Saturday, 8 October 2022

தேசியமும், தெய்வீகமும்



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 1

சட்டை நைந்து விட்டது. எந்த நேரத்திலும் கிழிந்து விடலாம்.

சட்டை கிழிவதற்குமுன் மனதை "நிர்மலமாக" மாற்ற வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் மனதில் ஏதோவொரு பாரம் அழுத்திக்கொண்டே இருக்கிறது.

அந்த பாரத்திற்கு காரணம் நான் மட்டும்தானா; அல்லது வேறு ஏதாவதா?

காரணம் வெளியில்தான் உள்ளது என்றால், நான்தான் தேவையில்லாமல் சுமந்துகொண்டு இருக்கிறேனா?

மனம் தகுந்த 'பக்குவ' நிலையை அடையாததுதான் அதற்கு காரணமா?

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 2

மனிதனின் 'ஆழ்மனதில்' பதிவுகள் இல்லாதிருக்க வேண்டும்; ஒருவேளை பதிவுகள் நினைவலைகளாகத் தங்கியிருந்தாலும், அவற்றிலிருந்து எண்ணங்கள் பீறிட்டு கிளம்பாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவனது மனம் 'நிர்மலமாக' இருப்பதாக அர்த்தம்.

அப்படி இல்லையெனில், அந்த மனிதனிடமிருந்து 'நான்' எனும் அஹங்காரம் முழுவதுமாக மறையவில்லை என்று புரிந்து கொள்ளலாம். அத்துடன் அவனிடம் 'என்னுடைய' எனப்படும் பற்றும் குடிகொண்டிருக்கும்.    

'நிர்மலம்' என்ற வார்த்தையில் வரும் 'மலம்' என்பது மனதில் தங்கியுள்ள அழுக்கைக் குறிக்கிறது.

நாம் செய்யும் நல்ல காரியங்களைப் பற்றிய நினைவுகள் மனதில் தங்கினால்கூட, அவையும் அழுக்குகள்தாம்.

அதனால்தான், "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு" என்று வள்ளுவர் கூறுகிறார். (நல்வினையும் இருள் சேர்க்கும் என்கிறார்).

நாம் 'நிர்மலம்' என்று சொல்வதைத்தான் 'மனமிறத்தல்' என்று தாயுமானவர் பாடுகிறார்..
"சினம் இறக்க கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றாலும்
மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே".
           
"கூண்டுவிடுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல், மாண்டுவிடு முன்னேனான் மாண்டிருப்ப தெக்காலம்?" எனப் புலம்பும் 'பத்திரகிரியாரும்' மனதில் கொள்வது இந்த 'மல' நீக்கத்தையே.

மனதில் உள்ள 'அழுக்கை' பல்வேறு சமயங்கள் பல்வேறு வார்த்தைகளில் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், எல்லாவற்றிற்கும் மூலமாய் இருப்பது மனிதனின் "ஆணவம்" மட்டுமே.

இந்த "நான்" என்னும் ஆணவத்திலிருந்துதான், "என்னுடைய" என்னும் பற்றும் (attachment) பிறக்கிறது.

ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம், தியான மார்க்கம் போன்ற மார்க்கங்கள் மனிதனின் 'ஆணவ மலத்தை' நீக்குவதற்கான வழிகளைக் காட்டுகின்றன.

அத்துடன், ஆணவ மலம் நீங்கிவிட்டதை அடையாளம் காண பல குறிப்புகளையும் சொல்கின்றன. 

அவைகளில் சில முக்கிய குறிப்புகளைப் பார்ப்போம்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 3

1. பற்றறுத்தல் 

எல்லா மனிதர்களுக்கும் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று இருப்பார்கள்.

அவர்களுடன் உறவில் இருந்தாலும், 'தாமரை இலை தண்ணீரைப்போல்' ஒட்டியும், ஒட்டாமலும் இருக்க முடிந்தால் (relation-less relationship), அதுவே பற்றறுத்து வாழ்வதன் அடையாளம். இதனை வலியுறுத்தும் விதமாக "..... புளியம்பழமும் தோடும்போல் ஆவதினி எக்காலம்?" என்கிறார் பத்திரகிரியார்.

(Be in the family; be far away from the family)

இதன்படி வாழும்
மனிதன் 'பாசத்தளை'யிலிருந்து நீங்கி விடுகிறான்.

2. உடைமைத்தனம் 
இல்லாதிருத்தல் 

பொருள் ஈட்டுவதும், 
ஈட்டிய பொருட்களைக் கொண்டு இன்பம் துய்ப்பதும், மனிதனின் இயல்பான நடவடிக்கைதான். அதில் தவறேதும் இல்லை.

அதேசமயம், நாம் அனுபவிக்கும் பொருட்கள் நிரந்தரமாக நம்முடன் இருக்கப் போவதில்லை என்ற உண்மையையும் உணர்ந்திருக்க வேண்டும். (இது மனித உறவுகளுக்கும் பொருந்தும்).

ஆக, உடைமைப் பொருட்களை அனுபவிக்க வேண்டும்; கூடவே எந்த நேரமும் அவை நம் கையை விட்டுப் போகலாம் என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டபின், உடைமைத்தனமின்மை என்ற பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

"ஊரும் சதமல்ல, உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல ..." என்ற பட்டினத்தாரின் கூற்றைப் புரிந்து கொண்டு, அனுபவிக்கவும் மற்றும் விலகி நிற்கவும் பழகிக் கொள்ள வேண்டும். விலகி நிற்கக் கற்றுக் கொண்டால், பிரியும்போது மனதில் வேதனை வராது.

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல், அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர்.

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 4

3. உதாசீனம்

நமது வாழ்நாள் முழுவதும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி கருத்துக்கள் சொல்வதை தவிர்க்க இயலாது.

அந்தக் கருத்துக்கள் நமது பண்பு நிலையை மேம்படுத்த உதவுமென்றால், அவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். இல்லையெனில் அவற்றை உதாசீனம் செய்ய வேண்டும்.

ஏனெனில், நம்மை புகழ்ந்து சொல்வதை உள்வாங்கிக் கொண்டால், நாம் தற்பெருமை அடையக்கூடும். அது நமது ஆணவத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.

மாறாக, நம்மை இகழ்ந்து பேசுவதை உள்வாங்கிக் கொண்டால், நமக்கு பழியுணர்ச்சி ஏற்படலாம்; அல்லது சுயபச்சாதாபம் நேரிடலாம். இரண்டுமே நமது ஆணவ மலத்தை நீக்கவிடாமல் இடையூறு செய்யலாம்.

எனவே, மற்றவர் நம்மை போற்றுவதையும், தூற்றுவதையும் உதாசீனம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.

4. தேவையும், ஆசையும் 

ஒரு மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்தால் போதும் என வாழும் போது, அவனை அறியாமலே அவனுக்கு 'போதும்' என்ற மனநிலை (contentment) வந்து விடுகிறது. போதும் என்ற மனநிலையில் அவனது 'ஆணவம்' குறையத் தொடங்கி விடும். அதனால்தான் பெரியோர்கள் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று சொல்கிறார்கள்.

மாறாக, அவன் ஆசைகள் வசப்பட்டு வாழ்வானேயானால், ஆசைகள் பூர்த்தியாக, பூர்த்தியாக மேலும் மேலும் ஆசைகள் வளர்ந்துகொண்டேயிருக்கும். அது அவனது ஆணவத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்கும்.

எனவே, ஆணவ மலத்தை நீக்க விரும்பும் மனிதன் தனது தேவையைப் பூர்த்தி செய்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

"தேவைக்கு ஆசைப்படு; ஆசைக்கு ஆசைப்படாதே"

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 5

5. அறிவும், ஆணவமும் 

மனிதன் பெறும் அறிவை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 

சிலருக்கு அவர்கள் பெறும் அறிவு பெருமை, புகழ், பணம் போன்றவற்றை சேர்க்கும். அதேநேரம் அது அவர்களது ஆணவத்திற்கு வலுவூட்டவும் செய்யும்.

வேறு சிலருக்கோ அவர்கள் பெறும் அறிவு அவர்களை பணிவு  நிறைந்த மனிதர்களாக மாற்றும்.  காரணம் அது  அவர்களை 'நாம் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்' என்பதை உணர வைக்கும்.  (Knowledge is to know one's own ignorance .. Dr. Radhakrishnan).

அறிவு ஒரு மனிதனின் வாழ்க்கை வளம்பெற உதவும். அதேநேரம் அந்த அறிவு அவனுக்கு பணிவையும் கற்றுத் தருவதாக இருக்க வேண்டும்.  இல்லையெனில் அவனது ஆணவம் மேலும் வலுப்பெற்றுவிடும்.
         
6. நாயினும் கடையேன் 

அருட்செல்வர் மாணிக்கவாசகர் இறைவனிடம் தன்னை 'நாயினும் கடையேன்' என்று வர்ணிக்கிறார். பல இடங்களில் தன்னை 'நாயென' குறிப்பிடுகிறார். அதற்கு பல விதமான விளக்கங்களை பெரியோர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது - -
** நம்மை எந்த நிலையிலும் முன்னிலைப் படுத்தாமல் இருக்க வேண்டும்.
** எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டும்.
** அடக்கமாக இருக்க வேண்டும்.
** மிகுந்த பணிவுடன்  (humility) நடந்துகொள்ள வேண்டும்.
** கூட்டத்தில் இருந்தாலும் மனதளவில் ஒதுங்கி இருக்க வேண்டும்.
** விருப்பு - வெறுப்பு போன்றவகைகளிலிருந்து விலகி மனதை எப்போதும்  சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவைகளை முறையாகக் கடைப்பிடித்தால், மனிதனிடம் உள்ள ஆணவ மலம் அழிந்துவிடும்.

