Monday, 10 October 2022

பாரதம்





பாரதம்

பதிவு 1

எண்பது கல் தாண்டி விட்ட
இளங்குமரன்,
இதயத்து உணர்வுகளை இயம்புகின்றேன்.

வரையறுக்கப்பட்ட பாதையில் செல்லும் பயணமல்ல இது; காட்டாற்று வெள்ளமென வெவ்வேறு திசைகளில் பெருக்கெடுக்கும் பயணம் இது.

"இப்போது இல்லையென்றால், இனி எப்போதும் இல்லை". திரு. ரஜினிகாந்த் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு சொன்னது.

இது எனக்கும் பொருந்தும்; காலன்
வருமுன்னே, கனவுகளை வெளிப்படுத்த வேண்டுமல்லவா?

எனக்கு மட்டுமல்ல, இந்த காலகட்டத்தில் நமது நாட்டிற்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன்.

வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், எனது பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்.

பாரதம் ஒரு ஞானபூமி. ஆன்மீகத்தை பொறுத்தவரை உலக நாடுகளுக்கு அது ஒரு தாயகம்.

மனதில் தோன்றும் குழப்பங்களுக்கு விடை தேடி பல நாட்டினரும் இங்கு வருவதைப் பார்க்கலாம். ஆனால், அதற்காக இங்கிருந்து யாரும் வெளிநாடுகளுக்கு செல்வதில்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆன்மீகம் முக்கியமானதா என்ற சந்தேகம் வரலாம். 

ஆன்மீகம் என்பது மனிதனுக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் மலர்ச்சிக்கான வழியைக் காட்டுவது.  

ஆன்மீகத்தில் மலர்ச்சி அடைந்த மனிதன், பிறரை துன்புறுத்துவதில்லை.

ஆன்மீகத்தில் மலர்ச்சி அடைந்த சமூகம், பிற சமூகத்தினரை கொடுமைப் படுத்துவதில்லை.

ஆன்மீகத்தில் மலர்ச்சி அடைந்த நாடு, அன்னிய நாட்டின் மீது படையெடுப்பதில்லை.

               (உணர்வோம்)

பாரதம்

பதிவு 2

நண்பர் ஒருவரது கேள்வி
- -
ஆன்மீகம் இந்து மதத்தின் சொத்து என்பது சரியா?

ஆன்மீகம் சொல்லும் வாழ்வியல் தத்துவங்கள் எல்லா மதத்திலும் உண்டு.

பாரத தேசத்தில் சமய நூல்கள் மிக அதிகம்.
சமய நூல்களுக்கு அப்பாற்பட்டும், பல நூல்கள் உண்டு.

தவிர, இங்கு பல்வேறு சமயங்கள், பல்வேறு மொழிகளில் உள்ளன. இவை அனைத்தும் (என்னை பொறுத்தவரை) இந்துமதம் சார்ந்தவைதான்.

தவிர, ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மைக்கும் ஏற்ப, தனித்தனி வழிமுறைகளை இந்து மதம் எடுத்துரைக்கிறது. 

இவ்வளவு இருந்தும் இந்த நாட்டில் பல்வேறு வகையான குழப்பங்கள் ஏன் நிலவுகின்றன எனத் தோன்றலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஏசுபிரான் "விதைகளைத் தூவினேன்" என்கிறார். வள்ளலார் "கடைவிரித்தேன்; கொள்வாரில்லை" என்கிறார். நாம் என்ன செய்கிறோம்?

குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர்கள் நல்லதொரு வழிகாட்டியாக வாழ வேண்டும்.

ஆசிரியர்கள் ஒழுக்க விதிகளை கற்றுத்தர வேண்டும்.

பட்டி மன்றங்கள், சொற்பொழிவுகள் நல்லவற்றை மனதில் விதைக்க வேண்டும்.

