Tuesday, 26 November 2024

அஞ்சும் அடக்கு

அஞ்சும் அடக்கு
பதிவு 1 

"அஞ்சும் அடக்கு, அடக்கு"
      என்பர் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் 
      அங்கு இல்லை
அஞ்சும் அடுக்கில் 
     அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு
     அறிந்தேனே
.. திருமந்திரம் 2033

அஞ்சும் அடக்கினால் அது அறிவற்ற சடப்பொருளுக்கு சமம்; தவிர ஐந்தையும் அடக்கிய தேவர்களும் இல்லை என்கிறார் திருமூலர்.

கூடவே, ஐந்தையும் அடக்காமல் இயங்கும் உபாயத்தை அறிந்து கொண்டேன் என்றும் சொல்கிறார்.

திருவள்ளுவர், பத்திரகிரியார் போன்றோர் சொல்லியிருப்பவைகளை பார்த்தால், அவை திருமூலர் கருத்துக்கு எதிரான கருத்துக்களாக தோற்றம் அளிக்கின்றன.

இதனை எப்படி புரிந்து கொள்வது?

                       (தொடரும்)


அஞ்சும் அடக்கு
பதிவு 2

ஒருமையுள் ஆமைபோல்
  ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து
.. திருக்குறள் 126

திருவள்ளுவர் "ஐந்தடக்கல்" என்று கூறுகிறார்; எந்த ஐந்து என்று கூறவில்லை. ஆனால் விளக்கம் கொடுப்பவர்களில் சிலர் "ஐந்து பொறிகள்" என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆமை வரும் ஆட்கண்டு 
  ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு 
  ஒடுங்குவது மெக்காலம்?
.. பத்திரகிரியார் (19)

இதற்கு உரை எழுதியவர்கள் "பஞ்சேந்திரியங்களை ஒடுக்கி" என்று குறிப்பிடுகிறார்கள்.

இதைப் போன்றதொரு குறிப்பு கீதையிலும் வருகிறது - -
"தேவைப்படும்போது, ஆமை தன் உடம்பை ஓட்டுக்குள்ளே இழுத்துக் கொள்வது போல், எப்போது தன் ஐம்புலன்களையும் உணர்ச்சிகள் தாக்காமல் எவன் மீட்டுக் கொள்கிறானோ, அவன் அறிவே நிலையானது"
.. பகவத்கீதை (2.58)

மேலே கூறியவற்றுள் "கீதை"
சொல்லும் கருத்தே சரியானதாகும். அது எப்படி என்று பார்ப்போம்.

இவர்களின் கூற்றுக்கும், திருமூலர் கூற்றுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

இவர்கள் ஆரம்ப நிலையில் மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறார்கள். திருமூலர் அறுதி நிலையில் மனிதனிடம் இருக்க வேண்டிய உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறார்.

                     (தொடரும்)

அஞ்சும் அடக்கு
பதிவு 3

மனிதனின் சுபாவம் மற்றும் அவனது பழக்கம் பற்றி இரண்டு பழமொழிகள் ...
1. பிறவி குணத்தை மாற்ற
     முடியாது. 
2. தொட்டில் பழக்கம் சுடுகாடு
     மட்டும்.
இந்த இரண்டையும் முழுமையாக ஏற்பதற்கில்லை. பலர் "பிறவி குணத்தையும், தொட்டில் பழக்கத்தையும்" மாற்றிய வரலாறு நிறைய உண்டு.

இது சம்பந்தமாக ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது மிகுந்த நம்பகத்தன்மை உள்ளதாக இருக்கிறது. அது ..
"Habits die hard"
நேரடியாக பொருள் கூறாமல் சொல்வதாக இருந்தால் "பழக்கம் என்பது எளிதாக மாற்றக்கூடிய ஒன்றல்ல". இதிலிருந்து முயற்சி செய்தால் "பழக்கத்தை" மாற்ற முடியும் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆக, மாற்ற வேண்டிய ஒன்று "ஐம்புலன்களைத்தான்"; ஆனால், அவற்றை நேரடியாக மாற்ற முடியாது.

கண்டிக்க தக்கது, மாற்ற வேண்டியது "ஐம்புலன்கள்" என்றால், முதலில் அவற்றின் செயல்பாடுகள் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.

                           (தொடரும்)

அஞ்சும் அடக்கு
பதிவு 4

மனிதனின் செயல்பாடுகளுக்கும், "ஐம்புலன்களுக்கும்" என்ன சம்பந்தம்?

"உன்னை நீயே கட்டுப்படுத்தி வளர்ச்சி அடைய முடிந்தால், நீயே உனக்கு நல்ல நண்பன்; உன்னால் உன்னை கட்டுப் படுத்த முடியாமல் நீ வீழ்ச்சி அடைந்தால், நீயே உனக்கு முதல் எதிரி" .. கீதை 6.5; 6.6

இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன ..
1. கட்டுப்படுத்துதல் என்றால்
    என்ன?
2. யாரை அல்லது எதை கட்டுப்
     படுத்த வேண்டும்?

ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால், கட்டுப்படுத்த வேண்டியது மனிதனை தவறான செயல்களுக்கு இழுத்துச் செல்லும் "ஐம்புலன்களை" என்பது புரியும். ஆனால், எந்தவொரு உந்துதலும் இல்லாமல் அவைகளால் அவ்வாறு செயல்பட முடியாது. அப்படியானால் அவற்றின் பின்னணியில் இருக்கும் காரணி எது?

                       (தொடரும்)

அஞ்சும் அடக்கு
பதிவு 5

ஐம்புலன்களும்
மனிதனை தவறான செயல்களுக்கு இழுத்துச் செல்கிறது என்றால், அதற்கான காரணம் "ஆழ்மனதில் உள்ள பதிவுகளே". 

அதேபோல் ஆழ்மனதில் பதிவுகள் எவ்வாறு நிகழ்கின்றன என்று பார்த்தால், அதற்கு காரணியாக இருப்பது "ஐம்புலன்களே".

இது 'கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா' என்ற கதைதான்.

இது ஒரு மாய சுழற்சி. இந்த சுழற்சி  'புற உலகிலிருந்து உள்ளுக்கு, உள்ளுக்குள் இருந்து புற உலகுக்கு'  என ஒரு வட்டமாக செயல் படுகிறது.

இந்த சுழற்சி ஏற்படுத்தும் தொல்லைகளை புரிந்து கொண்டு, 'ஐம்புலன்களையும்' எப்படி கையாள்வது எனத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை மிகுந்த அமைதியுடன்  வழி நடத்த முடியும்.

                      (தொடரும்)

அஞ்சும் அடக்கு
பதிவு 6

'புற உலகிலிருந்து உள்ளுக்கு, உள்ளுக்குள் இருந்து புற உலகுக்கு' என ஒரு வட்டமாக செயல்படும் சுழற்சியை அறிந்து கொள்ளும் முன், நாம் வேறு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஐம்புலன்கள் என்றால், சிலர் 'மெய், வாய், கண், மூக்கு, செவி' என்று சொல்வதுண்டு. அவை 'ஐம்புலன் கருவிகள்' 
(sense organs) மட்டுமே. ஐம்புலன்கள் (senses) என்பது அந்தக் கருவிகளையும், மனதையும் இணைக்கும் பாலம்.

'மனதை' ஒரு அதிகாரி என்று எடுத்துக் கொண்டால், ஐம்புலன்கள் மனதின் உதவியாளர்கள்; ஐம்புலன் கருவிகள் அவற்றின் வேலையாட்கள்.

மனம் எதையாவது நினைத்தால் போதும்; ஐம்புலன்களும் உடனே சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்து விடும்.

புதியதாக ஒரு கார் வாங்க வேண்டும் என நினைத்தால், உடனே ஐம்புலன்களும் கருவிகளின் மூலம் தேவையான தகவல்களை சேகரித்து மனதிடம் கொண்டு சேர்த்து விடும்.

கார் வாங்கும் வரை அல்லது கார் வாங்க வேண்டாம் என்று முடிவு எடுக்கும் வரை ஐம்புலன்கள் தகவல்களை திரட்டிக் கொண்டே இருக்கும்.

'நாமும் கொஞ்சம் குடித்தால் என்ன' என்று நினைத்தாலே, அவை ஊரில் எங்கெங்கு சாராயக் கடைகள் உள்ளன என்று தேட ஆரம்பித்து விடும்.

அவற்றிற்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும், அவை நமது மூளையை மழுங்கச் செய்து நம்மை சாராயக்கடை வரைக்கும் இழுத்துச் சென்று விடும்.

(When the mind follows the wandering senses it carries away the understanding, as winds do a boat upon the waters. Gita 2.67)

இனி, உள்ளும் புறமும் நடைபெறும் சுழற்சியை பார்ப்போம்.

                      (தொடரும்)

அஞ்சும் அடக்கு
பதிவு 7

புறவுலகில் மனிதனுக்கு ஏற்படும் அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்கள் மூலமாகவே பெறப்படுகின்றன.

ஐம்புலன்கள் வேலை செய்யாவிட்டால் புறவுலகிலிருந்து எந்த தாக்கமும் மனிதனை வந்தடையாது.

ஆக, சுழற்சியின் ஆரம்ப புள்ளி ஐம்புலன்களே. சுழற்சியின் வட்டப்பாதை ..

பள்ளியில் படிக்கும் சக மாணவன் குறிப்பிட்ட கடையில் ஐஸ்கிரீம் நன்றாக இருக்கும் எனக் கூறுகிறான்.
(1. புறவுலகிலிருந்து புலன்கள் மூலமாக மனிதனிடம் ஏற்படும் தாக்கம்)

மறுநாள் தந்தையுடன் கடைத் தெருவுக்கு செல்லும்போது, அந்தக் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என நினைத்துக் கொள்கிறான்.
(2. தாக்கம் காரணமாக உணர்வு மனதில் "conscious mind" ஒரு பதிவு)

மறுநாள் கடைத் தெருவுக்கு செல்லும்போது தந்தையிடம் கேட்டு, குறிப்பிட்ட கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுகிறான்.
(3. உணர்வு மனதில் இருந்த ஆசை செயலாக
நிறைவேறுகிறது)

ஐஸ்கிரீம் அவனுக்கு பிடித்ததால் தினந்தோறும் அதை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறான்.
(4. தொடர்ந்து நடைபெறும் செயல் பழக்கமாக மாறி ஆழ்மனதில் "subconscious-mind" ஒரு பதிவை ஏற்படுத்துகிறது)

இவை அனைத்தும் புறவுலகிலிருந்து ஆழ்மனம் வரை உள்ள பயணத்தைக் குறிக்கிறது. இனி ஆழ்மனதில் இருந்து புறவுலகம் நோக்கிய பயணம்.

                         (தொடரும்)

அஞ்சும் அடக்கு
பதிவு 8

ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகளை "வாசனா" பதிவுகள் என்பர். 

மனிதன் பிறக்கும்போதே ஆழ்மனப் பதிவுகளுடனே பிறக்கிறான். அவை முற்பிறவியின் முடிவில் எஞ்சியவை.

1. ஆழ்மனப் பதிவுகளின் காரணமாக, மனிதனிடம் அஹங்காரம் (ego) உருவாகி அழுத்தம் பெறுகிறது.

2. அஹங்காரம் மனிதனிடம் ஆசையை உண்டுபண்ணுகிறது.

3. இதனை ஒட்டியே அவனது சுபாவம் (nature), மனோபாவம் (mental attitude) ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது.

4. ஆசைகள் கொடுக்கும் உந்துதல் காரணமாக உணர்வு மனம் ஐம்புலன்கள் மற்றும் ஐம்புலன் கருவிகள் துணை கொண்டு புறவுலகில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

5. அந்த தாக்கத்தின் காரணமாக ஏற்படும் விளைவுகளை ஐம்புலன்கள் மூலமாக உணர்வு மனம் அறிந்து கொள்கிறது.

6. இதன் காரணமாக ஆழ்மனதில் மேலும் பல பதிவுகள் உருவாகும் வாய்ப்புகள் ஏற்படலாம். 

இந்த சுழற்சிகளின் காரணமாக ஏற்படும் மாற்றங்களே மனிதனின் எதிர்காலத்தை (அடுத்த பிறவியையும்) நிர்ணயம் செய்கின்றன.

                     (தொடரும்)

அஞ்சும் அடக்கு
பதிவு 9

 "அஞ்சும் அடக்கு" மற்றும் "ஐந்தடக்கம்" பற்றி திருமூலர், திருவள்ளுவர், பத்திரகிரியார் போன்றவர்கள் சொல்லியதை போன்று கீதையிலும் கிருஷ்ணன் "முதலில் ஐம்புலன்களை கட்டுப்படுத்து; ஏனெனில் அவைதான் ஒரு மனிதனின் அறிவையும், விவேகமாக சிந்திக்கும் திறனையும் அழித்துவிட துடிக்கும் பிரதான எதிரி. எனவே அவைகளை அழித்துவிடு" எனக் கூறுகிறார். .. கீதை 3.41

ஆனால், அத்தகைய வார்த்தைகளுக்கு நேரடியாக பொருள் கொள்ளக்கூடாது.

ஏனெனில், ஐம்புலன் கருவிகளை வேண்டுமானால் அடக்கலாம்; ஆனால் ஐம்புலன்களின் இச்சையை நேரடியாக அடக்க முடியாது.

இருப்பினும், அவற்றின் செயல்படும் வேகத்தை வேறு வழிகளில் மட்டுப் படுத்த முடியும். பின்னர் நாம் வேண்டும் போது மட்டும் அவைகளை செயல்பட வைக்க முடியும்.

உணர்வு மனம் உணர்ச்சி வசப்படக் கூடியது. அது உணர்ச்சி வசப்படாமல் இருந்தால், தேவையற்ற ஆசைகள் மனதில் தோன்றாமல் இருந்தால், ஐம்புலன்களும் கட்டுக்குள் வந்து விடும். அதற்கு உணர்வு மனம் தனித்து இயங்காமல், புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்.

உணர்வு மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால், ஆழ்மனப் பதிவுகளாலும் உணர்வு மனதை உசுப்பேத்த முடியாது. இருந்தாலும் அவை தொடர்ந்து உணர்வு மனதை தொந்திரவு செய்து கொண்டே இருக்கும்.

எனவே, இது சம்பந்தமாக நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான காரியம் .....

                         (தொடரும்)

அஞ்சும் அடக்கு
பதிவு 10

அர்ஜுனன் பகவான் கிருஷ்ணனிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறான்...
"மனிதன் தான் செய்வது பாவம் என்று தெரிந்தும், ஏதோ கட்டாயத்தின் பேரில் செய்வதைப் போன்று தவறு செய்வது ஏன்?" .. கீதை 3.36

அதற்குப் பதிலாக கிருஷ்ணன்
இவ்வாறு கூறுகிறார்...
"அவனிடத்திலுள்ள ரஜோ குணத்தின் காரணமாக அவனிடம் உண்டாகும் ஆசையும், கோபமும் தான் இதற்கு காரணம். இவையே அம்மனிதனின் எதிரிகளாகும்"
.. கீதை 3.37

ஒரு மனிதனிடம் ரஜோ குணம் இருந்தால் அவனிடம் ஆசைகள் பெருக்கெடுக்கும். 

ஆசைகள் பெருகினால் ஐம்புலன்களும் அந்த மனிதனை வெளியில் இழுத்துச் சென்று படுகுழியில் தள்ளி விடும் வாய்ப்புகளும் உண்டு.

அதன் காரணமாக மனிதன் அதிக கோபம் கொள்ள நேரிடலாம்.

ரஜோ குணம் வருவதற்கான காரணம் ஆழ்மனப் பதிவுகளும் அதனால் உருவெடுக்கும் அஹங்காரமும்தான்.

அஹங்காரத்தின் வீச்சு அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட மனிதனிடம் ரஜோ குணம் உருவாகுவது இயற்கையே.

                     (தொடரும்)

அஞ்சும் அடக்கு
பதிவு 11

ஆழ்மனதில் உள்ள பதிவுகள் தொடர்ந்து தொந்திரவு செய்து கொண்டிருந்தால் உணர்வு மனம் புத்தியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க நேரிடலாம்.

ஆதலால், ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்குவதற்கு தேவையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இது சம்பந்தமாக மேலும் ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உணர்வு மனம் புறவுலகில் பிரவேசிக்க ஐம்புலன்களின் உதவி தேவை. அகவுலகை பொறுத்தவரை அந்தப் பிரச்சினை கிடையாது.

அகத்தில் ஆய்வு (contemplation) செய்வதாக இருந்தாலும், அகத்தை ஆய்வு செய்வதாக இருந்தாலும் அல்லது ரமண மகரிஷி கூறியதுபோல "நான் யார்" என்று ஆராய்ந்து பார்க்க விரும்பினாலும், அங்கு ஐம்புலன்களின் பங்கு என்று எதுவும் கிடையாது.

எனவே அகத்தாய்வில் தினந்தோறும் குறைந்தது அரை மணிநேரம் செலவு செய்தால், அது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்த நல்லதொரு வழியாக இருக்கும்.

                         ( முற்றும்)


           






Sunday, 23 June 2024

நிம்மதியின்மை – மன அமைதியை நோக்கிய அகத்தாய்வு


நிம்மதியின்மை
பதிவு 1

'எல்லாம் இருந்தும், மனதில் நிம்மதி மட்டும் இல்லை' என்ற எண்ணம், வயதான காலத்தில் பலருக்கும் வருவதைக் காண முடிகிறது. இதற்கான தீர்வுதான் என்ன?

'ஞான மார்க்கத்தில்' பயணிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்காது.

'கர்ம மார்க்கத்தில்' செயல் படுபவர்கள் கூட இதைப்பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை; ஏனெனில், அவர்கள் பிறருக்காக தங்களை வருத்திக் கொள்பவர்கள். எனவே தன்னைப் பற்றி கவலைப்பட
அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் 'பக்தி மார்க்கத்தை' கடைப்பிடித்து வாழ்பவர்கள். தவறாமல் கடவுளை தினந்தோறும் வழிபடுகிறவர்கள். இருப்பினும் மனதில் நிம்மதியின்றி புலம்பித் தவிக்கிறவர்களாக, குறிப்பாக வயதான காலத்தில், வாழ்ந்து வருகிறார்கள்!?

அதற்கு .. அந்த நிம்மதியற்ற தன்மைக்கு .. அவர்கள்தான் காரணமா? அப்படியானால் அதற்கான காரணம்தான் என்ன?

                          (தொடரும்)

நிம்மதியின்மை
பதிவு 2

"என்னை நான்கு வகையான மனிதர்கள் வழிபடுகிறார்கள்" என கிருஷ்ணன் கூறுகிறார்.
(கீதை 7.16)

இதில் "என்னை" மற்றும் "வழிபடுகிறார்கள்" என்ற இரண்டு வார்த்தைகளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

"என்னை" என்று சொல்லும்போது, அது கிருஷ்ணனை மட்டும் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நாம் எந்த உருவத்தை வழிபட்டாலும், அது நமக்கு கடவுள்தான்.

"வழிபடுகிறார்கள்" என்றால் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள் எனப் பொருள் கொள்ளக்கூடாது. சிலர் தமக்குள்ளேயே கடவுளை வழிபடலாம். பூசலார் நாயனார் அதைத்தான் செய்தார். "தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்" என்கிறார் 
திருமூலர். 

சிலர் வழிபாடு என்று எதுவும் செய்ய மாட்டார்கள்; ஆனாலும், அவர்கள் கடவுள் நினைப்பிலேயே காலத்தை கழிப்பார்கள். இதற்கு பல சித்தர்களை உதாரணமாக சொல்லலாம்.

அந்த நான்கு வகையான மனிதர்கள் யாரென்று பார்ப்போம்.

                   (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 3

கிருஷ்ணன் குறிப்பிடும் அந்த நான்கு வகையான மனிதர்கள் யார் யாரென்று பார்ப்போம்:-

1. எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் தாங்கமுடியாத துன்பத்தை சந்திப்பவர்கள். இவ்வகை மனிதர்களை "ஆர்த:" என்று குறிப்பிடுகிறார்.

2. புறவுலக வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற வேண்டும் என ஆசைப் படுபவர்கள். இவ்வகை மனிதர்களை "அர்தார்தீ" என்று குறிப்பிடுகிறார்.

3. இறைவனைப் பற்றி, இறைத்தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதில் அதிகமான ஆர்வம் உள்ளவர்கள். இவ்வகை மனிதர்களை "ஜிஜ்ஞாஸு:" என்று குறிப்பிடுகிறார்.

4. மெய்ஞ்ஞானம் பெற்றவர்கள். இவ்வகை மனிதர்களையே "ஞானி" என்று குறிப்பிடுகிறார்.

இந்த நான்கு வகை மனிதர்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக அலசுவோம்.

                   (தொடரும்)

நிம்மதியின்மை
பதிவு 4

1. "ஆர்த:"
வாழ்க்கையில் நாம் காணும் பல மனிதர்கள் கடவுளைப் பற்றிய சிந்தனையே இல்லாதவர்களாக இருப்பார்கள்.

ஆனால், எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் தாங்கமுடியாத துன்பத்தை சந்திக்கும்போது அவர்கள் கடவுளின் கருணையை நாட ஆரம்பித்து விடுவார்கள்.
"திக்கற்றவனுக்கு தெய்வமே
துணை" என்று ஒரு பழமொழி கூட புழக்கத்தில் உண்டு அல்லவா!?

இராமாயணத்தை இயற்றிய
வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகத்தான் தனது இளமைக் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர். 

அதனால் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அவரை துயரக்கடலில் ஆழ்த்தியது. அதன் பின்னரே அவர் வால்மீகியாக புதிய அவதாரம் எடுத்தார்.

                      (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 5

புறவுலக வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற வேண்டும் என ஆசைப் படும் மனிதர்களை "அர்தார்தீ" என்று குறிப்பிடுகிறார்.

 "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று சொன்னாலும் கூட,
இவர்களுக்கு பொதுவாக "போதும்" என்ற மனநிலை வருவதே இல்லை.

மனிதன் ஆசைப்பட்டது கிடைத்து விட்டால், ஆசை அடங்குவதற்குப் பதிலாக ஆசைகள் பல்கிப் பெருகுவதை காண்கிறோம்.

விளைவு!? வாழ்க்கை முடிவுறும் நேரம் புலம்பலும், வேதனையுமே மிஞ்சுகிறது. 
ஒரு சிலர் மட்டுமே இறைவனது கருணையால், அவன் தரும் எதிர்பாராத அதிர்ச்சியால், பொருள் நாட்டத்திலிருந்து விடுபட்டு அருளைத் தேடி ஓடுகிறார்கள்; அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் இந்த வகையினர்.

"பொருள்தேடி புண்பட்டு 
பொய்யுலகில் வாழாமல்
அருள்தேடி அன்புற்று
அகமகிழ்வ தெக்காலம்?"

                 (தொடரும்)




நிம்மதியின்மை
பதிவு 6

இறைவனைப் பற்றி, இறைத் தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதில் அதிகமான ஆர்வம் உள்ள மனிதர்களை "ஜிஜ்ஞாஸு:" என்று குறிப்பிடுகிறார்.

"ஜிஜ்ஞாஸு" என்று குறிப்பிட்டாலும் இறைவனை,  இறைத் தன்மையை புரிந்து கொள்ள விரும்பும் மனிதர்களை பல வகையாகப் பிரிக்கலாம்.

அவற்றில் முக்கியமான மூன்று பிரிவுகளைத் திருமூலர் கூறுகிறார்:-
1. கற்ற பசுக்கள்:
குழந்தைத் தனமான ஆர்வத்தில், வாழ்வியல் உண்மைகளை அரைகுறையாகப் புரிந்து கொண்டு பிற மனிதர்களிடம் உளறித் திரிபவர்கள் ..
"கற்ற பசுக்கள் கதறித் திரியினும்" என்கிறார் திருமூலர்.

2. கொற்ற பசுக்கள்:
இவ்வகை மனிதர்களின் நோக்கம் 'தமக்குத் தேவையானவற்றை, தமக்கு விருப்பமான கோணத்தில் புரிந்து கொண்டு', அவற்றை மூலதனமாகக் கொண்டு எப்படி சம்பாதிப்பது என்பது மட்டும்தான். மற்றபடி இறைத் தன்மையை அறிந்து கொள்வது பற்றி முழுமையாக ஆர்வம் காட்டுவதில்லை. ..
"கொற்ற பசுக்கள் குறி கட்டி மேயினும்" என்கிறார் திருமூலர்.

