"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
.. குறள் 423.
.............................................................
முன்னுரை
முகநூல் பதிவுகளில் வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது, பல நேரங்களில் ஒரு கருத்தின் மெய்ப்பொருளை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் எழுதப்படுவதைப் பார்க்கிறோம்.
மாறுபட்ட கருத்துகள் வரும்போது, அதை படிக்கும் அன்பர்களுக்கு எந்தக் கருத்து சரி என்பதில் குழப்பம் வந்துவிடும்.
அது 'ஆன்மீகமாக' இருந்தால் கேட்கவே வேண்டாம். எனவே, இது சம்பந்தமாக, எனது கருத்தினை பதிவிடுகிறேன்.
நான் சொல்வது மட்டும் சரியென்று என்னால் எப்படி சொல்லமுடியும்? எனவே அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
..... ..... ..... ...... ...... ..... .....
இந்து மதத்திற்கென்று சில தனித்தன்மைகள் உண்டு.
இங்கு ...
* கடவுள் உண்டு என்பவர்களும் உண்டு; கடவுள் இல்லை என்று மறுப்பவர்களும் உண்டு.
* இந்து மதத்தில் உள்ள சடங்கு, சம்பிரதாயங்களை நாத்திகவாதிகள் மட்டுமல்ல, இறைநம்பிக்கை உள்ள ஆன்மிகவாதிகளும் கேலிசெய்வதுண்டு.
* கடவுளுக்கு உருவம் உண்டு என்பார்கள்; உருவம் இல்லை என்றும் சொல்வார்கள்.
* கடவுளை கோயிலில் கும்பிடுவார்கள்; தெருவில் ஒரு கல்லை நட்டு வைத்தும் கும்பிடுவார்கள். எதுவுமே இல்லாமல், தனக்குள்ளேயே கடவுளை வணங்குபவர்களும் உண்டு.
* கடவுளை எந்த ரூபத்திலும் கும்பிடுவார்கள்.
* "ஏகன் - அநேகன்" என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். எனவே கடவுளை பல உருவத்திலும் வணங்குவார்கள்.
* கடவுள் வேறு, தான் வேறு என்பார்கள் சிலர்; கடவுளில் தான் ஒரு பகுதி என்பார்கள் சிலர்; நானே கடவுள்தான் என்றும் சொல்வார்கள்.
* பிற வழிபாட்டுத் தலங்களிலும் தயக்கமின்றி கும்பிடுவார்கள்.
இந்து மதத்தில் இத்தகைய தனித்தன்மைகள் பலவற்றைக் காணலாம்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இந்து மதம் யாரையும், எதற்காகவும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்
படுத்துவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்து மதத்திற்கு வயது 200 என்று ஒரு பெரியவர் சொல்கிறார். வெளிநாட்டுக்காரன்தான் அதற்கு பெயர் சூட்டினான். எனவே, அது ஒன்றும் பழமையான மதம் அல்ல என்கிறார். இதனைத்தான் 'குதர்க்க' வாதம் என்பார்கள்.
40 வருடங்களுக்குப் பிறகு மதம் மாறி, ஒருவன் தன் பெயரை 'அந்தோணி' என்று மாற்றிக் கொள்கிறான். ஒரு வருடம் கழித்து அந்தப் பெரியவரிடம், அந்தோணிக்கு என்ன வயது என்று கேட்டால் ஒரு வயது என்று சொல்வாரா? சொன்னால்தான் அந்தோணியால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
இந்து மதத்திற்கு என்று தனியாக ஒரு பெயர் இருந்ததில்லை.
ஏனெனில் நமது தேசம் முழுவதும் பல்வேறு மொழிகளில், பல்வேறு வகையான வழிபாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தார்கள்.
வாழ்வியல் தத்துவங்களிலும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
இருந்தாலும், அவை அனைத்தையுமே மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
யார், யாருக்கு எந்த வழிகாட்டுதல் பிடித்திருந்ததோ, அதை நடைமுறைப் படுத்தி வந்தார்கள்.
காரணம், ஒரு பாடலில் சொன்ன மாதிரி "ஆறென்றும், நதியென்றும், ஓடையென்றாலும் அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்".
