Monday, 10 October 2022

வானப்பிரஸ்தம்



வானப்பிரஸ்தம்

பதிவு 1

அன்பு வணக்கம்.

பெரும்பாலான மனிதர்கள் வயதான காலத்தில் "மன அமைதி" இன்றி தவிப்பதைப் பார்க்கிறோம்.

அவர்களுக்கு பயன் அளிக்கலாம் என்ற நம்பிக்கையில் எனது வாழ்க்கை அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பகிர்வு நீண்டு விடலாம் என்பதனால், ஒரு தொடராக வெளிவருகிறது. தொடரென்றால் அதற்கு ஒரு தலைப்பு வேண்டுமே! என்ன பெயர் வைக்கலாம்?

"வானப்பிரஸ்தம்" என்றே வைத்துக்கொள்வோம். வானப்பிரஸ்தம் என்றால் 'காட்டிற்கு சென்று வாழ்வது' என்று சொல்வார்கள். ஆனால், மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் நாம் அதற்கு வேறுவிதமாகப் பொருள் கொள்ள வேண்டும். அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.

முதலில் நான் சந்தித்த அனுபவங்கள்.

                         (தொடரும்)

வானப்பிரஸ்தம்
பதிவு 2

பணி நிமித்தம் காரணமாக எனக்கு அடிக்கடி 
மாறுதல்கள் வந்து கொண்டிருந்தன. எல்லாமே இயல்பாக எதிர்பாராமல் நடந்தவைதான்.

இதனால் என் மகனும் அடிக்கடி பள்ளிக்கூடத்தை மாற்ற வேண்டி வந்தது. எனவே அவனை சொந்த ஊரில் பாட்டியுடன் தங்கவைத்து அங்கு படிக்க வைத்தேன். உறவினர்களும் அவனை நன்கு பார்த்துக் கொண்டனர்.

நான் வேலை நிமித்தம் காரணமாக தூத்துக்குடி வந்து சேர்ந்துவிட்டேன். இங்கும் தொடர்ந்து தங்குவேனா என்று தெரியாத நிலையில் மகனை சொந்த ஊரிலேயே படிக்கச் செய்தேன்.

ஒருநாள் என் குடும்ப நண்பர் என்னிடம் 'பையனை சொந்த ஊரில் விட்டது தவறென்றும் அவனுக்கு பெற்றோர் மீது பிரியம் இல்லாது போய்விடும்' என்று சொன்னவர் தன்மகனைத் தன்கூடவே வைத்திருப்பதைப் பற்றியும் பெருமையாகக் கூறினார்.

நான் சிரித்துக்கொண்டே அவரிடம் கூறினேன் - -
"You think that your son is nearer to you; but he is far away from you. You also think that my son is far away from me; but he is nearer to me"
(நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் பையன் உங்கள் பக்கத்தில் இருக்கிறான் என்று; ஆனால், அவன் உங்களைவிட்டு தூரத்தில்
இருக்கிறான். எனது மகன் விலகியிருக்கிறான் என நினைக்கிறீர்கள்; ஆனால், அவன் எங்கள் பக்கத்திலேயே இருக்கிறான்)

நான் ஏன் அப்படி சொன்னேன் என்று அவர் கேட்கவில்லை. இருந்தாலும் அவர் அதற்கானக் காரணத்தை புரிந்துகொண்டிருப்பார் என நினைத்துக் கொண்டேன்.
   
நான் அவரிடம் சொன்னதற்கான காரணம் ...
              
                         (தொடரும்)


வானப்பிரஸ்தம்

பதிவு 3

(எனது குடும்ப நண்பர் மற்றும் நான் .. இருவருமே மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டவர்கள். அதனால் எங்களுக்குள் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படும். அதன்மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. ஆனாலும் அவர் கடைசிவரை எங்களின் 'நலம்விரும்பி'யாகவே இருந்து வந்தார்.
அவர் மூலம் பெற்ற மூன்று அனுபவங்களை மட்டுமே நான் இங்கு பதிவு செய்கிறேன். அவை உணர்த்தும் உண்மைகள் "வானப்பிரஸ்தம்" பற்றியும் அதன் தேவையைப் பற்றியும் நமக்கு ஒரு தெளிவான சிந்தனையை வழங்கலாம்)

எனது நண்பர், நான் இருவருமே 'ஆணாதிக்கம்' மிகுந்தவர்களாகவே இருந்தோம். ஆனாலும் எங்களிடையே சில வித்தியாசங்களும் இருந்தன.

அவர் தன் குடும்பத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் நினைத்தபடி எல்லோரும் நடக்க வேண்டும். மாறுபட்ட கருத்தை யாரும் வெளிப்படையாக சொல்லமுடியாது.
தவிர 'தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் தோழன்' என்பார்கள். அது அங்கு கடைப்பிடிக்க பட்டதாகத் தெரியவில்லை.
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையானவற்றை அழகாக பூர்த்தி செய்து வந்தார். இருந்தாலும் அவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஒரு இடைவெளி உருவானதை அவரால் தடுக்க முடியவில்லை.

அனுபவம் உணர்த்தும் உண்மை:- 
நாம் பலரிடம் அளவிற்கு அதிகமாக பாசமோ அல்லது பிரியமோ வைத்துவிடுகிறோம். அதனால்தானோ என்னவோ அவர்களும் யாரேனும் மனதளவில் நம்மைவிட்டு விலகிச் சென்றால், அது நமக்குத் தெரிவதே இல்லை.

                    (தொடரும்)


வானப்பிரஸ்தம் 

பதிவு 4

நண்பரும், நானும் பணி ஓய்வு பெற்றபின் ஒரே ஊரில் குடியேறினோம்.

ஒரு தடவை அவரைப் பார்க்கச் சென்றபோது, அவர் மிகவும் வருத்தமாக இருந்தார். காரணம் கேட்டபோது அவர் கூறியது
"பையன் தூரத்தில் இருந்து வேலை பார்த்து வருகிறான். இங்கு நாங்கள் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை; பையன் கூடவே இருக்கிறான்".
(நானும், என் மகனும் அப்பார்ட்மெண்டில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கிறோம்)

நான் சிரித்துக்கொண்டே முன்பொருமுறை இதையே சொன்னீர்கள்; இப்பொழுது அதை மாற்றி சொல்கிறீர்கள் என்றேன். தொடர்ந்து நான் சொன்னது ..
"You think that your son is far away from you; but he is nearer to you. You also think that my son is nearer to me; but he is far away from me"
(நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் பையன் தூரத்தில் இருக்கிறான் என்று; ஆனால், அவன் உங்கள் பக்கத்திலேயே
இருக்கிறான். எனது மகன் எங்கள் பக்கத்திலேயே இருக்கிறான் என நினைக்கிறீர்கள்; ஆனால், நான் அவனைவிட்டு விலகியே இருக்கிறேன்)

அனுபவம் உணர்த்தும் உண்மை:-
வயதான காலத்தில் பிள்ளைகள் நம்மை விட்டு வேறு இடம் சென்றாலும், அவர்கள் அருகில் இல்லையே என நினைத்து, நினைத்து இனம்புரியாத வேதனையில் வாடுகிறோம்.
நமக்குள் அந்த நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி என்பது புரிவதேயில்லை.

                      (தொடரும்)


வானப்பிரஸ்தம் 

பதிவு 5

இரண்டொரு மாதங்கள் கழிந்தபின் நண்பரைப் பார்க்க சென்றிருந்தேன். மிகவும் சோகமாக இருந்தார். என்னிடம் நடந்து விட்ட ஒரு சம்பவத்தைச் சொல்லி வருத்தப்பட்டார். அங்கு வந்த அவரது மனைவி "தினந்தினம் இதையே நினைத்து வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறார்" எனக் கூறினார்.