3. முற்றபசுக்கள்:
இவ்வகை மனிதர்களை "முமூக்சா" என்பார்கள். இவர்கள் இறுதி நிலை வரை முயற்சியில் தளராமல் பயணம் செய்து வெற்றி அடைபவர்கள். ..
"முற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்.." என்கிறார் திருமூலர்.

முற்ற பசுக்களிலும் உட்பிரிவுகள் உள்ளன. ஆனாலும் நாம் அதனை ஆராயப் போவதில்லை.

                   (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 7

(Life is a paradox. The things of the world are not what they appear to be. 

What we want we do not get; what we get we cannot possess; what we possess we cannot enjoy; what we enjoy does not give us permanent satisfaction and even when we think the satisfaction is permanent, it proves to be boring.
.. Excerpt from the book 
"Meditation written by the Monks of the Ramakrishna Mission)

முற்ற பசுக்கள் என்று யாரை திருமூலர் சொல்கிறாரோ, அவர்கள் ஞானத்தின் அனைத்து நிலைகளிலும் தெளிவு பெற்று இறைத்தன்மையைப் பற்றி முழுமையாக உணர்ந்து பற்றற்று வாழ்பவர்கள். அவர்களைத்தான் "ஞானி" என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

ஆனால், நாமெல்லாம் "அர்தார்தீ" வகையைச் சேர்ந்தவர்கள். நாம் விரும்பினால் கூட, வாழ்க்கை சூழ்நிலை நம்மை 'எளிமையாக' வாழ விடாது.

நமக்கு தேவைகள் அதிகம்; எனவே ஆசைகளும் அதிகம். இதன் காரணமாகவே இறைவனிடம் இவை இவையெல்லாம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறோம். நாம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறினால் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, எவற்றையெல்லாம் நாம் பெற்றோமோ அவற்றையெல்லாம் சந்தோஷமாக அனுபவிக்கிறோம். ஆனால், அந்த சந்தோஷம் நிலைத்து நிற்கிறதா? நிலைத்து நிற்கிறது என்றால் வயதான காலத்தில் ஏன் புலம்பித் தவிக்கிறோம்? காரணம் நாம் ஒரு உண்மையை நினைத்துப் பார்ப்பதில்லை.

பட்டினத்தார் கூறுகிறார் ..
"வாழ்க்கை குடங்கவிழ் நீரின் ஓட்டமென்றே இரு.."

                     (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 8

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு கால அளவு இருக்கிறது. அது முடிவதற்குள் நாம் பலவற்றை அனுபவித்து மகிழ வேண்டும் என நினைக்கிறோம்; மகிழ்ச்சியாக அனுபவிக்கவும் செய்கிறோம். அதில் தவறேதும் இல்லை. ஆனால், எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நாம் அடைய வேண்டியது "நிலையான மன அமைதி" என்பதை மறந்து விடுகிறோம்.

"மன அமைதி" என்பது வேண்டி பெறக் கூடியதல்ல. நாம்தான் அதனைத் தேடி அடைய வேண்டும். உண்மையில் அது வெளியில் எங்கேயும் இல்லை; நமக்குள்ளேதான் இருக்கிறது. நாம் ஏன் தேடுவதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை?

காரணம்:-
1. அகத்தாய்வு (introspection) செய்வதற்கு நேரமில்லை.
2. அகத்தாய்வு எப்படி செய்வது என்று தெரியவில்லை.
3. அகத்தாய்வு செய்ய விருப்பமில்லை.
இது போன்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அகத்தாய்வு செய்யாதவரை 'மன அமைதி' கிட்டுவது கடினமே.

                    (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 9

பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு ஏன் முக்கியம்?

ஞான மார்க்கம் மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில், அது கூறும் வாழ்வியல் தத்துவங்களைப் புரிந்து கொள்ள பொறுமை மிகவும் அவசியம். அத்துடன் தத்துவங்களை வெறுமனே படித்தால் மட்டும் போதாது; அவை கூறும் மெய்ப்பொருளை அறிந்து கொள்ள 'ஆராய்ச்சி செய்யும் தன்மை' (inquisitive mind) நம்மிடம் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு திருக்குறளை எடுத்துக் கொள்ளுங்கள். நமது புரிந்து கொள்ளும் திறமை கூடக்கூட குறளின் அர்த்தங்கள் மாறுபடுவதைக் காணலாம்.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" .. குறள்  121
இந்தக் குறளின் பொதுவான அர்த்தம் எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், "அடக்கம்" என்பது அடக்குதல் காரணமாக வரும் அடக்கமா அல்லது அடங்குதல் காரணமாக வரும் அடக்கமா என்று யோசித்திருப்போமா?
தவிர, 'அடக்குதல்' 'அடங்குதல்' ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை அறிவோமா?

கர்ம மார்க்கத்தை பொறுத்தவரை அதில் ஈடுபடுவதற்கு விருப்பம் வேண்டும்; அதற்கு அதிகமான நேரம்  செலவிட நேரிடலாம்; குடும்பத்தை பற்றிய அக்கறை குறைந்து விடும். இது போன்ற பல விஷயங்கள் நம்மை கர்ம மார்க்கத்தில் ஈடுபட முடியாமல் தடுத்து விடலாம்.

எஞ்சி இருப்பது தியான மார்க்கம். குடும்பத்தின் மீது அதிக பாசம் உள்ள மனிதர்களால் 'பிரத்யாஹாரத்தை' அவ்வளவு எளிதாக மேற்கொள்ள முடியாது. பிரத்யாஹாரத்தை சரியாக கடைப்பிடிக்க முடியாதபோது, தியானம் கைகூடுவது கடினமாகி விடும்.

ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் அகத்தாய்வில் வெற்றி காண்பது எளிது தான். எல்லாம் சரி ..
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு ஏன் முக்கியம்?

                   (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 10

பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு ஏன் முக்கியம்?

அகத்தாய்வு ஏன் முக்கியம் என்று பார்ப்பதற்கு முன்னர், யாரெல்லாம் அகத்தாய்வு செய்ய வேண்டும்; அகத்தாய்வு செய்யும் முறையில் ஏதாவது மாற்றங்கள் உண்டா என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தியான மார்க்கத்தை மேற்கொள்பவர்களுக்கு அகத்தாய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பிரத்யாஹாரம் சரியாக அமைந்து விட்டால், அவர்கள் "தாரணையை" பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். தாரணையை ஒழுங்காக பயிற்சி செய்தால் மனதில் உள்ள சுமைகள் ஒவ்வொன்றாக மறைந்து 'சலனமற்ற மனதை' அடைந்து விடலாம்.

கர்ம மார்க்கத்தில் அகத்தாய்வு பெரும்பாலும் பிற மனிதர்களைப் பற்றியதாக இருக்கும். பொது வாழ்க்கையில் ஈடுபடும் போது பல விதமான விமர்சனங்களை காண நேரிடும். அவை உள்ளுக்குள் பிற மனிதர்களைப் பற்றிய அகத்தாய்வில் ஈடுபட வைத்து விடும்.

ஞான மார்க்கத்தில் அகத்தாய்வு என்பது தத்துவங்களின் பின்னே மறைந்திருக்கும் மெய்ப்பொருளை அறிந்து கொள்வதுதான். அதற்கான முயற்சியில் வெற்றிபெறும் பொழுது, சலனமற்ற மனம் தானே வந்து விடும்.

பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு என்பது மனதில் தேங்கியிருக்கும் தேவையில்லாத குப்பைகளை பற்றியதாக இருக்க வேண்டும். அதற்கான செயல் முறை என்னென்ன!!??

                            (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 11

இரயிலில் பயணம் செய்பவர்கள் இரயில் பெட்டிகளில் இந்த வாசகத்தை கவனித்திருக்கலாம்:-
"Less luggage, more comfort;
make the journey pleasant"
(குறைவான சுமைகள் .. இனிமையான பயணம்)

இந்த வாசகம் மனதிற்கும் பொருந்தும். மனதில் பாரம் குறையக் குறைய, உள்ளுக்குள் அமைதி பெருகுவதை காணலாம்.

மனதில் உள்ள பாரங்களைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு என்பது அகத்தை பற்றிய ஆய்வுதான்; 'அகத்தில் உள்ள குப்பைகளை எப்படி அகற்றுவது' என்று சிந்திப்பதுதான். அதற்கு தேவை "தனிமை"

வயதான காலத்தில் நாமே தனிமையில் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருந்தாலும் மனதளவில் தனித்திருக்க பழக வேண்டும்.

நமக்கு அதன் அவசியம் பற்றி தெரியவில்லை. அதனால்தான் பிள்ளைகளோ, மற்றவர்களோ நம்மை ஒதுக்கி வைக்கும் போது, தேவையில்லாமல் புலம்பித் தவிக்கிறோம். உண்மையில் நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், அகத்தை ஆய்வு செய்ய அவர்கள் நமக்கு நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.

                   (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 12

பக்தி மார்க்கத்தில் பயணம் செய்பவர்கள் "அகத்தை ஆய்வு செய்வது" அவசியமா என்றால், அவசியம் இல்லைதான்.

மனம் அமைதி பெற இறைவனிடம் சரணடைந்தால் அதுவே போதுமானது. பொறுப்பை அவனிடம் கொடுத்துவிட்டு விருப்பு, வெறுப்பு இன்றி நமது வேலைகளை கவனித்து வரலாம். அதனால் ஏற்படும் விளைவுகளை "அவன்" தரும் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மட்டும் வேண்டும். அத்தகைய பக்குவம் வந்து விட்டால், மனதில் அமைதி தானே வந்து விடும். 

ஆனால், அஹங்காரத்தால் நிறைந்த மனம் சரணடைய எளிதில் இடம் தராது. அதன் காரணமாகவே தனிமையில் இருந்து அகத்தை ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அகத்தை எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு முன் அடிப்படையான சில விஷயங்களில் நாம் தெளிவான முடிவுக்கு வரவேண்டும். அதில் நிச்சயமற்ற தன்மை எதுவும் இருக்கக்கூடாது.

அதற்குப் பின்னர் நாம் செய்ய வேண்டியது எளிமையான பயிற்சி மட்டும்தான்.

                       (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 13

'பயிற்சி' என்பது நாம் செய்ய வேண்டியதைக் குறிக்கிறது.
'முயற்சி' என்பது நாம் முறையாக எந்தவித தொய்வுமின்றி பயிற்சி செய்வதற்கு நம்மை தயார் படுத்துவதை குறிக்கிறது.

முயற்சி மட்டும் போதாது; கூடவே பயிற்சி செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்:-

1. வயதான காலத்தில் "தனிமை" என்பது சாபமல்ல; அது ஒரு வரம். தன்னைப் பற்றி சிந்திக்க காலம் அளித்த வரம்.

2. பண்டைய காலத்தை விட இப்போது மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது. எனவே பயிற்சி செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது.

3. பத்து நிமிடம் அமைதியாக இருந்து மனதில் என்னென்ன ஓடுகிறது என்று கவனியுங்கள்; ஏதேதோ நினைவுகள் வரும்; எத்தனை நினைவுகள் என்று உத்தேசமாக கணக்கிடுங்கள். அதில் இறைவனைப் பற்றிய நினைவு இருக்கிறதா என்று பாருங்கள். அந்த பத்து நிமிட நேரத்தில் ஏதேதோ நினைவுகள் வந்தன; ஆனால், இறைவனைப் பற்றிய நினைவு மட்டும் வரவில்லை என்றால், அதற்கு என்ன அர்த்தம்?

                  (தொடரும்)



நிம்மதியின்மை
பதிவு 14

4. இறைவனைப் பற்றிய நினைவு மட்டும் வரவில்லை என்றால், அதற்கு என்ன அர்த்தம்?

ஆழ்மனத்தில் என்னவெல்லாமோ தங்கி இருக்கிறது; இறைவனைப் பற்றிய நினைப்பு மட்டும் இல்லை என்றாகிறது.

நாம் தினந்தோறும் கடவுளை வழிபடுகிறோம்; இருந்தும் ஆழ்மனத்தில் இறைவனைப் பற்றிய நினைப்பு மட்டும் பதியவில்லை என்றால், அது தவறுதானே!?

இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார் .. "தாய் சமையல் வேலையில் இருந்தாலும் அவளது கவனம் எப்போதும் தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையின் மீதே இருக்கும்". அதேபோல் நாம் எந்த வேலையில் இருந்தாலும், ஆழ்மனம் இறை நினைப்பிலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமது மனம் எந்த நிலையிலும் வேதனைப் படாமல் இருக்கும்.

பட்டினத்தார் திரைப் படத்திலிருந்து சில பாடல் வரிகள்:-

"கண்ணிருந்தும் குருடாய் 
இருந்து விட்டேன் - நான்
காலமெல்லாம் வீணே
கழித்து விட்டேன்".

"பொன்பொருள் சதமென்று
பூமியிலே அலைந்து
பொய்யை மெய்யென்று
நம்பி விட்டேன்
உன்மலர் பாதாரம்
மறந்து விட்டேன் - ஐயா
உண்மையை இன்றுதான் 
உணர்ந்து கொண்டேன்".

இந்த வரிகளை எப்படி புரிந்து கொள்வது!?

                   (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 15

பொன்னும், பொருளும் நிரந்தரம் என்று எண்ணி அவற்றைப் பெருக்குவதிலேயே எனது வாழ்நாளை கழித்து விட்டேனே; உன் திருவடிகளை மறந்து விட்டேனே எனப் பட்டினத்தார் புலம்புகிறார். இந்தப் புலம்பல் எல்லாருக்கும் பொருந்துமா?

மனிதன் தனது வசதியைப் பெருக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அதனை அனுபவிக்கவும் பாடு படுவதில் எந்தவித தவறும் இல்லை. 

ஆனால், வயதான காலத்தில் தனது மனதில் உள்ள பாரங்களை எல்லாம் உதறித் தள்ளி, இறை நினைப்பு மட்டும் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமென்றால், "சஞ்சித கர்மாவில்" பாரம் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், நம்மிடம் அதைப் பற்றிய சிந்தனை இருக்கிறதா?

                   (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 16

5. ஆகாமியம், பிராரப்தம்,
சஞ்சிதம் என மூன்று கர்மாக்களை சான்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் ஆகாமியம் மற்றும் சஞ்சிதம் இரண்டும் "வங்கியில் மாத ஆரம்பத்திலும் மற்றும் மாத இறுதியிலும் உள்ள கையிருப்பு" போன்றவை.

வங்கியில் உள்ள கையிருப்பு ஒருவனது சேமிப்பில் உள்ள பணமென்றால், ஆகாமியம் மற்றும் சஞ்சிதம் ஆகிய இரண்டிலும் குவிக்கப் பட்டிருப்பது ஆழ்மனப் பதிவுகளே. இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம்!?

வங்கியில் மாத இறுதியில் பணத்தின் சேமிப்பு அதிகரிக்க பாடுபடுகிறோம்; சஞ்சித நிலையில் ஆழ்மனப் பதிவுகளின் எண்ணிக்கையும், அவை ஏற்படுத்தும் அழுத்தமும் குறைவதற்காக பாடுபட வேண்டும். ஆனால், சஞ்சித நிலையை அடைவதற்குள் ஆழ்மனப் பதிவுகளின் எண்ணிக்கையைக் குறைக்க பாடுபடுகிறோமா?

ஆழ்மனப் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே "சலனமற்ற மனம்" என்றால் என்ன என்பது தெரிய வரும். 

எனவே தனிமையில் இருக்க அதிக நேரம் கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்தி ஆழ்மனப் பதிவுகளைக் குறைக்க முயற்சி செய்யலாமே!?

இனி, நாம் செய்ய வேண்டிய பயிற்சிகளை பார்ப்போம்.

                       (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 17
 
நாம் செய்ய வேண்டிய ஒரு சில பயிற்சிகளைப் பற்றி பார்ப்போம். இதற்காக நடைமுறையில் உள்ள எந்த பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டியதில்லை.

தவிர, இந்த பயிற்சிகள் அனைத்தும் நாமே, எவ்வித துணையுமின்றி, செய்யக் கூடியதுதான்; குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் கிடையாது.

பயிற்சி 1:- தெருவில் ஏதேனும் ஊர்வலம் போனால் வேடிக்கை பார்ப்போமல்லவா? அதைப் போன்று அமைதியாக அமர்ந்து கொண்டு, ஆழ்மனதில் ஓடும் நினைவலைகளை வேடிக்கை பார்க்க வேண்டும்; எந்தக் காரணம் கொண்டும் அவைகளோடு தொடர்ந்து பயணம் செய்யக்கூடாது.

அவற்றை வெறுமனே வேடிக்கை பார்க்கிறோம்; மற்றபடி அதனுடன் பயணிக்க வில்லை என்றால், நாளடைவில் பல பதிவுகள் ஆழ்மனதிலிருந்து மறைந்து விடும்.

இந்தப் பதிவுகள் பெரும்பாலும் உணர்ச்சியின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட பதிவுகளாக இருக்கும்.
(Impressions recorded out of emotional reactions or inner resistance to the incidents one had met)

ஆழ்மனப் பதிவுகள் குறையக் குறைய, மனதிலும் பாரம் குறைவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.

                      (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 18

பயிற்சி 2:- வாலிபப் பருவத்தில் நமக்கு நிறைய கனவுகள் (இச்சைகள்) இருந்திருக்கும்.
எதை எதையோ அடைய விரும்பியிருப்போம்; எதை எதையோ சாதிக்க விரும்பியிருப்போம். பலவற்றில் வெற்றியும் கண்டிருப்போம்.

அதே சமயம், நிறைவேறாத இச்சைகள் மனதை நெருடிக் கொண்டிருக்கும். இப்போது அவற்றைப் பற்றி நிதானமாக சிந்திக்க வேண்டும்.

வயதான காரணத்தினால் நமது 'தன்முனைப்பு' குறைந்திருக்கலாம். தன்முனைப்பு குறைந்து விட்டால் செயலில் தீவிரம் காட்ட முடியாது. அப்படியானால் செயல் மூலமாக நிறைவேற்றக் கூடிய ஆசைகளை மறந்து விடவேண்டும்.

நிறைவேற்றக் கூடிய ஆசையாக இருந்தாலும், அது தேவைதானா என சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவை இல்லையெனில் அதனையும் மறந்துவிடவேண்டும்.

மொத்தத்தில் நிறைவேறாத மற்றும் நிறைவேற்றத் துடிக்கும் ஆசை என எதுவும் ஆழ்மனதில் இருக்கக்கூடாது.

                      (தொடரும்)

நிம்மதியின்மை
பதிவு 19

பயிற்சி 3:- இந்தப் பயிற்சி செய்வதற்கு முன், இதனை ஏன் செய்ய வேண்டும் என்ற புரிதல் மிகவும் அவசியம்.

பயிற்சி மிகவும் எளிதானதுதான். ஆனால், சரியான புரிதல் இல்லையென்றால், இந்தப் பயிற்சியை செய்ய மனம் ஒத்துழைக்காது.

இந்தப் பதிவில் சொல்லப்படும் கருத்துக்கள் உங்களைக் காயப்படுத்துவது போல் தோன்றலாம். அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

முதல் பயிற்சி உணர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பதிவுகள் பற்றியது. இரண்டாவது பயிற்சி நிறைவேறாத ஆசைகள் பற்றியது.

இனி நாம் காணப்போவது நாம் ஆசையுடன் பற்றி இறுகப் பிடித்து வைத்திருக்கும் ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம், பாசம் போன்றவைகள் சம்பந்தப் பட்டது. எனவே சரியான புரிதல் இன்றி பயிற்சியை மேற்கொள்ள முடியாது.

இது ஒரு நீள் பதிவு. பொறுமையாக கடந்து செல்வோம். 

                    (தொடரும்)



நிம்மதியின்மை
பதிவு 20

பயிற்சி 3.1:-
(Success in life is measured by the tranquility of the mind ..
Swami Chinmayananda)

வாழ்க்கையில் வெற்றி என்பது ஒரு மனிதனின் "சலனமில்லாத மனதைப் பொறுத்தது" என்கின்றனர் சான்றோர்கள்.

"சலனமில்லாத மனதை" ஒரு மனிதன் அடைந்து விட்டான் என்பதற்கு என்ன அடையாளம்?
1. ஆழ்மனதில் எந்தவிதப் பதிவுகளும் இருக்கக்கூடாது.
2. ஆழ்மனதில் பதிவுகள் இருந்தாலும், அவற்றால் அந்த மனிதனுக்கு எந்தவித சலனத்தையும் ஏற்படுத்த முடியாது என்ற நிலையில் இருக்க வேண்டும்.
3. அவனது உணர்வு மனம் (conscious mind) புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். (integrated mind)
4. எந்த சூழ்நிலையிலும் அவனால் "அகத்தாய்வை" (விசாரம்) எளிதாக மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருக்க வேண்டும்.

மனதில் சலனங்கள் இருந்தால், சாதாரண மனிதனால் அகத்தாய்வில் ஈடுபடுவது கடினமாக இருக்கும்.

அப்படியானால், ஆழ்மனதில் பதிவுகள் இருந்தால் அகத்தாய்வில் கவனம் செலுத்த முடியாதா?

                     (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 21

பயிற்சி 3.2:-
'அகத்தாய்வு' என்றால் என்ன? தனக்குள்ளேயே கேள்விகள் கேட்டு, தனுக்குள்ளேயே விடைகளைக் தேடுவதை 'அகத்தாய்வு' என்று சொல்லலாம். இதனை "விசாரம்" என்று சொல்வார்கள்.

புலன்களின் உதவியின்றி இதனை செய்ய வேண்டும். இந்த முயற்சியில் இரண்டு விதத்தில் விடை கிடைக்கும்:-
1. விவேகத்துடன் கூடிய ஆய்வு. இதனை "நேரடியாக புலன்களின் உதவியின்றி அறிந்து கொள்ளுதல்" என்பார்கள்.
2. நாம் எவ்வளவுதான் முயன்றாலும் நமது கேள்விகளுக்கான விடையை நம்மால் அறிய முடியாமல் போகலாம். ஆனால், விடையைத் தேடும் தவிப்பு நம்மிடம் இருந்தால், என்றாவது ஒருநாள் "உள்ளிருந்து!!" விடை கிடைக்கும். ஆக, விடை கிடைக்க வேண்டும் என்ற தவிப்பும், விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தால் கண்டிப்பாக நமக்கான விடை கிடைக்கும்.

சலனங்கள் நிறைந்த மனம் உடைய மனிதனால், இந்த பயிற்சியை மேற்கொள்ள முடியாது. 

இதற்கான மாற்று வழி என்ன?

                         (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 22

பயிற்சி 3.3:-
'அகத்தாய்வு' செய்வதற்கு இரண்டு மாற்று வழிகள் உள்ளன:-
1. ஊகத்தின் மூலம் உண்மையைப் புரிந்து கொள்வது.
2. சான்றோர்கள் வாய்மொழி கேட்டு அவர்கள் கூறும் கருத்துக்களை அகத்தாய்வு செய்வது.

இவற்றில் ஊகத்தின் மூலம் சிந்தித்து முடிவு எடுக்கும்போது, தவறான முடிவு எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

எனவே சான்றோரின் வாய்மொழி அறிவுரைகளைக் கேட்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு அகத்தாய்வு செய்யும்போது அது நல்ல பலனைத் தர வாய்ப்பு உண்டு. ஆனால், சான்றோர்களைக் கண்டு பிடிப்பது கடினமான ஒன்று.

எல்லாவற்றிலும் மேலான ஒரு வழிதான் "அறநூல்களை படித்து" அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை சிந்தித்துப் பார்ப்பது. இந்த வழி நல்ல பலனைத் தரும்.

                           (தொடரும்)

நிம்மதியின்மை
பதிவு 23

பயிற்சி 3.4:-
இளமைப் பருவத்தில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துகிறோம். அதில் தவறேதும் இல்லை.

முதுமை என்று வந்துவிட்டால் நமது கவனம் முழுவதும் "மன நிம்மதி" அடைவது எப்படி என்பதிலேயே இருக்க வேண்டும். ஆனால் நாமோ பொருளைத் தேடி ஓடுகிறோம்; பொருளைத் தேடி ஓட முடியவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் புலம்பித் தவிக்கிறோம். மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைக்க வேண்டியது அவசியம் என்ற நினைப்பே நமக்கு வருவதில்லை.

நம்மால் ஆழ்ந்து சிந்திக்க முடியாமல் போகலாம். ஆனால், சிந்திக்கவே தெரியாது என்று சொல்ல முடியுமா?

முன்னோர்கள் சொன்ன வாழ்வியல் தத்துவங்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாலே போதும்; 'தனிமையில் வாடுகிறேன்' என்று சொல்லவே மாட்டோம்.