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 6

முந்தைய பதிவுகளில் சொல்லப்பட்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், நம்மிடம் உள்ள 'ஆணவம்' கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிடுவதை உணரலாம். 

முழுவதும் கரைந்துவிட்டால், அதைத்தான் 'நிர்மலம்' என்று சொல்கிறார்கள். (இந்த நிலையை "துரியம்" என்று வடமொழியிலும், "துரியாதீதம்" என்று சைவ சமயத்திலும் குறிப்பிடுகிறார்கள்)

இந்தப் பதிவு நீக்கத்தையே 'மனமிறத்தல்' என்று அருட்செல்வர் மாணிக்கவாசகரும்
குறிப்பிடுகிறார்.

மனிதனின் 'ஆழ்மனதில்' உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கி விட்டால், அவன் "ஜீவன் முக்தன்" எனப் பெயர் பெற்று விடுகிறான். 

ஆனால், இதற்கென்று சில படிநிலைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றாக கடக்கப்பட வேண்டும்.
             
நாம் மனம் என்று பொதுவாகச் சொன்னாலும், அது 'உணர்வு மனம்' மற்றும் 'உணர்வற்ற மனம்' என இரண்டு பிரிவாக செயல்படுகிறது. உணர்வற்ற மனதை 'ஆழ்மனம்' என்றும் சொல்வார்கள்.

புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்வது 'உணர்வு மனம்' மட்டுமே. அப்படியானால் 'ஆழ்மனதில்' பதிவுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம்.

'ஆன்மா' என்பது இறைவனின் ஒரு பகுதியாக அல்லது ஒரு பிரதிநிதியாக நமக்குள் இருந்து, நாம் இயங்குவதற்கு சக்தி அளிக்கிறது. 

அது ஒரு மாய உறைக்குள் இருக்கிறது. அதனை 'சித்தம்' என்று சொல்வார்கள். அதனால்தான்
".. சித்தத்தின் 
உள்ளே சிவலிங்கம் காட்டி.." என விநாயகர் அகவலில் ஔவையார் பாடுகிறார்.

இந்த சித்தத்தின் மேல் பதிவுகள் நிகழும்போது, அதை 'ஆழ்மனம்' என்கிறோம்.

இந்த ஆழ்மனப் பதிவுகளை 'வாசனா' என்று வடமொழியில் சொல்கிறார்கள்.

சைவ சமயத்தில் இதனை ஆணவமலம் என்றும், இதனை நீக்கவே மாயை, கன்மம் இரண்டும் செயல்படுகின்றன என்றும் சொல்கிறார்கள்.

சித்தத்தின் மேல் படிந்துள்ள 'ஆணவமலத்தை' நீக்குவதைத்தான், 'சித்த சுத்தி' என்று அழைக்கிறோம்.

'ஆழ்மனதில்' பதிவுகள் எவ்வாறு நிகழ்கின்றன? பதிவுகளை நீக்க வேண்டிய அவசியம் என்ன?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 7

"Sow a thought .. reap an action;
Sow an action .. reap a habit;
Sow a habit .. reap a character;
Sow the character .. reap your destiny"
  .. (from the book "Meditation" published by Shri Ramakrishna Mission)

"எந்த ஒன்றை தொடர்ந்து நினைக்கிறோமோ, அதையே செயலாக மாற்றுகிறோம்; தொடர்ந்து நடைபெறும் செயல், நமது பழக்கமாக மாறுகிறது; தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் பழக்கம், நமது குணத்தை தீர்மானிக்கிறது; நாம் கட்டிக் காக்கும் குணமே, (அடுத்த பிறவிக்கான) நமது தலைவிதியை நிர்ணயம் செய்கிறது".

புறவுலகிலிருந்து வரும் தாக்கம், அதன் விளைவாக நாம் செய்யும் பதில்வினை (response) அல்லது எதிர்வினை (reaction) ஆகியவை பதிவு ஆவது நமது 'உணர்வு மனதில்தான்'.

நம்மால் ஒரு செயல் தொடர்ந்து நடைபெறுமானால், நாளடைவில் அது பழக்கமாக மாறி நமது 'ஆழ்மனதில்' ஒரு பதிவை ஏற்படுத்திவிடும்.

உணர்வு மனதில் உள்ள பதிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
இந்தப் பதிவுகளே இச்சைகளைத் தூண்டி நம்மை செயலில் ஈடுபட வைக்கின்றன.

மனிதனின்
மறுபிறப்பிற்கு காரணமாக இருப்பதும் இந்தப் பதிவுகளே. இதைத்தான் 'வாசனா' என்றும், 'ஆணவமலம்' என்றும் சொல்கிறார்கள்.

'மனமிறத்தல்' என்று 
சொல்லும்பொழுது, அவர்கள் குறிப்பிடுவது இந்த 'ஆணவமல' நீக்கத்தை தான்.  
            
'ஆணவமலம்' நீங்குவதற்கு முன்னால், உணர்வு மனம் தன்னிச்சையாக செயல்படுவது நிற்கவேண்டும்.

உணர்வு மனம் மூன்று நிலைகளில் செயல்படும் தன்மை உடையது.

உணர்வு மனம் பல நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு, புத்தியை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும். அதற்கு ஆழ்மனதிலிருந்து கிளம்பும் இச்சைகளின் உந்துதலும் ஒரு காரணமாக இருக்கும்.

இரண்டாவது நிலையில் உணர்வு மனம் தேவையெனத் தோன்றினால், புத்தியை கலந்து ஆலோசிக்கும். இருந்தாலும், பல நேரங்களில் அது புத்தியின் ஆலோசனையை உதறித் தள்ளி வேறு விதமான முடிவையும் எடுக்கும்.

மூன்றாவது நிலையில் உணர்வு மனம் புத்தியோடு இணைந்து கொள்கிறது (This is called integrated-mind). இப்போது அதனால் தன்னிச்சையாக இயங்க முடியாது. எனவே 'ஆழ்மனதிலிருந்து' வரும் இச்சைகள் 'உணர்வு மனதிற்கு' எவ்வித உந்துதலையும் கொடுக்க முடியாமல் வலுவிழந்து விடும்.

இதன் பின்னரே, ஆழ்மனதில் உள்ள ஆணவம் கொஞ்சம் கொஞ்சமாக கரையக் தொடங்கும்.

இது இல்லறத்தில் வாழும் மனிதர்களுக்கான உளவியல் விதி. மரத்தின் கிளைகளையும், மரத்தையும் வெட்டிவிட்டு பின்னர் மரத்தின் வேரை அப்புறப்படுத்த முயற்சிப்பதைப் போன்றது.

துறவறத்தை மேற்கொண்டவர்களுக்கு உணர்வு மனதைப் பற்றிய கவலை ஏதும் கிடையாது.

அவர்களது முயற்சியும், பயிற்சியும் நேரடியாக மரத்தை வேரோடு அகற்றுவதற்கு வழிவகுக்கும்.

இல்லறவாசி, துறவு மேற்கொண்டார் இருவரின் செயல்பாட்டினால் ஏற்படும் விளைவில் ஒரு வித்தியாசம் உண்டு. 
அது !?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்
.
பதிவு 8

துறவு வாழ்க்கையை 
மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் 'தியானம்' செய்வதிலேயே
கவனம் செலுத்துவார்கள். 

நாம் பொதுவாக அவர்கள் தவம் செய்கிறார்கள் என்று சொன்னாலும், அவர்கள் தியானத்திலேயே இருப்பார்கள்.

இயல்பாகவே அவர்களிடம் 'நான்', 'என்னுடைய' போன்ற எண்ணங்கள் இருக்காது. எனவே,
அவர்களது 'உணர்வு மனம்' எந்தவித பதிவும் இல்லாதிருக்கும்.

அவர்களிடம் முற்பிறவியின் காரணமாக வரும் 'ஆணவமலம்' இருந்தாலும், தியானத்தின் விளைவாக அது முற்றிலும் அழிந்துவிடும்.

ஆழ்மனப் பதிவுகள் இல்லாததால், சித்தம் சுத்தி அடைந்து உள்ளிருந்து பெருகும் உள்ளொளியில் இரண்டறக் கலந்து விடுகிறார்கள். 

அதனால் அவர்களை நாம் 'அவதார புருஷர்கள்' என்று அழைக்கிறோம்.

அவர்களைப் பொறுத்தவரை 'மனமிறத்தல்' என்பது முழுமை அடைந்து விடுகிறது.

இல்லறத்தில் இருந்துகொண்டு, ஆணவமலத்தை அழிக்க முயல்பவர்கள் முழுமையாக வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனாலும் !?
     
இல்லற வாழ்வில் இருப்பவர்கள் 'ஆணவமலத்தை' நீக்குவதில், பயிற்சியை உணர்வு மனதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

முழுமையான முயற்சியும், முறையானப் பயிற்சியும் இருந்தால், உணர்வு மனதை புத்தியோடு ஒருங்கிணைக்க முடியும் (Integrated mind).

அவ்வாறு ஒருங்கிணைக்க முடிந்தால், ஆழ்மனதில் உருவாகும் இச்சைகள் வலுவிழந்து விடும்.

இச்சைகள் வலுவிழந்தாலும் 'ஆழ்மனதில்' உள்ள பதிவுகள் மறைவதில்லை. ஆகவே, 'ஆணவமல' நீக்கம் முழுமை அடைவதில்லை.

