ஆன்மா
பதிவு 4
"சித்தம்" என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
வீட்டில் உள்ள ஒரு குழல் விளக்கை (Tube light) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருப்பது என்ன ?
குழல் விளக்கு கண்ணாடியால் ஆன ஒரு உருவம். விளக்கின் உள்ளே மெர்குரி நீராவியும், ஒரு வகையான வாயுவும் கலந்துள்ளன. மின் இணைப்பு கிடைத்ததும் மெர்குரி ஒளிர்கிறது. அதன் ஒளி அதனை மூடியுள்ள கண்ணாடித் தகடை ஊடுறுவி வெளியே வெளிச்சத்தைக் பாய்ச்சுகிறது.
ஜீவாத்மாவின் இருப்பும் இதைப் போன்றதே. கண்ணுக்குப் புலனாகாத ஒரு மாயத் திரையின் உள்ளே ஜீவாத்மா உள்ளது. அதைத்தான் நாம் "ஆத்மா" என்று அழைக்கிறோம்.
அதுதான் மனிதன் இயங்குவதற்கான சக்தியைக் கொடுக்கிறது. அதனில் இருந்து வெளிப்படும் ஒளியானது மனிதனை ஆட்கொண்டு அவனைப் பரவசப் படுத்தக் கூடியது. அதனால்தான்
மாணிக்கவாசகர் இவ்வாறு பாடுகிறார் ..
"..ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மய
தேனினைச் சொரிந்து.."
(.. என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து..)
(தொடரும்)
ஆன்மா
பதிவு 5
மாணிக்கவாசகர் "உள்ளொளி பெருக்கி" என்கிறார். உள்ளொளி பெருகும் இடம் ஆன்மாதான்.
ஆனாலும் நேரடியாகப் பொருள் கொள்ளக்கூடாது.
பிரபஞ்சம் முழுவதும் பரம்பொருளின் இறை சக்தி பரவி உள்ளது. அது நாத, விந்து .. அதாவது ஒலியும் ஒளியும் கலந்தது. அதன் ஒரு பகுதிதான் நம்முள் "ஆன்மாவாக" உள்ளது. அதைத்தான் நாம் ஜீவாத்மா என்றும் சொல்கிறோம்.
அது கண்ணுக்குப் புலப்படாத ஒளியால் நிரம்பப் பெற்றது. மேற்கொண்டு பெருக வேண்டிய அவசியமில்லை. ஆனால், மாணிக்கவாசகர் ஏன் "உள்ளொளி பெருக்கி" என்கிறார்?
ஆன்மாவின் ஒளி சித்தத்தின் மாயத் திரையைத் தாண்டி பெருக்கெடுத்து தன்னைப் பரவசப்படுத்த வேண்டும் என்கிறார். அதனை 'அழியாத ஆனந்தமயத் தேன்' என்கிறார்.
அப்படியானால், இந்தப் பாடலைப் பாடும் பொழுது 'உள்ளொளி' பெருக்கெடுத்து அவரை ஆட்கொள்ள வில்லையா? அல்லது, நம்மை மனதில் கொண்டு நமக்காக அந்த வேண்டுதலை வைத்தாரா?
எது எப்படியோ, 'ஆன்மாவின் உள்ளொளி' சித்தத்திற்கு வெளியே பெருக்கெடுத்து நம்மைப் பரவசப்படுத்த விடாமல் தடுப்பது எது?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 6
நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பலவிதமான அனுபவங்களையும் உள்வாங்கிக் கொள்ளும் பொழுது, அவை நமது சித்தத்தின் மீது பதிந்து விடுகின்றன. அவைகளை 'வினைப் பயன்கள்' என்றும் சொல்வார்கள்.
சித்தத்தின் மீது பதிவுகள் ஏற்படும் பொழுது, அதனை ஆழ்மனம் (sub-conscious mind) என்று கூறுகிறோம். அதை உணர்வற்ற மனம் (unconscious mind) என்றும் சொல்வதுண்டு.
அவை நல்வினைப் பயன்களாகவும் இருக்கலாம்; தீவினைப் பயன்களாகவும் இருக்கலாம். இந்த இருவினைப் பதிவுகளின் எண்ணிக்கை கூடக்கூட, நமது மனதில் எழும் 'அஹங்காரம்' அதிக அழுத்தம் பெற்று விடுகிறது.
அதன் காரணமாக சித்தத்தின் உள்ளிருந்து வரக்கூடிய ஒளியை நம்மால் உணர முடிவதில்லை.
நம்மிடம் உள்ள அஹங்காரம் நமக்குள் மமகாரத்தையும் ஊக்குவிக்கும். வடமொழியில் 'அஹம்' என்றால் 'நான்' என்று பொருள்படும், அவ்வாறே 'மம' என்றால் 'எனது' என்று பொருள்படும்.
இந்த "நான் மற்றும் எனது" என்ற இரண்டும் இருக்கும் வரை, சித்தத்தின் மேல் படிந்த பதிவுகள் விலகாது. அந்தப் பதிவுகள் விலகினால் மட்டுமே நம்மால் இறைசக்தி தரும் உள்ளொளியை உணர முடியும்.
அதனால்தான் வள்ளுவரும்
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" எனக் கூறுகிறார்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 7
ஆழ்மனப் பதிவுகளின் செயல்பாடு, மேகக் கூட்டத்தின் செயல்பாட்டைப் போன்றதுதான்.
மேகங்கள் ஒன்றுகூடி சூரியனை மறைத்தால் சூரியன் கண்ணுக்குத் தெரியாது; ஆனால், மேகங்கள் இல்லாத போது சூரியனின் வெளிச்சத்தைக் காண முடியும். மேகக் கூட்டத்தின் வீச்சும், அடர்த்தியும் அதிகமாக இருந்தால், சூரியன் இருப்பதையே நம்மால் உணர முடியாது.
அதேபோல், ஆழ்மனப் பதிவுகள் அதிகமாக, அதிகமாக நம்மால் சித்தத்தின் உள்ளொளியை நம்புவது கடினமாகி விடும்.
ஆழ்மனப் பதிவுகள் அதிகமாகும் பொழுது நமது "நான்" என்கிற எண்ணமும் வலுப்பெற்று விடும். கூடவே "என்னுடைய" என்பதில் உள்ள எண்ணிக்கையும், அவற்றின்பால் உள்ள பற்றும் (attachment) அதிகரித்து விடும். நம்மிடம் உள்ளொளி பற்றிய எந்த எண்ணமும் இருக்காது.
ஆன்மாவில் ததும்பும் உள்ளொளியை உணரவேண்டுமானால், "நான்" மற்றும் "என்னுடைய"
என்ற இரண்டும் நம்மை விட்டு விலக வேண்டும்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 8
ஆழ்மனதில் உள்ள பதிவுகளின் காரணமாக உருவாகும் "நான்" என்ற அஹங்காரம், அதைத் தொடர்ந்து ஏற்படும் "என்னுடைய" என்ற பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக களைவதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் நல்ல பலன்களைக் காண முடியும்.
"நான்" மற்றும் "என்னுடைய" என்கின்ற இரண்டும் நீங்கும் பொழுது, ஆன்மாவை உணர்ந்து கொள்வது எப்படி நடைபெறும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
ஆன்மாவை .. இறை சக்தியை மூன்று விதமாக உணர முடியும் என்பது எனது கருத்து. இது சான்றோர்கள் மற்றும் ஞானியர்களின் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கலாம். ஒரு சாதாரண மனிதனாக எனது கருத்தைச் சொல்கிறேன்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 9
எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்மையை மூன்று வழிகளில் அறிந்து கொள்ளலாம் என்கிறார் ரிஷி பதஞ்சலி. அவை ..
1. பிரத்தியட்சம்:- நேரடி அறிவு. புலன்களின் உதவியின்றி நேரடியாக அறிந்து கொள்வது.
2. அனுமானம்:- ஊக அறிவு. ஊகித்து அறிந்து கொள்வது.
3. ஆகமம்:- சான்றோர் வாய்மொழி மூலம் அறிந்து கொள்வது.
ஆன்மாவைப் பற்றியும் ஆன்ம ஒளி பற்றியும் சித்தர்களும், ஞானிகளும் நிறைய சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் மற்றும் ஞானிகளின் பாடல்களை சான்றோர்கள் விளக்கிச் சொல்வதைத் கேட்டு ஆன்மாவைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்ள விரும்பினால், அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டால் மட்டுமே நம்மால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். அதற்கான வழி என்ன என்று பார்ப்போம்.
அதற்கான முயற்சியில் வெற்றி பெரும் பொழுது, 'உள்ளார்ந்த மன அமைதி' (inner-peace) மற்றும் 'நிரந்தரமான ஆனந்தம்' (eternal bliss) ஆகிய இரண்டையும் ஊக அறிவால் உணர்ந்து கொள்ளலாம்.
இந்த இரண்டு உணர்வுகளும் ஏற்படும் இடம் ஆழ்மனம்தான். அங்கு முதலில் வருவது 'உள்ளார்ந்த மன அமைதி' என்றால் இறுதியில் வருவது 'நிரந்தரமான ஆனந்தம்'. இவை இரண்டிற்கும் இடையே வேறு சில நிகழ்வுகளும் நடக்கலாம். நாம் அதைப்பற்றி ஆராயப் போவதில்லை.
மூன்றாவதாக வருவது 'ஆன்ம ஒளி'. அது புலன்களின் உதவியின்றி நேரடியாக அறியக்கூடிய ஒன்று.
ஒரு மனிதனின் குண்டலினி சக்தி சகசிரதளத்தை அடைகிற பொழுது, கூடவே இறையருளும் இருந்தால், அந்தக் காட்சி காணக் கிடைக்கும்.
நாம் சாதாரண மனிதர்கள். எனவே முதலில் சொல்லப்பட்ட இரண்டு விஷயங்களைப் (புரிதல் மற்றும் புரிதலினால் வரும் ஊகம்) பற்றி சிறிது சிந்திப்போம்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 10
காலையில் பொழுது விடிந்தவுடன் வீட்டிற்குள் வெளிச்சம் பரவுவதைத் பார்க்கிறோம். சூரியன் அடிவானத்தில் இருந்து வெளியே வந்துவிட்டது; அதனின்று புறப்பட்ட ஒளி வீட்டிற்குள் வெளிச்சத்தைக் தருகிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.
