Thursday, 12 November 2020

பற்று




பதிவு 1

சமீபத்தில் RSS பற்றி எனது எண்ணங்களை ஒரு பதிவாக வெளியிட்டேன்.

அதில் கருத்து தெரிவித்த ஒரு அன்பர் "பற்றற்ற நீங்கள் ..." என குறிப்பிட்டிருந்தார்.
அதில் அவரது வருத்தம், கோபம், ஆத்திரம் போன்ற உணர்வுகள் இருப்பதை புரிந்துகொண்டேன்.
என்னைப்பற்றி ஓரளவு நல்ல அபிப்பிராயம் இருந்திருக்கலாம். அதை எனது பதிவு தகர்த்து விட்டது.

அதற்கான என் பதில் விளக்கங்களை நான் சொல்லப் போவதில்லை. இந்த தொடரின் நோக்கம் "பற்று" என்ற வார்த்தையின் மெய்ப்பொருளை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

ஏற்கனவே வெளிவந்த "அன்பு" என்ற தொடரில், 'அன்பு, பற்று, பந்தம், பாசம்' போன்ற வார்த்தைகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.   இந்த தொடரில் "பற்று" என்றால் என்ன என்று நான் புரிந்து கொண்டதை விளக்குகிறேன்.

வழக்கம்போல் எனது கருத்துக்கள் சரியா அல்லது தவறா என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.
         
பதிவு 2

ஒரு பொருளைப் பற்றி நாம் நினைக்கலாம், சிந்திக்கலாம், பேசலாம், அந்தப் பொருளோடு நேரடியாகவோ அல்லது மனதளவிலோ தொடர்பு கொள்ளலாம்.

இதில் எந்த இடத்தில் பற்று வருகிறது என்று சொல்லமுடியுமா?  

இதனை கேள்வியாக கேட்டால் பலவிதமான பதில்கள் வரும்.

"படிக்காத மேதை" படத்திலிருந்து சில பாடல் வரிகள் - -
"பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்; அதை பிள்ளைக்குமேல் கண்களைப்போல் காத்து வளர்த்தார் ..
.....    .....    .....  ..... சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை; ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை ..."

இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது? 

மகன், வேலைக்காரன் இருவர் மீதும் பற்று இருந்ததா? இருந்தால் யாரிடம் அதிகமாக இருந்தது?
வேலைக்காரன் மீதுதான் அதிகமான பற்று என்றால், அதற்கான காரணம் என்ன? 

கொஞ்சம் சிந்திப்போமே!
        
பதிவு 3

மஹாபாரத போர் நடந்தபோது, அதில் துரியோதனனின் சேனையோடு சேர்ந்து யுத்தம் செய்து மடிந்தவர்களில் பீஷ்மர், கர்ணன் இருவரும் உண்டு.

இவர்களில் கர்ணன் துரியோதனனை தன் உயிரினும் மேலாக நேசித்தான். எனவே அவனுக்கு துரியோதனன் மீது நிச்சயம் பற்று இருந்திருக்கும்.

ஆனால், பீஷ்மருக்கு துரியோதனன் மீது பற்று இருந்தது என்று சொல்லமுடியுமா?

உடல்ரீதியாக அவர் துரியோதனனின் அருகாமையிலேயே வாழ்ந்துவந்தார். ஆனாலும் அவன்மீது பற்று கொண்டதாகத் தெரியவில்லை.

அதேநேரம் அவர் பாண்டவர்களை மிகவும் நேசித்தார். அப்படியானால் அவர் அவர்கள் மீது பற்று வைத்திருந்தார் என்று சொல்லலாமா?

குந்திதேவி தனது முதல் குழந்தையை ஆற்றில் ஒரு பெட்டியில் வைத்து விட்டுவிடுகிறாள். ஆனாலும் வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தையை அவளால் மறக்க முடியவில்லை.

ஆக, பற்று என்பது உடல் சம்பந்தப்பட்டதா? அல்லது மனம் சம்பந்தப்பட்டதா?
           
பதிவு 4

பற்று மனம் சம்பந்தப்பட்டதுதான்
எனத் தோன்றுகிறது. ஆனால், மனதில் ஒன்றை தொடர்ந்து நினைப்பதால் மட்டுமே அதை 'பற்று' என்று சொல்லமுடியுமா?

எனது நண்பன் ஒருவன் எனக்கு துரோகம் செய்துவிட்டான். என்னால் அதை மறக்க இயலவில்லை. அதை நினைக்கும் போதெல்லாம் எனது நண்பனும் என் நினைவில் வந்துவிடுகிறான். தினம் தினம் அவனை நினைப்பதால், எனக்கு அவன்மேல் பற்று இருக்கிறது என்று சொல்லமுடியுமா?

நான் கடவுளை தினந்தோறும் வணங்குகிறேன். ஒரு நாத்திகனும் நாள்தோறும் 'கடவுள் இல்லை' என பிரச்சாரம் செய்கிறான். அவனுக்கும் கடவுள் பற்றிய எண்ணம் இருப்பதால், அவனுக்கு கடவுள் மேல் பற்று உள்ளது என்று சொல்லமுடியுமா?