நான் அவரிடம் "யாரோ ஒருவன் உங்களை கத்தியால் குத்திவிட்டான் என்பதற்காக, அந்தக் கத்தியை வெளியே உருவி நீங்களே மீண்டும் மீண்டும் குத்திக்கொள்வது சரியா; அந்த சம்பவத்தை மறந்து விடுங்கள்" என்றேன். அதை அவர் காதில் வாங்கியதாகவேத் தெரியவில்லை.

சிறிது நேரம் கழித்து, அவர் "பணம் இருந்தால் கடைசிக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தேன். இப்போது நிறையப் பணம் இருக்கிறது; ஆனால் மனதில் நிம்மதி இல்லை" என்றார்.

நான் அவரிடம் "இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நீங்கள் சரியென்று சொல்லுங்கள். நான் தினந்தோறும் வருகிறேன். இருவரும் சேர்ந்து நிம்மதிக்கான வழியைத் தேடுவோம்" என்றேன்.

அதற்கு அவர் "நீங்கள் இனி எப்படி நடக்க வேண்டும் என்று சொல்வீர்கள். அது சரியானதாகவே இருக்கும். ஆனால், கேட்கும் மன நிலையில் நான் இல்லையே" எனச் சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஓஷோ சொன்ன கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. 

அது ..

                       (தொடரும்)


வானப்பிரஸ்தம் 

பதிவு 6

ஓஷோவின் கதை --

அவர் ஒரு தத்துவப் பேராசிரியர். இருந்தாலும் அவருக்கும் வாழ்வியல் பற்றி நிறைய சந்தேகங்கள் இருந்தன. யாராலும் அவற்றிற்கு உரிய விளக்கங்கள் கொடுக்க முடியவில்லை.

சிலர் அவரிடம் மலை உச்சியில் ஒரு ஜென் துறவி இருப்பதாகவும் அவரால் மட்டுமே உங்கள் சந்தேகங்களுக்குத் தேவையான விடை தரமுடியும் என்றனர்.

அவரும் கஷ்டப்பட்டு மலையில் ஏறி மலை உச்சியை அடைந்து ஜென் துறவியை சந்தித்தார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, தான் வந்த நோக்கத்தைக் கூறினார்.

அதைக்கேட்ட ஜென் துறவி "நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். அமருங்கள், நான் சூடாகத் தேநீர் தருகிறேன். அதை முதலில் குடியுங்கள். பின்னர் உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்" என்று சொல்லி அவரை அமரச் செய்தார்.

பின்னர் அவர் கையில் கோப்பையையும், தட்டையும் (cup and saucer) கொடுத்து, சூடான தேநீரை கோப்பையில் ஊற்றினார். பாதி கோப்பை நிறைந்ததும் பேராசிரியர் 'போதும்' என்றார். ஆனால், துறவி அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மேலும் தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தார்.

தேநீர் கோப்பையில் நிரம்பி தட்டில் வடிய ஆரம்பித்தது. பேராசிரியருக்கு கோபம் வந்துவிட்டது. "ஊற்றியது போதும், நிறுத்துங்கள்" என சத்தமாகக் கூறினார்.

தேநீர் கெட்டிலைக் கீழே வைத்துவிட்டு துறவி சிரித்துக்கொண்டே சொன்னார் "தேநீர் கோப்பையை நிறைத்தது உங்களுக்குத் தெரிந்துவிட்டது; கோப்பையில் மேற்கொண்டு தேநீரை நிரப்ப இடமில்லை
என்பதும் தெரிந்து கொண்டீர்கள். நல்லது. நீங்கள் உங்கள் மனதில் நிறையக் கேள்விகளை வைத்துள்ளீர்கள். நானும் நிறைய விளக்கங்கள் கொடுக்க வேண்டும். ஆனால், அவற்றை உள்வாங்க உங்கள் மனதில் இடமிருக்கிறதா?" என்றார்.

சற்றும் எதிர்பாராத இந்தச் சொற்கள் பேராசிரியரை திகைப்பில் ஆழ்த்தியது. அவர் சுதாரித்துக்கொண்டு துறவியைப் பார்த்து "நீங்கள் சொல்வது உண்மைதான். உங்கள் விளக்கங்களை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஊருக்கு சென்று மனதைக் காலியாக ஆக்கிவிட்டு பின்னர் வருகிறேன் என்றார்".

துறவி மீண்டும் ஒருமுறை சிரித்தார். சிரித்துவிட்டு "மனம் காலியாகிவிட்டால், சந்தேகமே வராதே! பின் ஏன் இங்கு வரவேண்டும்?" என்று கூறினார்.

இதனைக் கேட்ட பேராசிரியர் திகைப்பின் உச்சத்திற்கே போய்விட்டார்.

அனுபவம் உணர்த்தும் உண்மை:-

நாம் எங்கெங்கோ ஓடுகிறோம்; எதை எதையோத் தேடுகிறோம்.
விரும்பியதை அடையவும் செய்கிறோம். ஆனால், ஒரு உண்மையை மட்டும் மறந்து விடுகிறோம். அது ..
"Money will not bring you any peace; peace depends upon the mind"
(எந்த நிலையிலும் பணம் அமைதியைத் தராது; அமைதி என்பது மனம் சார்ந்தது)

                       (தொடரும்)


வானப்பிரஸ்தம் 

பதிவு 7

'அமைதி என்பது மனம் சார்ந்தது' .. இதனை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் இலக்கைத் தவறவிட்டு விடுவோம்.

மனம் 'உணர்வு மனம்' (conscious mind), 'உணர்வற்ற மனம்' (sub-conscious mind)    
என இரண்டு தளங்களில் வேலை செய்கிறது.

நமது அன்றாட நிகழ்வுகளை சந்திப்பது 'உணர்வு மனம்தான்'. எனவே அதில் பலவிதமான சலனங்கள் வந்து கொண்டேயிருக்கும். ஆனால், 'உணர்வற்ற மனத்தில்' எந்தவித சலனமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

அதற்கு ஒரே வழி - - அதில் எந்தவிதப் பதிவுகளும் இருக்கக்கூடாது. அப்படியே பதிவுகள் இருந்தாலும் அவை வெறுமனே 'நினைவலைகளாகத்' தங்கிவிட வேண்டும். மற்றபடி அவை நமக்குள் எந்தவித தாக்கத்தையும் உண்டுபண்ணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

உணர்வற்ற மனத்தில் (ஆழ்மனம்) எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தால் மட்டுமே, மனம் அமைதியாக இருக்கிறது என்று அர்த்தம். 
"Success in Life is measured by the tranquility of the mind"
- - Swami Chinmayananda.

ஆழ்மனம் அமைதியாக இருந்தால்தான் உள்ளிருந்து பெருகும் 'ஆனந்தத்தை' நம்மால் உணர முடியும்.

ஆனந்தம் என்று சொல்லும்போது, அதை மகிழ்ச்சி, சந்தோஷம், இன்பம் என்றெல்லாம் பொருள் கொள்ளக்கூடாது.

                   (தொடரும்)


வானப்பிரஸ்தம் 

பதிவு 8

ஆழ்மனம் அமைதியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.

ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம், இன்பம் எல்லாம் ஒரே பொருளைக் குறிப்பதாகத் தோன்றினாலும், 'ஆனந்தம்' என்பதற்கு ஆன்மிகம் சொல்லும் விளக்கம் சற்று
வித்தியாசமானது. 

ஆனந்தம், நமக்கு உள்ளிருந்து பெருகும் பரவசத்தை உணர்த்துவது.
மகிழ்ச்சி, சந்தோஷம், இன்பம் போன்றவை, வெளியிலிருந்து விரும்பிய ஒன்றை அடைந்துவிட்டால் நாம் உணர்வது.

