Thursday, 29 December 2022

க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்

க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்.

தலைப்பு வியப்பாக உள்ளது அல்லவா?

க்ஷத்திரிய தர்மம் 'ஒரு மனிதனின் செயல்பாட்டை'
குறிப்பது.
கம்யூனிசம் 'ஒரு மனிதனின் சமுதாய உணர்வை' குறிப்பது.

உண்மையில் இவை இரண்டும் ஒன்றாகக் கைகோர்த்து பயணிக்க வேண்டும்; ஆனால், எதிரும் புதிருமாக காட்சி அளிக்கின்றன. புரியாதப் புதிர் இது. வாழ்க்கையே ஒரு புதிர்தானே!!

Of all the miseries, mystery is the worst misery.
.. (எங்கேயோ படித்தது)

       சமர்ப்பணம்

க்ஷத்திரிய தர்மம் .. இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பலருக்கும் பலவிதமான எண்ணங்கள் தோன்றும்.

எனக்கு 'பெருந்தலைவர் காமராஜர்' முகம் மட்டுமே தோன்றுகிறது.

பகவத்கீதை நெடுகிலும் ஒரு க்ஷத்திரியன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பல குறிப்புகள் உள்ளன.

அந்தக் குறிப்புகளை எல்லாம் அவர் படித்தாரா என்பது நமக்குத் தெரியாது; அவரது 'அரசியல் குரு' திரு. சத்தியமூர்த்தி அவர்கள் அவற்றைக் கற்றுக் கொடுத்தாரா என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால், தம் வாழ்நாள் முழுவதும் அவற்றை முழுமையாகக் கடைப்பிடித்தவர் அவர்.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் 'பற்றற்று' வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் ராஜ போக வாழ்க்கையில் இருந்தும், பற்றற்று வாழ்ந்து காட்டியவர் ஜனக மகராஜார். அதனால்தான் அவரை 'ராஜரிஷி' என அழைத்தார்கள். 

காமராஜர் அவர்களோ ஆட்சியில் முதன்மைப் 
பொறுப்பில் இருந்தும், ராஜ போக வாழ்க்கையையும் துறந்து எளிய முறையில் வாழ்ந்து காட்டியவர்.

இன்னமும் நல்ல அரசியல்வாதியாக வாழ விரும்புகிறவர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார்.

அவரது திருவடிகளை வணங்கி எனது கருத்துக்களை ஒரு தொடராகப் பதிவிடுகிறேன்.

                        (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்

முன் குறிப்பு

தொடரின் பிற்பகுதியில் கம்யூனிசம் பற்றிய என் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன். அவை கம்யூனிஸ்ட்டுகள் உட்பட பலரது மனதைக் காயப்படுத்தலாம்; பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சில நேரங்களில் விதைகளை விதைப்பதற்கு கடப்பாரைக் கம்பியையும் உபயோகிக்க நேரிடுகிறது.

எனது கருத்துக்களில் நியாயம் இருப்பதாகக் கருதினால், சம்பந்தப் பட்டவர்கள் (the politburo of the communist parties) தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.

கம்யூனிஸ்ட்களைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று பலரும் சந்தேகப் படலாம். அதற்கான விடை தொடரின் முடிவில்!?


            முன்னுரை

க்ஷத்திரிய தர்மம் என்பது "வர்ணாஸ்ரம தர்மத்தின்" ஒரு அங்கம். இந்தத் தொடரைப் படிப்பவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கலாம்.

முதலாவது குழு:-
இவர்கள் "வர்ணாஸ்ரம தர்மம்" பற்றி ஏற்கனவே ஒரு முன்முடிவில் இருப்பவர்கள். அதில் ஒரு பிரிவினர் வர்ணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக்கொள்பவர்களாகவும், மற்றொரு பிரிவினர் அதை எதிர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். எனினும், அவர்களது முன்முடிவின்  காரணமாக, என்னுடைய சில கருத்துக்கள் இரு பிரிவினருக்குமே எரிச்சல் ஊட்டுவதாக அமையலாம்.

இரண்டாவது குழு:-
இவர்கள் "வர்ணாஸ்ரம தர்மம்" பற்றி எந்தவித முன்முடிவும் எடுக்காதவர்கள். வர்ணாஸ்ரம தர்மம் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் குழம்பிய மன நிலையில் இருப்பவர்கள். இவர்களுக்கு எனது கருத்துக்கள் ஒரு தெளிவைக் கொடுக்கலாம்.

மூன்றாவது குழு:-
இவர்கள் "வர்ணாஸ்ரம தர்மம்" என்றால் என்ன என்றே அறியாத இளைய சமூகத்தினர். இவர்களுக்கு எனது கருத்துக்கள் ஒரு புதிய புரிதலைக் கொடுக்கலாம்.

இருப்பினும், அனைத்து அன்பர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். இந்தத் தொடரில் சொல்லப்படும் கருத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து (share) கொள்ளுங்கள்.

ஒருவகையில், அதுகூட க்ஷத்திரிய தர்மத்திற்கு உட்பட்டதுதான்.

                   (தொடரும்)

க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 1

இந்தத் தொடர் மதம் சம்பந்தப் பட்டது அல்ல; நாட்டின் நலம் சம்பந்தப்பட்டது.

தொடரை நிதானமாகப் படித்து, ஆழ்ந்து சிந்தியுங்கள். அதன்பின் எனது கருத்துக்கள் சரியா, இல்லையா என நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

க்ஷத்திரிய தர்மம் என்பது "வர்ணாஸ்ரம தர்மத்தின்" ஒரு அங்கம். இந்து மதத்தை தாக்குபவர்களுக்கு இந்த "வர்ணாஸ்ரம தர்மம்தான்" முக்கிய ஆயுதம். ஒரு மனிதனின் வர்ணம் என்பது பிறப்பாலோ, சாதியாலோ நிர்ணயம் செய்யப்படுவது அல்ல என்று எத்தனை தடவை சொன்னாலும்
அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

வர்ணங்களைப் பற்றி "நான்கு வர்ணங்கள்" என்ற தலைப்பில் நீண்டதொரு விளக்கம் கொடுத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் "piththantnv@blogspot.com" என்ற வலைத்தளத்தில் அதைக் காணலாம்.

எனவே, சில அடிப்படை உண்மைகளை மட்டும் இங்கு பார்த்து விடுவோம்.

"வர்ணாஸ்ரம தர்மம்" என்பதை, "வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம்" என இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

க்ஷத்திரிய தர்மம் என்பது வர்ண தர்மத்தில் உள்ள நான்கு பிரிவுகளில் ஒன்று. இது மனிதனின் குணத்தையும், செயலையும் (கர்மா) வைத்து வகைப்படுத்தப் படுகிறது.

ஆஸ்ரம தர்மம் பற்றி இந்தத் தொடரில் கருத்து ஏதும் சொல்லப் போவதில்லை; அது தேவையும் இல்லை.

நமது நோக்கம், நாம் "க்ஷத்திரிய தர்மத்தை" நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டும்தான்.

"நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டவை;
குண, கர்மத்திற்கு தக்கபடி" எனக் கண்ணன் கீதையில் சொல்கிறான்.

"கர்மம்" என்றால் செயல் என்று எல்லாரும் பொதுவாகச் சொல்வதுண்டு.
ஆனால், நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சங்கிலியின் ஒரு முனை "குணம்" என்றால், மறுமுனை "கர்மா" (செயல்) எனப்படும். இடையில் வேறு சில கண்ணிகளும் உள்ளன. குணம் என்று சொல்வது கூட, ஆழ்மனப் பதிவுகளின் அடிப்படையில் வருவதுதான். அந்தக் கண்ணிகள் - -
1. ஆழ்மனப் பதிவுகள் 
(Impression of past experiences)
2. குணம்
(Character)
3. மனோபாவம்
(Mental attitude)
4. ஆசை
(Desire)
5. சிந்தனை
(Thought)
6. செயல் (கர்மம்)
(Action)

பல நேரங்களில் இரு மனிதர்களின் செயல்களும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அவர்களின் மனோபாவம் வேறாக இருந்தால்!?

ஒரு அலுவலகத்தில் இரண்டு பேர் வேலை செய்கின்றனர். அதில் ஒருவர் லஞ்சம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்; மற்றொருவர் லஞ்சம் வாங்குவதில் குறியாக இருக்கிறார். இருவரது மனோபாவமும் வேறு வேறாக இருக்கும்போது, இருவரது வர்ணத்தையும் ஒரே இடத்தில் வைக்க முடியுமா?

எனவே, "கர்மா" என்ற சொல்லுக்கு 'செயல்' என்று சொல்வதைவிட 'மனோபாவம்' எனப் பொருள் கொள்வது, ஒருவனின் வர்ணத்தை உறுதி செய்வதற்குப் பொருத்தமாக
இருக்கும் என்பது எனது கருத்து.

                    (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 2

நான்கு வர்ணங்களைக் குறிப்பிடும் போது, "பிராமணன், க்ஷத்திரியன் .." என்றுதான் குறிப்பிடுகிறார்கள்; "பிராமண தர்மம், க்ஷத்திரிய தர்மம் .." என்றெல்லாம் குறிப்பிடவில்லை. ஆனால், ஒவ்வொரு பிரிவிற்கும் அதற்கென்று தனியே பண்புகளும், விதிகளும் உண்டு. அதன் காரணமாகத்தான் "க்ஷத்திரிய தர்மம்" எனக் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அரசாங்கமும் பல்வேறு சட்ட விதிகளை இயற்றுகின்றது. அப்படியானால் சட்டம், தர்மம் இரண்டும் ஒன்றுதானா அல்லது ஒன்றுக்கொன்று மாறுபட்டதா?

ஒருமுறை நண்பர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார்.
அது .. "சட்டம், நியாயம், தர்மம் எல்லாம் ஒன்றுதானா அல்லது வேறு வேறா?".
....................................
                    
சட்டம், நியாயம், தர்மம் இவற்றிற்கிடையே என்ன வித்தியாசம்?

ஒரு கல்லூரி ஆசிரியர் தனியாக மாணவர் பயிற்சிப் பள்ளி நடத்துகிறார். அவர் ஆசிரியராக வேலை பார்ப்பதால், அதனை தன் மனைவியின் பெயரில் நடுத்துகிறார்.

சட்டப்படி அந்தப்பள்ளி அவரது மனைவியின் பெயரில் நடப்பதால், அவர் குற்றவாளி அல்ல.

உண்மையில் அந்தப்பள்ளியை அவர்தான் நடத்துகிறார். எனவே நியாயப்படி அவர் குற்றவாளி ஆகிறார்.

ஆனால், அந்த பயிற்சி பள்ளியை நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் தனது கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக செலவிட்டு வருகிறார். எனவே தர்மத்தின்படி பார்த்தால், அவர் குற்றவாளி அல்ல.

மேலேயுள்ள உதாரணத்தின்படி அந்த ஆசிரியர் நியாயத்தின் படி குற்றவாளி; ஆனால், சட்டப்படியும் குற்றவாளி அல்ல, தர்மத்தின் படியும் குற்றவாளி அல்ல.

ஆனால், திருமங்கையாழ்வாரைப் பொறுத்தவரை, அவர்
சட்டப்படி குற்றவாளி ஆகிறார்; தர்மத்தின்படி குற்றமற்றவர் ஆகிறார்.

                  (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 3

நான்கு வர்ணங்களைப் பற்றி பல தொடர்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தத் தொடரில் "க்ஷத்திரிய தர்மம்" பற்றி மட்டுமே சற்று விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. மன்னர்கள், சர்வாதிகாரி போன்றோர் ஆட்சி செய்யும்போது, அவர்கள் மக்களைக் கொடுமைப் படுத்தினால், அந்த நாட்டில் புரட்சி வெடித்து விடும். ஆனால், நமது நாட்டிற்கு அது தேவையில்லை. காரணம் .. ஆட்சியாளரை மாற்றும் அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. ஆனால், சரியான ஆட்சியாளரை மக்கள் தேர்வு செய்கிறார்களா? இல்லையெனில் தவறான மனிதர்களை ஏன் ஆட்சியில் அமர்த்துகிறார்கள்?

அதற்கு ஒரே காரணம், நமக்கு "க்ஷத்திரிய தர்மத்தைப்" பற்றி சரியானப் புரிதல் இல்லை என்பதுதான்.

மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையைக் கொடுத்த நாம், ஆட்சியில் அமரும் அரசியல்வாதி "க்ஷத்திரிய தர்மத்தை" கடைப்பிடிப்பவனாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதைக் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டோம்?

அதைக் கற்றுக் கொடுக்காத காரணத்தினால்தான், உலக நாடுகளில் முன்னணியில் இருக்க வேண்டிய நமது நாடு சற்று பின்தங்கிய நிலையில் உள்ளது.

                         (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 4

நமது நாடு கனிம வளங்கள் மிகுந்த நாடு; நீர்வளம் நிறைந்த நாடு; வருடம் பூராவும் பயிர் செய்யக்கூடிய வசதிபடைத்த நாடு; புத்தி கூர்மையுள்ள (IQ) இளைஞர்கள் அதிகமுள்ள நாடு.

இருந்தும், நமது நாடு ஒரு முன்னணி நாடாக இல்லை. அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்.

பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இருப்பவர்கள் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைபிடிக்காததுதான் அதற்கான காரணம்.

இஸ்ரேல் ஒரு சின்னஞ்சிறு நாடு. கனிம வளங்களோ, நீர் வளமோ இல்லாத நாடு. சுற்றிலும் பகைவர்கள் சூழ்ந்த நாடு. இருந்தும் அந்த நாட்டின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. காரணம் அந்த நாட்டின் அரசியல் வாதிகள் மட்டுமல்ல; சாதாரண மனிதர்களும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைபிடிப்பது தான்.

அவர்களுக்கு க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றி என்ன தெரியும் என எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

க்ஷத்திரிய தர்மத்தை உள்ளடக்கிய "வர்ணாஸ்ரம தர்மம்" என்பது மனோதத்துவ அடிப்படையில் அமைந்தது. எல்லா மதத்திற்கும், எல்லா நாட்டிற்கும், எல்லாக் காலங்களிலும் பொருந்தக்கூடிய
ஒன்றுதான்.

இஸ்ரேல் நாட்டில் உள்ளவர்கள் "க்ஷத்திரிய தர்மம்" என்றால் என்னவென்று அறியாதவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் கடைபிடிக்கும் விதிமுறைகள் "க்ஷத்திரிய தர்மத்தின்" விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெறுவதுதான். அதுதான் அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.


                       (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 5

க்ஷத்திரிய தர்மம் என்பது மனோதத்துவ அடிப்படையில் அமைந்த ஒரு 'கோட்பாடு'. அதன்கீழ் வரும் விதிமுறைகள் காலத்திற்கேற்ப மாறுபடும் தன்மை உடையவை.

ஒருகாலத்தில் "அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல்
..." என்றார்கள். காலங்கள் மாறின; சூழ்நிலைகளும் மாறின. அந்தக் கோஷங்கள் நின்று விட்டன. இப்போது நாம் "இல்லையேல் ..." என்று சொன்னாயே, அதைச் செய்தாயா என்று கேட்டால் அது நமது பயித்தியக்காரத் தனத்தைதான் குறிக்கும்.

நாம் அரசியலமைப்பு சட்டத்தைப் பயன்படுத்துகிறோம். மனுதர்மத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், வழக்கொழிந்து போன ஒன்றை வைத்துக்கொண்டு, இந்து மதத்தை குறை கூறுவது சரியா?

ஒரு காலத்தில் "வேதம் ஓதுபவன் பிராமணன், சண்டை (போர்) போடுகிறவன் க்ஷத்திரியன், வாணிபம் செய்கிறவன் வைஷ்யன் .." என்றார்கள். அப்படியானால் மருத்துவர், பொறியாளர், சட்ட நிபுணர்கள் போன்றோரை சூத்திரர்கள் என்று சொல்ல முடியுமா? அதேபோல், வீதியில் நின்று சண்டை போடுகிறவர்களை எல்லாம் க்ஷத்திரியர்கள் என்று சொல்ல முடியுமா?

மாறிவிட்ட வாழ்க்கை சூழ்நிலையில், அதற்கேற்றவாறு மட்டுமே நாம் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

திருவள்ளுவர் 'வேதம் ஓதுபவன் பிராமணன்' என்று சொல்லவில்லை; "அந்தணர் என்போர் அறவோர்.." என்றுதான் சொன்னார். அதாவது அறவழியில் நடப்பவர்களை அந்தணர் எனக் குறிப்பிடுகிறார் -- அவர்கள் வேதம் ஓதாமல் இருந்தால் கூட!?

க்ஷத்திரியன் என்றால் வெறுமனே போர் புரிபவன் என்று நினைக்கக் கூடாது. காலமாற்றத்திற்கு ஏற்றவாறு 
(மாறிவரும் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்றவாறு) நாம் விதிகளை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

                         (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 6

இன்றைய சூழலில் ஒரு க்ஷத்திரியன் -- அதிலும் அரசியல் தளத்தில் இறங்குபவன் -- எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
முக்கியமான விதிமுறைகளை மட்டும் பார்ப்போம் ...
1. நியாயத்திற்காகப் போராடுவான்.
2. பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்க மாட்டான்.
3. பிறரது நலத்திற்காக தன்னையும், தனது உறவுகளையும் வருத்துவதற்குத் தயங்க மாட்டான்.
4. நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பான்.
5. தேசத்தின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவான்.
6. நாடு பொருளாதார வளர்ச்சி காண பாடுபடுவான்.
7. நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை போற்றி, மேலும் செம்மைப் படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வான்.

நமக்குள் ஒரு கேள்வி வரும்.
'நியாயத்திற்காகப் போராடுவது' என்றால், கம்யூனிசமும் அதைத்தானே வலியுறுத்துகிறது. அப்படியானால் கம்யூனிசமும், க்ஷத்திரிய தர்மமும் ஒன்றுதானா?

                     (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 7

கம்யூனிசமும், க்ஷத்திரிய தர்மமும் ஒன்றல்ல; ஆனால், அவைகளுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.

க்ஷத்திரிய தர்மம் தனி மனிதன் சார்ந்தது; கம்யூனிசம் சமூகம் சார்ந்தது.

க்ஷத்திரிய தர்மத்தை உள்ளடக்கிய "வர்ணாஸ்ரம தர்மம்", தனி மனிதன் அவனது இயல்புக்கு ஏற்ப கர்மம் செய்து வந்தால் சமூகம் நன்றாக இருக்கும் எனச் சொல்கிறது.

கம்யூனிசமோ சமூகத்தை மாற்றி அமைத்தால், எல்லாமே நன்றாக இருக்கும் எனச் சொல்கிறது. சைனா போன்ற நாடுகள் அதைத்தான் செய்கின்றன. ஆனாலும் அவ்வப்போது எதிர்ப்புகள் கிளம்புகின்றன.
ஏன்!?

இது ஒரு ஜனநாயக நாடு. கம்யூனிசத்தை ஒழுங்காகக் கடைபிடித்திருந்தால், இந்த நாடு கம்யூனிஸ்ட்களின் ஆட்சிக்குள் என்றோ வந்திருக்கும். ஏன் வரவில்லை?

அவர்கள் நியாயத்திற்காகப் போராடவில்லை என்பதுதான் உண்மையான காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

                         (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 8

வர்ணாஸ்ரம தர்மம் என்பது மனோ தத்துவ ரீதியில் அமைந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்
"Nature Human Behaviour" என்ற அமெரிக்கப் பத்திரிகை மாபெரும் கருத்துக் கணிப்பு ஒன்றை உலகளவில் நடத்தியது. அதன் விளைவாக அது மக்களை 
"Reserved, role model, self-centred and average" என நான்கு விதமாகப் பிரித்தது.

இதில் ...
Reserved என்பது 'போதும் என்ற மனநிலையில் (contentment) அமைதியாக ஒதுங்கி வாழ்பவர்களைக் குறிப்பது'. இவர்கள் "un-active type of people". வர்ணாஸ்ரம தர்மத்தில் இவர்களை 'பிராமணன்' என்கிறோம்.

role model and self-centred என்பது 'செயல் திறன் மிக்கவர்களை, எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆசையுடன் செயல்படுபவர்களைக் குறிப்பது'. இவர்கள் "active type of people". .. வர்ணாஸ்ரம தர்மத்தில் இவர்களை முறையே 'க்ஷத்திரியன், வைஸ்யன்' என அழைக்கிறோம்.

average என்பது 'செயலூக்கம் இல்லாதவனை, சோம்பல் மிகுந்தவனைக் குறிப்பது. இவர்கள் "inactive type of people". .. வர்ணாஸ்ரம தர்மத்தில் இவர்களை 'சூத்திரன்' என்கிறோம்.

இந்த நான்கு பிரிவு என்பது எப்போதும், எங்கேயும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். ஆட்சி என்று வரும்போது .. அது ஜனநாயக நாடாக இருந்தாலும், சர்வாதிகார நாடாக இருந்தாலும் .. ஆட்சியில் இருப்பவன் க்ஷத்திரிய தர்மத்தின் படி நடக்காவிட்டால் என்றேனும் ஒரு நாள் புரட்சி வெடிப்பதைத் தவிர்க்க முடியாது.

மீண்டும் சொல்கிறேன் .. "க்ஷத்திரிய தர்மம் என்பது தனி மனிதனுக்கானது என்றால், கம்யூனிசம் என்பது சமூகம் சார்ந்தது".

சுதந்திரம் அடைந்த பொழுது நமது நாட்டில் ஜீவானந்தம், நிருபன் சக்கரவர்த்தி போன்ற அற்புதமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் இருந்தார்கள். ஆனாலும், கம்யூனிஸ்ட் கட்சியால் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட முடியவில்லை. ஏன்?

                  (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 9

ஒரு ஜனநாயக நாட்டில் க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும் கைகோர்த்து பயணம் செய்தால், அந்த நாடு நன்கு வளம் பெறும். 

ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை என்பது எனது அபிப்பிராயம்.

பதிவு 8-ல் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு
க்ஷத்திரியன் கடைபிடிக்க வேண்டிய 7 முக்கிய விதிகளைக் குறிப்பிட்டுள்ளேன். அவற்றைக் கம்யூனிஸ்ட்கள் கடைபிடிக்கிறார்களா?

கம்யூனிசம் என்பது ஒரு தத்துவம். அது எப்போதும் இருக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இல்லை என்றாலும் கம்யூனிச உணர்வு பலரிடம் இருந்துகொண்டுதான் இருக்கும். கம்யூனிச உணர்வு இல்லாத க்ஷத்திரியனைப் பார்க்க முடியாது. அவனுக்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால், கம்யூனிச உணர்வு கண்டிப்பாக இருக்கும்.

அப்படியானால் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏன் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட முடியவில்லை? அதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

எதற்காக கம்யூனிசத்தைப் பற்றி இந்தத் தொடரில் எழுத வேண்டும் என சிலர் நினைக்கலாம். எல்லா மனிதர்களாலும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க முடியாது; ஆனால், அவர்களுக்குள் கம்யூனிச உணர்வு இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

உண்மையில் எல்லா மனிதர்களிடமும் இந்த உணர்வு விதையாக உள்ளது. அது முளைத்து வளர்வதற்கான முயற்சியை தனது பிரதானக் கொள்கையாக கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய மறந்து விட்டார்கள்.