ஆக, மனம் ஒன்றை தொடர்ந்து நினைப்பதால் மட்டும் அவனிடம் பற்று இருக்கிறது என்று சொல்லமுடியாது.

அப்படியானால் ஒரு மனிதனிடம் 'பற்று' குடிகொண்டுள்ளது என எப்படி அறிந்து கொள்வது?
            
பதிவு 5

நாம் நமக்கு ஒரு பொருள் தேவையென்று நினைக்கலாம். அதை தொடர்ந்து நினைக்கும் பொழுது, அந்த நினைப்பு ஆசையாக மாறி  மனதில் நிலைகொண்டு விடுகிறது.

நினைப்பு, ஆசை இரண்டுக்கும் பாலமாக இருப்பதுதான் பற்று என்று அழைக்கப்படுகிறது.

நாம் யாரிடமாவது அன்பை வெளிப்படுத்தும்போது, அதை ஆசையாக மாற்றுவதும் இந்த பற்றுதான்.

நினைவு எழும் இடம்  மனம்; அது ஆசையாக மாறும் நிகழ்வு நடைபெறும் இடமும் மனம்தான். 

அப்படி இருக்கும்போது, இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கமுடியும் என்று  சந்தேகம் வருகிறதல்லவா?
          
பதிவு 6

நினைவு, ஆசை இரண்டும் இருப்பது மனதில்தான் என்றாலும், இரண்டிற்கும் இடையே ஒரு இடைவெளி உண்டு. அதை நிரப்புவது 'பற்று' என அழைக்கப்படுகிறது.

எல்லோரிடமும் நினைவு இருக்கும். ஆனால், நினைவெல்லாம் பற்றாக மாறுவதில்லை.

உடல்ரீதியாக பற்று இருந்தாலும், மனதில் ஆசை இல்லாதிருக்கலாம். 

திருமணம் நடைபெறும்போது ஆணும், பெண்ணும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொள்கிறார்கள். அந்தப் பற்று மனதளவில் தொடராத காரணத்தினால்தான், பல இடங்களில் விவாகரத்து, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

(அபூர்வமாக சில மனிதர்களிடம் அன்பு,  தூய அன்பாக இருக்கும். அவர்களிடம் பற்று வளர்வதில்லை; அதனால் ஆசையும் இருப்பதில்லை. அவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டாம்)

நினைவாக இருந்த ஒன்று ஆசையாக மாறிவிட்டால், பின் அந்த ஆசை நம்மையும் அறியாமல் ஒரு மாயவலையை 
பின்ன
ஆரம்பித்துவிடும்!

இதுதான் நினைவிற்கும், ஆசைக்கும் உள்ள வித்தியாசம்!!

               
பதிவு 7

நாம் ஒன்றைப் பற்றி தொடர்ந்து நினைத்தால் அது ஆசையாக மாறும். 

இந்த நிலையில் நாம் ஆசைப்படுவது தவறு என்று தோன்றினால், அதிலிருந்து விலகி விடலாம்.

இல்லையெனில், ஆசை கொண்ட மனம், நம்மையும் அறியாமல் வலைபின்னி ஆழ்மனதில் பாசம், பேராசை, காமம் என பதியவைத்து விடும். 

(காதல் வயப்பட்ட இளைஞனிடம் கேட்டால், அவன் பொதுவாக சொல்வது "ஒரு நட்போடுதான் பழகினேன். எப்பொழுது காதலாக மாறியது எனத் தெரியாது" என்பான்)

பின்னர் அந்த பந்தத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். அதனால்தான் பத்திரகிரியார் "ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல் ..." என்று
புலம்புகிறார்.

எனவே நமக்கு வரும் பல துன்பங்களுக்கு காரணமாக இருப்பது இந்த பற்றுதான்.

உண்மையில் 'பற்றறுப்பது' என்பது எளிதான காரியமல்ல.  தீவிரமான முயற்சியும், முழுமையான பயிற்சியும் இருந்தால் மட்டுமே அதனை சாதிக்க முடியும்.

              
பதிவு 8

நாம் சந்திக்கும் பல நூறு பேர்களில் ஒரு சிலரே பற்றற்ற மனிதர்களாக இருப்பார்கள். அவர்களும் தங்களை 'பற்றற்றவர்' என்று பிரகடனப் படுத்துவதில்லை.

அதேநேரம் நாம் பலரை 'பற்றற்றவர்' என்று தவறாகவும் நினைக்கக்கூடும்.

ஒருவர் சாத்திரங்களை நன்கு கற்று அறிந்திருக்கலாம்; அவற்றை நன்கு விளக்கும் திறமையும் பெற்றிருக்கலாம். அதனாலேயே அவர்களை பற்றற்ற மனிதர்கள் என நாம் எண்ணிவிடக்கூடாது.
"ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா ..." என வள்ளுவர் உரைக்கிறார்.

அதேபோன்று 'தவ வேடம்' பூண்ட அனைவரும் பற்றற்றவர்களே என்று நினைப்பதும் தவறு.