மேகக் கூட்டங்கள் சூரியனை மறைத்திருந்தாலோ, வீட்டின் ஐன்னல் கதவுகள் சாத்தியிருந்தாலோ வீட்டிற்குள் வெளிச்சம் வராது என்பதும் நமக்குத் தெரியும்.
சூரியன், மேகக் கூட்டங்கள், ஜன்னல் எல்லாமே பொருட்கள். எல்லாமே நம்மால் காணக்கூடியவை. எனவே வீட்டிற்குள் வெளிச்சம் வருவதற்கான காரணம் நம்மால் புரியக் கூடியதுதான்.
ஆனால், ஆன்மா என்பது பொருளல்ல; எனவே அதிலிருந்து பரவும் சூட்சும ஒளியை உணரத்தான் முடியும்.
ஆன்மா ஒளியை தரிசிக்கும் நிகழ்வு நமது 'குண்டலினி' சக்தி 'சகசிரதளத்தை' அடையும் பொழுது நிகழக் கூடிய ஒன்று. அது இறையருள் இருந்தால் மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்வு.
நம்மைப் பொறுத்தவரை முதலில் சொன்ன இரண்டும்
.. உள்ளார்ந்த அமைதி (inner- peace), நிரந்தரமான ஆனந்தம் (eternal bliss) .. நமக்கு கைகூடினால் நமது வாழ்க்கை நல்ல முறையில் முற்றுப் பெற்றது என்பதை உணர்ந்து கொள்வோம்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 11
ஆன்மாவின் ஒளியை உணர்வதற்கு ஒவ்வொரு மார்க்கத்திலும் நாம் என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.
முதலில் 'தியான மார்க்கம்'.
தியான மார்க்கத்தை எட்டு அங்கங்களாகப் பிரித்துள்ளார்கள்.
இயமம், நியமம், ஆசனம், பிராணாயமம் ஆகியவற்றை ஒரு பகுதியாகவும், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை மற்றொரு பகுதியாகவும் பிரித்துள்ளார்கள்.
ப்ரத்யாஹாரம் என்பது இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பாலம் போன்றது.
தியானப் பயிற்சியில் ஈடுபடும் அனைவரும் 'மன அமைதி' பெறுகிறார்களா என்றால் அது சந்தேகம்தான். மன அமைதியே இல்லாதபோது 'நிரந்தரமான ஆனந்தத்தை' எப்போது உணர்வார்கள்?
இந்த இடர்பாடு பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் என எல்லாவற்றிலும் உண்டு. அவற்றின் காரணத்தை சிறிது ஆராய்வோம்.
இந்த இடர்பாடு ஏற்படுவதற்கான காரணம் எதுவென்று தெரிந்தால், அதைத் தீர்ப்பதற்கான விடையையும்
தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 12
இயமம், நியமம் இரண்டிலும் வாழ்வியல் அற நெறிகளை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் எனச் சொன்ன பதஞ்சலி முனிவர், அடுத்து ஆசனம், பிரணாயாமம் பற்றி எடுத்துரைக்கிறார்.
இந்த நான்கு அங்கங்களின் பயிற்சிகளும் உணர்வு மனதின் வெளியே புறவுலகில் நடைபெறக்கூடியவை.
இந்த நான்கு அங்கங்களையும் முறையாகப் பின்பற்றினால் உணர்வு மனம் அமைதியாகி விடும். அத்துடன் உணர்வு மனம் தன்னிச்சையாக முடிவு எடுக்காமல் புத்தியைக் கலந்தாலோசித்து செயல்படும் பக்குவத்தையும் அடைந்துவிடும்.
இதுவே போதுமானது என்ற மனநிலைக்கு மனிதன் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இது போதாது என்கிறார் ரிஷி பதஞ்சலி. மனிதன் அகவுலகில் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன என வலியுறுத்துகிறார்.
அதற்காக 'ப்ரத்யாஹாரம்' என்ற அங்கத்தைப் பற்றிச் சொல்லி, மனிதனை அகவுலகில் பிரவேசிக்கத் தூண்டுகிறார்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான சூத்திரத்தைக் குறிப்பிடுகிறார். அது ..
"தத்: க்ஷியதே ப்ரகாசாவரணம்"
(தொடரும்)
ஆன்மா
பதிவு 13
"தத்: க்ஷியதே ப்ரகாசாவரணம்"
(பின்பு ஒளியைத் தடுத்துள்ள மறைப்பை அகற்றுவது வருகிறது)
இந்த சூத்திரத்தில் 'அகவுலகில்' எதற்காகப் பிரவேசிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தைச் சொல்லுகிறார்.
தியானத்தில் ஈடுபடுபவர்கள் அவர் சொல்லும் காரணத்தின் முழு ஆழத்தையும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
இந்த சூத்திரத்தில் உள்ள மூன்று வார்த்தைகளைக் கொஞ்சம் ஆராய வேண்டும். அவை .."ஒளி, மறைப்பு, அகற்றுவது".
'ஒளி' என்பது ஆன்மாவின் ஒளியைக் குறிக்கிறது. "ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி" எனப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.
'மறைப்பு' .. உள்ளே இருக்கும் ஒளி சித்தத்தின் ஊடுருவி வெளியே வரும் பொழுது, நமக்கு நிரந்தரமான ஆனந்தம் கிட்டும்; ஆனால், அந்த ஒளியை வெளியே வரவிடாமல் தடுக்கும் 'மறைப்பு' எது? சித்தத்தின் மேல் படர்ந்திருக்கும் 'ஆழ்மனப் பதிவுகள்தான்' உள்ளொளியை வெளியே வரவிடாமல் தடுக்கின்றன.
'அகற்றுவது' .. தியானம் செய்வதின் முக்கிய நோக்கமே ஆழ்மனதில் படிந்துள்ளப் பதிவுகளை நீக்குவதுதான்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 14
சூரியன் தனது ஒளிக் கதிர்களை எல்லாத் திசைகளிலும் பரப்புகிறது. நாம் வீட்டிலுள்ள ஜன்னல்களை மூடி வைத்துவிட்டு, என் வீட்டிற்குள் வெளிச்சம் வரவில்லை என்றால் அதை சரியென்று சொல்ல முடியுமா? ஜன்னல்களைத் திறக்காதது நம் தவறுதானே!? ஜன்னல்களைத் திறந்தாலேப் போதும்; சூரிய ஒளியை "உள்ளே வா" என்று அழைக்க வேண்டியதில்லை.
ஆன்மா ஒளியும் 'மின்காந்த அலைகள்' போன்று சித்தத்தில் உள்ள மாயத்திரையை ஊடுருவி நமது உடல் முழுவதும் பரவி நமக்கு 'எல்லையற்றப் பரவசத்தை' ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால், அதற்குத் தடையாக இருப்பது நமது சித்தத்தின் மேல் படிந்துள்ள ஆழ்மனப் பதிவுகளே. நம்மால் ஏற்படுத்தப்பட்ட ஆழ்மனப் பதிவுகளே, நமக்குள் இருக்கும் உள்ளொளியை உணர விடாமல் தடுக்கும் மறைப்பாகச் செயல்படுகின்றன.
இந்த மறைப்பை நீக்குவதற்காக நாம் செய்யும் பயிற்சியே 'தியானம்' எனப்படும்.
ஆழ்மனப் பதிவுகள் என்று எதைச் சொல்கிறோம்? நாம் செய்யும் 'தியானம்' சித்தத்தில் படர்ந்துள்ள மறைப்பை அகற்றுகிறதா? இல்லையெனில் அதற்கானக் காரணங்கள் என்ன?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 15
ஒரு மனிதன் பிறக்கும் போது அவனது முற்பிறவி முடியும் தருவாயில் எஞ்சியிருந்த ஆழ்மனப் பதிவுகளுடனேயேப் பிறக்கிறான் எனச் சமய நூல்கள் சொல்கின்றன.
இந்தப் பிறவியில் ஆசையின் காரணமாக அவன் செயல்படும்போது, அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் மேலும் மேலும் ஆசைகளைத் தூண்டி விடுகின்றன. உணர்வு மனதில் உள்ள ஆசைகள் தீவிரமடையும்போது, அவை ஆழ்மனதில் புதிய பதிவுகளை ஏற்படுத்துகின்றன.
ஆழ்மனப் பதிவுகள் பெரும்பாலும் பாசம், பேராசை மற்றும் காமம் சம்பந்தப் பட்டதாகவே இருக்கும்.
இத்துடன் கூடவே, அவனது எதிர்பார்ப்பிற்கு மாறாக சம்பவங்கள் நடக்கும்போது ஆழ்மனதில் கோபம், வெறுப்பு, விரக்தி, பழியுணர்ச்சி போன்ற பல எதிர்மறை உணர்வுகளும் பதிவாகும்.
இந்த ஆழ்மனப் பதிவுகளைத்தான் 'ஆணவ மலம்' என்றும், வடமொழியில் 'வாசனா' என்றும் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்துதான் ஒரு மனிதனின் 'அஹங்காரம்' உருவெடுக்கிறது.
கூடிநிற்கும் மேகக் கூட்டங்கள் சூரியனின் ஒளியை மறைத்து நிற்பது போல், ஆழ்மனப் பதிவுகள் ஆன்மாவின் உள்ளொளியை நாம் உணர முடியாமல் ஒரு 'மறைப்பை' ஏற்படுத்தி விடுகின்றன.
நாம் 'தியானம்' செய்வதின் நோக்கம், ஆழ்மனப் பதிவுகள் ஏற்படுத்தும் 'மறைப்பை' அகற்றுவதாக இருக்க வேண்டும்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 16
நமக்கு தியானம் செய்வதற்கு பல விதமான நோக்கங்கள் இருக்கலாம். எந்த நோக்கமாக இருந்தாலும், ஆழ்மனப் பதிவுகள் குறையவில்லை என்றால் தியானம் செய்வதன் பயனை நாம் முழுமையாக அடையவில்லை என்பதுதான் உண்மை.