இரண்டு உதாரணங்கள்..
"என்னுடைய வீடு" என்று சொன்னால், வீடு வேறு நான் வேறு என்றாகிறது. அத்துடன் "நான்" உரிமையாளன், "வீடு" என்னுடைய உடமைப் பொருள் என்றாகிறது.

"என்னுடைய உடம்பு", "என்னுடைய மனம்",
"என்னுடைய புத்தி" என்று சொல்லும்போது, உடல், மனம், புத்தியில் இருந்து நான் வேறானவன் என்பது புரிகிறது. அப்படியானால் "நான்" என்பது 'எதை' அல்லது 'யாரை' குறிக்கிறது!? 

தவிர "என்னுடைய உடம்பு" என்று சொல்வதைப் போன்று "என்னுடைய ஆன்மா" என்று சொல்ல முடியுமா? ஏனெனில், "ஆன்மா" நம்முடைய உடமைப் பொருள் இல்லையே!! அப்படியானால் "ஆன்மா" என்பது என்ன? நம் உடலில் அது ஏன் இருக்கிறது? அதன் தேவைதான் என்ன?

சற்று சிந்தியுங்கள்!!??

                         (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 24

பயிற்சி 3.5:-
நம் உள்ளிருக்கும் "ஆன்மாவின்" காரணமாகத்தான் நம்மால் இயங்க முடிகிறது. அதனை இறைசக்தி எனவும் சொல்வதுண்டு. கடவுளை "பூரணம்" என்றும், ஆன்மாவை "பூரணத்திலிருந்து வந்த பூரணம்" என்றும் சொல்வார்கள்.

திருமூலர் இவ்வாறு கூறுகிறார்..
"சீவன் எனச் சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே" ..
திருமந்திரம் 2017

அவர் "சீவன்" என்று எதைக் குறிப்பிடுகிறாரோ, அதைத்தான் நாம் ஆன்மா என்று குறிப்பிடுகிறோம்.

அந்த சக்தி புருவ மத்தியில் ஜோதி வடிவில் இருப்பதாக சித்தர்கள் சொல்கிறார்கள்.
"உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே”

யாரேனும் சிறியதாக ஒரு உதவி செய்தால் கூட நாம் நன்றி எனச் சொல்கிறோம். ஆனால், நமது வாழ்நாள் முழுவதும் நாம் இயங்க சக்தி தரும் இறையருளை என்றேனும் நினைத்தோமா?

"நித்தம் விளக்கெரிந்தும் 
நினைவிலது இல்லையடி"
எதனால் அதைப்பற்றிய நினைவு நமக்கு இருப்பதில்லை?

"சித்தம் கலங்கியதால்
சிந்தனையும் போனதடி"
ஆழ்மனப் பதிவுகள் பாசிபோல சித்தத்தின் மீது படிந்து விட்டதால், நம்மால்
அதைப் பற்றி சிந்திக்க முடிவதில்லை. விளைவு!?

"அத்தன் இருப்பிடத்தை
ஆராயத் தெரியாமல்
பெத்தமனம் பித்தாகப்
புலம்பித் தவிக்குதடி"

வயதான காலத்திலாவது ஆன்மாவைப் பற்றி சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்; ஆழ்மனதில் உள்ள சுமைகள் மறைந்து விடும்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை - அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு"
.. திருவள்ளுவர்.

                     (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 25

பயிற்சி 3.6:-
ஒருமுறை அன்பர் ஒருவர் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் "நாங்களெல்லாம் சுயநலவாதிகளாக இருக்கிறோம். உங்களைப் போல் இருக்க முடியவில்லையே" என வருத்தப்பட்டாராம்.

அதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் சிரித்துக் கொண்டே இவ்வாறு பதிலளித்தார் .. "நீங்கள் தப்பாக கூறுகிறீர்கள். நீங்கள் சுயநலவாதி அல்ல; நான்தான் சுயநலவாதியாக இருக்கிறேன்.

நீங்கள் குடும்பத்திற்காக உழைக்கிறீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப் படுகிறீர்கள்.
மற்றபடி உங்களைப் பற்றி நினைப்பதே இல்லை.

நானோ பிறரைப் பற்றி கவலைப்
படுவதேயில்லை. என் கவலையெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றியதுதான். ஆகவே நான்தான் சுயநலவாதி".
.....       .....       .....       .....
ஒருவகையில் அவர் கூறுவது சரிதானே! 

நாம் தனிமையை விரும்பி ஏற்றோமா அல்லது தனிமையை நோக்கி பிறரால் தள்ளப்பட்டோமா என்பதல்ல பிரச்சினை.

இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்று சுயநலம் பிடித்த மனிதராக மாற என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பிரச்சினை.

நீங்கள் செய்ய வேண்டியது...
1. "தனிமை" ஒரு வரம் என நம்புங்கள்.
2. தனிமையில் இருக்க நேர்ந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
3. நமது அஹங்காரம் (ஆணவ மலம்) குறையக் குறைய, மன அமைதி 'உள்ளிருந்து' வெளிப்படும் என்பதை நம்புங்கள்.
4. "மன அமைதிதான்" பிறப்பறுக்கும் பாதையின் நுழைவாயில் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
5. தனிமையில் அமர்ந்து நமக்குள்ளேயே வாழ்க்கையில் நாம் காணும் புதிர்களுக்கான விடையைத் 
தேட முயற்சி செய்யுங்கள்.

மேலே சொல்லியவற்றை நீங்கள் கடைப்பிடித்தால், இரண்டு எளிய பயிற்சிகளை மட்டும் செய்தால் போதும். மன அமைதி தானே வெளிப்படும். அது உள்ளேதான் இருக்கிறது; ஆழ்மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைத்தால் போதும்; மனம் அமைதியாகி விடும்.

                      (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 26

முதலாவது பயிற்சியினை தினந்தோறும் தவறாமல் செய்துவர வேண்டும்; சிறிய பயிற்சிதான்.

அறநெறி கூறும் மறைநூல்களை தினந்தோறும் படிக்க வேண்டும். படித்து அவை சொல்லும் கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் மெய்ப்பொருளை அறிய முயற்சி செய்ய வேண்டும். இது கொஞ்சம் கடினமான காரியமாகத் தோன்றலாம்.

அப்படியானால், அதற்குப் பதிலாக தினம் ஒரு திருக்குறளைப் படியுங்கள். அதில் அறநெறிகளை வலியுறுத்தும் குறட்பாக்கள் நிறைய உள்ளன. பல பாடல்களை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். பின் அந்தப் பாடல் சொல்லும் கருத்தினை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் ஒப்பிட்டு அகத்தாய்வு செய்யுங்கள்.

ஒரு உதாரணம் ..
"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது"
.. திருக்குறள் -- பாடல் 7

பாடலைப் படித்தவுடன் புரிந்து விட்டது என்று முடித்து விடாதீர்கள். அதனை அகத்தாய்வு செய்யுங்கள்.

அகத்தாய்வு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

                     (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 27

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது"

இந்தப் பாடலை மூன்று பகுதிகளாகப் பிரித்து, அவற்றை எப்படி அகத்தாய்வு செய்வது என்று பார்ப்போம்.
..... ..... ..... ..... .....

"தனக்குவமை இல்லாதான்"

நான் சிவனை வணங்குகிறேன். எனவே சிவன்தான் "தனக்குவமை இல்லாதவன்" என்று நான் கூறலாம்.

வேறு ஒருவருக்கு "பெருமாள்" தனக்குவமை இல்லாதவராகத் தோன்றலாம்.

யார் யாருக்கு எது எது இஷ்ட தெய்வமோ, அதைப் பொறுத்து "தனக்குவமை இல்லாதவன்" மாறுபடும்.

நம்மில் பலர் பல தெய்வங்களை வணங்குவதுண்டு. அவற்றில் ஏதாவது ஒரு தெய்வத்தை "தனக்குவமை இல்லாதவனாக" தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒருமுறை ஒரு அன்பரிடம் அவரது இஷ்ட தெய்வம் எது என்று கேட்டேன். அதற்கு அவர் "ஹனுமான்" எனப் பதிலளித்தார். "ஹனுமான்" கடவுள் அல்ல; கடவுளின் அவதாரமுமல்ல. இருப்பினும் அவரைப் பொறுத்தவரை "ஹனுமான்தான்" தனக்குவமை இல்லாதவன்.

பல மனிதர்கள் கிராம தேவதைகளை வணங்குவார்கள். அவர்களுக்கு அவைதான் "தனக்குவமை இல்லாதவர்கள்".

ஆக, "தனக்குவமை இல்லாதவன்" என்பது, நமது மனம் யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறது என்பதைப் பொறுத்தது.

                    (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 28

"தாள்சேர்ந்தார்க்கல்லால்"

தனக்குவமை இல்லாதவன் திருவடிகளை சேராதவரை (மனக்கவலைகளை மாற்றுதல் அரிது என்கிறார் திருவள்ளுவர்)

திருவடிகளை சேருதல் என்றால் என்ன? உடல்ரீதியாக சேர முடியாது; மனதால் "தனக்குவமை இல்லாதவன் திருவடிகளை"
பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

வெகு தொலைவில் இருக்கும் நெருங்கிய சொந்தங்களின் நினைவாகவே இருக்கிறோம் அல்லவா? அதைப் போன்று தனக்குவமை இல்லாதவனின் நினைவும் இருக்க வேண்டும்.

வள்ளுவர் "சேர்ந்தார்" என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியிருக்கிறார். அந்த வார்த்தையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் கோவிலுக்கு செல்கிறோம்; கடவுளை வணங்குகிறோம்; பின் வீட்டிற்கு வந்து விடுகிறோம்.

"சேர்ந்தார்" என்றால், அது சேர வேண்டிய இடத்தைக் குறிக்கிறது. சேர வேண்டிய இடத்தைச் சேர்ந்தபின் அங்கிருந்து திரும்ப வேண்டியதில்லை.

தனக்குவமை இல்லாதவனை தொடர்ந்து மனதால் பற்றிக் கொண்டிருந்தால் (அவன் நீங்கள் தேர்ந்தெடுத்த சாதாரண மனிதனாக இருந்தாலும்), என்றேனும் ஒருநாள் "அவனோடு" மனதளவில் சேர்ந்து விடுவீர்கள்; அதாவது "அவனது" நினைவு உங்கள் ஆழ்மனதில் நிரந்தரமாக தங்கி விடும். அதன்பின் "அவன்" உங்களை விட்டு பிரிவதே இல்லை. அதனால்தான் மாணிக்கவாசகர் "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி" எனக் கூறுகிறார்.

உங்களாலும் அவரைப் போன்று கூற முடியும். முயற்சி செய்யுங்கள்.


                      (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 29

"மனக்கவலை மாற்றல் அரிது"

இறைவனது திருவடியைச் சேர்ந்தால் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று திருவள்ளுவர் மறைமுகமாகக் கூறுகிறார்.
அது எப்படி நடக்கும் என்பதை கொஞ்சம் ஆராய்வோம்.

அன்பு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், எந்த ஒன்றின் மீது பற்று வைத்தாலும் அது ஆசையாக மாறி விடும். பின்னர் அதுவே பாசமாகவும், பேராசையாகவும் மாறி விடுகிறது.

நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டுதான் வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

சான்றோர்கள் வட்டத்தை உடைத்து விடுகிறார்கள்;
பொது நலத்தில் நாட்டம் உள்ளவர்கள் தங்கள் வட்டத்தை விரிவு படுத்துகிறார்கள்; மற்றவர்கள் பாசம், பேராசை போன்ற காரணங்களினால் தங்களது வட்டத்தை சுருக்கி விடுகிறார்கள் .. அதன் காரணமாக அவர்களிடம் உள்ள அன்பு தூய்மையற்ற அன்பாக மாறிவிடுகிறது

தூய்மையற்ற அன்பு துயரங்களை சந்திப்பது/விளைவிப்பது என்பது இயல்பான ஒன்றுதான். இந்த கருத்து பலரால் ஏற்றுக் கொள்ள முடியாததாக தோன்றலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள் ..
வட்டம் சுருங்கியதன் காரணமாகத்தானே சமூகத்தில் தீண்டாமை, சாதியின் பெயரால் உண்டாகும் வன்முறைகள் போன்றவைகள் நடைபெறுகின்றின. 

வள்ளுவர் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் ..." என்று கூறுகிறார். அதன் பொருள்..
நம்மைச் சுற்றியுள்ள வட்டம் விரிவடைய வேண்டும் என்பதுதான். பின்பு அது உடைபட வேண்டும். அதற்கு ஒரே வழி ஆழ்மனதில் உள்ள சுமைகளை (பதிவுகளை) நீக்குவதுதான் 

                         (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 30

இறைவனது திருவடியைச் சேர்ந்தால் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று திருவள்ளுவர் இந்தக் குறளில் மறைமுகமாக கூறுகிறார். அது எப்படி என்று பார்ப்போம்.

பொதுவான விதி ஒன்று உண்டு. எந்த ஒன்றின் மீது நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தாலும், மனம் அந்த ஒன்றின் மீது ஒன்றி விடும். 
(Mind will succumb to the thing to which it is repeatedly diverted)

நாம் வணங்கும் ஒன்றின் மீது தொடர்ந்து நமது கவனத்தை செலுத்தி வந்தால், நமது மனம் அதன் திருவடிகளை பற்றிக் கொள்ளும். பின் அதன் ஞாபகமாகவே மனம் இருப்பின், பற்றுதல் காரணமாக நம்முள் இருந்த மற்ற பதிவுகள் அனைத்தும் வெறும் நினைவலைகளாக மாறி விடும்.

நம்மிடம் உள்ள அன்பும் மாசு இல்லாத தூய அன்பாக மாறி விடும். இதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு குறள் பற்றி சிந்திப்போம்.

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

'வேண்டுதல் வேண்டாமை என எதுவுமே இல்லாத இறைவனின் திருவடியைப் சேர்ந்தவற்கு எப்பொழுதும் துன்பங்களே கிடையாது' என வள்ளுவர் கூறுகிறார்.

வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் கலந்துதானே இருக்கும். ஆனால், வள்ளுவர் 'துன்பங்களே கிடையாது' என்று கூறுவது எப்படி சரியாகும்?

                     (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 31

முதலில் நாம் பார்த்த குறளும், இப்போது நாம் பார்க்கும் குறளும் ஒரேவிதமான பொருளைத் தருவதாகத் தோன்றினாலும், திருவள்ளுவர் ஒரு நுட்பமான குறிப்பை இந்த குறளில் குறிப்பிடுகிறார்.

முதலாவது குறளில் "தனக்குவமை இல்லாதவனின் திருவடியைச் சேர்ந்தால் மனதில் கவலைகள் இருக்காது" என்கிறார். அதாவது எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயமோ, கவலையோ இருக்காது என்கிறார்.

மனதில் ஆசைகள் இல்லையென்றால், அந்த மனிதனிடம் பயமும், கவலையும் இருக்காது என்பது இயற்கை. ஆனாலும், நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டால் அது நம்மை துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

இரண்டாவது குறளில் வரும் 
"அடி சேர்ந்தார்க்கு" என்ற வார்த்தைகளை எடுத்துவிட்டு மீதி வார்த்தைகளைக் கவனியுங்கள்.

"வேண்டுதல், வேண்டாமை இலான் ..... யாண்டும் இடும்பை இல"

இறைவன் திருவடியை மனதால் பற்றிக் கொள்கிறோம்; மனதில் கவலைகள் இல்லை. மனதில் ஆசைகள் இல்லாமல் இருந்தாலும் சிலது நடக்கக் கூடாது என நினைப்போம். எனவே நாம் விரும்பாதது நடந்தால் மனதில் துயரம் தொற்றிக் கொள்வது இயற்கை.

வள்ளுவர் கூறுகிறார் "வேண்டும் என்ற ஆசைகளை விட்டு விடுவதைப் போன்று, வேண்டாம் என்கிற நினைப்பையும் விட்டு விட்டால் எதிர்காலத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் துன்பத்தை தராது".

இதை எப்படி புரிந்து கொள்வது?

                  (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 32

நாம் எந்த ஒன்றின் மீதும் தொடர்ந்து நமது கவனத்தை செலுத்தி வந்தால், பற்றின் காரணமாக ஏற்கனவே பதிவாகியிருந்த மற்ற பதிவுகள் அனைத்தும் வெறும் நினைவலைகளாக மாறி விடும். தொட்டி நல்ல தண்ணீரால் நிரப்பப் படும்போது, அதில் உள்ள உப்புநீர் வெளியேறுவதைப் போன்று, கவனம் "தனக்குவமை இல்லாதவன்" மீது நிலைபெறும் பொழுது, பாசம், பேராசை போன்றவைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறி வெறும் நினைவலைகளாக மாறிவிடும்.

பாசம் இல்லையென்றால் உறவுகளை விட்டு விலகி விடுவோமோ என ஒரு சந்தேகம் வரலாம். அது போன்ற சந்தேகம் தேவையற்றது.

அப்பொழுதும் உறவுகளிடம் எப்போதும் போலவே நடந்து கொள்வோம். ஆனால் ஒரு வித்தியாசம் உள்ளது.

பற்று உள்ளவன் போலவே பற்றை விட்டவனும் நடந்து கொள்வான். பற்று உள்ளவன் பேரக் குழந்தைகளுடன் விளையாடினால் மனதில் குதூகலம் பொங்கும். குழந்தைகளுடன் விளையாடினால் கூட பற்றை விட்டவனது மனம் குதூகலிக்காது; வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.

பற்றை விடாதவனிடம் physical involvement-ம் mental involvement-ம் இருக்கும்; பற்றை விட்டவனிடம் physical involvement இருக்கும், ஆனால் mental involvement இருக்காது.

இது, புளியங்காய்க்கும், புளியம்பழத்துக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. புளியங்காய் தோட்டுடன் ஒட்டியேயிருக்கும்; புளியம்பழமோ தோட்டுக்குள்
இருந்தாலும் அதனுடன் ஒட்டாமல் விலகியே இருக்கும்.

"..புளியம்பழமும் தோடும்போல் 
ஆவதினி யெக்காலம்" என்று புலம்புகிறார் பத்திரகிரியார்.

முறையாகப் பயிற்சி செய்தால் உணர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பதிவுகளும், இச்சை மற்றும் கனவுகள் காரணமாக உருவாகிய பதிவுகளும் மறைந்து விடும்.

அதேபோல் "தனக்குவமை இல்லாதவன்" மீது (அது தனி மனிதர்களாகக்கூட இருக்கலாம்; உங்களைப் பொறுத்தவரை அவர்கள் "தனக்குவமை இல்லாதவர்கள்தான்) நமது பற்று நிலைகொள்ளும் பொழுது, பற்றுதல் காரணமாக முன்னர் ஏற்பட்ட பதிவுகள் அனைத்தும் நினைவலைகளாக மாறிவிடும். அதன்பின் எந்தவொரு நிகழ்வும் நம்மை துன்பத்தில் ஆழ்த்தாது.

                      (தொடரும்)


நிம்மதியின்மை
பதிவு 33

முதுமையில் தனிமை என்று வந்துவிட்டால் நேரமே போவதில்லை என வருந்துகிறோம். நேரம் நிறைய இருக்கிறது அல்லவா, அதனைப் பயன்படுத்தி "அகத்தாய்வு" செய்யுங்கள் என்றால், பின் எதற்காக தயங்குகிறோம்?

"விவேகம்", "வைராக்கியம்"
 .. இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தத்தையும், அவற்றின் இணைப்பையும் சரியாகப் புரிந்து கொண்டால் நமக்கு "அகத்தாய்வு" செய்வதில் தயக்கம் வராது.

விவேகம் என்றால் பொருட்களின் உண்மைத்தன்மையை சுய சிந்தனை மூலம் பகுத்து அறிவது எனப் பொருள் கொள்ளலாம். முதலில் நமது பழக்க வழக்கங்களை ஆராயக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை 'சுயபரிசோதனை'
(introspection)என்று சொல்லலாம். இதன் வழியாகத்தான் நாம் உணர்ச்சி பதிவுகளையும், இச்சை (கனவு) பதிவுகளையும் வெளியேற்றுகிறோம்.

பற்றுதல் காரணமாக ஏற்பட்ட பதிவுகளை நீக்குவதற்கு, நாம் நமது மனதை 'தனக்குவமை இல்லாதவனை' நோக்கி திருப்ப வேண்டும் என பார்த்தோம். இதனை விவேகம் என்று சொல்ல முடியாது. வெறுமனே மனதை மடைமாற்றம் செய்கிறோம் என்று சொல்லலாம்; அவ்வளவுதான். இதனுடன் கூட விவேகமும் இருந்தால்தான் நமது முயற்சி நல்ல பலனைத் தரும்.

விவேகம் மூலமாக நாம் வெளி உலகின் உண்மை தன்மையை .. அது வெறும் வெற்றிடம் என்பதை .. புரிந்து கொள்கிறோம். 
(Objective knowledge)

இந்தப் புரிதலானது உள் உலகில் பயணம் செய்வதை எளிதாக்கும்; இறுதியான எல்லைக் கோட்டை (மன அமைதி) அடைவதற்கு துணை புரியும். 
(Subjective achievement)

மனிதனுக்கு மனிதன் புரிந்து கொள்ளும் திறமை மாறுபடலாம். நம்மிடம் அந்தத் திறமை குறைவாக உள்ளது என்று எண்ணி சுய சிந்தனையை விட்டுவிடக் கூடாது.

விவேகம் மூலம் நமது
புரிதலின் தன்மை கூடக்கூட
பற்றற்ற தன்மை வளரும். பற்றற்ற தன்மை வளர வளர, புரிந்து கொள்ளும் திறமையும் வலுப்பெறும்.

ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருப்பதால் நாம் விவேகமாக சிந்திப்பதை விட்டுவிடக் கூடாது.

எதை சிந்திப்பது, எப்படி சிந்திப்பது என்பதை நமக்கு கற்றுக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என வள்ளுவர் வழிகாட்டுகிறார்.

                       (தொடரும்)

நிம்மதியின்மை
"தன்னிலை விளக்கம்"


"பொறுப்புகள் இருக்கும்போதே சரணாகதி முழுமையாக பெறுவதெப்படி?" .. இந்த கேள்வியை ஒரு அன்பர் கேட்டிருந்தார்.

இதற்கான விளக்கம் கொடுப்பது கடினமான ஒன்று. ஏனெனில், "சரணாகதி" என்பது மனதளவில் கடைப்பிடிக்கும் ஒரு பாவனை. அதை எப்படி விளக்குவது? எல்லாருக்கும் ஒரே மாதிரி மனம் இருப்பதில்லையே!?

இருந்தாலும் "புரியவைக்க முடியாத ஒன்றை புரியவைக்க முயற்சிப்பது ஒரு ஆன்மிகவாதியின் கடமையாகும்". 

சரணாகதி என்பது ஒரு பாவனை. அதனை பொறுப்புகள் இருக்கும்போதும் கடைப்பிடிக்க முடியும்.

நான் அதை எப்படி கடைப்பிடித்தேன் என்பதை விளக்குகிறேன். அதன் மூலம் சரணாகதி பற்றி ஒரு தெளிவு கிடைக்கும் என நினைக்கிறேன்.

எனது வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:-
1. குடும்ப வாழ்க்கை 
2. அலுவலக வாழ்க்கை 
3. ஆன்மிக வாழ்க்கை 

குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை என் தந்தையின் வாழ்க்கை முறையை பின்பற்றினேன். அதாவது தந்தையிடம் சரணாகதி அடைந்து விட்டேன்.

அலுவலக வாழ்க்கையைப் பொறுத்தவரை நான் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அரசியல் தூய்மையை அலுவகத்தில் பின்பற்றினேன். அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் மனதை செம்மை படுத்தின.
அதன் காரணமாக பொது வாழ்க்கையிலும் "கர்ம மார்க்கத்தை" கடைப்பிடிக்க முடிந்தது.

ஆன்மிகத்தை பொறுத்தவரை எனக்கு நிறைய குருமார்கள் உதவினர். திருவள்ளுவர் முதற்கொண்டு சுவாமி சின்மயானந்தர் வரை நிறைய பேர் எனக்கு வழி காட்டினார்கள். ஆனாலும் நான் சரணடைந்தது "பகவத் கீதையிடம்".

நாம் யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறோம் என்பது முக்கியமல்ல. அவர்கள்/அவைகள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கிறோமா என்பதுதான் முக்கியம்!!

என்னதான் விளக்கினாலும், நடைமுறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை கூறினால், கேள்வி கேட்ட அன்பர் 'சரணாகதி' என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.