போகும் வழி வேறு வேறாக இருந்தாலும், சேரும் இடம் ஒன்றே என அவர்கள் அறிந்துள்ளார்கள்.
ஆனாலும், பிற்காலத்தில் எதன் காரணமாகவோ "சனாதன தர்மம்" என்று ஒரு பெயர் ஒட்டிக்கொண்டது.
அதற்கு ஒரு காரணமும் இருந்தது.
எல்லா மதத்திலும் சடங்கு, சம்பிரதாயங்கள், வழிபாட்டு நெறிமுறைகள், வாழ்வியல் தத்துவங்கள் என எல்லாமும் கலந்திருக்கும்.
இவற்றில் வாழ்வியல் தத்துவங்கள் தவிர மற்றவைகளில் அடிக்கடி மாற்றங்கள் வருவதுண்டு.
வாழ்வியல் தத்துவங்களைப் பொறுத்தவரை, அவை மாற்றங்கள் இல்லாதவை.
அவை எல்லா மனிதர்களுக்கும், எல்லா காலங்களிலும் பொருந்துவதாக இருக்க வேண்டும்.
அதனால்தான் அவற்றை "சனாதன தர்மம்" என்கிறோம்.
சனாதன தர்மம் என்றால், காலத்தால் அழியாத அல்லது எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக்கூடிய தர்மம் என்று பொருள்.
கண்ணதாசன் பாடல்களில் நிறைய மேற்கோள்கள் காட்டலாம் ...
"கருணை பொங்கும் உள்ளம் - அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத்தேடி அலைகின்றார்"
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக, எளிமையான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்.
பண்டிதர்கள் எனது கூற்றை தவறு என்று சொல்லலாம். ஆனால், மனிதனின் பண்புநிலையை உயர்த்துவதற்கு சொல்லப்படும் எதுவும் (அதை யார் சொல்லியிருந்தாலும்) 'சனாதன தர்மம்' தான் என்பது எனது கருத்து.
மனிதன் நிலையில்லாதவற்றை நிலையென எண்ணி, நிலையான ஒன்றை மறக்கக் காரணம் என்ன?
அவனிடம் இருக்கும் விருப்பு–வெறுப்பு இரண்டும் அவனது மனதை அலைக்கழித்து, ‘நான்’ என்ற எண்ணத்தை வலுப்படுத்தி, அவனை விழிப்புணர்வை நோக்கிச் செல்லவிடாமல் தடுத்து விடுகின்றன.
அவனது விருப்பு–வெறுப்பிற்குக் காரணம் அவனிடம் உள்ள ஆசைகளே. வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசை, இல்லாத ஒன்றை எதிர்காலத்தில் அடைய வேண்டும் என்ற ஆசை, ஆசைப்பட்டது கிடைக்காதபோது ஏற்படும் வெறுப்பு எனப் பலவிதமான உணர்ச்சிகள் அவனை ஆட்டிப் படைக்கின்றன.
எதற்கெடுத்தாலும் வெளியில் ஓடும் மனம், ஒடுங்கி அடங்கத் தெரிந்து கொண்டால் நிம்மதியாக வாழலாம் என்பதை அவன் புரிந்து கொள்வதே இல்லை.
மனிதன் விழிப்புணர்வு அடைந்து, உண்மையை உணர்ந்து கொண்டால் அவனது வாழ்க்கை எப்படி இருக்கும்?
கவிஞர் பாடுகிறார் - -
"கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா - இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா"
இந்து சமயம் மட்டுமல்ல, நமது தேசத்தில் தோன்றிய மற்ற சமயங்களையும் கருத்தில் கொண்டு, அவை சொல்லும் வாழ்வியல் தத்துவங்களைப் பட்டியல் இட எண்ணினால் நமக்கு ஒரு பிறவி போதாது.
சமய நூல்கள் கடந்து இதிகாச புராணங்கள், இலக்கிய நூல்கள் மற்றும் மற்றைய நூல்களையும் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நாலடியார், அகநானூறு, புறநானூறு, திருக்குறள் போன்றவை) கணக்கில் எடுத்துக் கொண்டால், மேலும் பல பிறவிகள் தேவைப்படும்.