தாரணை, தியானம், சமாதி என்ற மூன்றினுள், 'சமாதி' கைகூடுவது நமது கையில் இல்லை; அது இறையருளைப் பொறுத்தது.
தியானம் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று என்றால், அதற்காக நாம் செய்யும் முயற்சிகளைத் தாரணை என்று சொல்லலாம்.
தாரணையில் நாம் நமது சிந்தனையை ஒரே ஓர் பொருளின் மீது நிலை நிறுத்த முயற்சிக்கிறோம். அதில் தேர்ச்சி பெற்றபின் அந்த ஒரு பொருளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவதைத் தியானம் என்று சொல்கிறோம்.
ஆனால், குறிப்பிட்டப் பொருளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் மனம் எங்கோ ஓடிவிடுகிறதே! அதற்கானக் காரணம் என்ன?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 17
நமது முன்னோர்கள் மனதை நுண்ணுடல் என்று சொல்கிறார்கள். உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல் படுவதால் உடலை பருவுடல் என்றும், மனதை நுண்ணுடல் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், மனம் உண்மையில் இரண்டு இடங்களில் செயல்படுகிறது.
மனம் உடலோடு இணைந்து புறவுலகில் செயல்படும் பொழுது, அதனை உணர்வு மனம் (conscious mind) என்று அழைக்கிறோம். அதே மனம் அகவுலகில் சித்தத்தின் மேல் பாசம், பேராசை எனப் பல வகைகளில் பரவி நிற்கும்போது அதனை உணர்வற்ற மனம்/ஆழ்மனம் (unconscious mind/ sub-conscious mind) என அழைக்கிறோம்.
மனதிற்கு அகம், புறம் என இரண்டு பகுதிகள் உண்டா என சந்தேகம் வரலாம். திருக்குறள் 786-ஐப் பாருங்கள். ..
"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" என்கிறார் வள்ளுவர்.
நெஞ்சம் என்றால் மனம். 'நெஞ்சத்து அகம்' என்று அவர் சொல்வதால், 'நெஞ்சத்து புறம்' என ஒன்று இருக்கும்தானே!?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 18
ஒரே பொருளின் மீது கவனத்தைக் குவிப்பதை "தாரணை" என்று சொல்கிறார்கள். அதன் நோக்கம் மற்றவற்றின் மீது நமக்கிருக்கும் ஈர்ப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
"தாரணை" மூலம் நமது முயற்சியில் வெற்றியடைந்ததும், நாம் "தியானப் பயிற்சி" செய்ய ஆரம்பிக்கிறோம். ஆனால், பலருக்கு அதில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போய் விடுகிறது என்பதும் உண்மைதானே!? அதற்கான காரணம் என்ன?
தியானம் அகவுலகில் நடைபெறுகிறது; ஆனால், நாம் கவனம் செலுத்தும் பொருள் புறவுலகில் இருக்கிறது என்ற நிலை இருந்தால் தியானம் தோல்வியில்தான் முடியும்.
தியானப் பயிற்சி வெற்றியடைய வேண்டுமென்றால் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன ..
1. நாம் தியானிக்கும் பொருள் புறவுலகில் இருந்தாலும், அதை அகவுலகில் மட்டும் காண வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மனம் குறிப்பிட்டப் பொருள் சார்ந்த புறவுலகிற்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. நாம் அகவுலகில் இருக்கும் உருவமற்ற ஒன்றில் கவனத்தைக் குவித்தது "தியானம்" செய்யலாம். ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம், அனாகதச் சக்கரம் என இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தி தியானம் செய்யலாம்.
ஆக்ஞா சக்கரம் புருவ மத்தியில் உள்ளது. ஆனால் நாம் அதனை உடலுக்கு வெளியே இருப்பதாக நினைக்கக் கூடாது. புருவ மத்தியின் உட்புறம் கவனத்தை செலுத்த வேண்டும்.
இந்த வழி நல்ல பலனைத் தரும்.
தியானம் நன்கு செயல்பட்டால், உள்ளொளி யின் பெருக்கத்தை உணர முடியும். அது என்னவென்று பின்னர் பார்ப்போம்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 19
தியானம் முறையாகச் செய்வது எப்படி என்று பார்த்தோம். இப்போது, ஞான மார்க்கத்தில் நமது பயிற்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
ஞான மார்க்கத்தில் வெற்றி அடைய, அதற்குத் தீவிரமான மற்றும் முழுமையான முயற்சி இருக்க வேண்டும்.
அத்துடன் சுயமாக ஆராய்ந்து பார்க்கும் தெளிவும் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவித முன்முடிவிற்கும் இடம் கொடுக்கக்கூடாது.
"கற்க கசடற.." என வள்ளுவர் கூறுகிறார். முதலில் எதனைக் கற்க வேண்டுமோ அதனை 'ஐயம் திரிபு அற' கற்க வேண்டும். கற்றலில் எந்தவித சந்தேகமும் இருக்கக்கூடாது. ஒரு உதாரணம் பார்த்து விடுவோம்.
"அந்தணர் என்போர் அறவோர்.." என வள்ளுவர் குறிப்பிடுகிறார். உடனே 'அந்தணர் மட்டுமே அறவழியில் நடப்பவர்கள்' எனப் பொருள் கொள்ளக்கூடாது. 'அறவழியில் நடப்பவர்கள் அனைவரும் அந்தணர்களே' எனப் பொருள் கொள்ள வேண்டும்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 20
நாம் கேட்டது, படித்தது எதுவாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள மெய்ப்பொருளை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகப் படிக்கக் கூடாது. ஒரு உதாரணம் ..
"சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும் .." -- சிறப்பு என்று சொன்ன வள்ளுவர், செல்வம் என்று சொல்லாமல் 'செல்வமும்' என்று ஏன் சொன்னார்?
அறவழியில் நடந்தால் சிறப்பு உன்னைத் தேடி வரும் என்கிறார் வள்ளுவர். நாம் 'அப்படியானால் செல்வம் வராதா' எனக் கேட்டால் செல்வமும் வரும் என்கிறார். இதன் பொருள் என்ன ? செல்வத்தை விட 'சிறப்பே' சிறந்தது என வலியுறுத்துகிறார் வள்ளுவர். இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் 'அறவழியில் நடந்தால் சிறப்பும் வரும், செல்வமும் வரும்' என நினைத்தால் அது தவறல்லவா?
இதையெல்லாம் சரியாகக் கடைப்பிடித்தபின், நாம் கவனம் செலுத்த வேண்டியது 'அகத்தாய்வு' (சுய பரிசோதனை).
(தொடரும்)
ஆன்மா
பதிவு 21
அகத்தாய்வில் முக்கிய பங்கு வகிப்பது 'சுய-பரிசோதனை'
(introspection).
சுய-பரிசோதனையில் நாம் எதிலெல்லாம் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறோம் எனக் கண்டு பிடிக்க வேண்டும்
(Detection).
நமக்கு மாலை வேளைகளில் கடைத்தெருவில் ஒரு மணி நேரம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பழக்கம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அது நமது ஆன்மிகப் பயணத்திற்கு எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை எனத் தெரிந்ததும் அந்தப் பழக்கத்தை விட்டுவிடத் தயங்கக் கூடாது (negation).
அந்தப் பழக்கத்தை விட்டு விடுவதோடு நமது கடமை முடிந்து விடாது; நாம் அந்த நேரத்தை நமது ஆன்மிக
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு உபயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
(Substitution).
(தொடரும்)
ஆன்மா
பதிவு 22
ஞானத்தைத் தேடும் பயணத்தில் நாம் மூன்று நிலைகளில் மாறி, மாறி பயணம் செய்ய வேண்டும்.
அவற்றை 'கேட்டல், சிந்தித்தல் மற்றும் தெளிதல்' எனச் சொல்வார்கள். இதனை வடமொழியில் "Sravana, Manana and Nididhyasana" என்று சொல்வார்கள்.
சைவத்தில் சரியை, கிரியை, யோகம் என மூன்று வழிகளில் நாம் செயல்பட வேண்டும் என்பார்கள். ஞான வேட்கையைப் பொறுத்தவரை 'கேட்டல்' என்பதை ஞானத்தில் சரியை
என்றும், 'சிந்தித்தல்' என்பதை ஞானத்தில் கிரியை என்றும், 'தெளிதல்' என்பதை ஞானத்தில் யோகம் என்றும் சொல்வார்கள்.
'கேட்டல்' என்று சொல்லும் பொழுது, அதில் 'பார்த்தல்' மற்றும் 'படித்தல்' என்பனவும் அடங்கும்.
ஆக, நாம் பல வழிகளில் ஞானம் பற்றிய நெறிமுறைகளை அறிந்திருப்போம். அறிந்தபின் அவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
அதில் சந்தேகம் எழுந்தால், தக்க சான்றோரைப் பார்த்து உரிய விளக்கங்களைக் கேட்டுப் பெறவேண்டும்.
அதன்பின் நாம் அறிந்து கொண்ட உண்மைகளை எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை 'தெளிதல்' என்று சொல்கிறார்கள்.
திருமூலர் இன்னும் ஒரு படி மேலே போய் 'தெள்ளத் தெளிதல்' வேண்டும் என்பார்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 23
ஞானம் என்றால் என்ன என்று முதல் முறையாகத் தெரிந்ததும், நாம் கற்றவற்றை மீண்டும் மீண்டும் அசைபோட வேண்டும். அந்த சமயங்களில் நமக்கு நிறைய சந்தேகங்கள் வரலாம்.
அவற்றைப் பற்றி ஆழமாக சிந்தித்து, நமக்குள்ளேயே விடையைத் தேட வேண்டும்.
இந்தப் பழக்கம் நமக்கு நல்ல பலனைத் தரும்.
நமக்குள்ளேயே விடையைத் தேடுவதால் மனம் புறவுலகில் சஞ்சரிப்பது குறையும். ஆழ்மனதில் இருந்து நமது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் தேவையற்றப் பதிவுகள் நலிவடையத் துவங்கும்.