இல்லறத்தில் இருந்துகொண்டு, ஒரு சிலரே 'ஆணவமலத்தை' முழுமையாக அழித்தவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களைப் பொறுத்தவரை, ஆணவம் குறைந்திருக்கும். அதேநேரம், ஆழ்மனதில் உள்ள பதிவுகள் நினைவலைகளாகத் தங்கிவிடும். இச்சைகள் வலுவிழந்த காரணத்தினால், நினைவுகள் எண்ணங்களாக (ஆசைகளாக) உருவெடுக்காது.

இதைத்தான் ரிஷி பதஞ்சலி "சித்த விருத்தி நிரோத" என்று கூறுகிறார். "யோகம்" என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் இதுதான்.

இந்தநிலையில் அந்த மனிதனை ஞானி என்று சொல்லமுடியாது. ஆனால், அவனிடம் 'சத்துவ குணம்' மேலோங்கி இருக்கும்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 9

இனிவரும் பதிவுகளில் கொஞ்சம் 'சுயபுராணம்' கலந்திருக்கும். அவை வருவது எனது மனநிலையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எனது மனநிலையை புரிந்து கொண்டால்தான், நான் எந்த நோக்கத்தோடு வரக்கூடியப் பதிவுகளை வெளியிடுகிறேன் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.
..... ..... ..... .....

இனிவரும் பதிவுகள் கொஞ்சம் சிக்கலானவை. நிதானமாக பயணிப்போம்.
..... ..... ..... .....
'ஆணவமலத்தை' முழுமையாக அழிப்பதற்காக, முன்னோர்கள் பல்வேறு குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

அவற்றில் முக்கியம் என நான் கருதிய சில குறிப்புகளை முந்தைய பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அவைகள் --
* பற்றறுத்தல்
* உடைமைத்தனம் இல்லாதிருந்தால்
* உதாசீனம் செய்தல்
* தேவைக்கு மட்டும் ஆசைப்படுவது
* அறிவு பணிவை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் 
* மற்றவர் முன் தன்னை முன்னிலை படுத்தாமல், தாழ்த்திக் கொள்ளுதல்

இந்தக் குறிப்புகளை முறையாகக் கையாண்டால், ஆழ்மனப் பதிவுகள் நீங்கிவிடும் என்றும் சொல்லியிருந்தேன்.

மேலேசொன்ன குறிப்புகளை நான் நன்கு கடைப்பிடித்ததாக
எண்ணிக்கொண்டேன். ஆனாலும் முழுமையான பயன் கிட்டவில்லை.

இதற்கான காரணத்தை கண்டறிய என்னையே நான் 'சுயபரிசோதனை' செய்தேன்.

அதன் விளைவாக, ஆழ்மனப் பதிவுகள் இரண்டு விதமாக இருப்பதை கண்டு கொண்டேன். 

சில பதிவுகள் நம்முடன் நேரடியாக சம்பந்தப் பட்டிருக்கும். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோர் நேரடி சம்பந்தம் உள்ளவர்கள். ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம் போன்றவையும் இதில் அடங்கும்.

சில பதிவுகள் நம்மிடம் தொடர்பில் உள்ளதாக இருக்கும்; ஆனால் நேரடி சம்பந்தம் எதுவும் இருக்காது. சாதி, இனம், கட்சி, சமூகம் போன்றவை இதில் அடங்கும்.

உதாரணத்திற்கு ஒரு கட்சியை எடுத்துக் கொள்வோம். அதில் நேரடி சம்பந்தம் யாருக்கு உண்டு? தலைவர், செயலாளர் போன்றவர்களை உள்ளடக்கிய நிர்வாகக் குழுவிற்கு அந்தக் கட்சியில் நேரடி சம்பந்தம் உண்டு. கட்சியில் ஒரு தொண்டன் என்ற முறையில் எனக்கு என்ன நேரடி சம்பந்தம் இருக்க முடியும்? வேண்டுமானால் நான் எனக்கு தோன்றும் கருத்துக்களை சொல்லலாம். மற்றபடி நேரடியாக என்னால் எதுவும் செய்ய முடியாது.

               ( தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 10

நேரடி சம்பந்தம் உள்ள பதிவுகளைப் பொறுத்தவரை, எனது முயற்சியும் பயிற்சியும் நல்ல பலனைத் தந்தது. அதன் விளைவாக அவற்றிலிருந்து எவ்வித "சித்த விருத்தியும்" நிகழ்வதில்லை.

அவை சம்பந்தமாக நிகழ்காலத்தில் எது நடந்தாலும், அதை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால், நேரடி சம்பந்தம் இல்லாத பதிவுகளிலிருந்து கிளம்பி வரும் எண்ணங்களை தடுக்க முடியவில்லை.

அந்தப் பதிவுகளை ஆராய்ந்து பார்த்தால், சில பதிவுகள் 'தேசம்' சம்பந்தப் பட்டதாகவும், சில பதிவுகள் 'சமயம்' சார்ந்ததாகவும் இருப்பது தெரிய வந்தது.

பதிவுகளிலிருந்து கிளம்பி வரும் எண்ணங்களை ஆராய்ந்தால், அவை பெரும்பாலும் மனதில் வேதனையைத் தருவதாகவே இருந்தது.

இந்த வேதனைகள் எதனால் வருகின்றன? அவைகள் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

நேரடி சம்பந்தம் இருந்தால் ஏதாவது செய்ய முடியும். நேரடி சம்பந்தம் இல்லாத நிலையில் என்ன செய்ய முடியும்?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முன்னோர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று பார்த்தால், இரண்டு விதமான விடைகள் கிடைக்கின்றன.

பற்று மிகுந்தவர்கள் தங்கள் கருத்துக்களை கோபமாக கூறியிருக்கிறார்கள்.  

(உ.ம்) சாத்திரங்கள் வேண்டா, சதுர்மறைகள் ஏதுமில்லை, தோத்திரங்கள் இல்லை, உளந்தொட்டு நின்றால் போதுமடா
.. பாரதியார்

பற்றற்ற ஞானியர் கருணை நிறைந்த மனதுடன் அறிவுரையாக கூறியிருக்கிறார்கள்.
 
(உ.ம்) நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே .. .. .. .. .. ஆற்றிற் கிடந்துந் துறையறியாமல் அலைகின்றையே!
.. .. .. .. பட்டினத்தார்

இதிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. தவறினைக் கண்டால் பற்றுள்ள மனிதன் கோபம் கொள்கிறான். பற்றற்ற மனிதன், தவறினைச் சுட்டிக் காட்டினாலும், கோபம் கொள்வதில்லை.

'சமூகம்' சார்ந்த கருத்துருக்களை பலரும் தருவதைப் பார்த்திருக்கிறோம்.

அதேபோல், 'சமயம்' சார்ந்த கருத்துக்களையும் பலரும் தந்துள்ளனர்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 11

சமூகம் என்பது தனி மனிதர்களின் கூட்டம். தேசம் என்பது பல சமூகங்களை ஒருங்கிணைப்பது.

சமயம் (மதம்) என்பது தனித்தனியாக, ஒவ்வொரு மனிதனின் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் பொருத்து இயங்குவது.  

நமது நாட்டில் பல மதங்கள், மதங்களுக்குள் பல பிரிவுகள் என பல்வேறு அமைப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் உள்ளடக்கி 'இந்து மதம்' என்று அழைக்கிறோம்.

ஒரு நல்ல தேசம் மக்களிடம் தேசிய உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஆதாரமாக இருப்பது 'நாட்டுப்பற்று'.

அதேபோல் சமயங்களை பொறுத்தவரை, அவை மக்களிடம் 'அன்பை' விதைக்க வேண்டும். 

"அன்பின் வழியது உயிர்நிலை .." என்கிறார் வள்ளுவர்.

அன்பு நிறைந்த மக்கள் வாழும் நாட்டில்தான் தெய்வீகம் மலரும்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 12

'சுயபரிசோதனை'. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் நமக்குத் தோன்றுவது, ஒவ்வொரு மனிதனும் அடிக்கடி தனக்குத்தானே சுயபரிசோதனை (அகத்தாய்வு) செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

உண்மையில் ஒவ்வொரு அமைப்பும் -- அது சமூகம் சார்ந்த அமைப்பாக
இருக்கலாம் அல்லது சமயம் சார்ந்த அமைப்பாக இருக்கலாம் -- அடிக்கடி நாட்டில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்து சுயபரிசோதனையில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம்.

அத்துடன் அவை எடுக்கும் எந்த முடிவும் தேச நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் தேசத்தின் வளர்ச்சியிலும், தெய்வீகத்தின் மலர்ச்சியிலும் வீழ்ச்சி ஏற்படுவதை தவிர்க்க இயலாது. 

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 13

"தேக அபிமானம், லோக அபிமானம், சாஸ்திர அபிமானம்" மூன்றையும் விட்டுவிட வேண்டும் என்று ஆதி சங்கரர் சொல்கிறார்.

ஆனால், தேசத்தைப் பற்றிய எண்ணங்களும், சாஸ்திரத்தைப் பற்றிய எண்ணங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை எப்படி நிறுத்துவது?

நம்மைச் சுற்றி நடக்கும் தவறுகளைப் பார்க்கும்போது, மனம் வேதனைப் படுகிறது. ஆனால், நம்மால் நேரடியாக எதுவும் செய்ய இயலாத நிலையில் யாரிடம் முறையிடுவது?

நேரடி சம்பந்தம் இருந்த காரணத்தால், குடும்ப உறுப்பினர்/உறவுகள்/நண்பர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் செய்வது தவறு என்று தோன்றினால் நேரடியாக சொல்லிவிடுவேன். அதன்பின் அதைப்பற்றி எவ்வித எண்ணமும் வராது.