ஆனந்தம் என்பதற்கு எதிர்ப்பதம் கிடையாது. மற்றவற்றிற்கு எதிர்ப்பதம் உண்டு. நாம் விரும்பியது கிடைக்காவிட்டால், துக்கம், துயரம், துன்பம் போன்றவை நம்மைத் தொற்றிக்கொள்ளும்.

ஆனந்தம் எதுவும் இல்லையென்றாலும், சலனமற்ற மனமிருந்தால் என்றும் நம்மைத் தொடர்ந்திருக்கும். அதைத்தான் 'நித்யானந்தம்'
(நித்யம் + ஆனந்தம்) என்று சொல்கிறோம்.

"இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்"
.. திருக்குறள் 629

ஆனந்தத்தின் ருசியைக் கண்டுவிட்ட மனிதன் இன்பம் வரும் போது மகிழ்ச்சி அடைவதுமில்லை; துன்பம் வரும்போது அதற்காக வருந்துவதுமில்லை. அவன் எப்போதும் சமநிலையிலேயே இருப்பான்.

மகிழ்ச்சி, சந்தோஷம், இன்பம் என்பவை மனிதனுக்கு புறத்தே உள்ள பொருட்களோடு சம்பந்தப் பட்டவை. ஆனந்தம் என்பது அகத்தில் தனித்திருக்கும் ஆன்மாவோடு சம்பந்தப் பட்டது.

                       (தொடரும்)


வானப்பிரஸ்தம் 

பதிவு 9

பண்டைய காலத்தில் வானப்பிரஸ்தத்தை மேற்கொள்ள விரும்பும் மனிதர்கள் தாங்கள் பேணிக் காத்து வந்த பொறுப்புகள் அனைத்தையும் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று விடுவார்கள்.

இப்போது பிள்ளைகள் வேலை நிமித்தம் பெற்றோரை விட்டு விட்டு வெளி ஊர்களுக்கோ அல்லது வெளி நாட்டிற்கோ சென்று விடுகிறார்கள்.

ஆக, பெற்றோர்களும் பிள்ளைகளும் அன்றும் பிரிந்தார்கள்; இன்றும்
பிரிகிறார்கள். ஆனாலும், இரண்டிற்கும் இடையே ஒரு வேறுபாடு உள்ளது.

அன்று பெற்றோர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என எண்ணி விருப்பத்துடன் பிரிந்து சென்றார்கள். இன்று பெற்றோர்கள் விரும்பாவிட்டாலும், சூழ்நிலை காரணமாக பிள்ளைகள் பெற்றோரை தனிமையில் தவிக்க விட்டு விட்டு வெளியூர் சென்று விடுகிறார்கள்.

அன்று பெற்றோர்கள் ஏன் தனிமையை விரும்பி காட்டிற்கு சென்றார்கள்? அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தது?

                      (தொடரும்)

வானப்பிரஸ்தம்

பதிவு 10

அன்று பெற்றோர்கள் தனிமையை விரும்பி காட்டிற்கு சென்றதன் நோக்கம் பந்தங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதுதான்.

வயதான காலத்தில் மனிதனுக்குக் தேவை மன அமைதிதான் என்பதையும், அது இருந்தால் மட்டுமே இறையருளை உணர முடியும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.

நம்மில் பலரும் தனிமையில் தான் இருக்கிறோம். ஆனால், அது நாம் விரும்பி ஏற்றதல்ல. நமக்கு எந்த வித நோக்கமும் இல்லை. ஆனாலும், காலச் சூழ்நிலை, 'தனிமை' திணிக்கப்பட்ட ஒன்றாக மாறி விட்டது. ஆக நோக்கம் ஏதுமில்லாததால் நாம் தனிமையில் வாடுகிறோம்.

இப்போது நாம் 'மன அமைதி' பெறுவதை நமது நோக்கமாகக் கொண்டால் மன அமைதி வந்துவிடுமா? அதற்கு எதற்காக காட்டிற்கு செல்ல வேண்டும்? காட்டிற்கு செல்வதற்கும், பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கும் இடையே என்ன சம்பந்தம்? நாமும் காட்டிற்கு சென்றால்தான் பந்தங்களிலிருந்து விடுதலையும், மன அமைதியும் பெறமுடியுமா?

                   (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 11

காட்டிற்கு செல்வதின் காரணத்தை தெரிந்து கொள்வதற்கு முன், 'பந்தம்' என்று சொல்வதின் பொருளை நாம் சரியாகப்
புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் பத்து வருடங்களாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இருந்தாலும், அதை என்னுடைய வீடு என்று சொல்வதில்லை; நான் குடியிருக்கும் வீடு என்றுதான் சொல்வோம்.  

அதே நேரம், சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட்டால், நாம் அந்த வீட்டில் குடியிருக்கவில்லை என்றாலும், அதை என்னுடைய வீடு என்றுதான் சொல்வோம்.

ஒரு தாய் தான் பெற்ற குழந்தையைக் கொஞ்சுவாள் -- அது உறவின் (relationship) அடையாளம். அந்த வீட்டின் வேலைக்காரியும் அந்தக் குழந்தையைக் கொஞ்சுவாள் -- அது உறவு இல்லாத உறவின் அடையாளம் (relation-less relationship).

தாய் தன் குழந்தையிடம் வைத்திருக்கும் பற்றின் (mental attachment) காரணமாக அது ஒரு 'பந்தமாக' மாறிவிடுகிறது. வேலைக்காரிக்கு குழந்தையிடம் எவ்விதப் பற்றும் இருப்பதில்லை. எனவே அவளுக்கும் குழந்தைக்கும் இடையே எந்தவித பந்தமும் ஏற்படுவதில்லை.

பந்தம் என்று சொல்வதை 'கட்டு', 'தளை' என்றும் சொல்வார்கள்.

                      (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 12

நாம் ஒன்றை - - அது உயிருள்ள ஜீவனாக இருக்கலாம்; அல்லது உயிரற்றப் பொருளாகவும் இருக்கலாம் - - என்னுடையது (my) எனப் பற்றிக்கொள்ளும் பொழுது, அது 'பந்தமாக' மாறி விடுகிறது.

'என்னுடைய' என்ற உணர்வுக்கு காரணமாக இருப்பது 'நான்' என்னும் அஹங்காரம். அஹங்காரம் என்பது 'தன் முனைப்பை' குறிக்கும் சொல்.

'தன் முனைப்பு' ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்றுதான். ஆனால், 'தன் முனைப்பு' செருக்காக மாறும்போது, மனித மனம் அமைதி நிலையை அடைவது கடினமாகி விடும். தன் முனைப்பு எப்போது செருக்காக மாறும்?

அவனிடம் உள்ளவற்றின் மதிப்பு கூடும் போது, அங்கு தன் முனைப்பு (அஹங்காரம்) செருக்காக மாறும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க ஒரே வழி --. 'என்னுடைய' என்ற நிலையில் மாற்றம் வரவேண்டும்.

அதனால்தான் சான்றோர்கள் சொல்வது "possession of the things is not the problem; possessor-feeling is the problem".

'செருக்கு' மனப்பான்மை கூடாது என்பதனால்தான் வள்ளுவரும் "யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்" என்று கூறுகிறார்.

ஆனால், என்னுடைய (my) எனும் உணர்வை எப்படி அகற்ற முடியும்?

                        (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 13

அந்தக் காலத்தில் வயதானவுடன் பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு காட்டிற்குச் சென்றதன் நோக்கம், 'என்னுடைய' (my) என்ற எண்ணம் மனதில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

அதன் பின்னரே 'நான்' என்னும் அஹங்காரத்தை நலிவடையச் செய்யும் முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியும்.