இந்த அளவிற்கு வாழ்வியல் தத்துவங்களை விளக்கும் நூல்களை வேறு எங்கும் காண முடியாது. அதனால்தான் நமது நாட்டை ஞானபூமி என்கிறார்கள்.
ஆன்மிகம் சொல்லும் வாழ்வியல் தத்துவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல வெளிநாட்டினர் இங்கு வருவதை நாம் பார்க்கிறோம்.
அதே நோக்கத்திற்காக இங்கிருந்து யாராவது வெளிநாடு செல்வதாக நாம் கேள்விப் பட்டிருக்கிறோமா?
ஆனால், அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மிடம் இருக்கிறதா?
நம்மிடம் அத்தகைய ஆர்வம் இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன?
நம்மிடம் ஆன்மிகம் சொல்லும் வாழ்வியல் தத்துவங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லையென்றால் அதற்கு பல காரணங்களை சொல்லலாம்.
முன்னோர்கள் கூறிய போதனைகளை கருத்தில் கொள்ள தவறியதால்தானோ என்னவோ, பலர் வயதான காலத்தில் வேதனையில் வாடுவதை காணமுடிகிறது.
"கூண்டு விடுஞ் சீவன்மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிடு முன்னேனான்
(முன்னே நான்) மாண்டிருப்ப தெக்காலம்?" என்று பத்திரகிரியார் சொல்கிறார்.
அதாவது மனிதன் இறப்பதற்கு முன் "திருமூலர்" சொல்லும் 'பக்குவன்' நிலையை அடைய வேண்டும் என்கிறார்.
ஆனால், நாமோ உள்ளே இருக்கும் ஆன்மாவை மறந்துவிட்டு,
வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.
வசதியைத் தேடி ஓடுவது தவறா என்றால், நிச்சயம் இல்லை. வசதியைக் தேடி வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிப்பதிலும் தவறில்லை.
ஆனால், உலக இன்பங்களைக் காட்டிலும் பெரியதொரு இன்பம் உள்ளது; அதை அடைந்துவிட்டால் துன்பங்கள் நேர்ந்தபோதும் கலங்காமல் இருக்கமுடியும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மனதில் ஆசை இருந்தால், நாம் தேடும் ஒன்றை அடைந்து இன்பம் துய்ப்பது உண்டு; கூடவே அந்த 'ஒன்றின்' காரணமாக துன்பம் வருவதும் உண்டு.
ஆசைகள் இன்றி மனதில் அன்பு மட்டும் குடியிருந்தால், வாழ்க்கையில் அமைதி வந்துவிடும்.
அமைதி கண்ட மனதிற்கு, காலம் கனிந்து வரும்போது உள்ளிருந்து பெருகும் "ஆனந்தத்தை" உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும்.
இந்து மதத்தில் யாரும் எந்த கருத்தையும் மறுத்து பேசலாம்; மாற்றுக் கருத்தையும் சொல்லலாம்; புதிய கருத்துக்களையும் கூறலாம். அதற்கு எந்த தடையும் இருப்பதில்லை.
'உலகம் ஒரு மாயை' என்று இந்துமதம் வலியுறுத்தி வந்திருக்கிறது. இதை பலரும் உணர்ந்துள்ளனர். அதேநேரம் இந்தக் கருத்தை ஏற்காதவர்களும் உண்டு.
வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள். ஒருவர் (துறவியா, புலவரா, வேறு ஒருவரா என்று தெரியாது) ராஜாவிடம் எல்லாம் 'மாயை' என்றாராம். அதைக்கேட்ட ராஜா அவர் வெளியில் சென்றதும், மதம் பிடித்த யானையை அவிழ்த்து விட்டாராம். அந்த மனிதர் ஓட்டம் பிடிக்க, ராஜா கேட்டாராம் "யானை மாயை தானே, ஏன் ஓடுகிறீர்கள்?" என்று. அதற்கு அந்த மனிதர் "நான் ஓடியதும் மாயை தானே!" என்றாராம்.
