Monday, 21 November 2022

பகவத்கீதையும் நானும்

பகவத்கீதையும், நானும் 
பதிவு 1

அன்பு நண்பர்களுக்கு, 

பகவத்கீதையுடன் எனக்கு பந்தம் எப்படி ஏற்பட்டது என சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், அது ஒரு 'சுய தம்பட்டமாக' தோற்றமளிக்குமோ என்ற எண்ணம் வரும். அதனால் அந்த எண்ணத்தையே மறந்து விடுவேன்.

ஆனால், பகவத்கீதையைப் பற்றி, அதிலும் குறிப்பாக ''வர்ணாஸ்ரம தர்மம்" பற்றி, தவறான எண்ணங்கள், கடுமையான வார்த்தை பிரயோகங்கள், வெறுப்பான உணர்வு முதலியவற்றை பார்க்கும்பொழுது, நமது அனுபவத்தை சொல்லவேண்டும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

கீதையை ஆதரித்தும், எதிர்த்தும் பலர் பேசுவதை பார்த்து, கீதையை படிப்பதா, வேண்டாமா என சிலர் குழப்பமடைவார்கள்.

அவர்களுக்கு எனது அனுபவம் பயன்படலாம் என்ற எண்ணம் காரணமாக இந்த பதிவுகள் வருகின்றன.

எதனையும் மிகைப்படுத்தாமல் இந்தப் பதிவுகள் வருகின்றன.

இது என்னுடைய கடமை என தோன்றுகிறது; இந்த தொடருக்கான பலன் "இறைவனின் விருப்பம்".

                 (தொடரும்)

பகவத்கீதையும், நானும்
பதிவு 2

கீதையின் உருவாக்கம் பற்றி பலவிதமான கருத்துக்கள் உண்டு. அவைகளைப் பற்றி நான் என்றுமே கவனத்தில் கொள்வதில்லை. அதைப்பற்றி ஆராயவேண்டியது பண்டிதர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்றோர்களே.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் 
....எப்பொருள் எத்தன்மைத் தாயினும் ....
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்கிறார் வள்ளுவர்.

எனவே எனது நோக்கமெல்லாம் கீதை சொல்லும் தத்துவங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.

ஆனால், அது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை.

சுவாமி சின்மயானந்தரிடம் ஒரு அன்பர் கேட்டது,
"நான் கீதையை நிறைய தடவை படித்துவிட்டேன்; ஒன்றுமே புரியவில்லை".

அதற்கு சுவாமி சின்மயானந்தர் கூறிய பதில் "நீ கீதைக்குள் புகுந்து ஒரு புண்ணியமும் இல்லை; அது உனக்குள் புகவேண்டும். அப்பொழுது அது அதிசயங்களை நிகழ்த்தும்".

இது நான் அனுபவித்த உண்மை. கீதை எனக்குள் புகுந்தபின், என்னை ஆட்டிப்படைத்த அஹங்காரம் குறையத்தொடங்கிற்று.

                      (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 3

"பிடியதன் உருவுமை கொளமிகு கரியது.."
ஐந்து வயதில் எனக்கு சொல்லிக்கொடுத்த பாட்டு. அந்த வயதில் அந்தப் பாட்டிற்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், சிந்திக்க கற்றுக்கொண்டபின் நமது கவனத்தில் வருபவைகளின் உண்மைத்தன்மையை (மெய்ப்பொருளை) புரிந்துகொள்ள ஆர்வம் காட்டவேண்டும் அல்லவா?

அப்படித்தான் எனக்கு மறைநூல்களில் உள்ள உண்மைத்தன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

எனவே, உலகப்பொதுமறையாய் இருந்த 'திருக்குறள்' என்னை ஈர்த்ததில் வியப்பில்லை. அது என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக விளங்கியது.

மதம் சார்ந்த மறைநூல்களில் என் கவனம் சென்றாலும், பகவத்கீதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

அதற்கு சில காரணங்களும் உண்டு.

                       (தொடரும்)


பகவத்கீதையும் நானும் 
பதிவு 4

முந்தைய பதிவில் கீதை சொல்லும் வாழ்வியல் தத்துவங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்ததற்கு சில காரணங்கள் உண்டு என குறிப்பிட்டிருந்தேன்.

அவை - -

1. கீதையின் உருவாக்கம் பற்றி பல கூற்றுக்கள் உண்டு. அதில் ஒன்று 'உபநிடதங்களில் உள்ள தத்துவங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருந்ததால், "பிரம்மசூத்திரம்" எழுதப்பட்டது. அதுவும் கடினமாக இருந்ததால், பகவத்கீதை வியாசரால் எழுதப்பட்டது' என்பதாகும். இது உண்மையென்றால், பகவத்கீதையை சரியாகப் புரிந்துகொண்டால், உபநிடதங்களை படித்ததுபோல் ஆகிவிடும் என்ற எண்ணம் தோன்றியது.

2. திருக்குறளைப் போன்று கீதையும் பல மொழிகளில், பல நாடுகளில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தது.

3. சனாதன தர்மத்தை, குறிப்பாக 'வர்ணாஸ்ரம தர்மத்தை', ஆதரித்தும், எதிர்த்தும் பலர் பேசியது.

4. பலர் எதிர்த்த போதும், அது பலதரப்பட்ட மனிதர்களைக் கவர்ந்தது.

                        (தொடரும்)

பகவத்கீதையும் நானும்
பதிவு 5

மதம் சம்பந்தப்பட்ட செய்திகள் எதுவாக இருந்தாலும், அவற்றை படித்துவிடுவேன்.

சில புரியும்; சில புரியாது. இருந்தாலும் படிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை.
 
கையில் கிடைத்த எந்த மறைநூலையும் விட்டுவைத்ததில்லை
(அது Bible-ஆக இருந்தாலும் சரியே).

சிலகாலம் சென்றபின் மதம் என்பது இறைவழிபாடு, சடங்கு, சம்பிரதாயங்கள் மற்றும் வாழ்வியல் தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை புரிந்துகொண்டேன்.

ஒருவழியாக 'திருப்பராய்த்துறை தபோவனம்' வெளியிட்ட பகவத்கீதை புத்தகம் கைக்கு கிடைத்தது. அருமையான புத்தகம். பகவான் இராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகளும் அதில் அடக்கம்.

பலமுறை படித்தபின்பும் மனதில் தெளிவு ஏற்படவில்லை.

