அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 1
அறிவியலும், ஆன்மீகமும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்கிறார்கள். அப்படியானால், ஆன்மீகத்தில் அறிவியல் கிடையாதா?
அறிவியலும், ஆன்மீகமும் என்பதற்குப் பதிலாக அரசியலும், ஆன்மீகமும் என்பதே சரியாக இருக்கும்.
அரசியலும், ஆன்மீகமும் இணை கோடுகளாக, ஆனால் இணையக்கூடாத கோடுகளாக இருக்கவேண்டும்
அரசியல் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடுகிறது என்றால், ஆன்மீகம் வாழ்க்கை நெறியை வளர்க்க உதவுகிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவதில் வியப்பில்லை. அதன் நோக்கமே வாழ்வின் இன்பங்களை அனுபவிக்கத்தானே!
ஆனால் வாழ்க்கைத் தரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மனிதன் வாழ்க்கை நெறிக்கும் கொடுக்க வேண்டாமா?
ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாழ்க்கைத்தரம், வாழ்க்கை நெறி இரண்டுமே முக்கியம் என்றாலும், இரண்டிற்குமிடையே சில வித்தியாசங்கள் உண்டு.
வாழ்க்கைத்தரம் மரத்தின் கிளை என்றால், வாழ்க்கை நெறி அதன் வேர்.
அது கட்டிடம் என்றால், இது அஸ்திவாரம்.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 2
அரசியல் என்றால் என்ன என்று கேட்டால், எல்லோருடைய பதிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ஆன்மீகம் என்றால் என்ன என்று கேட்டால், வித்தியாசமான பதில்கள் நிறைய வரும்.
நாம் ஆன்மீகத்தை அரசியலோடு இணைத்து பார்ப்பதால், ஞானம்.. மோட்சம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப் போவதில்லை.
ஆன்மீகம் என்பது மதம் சம்பந்தப்பட்ட ஒன்று என பலரும் நினைக்கலாம். ஆனால், அது மதங்களை கடந்து நிற்பது.
ஆன்மீகம் வழங்கும் உண்மைகள், அவை எந்த மதத்தில் இருந்தாலும், அனைவருக்கும் பொதுவானது.
வாழ்வியல் தத்துவங்களை விளக்கும் நூல்களை இரண்டு விதமாக பிரிக்கலாம் - -
1. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, மனிதனை ஊக்கப்படுத்தும் நூல்கள்.
2. வாழ்க்கை நெறியை செம்மைப் படுத்துவதற்கான வழிகளை காட்டும் நூல்கள்.
இதில் ஆன்மீகம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 3
அரசியல்வாதி என்பவன் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடுபவன்.
ஆன்மீகவாதியின் இயக்கமோ தனிமனிதனை மேம்படுத்துவதாக இருக்கும்.
அரசியல்வாதிக்கு ஆன்மீகவாதியின் துணை அவசியம்தானா?
அரசியல்வாதியிடம் தன்முனைப்பு அதிகமாகவே இருக்கும். அதனால் பல நேரங்களில் உணர்ச்சிவசப் படுவதும், கோபம் கொள்வதும் இயல்பான ஒன்றாக மாறிவிடும்.
அந்த நேரங்களில் அவன் தவறான முடிவு எடுக்காமல் இருக்க, அவனுக்கு பக்கபலமாக ஒரு ஆன்மீகவாதியின் துணை அவசியம்.
ஆன்மீகவாதியென்றால், மதவாதி என எடுத்துக்கொள்ளக் கூடாது. நீதி நெறி வழுவாத 'சான்றோர்' என்றே பொருள்கொள்ள வேண்டும்.
இனிவரும் பதிவுகளில் ஆன்மீகவாதி என்பதற்கு பதிலாக 'சான்றோர்' என்றே குறிப்பிடுவோம்.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 4
அரசியல்வாதி,
சான்றோர் இருவருக்குமிடையே தன்முனைப்பை பொறுத்தவரை ஒரு வித்தியாசம் உண்டு.
இருவரிடமும் தன்முனைப்பு இருக்கும். ஆனாலும் அவர்களின் செயல் நேர் எதிர்திசையில் இருக்கும்.