"மாயை" என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளாததற்கு ஒரு காரணமும் இருந்தது.
ஒரு பொருள் காணாமல் போகும் நாள் வரலாம். ஆனால் இப்பொழுது அது நம் கண்முன்னே இருக்கிறதே! அதை எப்படி மாயை என்று சொல்லமுடியும்?
இந்த வாதம் ஏற்புடையதாகத் தோன்றியதால், அதற்கு தீர்வாக புதிய விளக்கம் ஒன்றைத் தந்தார்கள். அது --
Relative reality - அதாவது உறவு சார்ந்த (பந்தம் சார்ந்த) உண்மை.
உலகில் உள்ள அனைத்தும் உறவு அல்லது பந்தம் சார்ந்தது. உறவு அல்லது பந்தம் இல்லாதபோது, நம்முடையது என்று இருந்த ஒன்று நம்முடையது இல்லை என்பதுதான் உண்மை. (Relative reality)
இறைவன் என்பது 'நிரந்தர உண்மை'யாக இருப்பது.
(Absolute reality)
"ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல,
.... நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே"
.. பட்டினத்தார்.
('சதமல்ல' என்பது Relative reality;
'சதம்' என்பது Absolute reality)
இந்தப் பதிவுகளின் தலைப்பு "மெய்ப்பொருள் காண்போம்" என்பது.
மெய்ப்பொருள் காண்பதன் அவசியம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னால், மெய்ப்பொருள் காண்பது எப்படி என்பதை புரிந்து கொள்வோம். அதற்கு ஒரு சிறு உதாரணம்.
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்."
.. குறள் 30
இதற்கு இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம் ..
1. அந்தணர் என்பவர் அறவோர். அவர்கள்
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்வார்கள்.
இந்தக் கருத்து சரியென யாராவது சொன்னால், நமக்கு உடனே இரண்டு சந்தேகங்கள் வரும்.
* 1. அந்தணர் எல்லோரும் அறவோர் என்று சொல்ல முடியுமா?
* 2. அந்தணர் அறவோர் என்றால், மற்ற சாதியில் அறவோர் கிடையாதா?
இரண்டு சந்தேகங்களும் நியாயமானவை.
அப்படியானால் இந்தக் குறளுக்கு உண்மையான பொருள் என்னவாக இருக்கமுடியும்?
2. குறளை தலைகீழாகப் பாருங்கள். அப்பொழுது மெய்ப்பொருள் புரியும்.
செந்தண்மை பூண்டு வாழ்பவர்களே அறவழி நடப்பவர்கள். எனவே, அறவழி நடக்கும் எந்த மனிதரும் 'அந்தணர்' என்று அழைக்கத் தக்கவர்.
எந்த ஒன்றைப் பற்றியும், அதன் மெய்ப்பொருளை அறிய விருப்பம் இருந்தால், தினமும் குறைந்தது 1/2 மணி நேரமாவது அதற்காக ஒதுக்க வேண்டும்.
ஆனால், பலரும் "நேரமே இல்லை" என்று சொல்லி விடுகிறார்கள்.
சிறிது சிந்தித்துப் பார்த்தால், நாம் தேவையற்ற பல விஷயங்களில் நமது நேரத்தை செலவிடுவது தெரியவரும்.
என் நலனில் அக்கறை கொண்ட ஒருவர் என்னிடம் -- எனக்கு நேரமில்லை என்று சொன்னதற்கு -- "sleeping is a big reservoir; you can absorb as many hours as possible" என்று சொன்னார். "நீரைத் தேக்கி வைக்கும் அணைக்கட்டை போன்று, தூக்கம் நேரத்தை தேக்கி வைக்கிறது. அதிலிருந்து உனக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்; நேரமில்லை என்று சொல்லாதே" என்பார்.
அது உண்மைதானே!
மெய்ப்பொருளைத் தேடுவதால், நம்மை அறியாமலே நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என குறிப்பிட்டிருந்தேன். அவை என்னவென்று பார்ப்போம்.