                       (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 10

குடும்ப அரசியல் செய்யாத அரசியல் கட்சிகள் எவையெனக் கேட்டால், நமக்கு நினைவிற்கு வருவது பி.ஜே.பி. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும்தான்.

பி.ஜே.பி-ஐ விட மூத்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. ஆனாலும், பி.ஜே.பி-ன் வளர்ச்சியை அதனால் எட்ட முடியவில்லை. ஏன்?

முக்கியமான காரணம் எல்லா மனிதர்களையும் அரவணைத்துச் செல்லத் தவறியதுதான்.

திருவள்ளுவர் கூறுகிறார்:-
"செய்தக்க அல்ல செயக்கெடும்
செய்தக்க
செய்யாமை யானும் கெடும்"
.. குறள் 466

ஜனநாயக நாட்டில் மக்களிடம் சமுதாய உணர்வை ஊட்டி, அதன் அடிப்படையில் ஒரு கட்சி இயங்குவது அந்தக் கட்சிக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. ஆனால், கம்யூனிஸ்ட்கள் பொதுமக்களிடம் சமுதாய உணர்வை ஊட்டத் தவறி விட்டார்கள். அதற்கானக் காரணங்கள் என்னென்ன?

முக்கியமான மூன்று காரணங்களைப் பார்ப்போம்:-            

1. ஒரு க்ஷத்திரியனிடம் 
"நீ கடைப்பிடிக்கும் தர்மத்தை ஒரு வரியில் சொல்" என்றால், அவனது பதில் இவ்வாறு இருக்கும்:-
"இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, பற்றற்று கர்ம யோகத்தை அனுசரிக்க வேண்டும்" .. கீதை 3.7.

ஒரு கம்யூனிஸ்ட் தோழரிடம் "கம்யூனிசம் என்றால் என்னவென்று ஒரு வரியில் சொல்லுங்கள்" எனக் கேட்டால், அவன் "பாசிசம், அதிகார வர்க்கம், சமுதாயப் புரட்சி" என நிறைய சொல்லுவான். ஆனால், மையக் கருத்தை ஒரு வரியில் அவனால் சொல்ல இயலாது.

கார்ல் மார்க்ஸ் அவர்கள் ஒரு ஜெர்மானிய தத்துவ நிபுணர். அதிகார வர்க்கம் தொழிலாளர்களை சுரண்டுவதைப் பார்த்து அது களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் எழுதிய நூல்தான் "Das Kapital".

இந்த நூல்தான் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு வழிகாட்டி. இதை வைத்துக்கொண்டு 'தொழிலாளர்களை யாரும் சுரண்டாமல் பார்த்துக் கொள்வது மட்டும்தான் கம்யூனிசம்'
என்றால் அது சரியா? யாரும் யாரையும் சுரண்டக் கூடாது என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்!?

என்னைப் பொறுத்தவரை, "அடுத்தவன் வயிற்றில் அடிக்கக் கூடாது" -- அதுதான் கம்யூனிசம்.

'நவோதயா பள்ளிக்கூடம் வேண்டாம், நீட் தேர்வு வேண்டாம்' என்று யாரேனும் சொன்னால், அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்திருக்க வேண்டாமா? அதைச் செய்யவில்லையே!? அப்படியானால், அந்தக் கட்சிக்கு சமுதாய உணர்வு இல்லை என்றுதானே அர்த்தம்!?

                       (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 11

2. கார்ல் மார்க்ஸ் தொழிலாளர்களை ஆதிக்க சக்தியினர் சுரண்டுவது கண்டு அதற்கு எதிராகக் குரல் எழுப்பினார்.

அதனைக் கருத்தில் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப் பட்டது. நமது நாட்டிலும் தொழிலாளர்களுக்குப் பலவித உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு.

தொழிலாளர் நலனை மட்டும் முன்னிருத்தி கட்சி செயல்பட ஆரம்பித்தது. விளைவு .. தொழிலாளர்களை வழிநடத்த வேண்டிய கட்சி, அவர்களின் பின்னே நடைபோடத் தொடங்கிவிட்டது.

அதன் காரணமாகக் கட்சியால் அவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியவில்லை.

உதாரணமாக கேரளாவில் இன்றும் நடைமுறையில் இருக்கும் "நோக்கு கூலி" முறையைத் தடுக்க முடிந்ததா? அதற்கு எதிராக சட்டம் இயற்றிய பின்னும் அது நடைபெற்று வருகிறது என்றுதானே சொல்கிறார்கள்.

அத்துடன் நாட்டில் நடக்கும் பல தவறுகளை, கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டிக்காமல் விட்டு விடுகிறார்கள். சமுதாய உணர்வுடன் செயல்பட வேண்டிய கட்சி அப்படி இருக்கலாமா?           

3. நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. எதேச்சாதிகார நாடாக இருந்தால், அங்கு ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்வதில் நியாயம் இருக்கலாம். ஜனநாயக நாட்டில் நக்சல்பாரி போன்ற இயக்கங்களின் தேவை என்ன?

ஆட்சி மாற்றம் வேண்டுமென்று விரும்பினால், அவர்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் 'ஊராட்சி' தேர்தல்களில் வெற்றி பெற்று, அதை நன்கு நிர்வகித்தால் அடுத்தடுத்த ஊராட்சிகளில் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்குமே!! 

நல்ல பெயர் கிடைத்தபின் சட்டசபை தேர்தல்களிலும் கலந்து கொள்ளலாமே!?

இத்தகைய வாய்ப்புகள் இருந்தும் அரசோடு ஆயுதம் தாங்கி மோத வேண்டிய அவசியம் என்ன? எதற்காக கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்?
 
அது, அரசியலில் இருந்துகொண்டே மறைமுகமாக ஜனநாயகத்தைத் தாக்குவது போல் ஆகாதா?

இதுபோன்ற செயல்கள் மக்களிடம் வெறுப்பை வளர்க்கும் என்பது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை?

                     (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 12

எதற்காகக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி கவலைப்பட வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?

கம்யூனிஸ்டுகள் சாதாரண மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள். அவர்கள் நோக்கம் ஆதிக்க சக்தியை எதிர்ப்பதுதான் என மக்கள் நினைக்கும் படி நடந்து கொள்வதுதான் அவர்கள் செய்யும் பெரும் தவறு.

மக்களிடம் சமுதாய உணர்வை ஊட்டுவது அவர்களின் முக்கிய பணியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே "க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்" கைகோர்த்து பயணிப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும். அது ஜனநாயக நாட்டிற்கு மேலும், மேலும் வலு சேர்க்கும்.

பேரிடர் காலங்களில் ஏழை, எளிய மக்களிடம் இருந்து வெளிப்படும் சமுதாய உணர்வு அபரிமிதமான ஒன்று. அதே போன்ற உணர்வை எல்லாக் காலங்களிலும், எல்லா மக்களும் கடைப்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது கம்யூனிசம் பேசுபவர்களின் கடமையாக இருக்க வேண்டாமா?

அதுதான் இல்லை; நியாயத்திற்காகப் போராடுகிறார்களா என்றால் அதுவும் சந்தேகமாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை கம்யூனிசம் என்பதன் பொருள் "அடுத்தவன் வயிற்றில் அடிக்கக் கூடாது". இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், கம்யூனிஸ்ட்கள் தங்கள் கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

எனது கருத்து சரி என்றால், இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் என்ன? (நிறைய கேள்விகள் கேட்கலாம்; ஆனாலும் இரண்டு கேள்விகளோடு நிறுத்திக் கொள்கிறேன்).

1. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 'டாஸ்மாக்' வியாபாரம் இருப்பதால்தான் சம்பளம் கொடுக்க முடிகிறது; இல்லையெனில் மிகவும் கஷ்டமாகிவிடும் எனச் சொல்கிறார்கள்.

அதாவது அடுத்தவன் குடியைக் கெடுத்துத்தான் சம்பளம் கொடுக்க முடிகிறது என்கிறார்கள்.

இந்த நிலையில் 'அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; எங்களுக்கு சம்பளத்தை உயர்த்து' எனப் போராடினால், அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிப்பது முறையா?

2. சமீபத்தில் கேரள ஆளுனர் தெரிவித்த குற்றச்சாட்டு .. "மந்திரிகள் தங்களுக்கு 
P.A.-ஆக சிலரை (தங்களுக்கு வேண்டயவர்களை) வேலையில் அமர்த்துகிறார்கள். இரண்டு வருடங்கள் கழிந்ததும் அவர்களை நீக்கிவிட்டு வேறு சிலரை வேலையில் அமர்த்துகிறார்கள். இரண்டு வருடங்கள் மட்டுமே வேலையில் இருந்தாலும் அவர்களுக்கு முழு 'பென்சன்' வழங்கப் படுகிறது".

இந்தக் குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது எனக்குத் தெரியாது. இது உண்மையென்றால், நாம் மறைமுகமாக 'அடுத்தவன் வயிற்றில் அடிக்கிறோம்' என்றுதானே அர்த்தம்!?

                       (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 13

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இது வலிமை மிகுந்த, வளம் நிறைந்த நாடாக இருக்க வேண்டுமென்றால், ஆட்சியில் இருப்பவர்கள் "க்ஷத்திரிய தர்மத்தைக்" கடைப்பிடிக்க வேண்டும்.

பிரதான எதிர் கட்சிகள் மக்களிடம் சமுதாய உணர்வுகளை எழுப்பி, அதன் மூலம் மக்களிடம் நல்லெண்ணத்தை வளர்த்து, எங்களால் இன்னும் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடியும் என நிரூபிக்க வேண்டும்.

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்"
.. குறள் 448

சிறந்த எதிர் கட்சி இல்லையெனில், நாட்டின் ஜனநாயகம் சீரழிந்து விட நிறைய வாய்ப்புகள் உண்டு.

அகில இந்திய அளவில், பரவலாக அறியப்பட்ட கட்சிகள் -- ஆட்சியில் உள்ள பா.ஜ.கா. தவிர -- காங்கிரஸும், கம்யூனிஸ்ட் இரண்டும்தான்.

இவற்றில் காங்கிரஸ் குடும்பக் கட்சியாக மாறி விட்டது. இருப்பது கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுதான்.

ஆனால், அவர்களிடம் நிறைய குறைகள் உள்ளன. எனவே, பலம் பெற்ற எதிர் கட்சியாக இருக்க வேண்டுமென்றால், அது கட்சியின் செயல்பாடு பற்றி "சுய பரிசோதனை" செய்வது மிகவும் அவசியம்.

எனது குற்றச்சாட்டு தவறாகத் தோன்றலாம். எனது நிலைப்பாட்டை நியாயப் படுத்த ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவு கூறுகிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்ந்த நண்பர் என்னிடம் "எங்களின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. நீங்களும் வாருங்களேன்" என்றார்.

நானும் அங்கு எப்படி கலந்துரையாடல் நடைபெறுகிறது என அறிந்து கொள்ளும் ஆவலில் அவருடன் சென்றேன்.

(இது நடந்தது 30 வருஷங்களுக்கு முன்னர்)

மாவட்டத் தலைவர் சுமார் முப்பது நிமிடங்கள் பேசினார். அவர் பேசியதின் சாரம் "நாம் இனியும் ரஷ்யாவைப் பார்; சீனாவைப் பார் என்று பேசக்கூடாது. நாம் நமது நாட்டைப் பற்றி மட்டுமே பேசவேண்டும்..." ஆனால், அரைமணி நேரமும் ரஷ்யாவை ஒப்பிட்டே பேசினார்.

அவர் பேசி முடித்ததும் கூட்டத்தை முடித்து விட்டார்.

அப்போது எனக்கு ஒன்று புரிந்தது. அவர்களின் "பொலிட்பீரோ" எப்படி இயங்குகிறது என எனக்குத் தெரியாது; ஆனால், கீழ் மட்டத்தில் உள்ளவர்களிடம் தேசிய சிந்தனையும் இல்லை, தெளிவான சமுதாயப் பார்வையும் இல்லை.

தோழர் ஜீவானந்தம் போன்றவர்கள் ஆளுமை செலுத்திய கட்சி எப்படி மாறிவிட்டது என அறிந்து வேதனைப் பட்டேன்.

ஏழை, எளிய மக்களுடன் தொடர்பில் உள்ள கட்சி, மக்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்காமல், வெறுமனே தொழிலாளர் நலத்தில் மட்டுமே அக்கறை செலுத்தும் கட்சியாக மாறிவிட்டது.

பிரதான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய கட்சி, பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவருவது வருத்தத்திற்கு உரியது.

பி.ஜே.பி. கட்சியின் பின்னணியில் RSS உள்ளது. அதன் கோட்பாடுகள் அனைவரும் அறிந்த ஒன்று. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்பாடுகள் என்ன என்று நாம் அறிவோமா?

சொல்லப்போனால், RSS-ல் உள்ள தொண்டர்களிடம் இருக்கும் சமுதாய உணர்வு, கம்யூனிஸ்ட் தோழர்களிடம் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.

இன்னமும் கூட ஏழை, எளிய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் தங்களின் செயல்பாட்டை "சுய பரிசோதனை" செய்வது அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.

                         (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 14

கம்யூனிசத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று சொல்பவர்கள் மக்களிடம் சமுதாய உணர்வை ஊட்ட வேண்டும்; சமுதாய சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பி.ஜே.பி-யின் பின்னணியில் RSS உள்ளது. அது பலவிதமான சமூக சேவைகள் செய்கிறது. 

கம்யூனிசத்தின் வழி நடப்பவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காக என்ன சேவைகள் செய்கின்றன?

எனது இரண்டு அனுபவங்களைச் சொல்லிவிட்டு மீண்டும் க்ஷத்திரிய தர்மம் பற்றி பார்ப்போம்.

1. பல வருடங்களுக்கு முன் 'அறிவொளி இயக்கம்' ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆர்வமுடன் அதில் கலந்து கொண்டேன்.
(சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், அந்த இயக்கம் வெற்றிபெறவில்லை).

நாங்கள் வசித்துவந்த இடத்தின் அருகில் இருந்த குடிசை வாழ் மக்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன் மையக் கருத்து.

பாடம் எடுக்க கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு இடம் கொடுத்தார்கள். முதல் நாள் நிறைய பேர் வந்தார்கள். அடுத்த நாள் பெண்கள் மட்டும் வகுப்பறையில் இருக்க, ஆண்கள் வெளியில் இருந்து கேலி செய்தார்கள். விளைவு அடுத்த நாள் பெண்கள் வருகையும் குறைந்து விட்டது.

அந்தப் பகுதி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் சார்ந்தே இருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால், எல்லாரையும் கட்டாயப் படுத்தி வகுப்பில் கலந்து கொள்ள வற்புறுத்தியிருக்கலாம்.
அத்துடன், வகுப்புகள் நடப்பதை மேற்பார்வை செய்திருந்தாலும், இயக்கத்தில் தொய்வு இருந்திருக்காது. ஒரு நல்ல திட்டம் வீணாகிப் போனது.

பின் குறிப்பு:-
பாடங்கள் நடத்துவதற்கு என்னுடன் இன்னொரு இளைஞரும் வந்திருந்தார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். ஆக நாங்கள் இருவர் மட்டுமே பயிற்சி கொடுப்பவர்கள்.

நான் அவரிடம் "நான் துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறேன். இது ஒரு சேவை என நினைத்து இங்கு வருகிறேன். நீங்கள் வேலை எதுவும் பார்க்கவில்லை. வேலை தேடும் நீங்கள் எதனால் இங்கு வருகிறீர்கள்?"

அவர் சொன்ன பதில் "இங்கு இவர்களுக்குப் பாடம் எடுத்தால், அதற்காக ஒரு சான்றிதழ் (certificate) தருவார்கள். நான் வேலைக்காக interview-க்குப் போனால், அந்தச் சான்றிதழ் இருந்தால் நல்லதுதானே!"

இருவரும் பாடம் கற்பிக்கத்தான் போனோம். ஆனால் இருவரின் நோக்கமும் வேறு வேறாக இருந்தது.


                (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 15

2. எனக்குத் தெரிந்த சிலர் கந்து வட்டியில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
அவர்களை மீட்டெடுக்க விரும்பினேன். 

அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று ஒரு நிதி நிறுவனம் ஆரம்பித்தேன். நண்பர்கள் என்னை நம்பி பணம் கொடுத்தார்கள்.

'Diminishing Balance' முறையில் வட்டி வாங்கி நண்பர்களுக்கு பகிர்ந்தளித்தேன். நான் நினைத்ததைவிட நிறுவனம் நன்றாக நடந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நண்பரிடம் (அவருக்கு நிறுவனம் பற்றி நன்கு தெரியும்) "என்னால் களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாது; கந்து வட்டி நடத்துபவர்களின் பகையைச் சந்திக்க நேரிடும். தவிர இதைப் பெரியதாகவும் விரிவு படுத்த முடியாது. இது போன்ற நிறுவனத்தை கட்சியை ஆரம்பிக்கச் சொல்லுங்கள். எல்லா வகையிலும் நான் உதவுகிறேன். இதைச் செய்தால் தூத்துக்குடி நகரத்தில் சிறியஅளவில் தொழில் செய்பவர்களை கந்து வட்டி கொடுமையிலிருந்து காப்பாற்றலாம். கட்சி மூலமாக இதைச் செய்யும்போது 'வாராக்கடன்' பிரச்சினையும் வராது. தவிர கட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும்" என்றேன்.

அவர் "கட்சி இதிலெல்லாம் தலையிடாது" என்று சொல்லி விட்டார்.

(இப்போது மோடி அரசு "முத்ரா" திட்டம் என்ற பெயரில், இதுபோன்றதொரு திட்டத்தை வகுத்து சிறப்பாக நடத்தி வருகிறது)

பின்னர் மத்திய அரசு NBFC அமைப்பில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததால், தொடர்ந்து நிதி நிறுவனத்தை நடத்த முடியாமல், நிறுவனத்தை மூடி விட்டேன்.

நிதி நிறுவனம் நடத்திய போது, நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம்!

கூலி வேலை செய்பவர் அவர். எனக்கு நன்கு தெரிந்தவர்.

அவர் 1000 ரூபாய் கடனாகப் பெற்று 'வாரந்தோறும்' 
(சனிக்கிழமை) 100 ரூபாய் வட்டி செலுத்தி வந்தார். அவரிடம் எனது திட்டத்தைப் பற்றி சொன்னேன். அவருக்கு நான் சொன்னது எதுவும் புரியவில்லை; ஆனால், நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று சொன்னார்.

அவரிடம் 1000 ரூபாயைக் கொடுத்து "நீங்கள் வாங்கிய கடனை அடைத்துவிடுங்கள். வழக்கம்போல எனக்கு வாரந்தோறும் 100 ரூபாய் கொடுத்துவிடுங்கள். உங்களது கடனும் விரைவில் அடைந்துவிடும்" என்று சொன்னேன்.

முதல் மாதம் 300 ரூபாய் கட்டினார். இரண்டாவது மாதம் 500 ரூபாய் கட்டினார். மூன்றாவது மாதத்தில் அவரது கடன் முழுவதும் அடைபட்டு விட்டது. (மொத்தமாக அவர் கட்டியிருந்த வட்டி 40 ரூபாய்ககும் குறைவு) ஆனால் கடைசியாக இருந்த நிலுவைத் தொகையை கேட்டு வாங்க வேண்டியிருந்தது. அதற்காக அவரைக் கடிந்து கொண்டேன்.

நான் கடிந்து பேசியதைக் கேட்டவர் "ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசம், sir" என்று சொன்னார்.

ஏனென்று கேட்டதற்கு "எனக்குக் கடன் கொடுத்த கந்து வட்டிக்காரர் ரொம்ப நல்லவர். வட்டி மட்டும்தான் வாங்குவார்; அசலைத் திருப்பிக் கேட்கவே மாட்டார். நீங்கள் அசலையும் திரும்ப வாங்கிக் கொண்டீர்களே" என்றார்.

அவரது பதிலைக் கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை. 

இங்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதுதான் கோபம் வந்தது. அவர்களுக்குத் தொழிலாளர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. இருந்தும் பொருளாதாரம் பற்றி ஒரு சாதாரண புரிதலைக் கூட அறியவிடாமல் ..!?

கண்டனக் குரல் எழுப்ப சொல்லிக் கொடுக்கிறார்கள்; போராட சொல்லிக் கொடுக்கிறார்கள்; வேலை நிறுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், பொருளாதாரம் பற்றி ஒரு அடிப்படைப் புரிதலைக் கூட சொல்லிக்கொடுக்க மறந்து விட்டார்கள்.

                       (தொடரும்)




க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 16

இனி க்ஷத்திரிய தர்மம் குறித்து பார்ப்போம்.

கீதை மனிதர்களை 'பிராமணன், க்ஷத்திரியன், வைஸ்யன், சூத்திரன்' என நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிறது.

(மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன்: மனிதனின் பிறப்பிற்கும், அவனது வர்ணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அது அவனது குணத்தையும், மனோபாவத்தையும் பொறுத்தது)

இவர்களில் யார் யாரெல்லாம் க்ஷத்திரிய தர்மத்தை நன்கு கடைப்பிடிப்பார்கள் எனப் பார்ப்போம்.

பிராமணன்: இவர் செயலூக்கம் இன்றி ஒதுங்கி வாழ்பவர். மற்றவர்களுக்கு நல்வழியைக் காட்டக்கூடியவர். இவர் எந்த செயல் செய்தாலும், அது க்ஷத்திரிய தர்மத்திற்கு உட்பட்டதாகத்தான் இருக்கும்.

க்ஷத்திரியன்: இவரது இயல்பு 'எந்த நிலையிலும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதுதான்'. இவர் உணர்ச்சி மேலிட செயல் படுபவர். எனவே இவருக்குப் பெரியோரின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்.

வைஸ்யன்: இவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்ப்பது நல்லது.

ஒரு பிரிவினர் "self-centred type".
இன்னொரு பிரிவினர் "selfish type".

முதலாவது பிரிவினர் (self-centred) "தான், தன் குடும்பம்" என்று இருப்பவர்கள். பொதுவாழ்வில் ஈடுபட விரும்பினாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக ஒதுங்கியே இருப்பார்கள். தவறான வழியில் பணம் சேர்க்க விரும்ப மாட்டார்கள். யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள். இவர்கள் மனதளவில் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள்.

இரண்டாவது பிரிவினர்: இவர்களும் (selfish) "தான், தன் குடும்பம்" என்று இருப்பவர்கள்தான். இவர்களிடம் க்ஷத்திரிய தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் பேராசை பிடித்தவர்கள். தான் நன்றாக இருப்பதற்கு, அடுத்தவரைப் கெடுக்க வேண்டுமென்றால் தயங்கவே மாட்டார்கள்.

இவர்கள் அரசியலுக்கு வந்தால், நாட்டை சீரழித்து விடுவார்கள்.

சூத்திரன்: இவர்களிடம் சோம்பல் மிகுந்து காணப்படும். பொதுவாழ்வில் நேரடியாக இறங்க மாட்டார்கள். ஆனாலும், ஒரு க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவனைப் பின்பற்றினால், இவர்களும் க்ஷத்திரிய தர்மம் என்றால் என்ன என்று அறியாமலே அதன்வழி நடக்கலாம்.