அரசியல்வாதி புறவுலகில் செயல்படுபவன். பல நேரங்களில் அவனது தன்முனைப்பின் தீவிரம் அதிகமாகி, செருக்கு நிறைந்த மனிதனாக மாறிவிடுகிறான்.
சான்றோர் அகவுலகில் செயல்படுபவர்; முறையாக செயல்படும்பொழுது தன்முனைப்பின் தீவிரம் குறைந்துவிடுகிறது.
தொடர்ந்து கடைப்பிடிக்கும் பயிற்சிகள் அவரை தன்முனைப்பு இல்லாத மனிதராக மாற்றிவிடுகிறது.
அதன்பின் அவருக்கு செயலில் ஆர்வம் குறைந்துவிடுகிறது.
மற்றவருக்கு வழிகாட்டும் கருவியாக மாறிவிடுகிறார்.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 5
மன்னராட்சி காலத்தில், மன்னர் அரசியல்வாதி, மந்திரிகள் சான்றோர் என இருந்தனர்.
இன்று நமது நாட்டில் மன்னருக்கு இணையாக பிரதம மந்திரியையும், மாநிலங்களில் உள்ள முதன்மந்திரிகளையும் சொல்லலாம்.
ஆனால், அவர்களுடன் இருக்கும் மந்திரிகள் அனைவரையும் சான்றோர் என்று சொல்லமுடியுமா? இதுபற்றி பின்னர் ஆராய்வோம்.
நாட்டை ஆள்பவர்கள் எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்று நமது மறைநூல்களில் நிறைய அறிவுரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவற்றில் ஒன்று "மந்திரிக்கழகு வரும்பொருள் உரைத்தல்".
மந்திரிக்கு சொல்லப்பட்ட இந்த அறிவு மன்னருக்கே இருந்தால், நாடு எவ்வளவு சிறப்பாக இயங்கும் என்பதற்கு சில உதாரணங்கள்.
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த நினைத்தபோது, மந்திரியிடம் உரிய அறிக்கை தயார்படுத்த சொன்னார்.
அவரும் அறிக்கையை தயாரித்து இத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்; இவ்வளவு உணவு சமைக்கவேண்டும் என்று சொன்னார்.
அதைக்கேட்ட முதல்வர், "மதிய உணவு போடுவது தெரிந்தால் இன்னும் அதிக மாணவர்கள் வருவார்கள் அல்லவா? அதையும் கணக்கெடுத்து, புதிய வரைவு திட்டம் கொண்டுவாருங்கள்" என்றார்.
'வரும்பொருள் அறிதலுக்கு' இது ஒரு எடுத்துக்காட்டு.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 6
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்"
.. குறள் 517
ஒருமுறை ஜனாதிபதி, டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காரையார் அணைக்கட்டை பார்வையிட வருவதாக இருந்தது.
அவர் வருவதற்குமுன் வழித்தடத்தை பார்வையிட்டவர்கள் "மலைப்பகுதி வழியனைத்தும் செம்மண் ரோடாக இருக்கிறது. காரில் பயணம் செய்யும்போது தூசி பறக்கும். அது அவர் உடல்நலத்தை பாதிக்கும். எனவே மலையில் உள்ள பாதையை தார் ரோடாக மாற்றவேண்டும்" என்றனர்.
காமராஜர் அதனை மறுத்துவிட்டார். "அரைமணி நேர பயணத்திற்காக நான் தார் ரோடு போடமுடியாது. நானே ஊருக்குள்ளே போடுவதற்கு 'தார்' கிடைக்காமல் தவிக்கிறேன். அப்படி இருக்கும்போது, நான் எப்படி இங்கு தேவையில்லாமல் ரோடு போடமுடியும்?
அவர் வந்து செல்லும்வரை தூசி பறக்காமல் பார்த்துக்கொள்வது எனது பொறுப்பு. அவரை அழைத்து
வாருங்கள்" என்று சொல்லிவிட்டார்.
ஜனாதிபதி வந்து செல்லும்வரை பாதை முழுவதும் லாரிமூலம் தண்ணீர் பாய்ச்சி, ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.
ஆட்சி செய்பவன் சான்றோனாக இருந்தால், நாடு வளம்பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சான்றோனாக இருப்பதற்கு படிப்பறிவு தேவையில்லை என்பதற்கு 'கர்மவீரர்' காமராஜர் ஓர் எடுத்துக்காட்டு.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 7
ஒரு சர்வாதிகார நாட்டில் வசிக்கும் மனிதர்கள் பொருளாதாரத்தைப் பற்றியோ அல்லது வாழ்வியல் நெறிகளைப் பற்றியோ கவலைப்பட தேவையில்லை.
ஏனெனில், அவர்கள் ஆட்சியில் உள்ளவர்கள் சொல்வதைத்தான் கேட்கவேண்டும்.
ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில் வசிப்பவர்களுக்கு பொருளாதாரத்தைப் பற்றியும், வாழ்க்கை நெறிமுறைகள் பற்றியும்
தெரிந்திருக்க வேண்டும்.
ஏனெனில், இவர்கள் தான் அரசியல்வாதிகளை ஆட்சிபீடத்தில் அமர வைக்கிறார்கள்.
மக்களுக்கு பொருளாதாரத்தை பற்றிய சரியான சிந்தனை இல்லையெனில், தகுதியில்லாத அரசியல்வாதிகளிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு அவஸ்தைப்பட வேண்டியதுதான்.
சரியான பொருளாதார சிந்தனை என்றால் என்ன? அதற்காக நாம் பொருளாதார மேதைகளாக இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லை.
பொருளாதாரத்தைப் பற்றிய சின்ன சின்ன நியதிகள் தெரிந்தால் போதும்.
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை" .. குறள் 478
"வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, செலவு அதைவிட அதிகமாகாமல் பார்த்துக்கொண்டால் போதும்" என்கிறார் வள்ளுவர்.
இது தனி மனிதனுக்கு பொருந்துவதுபோல், நாட்டிற்கும் பொருந்தும்தானே!
அரசு அதற்கு வரும் வருமானத்தைவிட அதிகமாக செலவுசெய்தால் அது நாட்டிற்கு நல்லதுதானா?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 8
ஒருமுறை நான் தூத்துக்குடியிலிருந்து மாலைநேர பெங்களூர் இணைப்பு ரயிலில் பயணம் செய்ய நேரிட்டது.
வண்டி ஒரு சிற்றூரில் நின்றது. பள்ளிமுடிந்து சில மாணவர்கள் மற்றும் மாணவிகள் வண்டியில் ஏறினர். என்னுடன் வந்தவர் முகம் சுளித்தார். வண்டி அடுத்து ஒரு குக்கிராமத்தில் நின்றது. சில குழந்தைகள் வண்டியை விட்டு இறங்கினர்.
உடன் வந்தவருக்கு எரிச்சல் வந்தது. "ஏன் Sir, இது எக்ஸ்பிரஸா அல்லது பாசஞ்சரா" என்றார்.
நான் அவரிடம் குழந்தைகள் நடந்துசெல்வதைக் காட்டி, "அவர்கள் போகவேண்டிய கிராமம் கண்ணுக்குத் தெரிகிறதா" என்றேன்.
"இல்லை" என்றார்.
"அடுத்த வண்டி இங்கு இரவு 6.45 மணிக்குமேல்தான் வரும். குளிர் காலங்களில் அந்தக்குழந்தைகள் இருட்டில் எப்படி கிராமத்திற்கு போகமுடியும்? நினைத்துப்பாருங்கள்" என்றேன். அவர் அமைதியாகிவிட்டார்.
அந்த கிராமத்தில் ஒரு ரயில் நிலையம் இயங்கிவந்தது. ஒரு சிலர் மட்டுமே அதை பயன்படுத்தினர். அங்கு ரயில் நிலையத்தை பராமரிப்பதால், ரயில்வே நிர்வாகத்திற்கு பண நஷ்டம். இருந்தாலும் குழந்தைகள் நலனுக்காக ரயில்வே நிர்வாகம் அந்த நஷ்டத்தை ஏற்றுக்கொண்டது.
அதேநேரம் வேறு ஒரு ஊரில், ரயில் நிலையத்தை பராமரிக்க மாதம் ஒரு லட்சம்வரை செலவாயிற்று. வருமானமோ மிகவும் குறைவாகவே இருந்தது.