சிலர் 'உனக்கு ஏன் இந்த வேலை' என்பார்கள். 

ஒருவேளை அது எனது இயல்பான குணமாக இருக்கலாம்.

பாரதி "ரௌத்திரம் பழகு" என்கிறார்.

திருவள்ளுவர் "நகுதற் பொருட்டன்று நட்டல்
மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு" என்கிறார்.

இவர்களது உரைகளைப் பார்த்தபின், நாம் பேசியதில் தவறில்லை என எண்ணிக் கொள்வேன்.

ஆனால், நமக்கு நேரடி சம்பந்தம் இல்லாத இடத்தில் தவறுகள் நடந்தால், யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால், ஆழ்மனதிலிருந்து கிளம்பும் உணர்வுகளை, எண்ணங்களை வெளியே சொல்லி விட்டால், 'சித்த விருத்தி' நின்றுவிடுமோ என்று நினைக்கிறேன்.

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 14

தேசியம், தெய்வீகம் இரண்டும் சிறப்பாக செயல்படுவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில்தான் முடியும். 

அதிலும் சமயம் சார்ந்த வாழ்வியல் நெறிகள் நமது நாட்டில் மிகவும் அதிகம். அவை உலகிற்கே வழிகாட்டக் கூடியவை. அவைகளை அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

ஆனால், நாம் அதைப்பற்றி போதுமான கவனம் வைத்திருக்கிறோமா என்று கேட்டால், பதில் சொல்வது கொஞ்சம் கடினம்தான்.

ஒரு சிறிய உதாரணம்; எத்தனை தவறுகள் --

* இந்துக் கோயில்களை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் விட்டது.

* பல ஆலயங்களை முறையான பராமரிப்பு இன்றி பாழடித்தது.

* அறநிலையத் துறையில் மாற்று மதத்தினரை பதவியில் அமர்த்தியது.

* வருடாந்திர வரவு, செலவு கணக்குகளை பொதுமக்களுக்கு தெரிவிக்காதது.

* முக்கியமாக கோயில்களின் வருமானம் எப்படி செலவழிக்கப்பட்டது என்பதை பொதுமக்களிடம் சொல்லாதது.

* குத்தகை பாக்கி விபரங்கள் எதுவும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லாதது.

* கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு பற்றி பொதுமக்கள் எதுவும் அறியாதிருப்பது.

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 15

எனது மனதில் தவறெனத் தோன்றும் விஷயங்களைத் தெரிவிக்கிறேன்.

நாம் கடந்த கால நிகழ்வுகளை ஆராயப் போவதில்லை. அது தேவை இல்லாதது.

கடந்த காலம் முடிந்த கதை; நிகழ்காலம் கடந்த காலத்தின் தொடர்ச்சி .. அதில் எந்த மாறுபாடும் இருக்காது.

நாம் எதையாவது மாற்ற நினைத்தால், அதை வருங்காலத்தில் தான் செய்யமுடியும்.
ஆனால், அதற்கான ஏற்பாட்டை நிகழ்காலத்தில் செய்ய வேண்டும்.

"மாற்றங்கள் - எதிர்காலம்; ஏற்பாடு - நிகழ்காலம்".

கடந்தகால நிகழ்வுகள்,
நிகழ்கால நிகழ்வுகளுக்கான காரணங்கள்.

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கக் கூடாது என நினைத்தால், அதற்கான ஏற்பாட்டை நிகழ்காலத்தில் செய்ய வேண்டும்.

(The present is the product of the past; the future is the modification of the past in the present .. Swami Chinmayanantha)

அப்படி செய்தால் மட்டுமே நாம் விரும்பும் நிகழ்வை எதிர்காலத்தில் காண முடியும்.
***** ***** *****   
சிறுவயதில் கேட்ட கதை. (இப்போது கதை சொல்லவும் ஆள் இல்லை; அப்படியே இருந்தாலும் கதை கேட்க பிள்ளைகளும்
விரும்புவதில்லை)

ஒரு வயதான தந்தை தனது முடிவு நெருங்குவதை அறிந்து தனது பிள்ளைகள் அனைவரையும் அழைத்தார். 

சில குச்சிகளை கொண்டுவரச் சொல்லி அவற்றை சேர்த்துக் கட்டச் சொன்னார்.

பின் ஒவ்வொரு பிள்ளையிடமும் அந்தக் கட்டை கொடுத்து, அதை கைகளால் இரண்டாக உடைக்கச்
சொன்னார். யாராலும் அதை உடைக்க முடியவில்லை.

பின்னர் அந்தக் கட்டை அவிழ்த்து விட்டு ஒவ்வொரு குச்சியையும் ஒவ்வொரு பிள்ளையிடம் கொடுத்து அதை உடைக்கப் சொன்னார். 

பிள்ளைகள் அனைவரும் குச்சியை எளிதாக உடைத்து விட்டனர்.

தந்தை பிள்ளைகளிடம் "குச்சிகள் ஒரே கட்டாக இருந்தபோது உங்களால் உடைக்க முடியவில்லை. குச்சிகள் தனித்தனியாக வந்ததும் மிகவும் எளிதாக உடைத்து விட்டீர்கள். உங்கள் வாழ்க்கையும் இதுபோலத்தான். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்வரை உங்களை யாரும் வீழ்த்த முடியாது. இதனைப் புரிந்து கொண்டு எப்போதும் ஒற்றுமையாக வாழுங்கள்" என்றார்.  

இப்பொழுது இந்தக் கதையை எதற்காக சொல்ல வேண்டும்?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 16

அந்நியர் முன்னர் படையெடுத்து வந்தபோது, நமது தேசத்தில் பல மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். 

அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால், நமது தேசம் அந்நியர் கைக்கு சென்று விட்டது.

இது வரலாறு சொல்லும் உண்மை.

இதே போன்றதொரு நிலைமை இந்து மதத்திற்குள்ளும் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

நமது தேசத்தின் பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அழிப்பதில் அந்நிய சக்திகள் மட்டுமல்ல, உள்நாட்டு சக்திகளும் செயல்புரிவதை முழுமையாக உணர்ந்திருக்கிறோமா?

கம்பன், காளிதாசன், பாஸ்கரன், பாணினி, சங்கரர், இளங்கோ, வள்ளுவர், பாண்டியர்கள், சோழர்கள், அசோகர், சிவாஜி ஆகியோரின் சாதனைகளைப் போற்றி புகழ்ந்துவிட்டு பாரதி இவ்வாறு உள்ளம் எரியக் கூறுகிறார்
 - -
"அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து 

ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர் 

முன்னம் நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்

பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்

என்ன கூறிமற்று எங்ஙன் உணர்த்துவேன்".

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபின் கல்வி அனைவருக்குமாய் பரவலாக்கப் பட்டது. உண்மை.

ஆனால், நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கினார்களே! நாம் உணர்ந்தோமா?

நாடு சுதந்திரம் அடைந்தபின்னும் இதுதானே நடக்கிறது. நாம் தூங்கிக்கொண்டு தானே இருக்கிறோம்?

பொதுவாக இந்து மதம் என்று சொன்னாலும், நாம் தனித்தனி குச்சியாகத்தானே செயல்படுகிறோம்!?

'இந்து மதம்' என்று சொல்லும்போது இந்த நாட்டில் தோன்றிய அனைத்து மதங்களையும் கருத்தில் கொள்கிறேன்.

இங்கு வெவ்வேறு சமயங்கள் உள்ளன. அவை சொல்லும் வழிமுறைகளில் நிறைய மாறுபாடு இருக்கலாம்.

ஆனால், எல்லா சமயங்களும் முடிவான குறிக்கோளாக ஒரே பரம்பொருளைத்தானே சொல்கின்றன.

அதனால்தானே "ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க" என்கிறோம்.

'குச்சியாக' இருக்கும் நாம், ஒரே 'கட்டாகவும்' செயல்பட எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?

ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு மதத்தலைவர்கள் உள்ளனர்.

அவர்கள் கடைப்பிடிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் வேறு வேறாக இருக்கலாம்.

ஆனால், இந்த நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை காக்க அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டாமா?

ஒருவேளை 'விறகுக்கட்டும், குச்சியும்' என்ற கதை அவர்களுக்குத் தெரிந்திருக்காதோ?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 17

கடந்த காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்று ஆராய்ந்து பார்ப்பதை விடுத்து, இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதுதான் நமது ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என எண்ணுகிறேன்.

முதலில் நமது மனநிலையில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அதன் பின்னரே சமூகத்தில் நாம் செய்ய வேண்டியதைப் பற்றி சிந்திக்கலாம்.

"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் 
என்குற்றமாகும் இறைக்கு" என வள்ளுவர் கூறுகிறார். 

சிந்தித்துப் பார்த்தால், ஒரு சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

இது எனது சொந்த கருத்து. அன்பர்கள் விருப்பு, வெறுப்பு இன்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 18

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். 

ஒவ்வொரு பறவைக்கும் அதனதன் குஞ்சு பொன் குஞ்சு தான்.
அதில் தவறேதும் இல்லை.

காக்கையின் குஞ்சு கருப்பாகத்தான் உள்ளது என்று நமக்குத் தெரியும். ஆனாலும், காக்கை குஞ்சின் மேல் உள்ள பாசத்தால் அதனை 'பொன் குஞ்சு' என்று சொன்னால் நாம் அதைத் தவறென்று
சொல்லலாமா? 

அதே சமயம், அந்தக் காக்கை தன் குஞ்சு "மட்டும்தான்" பொன் குஞ்சு என்று சொன்னால், மற்ற பறவைகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

நான் தினமும் சிவனை வழிபடுகிறேன். சரி.

எனக்கு சிவன் தான் கடவுள். சரி.

என்னைப் பொறுத்தவரை சிவன் தான் முழுமுதற் கடவுள். சரி.

சிவன் "மட்டுமே" முழுமுதற் கடவுள். இது எப்படி சரியாகும்?

எனக்கு சிவன் முழுமுதற் கடவுளாகக் தோன்றுவதுபோல், வேறு ஒருவருக்கு வேறுவொரு கடவுள் முழுமுதற் கடவுளாகத் தோன்றலாம் அல்லவா?

அப்படியானால் "மட்டுமே" என்ற வார்த்தை பிரயோகம் சரிதானா?

ஒரு மனிதன் "மட்டுமே" என்று கூறினால், அவன் அறிந்து உணர வேண்டிய பல விஷயங்கள் அவனால் அறிய முடியாமல் போய்விடும். 

அது அவனது ஆன்மீக வளர்ச்சிக்குத் தடையாகிவிடாதா?

தவிர, "மட்டுமே" என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தால், அங்கு சச்சரவுகளுக்கு பஞ்சம் ஏதும் இருக்காதே!?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 19

இந்து மதத்தில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால், ஒரே வார்த்தைக்கு பல்வேறு விதமான விளக்கங்களைத் பலரும் சொல்வதுதான்.

இதில் உள்ள நன்மை என்னவென்றால், நமக்கு சரியெனத் தோன்றும் விளக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

அதற்காக மற்ற விளக்கங்களைத் தவறென்று கருத முடியாது.

உதாரணத்திற்கு ..
* யோகம் என்றால் என்ன?
* பிறவிகள் எத்தனை?
* மறுபிறவி என்பது எதைக் குறிக்கிறது?
என்று கேட்டுப்பாருங்கள்.

விதவிதமான பதில்கள் வரும். எதையும் தவறென்று நம்மால் சொல்லமுடியாது. அவற்றை பரிசீலனை செய்ய வேண்டியது பண்டிதர்களின் வேலை.

நம்முடைய வேலை, நமக்கு ஏற்புடைய பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சில காலம் கழித்து, நமது புரிதலின் தன்மை மாறும்போது வேறுவொரு விளக்கம் சரியெனத் தோன்றலாம்.

நமக்கு உடன்பாடு இல்லாத கருத்தை மற்றவர்கள் கூறினால், அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். மறுப்பு தெரிவிக்க விரும்பினால், உள்ளத்தில் எந்தவித வெறுப்பும் இன்றி பதிலளிக்க வேண்டும்.

ஓஷோ அவர்கள் அழகாக சொல்லுகிறார் ..

"ஒரு செருப்புக் கடைக்கு போகிறோம்.
அங்கு பலவித அளவுகளில், விதவிதமான அமைப்புகளில் செருப்புகள் இருக்கும்.

நம் காலுக்குப் பொருத்தமான, 
 நமக்குப் பிடித்த அமைப்பில் உள்ள செருப்பை நாம் வாங்கிக் கொள்கிறோம். 

அதற்காக மற்ற செருப்புகளைத் தேவையில்லை என்றோ, இழிவானவை என்றோ நினைக்கக் கூடாது. அவை வேறு பலருக்குப் பொருந்தக்கூடும்". 

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 20

"மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று சொல்வார்கள். இதில் "மாதா, பிதா" இரண்டும் தமிழ் சொற்களா?

‌பழைய இலக்கியங்களைப் பார்த்தால், நம் முன்னோர்கள் வடமொழியை நன்கு அறிந்திருந்தார்கள் என்பது தெரியவரும். அத்துடன் அந்த மொழியில் உள்ள வார்த்தைகளை தங்கள் நூல்களில் எந்தவித தயக்கமுமின்றி கையாண்டிருப்பதையும் காணலாம்.
‌அப்படியிருக்க எதற்கு தேவையில்லாமல்
‌அவற்றை வெறுக்க வேண்டும்?
‌சில அன்பர்கள் சித்தாந்தம் உயர்ந்ததா, வேதாந்தம் உயர்ந்ததா என்று சர்ச்சை செய்வதை பார்த்திருக்கிறேன்.
‌எதற்கு இது மாதிரியான தேவையற்ற சர்ச்சைகள்?

".. தர்க்க வாதத்தை விட்டு.." எனப் பாடுகிறார் திருமூலர். (திருமந்திரம் 51)
‌எனக்கு என் சித்தாந்தம்தான் உயர்ந்தது என்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே?

பல சக்திகள் இந்து மதத்தை சீரழிக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன என்பது நாம் அறிந்ததே.
‌இந்த நேரத்தில், இந்து மத ஒற்றுமையை காக்க வேண்டிய நாம், பங்காளி சண்டை போடுவது சரியா?
‌ (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 21

இந்து மதத்தை பழித்துப் பேசுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பவற்றில் "சாதி" அமைப்பும் ஒன்று.

இந்த சாதி அமைப்பு தொழிலை வைத்து உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

அப்படியானால் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் தொழில் செய்பவர்களை எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது?

தொழிலை வைத்து சாதி, பிறப்பை வைத்து சாதி என்றால், மேற்சொன்ன மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்திருந்தால் யாருக்கு எந்த சாதி என்று எப்படி சொல்வது?

இதைவிட கொடுமையான விஷயம், 'மேல் சாதி', 'கீழ் சாதி' என்று உயர்வு, தாழ்வு பார்ப்பது?

இது தவறு என்று தோன்றியதால் தானே ..

"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் .. கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்" என்று வள்ளுவர் பாடினார்.

"வையகம் காப்பவரேனும் - சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்தே - பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்" என்கிறார் பாரதியார்.

"சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி" என்று பாடுகிறார் ஔவையார்.

அவர்களுக்கு இருந்த கோபம், ஏன் மடாதிபதிகளுக்கும், மதத் தலைவர்களுக்கும் வர மறுக்கிறது?

அவர்கள் பிறப்பை வைத்துத்தான் சாதி என்பதை ஏற்றுக் கொள்ளுகிறார்களா?

               (தொடரும்)


தேசியமும், தெய்வீகமும்

பதிவு 22

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை".
..  ஔவையார்

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை ஒன்று உண்டு.

நாட்டில் ஒரு நல்ல காரியம் செய்ய எண்ணினால் அதன் பயன் கடைக்கோடி கிராமத்தையும் சென்றடைய வேண்டும். அது நகரத்தோடு நின்றுவிடக்கூடாது.

அதேபோல் சமய நூல்களில் கொட்டிக் கிடக்கும் வாழ்வியல் தத்துவங்கள் மனிதனிடம் நற்பண்புகளை வளர்க்கும் வல்லமை பெற்றவை.

அந்த தத்துவங்களை பலரும் விளக்கமாக சொல்லுகிறார்கள். ஆனால், அவை கடைக்கோடி மனிதன் வரை போய் சேருகிறதா?

தத்துவங்களை கடைக்கோடி மனிதனிடம் சேர்க்க
முடியவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன?

தத்துவங்களை கடைக்கோடி மனிதனிடம் ஏன் சொல்லக்கூடாது என்றால்,  'அவர்களால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது' என்பார்கள். 

அது சரிதான். ஆனால், அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக சொல்லலாம் அல்லவா?

‘மாதா உடல் சலித்தாள் 

வல்வினையேன் கால் சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே-நாதா

இருப்பையூர் வாழ்சிவனே 

இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாழாமற் கா’

என்ற  பட்டினத்தாரின் பாடலை ஒட்டி கண்ணதாசன் அவர்கள் எளிமையான வார்த்தைகளை வைத்து எழுதிய பாடல் - -

‘பெற்றவள் உடல் சலித்தாள்

பேதை நான் கால் சலித்தேன்

படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா-பாவி

மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா’

கண்ணதாசன் பாடல் வரிகளைக் புரிவதற்கு, அகராதி எதுவும் தேவையில்லை அல்லவா?

அதேமாதிரி, கடைக்கோடி மக்களுக்குப் புரியும் வகையில் பாடம் எடுத்தால் என்ன?

வேதபாடசாலைகள் நடத்தத் தெரிந்த நமக்கு, கடைக்கோடி மக்களின் பிள்ளைகளுக்காக ஏன் எதுவும் செய்ய முடியவில்லை?
    
                       (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 23

மதத் தலைவர்கள், மடாதிபதிகள் போன்றோர் தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை நித்திய கைங்கரியங்கள் எனப்படும்.

அவர்கள் நடத்தும் வேதபாடசாலைகள்
அவர்களுக்கு கடமையாகும்.

ஆனால், கடைக்கோடி மக்களுக்காக கிராமங்கள் தோறும் குருகுல பாடசாலை அமைத்தால் அதை கடமை என்று சொல்லமுடியுமா?

இதுபோன்ற செயல்கள் நடந்தால், அதை பரபோகார செயல் என்றுதானே சொல்வார்கள்.

இவ்வாறு செய்யப்படும் காரியங்களைத்தான் "பரோபகாரம் இதம் சரீரம்" என்று சொல்கிறார்களோ? 
 
கடைக்கோடி மக்களை நாம் அரவணைக்கத் தவறினால், பிறர் அவர்களை தம்பக்கம் இழுக்க முயற்சி செய்யத்தான் செய்வார்கள்.

இதனைத் தடுக்க வேண்டுமென்றால் மதத்தலைவர்களும், மடாதிபதிகளும் கடைக்கோடி மக்களிடம் கருணை காட்ட வேண்டும்.

அதன் முதல் நடவடிக்கையாக கிராமங்கள் தோறும் (குருகுல) பாடசாலைகள் அமைக்க வேண்டும். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தலாம். 

கல்விக் கட்டணம் இன்றி, இலவசமாக சாப்பாடு போட்டு எல்லா குழந்தைகளையும் "வாசுதேவ குடும்பத்து" பிள்ளைகளாக நடத்துங்கள்.

அத்துடன் நமது பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை பற்றி எளிய முறையில் கதைகளாக சொல்லிக் கொடுக்கலாம்.

நமது புராண இதிகாசங்களில் நிறைய கதைகள் இருக்கின்றன. அவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

திருக்குறள், தேவாரம், திருவாசகம் மற்றும் பல நன்னெறி நூல்களில் உள்ள எளிமையான பாடல்களை கற்றுக் கொடுக்கலாம்.

இதுபோன்ற பள்ளிகள் சில இடங்களில் நடக்கின்றன. அவைகளை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டுவர வேண்டும்.

இதையெல்லாம் செய்தால் அவர்களின் பண்பு நிலையில் நிறைய மாற்றங்கள் வரும். அத்துடன் அவர்கள் 'விசுவாசமான' மாணவர்களாக மாறலாம் அல்லவா? 

விசுவாசம் என்பது பக்தியை விட உயர்ந்த பண்பு தானே!

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 24

எந்த ஒரு நாட்டிற்கும் சாதி அமைப்பு தேவையில்லைதான். 

சாதி அமைப்பை ஒழிக்க அரசு என்ன செய்யலாம்?

இனி எந்த இடத்திலும் சாதிப் பெயரை உபயோகிக்கக் கூடாது என்று அரசு ஆணையிட்டால், பல இடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வரக்கூடும். காரணம் வேறு வேறாக இருக்கலாம்; ஆனால் எதிர்ப்பு நிச்சயம் வரும்.

ஆக, சாதியை ஒழிப்பதற்கு முதல் கட்டமாக பிறப்பு சான்றிதழில் சாதிப் பெயருக்குப் பதிலாக 'forward, backward, most backward, others' எனக் குறிப்பிடலாம். (தேவைப்பட்டால், 'no caste' என்றுகூட ஒரு பிரிவை சேர்த்துக் கொள்ளலாம்)

இதையே மற்ற இடங்களிலும் உபயோகிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இந்த முறையை கடைப்பிடித்தால் நான்கு பிரிவுகள் மட்டுமே புழக்கத்திற்கு வந்துவிடும். 

தனிப்பட்ட முறையில் மனிதர்கள் எந்த சாதியில் இருந்தாலும், பொது இடத்தில் இந்த நான்கில் ஒன்றையே குறிப்பிட வேண்டும் என்ற நிலை வரவேண்டும்.

பின்னர் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்து, நான்கு பிரிவுகளையும் ஒவ்வொன்றாக இணைக்க முயற்சிக்கலாம்.

சாதி அமைப்பை ஒழிப்பதற்கு அரசுக்கு இன்னொரு முக்கிய கடமையும் உள்ளது.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 25

(எனது மனதில் உள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடாகத்தான் இந்த தொடரை வெளியிட்டு வருகிறேன். இருந்தாலும் தேவையற்ற கொடூர கொரோனா கிருமியின் காரணமாக பலர் உயிர் துறந்துவரும் நேரத்தில் இந்தப் பதிவை வெளியிடுவதற்கு வருந்துகிறேன்)

சாதிப் பிரிவினையை ஒழிக்க வேண்டுமென்றால் நாட்டிலுள்ள எல்லா ஊர்களிலும் (தேவைக்கேற்ப) மின்மயானங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அங்கு தகனமேடை தவிர்த்து உள் அரங்கு ஒன்றும், வெளி அரங்கு ஒன்றும் இருக்க வேண்டும்.

வெளி அரங்கில் அவரவர் வழக்கப்படி சடங்குகளை செய்து கொள்வதற்கு அனுமதிக்கலாம்.

ஆனால், உள் அரங்கில் நடைபெறும் சடங்கு ஒரே விதமாக இருக்க வேண்டும்.

தேவையான மின்மயானங்கள் அமைத்த பின்னர், சாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மயானங்களை அரசுடமை ஆக்க வேண்டும்.

அந்த இடங்களில் மரங்களை நடலாம். முடிந்தால் அடர் காடுகளை உருவாக்கலாம்.

இவை மட்டும் போதுமா என்றால், போதாது என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும், இந்த நடவடிக்கைகள் சாதிப் பிரிவினையைக் குறைக்க பெருமளவில் உதவலாம்.

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 26

கோயில் திருவிழாக்கள், பொதுக்கூட்டம், சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் பொதுமக்கள் நிறைய கூடுவதுண்டு.

அந்த நேரங்களில் நம் அருகில் உள்ளவர் என்ன சாதி என்று பார்ப்பதில்லை.

ஆனால், நமது இடத்திற்கு வந்துவிட்டால், இந்த தெருவுக்குள் வராதே என்கிறோம்.

ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் வேறு வேறாக இருக்கலாம். எனவே, என் வீட்டிற்குள் வராதே என்று சொல்லலாம்; ஆனால், என் தெருவிற்குள் வராதே என்று எப்படி சொல்ல முடியும்?

பல நூறு வருடங்களாக அடக்கி வைத்ததன் காரணமாக, சிலருக்கு மற்றவர் மேல் ஆத்திரமும், கோபமும் வருவது இயற்கையே.

மதத்தலைவர்கள் அப்படிப்பட்ட மக்களை அன்புடன் அரவணைத்து பரிவுடன் நடந்து கொண்டால், அவர்களின் ஆத்திரமும், கோபமும் குறையலாம் அல்லவா?

"வாசுதேவக் குடும்பம்" என்று உலகமெங்கும் சொல்லி வருகிறோம். ஆனால், உள்ளூரில் அதைக் கடைப்பிடிக்க மறந்துவிடுகிறோமே!
அது ஏன்?

               (தொடரும்)




தேசியமும், தெய்வீகமும்

பதிவு 27

ரேஷன்கார்டு குடும்ப உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையாகவும் இருந்து வந்திருக்கிறது.

"ஆதார்" கார்டு வந்தபின் அந்த அவசியம் இல்லை என்றாகிவிட்டது. பின் எதற்காக எல்லோரும் ரேஷன்கார்டு வைத்திருக்க வேண்டும்?

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன்கார்டு என்ற திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் என்ன?

சொந்தத்தில் கார் வைத்திருக்கிறவர்கள், வருமான வரி கட்டுகிறவர்கள், குறிப்பிட்ட அளவிற்கு மேல், உதாரணமாக 1500 சதுர அடி, சொந்தமாக வீடு உள்ளவர்கள் போன்ற மனிதர்களுக்கு ரேஷன்கார்டு எதற்காக கொடுக்க வேண்டும்?

இதுபோன்ற பல அளவீடுகளை வைத்து ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், அதனால் சேமிக்கப்படும் பணத்தை ஆக்கப்பூர்வமான வழியில் செலவிடலாமே! 

               (தொடரும்)


               

தேசியமும், தெய்வீகமும்

பதிவு 28

நமது நாட்டில் கல்வி திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் வேண்டியிருக்கிறது.

கல்வி என்பது 
மாணவர்கள் நலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் பெரும்பாலான இடங்களில் அப்படி இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

மாணவர்களின் தேவையை மூன்று விதமாகப் பிரிக்கலாம் ..
1. அடிப்படை கல்வி
2. துறைசார்ந்த கல்வி
3. நன்னெறி வளர்க்கும் கல்வி

குறிப்பிட்ட வகுப்பு வரை அடிப்படை கல்வி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அதில் தாய்மொழிப் பாடம், ஆங்கிலப் பாடம், விருப்பப்பட்ட பிறமொழிப் பாடம் மற்றும் கணக்குப் பாடம் ஆகியவை இருக்க வேண்டும்.

தாய்மொழிப் பாடத்திலேயே சமூகம் சார்ந்த விஷயங்களை .. சுகாதாரம், சுற்றுச்சூழல், இயற்கை வளம் போன்ற விஷயங்களை .. கற்றுக் கொடுக்கலாம்.

துறைசார்ந்த கல்வியில், மாணவனுக்கு சம்பந்தம் இல்லாத எந்தப் பாடமும் இருக்கக் கூடாது.

"அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒவ்வொரு மாணவனும் அவனது துறையில் நன்கு பயிற்சி பெற்றவனாக வரவேண்டும்.

நன்னெறி வளர்க்கும் பாடங்கள் எல்லா வகுப்புகளிலும் இடம் பெற்றிருக்க வேண்டும். இதில் அடங்கியுள்ள பாடத் திட்டங்கள் நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நீதி போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

               (தொடரும்)




தேசியமும், தெய்வீகமும்

பதிவு 29

மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் அரசு கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

B. P.-யை எடுத்துக் கொள்ளுங்கள். அது 80 - 120 என இருக்க வேண்டும் என்கிறார்கள். என் உறவினர் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் (Systolic pressure)
140 என இருந்தது.

இது அதிகமாக என்றால், உங்கள் வயதைப் பொறுத்தவரை இது அதிகமில்லை என்றார். அதாவது 100 + வயது வரை இருக்கலாம் என்றார். உறவினருக்கு வயது 60. எனவே இது அதிகமில்லை என்றார்.

சமீபத்தில் ஒரு பதிவில் 80 - 120 என்பது முன்னர் வேறு விகிதத்தில் இருந்தது. பன்னாட்டு மருந்து கம்பெனிகள் பயன்பெறும் பொருட்டு, இதன் விகிதம் 80 - 120 என மாற்றப் பட்டது என வெளியாகியிருந்தது.

இதேமாதிரி, சர்க்கரை வியாதியைப் பற்றியும் நிறைய மாறுபட்ட கருத்துகள் உண்டு.

இது சம்பந்தமாக பல செய்திகளை சொல்லலாம். ஆனால், எனது கேள்வி இதுவல்ல.

துறைசார்ந்த வல்லுனர்களே மாறுபட்ட கருத்துக்களை சொல்லும்போது அதை ஆராய வேண்டியது அரசின் கடமை அல்லவா?

முடிவான, தெளிவான ஒரு கருத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா?

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 30

மருத்துவத்தைப் பொறுத்தவரை allopathy என்னும் ஆங்கில மருத்துவம் முதற்கொண்டு பலவகை மருத்துவ முறைகள் உண்டு.

இவை தவிர பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் பலரும் மருத்துவம் செய்து வருகிறார்கள்.

தொழில் ரீதியாக மருத்துவராக இல்லாமல் இருந்தும், சிலர் வைத்தியம் செய்வது உண்டு.

நான் சந்தித்த இரண்டு அனுபவங்கள் ..

1. அன்று எனக்குப் பயங்கர வயிற்றுக் கடுப்பு. வயிற்று வலியும் அதிகமாக இருந்தது. வயிற்றை யாரோ பிசைவது போன்ற வேதனை.

மறுநாள் பரீட்சை எழுதப் போகவேண்டும். அன்று இரவு என் தந்தை ஒருவரைக் கூட்டிவந்தார். அவரிடம் எனது வியாதியைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

வந்தவர் என்னை சோதித்து விட்டு, என் தந்தையிடம் ஒரு வாழைப்பழம் வாங்கி வரச் சொன்னார்.

தந்தை வந்ததும், பழத்தில் ஒரு சிறு பகுதியில் தான் கொண்டுவந்திருந்த வெற்றிலை மடிப்பிலிருந்து ஒரு சிறு உருண்டையை பொதிந்து என்னை வாயில் போட்டு விழுங்கச் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து 'பையன் தூங்கட்டும்' என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நானும் நன்கு தூங்கி விட்டேன்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் வியாதியின் அறிகுறியே இல்லை.

2. நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள முந்திய நாளே அவரது ஊருக்கு சென்று விட்டோம்.

அன்று இரவு நண்பர்கள் அனைவரும் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தோம்.

நண்பர் (மணமகன்) சிறுநீர் கழிக்க முயன்றிருக்கிறார்; ஆனால், முடியவில்லை. நீர்க் கடுப்பு என நினைத்துக் கொண்டேன்.

இருட்டு நேரம் என்பதால், ஒரு வேலையாள் 'பெட்ரோமாக்ஸ்' விளக்குடன் எங்களுடன் வந்திருந்தார்.

அவர் நண்பரிடம் 'என்ன மாப்பிள்ளை, விடிந்தால் கல்யாணம் .. இப்படி கஷ்டப்படுறீங்களே' என்று கேலியாகக் கூறியவர், விளக்கு வெளிச்சத்தில் இங்கும் அங்குமாக எதையோத் தேடியவர் ஒரு செடியிலிருந்து சில இலைகளைப் பறித்து கையில் வைத்து கசக்கினார். பின் அந்த கசக்கிய இலைகளைச் சுருட்டி நண்பரின் இரண்டு காது மடல்களிலும் வைத்தார்.

ஐந்து நிமிடங்கள் கழிந்தபின், அவர் நண்பரிடம் 'மாப்பிள்ளை, இப்போது முயன்று பாருங்கள்' என்றார். நண்பரும் எந்தவித சிரமமும் இன்றி சிறுநீர் கழித்தார்.

உதாரணத்திற்காக இரண்டு அனுபவங்களை மட்டும் கூறுகிறேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் அன்பர்கள் வாழ்விலும் நிகழ்ந்திருக்கலாம்.

இது சம்பந்தமாக அரசு செய்ய வேண்டிய கடமை ஒன்று உள்ளது.

                   (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 31

பல வருடங்களுக்கு முன்னர் "Arigo .. the man with rusted knife" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை "Reader's digest" பத்திரிகையில் வெளிவந்தது.

அந்தக் கட்டுரை Arigo என்ற மனிதருக்கு இருந்த அமானுஷ்ய சக்தியைப் பற்றியது.
அவர், அவருக்கே தெரியாத அந்த சக்தியின் உதவியினால், பலரது நோய்களை குணப்படுத்தி வந்தார்.

அதைக் கேள்விப்பட்ட
அமெரிக்கா (Arigo அர்ஜென்டீனா நாட்டை சேர்ந்தவர்) ஒரு புதிய ஆஸ்பத்திரி கட்டி, ஒரு மருத்துவ குழுவையும் அனுப்பி Arigo-வுடன் இணைந்து பணியாற்ற ஏற்பாடு செய்தது. அதனுடைய நோக்கம் Arigo-விடம் இருந்த அமானுஷ்ய சக்தியின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்பதுதான்.

('விதி வலியது' என்பதற்கிணங்க, 
Mr. Arigo-வின் மரணம் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடந்தது. அது ஒரு தனிக்கதை)

ஒரு தனிமனிதனின் அமானுஷ்ய சக்தியை ஆராயத் துடித்தது அமெரிக்கா.

நமது நாட்டில் மருத்துவ படிப்பு ஏதுமின்றி,
பலர் மக்களின் பலவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வெற்றியும் பெற்று வருகிறார்கள்.

அரசு உரிய மருத்துவ குழுவினை அமைத்து சம்பந்தப் பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களது சிகிச்சையின், அதன் பலனின் உண்மைத் தன்மையை அறிய முயற்சி செய்யலாம் அல்லவா?

தேவைப்பட்டால், அந்த சிகிச்சை முறைகளை அங்கீகரித்து, அந்த முறையை உரிய முறையில் சந்தைப் படுத்த முயற்சி செய்யலாம் அல்லவா?

அது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்தானே! 

               (தொடரும்)



தேசியமும், தெய்வீகமும்

பதிவு 32

ஒரு ஜனநாயக நாட்டில் வேட்பாளர் தேர்வு என்பது மிகவும் முக்கியமானது.

வாக்களிக்க செல்லும்போது, பொதுநலத்தில் நாட்டம் உள்ள வேட்பாளர்களை மட்டும் தேர்வு செய்தால், அது நாட்டிற்கு நல்லது.

ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன?

தனக்குக் கிடைக்கும் அன்பளிப்புகள்(!), கிடைக்கப்போகும் இலவசங்கள், சாதி, மதம் போன்றவற்றைப் பார்த்து வாக்களித்தால், அது நாட்டிற்கு நல்லதா?

இந்தத் தவறை யார் சரி செய்ய வேண்டும்?

அரசியல்வாதி, அரசியலோடு தொடர்புடைய தொழிற்சங்க நிர்வாகிகள், மதத் தலைவர்கள் போன்றோர் தானே இதை சரிசெய்ய வேண்டும்? ஆனால், அவர்களே வாக்காளர்களைத் தவறாக வழிநடத்தினால் என்ன செய்வது?

ஊடகங்களாவது நல்வழி காட்டுமா என்றால், பெரும்பாலான ஊடகங்கள் நெறிதவறியே நடக்கின்றன.

இதற்கு ஒரே மாற்று, தேர்தல் விதிமுறைகளில் இரண்டு சீர்திருத்தங்கள் செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது ..
1. வேட்பாளர்கள் பெயரின்றி கட்சிகள் மட்டும் பங்கு கொள்ளும் தேர்தல்.
2. சுழற்சி முறையில் நடைபெறும் தேர்தல்

               (தொடரும்)

தேசியமும்,

தேசியமும், தெய்வீகமும்

பதிவு 33

வேட்பாளர்கள் பெயரின்றி கட்சிகள் மட்டும் தேர்தலில் போட்டியிட்டால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

ஒரு மாநிலத்தில் 250 சட்டசபை தொகுதிகள் உள்ளன என எடுத்துக்கொள்வோம்.

ஒரு கட்சி 100 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக இருந்தால், 100 பெயர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிட வேண்டும்.

உரிய தணிக்கைக்குப்பின் அந்தப் பட்டியலை தேர்தல் ஆணையம் ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

விகிதாச்சார முறைப்படியான தேர்தலாக இது இருக்காது; ஏனெனில், நாட்டில் பல கட்சிகள் இயங்குவதால் இது நடைமுறை சாத்தியமற்றது.

இந்தப் புதியமுறை தேர்தல் வழக்கம் போலவே நடைபெறும். வாக்குச் சீட்டில் வேட்பாளர் பெயர் மட்டும் இருக்காது.

பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தேசியக் கட்சிகளும், மாநிலத்திற்கான தேர்தலில் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் போட்டியிடலாம்.

தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் எவை என்பதற்கான விதிகளை மத்திய-மாநில அரசுகளும்,
தேர்தல் ஆணையமும் இணைந்து முடிவு செய்ய வேண்டும். 

இந்தப் புதிய முறையினால் ஏற்படும் பயன்கள் என்னவென்று பார்ப்போம்.

1. நூறு தொகுதிகளில் போட்டியிடும் கட்சியின் ஒரு தொகுதி புதுக்கோட்டை என வைத்துக்கொள்வோம்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. மணி என்பவரின் பெயர், அந்தக் கட்சி அளித்த பெயர் பட்டியலில் 100-வது இடத்தில் இருந்தால் என்ன நடக்கும்?

புதுக்கோட்டை தொகுதியில் அந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், 100 இடங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, திரு. மணி அவர்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்கும் என்பதால், அவர் தன் சொந்தப் பணத்தை செலவு செய்வாரா?

பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்களும், சொந்தப் பணத்தை செலவிடத் தேவையில்லை என நினைப்பார்கள்.

பட்டியலில் நடு பகுதியில் உள்ளவர்களுக்கோ, இது 'இரண்டும் கெட்டான்' நிலையாக இருக்கும்.

வேட்பாளராக நிற்க விரும்புகிறவர்களிடம், "நீங்கள் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்" என கேட்க முடியாத நிலைக்கு கட்சித் தலைமை தள்ளப்படும்.

ஆக, மொத்தத்தில் தேர்தல் சமயத்தில் நடக்கும் பணப்பட்டுவாடா பெரிதும் குறைந்துவிடும்.

2. எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர் கட்சி மாறினால், அந்தப் பதவி பட்டியலில் உள்ள அடுத்த நபருக்குப் போய்விடும்.

3. இதன்காரணமாக குதிரை பேரம் நடத்த
முடியாது.

4. பதவியில் இருப்பவர் இறந்து போனால், மறுதேர்தல் தேவை இருக்காது. பட்டியலில் உள்ள அடுத்த நபர் அந்த இடத்தில் அமர்த்தப் படுவார்.  

5. ஆட்சி கவிழ்ப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கட்சித் தலைமை முடிவெடுத்து, மொத்தமாக வேறு கட்சிகளுடன் இணைந்தால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

அப்படியானால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபின் ஐந்து வருடங்களுக்கு அசைக்க முடியாது என்ற நிலை வந்தால், அது நல்லதா என்ற கேள்வி வரலாம். அவர்களது ஆட்சியில் நிறைய குறைபாடுகள் இருந்தால், அதற்கு மாற்று என்ன எனத் தோன்றலாம்.

அதற்கு மாற்று "சுழற்சி முறை தேர்தல் தான்"!?

               (தொடரும்)




தேசியமும்,
தெய்வீகமும்

பதிவு 34

ஆங்கிலத்தில் 'tenterhook' என்றொரு வார்த்தை உண்டு.

'எப்பொழுதும் ஒருவித பதற்றத்தோடும், பயத்தோடும், என்ன நடக்குமோ என்ற கவலையோடும் இருப்பதையும்' சுட்டிக் காட்டுவதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. 

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், ஐந்து வருடங்களுக்கு நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணம் வரக்கூடாது. அந்த எண்ணம் வந்துவிட்டால், அது தவறு செய்ய நிறைய இடம் கொடுத்துவிடும்.

இதற்கான ஒரே நிவாரணி தான் 'சுழற்சி முறை தேர்தல்'. இது எப்படி நடைபெறவேண்டும் என்று பார்ப்போம்.

ஒரு மாநிலத்தில் 250 சட்டசபைத் தொகுதிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் வருடம்தோறும் 50 இடங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும். 50 இடங்களும் அனைத்து மாவட்டங்களிலும் இடம் பெறுவதாக இருக்க வேண்டும்.

ஐந்து வருடங்களில் அனைத்து தொகுதிகளும் இடம் பெற்றுவிட வேண்டும். (இதே முறையை பாராளுமன்றத் தேர்தலுக்கும் பயன்படுத்தலாம்) 

இதனால் விளையும் பயன் என்ன? ஆட்சியில் இருப்பவர்களுக்கு 'ஐந்து வருடம் .. நாம் எதுவும் செய்யலாம். நம்மை யாரும் எதுவும் கேட்க முடியாது' என்ற எண்ணம் வராது. தவறாக ஆட்சி செய்தால் ஒரே வருடத்தில் பதவி பறிபோய்விடுமோ என்ற பயம் இருக்கும்.

உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் 'சுழற்சி' முறையிலா தேர்தல் நடக்கிறது? பின் எதற்காக நமது நாட்டில் மட்டும் இந்த 
முறையில் தேர்வு நடத்த நினைக்க வேண்டும்?  

உண்மைதான். பிற ஜனநாயக நாடுகளில் இந்த முறை இல்லைதான். 

ஆனால், அங்கு அரசியல்வாதிகளிடமும், ஊடகங்கள் மத்தியிலும் "தேசிய" உணர்வு இருக்கிறதே? இங்கு அது எல்லா மட்டங்களிலும் இருக்கிறதா?

சாதிய உணர்வு, மத உணர்வு, இன 
உணர்வு, மொழி உணர்வு போன்றவை நம்மைப் பிடித்து ஆட்டும் போது, நாம் "தேச நலனை" காற்றில் பறக்க விட்டு விடுகிறோமே!

மக்களிடம் அன்பை விதைக்க வேண்டிய நாம், நல்ல அறிவுரைகளை வழங்க வேண்டிய நாம், அவர்கள் மனதில் வெறுப்பை விதைத்து கோபத்தை வளர்த்து விடுகிறோமே; இது சரியா?

இது தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பதை மதவாதிகளும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் ஏன் உணர்வதில்லை?

தேச நலனில் அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் கையில் ஐந்து வருடத்திற்கு ஆட்சியைக் கொடுக்கலாமா?

அவர்களுக்கு தேச நலனில் அக்கறை ஏற்பட வேண்டுமென்றால், 'சுழற்சிமுறை தேர்தல்' ஒன்றே சரியான நிவாரணம் ஆகும்.  

               (தொடரும்)




தேசியமும்,
தெய்வீகமும்

பதிவு 35

ஒரு நாட்டின் கலாச்சாரம் எப்படி உருவாகிறது?

நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களே நமது கலாச்சாரமாக மாறுகிறது.

இதேபோன்று அனைத்து மக்களும் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களே ஒரு நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயம் செய்கின்றன. 

ஆனால், நமது நாட்டில் மக்கள் மதம், மொழி, இனம், சாதி என பல்வேறு குழுக்களாக இயங்குகின்றனர். எனவே எல்லா மக்களுக்கும் ஒத்துப்போகும் ஒரே மாதிரியான கலாச்சாரத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

எது எப்படி இருந்தாலும் நாம் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் கடைப்பிடிக்கும் கலாச்சாரத்தில் என்ன வித்தியாசம் இருந்தாலும், அது நாட்டின் இறையாண்மையை பாதிக்கக்கூடாது.

தவிர, நமது நாடு ஒரு ஆன்மீக பூமி. இந்த நாட்டின் ஆன்மீகம் மிகவும் பழமையானது. உலகிற்கே வழிகாட்டும் சக்தி வாய்ந்தது. நமது நாட்டின் மக்கள் கடைப்பிடிக்கும் கலாச்சாரம் அதனை சீரழிக்காமல் இருக்க வேண்டும்.

"Success in life is in keeping the head above the storms of the heart" .. Swami Chinmayanantha.

வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் போது, மனதில் கொந்தளிப்பு வருவது இயற்கையே.

ஆனால், மனிதன் அதில் சிக்கிக் கொள்ளாமல், அவனது புத்தி விவேகமாக சிந்திக்க இடம் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மனம் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்தால், அது எதிர்வினை (reaction) ஆற்றும். அது பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கும்.

உணர்ச்சி வசப்படாமல் இருந்தால்தான், மனிதனால் விவேகமாக சிந்திக்க முடியும். அதன் விளைவாக (தேவைப்பட்டால்) அவனிடமிருந்து வருவது பதில்வினையாக மட்டுமே (response) இருக்கும்.

மொத்தத்தில் மனிதன் எதிர்வினை ஆற்றவில்லை என்றால், பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாக இருக்கும்.

மனிதர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்க, உணர்ச்சி வசப்பட்டாலும் எதிர்வினை ஆற்றாமல் இருக்கக் கற்றுக் கொண்டால், நாட்டின் கலாச்சாரம் மேன்மை அடைந்துவிடும்.

இதை, மதவாதிகளும், அரசியல்வாதிகளும், ஊடக நெறியாளர்களும் எப்போது புரிந்து கொள்கிறார்களோ, அப்போதுதான் நமது நாட்டில் 'தேசியம் வளரும்; தெய்வீகம் மலரும்'.

               (தொடரும்)

தேசியமும்,
தெய்வீகமும்

பதிவு 36

"Things which cannot be said, but should be said, must be said.

சொல்ல விரும்பிய, ஆனால் சொல்லத் தயங்கிய விஷயங்களை, சொல்லிவிட்டேன்.
(சின்ன சின்ன விஷயங்களை முன்னரே சொல்லிவிட்டேன்).

(Google search-ல் "piththantnv@blogspot.com" என்ற வலைத்தளத்திலும் எனது பெரும்பான்மையான பதிவுகளைப் பார்க்கலாம்)

மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு.

கண்ணாடியில் படிந்திருந்த தூசியை துடைத்தாகிவிட்டது. மேற்கொண்டு தூசி படியாமல் இருக்க இறைவன்தான் அருள் செய்ய வேண்டும்.

"சித்த விருத்தி நிரோத" கைகூடுவதும், கைகூடாமல் இருப்பதும், "அவன்" கையில்தான் உள்ளது!?
..................................
"கற்றது நன்னெறி
கனிந்திடும் நற்பயன்
மற்றது வருவதோ
மன்னவன் அருட்பயன்"

என்றும் அன்புடன்,
நன்றி; வணக்கம்.

No comments:

Post a Comment