குறை புத்தகத்தில் இல்லை; என்னிடத்தில்தான் இருந்தது.

கீதை சொல்லும் மெய்ப்பொருளை புரிந்துகொள்ள இயலவில்லை.

பின்பு ஶ்ரீ இரமணாஸ்ரமம் வெளியிட்ட புத்தகம்.
அதிலும் இதே கதைதான்.

காரணத்தை உள்ளுக்குள் தேடியபோது, மூன்று முக்கிய சந்தேகங்கள் வெளிப்பட்டன.

                        (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 6

முந்தைய பதிவில் கீதை சொல்வது புரியவில்லை என்று சொல்லியிருந்தேன்.
ஆனால், வேறு ஒரு உண்மையை முதன்முதலாக புரிந்துகொண்டேன்.

"நம்முடைய புரிந்துகொள்ளும் தன்மை என்பது, நமது புரிந்துகொள்ளும் திறமையை பொறுத்தது".

(The level of understanding depends upon the level of understanding).

எனக்குள் எழுந்த மூன்று சந்தேகங்கள்:

1. கீதையில் சில இடங்களில் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக தோன்றியது.

2. சில இடங்களில் இடைச்செருகல்கள் இருப்பதுபோல் தெரிந்தது.

3. இரண்டாவது அத்தியாயத்தில் மனிதனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பது எவை என்று கிருஷ்ணன் விளக்குகிறார்.

'ஒன்றை பற்றி தொடர்ந்து நினைத்தால், அதனைத் தொடர்ந்து பற்று, ஆசை, கோபம், குழப்பம், ஞாபகமறதி, புத்திநாசம் முதலியவை வந்து, அதனால் மனிதன் வீழ்ச்சி அடைகிறான்' என்று சொல்கிறார்.

முதலாவதாக வரும் சந்தேகத்தை பொறுத்தவரை, அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் இதுபோன்ற முரண்பாடுகள் திருக்குறளிலும் உண்டு.

இரண்டாவது வரும் சந்தேகமும் தேவையில்லாதது என நினைத்துக்கொண்டேன்.

ஆனால், மூன்றாவது சந்தேகம் என்னை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.

'நமக்கு கோபம் நிறையவே உண்டு; ஆனால், ஞாபகமறதி மற்றும் புத்திநாசம் போன்றவை இல்லையே! கிருஷ்ணன் ஏன் இப்படி சொல்கிறார்' என நினைத்துக்கொள்வேன்.

இதன் உண்மையான பொருள் புரியாததால், என் முயற்சிகள் அனைத்தும் வீணாய் போனது.

ஆனாலும் எனக்குள் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை. நம்மிடம் உள்ள மெய்ப்பொருளை அறியும் துடிப்பு "அவனுக்கு" தெரியும். எனவே நமது பயணத்தை தொடர ஏதாவது ஒரு வகையில் வழியை காட்டுவான் என்பதில் உறுதியாக இருந்தேன்.

அந்த வழி நண்பர் திரு. கோவிந்தசாமி மூலம் வந்தது.     

                    (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 7

நண்பர் திரு. கோவிந்தசாமியை சந்தித்தபோது ஒரு புத்தகத்தை கொடுத்து 'இதை படியுங்கள்; உங்களுக்கு மிகவும் பிடிக்கும்' என்றார்.

அந்த புத்தகத்தின் பெயர் "Kindle Life". புத்தகத்தை எழுதியவர் "சுவாமி சின்மயானந்தர்".

அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து இந்திய வேதங்களின்
மேன்மையை பரப்பிவருபவர் என்பது மட்டுமே அவரைப்பற்றி நான் அறிந்தது.

வீட்டிற்கு வந்ததும் அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ஏதோ குழந்தைகளுக்கு நல்லொழுக்கப்பாடம் எடுப்பதைபோல் தோன்றியது.

ஒருசில பக்கங்கள் படித்தபின், ஓரிடத்தில் ''The path of the Pleasant" (Preya), "The path of the Good" (Sreya) என இரண்டு பாதைகளை அதாவது வழிகளைக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டு வழிகளையும் கீதையில் சொல்லியிருப்பதை அறிந்திருந்தேன்.

அப்பொழுதுதான் புரிந்தது, நமது தரத்திற்கு இறங்கி வந்து, நமக்கு புரியும் வகையில் கீதை பற்றிய பாடத்தை எடுக்கிறார் என்று.

அந்த புத்தகத்தை பலமுறை படித்தபின், கீதையை எப்படி படிக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்.

                    (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 8

பகவத்கீதையை எப்படி படிக்கவேண்டும் என்று புரிந்தபின், கீதையை விரைந்து படித்துவிடலாம் என நினைத்தேன்.

ஆனால், அது வேறு ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.

பொதுவாக ஒரு பண்டிதர் தத்துவம் நிறைந்த புத்தகத்தை படித்தால், ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார். ஒரே தத்துவத்தை யார் யார் எப்படி பார்க்கிறார்கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுவார்.

நான் பண்டிதன் அல்ல; பண்டிதனாக இருந்தாலும் நான் அதை செய்ய மாட்டேன். என்னுடைய சிந்தனையெல்லாம், அந்த தத்துவங்கள் எந்த நோக்கத்தில் சொல்லப்படுகின்றன என்று அறிவது மட்டும்தான்.

கீதை சொல்லும் மெய்ப்பொருளை உணரும்பொழுது, நான் சந்தித்த அனுபவங்கள் நினைவிற்கு வரும். அவற்றுடன் போராட ஆரம்பித்துவிடுவேன். 

மனதில் வேதனை கூடுகட்ட ஆரம்பித்துவிடும்.

                   (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 9 

கீதையின் முதல் அத்தியாயம் முழுவதும் அர்ஜுனன் தனது மனதில் உள்ள தெரிவிக்கிறான்.

ஓரிரு அத்தியாயங்களில் கிருஷ்ணன், தான் யார் என்பதை விவரிக்கிறார்; அதுவும் அர்ஜுனன் கேட்டதால்.

இவைகளை தவிர்த்து மற்றவற்றை பார்த்தால், கீதை ஒரு மனோதத்துவ நூலாகவே காட்சியளிக்கிறது.

ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் பற்றி கூறுவதாக இருந்தாலும், அவற்றின் ஊடே மனிதனிடம் இருக்கும் மற்றும் இருக்கவேண்டிய பண்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார்.

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இல்லாதிருப்பதற்கு காரணம், அவர்களின் குணம் மற்றும் அவர்கள்
கடைப்பிடிக்கும் கர்மமும்தான் காரணம் என்கிறார்.

கர்மம் என்று சொல்வதற்கு 'செயல்' என்றே பெரும்பாலோர் அர்த்தம் கற்பிக்கிறார்கள்.

எனக்கு இதில்தான் பெரிய சந்தேகம் வந்துவிட்டது.

                      (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 10

குணம் என்று சொல்லும் பொழுது, அதில் எவ்வித குழப்பமும் இல்லை.
ஆனால், கர்மம் என்று சொல்லும் பொழுது, அதற்கு செயல் என்று சொல்வது சரிதானா என்ற சந்தேகம் வந்தது.

ஒரே மாதிரியான செயலை இரண்டு நபர்கள் செய்தாலும், அவர்கள் நோக்கம் வேறு வேறாக இருக்கலாம் அல்லவா?

ஒரு ஆசிரியர் மாலை நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்; ஆனால், பணம் வாங்குவதில்லை. மற்றொருவர் பாடமும் எடுக்கிறார்; பணமும் வாங்குகிறார். இங்கு செயல் ஒன்றுதான். நோக்கம் வேறாக இருக்கிறது.

இன்னொன்றையும் கவனிக்கவேண்டி உள்ளது. ஒருவன் சொந்தமாக ஒரு வீடு கட்ட நினைக்கிறான்.
வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பாக, பலமுறை மனதிற்குள் இந்த இந்த மாதிரியாக கட்டவேண்டும் என நினைத்துப் பார்க்கிறான். வெளியே தெரிவதற்குமுன் செயல் பலமுறை மனதிற்குள் நடந்துவிடுகிறது.

சிலநேரங்களில் மனதில் என்னென்ன செய்யவேண்டும் என்று தோன்றினாலும், அதை செயல்படுத்த முடிவதில்லை.

எனவே, 'கர்மம்' என்பதற்கு செயல் என்று பொருள் கொள்வதைவிட, மனோபாவம் என்று பொருள் கொள்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியது.

பின்னாளில் ஒரு ஆன்மீக பேச்சாளரிடம் கேட்டபோது, அவர் எனது கருத்தை சரியென்று ஏற்றுக்கொண்டார்.

                       (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 11

நான் தீவிரமாக பகவத்கீதையைப் படிக்க ஆரம்பித்தேன்.  
நிறைய எதிர்ப்புகள் வந்தன.

ஒரு நண்பர் 'சைவ சமயத்தை சேர்ந்த நீங்கள் எப்படி கீதையை படிக்கலாம்' என்றார்.

இன்னொரு நண்பர் (கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தவர்) 'கீதை அபின், கஞ்சா போன்றது. உங்களை மயக்கமடைய செய்துவிடும்' என்றார்.

சிலர் கீதை புத்தகம் வீட்டில் இருந்தால், குடும்பத்தில் கலகம் வரும் என்றனர்.

ஆனாலும் என் முயற்சியை நான் கைவிடவில்லை.

ஆன்மீக தத்துவங்கள் "அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறியவேண்டிய உண்மைகள்".

கீதையில் உள்ள வாழ்வியல் தத்துவங்கள் புரியும் வேளைகளில், கடந்தகால அனுபவங்கள் நெஞ்சில் அலைமோதும். 

அந்த சமயங்களில் என்னை அறியாமலேயே 'சுயபரிசோதனையில்' ஆழ்ந்து விடுவேன். மனம் நடந்த சம்பவங்களை எண்ணி வேதனைப்படும். அதை பின்னர் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

                      (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 12

பகவத்கீதையின் மூலம் நான் கற்ற அறிவு சிறிதளவே! அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது.

குழந்தைகள் தாம் கற்றதை பெரியவர்களிடம் சொல்ல விரும்புவது இயற்கை.

எனக்கும் அதுபோல ஒரு விருப்பம் தோன்றியது.

மனிதன் எதை நினைக்கிறானோ அதாகவே மாறுகிறான் என்று சொல்வார்கள். ஆனால், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரி நினைக்கிறார்கள். சில நன்மையிலும், சில தீமையிலும் முடிகிறது.

அத்தனையையும் உள்ளடக்கி "Man .. in a nutshell" என்ற தலைப்பில் சில வாக்கியங்கள் எழுதினேன். அவை - -

Man is what he thinks.

He thinks according to the impressions recorded ‘within’.

The impressions are recorded while contacting the objects in the world outside.

So the objects in the world outside and the way in which they are being contacted make or mar the man.

Think?

மனிதனின் உள்ளே நடைபெறும் இயக்கங்களைப் பற்றி நண்பர்கள் உதவியுடன் ஒரு வரைபடமும் தயார் செய்தேன்.


பின்னர் இரண்டையும் இணைத்து அச்சடித்து நண்பர்களிடம் விநியோகம் செய்தேன்.

அதனை அலுவலகப் பத்திரிகையிலும் வெளியிட்டேன்.

அதன்பின் எனது பயணம் புதிய தடத்தில் இயங்கவேண்டியதாயிற்று.

                       (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 13

எனது துண்டு பிரசுரத்தை பார்த்த சில நண்பர்கள், புத்தகமாக எழுதுங்களேன் என்றார்கள். ஆனால், நான் மறுத்து விட்டேன். அதற்கான காரணங்கள் - -

1. எனக்குத் தெரிந்த ஆன்மீக தத்துவங்கள் மிகவும் குறைவு.

2. எனக்கு மொழி இலக்கணம் எதுவும் தெரியாது.

3. சமஸ்கிருத அறிவு கிடையாது; நான் அறிந்த தத்துவங்கள் எல்லாம் சுவாமி சின்மயானந்தர் எழுதிய உரைகள் மூலமாகவே.

4. ஆன்மீகம் சொல்லும் தத்துவங்களை நான் சரியாகப் புரிந்துகொண்டேனா என்பதும் தெரியாது.

இதற்கிடையில் எனது நண்பர் திரு. ஆண்டோ அவர்கள் எனது பிரசுரத்தை அவரது பேராசிரியர் ஒருவரிடம் காட்டியிருக்கிறார். அதை வாங்கி பார்த்தவர் flowchart-ஐ ஊன்றி கவனித்துவிட்டு, எனது நண்பரிடம் 'இந்த அளவிற்கு flowchart தயாரித்திருக்கிறார் என்றால், அவர் நன்கு ஆழமாக சிந்தித்திருக்கவேண்டும். அவற்றை வெளிக்கொண்டுவரவேண்டும். அவரோடு அது போகக்கூடாது. எனவே, அவரை ஒரு புத்தகம் எழுதச் சொல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்.

அதன்பின் நண்பர் என்னை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். வேறுவழியின்றி நானும் எழுத ஆரம்பித்தேன்.

எனது வாழ்க்கை பயணத்தில் பல குருமார்கள் உதவியிருக்கிறார்கள். அவர்களில் 'பத்திரகிரியாரும்' ஒருவர். எனவே அவரது பாடல்களை அடியொற்றி நான் புத்தகத்திற்காக எழுதிய கடவுள் வாழ்த்து - -

"ஆங்கார இருளகற்றி
ஆணவத்தின் பிறப்பகற்றி

ஓங்கார நாதங்கள்
உரைத்திருப்ப தெக்காலம்?".

                        (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 14

மாணவப் பருவத்திலேயே 'திருக்குறள்' எனக்குள் புகுந்துகொண்டது.

பகவத்கீதை என்னுள் புக 40 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

இரண்டு நூல்களும் வாழ்வியல் தத்துவங்களை போதிப்பவைதான்.
ஆனால், இரண்டிற்குமிடையே ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.

திருவள்ளுவர் ஒரு நல்ல ஆசானாக நமக்கு வேண்டியதை கற்றுத்தருகிறார். அத்துடன் ஒதுங்கி விடுகிறார்.

கிருஷ்ணன் அப்படியல்ல; பாரதியார் கூறுவதைப் போல் 'நண்பனாய், மந்திரியாய், நல் ஆசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்' என எல்லா நிலையிலும் நம்மை வழிநடத்துகிறார்.

"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்..." என்ற குறளுக்கிணங்க, கீதையில் உள்ள சுலோகங்களுக்கு பொருளை உணரும்பொழுதெல்லாம் முகத்தில் அறைவது போன்றிருக்கும்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்கள் - - "Knowledge is to know one's own ignorance".

நான் நல்லதுதானே செய்கிறேன்; உலகம் ஏன் என்னை புரிந்துகொள்ளவில்லை என அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.  
"ஆனால், நான்தான் உலகத்தை புரிந்துகொள்ளத் தெரியாத முட்டாளாக இருக்கிறேன்" என என்னை உணரவைத்தது "அவன்"தான்.

இந்த உண்மையை எனது புத்தகத்தில் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
அதைப் பார்த்ததும் என் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்று கேட்டேன்.

'முதல் தடவையாக உங்களை முட்டாள் என்று ஒத்துக்கொண்டீர்களே, அதற்காகத்தான்' என்றாள்.

                     (தொடரும்)




பகவத்கீதையும் நானும்
பதிவு 15

கர்மம், கர்ம மார்க்கம், கர்ம யோகம் ஆகியவற்றைப் பற்றி சரியானப் புரிதல் வேண்டும்.

கர்மம் என்பது செயலைக் குறிக்கும்.

செயல் பொது நலனுக்காக இருந்தால், அது கர்ம மார்க்கம் எனப்படும்.

அதுவே, பிரதிபலன் எதையும் எதிர்பாராமல் செய்வதாக இருந்தால், கர்ம யோகமாக மாறிவிடும்.

கர்ம யோக செயல் புரிபவன் ஆத்மாவில் திருப்தி அடைகிறான்
(அத்தியாயம் 3 ஸ்லோகம் 17). அத்துடன் அந்த செயல் நம்மை நமக்கு தெரியாமலே ஞான மார்க்கத்தில் புகுத்திவிடும். அது எப்படி நேருகிறது என்று பார்ப்போம். 

உங்கள் செயல் பிரதிபலனை எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், இடைஞ்சல்கள் வரும்பொழுது அதை தவிர்ப்பது எப்படி, அதை முறியடிப்பது எப்படி, நாம் எதிர்பார்த்த பலனை பெறவேண்டுமானால் எந்தவகையான சூழ்ச்சியில் ஈடுபடவேண்டும் போன்ற சிந்தனைகள்தான் வரும்.

உங்கள் செயல் பிரதிபலனை எதிர்பார்க்காத செயலாக இருந்தால், அப்பொழுது வரும் இடைஞ்சல்கள், உங்களை வேறு வழிக்கு இழுத்துச் சென்றுவிடும்.

பிரதிபலன் எதிர்பார்க்காத செயலைப் புரியும் பொழுது, நாம் சந்திக்கும் இடைஞ்சல்கள் நம்மை 'அகத்தாய்வு' செய்ய வைத்துவிடும்.

Action, withdrawal and contemplation ஆகிய மூன்று நியதிகளும், அதாவது செயல், மனதை உள்முகமாக திருப்புதல் (பிரத்யாஹாரம்) மற்றும் அகத்தாய்வு (சவிசாரம்) ஆகிய மூன்றும் மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும்.

சவிசாரம் என்பது தனக்குள்ளேயே சுயபரிசோதனை செய்து விடையைத் தேடும் செயலாகும். 

சவிசாரத்தில் மனதில் உள்ள கொந்தளிப்புகள் அடங்கி, மனம் அமைதியாக ஆரம்பிக்கும். அதன் எதிரொலியாக தன்முனைப்பு(அஹங்காரம்) குறைந்து விடும்.

உண்மையான ஆனந்தம் என்றால் என்ன என்று புரிந்து கொள்வோம்.

(இது கீதையின் மூலம் நான் அனுபவித்து உணர்ந்துகொண்ட உண்மை. இது சரிதானா, இல்லையா என்பதை நீங்களும் அனுபவித்து பார்த்துதான் முடிவு செய்யவேண்டும்).

                      (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 16

'தர்மம்' என்றால் பிறருக்கு உதவி செய்வது என்று நினைக்கிறோம். அது தவறில்லைதான்.

ஆனால், தர்மம் என்பதற்கு 'ஒரு பொருள் அதற்கே உரிய இயல்போடு செயல்படுவது' என அர்த்தம் கொள்ள வேண்டும். (உ.ம். ..தண்ணீர் - குளிர்ச்சி; நெருப்பு - சூடு).

அதேபோல் ஒவ்வொரு மனிதனிடமும் அவனுக்கே உரிய இயல்பு (சுபாவம்) இருக்கும். அதனை 'சுயதர்மம்' என்று கீதை சொல்கிறது.

ஒரு மனிதன் அவனுக்கே உரிய சுயதர்மத்தை கடைப்பிடித்தால், அவனது வாழ்க்கைப் பயணம் நன்றாக அமைந்துவிடுகிறது.

அதுவன்றி அவன் பிறருக்குரிய தர்மத்தை (பரதர்மம்) கடைப்பிடித்தால், அவனது வாழ்வில் நிம்மதி இருப்பதில்லை; அல்லது அவன் மற்றவர் நிம்மதியை கெடுத்துவிடுவான்.

எனக்கு 'கர்ம மார்க்கத்தில்' அதிகமான ஆர்வம் உண்டு. ஆனால், பொதுநலத்தில் முழு அளவில் ஈடுபட எனது உடல்நிலை ஒத்துழைக்க வில்லை. 'அல்சர்' மற்றும் 'ஆஸ்துமா' இரண்டும் என்னை பாடாய் படுத்தின. இது போதாதென்று என்னிடம் 'அஹங்காரமும்' அதிகமாக இருந்தது. 
ஆனாலும் சிறிய அளவில் நான் பொதுப்பணிகளில் கவனம் செலுத்தி
வந்தேன்.

நாம் உடல், மனம் என்று சொல்கிறோம். அதனை பருவுடல் மற்றும் நுண்ணுடல் என்றும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் கீதை சொல்கிறது.

எனக்கு நேர்ந்த அனுபவங்களின் காரணமாக, நான் கர்ம மார்க்கத்திலிருந்து விலகி ஞான மார்க்கத்தில் அடியெடுத்து வைத்தபின் (அதுதான் என்னுடைய சுயதர்மமாக இருந்ததோ), என்னிடமிருந்த 'அஹங்காரம்' குறைய ஆரம்பித்தது. காரணம் மனம் ஒரு உண்மையை புரிந்துகொண்டது.

அது - -
"நான்" என்று
நான் நினைத்தது

"நான்" இல்லையென்று
நான் அறிந்தது

"நான்" என்ற
அகந்தை அழிந்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், மனம் அமைதியாகத் தொடங்கியதும் என்னிடமிருந்த 'அல்சர்', 'ஆஸ்துமா' இரண்டும் காணாமல் போய்விட்டன.

ஆக, வாழ்க்கையில் அமைதி நிலவவேண்டும் என்றால், நாம் நமது "சுயதர்மத்தை" கண்டுபிடித்து அதன்படி நடக்கவேண்டும்.

எதனால் என்று அறிய கீதையில் அத்தியாயம் 3 ஸ்லோகம் 35-ஐ பார்க்கவும்.

                       (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 17

'சுயதர்மம்' என்று சொன்னவுடன் பலரால் அந்த தத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சுயதர்மம், வர்ணம் என்றெல்லாம் சொன்னால் பலருக்கு கோபம் வருகிறது. அது அவர்கள் தவறல்ல; தத்துவங்களின் உண்மை நிலையை மறைத்து, தவறான பொருளை திரித்துக்கூறி மக்களை நம்ப வைத்த நமது முன்னோர்கள் செய்த தவறு; அதனை சதியென்றும் கூறலாம்.

சுயதர்மம், வர்ணப்பிரிவு போன்றவைகளை மாற்றமுடியும் என்பதை உணர்ந்துகொள்ள நடந்த சம்பவம்
ஒன்றை தெரியப்படுத்துகிறேன். (கொஞ்சம் பெரிய பதிவு). 

சொற்பொழிவு நடத்தும் காலங்களில், சுவாமி சின்மயானந்தர் தங்கியிருக்கும் இடத்தில் 'சத்சங்கமும்' நடைபெறும்.

அப்படி நடைபெற்ற ஒரு சத்சங்கத்தில், ஒருவர் சுவாமியிடம் தான் நிறைய பாவங்கள் செய்துவிட்டேன் என்று சொல்லி வருத்தப்பட்டார்.

அதற்கு சுவாமி கூறியது - -
"நீயா? பாவம் செய்தாயா? யாராலும் பாவம் செய்ய முடியாதே!"

கேட்ட எல்லோருக்கும் அவர் சொன்னது விளங்கவில்லை. அவர் தொடர்ந்தார் - -
"Sin is not an action; it is a reaction. பாவம் என்பது செயலல்ல. நாம் ஏதோ செய்கிறோம். அதன் எதிர்வினையாக நாம் நினைப்பதுதான் பாவம். 
நீ ஒரு கொலை செய்தால் அது பாவம் என்று நினைக்கலாம்; ஆனால், போர்க்களத்தில் ஒருவன் பத்து பேரை கொல்கிறான். அவன் தான் பாவம் செய்ததாக நினைப்பதில்லை. மாறாக தனக்கு ஜனாதிபதியிடமிருந்து ஏதாவது பரிசு கிடைக்குமா என்று நினைக்கிறான்."

கூடியிருந்தவர்களுக்கு கொஞ்சம் புரிந்தது. பாவம் செய்ததாக சொன்னவர் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். 

அதற்கு சுவாமி "இதுவரை என்னென்ன செய்தாயோ, அதையே தொடர்ந்து செய்" என்றார்.

எல்லோரும் சிரித்துவிட, கேட்டவருக்கு அந்த பதில் கஷ்டமாக இருந்தது.

சுவாமி, கவலைப்படாதே விளக்குகிறேன் என்று சொல்லி தொடர்ந்தார் - -

"நீ ஊருக்கு காரில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறாய். சிறிது தூரம் சென்றபின்தான் தெரிகிறது, நீ தவறான வழியில் செல்கிறாய் என்று. உடனே காரை நிறுத்தினால் என்ன நடக்கும்? கார் கவிழ்ந்து உனக்கும் காயம் ஏற்படும்.

மாறாக நீ செய்யவேண்டியது:-
1. காரின் வேகத்தை குறைக்க வேண்டும்.
2. அடுத்த திருப்பம் எங்கு வருகிறது என்று பார்த்து காரை திருப்ப வேண்டும்.
3. உன் நினைவு புதிய பாதையை பற்றியதாக இருக்க வேண்டும். 
4. இருந்தாலும், திரும்பும் இடம் வரும்வரை, நீ தவறான பாதையில் தான் செல்லவேண்டியிருக்கும்.

உரிய முயற்சியும், பயிற்சியும் செய்து, உனது சுபாவத்தை மேம்படுத்தும்வரை, பழைய தவறுகள் தொடரும். அதை எண்ணி கலங்காதே".

இப்போது அவர் சொல்வதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்தது.

முத்தாய்ப்பாக அவர் ஒன்று சொன்னார் - -
"You think that you are the sinner and I am the saint; but remember, every saint had a past, every sinner .. a future".
(நீ நினைக்கலாம் .. நீ ஒரு பாவியென்றும்; நான் ஒரு புனிதன் என்றும். ஆனால், ஞாபகத்தில் வைத்துக்கொள் .. ஒவ்வொரு புனிதனுக்கும் கடந்த காலம் என்று ஒன்று உண்டு; ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் என்று ஒன்று உண்டு).

அவர் மறைமுகமாக உணர்த்திய உண்மை -- கடந்த காலத்தில் தான் பாவியாக இருந்திருக்கலாம்;  எதிர்காலத்தில் நீ புனிதனாக மாறலாம்.

                        (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 18

 பதிவு எண் 16-ல் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன். 

"ஒரு மனிதன் அவனுக்கே உரிய சுயதர்மத்தை கடைப்பிடித்தால், அவனது வாழ்க்கைப் பயணம் நன்றாக அமைந்துவிடுகிறது". 

ஒரு நண்பர் "சுயதர்மம் நல்லதொரு வாழ்க்கைப் பயணத்தை தருகிறது என்றால், எதற்காக சுயதர்மத்தை மாற்றவேண்டும்" என ஒரு கேள்வி கேட்டுள்ளார். 

அவரது கேள்வி மிகவும் சரியானது. அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் சொல்ல நினைத்ததை, நினைத்தபடி எழுதவில்லை. அதற்காக வருந்துகிறேன்.

(யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்.
ஆன்மீகத்தில் நான் வெறும் பூனைதானே!).

சுயதர்மத்தை கடைப்பிடிப்பவன் தவறு செய்யும்பொழுது, அதை சுட்டிக்காட்டினால் அவன் அதை ஒத்துக்கொள்வான்.

சொந்த அனுபவங்கள் காரணமாகவோ, மற்றவர்கள் சுட்டிக்காட்டியதனாலோ,  
அவனுக்கு தன் தவறு தெரியவரும்பொழுது 
தனது சுபாவத்தை மேம்படுத்த முயற்சி செய்வான்.

முயற்சியைப் பொறுத்து அவனது குணம், மனோபாவம் எல்லாம் மேன்மை அடையும். அவனது வாழ்க்கை முன்னிலும் சிறந்த வாழ்க்கையாக மாறிவிடும்.

வால்மீகியின் கதை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

                     (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 19

கீதையில் கீழே உள்ளவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால், மீந்து இருப்பது என்னவாக இருக்கும்?

1. அர்ஜுனன் கிருஷ்ணனிடம் புலம்புவது - - முதல் அத்தியாயம்.

2. அர்ஜுனன் கிருஷ்ணனிடம் நீ உண்மையில் யாரென்று கேட்க, கிருஷ்ணன் தான் யார் என்று விபரிப்பவை - - அத்தியாயம் 7, 9, 10, 11.

மேலே உள்ளவைகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் பெரும்பாலும் மனிதர்களிடம் இருக்கும் குணம், மனோபாவம், செயல்பாடுகள், பழக்க வழக்கங்களை பற்றியே பேசுகிறார்.

அது மனோதத்துவ ரீதியாக அமைந்ததுபோல் தோன்றுகிறது.

இவற்றின் அடிப்படையிலேயே 'வர்ணாஸ்ரம தர்மத்தை' பற்றி குறிப்பிடுகிறார்.

வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம் என்ற இரண்டையும் இணைத்து 'வர்ணாஸ்ரம தர்மம்' என்கிறார்.

வர்ணாஸ்ரம தர்மம் என்ற வார்த்தைகளை பார்த்ததும், என் நினைவில் நான் சந்தித்த அவலங்கள் அனைத்தும் முன்னே வந்து நின்றன.

அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, வர்ணாஸ்ரம தர்மத்தின் கோட்பாடுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்.
 
                        (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 20

அலுவலகத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பைபிளில் வரும் ஒரு வாசகத்தை குறிப்பிட்டிருந்தேன். அது - "please take away the cup from me, if you be willing"
(என்னிலிருந்து இந்தப் பாத்திரத்தை எடுத்து விடுங்கள்...).

பாத்திரம் என்பதற்கு உடல் என்று அர்த்தம் கற்பித்து என் கட்டுரையை எழுதியிருந்தேன்.

இதைப்பற்றி கிறிஸ்துவர்கள் என்ன நினைப்பார்கள் என எண்ணி ஒரு கிறிஸ்துவ பெரியவரிடம் காண்பித்தேன். அவர் என்னை கடிந்துகொண்டார். "நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு எழுதக்கூடாது; நாங்கள் இதை 'துன்பக்கலம்' என்போம்" என்றார்.

அவர் என் கருத்தை ஏற்காததால், அதை (அவர் முன்னிலையிலேயே)என் கட்டுரையில் இருந்து நீக்கிவிட்டேன்.

மற்ற மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

இந்து மதம், அது சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதில்லை.

அத்தியாயம் 18 ஸ்லோகம் 63-ல் கிருஷ்ணன் கூறுகிறார் - -
"ஞானத்தைப் பற்றி நான் எல்லாம் சொல்லிவிட்டேன். அதைப்பற்றி நன்றாக ஆராய்ந்து உன் விருப்பம்போல் செயல்படு".

அதனால்தான் நானும் என் இஷ்டத்திற்கு சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்.

                     (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 21

அத்தியாயம் 3 ஸ்லோகம் 3-ல் "இந்த பூவுலகில் இரண்டு பாதைகள் உள்ளன; ஒன்று ஞான யோகத்திற்கானது; மற்றொன்று கர்ம யோகத்திற்கானது" என கிருஷ்ணன் கூறுகிறார்.

இதற்கு பலர் பலவித விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் 'introvert', 'extrovert' என்ற இரண்டு வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
அத்துடன் அவர்களின் செயல்பாட்டில் விகிதாசார அளவில் நிறைய வேறுபாடு இருக்கும் என்றும் சொல்கிறார்.

ஆக, சிலர் அகவழி நாட்டம் உடையவர்களாகவும் (introvert), சிலர் புறவழி நாட்டம் உடையவர்களாகவும் (extrovert) இருப்பார்கள் என்கிறார்.

மெஞ்ஞானிகள் அகவழி நாட்டம் கொண்டவர்கள். விஞ்ஞானிகளின் செயல்பாடு புறவழியில் சென்றாலும், அவர்களும் அகவழியில் திரிபவர்கள்தான்.

இவர்களது எண்ணம் அனைத்தும் தாங்கள் தேடும் உண்மையினை கண்டுகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.

இவர்களுக்கு பணத்திலோ, புகழிலோ ஆர்வம் இருக்காது.

புறவழி செல்பவர்களில் சிலர் பணத்திற்காக பாடுபடுவர். சிலர் பணம் சேர்ப்பதில் கவனம் இன்றி, பொது நலனுக்காக பாடுபடுவர். புகழ் இவர்களைத்தேடி வரும்.

ஞானத்தை தேடுபவர்கள், புகழைத் தேடுபவர்கள், பணத்தை தேடுபவர்கள் ஆகிய மூவரிடமும் பொதுவாக இருப்பது 'தன்முனைப்பு' மட்டுமே.

தன்முனைப்பு இல்லாத மனிதனிடம்
இந்த தேடுதல் வேட்கை இருக்காது.

                       (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 22

'வர்ணாஸ்ரம தர்மம்' மிகவும் பயனுள்ள தத்துவம்; யாரோ செய்த தவறினால், மோசமாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறதே என்ற ஆதங்கம்தான் என் மனதில் இருந்தது.

எனவே, அதன் உண்மை தன்மையை எடுத்துச்சொல்வதே என் விருப்பமாக இருந்தது.

ஒரிடத்தில் "நான்கு வர்ணங்கள என்பது மனோதத்துவ அடிப்படையில் சொல்லப்பட்ட ஓர் ஒப்பற்ற அற்புதம். அதை சரியாக புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் தவறாகப் புரிந்துகொள்வது எவ்வளவு பெரிய சமுதாயக்கேடு என்பதை பகுத்தறிவு வாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள் அறிவார்களா?" என்று எழுதியிருந்தேன். 

பின்னர் எனக்கு தெரிந்த ஒருவரிடம் (நன்கு வாசிக்கும் பழக்கம் உள்ளவர்) கொடுத்து, இதை புத்தகமாக வெளியிடலாமா? உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்றேன்.

என் கையெழுத்து பிரதியை பெற்றுக்கொண்டவர், இருதினங்கள் கழித்து என்னை அழைத்தார்.

"இந்துமத தத்துவத்தை இந்த அளவுக்கு யாரும் எளிமையாய் சொன்னதில்லை; கண்டிப்பாக வெளியிடுங்கள்" என்று சொன்னார்.

வீட்டிற்கு வந்து கையெழுத்து பிரதியை புரட்டி பார்த்தபோது, அவர் எழுதியிருந்த ஒரு வாக்கியம் கண்ணில் பட்டது.

'.. பகுத்தறிவு வாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள் அறிவார்களா?" என்று நான் எழுதியிருந்ததற்கு கீழாக அவர் இதை எழுதியிருந்தார் - -

"ஆன்மீகவாதிகள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள்கூட (உண்மையான ஆன்மீகவாதிகள் அல்ல) இதனைத் தப்பாகவே புரிந்துகொண்டுள்ளனர்".

எனது நண்பர் புத்தகம் அச்சில் இருக்கும்போது, ஒரு பிரதியை திரு. சுகி சிவம் அவர்களுக்கு அனுப்பி அணிந்துரை அனுப்புமாறு கேட்டிருந்தார்.

அணிந்துரை வந்தது. 
அதில் அவர் குறிப்பிடடிருந்தது - -

"வர்ணாஸ்ரம தர்மம், பகுத்தறிவு வாதிகளால் வேண்டும் என்றே திரிக்கப்பட்டு பிரச்சனை ஆக்கப்பட்ட விஷயம். அதுபற்றி தெளிவுகாணும் முயற்சியில் பல விளக்கங்கள் தந்திருக்கும் ஆசிரியரைப் பாராட்டுகிறேன். என்றாலும் இதில் தரப்பட்டிருக்கும் விளக்கங்களும் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படும் என்று கவலையுறுகிறேன்".

இன்றளவும் அவரது கருத்து உண்மையாகவே இருக்கிறது.

                      (தொடரும்)


பகவத்கீதையும் நானும்
பதிவு 23

அன்புள்ள நண்பர்களுக்கு,

இந்தப் பதிவு பலருக்கு கோபத்தை வரவழைக்கும் என்பதை தெரிந்தே எழுதுகிறேன்.

இது என் மனதில் உள்ள வேதனையின் வெளிப்பாடு.

எனது கருத்துக்கள் சரியென்று தோன்றினால், நடந்த தவறுகளை சரிசெய்யும் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுங்கள்.

எனது கருத்துக்கள் தவறென்று தோன்றினால், ஒரு பித்தனின் உளறல் என மறந்துவிடுங்கள்.

"தன்குற்றம் நீக்கி பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றமாகும் இறைக்கு"
     ... திருவள்ளுவர்

என் கருத்துக்களை கூறும் முன், நான் சந்தித்த இரண்டு அனுபவங்களை சொல்லுகிறேன். (இது ஒரு sample மட்டும்தான்).

1. ஒருமுறை என் மனைவியின் ஊரிலிருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் செல்லலாம் என்று கேட்டுக்கொண்டேன்.

பால்கனியில் படுக்கச்சென்றவரை தடுத்து, இது குளிர்காலம், பனி அதிகமாக இருக்கும், உள்ளே வந்து படுங்கள் என்று வற்புறுத்தி பாய், தலையணை இரண்டும் கொடுத்தேன்.

"வேண்டாம், சாமி; வேண்டாம், சாமி" என்றவர் என் வற்புறுத்தல் காரணமாக வாங்கிக் கொண்டார். 

காலையில் பார்த்தால், பாயையும், தலையணையையும் சுவர் ஓரத்தில் வைத்துவிட்டு வெறும் தரையில் படுத்திருக்கிறார்.

2. ஒரு மாணவனிடம் பேசும்போது, இன்னொரு மாணவனை 'அவங்க' என்றான்.
"என்னப்பா, நீயும் மாணவன்; உன்னைப்போல் அவனும் ஒரு மாணவன். அப்படியிருக்க அவனை ஏன் 'அவங்க' என்று சொல்லுகிறாய்" என்றேன். அதற்கு அவன் "அவங்க ஆபீசர் வீட்டு பையன், அதனால்தான், சார்" என்றான்.

இப்போது எனது கேள்விகள் - -

1. தான் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவன். வீட்டினுள் படுப்பதே தப்பு; அதிலும் அவர்கள் வீட்டு பாய், தலையணையை உபயோகிப்பது மிகப்பெரிய தப்பு என்பது போன்ற உணர்வுகளை அவருக்கு ஏற்படுத்தியது யார்? 

2. குறிப்பிட்ட மாணவனின் தந்தை கடைநிலை ஊழியர். அவர் தனது அதிகாரியை உயர்ந்தநிலையில்வைத்து பார்ப்பது சரியாக இருக்கலாம்.
ஆனால், அவரது மகனும் அதே மனநிலையில் சக மாணவனை பார்க்க வேண்டுமா? அந்த மனநிலை அவனுக்கு ஏன் வந்தது?

3. மத நல்லிணக்கம் என்று சொல்கிறோமே, மனித நல்லிணக்கம் வர என்ன செய்யப்போகிறோம்?

4. வர்ணப்பிரிவு ஒரு மனிதனின் குணத்தையும், மனோபாவத்தையும் வைத்து அடையாளம் கண்டுகொள்வது. இதில் சாதி எங்கிருந்து வந்தது?

5. யாரோ செய்த சதி என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக எந்த மதத் தலைவர்களாவது வருந்துகிறார்களா?

6. இதனை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

7. உடனே, நமக்கு "இராமானுஜர்" போன்றவர்கள் ஞாபகத்திற்கு வரலாம். ஆனால், அவர்களை பின்பற்றுவதாக சொல்பவர்கள், அவர்கள் சொன்னதை தொடர்ந்து பின்பற்றுகிறார்களா?

8. மந்த புத்தி மற்றும் மிகுந்த தூக்கம் உள்ளவர்களை நான்காவது வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்ன கிருஷ்ணன், அவர்கள் தாழ்ந்த சாதி, தீண்டத்தகாதவர்கள் என்று சொன்னாரா? பின், எதற்காக அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள்?

9. நமக்கு சிலரை பிடிக்கவில்லை என்றால், வீட்டிற்குள் வரவேற்கவேண்டாம். ஆனால், என் தெருவுக்குள்ளே வராதே என்பதும், பாதைகளை மறித்து சுவர் எழுப்புவதும் எந்த வகையில் நியாயம்?

10. அத்தியாயம் 18 ஸ்லோகம் 42-ல், ஒரு பிராமணனுக்கு என்னென்ன கடமைகள் உண்டு என கிருஷ்ணன் கூறுகிறார் - -
"மன அடக்கம், புலனடக்கம், சுயதர்மத்தை கடைப்பிடித்தல், துன்பங்களை பொறுத்துக்கொள்ளுதல், நேர்மை, வேதம் - சாஸ்திரம் முதலியவற்றில் சிரத்தை, வேத சாஸ்திரங்களை கற்றல் மற்றும் கற்பித்தல்".
குறிப்பிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள் சாதி ரீதியாகவும் தங்களை 'பிராமணர்கள்' என்று சொல்கிறார்களே! 
A) அவர்கள் மேலே சொன்ன தர்மத்தை கடைப்பிடிக்கிறார்களா?
B) இந்துமத கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்வதில், அவர்களின் பங்கு மிகப்பெரியது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், சடங்கு, சம்பிரதாயங்களை ஒழுங்காக கடைப்பிடித்தாலும், மேலே சொன்ன தர்மங்களை முழுமையாக கடைப்பிடிக்க முடியாதபோது, 'பிராமணன்' என்ற வர்ணப்பிரிவு தங்களின் பிறப்புரிமை என்ற தோற்றத்தை தரலாமா?
C) பிறப்புரிமை என கூறினால், மேலே சொன்ன தர்மங்களை வேறு வர்ணத்தை சேர்ந்தவன் கடைப்பிடித்தால், அவனை பிராமணன் என்று ஏற்றுக்கொள்ள முடியாதே?
D) இந்தக் குழப்பம் வேண்டாமென்றால், இனப்பெயராக வேறு ஒரு பெயரை (உதாரணமாக.. அந்தணர்) வைத்துக்கொள்ளலாமே?

11. மாற்று மதத்தினரை குற்றம் சாட்டுவதற்கு முன், நம்மிடம் உள்ள குறைகளை போக்கிக்கொள்ள வேண்டாமா?

12. 'சர்வே பவந்து சுகினஹ,
சர்வே சந்து நிராமயா,
சர்வே பத்ரானி பஷ்யந்து,
மா கஷ்சித் துகபாக் பவேத்‘ !! 

அதாவது எல்லோரும் நன்றாக இருக்கட்டும், எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கட்டும், எல்லோருக்கும் நல்ல கல்வியும் ஞானமும் கிடைக்கட்டும். ஹிந்து மதத்தின் வேண்டுதல் எல்லாம் பிரபஞ்ச நன்மையைத் தவிர வேறு என்ன இருக்கிறது? 

இதுபோன்று மனித நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஸ்லோகங்கள் பல இந்து சமயங்களில், பல மொழிகளில் கூறப்பட்டுள்ளன. 

பிரபஞ்ச நன்மையை விரும்பும் நாம், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தீண்டத்தகாதவர்களாக கருதி, இன்னமும் தீண்டாமையை கடைப்பிடிக்கிறோமே? இதை எப்போது நிறுத்தப் போகிறோம்? 
... ... ... ... ...

(எங்கள் குடியிருப்பு பகுதியில் புதியதாக ஒரு கோயில் கட்டினார்கள். எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம்; வழிபட இன்னுமொரு கடவுள் வந்துவிட்டாரே! அதனால்தான். ஆனாலும், கோயில் நிர்வாகிக்கு ஒரு வருத்தம் இருந்தது. "எங்கள் கோயிலுக்கு எல்லோரும் வந்து தரிசனம் செய்துவிட்டார்கள். நீ ஒருவன்தான் வரவில்லை" என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை.

ஆனாலும், என் மனதில் ஒரு பாடல் வரி தோன்றியது - -

"கடவுளை மறப்பது 
பாவமே என்றால்

மனிதனை மறந்து
கடவுளை நினைப்பது
பாவத்தின் பாவம் அன்றோ?").

இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

யாராவது பூனைக்கு மணி கட்டுங்களேன்!

                     (முற்றும்)

No comments:

Post a Comment