சிறு குழந்தைகள் மழைபெய்வதைப் பார்த்தால் பெரியவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்பார்கள்.
அதேபோல் நாமும் மற்றவரிடம்
கேள்விகள் கேட்டு விடைகளைப் பெறுவோம். அப்பொழுது நடைபெறும் விவாதத்தில், தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே இருக்கும். இத்தகைய விவாதத்தில் நமது மனம் மற்றும் புத்தி இரண்டும் பங்கு பெற்றிருக்கும். ஆழ்மனதிற்கு அங்கு வேலையே கிடையாது.
ஆனால், மெய்ப்பொருளைத் தேடும்போது நமக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடவேண்டி வரும்.
இதற்கு 'அகத்தாய்வு' என்று பெயர். இது ஆழ்மனதில் நடைபெறும்.
இதன் காரணமாக நமது பண்பு நிலையில் நிறைய மாற்றங்கள் வரும்.
மெய்ப்பொருளைத் தேடுவதால் கிடைக்கும் பயன்களை பார்ப்பதற்கு முன், அதை எப்படி தேடுவது எனத் தெரிந்து கொள்வோம்.
ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக, முதலில் சாதாரண விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும்.
ஓரளவு 'விவேகம்' நன்கு வேலை செய்ய ஆரம்பித்தபின், ஆன்மீகத்தில் கவனம் செலுத்தலாம்.
நாம் பல விஷயங்களை படிக்கிறோம்; பார்க்கிறோம்; கேட்கிறோம். நமக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால், விடைகளைக் தேடுகிறோம்; அல்லது விபரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறோம்.
ஒருவேளை எந்தவொரு விடையும் நம்மை திருப்தி படுத்தவில்லை யென்றால், நமக்குள்ளே சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவு சரியோ, தவறோ நமது தேடல் முடிவடைந்துவிடும்.
ஒரு உதாரணம் ..
"சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் .."
இது குறளில் வரும் ஒரு பாடல்.
சிறப்பு ஈனும் என்று சொன்ன வள்ளுவர் செல்வம் ஈனும் என்று சொல்லாமல், "செல்வமும்" என்று ஏன் சொன்னார்? அந்த ம்-விகுதிக்கு என்ன அர்த்தம்? தேடினேன் .. விடை கிடைக்கவில்லை.
அதன்பின் எனக்குள்ளே சிந்தித்து ஒரு உண்மையைப் புரிந்து கொண்டேன். அது ...
'அறவழியில் நடந்தால், சிறப்பு வரும்; தகுதிக்கு ஏற்ப செல்வமும் வரும், ஆனால் அதனில் ஈர்ப்பு இருக்காது.'
சில நேரங்களில் நமக்கு ஏற்படும் சந்தேகத்தைத் பற்றி சிந்திப்போம். ஆனால் நமது தேடல் மேலும் தொடர முடியாதபடி நின்றுவிடும்.
ஒரு உதாரணம் ..
நமது பூமி ஒரு கிரகம். சந்திரன் பூமியின் துணைக்கோள்.
சந்திரனுக்கு புவியீர்ப்பு விசை பூமியைவிட குறைவாக இருக்கும் என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
எனக்குத் தெரியாது. தேடினேன்; விடை கிடைக்கவில்லை.
மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியாத நிலையில், நமது தேடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, அதை அப்படியே விட்டுவிட வேண்டும்."
மெய்ப்பொருள் அறிய முயற்சி செய்தால், நமக்கு என்ன பயன் கிடைக்கும் என பார்ப்போம்.
1. எண்ணுவது என்பது மனதில் நடைபெறுவது; சிந்தனை என்பது புத்தியினால் நடைபெறுவது.
ஒரு மனிதனிடம் புரிந்து கொள்ளும் திறமை அதிகரிக்க வேண்டுமானால், அவன் 'சிந்திக்க' கற்றுக்கொள்ள வேண்டும்.
2. மனிதன் செய்யும் தவறுகளுக்கு மூலகாரணமாக இருப்பது ஆழ்மனதிலிருந்து, உணர்வு மனதை வந்தடையும் தாக்கங்கள்தான்.