                       (தொடரும்)


க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 17

'க்ஷத்திரிய தர்மத்தை' கடைப்பிடிக்கும் மனிதர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்:-
1. தனியாக செயல்படுபவர்கள்
2. குழுவாக செயல்படுபவர்கள்
3. அரசியலில் இறங்கி வேலை செய்பவர்கள்

இவர்களில் தனி ஆளாக ஒரு
மனிதன் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்து பொது சேவையில் இறங்கினால், பலவிதமான அதிர்ச்சிகளைச் சந்திக்க நேரிடும். அவற்றைக் கண்டு துவண்டு விடக்கூடாது.

உண்மையில் அவை அவனை மறைமுகமாக 'அகத்தாய்வு' நோக்கி தள்ளிவிடும். பண்பு நிறைந்த மனிதனாக மாற்றுவதற்கு அவை உதவி செய்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

'குழுவாக' செயல்படும் போது இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது.

ஒரு மனிதன் அரசியல்வாதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் பொழுது, அவன் "க்ஷத்திரிய தர்மத்தை" கடைப்பிடிக்கிறானா இல்லையா என்று நாம்தான் கண்டுகொள்ள வேண்டும்.
அவன் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வில்லை எனத் தெரிந்தால், அவனை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தத் தயங்கக் கூடாது. அது நாட்டிற்கு நாம் செய்யும் நன்மையாகும்.

இல்லையெனில், அதுவே நாம் நம் சந்ததியினருக்கு செய்யும் துரோகம் ஆகும்.

                       (முற்றும்)


Thursday, 1 December 2022

உண்மை கசக்கும்

உண்மை கசக்கும்

"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு" .. குறள் 190
***************************

"நோய்நாடி நோய் முதல் நாடி.." என்கிறார் வள்ளுவர்.

ஒரு நோய் வந்தால், அதற்கு மருந்து கொடுத்து நோயை குணப்படுத்துகிறோம். அது மட்டும் போதுமா?

அந்த நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்து அது மீண்டும் வராமல் தடுக்க வேண்டாமா?

ஒருமுறை RSS நண்பரிடம் பேசும்போது "பகுத்தறிவு என்ற பெயரில் 'சனாதன தர்மத்தையும், வர்ணாஸ்ரம தர்மத்தையும்' தவறாகச் சித்தரித்து பிரச்சாரம் செய்கிறார்களே? அதைத் தடுக்க வேண்டாமா?" என்றேன்.

அவர் கூறிய பதில் .. "நாங்கள் மதத்தில் தலையிடுவதில்லை". எனக்கு இந்தப் பதிலைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது.

சமீபத்தில் BJP கட்சியைச் சார்ந்த நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் BJP கட்சியின் சார்பாகப் போட்டியிட்டவர். அவரிடம் "சனாதன தர்மம் என்றால் என்ன? வர்ணாஸ்ரம தர்மம் என்றால் என்ன?" என்று கேட்டேன். அவர் தெரியாது எனக் கூறினார்.

"இந்துத்வா" கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம் என்று கூறுகிறோம்; ஆனால், சனாதன தர்மம் பற்றியும், வர்ணாஸ்ரம தர்மம் பற்றியும் எதுவும் தெரியாது என்றால் என்னவென்று சொல்வது?

BJP தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறது. ஆனால், பல வருடங்களாக RSS இங்கு இருப்பது உண்மைதானே!?

பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்துவரும் தவறான பிரச்சாரத்தை, 
முறியடித்திருக்க வேண்டாமா?

"சனாதன தர்மம், வர்ணாஸ்ரம தர்மம்" இரண்டுமே இந்து மதத்தில் உள்ள வார்த்தைகள்தான். ஆனால், இந்த இரண்டு வார்த்தைகளும் கூறும் மெய்ப்பொருள் மதம் சம்பந்தப்பட்டதா அல்லது ஆன்மிகம் சம்பந்தப்பட்டதா?

                    (தொடரும்)

உண்மை கசக்கும்

இந்தியாவின் உயிர்நாடி "ஆன்மிகம்". ஆன்மிகம் இல்லாத இந்தியாவை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. இந்த உண்மையை உணராத எந்த அரசியல் கட்சியும் இங்கு வேரூன்றி வளர முடியாது.

எல்லா மத நூல்களிலும் ஆன்மிகக் கருத்துக்கள் உள்ளன. ஆனால், நமது நாட்டில் அவை மிக மிக அதிகமாக உள்ளன. காரணம் இங்கு பல சமயங்களும், பல மொழிகளும் உள்ளன; எனவே நம்மால் நிறைய ஆன்மிகக் கருத்துக்களை இங்கு காண முடியும்.

சமய நூல்களில் மட்டுமல்ல; அவற்றிற்கு அப்பாலும் ஆன்மிகக் கருத்துக்கள் நிறைய உள்ளன.

ஆன்மிகக் கருத்துக்கள் என்று எவற்றைச் சொல்ல முடியும்? எவையெல்லாம் மனிதனிடம் நல்ல சிந்தனைகளை வளர்க்கின்றனவோ, எவையெல்லாம் மனிதனின் பண்புகளைச் செம்மைப் படுத்த உதவுகின்றனவோ, அவையெல்லாம் ஆன்மிகக் கருத்துக்களே.

இவற்றைச் சொல்பவன் இறை நம்பிக்கை உள்ளவனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அவன் நாத்திகனாகவும் இருக்கலாம்.

பெரும்பாலான சமய நூல்களில் பக்தி, ஆன்மிகம் இரண்டும் கலந்திருப்பதால், நம்மால் பிரித்தறிய முடியவில்லை. நமக்கு எது தேவை என்பதும் தெரிவதில்லை.

ஆன்மிகம் பற்றித் தெளிவானப் புரிதல் உள்ளவனே, ஜனநாயக நாட்டில் சிறந்த அரசியல்வாதியாக செயல்பட முடியும். அதனால்தான் நமக்குத் தேவை "ஆன்மிக அரசியல்" என்கிறோம்.

அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரும் ஆன்மிகம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்று சொல்ல முடியுமா?

                        (தொடரும்)

உண்மை கசக்கும்

இந்தத் தொடர் மதம் சம்பந்தப்பட்டது அல்ல; ஆன்மிகம் சம்பந்தப்பட்டதா என்றால், அதுவும் அல்ல. இது மனித நேயம் சம்பந்தப் பட்டது.

ஆன்மிகம் என்பது ஒரு வாழ்வியல் தத்துவம். அந்தத் தத்துவங்களை மத நம்பிக்கை உள்ளவன், மத நம்பிக்கை இல்லாதவன் என யார் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம்.

அவற்றிற்கான விதிகள் ..
1. அவை மனித நேயத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
2. எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்.
3. எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
4. எல்லா மதத்தினரும் கடைப்பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சில விதிகள் மனிதனின் பண்பு (மனோபாவம்) எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பன.
(உ.ம்.) யாதும் ஊரே, யாவரும் கேளிர் .. கணியன் பூங்குன்றனார்.

சில விதிகள் மனிதனின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பன.
(உ.ம்.) It is better to wear out than to rust out .. Richard Cumberland.
(துருப்பிடித்துப் போவதை விட தேய்ந்து போவது மேல்)

                         (தொடரும்)

உண்மை கசக்கும்

இந்திய சமய நூல்கள் இறைவனை/இறைசக்தியை உணர நான்கு மார்க்கங்களை வலியுறுத்துகின்றன.

இவற்றில் கர்ம மார்க்கம் மற்றும் தியான மார்க்கத்தில் ஈடுபடுபவர்கள், பக்தி மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் கவனம் செலுத்தாமல் கூட தங்கள் மார்க்கத்தைப் பின்பற்ற முடியும்.

பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களும், ஞான மார்க்கத்தில் ஈடுபடுபவர்களும் இறைவனை அல்லது இறைசக்தியை நினைக்காமல் இருக்க முடியாது. அதனால்தான் பக்தி எது, ஆன்மிகம் எது என்பதில் குழப்பங்கள் வந்து விடுகின்றன.

'பக்தி மலர்' என்பார்கள்; அதில் ஆன்மிகக் கருத்துக்கள் இடம் பெறும். 'ஆன்மிக மலரில்' பக்தி சம்பந்தமானப் பதிவுகள் இருக்கும்.

இவர்களில் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் இறைவனைப் போற்றிப் பாடுதல், இறை வழிபாடு, சமயம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றில் அக்கறை காட்டுவார்கள்.

ஞான மார்க்கத்தில் ஈடுபடுபவர்கள் அகத்தாய்வில் ஈடுபட்டு ஆன்மிகக் கருத்துக்களை உள்வாங்கி வாழ்வியல் நெறிகளைப் புரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

சமய நூல்களில் உள்ள சில கருத்துக்கள்/பாடல்கள் பக்தியை வலியுறுத்தும், சில
வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும், சில நம்மை சிந்திக்கத் தூண்டும் என மூன்று விதமாகப் பிரித்தறியலாம்.

வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும் தத்துவங்களை ஆன்மிகம் என்ற பெயரில் அழைக்கிறோம்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றால், அது ஆன்மிகக் கருத்துதான். ஆனால், ஆன்மிக நெறிகளைக் கடைப்பிடிக்காத மனிதன் இதைச் சொல்லலாமா?

                     (தொடரும்)


உண்மை கசக்கும்            

ஆன்மிகம் சொல்லும் வாழ்வியல் நெறிகளைத் தெரிந்து கொண்ட அனைவரையும் 'ஆன்மிகவாதிகள்' என்று சொல்ல முடியுமா?உண்மையான ஆன்மிகவாதி எப்படி நடந்து கொள்வான்?

அவனிடம் இருக்கும் சில முக்கிய பண்புகளைப் பார்ப்போம்:-
1. அவனது அஹங்காரம் நலிவடைந்து காணப்படும்.
2. அவன் உணர்ச்சி வசப்பட மாட்டான்.
3. மத உணர்வு இருக்கும்; ஆனால், மதவெறி இருக்காது.
4. மனிதநேயம் மிகுந்து காணப்படும்; எனவே அவனது செயல் கருணையுடன் கூடியதாக இருக்கும்.
5. அவனது வாழ்க்கை "அகழ்வாரைத் தாங்கும் நிலம்" போன்று இருக்கும்.
6. அவனுக்கு கடந்த காலம், எதிர் காலம் இரண்டும் கிடையாது; இருப்பது நிகழ் காலம் மட்டுமே.
7. தன்னை ஒரு 'கர்த்தா' என்று நினைத்தவன், இப்பொழுது தான் ஒரு 'கருவி' மட்டுமே என நினைப்பான்.
8. மனதில் எந்தவித சலனமும், சஞ்சலமும் இருக்காது.

இத்தகைய மனிதர்களை "குணமென்னும் குன்றேறி நின்றார்" என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

வாழ்வியல் நெறிகளைத் தெரிந்து கொண்ட மற்றவர்கள்!?

                    (தொடரும்)


உண்மை கசக்கும்            

வாழ்வியல் நெறிகளைத் தெரிந்து கொண்ட மனிதன் சத்துவ குணம் கொண்டவனாக இருந்தால், அகத்தாய்வில் ஈடுபடுவான்.
வாழ்வியல் தத்துவங்களைப் புரிந்து கொள்வதில் ஆரம்பத்தில் குழப்பங்கள் இருந்தாலும், தயக்கமின்றி தனது முயற்சியைக் கைவிட மாட்டான். முடிவில் வெற்றியும் பெறுவான்.

ஆனால், ரஜோ குணம் கொண்ட மனிதன் வாழ்வியல் தத்துவங்களைப் புரிந்து கொள்வதில் பல தடங்கல்களைச் சந்திக்க நேரிடும். அவற்றின் உண்மைத் தன்மைகளை அறியுமுன் நிறைய கசப்பான அனுபவங்களை எதிர்கொள்ள நேரிடும்.

வாழ்வியல் தத்துவங்களைத் தெரிந்து கொண்டவன், அவற்றின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அவனுக்கு இரண்டு விதமான 'அறிதல்' தேவைப்படும்.

முதலில் அவன் புத்தியின் துணைகொண்டு உண்மைகளை அறிந்து கொள்கிறான். பிறகு அவன் அவற்றை செயல்படுத்தி விளைவுகளை அனுபவிக்க வேண்டும். அனுபவங்களை எதிர்கொள்ளும் போது, உண்மையான அறிதல் உண்டாகும்.

எனவே, அவனைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பது "அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறிய வேண்டிய" ஒன்று.

அந்தப் பாதையில் சோர்வடைந்து திரும்பிவிட்டால் அவனது வாழ்க்கை கேலிக்குறியதாக மாறிவிடும்.

இனி கசப்பான உண்மைகளைப் பார்ப்போம்.

                      (தொடரும்)

உண்மை கசக்கும்       

நம்மை யாராவது ஏமாற்றினால், நீதி மன்றத்தை நாடி நியாயம் கேட்க முடியும்.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து நமது வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நம்மை ஏமாற்றினால், நம்மால் என்ன செய்ய முடியும்? அதற்காக அடுத்த தேர்தல் வரும்வரை புலம்பிக் கொண்டு இருக்க வேண்டுமா?

இந்த ஏமாற்று வேலை நடக்காமல், அதனைத் தவிர்க்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்க வேண்டாமா?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு, அவற்றைப் பின்பற்றினால் மிக எளிதாக இத்தகைய ஏமாற்று வேலையைத் தடுத்து விடலாம்.

விதிமுறைகள்:-
1. ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஆட்சியில் அமர்ந்து தான் செய்ய விரும்பும் திட்டங்களை இரண்டு பகுதிகளாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
2. பகுதி 1-ல் 'ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற இருக்கும் வாக்குறுதிகள்' இடம் பெற வேண்டும். அதில் எந்தவித நிபந்தனைகளும் இருக்கக்கூடாது. 
(உ.ம்.) மத்திய அரசு ஒத்துழைத்தால், மாதந்தோறும் 25 கிலோ அரிசி எல்லாக் குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப் படும்.
இதில் 'மத்திய அரசு ஒத்துழைத்தால்' என்ற நிபந்தனை இடம்பெறக் கூடாது.
3. பகுதி 2-ல் எதிர்காலத்தில் செய்ய விரும்பும் திட்டங்கள் இடம்பெற வேண்டும்.
4. பகுதி 1-ஐ ஒரு பிரமாணப் பத்திரமாக எழுதி கட்சியின் தலைவர் கையொப்பமிட்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே, அந்த வாக்குறுதிகளைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் புதிய வாக்குறுதிகளை, தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பிரச்சாரம் செய்யக்கூடாது.
5. குறிப்பிட்ட கட்சி ஆட்சியில் அமர்ந்து 15 நாட்களுக்குள் பகுதி 1-ல் குறிப்பிடப் பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
6. வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், தேர்தல் ஆணையத்தால் அந்த ஆட்சி கலைக்கப் படும்.
7. தேர்தலில் அந்தக் கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற அனைவரும் அவர்களது பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
8. குறிப்பிட்ட கட்சி அடுத்து வரும் பொது தேர்தலில் பங்கேற்க முடியாதபடி தடை செய்யப் படும்.
9. உறுப்பினர்களைப் பதவியிலிருந்து நீக்கியபின், அந்தந்தத் தொகுதிகளில் தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்திருந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுவார்கள்.
10. அதன்பின் புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும்.
11. மேலே சொல்லப்பட்ட அனைத்து விதிகளும் புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சிக்கும் பொருந்தும்.

இந்த விதிகளைத் தேர்தல் ஆணையம் அமுல்படுத்தினால் நன்றாக இருக்கும். இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என எண்ணுகிறேன். ஏனெனில், தேர்தலை நடத்தும் பொறுப்பு ஆணையத்திடம்தான் உள்ளது. அதனால் தேவையான விதிகளை அது அமைத்துக் 
கொள்ளலாம்தானே!?

                        (தொடரும்)


உண்மை கசக்கும்      
  
"இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட.."
.. பரிசுத்த வேதாகமம் -எஸ்தரின் சரித்திரம் -- அதிகாரம் 1.

நமது தேசத்தைதான் 'இந்து தேசம்' என வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ளார்களா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கட்டும்.

நமது தேசத்தில் யாரையெல்லாம் "இந்துக்கள்" என அழைக்கலாம் என்பதிலேயே நிறைய குழப்பங்கள் உள்ளனவே!?

இந்தியாவில் தோன்றிய மதங்களைச் சார்ந்த அனைவரும் "இந்துக்களே" என்பது எனது கருத்து. இதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்களா என எனக்குத் தெரியாது.

ஆனால் ஆதீனம் உட்பட பலரும் "நாங்கள் சைவர்கள், எங்கள் சமயம் சைவம்", ஆனால் நாங்கள் இந்துக்கள் இல்லை எனக் கூறுகிறார்கள்.

ஒருபுறம் இது "இந்து தேசம்" எனப் பலரும் அறைகூவல் விடுகிறார்கள்; இன்னொரு புறம் யாரெல்லாம் "இந்துக்கள்" என்பதே அதிகார பூர்வமாக வரையறுக்கப்படாமல் இருக்கிறது.

இந்தக் குழப்பம் நீடித்தால், இந்துக்களிடம் ஒற்றுமை எங்கிருந்து வரும்?

இந்தப் பிரச்சினைக்கு யார் முடிவெடுக்க வேண்டும்? மதத் தலைவர்களா, அரசாங்கமா அல்லது இருவருமா?

இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயம் என எண்ணுகிறேன்.

                 (தொடரும்)


உண்மை கசக்கும்        

வெளிநாட்டிலிருந்து வந்த முகமதியர்களும், ஆங்கிலேயர்களும் நம்மை பல காலம் ஆட்சி செய்தார்கள். அவர்களால் பல இன்னல்களையும் அனுபவித்தோம். பலரையும் மதம் மாற்றச் செய்தனர். அதற்காக அவர்கள் யாரையும் நாம் வெறுக்கவில்லை.

ஆனால், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் ஏன் வெறுக்கிறோம்? எதற்காக இந்த வன்மம்? இந்த வெறுப்பு JNU-வரை சென்று விட்டது.

நான் பிராமணன் அல்ல. சொல்லப்போனால் அவர்களால் சில பாதிப்புகளையும் சந்தித்திருக்கிறேன். அதன் காரணமாக ஒட்டுமொத்த பிராமணர்களையும் வெறுத்து ஒதுக்க வேண்டுமென்றால், என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் மட்டும்தான் தவறு செய்தார்களா? பிற சமூகத்தினர் தவறுகளே செய்ததில்லையா!?

பிராமணர்கள் மற்றவர்களுக்கு தீங்கிழைத்து எவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என்பது நமக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால், நாட்டிலுள்ள அரசியல் கட்சி தலைவர்களில் பலர் எத்தனைதலைமுறைக்கு சொத்து சேர்த்தார்கள்/சேர்க்கிறார்கள் என்பது நமக்கு மட்டுமல்ல, அவர்களுக்கேத் தெரியாதே!?
உண்மையில் நமக்கு அவர்கள்மீது அல்லவா வெறுப்பு வரவேண்டும்!?

சிந்தித்துப் பார்த்தால் அதற்கு வேறு ஒரு காரணம் இருப்பதாகத் தோன்றுகிறது. நமது நாட்டில் பலரும் பல காரணங்களால் இந்து மதத்தை அழிக்கத் துடிக்கின்றனர். பிராமண சமூகம்தான் அதற்குத் தடையாக உள்ளது என எண்ணுகிறார்களோ என்னவோ? அப்படி நினைத்தால் அதில் உண்மை இல்லாமல் இல்லை.

"நீங்கள் விலக்கிய கல்லே மூலைக் கல்லாயிற்று" என்று சொல்கிறது பைபிள்.
இந்து மதம் பல தளங்களுடன் கூடிய மிகப்பெரிய கட்டிடம். அதன் அஸ்திவாரம் மிகவும் ஆழமானது. அந்த அஸ்திவாரத்தின் "மூலைக்கல்லாக" இருப்பவர்களில் பிராமணர்களும் இடம் பெற்றுள்ளனர் என்றால் அது மிகையாகாது. நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அதிகமாகக் கட்டிக் காப்பது அவர்களே! அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளன.

"மூலைக்கல்லை" அகற்றி விட்டால், இந்து மதத்தை அழிப்பது சுலபம் என சிலர் நினைக்கலாம்; அந்த சிலருக்கு உதவினால் நமக்கு பல ஆதாயங்கள் கிடைக்கலாம் எனப் பலர் நினைக்கலாம். 

அதற்கு நாம் துணை போக வேண்டுமா?

                        (தொடரும்)


உண்மை கசக்கும்

ஒரு நண்பருக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல்:

"பிள்ளைகளை நினைத்தால் பயமாக இருக்கிறது"

"எதற்காகப் பயப்படுகிறீர்கள்?"

"நமது நாட்டின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது"

"அது அவர்கள் தவறா அல்லது நமது தவாறா?"

நண்பர் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த உரையாடல் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டன. இப்போது நிலைமை இன்னமும் மோசமாகி விட்டது.

சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்; அவர்களின் வாழ்க்கை நெறி வளர்வதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்?

நன்னெறிகளைப் பொறுத்தவரை பிள்ளைகள் பெற்றோரைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பெற்றோர் சொல்வதைத் கேட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும்.

'ஆசை வசப்பட்டு' வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடக்கும் போட்டியில், நன்னெறி பற்றிய கவலை காணாமல் போய்விட்டது.

பள்ளிக்கூடங்களை எடுத்துக் கொண்டால், ஏதோ திட்டம் போட்டு செயல்படுவதைப் போன்று நன்னெறிகளைப் போதிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டார்கள். 

திரைப்படப்படங்களில் நன்னெறிகளை நினைவூட்டும் பாடல்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது அதுவும் நின்று போயிற்று.

இதற்கு தீர்வுதான் என்ன?
சமயத் தலைவர்கள் கிராமங்கள் தோறும் ஆரம்பப் பள்ளிகளை அமைக்க வேண்டும். அதில் அடிப்படைக் கல்வியைப் போதிக்க வேண்டும்.

தாய்மொழிக் கல்வி, கணக்கு, நன்னெறியை வளர்க்கும் பாடங்கள் ஆகிய இவை மூன்றையும் கற்றுக் கொடுத்தாலே போதும்.

வெறுமனே மடங்களின் சடங்கு, சம்பிரதாயங்களில் மட்டும் நேரத்தை செலவிடாமல், குழந்தைகள் மூலம் நாட்டின் கலாச்சார மேன்மையைத் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஒருசில இடங்களில் இத்தகையப் பள்ளிகள் உள்ளன. அவை எல்லாக் கிராமங்களிலும் தொடங்கப் பட வேண்டும். செய்வார்களா?

                    (தொடரும்)

உண்மை கசக்கும்

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சால மிகுத்துப் பெயின்" 
.. குறள் 475
(மென்மையான மயிலின் தோகையே ஆயினும் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும்)

ஒரு சில நாடுகளின் மக்கள்தொகை அடர்த்தி .. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு என்பது குறித்து ஒரு பட்டியல் இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.