அப்படியானால் பற்றற்ற மனிதர்களை அடையாளம் காண்பது எப்படி என்ற சந்தேகம் வரலாம்.

நமது சாத்திர நூல்களிலும், அவற்றைப் பற்றிய சான்றோர்களின் உரைநூல்களிலும் பற்றற்ற மனிதர் எப்படி நடந்துகொள்வார், அவரது மனோபாவம் எப்படி இருக்கும் என்பது பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன.

அவற்றிலிருந்து எனக்குத் தெரிந்த சில குறிப்புகளைத் தருகிறேன். 

எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைதான். நீங்களே அவைகளின் மெய்ப்பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

                 
பதிவு 9

பற்றற்ற மனிதர்களை அடையாளம்  கண்டுகொள்ள ஏதுவாக சில குறிப்புகள் - -

1. Though they live in the family, mentally they will be far away from the family.
(குடும்பத்தில் வசித்து வந்தாலும், மனதளவில் குடும்பத்தை விட்டு விலகியே இருப்பார்கள்)

2. They will behave like a silent spectator to the outer happening.
(தன்னைச் சுற்றி நடப்பவற்றை ஒரு பார்வையாளனாக பார்த்து வருவார்கள்)
 
3. They will never re-act; instead they will  respond, only if it is warranted.
(எந்தவொரு செயலுக்கும் எதிர்வினை ஆற்ற மாட்டார்கள்; தேவைப்படும் பட்சத்தில் பதில்-வினை மட்டுமே ஆற்றுவாரகள்)

4. They will be inactive (mentally), while being active in the outer world.
(வெளியுலகில் ஏதாவது செய்ய நேரிட்டாலும், மனதளவில் செயலற்றவர்களாகவே இருப்பார்கள்)

5. They will like to revel in alone-ness.
(தனிமையில் இருப்பதை மிகவும் விரும்புவார்கள்)

6. They will always be present in the "present".
(எப்பொழுதும் 'நிகழ்காலத்திலேயே' இருப்பார்கள்)

7. They will Regret nothing, expect nothing, accept everything.
(எதற்கும் வருந்தமாட்டார்கள்;
எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்; எது வந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்)

8. They will perform action without any desire. (ego-less activity).
(செயலில் ஈடுபடும்போது, விளைவில் எந்தவித விருப்பமும் காட்டமாட்டார்கள்)

9. They will maintain detached attachment.  
(பழகும்போது பற்றற்ற பற்றுடன் பழகுவார்கள்)

10. They will maintain relation-less relationship.
(உறவினரிடம் பழகும்போது, உறவினர் அல்லாதவரிடம் பழகுவது போல் பழகுவார்கள்)
          
11. They do not have any possessor feeling.
(அவர்களிடம் உடமைத்தன்மை என்ற உணர்வு இருக்காது)

12. They will never be  men of impatience.
(எந்த சூழ்நிலையிலும் பொறுமை இழக்க மாட்டார்கள்)

13. They will be indifferent to the enchanting objects of the outer world.
(புறவுலகில் உள்ள பொருட்களால் கவரப்பட மாட்டார்கள்)

14. They will always maintain a sense of contentment.
(எப்பொழுதும் போதும் என்ற மனநிலையில் இருப்பார்கள்)

15. They will move like a dry leaf.
(காற்றில் அலையும் காய்ந்த சருகைப்போல, அவர்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி செயல்படுவார்கள்)

16. Their action will not have any motive.
(அவர்களது செயலுக்கு எந்தவொரு நோக்கமும் இருக்காது)

17. They will be persons  of moderate eating.
(அளவான சாப்பாடு என்பதில் கவனமாக இருப்பார்கள். விருப்பம்போல் உண்ணுவது என்ற பிரச்சினைக்கே இடம் இருக்காது)

18. They will always live with a spirit of dispassion.
(விருப்பு, வெறுப்பு எதுவுமே அவர்களிடம் இருக்காது)

19. Their outlook will be very simple with humble behaviour.
(எளிமையுடனும், பணிவுடனும் காணப்
படுவார்கள்)

20. They may not have any emotional out- burst because of the integrated mind.
(மனம் புத்தியுடன் இணைந்து செயல்படுவதால், எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்)

21. There won't be any selfishness in their service.
(அவர்களின் செயலில் சுயநலத்திற்கு இடம் கிடையாது)

22. They will always be happy, because it comes from the 'WITHIN'.
(ஆனந்தம் என்பது உள்ளிருந்து வருவது; அதை உணர்ந்ததால் எப்பொழுதும், எல்லா சூழ்நிலையிலும் ஆனந்தமாகவே இருப்பார்கள்) 

பின் குறிப்பு: 

குறிப்புகள் உணர்த்தும் மெய்ப்பொருளை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

மெய்ப்பொருளை அறிந்து கொண்டால், 'பற்றற்ற' மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

'பற்றற்ற' மனிதர்கள் துறவறத்தில் மட்டுமல்ல, இல்லறத்திலும் இருக்கக்கூடும்.
 ***    ***   ***
அன்புடன்
   உங்களில் ஒருவன்.



















No comments:

Post a Comment