நான்கு வர்ணங்கள்
இந்தியாவின் தத்துவ ஞானிகள், பல காலமாக ஆராய்ந்தபின், மனித இனத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்தனர். அது அவர்கள் உலகிற்கு அளித்த கொடை. ஆனால், பின்னாளில் வந்தவர்கள் வர்ணங்களின் உண்மைத் தன்மையை மறைத்து வேறு வகையில் விளக்கம் கொடுத்தார்கள். அதை மக்களும் உண்மையென நம்பி, இன்றுவரை அதனைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
‘வர்ணம்’ என்பது ஜாதி, இனம், குலம், பிறப்பு எதனையும் சார்ந்ததல்ல; அது ஒரு மனிதனின் குணத்தையும், மனோபாவத்தையும் சார்ந்தது. அதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
..................................................
சந்தைக்கு சென்று கத்திரிக்காய் வாங்க நினைத்தால், கடையில் கூடை நிறைய கத்திரிக்காய் இருப்பதைப் பார்த்து, நமக்கு வேண்டிய அளவிற்கு எடுத்து, அவற்றை எடை போட்டு வாங்குவோம். சில கடைகளில் கத்திரிக்காயை ‘கூறு’ போட்டு வைத்திருப்பார்கள். சில கூறுகளில் அதிகமான காய்கள் வைத்திருப்பார்கள். நாம் நமது தேவையைப் பொறுத்து வாங்கிச்செல்வோம்.
ஒரு தேங்காய் கடையை எடுத்துகொண்டால், அங்கு விலைக்கு வரும் தேங்காய்களை, அவற்றின் அளவைப் பொறுத்து பிரித்துவைத்து விலை நிர்ணயம் செய்வார்கள்.
அதுவே, எலுமிச்சை விற்பனை செய்யும் கடையாக இருந்தால், எலுமிச்சையை அதன் அளவு மற்றும் அதன் ‘சாற்றின்’ தன்மை இரண்டையும் கருத்தில்கொண்டு, விலை நிர்ணயம் செய்வார்கள்.
சந்தையில் அளவு, தரம், தன்மை போன்றவற்றை கருத்தில்கொண்டு, விற்கவேண்டிய பொருட்களை பிரிப்பதுபோல், இந்திய தத்துவ ஞானிகள் மனிதனை அவனது குணம் மற்றும் அவனது மனோபாவம் இரண்டையும் கருத்தில்கொண்டு, நான்கு விதமாகப் பிரித்தார்கள். அதுவே ‘நான்கு வர்ணங்கள்’ எனப் பெயர் பெற்றது.
நாம் பொதுவாக நம்புவதுபோல், வர்ணம் என்பது பிறப்பை வைத்து வருவதல்ல.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்
.. குறள் 973
குணம், மனோபாவம் இரண்டையும் எப்படி கணக்கில் கொண்டார்கள் என்பதை விடுத்து, நான்கு வர்ணங்களும் நடைமுறை வாழ்க்கையில் எப்படிப் பொருந்துகிறது என்று பார்ப்போம்.
{வேதம் சொல்லும் வழியில் புரிந்துகொள்ள விரும்பினால், “மழலையின் கீதை” பகுதியைப் பார்க்கவும்}
ஏனெனில், இந்தவகையில் நாம் பயணிக்கும்பொழுது, நமக்கு அதனைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும்.
...........................................
‘சிந்தனை’ என்ற வார்த்தையை கணக்கில் எடுத்துக்கொண்டால், மனிதர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
‘விவாதம்’ என்பது சக மனிதர்களுடன் கலந்து பேசி, ஒரு முடிவுக்கு வருவது; ‘சிந்தனை’ என்பதோ தனக்குள்ளேயே சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவது.
ஆக, மனிதர்களை ‘சிந்திக்கத் தெரிந்தவர்கள்’ ‘சிந்திக்கத் தெரியாதவர்கள்’ என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
படித்தவர்களில் சிந்திக்கத் தெரியாதவர்களும், படிக்காதவர்களில் சிந்திக்கத் தெரிந்தவர்களும் இருப்பதுண்டு. எனவே, படிப்பிற்கும் சிந்தனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள், பிறரின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். அவர்கள் பிறரின் கைப்பாவையாக மட்டுமே செயல்படுவார்கள்.
அவர்கள் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல், சோம்பல் மிகுந்தவர்களாக, உணர்ச்சி வசப்பட்டு அதிகம் புலம்புவர்களாக. பிறர் தூண்டிவிட்டால் அதிகம் ஆத்திரப்படுபவர்களாக இருப்பார்கள்.
தன்முனைப்பு (அஹங்காரம்) இருந்தும், அதை சுயமாக பயன்படுத்தத் தெரியாமல், எதிர்காலக் கனவுகள் ஏதுமின்றி, தன் தலைவிதியை எண்ணி கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்கள்.
இந்த வகையான ‘சுயமாக சிந்திக்கத் தெரியாத’ மனிதர்களையே, ‘தமோ’ குணவாதிகள் என்றும், ‘சூத்திர’ வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்த வர்ணப் பிரிவை உறுதிசெய்வதற்கு அவர்கள் ஜாதி, குலம், பிறப்பு போன்ற எதனையும் கருத்தில் கொள்வதில்லை; குறிப்பிட்ட மனிதர்களின் குணம் மற்றும் மனோபாவம் ஆகிய இரண்டை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள்.
..............................................
சுயமாக சிந்திக்கத் தெரிந்த மனிதர்களையும், ‘விவேகம் மிகுந்தவர்கள்’, ‘வேகம் நிறைந்தவர்கள்’ என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
விவேகம் நிறைந்த மனிதர்கள் நிதானமாக செயல் புரிபவர்களாக இருப்பார்கள்.
அமைதியான மனம், பணிவு, ஆரவாரமின்மை, குடும்பத்தில் இருந்தாலும் ஒதுங்கி இருக்கும் தன்மை, தாமரை இலை தண்ணீராக வாழ்வது, எதிலும் மயங்காத, எதற்கும் கலங்காத மனம், எதிர்பார்ப்பு ஏதும் இன்றி கிடைப்பதில் மகிழ்வது, தன்முனைப்பு இல்லாமை போன்ற குணங்களை இவர்களிடம் எதிர்பார்க்கலாம்.
‘தான்’ என்ற நிலைமாறி, மனதில் தன்னை இறைவனின் கருவியாக நினைத்து செயல்புரிவார்கள்.
இவர்களை ‘சத்துவ’ குணவாதிகள் என்றும், ‘பிராமணன்’ என்ற வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
ஏற்கனவே கூறியதுபோல், ‘பிராமணன்’ என்பது பிறப்பை வைத்து வருவதல்ல; அது மனம் அடங்கிய, மனம் இறந்த (நான் என்ற உணர்வு அற்ற நிலையில்) மனிதனுக்கு மட்டுமே பொருந்தும்.
“சினம் இறக்க கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே”
.. தாயுமானவர்.
அதனால்தான் வள்ளுவரும் வேதங்களை ஓதினாலும், அவற்றின் கருத்தை உணர்ந்து பிறர்க்கு உரைத்தாலும், மனம் அடங்கவில்லை என்றால், அந்த மனிதனைப் ‘பேதை’ என்கிறார்.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.
.. குறள் 834
‘பேதை’ நிலையில் உள்ள மனிதனை, எப்படி ‘பிராமண’ வர்ணத்தில் சேர்க்கமுடியும்?
.................................................
‘வேகம்’ மிகுந்த மனிதர்கள், விவேகமாகவும் சிந்திக்கத் தெரிந்திருப்பார்கள். இருந்தாலும், ‘தன்முனைப்பு’ (அஹங்காரம்) அதிகமாக இருக்கும் காரணத்தால், பல நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவை எடுப்பார்கள். அந்த நேரங்களில் அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க ‘பிராமண’ வர்ணத்தைச் சேர்ந்த பெரியோரின் ‘துணை நலம்’ மிகவும் அவசியம்.
அத்தகைய ‘துணை நலத்தை’ உதாசீனப்படுத்தினால், அவர்கள் ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ (குறள் 448) என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அவர்களைக் கெடுப்பதற்கு பகைவர்களேத் தேவையில்லை.
இத்தகைய மனிதர்களை, ‘பொது நலத்தில்’ நாட்டம் மிகுந்தவர்கள்’; ‘சுய நலத்தில்’ நாட்டம் மிகுந்தவர்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
.................................................
‘வேகம்’ மிகுந்த மனிதர்கள் ‘ரஜோ’ குண பிரிவை சேர்ந்தவர்கள்.
குணம் ஒன்றாக இருந்தாலும், மாறுபட்ட மனோபாவம் இருப்பதினால், இவர்களின் வர்ணம் இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகிறது.
இவர்களிடம் தன்முனைப்பு (அஹங்காரம்) அதிகமாக இருக்கும்.
எதிர்கால கனவுகள், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தீவிரமான முயற்சி, கடினமான உழைப்பு, நினைத்ததை முடிப்பதில் பிடிவாதம், மற்றவர்களை அடக்கி ஆள நினைப்பது போன்ற குணங்கள் இவர்களிடம் காணப்படும்.
.................................................
‘ரஜோ’ குண பிரிவை சேர்ந்த மனிதர்களை, ‘பொது நலத்தில்’ நாட்டம் மிகுந்தவர்கள்; ‘சுய நலத்தில்’ நாட்டம் மிகுந்தவர்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
‘பொது நலத்தில்’ நாட்டம் உடையவனை ‘க்ஷத்ரியன்’ என்றும், ‘சுய நலத்தில்’ நாட்டம் உடையவனை ‘வைஷ்யன்’ என்றும் அழைக்கிறார்கள்.
மாறுபட்ட மனோபாவம் காரணமாக, இருவரது செயல்களிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். அவைகளில் சிலவற்றை கீழே காணலாம்:-
க்ஷத்ரியன்: --
· பிறர் நலத்தை பேணுபவன்.
· தனது, தனது குடும்பத்தின் நலனை விட, சமுதாய நலனில் அக்கறை செலுத்துபவன்.
· அதற்காக தன்னை வருத்தவும் தயங்காதவன்.
· அறிந்தோ, அறியாமலோ புகழைத் தேடி ஓடுபவன்.
· ‘பக்தி’ மார்க்கத்தை விட, ‘கர்ம’ மார்க்கத்தில் அதிக ஈடுபாடு கொள்பவன்.
· பிரச்னைகளில் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் நிலையில், தனக்கு உரிய வழியைக் காட்டக்கூடிய பெரியோரின் துணையை நாடுபவன்.
· தோல்வியைக் கண்டு துவளாதவன்.
· பல நேரங்களில் பிறரது கேலிக்கும், கண்டனத்துக்கும் ஆளாகி, அதன் காரணமாக அகத்தாய்வில் ஈடுபடுபவன். (அதுவே அவனை ‘ஞான’ மார்க்கத்தின் பாதையில் திருப்பிவிடலாம்).
· தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவன். (தர்மம் என்றால் என்ன?!)
வைஷ்யன்: --
· தனக்காக, தனது குடும்பத்துக்காக வாழ்பவன்.
· பொருளைத் தேடி ஓடுபவன்.
· அதற்காக பிறரை வருத்தவும் தயங்காதவன்.
· ‘பக்தி’ மார்க்கத்தில் ஈடுபாடு கொள்பவன் (நாத்திகனாக இல்லாத வரையில்)
· மானம், அவமானத்தைப் பற்றி கவலை கொள்ளாதவன்..
· எந்த வகையிலேனும் தான் நினைத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பவன்.
· தர்மத்திலிருந்து விலகத் தயங்காதவன்.
· தோல்வி வந்தால் துவண்டு விடுபவன்.
................................................
மனிதர்களை அவர்களின் குணத்திற்கும், கர்மத்திற்கும் ஏற்ப “நான்கு வர்ணங்களாக” பிரிக்கிறேன் என பகவான் கிருஷ்ணன் உரைக்கிறார்.
‘கர்மம்’ என்ற சொல்லுக்கு, ‘செயல்’ என்பதைவிட ‘மனோபாவம்’ (mental attitude) என்று பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும்.
ஏனெனில், மனோபாவம், எண்ணம், செயல் மூன்றிற்கும் ஒரு ஒருங்கிணைந்த தொடர்பு உள்ளது.
ஒரு விதை விதையாக இருக்கும்வரை, அதன் வளர்ச்சி அதற்குத் தெரியாது. விதை முளைவிட்டாலும், தரைக்கு வெளியே வரும்வரை, வெளி உலகத்திற்கும் அது தெரியாது.
மனோபாவம், எண்ணம், செயல் என்பது விதை, முளைவிட்ட விதை, வெளி உலகத்திற்கு தெரியும் செடி என்பதைப் போன்றது.
ஒரு மருத்துவர், தனது செயலை வைத்து பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கலாம்; ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்யலாம் என்று நினைக்கலாம்; மருத்துவ ஆராய்ச்சி செய்யலாம் என்றும் நினைக்கலாம்.
பணம் சம்பாதிக்க நினைத்தால், அவர் ஒரு ‘வைஷ்யன்’;
இலவச வைத்தியம் செய்தால், அவர் ஒரு ‘க்ஷத்ரியன்’;
மருத்துவ ஆராய்ச்சி செய்தால், அவர் ஒரு ‘பிராமணன்'.
ஆக, இந்த மூன்று விதமான வர்ணப் பிரிவிற்கும் காரணமாக இருப்பது அந்த மருத்துவரின் மனோபாவம் (mental attitude) மட்டுமே.
..................................................