சீனா 146.00    
நேபாளம் 200.72
சுவிட்சர்லாந்து 207.98
ஜெர்மனி. 232.80
பாகிஸ்த்தான் 276.00
வியட்நாம். 290.48
இலங்கை 332.31
‌ஜப்பான் 333.38
பிலிப்பைன்ஸ் 365.00
பெல்ஜியம் 375.73
இந்தியா 473.42
இஸ்ரேல் 421.00
நெதர்லாந்து 422.00
தென் கொரியா 516.72
இந்தோனேசியா 600.00
வங்காளதேசம் 1179.00

இதற்கான கணக்கீடு சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல; ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதும் அல்ல.

இருந்தாலும் இந்தப் பட்டியல் நமக்கு சில புரிதல்களை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி 1920-ல் 473.42 எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இது இந்தியாவின் சராசரியாகும். பெரு நகரங்களை மட்டும் கணக்கிலெடுத்தால், இதன் அடர்த்தி மிக அதிகமாக இருக்கும்.

எந்த அளவுக்கு மக்கள்தொகை அடர்த்தி இருந்தால் நாட்டிற்கு நல்லது என வல்லுநர்கள் கூடி முடிவு செய்தால் நல்லது என நினைக்கிறேன்.

நகரங்களில் அதன் அடர்த்தி அதிகமாக இருந்தால், அதை குறைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அத்துடன் நமது நாட்டிற்குள் அனுமதியின்றி அகதிகளாக நுழைபவர்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது பற்றியும் அரசியல் தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும். இல்லையெனில், ஐரோப்பிய நாடுகள் இப்போது சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்காலத்தில் நமது நாடும் சந்திக்க நேரிடலாம்.

                     (தொடரும்)


உண்மை கசக்கும்

(சமத்துவம் - 1)

'தனி மனிதனில்' தொடங்கி, மனிதனது பார்வை விரிந்து கொண்டே போகிறது.

தனி மனிதன், குடும்பம், சமூகம், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம், உலகம் என விரிந்து கொண்டே போகிறது.

உலகம் முழுவதையும் "வாசுதேவக் குடும்பம்" எனக் கூறிக் கொள்கிறோம். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்றும் பெருமையுடன் கூவுகிறோம்.

ஆனால், உண்மை நிலவரம் என்ன?

"வாசுதேவக் குடும்பம்" என்பது எங்கிருந்து ஆரம்பமாகிறது?

தனிமனிதனிடமிருந்தா? அல்லது சமூகத்திலிருந்தா?

தனி மனிதனிடம் இருக்க வேண்டியது சமுதாய உணர்வு. "வாசுதேவக் குடும்பத்தின்" ஆரம்பப் புள்ளி "சமூகம்". 

தனி மனிதன் குடும்பத்தை விட்டு வெளியே வந்து, 'சமூகத்தில்' காலை வைக்கும்போது 'சமுதாய உணர்வு' வேலை செய்கிறதா?

                        (தொடரும்)


உண்மை கசக்கும்

(சமத்துவம் - 2)


கிறிஸ்தவ மதத்திலும், முஸ்லிம் மதத்திலும் உள்ள மக்களிடம் இருக்கும் சமுதாய உணர்வு இந்து மதத்தைச் சார்ந்த மக்களிடம் இருக்கிறதா எனக் கேட்டால், பதில் கிடைப்பது கடினமாக உள்ளது.

அதற்கான காரணத்தைத் தேடியபோது ஒரு விடை கிடைத்தது.

முஸ்லிம் மக்களிடம் மத ரீதியாக சில பிரிவுகள் உள்ளன. ஆனால், சாதி ரீதியாக எந்தப் பிரிவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மசூதிக்குள் நுழையும் அனைவரும் 'அல்லாவின் பிள்ளைகள்'; வேறு எந்த வித்தியாசமும் கிடையாது. அப்படியே இருந்தாலும், அவர்கள் கடைப்பிடிக்கும் சமத்துவத்தை அது பெரிதாகப் பாதிப்பதில்லை.

கிறிஸ்தவ மக்களிடம் சாதிப் பாகுபாடுகள் உள்ளன. இருப்பினும் அவைகள் அவர்கள் கடைப்பிடிக்கும் சமுதாய ஒற்றுமையைப் பெரிதாகப் பாதிப்பதில்லை.

ஆனால், இந்து மக்களிடம்
இந்த சமுதாய ஒற்றுமை இருக்கிறதா?

                        (தொடரும்)


உண்மை கசக்கும்

(சமத்துவம் - 3)


எனது நண்பர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். அவரும் நானும் பலவற்றையும் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோம். ஒரு சமயம் சமத்துவம் பற்றிப் பேசியதில்
சில விஷயங்களைப் புரிந்து கொண்டேன்.

அவர்கள் எல்லோரும் இந்து மதத்தில் இருந்து அங்கு சென்றவர்கள்தான். சாதி ரீதியானப் பிரிவினை அங்கு இருந்தாலும், தான் ஒரு கிறிஸ்து என்பதை அவர்கள் மறப்பதில்லை; தேவாலயம் அல்லது திருச்சபை எதுவாக இருந்தாலும், அவை வகுத்த சட்ட திட்டங்களைப் பொறுப்புடன் பின்பற்றுகிறார்கள்!?

ஆனால், இந்துக்கள்?
வீட்டிற்குள் இருந்த சாதி உணர்வு, வீதிக்கு வந்தவுடன் வெறியாக மாறுவது ஏன்?

சகோதரராய் உடனிருந்து சமத்துவங்கள் பேசியவர் சவமாகிப் போனவுடன், சாதிவெறி வருவது ஏன்?
அதன் காரணமாகத்தானே சாதிக்கு ஒன்றாகத் தனியிடங்கள் தோன்றின!?
இந்த வெறிதானே இங்கிருந்த மனிதர்களை மதம் மாறத் தூண்டியது?

இந்த இழிநிலையை எப்படி மாற்றுவது? அதற்கான வழி என்ன?

                    (தொடரும்)


உண்மை கசக்கும்

(சமத்துவம் 4)

சமத்துவம் என்றால் என்ன? இந்த வார்த்தைக்குப் பலவிதமான விளக்கங்கள் உண்டு.

சுருக்கமாகச் சொன்னால் "பொதுவெளியில் அனைவரையும் சகோதர பாவத்துடன் நேசித்தல்" எனச் சொல்லலாம். குறைந்த பட்சம், நேசிக்க முடியாவிட்டாலும் மற்றவர்களை வெறுக்காமலாவது இருக்க வேண்டும் எனவும் பொருள் கொள்ளலாம்.

பக்தியோடு சமத்துவ உணர்வுகளையும் வளர்ப்பதற்காகத்தான் எல்லா இடங்களிலும் ஆலயங்களைக் கட்டிவைத்தார்கள். 

ஆனால் "தீண்டாமை", "சாதி உணர்வு" போன்ற பெருவியாதிகள் உருவாகி காலப்போக்கில் சமத்துவ உணர்வே காணாமல் போய்விட்டது.

"ஊர்கூடி தேர் இழுப்போம்" என்பது பழமொழி. இதுகூட மக்களிடம் "சமத்துவ" உணர்வை உண்டுபண்ணுவதற்கான ஏற்பாடுதான்.

தேர் அதுவாக நகர்வலம் வரமுடியாது. அதனால்தான் எல்லா மக்களும் சேர்ந்து வடம் பிடித்து இழுத்துச் செல்கிறார்கள். அப்போது "தீண்டாமை" என்ற உணர்வு தற்காலிகமாக மறைந்து போகிறது.

நம்மிடம் இன்னுமொரு 'தேர்' உள்ளது. இப்போது நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வருங்காலத்தில் அதை நகர்த்த முடியாத நிலை வரலாம். அதை நாம் அறிவோமா?

                      (தொடரும்)


உண்மை கசக்கும்

(சமத்துவம் - 5)

"நகர்த்த முடியாத நிலை வரலாம்" என சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை எழுதும்போது எனக்கு பழைய
சம்பவம் நினைவிற்கு வந்தது. அந்த சம்பவம் 45 வருடங்களுக்கு முன்னர் நடந்தது.

அப்போது நாங்கள் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்குக் குடியிருந்தோம். கீழ்வீட்டில்
வீட்டின் உரிமையாளர் குடியிருந்தார்.

ஒருநாள் வீட்டின் உரிமையாளர் இறந்து விட்டார். அவரது உடலை நகர்த்தியவர்கள் (சுமந்து சென்றவர்கள்) ..
1. அவரது மகன்
2. அவரது சம்பந்தி
3. அவரது (ஒரே) நண்பர்
4. நான்

அப்போது நான் ஒரு ஆஸ்த்மா நோயாளியாக இருந்தேன். வேறுவழியின்றி கடவுள் மேல் பாரத்தை இறக்கி வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கிச் சென்றேன். மாற்றுவதற்கு வேறு யாரும் இல்லை.

அவர் அந்த இடத்தில் பல வருடங்களாக வசித்து வந்தவர். அவர் மோசமான மனிதராகவே இருக்கட்டும்; தூக்குவதற்குக் கூட ஆள் இல்லையென்றபோதும் அங்குள்ள யாரும் தோள் கொடுக்க முன்வரவில்லை. சமத்துவம் எங்கே போனது?

அவர் இந்துவாக இறக்காமல், ஒரு கிருஸ்தவராக அல்லது ஒரு முஸ்லீமாக இறந்திருந்தால், அங்கு சமத்துவம்தான் முன் நிற்கும்; அவர் மேலுள்ள வெறுப்பு முன் நிற்காது.

அவர்களால் கடைப்பிடிக்கப் படும் 'சமத்துவ மனப்பான்மை', இந்துக்களிடம் ஏன் இல்லை?

மக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுவான அமைப்பு எதுவும் இல்லாததுதான் இதற்கான காரணம் என எண்ணுகிறேன்.

இந்தநிலை நீடித்தால், சரக்குகளை இடமாற்றம் செய்ய 'packers and movers'-ஐத் தேடுவது போல், நகர முடியாதத் தேரை நகர்த்துவதற்கு 'packers and REmovers' என யாராவது இருக்கிறார்களா எனத் தேட வேண்டிய நிலை வரலாம்!?

                  (தொடரும்)


உண்மை கசக்கும்

(சமத்துவம் - 6)

நமது நாட்டில் துறைசார்ந்த வல்லுநர்களுக்கு பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு துறையிலும் நிறைய வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து (ஜனநாயக நாட்டில்) வழி நடத்துவது 'அரசியல்வாதியின்' வேலை.

பிரதம மந்திரி முதற்கொண்டு 'வார்டு' கவுன்சிலர் வரை, ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் எல்லைக்கு உட்பட்ட மனிதர்களிடம் "சமத்துவ குணத்தை" வளர்க்க வேண்டியது முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.

ஆனால், இங்குள்ள பல அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு வழியில் மக்களைப் பிரிப்பதிலேயே குறியாக உள்ளனர். இதனை எப்படித் தடுப்பது?

இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது இளைஞர்களால் மட்டுமே முடியும். தனி ஒரு இளைஞன் பாடுபட்டால் போதாது. அவனைச் சுற்றியுள்ள இளைஞர்கள் ஒன்றுகூட வேண்டும். "தனி மரம் தோப்பாகாது" என்பார்கள்; அது உண்மைதானே!

ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் ஒன்றுகூடினால், இது நடக்கக் கூடிய காரியம்தான். அவர்களுக்குத் தேவை 'அனுபவத்தால் முதிர்ந்த பெரியவர்களின் வழிகாட்டுதல்' மட்டுமே!?

                        (தொடரும்)

உண்மை கசக்கும்

(சமத்துவம் - 7)

இளைஞர்கள் ஒன்றிணைந்தால் 'சமத்துவம்' வந்துவிடுமா என்ற சந்தேகம் வரலாம். இளைஞர்கள் ஒன்றாக இணைந்தால் பலவித அதிசயங்களை அவர்களால் நடத்திக் காட்ட முடியும்.

இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுகிறேன்.

மாணவர்களிடையே ஒரு பிரிவினை இருந்ததை உணர்ந்த நான், அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து "youth" 
(Youngsters' Organised Union of Tuticorin Harbour) என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். அவர்களும் அதைச் சிறப்பாக நடத்தி வந்தார்கள்.

அந்த சமயத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் சார்பாக ஒரு சங்கத்தைப் புதிதாக ஆரம்பித்தார்கள். அதில் சேர அழைத்தபோது, ஒரு மாணவன் "நான் youth கமிட்டியில் இருக்கிறேன். என்னால் சாதிச் சங்கத்தில் சேர முடியாது" என சொல்லி விட்டான். "Youth" என்ற அமைப்பு இல்லாதிருந்தால், அவன் விரும்பாவிட்டால் கூட, அவனை மிக எளிதாகச் சங்கத்தில் சேர்த்திருப்பார்கள்.

                        (தொடரும்)

உண்மை கசக்கும்

(சமத்துவம் - 8)

ஒருமுறை "youth" கமிட்டி சார்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். நிகழ்ச்சியின் போது மேடையில் பூந்தொட்டிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி, அந்தக் குடியிருப்பில் உள்ள 'குழந்தைகள் பூங்காவில்' இருந்து பூந்தொட்டிகளை ஒரு தள்ளுவண்டியில் வைத்து, அதை குடியிருப்பு பகுதி வழியாக இழுத்துச் சென்றார்கள். சிலர் பின்னால் இருந்து வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றனர்.
(தேவைப்பட்டால் மட்டுமே, நான் அவர்களது செயலில் தலையிடுவேன். மற்றபடி உடனிருந்து அவர்களின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்)

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் மனைவி சிரித்துக் கொண்டே என்னிடம் "கீழ்வீட்டில் வசிப்பவர் உங்களை ஏசிக்கொண்டிருந்தார்கள்" என்றாள். என்ன சொன்னார்கள் எனக் கேட்டேன். "ஐயோ, ஐயோ, என் மகனை தெருத்தெருவாய் கைவண்டியை இழுக்க வைத்து விட்டார்களே" எனப் புலம்பிக் கொண்டிருந்தார்கள் எனக் கூறினாள். "உண்மைதானே, பொத்திக் பொத்தி வளர்த்த பையன் இப்படி தெருவில் வண்டியை இழுத்துச் சென்றால், புலம்பாமல் என்ன செய்வார்கள்" எனப் பதில் கூறினேன்‌

நினைத்துப் பாருங்கள்; வீட்டை விட்டு வெளியில் தலை காட்டாத அவன், "youth" என்ற அமைப்பு மட்டும் இல்லாவிட்டால் இத்தகைய செயலில் ஈடுபடுவானா?

                         (தொடரும்)



உண்மை கசக்கும்

(சமத்துவம் - 9)

இளைஞர்கள் வீரியம் மிக்கவர்கள். ஊக்கத்துடன் செயல்படக் கூடியவர்கள். அவர்களுக்கு நல்லதொருப் பாதையைக் காட்டினால், எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

அவர்களிடம் உள்ள சக்தி காட்டாற்று வெள்ளம் போன்றது. வெள்ள நீரைத் தேக்கி மடைமாற்றம் செய்தால், நாட்டில் விவசாயம் பெருகும்; இல்லையெனில் வெள்ள நீர் நாட்டில் மிகுந்த சேதங்களை ஏற்படுத்தக் கூடும். 

இளைஞர்களும் வெள்ள நீரைப் போன்றவர்களே! அவர்களை ஒன்றிணைத்து நல்லதொரு பாதையில் வழிநடத்தத் தவறினால், அவர்கள் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தீங்கிழைத்து விடுவார்கள்.

எனவே கிராமங்களில் வசிக்கும் நல்ல உள்ளம் படைத்தப் பெரியவர்கள் 
கிராமத்து இளைஞர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்ய வேண்டும்.

இளைஞர்கள் ஒன்றிணைந்தால் மட்டும், அவர்கள் நினைத்ததை செயல்படுத்த முடியுமா?

நிச்சயமாக முடியாது!? வேறு இரண்டு நிபந்தனைகளும் உள்ளன. அவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆக மொத்தம் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அவை?

             ‌ (தொடரும்)


உண்மை கசக்கும்

(சமத்துவம் - 10)

இளைஞர்கள் கிராமங்கள் தோறும் ஊர் நலனுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த விரும்பினால், மூன்று நிபந்தனைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். நகரத்தில் உள்ளவர்கள் நகரத்தை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து செயல்படலாம்.

மூன்று நிபந்தனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்ப்போம்.

1. (Coming together is the beginning)

ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்றாக சேருவது அவர்களின் வெற்றிக்கான ஆரம்பம்.

இந்தப் பாடலைப் பாருங்கள்:-
"சிதறிய மேகம் 
சேர்ந்து திரண்டால்
மழையெனப் பெய்யாதோ?

ஒருதுளி எல்லாம்
ஓரிடம் சேர்ந்தால்
ஓடையும் ஆகாதோ?

ஓரிரண்டாக
ஓடைகள் சேர்ந்தால்
நதியெனப் பாயாதோ?

உதிரிப் பூக்கள்
ஒன்றாய் கோர்த்தால்
மாலையும் ஆகாதோ?

ஆன்றோர், சான்றோர்
ஓரணி சேர்ந்தால்
மானிடம் வளராதோ?"

இளைஞர்கள் வேகம் மிக்கவர்கள்; துடிப்புடன் செயல் படுபவர்கள். அவர்களை நன்கு வழிநடத்த சான்றோரின் துணை இருப்பது மிகவும் அவசியம்.
        

2. (Keeping together is the progress)

ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பில் சேர்ந்தே பயணிப்பது முன்னேற்றத்திற்கான அடையாளம்.

ஏனெனில், இளைஞர்கள் தங்களுக்கான அமைப்பை ஏற்படுத்தும் போது, பலர் உண்மையான நோக்கமின்றி ஆர்வக் கோளாறினால் அதில் சேர விருப்பம் தெரிவிக்கலாம். பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகவும் வாய்ப்பு உண்டு.

ஒவ்வொரு இளைஞனும் மதம், இனம், குலம், சாதி, போன்றவற்றின் காரணமாக வேறுபட்டாலும், வீட்டைவிட்டு வீதிக்கு வந்துவிட்டால் அமைப்பின் உறுப்பினர் என்பதை மறக்கக்கூடாது. தனது கிராமத்தின்/ நகர்ப்புற பகுதியின் முன்னேற்றம் மட்டுமே அவனது நினைவில் இருக்க வேண்டும்.

அமைப்பை ஏற்படுத்தியபின் எல்லோரும் ஒரே குழுவாக இயங்க வேண்டும். மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.     
                   

3. (Working together is the success)
ஒருமித்த கருத்தோடு அனைவரும் இணைந்து செயல்பட்டால், அதுவே வெற்றிக்கான அடையாளம்.

வயது முதிர்ந்த பெரியவர்கள் நல்லவற்றை நினைத்தாலும், அதனைச் செயல்படுத்தும் அளவிற்கு அவர்களின் உடல் ஒத்துழைக்காது. அதேநேரம் அவர்களின் சிந்தனைகளை உள்வாங்கி இளைஞர்கள் செயல்படும்போது நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

வருங்கால சந்ததியினர் நல்ல சூழ்நிலையில் வாழவேண்டுமானால், அந்தச் சூழ்நிலையை இளைஞர்கள் மட்டுமே உருவாக்க முடியும்.

அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.

                     (தொடரும்)


உண்மை கசக்கும்

(சமத்துவம் - 11)

ஒன்றுகூடி சேவை செய்வது என முடிவு எடுத்தபின், இளைஞர்கள் செய்ய வேண்டியவை:-

1. குறைந்தது 50 இளைஞர்களாவது ஒன்றிணைய வேண்டும். ஒவ்வொரு தெருவிலிருந்தும் 1 அல்லது 2 நபர்கள் சேர வேண்டும். இயக்கம் ஆரம்பித்தபின் பலவிதமான ஏளனங்களைச் சந்திக்க நேரிடும். கூட்டமாக இணைந்திருந்தால் அவை நம்மை பாதிக்காது; இல்லையெனில் ஒருவித சோர்வு வந்துவிடும்.

2. இயக்கத்திற்கு பொதுவான ஒரு பெயரை, அதன் நோக்கத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் வைக்க வேண்டும். உதாரணமாக "மக்கள் நல்வாழ்வு மையம்" என வைக்கலாம்.

3. இயக்கத்தில் தலைவர், செயலர் போன்ற பதவிகள் இருக்கக்கூடாது. ஒரேயொரு ஒருங்கிணைப்பாளர் மட்டும் போதும்.

4. இளைஞர்கள் ஒன்று சேர்ந்தது சேவை செய்வதற்காக. எனவே பதவி, புகழ் போன்றவற்றை விரும்பக்கூடாது. ஆனாலும், நீங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்யும்போது, எதிர்பாராத ஒன்று உங்களை வந்து சேரும்; அதன் பெயர் "ஆத்ம திருப்தி". அதன் சுவையை அனுபவித்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். அதன் எண்ணிக்கை கூடக்கூட, உங்களது மனம் ஆரவாரத்திலிருந்து விலகி அமைதியை நோக்கி பயணிக்கும்.

5. இயக்கத்தின் பணிகளில் மதம், அரசியல், சாதி போன்ற எதுவும் நுழையக் கூடாது.

6. ஒவ்வொரு வாரமும் அரைமணி நேரம் கூடிப் பேசுங்கள். உங்களுக்கே என்னவெல்லாம் செய்யலாம் எனத் தோன்றும்.

7. இயக்கத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செயல் படுங்கள். சேவை மனப்பான்மை மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும்.

8. ஒவ்வொரு இளைஞனது வீட்டிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் மதம், இனம், சாதி எனப் பல காரணங்களால் வித்தியாசமாக இருக்கலாம்.
ஆனால், வீட்டைவிட்டு விலகி வீதிக்கு வந்துவிட்டால் 'தான் ஒரு இந்தியன்' என்ற நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.

9. வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் நல்லதொரு வாழ்வியல் முறையை கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

                     (தொடரும்)


உண்மை கசக்கும்

சமீப காலமாக "சமூக நீதி, மனித நேயம்" போன்ற வார்த்தைகள் அதிகமாக பேசு பொருளாக உள்ளன.

ஆனால், "சமத்துவ உணர்வு" இல்லாத மனிதர்கள் இவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்க முடியுமா?

ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் "சமத்துவ உணர்வு" உள்ளவர்களாக இருந்தால், ஊழல், லஞ்சம் போன்ற அசிங்கங்கள் அவர்களிடம் இருக்க முடியுமா?

சுய ஒழுக்கம் நிறைந்த மனிதன் இத்தகைய இழி செயலில் ஈடுபடுவானா?

ஆக, தவறு எங்கு ஆரம்பமாகிறது?

குழந்தைகள் பெற்றோர்களை விட அதிகமாக பழகுவது கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்களிடம் தான். ஆனால் அங்கு அவர்களுக்கு ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை எவ்வளவு முக்கியம் எனக் கற்றுத்தரப் படுகிறதா?

ஒழுக்கத்தைப் பயிற்றுவிக்காத கல்வியைக் கற்ற மாணவன், அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போன்றவனே!? 

"Without character, education
it's a building sans foundation"

குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தை வகுப்பவர்கள் இதைக் கவனித்தில் கொள்வார்களா!?

                       (முற்றும்)



Saturday, 26 November 2022

சிந்தனையில் சில (பெரிய) விதைகள்




அறக்கட்டளை நடத்துவதற்கான விதிமுறைகள் பற்றி எனக்கு முழுமையான அறிவு கிடையாது.