இந்த சம்பவம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது.

எனது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு காரியத்தை செய்யச் சொன்னார். நான் முடியாது என மறுத்து விட்டேன்.

"எல்லாரும் இதனைச் செய்கிறார்கள்; நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்" என்றார்.

நான் அவரிடம் "என் அப்பாவிற்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன்" என்றேன்.

அவர் "உங்கள் அப்பா என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார்?" என்றார்.

நான் "இல்லை; அவர் காலமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது" என்றேன்!?

எனது பதிலைக் கேட்டதும் அவர் மௌனமாகி விட்டார்.
..... ..... ..... ..... .....  .....  .....
சரணாகதி என்றால் என்ன என்று இப்போது புரியும் என நம்புகிறேன்.

                        (தொடரும்)

நிம்மதியின்மை
பதிவு 34

இரண்டாவதாக நாம் செய்ய வேண்டியது நமக்கான வழிகாட்டியை தேடி, அவரை துணையாக கொண்டு நமது பயணத்தை தொடர வேண்டும். அவர் கூறும் கருத்துக்களை உள்வாங்கி நிதானமாக அவற்றை நமது அனுபவங்களோடு ஒப்பிட்டு 'அகத்தாய்வு' செய்ய வேண்டும்.

அகத்தாய்வு செய்யும் பொழுது நமக்கு சில தெளிவு பிறக்கும். "தெள்ளத் தெளிந்தார்க்கு ..." என்கிறார் திருமூலர்.

தெளிவு பிறந்தால் பற்றற்ற தன்மை வளரும். பற்றற்ற தன்மை வளரும்போது நமது புரிந்து கொள்ளும் திறமை கூடுவதை காணலாம். "விவேகம், வைராக்கியம்" ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து 'மன அமைதியை' நோக்கி நம்மை அழைத்து செல்லும்.

ஆக, நாம் நமக்கான வழிகாட்டியை கண்டுபிடிக்க வேண்டும். திருவள்ளுவர் நமக்கான வழிகாட்டி எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குறள் அதிகாரம் 45-ல், விரிவாகக் கூறுகிறார்.

                      (தொடரும்)

நிம்மதியின்மை
பதிவு 35

"The company of the wise is the surest remedy to cool down the bosom to a state of peace and happiness when it is in conflagration, fed by desires and hatreds, attachments and yearnings".
.. Swami Chinmayananda.
(Excerpts from the book 
"Talks on Sankara's Vivekachoodamani)

திருவள்ளுவர் திருக்குறளில் அதிகாரம் 45-ல் "பெரியவர்களை ஏன் வழித்துணையாகக் கொள்ள வேண்டும்" எனக் கூறுகிறார்.

இந்த அதிகாரத்தில் அவர் நாட்டை ஆளும் அரசனுக்காக பெரியோரின் துணை எவ்வளவு அவசியம் எனக் கூறுகிறார். இருந்தாலும், அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் நமக்கும் பொருந்தும்.

பெரியவர் என்றால் வயதானவர் என்று நினைக்கக் கூடாது. அவர் நம்மைவிட ஆன்மிக சிந்தனையில் தெளிவாக இருப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

பெரியோரின் துணை எதற்காக வேண்டும்? பொதுவாக மனிதர்கள் இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு, வெற்றி-தோல்வி என இரண்டு முனைகளிலும் வாழ்ந்து வருபவர்கள். அதனால், மனதில் நிம்மதி இன்றி புலம்பித் தவிக்க நேரிடும்.

இந்தப் புலம்பலில் இருந்து விடுபட்டு "மன அமைதியை"
அடைவது எப்படி என்ற வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவிட உறுதுணையாய் இருப்பவர்களைத்தான் "பெரியோர்கள்" என திருவள்ளுவர் கூறுகிறார்.

எனவே, தக்க பெரியார் ஒருவரை கண்டு பிடித்து அவரை வழித்துணையாகக்
கொள்ளுங்கள். உங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்களுக்கு உரிய விடைகளை அவர் தருவார்.

                        (தொடரும்)

நிம்மதியின்மை
பதிவு 36

மேலே சொன்ன இரண்டு பயிற்சிகளையும் முழு மனதோடு செய்து வந்தால் நிச்சயம் மனதிலுள்ள பாரம் குறைந்து விடும். நீங்களும் "மன அமைதி" என்றால் என்னவென்று புரிந்து கொள்வீர்கள்.

நமக்கு "மன அமைதி" வந்து கொண்டிருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது? அதற்கான அடையாளங்கள்:-
1. Sama .. calmness of the mind .. மனம் கொந்தளிப்பு எதுவும் இன்றி அமைதியாக இருக்கும்.
2. Dama .. self-control .. உணர்ச்சிகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
3. Uparati .. self-withdrawal .. தேவையெனில் மனதை புறவுலகில் சஞ்சரிக்காமல் தடுக்க முடியும்.
4. Titiksa .. forbearance .. சகித்துக்கொள்ளும் தன்மை வளரும்.
5 Sraddha .. the capacity to know the "truth" .. மெய்ப்பொருளை அறிந்து கொள்ளும் ஆர்வமும், திறமையும் கூடி வரும்.
6. Samaadhana .. tranquility .. மனம் சலனமின்றி இருக்கும்.
இதனை "Shad sampatti" என்று சொல்கிறார்கள்.

நாம் அமைதியின்றி தவிப்பதற்கு மூல காரணமாக இருப்பது நம்மிடம் இருக்கும் 'அஹங்காரமே"!? இதை 'ஆணவம்' என்றும் 'அகந்தை' என்றும் சொல்வார்கள்.

அஹங்காரத்தின் தீவிரம் குறையக் குறைய, மனதில் அமைதி வளர்ந்து வரும்.

அஹங்காரம் (அகந்தை) முற்றிலும் அழிந்து விட்டால் என்ன நடக்கும்? அங்குதான் நமது வாழ்க்கையின் எல்லைக்கோடு ஆரம்பமாகிறது. 
அது ..

"அகந்தை அழியுமிடம்
 ஆண்டவனை அறியுமிடம்"

                      (முற்றும்)

Saturday, 11 November 2023

கருணை பொங்கும் உள்ளம்

கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 1

'பாவ மன்னிப்பு' படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் ...

"கருணை பொங்கும் உள்ளம்
- அது 
கடவுள் வாழும் இல்லம்

கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்."

மிக சாதாரணமாக தோன்றும் வரிகள். ஆனால், ஆழமான பொருள் நிறைந்த வரிகள்.

இதில் முதல் இரண்டு வரிகளுக்கான விளக்கத்தை தொடரின் முடிவில் தருகிறேன். கடைசி இரண்டு வரிகளை மட்டும் கொஞ்சம் ஆராய்வோம்.

மூன்றாவது வரியில்
"கருணை மறந்தே வாழ்கின்றார்" என்று சொல்கிறார். 'மறந்தே' என்ற வார்த்தைக்கு எந்த மாதிரி பொருள் கொள்வது?

தந்தை தன் குடும்பத்தாருடன் வெளியே கிளம்புகிறார். வீட்டைப் பூட்டிவிட்டு, காருக்கு அருகில் வந்தபின்தான் 'கார் சாவியை' எடுத்துவர மறந்து விட்டது நினைவிற்கு வருகிறது.

'மறந்து விட்டது' என்றால் காருக்கு சாவி இருக்கிறது; ஆனால், வீட்டிலிருந்து அதை எடுத்துவர மறந்து விட்டார் என பொருள் கொள்ளலாம்.

"கருணை மறந்தே வாழ்கின்றார்" என்ற வரியில் உள்ள "மறந்தே" என்ற வார்த்தையை எப்படி புரிந்து கொள்வது? 

கருணை என்பது ஒரு பொருளாக இருந்தால், எங்கேயோ மறந்து வைத்து விட்டார் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், அது பொருள் அல்லவே!?

அப்படியானால் இதை எப்படி புரிந்து கொள்வது?

                      (தொடரும்)

கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 2

கருணை என்பது நமது மனதிலிருந்து வெளிப்படும் ஒரு உணர்வு.

'மறந்தே' என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? கருணை என்ற ஒன்று உள்ளது; முறையாக பயிற்சி செய்தால் எந்த மனிதனும் அதை அடைய முடியும்.
கருணை பொங்கும் உள்ளமே மனித வாழ்க்கையின் உயர்ந்த இலக்காக இருக்க வேண்டும்.
ஆனால், இந்தப் புரிதல்கூட இல்லாமல் வாழும் மனிதன், அடிப்படை உண்மையை மறந்துவிட்டு வேறு எதற்காகவோ கடவுளைத் தேடி அலைகின்றானே என எண்ணி வருந்துகிறார் கவிஞர்.

உண்மையான பக்தன் என்றால் அவன் மனதில் கருணை பொங்கி வழிய வேண்டும். இறைவனிடம் 'சரணாகதி' அடைந்தால் மட்டுமே, உள்ளத்தில் கருணை பொங்கும். ஆனால், நம்மிடம் 'சரணாகதி' பாவனை இல்லையே!? நாம் வேறு பல வேண்டுதல்களை அல்லவா கடவுள் முன் வைக்கிறோம்.

அதற்கு காரணமாக இருப்பது, நமது ஆழ்மனதில் இருக்கும் 'பதிவுகள்தானே'!?

                   (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 3

சென்ற தொடருக்கான பதிவுகள் வெளிவந்த போது, 'ஆழ்மனம்' சம்பந்தமாக சில கேள்விகள் முன்வைக்கப் பட்டன. அவை ...

1. ஆழ்மனத்தில் (sub-concious mind) பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன? 

2. அது எவ்வாறு அகங்காரமாக மாறுகிறது?.  

3. சூப்பர் கான்சியஸ் மைண்ட் என்று ஒன்று உள்ளதே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?

4. ஆழ்மனது பதிவை (பதிவுகளை) எப்படி நீக்குவது?

இந்தத் தொடரில், ஆழ்மனம் பற்றி மட்டுமே சிந்திக்கப் போகிறோம். ஆழ்மனம் என்பது அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் ஒரு பகுதிதான். இருப்பினும், மனிதன் எதிர்கொள்ளும் எல்லாவித துன்பங்களுக்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஆழ்மனம் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மனம் என்றால் என்ன?

நமக்கு மூளை என்றால் எது என்று தெரியும். புத்தி என்றாலும் எதுவென்று தெரியும்; மூளையின் ஒரு பகுதிதான் புத்தியாக செயல்படுகிறது என்பதும் தெரியும். ஆனால், மனம் என்றால் என்னவென்று கேட்டால், ஒரே மாதிரியான பதில் கிடைப்பதில்லை.

Mind is the impression of the past experiences .. Swami Chinmayananda
மனம் என்பது புறவுலகில் நாம் சந்திக்கும் அனுபவங்கள் சங்கமிக்கும் இடம். அது மூளையில்தான் நடைபெறுகிறது.

ஆக, மூளையின் ஒரு பகுதி புத்தியாகவும், மற்றொரு பகுதி மனமாகவும் இயங்குகின்றன. மனமும் 'உணர்வு மனம்', 'உணர்வற்ற மனம்' என இரணடு பிரிவுகளாக இயங்குகிறது. உணர்வற்ற மனதைத்தான் நாம் ஆழ்மனம் என்று சொல்கிறோம்.

உணர்வு மனதில் ஏற்படும் பதிவுகள் நீடித்து நிற்பதில்லை; ஆனால், ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை.

இந்த ஆழ்மனப் பதிவுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.

                   (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 4

முதலாவது கேள்வி:-
ஆழ்மனத்தில் (sub-concious mind) பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன? 

ஆழ்மனதில் பதிவுகள் எந்தெந்த வழிகளில் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

புறவுலகில் இருந்து வரும் தாக்கங்களை உணர்வு மனம் ஐம்புலன்களின் உதவியுடன் எதிர்கொள்கிறது. அதனால் ஏற்படும் அனுபவத்தை அது ஏற்றுக்கொள்ளலாம்; அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். எது எப்படி இருப்பினும், மனம் எதிர்கொள்ளும் தாக்கம் ஆழ்மனம் வரை சென்றுவிடும். அந்தத் தாக்கத்தை ஆழ்மனம் விரும்பி ஏற்றுக்கொண்டால், அங்கு ஒரு பதிவு நிகழ்ந்து விடும். (உ-ம்) சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்பட பாடலைக் கேட்டேன். அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. குறிப்பிட்ட பாடலை இரண்டொரு தடவைதான் கேட்டிருப்பேன். இருந்தாலும் அந்தப் பாடல் என்னை மிகவும் ஈர்த்ததால் முழு பாடலும் என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அந்தப் பாடலில் இருந்து ஒரு சரணம் ...
".. ஏழடுக்கு மாளிகையில்
இருக்கிற பேர்வழிகள்
எத்தனையோ தப்புத்தண்டா
பண்ணுவாங்க
ஏழை எளியவங்க
இல்லாத காரணத்தால்
ஏதோ சிறு தவறு
பண்ணுவாங்க

இது தெரியும்
அது தெரியாது .."

ஆழ்மனதில் பதிவுகள் நிகழ்வதற்கு இது ஒரு வழி. அடுத்த வழி ...

                     (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 5

வீட்டில் குழந்தை பிறந்தால், அதன் தாய் அதனிடம் அன்பை பொழிகிறாள். அந்த வீட்டின் வேலைக்காரியும் அந்தக் குழந்தையை எடுத்து கொஞ்சுகிறாள். இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

குழந்தையின் தாய் அன்பை வெளிப்படுத்துவதுடன் அந்தக் குழந்தையின் மீது பற்றும் வைக்கிறாள். (it is only a mental attachment and not any physical attachment). விளைவு .. அன்பாக இருந்த ஒன்று பாசமாக மாறி ஆழ்மனதில் பதிவாகி விடுகிறது.

நாம் எந்த ஒன்றின் மீது பற்று வைத்தாலும் .. அந்த ஒன்று நம்மிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் .. அதன் நினைவு ஆழ்மனதில் பதிவாகி விடுகிறது.

ஒன்றின் மீது பற்று வைத்தால் முதலில் அது ஆசையாகவும், பின்னர் அது பாசமாகவோ, பேராசையாகவோ ஆழ்மனம் வரை சென்று விடுகிறது.

பிரச்சனை என்னவென்றால், எந்த ஒன்றின் மீது ஆசை வைத்தாலும், அதன் பின்னணியில் பயமும், கோபமும் இருக்கும். 

ஆசைப் பட்ட ஒன்று கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயம்; கிடைக்கா விட்டால் கோபம் -- அந்த ஒன்று கிடைத்து விட்டாலோ, அது தன்னை விட்டு போய்விடுமோ என்ற பயம்; போய்விட்டாலோ அதற்கு யார் காரணமோ அவர் மீது கோபம். 

ஆழ்மனப் பதிவு என்று வந்துவிட்டால் இது ஒரு தவிர்க்க இயலாத சுழற்சியாகிவிடுகிறது.

                     (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 6

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத்தை மனப்பாடம் செய்கிறார்கள். அதன் நோக்கம் என்ன?

குறிப்பிட்ட பாடத்தை திரும்பத் திரும்ப படிக்கும் போது, அந்தப் பாடத்தை பற்றிய நினைவு ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. அதன்பின் அதனை எளிதாக நினைவு படுத்திக் கொள்ளலாம்.

கடவுளை வணங்கும் போது நமக்கு பிடித்த பாடல்களை பாடுகிறோம். தொடர்ந்து பாடி வந்தால் அந்தப் பாடல்கள் நமது ஆழ்மனதில் பதிவாகி விடுகின்றன. பின்னர் அவற்றை நினைவில் கொள்வது எளிதாகி விடுகிறது.

திருக்குறள் பாடல்களை படித்து நினைவில் கொள்ள விரும்புகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதல் நாள் முதலாவது குறளை பத்து தடவை படிக்க வேண்டும். மறுநாள் முதலாவது குறளை ஒருதடவை படித்து விட்டு, அடுத்த குறளை பத்து தடவை படிக்க வேண்டும். அடுத்த நாள் முதல் இரண்டு குறள்களையும் ஒருதடவை படித்துவிட்டு அடுத்த குறளை பத்து தடவை படிக்க வேண்டும். இந்த முறையைக் கடைப்பிடித்தால், நாம் படித்த பாடல்கள் அனைத்தும் எளிதாக ஆழ்மனம் வரை சென்று விடும்.

                   (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 7

குடிப்பழக்கம் இல்லாத ஒருவன் எப்படி குடிகாரனாக மாறுகிறான்?

நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக குடிக்கப் பழகியவன், தொடர்ந்து குடித்து வந்தால் அது பழக்கமாக மாறி ஆழ்மனதில் ஒரு பதிவை ஏற்படுத்தி விடுகிறது. பின்னர் 'குடிப்பது' என்பது தன்னிச்சையாக நடைபெறும் செயலாகி விடுகிறது.

Pizza, புரோட்டா, ஐஸ்கிரீம், அதிக உப்பு கலந்த தின்பண்டங்கள், குடிப்பழக்கம், பீடி, சிகரெட் போன்றவை உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும், அவற்றை ஏன் அடிக்கடி உபயோகிக்கிறோம்?

அதற்கு காரணமாக இருப்பது அவற்றைப் பற்றிய பதிவுகள் ஆழ்மனதில் இருப்பதால்தான். நமக்கு அது தெரிவதில்லை; ஆனால், அந்தப் பதிவுகள்தான் அவற்றை மீண்டும் மீண்டும் உபயோகிக்க நம்மை தூண்டுகின்றன.

                      (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 8

நல்ல அனுபவங்களாக இருந்தாலும், கெட்ட அனுபவங்களாக இருந்தாலும் உணர்ச்சி பொங்க அவற்றை எதிர் கொள்ளும்போது, அவை நமது ஆழ்மனதில் புதிய பதிவுகளை ஏற்படுத்தி விடும்.

மனிதனுக்கு ஏற்படும் இனவெறி, சாதிவெறி, மதவெறி போன்றவைகளுக்கு காரணமாக இருப்பது அவனுள் தோன்றும் உணர்ச்சி பெருக்கம் தான்.

பல நேரங்களில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் உணர்வு மனதோடு தங்கிவிடும். ஆனாலும், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால், குறிப்பிட்ட அனுபவம் ஆழ்மனம் வரை சென்று விடும்.

நமது மனம் புண்படும்படி ஒருவர் பேசி விடுகிறார். அது நமது உணர்வு மனதில் ஒரு பதிவை நிகழ்த்துகிறது. பின்னர் நாம் அதையே நினைத்துக் கொண்டிருந்தால், அந்தப் பதிவு ஆழ்மனம் வரை சென்று விடும்.

                  (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 9

அடுத்தது, கற்பனையில் செய்யப்படும் பதிவுகள். 

இதில் பல வகையான பதிவுகள், அந்தந்த மனிதனின் மனநிலைக்கு ஏற்றவாறு நடைபெறும்.

இல்லாததை நினைத்து ஏங்குவது, அடைய முடியாத ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவது, தேவையில்லாமல் கவலைப் படுவது போன்று விதவிதமான பதிவுகள் ஆழ்மனதில் இடம் பெறும்.

'மனப்பிராந்தி' என்று பலர் சொல்வதுண்டு. அது பெரும்பாலும் தேவையற்ற பயத்தை குறிப்பதாகவே இருக்கும். இதுவும் கற்பனையின் காரணமாக ஏற்படும் பதிவுதான்.

இவை அனைத்தும் ஆரம்பத்தில் ஒரு எண்ணமாக மட்டுமே தோன்றும். அதையே மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால், அந்த எண்ணங்கள் ஆழ்மனம் வரை சென்று விடும்.

ஆழ்மனதில் பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதற்கு இந்த விளக்கங்கள் போதும் என எண்ணுகிறேன்.

இனி, இந்தப் பதிவுகள் காரணமாக என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

                    (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 10

ஆழ்மனப் பதிவுகள் காரணமாக ஏற்படும் விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.

1. "மனமே உனது உற்ற நண்பன்; அதுவே உனது முக்கிய எதிரியும் கூட" என்று கிருஷ்ணன் கூறுகிறார். அவர் மனம் என்று பொதுவாகக் கூறினாலும், நண்பனாகவோ, எதிரியாகவோ இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது "ஆழ்மனப் பதிவுகள்தான்".

2. மனிதனுக்குள் ஏற்படும் inner-suffocation, depression போன்றவைகளுக்கு இவையே காரணம்.

3. மனிதன் பல நேரங்களில் தன்னிலை மறந்து தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்தால், அவற்றின் பின்னணியில் இருப்பதுவும் ஆழ்மனப் பதிவுகளே.

4. இரவு நேரத்தில் மனிதனை தூங்கவிடாமல் அல்லல் படுத்துவதும் இந்தப் பதிவுகளே.

5. "பெற்றது பொய்யுடல்
முன்செய் வினைப்பயன்..."
மனிதன் இறக்கும் போது ஆழ்மனதில் பதிவுகள் இருந்தால், அவனுக்கு மறுபிறவி உண்டு என சில சமயங்கள் சொல்கின்றன. அதனால்தான் வள்ளுவர் "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" எனக் கூறுகிறார்.

6. மனிதனின் உள்ளத்தில் 'கருணை' பெருக்கெடுக்கத் தடையாக இருப்பதும், இந்த ஆழ்மனப் பதிவுகளே.

கருணை, இரக்கம் .. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

                       (தொடரும்)



கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 11

கருணை, இரக்கம் .. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

இரக்கம் என்பது உணர்ச்சியில் பிறப்பது. கொடிய மனம் படைத்த மனிதனிடம் கூட இரக்கம் பிறப்பதைக் காணலாம். பேரிடர் காலங்களில் பலரும் இரக்கம் காட்டுவதைக் காண முடியும். பல சமயம், தனி மனிதர்களும், தேவைப்படின், பிறரிடம் இரக்கம் காட்டுவதுண்டு.

கருணை என்பது உணர்வில் கலந்தது. அது குறிப்பிட்ட மனிதர்களிடம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்‌. ஆனால், அதை அவர்கள் வெளியே பறைசாற்றுவதில்லை. நாமாக அதை உணர்ந்தால் தான் உண்டு.

எல்லா மனிதர்களிடமும் இரக்கம் இருப்பதைப் போன்று, கருணையும் இருக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்கான காரணத்தை பின்னர் பார்ப்போம்.

                       (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 12

இரண்டாவது கேள்வி:-
அது  (ஆழ்மனப் பதிவுகள்) எவ்வாறு அகங்காரமாக மாறுகிறது?.  

ஆழ்மனப் பதிவுகளை "பீஜம்"
என்கிறார் ரிஷி பதஞ்சலி. பீஜம் என்றால் உயிர்ப்புடன் கூடிய விதைகள் என்று பொருள்.

ஆழ்மனப் பதிவுகள் அகங்காரமாக மாறுவதில்லை. ஆழ்மனப் பதிவுகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, மனிதனின் தன்முனைப்பு (அகங்காரம்) செயல்படத் துவங்குகிறது.

ரஜோ குணம் மிகுந்த மனிதனிடம், தன்முனைப்பின் வேகம் மிகுந்து காணப்படும்.

அவன் சத்துவ குணத்தில் பிரவேசித்தால், அகங்காரம் நலிவடையத் தொடங்கி விடும்.

                     (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 13

மூன்றாவது கேள்வி:-
சூப்பர் கான்சியஸ் மைண்ட் என்று ஒன்று உள்ளதே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான்காவது கேள்வி:- ஆழ்மனது பதிவை (பதிவுகளை) எப்படி நீக்குவது?

நான்காவது கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு, மூன்றாவது கேள்விக்கு வருவோம்.

ஆழ்மனப் பதிவுகளை நம்மால் நீக்க முடியாது என்பதுதான் உண்மை. அவைகளாக நீங்கினால் தான் உண்டு.

".. பாச வினைகள் பற்றது நீங்கி" ... 'பற்றது நீக்கி' என்று
பாடவில்லை.

".. அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" .. 'பற்றை விடற்கு' என வள்ளுவர் பாடவில்லை.

"ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தில் ஒன்றிநிற்ப தெக்காலம்?"
.. பத்திரகிரியார்.

ஆசை வலைபின்னி பாசத்தில் நம்மை தள்ளி விடுகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? ஓசைமணி தீபத்தில் ஒன்றி நிற்க வேண்டும் என்கிறார்; அதாவது இறை சிந்தனையில் இரு என்கிறார்.

ரிஷி பதஞ்சலி "ஈஸ்வர ப்ரணிதானத்"; இறைவனிடம் சரணடைவது
என்கிறார்.

முழு நேரமும் இறை சிந்தனையில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தால், ஆழ்மனதில் இருந்த தேவையற்றப் பதிவுகள் ஒவ்வொன்றாக நம்மைவிட்டு நீங்கிவிடும்; பாச உணர்வும் மறைந்து விடும்.  

மனம் இறை சிந்தனையால் நிரம்பியிருந்தால், உள்ளத்திலிருந்து பாசம் விலகிவிடும்; தூய்மையான அன்பு மட்டுமே அங்கு குடிகொள்ளும்.

                    (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 14

'சூப்பர் கான்சியஸ் மைண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன?' என ஒரு அன்பர் கேட்டிருக்கிறார்.

இந்தத் தொடருக்கும்,  'சூப்பர் கான்சியஸ் மைன்ட்'-கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற சந்தேகம் வரலாம். நிச்சயமாக சம்பந்தம் உண்டு.

கான்சியஸ் மைன்ட்  (conscious mind) -- உணர்வு மனம்;
சப்-கான்சியஸ் மைன்ட் (Sub-conscious mind) .. ஆழ்மனம். இதை உணர்வற்ற மனம் (unconscious mind) என்றும் சொல்வார்கள்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு மனங்களும் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டவை. ஆனால், 
 'சூப்பர் கான்சியஸ் மைண்ட்' 
(Super-conscious mind) 
விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாத ஒன்று.
இது உணர்வு மனம் மற்றும் உணர்வற்ற மனம் இரண்டும் கடந்த நிலை!! இதை எப்படி புரிந்து கொள்வது?

".. மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று பாடுகிறார் தாயுமானவர்.

"..மனமிறக்க.." என்றால், மனம் இல்லாமல் போய் விடும் என்று அர்த்தமல்ல; மனம் இருக்கும், ஆனால் மனதை ஆழ்மனப் பதிவுகள் மூலம் ஆட்டிவைத்த "நான்" என்ற அகங்காரம், "எனது" என்ற மமகாரம் இரண்டும் நலிந்து அவற்றின் 'தன்முனைப்பு' வெகுவாகக் குறைந்து விடும்.

அதன் பின்னர், அந்த மனிதனின் இயக்கம் இரண்டு வழிகளில் மாறிவிடும்:-
1. ஆழ்மனதின் உந்துதல் இல்லாமல், ஐம்புலன்களின் எந்தவித உதவியும் இன்றி அந்த மனிதன் புறவுலகத் தாக்கங்களை நேரடியாக எதிர் கொள்கிறான். இதை ரிஷி பதஞ்சலி "பிரத்தியட்சம்" என்று குறிப்பிடுகிறார். புறவுலகத் தாக்கங்களை நேரடியாக எதிர்கொள்ளும் பொழுது, அவற்றின் பின்னணியில் இருக்கும் 'காரணிகளையும்' அவனால் புரிந்து கொள்ள முடிகிறது.

2. அவனது இயக்கத்தில் பெரிய மாறுதல்கள் இருந்தாலும், அதன் பின்னணியில் இருப்பது "சித்தத்தின் உள்ளிருந்து பெருக்கெடுத்து அவனை முற்றிலும் சூழ்ந்து கொள்ளும் உள்ளொளிதான்".

இந்த நிலையில் அந்த மனிதனை இயக்குவது "சூப்பர் கான்சியஸ் மைண்ட்" (super-conscious mind) என்று சொல்லலாம். இது எனது தனிப்பட்ட கருத்து.

                      (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 15

பொதுவாக நாம் எல்லோரும் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். (இது ஒரு கற்பனைதான்)

'நான்' என்று சொல்லும் போது, அது வெறும் புள்ளிதான். ஆனால், கூடவே 'எனது' என்ற ஒன்று வந்துவிட்டால் .. அது உயிருள்ளதாக இருந்தாலும், உயிரற்றதாக இருந்தாலும்.. அங்கு ஒரு வட்டம் உருவாகி விடும். வெகு விரைவில் 40, 50 'எனது' ஒன்றுகூடி வட்டத்தைப் பெரிதாக்கி விடும். 'எனது' என்பதன் எண்ணிக்கை கூடக்கூட, மனிதனின் அகங்காரம் மேலும் மேலும் வலுவடைந்து விடும்.

அகங்காரம் உள்ள மனிதனிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அகங்காரம் புறவுலகம் சார்ந்தது; கருணை அகவுலகம் சார்ந்தது.

மனிதனிடம் கருணை பிறக்க வேண்டுமென்றால், அவனது அகங்காரம் நலிவடைய வேண்டும். அதற்கு, பற்றின் காரணமாக வட்டத்தில் இருக்கும் 'எனதின்' (my) எண்ணிக்கை குறைந்து, முடிவில் வட்டம் காணாமல் போக வேண்டும்; அல்லது 'எனது' என்ற பற்று நம்மை விட்டு நீங்க வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

ஒரு சிலரே 'வட்டத்தில்' மாட்டிக் கொள்ளாமல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். ரமண மகரிஷி, ஆதி சங்கரர் போன்றவர்கள் சிறு வயதிலேயே புறவுலக வாழ்க்கையைத் துறந்து  வெளியேறியவர்கள்.

இன்னும் சிலர் வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த அதிர்ச்சி காரணமாக வட்டத்தை துறந்து வெளியேறி விடுகின்றனர் ...
பட்டினத்தாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஒரு "காதறுந்த ஊசி";
பத்திரகிரியாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஒரு "கழுமரம்";
அருணகிரிநாதருக்கு
அதிர்ச்சியைக் கொடுத்தது அவரது "சகோதரி".

புத்தரைப் போன்றவர்கள் தங்களைத் துளைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை தேடி வட்டத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

அப்படியானால், வட்டத்தில் சிக்கித் தவிக்கும் இல்லற வாசிகள் உள்ளத்தில் கருணை மலர வாய்ப்பே இல்லையா?

                      (தொடரும்)


கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 16

ஆழ்வார்கள், நாயன்மார்கள் எனப் பலர் நம்மால் வணங்கத்தக்கவர்களாக உள்ளனர். அவர்களில் இல்லறவாசிகளும் அடங்குவர். அந்த அளவிற்கு அவர்கள் உயர்ந்து நிற்க காரணம் என்ன?

நம்மிடம் இல்லாத ஒரு சிறப்பு அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அது எது?

நம்மிடம் இருக்கும் ஒன்று அவர்களிடத்தில் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான காரணம். அது நம்மை ஆட்டிப் படைக்கும் "அகங்காரம்".

ஜனக மகாராஜா ஒரு நாட்டையே ஆட்சி செய்தார். இருந்தும் அவரால் அகங்காரத்தை விட்டு பற்றற்ற வாழ்க்கை வாழ முடிந்தது. அவரோடு ஒப்பிட்டால், நம்முடைய 'எனதின்' (my) எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் நம்மால் பற்றின்றி வாழ முடியவில்லை. பற்றின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?

ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் அனைவரும் இறைவனிடம் சரணடைந்தவர்கள். இறைவனிடம் சரணடைந்து விட்டால், அதன்பின் அந்த மனிதனிடம் அகங்காரம் இருப்பதில்லை. பல்வேறு காரணங்களால் நம்மால் சரணடைய முடியவில்லை என்றால், அடுத்து என்ன செய்யலாம்?

தினந்தோறும் சில மணித் துளிகள் ஒதுக்கி அகத்தாய்வு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். முறையாக செய்து வந்தால் சில வாழ்வியல் உண்மைகள் புரியும்; எனது (my) என்று எதையெல்லாம் நினைக்கிறோமோ, அவற்றின் மீது கொண்ட பற்று குறைந்துவிடும்.

நாளடைவில் நமது எண்ண ஓட்டம் "ஆக்ஞா" சக்கரத்தை நோக்கி நகர்ந்து விடும். அது இறைவனின் இருப்பிடம் அல்லவா? அதன்பின் "கருணை" உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்ளும்.

அதனால்தான் கவிஞர் ..
"கருணை பொங்கும் உள்ளம்
- அது
கடவுள் வாழும் இல்லம்" என்கிறார்.

                       (முற்றும்)

Thursday, 21 September 2023

சனாதன தர்மம் - பாகம 2


சனாதன தர்மம் - பாகம் 2

முன்னுரை 

'சனாதன தர்மம்' பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதில், சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. இது, சனாதன தர்மம் என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. 

எனவே, நாமும் நமது பங்கிற்கு நமது கருத்துக்களைச் சொல்லி வைப்போம் என முடிவு செய்து விட்டேன்.

எனது கருத்துக்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் நாத்திகவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சனாதன தர்மத்தை நம்புகிற மனிதர்களுக்குள்ளும், பலர் எனது கருத்துக்களுக்குத் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்த நேரிடலாம்.

இருப்பினும்,  சிலருக்காவது  நமது கருத்துக்கள் பயன் படலாம் என எண்ணியே இந்தத் தொடரை வெளியிடுகிறேன்.

தேவைப்படும் இடங்களில் எனது ஆதங்கத்தை கேள்விகளாக முன் வைக்கிறேன். அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும் மற்றும் சமயம் சார்ந்த தலைவர்களும் அவற்றை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை வணங்கி, தொடரைத் தொடங்குகிறேன்.
.....    .....    .....    .....   .....    .....    .....    .....

ஏற்கனவே, "சனாதன தர்மம்" என்ற தலைப்பில் நிரந்தர உண்மையாக இருப்பது பரம்பொருளின் ஒரு பகுதியாக உள்ள "ஜீவாத்மா"
மட்டுமே; அதனை ஊகிப்பதன் மூலம் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் என எழுதியிருந்தேன்.
(பகவான் கிருஷ்ணர் "ஆத்மா என்பது சனாதனமாக இருப்பது; அதனை அழிக்க முடியாது" என்கிறார் - - பகவத்கீதை 2.24)

"சனாதன தர்மம்" என்றால் இதுதான் அர்த்தமா? வேறு விளக்கங்கள் கிடையாதா என சந்தேகம் வரலாம். சொல்லப்போனால் சமீபத்தில் ஒரு அன்பர் "சனாதனம் சொல்லும் அறநெறிகள்தான் என்ன?" என ஒரு கேள்வியை முன்வைத்தார். அவருக்கு "சனாதனம்" என்ற வார்த்தையே பிடிக்காது; ஆனாலும் அவரது கேள்வி மிகவும் நியாயமானதே!?

இந்த சந்தேகம் "சனாதன தர்மத்தில்" நம்பிக்கை உள்ளவர்களுக்கும் ஏற்படலாம். எனவே இதற்கான விளக்கங்களை, நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில், இந்தத் தொடரில் கூறுகிறேன்.

இந்தியாவில் உள்ள சமய நூல்களில் இருந்து நான் கற்றது 'கையளவு' கூட இல்லை; வெறும் 'விரல்' அளவு கூட இருக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான். எனவே எனது கருத்துக்களை சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில், எனது கருத்துக்களில் சில நடைமுறையில் நாம் நம்பும் கருத்துகளுக்கு மாறுபட்டதாக இருக்கும்.

அவை சிந்தனைக்கு உகந்ததாக இருந்தால், அந்தக் கருத்துக்கள் உங்களுக்கு சரி எனத் தோன்றினால் மட்டும் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லையெனில் அவற்றை மறந்து விடுங்கள்.

ஏனெனில், இது ஒரு சாமானிய மனிதன் எழுதும் தொடர் மட்டுமே!!

 



இந்து மதத்தைத் தாக்குவதற்கு திராவிடக் கழகமும், அதன் கூட்டாளிகளும் கையிலெடுக்கும் மிக முக்கிய வார்த்தைகள் 'சனாதன தர்மம், மனு தர்மம் மற்றும் வர்ணாஸ்ரம தர்மம்' ஆகியவை.

இவற்றில் மனுதர்மம் என்பது ஒரு காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் மட்டுமே. இப்பொழுது அது புழக்கத்தில் இல்லை. அது காலாவதியான ஒன்று. அதை வைத்து இந்து மதத்தை தாக்குவது எந்த வகையில் சரியென்று தெரியவில்லை. 

"அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு" என்றார்கள். பின்னர் ஒரு காலகட்டத்தில் அதனை விட்டு விட்டார்கள். அவர்கள் வேண்டாமென்று விட்டு விட்ட கொள்கையைச் சுட்டிக்காட்டி, சுடுகாட்டுக்கு ஏன் போகவில்லை என்று இப்போது நாம் கேட்டால் அது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம். அது போன்றதுதான் மனு தர்மத்தை சுட்டிக்காட்டி இந்து மதத்தை தாக்கிப் பேசுவதும்!?

அது சரி, இந்து மதம் என்றால் என்ன?

   



"கேள்வி 1"

"வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள சமயங்கள் ஆறு இந்தியாவில் இருக்கின்றன. .. 
சைவம் (சிவம்), 
வைஷ்ணவம் (விஷ்ணு), சாக்தம் (அம்பிகை), கணபத்யம் (கணபதி), கௌமாரம் (கார்த்திகேயன்), 
சௌரம் (சூரிய நாராயணன்)
என இந்த ஆறு சமயங்கள் பெயர் பெறுகின்றன. இவைகளின் தொகையே இக்காலத்தில் ஹிந்து மதம் என வழங்கி வருகிறது" .. (திருவாசகம் .. பக்கம் 71 
- - விளக்கியவர் 
சுவாமி சித்பவானந்தர்)

இந்த ஆறு சமயங்களிலும் உள்ள வேதாந்தக் கருத்துக்களில் பெரும்பாலும் ஒருமித்த கருத்து இருக்கும். ஆனாலும், சமீப காலமாக சைவ சமயத்தில் உள்ள பலர் 'நாங்கள் இந்துக்கள் அல்ல; எங்கள் மதம் சைவ மதம் மட்டுமே' எனக் கூறி வருகின்றனர். இது சரிதானா?

இத்தகைய வேறுபட்ட கருத்துக்கு முடிவு கட்ட வேண்டியது அனைத்து சமயத் தலைவர்களின் கடமை அல்லவா? இத்தகைய போக்கு தேவையில்லாமல் இந்துமத ஒற்றுமையை குலைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லையா? சமயத் தலைவர்கள் மௌனமாக இருப்பது சரியா?





"சனாதன தர்மம்" என்பதை மூன்று கோணங்களில் ஆராய வேண்டும் ..
1. சனாதனம்
2. சனாதன தர்மம் சொல்லும் தத்துவக் கோட்பாடுகள்
3. சனாதன தர்மம் சொல்லும் வாழ்வியல் நெறிகள்.

இந்த மூன்றையும் சரியாகப். புரிந்து கொண்டால் மட்டுமே, நமது நாட்டின் சமய நூல்கள் மற்றும் சமயம் சாராத நூல்கள் ஆகியவை சொல்லும் தத்துவங்களும், வாழ்வியல் நெறிகளும் எவ்வளவு சிறப்பானவை என்பது புரியும்.

நமது நாட்டில் மட்டும் அதிகமான தத்துவங்கள் இருப்பதற்கான காரணங்கள் என்ன? ..
1. ஒன்றுக்கு மேற்பட்ட சமயங்கள் 
2. அதனால், மாறுபட்ட கோணங்களில் வெளிவரும் தத்துவக் கோட்பாடுகள்
3. சமய நூல்கள் தவிர்த்து ஏராளமான இலக்கியப் படைப்புகள்

இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. பிற நாடுகளில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையூறு நேரிட்டால், வேறு இடத்தில் மகிழ்ச்சியைத் தேட ஆரம்பித்து விடுவார்கள்!?

நமது நாட்டிலோ அது போன்ற சந்தர்ப்பங்களில், பலபேர் "ஆத்ம விசாரத்தில்"
இறங்கி விடுவதுண்டு. 

அதனால்தான் நமது நாட்டை "ஞான பூமி" என்று அழைக்கிறார்கள்.

 



"சனாதன தர்மம்" என்பது
தத்துவக் கோட்பாடுகளையும், வாழ்வியல் நெறிகளையும் வலியுறுத்துவது. "தர்மம்" என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. 'அறம், இயல்பு, சுபாவம், பண்பு, உண்மை' போன்று பல அர்த்தங்கள் உண்டு.

தத்துவக் கோட்பாடுகளும், வாழ்வியல் நெறிகளும் எக்காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும், எப்போதும் பொருந்துவதாக இருந்தால் மட்டுமே, அவை சனாதன தர்மத்தில் அடங்கும். (சில விதிவிலக்குகளும் உண்டு.
அவற்றை பின்னர் பார்க்கலாம்).

மற்றபடி கருத்துக்களைச் சொல்பவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா, அத்தகைய கருத்துக்கள் சமய நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்.......;
எப்பொருள் எத்தன்மைத் தாயினும்.....;
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என வள்ளுவர் கூறுகிறார்.

சனாதன தர்மத்திற்கு இங்கு தரப்படும் விளக்கங்கள் பல்வேறு கோணங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.






சனாதன தர்மத்தை சரியான கோணத்தில் புரிந்து கொண்டால், அந்த நாட்டின் அரசும், மக்களும் நன்கு செயல் படுவார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

சனாதன தர்மம், சாதி அமைப்பு .. இந்த இரண்டிற்கும் இடையே எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதேபோல் ஒரு காலத்தில் இருந்து, பின்னர் காலாவதி ஆகும் சட்டங்களும் (உ.ம். .. மனு தர்மம்) இதனுள் அடங்குவதில்லை.

"சனாதன தர்மம்" என்பதை மூன்று கோணங்களில் ஆராய வேண்டும் என்று சொல்லியிருந்தோம். முதலில் "சனாதனம்" பற்றி பார்ப்போம்.

'சனாதனம்' என்றால் எல்லாக் காலங்களிலும் நிரந்தரமாக இருப்பது எனக் குறிப்பிடிருந்தோம். எனவே சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவற்றிற்கும், சனாதன தர்மத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

பிரபஞ்சத்தில் வாழ்வது அனைத்தும் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டவை .. அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம். இவற்றில் எப்பொழுதும் நிரந்தரமாக இருப்பது 'ஆகாயம்' மட்டுமே.

ஆனால், இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லையென்றால், ஆகாயமும் இருக்கப் போவதில்லை. எனவே இதனை நிரந்தரம் என்று சொல்ல முடியாது.




ஒரு மனிதனை எடுத்துக் கொள்வோம். அவனுக்கு நிறைய உறவுகள் மற்றும் சொத்துக்கள் இருக்கலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல அந்த உறவுகளும், சொத்துக்களும் அவனை விட்டு விலகிவிடும்.

ஏதேனும் அவனுடன் இருந்தாலும், அவைகளை விட்டு விட்டு அவன் இறந்து போகிறான். அவன் இறந்தாலும், அவன் உயிருடன் இருந்தபோது அவன் இயங்குவதற்கு ஊட்டமளித்து வந்த உயிர் சக்தி .. அதாவது ஜீவாத்மா அவன் இறக்கும் தருவாயில் அவன் உடலை விட்டு வெளியேறி விடுகிறது.
எனவே அந்த 'ஜீவாத்மா' மட்டுமே சனாதனம் என்று சொல்ல முடியுமா?

ஏனெனில் ஜீவாத்மா உடலிலிருந்து மூன்று விதமாக வெளியேறும் வாய்ப்பு உள்ளது. அவை என்னென்ன?

    

'அத்வைத' கொள்கைப்படி ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியே. அதை 'சித்' என்றும் 
பரமாத்மாவை 'சித்-ஆகாசம்' என்றும் சொல்வார்கள்.

மனித உடலில் 'ஆனந்தமய உறை' என்னும் மாய திரைக்குள் இருந்து மனிதன் இயங்குவதற்குத் தேவையான சக்தியை அது கொடுக்கிறது. ஆனந்தமய உறையுடன் சேர்த்து அதனை 'சித்தம்' எனச் சொல்கிறார்கள்.

வானத்தில் படர்ந்துள்ள மேகங்கள் போல, மனிதன் ஏற்படுத்தும் பதிவுகள் சித்தத்தின் மேலாகப் படர்ந்து விடுகின்றன. இப்பொழுது அதனை 'ஆழ்மனம்' 
(Sub-conscious mind) என்று அழைக்கிறார்கள்.

ஜீவாத்மா உடலிலிருந்து மூன்று விதமாக வெளியேறும் எனச் சொல்லியிருந்தோம். 

அவை - -
1. மனிதன் இறக்கும் தருவாயில், ஜீவாத்மா 'ஆழ்மனப் பதிவுகளோடு' வெளியேறினால், அது மீண்டும் ஒரு பிறவியை எடுக்க நேரிடும்.

2. 'ஆழ்மனப் பதிவுகள்' ஏதுமின்றி ஜீவாத்மா வெளியேறினால், அது மறுபிறவியை வேண்டாது‌. இறைவன் அதனை மீண்டும் பிறக்க வைத்தால், அந்த மனிதன் ஒரு அவதார புருஷனாகவோ, ஒரு தலைசிறந்த ஞானியாகவோ பிறந்திடுவான்.

3. மனிதன் இறப்பதற்கு முன், ஆழ்மனப் பதிவுகள் அனைத்தும் நீங்கப்பெற்று ஜீவாத்மாவைச் சூழ்ந்திருந்த 'ஆனந்தமய உறை' என்னும் மாயத் திரையும் விலகி விட்டால், மனிதன் இறக்கும் சமயம் அந்த ஜீவாத்மா 'சகசிரதளம்' வழியே உடலை விட்டு வெளியேறி பரமாத்மாவுடன் ஒன்றாகக் கலந்து விடும். பின்னர் அதனைத் தனியாக இனம் காண முடியாது.

ஆக, ஜீவாத்மாவும் 'சனாதனம்' அல்ல; அப்படியானால் பரமாத்மாதான் சனாதனமா?

ஜீவாத்மா சனாதனம் இல்லையென்றால் ஆத்மா சனாதனம் என்று கிருஷ்ணன் சொன்னது தவறா எனத் தோன்றலாம். அதற்கான விளக்கத்தைப் பின்னர் வரும் பதிவில் காணலாம்.

   

பரமாத்மா என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பது 'பரமாத்மா' என்றால், அதை எப்படிப் புரிந்து கொள்வது?

பரமாத்மா என்பது உருவாக்கப் பட்டதோ அல்லது படைக்கப் பட்டதோ அல்ல. அது வேறு ஒன்றிலிருந்து தோன்றியது!

கடலில் இருந்து அலைகள் தோன்றுவது போல், கண்ணுக்குத் தெரியாத, புலன்களுக்குப் புலப்படாத ஒன்றிலிருந்து தோன்றுவது தான் பரமாத்மா எனப்படும்.
அதனால்தான் புலன்களுக்கு புலப்படாத அதனை அவன் என்றோ, அவள் என்றோ கூறாமல் "அது" என்று கூறுகிறோம் (தத்துவமஸி).

"ஏகம் ஸத் விப்ரோ 
பஹூதா வதந்தி" .. இது ரிக்வேதத்தில் வரும் வாசகம். இதன் பொருள் "மெய்ப்பொருள் ஒன்று; அதற்கு சான்றோர் பல பெயரிட்டு அழைக்கின்றனர்". 

அதனை "பரம்பொருள்" என்று சொல்கிறோம். அதனையே இறைவன், சிவம், அல்லா, பரம பிதா என்று பல பெயர்களில் பலரும் சொல்வதுண்டு.

கடல் ஒன்றுதான்; ஆனால், அதற்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகா சமுத்திரம், பசிபிக் பெருங்கடல் என பல பெயர்கள் உண்டல்லவா?; அதே போல் எல்லாம் வல்ல இறைவனையும் பல பெயரில் அழைக்கிறார்கள்.

கடலிலிருந்து அலை தோன்றுவது போல், பரம்பொருளில் (unmanifest) இருந்து பிரபஞ்சம் தோன்றுகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் நன்கு இயங்குவதற்காக பரம்பொருளின் ஒரு அம்சமாக பரமாத்மா (manifest) என்னும் இறை சக்தி வெளிப்பட்டு பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.

"ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க" என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். இதில் "ஏகன்" புலன்களுக்குப் புலப்படாதது (unmanifest); "அநேகன்" புலன்களால் புரிந்துகொள்ளக் கூடியது (manifest).

பரமாத்வின் ஒரு பகுதிதான் ஜீவாத்மா எனப்படுகிறது.
எனவே ஜீவாத்மாவும் நிரந்தரமான ஒன்றுதான். யுகம் முடியும் தருவாயில் ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் அழிவதில்லை; அவை 'பரம்பொருளில்' ஒடுங்கி விடுகின்றன. மீண்டும் அடுத்த யுகம் ஆரம்பிக்கும் பொழுதுதான் அவை தோன்ற முடியும். எனவே உண்மையான சனாதனமாக இருப்பது "பரம்பொருள்" மட்டுமே!!
"பரமாத்மா" பரம்பொருளின் வெளிப்பாடு ஆகும்.