எல்லா மனிதருக்குள்ளும் இந்த நான்கு வர்ணங்களின் பாதிப்பும் இருக்கலாம்.
ஒரு மனிதனிடம் எந்த வர்ணத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த வர்ணத்தைச் சேர்ந்தவனாக அவனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எல்லா வர்ணங்களின் பாதிப்பும் ஒரு மனிதனிடம் இருப்பதால், அவன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை கண்டுகொள்வது கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்.
பொதுவாக நாம் ‘வர்ணப் பிரிவின்’ தத்துவத்தை ஒப்புக்கொள்வதில்லை; ஒருவேளை ஒப்புக்கொண்டாலும் வர்ணப் பிரிவின் கலவையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை; புரிந்துகொள்ள முயற்சித்தாலும் அதை சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
சரியான வழிகாட்டியின் துணை இருந்தால் மட்டுமே, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியும்.
வர்ணப் பிரிவினையை சரியாகப் புரிந்துகொள்வதற்கு உதவியாக பல்வேறு விளக்கங்கள் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. அவை ‘அறிந்து அனுபவித்ததாலும், அனுபவித்து அறிந்ததாலும்’ வருபவை. வாசகர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்த்து, அதன்பின் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
..................................................
வாழ்க்கையின் தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கி வேதம் நான்கே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறது.
அவை “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ” என்பன.
இதில் உள்ள ‘தர்ம’, ‘அர்த்த’, ‘காம’ ஆகிய மூன்று வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை சிறிது பார்ப்போம். வர்ணப் பிரிவின் தத்துவத்தைப் புரிந்துகொள்ள அவை உதவியாக இருக்கும்.
...................................................
“தர்மம்” என்பது உதவி செய்வதைக் குறிப்பதல்ல. ஒரு பொருள் மண்ணாக இருந்தாலும், மரம், செடி, கொடியாக இருந்தாலும், எந்த ஜீவனாக இருந்தாலும், அது அதன் இயல்பான குணத்தை ஒத்து இருப்பதுதான் அதன் ‘தர்மம்’ எனப்படும்.
இந்த தர்மம் எல்லாப் பொருட்களுக்கும், அதனதன் இயல்புக்கு ஏற்ப பொதுவாக இருந்தாலும், மனிதனிடம் மட்டும் அது ஒரே மாதிரி இருப்பதில்லை. அது மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.
ஒரே மனிதனிடமும் அவன் கடைப்பிடிக்கும் ‘தர்மம்’ பருவத்திற்குப் பருவம் மாறுபடும். குழந்தைப் பருவத்தில் கடைப்பிடிக்கப்படும் தர்மம், அடுத்து வரும் பருவங்களில் மாறிவிடும். ஒரே பருவத்திற்குள்ளும் தர்மத்தின் இயல்பு அடிக்கடி மாறுவதைக் காணலாம். அதனால்தான் மனிதனின் சுபாவம் இது, இயல்பு இது என்று வரையறுத்துக் கூறமுடிவதில்லை.
மனிதனிடம் மாறுபட்ட இயல்புகள் இருப்பதனால்தான் தர்மம் பல பெயர்களில் (சுயதர்மம், பிறதர்மம், மேலான/கீழான தர்மம், பொதுவான தர்மம்) அழைக்கப்படுகிறது.
மனிதனை அவன் கடைப்பிடிக்கும் தர்மத்தை வைத்து வகைப்படுத்தியுள்ளது வேதம். அது பொதுவான, அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உளவியல் விதியாகும்.
..............................................
“அர்த்த” என்றால் செல்வம் என்று பொருள். அது வெறும் பணத்தை மட்டும் குறிப்பதல்ல. எதுவெல்லாம் மனிதனுக்கு மயக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதுவெல்லாம் “அர்த்த” என பொருள்படும்.
பெரும்பாலும் மனிதனே செல்வத்தைத் தேடிச் செல்கிறான் என்றாலும், பல நேரங்களில் செல்வம் மனிதனைத் தேடிச்சென்று அவனை மயங்க வைக்கிறது.
செல்வம் கண்ணால் காணக்கூடியதாகவும் இருக்கலாம்; கண்ணால் காண முடியாததாகவும் இருக்கலாம்.
பணம், பொன், மண், வீடு, கார் போன்றவைகள் கண்ணால் காணும் செல்வங்கள். அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம் போன்றவைகள் கண்ணால் காணமுடியாத செல்வங்கள்.
..............................................
“காமம்” என்பது இன்பம் துய்த்தல் எனப் பொருள்படும். பெரும்பாலும் பெண்ணோடு இணைத்து பேசப் படுவதாயினும், இது எல்லாப் பொருட்களுக்கும் பொருந்தும்.
தேவையில்லாத பொருள் மீதும், தேவைப்பட்ட அல்லது ஆசைப்பட்ட பொருள் மீது அளவிற்கு அதிகமாகவும் ஈடுபாடு கொண்டால் – உடலளவில் மட்டுமல்ல, மனதளவில்கூட – அதுவும் காமமாக உருவெடுக்கிறது.
நல்ல துணிமணியின் மேல் ஆசை என்பதனால், தேவையின்றி துணிகளை வாங்கி குவித்தாலோ; நகைகளின் மேல் பிரியம் என்பதற்காக நகைகளை மாற்றிக் கொண்டேயிருந்தாலோ, அதுவும் காமம் எனப்படும்.
தொண்டுகள் பல செய்யும் தலைவனிடம், தான் தலைவன் என்ற மமதை இருந்தால், அது கூட காமம் தான்.
ஆஸ்தி, அந்தஸ்து எதுவாக இருந்தாலும், அதன் காரணமாக ஏற்படும் கர்வம் கூட ஒருவகையில் காமமே.
.................................................
ஒரு பிராமணனுக்கு ‘அர்த்த’, ‘காம’ இரண்டின் பொருளும் தெரியும்; இருப்பினும் அவன் எதைச் செய்தாலும், அது ‘தர்மத்திற்கு’ உட்பட்டு வருகிறதா என்று மட்டுமே பார்ப்பான்.
ஒரு க்ஷத்ரியனுக்கு ‘அர்த்த’, ‘காம’ இரண்டும் முக்கியம்; ஆனால் அவன் செய்யும் காரியம் ‘தர்மத்திற்கு’ உட்பட்டு இருக்கவேண்டும்; இல்லையெனில் அவனது மனம் சஞ்சலப்படும்.
ஒரு வைஷ்யனுக்கும் ‘அர்த்த’, ‘காம’ இரண்டும் முக்கியம்; ஆனால் அவன் நினைத்த காரியம் நிறைவேற ‘தர்மம்’ தடையாக இருந்தால், அதை விலக்கத் தயங்கமாட்டான்.
ஒரு சூத்திரனக்கு ‘காம’ மட்டுமே முக்கியம்; அவனுக்கு ‘தர்மம்’ என்றால் என்னவென்று தெரியாது; ‘அர்த்தத்தில்’ ஆர்வமும் இருக்காது.
.................................................
வர்ணத்தை மனிதனுக்குப் பொருத்தும் பொழுது, அவனது குணத்தையும், மனோபாவத்தையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
அவனுக்குத் திருடுவதுதான் தொழில். அவனது எண்ணமெல்லாம் திருடுவதில்தான் இருக்கிறது. அவனின் குணமும், மனோபாவமும் அப்படித்தானே இருக்கும்.
முனிவர் ஒருவர் ஒரு சோதனையின் மூலம் அவனது கண்களைத் திறக்கிறார். அவனுக்கு தான் வாழ்ந்து வரும் மோசமான வாழ்க்கைமுறை புரிகிறது.
அவனது மனதிலும், சிந்தனையிலும் மாற்றம் கொண்டுவர பெரியதொரு நீண்ட தவம் வேண்டியிருந்தது. அதன் பின்னரே அவனால் இராமாயணம் என்ற அற்புத காவியம் இயற்ற முடிகிறது.
ஒருவரின் வர்ணம் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுவதற்கு, அவனது குணத்திலும், மனோபாவத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும்.
புதிய அனுபவங்கள், புதிய பதிவுகள், புதிய செயல்கள், புதிய பழக்கம் என பல நிலைகள் தாண்டிய பின்னரே, குணத்திலும், அதை ஒட்டிய மனோபாவத்திலும் மாற்றங்கள் கொண்டுவர முடிகிறது.
………………………………………......
ஒரு மனிதனது குணமும், மனோபாவமுமே அவனது வர்ணத்தை நிர்ணயம் செய்கின்றன என்றாலும், அவனது தொழிலும் பல நேரங்களில் அதனைச் சரியாகப் பிரதிபலிப்பதில்லை.
அவன் அந்த பெரிய உணவகத்தில் சர்வராகப் பணியாற்றுகிறான். அங்கு உணவு அருந்த வந்த ஒரு குடும்பம். பாட்டி, மகள், மகளின் ஐந்து வயது மகன், இடுப்பில் கைக்குழந்தை மற்றும் நிறைய ‘லக்கேஜ்’கள். மிகவும் சிரமப்பட்டு உள்ளே வந்து விடுகிறார்கள்.
அவர்கள் தங்களது சாப்பாட்டை முடித்தவுடன், அந்தக் குறிப்பிட்ட சர்வர், அவர்களுக்கு உதவியாக அவ்வளவு உடமைகளையும் சுமந்து சென்று, அவர்களை டாக்ஸியில் ஏற்றிவிட்டு வருகிறான். அவர்களின் பாரத்தைக் குறைப்பதில், அவன் இன்பம் காண்கிறான். அவன் கூட வேலை செய்யும் மற்ற சிப்பந்திகள் அவனைக் கேலி செய்கிறார்கள். அவன் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. அவனது வர்ணம் எதுவென்று சொல்வது?
தொழிலை வைத்துப் பார்த்தால் அவன் சூத்திரன்;
டாக்ஸியில் ஏற்றிவிட்டு, எதையாவது எதிர்பார்த்து, தலையைச் சொறிந்துகொண்டு நின்றிருந்தால் அவன் வைஷ்யன்;
தனது உடல் வலியைப் பொறுத்துக்கொண்டு, பிறரது கேலியையும் பொருட்படுத்தாது பிறருக்கு உதவுவதால் அவன் க்ஷத்ரியன்.
அவனை க்ஷத்ரியன் என்றுதானே அழைக்கவேண்டும்?
.................................................
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான “வட்டம்” உண்டு. அவனது வாழ்க்கைச் சக்கரம் சுழலும் விதத்தைப் பொறுத்து அது அமைகிறது.
அந்த வட்டம் குறிப்பிட்ட மனிதனின் மனநிலையைப் பொறுத்து பல அடுக்குகளை உள்ளடக்கி இருக்கலாம். தான், தன் மனைவி என்று ஒரு வட்டம். அதற்கு அடுத்த வட்டத்தில் தாய், தந்தை, கூடப்பிறந்தவர்கள் என்று இருக்கலாம்.
அந்த “வட்டம்” மனிதனின் வர்ணத்தை எப்படி நிர்ணயம் செய்கிறது?
பிராமணன்: - எந்த வட்டத்திலும் சிக்காதவன்; தனக்கென்று எந்த வட்டமும் போட்டுக் கொள்வதில்லை; தப்பித் தவறி மற்றவர்கள் அவனைச் சுற்றி வட்டம் ஏதேனும் போட்டாலும், அதனை உடைத்தெறிபவன்.
க்ஷத்ரியன்: - துவக்கம் எந்த வட்டத்தில் இருந்தாலும், காலம் செல்லச் செல்ல தனது வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பவன்.
வைஷ்யன்: - தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு, அதற்குள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்பவன்; பல நேரங்களில் தவறான வழிகளிலும் கூட பொருள் சேர்க்கத் தயங்காவதன்.
சூத்திரன் : தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொள்ளத் தெரியாதவன்; தனக்காக பிறர் அமைத்துத் தரும் வட்டத்திற்குள் இருந்து கொண்டு உழன்று வருபவன்.
.................................................
நான்கு வர்ணத்தைச் சேர்ந்த மனிதர்களிடம், ஆளுக்கு ஒரு ‘டைரி’யைக் கொடுத்து அவர்களது மனதில் உள்ளதை எழுதுங்கள் என்றால், அவர்கள் ‘டைரி’யில் என்ன எழுதுவார்கள்? சில நாட்கள் கழித்து அவர்களது ‘டைரி’யை வாங்கிப் பார்த்தால் அதில் என்ன எழுதியிருக்கும்?
பிராமணனின் ‘டைரி’யைத் திறந்து பார்த்தால், அதில் எதுவுமே இருக்காது; ஏனெனில், அவனைப் பொறுத்தவரை எதிர்காலக் கனவுகள், கடந்தகால கவலைகள் என எதுவும் இருக்காது; தேவையில்லாத கற்பனைகளும் இருக்காது.
க்ஷத்ரியனின் ‘டைரி’யில் அவனது கனவுகள், கற்பனைகள் எல்லாம் தெளிவாக எழுதப்பட்டிருக்கும்.
வைஷ்யனின் ‘டைரி’யிலும், ஒரு க்ஷத்ரியனின் ‘டைரி’யில் உள்ளது போலவே எல்லாம் தெளிவாக இருக்கும்; ஆனால் நம்மிடம் அதைக் காட்டமாட்டான். (It will be like a closed-book). அவனைப் பொறுத்தவரை எல்லாமே ரகசியம்தான்.
சூத்திரனின் ‘டைரி’யைப் பார்த்தால், நமக்குத் தலை சுற்றிவிடும்; ஏனெனில் அதில் யார் யாரோ எழுதியிருப்பார்கள்; அவனது எழுத்து மட்டும் அதில் இருக்காது. அவன் பிறரது கைப்பாவையாக இருப்பதால், மற்றவர்கள் பிறப்பிக்கும் கட்டளைகளே அதில் இடம் பெற்றிருக்கும். பல பேர் அதில் ஒன்றன் மேல் ஒன்றாக எழுதியிருப்பதால், நம்மால் எதையுமே புரிந்துகொள்ள முடியாது.
...............................................
மனிதர்களை, அக உலக நாட்டமுள்ளவர்கள்(Introvert), வெளி உலக நாட்டமுள்ளவர்கள்(Extrovert) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
வெளி உலக ஆசைகளிலிருந்து விடுபட்டு, தான் கொண்ட குறிக்கோளுக்காக தனக்குள்ளேயே சுய பரிசோதனை செய்பவர்களை அக உலக நாட்டமுள்ளவர்கள் என்பார்கள். ‘பிராமணன்’ என்ற வர்ணப் பிரிவைச் சேர்ந்தவன் மட்டுமே இதில் அடங்குவான்.
ஆசை வசப்பட்ட மனிதர்கள், வெளி உலக நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். அந்த ஆசை பொருளைத் தேடியும் இருக்கலாம்; புகழைத் தேடியும் இருக்கலாம். அதனால் ‘க்ஷத்ரியன்’ மற்றும் ‘வைஷ்யன்’ இருவருமே இதில் அடங்குவார்கள்.
சுய சிந்தனை இல்லாத காரணத்தால், ‘சூத்திரனுக்கு’ வெளி உலக நாட்டமிருந்தாலும், அவன் பொருள் அல்லது புகழை ஈட்டுவதில் எந்தவித முனைப்பும் இல்லாமல் இருப்பான்.
..................................................
“அத்தனைக்கும் ஆசைப்படு” என்று ஒருவர் சொல்கிறார்; புத்தரோ “ஆசையே அழிவுக்கு காரணம்” என்கிறார். இதில் எது சரி என்று ஒரு நண்பர் கேட்டார்.
“தேவைக்கு ஆசைப்படு, ஆசைக்கு ஆசைப் படாதே” என்று பதில் கூறினேன்.
கொஞ்சம் விளக்கி கூறுங்களேன் என்றார் நண்பர்.
பசி எடுத்தால் சாப்பாடு வேண்டும் என்றால் அது தேவை, பிரியாணிதான் வேண்டும் என்றால் அது ஆசை; உடுத்துவதற்கு சேலை வாங்கவேண்டுமென்றால் அது தேவை, பட்டுப் புடவைதான் வேண்டுமென்றால் அது ஆசை என்றேன்.
நண்பர் இப்பொழுது விளங்குகிறது என்றார்.
ஆசை கொண்ட மனதில் அமைதி இருக்காது.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும்; இருந்தாலும் முடிவான ஆசை “அமைதியைத் தேடுவதாக இருக்க வேண்டும்”. ஏனெனில் அமைதி கண்ட மனதில் மட்டுமே நிலையான ஆனந்தம் இருக்கும்.
..................................................
கடவுள் என்று சொல்வதை “கட + உள்” என்றும் சொல்வதுண்டு.
ஆசை கொண்ட மனம், மனிதனை வெளி உலகிற்கு இழுத்துச் செல்லும். அங்கு எல்லாம் இருக்கும்; அமைதி மட்டும் இருக்காது.
உண்மையான அமைதி வேண்டுமென்றால், மனிதன் அவன் உள்ளே ஊடுருவவேண்டும்; மனம், புத்தி எல்லாவற்றையும் கடந்து உள்ளே செல்லவேண்டும். உள்ளே அந்த அமைதியை அவன் கண்டுகொண்டால், உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தையும் அறிந்து கொள்வான்.
அவன் இன்பம்-துன்பம்; வெற்றி-தோல்வி போன்ற இரட்டைகளிலிருந்து விடுபட்டுவிடுகிறான்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் .. குறள் 628
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
.. குறள் 629
இந்த இன்பம் ‘பிராமண’ வர்ணத்தைச் சேர்ந்தவனுக்கு இயல்பாகவே கிடைத்துவிடுகிறது.
மற்றவர்கள் அதற்கான முயற்சியில் தனியாக கவனம் செலுத்தவேண்டும்.
...................................................
ஆசை கொண்ட மனம் – அது
அவதிகளின் களம்
அமைதி கண்ட மனம் – அது
ஆனந்தத்தின் வசம்
தன்முனைப்பு (அஹங்காரம்) அதிகம் உள்ள மனதில், ஆசை இருப்பது தவிர்க்க இயலாதது. தன்முனைப்பின் தீவிரத்தைப் பொறுத்து, ஆசையின் அளவும் அதிகப்படும்.
க்ஷத்ரியன், வைஷ்யன் இருவரிடமும் தன்முனைப்பும், ஆசையும் அதிக அளவில் இருக்கும்.
சில மனிதர்களிடம், தன்முனைப்பின் தீவிரத்தின் அளவிற்கு ஏற்ப, ஆசைகள் இல்லாமல் இருப்பதுண்டு. யாரவது அவர்களை உசுப்பி விட்டால், ஆசை தீயாகப் பற்றிகொள்ளும். (உதாரணமாக துரியோதனன் மற்றும் சகுனி இருவரையும் எடுத்துக்கொள்ளலாம்).
சூத்திரனிடமும் தன்முனைப்பு இருக்கலாம்; ஆனால், அவன் சோம்பல் மிகுந்தவனாக இருப்பதால், அவனது தன்முனைப்பும் உறக்கநிலையிலேயே இருக்கும். (உதாரணம் கும்பகர்ணன்)
...............................................
க்ஷத்ரியன், வைஷ்யன் இருவரிடமும் தன்முனைப்பும், ஆசையும் அதிக அளவில் இருந்தாலும், இருவருக்குமிடையே ஒரு வித்தியாசம் உண்டு.
க்ஷத்ரியன் தோல்வியைக் கண்டு துவளாதவன். எனவே அவனுக்கு பயமோ, கிடைக்கவில்லையே என்ற கோபமோ வருவதில்லை. தான் நினைத்தது நடக்கவில்லை என்றால், மீண்டும் மீண்டும் அதை அடைய முயற்சி செய்வானே ஒழிய, துவண்டுவிடமாட்டான்.
வைஷ்யனோ தோல்வி வந்தால் துவண்டு விடுவான். எனவே அவனுக்கு பயமும், கோபமும் வந்துகொண்டே இருக்கும். ஆசைப்பட்ட பொருள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயம்; கிடைக்காவிட்டால் கோபம்; கிடைத்துவிட்டாலோ, கிடைத்தது தன் கையைவிட்டு போய்விடுமோ என்ற பயம்; கையைவிட்டு போய்விட்டாலோ அதனால் வரும் கோபம். இந்த பயமும், கோபமும் அவனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்.
................................................
அன்பு என்பது எல்லா உயிரினங்களுக்கும் உரியதுதான்.
ஆனாலும் அது பல பரிமாணங்களைக் கொண்டது.
அன்பு ஒரு திசையில் சென்றால், ஆசையாகவும் அதுவே பின்னர் பேராசையாகவோ, பாசமாகவோ அல்லது காமமாகவோ உருவெடுக்கிறது.
அதே அன்பு எதிர் திசையில் சென்றால், இரக்கமாகவும் பின்னர் கருணையாகவும் உருவெடுக்கிறது.
சூத்திரன், வைஷ்யன் இருவரும், அவர்கள் உள்ளத்தில் இரக்கம் இல்லையென்றால், பேராசை, பாசம், காமம் போன்ற தளைகளில் மாட்டிக் கொண்டு அவதிப்படுபவர்களாகவே இருப்பார்கள்.
க்ஷத்ரியன் இயல்பாகவே பிற உயிர்களிடம் இரக்கம் கொள்பவன்; மேலும் உலக வாழ்க்கையில் அவன் பெரும் அனுபவங்கள் அவனைக் கருணை மனம் கொண்டவனாகவும் மாற்றக்கூடும்.
பிராமணன் என்பவன் கருணை உள்ளவனாக இருக்கவேண்டும்; இல்லையெனில் அவன் பிராமணன் என்று அழைக்கத்தக்கவன் அல்ல.
..................................................
மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம்வரின்.
.. குறள் 968
கவரிமான் போன்ற மனிதர், அவரது மானம் அழிந்தால், தனது உயிரையும் விட்டுவிடுவார் என்று வள்ளுவர் கூறுகிறார்.
இந்தக் கூற்று ‘க்ஷத்ரிய’ வர்ணத்தைச் சேர்ந்த மனிதனுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில், அவன் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன்; தான் கடைப்பிடிப்பது அதர்மம் என்றால் அவனால் அதைத் தாங்கமுடியாது.
கண்ணகிக்கு இழைத்த தவறை எண்ணி, தன் உயிரை மாய்த்த பாண்டிய மன்னன், தான் செய்த தவறுக்காக தன் கையை வெட்டிக்கொண்ட கொற்கை பாண்டியன் போன்றோர் இதற்கு உதாரணம் ஆவர்.
பிராமண வர்ணத்தைச் சேர்ந்த மனிதன், இரட்டைகளை கடந்துவிட்டால் (வெற்றி-தோல்வி; இன்பம்-துன்பம் போன்றவை) ‘துரிய’ நிலையை அடைந்து விடுகிறான். (இதனை ‘துரியாதீதம்’ என்றும் சொல்வதுண்டு). அவனுக்கு மானம்-அவமானம் என்பதெல்லாம் கிடையாது. அவன் இறைவனின் கருவியாக மட்டுமே செயல்படுபவன். மானம் அழியும் செயல் நடந்தால், அதற்காக அவன் வருந்துவதில்லை; அதற்குத் தண்டனையாக எது கிடைத்தாலும், அதையும் அவன் மனம் உவந்து ஏற்றுக்கொள்வான்.
இரட்டைகளைக் கடக்காத பிராமணன், தனது தவறுக்கு வருந்தவில்லை என்றால், அவன் பிராமணனே அல்ல.
மற்ற இரண்டு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் மான-அவமானத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
.................................................
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாதவர். (குறள் 623)
துன்பத்துக்கு வருந்தாதவர்கள், அத்துன்பத்துக்குத் துன்பம் கொடுப்பார்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.
பிராமணன் என்பவன் இன்பம்-துன்பம் போன்ற இரட்டைகளைக் கடந்தவன். அவனுக்கு எல்லாமே இறைவனின் பிரசாதம்தான். எனவே, தனக்கு ஏற்படும் துன்பங்களையும் ‘இறைவனின் பிரசாதமாகவே’ எடுத்துக்கொள்வான்; துன்பங்களைக் கண்டு வருந்தமாட்டான்.
க்ஷத்ரிய வர்ணத்தைச் சேர்ந்தவன் தோல்வியைக்கண்டு துவளாதவன்; போராட்ட குணம் உடையவன். எனவே, அவனும் துன்பத்தைக்கண்டு வருந்தமாட்டான்.
மற்ற இரண்டு வர்ணத்தாரும் துன்பம் வந்தால், வருந்தவே செய்வார்கள்; வருந்துவது மட்டுமல்ல, புலம்பவும் செய்வார்கள்.
பல நேரங்களில், வைஷ்ய வர்ணத்தைச் சேர்ந்தவன், தன்னை ஒரு க்ஷத்ரியன் என்று எண்ணிக் கொண்டிருப்பான்; ஆனால், அவன் துன்பத்தைக்கண்டு வருந்தினால், தன்னை ஒரு க்ஷத்ரியனாக எண்ணிக்கொண்டது தவறு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
..................................................
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். (குறள் 44)
இது “இல்வாழ்க்கை” என்ற அதிகாரத்தில் வருகிறது.
பழிக்கு அஞ்சி, நல்வழியில் வந்த பொருளைப் பகுத்து உண்ணும் பழக்கம் ஒருவனது இல்வாழ்க்கையில் இருந்தால், அவனது சந்ததி எப்போதும் குறைவது இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்.
ஒருவன் பழிக்கு அஞ்சி பொருளை ஈட்டி, அத்துடன் அதனைப் பகுத்து உண்ணும் பழக்கமும் இருந்தால், அவன் இல்லற வாழ்க்கையில் இருந்தாலும், ‘பொதுநலவாதியாக’ இல்லாமல் இருந்தாலும், அவனை க்ஷத்ரியன் என்றே அழைக்கவேண்டும்.
ஏனெனில், அவன் ஒரு வைஷ்யனாக இருந்தால், பழிக்கு அஞ்சாதவனாக; பகுத்து உண்ணும் பழக்கம் இல்லாதவனாக இருப்பான்.
..................................................
திருவள்ளுவர், திருக்குறளின் 37-வது அதிகாரத்தில் “அவா அறுத்தலின்” முக்கியத்துவத்தைப்பற்றி குறிப்பிடுகிறார்.
திருமூலரும் –
"ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்...” என்று சொல்கிறார்.
பத்திரகிரியாரோ –
“ஆசைவலைப் பாசத்தகப்பட்டு மாயாமல்...” என்கிறார்.
ஆனால், ஆசை மனிதனை விட்டு எளிதில் போய்விடுமா?
‘பிராமணன்’ என்பவன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்பவன். அதனால், அவன் ஆசைகளிலிருந்து விடுபட்டவனாக இருப்பான்.
‘க்ஷத்ரியன்’ என்பவன் ஆசைகள் நிறைந்தவன்; ஆனால், அவனது ஆசைகள் சேவை மனப்பான்மையுடன் இருக்கும். அதனால், ஆசைகள் நிறைவேறாது போனால், புலம்ப மாட்டான்; அதற்கான காரணத்தை அறிய முயற்சி செய்வான். அது மட்டுமல்ல; அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் அவனை ‘அகத்தாய்வில்’ ஈடுபடவைத்து, நாளடைவில் ஆசையற்ற நிலைக்கு கொண்டுசேர்க்கும்.
‘வைஷ்யன்’ மற்றும் ‘சூத்திரன்’ இருவரும் ஆசை வலையில் மாட்டிக்கொண்டவர்கள். ஆனால், ஒரு வித்தியாசம் உண்டு.
‘வைஷ்யன்’ மனதில் உள்ள ஆசைகள், அவனால் விதைக்கப்பட்டவையாக இருக்கும்; ‘சூத்திரன்’ மனதிலோ மற்றவர்கள் விதைத்த ஆசைகள்தான் அதிகமாக இருக்கும்.
இவர்களிடமிருந்து ஆசைகள் விடுபடவேண்டுமென்றால், பரம்பொருளை -- எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவர்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”. (குறள் 350)
...............................................
மனிதன் பொருளைத் தேடியும் ஓடலாம்; அருளைத் தேடியும் ஓடலாம். ஆனால், இரண்டு ஓட்டமும் வேறு வேறு திசையில் செல்பவை.
“திரு வேறு, தெள்ளியராதல் வேறு” என்கிறார் வள்ளுவர். அதாவது செல்வம் வேறு, ஞானம் வேறு என்கிறார்.
பொருளைத் தேட, வெளியில் செல்லவேண்டும்; அருளைத் தேட, உள்ளே செல்லவேண்டும். அது, “தன்னில் “தன்னை” தானே அறிந்தபின் வருவது”.
பிராமணன் ஞானத்தைத் தேடுபவன்.
வைஷ்யன் செல்வத்தைத் தேடி ஓடுபவன்.
சூத்திரனுக்கோ ஞானம் என்றால் என்னவென்று தெரியாது; செல்வத்தைத் தேடுவதிலும் ஆர்வம் இருக்காது.
க்ஷத்ரியன் இரண்டிலுமே ஆர்வம் காட்டமாட்டான். பிறருக்கு சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவன்; அதனால், தன்னிடம் உள்ள பொருளையும், தனது லட்சியத்திற்காக, இழக்கத் துணிபவன்.
................................................
அடக்கம், நாணம், அமைதி, ஆனந்தம், ஞானம் – இந்த வார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளவை. அவற்றை நாம் எந்த அர்த்தத்தில் உபயோகிக்கப் போகிறோம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
அடக்கம்: - இந்த அடக்கம் என்பது, மனம் அடங்குவதால் வருவது; மனம் அடங்குவது என்றால், ஆழ்மனதில் எந்தவித சலனமும் இல்லாமல் இருப்பது. கடந்த கால கவலைகள், எதிர்கால எதிர்பார்ப்பு, நிகழ்காலத்தில் பரபரப்பு ஆகியவை இருந்தால், மனம் அடங்கவில்லை என்று அர்த்தம்.
நாணம்: - நாணம் என்றால் வெட்கம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. “அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு ....” என்கிறார் வள்ளுவர். பணிவு, தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் தன்மை, ஆரவாரத்தை விரும்பாதது, மனத்தால் ஒதுங்கி வாழ்வது, தனக்குள்ளேயே ஒடுங்கி அகத்தாய்வில் ஈடுபடுவது, மற்றவர்கள் புகழ்ந்துபேசினால் மனம் கூசுவது போன்றவை சான்றோர்க்கான நாணத்தின் அடையாளம்.
அமைதி: - மனம் என்று சொல்லும்பொழுது, அதற்கு ‘புறம்’, ‘அகம்’ என இரண்டு தன்மைகள் உண்டு; மேற்பரப்பில் உள்ளதை உணர்வுமனம் என்றும், மற்றொன்றை உணர்வற்றமனம் என்றும் சொல்வார்கள். உணர்வற்றமனத்தை ஆழ்மனம் என்றும் சொல்வார்கள்.
உணர்வுமனத்தை கடலின் மேற்பரப்பு என்றால், உணர்வற்றமனத்தை கடலின் அடி-ஆழம் (தரைப்பகுதியை ஒட்டி உள்ளது) என்று சொல்லலாம். கடலின் மேற்பரப்பில், பல காரணங்களால் அலைகள் ஏற்படும்; ஆனால், அடிப்பகுதியில் எந்தவித சலனமும் இன்றி அமைதியாக இருக்கும்.
அதேபோல், ஆழ்மனம் எந்தவித சலனமுமின்றி இருப்பதையே, அமைதி என்கிறோம்.
ஆனந்தம்: - இன்பம், மகிழ்ச்சி, சந்தோசம் போன்றவை ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால், அதனைத் தொடர்ந்து துன்பம், துக்கம், வருத்தம் என ஏதோவொன்று வந்து சேரும் என்பது தவிர்க்க இயலாதது.
ஆனால், ஆனந்தம் என்பது எதிர்ப்பதம் இல்லாதது. அது, ஆழ்மனம் அமைதி நிலையில் இருக்கும்பொழுது, உள்ளிருந்து வருவது.
ஒரு தடவை, மனிதன் அதை உணர்ந்துகொண்டால், அவன் இரட்டைகளிலிருந்து வெளியேறிவிடுகிறான்.
ஞானம்: - ஞானம் என்று சொன்னவுடன், அது ஒருசில மகான்களே அடையக்கூடிய ஒன்று என பலரும் நினைப்பார்கள். வேறு சிலரோ, வேதங்களைக் கொஞ்சம் கற்றதும், தங்களைப் பெரிய ஞானியர் என நினைத்துக்கொள்வதும் உண்டு. அதனால்தான், திருமூலர் ‘கற்றபசுக்கள்’, ‘கொற்றபசுக்கள்’, ‘முற்றபசுக்கள்’, ‘வற்றபசுக்கள்’ எனப் பல பெயரிட்டுக் கூறுகிறார்.
சிலர் நினைப்பதுபோல், ஞானம் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றல்ல; அதே சமயம், வேறு சிலர் நினைப்பதுபோல் எளிதான காரியமும் இல்லை. அர்ப்பணிப்பு உணர்வும், விடாமுயற்சியும் இருந்தால் யாரும் அடையக்கூடிய ஒன்றுதான்.
...................................................
ஒரு மனிதன் ஞானியாகிவிட்டான் என்பதற்கு அடையாளம் என்ன?
ஞானம் என்றால் என்னவென்று ஒரு மனிதன் அறிந்திருக்கலாம். ஆனாலும், அவனது மனம் அடங்கவில்லை என்றால், அவனை ஞானி என்று அழைக்கமுடியாது.
எப்பொழுது ஒரு மனிதன், பற்றுகளிலிருந்து விடுபடுகின்றானோ, அப்பொழுதுதான் அவன் ஞானியாகிறான்.
“ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை
நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை
இராப் பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட்டோர்க்கே”
…. (திருமந்திரம் 1624)
உலகத்தின் மீதுள்ள பற்று மட்டுமல்ல, இறைவனிடமுள்ள பற்றும்கூட இருக்ககூடாது என்கிறார் திருமூலர்.
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசைவிடவிட ஆனந்த மாமே”. … (திருமந்திரம் 2615)
ஆனால், பற்றை விடுவது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?
...............................................
மனிதனின் எல்லா துன்பங்களுக்கும் காரணமாக இருப்பது இந்தப் பற்றுதான். இந்தப் பற்று (attachment) எங்கிருந்து வருகிறது; அது வருவதற்கு மூலகாரணமாக இருப்பது எது?
ஏதோ ஒன்றை அடையவேண்டும் என்று நாம் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தால், மனதளவில் நாம் அந்த ஒன்றைப் பற்றிக்கொண்டுவிடுகிறோம். பின்னர், அது கிடைக்கும் வரை நமக்கு நிம்மதி இருப்பதில்லை.
நாம் நினைத்த ஒன்று நம் கைக்கு கிடைத்துவிட்டாலோ, மனதளவில் மட்டுமல்ல, உடல் அளவிலும் நாம் அதனைப் பற்றிக்கொள்கிறோம். அதனையே பந்தம் என்றும் சொல்வதுண்டு.
நாம் நினைத்த ஒன்றை அடையவேண்டும் என்ற எண்ணம், ஆசையாக உணர்வு மனதில் தங்கியிருந்தது.
அதுவே நம் கைக்குக் கிடைத்தவுடன், பாசமாகவோ, பேராசையாகவோ அல்லது காமமாகவோ மாறி உணர்வற்ற மனதில் தங்கிவிடுகிறது.
உணர்வற்ற மனதில் தங்கிவிட்டபின், அதிலிருந்து விடுபடுவது மிகவும் கடினமான ஒன்று.
.................................................
ஏதோ ஒன்றை அடையவேண்டும் என ஏன் நினைக்கிறோம்; அதற்கு மூல காரணமாக இருப்பது, நமது அஹங்காரம் (தன்முனைப்பு) மட்டுமே.
அஹங்காரம் சிலரிடம் இயல்பாகவே மிகுந்து காணப்படும். வேறு சிலருக்கோ, மற்றவர் தூண்டிவிடும்போழுது அதிகரிக்கக்கூடும்.
பிராமணன் என்பவன் மனம் அடங்கப்பெற்றவன்; எதையும் அடையவேண்டும் என்ற எண்ணம் அவனிடம் இருக்காது. எது வந்தாலும், அதை இறைவனின் பிரசாதமாக நினைப்பவன். அதனால், அவனிடம் பற்று என்பது இருக்காது.
க்ஷத்ரியன் என்பவன் பொதுநலத்தில் நாட்டம் உள்ளவன். அவனைச் சுற்றி இருப்பவர்களிடம், அவனால் பாசம் காட்டமுடியாது; அவர்களிடம் அவனுக்கு அன்பு மட்டுமே இருக்கும். அதனால் அவன் ஒரு பாசமற்ற கணவனாகவோ, பாசமற்ற தந்தையாகவோதான் காட்சி அளிப்பான். அன்பு விரியும் தன்மைகொண்டது; எனவே அவனது வாழ்க்கை வட்டம் விரிந்துகொண்டேயிருக்கும். பல விஷயங்களை சாதிக்கவேண்டும் என எண்ணுவான்; ஆனால், எதிலும் பற்று வைக்கமாட்டான்.
வைஷ்யன், சூத்திரன் இருவரிடமும் பந்தம் மிகுந்து காணப்படும். வைஷ்யனிடம் தன்முனைப்பு மிக அதிக அளவில் இருக்கும்; அதனால் அவனிடம் பாசம், பேராசை, காமம் போன்றவை வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
சூத்திரனைப் பொறுத்தவரை தன்முனைப்பு, மற்றவர்கள் தூண்டிவிட்டால் ஒழிய, அதிகமாக இருக்காது. எனவே, அவனிடம், அவனைச் சுற்றியுள்ளவர்களிடம், பாசம் மட்டுமே இருக்கும். பேராசை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும். இல்லாததை நினைத்து ஏங்குவான்; ஆனால், அதை அடையவேண்டும் என்பதில் தன்முனைப்பு இருக்காது.
..............................................
‘மனோ, வாக்கு, காயம்’ என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. (இதையே ‘மனம், மொழி, மெய்’ என்றும் சொல்வார்கள்).
மனதிலிருந்து வருபவை எண்ணங்களும், சிந்தனைகளும்; வாயிலிருந்து வருபவை வார்த்தைகள்;
உடல் மூலம் வருபவை நாம் செய்யும் காரியங்கள்.
இவை மூன்றிற்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பும், ஒத்திசையும் இருக்கவேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்; அப்படி இருந்தால்தான் அந்த மனிதன் நம்பத் தகுந்தவனாக இருப்பான் என்கிறார்கள் அவர்கள்.
ஆனால் இது எல்லா மனிதருக்கும் பொருந்துமா என்றால், அது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று.
சத்துவ குணம் நிறைந்த மனிதன் நிகழ்காலத்தில் வாழ்பவன். அவனுக்கு எந்த ஆசையும், எதிர்பார்ப்பும் இருக்காது. (அப்படி இருந்தால் அவனிடம் சத்துவ குணம் முழுமையாக இல்லை என்று அர்த்தம்). தன்னிடம் உள்ள அகந்தையை அழித்துவிட்டு, தன்னை இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டவன் அவன். அதனால் அவனிடம் எந்தவித செயலூக்கமும் இருக்காது. அவன் இறைவனின் கருவியாக செயல்படுபவன்; தான் செய்யும் எந்த செயலுக்கும் தன்னை பொறுப்பாளி ஆக்கிகொள்ளமாட்டான். எனவே, அவனுக்கு இது பொருந்தாது.
தமோ குணம் உள்ள மனிதனோ சுய சிந்தனை இல்லாதவன். பிற மனிதர்களின் கட்டளைகளை ஏற்று அதன்படி நடப்பவன் அவன். அவனிடம் சுயமான செயலூக்கம் எதுவும் இருக்காது. எனவே, அவனுக்கும் இது பொருந்தாது.
ஆகவே ஒரு இரஜோகுண வாதிக்கு மட்டுமே இது பொருந்தும். இருந்தாலும் இதிலும் ஒரு வித்தியாசம் உள்ளது.
க்ஷத்திரிய வர்ணத்தைச் சேர்ந்த இரஜோகுனவாதி பிறர் நலன் நாடுபவன். எனவே அவனுக்கு இது பொருத்தமாக அமையும்.
வைஷ்ய வர்ணத்தைச் சேர்ந்த இரஜோகுனவாதி பிறர் நலன் நாடுபவனாக தன்னை காட்டிக் கொண்டாலும், தான் செய்யும் செயலால் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று கணக்கு பார்ப்பவன். ஆனால், அது சம்பந்தமாக எதையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டான். அவனிடம் ஒரு ஒத்திசைவு இருப்பது போல் தோன்றினாலும், அது உண்மை அல்ல என்பதை நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
................................................
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவதில் வியப்பில்லை. அதன் நோக்கமே வாழ்வின் இன்பங்களை அனுபவிக்கத்தானே! ஆனால் வாழ்க்கைத் தரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மனிதன் வாழ்க்கை நெறிக்கும் கொடுக்க வேண்டாமா?
ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாழ்க்கைத்தரம், வாழ்க்கை நெறி இரண்டுமே முக்கியம் என்றாலும், இரண்டிற்குமிடையே சில வித்தியாசங்கள் உண்டு.
வாழ்க்கைத்தரம் மரத்தின் கிளை என்றால், வாழ்க்கை நெறி அதன் வேர். அது கட்டிடம் என்றால், இது அஸ்திவாரம்.
பிராமணன் வாழ்க்கைநெறிக்குமட்டுமே முக்கியத்துவம் அளிப்பவன். வாழ்க்கைத்தரத்தைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை.
க்ஷத்ரியன் வாழ்க்கைநெறிக்கு கட்டுப்பட்டு நடப்பவன்.
வைஷ்யனுக்கு வாழ்க்கைத்தரம் மட்டுமே முக்கியம். வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு, வாழ்க்கைநெறியைக் கடைப்பிடிப்பது இடைஞ்சலாக இருந்தால் அதனைத் தவிர்த்துவிட தயங்கமாட்டான்.
சூத்திரன், தன்முனைப்பு இல்லாத காரணத்தினால், வாழ்க்கைத்தரம் உயர எவ்வித முயற்சியும் எடுக்கமாட்டான்.
..................................................
“கத்தவும் வேண்டா கருத்தறிந்து ஆறினால் ....” என்கிறார் திருமூலர்.
மெய்ப்பொருளை உணர்த்தும் நூல்களை கற்று, அவை கூறும் கருத்துக்களை உணர்ந்து மனம் அடங்கினால் (ஆறினால்), அதன்பின் கற்கவேண்டிய தேவை இல்லை என்கிறார்.
“மனம் அடங்கினால்” என்று எதைக்குறிப்பிடுகிறார்?
அஹங்காரத்தின் இருப்பிடம் ஆழ்மனம்; அது சித்தத்தின் மேல் படர்ந்திருப்பது. சித்தத்தின்மேல் படர்ந்திருக்கும் அஹங்காரம் கரைந்து, காணாமல் போவதையே “மனம் அடங்குதல்” என்கிறார் திருமூலர்.
“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா ....” என்று வள்ளுவர் சொல்லும்போது, “மனம் அடங்குவதையே” குறிப்பிடுகிறார்.
எப்பொழுது மனம் அடங்குகிறதோ, அப்பொழுது மனம் அமைதி அடைகிறது. சித்தத்தை மறைத்திருந்த அஹங்காரம் கரைந்து காணாமல் போனபின், சித்தத்தின் உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை உணரமுடிகிறது.
“ஆணவம் அழியும் இடம்; ஆனந்தத்தை அறியும் இடம்”
அதன்பின், அந்த மனிதனுக்கு “எந்நாளும் இன்பமே, துன்பம் என்று எதுவுமே இல்லை”.
அப்படியானால், மனிதனுக்கு அஹங்காரம் தேவை இல்லையா?
...............................................
அஹங்காரம் (தன்முனைப்பு) ஒரு மனிதனுக்குத் தேவையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம்.
ஏனெனில் - -
“அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது;
அஹங்காரம் இருந்தால் மலர முடியாது”.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், தன்முனைப்பு மிகவும் அவசியம்; தன்முனைப்பு இல்லையென்றால் அவனால் முனைப்புடன் செயலில் இறங்க முடியாது. தன்முனைப்பு இல்லாத செயல் நாம் ஆசைப்படும் விளைவை கொடுக்காது.
தன்முனைப்பு ஆசையைத் தூண்டக்கூடியது; அதே நேரம் தன்முனைப்பு உள்ள மனிதனிடம் அமைதியை எதிர்பார்க்க முடியாது.
அமைதி இல்லாத மனதில் அகமலர்ச்சி மலர முடியாது.
க்ஷத்ரியன், வைஷ்யன் இருவரிடமும் அஹங்காரம் இருக்கும்; அது இருக்கவேண்டும். இல்லையெனில், சமுதாயத்தின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும்.
ஆனால், அவர்களுக்கு எப்பொழுது அஹங்காரத்தை விடவேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியவில்லையெனில், அவர்கள் மட்டுமல்ல, சமுதாயமும் துன்பப்பட நேரும்.
“அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் விஷமே” என்ற கதைதான்.
தன்முனைப்பின் காரணமாக செயலில் இறங்கி வெற்றியும் பெற்றால், தொடர்ந்துவரும் வெற்றிகள் நாளடைவில் அவனிடம் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும்.
தன்முனைப்பாக இருந்த ஒன்று, செருக்காக மாறிவிடும்; அந்த செருக்கு அவனை மட்டுமல்ல, அவனைச் சார்ந்தவர்களையும் அழித்து விடும்.
.............................................
“பொருள்தேடி புண்பட்டு பொய்யுலகில் வாழாமல் அருள்தேடி அன்புற்று அகமகிழ்வ தெக்காலம்?”
அன்பு எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது.
மனிதன் பொருளைத்தேடி ஓடும்பொழுது, அது(அன்பு) பாசம், பேராசை, காமம் என உருமாறி அவனை புண்படவைத்துவிடுகிறது.
அதே மனிதன் அருளைத்தேடி செல்லும்பொழுது, அது(அன்பு) கருணையாக உருமாறிவிடுகிறது; அதன்பின் அவன் அகமகிழ்ந்து ஆனந்தமயமாகிவிடுகிறான். அவனிடம் “நான், எனது” எனும் செருக்கு இருக்காது. அவன் ஒரு மேம்பட்ட மனிதனாக மாறுகிறான்.
அதனால்தான் வள்ளுவரும் “யான்எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” என்கிறார்.
பொருளைத்தேடி ஓடும் மனிதன், பொருளின் நிலையற்ற தன்மையை அறிந்து, அருளைத் தேடினால், அவனும் உண்மையான ஆனந்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுகொள்ளலாம்.
பொருள் உலகின் நிலையற்ற தன்மையை அறிந்துதான், பட்டினத்தாரும் “ஊரும் சதமல்ல; உற்றார் சதமல்ல; உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல; பெண்டீர் சதமல்ல; பிள்ளைகளும் சீரும் சதமல்ல; செல்வம் சதமல்ல; தேசத்திலே யாரும் சதமல்ல .....” என்று பாடுகிறார்.
................................................
அஹங்காரம் என்றால் தன்முனைப்பு என்ற கோணத்தில் இதுவரை பார்த்தோம். அஹங்காரம் என்றால் தன்முனைப்பு என்று அர்த்தம்கொள்ள முடியாது; ஆனால், அஹங்காரம் உள்ள இடத்தில் கண்டிப்பாக தன்முனைப்பு இருக்கும்.
அஹங்காரத்தின் தீவிரத்தைப் பொறுத்து, அது ஆணவம், திமிர், இறுமாப்பு, செருக்கு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
அஹங்காரம் நிறைந்த மனிதன், பொருளைத்தேடி ஓடுகிறான்; பொருள் என்றால் செல்வம் மட்டுமல்ல. எதுவெல்லாம் நம்மை பெருமைப்பட வைக்கிறதோ, அதுவெல்லாம் பொருள்தான்.
பொருளைத்தேடி ஓடும் மனிதனுக்கு, மனதில் சந்தோஷம் இருக்கலாம்; ஆனால், அமைதி என்பது ஒரு கனவாகவே இருக்கும்.
அருளை அடைய விரும்பும் மனிதன், அஹங்காரத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், அஹங்காரம் இல்லாத மனிதனின் சித்தம் (ஆழ்மனம்) சுத்தமாகிவிடுகிறது; அதன்பின், அவன் ஒரு ஞானியாக, அருள்நிறைந்த மனிதனாக மாறிவிடுகிறான்.
“மனம் இறக்க ஞானி பிறக்கிறான்” என்பது இதனால்தான்.
..................................................
‘ஞானம் அடைவது என்பது மிகவும் கடினமான ஒன்று’ என நாம் நம்புகிறோம்; அல்லது நம்மை அப்படி நம்ப வைத்திருக்கிறார்கள்.
நமக்கு ஞானம் கைகூடிவருகிறது என்பதற்கு சில அடையாளங்கள் உள்ளன. அவை –
· அஹங்காரம் குறைந்து வருவது.
· இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி போன்ற எந்த சூழ்நிலையிலும் மனம் அமைதியாக இருப்பது.
· செயல் எதுவாக இருந்தாலும், மனதளவில் ஒதுங்கி, ஒடுங்கி வாழ்வது.
· அகத்தாய்வில் அதிகம் ஈடுபடுவது.
· தாமரை இலைத் தண்ணீராக ஒட்டியும்-ஒட்டாமலும் வாழ்வது.
நாம் நமது வாழ்க்கையை எப்படி நடத்திச் சென்றாலும், “வயது முதிர்ந்த பருவத்தில் அமைதியாக வாழ்வதுதான்” இறுதியான வெற்றியாகும்.
அதற்கு ஞானத்தின் வாயிலில் நுழைவது மிகவும் அவசியம்.
................................................
“ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே” ... (திருமந்திரம்)
“ஞானம் என்ற அக்னி சகல கர்மங்களையும் அழித்துவிடும்” என்கிறது ‘பகவத் கீதை’. இதையே வேறுவகையில் சொல்வதென்றால், “ஞானம் என்ற அக்னி சகல கர்மங்களை மட்டுமல்ல, நமது அஹங்காரத்தையே அழித்துவிடும்”.
மனிதன் பெறக்கூடிய செல்வங்களிலேயே, மிகப்பெரிய செல்வம் இந்த “அஹங்காரத்தின் அழிவுதான்”. ஒருதடவை அதன் சுவையை அறிந்துகொண்டால், அதன்பின் ஒரு மனிதன் நாடுவதற்கு வேறு எதுவுமே இல்லை.
தன்னிடம் உள்ள ‘அஹங்காரத்தை’ அழிப்பதற்கு, அவன் கவனிக்கவேண்டியது: -
· தன்னுடைய வர்ணம் எது?
· தனக்கான பாதை என்ன?
· தான் அந்தப் பாதையில்தான் பயணம் செய்கிறோமா?
· ‘அஹங்காரத்திலிருந்து’ விடுபட, தான் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறை என்ன?
இந்த விதிமுறைகளின் அவசியத்தைத் தொடர்ந்து பார்ப்போம்.
.................................................
ஒரு மனிதனுக்குரிய வர்ணத்தை முடிவு செய்வதற்குமுன் பல விஷயங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
· வர்ணம் என்பது பிறப்பு, குலம், இனம் போன்றவற்றால் உறுதி செய்யப்படுவதில்லை.
· அது குறிப்பிட்ட மனிதனின் குணம், மனோபாவம் ஆகிய இரண்டை மட்டுமே கருத்தில்கொண்டு உறுதி செய்யப்படுகிறது.
· எல்லா மனிதர்களிடமும், சாதரணமாக நான்கு வர்ணங்களின் பண்புகளும் இருக்கும். அவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ, அதைவைத்து அவனது வர்ணம் உறுதி செய்யப்படுகிறது.
· மனிதன் எடுக்கும் முயற்சியின் தீவிரத்தைப் பொறுத்து, அவன் ஒரு வர்ணத்திலிருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாறமுடியும்.
· ஒருவன் தன்னை குறிப்பிட்ட வர்ணத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கலாம். ஆனால், அந்த வர்ணத்திற்குரிய பண்புகள் அவனிடம் இல்லையென்றால், அவன் அந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
· ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவனின் பண்புகள், வேறு வர்ணத்தைச் சேர்ந்தவனின் பண்புகளைவிட உயர்ந்ததாக இருக்கலாம்; அதற்காக அவன் தன்னை உயர்ந்தவனாக எண்ணிக்கொண்டால், அந்த எண்ணமே அவனை அவனது வர்ணப்பிரிவிலிருந்து கீழே இறக்குவதற்கு காரணமாக இருக்கக்கூடும்.
இனி, ஒவ்வொரு வர்ணமாகப் பார்ப்போம்.
...............................................
ஒரு பிராமணனுக்கு இருக்கவேண்டிய சில முக்கிய பண்புகள் – -
· விவேகம்
· சுயசிந்தனை
· பற்றற்ற தன்மை
· பணிவு
· மனதளவில் ஒதுங்கி வாழும் தன்மை
· உடைமைத்தனமின்மை
· உள்ளத்தில் கருணை
எல்லாவித வர்ணங்களின் பண்புகளும் இருந்தாலும், பிராமண வர்ணத்திற்குரிய பண்புகள் அதிகம் இருந்தால் அவனை ‘பிராமணன்’ என்று சொல்லலாம்.