நமது சந்தேகங்களுக்கு உடனே விடை
விட்டால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். வேறொரு நாள் விடை தானாகத் தோன்றும்.
நமக்குள்ளேயே சிந்தித்து விடை தேடுவதை, ரிஷி பதஞ்சலி 'சவிசாரம்' எனக் கூறுகிறார்.
'சுயமாக சிந்திக்கும்' பழக்கம் இருந்தால் மட்டுமே, உள்ளத்தில் ஞானம் பற்றிய
'தெளிவு' பிறக்கும்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 24
ஞான மார்க்கத்தில் பயணம் செய்வது எனத் தீர்மானித்து விட்டால், நாம் மேற்கொண்டிருக்கும் கருத்துதான் சரியென எண்ணக்கூடாது.
நாம் வைத்திருக்கும் கருத்துக்கு மாற்றாக ஒரு கருத்து இருப்பது தெரிந்தால், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதனைப் புறந்தள்ளக் கூடாது.
ஆராய்ந்து பார்த்தபின் அந்தக் கருத்து சரியெனத் தோன்றினால், அதனை ஏற்றுக் கொள்ளத் தயங்கக் கூடாது.
பிறரது கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் நமக்குப் பிடிக்கவில்லை என்றால், நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம்; ஆனால், அவற்றை பொய் என்று சொல்லக்கூடாது.
எந்தவிதக் கருத்தாக இருந்தாலும், அது தவறெனத் தோன்றினால் மாறுபட்ட கோணங்களில் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஞான மார்க்கத்தில் பயணிக்கும்போது, எல்லைக் கோட்டை எப்போது அடைவோம் என்ற எண்ணம் வரவே கூடாது. அது நமது முயற்சியில் தளர்வை உண்டாக்கி விடும்.
அடுத்து 'கர்ம மார்க்கம்' பற்றி பார்ப்போம்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 25
'கர்ம மார்க்கம்' என்றால் என்ன? 'பலனை எதிர்பார்க்காமல், நமது கடமைகளை நிறைவேற்றுவதுதான் கர்ம மார்க்கம்' என பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.
இதில் மூன்று கருத்துக்கள் உள்ளடங்கி உள்ளன:-
1. கர்மாவைச் செய், அதனால் ஏற்படப் போகும் விளைவு (result) இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்காதே எனப் பொருள் கொள்ளலாம்.
2. கர்மாவைச் செய், அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என எதிர்பார்க்காதே எனவும் பொருள் கொள்ளலாம்.
3. கர்மாவைச் செய் என்பது நிகழ்காலத்தைக் குறிக்கிறது; எதிர்பார்க்காதே என்பது எதிர் காலத்தைக் குறிக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என சிந்திக்க ஆரம்பித்தால், மனம் பலவற்றையும் நினைக்கக் கூடும். அதனால் நாம் செய்ய வேண்டிய வேலையில் முழு கவனத்தோடு ஈடுபட முடியாது. அதனால்தான் கடமையில் மட்டும் கவனம் செலுத்து என்கிறார்.
(Be present, in the 'present').
பலர் 'கர்ம மார்க்கம்' என்பது, பொது வாழ்க்கையில் ஈடு படுபவர்களுக்குத்தான் பொருந்தும் என்கிறார்கள். அது சரிதானா?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 26
பலர் 'கர்ம மார்க்கம்' என்பது, பொது வாழ்க்கையில் ஈடு படுபவர்களுக்குத்தான் பொருந்தும் என்கிறார்கள்.
பொது வாழ்க்கையில் இருந்து விலகி, இல்லற வாழ்வில் இருப்பவர்களும்
'கர்ம மார்க்கத்தை' கடைப்பிடிக்க முடியும் என்று நான் நினைப்பதுண்டு.
குடும்பத்தில் எந்த செயல் செய்தாலும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்தால், அதுவும் கர்ம மார்க்கம்தான்.
யாருக்காவது உதவி செய்கிறோம். அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து நன்றியையோ, விசுவாசத்தையோ எதிர்பார்க்காமல் இருந்தால் அது கர்ம மார்க்கத்தான்.
அவ்வளவு ஏன்? பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம்; நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்றால் நமக்கு பெருமைதானே என்றெல்லாம் நினைக்காமல், எங்களுக்குப் பிறந்த பிள்ளைகள், முடிந்த அளவிற்குப் படிக்க வைக்க வேண்டியது எங்களின் கடமை என்ற அளவோடு நிறுத்திக் கொண்டால், அதுவும் கர்ம மார்க்கந்தான்.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் இவ்வாறு பாடுகிறார் ..
".. தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே".
இறைவனைப் பார்த்து ..
"உனது கடன் என்னைப் பார்த்துக் கொள்வது; என் கடன் எப்போதும் பணிசெய்வது. பணி செய்த பின் அதற்கு என்று கூலி எதுவும் எதிர் பார்க்காமல் சும்மா கிடப்பது. அதுதான் அடியவர்களின் வேலை" என்கிறார்.
எந்தப் பணி செய்தாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய முடிந்தால், நாமும் "கர்ம மார்க்கத்தில்" இருக்கிறோம் என எடுத்துக் கொள்ளலாம்.
'பக்தி மார்க்கம்' கடைப்பிடிக்க மிகவும் எளிதானது. ஆனால், இறைவனிடம் 'சரணாகதி' அடையும் பக்குவம் இருந்தால் மட்டுமே அது பலன் தரும்.
'சரணாகதி' எப்படி இருக்க வேண்டும்? மாணிக்கவாசகர் சொல்கிறார் ...
"வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!
.... .... .... .... ....
.... .... .... .... ....
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?"
நமக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்துவிட்டு அதற்கானப் பலன்களை இறைவனது பொறுப்பில் விட்டு விட்டால், அதுவே 'சரணாகதி' எனக் கொள்ளலாம்.
இந்த மார்க்கங்கள் தவிர, மனம் பக்குவம் அடைவதற்கு அதாவது மனம் அமைதியை அடைவதற்கு வேறு பல வழிகளும் உள்ளன. நமக்குப் பொருத்தமான வழியைக் கண்டுபிடித்து, அதை முறையாகக் கடைப்பிடித்தாலும் மனதை பக்குவம் அடையச் செய்யலாம்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 27
ஆன்மாவைப் நேரில் பார்க்க முடியாது; ஏனெனில் அதற்கென்று உருவம் எதுவும் கிடையாது. அது ஒளியால் நிரம்பப் பெற்றது. அதை தரிசனம் செய்த மகான்கள் பலருண்டு.
நாம் சாதாரண மனிதர்கள்; நாம் அதை உணர்வது எப்படி என்பதைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்வோம்.
உணர்வது என்றால் ஐம்புலன் கருவிகளின் துணைகொண்டு உணர்வது என எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஊகத்தின் மூலம் அறிந்து கொள்வது.
முதலாவதாக நமக்கு அதைப் பற்றிய புரிதல் வேண்டும். பின் உண்மைத் தன்மையை எளிதாக ஊகித்து அறிந்து கொள்ளலாம்.
ஓஷோ சொன்ன முல்லாவின் கதை - -
நண்பர் ஒருவர் முல்லாவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்பொழுது முல்லா அவரது பையனுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். நண்பரை வரவேற்ற முல்லா 'பையனுடன் பேசிக்கொண்டிருங்கள், தேநீர் போட்டு கொண்டு வருகிறேன்' என்றார். நண்பர் 'இவனுடைய அம்மா இல்லையா' எனக் கேட்டதற்கு 'அவள் சமையலில் மும்முரமாக இருக்கிறாள்; நானே தேநீர் போட்டு கொண்டு வருகிறேன்' என்றார்.
அவர் சமையலறைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில், சமையலறையில் ஏதோ கீழே விழுந்தது நொறுங்கிய சத்தம் கேட்டது. நண்பர் பதறிப் போனார்.
முல்லாவின் மகன் 'ஒன்றுமில்லை, அம்மா எதையோ கைதவறிக் கீழே போட்டுவிட்டாள்' என்றான்.
நண்பருக்கு ஒரே ஆச்சரியம். 'எப்படி அம்மா என்று சொல்கிறாய்' என நண்பர் கேட்க, 'அப்பா கீழே போட்டிருந்தால், இந்நேரம் அம்மா அப்பாவை திட்டியிருப்பாளே' என சர்வ சாதாரணமாகக் கூறினான்.
அவனுக்கு இதைப்போல பல சம்பவங்களைப் பார்த்ததால் ஒரு புரிதல் இருந்தது; அதனால் எளிதாக உண்மைத் தன்மையை உணர முடிந்தது.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 28
முல்லாவின் பையனைப் பொறுத்தவரை புரிந்து கொள்வதற்கான அனுபவங்களும், ஊகிப்பதற்கான நிகழ்வும் புறவுலகில் நடந்தன.
ஆனால், நமக்கோ புரிதல், ஊகம் எல்லாமே அகவுலகம் சார்ந்தவை. எனவே புரிதல் பற்றிய விபரங்களை சான்றோர் சொல்வதைத் கேட்டு அதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதில் பிரச்சினை என்னவென்றால் சான்றோர் சொல்வதை நாம் தவறாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு.
ஒரு சீடன் தன் குருவிடம் 'எனக்கு எப்போது மன அமைதி கிடைக்கும்' எனக் கேட்டான். குரு அவனிடம் 'நான் இருக்கும் வரை உனக்கு மன அமைதி கிடைக்காது' என்றார். சீடன் 'குருவே, நீங்கள் இருப்பதற்கும் எனது மன அமைதிக்கும் என்ன சம்பந்தம்' எனக் கேட்க, குருவோ சிரித்துக் கொண்டே 'உன்னிடத்தில் "நான்" என்ற அஹங்காரம் இருக்கும்வரை மன அமைதி கிட்டாது' என்றார்.
பத்திரகிரியார் இவ்வாறு பாடுகிறார்: ".. மாண்டு விடும் முன்னே 'நான்' மாண்டிருப்ப தெக்காலம்?".