பரம்பொருள், அதிலிருந்து தோன்றிய பரமாத்மா, அதன் ஒரு பகுதியான ஜீவாத்மா எல்லாமே உருவமற்றவை தான்.

இவற்றில் ஜீவாத்மா 'முக்தி' கிடைக்கும்வரை ஒவ்வொரு பிறவியாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து, முக்தி அடையும் போது பரமாத்மாவில் கலந்து விடும். அதன் பின்னர் அதனைத் தனியாக இனம்காண முடியாது. அதனுடைய நிரந்தரத் தன்மை (சனாதனம்) அத்துடன் முடிந்து விடுகிறது.

பரமாத்மா யுகம் முடியும் வரை நீடித்திருக்கும். யுகம் முடியும் போது, அது மீண்டும் பரம்பொருளில் ஒடுங்கி விடும். அதனுடைய நிரந்தரத் தன்மையும் (சனாதனம்) அத்துடன் முடிந்து விடுகிறது.

பரம்பொருள் ஒன்றுதான் எல்லாக் காலங்களிலும் நிலைத்து நிற்பது. 






மேலே சொன்ன மூன்றும் உருவமற்றவை. அப்படியானால் கடவுள் எங்கிருந்து, எதற்காக வந்தார்? அதற்கான அவசியம்தான் என்ன?

பல வருடங்களுக்கு முன்னர்
நடந்த சம்பவம் - -
என் மனைவியிடம் வேடிக்கையாக ஒரு கேள்வியை எழுப்பினேன். "கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்கிறார்கள். பேசாமல் என்னைக் கும்பிட்டுவிட்டு வீட்டில் இருக்கலாம் அல்லவா? எதற்காக உடலை வருத்திக் கொண்டு கோயில், கோயிலாக அலைகிறாய்?".

அவளிடமிருந்து அப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை!

எனது மனைவி அமைதியாக பதிலைக் கூறினாள் ..
"வாஸ்தவம் தாங்க; எனக்கு நீங்கதான் கடவுள். காலையில் குளித்துவிட்டு உங்களை மூன்று முறை சுற்றிவந்து நமஸ்கரித்தால், எனக்கு அதுவே போதும். ஆனால், நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று நான் யாரிடம் வேண்டுவது? அதற்காகத்தான் நான் கோயிலுக்குப் போகிறேன்."

என்னால் மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை.




ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும்.
அவற்றை யாரிடம் முறையிடுவது? கண்ணுக்குத் தெரியாத இறைவனிடம் முறையிட எல்லோராலும் முடியாது. இதனால்தான் மனிதர்கள் பல்வேறு கடவுள்களை நாடிச் செல்கிறார்கள்.

கடவுளை வணங்கும் பொழுது, கடவுளின் உருவத்தை விட, நமது வணங்கும் பாவனைதான் முக்கியம். அதனால்தான் வயல்களிலும், தோட்டத்திலும் வேலை செய்பவர்களால் அங்கு ஒரு கல்லை நட்டு அதில் கூட கடவுளைக் காண முடிகிறது.





உருவ வழிபாடு எல்லா மதத்திலும் கடைப்பிடிக்க படுவதில்லை. சில பிரிவினர் கடவுளே இல்லையென்றும் சொல்வதுண்டு.

அப்படியானால், நாம் வழிபடும் கடவுள்கள் 'சனாதன' வரம்புக்குள் வருவதில்லையா?

கடவுளை வழிபடும் பக்தர்களுக்கு, அது 'சனாதனம் தான்'. இந்தப் பாடலைப் பாருங்கள்..

"ஊருஞ் சதமல்ல, 
உற்றார் சதமல்ல, 
உற்றுப் பெற்ற பேருஞ்
சதமல்ல, 
பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல, 
செல்வஞ் சதமல்ல,
தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே".
.. பட்டினத்தார் பாடிய பாடல் இது.

சனாதனம் என்று சொன்னாலும், சதம் என்று சொன்னாலும் இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது என்று பொருள் .

கடவுள் மீது பக்தி கொண்டவர்களுக்கு, அவனது "திருவடி" ஒன்றே சதம்.

ஆனால், யுகம் முடியும் போது பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் அழிந்து போய்விடும் என்பதுதான் உண்மை. ஒரு வித்தியாசம்.
பரம்பொருளில் இருந்து தோன்றிய 'இறைசக்தி' அதாவது 'பரமாத்மா' அழிவதில்லை; மாறாக மீண்டும் பரம்பொருளில் ஒடுங்கி விடும்.

   



இனி நாம் பார்க்க இருப்பது 
"சனாதன தர்மம் சொல்லும் தத்துவக் கோட்பாடுகள்" என்றால் என்ன என்பதுதான்.



"கற்க கசடற" என்கிறார் வள்ளுவர். அதனை "ஐயம் திரிபு அற" என்றும் சொல்கிறார்கள். அதாவது எந்தவித சந்தேகமும் இன்றி, சொல்லும் கருத்தில் மாறுபாடு இல்லாமலும், திரித்து சொல்லாமலும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"தேற்றித் தெளிமின்" .. அதாவது "அறிந்து தெளிவடையுங்கள்" என்கிறார் திருமூலர்.




தத்துவக் கோட்பாடுகளைப் பற்றி கூறுவதற்கு முன்பாக நாம் ஒரு சில விஷயங்களில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் நிறைய கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

உதாரணத்திற்கு, ஜீவாத்மா முக்தி அடைந்தால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடும் என்று கூறினேன். அது 'அத்வைத' தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய இரண்டும் ஜீவாத்மா முக்தி அடைவது பற்றி வேறு வேறு கோணங்களில் முடிவு செய்பவை. 

ஆனால் அது 'விவாதத்திற்கு' உரிய பொருளல்ல. 'ஜீவாத்மா' என்பது சனாதனமா, இல்லையா என்பதைப் பற்றி மட்டும் சிந்தித்து முடிவு செய்யுங்கள்.




சுருக்கமாகச் சொன்னால் ...
மனிதனைப் பொறுத்தவரை "ஜீவாத்மா" சனாதனம்;
பஞ்ச பூதங்களை பொறுத்தவரை "ஆகாயம்" சனாதனம்;
பிரபஞ்சத்தை பொறுத்தவரை "பரமாத்மா" சனாதனம்;
ஆனால், சனாதனம் என்ற சொல் பரம்பொருளுக்கு மட்டுமே உரியது. அதனை இறைவன், இறை சக்தி, பிரம்மம், சிவம், அல்லா, பரமபிதா என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.



  
சனாதன தர்மம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு சரியான முறையில் பொருளைப் புரிந்து கொள்ளப் பழக வேண்டும்.

திருக்குறளில் உள்ள ஒரு பாடல் வரியைப் பாருங்கள்...
"அந்தணர் என்போர் அறவோர் ..." 
இதைப் படித்து விட்டு 'அந்தணர்கள் எல்லாரும் அறவழியில் நடப்பவர்கள்' என்று முடிவு செய்தால், அது சரியா?

எல்லா அந்தணர்களும் அறவழியில் நடப்பவர்களே என்று உறுதியாகக் கூற முடியுமா? தவிர, அந்தணர்களை தவிர்த்து வேறு யாரும் அறவழியில் நடக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல முடியுமா? அப்படியானால்,
உண்மையான பொருள் என்ன!?

'அறவழியில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அந்தணர்களே' எனக் கருதினால், அது அறிவுக்கு ஏற்றதாக இருக்குமல்லவா?

    



சில நேரங்களில் பொருளைச் சரியாக சொல்லி விடுவோம். ஆனால், புரிதலில் 'முழுமை' இருக்காது. கீழே உள்ள பாடலைப் பாருங்கள்....

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" (குறள் - 121)

(அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும்)

பொருளில் குற்றம் எதுவும் இல்லை. ஆனால், அவர் குறிப்பிடும் 'அடக்கம்' மனம் அடங்குவதன் காரணமாக வருவது. 

மனம் அடங்குவதால் என்ன பயன்? மனம் அடங்கினால் 'ஆணவ மலம்' நீங்கும். ஆணவ மலம் நீங்கினால், கன்மம், மாயை இரண்டும் வலுவிழந்து போகும். அவனும் 'குணமென்னும் குன்றேறி நின்றார்' எனப் போற்றப்படுவான். 'நிர்குணம்' நிறைந்த வாழ்க்கைதானே 'அமரருள் சேர்த்து வைக்கும்' வாழ்க்கையாக மாறும்!?



 



'தர்மம்' என்றால் தமிழில் அறம் என்று சொல்கிறோம். அதனை வலியுறுத்தும் விதமாக 'அறத்துப்பால்' எனப் பெயரிட்டு பல பாடல்களை திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

அவற்றில் சடங்கு, சம்பிரதாயங்கள் முதலியவற்றை சுட்டிக்காட்டும் பாடல்கள் உள்ளனவா என்று பாருங்கள்? அறம் என்றால், அது வாழ்வியல் நெறிகளை விளக்கும் நீதி நெறிகள் அல்லது போதனைகளாக மட்டுமே இருக்கும்.

"வாழ்வியல் நெறி" என்பது எல்லா மனிதர்களுக்கும், எல்லாக் காலங்களிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் தத்துவம். எனவே 'தர்மம்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'சனாதன' என்ற வார்த்தை தேவையில்லை எனத் தோன்றலாம்.

ஆனால், வடமொழியில் 'தர்மம்' என்ற வார்த்தைக்கு, இயல்பு, சுபாவம், உண்மை என பலவிதமான அர்த்தங்கள் உண்டு. எனவே 'சனாதன தர்மம்' என்று சொன்னால், அதில் வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் நீதி நெறிகள் மற்றும் போதனைகள் மட்டுமே அடங்கும் என்று அர்த்தம். அதில் சடங்கு, சம்பிரதாயம் போன்ற எதற்கும் இடமில்லை.






வாழ்வியல் நெறிகளை தவறாது கடைப்பிடிப்பதால் என்ன நன்மை? அறிந்தோ அல்லது அறியாமலோ நமக்கு 'ஞானம்' பற்றிய உணர்வு வர ஆரம்பிக்கும்.

"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நகரின் மிக்காரே"
.. திருமந்திரம் 1467

"ஞானத்தை விட சிறந்த அறநெறி நாட்டில் இல்லை" என்கிறார் திருமூலர். கூடவே, "ஞான நிலைக்கு நம்மை கொண்டு செல்லாத சமயமும் நல்ல சமயம் இல்லை" என்றும் சொல்கிறார்.

இந்தியாவில் பிறந்த எல்லா சமயங்களிலும் மனிதனை ஞான நிலைக்கு கொண்டு செல்வதற்கான நீதி போதனைகள் நிறைய உள்ளன.

ஆனால், நாம் சமயங்கள் சொல்லும் தத்துவங்களையும், அவை சார்ந்த விதிகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தினால், பாதை தெரிந்தும் எப்படி பயணிப்பது என்று தெரியாமல் பின்தங்கி விடுகிறோம்.

ஒரு உதாரணம்:-
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" .. இது சமயம் சாராத வாசகம்.
"வாசுதேவ குடும்பம்" .. இது ஒரு சமஸ்கிருத வாசகம்.
"அன்பே சிவம்" .. இது சைவ சமயம் சொல்லும் வாசகம்.

மூன்று வாசகங்களும் சொல்லும் கருத்து ஒன்றாகத்தான் தோன்றுகிறது. ஆனால், "அன்பே சிவம்" எனும் வாசகம் எவ்வளவு பெரிய தத்துவத்தை உள்ளடக்கி இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?

  



"அன்பே சிவம்"

வீடு, கடைகள், கோயில் எனப் பல இடங்களில் இந்த வார்த்தைகளை காணலாம். ஆனால் நாம் அதில் அடங்கியுள்ள மெய்ப்பொருளை அறிவோமா?

முதலில் "சிவம்" என்ற வார்த்தையின் பொருள் என்னவென்று பார்ப்போம்.

கீழே உள்ள இரண்டு பாடல்களையும் பாருங்கள்:-

"சீவன் எனச் சிவனார் என்ன வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலார்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பரே"
.. திருமந்திரம் 2017


"அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"
.. திருமந்திரம் 270

முதல் பாடலில் சிவனைப் பற்றி கூறுகிறார். இரண்டாவது பாடலில் சிவம் பற்றி கூறுகிறார்.

முதல் பாடலில், பாரெங்கும் நிறைந்திருக்கும் சிவன், "சீவனார்" உள்ளும் இருக்கிறார் என்கிறார்.

இரண்டாவது பாடலில், உள்ளத்தில் அன்பு இருந்தால் 
அந்த மனிதன் "சிவமாக" அமர்ந்திருப்பார் என்று கூறுகிறார். 

"சிவம்" எங்கும் நிறைந்த இறைவன்; உருவமற்றது.
"சிவன்" சிவத்தின் வெளிப்பாடு. "தெற்கலையின் நாயகன்" அவன்.

அதனால்தான் மாணிக்கவாசகர் 
"தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்று பாடுகிறார்.

அன்பே சிவம் என்ற சொற்றொடர் எதனை வலியுறுத்துகிறது?
'நீ சிவனை வழிபடு; அதே நேரம் சிவமாகும் வழியை தேடு' என்கிறது.

பாசத்தில் ஊறி நிற்கும் அன்பு, கடவுளிடம் (சிவனிடம்) நிறைய கோரிக்கைகளை வைக்கும்.

பாசத்தில் இருந்து விடுபட்ட அன்பு தூய்மையான அன்பாக மாறி விடும். அது ஒன்றே "சிவத்தை" நாடி நிற்கும்.

விளைவு ...
"அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"!!

"ஆசைவலை பாசத்து
அகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தில்
ஒன்றிநிற்ப தெக்காலம்?"
.. பத்திரகிரியார் 

   



தத்துவங்களைக் குறிப்பிடும்போது, பொதுவாக அவற்றில் வினைச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை. வினைச்சொல் காலத்தைக் குறிக்கும் என்பதுதான் அதற்கான காரணம்.

அதனால்தானோ என்னவோ, பல இடங்களில் தத்துவங்களின் மெய்ப்பொருளைத் தவிர்த்து, வேறு விதமான அர்த்தங்களைக் கற்பித்து விடுகிறார்கள். நாமும் அவற்றை நம்பி மெய்ப்பொருளைத் தவறவிட்டு விடுகிறோம்.

உதாரணத்திற்கு "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறந்த குழந்தைக்கு அம்மாவைத்தான் தெரியும்; அம்மா சொல்லி அப்பாவையும், அப்பா கைகாட்டி குருவையும் தெரியும்; குரு தெய்வத்திற்கு வழி காட்டுவார் என பலர் சொல்வதுண்டு. எனது நண்பனும் ஒருமுறை அதையே சொன்னான்.
நான் அவனிடம் கேட்டேன் .. "குழந்தை பிறந்ததும் அம்மா இறந்துவிட்டால், அந்தக் குழந்தைக்கு அப்பா யாரென்றே தெரியாமல் போய்விடுமா?"

அப்படியானால்  "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற சொற்றொடர் எதனைக் குறிக்கிறது?

ஒரு குழந்தை பிறந்தால், அதற்கு முதலில் தெரிய வேண்டியது 'அன்பு'. அதை தெரிய வைக்கத் தகுதியானவள் "மாதா”.

குழந்தை வளர்ந்த பின் அதற்குத் தேவையான 'அறிவை' கொடுக்க வேண்டியவர் 'பிதா'. மாதாவால் அறிவைக் கொடுக்க முடியாதா என நினைக்கலாம். ஆனால், பிதாவிற்கு அனுபவ அறிவு அதிகம் இருக்கும்; அதனால் 'பிதா' என்றார்கள்.

அறிவில் முதிர்ச்சி பெற்றாலும், ஞானத்தை பற்றிய அறிவு இருந்தால்தான், அமைதியான வாழ்க்கை வாழ முடியும். அந்த ஞானத்தை பற்றிய அறிவை வழங்குபவர் யாராக இருந்தாலும், அவரே அவனுக்கு 'குரு'.

'தெய்வம்' .. அது தெரியக்கூடிய ஒன்றல்ல; உணர வேண்டிய ஒன்று. ஆனால், அதற்கு குருவின் துணை மிகவும் அவசியம்.




ஞானத்தின் வாயிலைத் திறந்து வைக்க, கண்டிப்பாக ஒரு 'குரு' தேவை. அவர் நமக்கு ஞானத்தை தரமாட்டார். நமது சுபாவம் எதுவென்று தெரிந்து, நமக்கான பாதையைக் காட்டுவார். நாம்தான் அந்தப் பாதையில் நம்பிக்கையுடன் பயணித்து ஞானம் என்றால் என்னவென்று உணர வேண்டும். அதை உணரும்போது 'தெய்வம்' பற்றிய புரிதலும் தெரியவரும்.

(குரு என்பவர் மனித உருவில் தான் வர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. என்னுடைய 'குரு' "Kindle Life" என்ற புத்தக வடிவில் தான் வந்தார்)

குருவை நாம் தேடிப் போக வேண்டியதில்லை. நமக்குள் 'குரு' வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால், குருவே நம்மை தேடி வருவார்.

தவிர, நாம் குருவை தேடிச் சென்றால் பல நேரங்களில் தவறான மனிதரிடம் மாட்டிக் கொள்வோம்.

திருமூலர் கூறுகிறார்...
"குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே"
.. திருமந்திரம் 1680

   



தத்துவங்கள், தத்துவம் சார்ந்த விதிகள் மற்றும் அறநெறி உணர்த்தும் நீதி போதனைகள் ஆகியவற்றை எல்லாராலும், எல்லாக் காலங்களிலும் ஏற்றுக் கொள்ள முடியுமென்றால், அவற்றை 'சனாதன தர்மம்' எனக் கூறலாம். அத்துடன், அவற்றைக் கடைப்பிடிக்கும் பொழுது, நமது பண்பு நிலையில் நல்லதொரு முன்னேற்றமும் இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் எங்கோ தவறு செய்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.





தத்துவங்களை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாமல் தடுக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது, நம்முடைய 'முன்முடிவுகளே' 
(pre-conceived notion).

"எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு"
சரி.
"நான் தினமும் சிவனை வழிபடுகிறேன்"
சரி.
"என்னைப் பொறுத்தவரை சிவன் தான் முழு முதல் கடவுள்"
சரி 
"சிவன் மட்டுமே முழு முதல் கடவுள் "
.. இதுதான் முன்முடிவு எனப்படும்.

முதலில் இருந்தது நம்பிக்கை; அடுத்தது கடவுள் மேல் உள்ள பற்று; 'மட்டுமே' என்று சொல்லும்போது, மாற்றுக் கருத்தை ஒப்புக்கொள்ள முடியாத அளவிற்கு 'பற்றுடன் உணர்ச்சியும்' சேர்ந்து கொள்கிறது. இதன்பின் "நான் சொல்வதுதான் சரி" என்ற உணர்வு வந்து விடும்.‌

இது போன்ற முன்முடிவுகள் புதிய கருத்துக்களை மாறுபட்ட கோணங்களில் பரிசீலனை செய்ய அனுமதிக்காது.

   



அடுத்த காரணி, நம்மிடம் 'lateral thinking' இல்லாததுதான்; அதா‌வது மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க தயங்குவது.

நமது கவனத்திற்கு வரும் கருத்து எதுவாக இருந்தாலும், அது சரிதானா என்ற சந்தேகம் வருமானால் அதற்கான மெய்ப்பொருளை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான கருத்து நமக்கு தெரியவரும்.

இந்தக் குறளை பாருங்கள்..
"அறத்தாறு இதுவென வேண்டா - சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை"
.. குறள் 37

இதற்கு பலரும் கொடுத்த பொருள் ...
"பல்லக்கை சுமப்பவனிடத்திலும், பல்லக்கில் அமர்ந்து செல்பவனிடத்திலும் அறத்தை பற்றி பேசாதே"

டாக்டரிடமும், நர்ஸிடமும்; வக்கீலிடமும், வக்கீல் குமாஸ்தாவிடமும்... இது போன்ற அர்த்தத்திலா வள்ளுவர் சொல்லியிருப்பார்!?

பாடல் சொல்லும் உட்கருத்து
... "அடுத்தவன் வயிற்றில் அடித்து வாழும் மனிதனிடம் அறத்தை பற்றி பேசாதே" என்று இருக்கலாம் அல்லவா?

 




இந்தியாவில் தோன்றிய அனைத்து சமயங்களும், இந்து மதம் சார்ந்தது என்பது எனது கருத்து.

மற்ற மதங்களுக்கும், இந்து மதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

பிற மதங்களில் கட்டுப்பாடுகள் உண்டு. அங்கு அவர்களது மத நூலில் சொன்னதற்கு மாறாக, யாரும் எதுவும் சொல்லக்கூடாது; சொல்லவும் முடியாது.

பெரும்பாலும் பிற சமயங்களில் ஒன்றிரண்டு நூல்கள் மட்டுமே இருக்கும். நமது நாட்டிலோ ஒரு பெரிய நூலகத்தில் வைக்கும் அளவிற்கு எண்ணிலடங்காத சமய நூல்கள் உண்டு. 

சமய நூல்கள் தவிர்த்து பல்வேறு பிற நூல்களிலும் "வாழ்வியல் நெறிகளை" வலியுறுத்தும் கருத்துக்களைக் காணலாம்.

பல்வேறு சித்தாந்தங்கள் இருப்பதால், இந்து சமயத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தை எதிர்கொள்ளும் போது, அதனைப் புறக்கணிக்க கற்றுக்கொள்ள
வேண்டும்.

அந்தக் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எழுந்தால் மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.

பொதுவாக பிறர் கூறும் கருத்துக்களை எதிர்கொள்ளும் நேரத்தில், அவற்றை நமது கருத்தோடு ஒப்பீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஒப்பீடு செய்து கொண்டிருந்தால், பிறர் கூறும் கருத்துக்களை சரியாக உள்வாங்கிக் கொள்ள மாட்டோம்.

 



மதம், ஆன்மிகம் .. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

பல சமய நூல்களில் பக்தி முதற்கொண்டு ஆன்மிகம் வரை எல்லா வழிமுறைகளும் கலந்து சொல்லப் பட்டிருக்கும். 

ஆனாலும், ஆன்மிகம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. அது "ஞானத்திற்கான" பாதையின் திறவுகோல் போன்றது. ஞானத்தில் நிறைவு கண்டால், சாஸ்திர சம்பிரதாயங்கள் தேவையில்லை என்ற நிலை வந்துவிடும். அதனால்தான் "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்று சொல்கிறார்கள்.

ஆன்மிகம் என்பது 
மதத்தில் ஒரு பகுதிதான். ஆனால், அது மதங்களைக் கடந்தது. ஏனெனில், ஆன்மிகத்தில் தத்துவங்கள் மற்றும் வாழ்வியல் நெறிகள் மட்டுமே இருக்கும். அவை மட்டுமே "சனாதன தர்மம்" என்ற கொள்கைக்குள் அடங்கும். சடங்கு, சம்பிரதாயங்கள் போன்றவற்றிற்கும், சனாதன தர்மத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

"சனாதன தர்மம்" என்றால், அது எல்லாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும்.

அத்தகைய தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளையும் மாற்று சமயத்தவர்கள் சொல்லியிருந்தாலும், சமயம் சாராத மனிதர்கள் சொல்லியிருந்தாலும், சமயத்தை வெறுப்பவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லியிருந்தாலும், அவைகளும் 'சனாதன தர்மத்தில்' அடங்கும்.

   




"The level of understanding will depend upon the level of understanding".

நம்முடைய புரிந்து கொள்ளும் தன்மை என்பது 
நமது புரிந்து கொள்ளும் திறமையைப் பொறுத்தது.

ஒரு மனிதனின் "விவேகம்" முதிர்ச்சி அடைய, அடைய அவனது 'புரிந்து கொள்ளும் திறமையும்' கூடிக்கொண்டே போகும். அதற்கு, 'தத்துவங்களுக்கான விளக்கங்களைக் கேட்டு அவற்றைப் பற்றி சிந்திப்பது'
என்பது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பாருங்கள்..

"சும்மா இருப்பதே சுகம்"

".. தூங்காமல் தூங்கி சுகம் பெறுவ தெக்காலம்?"

".. அலைவற்றிரு மனமே"

".. மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே"

".. மாண்டு விடும் முன்னேனான் மாண்டிருப்ப தெக்காலம்?"