மெய்ப்பொருள் அறியும் முயற்சியில் ஈடுபடும்போது, அந்த தாக்கங்கள் இருக்காது.
3. இத்தகைய முயற்சிகளின் காரணமாக, மற்ற விஷயங்களிலும் 'ஒருமுக கவனத்தோடு'
(concentration) ஈடுபட முடியும்.
4. மெய்ப்பொருள் அறியும் முயற்சியை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், அது பழக்கமாக மாறி வெளியுலகில் நாட்டம் குறைந்து "அகத்தாய்வில்" ஈர்ப்பு அதிகரிக்கும்.
5. அவனிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் நலிவடையத் தொடங்கும்.
6. சாதாரண விஷயங்களைப் பற்றி சிந்தனை செய்த மனம், ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடும்.
7. நாளடைவில், மெய்ப்பொருளை அறிந்துகொள்ளும் பொருட்டு அவன் செய்யும் முயற்சிகள், அவனது பண்பு நிலையில் ஏற்றத்தை கொண்டுவரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
8. ஆரவாரமாக வெளியில் ஓடிய மனம், தனக்குள் ஒடுங்க ஆரம்பிக்கும்.
9. மனம் ஒடுங்க ஆரம்பித்தால், மனதில் இருந்த தேவையில்லாத ஆசைகள் விலக ஆரம்பிக்கும்.
10. மனம் ஒடுங்கி விட்டால், 'தாரணை', 'தியானம்' எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக கைகூடும்.
மெய்ப்பொருளைத் தேட வேண்டிய அவசியம் என்ன என்று பலருக்கும் தோன்றலாம்.
வாழ்க்கையில் பலரும் பலவித நோக்கங்களோடு வாழ்கிறோம்.
ஆனால், இறுதி நோக்கமாக இருக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, எப்பொழுதும் ஆழ்மனதில் "சாந்தம்" நிலவ வேண்டும்.
ஆழ்மனதில் 'சாந்தம்' குடிகொள்வதற்கு, இந்துமதம் நான்கு வழிகளைக் காட்டுகிறது.
பெரும்பாலான மனிதர்கள் அவற்றில் ஏதாவது ஒரு வழியில் பயணம் செய்கிறார்கள். (ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பயணம் செய்பவர்களும் உண்டு). ஆனாலும், சாந்தி மட்டும் வருவதில்லை! அது ஏன்?
'பக்தி' மார்க்கத்தில் "சரணாகதியை" சரியாக கடைப்பிடிக்காதவரையிலும்,
'கர்ம' மார்க்கத்தில் "பிரதிபலனை" எதிர்பாராமல் சேவை செய்யாத வரையிலும்,
'தியான' மார்க்கத்தில் "அஷ்டாங்க யோகத்தை" முழுமையாக செயல் படுத்தாத வரையிலும்,
'ஞான' மார்க்கத்தில் "அகத்தாய்வில்" ஈடுபடாத வரையிலும், மனதில் "சாந்தம்" குடிபுகாது.
சாந்தம் என்றால் என்னவென்று அறியாத மனதில், சஞ்சலங்கள் குடியேறுவதையும் தவிர்க்க முடியாது.
அப்படியானால் ஆழ்மனதில் "சாந்தம்" நிலவ நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒரே வழிதான் .. 'மெய்ப்பொருளை' அறிய முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு எந்தவித 'முன்முடிவும்' இன்றி
(Preconceived notion) விஷயங்களை அணுக வேண்டும்.
அத்துடன், விவேகத்துடன் கூடிய
அறிவும், ஆராய்ச்சி மனோபாவமும் (inquisitive mind) இருக்க வேண்டும்.
மெய்ப்பொருளைத் தேடுவது என்பது பிறரைத் தவறென்று நிரூபிப்பதற்காக அல்ல; நம்முடைய புரிதலைத் தெளிவுபடுத்துவதற்காக.
அந்தத் தேடல் தொடரும் வரை நமது புரிதல் ஆழமடையும்; புரிதல் ஆழமடையும் வரை மனிதனின் பண்பும் உயர்ந்து கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment