Friday, 9 May 2025

மழலையின் கீதை - பாகம் 1


          இறை வணக்கம்


ஆங்கார இருளகற்றி
    ஆணவத்தின் பிறப்பகற்றி
ஓங்கார நாதங்கள்
     உரைத்திருப்ப தெக்காலம்?


      நிலையென ஒன்று

நிலையில யெனினும்
     நிலையென எண்ணி
நிலை தடுமாறி
     நிலைகொளா மனமே

நிலையென ஒன்று
     நினதுளே உண்டு
நினைவகப் படுத்தி
     நிலைகொள் தினமே

*****      *****      *****      *****      *****

                 முகவுரை

மனம் ஒரு நந்தி மாதிரி. அது இறைவனை மறைக்கவும் செய்யும். இறைவனை தரிசிக்கவும் உதவும்.

ஓர் அகன்ற பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால், செம்மண், சாயம், சாணம் என ஏதோவொன்று அதில் கரைந்து, கலங்கிய நிலையில் உள்ளது. அத்துடன் அதில் உள்ள தண்ணீரும் அலை அடிப்பது போல் அசைந்துகொண்டே இருக்கிறது.

அந்த சமயம், அந்த பாத்திரத்தில் உள்ள நாணயத்தை நம்மால் பார்க்க இயலுமா?

நாம் நாணயத்தை பார்க்க வேண்டுமென்றால் பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கலங்கிய நிலையில் இருக்கக் கூடாது. சாயம், சாணம் என்றல்ல; சந்தனம் கூட இருக்கக் கூடாது. அத்துடன் தண்ணீரும் அலைகளின் றி இருக்க வேண்டும்.

மனிதன் பாத்திரம்; மனம் தண்ணீர்; இறைவன் நாணயம்.

மனம் அலைகள் இன்றி இருப்பதற்கு வழிபாடு, தியானம் போன்றவை நிச்சயம் உதவும். ஆனால், மனதில் களங்கம் இருந்தால் நம்மால் உள்ளிருக்கும் இறைவனை தரிசிக்க இயலுமா?

நாம் செய்யும் வழிபாடு, தியானம் போன்றவை மனதை ஒருமுகப்படுத்த உதவும். ஆனால் மனதில் படிந்துவிட்ட களங்கத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்? அது தானாகவே நீங்குமா அல்லது நாம்தான் ஏதேனும் முயற்சி செய்ய வேண்டுமா?

மனம் என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது, அதனை செம்மைப்படுத்த நாம் எந்தெந்த வழிகளைக் கையாள வேண்டும் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்ட விஷயங்கள் நமக்குள் நன்கு பதிய வேண்டும்.

புரிந்துகொண்ட விஷயங்கள் நமக்குள் நன்கு பதிந்துவிட்டால் அதன்பின் அவற்றைக் கடைப்பிடிப்பதும், களைகளைக் களைவதும் முயன்றால் எளிதான காரியமே!

அதெல்லாம் சரி; மனமென்றால் என்ன,  அதன் செயல்பாடு எப்படி இருக்கும், அதைக் கையாளும் வழி என்ன என்பதை எங்கிருந்து தெரிந்து கொள்வது?

மனதைப் பற்றி எல்லா மறை நூல்களும் நிறைய போதனைகள் செய்கின்றன. இருந்தாலும் வேதவியாசர் அருளிய "பகவத்கீதை" எவ்வளவு விரிவாக, விஞ்ஞான பூர்வமாக, மனோதத்துவ ரீதியாக எடுத்துரைக்கிறது!

நாம்தான் அதனை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறோம். காரணம் அதைப் பற்றிய தவறான எண்ணங்கள் -- அது ஒரு கொலைகார நூல், புரட்சி நூல், வைணவ நூல் போன்று பலப்பல தவறான எண்ணங்கள் -- நம்மை ஆட்டிப் படைப்பது தான்.

இதையெல்லாம் மீறி, அதனுள் புகுந்து பார்த்தாலும், கீதையின் தத்துவங்கள் எளிதில் புரிபடுவதில்லை.

கீதையில் உள்ள வாழ்வியல் தத்துவங்கள் ஒரு மழலைக்கே உரிய தொனியில் இங்கே தரப் பட்டிருக்கின்றன.

கீதையில் உள்ள அனைத்து தத்துவங்களும் இதில் இல்லை என்றாலும், அதன் அடிப்படை தத்துவங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பகுதியாகப் படித்து, மனதிற்குள் வாங்கி, நன்கு பதிய வைத்து, புரிந்து, அதன்பின் அடுத்த பகுதிக்கு செல்வது நல்ல பயனைத் தரும்.