அவர்கள் காட்டில் புதிய ஆசிரமம் அமைத்து அங்குள்ள சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வாழ்வதற்கு தங்களை மாற்றிக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சியில், குடும்ப உறவுகளைப் பற்றியும், தங்களுக்குச் சொந்தமாக இருந்த பொருட்களைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள்.

குடும்பத்தோடு இருந்தால் இதை நடைமுறைப்படுத்த மிகவும் கடினமாக இருக்கும் என்பதால்தான் அவர்கள் காட்டிற்குச் சென்றார்கள்.

அதே நேரம் புதிய இடத்தில் எந்தவித பந்தமும் ஏற்படாமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அது கடினமான காரியம் இல்லை என்றாலும் சிறிதளவு கவனக் குறைவும் அவர்கள் அறியாமலேயே புதிய பந்தங்களை ஏற்படுத்தி விடும்.

"பத்திரகிரியார்" வாழ்க்கையில் அதுதான் நடந்தது.

                      (தொடரும்)



வானப்பிரஸ்தம் 
பதிவு 14


(பத்திரகிரியாரின் கதையை நமது தேவைக்கு ஏற்ப சுருக்கியிருக்கிறேன்)

உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர் பெயர் பத்ருஹரி.

பட்டினத்தாருடன் ஏற்பட்ட ஒரு சம்பவத்தின் காரணமாக, அவர் பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து, தமக்கு தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி பிரார்த்தித்தார்.

பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார், அவருக்கு தீட்சை வழங்கினார். அவரே பத்திரகிரியார்.

குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார் பத்திரகிரியார். மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் இருந்துகொண்டு, தினமும் பிச்சை ஏற்று குருவுக்கு சமர்ப்பித்த பிறகே, தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் அப்படித் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு, உணவை உண்ணும் வேளையில், பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார், அதற்குச் சிறிது உணவு கொடுத்தார். அதுமுதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது. பத்திரகிரியாரும் அந்த நாயைப் பாதுகாத்து வந்தார். 

இந்த நிலையில் பல ஷேத்திரங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்த பட்டினத்தார் திருவிடைமருதூர் கோயிலை அடைந்து, கிழக்கு கோபுர வாசலில் அமர்ந்து சிவபெருமானைத் 
தியானித்தபடி இருந்தார். 

ஒருநாள் இறைவன் ஏழை வடிவம் கொண்டு பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். அதற்கு பட்டினத்தார், ''மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே செல்வாய்'' என்று கூறி அனுப்பினார்.

ஏழை உருவில் வந்த இறைவன் மேற்கு கோபுர வாசலுக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம், ''ஐயா, எனக்குப் பசியாக இருக்கிறது. கிழக்குக் கோபுர வாசலில் இருந்த ஒருவரிடம் பசிக்கு அன்னம் கேட்டபோது, அவர் மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை இங்கே அனுப்பினார்'' என்று கூறினார்.

உடனே பதறிப்போன பத்திரகிரியார், 'ஐயோ, இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும், நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே' என்று மனம் வருந்தினார்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி ஒன்று உள்ளது.

வானப்பிரஸ்தம் மேற்கொள்ளும் போது நமது நோக்கம் பந்தங்களில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல. கூடவே, புதிதாக எந்த விதமான பந்தமும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

                      (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 15

'மன அமைதி' அடைவதுதான் நமது நோக்கம் என முடிவு செய்தால், நாம் செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போம்.

முதல் தேவை 'சிரத்தை'. இதற்கு பல்வேறு வகையான விளக்கங்கள் உள்ளன. நமக்கு தேவையான விளக்கத்தை மட்டும் பார்ப்போம் - -
1. நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். சிறிதளவும் அவநம்பிக்கை வரக்கூடாது.
2. நமது முயற்சி பரிபூரணமாக இருக்க வேண்டும். எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது.
3. இதற்கான பயிற்சி கடினமானது அல்ல. ஆனால், தினந்தோறும் குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்க வேண்டும்.
4. ஏதேனும் ஒன்றில் நமக்கு தெளிவு தேவையென்றால், விபரம் அறிந்தவர்களை நாடிச் சென்று தேவையான விளக்கத்தைப் பெறுகிறோம்.
இதில் நாமே நமக்குள் 'தர்க்க' ரீதியாக சிந்தித்து உண்மைகளை அறிய முயற்சிக்க வேண்டும்.

"தர்க்க ரீதியாக" சிந்திப்பதற்கு நமக்குத் தேவை 'பகுத்தறிந்து உண்மையை -- மெய்ப்பொருளை -- புரிந்து கொள்ளும் தன்மை' மட்டுமே.

உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.

                      (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 16

உறவினர் ஒருவரின் 'சஷ்டியப்த பூர்த்தி' விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு அவரது நண்பரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு வயது 65 இருக்கும்
எனத் தோன்றியது.

அவரது நண்பரும் நானும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். என்ன நினைத்தாரோ தெரியவில்லை; குடும்பத்தில் தனக்கு ஏற்படும் சில சங்கடங்களைப் பற்றி கூறி தனது வேதனையை வெளிப்படுத்தினார். இதிலிருந்து மீள்வதற்கு வழி என்ன என வினவினார்.

சட்டென்று என் மனதில் ஒன்று தோன்றியது. நான் அவரிடம் இரண்டு வாக்கியங்களைச் சொல்கிறேன். சரியா, தப்பா என்று கூறுங்கள் என்றேன்.
(இந்த வாசகங்களை பின்னர் பலமுறை வெவ்வேறு தளங்களில் பதிவு செய்திருக்கிறேன்)

நான் சொன்ன முதல் வாக்கியம் - -
"Without ego one cannot grow"
அவர் சரிதான் என்றார்.
நான் சொன்ன இரண்டாவது வாக்கியம் - -
"With ego one cannot glow"
அவர் இதுவும் சரிதான் என்றார்.

"அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது; அஹங்காரம் இருந்தால் மலர (அக மலர்ச்சி) முடியாது" என்றால், நாம் எப்பொழுது அஹங்காரத்தை விட வேண்டும் என்று கேட்டேன்.

நான் எதற்காக இதைக் கூறுகிறேன் என்பதைப் புரிந்து கொண்டு "அதுதான் புரியவில்லை" என்றார்.

தர்க்க ரீதியாக அவருக்குப் புரிய வைத்தேன்.

"ஒரு வீடு கட்டுகிறோம். நாலு பக்கங்களிலும் சுவர் எழுப்பியபின் மேற்கூரை அமைப்பதற்காக பலகைகள் அடித்து, அதற்கு கம்புகளை வைத்து முட்டு கொடுக்கிறோம். பின்னர் பலகைகளின் மேல் தளம் அமைத்து மறுநாள் முதல் தண்ணீர் ஊற்றி அந்தத் தளம் பலம் பெற உதவுகிறோம். தளத்தின் உறுதித் தன்மை தெரிந்தவுடன், அதனைத் தாங்கிப் பிடித்த பலகைகளையும் கம்புகளையும் பிரித்து எடுத்து விடுகிறோம். 

நாம் பிள்ளைகளை பத்திரமாகப் பாதுகாத்து வளர்த்து வருகிறோம். ஆனால் அவர்கள் வளர்ந்து தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள் எனத் தெரிந்தாலும், நாம் அவர்களை சிறு குழந்தைகளாவே பார்க்கிறோம். மனதளவில் அவர்களைத் தனியே விட நாம் தயாராக இருப்பதில்லை.

அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நாம் தலையிடாமல் விலகி இருந்தாலே சங்கடங்கள் குறைந்து விடுமே" என்றேன்.

நீங்கள் சொல்வது சரிதான், சார். நான் முயற்சி செய்கிறேன் என்றார். அதன்பின் அவரை சந்திக்கவே இல்லை.