பக்கத்திலே உள்ள நகராட்சியில் ரயில் நிலையம் இருந்ததால், வருமானம் குறைவாக இருந்த ரயில் நிலையத்தை மூடிவிட நடவடிக்கை எடுத்தவுடன் அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வரவைவிட செலவு அதிகமாக இருந்ததால், ரயில் நிலையத்தை மூடிவிட எண்ணியது தவறா? தவறு என்றால், அதிகமான செலவு மக்களின் தலையில்தானே விழும்!
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 9
பல வருடங்களுக்கு முன்னர், ஜெர்மனி நாடு இரண்டாக பிரிந்து இருந்தது.
அந்த சமயம் அமெரிக்காவிலிருந்து ஒரு குழு, தென்கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் நாடுகளில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது.
மூன்றும் சிறிய நாடுகள்; இருந்தும் அமெரிக்காவைவிட தொழிற்துறையில் சிறந்து விளங்க காரணம் என்ன என்பதை அறிவதுதான் அந்தக் குழுவின் நோக்கம்.
குழு மூன்று நாடுகளிலும் தனது ஆராய்ச்சியை முடித்தபின், ஒரு கலந்துரையாடலை நடத்தியது.
அப்பொழுது அந்தக் குழு உறுப்பினர்கள் அரங்கத்தில் இருந்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அது - -
"உங்கள் நாடுகள் மூன்றும் மிக சிறப்பாக தொழிற்துறையில் முன்னேறியிருக்கின்றன. இருந்தாலும் வரும் காலத்தில் ஏதாவது ஒரு நாடு உங்களை முந்திச் செல்லலாம் அல்லவா? அந்த நாடு எதுவாக இருக்கும்? அமெரிக்காவா, இங்கிலாந்தா அல்லது மேற்கு ஜெர்மனியா?"
அவர்களுக்கு கிடைத்த பதில், மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம் அரங்கத்தில் இருந்தவர்கள் குறிப்பிட்ட நாடு 'இந்தியா'.
எதனால் இந்தியாவை சொல்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, அவர்கள் சொன்னது - -
1. வருடம் முழுவதும் பயிர் செய்யக்கூடிய நாடு இந்தியா.
2. கனிம வளம் மிகுந்த நாடு இந்தியா.
3. திறமையான மனிதர்கள் நிறைந்த நாடு இந்தியா.
4. புத்திகூர்மை உடைய மனிதர்கள் உள்ள நாடு இந்தியா.
பின் ஏன் அந்த நாடு பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறது எனக் கேட்டதற்கு, அவர்கள் கூறியது, "எங்கள் அதிர்ஷ்டம் அங்கு நல்ல அரசியல் தலைமை இல்லை".
பின்னர் திரு. P.V. நரசிம்மராவ் அவர்கள் பிரதம மந்திரியாக பதவியேற்றபின், நிறைய சீர்திருத்தங்கள் செய்து, நமது நாடு பொருளாதாரத்தில் முன்னேற வித்திட்டார் என்பதை அனைவரும் அறிவோம்.
ஒரு நாடு வளம்பெற வேண்டுமானால், ஒரு நல்ல அரசியல்வாதி தலைமை பொறுப்பில் இருக்கவேண்டும்.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 10
மன்னராட்சியில் மன்னருக்கு ஆலோசனை கூற மந்திரிகள் இருப்பார்கள்.
நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. இங்கும் பிரதம மந்திரிக்கு உதவியாக பல மந்திரிகள் உண்டு.
ஆனால், இரண்டு மந்திரி சபைக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.
மன்னரின் அரச சபையில் உள்ள மந்திரிகள், மன்னனால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். அவர்கள் பெரும்பாலும் சான்றோராகவே இருப்பார்கள்.
ஜனநாயக நாட்டிலோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தே, பிரதம மந்திரி தனக்கு தேவையான மந்திரிகளை தேர்வு செய்யவேண்டும்.
பிரதம மந்திரியுடன் வேலை செய்யும் மந்திரிகள், பிரதம மந்திரியின் திட்டம் சரியில்லையென்றாலும், அதை எதிர்த்து பேச தயங்குவார்கள்.
ஆனால், மன்னன் தவறுசெய்தால், அதை இடித்துரைக்க மன்னரின் மந்திரிகள் தயங்கமாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்கள் அரசனின் சபையில் இருந்தால், அந்த மன்னனுக்கு யாரால் கேடு விளைவிக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.
"இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்" .. குறள் 447
அப்படியானால் ஜனநாயக நாட்டில், பிரதம மந்திரிக்கு உதவிபுரிய சான்றோர்கள் வரமுடியாதா?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 11
நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவன் அறநெறி வழுவாது ஆட்சி செய்ய விரும்பினால், சிறந்த அறிவுடையார் (சான்றோர்) யாரென ஆராய்ந்து அவரை தனக்கு உற்ற துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்" .. குறள் 441
அத்தகைய சான்றோரின் உறவு வேண்டாமென்று உதறித் தள்ளினால், அது பல பகைவர்களால் நமக்கு வரும் தீமைகளைப்போல் பத்து மடங்கு அதிக தீமையைத் தரும் என்கிறார்.
"பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்" .. குறள் 450
அத்தகைய சான்றோர் ஒதுங்கி வாழ்பவர்களாக, ஆரவாரத்தை விரும்பாதவர்களாக, புறவுலக நாட்டமில்லாதவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் தேர்தலில் வேட்பாளராக இருக்க விரும்பமாட்டார்கள்.
அத்தகைய சான்றோர், ஆட்சியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்க்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என எண்ணித்தான் 'ராஜ்ய சபா' என்றொரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டதா?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 12
(இந்தத் தொடரில் வரும் பதிவுகள் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையில் வருபவை. புள்ளி விபரங்கள் என எதைச் சொன்னாலும், அவை உதாரணங்கள் மட்டுமே. எனவே, எனது கருத்துக்களில் தவறு இருந்தால் தெளிவு படுத்துங்கள்)
பாராளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் பல மாநிலங்களில் இருந்து பல கட்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்
அவர்களில் பெரும்பாலோர் வேகம் மிகுந்தவர்களாகவும், உணர்ச்சி மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
அதனால்தான் பாராளுமன்றத்தில் அடிக்கடி பரபரப்பான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
பாராளுமன்றத்தில் பல மாநிலங்களை சேர்ந்த, பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் இருக்கும்போது, ராஜ்யசபாவிற்கும் அவர்களையே தேர்ந்தெடுப்பது ஏன்?
ராஜ்யசபாவிற்கு வருபவர்கள் வேகம் மிகுந்தவர்களாக இருக்கக்கூடாது; மாறாக விவேகம் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும்.
அதற்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களிலிருந்து, சான்றோர்களை தேர்வுசெய்து அவர்களை மட்டுமே ராஜ்யசபாவிற்கு நியமனம் செய்யவேண்டும்.
அது நாட்டிற்கும், நாட்டை ஆள்பவர்க்கும் உதவியாக இருக்கும் அல்லவா?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 13
எந்தவொரு நாட்டிலும், எந்த ஒன்றுக்கும் "தேவையும் அதற்கான வினியோகமும்" சம அளவில் இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பு ஆகியவை சீராக இருக்கும்.
இதில் மாறுபாடு இருந்தால் பலவிதமான குழப்பங்களும், பிரச்சினைகளும் வர வாய்ப்புண்டு.
இதனை கண்காணிக்க வேண்டியது அரசின் முக்கிய கடமைகளில் ஒன்று அல்லவா?
நமது நாட்டில் தேவைக்குமேல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன என்கிறார்கள். அதேநேரம் மருத்துவ கல்லூரிகளை இன்னமும் அதிகரிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
படித்துமுடித்த பொறியியல் பட்டதாரிக்கு அவரது படிப்பிற்கு தகுந்த வேலையில்லை என்கிறார்கள்; அதேசமயம் தேவைக்கேற்ப மருத்துவர்கள் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
இதனை கவனிக்க வேண்டியது அரசின் கடமையில்லையா?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 14
மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்துவது காய்கறிகளும், மளிகைச்சாமான்களும். இரண்டும் விவசாயத்தை நம்பி இருப்பவை.