இருந்தாலும், ஒரு பிராமணனிடம் பிராமண வர்ணத்திற்குரிய பண்புகள் 40 சதவிகிதம் மட்டுமே இருந்தால், அவனிடம் “இருக்கவேண்டிய முக்கிய பண்புகள்” இருக்காது. அவனிடம் ‘அஹங்காரம்’, ‘சுயநலம்’ போன்றவை கலந்தே இருக்கும். அவற்றிலிருந்து விடுபட்டால்மட்டுமே, அவனை முழுமையான பிராமணன் என்று அழைக்கலாம்.
பிராமணனைப் பொறுத்தவரை அகத்தாய்வு மற்றும் சுயபரிசோதனை மிக முக்கியம்.
அவன் பக்திமானாக இருந்தால், இறைவனிடம் வேண்டுதல் ஏதும் வைக்கக்கூடாது; மாறாக அவன் ‘இறைவனிடம் சரணடையவேண்டும்’. “ஈஸ்வர ப்ரணிதான்” என பதஞ்சலி முனிவர் சொல்கிறார்.
“கற்க கசடற” என்கிறார் வள்ளுவர். அதற்கு படிநிலைகள் உள்ளன; அவை தெரிதல், அறிதல், புரிதல், தெளிதல், தெள்ளத் தெளிதல், உணர்தல் என்பன.
அதனால்தான் வள்ளுவரும் “ஓதி உணர்ந்தும்” என்கிறார். அதாவது ‘கற்றலில் தொடங்கி, உணர்தலில் முடியவேண்டும்’ என்கிறார்.
வாழ்க்கையின் தத்துவம் புரியும்பொழுது ஒரு உண்மை அவனுக்குப் புரியவரும். அது --
”பெற்றது பொய்யுடல் முன்செய் வினைப்பயன்
உற்றது வெற்றிடம் உலவிடும் பொருட்பயன்
கற்றது நன்னெறி கனிந்திடும் நற்பயன்
மற்றது வருவதோ மன்னவன் அருட்பயன்”
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று நினைப்பது தவறு என்று உணரும்பொழுதுதான் அவன் உண்மையான பிராமணன் ஆகிறான்.
.................................................
ஒரு க்ஷத்ரியனுக்கு இருக்கவேண்டிய சில முக்கிய பண்புகள் – -
· அதிகமான தன்முனைப்பு
· எதிலும் வேகம்
· சேவை மனப்பான்மை
· பொதுநலத்தில் ஆர்வம்
· சுயநலத்தில் ஆர்வமின்மை
· பெரியோர் (சான்றோர்) துணையை நாடுதல்
· தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பது
· பிற உயிர்களிடத்தில் அன்பு
· மானம், அவமானம் போன்றவற்றில் கவனமாக இருப்பது.
பொதுநலத்தில் நாட்டம் அதிகமாக இருப்பதால், ‘பக்தி’ மார்க்கத்தில் மனம் ஈடுபடாது; அவனது பயணம் ‘கர்ம’ மார்க்கத்தில் மட்டுமே இருக்கும்.
பொதுநலவாதியாக இருப்பதனால், பிறரது ஏளனங்கள், கேலிகள், கண்டனங்கள் போன்ற பல விஷயங்கள் அவனது மன அமைதியைக் குலைத்துவிடும்.
அந்த நேரங்களில், அவன் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்யவேண்டும். செயல்புரிவது, சுயபரிசோதனைக்கு நேரத்தை ஒதுக்குவது, அகத்தாய்வு செய்வது (action, withdrawal, contemplation) என ஒன்றன்பின் ஒன்றாக மாறி, மாறி வந்துகொண்டேயிருக்கும்.
அகத்தாய்வு செய்யும்பொழுது குழப்பம் நேரிட்டால், தன்னை சரியான முறையில் வழிநடத்தக்கூடிய சான்றோரின் துணையை நாடவேண்டும். இல்லையெனில், “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனின்” கதையாக ஆகிவிடும். அதன்காரணமாக ‘வர்ணப்பிரிவில்’ கீழிறங்கவும் நேரிடலாம்.
அகத்தாய்வு தொடர்ந்து நடைபெறும்பொழுது, அவனது அஹங்காரத்தின் தீவிரம் குறையக்கூடும். ‘சவிசாரம்’ அதாவது “தனக்குள்ளேயே கேள்விகேட்டு விடையைத்தேடும் பழக்கம்” வரும். நாளடைவில் அவனுக்குள் இருந்த வேகம் குறைந்து, மனம் அமைதியாக சிந்திக்க ஆரம்பிக்கும்.
நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நம்மை மீறிய சக்தி ஒன்று உள்ளது என்ற உண்மை புரியும்; அவனை அறியாமலேயே, அவன் ‘ஞான’ மார்க்கத்தில் நுழைந்துவிடுவான்.
அதன்பின், அவன் ‘கர்ம’ மார்க்கத்தில் ஈடுபட்டாலும், தன்னை இறைவனின் ‘கருவியாக’ எண்ணத்தொடங்குவான்.
...............................................
ஒரு வைஸ்யனுக்கு இருக்கும் சில முக்கிய பண்புகள் – -
· அதிகமான தன்முனைப்பு
· எதிலும் வேகம்
· சுயநலத்தில் ஆர்வம்
· பொதுநலத்தில் ஆர்வமின்மை
· தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க தயங்குவது
· மானம், அவமானம் பற்றி கவலை இல்லாதிருத்தல்
அவனிடம் ‘பக்தி’ மார்க்கம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைவனிடம் இது வேண்டும், அது வேண்டும் என்பதாகத்தான் அவனது பக்தி இருக்கும். ‘சரணாகதி’ இல்லாதவரை, உண்மையான பக்தி இருக்காது என்பது அவனுக்குப்புரியாது.
இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற ‘பேராசை’ இருப்பதால், எது இருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி மட்டும் இருக்காது.
தனது வாழ்க்கை வட்டத்திற்குள் இருப்பவர்களிடம் ‘பாசம்’ அதிகமாக இருக்கும்; வட்டத்திற்கு வெளியில் இருப்பவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
‘பேராசை’, ‘பாசம்’ இரண்டும் மிகுந்து காணப்படுவதால், அவனிடம் எப்பொழுதும் பயமும், கோபமும் இருந்து கொண்டேயிருக்கும்.
ஒருவேளை தனது வாழ்க்கைமுறை சரியில்லை என உணர்ந்தால், பிறர் நலத்திலும் நாட்டம் கொள்ளலாம். அப்படி நிகழ்ந்தால், அவன் க்ஷத்ரிய வர்ணத்தைச் சேர்ந்தவனாகி விடுகிறான்.
உண்மையான ‘சரணாகதி’ இருந்தால், அவனை அறியாமலேயே அவன் ஞானம் பெற்ற மனிதனாக மாற முடியும்.
அவன் அறிவு மிகுந்த மனிதனாக இருந்து, கற்கவேண்டிய நூல்களைக் கற்று, தெளிவுபெற்று உண்மைகளை உணர்ந்தால், அதன் மூலமாகவும் அவன் ஞானம் பெற்ற மனிதனாக மாற முடியும்.
................................................
ஒரு சூத்திரனுக்கு இருக்கும் சில முக்கிய பண்புகள் - -
· சுயசிந்தனை இல்லாமை
· சோம்பல் மிகுந்த வாழ்க்கை
· மற்றவரின் ‘கருவி’யாக செயல்படுவது
· பிறர் தூண்டிவிட்டால் உணர்ச்சிவசப்படுவது
· எதிர்கால கனவுகள் ஏதும் இல்லாதது
· தன்னையே நொந்துகொண்டு புலம்பித் திரிவது
சுயமாக சிந்தித்து செயல்படுவது எப்படி என்று அவனுக்குத் தெரியாது. எப்பொழுதும் யாராவது ஒருவரின் கைப்பாவையாகவே செயல்படுவான்.
அவன் யாரைச் சார்ந்திருக்கிறானோ, அதைப்பொருத்து அவன் கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவோ அல்லது நம்பிக்கை இல்லாதவனாகவோ இருப்பான்.
நல்ல வழிகாட்டுதல் இல்லையென்றால், அவனது வாழ்க்கை சிதிலமடைந்ததாகவே இருக்கும்.
நல்ல வழிகாட்டி இருந்து, ‘சரணாகதி’ தத்துவமும் புரிந்தால், அவனுக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்கும்.
ஞானம் என்றால் என்னவென்று தெரியாமலே, அவன் அமைதியை அறிந்துகொள்வான்.
..................................................
ஒரு பிராமணன் ஞானம் பெறுவதற்கு – மனம் அமைதி அடைவதற்கும் அதன்மூலமாக உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை உணர்வதற்கும் – அறிவைப் பயன்படுத்துகிறான். அதையே ‘ஞான மார்க்கம்’ என்று சொல்கிறார்கள்.
“அறிந்து வருவது ஞான மார்க்கம்”
ஒரு க்ஷத்ரியன் ஞானம் பெறுவதற்கு அவன் செய்யும் சேவை, அதன்மூலம் அவன் பெரும் அனுபவங்கள் (நல்லதோ, கெட்டதோ), தொடர்ந்து அவன் கடைப்பிடிக்க நேரிடும் அகத்தாய்வு முதலியன உதவி செய்யும். அவன் சந்திக்கும் ஏளனங்கள், கேலிகள், கண்டனங்கள் போன்றவை அவனை நிலைகுலையச் செய்தாலும், போராட்ட குணம் நிரம்பப் பெற்றதனால் தனக்குள்ளேயே போராடி தனது குழப்பங்களுக்கு விடை தேடுவான். கடைசியில், ‘சவிசாரம்’ அதாவது “தனக்குள்ளேயே கேள்விகேட்டு விடையைத்தேடும் பழக்கம்” வரும். அதற்கு தக்க சான்றோரின் துணை உதவி செய்யும்.
எவ்வளவு அடிபட்டாலும், அவன் செய்த “சேவைகளே” அவன் ஞானம் பெறுவதற்கு மூலகாரணமாக இருக்கும்.
“அடிபட்டு வருவது கர்ம மார்க்கம்”
வைஷ்யன், சூத்திரன் இருவரும் பக்தியில் மனதை செலுத்துபவர்கள். அவர்கள் எப்பொழுதும் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள். தக்க துணையுடன் அவர்கள் ‘சரணாகதி’ தத்துவத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்தால், காரணத்தை அறியாமலேயே அவர்களுக்கு ஞானம் கிடைக்கும்.
“அறியாமல் வருவது பக்தி மார்க்கம்”
.................................................
ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் மூலம் வாழ்க்கையில் வெற்றிபெற நினைப்பவர்கள் – உள்ளார்ந்த அமைதியை விரும்புகிறவர்கள் – எல்லாராலும் எவ்வளவு முயன்றாலும் எல்லைக்கோட்டை அடைய முடிவதில்லை. பலர் இதில் பின்தங்கிவிடுவார்கள்.
இவர்களைத் தவிர, இந்த மார்க்கங்களை விரும்பாதவர்களும் இருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தியான மார்க்கத்தைக் கடைப்பிடித்தால் இறுதி வெற்றியை அடையலாம்; ஆனால் அதற்கே உரித்தான படிநிலைகள் உள்ளன.
தியான மார்க்கத்தில் முழுமை அடைவதற்கு, ரிஷி பதஞ்சலி எட்டு படிநிலைகளை அமைத்திருக்கிறார். அவை, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு படிநிலைகள்.
இவை ஒவ்வொன்றாக கடக்கப்படவேண்டியவை. சத்துவ குணம் நிறைந்த மனிதன் மட்டுமே நேரடியாக ‘தாரணை’ நிலைக்குப் போகமுடியும். ஏனெனில் ‘பிரத்யாஹாரம்’ என்பது அவனுக்கு இயல்பான ஒன்று.
ஆசனத்தையும், பிராணாயாமத்தையும் பயிற்சி செய்கிறவர்கள் தியான நிலை வரைக்கும் போக எண்ணினால், அவர்கள் நிச்சயம் யமம், நியமம் இரண்டையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும். யமம், நியமம் என்றால் என்ன என்பதை ஒரு குறள் அழகாக குறிப்பிடுகிறது.
“செய்தக்க அல்ல செயக்கெடும் – செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”. - - திருவள்ளுவர்
இந்த இரண்டு கட்டளைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அந்த மனிதனால் தியான நிலையை அடைவது மிகவும் கடினம். அவனது பாதை, இலக்கை சென்று அடைய உதவாது.
எட்டு படிநிலைகளில் ஒன்றான ‘பிரத்யாஹாரம்’ என்பது, வெளியில் ஓடும் மனதை அகத்தாய்வுக்காக உள்முகமாக திருப்புவதையே குறிக்கிறது. முதல் இரண்டு கட்டளைகளான ‘யமம் மற்றும் நியமம்’ ஆகியவற்றை கடைப்பிடிக்க முடியாத மனிதனால், ‘பிரத்யாஹாரத்தை’ மேற்கொள்ள முடியாது.
“கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்”
.................................................
வர்ணப்பிரிவு என்பது மனிதனுக்காக ஏற்பட்டது என்றாலும், அது சரியாக செயல்படாவிட்டால் ஒட்டுமொத்த சமூகத்தையே பாதித்துவிடும். அதை நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதற்குமுன், வர்ணப்பிரிவின் கட்டமைப்பை மீண்டும் ஒருமுறை சுருக்கமாக அறிந்துகொள்வோம்.
..........................
சுயசிந்தனை இல்லாதவன்
அடுத்தவனின் கைப்பாவையாக செயல்படுபவன் .. சூத்திரன்
..........................