இராமகிருஷ்ண பரமஹம்சர் ஓரிடத்தில் அழகாகச்
சொல்லுகிறார் - - "விதை முளைத்து செடியானவுடன் ஆடு, மாடுகள் அதைக் கடிக்காமல் இருக்க செடியைச் சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். அந்தச் செடி மரமாக வளரும் பொழுது வேலியை அகற்றி விட வேண்டும். இல்லையெனில் அந்த வேலியே அதன் வளர்ச்சிக்குத் தடையாகிவிடும்".

நாம் பிள்ளைகளிடம் வைக்கும் பாசமும் வேலியைப் போன்றதுதானோ?

                     (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 17

மனம் அமைதியாக இருப்பதற்கு இடைஞ்சலாக இருப்பவை "நான்" மற்றும் "என்னுடைய" என்னும் இரண்டு காரணிகள் தான்.

ஒன்று அஹங்காரத்தை (தன் முனைப்பை) குறிப்பது; மற்றொன்று நாம் பிறவற்றின்மேல் வைத்திருக்கும் பற்றைக் (mental attachment) குறிப்பது.

இவற்றில் "நான்" என்பதை மரம் என்று எடுத்துக் கொண்டால், "என்னுடைய" என்பது மரத்தின் கிளைகளைப் போன்றது.

நாம் எல்லாக் கிளைகளையும் வெட்டனாலும், புதியதாக கிளைகள் வெளிவரலாம்; பத்திரகிரியாருக்கு வந்த நாய்க்குட்டி போல.

கிளைகளை வெட்டுவதற்குப் பதிலாக மரத்தையே வெட்டி விட்டால் -- அதாவது "நான்" என்ற உணர்வையே அகற்றி விட்டால் -- கிளைகளை வெட்ட வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் இது எல்லோராலும் முடிகிற காரியமா?

                      (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 18

"நான்" என்ற மரத்தை வெட்ட விரும்பும் மனிதனுக்கு இந்தப் பண்புகள் இருக்க வேண்டும்.
1. புத்தி கூர்மை
2. ஆராய்ந்து பார்க்கும் தன்மை (inquisitive mind)
3. அகத்தாய்வில் ஈடுபாடு
4. தவறுகளை ஒப்புக் கொள்ளும் பக்குவம்
5. மெய்ப் பொருளைப் புரிந்து கொள்வதில் ஆர்வம்

எல்லாவற்றிற்கும் முன்பாக அவன் ஒரு உண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அது - -
"ஒரு மனிதனின் உடல் நலிவடைந்தால், அதற்கு அவன் மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியாது. வேறு பல புறக் காரணங்களும் இருக்கும். ஆனால், அவனது மனம் கெடுவதற்கு அவன் மட்டும்தான் காரணமாக இருப்பான். அதற்காக மற்றவர்களை குறை கூறினால், மெய்ப்பொருளை அறியும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் இருக்காது".

இதை எங்கிருந்து ஆரம்பிப்பது? இரமண மஹரிஷி "நான் யார்" (who am I) என்று உனக்குள்ளேயே கேட்டு விடை தேடு. அது போதும்" என்கிறார்.

"நான் யார்" என்பதை தர்க்க ரீதியாக எப்படி ஆராய்வது?

வேறு ஒரு இடத்தில் ஏற்கனவே சொன்ன ஒரு உதாரணம்தான் - -
I have a pen.
The pen has a cover.

முதல் வரியில் 'pen' என்பது object.
இரண்டாவது வரியில் 'pen' என்பது subject.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ..
ஒரு பொருள் subject ஆகவும் வரலாம், object ஆகவும் வரலாம். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டாகவும் இருக்க முடியாது அல்லவா?

இப்போது நமது கேள்வி - -
I have a body.
Body என்பது 'object' என்றால் நிச்சயமாக அது 'subect'-ஆக இருக்க முடியாது. அப்படியானால் "I" என்பது எது?

Think!?

"I" and "body" இரண்டும் ஒன்றல்ல என முடிவு செய்தால், "I am the body with a soul" என்று சொன்னால் அது சரிதானா?

அல்லது "I am the Soul in a body" என்று சொல்வதுதான் சரியாக இருக்குமா? 

THINK!!??

                    (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 19

இவ்விதம், புலன்களின் தொடர்பின்றி புத்தியை மட்டும் பயன்படுத்தி எந்த ஒன்றாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதை, " நேரடி அறிவு" (பிரத்தியட்சம்) என்கிறார் ரிஷி பதஞ்சலி.

பொருட்களின் உண்மைத் தன்மையை ஊகத்தின் (அனுமானம்) மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்கிறார் அவர்.

கல், மணல், செங்கல், இரும்பு, மரம் எனப் பலவற்றைப் பயன்படுத்தி வீடு கட்டுகிறோம். ஆனால், இவற்றில் எந்த ஒன்றும் அந்த வீட்டில் குடியிருப்பதில்லை. அதைப்போல் மனித உடலும் தோல், சதை, எலும்பு என பலப் பொருட்களால் உருவானதுதான். உடல் பருவுடல் என்றால், மனமும் புத்தியும் நுண்ணுடல் ஆகும்.
அப்படியானால் அதனுள் 'குடிபுகுந்தவர்தானே', "நான்" என்று சொல்ல முடியும்? அந்த "நான்" எதுவாக இருக்கும்?

மூன்றாவதாக இன்னொரு முறையிலும் உண்மைகளை உணர முடியும். அதை ரிஷி பதஞ்சலி "ஆகமம்" என்கிறார். அதாவது சான்றோர்களின் வாய்மொழி மூலம் அறிவது.

நமது சமய நூல்களிலும், திருக்குறள் போன்ற சமயம் அல்லாத நூல்களிலும், ஞானிகள் மற்றும் சான்றோர்கள் மூலமாக வெளிவந்த வாழ்வியல் தத்துவங்களிலும் உண்மைகளைப் பறைசாற்றும் நெறிமுறைகள் நிறைய உள்ளன. அவற்றை மனதாரப் புரிந்து கொண்டால் கூட, "நான்" என்னும் அஹங்காரம் (தன் முனைப்பு) நலிவடைவதைக் காணலாம்.

ஒரு மனிதனின் 'தன்முனைப்பு' குறையக் குறைய, தன்னிடம் 'பற்றற்ற'
தன்மை அதிகரித்து வருவதை அவனால் உணர முடியும்.

                   (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 20

இந்த "நான்" என்கின்ற உணர்விலிருந்து விடுபடுவது எல்லோராலும் முடியக்கூடிய காரியமல்ல.

முடியாதவர்கள் "என்னுடைய" என்னும் பந்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்யலாம். அதில் வெற்றி பெற்றால் கூட "நான்" என்னும் தன்முனைப்பு நலிவடைந்து வருவதை அவர்களால் உணர முடியும்.

இதற்கு மூன்று வழிகள் உள்ளன. அந்த மூன்று வழிகளிலும் ஒரு மனிதன் முயற்சி செய்ய முடியும். ஆனால், அந்த முயற்சி முறையாக இல்லையெனில் எந்தவிதப் பயனும் விளைவதில்லை.

சாதாரணமாக சொந்த உறவுகளுடன் வசித்து வரும் பொழுது, "என்னுடைய" என்ற பந்தத்திலிருந்து விடுபட மனம் வராது. இருந்தாலும், அதற்கான முயற்சியில் அப்பொழுதே ஈடுபட்டால், பின்னாளில் தனிமையில் இருக்க நேர்ந்தால் மனதில் வேதனை வராது.

"தர்க்க" ரீதியாக சிந்திப்பது என்பது 'ஞான மார்க்கத்தை' சார்ந்தது. மற்ற மூன்றும் முறையே 'கர்ம மார்க்கம்', 'பக்தி மார்க்கம்', 'தியான மார்க்கம்' என அழைக்கப் படும்.

                    (தொடரும்)
வானப்பிரஸ்தம் 
பதிவு 21

முந்தைய பதிவில் சொன்ன மூன்று மார்க்கங்களிலும்
மிகவும் எளிதானது பக்தி மார்க்கம்தான். பெருவாரியான மக்கள் கடைப்பிடிக்கும் மார்க்கமும் இதுவே.

ஆனாலும், பக்தி மார்க்கத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தும், பெரும்பாலானமனிதர்களால் பற்று என்னும் தளையிலிருந்து ஏன்  விடுபடமுடியவில்லை?

இந்தப் புதிருக்கான விடையை, ரிஷி பதஞ்சலி தருகிறார். அதற்கு அவர் தரும் மந்திரம் “ஈஷ்வர ப்ரணிதானாத்”. அதாவது "கடவுளிடம் சரணடைவதன்" மூலம் என்கிறார்.

நினைத்துப் பாருங்கள், நாம் கடவுளிடம் எதை எதையோ வேண்டுகிறோம்; ஆனால் கடவுளிடம் சரணடைகிறோமா?

சரணடைவது என்றால் என்ன? அவர் எதைத் தந்தாலும் அதனை அவரிடம் இருந்து வரும் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தர வேண்டும் என்று மட்டும் வேண்டினால், அதுவே உண்மையான  சரணாகதி ஆகும்.

"சரணாகதி" ஒன்றே பக்தி மார்க்கம் முழுமை அடையவும், பற்றிலிருந்து விடுபடவும் உதவும்.

                 (தொடரும்)

வானப்பிரஸ்தம் 
பதிவு 22

பொது நலனில் அக்கறை இல்லாத மனிதர்கள், முழு நேரமும் கர்ம மார்க்கத்தில் ஈடுபடுவது என்பது சிரமமான காரியம். அதிலும் வயதான காலத்தில் இன்னும் சிரமமாக இருக்கும்.

கர்ம மார்க்கத்தின் முக்கிய நோக்கம், யாரையெல்லாம்--எதையெல்லாம் என்னுடையது என்று நினைக்கிறீர்களோ அவற்றிலிருந்து விலகி, மற்றவற்றில் நமது கவனத்தை செலுத்தி நமது உழைப்பையும் அவற்றின் நலனுக்காக செலவிட வேண்டும்.

அவை சின்னச் சின்ன வேலைகளாகக்கூட இருக்கலாம். அவற்றில் ஒரு மனிதன் செலவிடும் நேரத்தைப் பொறுத்து, அவனுடைய பற்றின் அளவும் குறைய ஆரம்பிக்கும்.

இதில் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது - - எந்தக் காரணம் கொண்டும் நாம் செய்யும் வேலைக்கு எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்கக் கூடாது.

                 (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
 பதிவு 23

மேலே சொன்ன மூன்று மார்க்கங்களிலும் பயணிக்க முடியாதவர்கள், தியான மார்க்கத்தைக் கடைப்பிடிக்கலாம்.

தியான மார்க்கத்தில் முழுமை அடைவதற்கு யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு படிநிலைகளை ரிஷி பதஞ்சலி அமைத்துள்ளார்.
இந்த எட்டு படிநிலைகளௌயும் முறையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அந்த மனிதனால் தியான நிலையை அடைவது மிகவும் கடினம். "என்னுடைய" எனும் பற்றிலிருந்து விடுபடுவதும் இயலாத காரியம்.

                        (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 24

"நேரடி அறிவு, ஊகம், ஆகமம்" ஆகிய மூன்றும் ஞான மார்க்கம் சார்ந்தவை.

மற்ற மூன்று மார்க்கங்களைக் கடைப்பிடித்தால் ஞானம் வராதா என்று சந்தேகம் வரலாம்.

எந்த வழியைப் பின்பற்றினாலும் முடிவாக வருவது ஞானம் தான். (Everything ends in wisdom).

முதலில் "ஞானம்" என்றால் என்ன என்று நமக்குத் தேவையான அளவில் (சுருக்கமாக) பார்ப்போம்.

கடந்தகால கவலைகள் இன்றி, எதிர்கால எதிர்பார்ப்புகள் இன்றி, நிகழ்காலத்தில் எவ்வித பரபரப்பும் இன்றி அமைதியாக வாழ முடிந்தால், தான் கர்த்தா அல்ல வெறும் கருவி மட்டுமே என்ற உணர்வு இருந்தால், எதிர்கொள்ளும் அனைத்தையும் எந்தவித நெருடலும் இன்றி எதிர் கொள்ள முடிந்தால், நாமும் ஞானம் பெற்ற மனிதர்களே!

கிருஷ்ணன் சொல்கிறார் -- "ஞானம் என்ற அக்னி அனைத்து கர்மங்களையும் எரித்துவிடும்". அனைத்து கர்மங்களையும் என்று சொல்லும்போது, கர்மங்களின் ஆதாரமாக விளங்கும் 'அஹங்காரத்தையும்' கருத்தில் கொள்ள வேண்டும். (The fire of wisdom will destroy everything in you, including your ego).

                 (தொடரும்)



வானப்பிரஸ்தம் 
பதிவு 25

தற்பொழுது 'minimalism' என்ற வார்த்தை அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

'Minimalism' என்றால் என்ன? 

தேவையற்ற பொருட்களை ஒதுக்கித் தள்ளி, ஆசைகளைக் குறைத்துக் கொண்டு, அவசியம் என நினைக்கும் பொருட்களை மட்டும் உபயோகிப்பது என்பதுதான் 'minimalism'. இதன்மூலம் நமக்குத் தேவையில்லாமல் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளைத் தவிர்த்து விடலாம். குடும்ப வாழ்க்கையை நடத்துவதும் சிரமமில்லாமல் இருக்கும் என்பார்கள்.

வள்ளுவரும் "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்றே கூறுகிறார்.

இதே கருத்தை முன்வைத்தே அந்தக் காலத்தில் பெரியோர்கள் "வானப்பிரஸ்தம்" மேற்கொண்டார்கள்.

"மன அமைதி" வேண்டுமென்றால், பொருட்களின் மேல் வைத்துள்ள ஆசைகளையும், உறவுகளிடம் வைத்துள்ள பாசத்தையும் 'minimalism' என்ற வரையறைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

                         (தொடரும்)


வானப்பிரஸ்தம் 
பதிவு 26

மேலே குறிப்பிட்ட மார்க்கங்களை வயதான காலத்தில் கடைப்பிடிப்பது கஷ்டம் என பலர் நினைக்கலாம்.

இவற்றுக்கு மாற்றாக ஒரு எளிய வழி உள்ளது. அதை செயல்படுத்த விரும்பினால், முதலில் நாம் "un-active"-ஆக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். 

Un-active என்றால் என்ன?
தன்முனைப்பின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதுவே 'un-active' என்பதன் அடையாளம்.

குடும்பத்தோடு வசித்தாலும் குடும்பச் சூழலில் இருந்து (மனதளவில்) விலகியிருக்க வேண்டும். (Be in the family; be far away from the family).

தேவைப்பட்டால் மட்டுமே குடும்ப விவகாரங்களில் தலையிட வேண்டும்.

"மன அமைதி" பெறுவதையே முக்கியக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். "மன அமைதி" என்றால் என்ன? அது எப்பொழுது வரும்?

                     (தொடரும்)





வானப்பிரஸ்தம் 
பதிவு 27

மனம் எப்போது அமைதி அடையும்? யாரும், எதுவும் ஒரு மனிதனின் "மன அமைதியை" நிலைகுலையச் செய்ய முடியாது என்ற நிலை என்று வரும்?

".. மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று பாடும் பொழுது, 'நிறைவான மன அமைதி' குறித்தே வேண்டுகிறார்.

இந்தக் கேள்விக்கான விடையை, பத்திரகிரியார் தருகிறார்...
"கூண்டுவிடுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல் மாண்டுவிடு முன்னேனான் மாண்டிருப்ப தெக்காலம்?"

இந்தப் பாடலின் கடைசி வரியைப் பிரித்துப் பார்த்தால், அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளலாம். அதாவது - -
"மாண்டு விடும் முன்னே,
'நான்' மாண்டிருப்பது எக்காலம்?"

உடல் மரிப்பதற்கு முன்பாகத் தன்னுடைய "நான்" என்னும் அஹங்காரம் மரித்து விட வேண்டும் என்கிறார்.

அது எளிதான காரியமா என்ற சந்தேகம் வரலாம். தன்னை நம்பி யாரும் இல்லை என்ற நிலையில், ஒரு மனிதன் தன்னை "un-active" என்ற நிலைக்கு மாற்றிக் கொண்டால் அது எளிதான காரியமே!

                      (தொடரும்)




வானப்பிரஸ்தம் 
பதிவு 28

"Un-active" நிலையில் நாம் தன்முனைப்பின்றி செயல்பட வேண்டும். தன்முனைப்போடு செயல்பட்டால் புதிய அனுபவங்கள் ஏற்பட்டு ஆழ்மனதில் புதிய பதிவுகளை ஏற்படுத்தி விடும்.

தன்முனைப்பை விட்டுவிட்டால், நாம் சும்மா இருக்கும் நேரம் அதிகம் கிடைக்கும். அந்த நேரத்தை வேடிக்கை பார்ப்பதில் செலவிட வேண்டும். எதை வேடிக்கை பார்க்க வேண்டும்?

சிறு வயதில் தந்தையின் அல்லது தாயின் கையைப் பிடித்துக்கொண்டு தேரோட்டம் பார்த்திருப்போம். தேர் ஓடும் பொழுது அதன் பின்னே நாமும் ஓடுவோம். வாலிப வயதில் தேரை வடம்பிடித்து இழுக்கும் மற்றவர்களோடு நாமும் சேர்ந்து கொள்வோம். வயதான பின் நம்மால் தேரின் பின்னே ஓடவும் முடியாது; வடம் பிடித்து இழுக்கவும் முடியாது. வெறுமனே தேர் ஓடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.

அதைப்போன்று நாம் இப்பொழுது மனதிற்குள் ஓடும் 'தேரை' எப்படி வேடிக்கை பார்ப்பது எனத் தெரிந்து கொள்வோம். 

                      (தொடரும்)




வானப்பிரஸ்தம் 
பதிவு 29

மற்றவர்களோடு இருக்க நேரிட்டால், உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வெறுமனே வேடிக்கை பாருங்கள். எந்தவித கருத்தும் சொல்லாதீர்கள். நடந்த சம்பவங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தாலும், பிடிக்கா விட்டாலும் மனதிற்குள் அசை போடாதீர்கள். அசைபோட்டால், அது ஒரு பதிவை ஏற்படுத்திவிடும்.

உங்களைச் சுற்றி யாரும் இல்லாதிருந்தால், அமைதியாக அமருங்கள். ஆழ்மனதிலிருந்து ஏதாவது நினைவிற்கு வரும். எந்த விமரிசனமும் செய்யாதீர்கள். அது மறைந்ததும் அடுத்தது என ஏதாவது நினைவில் தோன்றும். எல்லாவற்றையும் ஒரு "பார்வையாளனாக" 
(witness) பாருங்கள். எந்தக் காரணம் கொண்டும், நினைவுகளோடு பயணம் செய்யாதீர்கள். 

இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், நினைவுகள் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்து விடலாம். நாளடைவில் பெரும்பாலான நினைவுகள் உங்கள் ஆழ்மனதிலிருந்து நீங்கி விடும். மறக்க முடியாத, மறக்க விரும்பாத நினைவுகள் மட்டும் ஆழ்மனதில் தங்கியிருக்கும்.

அவைகள் உங்களை விட்டு நீங்காது. ஆனாலும் அவைகள் உங்களுக்குள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க, நீங்கள் உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்ப வேண்டும்.

                           (தொடரும்)




வானப்பிரஸ்தம் 
பதிவு 30

ஆழ்மனதில் தங்கியிருக்கும் மறக்க முடியாத, மறக்க விரும்பாத நினைவுகளை மறக்கடிக்க முயற்சிப்பது என்பது எளிதான காரியமல்ல. ஆனாலும், அவை நம்மை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

தேவைப்படும் பொழுது நாம்தான் அவற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டுமே தவிர, அவை நம்மை தொந்தரவு செய்ய அனுமதிக்கக் கூடாது. அதற்கு ஒரு வழி உள்ளது. அதை "ஒருமுக கவனம்" என்று சொல்லலாம்.

தனிமையில் இருக்கும் போது மனதில் எழும் நினைவலைகளை வேடிக்கை பார்க்க வேண்டும் என சொல்லியிருந்தோம். கூடவே அந்த நிலையிலிருந்து விடுபட்டு "ஒருமுக கவனத்திற்கும்" சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.இதனை "தாரணை" என்றும் சொல்லலாம். 

நீங்கள் ஆழ்மனதிலிருந்து வெளிக்கிளம்பும் 'நினைவலைகளை வேடிக்கை பார்க்க' கற்றுக்கொண்டு, அதில் நல்ல பலனும் கிடைத்தது என்பதை உணர்ந்தால் மட்டுமே 'ஒருமுக கவனம்' சாத்தியமாகும். இல்லையெனில் நமது கவனம் சிதறிவிடும்.

                        (தொடரும்)

வானப்பிரஸ்தம் 
பதிவு 31

'ஒருமுகக் கவனப் பயிற்சிக்கு' எதை வேண்டுமானாலும் தேர்ந்து எடுக்கலாம். ஆனால், நீங்கள் தேர்ந்து எடுப்பது உங்களது உறவுகளுடனோ அல்லது உங்களது உரிமைப் பொருட்களுடனோ சம்பந்தம் இல்லாததாக இருக்க வேண்டும். தவிர, அது பயிற்சியின்போது நமது கண்ணால் காணக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும்.

'ஒருமுகக் கவனம்' பயிற்சியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

நாம் தேர்ந்தெடுத்தது இஷ்ட தெய்வத்தின் படம், விளக்கின் தீபம் என எதுவாகவும் இருக்கலாம்.

அதனை கண்ணுக்கு நேராக அல்லது சற்று கீழாக வைத்துக் கொள்ளுங்கள். அதை சில நிமிடங்கள் உற்றுப் பாருங்கள். உங்கள் பார்வை நீங்கள் தேர்வு செய்த ஒன்றின்மீது மட்டுமே இருக்க வேண்டும்.

பின் கண்களை மூடிக்கொண்டு அதனை உங்கள் மனக்கண்ணால் பாருங்கள். கவனம் சிதறி விட்டதாகத் தோன்றினால் மீண்டும் கண்களைத் திறந்து அந்தப் பொருளை உற்றுப் பாருங்கள்.

கண்களால் பார்ப்பது, பின் மனக்கண்ணால் பார்ப்பது, மீண்டும் கண்களால் பார்ப்பது என இந்தப் பயிற்சியை இரண்டு நிமிடங்கள் செய்யுங்கள்; அது போதும். முடிந்தால் ஒரு நாளில் இரண்டு, மூன்று தடவை கூட செய்யலாம்.

இதனால் கிடைக்கும் பயன் என்னவென்று பார்ப்போம்.

                         (தொடரும்)



வானப்பிரஸ்தம் 
பதிவு 32

நாம் மேற்கொள்ளும் இரண்டு பயிற்சிகள் மூலமும் நமக்குக் கிடைக்கும் பயன்கள் என்னவென்று பார்ப்போம்.

முதலாவது பயிற்சி 'ஆழ்மனத்தில்' இருந்து வெளிக்கிளம்பும் நினைவலைகளை வேடிக்கை பார்ப்பது. நினைவலைகளை வெறுமனே வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளப் பழகிவிட்டால், எதிர்மறை எண்ணங்களை உண்டுபண்ணும் பதிவுகள் நம்மைவிட்டு அகன்றுவிடும். அதன்பின் நமக்கு விரக்தி, வெறுப்பு, தேவையற்ற கோபம் போன்ற உணர்வுகள் வராது.

இரண்டாவது பயிற்சி 'ஒருமுக கவனம்'. நாம் ஒரு பொருள் மீது தொடர்ந்து நமது கவனத்தை செலுத்தும்போது, மனமும் அதையே நினைக்கத் தொடங்கிவிடும்.

ஆழ்மனதிற்கு ஒரு இயல்பு உண்டு. மனதைத் திரும்பத் திரும்ப ஒரே பொருள் மீது கவனம் வைக்கப் பழக்கப் படுத்தினால், அது ஆழ்மனத்தை அந்தப் பொருளோடு இணங்க வைத்து விடும். (Mind -- subconscious mind -- will succumb to the thing to which it is repeatedly diverted).

அதன்பின் ஆழ்மனம் அந்தப் பொருளைப் பற்றியே நினைக்கத் தொடங்கிவிடும். அதன் விளைவாக, நம்முடைய பாசம், பேராசை போன்ற உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கி விடும்.

                  (தொடரும்)




வானப்பிரஸ்தம் 
பதிவு 33

நாம் மேற்கொள்ளும் இரண்டு பயிற்சிகள் மூலமும்
 'என்னுடைய' (my) என்னும் பற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும்.

பற்று குறையக் குறைய, 'நான்' என்னும் அஹங்காரமும் நலிவடையத் தொடங்கி விடும். அதேநேரம் நாமும் நமக்குத் தேவையில்லாத புதிய பதிவுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அஹங்காரம் அதாவது தன்முனைப்பின் தீவிரம் குறைந்துவிட்டால், நாம் 'நான்' என்ற நிலையில் இருந்து, 'தான்' என்ற உணர்வு நிலைக்கு மாறி விடுவோம். (It means sublimation of ego; not elimination of ego).

இந்த நிலையில் குடும்பத்தில் 'தன்னை' முன்னிலைப் படுத்துவதிலிருந்து விலகி நிற்போம். இதனைத்தான்
"be in the family; be far away from the family" என்று சொல்கிறோம்.

ஒரு மனிதன் 'நான்' என்ற நிலையில் இருந்தால், அது 'அஹங்காரத்தை' அதாவது தன்முனைப்பைக் குறிக்கும்.
அதே மனிதன் 'நான்' என்ற நிலையில் இருந்து விலகி, 'தான்' என்ற உணர்வு நிலைக்கு வந்து விட்டால், அதை 'அஸ்மிதா' அதாவது 'தன்முனைப்பு இல்லாத' நிலையைக் குறிக்கும்.

இந்த நிலையில் "மனஅமைதி" என்றால் என்ன என்று புரிந்து கொள்வோம். ஆனால், இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், நாம் 'தியானப் பயிற்சியை' மேற்கொள்ள வேண்டும்.

                    (தொடரும்)





வானப்பிரஸ்தம் 
பதிவு 34

ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்தாலும், அடி ஆழத்தில் அது அமைதியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கும். அதேபோல், அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு சலசலப்பு இருந்தாலும் ஆழ்மனதில் எந்தவித பாதிப்பும் இல்லையென்றால், நாம் மன அமைதியைக் கடைப்பிடிக்கிறோம் என எடுத்துக் கொள்ளலாம். இந்த 'ஆழ்மன அமைதி' தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், நாம் 'தாரணைக்கு' அடுத்து 'தியானப் பயிற்சியை' மேற்கொள்ள வேண்டும்.

'தாரணையை' முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே 'தியானப் பயிற்சியை' மேற்கொள்ள முடியும்.

தியானப் பயிற்சியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம் -- முதல் நிலை, இடை நிலை மற்றும் இறுதி நிலை.

உண்மையில் 'தியானம்' என்பது 'செய்வதில்' ஆரம்பித்து 'இருப்பதில்' முடிவடைகிறது.

முதல் நிலையில் நாம் எந்த ஒன்றின் மீது கவனத்தை செலுத்தினோமோ, அதை பயிற்சி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் -- எப்பொழுதெல்லாம் சும்மா இருக்க நேரிடுகிறதோ, அப்பொழுதெல்லாம் -- தொடர வேண்டும்.

ஒரு கட்டத்தில், நாம் சும்மா இருக்க நேரிடும் சமயங்களில், நாம் முயற்சி செய்யாமலே நமது மனம் தியானப் பயிற்சியில் ஈடுபடுவதை உணர முடியும்.
அத்துடன், அத்தகைய சமயங்களில் நமது கண்கள் தாமே மூடிக் கொள்வதையும் உணர முடியும்.

இது நடந்து விட்டால், நாம் இரண்டாம் கட்டத்திற்கு வந்து விடலாம்.

                     (தொடரும்)




வானப்பிரஸ்தம் 
பதிவு 35

முதல்கட்டப் பயிற்சி எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். இந்தப் பயிற்சியின்போது, தன்முனைப்பின் தீவிரம் குறையத் தொடங்கினால், 'நான்' என்ற நிலையிலிருந்து 'தான்' என்று உணரும் நிலைக்கு வரலாம் எனக் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனாலும், 'தான்' என்ற உணர்வை தக்கவைத்துக் கொள்ள, தியானப் பயிற்சியை முழுமூச்சாக செய்ய வேண்டும்.

இரண்டாவது நிலையில் செய்ய வேண்டிய பயிற்சி ஒவ்வொரு மனிதனின் உடல் ஆரோக்கியம், மனப் பக்குவம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். எனவே உரிய குருவைத் தேடி அவரது மேற்பார்வையில் செய்வது நல்லது.

பயிற்சி நல்ல முறையில் வெற்றி அடைந்தால், நாம் மூன்றாவது கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

நாம் நமது சொந்தங்கள் மற்றும் உரிமைப் பொருட்கள் மீதான பற்றை நீக்குவதற்காக வேறு ஒரு பொருளின் மீது கவனத்தை செலுத்தினோம்.

இப்போது அதையும், அதுபோன்ற சமயங்களில் ஏதேனும் மந்திரத்தை உச்சரித்து வந்தால் அதையும் கவனத்தில் கொள்ளாமல் தியானம் செய்ய முயற்சிக்க வேண்டும். 
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்; ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்" எனத் திருமூலர் கூறுகிறார்.

தியானப் பயிற்சி முழுமை அடையும்போது, நாம்
'கர்த்தா' அல்ல; வெறும் 'கருவியே' எனப் புரிந்து கொள்வோம்.

'கருவி' என்று ஆனபின், அங்கு இருப்பது 'நானும்' அல்ல 'தானும்' அல்ல; வெறுமனே "இது" என்று ஆகிவிடும். அதனால்தான் "தத்துவமசி" (நீ அதுவாக இருக்கின்றாய்) என்று சொல்கிறார்கள்.

ஆனால், இந்த நிலை "அவன்" அருளால் வருவது. ஆகவே, மூன்றாம் கட்டத்தின் எல்லைவரை மட்டுமே நம்மால் செல்ல முடியும். அதன்பின் --
"எல்லாம் அவன் செயல்"

                          (முற்றும்)

No comments:

Post a Comment