இனி உணர்தல் எப்படி நடைபெறுகிறது என்று பார்ப்போம்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 29
'அஹங்காரம்' என்ற வார்த்தை ஒரு மனிதனின் தன்முனைப்பைக் குறிப்பது. அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
முதலாவதாக 'தன்முனைப்பு' இருப்பதையே அறியாத நிலை (Non-recogonition of ego). இந்த நிலை மனிதர்கள் சுயமாக சிந்தித்துப் செயல்பட மாட்டார்கள். யாராவது உசுப்பி விட்டால் ஆவேசமாகச் செயலில் இறங்குவார்கள். தவறான மனிதர்களின் கைப்பாவையாக மாறும்போது, இவர்களால் சமூகத்திற்கு கெடுதல்தான் நடக்கும்.
இரண்டாவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு உத்வேகத்துடன் இருக்கும் (inflated ego). அதன் காரணமாக செயல் புரிவதில் தீவிரமான ஆர்வம் காட்டுவார்கள். செயல் புரிந்து எதிர்பார்த்த விளைவும் கிடைத்துவிட்டால், தன்முனைப்பு நிறைந்த மனிதன், கர்வம் கொண்ட மனிதனாக மாறிவிடும் ஆபத்தும் உண்டு.
மூன்றாவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு குறைந்து காணப்படும் (sublimated ego). எனவே இவர்களிடம் செயலூக்கம் எதுவும் இருக்காது.
நான்காவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு எதுவும் இருக்காது. இவர்களின் குண்டலினி சக்தி சகசிரதளத்தின் வாசலில் இறையருளை நாடி நிற்கும். இந்த நிலை மனிதர்களுக்கே உள்ளொளியைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 30
முன்னர் சொன்ன நான்கு மார்க்கங்கள் வழியாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியாகவோ முறையாக, முழுமூச்சுடன் பயிற்சி செய்து வந்தால் சில வாழ்வியல் உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
'முழுமூச்சுடன்' என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? வடமொழியில் இதனை "முமுக்ஷு" (mumukshu) என்று சொல்வார்கள்.
இதைப் பற்றி விளக்கம் கேட்டபோது, ராமகிருஷ்ண பரமஹம்சர் இவ்வாறு விளக்குகிறார் --"உன் தலையைப் பிடித்துக் தண்ணீருக்குள் அமுக்கினால், தண்ணீருக்குள் இருந்து வெளியே வர எப்படிப் போராடுவாய்? அதைப் போன்றதுதான் 'முமுக்ஷு' என்பதும்".
முயற்சி, முறையானப் பயிற்சி மற்றும் வாழ்வியல் உண்மைகளை அறிய வேண்டும் என்ற தவிப்பு அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றால் வெற்றி நிச்சயம்.
(To know the 'Truth', be true to know)
(தொடரும்)
ஆன்மா
பதிவு 31
முன்னர் குறிப்பிட்ட நான்கு வகை மனிதர்களில், வாழ்வியல் உண்மைகளைப் புரிய வேண்டியவர்கள் இரண்டாவது வகை மனிதர்களே!
'தன்முனைப்பு' இருப்பதையே அறிந்து கொள்ள முடியாத முதல் நிலை மனிதர்களால், வாழ்வியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள இயலாது.
மூன்றாவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு குறைந்து காணப்படும். எனவே அவர்களுககு வாழ்வியல் உண்மைகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.
நாலாவது வகை மனிதர்கள் தன்முனைப்பிலிருந்து முழுமையாக விடுபட்டவர்கள். அவர்கள் வாழ்வியல் உண்மைகள் அனைத்தையும் அறிந்து, வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் போன்ற இரட்டைகளைக் கடந்தவர்கள்.
ஆக, வாழ்வியல் உண்மைகளை அறிய வேண்டியவர்கள் தன்முனைப்பு நிரம்பப் பெற்ற இரண்டாவது வகை மனிதர்கள் மட்டுமே!
ஆனால், இவர்களிலும் மூன்று பிரிவுகள் உண்டு!?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 32
தன்முனைப்பு நிரம்பப் பெற்ற மனிதர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
ஒரு பிரிவினர் பொது
நலத்தில் நாட்டமுள்ளவர்கள். பிறருக்காகத் தன்னை வருத்திக் கொள்ளவும் தயங்காதவர்கள். பொது வாழ்க்கையில் நிறைய இன்னல்களைச் சந்திப்பவர்கள். அதன் காரணமாக சுய சிந்தனையில் ஈடுபடும் எண்ணம் அடிக்கடித் தோன்றும். அதுவே அவர்களுக்கு வாழ்வியல் உண்மைகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
மற்றுமொரு பிரிவினர் 'தான் உண்டு, தன் குடும்பம் உண்டு' என வாழ்பவர்கள் (Self-centred). யாருக்கும் தீங்கிழைக்க விரும்ப மாட்டார்கள். தங்களது உழைப்பை மட்டும் நம்பி வாழ்பவர்கள். "போதும்" (contentment) என்ற நிலை வரும்போது அகத்தாய்வில் ஈடுபட்டால் வாழ்வியல் உண்மைகளை அறிந்து கொள்வார்கள்.
மூன்றாவது பிரிவு மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள் (Selfish). இவர்களிடம் ஆசை அதிகமிருக்கும். அதன் காரணமாக தவறான வழிகளிலும் பணம் சேர்ப்பதில் குறியாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வியல் உண்மைகளை அறிந்து கொள்ள நேரமும் இருக்காது; அதைப் பற்றிய ஆர்வமும் இருக்காது.
இனி நாம் அறிந்து கொள்ளவிருக்கும் வாழ்வியல் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 33
அகத்தாய்வில் ஈடுபடும் மனிதனுக்கு 'பகுத்து, ஆராய்ந்து' அறியும் தகுதி இருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் தகுதியுடைய சான்றோரைத் தன்னுடைய வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
(தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை)
.. குறள் 444.
அகத்தாய்வில் ஈடுபடும்போது பல வாழ்வியல் உண்மைகள் நமக்குத் தெரியவரும்.
அவை - -
1. எதை எதையோ அறிந்து கொண்ட நான், "நான் யார்" என்று அறியாமலேயே வாழ்ந்து வருகிறேனே! 'எவ்வளவு பெரிய முட்டாள் நான்' என்று நினைக்கத் தோன்றும்.
(Knowledge is to know one's own ignorance ..
Dr. Radhakrishnan)
2. யோசித்துப் பார்த்தால், இறைசக்திக்கு முன்னால் 'தான்' ஒன்றுமே இல்லையெனத் தோன்றும்.
(I am nothing before the almighty)
3. 'நான்' என்பது இந்த உடல் அல்ல என்பது புரியும்.
(I am not the body)
4. என்னுள் இருக்கும் ஆன்மாவே உண்மையான "நான்" என்பது புரியவரும்.
(I am not the body with a soul;
I am the soul in a body)
5. நான் கர்த்தா (Doer) அல்ல; "அவனால்" இயக்கப் படும் கருவி (Tool) மட்டுமே என உணர்ந்து கொள்வோம்.
(என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை
- இனித்தெய்வமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன்) .. பட்டினத்தார்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 34
வாழ்க்கையில் "அகத்தாய்வு" எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். "உள்ளொளி" நமக்குள் பரவி பரவசத்தை ஏற்படுத்துவதை நாம் உணர்வதற்கு இதுவே ஆரம்பப் புள்ளி.
அகத்தாய்வில் நாம் சுயபரிசோதனை செய்கிறோம்; ஆனால், எந்தவித தெளிவான முடிவிற்கும் வரமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை.
அகத்தாய்வு செய்வது முதலில் கடினமாகத் தோன்றினாலும், தொடர்ந்து செய்து வந்தால் அது பழக்கமாகி விடும். அதன்பின் நாம் சும்மா இருக்கும் வேளைகளிலும் நம்மை அறியாமலே அகத்தாய்வில் ஈடுபடுவதைக் காணலாம்.
அகத்தாய்வில் நாம் அகவுலகில் இருப்பதால், அந்த நேரத்தில் புறவுலகில் சஞ்சரிப்பது நின்று விடுகிறது.
"நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது"
.. குறள் 124.
இந்தக் குறள் "இல்லறவியலில்" வருகிறது.
இது அகத்தாய்வில் ஈடுபடுபவர்களுக்கு எப்படிப் பொருந்தும் எனப் பார்ப்போம்.
அகத்தாய்வில் ஈடுபடும் நேரங்களில் நாம் "நிலையில் திரியாது".. அதாவது புலன்வழியே புறவுலகிற்குச் செல்லாது .. அகவுலகில் நின்று விடுகிறோம். இது தொடர்ந்தாலே, மனம் புலன்களின் பிணைப்பிலிருந்து விடுபட்டு உள்ளுக்குள் ஒடுங்கி, அடங்க ஆரம்பித்துவிடும். மனம் அடங்க, அடங்க நாமும்
பற்றிலிருந்து விடுபட்டு விடுவோம்.
நம்மை அறியாமலே நடக்கும் நிகழ்வு இது.
(தினந்தோறும் எல்லாரையும், எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறோம்; நம்மைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமே!?)
(தொடரும்)
ஆன்மா
பதிவு 35
ஞான மார்க்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியது 'அகத்தாய்வு' என்றால், கர்ம மார்க்கத்தில் 'பலனை எதிர்பாராது செயல் படுதல்', பக்தி மார்க்கத்தில் 'சரணாகதி', மற்றும் தியான மார்க்கத்தில் 'ஒருமுக கவனம்'; இவற்றில்
தீவிரமாக ஈடுபடும்போது நமக்குள் நிறைய மாற்றங்கள் நிகழத் தொடங்கும்.
"எண்ணி எண்ணி எண்ணமற" .. இதன் அர்த்தம் என்ன?
அகத்தாய்வில் 'சுயசிந்தனை' முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சுயசிந்தனையில் நாம் அறிந்து கொண்ட வாழ்வியல் உண்மைகளைத் திரும்பத்திரும்ப அசைபோட வேண்டும். அதன் காரணமாக நமது தன்முனைப்பின் தீவிரம் குறையத் தொடங்கும். அதன்பின் செயல் புரிவதில் உள்ள ஊக்கமும் குறைந்து விடும்.