சுயசிந்தனை உள்ளவன்
வேகமாக செயல்படுபவன் சுயநலவாதி .. வைஸ்யன்
..........................
சுயசிந்தனை உள்ளவன்
வேகமாக செயல்படுபவன்
பொதுநலவாதி
.. க்ஷத்திரியன்
..........................
சுயசிந்தனை உள்ளவன்
விவேகமாக சிந்திப்பவன் வழிகாட்டியாக வாழ்பவன்
.. பிராமணன்
.............................................
பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் ‘பிராமணன்’, மார்பிலிருந்து பிறந்தவன் ‘க்ஷத்ரியன்’, வயிற்றிலிருந்து பிறந்தவன் ‘வைஷ்யன்’, காலிலிருந்து பிறந்தவன் ‘சூத்திரன்’ என்று சொல்கிறார்களே; அது சரியா என்று நண்பர் ஒருவர் கேட்டார்.
இதனை நேரடியாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அவர்கள் மறைமுகமாக சொல்வது வேறு ஒன்றை.
‘பிராமணன்’ என்பவன் விவேகமாக சிந்திக்கக்கூடியவன் அதற்கு அவனது அறிவு தெளிவாக இருக்கவேண்டும். அறிவு இருக்குமிடம் புத்தி; அது தலையில் இருப்பதால், தலையிலிருந்து பிறந்தவன் என்று சொல்கிறார்கள்.
‘க்ஷத்ரியன்’ என்பவன் பிற உயிர்களிடத்தில் அன்பு வைப்பவன். அவனது உள்ளத்தில் பிறரை நேசிக்கும் பண்பு நிறைந்திருக்கும். அதற்கு நல்ல மனம் வேண்டும். மனம் என்று சொல்லும்பொழுது நாம் மார்பு பகுதியையே குறிப்பிடுகிறோம். (அது தவறு என்றாலும்கூட). ஆகையால்தான், அவனை மார்பிலிருந்து பிறந்தவன் என்று சொல்கிறார்கள்.
‘வைஷ்யன்’ என்பவன் தான், தனது குடும்பம் என்று வாழ்பவன். அவன் மற்றவர்களைப் பற்றி கவலை கொள்வதில்லை. அப்படி மற்றவர்களுக்காக ஏதேனும் செய்தால், அதில் ஏதும் ஆதாயம் இருந்தால்தான் செய்வான். தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பவன். அதனால்தான் அவனை வயிற்றிலிருந்து பிறந்தவன் என்று சொல்கிறார்கள்.
‘சூத்திரன்’ என்பவன் சுயமாக சிந்திக்கத் தெரியாதவன். பிறரது கட்டளைக்கேற்ப நடப்பவன்; அந்தக் கட்டளை சரியானதுதானா என்றுகூட சிந்திக்கமாட்டான். சுயமாக சிந்திக்கத் தெரியாமல், பிறரது கட்டளைகளை ஏற்று அதன்படி நடப்பதால், அவனை காலிலிருந்து பிறந்தவன் என்று சொல்கிறார்கள்.
..............................................
எந்த இடத்தில் எந்த வர்ணத்தைச் சார்ந்தவன் இருக்கவேண்டுமோ, அந்த இடத்தில் அந்த வர்ணத்தைச் சார்ந்தவன் இல்லையென்றால் சமுதாயம் சீர்கேடு அடைவதை தவிர்க்கமுடியாது.
மீண்டும் ஒருமுறை சொல்கிறோம்; வர்ணம் என்பது பிறப்பு, குலம், இனம் போன்றவற்றைவைத்து வருவதல்ல. மாறாக, அது மனிதனின் குணம், மனோபாவம் இவற்றின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது.
சமுதாய சீர்கேடுகளுக்குக்கான காரணங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தக் காரணங்களை சொல்வதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்.
இதைப் படிக்கும் வாசகர்கள், வர்ண தத்துவத்தின் உண்மைகளையும், அவற்றை எங்கு, எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதையும் புரிந்து கொள்வதற்காக மட்டுமே இவற்றை சொல்கிறோம்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” .. .. குறள் 517
ஒரு செயலைச் செய்வதற்கு, அதற்கான தகுதி உள்ள வர்ணத்தைச் சேர்ந்த மனிதனிடம் அந்த செயலை ஒப்படைத்தால், அந்த செயல் நன்கு நடைபெறும்; இல்லையெனில் சமுதாயம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைவதை தவிர்க்கமுடியாது.
.................................................
எந்தவொரு நாட்டை எடுத்தாலும், அங்கு அரசியலும், பொருளாதாரமும் பின்னிப்பிணைந்திருப்பதை பார்க்கலாம். ஒரு நாட்டின் பொருளாதாரம் முன்னேறுவதற்கு, நல்ல அரசியல் தலைமை தேவை.
நாம் குறிப்பிட்ட நான்கு வர்ணங்களில், எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் பங்கு பெறலாம்?
ஒரு அரசியல்வாதிக்கு சாதிக்கும் எண்ணம், செயலில் ஊக்கம், நினைத்தை முடிப்பதில் விடாமுயற்சி போன்ற பண்புகள் இருக்கவேண்டும்; அதேநேரம் அவன் ஒரு பொதுநலவாதியாகவும் இருக்கவேண்டும். அது ஒரு க்ஷத்ரியனாகத்தான் இருக்கமுடியும்.
ஊக்கமும், வேகமும் நிறைந்த மனிதன், தவறுகள் செய்யவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, அவனுக்கு நல்ல வழிகாட்டி என ஒருவர் வேண்டும். அதற்கு பொருத்தமானவர் ஒரு பிராமணன் மட்டுமே.
என்னதான் சிந்தித்தாலும், திட்டமிட்டாலும், திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உதவியாக, பலரது சேவை தேவைப்படலாம். அவர்களுக்கு சிந்தனை, திட்டமிடுதல் போன்றவை தேவையில்லை. அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைத் தவறு செய்யாமல் நிறைவேற்றினால் போதும். அதற்கு சூத்திர வர்ணத்தார் பொருத்தமானவர்கள்.
ஆக, அரசியலுக்குத் தேவை பிராமணன், க்ஷத்ரியன் மற்றும் சூத்திரன் ஆகியோரின் பங்களிப்பு மட்டுமே.
அப்படியானால், அரசியலில் வைஷ்யனின் பங்கு என்று எதுவும் கிடையாதா? அவன் அரசியலுக்கு அப்பால் இருந்துகொண்டு, ஏதேனும் செய்யலாம்; எந்தக் காரணம்கொண்டும் அவன் அரசியலுக்கு வரக்கூடாது. வந்தால் --
“மக்கள்நலம், மக்கள்நலம் என்றே சொல்லுவார் – தம்
மக்கள்நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்” என்ற கதைதான்.
................................................
ஆசிரியர் தொழில் என்பது ஒரு புனிதமான தொழில்.
ஆசிரியராக வேலை பார்ப்பவர் மாணவர்களுக்கு பாடங்களை நல்ல முறையில் கற்றுக்கொடுப்பதோடு, அவர்களுக்கு சிந்திக்கவும் கற்றுக் கொடுக்கவேண்டும். உணர்ச்சி வசப்படாமல், புத்தியை (அறிவை) எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.
சுயசிந்தனை உள்ள மனிதரால் மட்டுமே, மாணவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுக்கமுடியும்.
ஒரு ஆசிரியராக வேலை பார்ப்பவர், அவர் வெளியில் எப்படி இருந்தாலும், மாணவரின் முன் நிற்கும்பொழுது, ‘பிராமண’ அல்லது ‘க்ஷத்ரிய’ தர்மங்களையே கடைப்பிடிக்கவேண்டும்.
அப்படி கடைப்பிடித்தால், அவரது மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
மாறாக, பள்ளி/கல்லூரிகளில் ஒரு ஆசிரியர் ‘வைஷ்ய’, ‘சூத்திர’ தர்மத்தைக் கடைப்பிடித்தால், மாணவர்களின் நிலை என்னவாகும்? ...........................................
ஒரு தொழிற்சங்கவாதி என்பவன் போராட்ட குணம் உள்ளவனாக, தொழிலாளர்களின் நலம் பேணுபவனாக இருப்பான். நியாயத்திற்காக நீதி கேட்டு போராடுவான்.
தொழிலாளர்களின் உரிமைக்காக போராட, தன்னை வருத்திக்கொள்ள தயங்கமாட்டான். அதற்காக தான் சந்திக்கும் இடர்பாடுகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வான்.
ஒரு க்ஷத்ரியனுக்கு மட்டும்தானே இந்த பண்புகள் இருக்கும். ஆனால், எல்லா தொழிற்சங்கவாதிகளும் ‘க்ஷத்ரிய’ வர்ணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களா?
அப்படித்தான் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அனைவரும் தங்களுக்கு நிர்வாகம் கொடுத்த வேலைகளைப் பொறுப்புடன் செய்கிறார்களா?
இல்லையென்றால், அது மறைமுகமாக சமுதாயத்திற்கு செய்யும் கேடுதானே?
...........................................
நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் சார்பாக பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன.
அவர்கள் கட்சி நடத்துவதற்கு தேவையான பணம் முதலாளிகளிடமிருந்தும் மற்றும் தொழிற்சங்கங்கள் மூலமாகவும்தான் வருகின்றன. அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும், அவர்கள் நடத்தும் தொழிற்சங்கள்தான் பேருதவியாக இருக்கின்றன.
அந்த அரசியல் கட்சிகள், கம்யூனிசத்தை நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றின் கொள்கைகளைத் தெரிந்தோ, தெரியாமலோ அறிவித்துக்கொண்டே இருப்பார்கள்.
கம்யூனிசக் கொள்கைகளைப்பற்றி மணிக்கணக்காக பேசலாம். ஆனாலும், அவற்றை சுருக்கமாக நாலே வார்த்தைகளில் சொல்லிவிடலாம். அவை “அடுத்தவன் வயிற்றில் அடிக்கக் கூடாது” என்பதுதான்.
அரசியல்கட்சிகள் ‘க்ஷத்ரியனுக்குரிய’ பண்புகளைப் பெற்றிருக்கவேண்டும் அல்லவா? அவர்களுக்கு தொழிலாளர்களின் நலனைவிட, பொதுமக்களின் நலன்தானே முக்கியம்?
அப்படியானால், தொழிற்சங்கங்கள் ‘தேவைக்கேற்ற ஊதியம் கொடு’ என்று போராடும்பொழுது துணைநிற்கும் அரசியல் கட்சிகள், என்றாவது தொழிற்சங்கவாதிகளிடம் அல்லது அவர்கள் மூலமாக தொழிலாளிகளிடம் ‘ஊதியத்திற்கேற்ப உழைப்பைக் கொடு’ என்று சொன்னதுண்டா?
அப்படி சொல்லியிருந்தால் அது நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறதா என்று பார்த்திருக்கிறார்களா?
ஊதியத்திற்கேற்ப உழைப்பைக் கொடுக்காதபோது, அது மறைமுகமாக சமுதாயத்தைத்தானே பாதிக்கும்?
..................................................
அரசு அலுவகங்களில் முதல்நிலை ஊழியர் முதல் கடைநிலை ஊழியர் வரை வேலை பார்ப்பதுண்டு. அந்த அலுவகங்களில் நான்கு வர்ணத்தாரும் இருப்பதுண்டு.
பலவிதமான பணிகள் இருந்தாலும், அரசு அலுவகங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்காகவே பணியாற்றுகின்றன. “மக்களுக்காக பணி” என்று சொன்னால், அந்த அலுவகங்களில் பணியாற்றுகிறவர்கள் ‘பிராமண’, ‘க்ஷத்ரிய’ மற்றும் ‘சூத்திர’ வர்ணங்களின் தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கவேண்டும்.
'வைஷ்ய’ வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றினாலும், அலுவகத்தில் ‘வைஷ்ய’ தர்மத்தைக் கடைப்பிடிக்ககூடாது.
ஆனால், பொறுப்பில்லாமல் பணியாற்றுவது, மக்களை அலைக்கழிப்பது, கையூட்டு பெறுவது, கடைநிலை ஊழியர்களைத் தங்களின் தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்துவது போன்ற பல விஷயங்களைப் பார்க்கும்பொழுது, பெரும்பாலோர் ‘வைஷ்ய’ தர்மத்தைக் கடைப்பிடிப்பதைபோல் தோன்றுகிறதே!?
இது சமுதாயத்துக்கு நல்லதுதானா? ............................................
அடுத்து காவல் துறை மற்றும் நீதித் துறை இரண்டையும் எடுத்துக்கொள்வோம். இங்கு பணியாற்றுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது சட்டமா, நியாமா அல்லது தர்மமா?
சட்டம், நியாயம், தர்மம் இவற்றிற்கிடையே என்ன வித்தியாசம்?
ஒரு கல்லூரி ஆசிரியர் தனியாக மாணவர் பயிற்சிப் பள்ளி நடத்துகிறார். அவர் ஆசிரியராக வேலை பார்ப்பதால், அதனை தன் மனைவியின் பெயரில் நடுத்துகிறார்.
சட்டப்படி அந்தப்பள்ளி அவரது மனைவியின் பெயரில் நடப்பதால், அவர் குற்றவாளி அல்ல.
உண்மையில் அந்தப்பள்ளியை அவர்தான் நடத்துகிறார். ஆதலால் நியாயப்படி அவர் குற்றவாளி ஆகிறார்.