இருந்தாலும் எனக்கு அது சம்பந்தமாக சில சந்தேகங்கள் உண்டு.

எனது சந்தேகம் தவறு என தெரிந்தால், அதனை மறந்து விடுங்கள்; சரியென்று தோன்றினால், உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

இனி சந்தேகங்கள் - -

1. ஒருவர் மட்டுமோ அல்லது குழுவாகவோ மக்களுக்கு உதவும் பொருட்டு, அறக்கட்டளை அமைக்கிறார்கள். 

அவர்கள் அறக்கட்டளையின் நிர்வாகத்தில் பங்கு வகித்தால், அதற்கு ஊதியம் பெறலாமா?

அப்படி பெறுவது தவறில்லை என்றால், அதற்கு உச்சவரம்பு வேண்டாமா?

2. அறக்கட்டளை நன்கு நடைபெற நன்கொடை பெறுவதில் தவறில்லை. ஆனால், நன்கொடை தவிர வேறு வழிகளில் பணம் வசூலித்தால், அதன்பின் அதனை அறக்கட்டளை என்று சொல்லலாமா?

3. ஒருவர் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தால், அவரது வருமானத்திலிருந்து உரிய விலக்குகள் பெறலாம்.

ஆனால், அறக்கட்டளை அது பெறும் நன்கொடைக்கு வரி செலுத்தினால் என்ன? 

அரசாங்கத்திற்கு வரிவசூலோடு கூடுதலாக அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையின் அளவு தெரியவருமல்லவா?

4. அறக்கட்டளையில் உள்ள பங்குதாரர்களுக்கு, குறிப்பிட்ட ஆண்டு வரவு செலவு கணக்கு முடிந்தபின் "ஆதாயப்பங்கு" 
(dividend) கொடுக்கலாமா? கொடுத்தால் அது முறையாகுமா?

5. ஒருவேளை அறக்கட்டளையை தொடர்ந்து நடத்த முடியாமல் போனால் அந்த சொத்து யாருக்கு போகும்?

அதிலும், பலரிடம் நன்கொடை பெற்று சொத்துமதிப்பு பெருகியிருந்தால், முழு சொத்தும் பங்குதாரர்களுக்கு செல்வது சரியா?
..........................................
அதிக வட்டிக்கு கடன் வாங்கி நம்மை சுற்றியுள்ளோர் கஷ்டப்படுகிறார்களே, அவர்களுக்கு உதவ வேண்டும் என எண்ணி ஒரு நிதி நிறுவனம் ஆரம்பித்தேன். 

(பின்னாளில் RBI கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக அது மூடப்பட்டுவிட்டது)

நண்பர்கள் பணம் தந்து உதவினர். அவர்களுக்கு நிறுவனம் பெற்ற வட்டியிலிருந்து உரிய பணத்தை கொடுத்துவிட்டு, மீதிப்பணத்தை பொது நலனுக்காக செலவு செய்தேன். 

அப்பொழுது ஓரு நண்பர் உதவிகேட்டு வந்தார். அவர் நிரந்தர வேலையின்றி தினக் கூலியாக வேலை பார்த்து வந்தார். 

அவர் "எனக்கு 1000 ரூபாய் கடன் உள்ளது; வட்டி அதிகம். நீங்கள் உதவ வேண்டும்" என்றார். 

வட்டி எவ்வளவு செலுத்துகிறீர்கள் என்றேன்.

வாரம் 100 ரூபாய் என்றார். (மிக அதிகமான வட்டி).

நான் நிதி நிறுவனத்தின் நிபந்தனைகளை சொல்லி, "வழக்கம்போல் வாராவாரம் 100 ரூபாய் தாருங்கள். விரைவில் உங்கள் கடன் முழுவதும் அடைந்துவிடும்" என்று சொல்லி 1000 ரூபாயை கொடுத்தேன்.

அவரும் தான் அதிக வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திவிட்டு, எனக்கு வாரம் 100 ரூபாய் கொடுத்து வந்தார்.

அடுத்த மாதம் நான்கு வாரங்கள் இருந்தன. 
எனவே வட்டி ரூபாய் 20 போக மீதியை (380) அசலில் கழித்து விட்டேன். அசல் தொகை 620 ரூபாயாக குறைந்துவிட்டது.

அடுத்த மாதம் ஐந்து வாரங்கள். அவர் கட்டிய 500 ரூபாயில் வட்டி ரூபாய் 12 போக மீதியை (488) அசலில் கழித்து விட்டேன். அசல் தொகை 132 ரூபாயாக குறைந்து விட்டது.

யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை, மூன்றாவது மாதம் அவர் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டார்.

ஒருவழியாக பணத்தை (135 ரூபாய்) பெற்றுக்கொண்டு, ஏன் இப்படி செய்தீர்கள் என்றேன்.

அவர் சொன்ன பதில் நான் சற்றும் எதிர்பார்க்காதது.

அவர் சொன்னது - -
"நீங்க ரொம்ப மோசம், சார். எங்கிட்ட இருந்து 'அசலை' புடிங்கிட்டீங்களே; அவங்க (அதிக வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள்) அசலை கேட்கவே மாட்டார்கள்".

எனக்கு அவர்மேல் கோபமே வரவில்லை. என் கோபமெல்லாம், எடுத்ததெற்கெல்லாம் அவர்களை போராட வைக்கும் தொழிற்சங்கவாதிகள், அவர்களிடம் கொஞ்சம்கூட பொருளாதார சிந்தனையை வளர்க்கவில்லையே என்பதை பற்றித்தான்.
...........................................
அறிந்து வருவது ஞான மார்க்கம். ஆனால், அறிவு பூர்வமாக ஞானம் அடைவதற்கு பல படிகள் தாண்டவேண்டி உள்ளது.

தெரிதல், அறிதல், புரிதல், தெளிதல், தெள்ளத் தெளிதல், உணர்தல் எனப் பல நிலைகளைத் தாண்டவேண்டி உள்ளது.

தெரிந்து கொள்வது என்பது எல்லோராலும் முடிவதுதான்.

ஆனால் தெரிந்த விஷயங்களைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கு, வெறும் அறிவு மட்டும் போதாது.

விஷயங்களைப் பற்றிய உண்மைகளை பகுத்து அறிய தெரிந்திருக்க வேண்டும். அதற்கான விவேகம் இல்லையென்றால் நாம் அறிவது சரியாக இருக்காது. விவேகம் உள்ள மனிதனும், உணர்ச்சி வசப்படுகிறவனாக இருந்தால், அவனது விவேகம் சரியான முறையில் செயல்பட முடியாது.

அறிந்துகொண்ட உண்மைகளை நடைமுறைப் படுத்தும் பொழுதுதான், அதனால் ஏற்படும் அனுபவங்களின் மூலமாக நமக்கு முறையான புரிதல் ஏற்படும்.

தெரிந்துகொண்ட விஷயங்களைப் புரிந்துகொண்டபின், மேலும் மேலும் கிடைக்கும் அனுபவங்களின் மூலம் நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

தெளிந்தால் மட்டும் போதாது; தெள்ளத் தெளிய வேண்டும் என்கிறார் திருமூலர். தெள்ளத் தெளிந்தால் மட்டுமே ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை தெரியவரும் என்கிறார்.

“.....தெள்ளத் தெளிந்தாற்கு சீவன் சிவலிங்கம்” - - திருமூலர்.

அதாவது, ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை விளங்கும் என்கிறார். இதுவே உணர்தல் எனப்படுகிறது.

ஜீவாத்மாவைப் பற்றிய உண்மைகளை அறிவையும், விவேகமான சிந்தனையைக்கொண்டும் புரிந்து தெளிய முடியும். ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகள் (நல்வினைப் பதிவுகளாக இருந்தாலும், தீவினைப் பதிவுகளாக இருந்தாலும்) இருக்கும்வரை ஞானம் பெறுவது என்பது முடியாத காரியம்.

ஆழ்மனதில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கினால் மட்டுமே, ஞானம் கைகூடும். அதுவரை ஞானத்தைப் பற்றிய உணர்வு மட்டுமே இருக்கும்.

இறையாண்மை

ஒரு நாட்டின் இறையாண்மை என்றால் என்ன என்று கேட்டால், பலவிதமான பதில்கள் கிடைக்கின்றன.

யோசித்துப் பார்த்தால் நமக்குத் தோன்றுவது --

1. நாட்டுப் பற்று.

2. தேச நலன்.

3. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்.

4. மக்களிடம் வாழ்வியல் நெறிகளை கற்பித்தல்.

5. நாட்டின் பண்பாட்டை போற்றி பாதுகாத்தல்.

6. தேவைப்பட்டால், நாட்டின் பண்பாட்டை மேலும் செம்மை படுத்துதல்.

மேலே சொன்ன குறிக்கோள்களை கடைப்பிடிப்பதில், அரசியல்வாதிகளுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் முக்கிய பங்குண்டு.

இதில் தவறேதும் நேர்ந்தால், அதனை தட்டிக்கேட்கும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு. அவை அரசுக்கும், மக்களுக்கும் இடையே நல்லதொரு தூதுவராக செயல்பட வேண்டியவை. 

"இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது" .. 
(திருக்குறள் 690) 

ஒரு ஜனநாயக நாடு வளம்பெற வேண்டுமென்றால், மேலே சொன்ன குறிக்கோள்களுக்கு எதிராக செயல்படும் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் மற்றும் ஊடகங்களை, பொதுமக்கள் நிராகரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

இதில் தவறு நேர்ந்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும். நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு கொண்டாட்டமாகி விடும்.
...........................................
இன்று ஒரு செய்தி.

இறந்துவிட்ட ஒரு மனிதனின் உடலை மயானத்திற்குள் எடுத்துச்செல்ல ஒரு சாதியினர் மறுத்ததால், காவல்துறையினர் தலையிட்டு உடலை மயானத்திற்கு வெளியே எரிக்க நேரிட்டது; அதுவும் அரைகுறையாக.

25 ஆண்டுகளுக்கு முன் எனக்கும், என் நண்பருக்கும் இடையே நடந்த உரையாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

நண்பர்: இவ்வளவு பேசுகிறீர்களே, உங்களுக்கு சாதி வேண்டாமா?

நான்: எனக்கு வேண்டாம்; என் உடலுக்கு வேண்டும்.

நண்பர்: அது என்ன அப்படி?

நான்: அது அப்படித்தான்.

இத்துடன் உரையாடல் முடிந்துவிட்டது. ஆனால், அதன் தாக்கம் ஒரு பாடலாக வந்தது.

எங்களின் அலுவலகப் பத்திரிகையில் அந்தப் பாடல் பிரசுரிக்கப்பட்டது.

பாடலின் தலைப்பு "சாதியென்ன சவத்திற்கு". அந்தப் பாடல் - -

சிறையிருந்த
  உயிர்ப்பறவை
சீறிப்பாய்ந்து
  சென்றபோது
சேதி கேட்டு
  வந்த மக்கள்
சாதி பற்றி
  கேட்டு நின்றார்

பத்து மாத
  சிறைப் பறவை
பாரிடத்து
  வந்த போதும்

பைய பைய
  நடை நடந்து
பள்ளிக் கூடம்
  சென்ற போதும்

பல படிகள்
  தாண்டிய பின்
பருவ காலம்
  வந்த போதும்

பாங்குடனே
  பல்லாண்டு
பாரதத்தில்
  வாழ்ந்த போதும்

சகோதரராய்
  உடனிருந்து
சமத்துவங்கள்
  பேசியவர்
சவமாகிப்
  போனவுடன்
சாதி பற்றி
  ஏன் கேட்டார்

சாதிக்கு
  ஒன்றாக
தனியிடங்கள்
  இருப்பதனால்
சவத்திற்கு
  இடம் தேட
சாதி பற்றி
  அவர் கேட்டார்!
.......................................
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
  -- திருவள்ளுவர்

நமது கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளது.

கல்வி என்பது மாணவர்களுக்கு உதவ வேண்டுமே தவிர ஆசிரியர்களின் தேவைக்காக என்று இருக்கக்கூடாது.

ஆரம்பகாலத்தில் ஒரு மாணவனுக்கு தேவை - -
1. தாய்மொழியில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
2. கணக்கில் சாதாரண கூட்டல், கழித்தல் போன்றவை தெரிந்திருக்க வேண்டும்.
3. மாணவனை நல்வழிப்படுத்த "நன்னெறி" வகுப்புகளுக்கான பாடங்கள் இருக்க வேண்டும்.

இது தவிர குறிப்பிட்ட மாணவன் விரும்பும் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்கலாம்.

ஆரம்ப கல்வி முடிந்தபின், "நன்னெறி" வகுப்பு தவிர, வேறு எந்த பாடங்கள் படிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்ட மாணவன்தான் முடிவு செய்யவேண்டும்.

"நன்னெறி" பாடத்திட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமாக மனித நேயம், நாட்டுப்பற்று,  தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், மனோதத்துவ கருத்துக்கள் போன்றவற்றை சொல்லிக்கொடுக்கலாம்.

CA, Engineering, Medical போன்ற துறைகளில் நுழைய விரும்புகிறவர்களை, சம்பந்தமில்லாத பாடங்களை படிக்கச்சொல்லி ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?

அதேபோல் தமிழில் வித்துவானாக விரும்புகிறவன், English literature படிக்க விரும்புகிறவன் போன்றோர் எதற்காக 'maths, physics, chemistry' போன்ற பாடங்களை படிக்கவேண்டும்?
.........................................
எல்லா மனிதர்களும் ஏதோவொரு காரணத்திற்காக குருவைத் தேடி ஓடுகிறார்கள்.

அவர்களை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம் - -

1. வாழ்வில் இன்னும் அதிக சந்தோஷம் வேண்டும் என்பவர்கள்.

2. வாழ்க்கையில் அமைதியைத் தேடுபவர்கள்.

முதலாம் வகையைச் சேர்ந்தவர்கள் பல நேரங்களில் தவறான குருவை சென்று அடைகிறார்கள்.

"குருட்டினை நீக்கும்
குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக்
குருவினைக் கொள்வர் ... ... ..."
என்று திருமூலர் பாடுகிறார்.

இரண்டாம் வகையைச் சேர்ந்த மனிதர்களை பொறுத்தவரை, அவர்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் குரு அவர்களைத் தேடி வருவார்.

அந்த குரு மனித உருவில்தான் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை; எந்த ரூபத்திலும் வரலாம்.

ஒருமுறை நண்பர் கவிஞர் வீீ. கோவிந்தசாமியை பார்க்க சென்றிருந்தேன். அவர் பக்கத்தில் ஒரு புது புத்தகம் இருந்தது. அவரது பெண் நண்பர் அன்றுதான் அவருக்கு கொடுத்திருந்தார்.

நான் பேசிவிட்டு கிளம்பும்போது, அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து "இதை படியுங்கள்; உங்களுக்குப் பிடிக்கும்" என்றார். எதனால் அப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியாது.

அந்தப் புத்தகம் என் வாழ்க்கை பயணத்தையே மாற்றி விட்டது. அது என் குருவாக மாறிவிட்டது.

அந்த புத்தகம் "சுவாமி சின்மயானந்தர்" எழுதிய Kindle Life. 

பகவத் கீதையை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது.

ஆகவே, மன அமைதியை வேண்டுபவர்கள் மனதில் உண்மையான தவிப்பு இருந்தால், நிச்சயம் ஒருநாள் குரு ஏதோவொரு ரூபத்தில் அவர்களை வந்தடைவார்.
..........................................
எடுப்பான உடை; மிடுக்கான நடை; அத்துடன் யாருக்கும் தலை வணங்க மாட்டேன் என்பது போன்ற பாவனை.

அந்த இளைஞருக்கு எந்த நேரத்திலும் பதவி உயர்வு வரலாம் என்ற நிலை.

ஆனால், அவர் பார்த்து வந்ததோ மிகவும் சாதாரண வேலையாக இருந்தது. எனவே அவர் பார்த்து வந்த வேலையில் சில மாற்றங்கள் செய்யத் தேவையான நடவடிக்கை எடுத்தேன்.

அவரிடம் யார் என்ன சொன்னார்கள் என்று தெரியாது. அன்று மாலை வீட்டிற்கு வந்து "ஒழுங்கா ஊர் போய் சேரமாட்டாய்" என்று மிரட்டினார்.

அது அலுவலக குடியிருப்பு பகுதியானதால் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

மறுநாள் காலையில் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் அவர்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

நான் "அலுவகத்தில் சொல்லியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்; சம்பவம் வெளியில் நடந்தது, வேண்டாம்" என்று சொல்லி விட்டேன்.

இரண்டு தினங்கள் கழித்து மேலிடத்திலிருந்து பதவி உயர்வுக்கான விண்ணப்பம் அனுப்புவதற்கான சுற்றறிக்கை வந்தது.

அலுவலகத்திற்கு வரும் கடிதங்களை நான்தான் முதலில் பிரித்துப் பார்ப்பேன்.

அந்த இளைஞரை நேரில் அழைத்து, சுற்றறிக்கையை அவரிடம் கொடுத்து, அவருடைய விண்ணப்பத்தை வாங்கி, மேலதிகாரியிடம் நேரில் சென்று கையொப்பம் வாங்கினேன். நான் ஏன் நேரில் சென்று அவரிடம் கையொப்பம் கேட்டேன் என்பது அவருக்குப்
புரியவில்லை.

என்னுடன் வேலை பார்ப்பவர்கள் அந்த விண்ணப்பத்தை மேலிடத்திற்கு முறையாக அனுப்புவார்களா என்று ஒரு சந்தேகம்.

இளைஞரை அழைத்து "மதியம் உங்களுக்கு அனுமதி தருகிறேன். நீங்களே நேரில் சென்று விண்ணப்பத்தை மேலிடத்தில் கொடுத்துவிடுங்கள்" என்று கூறி மேலதிகாரி கையொப்பமிட்ட விண்ணப்பத்தைக்
கொடுத்து அவரை அனுப்பிவைத்தேன்.

நான் நடந்த சம்பவத்தைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை.

அதன்பின் அவர் என்னை நேரில் பார்க்க நேரிட்டால், அவரை அறியாமலே அவர் தலை குனிந்துவிடும்.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண..." என்ற குறளில் வரும் 'அவர்நாண' என்பதன் அர்த்தம் என்னவென்று புரிந்து கொண்டேன்.
........................................
ஒருமுறை நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்தேன். அவர் அந்திம காலத்தில் இருந்தார்.

தனது மகன் தன்னை காயப்படுத்திவிட்டதை சொல்லி மனம் வருந்தினார். (அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை இங்கு விவரிக்க விரும்பவில்லை).

அவரது மனைவி "ஒரு வாரமாக இதையே சொல்லி சொல்லி புலம்புகிறார்" என்றார்கள்.

நான் அவரிடம் "உங்கள் மகன் செய்தது தவறுதான். அதற்காக அதை ஏன் நினைக்கிறீர்கள்?

ஒருதடவை அவன் சொன்னதை நீங்கள் ஏன் திரும்பத்திரும்ப நினைக்கவேண்டும்.

இது யாராவது நம்மை கத்தியை வைத்து குத்தினால், அதை வெளியில் எடுத்து நம்மை நாமே மீண்டும் மீண்டும் குத்துவதுபோல் இருக்கிறது.

நடந்ததை மறந்துவிடுங்கள்" என்றேன்.

ஆனால், அவரால் மறக்க இயலவில்லை.

நம்மை இகழ்வது யாராக இருந்தாலும், அதை "அகழ்வாரை தாங்கும் நிலம் போல..." பொறுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

எதற்காக அப்படி சொல்கிறார்?

இதனை நீங்கள் சரியாகக் கடைப்பிடித்தால், பிறர் உங்களை காயப்படுத்தலாம்; ஆனால், அவர்களால் உங்கள் மனதில் வேதனையை வரவழைக்க முடியாது.

(Anybody can hurt me; but nobody can harm me).

வாழ்க்கையை அமைதியாக கழிப்பதற்கு இதுவும் ஒரு வழியாகும்.
...................................................
ஒருவர் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார்.
இன்னொருவர் கடவுள் இருக்கிறார் என்பதே பொய் என்கிறார்.  

இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

முதலாவது நபர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தடுக்கவில்லை.

இரண்டாவது நபர் இல்லாத கடவுளை எதற்காக துதிக்க வேண்டும் என வசை பாடுகிறார். அவர் செய்வது சரியா?

கடவுள் என்று ஒருவர் இல்லை அது பொய் எனறு சொல்வதாக இருந்தால், முதலில் அவர் மறைநூல்களை கற்றுத் தெளிய வேண்டும். முக்கியமாக உபநிடதங்கள், அதிலும் குறிப்பாக 'மாண்டூக்ய உபநிடதம், சிவஞானபோதம் போன்றவற்றை கற்று அதன்பின் "நான் ஏன் கடவுள் மறுப்பாளன்" என்று சொன்னால் அது முறையானதாக இருக்கும்.

உண்மை அறியாமல் கருத்து தெரிவித்தால், அது யார் மூலமாகவோ வந்த அவநம்பிக்கையாகத்தான் இருக்கும்.

அது ஒரு சமுதாயக் கேடு அல்லவா?
.......................................
ஒரு அன்பர் இரண்டு கேள்விகளை கேட்டுள்ளார்.

1. வைஷ்யன் சுயநலவாதி என்றால், ஒரு பிரிவினரை அசிங்கப் படுத்துவதுபோல் இல்லையா?

2. சுயநலவாதி அல்லாத ஒரு மனிதனை காட்ட முடியுமா?

கேள்விகள் இரண்டு; ஆனால், பதில் ஒன்றுதான்.

வர்ணப்பிரிவில் வைஷ்யன் என்று சொல்லும்பொழுது, சாதி, இனம் மற்றும் குலம் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அது ஒரு மனிதனின் குணம் மற்றும் மனோபாவம் இரண்டை மட்டுமே கருத்தில் கொள்கிறது. 

சுயநலவாதி என்பதற்கு நான் கொள்ளும் பொருள் இதுவே ...
ஒரு மனிதன் தன் குடும்பத்திற்காக பாடுபடுவது சுயநலமில்லை; அது அவனது கடமை. தன் குடும்பம் செழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக லஞ்சம் வாங்கினால் அவன் சுயநலவாதி ஆகிறான். 

ஒருவன் உயர்ந்த குலத்தை சேர்ந்தவன் என்று நினைத்திருந்தாலும்,
அவன் அடுத்தவன் வயிற்றில் அடித்து சம்பாதித்தால் அவனும் ஒரு வைஷ்யனே.
.........................................
ஒருநாள் மாலை நேரம். என்னுடைய உயர் அதிகாரி என்னிடம் வாழ்த்து தெரிவிக்க வந்தார். நாளை உங்களுக்கு பதவி உயர்வு வரும் என்றார். நான் அவரிடம் 'நாளை அது வராது' என்று சொன்னேன். அது போலவே நடந்தது.
அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், எனக்கு அது இல்லை.

எனது பதவி உயர்வை எதிர்பார்த்த பலருக்கு அது ஏமாற்றமாக இருந்தது.

ஒரு நண்பர் என்னிடம் வந்து வருத்தம் தெரிவித்தார். அவரது நினைப்பு 'பட்டியலின மக்களுக்கான அமைப்புதான்' இதற்கு காரணம் என்பதாக இருந்தது.