தன்முனைப்பின் தீவிரம் குறையக் குறைய, நம்மிடம் உள்ள தேவையற்ற எண்ணங்களும் ஆழ்மனதிலிருந்து மறைந்து விடும்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 36
ஆராய்ந்து பகுத்து அறிவதை 'விவேகம்' என்றும், பற்றற்ற தன்மையை 'வைராக்யம்' என்றும் வடமொழியில் கூறுவார்கள்.
விவேகம் மற்றும் வைராக்யம்
இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்பு உண்டு.
விவேகத்தின் துணை கொண்டு சுயசிந்தனையில் முன்னேற்றம் காணும்போது, நமக்குள் பற்றற்ற தன்மை வளரும். பற்றற்ற தன்மை கூடக்கூட விவேகமும் கூர்மை அடையும்.
பற்றற்ற நிலையில் உறவுகளிடம் இருந்த பாசம் நீங்கி, அன்பு மட்டுமே இருக்கும்.
பொருட்களைப் பொறுத்த வரை, அவை நமக்குச் சொந்தமானதாக இருக்கலாம்; ஆனால், அந்தப் பொருட்களின் மீது இருந்த "உடைமைத்தன்மை" என்ற உணர்வு நீங்கிவிடும்.
பாசமும், உடைமைத் தன்மையும் நீங்கிய நிலையில், "உள்ளொளி" சித்தத்தின் வெளியே பரவத் தொடங்கும். இதன் காரணமாக நமது மனோபாவத்திலும், செயலிலும் பல மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 37
"வாழ்வை நினைந்தபின்
தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ -
நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கு எண்ண
தான் இழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ -
நன்னெஞ்சே"
.. பாரதியார்
நாம் நமது பயிற்சிகளில் வெற்றிகண்டால், நமது ஆழ்மனதில் இருந்த எதிர்மறை உணர்ச்சிகள் கரைந்து போய்விடும்.
உறவுகளிடம் இருந்த பாசத்திலிருந்து விடுபடுவோம்; உறவுகள் மட்டும் நினைவலைகளாகத் தங்கியிருக்கும்.
நமக்குச் சொந்தமான பொருட்களின் மேலிருந்த உடைமைத்தன்மையும் மறைந்து போய்விடும்.
ஆழ்மனதில் காமம் மட்டும் மிஞ்சியிருக்கும். காமம் என்றால் ஆண்-பெண் உறவைக் குறிப்பது எனப் பொருள் கொள்ளக்கூடாது. அது 'இச்சை' .. அதாவது நாம் விரும்புகின்ற ஒன்றை, நம்மிடம் இல்லாத ஒன்றை அடைய முடியவில்லையே என்ற கவலை; நாம் செய்ய விரும்பியதை செய்ய முடியவில்லையே என்ற கவலை. பொதுவாக இந்த காம உணர்வுதான் கடைசியாக வெளியேற வேண்டிய ஒன்றாக இருக்கும்.
இருந்தாலும் சித்தத்தை மறைத்திருந்தப் பெரும்பாலான அழுக்குகள் மறைந்து விட்ட காரணங்களினால், "உள்ளொளி" நம்முள் பரவி நம்மிடம் பல மாற்றங்களை ஏற்படுத்துவதை நம்மால் உணர முடியும்.
நமக்கு யாராவது தீங்கு இழைத்தால், அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நினைக்காவிட்டாலும் மனதில் ஒரு வெறுப்புணர்வு தங்கியிருக்கும்.
இப்போதோ அது மறைந்து, தேவை ஏற்பட்டால் நமக்குத் தீங்கு இழைத்தவனுக்குக் கூட உதவி செய்யத் தயங்க மாட்டோம்.
"இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு"
.. குறள் 987
(தொடரும்)
ஆன்மா
பதிவு 38
பொதுவாக எல்லா மனிதர்களிடமும் 'சத்துவ குணம்', 'இரஜோ குணம்' மற்றும் 'தமோ குணம்' மூன்றும் கலந்தே இருக்கும்.
'இரஜோ குணம்' அதிக விகிதத்தில் இருந்தால், அந்த மனிதனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) தீவிரமாக இருக்கும். தன்முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் அடைந்தால், அவன் அதை நினைத்து பெருமையும் கொள்வான். சிறிது கவனக் குறைவு இருந்தாலும், அதுவே அவனை கர்வம் மிக்க மனிதனாக மாற்றிவிடும் அபாயமும் உண்டு.
கர்வம் கொண்ட மனிதன், பின்னர் பிறர் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பானா என்பது சந்தேகமே.
அர்ஜுனன் கிருஷ்ணனிடம் "பாபம் என்று தெரிந்தும் மனிதன் ஏன் தவறான செயல்களில் ஈடுபடுகிறான்" என வினவுகிறான். அதற்கு கிருஷ்ணன் "ஆசைதான்" என்கிறார். ஆசைக்குக் காரணம் இரஜோ குணத்தின் காரணமாக உத்வேகம் பெறும் அஹங்காரம் எனவும் கூறுகிறார்.
அதே மனிதன் வாழ்வியல் உண்மைகளை அறிந்து கொண்டபின், அவனது
"உள்ளொளி" சித்தத்தின் வெளியேப் பரவத் தொடங்குகிறது. இரஜோ குணத்தின் விகிதம் குறைந்து, சத்துவ குணத்தின் விகிதம் அதிகரித்து விடும்.
செயல் புரிவதில் தீவிரமாக இருந்தவன் (Active) செயல் புரிவதில் ஆர்வம் இல்லாதவனாக (un-active)
மாறிவிடுவான்.
தன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்தவன்
மனதளவில் ஒடுங்கி விடுகிறான். பெருமை அடைவதில் கூச்சம்,
தன்னை முன்னிலைப் படுத்துவதில் நாணம் போன்றவை அவனில் தோன்ற ஆரம்பித்து விடும்.
இத்தகைய நாணம் சான்றோர்க்கு அணிகலன் என்கிறார் வள்ளுவர் ...
"அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை"
.. குறள் 1014
அவனது நடவடிக்கைகளில் 'பணிவு' (humility) காணப்படும். எல்லாத் தகுதியும் இருந்தும், "நாயினும் கடையேன்" என்று மாணிக்கவாசகர் சொன்னது இந்தப் பணிவின் காரணமாகத்தான்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 39
ஒரு அன்பர் 'ஒடுங்குதல்' பற்றி சில சந்தேகங்களைக் கேட்டார்.
புறவுலகிலிருந்து கவனத்தை அகவுலகிற்குத் திருப்புவதைத்தான் 'ஒடுங்குதல்' என்கிறோம். இதனை வடமொழியில்
'பிரத்தியாஹாரம்' என்பார்கள். 'ஒடுங்குதல்' என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரி நிகழ்வதில்லை.
சிலர் இயல்பாகவே 'ஒடுங்குதல்' மனப்பான்மையுடன் பிறப்பார்கள். (உதாரணம் .. திரு. J. Krishnamurti; சுருக்கமாக J.K. என்பார்கள்)
சிலர் விரும்பி இளம் வயதிலேயே 'ஒடுங்குதலை' முன்னெடுப்பார்கள். (உதாரணம் .. பகவான் ரமண மஹரிஷி))
சிலர் பக்தி மார்க்கத்தில் இருந்து பின் 'ஒடுங்குதல்' நிலைக்கு வந்து விடுகிறார்கள். (உதாரணம் .. வள்ளலார்)
சிலரைப் பொறுத்தவரை அவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியான சம்பவம், அவர்களின் மனதை ஒடுங்கச் செய்து விடுகிறது. (உதாரணம் .. பட்டினத்தார்)
நாமோ சாதாரண மனிதர்கள். நமக்குள்ளும் ..
ஞான மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு 'ஒடுங்குதல்' இயல்பான ஒன்றாக இருக்கும்.
கர்ம மார்க்கத்தில் உள்ள மனிதர்களுக்கு ஏற்படும் அனுபவங்களே, அவர்களை 'ஒடுங்குதல்' நிலைக்குத் தள்ளிவிடும்.
தியான மார்க்கத்தில் இறங்குகிறவர்கள் 'ஒடுங்குதலை' வலிய ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் 'மனம் ஒடுங்குவதால்' ஏற்படும் நன்மைகளைப் புரிந்து கொண்டு அதில் ஈடுபாடு காட்டினால் தான் உண்டு.
ஒரு மனிதன் ஆன்மிகத்தில் 'விழிப்புணர்வு' பெற வேண்டுமானால், 'ஒடுங்குதல்தான்' ஆரம்ப புள்ளி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 40
ஒரு மனிதன் அகத்தாய்வின் போது 'சுயசிந்தனையில்' ஈடுபடுவதற்கு, தனிமையில் இருப்பது மிகவும் அவசியம்.
புறவுலகில் சுயசிந்தனையில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களை/மற்றவற்றை சார்ந்தே இருக்கவேண்டி வரும். அகவுலகிலோ தனிமையில் இருப்பது கட்டாயம். இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனிமையில் இருப்பது (aloneness); தனியாக இருப்பது (loneliness) .. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தனியாக இருப்பதாக உணர்பவன் எதையாவதை நினைத்து வருத்தத்தில் இருப்பான் அல்லது புலம்பிக் கொண்டிருப்பான். ஆனால், தனிமை என்பது நாம் விரும்பி ஏற்பது. தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ள தெரியாதவனால் சுயசிந்தனையில் ஈடுபட முடியாது.
(Be independent while being inter-dependent in order to become indifferent)
அகவுலகில் நுழைய விரும்புகிறவன் குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும் சுயசிந்தனை செய்வதற்காகத் தன்னைத் தனிமைப் படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் 'தனிமைப் படுத்துவது' என்பது ஒரு கஷ்டமான செயலாக இருக்கக் கூடும். தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அது பழக்கத்திற்கு வந்துவிட்டால் பின் அது நமது இயல்பாக மாறிவிடும். அதன்பின் ஆரவாரமான செயல்கள், கூட்டங்கள் போன்றவற்றில் இருந்து நாம் விலக ஆரம்பித்து விடுவோம்.
