
தொண்டைப் பகுதியில் இருந்து மேல்நோக்கி செல்லும் வெற்றிடம் மூளையின் கீழ் பக்கத்தில் முட்டி நாசி இருக்கும் பக்கமாகத் திரும்புகிறது என பார்த்தோம்.
எனவே மூளையின் கீழ் பகுதியில் வெற்றிடம் முட்டும் இடத்தில் 'ஆக்ஞா' சக்கரம் இருப்பதாக சொன்னால் அது தவறா?
சொல்லப்போனால், இந்த இடமும், புருவ மத்தியும் ஒரே படுக்கைக்கோட்டில் தான் வருகின்றன.
ஒரு சித்தர்
"உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே” எனப் பாடுகிறார்.
உச்சியில் இருக்கும் சக்கரத்தின் பெயர் "சகசிரதளம்". ஆனால் அதற்கும் சுழுமுனை நாடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
தவிர, சித்தர் "உச்சிக்கு கீழடியோ" மற்றும் "அண்ணாவுக்கு மேலே வைத்த"
என்றதனால், அவர் குறிப்பிடுவது "ஆக்ஞா" சக்கரம் என்று கருதுவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.
"ஆக்ஞா" சக்கரத்திற்கும், "பிட்யூட்டரி" சுரப்பிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
ஆக்ஞா சக்கரத்திற்கு மற்ற சக்கரங்களை ஆளுமை செய்யும் பண்பு உண்டு. அதனால்தான் அதன் பெயர் "ஆக்ஞா" என்று உள்ளது. (தமிழில் ஆணை என்கிறார்கள்)
பிட்யூட்டரி சுரப்பிக்கும் மற்ற சுரப்பிகளை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு. அதனால்தான் அதனை தலைமை சுரப்பி (master gland) என்றும் சொல்கிறார்கள்.
மூளைக்கு கீழே "ஆக்ஞா" சக்கரம் இருக்கும் இடத்தில்
தியானத்தில் கவனம் செலுத்த முடியாது என்பதனால்தான், புருவ மத்தியில் கவனம் செலுத்து என்று சொன்னார்களா?
(தொடரும்)
சிவலிங்க தியானம்
பதிவு 10
"லிங்க வழிபாடு" என்பது ஒரு கம்பத்தை நட்டு அதை வழிபட ஆரம்பித்து, பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்தது என்கிறார்கள்.
நாளடைவில் அதனுடைய உருவத்தில் பலவிதமான மாற்றங்கள் வந்தன.
அதேபோல் லிங்கத்தின் உருவ அமைப்பை பற்றியும் அசிங்கமான, அருவருக்கத்தக்க விமர்சனங்களும் வந்ததுண்டு.
சிவலிங்கத்தின் வடிவ அமைப்பை பார்ப்போம்.
தரைப் பகுதியை ஒட்டி ஒரு பரந்த வட்ட வடிவமான பாகம்; அதன்மீது மேலே உள்ள சிறிய வட்ட வடிவத்தை இணைக்கும் ஒரு தூண் போன்ற பகுதி; மேலே உள்ள சிறிய வட்டப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள லிங்கம்.
சிவலிங்கத்தை பார்க்கும்போது எனக்கு அது "ஆக்ஞா" சக்கரத்தை சுட்டிக் காட்டுவது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
"சிவலிங்கத்தின் கீழே உள்ள பரந்த வட்ட வடிவம், அதன்மீது உள்ள தூண், மேலே உள்ள சிறிய வட்டம், அதன் மீது இருக்கும் லிங்கம்" முதலியவை முறையே "மனித உடலின் தோள்பட்டை, கழுத்து, கீழ்த்தாடை, அங்கிருந்து மேலே மூளையின் அடிப்பாகத்தை நோக்கி செல்லும் வெற்றிடம்" ஆகியவற்றை குறிப்பிடுவது போன்ற உணர்வு.
தண்டுவடம் மூளையை சந்திக்கும் இடத்தில்தான் "ஆக்ஞா" சக்கரம் இருக்கக்கூடும் என்றும், "சிவலிங்கத்தின்" அமைப்பு, அதை சுட்டிக்காட்டுவது போல் உள்ளது எனவும் எனக்குத் தோன்றியது.
இந்தக் கருத்து உங்களுக்கும் சரியெனத் தோன்றினால், அந்த இடத்தில் கவனத்தை வைத்து தியானம் செய்யலாம்.
தியானத்தில் அமரும் பொழுது, உங்கள் தோள்பட்டை, கழுத்து, தொண்டைப் பகுதி, அதிலிருந்து மேலே
செல்லும் வெற்றிடம் என ஒவ்வொரு இடத்திலும் கவனம் செலுத்தி தண்டுவடம் மூளையை சந்திக்கும் இடத்தை தியானப் பொருளாக மாற்றுங்கள்.
தொண்டைக்குழியிலிருந்து மனம் வெற்றிடத்தை தொடர்ந்து செல்லும்போது, மூளையின் அடிப்பகுதியை சந்தித்ததும் தானாகவே நின்றுவிடும். ஏனெனில், சுழுமுனை நாடி மூளையை சந்திக்கும் இடத்தை அதனால் உணர முடியும்.
பலரும் பலவித முறைகளில் தியானம் செய்வதுண்டு. ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். இங்கு குறிப்பிட்டுள்ள முறையில் தியானம் செய்தால், அதற்கு என்ன பெயர் வைக்கலாம்?
"சிவலிங்க தியானம்" என்று சொல்லலாமா?
(முற்றும்)
No comments:
Post a Comment