நான் அவரிடம், எனக்கு பதவி உயர்வு வழங்கவேண்டிய அதிகாரிக்கு என்னை பிடிக்காது; சில தொழிற்சங்க தலைவர்களுக்கும் என்மேல் கோபம் உண்டு;
அப்படியிருக்கும் பொழுது இவர்கள்தான் காரணம் என்று சொல்வது தவறு என்றேன்.

ஒருவேளை அதுதான் காரணம் என்றால், எதற்காக வருத்தப்பட வேண்டும்? இதற்காக இவ்வளவு வருத்தப் படுகிறீர்களே; உங்கள் பாட்டன், முப்பாட்டன் என எல்லோரும் எவ்வளவு காலம் அவர்களை கீழேதள்ளி வயிற்றில் ஏறி மிதித்திருப்பார்கள் என்றேன்.

அதற்கு அவர் ''அவர்கள் செய்த தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்க வேண்டுமா" என்றார்.

நான் அவரிடம் "உங்க பாட்டன், முப்பாட்டன் விட்டுவிட்டு போன சொத்தெல்லாம் வேண்டும்; இதுமட்டும் வேண்டாம் என்றால் எப்படி" என்றேன்.

அதன்பின் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

நீதி: வினை விதைத்தவன் வினை அறுப்பான். 
(வினை அறுப்பவன் பேரனாகவும் இருக்கலாம்).
.........................................
ஒருமுறை உறவினர் வீட்டிற்கு சென்றபொழுது, அவரது மகன் என்னிடம் "மாமா, சில தினங்களுக்கு முன் கல்லூரியில் எனக்கும், பேராசிரியருக்கும் வாக்குவாதம் வந்து பெரிய பிரச்சினையாக ஆகிவிட்டது. அப்பா நடந்ததை மறந்துவிடு என்கிறார்கள்; என்னால் முடியவில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்" என்றான்.

கல்லூரியில் பேராசிரியர் பாடம் நடத்தியபோது, அவர் எழுதி காட்டியதில் ஒரு தவறு இருந்திருக்கிறது. அதை இவன் சுட்டிக்காட்ட, அது பிரச்சினையாக முடிந்துவிட்டது.

நான் அவனிடம் "நீ  சுட்டிக்காட்டியதில் தவறில்லை. ஆனால், அதை வகுப்பறையில் சொன்னதுதான் தவறாக முடிந்துவிட்டது. அவர் அதை ஒரு கௌரவப் பிரச்சினை என எண்ணி விட்டார். வகுப்பறையில் சொல்லாமல், அவர் தனியாக இருக்கும்போது சொல்லியிருந்தால் ஒருவேளை உன்னை பாராட்டிகூட இருக்கலாம்.

சரி, நடந்தது நடந்துவிட்டது. அது உனக்குள் பாரமாக இருக்கக்கூடாது.

நாளை அவரை பார்த்து 'Sir, வகுப்பறையில் நான் நடந்துகொண்டது தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள்' என்று சொல்லிவிடு.

அவர் மன்னிக்கிறாரோ இல்லையோ, உன் மனதிலுள்ள பாரம் இறங்கி விடும்" என்றேன்.

அவனும் அதன்படி நடந்து மன உளைச்சலில் இருந்து விடுபட்டான்.
............................................
கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து எனது எண்ணங்களை முன்னொரு முறை பதிவு செய்திருந்தேன்.

அது சம்பந்தமாக மேலும் சில எண்ணங்கள் --

1. தாய்மொழி, கணக்கு மற்றும் நன்னெறி இவற்றிற்கான முதல் ஐந்து வகுப்புகளுக்குரிய பாடத்திட்டங்களை வகுக்கவேண்டும்.

2.ஐந்து வகுப்புகளுக்குரிய பாடங்களை முடித்தபின், மாணவன் அதற்கான தேர்வை எழுத வேண்டும்.

3. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே, அவன் அடுத்தகட்ட தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்த முடியும் என்று வரைமுறை ஏற்படுத்தவேண்டும்.

4. முதல்நிலை தேர்வை முடித்துவிட்டால், அந்த மாணவனுக்கு சமுதாயத்தில் குறைந்த பட்ச தேவை பூர்த்தியாகி விடுகிறது.

5. மூன்று பாடங்கள் மட்டுமே இருப்பதனால், அவனால் படிப்பதில் அதிக கவனம் செலுத்த முடியும்.

6. மாணவனுக்கு அவனது குறைந்தபட்ச தேவை பூர்த்தி ஆனதால், அவன் விரும்பும் பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம்.

உதாரணமாக அவன் "English Literature" படிக்க விரும்பினால் அது சம்பந்தப்பட்ட பாடங்களை மட்டுமே அவன் படிக்க அனுமதிக்க வேண்டும்.

7. ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் படிக்க விரும்பினால், அதுவும் அவனது விருப்பமாக இருக்க வேண்டும்.

8. 12 வகுப்புகளுக்கான பாடங்களை முடித்தபின், அவனை பரீட்சை எழுத அனுமதிக்கலாம்.

9. இது இரண்டாம் நிலை தேர்வு.

10. அவன் தேர்ந்தெடுத்த பாடங்களை மட்டுமே படிப்பதனால், விரைவிலேயே அவனால் பரீட்சைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள முடியும்.

11. எனவே வயது வரம்பின்றி அவனை பரீட்சை எழுத அனுமதிக்கலாம்.

12. இரண்டாம்நிலை தேர்வில் வெற்றி பெற்றபின், அவனை மேல் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கலாம்.

பின்குறிப்பு:
இந்த எண்ணங்கள் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் ஏற்புடையதாக இருக்காது என நினைக்கிறேன்.

நாம் பார்க்கவேண்டியது, இது மாணவனுக்கும், நாட்டிற்கும் நல்லதா என்பதை மட்டும்தான்.

இது நடைமுறைபடுத்தப் பட்டால், நாட்டில் பல செலவினங்கள் குறையவும் வாய்ப்பு உள்ளது.
...................................................
கீதை ஒரு மத நூல், படிக்கக்கூடாத ஒன்று என பலர் சொல்வதுண்டு.

நான் அதை படிப்பதில் தீவிரம் காட்டியபோது பலர் என்னை தடுத்தார்கள்:

சிலர் அதை கொலைகார நூல் என்றார்கள்.

வீட்டில் இருந்தால், உறவுகளுக்குள் சண்டை வரும் என்றார்கள்.

அது ஒரு வைணவ நூல்; நீங்கள் எப்படி அதை படிக்கலாம் என்றார்கள்.

ஒரு தோழர் 'அது அபின், கஞ்சா போன்றது. அது உங்களை மயங்கவைத்துவிடும்' என்றார்.

அவற்றையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

கீதையை முழுமையாக கற்றபின்தான் தெரிந்தது, அது ஒரு அருமையான மனோதத்துவ நூல் என்று.

இன்று பல இடங்களில் தன்னம்பிக்கை, தன்முனைப்பு, சுயமேம்பாடு போன்ற தலைப்புகளில் பேசிவருகிறார்கள்.
அவர்கள் சொல்லும் கருத்துக்களில் கீதையில் உள்ள தத்துவங்கள் இருப்பதை நான் அறிவேன்.
..........................................
கூட்டுக்குடும்பம், கணவன்-மனைவி, நண்பர்கள் கூட்டம் என எதுவாக இருந்தாலும், எல்லா மனிதர்களும் சில விஷயங்களில் தனித்தனி தீவைப் போன்றவர்களே!

அவர்களுக்கே உரிய விருப்பு-வெறுப்பு, காரண-காரிய அலசல்கள் போன்ற காரணங்களினால், கருத்து பரிமாற்றம் என்பது விரைவில் தேவையில்லாத விவாதமாக மாறி பிரச்சினைகள் தீவிரமடைந்து விடும்.

இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி 'நாம் எந்த இடத்தில் ஒதுங்கவேண்டும்' என தெரிந்திருக்க வேண்டும்.

ஒதுங்கத் தெரிந்தவனுக்கு அதனால் ஒரு முக்கிய பயனும் உண்டு.

ஒதுங்கத்தெரிந்தவனிடம் பரபரப்பு இருக்காது; பரபரப்பு இல்லாத மனம் அமைதியாக இருக்கும்; அமைதியான மனம் அகத்தாய்வில் ஈடுபடும்; அகத்தாய்வில் ஈடுபட ஈடுபட, வாழ்வியல் தத்துவங்கள் புரியவரும்; வாழ்வியல் தத்துவங்கள் புரிந்தவனுக்கு, ஞானம் கிட்டும் வாய்ப்பு அதிகரிக்கும்.
........................................
"கொரோனா" தொற்று மக்களிடையே ஒவ்வொரு நாளும் மனித நேயம், சமுதாய நலன் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டி வருகிறது.

இத்தகைய மனிதநேயம் தொடர்ந்து போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. 

முக்கியமாக கிராமங்களில் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும்.

பல வருடங்களுக்கு முன்னர் 'அலுவலக பத்திரிகையில்' எழுதியது நினைவிற்கு வருகிறது.

"சிதறிய மேகம்
சேர்ந்து திரண்டால்
மழையென பெய்யாதோ?

ஓன்றிரண்டாக
ஓடைகள் சேர்ந்தால்
நதியென பாயாதோ?

உதிரிப் பூக்கள்
ஒன்றாய் கோர்த்தால்
மாலையும் ஆகாதோ?

ஆன்றோர் சான்றோர்
ஓரணி அமைத்தால்
மானிடம் வளராதோ?"

இதற்கு என்ன செய்யலாம்?

1. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு "சமுதாய நல நிதியம்" அமைக்க வேண்டும்.

2. அதில் இளைஞர்கள் செயல் வீரர்களாகவும், நல்லமனம் படைத்த முதியவர்கள் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும்.

3. எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிக்கோ அல்லது அரசியல் கட்சிகளுக்கோ நிதியத்தின் நிர்வாகத்தில் பங்கு இருக்கக்கூடாது.

4. ஒரு தாலுகாவில் உள்ள அனைத்து மையங்களுக்கும் ஒரு ஒருங்கிணைப்பு குழு இருக்கவேண்டும்.

5. மாதந்தோறும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சந்தா வசூலிக்க வேண்டும்.

6. குடிசை வீடு, ஓட்டு வீடு என பிரித்து, அதற்கு தகுந்தவாறு சந்தாவை முடிவு செய்ய வேண்டும்.

7. நிர்வாகத்தில் உள்ளவர்கள் எந்தவித பயனையும் எதிர்பாராமல் பணியாற்ற வேண்டும்.

8. நிர்வாகத்தின் வரவு, செலவுகள் ஒவ்வொரு மாதமும் ஒருங்கிணைப்பு குழுவால் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

9. நிதியத்தில் சேரும் பணத்தை, கிராமத்திற்கு தேவையான பொதுவான காரியங்களுக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும்.

என்னென்ன செய்யலாம் என்று யோசித்து பாருங்கள்; உங்களுக்கே நிறைய தோன்றும்.

"புதியதோர் உலகம் செய்வோம் ..."
    ... பாரதிதாசன்
.......................................
சொற்பொழிவு நடத்தும் காலங்களில், சுவாமி சின்மயானந்தர் தங்கியிருக்கும் இடத்தில் (சிறிய அளவில்) 'சத்சங்கமும்' நடைபெறும்.

அப்படி நடைபெற்ற ஒரு சத்சங்கத்தில், ஒருவர் சுவாமியிடம் தான் நிறைய பாவங்கள் செய்துவிட்டேன் என்று சொல்லி வருத்தப்பட்டார்.

அதற்கு சுவாமி கூறியது - -
"நீயா? பாவம் செய்தாயா? யாராலும் பாவம் செய்ய முடியாதே!"

கேட்ட எல்லோருக்கும் அவர் சொன்னது விளங்கவில்லை. அவர் தொடர்ந்தார் - -
"Sin is not an action; it is a reaction. பாவம் என்பது செயலல்ல. நாம் ஏதோ செய்கிறோம். அதன் எதிர்வினையாக நாம் நினைப்பதுதான் பாவம். 
நீ ஒரு கொலை செய்தால் அது பாவம் என்று நினைக்கலாம்; ஆனால், போர்க்களத்தில் ஒருவன் பத்து பேரை கொல்கிறான். அவன் தான் பாவம் செய்ததாக நினைப்பதில்லை. மாறாக தனக்கு ஜனாதிபதியிடமிருந்து ஏதாவது பரிசு கிடைக்குமா என்று நினைக்கிறான்."

கூடியிருந்தவர்களுக்கு கொஞ்சம் புரிந்தது. பாவம் செய்ததாக சொன்னவர் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். 

அதற்கு சுவாமி "இதுவரை என்னென்ன செய்தாயோ, அதையே தொடர்ந்து செய்" என்றார்.

எல்லோரும் சிரித்துவிட, கேட்டவருக்கு அந்த பதில் கஷ்டமாக இருந்தது.

சுவாமி, கவலைப்படாதே விளக்குகிறேன் என்று சொல்லி தொடர்ந்தார் - -

"நீ ஊருக்கு காரில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறாய். சிறிது தூரம் சென்றபின்தான் தெரிகிறது, நீ தவறான வழியில் செல்கிறாய் என்று. உடனே காரை நிறுத்தினால் என்ன நடக்கும்? கார் கவிழ்ந்து உனக்கும் காயம் ஏற்படும்.

மாறாக நீ செய்யவேண்டியது:-
1. காரின் வேகத்தை குறைக்க வேண்டும்.
2. அடுத்த திருப்பம் எங்கு வருகிறது என்று பார்த்து காரை திருப்ப வேண்டும்.
3. உன் நினைவு புதிய பாதையை பற்றியதாக இருக்க வேண்டும். 
4. இருந்தாலும், திரும்பும் இடம் வரும்வரை, நீ தவறான பாதையில் தான் செல்லவேண்டியிருக்கும்.

உரிய முயற்சியும், பயிற்சியும் செய்து, உனது சுபாவத்தை மேம்படுத்தும்வரை, பழைய தவறுகள் தொடரும். அதை எண்ணி கலங்காதே".

இப்போது அவர் சொல்வதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்தது.

முத்தாய்ப்பாக அவர் ஒன்று சொன்னார் - -
"You think that you are the sinner and I am the saint; but remember, every saint had a past, every sinner .. a future".
(நீ நினைக்கலாம் .. நீ ஒரு பாவியென்றும்; நான் ஒரு புனிதன் என்றும். ஆனால், ஞாபகத்தில் வைத்துக்கொள் .. ஒவ்வொரு புனிதனுக்கும் கடந்த காலம் என்று ஒன்று உண்டு; ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் என்று ஒன்று உண்டு).

அவர் மறைமுகமாக உணர்த்திய உண்மை -- கடந்த காலத்தில் நான் பாவியாக இருந்திருக்கலாம்; நீ எதிர்காலத்தில் புனிதனாக மாறலாம் என்பதுதான்.
...........................................
சில அன்பர்கள் "அகத்தாய்வு" என்றால் என்ன? அதை எப்படி செய்வது? என கேட்கிறார்கள்.

மிகவும் எளிது; "நான் யார்?" என்ற கேள்விக்கான பதிலைத் தேடு என்கிறார் பகவான் இரமணர்.

("Who am I" என்பதைவிட "what am I" என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்)

ஆனால், அகத்தாய்வில் ஈடுபட மூன்று தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் - -
1. தனிமை.
2. விவேகத்துடன்  செயல்படும் புத்தி.
3. ஆராய்ந்து அறியும் தன்மை.

இவை இருந்தால், நாம் செய்யவேண்டியது --
..மனதை வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தவேண்டும்.
..மனதை உட்புறமாக திருப்பவேண்டும்.
.."நான் உண்மையில் யார்?" என்று அகத்தாய்வில் ஈடுபடவேண்டும்.

Am l a body with a soul? .. or .. Am l a Soul in a body? இதையே கருப்பொருளாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இவை மூன்றும் இல்லாத மனிதன் என்ன செய்வது?

விவேகமாக சிந்திக்கும் திறன் இல்லாத மனிதன், தனிமையில் இருந்து தனது மனதில் ஓடும் எண்ணங்களைக் கவனிக்க வேண்டும். ஆனால் அவற்றுடன் பயணம் செய்யக்கூடாது. ஆற்றின் கரையில் அமர்ந்து ஆற்றின் நீரோட்டத்தை கவனிப்பது போல், மனதில் ஓடும் எண்ணங்களை பார்க்கவேண்டும்.

பலருக்கு அதுவும் முடியாமல் போகலாம். அவர்கள் வெறுமனே அமர்ந்து,  தனது மூச்சு (உள்ளே வருவதும், வெளியே செல்வதும்) எப்படி செயல்படுகிறது என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். 
அதில் மட்டும் கவனத்தை வைத்தால், அந்த சமயம் மனதில் வேறு எண்ணங்கள் தோன்றாது. மிகவும் எளிய பயிற்சி இது.

"தனிமை" என்று சொல்லும் பொழுது, அதற்காக நிறைய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தினந்தோறும் (ஆரம்பத்தில்) பத்து நிமிடம் ஒதுக்கினால் கூட போதும். ஆனால் அதை நாள்தோறும் தொடர்ந்து செய்திடல் வேண்டும்.

இதற்கான அவசியம் என்ன?

அறிந்தோ, அறியாமலோ நாம் மனதின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிரோம். அது தவறு. மனம் நமக்கு பின்னால் வரவேண்டும்.

(We should not allow our mind to behave like a master; it should function as our servant).

ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் மனதை உதாசீனம் செய்யவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை கூட்டினால், அது தானே நமக்கு பின்னால் வர ஆரம்பித்ததுவிடும்.
.............................................
“சித்தம் போக்கு சிவம் போக்கு” என்று சொல்வதன் அர்த்தம் என்ன?

ஒரு பலூன் காற்றில் பறக்கும்பொழுது, நாம் பார்ப்பது பலூனாக இருந்தாலும் அந்த பலூனுக்குள் காற்று இருப்பதையும் புரிந்துகொள்கிறோம். பூமியின் மேற்பரப்பில் உள்ள காற்றில் ஒரு பகுதிதான் பலூனுக்குள் இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்கிறோம்.

நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் (இறைவனின்) ஒரு பகுதிதான் எல்லா ஜீவராசிக்குள்ளும் இருக்கிறது. மனிதனுக்குள்ளும், அது பலூனுக்குள் அடைபட்ட காற்றைப்போல் இருக்கிறது. ஆனால், இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது.

பலூன் பறக்கும்பொழுது பலூன் கண்ணுக்குத் தெரிவதுபோல், மனிதனுக்குள் உள்ள பரம்பொருளின் பகுதி கண்ணுக்குத் தெரியாத ஒரு மாய உறைக்குள் இருக்கிறது. அதனை ‘ஆனந்த மய உறை’ என்று சொல்கிறார்கள்.

அந்த உறைக்குள் உள்ள பரம்பொருளின் பகுதியைத்தான் பல பெயர்களில் அழைப்பதுண்டு. “ஆன்மா, சித், புனித ஆவி, ஜீவாத்மா” என்று பல பெயர்களில் அழைப்பதைத்தான் “சிவம்” என்று சொல்கிறார்கள்.

சிவமும், அதனை சுற்றியுள்ள உறையையும் சேர்த்து “சித்தம்” என்று சொல்கிறார்கள்.

அந்த உறையின்மேல் மனிதன் பெறும் அனுபவங்களின் அடிப்படையில் பதிவுகள் நிகழும்பொழுது, அதனை “ஆழ்மனம்” என்கிறோம்.  

ஆழ்மனதில் உள்ள பதிவுகள் அனைத்தும் அழிந்துவிட்டால், அவன் முக்தி பெற்ற மனிதனாகிவிடுகிறான். இல்லையெனில், அவன் இறந்தபின் ஆழ்மனப்பதிவுகளுடன் கூடிய அவனது சித்தம் (சிவத்தையும் உள்ளடக்கி) அடுத்து ஒரு பிறப்பை எடுக்கிறது.

இதனைத்தான் ‘சித்தம் போக்கு சிவம் போக்கு’ என்கிறார்கள்.
.........................................
‘சும்மா இருப்பதே சுகம்’ என்று சொல்கிறார்கள். ‘சும்மா’ இருந்தால் சுகம் கிடைக்குமா? வேலை ஏதேனும் செய்தால்தானே சுகமாக இருக்கமுடியும்?

ஒரு மனிதனுக்கு, இரண்டு வகையில் சுகம் கிடைக்கமுடியும்.

ஒன்று மகிழ்ச்சியின் காரணமாக வருவது; மற்றொன்று ஆனந்தத்தின் காரணமாக வருவது.

மகிழ்ச்சி என்பது ஏதோ ஒன்றை அடைவதன் காரணமாக வருவது; ஆனந்தம் என்பது எதுவும் இல்லாதபோதும் வருவது.

மகிழ்ச்சி வெளியிலிருந்து வருவது; ஆனந்தம் உள்ளிருந்து வருவது.

மகிழ்ச்சியின் காரணமாக வரும் சுகம் நிலைத்திருக்கும் என்று சொல்லமுடியாது, அதனைத் தொடர்ந்து எந்தநேரமும் துக்கமும் வரலாம்; ஆனந்தத்தின் காரணமாக வரும் சுகம் நிரந்தரமானது, அது நிலையானது, எந்த நேரமும் மாறாதது.

மகிழ்ச்சியின் காரணமாக வரும் சுகம், ஏதாவது செய்தால்தான் வரும்; ஆனந்தத்தின் காரணமாக வரும் சுகம், எதுவும் செய்யாமல் சும்மா இருந்தால்தான் வரும்.

அப்படியானால், சும்மா இருப்பது என்றால் என்ன?

நமக்கு எந்த வேலையும் இல்லாதபோது, எதைப்பற்றியாவது நினைக்கிறோமே; அந்த நினைப்பு எங்கிருந்து வருகிறது?

நாம் பொதுவாக ‘மனம்’ என்று சொல்கிறோம். ஆனால், மனம் ‘உணர்வு மனம்’, உணர்வற்ற மனம்’ என இரண்டாகப் பிரிந்து செயல்படுகிறது. உணர்வற்ற மனதை ‘ஆழ்மனம்’ என்றும் சொல்வதுண்டு.

ஐம்புலன்கள் மூலமாக நாம் பெரும் அனுபவங்களின் காரணமாக, நமது சித்தத்தின் மேற்பரப்பில் பலவிதமான பதிவுகள் நிகழ்கின்றன. அவையே நமது அஹங்காரத்தை (தன்முனைப்பு) தீர்மானம் செய்கின்றன.

தன்முனைப்பின் தீவிரத்தைப் பொறுத்து, நமது அஹங்காரம், ஆங்காரமாக வெளிப்படுகிறது. இந்த அஹங்காரப் பதிவுகள் அனைத்தும் அழியும்பொழுது, ஆழ்மனம் ‘சும்மா’ இருக்கிறது; நாமும் ஆனந்தத்தையும், அதன் காரணமாக வரும் சுகத்தையும் அனுபவிக்க ஆரம்பிக்கிறோம். அந்த நிலையில், விழித்திருக்கும் பொழுதும் நாம் ஆழ்ந்து உறங்கும் பொழுது அனுபவிக்கும் சுகத்தை அனுபவிக்கிறோம்.  