"சித்த விருத்தி நிரோத"

எல்லாப் பாடல் வரிகளும் ஒரே விஷயத்தை பற்றித்தான் சொல்கிறது. ஆனாலும், ரிஷி பதஞ்சலி 
"சித்த விருத்தி நிரோத" என்று சொல்லும்போது, அது "விருத்தி"-க்கான" காரணங்களையும், "நிரோத"-விற்கான அவசியத்தையும் மறைமுகமாக தெரியப் படுத்துகின்றது. 




"சித்த விருத்தி நிரோத" ..
சித்தத்தில் இருந்து எண்ணங்கள் ஏதும் வராமல் நிறுத்த வேண்டும் என்று ரிஷி பதஞ்சலி சொல்கிறார். அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டியது "சித்த சுத்தி".

சித்த சுத்தி எதற்காக செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? செய்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

சித்தம் எப்போதும் சுத்தமாகத்தானே இருக்கும். அதில் அசுத்தம் எப்படி சேர்கிறது? அவற்றை வகைப்படுத்த முடியுமா?

கண்ணாடி எப்போதும் சுத்தமானதுதான். அதேபோல் சித்தமும் எப்போதும் சுத்தமாகத்தான் இருக்கும். கண்ணாடியில் படியும் தூசி போல், சித்தத்தின் மீது பல்வேறு பதிவுகள் படர்கின்றன. இதனை "வாசனா" என்று வடமொழியில் சொல்வதுண்டு. சித்தத்தின் மீது பதிவுகள் நேர்ந்தால், அதனை "ஆழ்மனம்" (Sub-conscious mind) என அழைக்கிறோம்.

இந்தப் பதிவுகள் தான் நமது மன அமைதியை இல்லாமல் செய்து விடுகின்றன. அத்துடன் சித்தத்தின் உள்ளிருக்கும் "உள்ளொளியை" பெருக்க விடாமலும் தடுக்கின்றன.

எனவே இந்தப் பதிவுகளை சித்தத்தின் மீது படிந்த அசுத்தம் என்கிறோம். இந்தப் பதிவுகள் எப்படி ஏற்படுகின்றன? அவற்றை வகைப்படுத்த முடியுமா?

  



ஒரு மனிதனின் சித்தத்தில் படரும் பதிவுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்:-
1. பாசம் காரணமாக ஏற்படும் பதிவுகள்.
2. புதுப்புது அனுபவங்களை எதிர்கொள்ளும் போது ஏற்படும் உணர்ச்சியின் காரணமாக ஏற்படும் பதிவுகள்.
3. தேவையற்ற கற்பனைகள் மூலம் ஏற்படும் பதிவுகள்.
4. நினைவில் வைத்திருக்க விரும்பும் பதிவுகள். (ஆன்மிக கருத்துக்கள், கந்த சஷ்டி கவசம், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாடல்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல வகையான பதிவுகள் இதில் அடங்கும். ஆனால், இந்த வகைப் பதிவுகள் நம்மை எந்த விதத்திலும் துன்புறுத்துவது இல்லை)

முதலில் சொல்லப்பட்ட மூன்று வகையான பதிவுகள் மனதில் கொந்தளிப்பை உண்டு பண்ணுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அவற்றை அந்தந்தப் பெட்டகத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால், அதுவே "சித்த சுத்தி" எனப்படும். அதனால் ஏற்படும் பயன் தான் ரிஷி பதஞ்சலி சொல்லும் "சித்த விருத்தி நிரோத".

"சித்த விருத்தி நிரோத" வெற்றிகரமாக நடந்து முடிந்தால், ஆழ்மனம் முற்றிலுமாக அமைதி அடைந்து விடும்.




மேலே சொன்னவற்றில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைப் பதிவுகள் ஆழ்மனதில் இருந்து முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டியவை.

முதல் வகைப் பதிவுகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த முடியாது. ஆனால், அவற்றை நான்காவது வகையான நினைவுப் பெட்டகத்திற்கு மாற்றி விட வேண்டும்.

உதாரணத்திற்கு ....
நான் சிவனை வணங்குகிறேன். "அவன்" மேல் எனக்கு பற்று அதிகம். எனவே "அவனைப்" பற்றிய பதிவு முதல் பெட்டகத்தில் இருக்கும்.

"ஆசை அறுமின்கள்
 ஆசை அறுமின்கள்
 ஈசனோடாயினும்
 ஆசை அறுமின்கள்..." என்று சொல்லும்போது, ஈசனை மறந்து விட சொல்கிறார் என்ற அர்த்தமில்லை; ஆனால் , நாம் ஈசனைப் பற்றிய நினைவை, முதல் பெட்டகத்திலிருந்து நினைவுப் பெட்டகத்திற்கு மாற்றி விட வேண்டும்.

இதனால் ஏற்படும் மாறுதல் என்ன? ஈசனைப் பற்றிய பதிவு முதலாவது பெட்டகத்தில் இருந்தால், ஈசன் "மட்டுமே" முழுமுதற் கடவுள் என்ற எண்ணம் தோன்றலாம். அதுவே நாலாவது பெட்டகத்தில் இருந்தால், "மட்டுமே" என்ற எண்ணம் தோன்றாது.

(ஆழ்மனதில் நான்கு வகையான பெட்டகங்கள் உண்டு என்று எங்கே சொல்லப் பட்டிருக்கிறது என்று கேட்க வேண்டாம். உங்கள் புரிதலுக்காக கற்பனையாக சொல்லப்பட்டது தான் அது)

   

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"
.. குறள் எண் : 129

(ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது)
................................................

இந்தக் குறளுக்கான பொருள் சரியாகவே உள்ளது. ஆனாலும், 'தீயால் சுட்ட புண்', 'நாவால் சுட்ட வடு' இரண்டிற்கும் இடையே ஒரு மெய்ப்பொருள் மறைந்துள்ளது.

தீயால் சுடும் போது, அதனால் தோல், அதன் உள்ளே உள்ள சதை இரண்டும் பாதிக்கப் படுகின்றன. நாளடைவில் தீக்காயம் குணமாகி சதைப்பகுதி முற்றிலும் ஆறி விடும்; ஆனாலும், தோலில் உள்ள வடு நீங்காது‌.

தீக்காயம் புறத்தே நிகழ்ந்த நிகழ்வு. நாவினால் சுட்ட வடு நெஞ்சில் நிகழ்கிறது? அதை நெஞ்சில் நிகழ்த்தியது யார்?

கொடிய வார்த்தைகளை சொன்னவனால் நெஞ்சில் காயத்தை ஏற்படுத்த முடியாது. அதை ஏற்படுத்துவது நமது மனமே!?

பாஞ்சாலி கொடிய வார்த்தைகளை கூட கொட்டவில்லை; கேலியாக சிரித்தாள். அதுகூட துரியோதனன் மனதில் நீங்காத வடுவாக மாறி யுத்தம் வரை சென்றுவிடுகிறது.

ஆக, யுத்தத்திற்கு காரணம் பாஞ்சாலியின் கேலி சிரிப்பா அல்லது அதை உதாசீனப் படுத்த தெரியாமல், துரியோதனன் தன் நெஞ்சில் ஏற்படுத்திக்கொண்ட வடுவா?

ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. குடும்ப விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். என் உறவினர் ஒருவரும் வந்திருந்தார். அவருக்கு என்னை பிடிக்கும்; என்னை கேலி செய்வது மிகவும் பிடிக்கும்.

நான் அணிந்திருந்த செருப்பை பார்த்துவிட்டு "ஏண்டா, முருங்கை மரத்தில் கட்ட வேண்டிய செருப்பை இப்படி கால்ல போட்டிருக்க?"
(நான் செருப்பு வாங்கினால் அது பழுதடையும் வரை மாற்றுவதில்லை. ஆனால், அவரோ அடிக்கடி புது செருப்பு வாங்கி விடுவார்)

அவர் கேலியாக சொன்னாலும், நாலு பேர் முன்னால் சொன்னால், நமக்கு கோபம் வருவது சகஜம் தானே!?

ஆனால், நான் கூறிய பதில் "சத்தம் போட்டு சொல்லாதீர்கள்; இந்த செருப்பையே அங்கே இருந்துதான் எடுத்து வந்தேன்". எனது உறவினர் உட்பட, அங்கிருந்த அனைவரும் உடனே சிரித்து விட்டார்கள்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி:-
தீ போன்றவைகளால் ஏற்படும் காயத்தை நம்மால் தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால், நெஞ்சில் வடு ஏற்படுவதும், ஏற்படாமல் போவதும் நம் கையில் தான் உள்ளது.

அதற்கு நாம் செய்ய வேண்டியது.. 'நாம் சந்திக்கும் விரும்பாத நிகழ்வுகளை உதாசீனம் செய்வது எப்படி' என்று கற்றுக் கொள்வதுதான்.

                 (தொடரும்) 


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 32

Disciple: How to understand what you understand?

Guru: To make you to understand what I understand, first I must understand what you understand!?

இது கேலியாக நான் எழுதிய வரிகள். ஆனால், உண்மையான, நமக்குத் தேவையான வரிகளைத் தருகிறார் 'Eckhart Tolle' அவர்கள் - -
People would occasionally come up to me and say: "I want what you have. Can you give it to me, or show me how to get it?" And I would say: "you have it already. You just can't feel it because your mind is making too much noise."
.. Eckhart Tolle in his book "The Power of Now"

(மக்கள் எப்போதாவது என்னிடம் கேட்பதுண்டு: "உங்களிடம் உள்ளதை நாங்களும் அடைய  விரும்புகிறோம். எங்களுக்கு அதைத் தருவீர்களா அல்லது அதை எப்படி பெறுவது என்பதை சொல்வீர்களா?"

நான் அவர்களிடம் சொல்வேன்: "அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது. உங்களால் அதை உணர முடியவில்லை; காரணம், உங்கள் மனம் மிக அதிகமாக சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கிறது.")
................................................

நமது ஆழ்மனம், அதனுள் இருக்கும் பதிவுகள் காரணமாக எப்பொழுதும் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், நமக்கு அது தெரிவதில்லை.

ஆழ்மனம் பதிவுகள் ஏதுமின்றி நிசப்தமாக இருக்குமானால், Eckhart Tolle-யால் உணர முடிந்ததை நம்மாலும் உணர முடியும். 

அதற்கு நாம் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. நமது சுபாவத்திற்கு ஏற்ற வழியைக் கண்டறிந்து, அதில் பயணிக்க வேண்டும். கூடவே தினந்தோறும் சில மணித் துளிகளாவது மௌனமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது .. குறிப்பிட்ட நேரத்தில் புறவுலகத் தொடர்பிலிருந்து (உடலளவில்) ஒதுங்க வேண்டும்; பின், மனம் உள்ளுக்குள் ஒடுங்க வேண்டும். இதனைத்தான், ரிஷி பதஞ்சலி "பிரத்யாகாரம்" என்கிறார்.

"வெற்றிடத்தில் ஓடி
   வெந்துமனம் வாடாமல்
உற்றிடத்தை தேடி
   உறங்குவது எக்காலம்?"

                     (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 33

'தர்மம்' என்ற வார்த்தைக்கு பலவிதமான அர்த்தங்கள் உண்டு.

"அம்மா, தாயே, தருமம் போடுங்கம்மா" என்று வாசலில் யாராவது குரல் கொடுத்தால், அவர்கள் உணவு கேட்கிறார்கள் என்று அர்த்தம்.

"அவர் நிறைய தான தர்மங்கள் செய்வார்" என யாராவது சொன்னால், குறிப்பிட்ட நபர் நிறைய நல்ல காரியங்கள் செய்கிறார் என்று அர்த்தம்.

"தர்ம, அர்த்த, காம, மோட்க்ஷ" என்ற சொற்றொடரில் வரும் 'தர்ம' என்ற வார்த்தைக்கு, எல்லா ஜீவராசிகளும் அதனதன்/அவரவர் சுபாவத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும்/கொள்வார்கள் என பொருள் கொள்ளலாம்.

சனாதன தர்மம் என்றால், 'நிரந்தரமான உண்மை' என்பதுதான் அர்த்தம் என நான் நினைக்கிறேன். எந்த ஒரு உண்மையும் நிரந்தரமாக எல்லோராலும் கடைப்பிடிக்க முடியுமென்றால், அந்த உண்மையை கடைப்பிடித்தால் அது நமது பண்பு நிலையில் ஏற்றம் கொடுப்பதாக இருக்குமென்றால், அந்த உண்மை மட்டுமே சனாதன தர்மத்தில் அடங்கும். 

சனாதன தர்மம் என்ற வார்த்தையை முதலில் சொன்னது யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், அதில் சடங்கு, சம்பிரதாயங்கள் எதுவும் அடங்காது என்பது எனது கருத்து.

(பதிவு 3-ல் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இது 2-வது கேள்வி)

தத்துவங்களையும், தத்துவம் சார்ந்த விதிகளையும், அதற்குண்டான வாழ்வியல் நெறிகளை உணர்த்தும் நீதி போதனைகளையும் சுட்டிக் காட்டுவது தான் "சனாதன தர்மம்". எனவே, அதனை குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே உரியது எனக் கூறுவது சரியா?

                      (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 34

"The present is the product of the past; the future is the modification of the past in the present" 
.. Swami Chinmayananda 

(நிகழ்காலத்தில் நடப்பவை எல்லாம் கடந்த கால நிகழ்வுகளின் தொடர்ச்சியே; வருங்கால நிகழ்வுகள் என்பது நாம் நிகழ்காலத்தில் செய்யும் மாற்றத்தை பொறுத்தது)

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வரிகள்!!

மாலை நேரமாகி விட்டால், அவனுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்காது; வெளியில் சென்று நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து விட்டு வருவது வழக்கம்.

என்றாவது ஒரு நாள், பொழுதை வீணாகக் கழிக்கிறோமே என்று அவன் உணர்ந்தால், உரிய மாற்றங்களை அவன் செய்ய வேண்டும். அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதற்கு பதிலாக, அவன் கோயிலுக்கு செல்லலாம், நல்ல நூல்களைப் படிக்கலாம். இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், தேவையற்ற பழக்கங்களில் இருந்து விடுபடலாம்.

ஆக, தவறுகளைத் திருத்திக் கொள்ள தேவையான மாற்றங்களை உரிய நேரத்தில் செய்ய வேண்டும்.

கேள்வி 3:
மதங்களைப் பொறுத்தவரை திருத்தங்கள் அடிக்கடி தேவைப்படலாம். ஏனெனில் பெருவாரியான மக்கள் மதங்களைப் பின்பற்றும் போது தவறுகள், சில நேரம் மன்னிக்க முடியாத தவறுகள் கூட நேர்ந்து விடலாம். அவற்றை சரி செய்வதற்காக உரிய மாற்றங்களை செய்வது சமயத் தலைவர்களின் கடமை அல்லவா?

(உ.ம்) தீண்டாமை??

                    (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 35

"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"
.. குறள் எண் – 190

கடவுளை நம்பாத நாத்திக வாதிகள், மத நம்பிக்கை உள்ளவர்கள் மீது நிறைய தேவையில்லாமல் பழி சுமத்துகிறார்கள் என்று வருத்தப் படுகிறோம். அவர்கள் மீது நாமும் நமது கண்டனங்களை வெளிப்படுத்தலாம்.

ஆனால், அதைவிட நம்மிடம் உள்ள குறைகளைக் களைவது முக்கியம் இல்லையா?

கேள்வி 4:-
"வசுதைவ குடும்பகம்" என்று சொல்வதில் பெருமைப் படுகிறோம். இதன் பொருள் "உலகம் ஒரே குடும்பம்" என்பதாகும். இதில் இந்தியாதான் உலகுக்கே வழிகாட்டி என்றும் சொல்கிறோம்.

இது உண்மையாக கடைப்பிடிக்க படுகிறதா? அப்படியானால் "தீண்டாமை" இன்னமும் இருக்கிறதே!? ஊருக்குள் மட்டுமல்ல, சில ஆலயங்களிலும் இதனைப் பார்க்கிறோமே!?

இதை தடுக்க வேண்டியது மதத் தலைவர்களின் கடமை இல்லையா? அவர்கள் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லையே? ஏன்?

                     (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 36

ஒரு அமெரிக்க விஞ்ஞானிகள் குழு மாபெரும் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. அதன்படி சுமார் 15 லட்சம் மக்களிடம், உலகளாவிய அளவில், கருத்துக்கணிப்பு நடத்தியது. அவர்களிடம் 44 முதல் 300 வரை கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்த குழு தங்களது கருத்துக்கணிப்பு முடிவை “Nature Human Behaviour” என்ற பத்திரிகையில் 2018-ம் வருடம் வெளியிட்டது. 

அந்த முடிவின்படி, மனிதர்கள் நான்கு வகையானவர்கள் என்று உறுதிப்படுத்தி உள்ளனர் .. அதாவது “Reserved, role model, self-centred and average” என நான்கு பிரிவுகள். பல்வேறு கட்டத்தில், பல்வேறு குழுக்கள் நீண்ட காலமாக நடத்திவந்த ஒரு பிரச்சனைக்கு, இப்பொழுது நடந்த கருத்துக்கணிப்பு முடிவே சரியானது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் குழு அறிவித்த முடிவை யாரும் குறை கூறியதாகத் தெரியவில்லை.

மனிதர்களின் இந்த நான்கு வகைப் பிரிவுகளை, இந்திய தத்துவ ஞானிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்து உள்ளனர். அதற்கு அவர்கள் இட்ட பெயர்கள், முறையே “பிராமணன், க்ஷத்ரியன், வைஷ்யன் மற்றும் சூத்திரன்” என்பதுதான்.

கேள்வி 5:-
விஞ்ஞானிகள் சொன்னதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஞானிகள் சொன்னதை நம்மில் பலரால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அதற்கு ...

யார், யாரோ தவறான விளக்கங்கள் கொடுத்ததுதான் காரணமா? 

நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று நினைக்க தூண்டியதுதான் காரணமா? அல்லது, 

இதை வைத்து சாதிய அமைப்பை ஏற்படுத்தி, தேவையற்ற பிரிவினைகளை ஏற்படுத்தியதுதான் காரணமா?

                (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 37

சமீபத்தில் ஒரு பெரியவர் பேசியதைக் கேட்டேன். அதில் அவர் " மூன்று ஆச்சாரியார்களும் .. ஆதி சங்கரர், மத்வாச்சாரியார், இராமானுஜர் .. ஒரு மனிதன் இறக்கும் போது சத்துவ குணம் மிகுந்து காணப்பட்டால், அவன் அடுத்த பிறவியில் 'பிராமணனாக' பிறப்பான்
எனக் கூறியிருக்கிறார்கள்" என்று பேசியிருந்தார்.

இது சம்பந்தமாக எனக்கு சில கேள்விகள் உள்ளன. அவற்றை அடுத்த பதிவில் கேட்கிறேன். 
இப்பொழுது ..

கேள்வி 6:-
"வர்ணாஸ்ரம தர்மத்தில்" 'பிராமணன்' என்றொரு பிரிவு உள்ளது. சாதி வாரியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தியபோது, அதிலும் 'பிராமணன்' என்றொரு சாதி வருகிறது.

எனது கேள்வி என்னவென்றால், 'வர்ண' பிராமணனுக்கும், 'சாதி' பிராமணனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது
என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். எனது எண்ணமும் அதுதான்.

இது சம்பந்தமாக மடாதிபதிகள்/சமயத் தலைவர்கள் ஏதேனும் கருத்து சொல்லியிருக்கிறார்களா?

                      (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 38

மூன்று ஆச்சாரியார்களும் 
.. ஆதி சங்கரர், மத்வாச்சாரியார், இராமானுஜர் .. ஒரு மனிதன் இறக்கும் போது, அவனிடம் சத்துவ குணம் மிகுந்து காணப்பட்டால், அவன் அடுத்த பிறவியில் 'பிராமணனாக' பிறப்பான்
எனக் கூறியிருக்கிறார்கள் என ஒரு பெரியவர் பேசியிருந்தார். 

அது உண்மைதான். ஒரு மனிதனின் ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகளின் தன்மையைப் பொறுத்து, அவனது குணமும் அமையப் பெறும். ஆக, ஒரு மனிதனிடம் சத்துவ குணம் மேலோங்கி இருந்தால், அவனது ஆழ்மனதில் அதற்குறிய பதிவுகளே இருக்கும். எனவே அவனது அடுத்த பிறவியில் அவன் பிராமணனாக பிறப்பான் எனக் கூறியிருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக சில கேள்விகள் ...

கேள்வி 7:-
ஆச்சாரியார்கள் கூறிய காலத்தில் 'பிராமணன், பிள்ளை, செட்டியார், தேவர்' போன்ற சாதிப் பிரிவுகள் இருந்தனவா?

இல்லையெனில் அவர்கள் குறிப்பிட்டது "வர்ண" பிராமணனைத்தானே?

"வர்ண" பிரிவைச் சேர்ந்த பிராமணன் எந்த சாதியிலும் பிறக்கலாம் அல்லவா?

அப்படிப்பட்ட மனிதன் "பிராமண" சாதியில் மட்டும்தான் பிறப்பான் என்றால், உபநிடதம் சொன்ன "சத்யகாம ஜாபாலன்" கதையின் கருத்து தவறா?

தவிர, பிராமண சாதியில் பிறந்த அனைவரும் "வர்ண" பிராமணனுக்கு ஒப்பான வர்கள் என்று கூற முடியுமா?

"சாகும்போது சத்துவ குணம் மிகுந்து காணப்பட்டால்" என்று சொன்னால், அப்பொழுதே, அந்தப் பிறவியிலேயே அவன் "வர்ண" பிராமணனாக ஆகிவிட்டான் என எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

இதன் மூலம் ஒரு மனிதன் எந்த வர்ணத்தில் பிறந்தாலும், அவனது பண்பு நிலையில் நல்லதொரு ஏற்றம் காணப்பட்டால் அவன் வாழும்போதே "வர்ண" பிராமணனாக மாறிவிடலாம் அல்லவா?

                      (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 39
.

"வர்ணாசிரம தர்மம்" என்பது பலருக்கு பிடிக்காத ஒன்று என்பதை அறிவேன். ஆனால், அதை எதற்காக "மனு தர்மத்தோடு" இணைத்து பேசுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.

மனு தர்மம் என்பது ஒரு சட்டம். ஆனால், வர்ணாசிரம தர்மம் என்பது ஒரு வாழ்வியல் தத்துவம். எனவே ஒன்றோடு ஒன்றை ஒப்பிடுவது தவறு என்பது எனது கருத்து.

சட்டம் காலப்போக்கில் மாறிவிடும். ஆனால், தத்துவங்கள் நீண்ட காலம் இருக்கக் கூடியது.

ஒரு அன்பர் 'தத்துவங்கள் எல்லாம் வெறும் குப்பை' எனக் குறிப்பிட்டிருந்தார். ஒரு கோணத்தில் பார்த்தால், அவரது கூற்று சரிதான். ஆனால், யாருக்கு குப்பை? எப்போது குப்பை? என்று யோசித்தால் கொஞ்சம் சிந்திக்கத் தோன்றுகிறது.

                       (தொடரும்)

சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 40

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்".
.. குறள் எண் – 972

மனிதர்கள் எல்லாரும் சமம் என்று சொல்பவர்கள், குறளின் முதல் வரியைக் குறிப்பிடுவார்கள்.

இருக்கலாம்; ஆனால், மனிதர்கள் செய்யும் தொழிலைப் பொறுத்து அவர்களது சிறப்பு மாறுபடும் என்று சொல்பவர்கள் பகவத் கீதையில் வரும் "குண, கர்ம விபாகசஹ" என்ற சொற்றொடரை மேற்கோள் காட்டுவார்கள். பொதுவாக 'கர்ம' என்றால் 'செய்யும் தொழில்' என்று அர்த்தம் என சொல்வதுண்டு. ஆனால், இந்த இடத்தில் அது தவறு எனத் தோன்றுகிறது. அதைப் பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.

குறளில் வள்ளுவர் 'செய்தொழில் வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'செய்தொழில் வேற்றுமையான்' எனக் கூறுகிறார். 'வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'வேற்றுமையான்' என ஏன் கூறுகிறார்? 

சிலர் 'தொழில் செய்பவரின் திறமையைப் பொறுத்து, சிறப்பானது வேறுபடும்' என்று சொல்கிறார்கள்.

ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்ய பல மந்திரிகள் இருப்பார்கள். அதில் சிலர் நாட்டு நலனுக்காக உழைப்பார்கள்; சிலர் தங்களது வீட்டு நலனுக்காக உழைப்பார்கள். அவர்களின் தொழில் ஒன்றாக இருந்தாலும், அவர்களின் நோக்கத்தில் மாறுபாடு இருக்கிறது. ஆக, 'வேற்றுமையான்' என்பதற்கு 'செய்யும் தொழிலின் பின்னே மறைந்திருக்கும் நோக்கத்தைப் பொறுத்து தொழில் செய்பவர்களின் சிறப்பு மாறுபடும்' என்றும் சொல்லலாம் அல்லவா?

                   (தொடரும்)

சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 41

"மனிதர்களை குணம் மற்றும் கர்மாவின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கிறேன்" என பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார்.

இந்தப் பிரிவுகளை தொழிலை வைத்துப் பிரித்துப் பார்ப்பது தவறு என்பது எனது கருத்து. இதனால்தான் ஏகப்பட்ட கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.

தங்களது வசதிக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவே நம் முன்னோர்கள் செய்த தவறு, ஒரு அற்புதமான உளவியல் தத்துவத்தை பலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய் விட்டது.

குணம், கர்மா இரண்டும் தனித்தனி வார்த்தைகள் அல்ல. அது ஒரு சங்கிலித் தொடரில் உள்ள கண்ணிகள். அதில் முதல் கண்ணி 'குணம்'; கடைசி கண்ணி 'கர்மா'. இடையில் வேறு சில கண்ணிகளும் உள்ளன. அனைத்து கண்ணிகளுக்கும் இடையே முறையான 'ஒருங்கிணைப்பு' இருந்தால் மட்டுமே தொழில் ரீதியான பிரிவை சரியென்று சொல்லலாம்.

ஒருவேளை முற்காலத்தில் குணம் மற்றும் கர்மாவிற்கு இடையே ஒரு 'ஒருங்கிணைப்பு' இருந்திருக்கலாம். ஆனால், அது எப்பொழுதும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா?

எனவே கர்மா என்பதற்கு 'தொழில்' என்று பொருள் கொள்வதற்கு பதிலாக சரியான பொருள் எதுவென்று பார்க்க வேண்டும்.

முதலில் சங்கிலியில் உள்ள கண்ணிகளை பார்த்து விடுவோம்.

                     (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 42

சங்கிலியில் உள்ள கண்ணிகள்:-
குணம் (character)
இயல்பு/சுபாவம் (nature)
மனோபாவம் (mental attitude)
எண்ணம்/சிந்தனை (thought)
சொல் (speach)
கர்மம்/செயல் (action)

மனிதர்களிடம் உள்ள குணத்தை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்:- 
1. சத்துவ குணம்
2. ரஜோ குணம்
3. தமோ குணம்

இவர்களில் சத்துவ குணம் நிறைந்த மனிதர்களிடம் 'தன்முனைப்பு' குறைந்து காணப்படும். அதனால் அவர்கள் செயலில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
(Unactive type)

தமோ குணம் நிறைந்த மனிதர்கள் பெரும்பாலும் பிறரது விருப்பத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருப்பார்கள். சொந்தமாக சிந்தித்து செயல்பட மாட்டார்கள். (Inactive type)

ரஜோ குணம் நிறைந்த மனிதர்களிடம் மட்டுமே 'தன்முனைப்பு' 
(அஹங்காரம்) அதிகம் இருக்கும். அவர்கள் செயலிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். (Active type)
ஆனால், இவர்களிடம் உள்ள சுபாவம் (nature) இரண்டு விதமாக இருக்கும். சிலர் பொதுநலத்தில் நாட்டம் உள்ளவர்களாகவும், சிலர் சுயநலத்தில் நாட்டம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

அதேபோல், ஒரு மனிதனின் செயல்கள் வெளியே தெரியுமுன், தனது செயல்களைப் பற்றி அவன் மனதுக்குள் நிறையவே  கற்பனை செய்திருப்பான்.

எனவே, 'வர்ணப் பிரிவு' என்பது ஒரு மனிதனின் இயல்பான சுபாவம் மற்றும் அவனது மனோபாவம் இரண்டையும் பொறுத்து அமையக்கூடியது.

வர்ணாஸ்ரமம் பற்றி ஒரு அன்பர் வெளியிட்ட கருத்து இது:- "வர்ணாசிரமம் என்பது இடைச்சொருகல் மட்டுமல்ல தேவையில்லாத ஆணி".
இதுபோன்ற எண்ணங்கள் பலரிடத்திலும் இருப்பதை அறிவேன்.

உண்மையில் இந்த "ஆணி" தேவையா, தேவையில்லையா? நான் என்னில் அனுபவித்து உணர்ந்த உண்மையைக் கூறுகிறேன்.

                  (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 43

எனது வாழ்க்கையில் இரண்டு விஷயங்களில் நான் உறுதியாக இருந்தேன்:-
1. பொது வாழ்வில் நேர்மையாக இருப்பது.
2. முடிந்தவரை பிறருக்காக சேவை செய்வது மற்றும் உதவுவது.

இவற்றை ஓரளவு சரியாகவே கடைப்பிடித்தேன். இருந்தாலும் மனதில் தேவையற்ற குழப்பங்கள், இனம் புரியாத வேதனைகள் இருந்துகொண்டுதான் இருந்தன. கூடவே வேறு சில உடல் உபாதைகளும் இருந்தன.

நான் அதிகம் விரும்பி படித்தவை திருக்குறளும்,  பகவத்கீதையும் தான். ஆனால், திருக்குறளை புரிந்து கொண்டதுபோல் பகவத்கீதையை என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை.

பின்னர் சுவாமி சின்மயானந்தர் எழுதிய "Kindle Life" என்ற புத்தகம் பகவத்கீதையை எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது. அதன்பின் அதில் உள்ள தத்துவங்கள் புரிய ஆரம்பித்தன; அதிலும் குறிப்பாக "வர்ணாசிரம தர்மம்".

நாம் பொதுவாக 'அறிவு' என்று கூறுவதுண்டு. வடமொழியில் இதை 'ஞானம்' என்று சொல்வார்கள். ஆனால், அறிவில் இரண்டு விதம் உண்டு.

ஒன்று, நாம் தெரிந்து கொண்ட விஷயங்களை ஐயம், திரிபு இல்லாமல் அறிந்து கொள்வது.

இரண்டாவது, நாம் அறிந்து கொண்டவற்றை அனுபவத்தில் நடைமுறைப்படுத்தி,  அவற்றின் உண்மைத் தன்மையை  'உணர்ந்து கொள்வது'.

அதனால்தான், ஆன்மிகத்தை "அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று" என நான்
சொல்வதுண்டு.

வர்ணாசிரம தர்மத்தைப் புரிந்துகொண்ட பின் எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.

அவை...

                   (தொடரும்)

சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 44

"வர்ணாசிரம தர்மம்" என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டபின், எனது சிந்தனையில் நிறைய மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. 

வர்ணாசிரம தர்மத்தை இரண்டாகப் பிரித்து பார்க்க வேண்டும்; ஒன்று "வர்ண தர்மம்", மற்றொன்று "ஆஸ்ரம தர்மம்".

ஒரு மனிதனின் "வர்ண தர்மத்தை" தொழிலை வைத்து உறுதி செய்வது தவறு எனத் தோன்றியது.
"குண, கர்ம" என்ற தொடரில் வரும் குணம் என்ற வார்த்தைக்கு (வடமொழியில்) சுபாவம் என்று அர்த்தம்.

கண்ணன் தெளிவாகச் சொல்கிறான் ..
"அவர்களது தொழிலை அவர்களிடம் இயல்பாக அமைந்துள்ள சுபாவம் மற்றும் அதைச் சார்ந்த அவர்களின் தரத்தை (quality) ஒட்டி நான்காக பிரிக்கிறேன்"
(Their duties are divided according to the qualities inherent in their nature ..
Gita 18.41)

சரி; அவர்களது சுபாவம் பற்றி கண்ணன் என்ன சொல்கிறான்? உதாரணத்திற்கு ஒன்று.

கீதையில் கண்ணன் இப்படிப்பட்ட சுபாவங்கள் இருந்தால், அவன் பிராமணன் என்று அழைக்கத் தக்கவன் எனக் கூறுகிறார். "Brahma karma svabhavajam" (Gita 18.42)

அவை:-
அமைதி .. ..   .. serenity
சுயக்கட்டுப்பாடு .. self-restraint 
சிக்கனம் ..    .. austerity
தூய்மை ..     ..  purity 
மன்னித்தல் ..  forgiveness
நேர்மை straightforwardness
அறிவு .. .. ..  ..   knowledge
ஞானம் .. .. ..    wisdom
நம்பிக்கை .. .. faith in God/scriptures 

கண்ணன் இதில் பிறப்பை பற்றி எதுவுமே சொல்லவில்லை. மேலே சொல்லப்பட்ட சுபாவங்கள் உடைய ஒரு மனிதன் எந்தத் தொழிலை செய்தாலும் அவன்தான் "வர்ண ரீதியான பிராமணன்" என நான் உணர்ந்து கொண்டேன். 

                    (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 45

"பிராமணன், க்ஷத்ரியன், வைஷ்யன், சூத்திரன்" என்பதற்கு நான் எடுத்துக் கொள்ளும் பொருள் ..
" வழிகாட்டி, பொதுநலவாதி, சுயநலவாதி, மற்றவர்" என்பதே. இந்த விளக்கம் முன்னர் சொன்ன "Reserved, Role-model, Self-centred, Others" என்பதற்கு ஒப்பாக இருக்கிறது அல்லவா?

இந்தக் கருத்து நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்தப் பிரிவுகளை "வேண்டாத ஆணி" என்று சொல்ல முடியுமா? ஒரு உதாரணம்...

சுயநலவாதிகள் எந்த காரணம் கொண்டும் அரசியலுக்கு வரக்கூடாது. அவர்களை வரவேற்பது மட்டுமல்ல; ஆட்சி பீடத்திலும் அமர வைக்கிறோம். பின்னர் அதை நினைத்து புலம்புவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதைப் புரிந்து கொண்டு, அனைத்து கட்சிகளிலும் உள்ள சுயநலவாதிகளுக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்தால், நாடு நன்றாக இருக்கும் அல்லவா!?

இதைப் போன்றே "ஆஸ்ரம தர்மத்தையும்" வேறு கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது!?

                    (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 46

சென்ற பதிவில் "சுயநலவாதி" என்று குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு அன்பருக்கு சந்தேகம் வந்து விட்டது; நியாயமான சந்தேகம்தான்.

பெரும்பாலான மனிதர்கள் 'தான், தன் குடும்பம்' என்று வாழ்வார்கள். அவர்களுக்குள் நேர்மையாக, யாருக்கும் துரோகம் செய்யாமல் வாழ்பவர்களும் இருப்பார்கள். பல காரணங்களால் அவர்களால் பிறருக்காக சேவை செய்ய முடியாமல் போகலாம்; ஆனாலும், அவர்களும் பொதுநலவாதிகள் என்று அழைக்கத் தக்கவர்களே.
..... ..... .....
ஆஸ்ரம தர்மத்திலும் நான்கு வார்த்தைகள் .. "பிரமச்சரியம், க்ரஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம்".

தத்துவங்களுக்கு விளக்கம் சொல்லும் போது, அது கால சூழ்நிலைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். முதலில் சொன்ன விளக்கம்தான் சரியென்று வாதிடக் கூடாது.

உதாரணத்திற்கு, பிரமச்சரியம் என்றால், அதில் இருப்பவன் வேதம் கற்றுக் வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த விளக்கம் அந்த காலத்திற்கு பொருந்தி இருக்கலாம்; எல்லா காலத்திற்கும் அது பொருந்தக் கூடியதா?

ஆஸ்ரம தர்மத்தை "மாணவப் பருவம், வாலிபப் பருவம், வயோதிக பருவம், துறவுப் பருவம்" என பொருள் கொள்ளலாம்.

"பிரமச்சரியம்" 
மாணவப் பருவம்:- இது கற்றுக் கொள்ளும் பருவம். பிறரை சார்ந்திருக்கும் பருவம்.

"க்ரஹஸ்தம்"
வாலிபப் பருவம்:- இது பிறரை சார்ந்திராமல், தன் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பருவம்.

"வானபிரஸ்தம்"
வயோதிக பருவம்:- பிறரை சார்ந்து வாழும் பருவம். இந்தப் பருவத்தில் 'ஒதுங்கி' வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். (Be in the family; be far-away from the family)

"சந்நியாசம்"
துறவுப் பருவம்:- ஒதுங்க கற்றுக்கொண்ட மனிதனுக்கு, உள்ளுக்குள் 'ஒடுங்க' தெரிய வேண்டும்; தான் யார் என்பதை புரிந்து கொள்ள 'அகத்தாய்வு' செய்வது மிகவும் அவசியம். அதற்கு 'மனதால் உள்ளுக்குள் ஒடுங்குதல்' உதவியாக இருக்கும்.

                   (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 47

திருக்குறள் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று சொல்கிறது. பகவத்கீதை அப்படி வாழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது.

கீதையில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிய பின், "நான் யார், எனக்கான பாதை எது, அதில் எப்படி பயணிக்க வேண்டும்" என்பதைப் புரிந்து கொண்டேன். எனக்கான பாதையில் பயணித்த போது பல உண்மைகள் வெளிப்பட்டன:-

1. மனம் இரு பகுதிகளாக செயல்படுகிறது; ஒன்று உணர்வு மனம், மற்றொன்று உணர்வற்ற மனம் அல்லது ஆழ்மனம்.
2. புறவுலகில் இருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்ளும் பொழுது ஏற்படும் அனுபவங்கள், உணர்வு மனதில் பதிவுகளை ஏற்படுத்துகின்றன. அந்தப் பதிவுகள் ஆற்றில் விழுந்த சருகைப்போல கால ஓட்டத்தில் மறைந்துவிடும்.
3. ஆனால், ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகள் நீண்ட காலம் தங்கி இருக்கும்.
4. இந்த ஆழ்மனப் பதிவுகள் தான் ஒரு மனிதனின் அஹங்காரத்தை நிர்ணயம் செய்கின்றன. அத்துடன், அவை உள்ளிருந்து பெருகக்கூடிய 
'உள்ளொளியையும்' உணர முடியாமல் தடுத்து விடுகின்றன.
5. பதிவுகள் அதிகமாக, அதிகமாக அஹங்காரமும் தீவிரத் தன்மையை அடைந்து விடுகிறது.
6. அஹங்காரம் தீவிரமடைந்தால், புறவுலக தாக்கங்களை எதிர்கொள்ளும் போது, உணர்ச்சி வசப்படுவதும், எதிர்வினை (reaction) ஆற்றுவதும் மிகுந்து காணப்படும்.
7. அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதால், விவேகத்துடன் சிந்திக்கும் திறனும் குறைந்து விடுகிறது.
8. ஆழ்மனப் பதிவுகள்தான் நமது 'அமைதியின்மைக்கு' காரணம் என்பது புரியாமலே வாழ்ந்து வருகிறோம். 

                     (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 48

உண்மைகள் புரிந்தபின் எனக்கான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.

அதிகமாக ஞான நூல்களைப் படித்து, அவை சொல்லும்  தத்துவங்களைப் பற்றி சுயமாக சிந்திக்க ஆரம்பித்தேன். இதனை ரிஷி பதஞ்சலி "சவிசாரம்" என அழைக்கிறார்.

அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. "என்னை சுற்றிலும் உள்ளோர் என்னை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைத்திருந்தேன். அது தவறு. நான்தான் உலகத்தை புரிந்து கொள்ளத் தெரியாத ஒரு முட்டாளாக வாழ்ந்து வந்திருக்கிறேன்" என்ற  உண்மையை உணர்ந்து கொண்டேன்.

அதன்பின், எனது வாழ்க்கையில் சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

யாராவது தேவையில்லாமல் என்னை சீண்டினால், உடனே எதிர்வினை (reaction) ஆற்றுவது என் பழக்கமாக இருந்தது. அந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

ஆழ்மனதிலிருந்த கொந்தளிப்புகள் குறையத் தொடங்கின. அதன் காரணமாக என்னிடமிருந்த 'அகங்காரம்' நலிவடையத் துவங்கியது.

"As the man progresses in his inward expansion, the lower tendencies in him automatically drop off" என்கிறார் சுவாமி சின்மயானந்தர்.
(ஒரு மனிதனின் உள்முகப் பயணம் .. கட+ உள் .. விரிவடையும் போது, அவனிடமிருந்த தேவையில்லாத பதிவுகள் ஒவ்வொன்றாக வெளியேறிவிடும்).

"Peace of mind" .. மன அமைதி; இதை உச்சரிக்காத மனிதர்களே இருக்க முடியாது. எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், மனதில் அமைதி இல்லையென்றால் அந்த மனிதனால் நிம்மதியாக வாழ முடியாது. ஆனால், மன அமைதி எங்கிருக்கிறது என்பதை அறியாமல் பலரும் தவித்து வருவதை நாம் அறிவோம்.

சுவாமி சின்மயானந்தர் சொல்கிறார்:- "Success in life is measured by the tranquility of the mind". வாழ்க்கையில் வெற்றி என்பது சலனமற்ற மனம் சார்ந்தது என்கிறார்.

சலனமற்ற மனம் என்றால் என்ன? ஆழ்மனதில் நம்மை உசுப்பேத்தும் பதிவுகள் இல்லையென்றால், அதை சலனமற்ற மனம் என அழைக்கலாம்.

சலனமற்ற மனம் உள்ளவனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) மிகவும் நலிவடைந்து காணப்படும்.
'நான், எனது' என்ற எண்ணங்கள் மறைந்து விடும். "தான்" என்ற உணர்வு மட்டும் இருக்கும்.

"விழிப்புணர்வு" பெற விரும்பும் மனிதனுக்கு, அவனது லட்சியத்தை அடைய இதுதான் முதல் படி.
                     (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 49

பகவத்கீதையை ஒரு மனோதத்துவ நூல் என்று நம்புகிறேன். 

மனிதனின் "அந்தக்கரணங்களின்" செயல்பாடுகளை ஒரு வரைபடமாக (flow-chart) உருவாக்க எண்ணினேன். அத்துடன் "வர்ணாஸ்ரம தர்மம்" பற்றி பலரிடம் சரியான புரிதல் இல்லையே என்ற ஆதங்கமும் இருந்தது.

இதன் காரணமாகவே "மழலையின் கீதை" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினேன். 

எனது நண்பர் ஒருவருக்கு நான் கீதை படித்தது, நண்பர்களுடன் அதைப்பற்றி பேசுவது என எதுவுமே பிடிக்கவில்லை. இருப்பினும் பதிப்பில் இருந்து ஒரு பிரதியை, திரு. சுகி சிவம் அவர்களுக்கு அனுப்பி அவர்களது அபிப்ராயத்தை கேட்டிருந்தார். (நண்பருக்கும் திரு. சுகி சிவம் அவர்களுக்கும் இடையே நல்ல உறவு உண்டு).

திரு. சுகி சிவம் அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்து ஒரு பகுதி :-

"... கீதையை சமுதாயம் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை...தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதே என்கிற ஆதங்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

வர்ணாச்ரம தர்மம், பகுத்தறிவு வாதிகளால் வேண்டும் என்றே திரிக்கப்பட்டு பிரச்சனை ஆக்கப்பட்ட விஷயம். அதுபற்றி தெளிவு காணும் முயற்சியில் பல விளக்கங்கள் தந்திருக்கும் ஆசிரியரை பாராட்டுகிறேன்.
என்றாலும் இதில் தரப்பட்டிருக்கும் விளக்கங்களும் தவறுதலாக புரிந்து கொள்ளப்படும் என்று கவலையுறுகிறேன்...".

புத்தகம் வெளிவந்த பின் எனக்கு அறிமுகம் ஆகியிருந்த ஒரு பிராமண பண்டிதரிடம் (சமஸ்கிருதம் நன்கு கற்றறிந்த அறிஞர்) ஒரு பிரதியை கொடுத்து அவரது அபிப்ராயத்தை கேட்டேன். புத்தகத்தை படித்துவிட்டு அவர் சொன்னது:-
"நீங்கள் (புத்தகத்தில்) சொல்லி இருப்பதுதான் சரி. ஆனால், யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்".
அவர் "யாரும்" என்று யாரைக் குறிப்பிட்டு சொன்னார் என்பதைச் சொல்லவில்லை; நானும் அதைக் கேட்கவில்லை.

சமய நூல்களிலும், சமயம் சாராத நூல்களிலும், மற்றும் பல்வேறு மனிதர்களிடம் இருந்தும் தத்துவங்கள் வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் "வர்ணாசிரம தர்மம்" மிக முக்கியமான ஒன்று என்பது எனது எண்ணம்.

நான் எண்பது (80) வயதைக் கடந்து விட்ட மனிதன். என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் பலரும் 60, 70 வயதைக் கடந்தவர்களே. அவர்களில் பலர், வசதிகள் இருந்தும் கவலையுடன் வாழ்வதை அறிவேன். அவர்களுக்கு "வர்ணாசிரம தர்மம்" பற்றியும், "வானபிரஸ்தம்" பற்றியும் சரியான புரிதல் இருந்திருந்தால்,  கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லையே என நினைத்துக் கொள்வேன்.

ஒரு 'சத்சங்க' நிகழ்ச்சியின் போது ஒரு பெண்மணி (65 வயது இருக்கும்) "ஐயா, எனக்கு அடிக்கடி கோபம் வருகிறதே; அதை எப்படி நிறுத்துவது?" என கேட்டாள்.

                        (தொடரும்)


சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 50

வயதான காலத்தில் கோபம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நமக்கு குழந்தைகள் பிறந்து வளரும் போது, அவர்களுக்கு நமது அரவணைப்பும், பாதுகாப்பும் தேவைப்படும். அவர்கள் வளர்ந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் நாம் ஒதுங்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒதுங்கி வாழ்வது என்றால் என்ன?

நம் பிள்ளைகள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், நாம் என்ன செய்கிறோம்? முதலில் தண்ணீரில் இறங்கி பிள்ளைகளை கைகளில் தாங்கி, அவர்கள் கைகளையும், கால்களையும் எப்படி அசைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். பின்னர் அவர்களைத் தாங்கிப் பிடிக்காமல், அதே நேரத்தில் பக்கத்தில் நின்று கொண்டு, அவர்களை நீச்சல் அடிக்க பழக்குகிறோம். அவர்கள் நீச்சலை நன்கு கற்றுக்கொண்ட பின், நாம் அவர்களை விட்டு விலகி விடுகிறோம்.

அதேபோல், நமது பிள்ளைகள் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபின், நாம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல், அவர்களை விட்டு மனதளவில் விலகிவிட வேண்டும். மனதளவில் விலகிவிடுவதை "வானபிரஸ்தம்" என்று சொல்லலாம். (Physically be in the family; mentally be far away from the family).

இந்த ரகசியம் தெரிந்து கொண்டால், நமக்கு கோபம் வராது. மாறாக மனம் அமைதியை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடும்.

                   (தொடரும்)

சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 51

"நேர்மையாக வாழ்ந்தால் போதாதா? தத்துவங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமா?" என் ஒரு அன்பர் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் சொல்வது உண்மைதான். நேர்மையாக வாழ்ந்தால் நல்லதுதான். ஆனால், நேர்மையாக வாழ்பவர்களும் வயது முதிர்ந்த நிலையில் வருந்துவது ஏன்?

தத்துவங்களின் மெய்ப்பொருளை அறிந்து கொண்டால், வயதான காலத்தில் வருந்தாமல் எப்படி வாழ்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.

தத்துவங்கள் சமய நூல்களில்தான் உள்ளன என்று நினைக்க வேண்டாம். ஆத்திச்சூடி போன்ற பல நூல்களிலும் அவற்றைக் காணலாம். திரைப்பட பாடல்களில் கூட தத்துவங்கள் நிறைந்த பாடல்களை கேட்க முடியும்.

கவிஞர் கண்ணதாசன் சொல்லாத தத்துவங்களா!?
அவரது மிகச் சிறந்த பாடல் வரிகளாக நான் நினைப்பது 'பாவ மன்னிப்பு' படத்தில் இடம் பெற்றுள்ளது. அது ..
"கருணை பொங்கும் உள்ளம்
- அது 
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே    வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்."

எளிமையாகத் தோன்றும் வரிகள்; ஆனால், ஆழமான பொருள் நிறைந்த வரிகள்.
இதற்கு நீண்ட விளக்கம் தேவை.

"கருணை பொங்கும் உள்ளம்" என்ற தலைப்பில் புதிய தொடரை ஆரம்பித்து அதனை விரிவாக விளக்குகிறேன்.

அது 'ஆழ்மனம்' பற்றிய தொடர்தான்.

                    (முற்றும்)