சுயசிந்தனையில் வெற்றி பெற்று ஆழ்மனப் பதிவுகள் நலிவடைந்தால், நமது எந்தச் செயலும் நம்மை பாதிக்காது; ஏனெனில் நாம் பயனை எதிர்பார்த்து செயலில் இறங்குவதில்லை.
"Indifferent to the fruits of action, ever content and utterly independent, he is inactive even while engaged in activity"
.. The Bhagavad Gita (4.20)
(தொடரும்)
ஆன்மா
பதிவு 41
நாம் அறிந்து கொள்ளும் வாழ்வியல் உண்மைகள் நம்மிடம் சுய கட்டுப்பாட்டை உண்டுபண்ணும். தவிர, "போதும்" (contentment) என்ற மன நிலைக்கும் வந்து விடுவோம்.
உணர்வு மனம் அமைதியாகி புத்தியுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும். அதன்பின் நாம் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையிலும் எதிர்வினை (re-action) காட்ட மாட்டோம். தேவைப்பட்டால் மட்டும் பதில் வினை (response) ஆற்றுவோம்.
ஆழ்மனதில் இருந்த எதிர்மறை உணர்வுகள் மறைந்து விடும். உறவுகளிடம் இருந்த பாசமும், பொருட்களின் மேல் இருந்த உடைமைத் தன்மையும் நீங்கி விட, அவை வெறும் நினைவலைகளாகத் தங்கி விடும். மிஞ்சி இருப்பது "இச்சை" மட்டும் தான்.
ஆனால், உணர்வு மனம் அடங்கி விட்ட காரணத்தால், ஆழ்மனதில் உள்ள இச்சைகள் உணர்வு மனதில் எந்தவித கிளர்ச்சியையும் உண்டு பண்ணுவதில்லை.
உள்ளத்தில் சமநிலை வந்து விடும். வெறுப்பு உணர்வு என்று எதுவும் நம்மிடம் இருக்காது. தாயுமானவர் சொன்னது போல்
"எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" என்று நினைக்க ஆரம்பித்து விடுவோம்.
எல்லா சூழ்நிலைகளிலும், சலனங்கள் ஏதுமின்றி மனம் அமைதியாகவே இருக்கும்.
வாழ்க்கையில் உண்மையான வெற்றி என்பது இதுவே.
"Success in life is measured by the tranquility of the mind"
.. Swami Chinmayananda.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 42
'தனிமையில் இருப்பது, சுயசிந்தனையில் ஈடுபடுவது, சுயபரிசோதனை செய்வது' ..
அமைதி கண்ட மனம், உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை உணர வேண்டுமென்றால், இந்த மூன்றையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
சுயசிந்தனையைத் தொடர்ந்து செய்துவர, 'மெய்ப்பொருளை' அறிவதில் நமது திறமை மேலும் மேலும் வலுப்பெறும்.
ஒரு உதாரணம் ..
"ஆமை வரும் ஆட்கண்டு ஐந்தடக்கஞ் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவது மெக்காலம்?"
.. பத்திரகிரியார்.
ஆமையைப் போன்று நாமும் ஐந்து பொறிகளையும் அடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் பொருள் கூறுகிறார்கள்.
("ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்.." என்ற குறளுக்கும் இந்த விதமாகத்தான் பொருள் கூறுகிறார்கள்)
இந்தப் பாடலில் வரும் "ஊமை உருக்கொண்டு" என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
"ஊமை" என்றவுடன் பேச மட்டும் கூடாது என நினைத்தால் அது தவறு; இங்கு எல்லாப் பொறிகளையும் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றும், "ஒடுங்குவது" என்றால் எந்தப் பொறிவழியேயும் வெளியே போகாதே என்று பொருள் கொள்ள வேண்டும்.
அது மட்டும்தானா? மனம் எதை எதையோ நினைத்து வெளியே ஓடி விடுகிறதே; அப்படி இருந்தால் மனம் எப்படி ஒடுங்கும்?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 43
நாம் பொறிகளின் வழியே நமது சக்தியைச் செலவு செய்வதாக எண்ணுகிறோம். உண்மையில் அதிகமான சக்தியை 'மனம்' மூலமே வீணாக்குகிறோம்.
ஆழ்மனம் எப்போதும் ஏதாவது கிளர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடியது. இருந்தாலும் ஆழ்மனதிலிருந்தப் பதிவுகள் நலிவடைந்து விட்ட காரணத்தினால் அவற்றால் நமது சக்தியை வீணாக்க முடியாது.
ஆனாலும், மனம் மூன்று வழிகளில் நமது சக்தியை இழக்கச் செய்யும். அவை ..
"Regrets of the past, anxiety for the future and excitement in the present"
.. Swami Chinmayananda.
கடந்த காலத்தில் நடந்து விட்ட செயல்களை எண்ணி வருந்துவது, எதிர் காலத்தில் என்ன நடக்குமோ என எண்ணி அச்சப் படுவது, நிகழ் காலத்தில் பரபரப்பாக செயல்படுவது.
இந்த மூன்றில் எது நம்மிடம் இருந்தாலும், நம்மிடம் இன்னும் 'அஹங்காரம்' இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
நமது அகவுலகில் தொடர்ந்து
பயணம் செய்தால்தான், 'அஹங்காரம்' என்ற நிலையிலிருந்து 'அஸ்மிதா' என்ற நிலைக்கும், அதிலிருந்து 'அஸி' என்ற நிலைக்கும் செல்ல முடியும்.
'அஸி' என்று சொன்னவுடன் 'தத்வமஸி' என்ற வார்த்தை நினைவிற்கு வருகிறதா!?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 44
தன்முனைப்பின் தீவிரம் குறையக் குறைய நமது பண்பு நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சில பதிவுகளில் பார்த்தோம். மற்றவற்றை நீங்களே அனுபவித்து உணர்ந்து கொள்ளுங்கள்.
அதைப் பற்றியே தொடர்ந்து பதிவிட்டால், நாம் இலக்கைத் தவற விட்டு விடுவோம்.
தன்முனைப்பு (அஹங்காரம்) முற்றிலும் நீங்கி விட்டதை எப்படி அறிந்து கொள்வது?
முதலாவதாக 'என்னுடைய' என்ற எண்ணம் எழக்கூடாது.
'என்னுடைய' என்ற எண்ணம் எழுந்தாலே, உள்ளே 'நான்' எனும் அஹங்காரம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
'எனக்கு ஒரு மகன் இருந்தால், என்னுடைய மகன் என்றுதானே சொல்ல முடியும்?' என நீங்கள் கேட்கலாம்.
'என்னுடைய' என்ற வார்த்தை இரண்டு விதமான பொருளைக் கொடுக்க முடியும்; ஒன்று 'உறவைக் குறிப்பது' (relationship). மற்றொன்று 'பற்றைக் குறிப்பது' (attachment). 'என்னுடைய'
என்று சொல்லும்போது, அங்கு 'உறவு' இருக்கலாம்; 'பற்று' இருக்கக் கூடாது.
"தேக அபிமானம், லோக அபிமானம், சாஸ்திர அபிமானம்' ஆகிய மூன்றையும் விட்டு விடச் சொல்கிறார் சங்கரர்.
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்' என்கிறார் திருமூலர்.
இரண்டாவதாக வருவது 'இச்சைகளின்' நீக்கம்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 45
தனிப்பட்ட முறையில் விருப்பங்கள் என்று எதுவும் இல்லை என்று ஆனபின்,
'என்னுடைய' எனும் மமகாரமும், இச்சைகளை, அதாவது நிறைவேறாத ஆசைகளைப் பற்றிய எண்ணமும் எப்பொழுது நம்மைவிட்டு நீங்குகிறதோ, அப்போது நாம் அஹங்காரமற்ற மனிதர்களாக மாறி விடுவோம்.
"எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்து விட்டு மமகாரம் இல்லாதவனாக, அஹங்காரமற்றவனாக, சிறிதளவு ஆசையும் (இச்சையும்) இல்லாதவனாக ஸஞ்சரிக்கிறானோ, அவனே அமைதியை (சாந்தியை) அடைகிறான்".
.. பகவத் கீதை (2.71)
ஆனால் நாம் அஹங்காரம் அற்றவர்களாக மாறிவிட்டோம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?
இதை இரண்டு விதத்தில் புரிந்து கொள்ளலாம்.
எதையும் நினைத்து வருந்தாமல் (Regretting nothing), எதையும் எதிர்பார்க்காமல் (expecting nothing), வருவது எதுவாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் எதிர்கொள்வது (accepting everything) போன்ற மனநிலை நம்மிடம் இருந்தால், நம்மிடம் அஹங்காரம் இல்லை என எடுத்துக் கொள்ளலாம். இது ஊகத்தை அடிப்படையாகக் கொண்டது.
மற்றொன்று ரிஷி பதஞ்சலி கூறுவது.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 46
அஹங்காரம் உள்ள மனிதனிடம் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அவை புறவுலகைச் சார்ந்ததாகவும் இருக்கும்; அகவுலகைச் சார்ந்ததாகவும் இருக்கும்.
முதலில் வருவது "சவிதர்க்க சமாதி" என்கிறார் ரிஷி பதஞ்சலி. இது 'புறவுலகில்' நடப்பது. சமாதி என்றால் 'புத்தி சமநிலையில்' இருப்பதைக் குறிக்கிறது. அதாவது புத்தி சமநிலையில், எந்தவிதமான உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காத நிலையில் இருக்கும் போது, 'சவிதர்க்கம்' நடைபெற வேண்டும் என்கிறார்.
'தர்க்கம்' என்றால், விவாதம் என்று அர்த்தம். 'விதர்க்கம்' என்றால், ஒருவருக்கொருவர் இணக்கமான சூழ்நிலையில் நடைபெறும் விவாதம் என்று அர்த்தம். 'சவிதர்க்கம்' என்றால், இணக்கமான சூழ்நிலையில் தன்னுடைய பண்புகள் மேலும் மேன்மை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெறும் விவாதம் என்று அர்த்தம்.