ஆனால், இது முடிகிற காரியமா? அதனால்தான் பத்திரகிரியார் இவ்வாறு புலம்புகிறார் - -

“ஆங்காரம் உள்ளடக்கி, ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்?”

தூங்காமல் தூங்கும் நிலையை அடைய, நாம் என்ன செய்யவேண்டும்? 

திருமூலர் இதற்கானப் பதிலைத் தருகிறார்.

"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாருமின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாருமுண்டாய் வெறியுமடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே” - - திருமந்திரம்.

எல்லா மனிதர்களையும் ‘பார்ப்பான்’ என்றே திருமூலர் சொல்கிறார். பார்ப்பான் என்பதற்கு, ‘சான்றோர்’ என்று பொருள்கொள்ளவேண்டும். ‘பாற்பசு ஐந்து’ என்பது ஐம்புலன்களைக் குறிப்பது; ‘மேய்ப்பார்’ என்பது அறிவைக் குறிப்பது.

அறிவுக்குக் கட்டுப்பட்டு, ஐம்புலன்களும் செயல்படும்பொழுது, ஆழ்மனதில் உள்ள பதிவுகள் உதிர்ந்து விடுகின்றன; ஆழ்மனம் அமைதியடைகிறது.

ஆழ்மனதில் பதிவுகள் இல்லாத நிலையைத்தான் ‘சும்மா இருப்பது’ என்கிறார்கள் பெரியோர்கள். அந்த நிலையில், நாம் சித்தத்தின் உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தையும், அதனால் ஏற்படும் சுகத்தையும் அனுபவிக்க ஆரம்பிக்கிறோம்.

இதுவே ‘சும்மா இருப்பதே சுகம்’ என்பதன் அர்த்தம்.
...........................................
தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தை உரிய காலம் வந்ததும், பனிக்குடம் உடைந்து வெளி உலகத்திற்கு வருகிறது. ஆனால், பனிக்குடத்தை உடைத்தது யார்? குழந்தையா, அதன் தாயா அல்லது தானாகவேதான் உடைந்ததா?

பணிக்குடத்தினுள் இருக்கும் குழந்தையைப் போல, நீர்க்குமிழியுள் இருக்கும் காற்றைப் போல, ஆன்மா காரண உடலினுள் (சித்தத்தினுள்) வாசம் செய்கிறது.

ஒரு வித்தியாசம்; பனிக்குடம், நீர்க்குமிழி இரண்டும் ஸ்தூல உறைகள், கண்ணுக்குத் தெரிவன. ஜீவாத்மாவைச் சுற்றியுள்ள காரண உடலோ, சூட்சும உறை, கண்ணுக்குத் தெரியாது. அது மட்டுமல்ல.

பனிக்குடமும், நீர்க்குமிழியும் உடைபடுவது நம் கண்ணுக்குப் புலனாகும். ஜீவாத்மா வெளிப்படுவதோ, குறிப்பிட்ட மனிதன் “தன்னை” இழந்தபின்தான் நேருகிறது. 

எனவே, அதனை அவன் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
.......................................
பல வருடங்களுக்கு முன் (30 வருடங்கள்) நண்பருடன் நடந்த உரையாடல் - -

நான்: 
"ஈஸ்வர அல்லா தேரே நாம்" என்று என்னால் சொல்லமுடியும்; "அல்லா ஈஸ்வர் தேரே நாம்" என்று உங்களால் சொல்லமுடியுமா?

நண்பர்:
முடியாது.

நான்:
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் யாரை "ஈஸ்வர்" என்று சொல்கிறேனோ, அவரைத்தான் நீங்கள் "அல்லா" என்று சொல்கிறீர்கள் என நினைத்துக்கொள்வேன். ஆனால் உங்களால் அப்படி நினைக்க முடியாது. ஏனெனில், உங்களைப் பொறுத்தவரை "அல்லாவிற்கு" வேறு எந்தப் பெயரும் இருக்கமுடியாது; அப்படித்தானே.

நண்பர்:
அப்படித்தான்.

நான்:
இன்னொரு கேள்வி - - 
Are you a 'Indian Muslim' or a 'Muslim living in India'?

நண்பரால் சட்டென்று பதில்சொல்ல முடியவில்லை.

நான் 'முஸ்லீம்' மக்களை குறை சொல்வதாக எண்ணிவிடாதீர்கள். இந்த பிரச்சனை இந்துக்கள் உட்பட எல்லா மதத்தவரிடமும் இருப்பதை காண்கிறேன். என்ன காரணம்?

மதம், இனம், மொழி போன்றவற்றால் மக்கள் தம்மை சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் பலரது வட்டத்தில் "இந்தியா" மட்டும் இருப்பதில்லை. அதுதான் காரணம்.

நீங்கள் எந்த வட்டத்திற்குள்ளும் வாழ்ந்து வாருங்கள். ஆனால், வீட்டைவிட்டு வெளியில் வந்துவிட்டால், "நான் இந்தியன்" என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். அப்பொழுதுதான் நமது நாடு முன்னேற்றம் அடையும், வளம்பெறும், வலிமை பெறும்.
.....,....................................
"பணம் முக்கியமில்லை; குணம்தான் முக்கியம் என்று சொல்கிறீர்களே? குணம்தான் முக்கியம் என்றால் கோவிலில் மணியடித்து 'உண்டக்கட்டி' வாங்கி சாப்பிட்டு வாழ்ந்திருக்கலாமே! எதற்காக வேலைக்கு சென்றீர்கள்? எதற்காக பதவி உயர்வு வேண்டுமென்று பரீட்சையெல்லாம் எழுதினீர்கள்?"

(என்னிடமிருந்து வித்தியாசமான பதில் வருமென்று எண்ணி, இந்தமாதிரி கேள்விகளை என் மகன் கேட்பதுண்டு)

அவனுக்கு நான் கூறிய பதில் - -
உண்மைதான். குணம்தான் முக்கியம். அதற்காக பணம் தேவையில்லை என்று அர்த்தமில்லை.

நீ பணத்தை தேடி ஓடுவதை நான் தவறு என்று சொல்லவில்லை; ஆனால், பணத்தை தேடி ஓடுபவனை 'குணம்' பின்தொடரும் என்று உறுதியாக சொல்லமுடியாது.

மாறாக, நீ குணத்தை தேடி ஓடினால், உன் தகுதிக்கு ஏற்ப பணம் உன் பின்னால் வரும். ஆனால், பணத்தின்மேல் உள்ள பிடிப்பு உன்னிடம் இருக்காது.

எது முக்கியம் என்று நீயே முடிவு செய்துகொள்.
....
பின் குறிப்பு:-

குணத்தை மறந்து, பணத்திற்காகவே பதவிக்கு வருகிறவர்கள், தவறான வழிகளில் பணம் சேர்த்து (கொள்ளையடித்து) குடும்பத்தில் வசதியை பெருக்குகிறார்கள். 

இதைத்தான் நமது முன்னோர்கள் "ஊரை அடித்து உலையில் போட்டான்" என்பார்கள்.

இப்பொழுது ஊரையடித்து உலகில் உள்ள மூலை முடுக்கெல்லாம் போட்டு வைக்கிறார்களே; அப்படிப்பட்ட 'குணம் இழந்த மனிதர்களை' பதவியில் அமர்த்தலாமா?

சிந்தியுங்கள்!
...............................................
பல வருடங்களுக்கு முன்னர், ஏழை மாணவர்களுக்கு உதவும் பொருட்டு 'HOPES' என்ற அமைப்பை நடத்தி வந்தோம்.

எனது நண்பர், அலுவகத்தில் தன்னுடன் வேலைபார்க்கும் பெண்ணிடம் இதைப்பற்றி கூற, அந்தப்பெண் தானும் உதவுவதாக கூறினாள். அத்துடன் அந்த அமைப்புக்கு president மற்றும் secretary யார், யார் என்று கேட்டிருக்கிறாள்.

எனது நண்பர் அதெல்லாம் இருந்தால் தேவையில்லாத கௌரவ பிரச்சினை வரலாம் என்று கருதி ஒரே ஒரு coordinator (ஒருங்கிணைப்பாளர்) மட்டும்தான் வைத்துள்ளோம் என்று சொல்லியிருக்கிறார்.

அந்தப் பெண் இதைக் கேட்டதும் மிகுந்த சந்தோஷப் பட்டிருக்கிறாள். அதோடு யார் அந்த coordinator என்று கேட்டிருக்கிறாள்.

நண்பர் என் பெயரை சொல்லவும் அந்தப் பெண்ணின் முகம் மாறிவிட்டது. அவள் "ஏன் சார், உங்களுக்கு வேறு யாரும் கிடைக்க வில்லையா?" என்று கேட்டிருக்கிறாள். 

என்னிடம் நடந்ததை சொல்லி அந்த நண்பர் மிகவும் வருத்தப்பட்டார்.

நீங்கள் வருந்த வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் அந்தப் பெண்ணிடம் எந்த தவறும் இல்லை. அவளுக்கு என்னைப் பற்றி நேரிடையாக எதுவும் தெரியாது. பிறர் சொன்னதை வைத்து அவள் அப்படி நினைத்திருப்பாள். ஆகவே தவறு அவளுடையது அல்ல என்று சொல்லி நண்பரை சமாதானப் படுத்தினேன்.

(அந்தப்பெண் மிகவும் நல்லவள். தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருப்பவள். குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்கவேண்டும் என செயல் படுபவள். யாருடனும் அனாவசியமாக அரட்டை அடிக்கமாட்டாள்).

சில மாதங்கள் கழித்து அவள் எனது section-ல் வேலை பார்க்க வந்தாள். சில நாட்கள் கழித்து என்னிடம் "சார், நான் உங்களைப்பற்றி தப்பாக நினைத்திருந்தேன், sorry, sir" என்றாள்.

நானும் அவளிடம் நீங்கள் வருந்த வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு என்னைப் பற்றி வந்த தகவலை வைத்து ஒரு முடிவிற்கு வந்திருப்பீர்கள். அதில் உங்கள் தவறு என்ன இருக்கிறது? வருந்தாதீர்கள் என்று சொல்லி அவளை அமைதி படுத்தினேன்.
... ...
இந்த சம்பவத்தில் இரண்டு நீதி அடங்கியிருக்கிறது.

1. அந்தப் பெண்ணிற்கு எனது நண்பர் என்னிடம் சொன்னது எதுவும் தெரியாது. இருந்தாலும், தான் இவரைப்பற்றி தப்பாக நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று மனதில் ஒரு உறுத்தல். என்னை பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு குற்ற உணர்வு இருந்திருக்கிறது. அதனால்தான் என்னிடம் 'sorry' என்று சொன்னாள். அது தேவையில்லை. இருந்தாலும், அவளது மனதிலுள்ள பாரம் குறைவதற்கு அது உதவியிருக்கும்.

(மனதில் உறுத்தல் இருந்தால் உடனே சரிசெய்துவிட வேண்டும். இல்லையேல் உறுத்தல் தொடர்ந்து நம்மை வருத்தும்).

2. நமக்கு வரும் செய்திகளை வைத்து, நாம் நமக்குள் பல பதிவுகளை ஏற்படுத்துகிறோம். நமக்கு வரும் பெரும்பாலான செய்திகள் கண் மூலமாகவோ அல்லது காது மூலமாகவோ வரும். செய்தி தப்பாக இருந்தால், தவறான பதிவு, தவறான எண்ணம், தவறான செயல் என இது ஒரு தொடர்கதையாகிவிடும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(இதனால்தான் பெரியவர்கள் "கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் .. தீர விசாரிப்பதே மெய்" என்று சொல்லியிருக்கிறார்கள்).
.............................................
பால்வெளியில் மிதந்துவரும்
பால்வண்ண வெண்ணிலவே-உன்
கள்ளமிலாப் பூமுகத்தில்
கருமேகம் படர்ந்தது ஏன்?

பகலவனின் ஒளிகொண்டு
பால்வண்ணம் நீகண்டாய்
படர்ந்திருக்கும் கருமேகம்
பாரினிலே யார்தந்தார்?

அன்பே இறையென்று
அகிலத்தில் உரைத்திடுவார்
ஆணவத்தில் வெகுண்டெழுந்து
ஆடித் திளைத்திடுவார்!

இனிதே உறவென்று
இயம்பித் திரிந்திடுவார்
ஈன்றவளும் மனம் உடைய
ஈவிரக்கம் மறந்திடுவார்!

ஒன்றே குலமென்று
ஊரெல்லாம் வலம்வருவார்
ஊரார்க்கு உதவென்றால்
ஊருக்கே உலைவைப்பார்!

சாதிகள் இல்லையென்று
சாத்திரங்கள் படைத்திடுவார்
சதிசெய்து சாதிக்குள்
சண்டைகளை ஊக்குவிப்பார்!

ஓரைந்து உயிரினங்கள்
ஒரேதரத்தில் வாழ்ந்திருக்க
ஆறறிவு மனிதர்களோ
வேறுவேறு தரம்கொண்டார்!

பாவிகளாய் பலமனிதர்
பாழ்பட்டு போனதனால் - உன்
கள்ளமிலாப் பூமுகத்தில்
கருமேகம் படர்ந்ததுவோ?
............................................
பெண் அடிமை ஒழிக என்பதும், பெண் விடுதலை வாழ்க என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறா?

இரண்டும் ஒன்றல்ல. அப்படியானால் பெண் அடிமை ஒழிகின்ற இடத்தில் பெண் விடுதலை ஆரம்பமாகிறதா என்றால், அதுவும் இல்லை.

பெண் அடிமை ஒழிகின்ற இடத்திற்கும், பெண் விடுதலை ஆரம்பிக்கும் இடத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. அதனைத் தாங்கி பிடிப்பதுதான் "தாய்மை" எனப்படுவது.

"தாய்மை" என்பது அன்பு, பரிவு, அரவணைப்பு போன்ற நற்பண்புகளை உள்ளடக்கியது; வெறுமனே குழந்தைப் பேற்றை மட்டும் குறிப்பதல்ல.

எப்பொழுது இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளி குறைகிறதோ, அப்பொழுது அந்தப் பெண்ணிடமிருந்து "தாய்மை" நீங்கிவிடுகிறது. 

ஒரு பெண்ணிடமிருந்து "தாய்மை" நீங்கிவிட்டால், அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள கலாச்சாரமும் சீரழியத் தொடங்கி விடுகிறது.
................................
பொதுவாக மக்கள் செய்யும் தேவையில்லாத தவறுகளுக்கு காரணமாக இருப்பது எது என்று ஆராய்ந்தால், அது 'ஆசை' அல்லது 'அறியாமை' என்றுதான் இருக்கும்.

இதில் அறியாமை என்பது கல்வி அறிவு பெறாதவர்கள் என்றில்லை; படித்த மனிதர்களிடமும் காணப்படும்.

சக மனிதர்களின் உயிரைக் காக்கப் போராடி தனது உயிரை இழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய வந்தவர்களிடம் தகராறு செய்த அனைவரும் படிக்காத மனிதர்கள் என்று சொல்லமுடியுமா?

இவர்களின் அறியாமைக்கு, இவர்கள் மட்டுமே காரணம் அல்ல; இவர்களை சரியாக வழிநடத்தாத அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும், ஏன் மதவாதிகளுக்கும்கூட பங்குண்டு.

இவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளாதவரை, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது கடினம்.

அரசியல்வாதி சரி, மதவாதி சரி ஊடகங்கள் என்ன தவறு செய்தது எனக் கேட்கலாம்.

ஊடகங்களின் பணி என்னவாக இருக்கவேண்டும்? நாட்டில் நடக்கும் உண்மைகளை அப்படியே சொல்லவேண்டும்; முடிந்தால் மக்களின் பொதுஅறிவை வளர்க்க வேண்டும். அதைவிடுத்து மக்களின் உணர்ச்சிகளை தேவையில்லாமல் தூண்டிவிடலாமா?

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கிறான். அவனுக்கு அவள் யாரென்றே தெரிந்திருக்காது.

இதை செய்தியாக வெளியிட்டால், அது தவறில்லை. ஆனால் செய்தி இப்படி வருகிறது -- 'தலித்' இனத்தை சேர்ந்த பெண் கெடுக்கப்பட்டாள். 

அவள் தலித் இனத்தை சேர்ந்தவள் என்பதால்தான் அவள் கெடுக்கப்பட்டாள்; இல்லையென்றால் அவன் தவறி நடந்திருக்கமாட்டான் என்று ஊடகம் பறைசாற்ற விரும்பினால் அது நியாயமா?

அரசியல்வாதி சுயநலம் பிடித்தவனாக இருந்தால், அவனை இனம்கண்டு ஒதுக்கவேண்டும்.

ஊடகங்களுக்கு சுயநலம் இருந்தால் என்ன செய்வது?
..........................................
பகவத்கீதை
அத்தியாயம் 3 ஸ்லோகம் 3-ல் "இந்த பூவுலகில் இரண்டு பாதைகள் உள்ளன; ஒன்று ஞான யோகத்திற்கானது; மற்றொன்று கர்ம யோகத்திற்கானது" என கிருஷ்ணன் கூறுகிறார்.

இதற்கு பலர் பலவித விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் 'introvert', 'extrovert' என்ற இரண்டு வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
அத்துடன் அவர்களின் செயல்பாட்டில் விகிதாசார அளவில் நிறைய வேறுபாடு இருக்கும் என்றும் சொல்கிறார்.

ஆக, சிலர் அகவழி நாட்டம் உடையவர்களாகவும் (introvert), சிலர் புறவழி நாட்டம் உடையவர்களாகவும் (extrovert) இருப்பார்கள் என்கிறார்.

மெஞ்ஞானிகள் அகவழி நாட்டம் கொண்டவர்கள். விஞ்ஞானிகளின் செயல்பாடு புறவழியில் சென்றாலும், அவர்களும் அகவழியில் திரிபவர்கள்தான்.

இவர்களது எண்ணம் அனைத்தும் தாங்கள் தேடும் உண்மையினை கண்டுகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.

இவர்களுக்கு பணத்திலோ, புகழிலோ ஆர்வம் இருக்காது.

புறவழி செல்பவர்களில் சிலர் பணத்திற்காக பாடுபடுவர். சிலர் பணம் சேர்ப்பதில் கவனம் இன்றி, பொது நலனுக்காக பாடுபடுவர். புகழ் இவர்களைத்தேடி வரும்.

ஞானத்தை தேடுபவர்கள், புகழைத் தேடுபவர்கள், பணத்தை தேடுபவர்கள் ஆகிய மூவரிடமும் பொதுவாக இருப்பது 'தன்முனைப்பு' மட்டுமே.

தன்முனைப்பு இல்லாத மனிதனிடம்
இந்த தேடுதல் வேட்கை இருக்காது.
..........................................
'ஞானி யார்?'
'ஞானி எப்படி இருப்பார்?'
'ஞானியை அடையாளம் காண்பது எப்படி?'

இவை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். இதற்கு காரணமும் உள்ளது.

நாம் அறிந்த ஞானியர்களில் பலர் துறவு வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள்; பலர் இல்லறத்தில் இருந்தவர்கள். பகவான் கிருஷ்ணரால் சிறந்த ஞானி என குறிப்பிடப்பட்ட 'ஜனகரோ' அரண்மனை சுகத்தை அனுபவித்தவர்.

அப்படியானால் ஞானியை எப்படி அடையாளம் காண்பது?

பண்டிதர்கள் அவர்களுக்கே உரிய கோணத்தில் 'ஞானி என்பவர் யார்' என்று அலசுவார்கள்.

நாம் பாமரர்கள். நாம் நமக்கே உரிய கோணத்தில் பார்ப்போம்.

'ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல்'
என்கிறார் வள்ளுவர்.

'தானடங்கல்' என்றால் என்ன?
மனிதனின் அஹங்காரம் நலிவடைதல் முழுமையாக இருந்தால், அதுவே 'தானடங்கல்' எனப்படும். இதனையே 'மனம் இறத்தல்' என்றும் சொல்கிறார்கள்.

"சினம் இறக்க கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும், மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" 
       - - தாயுமானவர்.

இந்த நிலையை எந்தவொரு பாமரனும் அடையமுடியும் - - முயற்சியும், முயற்சியுடன் கூடிய பயிற்சியும் இருந்தால்.

எல்லாம் சரி; அஹங்காரம் நலிவடைந்துவிட்டது என்பதற்கான அடையாளம் என்ன?

நிறைய சொல்லலாம். முக்கியமான சில அடையாளங்கள் - -

1. தனிமையை விரும்புதல்.

2. உடமைத்தனம் இல்லாதிருத்தல்.

3. பற்றற்ற தன்மை.

4. விருப்பு-வெறுப்பு,
இன்பம்-துன்பம்,
வெற்றி-தோல்வி போன்ற இரட்டைகளில் இருந்து வெளியேறிவிடுதல்.

5. கருணை நிறைந்த மனம்.

இவைகள் உங்களிடம் இருந்தால், நீங்களும் ஞானிதான்.
........................................
நண்பர் திரு. ஆண்டோவை சந்தித்தபொழுது நடந்த ஒரு சம்பவத்தை சொன்னார்.

"நான் தெருவில் நடந்து செல்லும் பொழுது ஒருவர் என்னிடம் வணக்கம் கூறினார். நானும் பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு 'தம்பி நீங்க யாரென்று தெரியவில்லையே' என்றேன். அவர் 'சார், மறந்துவிட்டீர்களா; நான் பள்ளியில் படிக்கும் பொழுது எனக்கு கண்ணாடி வாங்கிக் கொடுத்தீர்களே' என்றார்.

(நாங்கள் 'HOPES' என்று ஒரு அமைப்பு வைத்திருந்தோம். அதன்மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவி வந்தோம். அப்பொழுதுதான் இவருக்கு படிக்க வசதியாக "ஆண்டோ" மூலமாக ஒரு கண்ணாடி வாங்கிக்கொடுத்தோம்)

இப்பொழுது நினைவிற்கு வருகிறது. நன்றாக இருக்கிறீர்களா; இப்போ என்ன செய்கிறீர்கள் என்றேன். பதிலுக்கு அவர் 'G.H.-ல் டாக்டராக வேலை பார்க்கிறேன்' என்றார்." 

அவர் தன் கையை என்னிடம் காட்டி "பார்த்தீர்களா சார், இப்படித்தான் அன்றும் அந்தப் பையன் சொன்னதை கேட்டதும் என் கை புல்லரித்துவிட்டது" என்றார்.

நான் சிரித்துக்கொண்டே "ஏங்க, நாம் செலவு செய்தது 150 அல்லது 200 ரூபாயாக இருக்கலாம். இதைவிட பல மடங்கு தொகையை செலவிட்டு, யாரோ அந்த மாணவனை மருத்துவ துறையில் படிக்க வைத்திருக்கலாம். தவிர நாம் செலவு செய்ததில் உங்கள் பங்கு ஒரு ரூபாயாகக் கூட இருக்கலாம். அதனால் இந்த புல்லரிப்பு தேவையில்லாதது.

இருந்தாலும் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நாம் எவ்வளவோ செலவு செய்கிறோம்; பல நேரங்களில் சந்தோஷமும் அடைகிறோம். ஆனால் இது அப்படியல்ல; இதுபோன்ற செலவுகள் ஆத்மாவை திருப்தி படுத்துபவை.

பகவான் கிருஷ்ணர் "ஆத்மாவில் திருப்திகொள்" என்கிறார். ஏசு கிறிஸ்து "மண்ணுலகில் சொத்து சேர்க்காதீர்கள்; விண்ணுலகில் சொத்து சேருங்கள். ஏனென்றால் சொத்து எங்கே இருக்கிறதோ, அங்கேதான் உங்கள் மனமும் இருக்கும்" என்கிறார்.

நாம் செய்யும் ஒருசில செலவுகளாவது ஆத்மாவை திருப்தி செய்வதாக இருக்கவேண்டும்" என்றேன்.
...........................................
நம்பிக்கை என்பது தனி மனிதனை பொறுத்தது.

வாழ்வியல் தத்துவங்கள் அனைவருக்கும் பொதுவானது.

ஒரு மனிதன் கொண்டுள்ள நம்பிக்கை நமக்குத் தவறெனத் தோன்றினால், அவனுக்கு உண்மையைப் புரியவைக்க வேண்டும். முடியவில்லை என்றால் விட்டு விட வேண்டும்.

நம்பிக்கையின் காரணமாக ஒருவன் செய்யும் காரியம் சமூகத்தில் தீங்கிழைத்தால் மட்டுமே நாம் கண்டிக்க வேண்டும்.

இல்லையெனில் எதற்காக அவனை எள்ளி நகையாட வேண்டும்?
***
பல வருடங்களுக்கு முன் படித்த ஒரு கதை ---
குழந்தையை விட்டுவிட்டு மனைவி 'பாகீரதி' இறந்துவிட, கணவன் குழந்தைக்காக மறுமணம் செய்துகொள்கிறான்.
ஆனால், மனைவி அந்தக் குழந்தையை நன்கு கவனிப்பதில்லை.

ஒருநாள் காலையில் ஒரு ஈ அந்த குழந்தையின் முகத்தில் வந்து அமர்கிறது. எவ்வளவு விரட்டினாலும் அது போகவில்லை. அவன் மனதில் அது 'பாகீரதி' என்று ஒரு எண்ணம் வந்துவிடுகிறது. அந்த ஈயைப் பார்த்து தன்னை மறந்து குழந்தையை நன்கு பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிடுகிறான்.

திரும்ப வரும்பொழுது வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. வந்து பார்த்தால் குழந்தை பால் குடிக்க மறுக்கிறது. மனைவியிடமிருந்து பால் புட்டியை வாங்கி அவன் கொடுத்தாலும் குழந்தை குடிக்கவில்லை.

குழந்தையின் அழுகுரல் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்துவிடுகிறார்கள்.

அதில் ஒருவர் பால்புட்டியை வாங்கி ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்காக புட்டியிலிருந்து இரப்பரை பிரித்து எடுக்கிறார். பாலில் விஷம் கலந்திருப்பது தெரிகிறது. எல்லோரும் அவன் மனைவியை திட்டுகிறார்கள்.

எது பாலை தடுத்து நிறுத்தியது என்று பார்த்தால், உள்ளே ஈ செத்துக் கிடக்கிறது.
அதை குழந்தையின் தகப்பனிடம் காட்ட, அதை பார்த்த அவன் "பாகீரதி" என்று கதறி அழுதான்.
......
அவன் ஏன் பாகீரதி என்று அழுதான் என்பதை சொன்னால், கேட்டவர்கள் என்ன சொல்வார்கள்?
...........................................
நமது நாட்டில் உள்ள பல்வேறு துறைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

நாட்டின் பாதுகாப்பு (defence), வெளியுறவு (external affairs) போன்ற துறைகள். இவற்றை கையாள வேண்டியது மத்திய அரசின் கடமை.

நிதி நிர்வாகம் (finance), நீர்ப்பாசனம் (irrigation), போக்குவரத்து (infrastructure), உள்நாட்டு பாதுகாப்பு (home affairs) போன்ற துறைகள்.
இவற்றை கையாள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உண்டு. 

கல்வி (education), விவசாயம் ( agriculture), மருத்துவம் (medical) போன்ற துறைகள். இதுபோன்ற துறைகளை மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டுவிடலாம். மத்திய அரசில் இதற்கென்று தனித்தனியாக மந்திரிசபைகள் தேவையில்லை. அதற்குப் பதிலாக பொதுவான ஒரு ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தி, தேவையான அறிவுறைகளை அவ்வப்போது மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கலாம்.

இதை நடைமுறைப் படுத்தினால், மத்திய அரசாங்கத்திற்கு செலவு குறையும். தவிர, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உரசல்களையும் குறைக்கலாம்.
...........................................
"நான் எந்த கெட்ட வழியிலும் செல்வதில்லை. யாருக்கும் கெடுதல் செய்ய நினைப்பதில்லை. குடும்பத்திற்கு தேவையான வருமானமும் வருகிறது. ஆனாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை.
கெட்டவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?" .. நண்பர் புலம்பி தீர்த்துவிட்டார்.

அவரிடம் நான் சொன்னது - - வாழ்க்கையில் சில அடிப்படை விதிகள் உண்டு. அவற்றில் ஒன்று --- "சிந்திக்கிறவன் புலம்பமாட்டான்; புலம்புகிறவன் சிந்திக்கமாட்டான்".

'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் -- துன்பம்
சுடச்சுட நோற்கிப்பவற்கு'
என்கிறார் வள்ளுவர்.

சோதனை வந்தால், துன்பம் வந்தால் 'தவம்' செய்; வீணே புலம்பாதே என்கிறார்.

தவம் என்றால் என்ன? அதை ஏன் செய்ய வேண்டும்?

மனிதன் வேதனை படுவதற்கு மூலகாரணமாக இருப்பது, இரண்டே இரண்டு காரணிகள்தான். அவை "நான்" மற்றும் "என்னுடைய" என்ற உணர்வுகள்தான்.

முறையாக தவம் செய்தால், இந்த இரண்டும் அடங்கிவிடும். அதன்பின் எது நடந்தாலும் மனதில் வேதனை வராது.

ஏனெனில் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை, பிரச்சினைகளாக மாற்றி வேதனைப் படுவது நமது மனதின் இயல்பு.

(There is no such thing as a 'problem'. Only incidents happen; we alone convert them into problems).

தவம் நான்கு வழிகளில் செய்யலாம் --

1. அகத்தாய்வு. 'நான்' உண்மையில் யார் என்று ஆராய்வது. இதற்கு விவேகம் நிறைந்த புத்தி தேவை. இந்த வழியில் சென்றால் 'நான்' என்கின்ற உணர்வு குறைந்துவிடும். (Ego will be sublimated).
(ஞான மார்க்கம்).

2. நான், என்னுடைய குடும்பம் என்றில்லாமல், பிறருக்காவும் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபடுதல். (கர்ம மார்க்கம்).

3. இறைவனிடம் முழுமையாக சரணடைதல். இதில் எந்தவித வேண்டுகோளும் இருக்கக்கூடாது. எது நேரிட்டாலும் அதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வளரவேண்டும்.
(பக்தி மார்க்கம்).

4.தியான மார்க்கம். இயமம், நியமம் முதலிய எட்டு படிநிலைகளிலும் பயணம் செய்தல்.

முதலாவது மார்க்கம், 'நானை' மறக்க செய்துவிடும்; மற்ற மூன்றும் 'என்னுடைய' என்ற எண்ணத்திலிருந்து உன்னை விலகச் செய்துவிடும்.

உனக்கு ஏற்புடைய வழியைக் கண்டுபிடி. அதில் பயணத்தை தொடங்கு. 

அதில் வெற்றிபெற்றால், அதன்பின் மனதில் வேதனையே வராது.
.........................................
நாத்திகவாதிகள் தங்களை 'பகுத்தறிவுவாதிகள்' என்று பறைசாற்றிக் கொள்வார்கள். அப்படியானால் ஆன்மீகவாதிகளுக்கு பகுத்தறிவு கிடையாதா?

ஒரு ஆன்மீகவாதி என்பவன் பகுத்தறியும் தன்மை மிகுந்தவனாகத்தான் இருப்பான். அவன் மதவாதியிலிருந்து வேறுபட்டவன்.

மதவாதிக்கும், ஆன்மீகவாதிக்கும் என்ன வித்தியாசம்?

ஆன்மீகவாதி மதங்களின் மூலம் மதங்களை கடந்தவனாக இருப்பான்.

கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும்.

மனிதர்கள் கடவுளைக் கும்பிட கோயிலுக்கு செல்கிறார்கள். பக்தியோடு கடவுளை வணங்குகிறார்கள். ஆனால் திருமறைகள் சொல்லும் நெறிமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்று சொல்லமுடியுமா?

மனிதன் மதம்பிடித்து அலையக்கூடாது என்பதற்காக மதங்களில் உள்ள திருமறைகள், பல உபதேசங்களை முன்வைக்கின்றன.

ஆனால் மதவாதிகளோ மனிதர்களை மனிதநேயத்தை துறந்து நெறிதவறி நடக்க வழிகாட்டுகிறார்களே? அது சரியா?

இதனை நினைத்து வேதனைப்பட்டு, ஆன்மீகத்தின் உண்மைத் தன்மைகளை புரியாத நேரத்தில் நான் எழுதியது - -

மதம்பிடித்த
   மனிதர்களின்
மதமடக்க
   மதம்படைத்தால்
மதமடக்க
   வந்தமதம்
மதம்பிடித்து
   ஆடுவதேன்?

மதமடக்க
   வந்தமதம்
மதம்பிடித்து
   ஆடுவதால்
மதமடக்க
   மதம்தேடி
மனிதர்களும்
   ஓடுவதேன்?

பின்னாளில் ஆன்மீகம் புரிந்தபின் இதற்கான காரணம் விளங்கியது.

மதத்தில் உள்ளவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை --

1. இறைவனை, இயற்கையை வியந்து பாடுவது.

2. சடங்கு, சம்பிரதாயங்கள், வழிபாட்டு நெறிமுறைகள் போன்றவைகளை வலியுறுத்துவது.

3. வாழ்வியல் உண்மைகளை விளங்க வைப்பது.

இந்த மூன்றில், முதல் இரண்டும் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மூன்றாவது மானிடர் அனைவருக்கும் பொதுவானது. கடவுளை நம்புகிறவன், நம்பாதவன் என்ற பாகுபடின்றி அனைவரும் கடைப்பிடித்தால் சமுதாயத்தில் உண்மையான வளர்ச்சி இருக்கும்.
பிறரை வதைத்து வாழும் எண்ணம் வராது. 

மிகவும் எளிமையான வரிகளில் கவிஞர் சொல்கிறார் - - 

"கருணை பொங்கும்
     உள்ளம் - அது
கடவுள் வாழும்
     இல்லம்..."

மதவாதி என்று சொல்லிக்கொள்பவர்கள், முதல் இரண்டில் மட்டும் கவனம் செலுத்துவதால், மனிதர்கள் மத்தியில் நெறியை வளர்க்காமல் வெறியை வளர்க்கிறார்கள்.

கவிஞர் தொடர்கிறார்- -
"...கருணை மறந்தே
     வாழ்கின்றார்
கடவுளைத்தேடி
     அலைகின்றார்"

எல்லோர் மனதிலும் கருணையை எதிர்பார்க்க முடியாதுதான்; கொஞ்சமாவது 'அன்பு நிறைந்த மனம்' இருக்கலாம் அல்லவா? 

மனிதனிடம் 'அன்பை வளர்க்கும்' நெறியை வளர்க்காத மதவாதிகளை என்னவென்று சொல்வது?
..........................................
மனிதனின் மனதில் பலவிதமான அனுபவம் பதிவுகள் இருக்கும். 

அது பாரமாக மாறி நம்மை வருத்தாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் தலையில், தோளில், முதுகில், இடுப்பில் என பல உறுப்புகளின் உதவிகொண்டு சுமைகளை சுமக்கிறோம். பாரம் அதிகமாக இருந்தால், கீழே இறக்கி வைக்கிறோம்.

ஆனால், மனதில் எவ்வளவு பாரத்தை ஏற்றினாலும் அது மறுப்பு சொல்லாது. 

பாரத்தின் அளவு
அதன் தாங்கும் சக்தியை சிறிது தாண்டினாலும், அது நம்மிடம் எதுவும் சொல்லாது; மாறாக  அது நம்மை 'hysteria'-வரை இழுத்துச்சென்றுவிடும்.

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்" என்கிறார் வள்ளுவர்.

மனித மனத்தை குறித்துதான் சொன்னாரோ!
..........................................
விஷக்கிருமியின் தொற்று காரணமாக, பலர் தனிமை கொடுமையானது என்று நினைக்கிறார்கள்.
உண்மையில் தனிமை கொடுமையானதுதானா?

முன்னர் ஒரு மாணவருடன் நடந்த உரையாடல் - -

மாணவன்:
வாழ்க்கையை நினைத்தால் பயமாக இருக்கிறது.

நான்:
எதனால் அப்படி நினைக்கிறாய்?

மாணவன்:
தெரியவில்லை.

நான்:
நான் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில்சொல்லவேண்டும், சரியா?

மாணவன்:
சரி, Sir.

நான்:
எத்தனை மணிக்கு எழுந்திருப்பாய்?
எத்தனை மணிக்கு கல்லூரிக்கு புறப்படுவாய்?
எத்தனை மணிக்கு வீட்டிற்கு திரும்புவாய்?
வீட்டுப்பாடத்திற்கு எவ்வளவு நேரம் செலவிடுவாய்?
விளையாட்டிற்கு எவ்வளவு நேரம் செலவிடுவாய்?

ஒவ்வொரு கேள்விக்கும் உடனுக்குடன் பதில் சொன்னவன், நான் கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் பதில்சொல்லாமல் மௌனமாகிவிட்டான் 

அந்தக் கேள்வி - -
"எவ்வளவு நேரம் சிந்திக்கிறாய்?" என்பதுதான்.

சிரித்துக்கொண்டே இப்பொழுதுதான் முதன்முறையாக சிந்திக்கிறாயா என்றேன்.

"இதுதான் உன்னுடைய பிரச்சினை. எதையாவது நினைத்து பயப்படுவதற்குப் பதிலாக, 'சிந்திக்க' கற்றுக்கொள்; உள்ளம் தெளிவாகும்" என்றேன்.

நாமும் நினைப்பதற்குப் பதிலாக சிந்திப்போமே!

நினைப்பது, சிந்திப்பது - - இரண்டிற்குமிடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

மனம் நினைக்கிறது; புத்தி சிந்திக்கிறது.

சிந்திப்பதில் நேரத்தை செலவிட்டால், தனிமை என்பது சாபமல்ல, அது ஒரு வரம் என்பது புரியும்.
............................................
ஜாதகம் குறிப்பதில் எனக்குப்
பொதுவாக ஆர்வம் இருந்தது இல்லை. அது என் நம்பிக்கையின்மையைத்தானே குறிக்கிறது!

ஆனால், தனித்தனியே கணிக்கப்பட்ட ஜாதகங்கள் சொன்னது சரியாக இருந்ததை நேரில் பார்த்தபோது எனது நம்பிக்கையின்மை தகர்ந்து விட்டது.

இந்தப் பதிவு ஜாதகத்தைப் பற்றியது அல்ல; நம்பிக்கையை பற்றியது.

நாம் பலவற்றை நம்புகிறோம் அல்லது நம்ப மறுக்கிறோம். அது எவ்வாறு நிகழ்கிறது என சிந்தித்தபோது, மனதில் பலவிதமான கேள்விகள் எழுந்தன.

1. அது நமக்குள் இயல்பாக வந்ததா?

2. யாராவது சொல்லி வந்ததா?

3. யாரையாவது அல்லது எதையாவது பார்த்து வந்ததா?

4. உண்மை புரிந்ததால் வந்ததா அல்லது புரியாமலே வந்ததா?

5. அறிவு இருந்தும் தவறான செய்திகளை நம்புகிறோமே, ஏன்?

6. "..குருடும் குருடும் குழிவீழும் ஆறே" என்கிறார் திருமூலர். "Blind follows the blind" என்கிறார் ஏசுநாதர். அப்படி இருந்தும் கண்ணை மூடிக்கொண்டு தவறான மனிதர்களை நம்புகிறோமே, ஏன்?

7. சுயசிந்தனை இல்லாதவன் நம்பினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. சுயமாக சிந்திக்கத் தெரிந்தவனும் நம்புவது ஏன்?
.....................................
ஒரு அன்பர் 'ஒதுங்குதல், ஒடுங்குதல், மறத்தல், இறத்தல் என்றால் என்ன' என்பது பற்றி விளக்க முடியுமா எனக் கேட்டிருந்தார்.

இவற்றை நான் எவ்வாறு புரிந்துகொண்டேன் என்பதை ஒவ்வொன்றாக விளக்குகிறேன். 

முதலில் 'ஒதுங்குதல்'

நாம் எந்த செயலும் செய்யாதபோது, மனமும் செயலற்று இருந்தால் அதை ஒதுங்குதல் எனலாம். அதாவது வெளியுலக தாக்கம் ஏதுமின்றி மனம் ஒதுங்கி இருக்கிறது எனலாம்.

ஆனால், உடலால் செயல்புரியும் பொழுதும், மனம் செயலற்று ஒதுங்கி இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நாம் தினமும் உண்ணுவது, உறங்குவது போன்ற சில செயல்களை கண்டிப்பாக செய்ய வேண்டியிருக்கிறது. அதேபோல் குடும்பத்தில், அலுவகத்தில், சமுதாயத்தில் என பல நிலைகளிலும் செயல்பட வேண்டியிருக்கிறது.

அந்த நேரங்களில் பலவித தாக்கங்கள் நம்மை வந்து சேருகின்றன. அவற்றை மனம் உள்வாங்கிக் கொள்ளாதவரை நமக்குள் எந்தப் பதிவும் ஏற்படுவதில்லை. (இதைத்தான் ஒதுங்குதல் என்கிறோம்). 

செயல்புரியும் பொழுது அதன் விளைவாக ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து மனம் ஒதுங்கியிருக்கக் கற்றுக்கொண்டால், மனதில் பதியக்கூடிய புதிய பதிவுகள் தவிர்க்கப் படுகின்றன.

செயல்படும் பொழுது மனதால் ஒதுங்க முடியுமா என்ற சந்தேகம் வந்தால், அது நியாயமே!

தண்ணீரில் கலந்த சாயத்தையும், காற்றில் மிதக்கும் வாசத்தையும் நினைவு கூறுங்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

சாயம் கலந்துவிட்ட நிலையில், தண்ணீரைத் தனியாக பிரித்து எடுக்க முடியாது. ஆனால், வாசம் எவ்வளவுதான் காற்றில் மிதந்தாலும், காற்று அதனைத் தன்னில் கலக்க விடுவதில்லை.

நமது மனமும் காற்றைத் போன்று செயல்பட்டால், எந்த செயலும் நம்மை பந்தப்படுத்தாது. நாளடைவில் அதுவே நமக்கு பற்றற்று செயல்படும் வித்தையை கற்றுத்தரும்.

எந்த அளவிற்கு மனம் ஒதுங்குகிறதோ, அந்த அளவிற்கு அது கூர்மை அடைகிறது. 

அது "அகத்தாய்வு" செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
..... ..... ..... .....

"ஆங்காரம் உள்ளடக்கி 
ஐம்புலனும் சுட்டறுத்து 
தூங்காமல் தூங்கி
சுகம்பெறுவ தெக்காலம்?"
.. பத்திரகிரியார் 

ஒரு மனிதனின் "நான்"(!!) எங்கு வாசம் செய்கிறது?
அது வாசம் செய்யும் இடம் 'ஆழ்மனம்' என்றால் நம்ப முடிகிறதா?

மூன்று கற்பனைகள்:-

1. எனக்கு எனது பேத்தி மீது  மிகவும் பிரியம். அவளைப் பற்றி நினைக்காத நாளே இல்லை. 

என்னில் அவளை நினைக்கத் தூண்டுவது எது? அவள் மேல் நான் வைத்துள்ள "பற்று" ஆழ்மனதில் பதிவானது தான் காரணம்.(Box containing attachments) 

2. சின்னப்பய அவன்; என்னைப் பற்றி என்னவெல்லாம் பேசியிருக்கான்.  இப்பதான் எல்லாம் கேள்விப்பட்டேன். வரட்டும்; அடுத்த வாரம் ஊருக்கு வருவான்ல. அன்னைக்கு இருக்கு கச்சேரி. அதற்கப்புறம் என்னைப் பற்றி வாயைத் திறந்து ஏதாவது சொல்வானா; பார்க்கலாம். 

இந்த எண்ணம் எதனால் வருகிறது? அவன் மேல் எனக்கு ஏற்பட்ட "கோபம்" ஆழ்மனதில் பதிவானது தான் காரணம்.(Box containing emotlons) 

3. நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்க்கிறேன். ஒன்றும் முடிய மாட்டேன் என்கிறது. இந்த வருடம் எப்படியாவது ஒரு வீடு சொந்தமாக வாங்கிவிட வேண்டும்.

இந்த எண்ணம் ஏன் தோன்றுகிறது? ஆழ்மனதில் "சொந்தமாக ஒரு வீடு வேண்டும்" என எண்ணி அது நிறைவேற தாமதம் ஆவதால் ஏற்படும் ஏக்கமே இதற்கு காரணம். (Box containing dreams) 

இந்த மூன்று பெட்டகங்கள் தவிர மேலும் ஒரு பெட்டகம் ஆழ்மனதில் உண்டு. அது "box containing memories".

முறையான பயிற்சிகள் செய்வதன் மூலம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெட்டிகள் முற்றிலும் காலியாகி விடுகின்றன. முதலாவது பெட்டியில் இருக்கும் அனைத்தும் நான்காவது பெட்டிக்கு (memory box) இடம் பெயர்ந்து விடுகின்றன.

பற்றறுந்த நிலையில் அந்த மனிதன் "விழிப்புணர்வு" பெற்ற மனிதனாக மாறி விடுகிறான். "... மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று சொல்லுவது, இந்த மூன்று பெட்டிகளும் காலியாக வேண்டும் என்பதை குறித்துதான்.

அதன்பின் அவனது ஆழ்மனம் ("நான்" வசிக்கும் இடம்) சாட்சி பாவத்திற்கு வந்து விடுகிறது. எனவே தூக்கம் எதுவும் தேவையின்றி, சதா விழிப்பு நிலையில் ஒரு சாட்சியாக எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.

விழிப்புணர்வு பெறாத நிலையில், உடல், உணர்வு மனம் (conscious-mlnd),  உணர்வற்ற மனம் .. அதாவது ஆழ்மனம் (subconscious-mind) .. மூன்றும் களைத்துவிடும் போது உறங்குவதுண்டு.

விழிப்புணர்வு பெற்ற நிலையில் ஆழ்மனதிற்கு உறக்கம் எதுவும் தேவைப்படுவதில்லை. அது எப்போதும் "சாட்சி பாவத்துடன்" செயல் படும்.

அந்த நிலையில் "உடலும், உணர்வு மனமும்" தூங்கும் போது, "ஆழ்மனம்" தூங்காமல் சாட்சி பாவத்துடன் அவற்றை .. உணர்வு மனம் காணும் கனவுகளைத் கூட .. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.

இதை குறிப்பிட்டுதான் "தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்" என பத்திரகிரியார் பாடுகிறார்.
............................