ஊடகங்கள் வெறும் கேளிக்கையை மட்டும் காட்டாமல், மக்களிடம் தேசியச் சிந்தனையைக் தூண்டுவதற்கு உதவ வேண்டும்.

இவற்றில் குறைபாடு இருந்தால், குழப்பங்கள் இருப்பதும் இயற்கைதானே!

                 (உணர்வோம்)

பாரதம்

பதிவு 3

ஆன்மீகம் சொல்லும் வாழ்வியல் தத்துவங்கள் மிகச் சிறந்தவை, மனிதனின் மனதில் மலர்ச்சியை உண்டுபண்ணுபவை என்றால், பாமர மனிதன்வரை அவை சென்றடைய வேண்டுமே; ஆனால், அவை ஏன் சென்றடையவில்லை?

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. 
அது - -
'பாரம்பரிய பண்பாடு, கலை முதலானவை தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக கையாளப் படுகின்றன; ஆனால், பக்கத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கலை, பண்பாடு என எதுவுமே இல்லையே; ஏன்?'.

அதற்கு பெருந்தலைவர் 'தஞ்சாவூர்க்காரனை ஒரு வருடம் ராமநாதபுரத்தில் வசிக்கச்சொல்; கலை எப்படி வளரும் என பார்க்கிறேன். தஞ்சாவூர் செழிப்பான பகுதி. அவனுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை. ஆனால், ராமநாதபுரம் அப்படியா? அது ஒரு வறட்சியான பகுதி. சாப்பாட்டிற்கு அவன் போராட வேண்டும். பின் எப்படி அவன் கலையை வளர்ப்பான்?' என்றார்.

பசித்த வயிற்றோடு போராடுபவனிடம் ஆன்மீகம் பற்றி பேச முடியுமா? அதனால்தான் விவேகானந்தர் 'பசித்தவனுக்கு முதலில் உணவு கொடு; மற்றதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்' என்கிறார்.

ஆக, ஆன்மீகம் பரவலாக எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும்.

அதற்கு பொதுநலத் தில் அக்கறை உள்ள மனிதர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். சுயநலவாதிகள் அரசியலுக்கு வரவே கூடாது.

சுயநலவாதிகள் என்று தெரிந்தும் அத்தகைய மனிதர்களுக்காக கொடி பிடிக்கிறோமே! அதற்கு காரணம் நம்மிடமும் சுயநலம் இருக்கிறது என்பதுதானோ?

          (உணர்வோம்)




பாரதம்

பதிவு 4

அன்பர் ஒருவர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அது - -
(நீங்கள்) ஞானமடைந்து விட்டீர்களா?

என்ன அர்த்தத்தில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது என்று எனக்கு தெரியாது. தவிர ஞானம் என்றால் என்ன என்பது பற்றி அவரது கருத்து எதுவென்றும் எனக்குத் தெரியாது. எனவே நேரடியான, ஒரு தெளிவான பதிலை என்னால் கூற முடியவில்லை.
ஆயினும் இதற்கு ஒரு தன்னிலை விளக்கம் தரவேண்டியது அவசியம் என்றே
கருதுகிறேன்.

பகவத்கீதையில் இரண்டாவது அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு ஞானி எப்படி நடந்து கொள்வார் என விளக்குகிறார். தவிர, கீதை நெடுகிலும் நிறைய பண்புகளைப் பற்றியும்
குறிப்பிடுகிறார்.

அவர் குறிப்பிடும் பல பண்புகளை நான் கடைப்பிடித்து வருகிறேன். இருந்தாலும் இதை வைத்து நான் ஞானமடைந்து விட்டேன் என்று சொல்ல முடியுமா?

திருவள்ளுவர் எல்லா பண்புகளையும் உள்ளடக்கி ஞானியின் லட்சணத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்.

"ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்"

கற்று அறிந்தும், மெய்ப்பொருளை உணர்ந்தும், உண்மைகளை பிறர்க்குரைத்தும், அவனது மனம் மட்டும் 'அடங்கவில்லை' என்றால் அவனை அறிவிலி என்கிறார்.

எனது மனம் முழுமையாக அடங்கவில்லை என்பதுதான் உண்மை.

எனவே, திருமூலர் கூற்றுப்படி நான் ஒரு கதறித் திரியும் "கற்ற பசு" மட்டுமே (அதுவும் கொஞ்சமாக); மற்றபடி "முற்ற பசு" என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கு கிடையாது.

          (உணர்வோம்)


பாரதம்

பதிவு 5

ஒரு நாடு சிறந்த நாடாக உள்ளது என்று சொல்ல வேண்டுமென்றால், அதற்கான அடையாளங்கள் என்ன?

1. அந்த நாட்டின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். 

2. அதனால் ஏற்படும் பயன்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய வேண்டும்.

3. வாழ்வியல் நெறிகளை முழுமையாக எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும்.

4. சமுதாய ஒழுக்கம் நன்கு செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வெறுமனே வீதிகளில் மட்டும் செயல்பட்டால் போதாது.

5. எதிர்மறை சிந்தனைகளை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

6. எல்லாவற்றிலும் முக்கியமாக அனைவரிடமும் அப்பழுக்கற்ற தேசப்பற்று இருக்க வேண்டும்.

இவையெல்லாம் செம்மையாக இருக்க வேண்டுமென்றால், வழிநடத்தும் அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும் உயர்ந்த நோக்கங்களோடு செயல்படவேண்டும்.

அரசியல்வாதி என்றால் யார் என்று நமக்குத் தெரியும். ஆனால், ஆன்மீகவாதி என்றால், அது யாரை குறிக்கிறது?

ஆன்மீகவாதி என்பவன் மதம் சார்ந்த மனிதனா?

மதம் சாராத மனிதன் ஆன்மீகவாதியாக இருக்கமுடியாதா?

மொத்தத்தில் ஆன்மீகம் என்றால் என்ன?

          (உணர்வோம்)



பாரதம்

பதிவு 6

ஆன்மீகம் என்றால் என்ன என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விளக்கம் தருவார்கள்.

ஊடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
'பக்தி மலர்' என்பார்கள்; அதில் ஆன்மீகம் கலந்திருக்கும். 
'ஆன்மீக மலர்' என்பார்கள்; அதில் பக்தி கலந்திருக்கும்.

அப்படியானால் பக்தி, ஆன்மீகம் இரண்டும் ஒன்றுதானா? அல்லது வேறு வேறா?

பக்தி என்பது நம்பிக்கை சார்ந்தது; தவிர அதில் சடங்கு, சம்பிரதாயம், சில நேரங்களில் மூட நம்பிக்கை கூட கலந்திருக்கும்.

ஆன்மீகத்தில் இவை எதுவுமே கிடையாது. அப்படியானால் மதத்திற்கும், ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் கிடையாதா என்ற சந்தேகம் வரலாம்.

மதத்தில் ஒரு பகுதிதான் ஆன்மீகம். ஆன்மீக உண்மைகளை வெளிப்படுத்தாத மதம் எதுவும் உலகில்
கிடையாது.

"மதத்தில் உள்ளது ஆன்மீகம்; மதத்தை கடந்தது ஆன்மீகம்".

மதநம்பிக்கை உள்ள ஞானியர், சான்றோர்கள் தவிர,
மதநம்பிக்கை இல்லாத மனிதர்களும் ஆன்மீக கருத்துக்களை உரைப்பதுண்டு.

வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வியல் நெறிகளை கற்றுக்
கொடுப்பதுதான்
ஆன்மீகம்.

          (உணர்வோம்)

 
பாரதம்

பதிவு 7

ஆன்மீகம் வாழ்வியல் தத்துவங்களை/நெறிகளை சொல்கிறது என்றால், பக்தி மார்க்கம் அதை சொல்வதில்லையா என்ற சந்தேகம் வருவது இயற்கையே.

ஆன்மீகத்தில் எல்லாமே பட்டவர்த்தனமாக இருக்கும். 

பக்தி மார்க்கத்தில் பலவற்றை கதையாகச் சொல்வார்கள்; பல சமயங்களில் கதை நம்ப முடியாததாக இருக்கும். ஆனால், அந்தக் கதையில் மெய்ப்பொருள் மறைந்திருக்கும். கதையை சொல்கிறவர் அதை சொல்லவில்லை என்றால், நமக்கு அதில் மறைந்திருக்கும் மெய்ப்பொருள் தெரியாமலே போய்விடும்.

பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஒரு இடத்தில் குழந்தைகளுக்கு "துருவ நட்சத்திரத்தின்" கதையை சொல்லிவிட்டு, பின்னர் அதில் மறைந்திருக்கும் மெய்ப்பொருளை விளக்கினேன். மொத்தமாக பத்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டேன். 

அங்கு ஒரு பெரியவரும் கதையை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் மிகச்சிறந்த பக்திமான். காலை, மாலை இரண்டு வேளையும் தவறாமல் கோயிலுக்கு சென்று வருபவர்.

அவர் என்னிடம் ஒரு விஷயத்தை சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.

அவர் சொன்னது --
"போன வாரம் இந்தக் கோயிலில் ஒருத்தர் ஒன்றரை மணிநேரம் "துருவ நட்சத்திரம்" பற்றி கதாகாலட்சேபம் செய்தார். ஆனால், அதன் பின்னே மறைந்துள்ள மெய்ப்பொருளை கடைசிவரை சொல்லவே இல்லை. இப்படித்தான் நாம் எல்லாவற்றையும் மேலோட்டமாக பேசி, உள்ளே உள்ள பொக்கிஷத்தை மறைத்து விடுகிறோம்.

ஆன்மீகத்தில் இந்தப் பிரச்சினையே இருக்காது. சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லி விடுவார்கள். அவற்றை புரிந்துகொள்ள நாம்தான் சிரமப்பட வேண்டியிருக்கும். 

          (உணர்வோம்)


பாரதம்

பதிவு 8

வாழ்வியல் நெறிக்கும், வாழ்வியல் தத்துவத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

வாழ்வியல் நெறி எப்படி நல்லவனாக வாழ்வது என்று சொல்லித் தருகிறது.
வாழ்வியல் தத்துவம் எப்படி ஞான நிலை பெறுவது என்று கற்றுத் தருகிறது.

மண்ணில் பிறந்த எல்லோரும் நல்லவனாக வாழ வேண்டும் என்று ஆசைப்
படுவதில்லை.

இயற்கையின் படைப்பு அப்படித்தான் அமைந்திருக்கிறது.
இயற்கை மலரை மட்டும் படைக்கவில்லை; கூடவே முள்ளையும் படைத்து வைத்திருக்கிறது.

நல்லவர்களாக வாழும் மனிதர்களுக்குள்ளும், ஒரு சிலர் மட்டுமே
ஞானநிலைவரை பயணிக்க விரும்புகிறார்கள்.

"பலர் அழைக்கப் படுகிறார்கள்; ஒரு சிலரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்"..
பைபிள்
(Many are called; few are chosen .. Bible)

All are called; all are chosen என்று சொல்லவில்லை.

கீதையிலும் பகவான் கிருஷ்ணர் அதையே
சொல்லுகிறார் ..
"பலரும் என்னைத் தேடுகிறார்கள்; அவர்களுள்
ஒரு சிலரே என்னை வந்தடைகிறார்கள்".

பல மனிதர்கள் நல்லவராக மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதில் தவறேதும் இல்லை.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் -- வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்" என்று வள்ளுவரே சொல்லிவிட்டார்.

எனவே நல்லவனாக வாழ்வதே ஒரு சிறப்புதான்.

ஆனாலும் !?

               (உணர்வோம்)


பாரதம்

பதிவு 9

ஒரு மனிதன் நல்லவனாகத்தான் வாழ்கிறான் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

அவனிடம் கீழ்க்கண்ட பண்புகள் இருந்தால், அவன் நல்லவனாக வாழ்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளலாம் - -

1. எல்லோருடனும் இணக்கமாக நடந்து கொள்வான்.

2. எவருக்கும் தீங்கிழைக்க மாட்டான்.

3. பிடிக்காத நபரிடம் வம்பிழுக்க மாட்டான்; பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடுவான்.

4. அவனிடமிருந்து வன்சொல் எதுவும் வராது.

5. பிறரை வஞ்சித்து வாழ விரும்ப மாட்டான்.

6. சமுதாய நியதிகளை மதித்து நடப்பான்.

மொத்தத்தில் அவன் ஒரு அனிச்ச மலராக வாழ்ந்து வருவான்.

ஆனாலும், இப்படிப்பட்ட மனிதர்கள் பாசம் மிகுந்து வாழ்ந்து வருவார்கள். அது ஒன்றுதான் பிரச்சினை. 

பாசத்திலிருந்து விலகத் தெரியாததால், பல நேரங்களில் இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.

வாழ்வியல் தத்துவங்களை புரிந்துகொண்டால் மட்டுமே, பாசத்திலிருந்து விடுபட முடியும். 

வாழ்வியல் நெறிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய கடமை, தனி மனிதனுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும், ஏன் அரசுக்கும் கூட உண்டு.

இவற்றை முறையாக கடைப்பிடிக்காத காரணத்தினால்தான், ஒருவருக்கொருவர் இணக்கமான சூழலில் வாழ முடியாமல் தவித்து வருகிறோம்.

                 (உணர்வோம்)


பாரதம்

பதிவு 10

சமூகம் என்றால் என்ன? தனிமனிதர்கள் பலர் ஒன்றுகூடினால், அது சமூகம் என அழைக்கப்படுகிறது.

சமூகத்தை வழிநடத்துவதற்கு சரியான தலைமை இல்லையென்றால், அந்த சமூகம் எப்படி நடந்துகொள்ளும் என்று யாராலும் கணிக்க முடியாது; தவிர, தலைமைப் பொறுப்பில் உள்ளவர் உணர்ச்சிகளை தூண்டி விடுபவராக இருந்தால் வேறு வினையே வேண்டாம்!?

அதனால்தான் "individually everybody is good; collectively all are bad" என்று சொல்கிறார்கள்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தனிமனிதன் ஒழுங்காக இருந்தாலும் சமூகத்தை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் நாட்டில் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

நமது தேசத்தில் நடக்கும் ஒருசில அவலங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

இவை அன்பர்களின் புரிதலுக்காக சொல்லப் படுபவை. இவை புரிந்தால்தான், நாட்டின் இறையாண்மைக்கு எப்படியெல்லாம் பங்கம் வருகிறது என்பதும் புரியும்.

               (உணர்வோம்)


பாரதம்

பதிவு 11

ஒரு நாட்டிலுள்ள மதங்கள் நாட்டின் இறையாண்மைக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக செயல்பட வேண்டும். 

மனிதநேயம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால், இங்கு நடைமுறையில் நடப்பதென்ன?

ஒரு இந்து ஒரு கிருஸ்தவனை கிருஸ்தவனாக ஏற்றுக்கொள்கிறான்; ஒரு முஸ்லீமை முஸ்லீமாக ஏற்றுக் கொள்கிறான். ஆனால், ஒரு கிருஸ்தவனால், ஒரு முஸ்லீமால் ஒரு இந்துவை இந்துவாக ஏற்றுக்கொள்ள முடிகிறதா? முடிகிறது என்றால், எதற்காக இந்த மதமாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன?

அது சுயலாபத்திற்காகவா அல்லது இந்த நாடு ஒரு இந்து நாடாக இருக்கக்கூடாது என்பதற்காகவா?

இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டின் இறையாண்மையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் என்பது புரியவில்லையா?

ஒருவேளை அவர்கள் அதைத்தான் விரும்புகிறார்களா?

ஒருவன் தானாக மதம் மாறுவது என்பது வேறு; அவனை மதம் மாற்றுவது என்பது வேறு.

புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!?

                (உணர்வோம்)


பாரதம்

பதிவு 12

திரு. கமலஹாசன் அவர்கள் ஓரிடத்தில் சொன்னது - -
"அவர்கள் எங்களை நாத்திகவாதிகள் என்று சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு நாங்கள் வேறு பெயர் வைத்திருக்கிறோம் .. 'பகுத்தறிவுவாதி' என்று".

அவர் சொன்னது சரிதான். நாத்திகவாதிகள் என்பவர்கள் பகுத்தறிவுவாதிகளாகத்தான் இருக்கவேண்டும். பகுத்தறிவுவாதி என்பவன் எந்த ஒன்றைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு, அதன் உண்மைகளை அறிந்துகொண்டு பேசவேண்டும். ஆனால், இவர்கள் அப்படி இருக்கிறார்களா?

எனது நண்பர் ஒருவர் (engineer-ஆகப் பணிபுரிந்தவர்) ஒருமுறை என்னிடம் "நீங்கள் கோயிலுக்கு சென்று நான் பார்த்ததில்லை. உங்களை நாத்திகவாதி என்றே நான் நினைத்திருந்தேன். ஆனால், நீங்கள் பகவத் கீதையை வைத்து பாடம் நடத்துகிறீர்கள். அது எவ்வளவு மோசமான புத்தகம் தெரியுமா? நான் ஒரு புத்தகம் தருகிறேன். அதை படித்துப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை நிலவரம் புரியும்" என்று சொல்லி, அதன் தொடர்ச்சியாக ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.

அந்தப் புத்தகத்தின் பெயர் "கீதையின் மறுபக்கம்". ஆசிரியர் பெயர் .. 
திரு.கி. வீரமணி

பலநூறு பக்கங்கள் கொண்டது; பல பதிப்புகளையும் கண்டது.

                (உணர்வோம்)


பாரதம்

பதிவு 13

இந்து மதத்தை தாக்கிப் பேசுவதை தன் வாழ்நாள் கடமையாக எண்ணுபவர், பகவத் கீதையை ஒரு கொலைகார நூல் என்று சொல்பவர் திரு. கி. வீரமணி அவர்கள்.

எனவே கீதையைப் பற்றி எதிர்மறையாகத்தான் எழுதுவார் என்று தெரியும். ஆனால், கீதையில் உள்ள வாசகங்களின் மெய்ப் பொருளை அறியாமலேயே எழுதுவார் என நான் நினைக்கவில்லை.

அந்தப் புத்தகத்தில் முக்கியமாக 'வர்ணாஸ்ரம தர்மத்தை' தாக்கி எழுதியுள்ளார். இந்தியாவில் சாதிகள் தோன்றுவதற்கே அதுதான் காரணம் என்றும் எழுதியுள்ளார்.

அதற்கு சான்றாக அவர் எடுத்துக்கொண்ட வாசகம், பகவான் கிருஷ்ணர் சொன்னதுதான். அது ..
"சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் .." அதாவது "நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப் பட்டவைகளே.."

எனவே, நமது நாட்டில் உள்ள சாதிப் பிரிவுகளுக்கு வித்திட்டவர் கிருஷ்ணர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தக் குறிப்பிட்ட ஸ்லோகத்தை புத்தகத்தின் பின் அட்டையிலும் போட்டிருக்கிறார்.
முழு ஸ்லோகம் ..
"சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் 
குண கர்ம விபாகசஹ."

முதல்வரியை தனது விவாதப் பொருளாக எடுத்துக் கொண்டவர், இரண்டாவது வரியில் சொல்லியிருக்கும் "குணத்திற்கும், கர்மத்திற்கும் ஏற்ப" என்ற வாசகத்தை ஏன் கவனத்தில் கொள்ள மறந்து விட்டார்? அதன் உண்மைப் பொருள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் புத்தகத்தைக் படித்த தி.க.-வின் பகுத்தறிவு வழித்தோன்றல்கள் யாரும் அதைக் கேள்வி கேட்டதாகத் தெரியவில்லை.     

              (உணர்வோம்)


பாரதம்

பதிவு 14

பல இடங்களில் இருந்தும் இந்துமத விரோதக் கருத்துக்கள் வருவதில் ஆச்சரியம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித நோக்கம் இருக்கலாம்.

ஆனால், இந்து மதத்திற்குள்ளேயே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் பலவிதமான வேதனைகளை வெளிப்படுத்துகிறார்களே!? அதை பல்வேறு பிரிவைச் சேர்ந்த மதத் தலைவர்கள் ஒன்றுகூடி சரிசெய்ய வேண்டாமா?

இந்து மதத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்று பட்டியல் போடுவது நமது நோக்கமல்ல. ஆனால், இன்னும் கண்ணுக்குத்
தெரியாத ஒரு (பெர்லின்) சுவர் அனைத்து இந்துக்களையும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்க விடாமல் தடுக்கிறது உண்மைதானே? அதை உடைக்க வேண்டியது மதத்தலைவர்களின் கடமை அல்லவா? அதை ஏன் செய்யத் தயங்குகிறார்கள்?

எங்களுக்கு விதிக்கப்பட்ட பணியை நாங்கள் செவ்வனே செய்து வருகிறோம் என்று அவர்கள் சொல்லலாம். அதில் தவறேதும் இல்லை.

ஆனாலும், கண்ணுக்குத் தெரியாத சுவர் உடைக்கப்படாதவரை இந்துமதத்திலிருந்து பலரையும் பிற மதங்களுக்கும் தாரைவார்க்கும் நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடைபெறும் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்?

"கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்று சொல்வதுண்டு. இதை மதத்தின் தலைவர்கள் உணர்ந்தால் நன்றாக இருக்கும்.

               (உணர்வோம்)


பாரதம்

பதிவு 15

சமூகம் என்று சொல்லிவிட்டு பதிவுகள் மதத்தைப் பற்றி மட்டுமே வருகிறதே என நினைக்கலாம்.

வாழ்வியல் நெறியோடு, வாழ்வியல் தத்துவங்களையும் சொல்வது மதம் சார்ந்த ஆன்மீகவாதிகள்
தான். 

மற்றபடி சமூகம் எல்லா இடத்திலும் உண்டு. அவற்றை நாம் ஆராய வேண்டியதில்லை.

மதவாதிகளுக்கு அவர்களின் முன்னே உள்ள பொறுப்பு என்ன என்று பார்த்தோம்.

வாழ்க்கைத் தரத்தை எடுத்துக்கொண்டால், அரசியல்வாதிகளின் பங்களிப்பு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே அது நன்கு உயரும்.

நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் எல்லோரும் அறிந்ததே. எனவே அவற்றை மீண்டும் விளக்கவேண்டியதில்லை.

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. ஆட்சி செய்பவர் சரியில்லை என மக்கள் நினைத்தால், அடுத்த தேர்தலில் அவரை தோற்கடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படி இருக்கும்போது எதிர் கட்சிகள் எதற்காக தேவையற்ற ஆர்ப்பட்டங்களை நடத்தவேண்டும்? மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக்கூறி அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியில் உள்ளவரை தோற்கடிக்க முயற்சி
செய்யலாமே!

ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும், அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டுமே தவிர, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடாது. பல நேரங்களில் அது ஆபத்தை தோற்றுவிக்கும்.

                (உணர்வோம்)


பாரதம்

பதிவு 16

நமது நாடு ஜனநாயக நாடுதான். ஆனால், தேர்தல் நடக்கும் விதம் நம்மை தலைகுனிய வைக்கிறதே!

ஒருபக்கம் இலவசங்களை அள்ளிவீசும்
அறிவிப்புகள்; மற்றொரு பக்கம் வாக்குச்சீட்டுக்கு லஞ்சம்.

இதைவிட மோசமானது எதுவென்றால், மதத்தின் அடிப்படையிலும், சாதியின் அடிப்படையிலும் ஓட்டுப் போட மக்களை வலியுறுத்துவது.

இவையெல்லாம் போதாதென்று அரசியல்வாதிகள் மக்களிடம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு குளிர் காய்வது. இதில் உள்ள ஆபத்து மக்களுக்குப்
புரிவதில்லை. 

படித்த
மனிதர்களாக இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்டால் அந்த நேரங்களில் அறிவு வேலை செய்யாது; அவர்களுக்கு உண்மைத் தன்மையை அறியும் ஆர்வமும் வராது.

விளைவு ..
"பாரீர், பாரீர்; ஏழை பங்காளனின் குடிசையைப் பாரீர்" என்று படத்தை வெளியிட்டு விளம்பரம் செய்தனர். அதை நம்பியவர் எத்தனை பேரோ?

உணர்ச்சியை தூண்டி விட்டனர். பெருந்தலைவர் காமராஜர் தோற்கடிக்கப் பட்டார்; அதன் பயனை இன்றுவரை அனுபவித்து வருகிறோம்.

எனவே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், உணர்ச்சிகளைத் தூண்டி விட்டும் ஆதாயம் தேட விரும்புகிறவர்களிடமிருந்து விலகத் தெரிந்தால், அது நாட்டிற்கு மிகவும் நல்லது.

                 (உணர்வோம்)


பாரதம்

பதிவு 17

நமது நாடு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நமது கலாச்சாரமும், நாம் கடைப்பிடித்து வந்த பண்பாடுகளும் அன்னிய நாடுகளின் படையெடுப்பிற்குப்
பின் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடையத் தொடங்கின. 

நாடு சுதந்திரம்
அடைந்தபின்பும், உள் நாட்டிலேயே சில சக்திகள் இவற்றை சீரழிப்பதையேக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு
வருகின்றனர்.

ஆனால், நாம் .. குறிப்பாக இந்து மதத்தில் உள்ள மக்கள் .. பங்காளி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
இது நல்லதுதானா?

நமது நாட்டில் உள்ளதுபோல் சமய நூல்களை வேறு எங்கும் காணமுடியாது. பல்வேறு சமயங்களில், பல்வேறு மொழிகளில் உள்ள வாழ்வியல் தத்துவங்களை கணக்கில் எடுக்க விரும்பினால், ஒரு பிறவி போதாது.

அவை சொல்வது வெறும் அறிவுரைகள் அல்ல; மனித இனத்துக்கே வழிகாட்டும் அறவுரைகள். எனவே அவற்றை போற்றி 
பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

இது ஒரு ஞான பூமி. வாழ்வியல் நெறிகளைப் பொறுத்தவரை உலகிற்கே வழிகாட்டும் வல்லமை உள்ள பூமி இது.

ஆன்றோரும், சான்றோரும் ஒரணியாக சேர்ந்து செயல்பட்டால் நமது நாட்டின் பெருமை நிலைநாட்டப்படும்.

இந்த நாடு பாரத நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. அன்னியர் படையெடுப்புகளை அடுத்து இந்த நாட்டிற்கு 'இந்தியா' என்ற பெயர் வந்தது.

ஒருவேளை மீண்டும் நமது நாட்டை "பாரத நாடு" அல்லது "பாரதம்" என்று அழைத்தால், நமக்கு பழம்பெருமையை மீட்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்குமோ?

இனியாவது சிந்திப்போமா!?!

No comments:

Post a Comment