பொதுவாக இதுபோன்ற விவாதங்களில் வாழ்வியல் தத்துவங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களும், அவர்களது கேள்விகளுக்குத் தகுந்த விடையளிக்கக் கூடிய சான்றோரும் இருப்பதுண்டு.
இனி கேட்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை அடைந்தால், அதனை 'நிர்விதர்க்க சமாதி' என்று அழைக்கிறார்.
தேவையான விளக்கங்களைத் கேட்டுத் தெளிந்தபின், அந்த மனிதன் அடுத்த நிலைக்கு செல்கிறான். அது "சவிசார சமாதி".
(தொடரும்)
ஆன்மா
பதிவு 47
"சவிசாரம்" என்பது 'அகவுலகில்' நடப்பது; அதாவது சுயசிந்தனையில் ஈடுபடும் மனிதன் தனக்குள்ளேயேக் கேள்விகளைக் கேட்டு, அவற்றிற்கான விடைகளையும் கண்டு பிடிக்கிறான். அவனுள் இருந்த இச்சைகளும் நீங்கி விடுகின்றன.
அதன்பின் ஒரு உண்மையை, ஏற்கனவே புரிந்திருந்த உண்மையை, மனப்பூர்வமாக உணர்ந்து கொள்கிறான். அது ..
"நான்" என்று
நான் நினைத்தது
"நான்" இல்லையென்று
நான் அறிந்தது
"நான்" என்ற
அகந்தை அழிந்தது.
இப்பொழுது 'அஹங்காரம்' அவனைவிடடு முழுமையாக நீங்கி விடுகிறது. அவன் "சபீஜ சமாதி" என்ற நிலையை அடைகிறான்.
"சபீஜ சமாதி" என்றால் 'விதைகளுடன் கூடிய சமாதி' என்று ரிஷி பதஞ்சலி கூறுகிறார். ஆனாலும், அவன் தனது பயணத்தை இன்னும் தொடர வேண்டும் என்கிறார் அவர்.
அஹங்காரம் நீங்கிய பின், மனிதன் 'மன அமைதி'
(peace of mind) என்றால் என்னவென்று உணர்ந்து கொள்கிறான். இருந்தாலும், அவன் தனது பயணத்தை தொடரவில்லை என்றால் மீண்டும் 'அஹங்காரம்' அவனைத் தொற்றிக் கொள்ளும் என எச்சரிக்கிறார்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 48
இந்த இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம் வரலாம்.
ஆழ்மனதில் இருந்த எதிர்மறை உணர்ச்சிகளும், இச்சைகளும் நீங்கி விட்டன.
நம்மைச் சார்ந்த உறவுகளும், பொருட்களும் எந்தவித கிளர்ச்சிகளையும் உண்டு பண்ண முடியாத அளவிற்கு வெறும் நினைவலைகளாகத் தங்கி விட்டன. பின் எதற்காக ரிஷி பதஞ்சலி எச்சரிக்கை மணி அடிக்கிறார்?
எந்தவொரு மனிதனது ஆழ்மனதிலும் நிறையப் பதிவுகள் காணப்படும். இந்தப் பதிவுகளைத்தான் ரிஷி பதஞ்சலி 'விதைகள்' என்கிறார்.
"விதைகளுடன் கூடிய" என்று ஏன் சொல்லுகிறார்? நாம்தான் எல்லா விதைகளையும் நீக்கி விட்டோமே அல்லது வலுவிழக்கச் செய்து விட்டோமே என நினைக்கலாம்.
ஆனால், கண்ணுக்குத் தெரியாத, அறிவிற்கும் புலப்படாதப் பதிவுகள் இன்னும் நிறைய விதைகள் இருக்கலாம் என்கிறார்.
கர்ணனுக்கு தனது தாய் யார் என்றே தெரியாது; தனது தாய் என்று தெரியாமலே, அவன் குந்தி தேவியிடம் "ராஜ மாதா" என மரியாதையுடன் நடந்து கொள்கிறான். தன் கண் முன்னாலேயே இருப்பவள், என்றாவது ஒருநாள் பெரிய விதையாக மாறி .. நான்தான் உன்னுடைய "அம்மா" என்ற உண்மையைக் கூறி .. தன்னுடைய ஆழ்மனதில் ஒரு பெரிய பூகம்பத்தையே உருவாக்கப் போகிறாள் என்பதை அவன் அறிந்திருந்தானா?
(தொடரும்)
ஆன்மா
பதிவு 49
"நான்" எனும் அஹங்காரத்தைத் துறந்து விட்ட மனிதன், 'அஸ்மிதா' என்ற நிலைக்கு வந்து விடுகிறான்.
'அஸ்மிதா' என்ற நிலையில் அவனிடம் "நான்" எனும் அஹங்காரம் இல்லை என்றாலும், 'தன்னைப் பற்றிய உணர்வு' மட்டும் மிஞ்சியிருக்கும்.
'அஸ்மிதா' நிலையில் அவன் அழிக்க வேண்டியது, அவனால் கண்டுகொள்ள முடியாத ஆழ்மனப் பதிவுகளைத்தான்.
ஆழ்மனப் பதிவுகளைப் பனிப்பாறையோடு (iceberg) ஒப்பிடலாம். தன்னால் கண்டுகொள்ளப்பட்டப் பதிவுகளை நீக்கி விட்டான்; அல்லது வலுவிழக்கச் செய்து விட்டான்.
புலன்களுக்குப் புலப்படாத பதிவுகளை மட்டும் நீக்க வேண்டும். அதற்கு ஒரே வழி 'தியானம்' மட்டும்தான்.
முறையாகத் தியானத்தை பயிற்சி செய்து வந்தால்,
ஆழ் மனதில் இருந்த அனைத்து பதிவுகளும் மடிந்து விடுகின்றன.
ஆன்மாவை சுழ்ந்திருக்கும் மாயத்திரையை "ஆனந்த உறை" (bliss sheath) என்பார்கள். திரையின் மேல் பரவியிருந்த அனைத்து பதிவுகளும் நீங்கிய பின், சித்தத்தின் உள்ளிருந்து பெருகும் ஒளி அவனைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும்.
அதன்பின் அவனுக்கு இந்தப் பூவுலகில் வேண்டுவது என்று எதுவுமே கிடையாது.
இதைத்தான் "மனமிறக்க ஞானி பிறக்கிறான்" எனச் சொல்கிறார்கள்.
வேதாந்தத்தின் நோக்கமும் இதுவே. திருமூலர் அருளியப் பாடலைப் பாருங்கள்:-
"வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்த இடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே."
.. திருமந்திரம் 229
இதுவரை தியானத்தை ஒரு பயிற்சியாக செய்து வந்தோம். 'அஸ்மிதா' நிலைக்கு வந்தபின், தியானம் நமது இயல்பாக மாறிவிட வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதன் பின்னணியில் தியானம் தொடர்ந்து தன்னிச்சையாக நடைபெற வேண்டும். நாம் தியானம் செய்கிறோம் என்ற உணர்வு கூட நம்மிடம் இருக்கக்கூடாது.
(Meditation-less meditation is the real meditation .. Swami Chinmayananda)
அவன் தனது தியானத்தைத் தொடர்ந்து செய்து வர 'அஸ்மிதா' என்ற நிலையிலிருந்து 'அஸி' என்ற நிலைக்குச் சென்று விடுவான்.
இருந்தாலும் ஒரே சிலரே 'அஸி' நிலைக்கு செல்ல முடியும்.
(தொடரும்)
ஆன்மா
பதிவு 50
நம்மால் 'அஸ்மிதா' என்ற நிலையை அடைவதே மிகக் கடினம். இருந்தாலும், ஒரு மனிதன் 'அஸி' நிலையை அடைந்தால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
"தத்வமஸி" என்ற மஹா வாக்கியத்தை கேள்விப் பட்டிருப்போம். (ஐயப்பன் கோவில் நுழைவு வாசலில் தத்வமஸி என எழுதப் பட்டிருக்கும்). நான்கு மஹா வாக்கியங்களில் அதுவும் ஒன்று.
"தத்+தவம்+அஸி" ..
'நீ அதுவாக இருக்கிறாய்' எனப் பொருள் படும்.
தொடர்ந்து தியானம் செய்துவர, இறையருள் இருந்தால் 'அஸி' நிலையை அடையலாம்.
இந்தப் பாடலைப் பாருங்கள்:-
"தன்னில் தானறியா
தனியாக இருந்தானாம்
தன்னில் தானறியத்
தான்மட்டும் இருந்தானாம்"
பாடலின் பொருள் :-
"தன்னில் (இருந்தானாம்)" .. எனக்குள்ளே இருக்கின்றான்.
"தானறியா (இருந்தானாம்)" .. நான் அறிய முடியாதவாறு, தரிசிக்க முடியாதவாறு மறைவாக இருக்கின்றான்.
"தனியாக இருந்தானாம்"..
தனியாக, ஒரு ஒளியாக இருக்கின்றான்;
நான் இயங்குவதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றான்;
ஆனாலும், அவன் என்னுடைய எந்த செயலிலும் பங்கு கொள்வதில்லை;
வெறுமனே சாட்சியாக இருக்கின்றான்.
"தன்னில்" .. எனக்குள்ளே
"தானறிய" .. நான் அவனது ஒளியைத் தரிசித்தபோது
"தான்மட்டும் இருந்தானாம்" ..
அவனது ஒளியைத் தரிசித்த பின், அவன் மட்டும் இருக்கின்றான். நான் அங்கு இல்லை; ஏன்?
இறை ஒளியைத் தரிசித்த மனிதன் 'தன்னைப்' பற்றிய உணர்வையும் மறந்து ஒரு "சித்தனாகி" விடுகிறான்; அல்லது பட்டினத்தார், வள்ளலார் போன்று "அவனில் அல்லது அவனது ஜோதியில்" இரண்டறக் கலந்து விடுகிறான்.
இந்த நிலைதான் 'அஸி' எனப்படும்.
(முற்றும்)
என்றும் அன்புடன்,
உங்களில் ஒருவன்.
No comments:
Post a Comment