ஆனால், அந்த பயிற்சியை நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் தனது கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக செலவிட்டு வருகிறார். எனவே தர்மப்படி பார்த்தால், அவர் குற்றவாளி அல்ல.
காவல் துறை அதிகாரிகள் சட்டப்படி நடந்தாலும், நீதித் துறையில் உள்ளவர்கள் சட்ட நியதிகளை கவனத்தில் கொள்வதுடன், கூடவே தர்மம் என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டாம?
சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கலாம்; அதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று தெரிந்தும், அவர்களுக்காக வக்கீல்கள் வாதாடுகிறார்களே, அது தர்மப்படி சரிதானா?
க்ஷத்ரிய தர்மத்தை ஒரு வக்கீல் கடைப்பிடித்தால், அவர் அந்தக் குற்றவாளிக்காக வாதிடுவாரா?
நீதிபதிகள் தாங்கள் வழங்கும் தீர்ப்பு சட்டப்படி சரியாக இருந்தாலும், அது தர்மத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? .............................................
கூட்டுறவு வங்கி, கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு சங்கம், சுய உதவிக் குழுக்கள் என பல்வேறு துறைகளில் பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகின்றன.
அந்தந்த துறைகளைச் சார்ந்தவர்கள், எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளலாம்.
ஆனால், சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களாக இருப்பதற்கு, அவர்கள் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும்?
‘தமோ’ குணத்தைச் சார்ந்த ‘சூத்திரன்’, சோம்பல் மிகுந்து காணப்படுவான்; எனவே, அவனால் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட முடியாது.
‘பிராமண’ வர்ணத்தைச் சேர்ந்தவர்கள், விவேகம் நிறைந்த மனிதர்கள்; ஆனாலும், அவர்களிடம் தன்முனைப்பு அதிகம் இருக்காது. எனவே, அவர்களை நிர்வாகத்தில், தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கான இடத்தில் மட்டுமே வைக்கலாம்.
நிர்வாகம் சிறப்பாக செயல்பட, நிர்வாக உறுப்பினர்கள் ‘ரஜோ’ குணம் உள்ளவர்களாக, செயல்திறமை நிறைந்தவர்களாக இருக்கவேண்டும்.
‘க்ஷத்ரியன்’ மற்றும் ‘வைஷ்யன்’ இருவரிடமும் செயல்திறமை அதிகம் இருக்கலாம். ஆனாலும் ‘பொதுநலத்தில்’ அதிக நாட்டம்கொண்ட ‘க்ஷத்ரியன்’ மட்டுமே இதற்கு பொருத்தமானவன்.
மாறாக, ஒரு சுயநலவாதியான ‘வைஷ்யன்’ அதில் இருந்தால், அந்த அமைப்பின் நிலை என்னவாகும் என்பதை கண்கூடாகவே பார்க்கலாம்.
...............................................
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு அமெரிக்க விஞ்ஞானிகள் குழு மாபெரும் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. அதன்படி சுமார் 15 லட்சம் மக்களிடம், உலகளாவிய அளவில், கருத்துக்கணிப்பு நடத்தியது. அவர்களிடம் 44 முதல் 300 வரை கேள்விகள் கேட்கப்பட்டன.
அந்தக்குழு தங்களது கருத்துக்கணிப்பு முடிவை “Nature Human Behaviour” என்ற பத்திரிகையில் வெளியிட்டது.
அந்த முடிவின்படி, மனிதர்கள் நான்கு வகையானவர்கள் என்று உறுதிப்படுத்தி உள்ளனர் .. அதாவது “Reserved, role model, self-centred and average” என நான்கு பிரிவுகள்
மனிதனின் செயல்பாடுகளை வைத்து, அவனை வகைப்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளனர். பல்வேறு கட்டத்தில், பல்வேறு குழுக்கள் நீண்ட காலமாக நடத்திவந்த ஒரு பிரச்சனைக்கு, இப்பொழுது நடந்த கருத்துக்கணிப்பு முடிவே சரியானது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
மனிதர்களின் இந்த நான்கு பிரிவுகளை, இந்திய தத்துவ ஞானிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்து உள்ளனர்.
“Reserved, role model, self-centred and average” என்று விஞ்ஞானிகள் குழு இப்பொழுது சொல்வதைத்தான், அவர்கள் “பிராமணன், க்ஷத்ரியன், வைஷ்யன் மற்றும் சூத்திரன்” என்று கூறி உள்ளனர்.
இந்தப் பிரிவுகள், மனிதனின் ‘குணம், மனோபாவம்’ இரண்டையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. ............................................
மனிதனின் வர்ணப்பிரிவுகள் அவனது குணத்தையும், மனோபாவத்தையும் பொறுத்து அமைகின்றன என்று பார்த்தோம்.
குணம், மனோபாவம் இரண்டையும் எடுத்துக்கொண்டால், மனோபாவம் மனிதனின் குணத்தை ஒட்டி அமைகிறது. குணம் எதன்காரணமாக அமைகிறது?
நினைத்துப் பார்த்தால் நிறைய கேள்விகள் வருகின்றன -–
· ஆங்கிலத்தில் “inborn quality” என்று சொல்வார்கள். அப்படியென்றால், மனிதன் பிறக்கும்பொழுதே, குணமும் சேர்ந்தே வருகிறதா?
· “பிறவி குணத்திற்கு மட்டை வைத்துக் கட்ட முடியாது” என்று சொல்வதன் அர்த்தம் என்ன?
· “தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும்” – சின்ன வயதில் ஏற்பட்ட பழக்கம் கடைசிவரை மாறாது என்று சொல்வது உண்மையா?
· ஒரே தாய் வயிற்றில் பிறந்தாலும், அவளது பிள்ளைகள் ஒவ்வொன்றும் மாறுபட்ட குணத்துடன் இருப்பது எதனால்?
சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.
................................................
‘மனிதன் எதை நினைக்கிறானோ, அதாகவே மாறுகிறான்’ என்பது சான்றோர் வாக்கு. (Man is what he thinks).
மனிதன் எதை நினைக்கமுடியும்? அவனது மனதில் இருக்கும் பதிவுகளைப் பொறுத்தே அவனது எண்ணமும் இருக்கும்.
அவனது சிறு வயதில், பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் சொல்வது அவனுக்குள் பதிவுகளை ஏற்படுத்துகின்றன.
அவன் வளர, வளர புற உலகில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள், அவனுக்குள் புதிய பதிவுகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.
பதிவுகள் மனம், புத்தி இரண்டிலும் நிகழ்ந்தாலும், மனதில் ஏற்படும் பதிவுகளே அந்த மனிதனின் குணத்தை நிர்ணயம் செய்வதற்குக் காரணமாக அமைகின்றன.
மனம் என்று சொல்லும்பொழுது உணர்வு மனம், உணர்வற்ற மனம் (ஆழ்மனம்) என்று இரண்டுவித மனங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த இரண்டு மனமும் ஒரே இடத்தில்தான் உள்ளதா? அல்லது வேறு, வேறு இடத்தில் உள்ளதா?
.............................................
மனம் எங்கிருக்கிறது என்று கேட்டால், பெரும்பாலோர் மார்புப் பகுதியைக் காட்டுவார்கள்; ஆனால், அது இயங்கும் இடம் மூளையின் ஒரு பகுதியில்தான்.
ஒரு பகுதியில்தான் என்றாலும், அது இரண்டு கூறுகளாக செயல்படுகிறது. அதனால்தான் மனம், ஆழ்மனம் அல்லது உணர்வு மனம், உணர்வற்ற மனம் என்று இரண்டு விதமாக குறிப்பிடுகிறோம்.
கடலின் குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டால், கடலின் மேற்பரப்பு என்றும், அடிஆழம் (தரைப்பகுதி) என்றும் கூறுகிறோம் அல்லவா? அதைபோன்றே மனதிலும் உணர்வு மனம் (மேற்பரப்பு), உணர்வற்ற மனம் (ஆழ்மனம்) என்று இரண்டு கூறுகள்.
கடலில் சில பொருட்களைப் போட்டால், அவை மேற்பரப்பிலேயே தங்கிவிடும்; சில பொருட்கள் கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கி தரைப்பகுதியை சென்றடையும்; சில பொருட்கள் நேரடியாக, விரைவாக தரைப்பகுதிக்கு சென்றுவிடும்.
மனிதனுக்குள் ஏற்படும் பதிவுகளும் இதைப்போன்றே மூன்று விதமாக நிகழ்கின்றன.
..............................................
அனுபவங்கள் அனுபவங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. (Experiences are gained by Experiences).
மனிதன் வெளி உலகில் உள்ள நபர்களிடமோ அல்லது பொருட்களிடமோ தொடர்பு கொள்ளும்பொழுது அவனுக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அந்த அனுபவங்கள் காரணமாக ஏற்படும் பதிவுகள் மூன்று விதமாக நிகழ்கின்றன.
உதாரணத்திற்கு சினிமா பாடல்களை எடுத்துக்கொள்வோம். சில பாடல்கள் நமக்குப் பிடித்திருக்கும்; ஆனாலும் அடுத்த பாடலைக் கேட்டதும் முதலில் நாம் ரசித்த பாடல் நம் மனதைவிட்டு நீங்கிவிடும். இது ஆற்றில் மிதக்கும் சருகைப் போன்றது; ஒரு நேரம் இருக்கும், பின் அது அங்கிருந்து அகன்றுவிடும்.
சில பாடல்கள் நமக்குப் பிடித்திருந்து, நாம் அடிக்கடி அதை நினைத்துப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தால், அது பழக்கமாக மாறி நாளடைவில், அந்தப் பாடல் நம் ஆழ்மனம் வரை சென்றுவிடும்.
ஒரு சில பாடல்கள் கேட்கும்பொழுதே நம் மனதை ஈர்த்துவிடும். அந்த நேரங்களில் அந்தப்பாடல் நேரடியாக நம் ஆழ்மனம்வரை சென்றுவிடும்.
இது தவிர, வேறு ஒரு வகையிலும், ஆழ்மனதில் பதிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சில சம்பவங்கள் நம்மை ‘அகத்தாய்வில்’ ஈடுபடவைக்கும். அதன்விளைவாகவும் ஆழ்மனதில் புதிதாக பதிவுகள் நிகழலாம்.
..........................................
நமக்குப்பிடித்த ஒன்றை திரும்பத் திரும்ப செய்யும்பொழுது (அது மனதளவில் நடந்தால்கூட), அந்த செயல் பழக்கமாக மாறி அந்தப் பழக்கம் ஆழ்மனம் வரை சென்று தங்கிவிடுகிறது.
இத்தகைய பதிவுகளே நமது குணத்தை நிர்ணயம் செய்கின்றன. (இதனையே நமது முன்னோர்கள் ‘வாசனா’ பதிவுகள் என்கிறார்கள்).
இந்தப் பதிவுகளின் தரத்தைப் பொறுத்தே, ஒரு மனிதனின் குணமும், அதன் மூலமாக அவனது மனோபாவமும் அமைகின்றன.
ஒரு மனிதனின் வாழ்க்கை நெறியை நிர்ணயம் செய்வதில் முக்கிய காரணியாக இருப்பது இந்த ஆழ்மனப் பதிவுகளே.
இந்தப் பதிவுகளின் தரம் உயர உயர, அந்த மனிதனும் அவனது வர்ணப் பிரிவில் முன்னேற முடியும்.
..............................................
ஒரு மனிதனின் ஆழ்மனப் பதிவுகளின் தரத்தை உயர்த்துவதற்கு, அவன் கடைப்பிடிக்கும் ‘அகத்தாய்வே’ முக்கிய பங்கு வகிக்கிறது.
“சத்சங்கம்” போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால்கூட, அதனைத் தொடர்ந்து அவன் கடைப்பிடிக்கும் ‘அகத்தாய்வு’ மட்டுமே அவனது ஆழ்மனப் பதிவுகளின் தரத்தை உயர்த்துவதற்கு உதவமுடியும்.
..............................................
எந்தவொரு செயலை எடுத்தாலும், அந்த செயலுக்கு ஒரு நோக்கமும், அந்த செயலுக்குப்பின் ஒரு விளைவும் இருக்கும்.
இதில் செயல் நிகழ்காலம் என்றால், நோக்கம் என்பது கடந்தகாலம்; விளைவு என்பது எதிர்காலம். இந்த மூன்றிற்கும் இடையே ஒரு ஒத்திசைவு இருந்தால், அதனால் எந்தவித பின்விளைவும் நமக்குள் தோன்றாது.
ஆனால், நமது நோக்கத்திற்கு மாறாக விளைவு இருந்தால், நிச்சயமாக நமக்குள் ஒரு பின்விளைவு தோன்றும்.
அந்த நேரங்களில், நடந்த தவறுக்குக் காரணமாக இருந்தது நமது செயலா அல்லது நமது நோக்கமா என்று ஆய்வு செய்யவேண்டும். தவறு நமது செயலில் என்றால், மறுமுறை நமது செயலை சரியானமுறையில் செய்துவிடலாம்.
தவறுக்குக் காரணம் நமது நோக்கமே என்றால், நாம் அகத்தாய்வில் ஈடுபடவேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் நமது வர்ணப்பிரிவு உயர்வது தடைப்பட்டுவிடும்.
................................................
பின்குறிப்பு:- இது பற்றி இன்னும் தெளிவாக அறிய விரும்பினால், “Path of Wisdom” அல்லது “மழலையின் கீதை – 5 பாகங்கள்” ஆகிய பிரிவுகளைப் படித்துப் பாருங்கள்.
(Refer "piththantnv@blogspot.com" in Google search).
No comments:
Post a Comment