மருந்துப் பொருட்கள் தேவையிருந்தால் மட்டுமே வாங்குகிறோம்.
வாகனங்கள், குறிப்பாக கார், ஒன்றிரண்டு எப்போதாவதுதான் வாங்குகிறோம்.
கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்கினால் நிறைய பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால், ஒரு கட்டத்தில், உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை நின்றுவிட்டால், அந்த உற்பத்தியை நம்பி வேலைக்கு வந்தவர்கள் நிலை என்னவாகும்?
இது சம்பந்தமாக அரசு தேவையான புள்ளி விபரங்களை அவ்வப்போது சேகரித்து பரிசீலனை செய்கிறதா?
இதுபோன்ற தொழில் தொடங்குவதற்கு காட்டும் முக்கியத்தை, தொடர்ந்து தேவையிருக்கின்ற விவசாயத் தொழிலுக்குத் தரவேண்டாமா?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 15
ரேஷன் கடைகளில் சலுகை விலையில் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
ஓரளவு வசதி உள்ளவர்களும் இந்த சலுகைகளை அனுபவிப்பது சரியா?
இப்போது 'smart ration card' மூலமாக பொருட்களை வழங்கி வருகிறார்கள். ஆனால், இந்த முறையிலும் தவறுகள் நடக்கின்றன.
நான்கு பொருட்களை
நாம் வாங்கலாம் என்ற நிலையில், இரண்டு பொருட்களை மட்டும் வாங்கினாலும், நமது கைபேசியில் நான்கு பொருட்களையும் வாங்கிவிட்டதாக செய்திவருகிறது.
இதை, இந்த தவறை எப்படித் தவிர்ப்பது?
Gas cylinder வழங்குவதற்கு நடைமுறையில் உள்ள பழக்கத்தை இதற்கும் பயன்படுத்தினால் என்ன?
அதாவது, முழு விற்பனை விலைக்கு பொருட்களை விற்றுவிட்டு, அதற்குண்டான மானியத்தொகையை குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் என்ன?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 16
கொரோனா தொற்று டில்லி, மும்பை மற்றும் சென்னை நகரங்களில் அதிகமாக இருப்பதற்கு, ஜன நெருக்கடியும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.
ஒருமுறை எனது மேலதிகாரியிடம் நான் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது - -
"As a humanbeing, I can have headload; but not donkeyload".
ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட அளவில்தான், பாரம் சுமக்க முடியும். அதை 'capacity to bear' என்பார்கள்.
இந்த விதி நிலத்திற்கும் பொருந்தும்தானே!
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு இவ்வளவு ஜனத்தொகைதான் இருக்கலாம் என்று ஏதாவது விதி உள்ளதா? இல்லையென்றால் இப்போதாவது அதற்கான முயற்சியை எடுத்தால் என்ன?
'span of audit' என்று சொல்வார்கள். ஒரு நபர் எத்தனை மனிதர்களை கண்காணிக்க முடியும் என்பது அவர்கள் செய்யும் வேலைகளின் தன்மையை பொறுத்து அமையும்.
இந்த கண்காணிப்பு விதி பெருநகரங்களின் நிர்வாகத்திற்கும் பொருந்தும்தானே!
அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 17
நமது நாட்டின் மொத்த பரப்பளவையும், மொத்த ஜனத்தொகையையும் கருத்தில் கொண்டு, ஒரு சதுர கிலோமீட்டருக்கு இவ்வளவு ஜனத்தொகைதான் இருக்கலாம் என்று முடிவெடுத்தால் அது சரியென்று சொல்ல முடியுமா?
நாமும் ஒரு வளர்ந்த நாடாக மாறவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதில் தவறேதும் இல்லை.
ஆனால், வளர்ந்த நாடுகளில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு எவ்வளவு ஜனத்தொகை உள்ளது; நமது நாட்டிலும் அதே விகிதாசாரம்தான் உள்ளதா? இல்லையெனில் ஜனப்பெருக்கத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டாமா?
இதற்கு ஒரேவழி குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறை படுத்துவதுதான்.
இதற்கு சில மத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனாலும், இந்தப் பிரச்சனையை இரண்டு வழிகளில் சமாளிக்கலாம் - -
1. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள பிற நாடுகளில் இத்தகைய திட்டம் அமுலில் இருந்தால், அதை எடுத்துச்சொல்லி புரியவைக்கலாம்.
2. புரியவைத்த பின்னரும் அவர்கள் மறுத்தால், அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் நிறுத்திவிடலாம்.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 18
சேலத்தில் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க, விவகாரம் நீதிமன்றம்வரை சென்று விட்டது.
ஒருவேளை நீதிமன்றம் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கி விட்டால், என்ன நடக்கும்?
சாலையை அமைத்தபின் சாலையின் இருபுறமும் உள்ள நிலங்கள் பல்வேறு காரணங்களுக்காக கட்டடங்களாக உருவெடுக்குமே! அதை எப்படி எதிர்க்க முடியும்? இதற்கு தீர்வு என்ன?
இதற்கு ஒரு நல்ல தீர்வு உள்ளது.
விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் சாலை அமைப்பதாக இருந்தால், அது தரைத்தளத்தில் அமையக்கூடாது. அதற்கு பதிலாக அதனை மேம்பாலமாக அமைக்கவேண்டும்.
இதன்மூலம் சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் கட்டடங்களாக உருமாறுவதை தவிர்க்கலாம்.
இதில் இன்னொரு பயனும் உண்டு. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை தவிர, அந்தந்த நிலத்தை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் வழங்கலாம்.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 19
ஒவ்வொரு வருடமும் எல்லா நிறுவனங்களும் அந்த வருடத்திற்கான ஆண்டறிக்கை ஒன்றை வெளியிடும். அது பல பக்கங்களை கொண்டதாக இருக்கும்.
ஆண்டறிக்கையை உயர்தர காகிதத்தில் அச்சடித்து, நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு நகலை தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள். இது கம்பெனி சட்டப்படி எடுக்க வேண்டிய நடைமுறையாகும்.
ஆனால், பெரும்பாலான பங்குதாரர்கள் அதனை முழுவதுமாக படிப்பதில்லை.
ஆண்டறிக்கையை அனைத்து பங்குதாரர்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று சட்டம் இயற்றியபோது, கணிணி மற்றும் இணையதள வசதிகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.
இப்போது இந்த வசதிகள் வந்தபிறகு, எதற்காக வீண்செலவு செய்து அச்சடித்த நகலை பங்குதாரர்களுக்கு அனுப்பவேண்டும்?
ஆண்டறிக்கையை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிட்டால், விருப்பப்பட்டவர்கள் இணையம் மூலம் பார்த்துக் கொள்ளலாமே!
தேவையென்றால் குறிப்பிட்ட நிதியாண்டில் நடைபெற்ற முக்கிய அம்சங்களை ஓரிரு பக்கங்கள் அச்சடித்து பங்குதாரர்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
இது நடைமுறை படுத்தப்பட்டால் வீண் பணச்செலவும், நேரமும் மிச்சமாகும் அல்லவா?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 20
ஒரு நாடு/மாநிலம் நல்ல முறையில் வளம் பெற்ற ஒன்றாக இயங்க வேண்டுமெனில், அதன் வரிவருவாய் பெருகவேண்டும். அல்லது அதன் செலவினங்கள் குறைய வேண்டும்.
வரிவருவாயை ஒரு அளவிற்குமேல் பெருக்க முடியாது. அதனால் அரசு அதன் செலவினங்களின் மீதுதான் கவனம் செலுத்தவேண்டும்.
அதற்கு ஓரு வழி ஒப்பீடு செய்வது.
உதாரணமாக வருவாய்த்துறையை எடுத்துக்கொள்வோம். மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பையும், அந்தத் துறையில் உள்ள மொத்த ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன் விகிதாசாரத்தை அளவிடலாம். (10 சதுர கிலோமீட்டருக்கு இத்தனை ஊழியர்கள் உள்ளனர் என்று கண்டுபிடிக்கலாம்)
இதை கண்டுபிடித்தபின், இந்த விகிதாசாரத்தை மற்ற மாநிலத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாம் அல்லவா?
அதிக அளவில் வித்தியாசம் இருந்தால், அதற்கான காரணத்தை ஆராய வேண்டும்.
அதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 21
ஒவ்வொரு மனிதனும் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பழக்கமே, அவனது கலாச்சாரமாக மாறுகிறது.
அதேபோல் எல்லா மனிதர்களும் தொடர்ந்து ஒரு பழக்கத்தை கடைப்பிடித்தால், அது சமூகத்தின் கலாச்சாரமாக பிரதிபலிக்கிறது.
ஆனால், நாம் மேலை நாட்டு மோகத்தால் பாதிக்கப்பட்டு, நமது பாரம்பரிய கலாச்சாரத்தையே மறந்துவிட்டோம்.
மேலை நாடுகள் குளிர் நிறைந்த நாடுகள். அங்குள்ள குழந்தைகள் "rain, rain go away.." என்று பாடினால், அதையே நமது குழந்தைகளும் பாடவேண்டுமா?
"அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பதெல்லாம் நமது குழந்தைகளுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
நமது பாரம்பரிய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?
அதற்கான முயற்சியில் அரசு ஆவன செய்யும் என நம்புவோம்.
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 22
எப்போதோ ஒரு பத்திரிகையில் படித்தது - -
"இந்தியா வளம் நிறைந்த நாடாக மாறுவதற்கு, அதற்கு எல்லா தகுதிகளும் உள்ளன. இருந்தும் வளமான நாடாக மாறமுடியவில்லை. அதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அது 'India is a soft country' என்பது தான்".
'Soft country' என்றால் - -
1. அந்த நாட்டில் சட்டங்கள் இருக்கும்; ஆனால், பலர் ஒழுங்காக அவற்றை கடைப்பிடிக்க மாட்டார்கள்.
2. யாராவது தவறு செய்தாலும், அவர்களுக்கு உடனே தண்டனை கிடைக்காது.
3. அப்படியே தண்டனை கிடைத்தாலும், அதன் அளவு குறைவாகவே இருக்கும்.
4. தண்டனையின் அளவு குறைவாக இருப்பதால், மீண்டும் மீண்டும் தவறு செய்ய தயங்க மாட்டார்கள்.
"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர்" .. குறள் 550.
கொடிய மனிதர்களை தகுந்த முறையில் தண்டிப்பது என்பது பயிர்களுக்கு இடையூறு செய்யும் களைகளை நீக்குவது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.
நமது நாட்டில் பலவிதமான களைகள் உள்ளன. அவற்றில் மிகவும் மோசமான களை எதுவென்றால், அது நம்முடனேயே இருந்துகொண்டு தேசநலனில் சிறிதும் அக்கறையின்றி செயல்படும் மனிதர்கள்தான்.
அவர்களை எவ்வாறு களையெடுக்கப் போகிறோம்?
(தொடரும்)
அரசியலும் ஆன்மீகமும்
பதிவு 23
இந்த தலைப்பில் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், இந்தப் பதிவுடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்வோம்.
ஒரு அரசியல்வாதி தனக்கு உற்ற துணையாக ஒரு ஆன்மீகவாதியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும்போது, அதனை மதவாதி என எடுத்துக்கொள்ளக் கூடாது; சான்றோர் என்றே கருதவேண்டும்.
சான்றோர் என்றால் அவரிடம் தூய்மை, வாய்மை, நேர்மை இந்த மூன்றும் இருக்கவேண்டும்.
அரசியல்வாதி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடுகிறான் என்றால், ஆன்மீகவாதி (சான்றோர்) வாழ்க்கை நெறியை உயர்த்த பாடுபடவேண்டும்.
வாழ்க்கை நெறி என்பது தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் மற்றும் நாட்டினுடைய கலாச்சாரம் ஆகியவற்றை கட்டிக்காப்பது.
இது சம்பந்தமாக தேவைப்படும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் சான்றோருக்கு (ராஜ்யசபாவிற்கு) இருக்கவேண்டும்.
ஒரு அரசு வாழ்க்கைத் தரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வாழ்க்கை நெறிக்கும் கொடுக்கவேண்டும்.
அப்பொழுதுதான் அது நல்ல அரசாக கருதப்படும்.
No comments:
Post a Comment