பொருளடக்கம்

மழலையின் கீதை - பாகம் 1

மனிதனும், தாக்கமும்


  1. ஞானபூமி

  2. சனாதன தர்மம்

  3. தர்மம்

  4. அர்த்த

  5. காம

  6. மோக்ஷ 

  7. சாதுர்வர்ண்யம்

  8. வர்ணாஸ்ரம தர்மம்

  9. தெரிதலும், புரிதலும்

10. மனிதனும், தாக்கமும் 

11. ஐவர் கூட்டணி

12. தாக்கமும், உடலும்

13. தாக்கமும், மனமும்

14. தாக்கமும், புத்தியும்

15. காரணமே காரியம்

16. பதிவும், செயலும்

17. மனமும், புத்தியும் 

18. காரண, காரியம்

19. பற்று 

20. வாசனா

21. ஆன்மா


                  1. ஞானபூமி

தர்ம பூமி இந்த பூமி. தர்மம் தழைத்தோங்கும் பூமி இது. உலகின் எந்தவொரு நாட்டையும் விட அதிகமாகவே தர்மத்தின் தூதுவர்கள் அவதரிக்கும் பூமி இது. அதனால்தான் இதனை ஞானபூமி என்று அழைக்கிறோம்.


வருடக்கணக்கில் வானம் பொய்த்து விட்டால், நிலத்தடி நீர் மட்டுமல்ல,  அதில் உள்ள விதைகளும் மறைந்து போகின்றன. ஆனால் ஒருமுறை பருவ மழை பெய்து விட்டால், நிலமைகள் பச்சைப் போர்வை போர்த்திக் கொள்கிறாள். அதுவரை அந்த விதைகள் அங்குதான் இருந்தன. நம் கண்களுககுத்தான் அவை புலப்படுவதில்லை. அதற்கு ஒரு பருவ மழை தேவைப் படுகிறது.


தர்மத்தின் விதைகளும் அப்படித்தான் இந்த பூமி முழுவதும் தூவிவிடப்பட்டுள்ளன. அவை மனிதர்களுக்குள்ளும் மறைந்து கிடக்கின்றன. மனிதன் தனக்கு வெளியே உள்ள பொருட்களின்பால் பற்று வைப்பதால், அதனால் ஏற்படும் மாயையின் வெப்பத்தில் தாக்குண்டு நிற்பதால், தர்மத்தின் விதைகள் தம்மை வெளிப்படுத்த முடியாமல் அடங்கி இருக்கின்றன. எப்பொழுது ஒருவன் இந்த மண்ணுலகம் ஒரு புண்ணுலகம் என்று புரிந்து கொண்டு, விண்ணுலக சொத்திற்காக ஏங்குகின்றானோ, எப்பொழுது அந்த ஏக்கம் மழையெனப் பெய்கிறதோ,
அப்பொழுது தர்மத்தின் விதைகள் தம்மை வெளிப்படுத்தி அவனைப் போர்த்திக் கொள்கின்றன.
அவன் இம்மையிலும் மறுமையைக் காண ஆரம்பித்து விடுகிறான்.


ஒரு நாட்டில் அதர்மங்கள் மலிந்து கிடக்கின்றன என்றால், அந்த நாட்டின் மக்கள் விண்ணுலக சொத்திற்கு ஏங்கவில்லை என்று அர்த்தம்!? 



             2. சனாதன தர்மம்

இலக்கியத்தில் பாடல்கள் பலவகைப்படும். கற்பனையில் எழுதப்படும் பாடல்கள்; சிலப்பதிகாரம், இராமாயணம், மஹாபாரதம் போன்று வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய பாடல்கள்; தேவாரம், திருவாசகம் போன்று பக்திரசம்  சொட்டும் பாடல்கள்; பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் தாம் பெற்ற அனுபவங்களின் வாயிலாக வெளிப்படுத்திய பாடல்கள் என்று பலவகைப்படும்.


இவற்றில் திருக்குறள் எந்த இரகத்தை சேர்ந்தது? அது பொது நீதிகளையும், வாழ்க்கை நெறிகளையும் போதிப்பது. வேதங்களும் முக்கியமாக அவற்றின் ஒரு அங்கமாகிய உபநிடதங்களும் இந்த இரகத்தை சேர்ந்தவைதான். அவை நிரந்தர உண்மைகள் எனப்படும் "சனாதன தர்மத்தை" போதிப்பவை.


உண்மை என்பது வேறு; நிரந்தர உண்மை என்பது வேறு. உண்மை என நாம் நினைப்பவை எல்லாம் நிரந்தர உண்மையாக இருப்பதில்லை. ஒரு மனிதனுக்கு அவன் கட்டிய வீடு உண்மைதான். ஆனால், அந்த வீடு இடிந்து விட்டாலோ அல்லது விற்கப்பட்டுவிட்டாலோ அல்லது அவனே கூட இறந்துவிட்டாலோ, அதன்பின் அந்த வீடு அவனுடையது இல்லை என்பதே உண்மையாகி விடுகிறது. அதாவது அவன் கட்டிய வீடு அவனுடையது இல்லை என்பதே நிரந்தர உண்மையாகும். உடல், மனம், புத்தி உட்பட எதுவுமே அவனுக்கு நிரந்தரமல்ல என்பதுதான் உண்மை.


"ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல .......  நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே" என்று பட்டினத்தார் பாடியதும் இதனால்தான்.


புறவுலகில் உள்ள பொருட்களை உண்மையென நம்பி, அவற்றின்மேல் பற்று வைக்கும் மனிதனின் மயக்கத்தை தெளிய வைத்து, நிரந்தர உண்மையான பரமாத்மாவின் மீது பற்று வைக்கக் கற்றுக் கொடுப்பதுதான் "சனாதன தர்மம்".


                       3. தர்மம்


வேதத்தில் உள்ள அனைத்து தத்துவங்களையும் ஒரே பிறவியில் புரிந்து கொள்வது என்பது முடியாத காரியம். ஆனாலும் தத்துவங்கள் அத்தனையையும் உள்ளடக்கி வேதம் நான்கே வார்த்தைகளில் சொல்லி விடுகிறது. அவை "தர்ம, அர்த்த, காம, மோக்ஷ" என்பன. அவற்றின் உள் அர்த்தத்தை சிறிது பார்ப்போம்.


 "தர்மம்" என்பது உதவி செய்வதை குறிப்பதல்ல. ஒரு பொருள் மண்ணாக இருந்தாலும், மரம், செடி, கொடியாக இருந்தாலும், எந்த ஜீவனாக இருந்தாலும் அது அதன் இயல்பான குணத்தை ஒத்து இருப்பதுதான் தர்மம் எனப்படும்.


இந்த தர்மம் எல்லா பொருட்களுக்கும், அதனதன் இயல்புக்கு ஏற்ப பொதுவாக இருந்தாலும், மனிதனிடம் மட்டும் அது ஒரே மாதிரி இருப்பதில்லை. அது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஒரே மனிதனிடமும் பருவத்திற்குப் பருவம் மாறுபடும். குழந்தைப் பருவத்தில் கடைப்பிடிக்கப்படும் தர்மம் அடுத்து வரும் பருவங்களில் மாறிவிடும். ஒரே பருவத்திற்குள்ளும் தர்மத்தின் இயல்பு அடிக்கடி மாறுவதைக் காணலாம். அதனால்தான் மனிதனின் சுபாவம் இது, இயல்பு இது என்று வரையறுத்துக்கூற முடிவதில்லை.


 மனிதனிடம் மாறுபட்ட இயல்புகள் இருப்பதனால்தான், தர்மம் பல பெயர்களில் -- சுயதர்மம், பிற தர்மம், மேலான (கீழான) தர்மம், பொதுவான தர்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது


 மனிதனை, அவன் கடைப்பிடிக்கும் தர்மத்தை வைத்து வகைப்படுத்தி உள்ளது வேதம். அது பொதுவான அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உளவியல் விதியாகும்.



                     4. அர்த்த


"அர்த்த" என்றால் செல்வம் என்று பொருள். அது வெறும் பணத்தை மட்டும் குறிப்பதல்ல. எதுவெல்லாம் மனிதனுக்கு மயக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதுவெல்லாம் "அர்த்த" என்பதாகும்.


பெரும்பாலும் மனிதனே செல்வத்தைத் தேடிச் செல்கிறான் என்றாலும், பல நேரங்களில் செல்வம் மனிதனைத் தேடிச்சென்று அவனை மயங்க வைக்கிறது. 


செல்வம் கண்ணால் காணக் கூடியதாகவும் இருக்கலாம். கண்ணால் காண முடியாததாகவும் இருக்கலாம். 


பணம், பொன், மண், வீடு, கார் போன்றவைகள் கண்ணால் காணும் செல்வங்கள். அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம் போன்றவைகள் கண்ணால் காண முடியாத செல்வங்கள்.


தனக்கு வெளியே உள்ள செல்வத்தைத் தேடி ஓடும் மனிதன், தனக்கு உள்ளே உள்ள மாபெரும் செல்வத்தை இழக்க நேரிடுவதை அறிவானா?


நாம் வெளியில் தேடும் பொருட்செல்வத்தை விட, உள்ளுக்குள் சுரக்கும் அருட்செல்வம் பெரிதல்லவா?


அதனால்தான் வள்ளுவர்

"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் - பொருட்செல்வம் 

பூரியார் கண்ணும் உள" என்கிறார்.


                        5. காமம்

"காமம்" என்பது இன்பம் துய்த்தல் எனப் பொருள்படும். பெரும்பாலும் பெண்ணோடு இணைத்து பேசப்படுவதாயினும் இது எல்லாப் பொருட்களுக்கும் பொருந்தும்.


தேவையில்லாத பொருள் மீதும், தேவைப்பட்ட அல்லது ஆசைப்பட்ட பொருள் மீது அளவிற்கு அதிகமாகவும் ஈடுபாடு கொண்டால் -- உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் கூட -- அது காமமாக உருவெடுக்கிறது.


நல்ல துணி மணியின் மேல் ஆசை என்பதனால் தேவையின்றி துணிகளை வாங்கி குவித்தாலோ, நகைகளின் மேல் பிரியம் என்பதற்காக நகைகளை மாற்றிக் கொண்டேயிருந்தாலோ, அது காமம் எனப்படும்.


தொண்டுகள் பல செய்யும் தலைவனிடம், தான் தலைவன் என்ற மமதை இருந்தால், அது கூட காமம்தான்.


ஆஸ்தி, அந்தஸ்து என எதுவாக இருந்தாலும், அதன் காரணமாக ஏற்படும் கர்வம் கூட ஒரு வகையில் காமமே.


நாம் எந்த பொருள் மீது காமம் கொண்டாலும், அது முடிவில் துன்பத்தையே தரும். ஆனால் ஒரே ஒரு பொருள் மட்டும் அதன் மீது நமது காமம் கூடக்கூட அளவற்ற இன்பத்தை தரும். 


அது "இறைவனின் திருவடி".



                    6. மோக்ஷ 

ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்து கலப்பது தான் மோக்ஷம் எனப்படும்.

கலப்பது என்றால் கூட்டத்தில் மேலும் ஒருவர் என்பதாக அல்ல. நீராவி மேகக் கூட்டத்தில் கலந்தாற்போல், ஆற்று நீர் கடலில் கலந்தாற்போல் அது அதன் தனித்தன்மையை இழந்து விட வேண்டும். அதற்கு முன் ஜீவாத்மாவிற்கு வேண்டியது மனிதனிடம் உள்ள பந்தத்திலிருந்து விடுதலை. ஜீவாத்மா தன்னைத்தானே விடிவித்துக் கொள்வதில்லை. மனிதன்தான் அதனை பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

அது விடுவிக்கப்படுமுன் மனிதன் மரித்துவிட்டால் மேலும் ஒரு பிறவி தவிர்க்க முடியாததாகிறது.

அந்த பந்தத்தின் பெயர்தான் "வாசனா". அதனைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.

"வாசனா" எனும் கூட்டிலிருந்து ஜீவாத்மாவிற்கு தான் இறக்கும் முன்பே விடுதலை அளிப்பதுதான் மனிதனின் தலையாய கடமையாகும்.


             7. சாதுர்வர்ண்யம் 


"சாதுர்வர்ண்யம்" மயா ஸ்ருஷ்டம், குண கர்ம விபாகச:" நான்கு வர்ணங்களை நான் படைத்தேன் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்ப என கண்ணன் சொல்கிறான். நான்கு வர்ணங்கள் என்று சொல்லி ஜாதி பிரிவினையை உண்டு பண்ணி விட்டார்கள் என்று குறைகூறும் பகுத்தறிவாதிகள், குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்ப என்ற சொற்றொடரை ஏன் மறந்துவிட்டார்கள்.


குணம் கர்மம் இரண்டையும் பொறுத்து மனிதனின் "வர்ணம்" வெளிப்படும். கர்மம் என்று சொல்லும் பொழுது செயல் என்று சொல்வதை விட மனோபாவம் என்று பொருள் கொள்வது சாலச்சிறந்தது. ஏனெனில், நாம் செய்யும் செயல்கள் வெளி உலகத்திற்குத் தெரிவதற்கு முன் அதற்கான ஒத்திகை நம் மனதளவில் நமது மனோபாவத்தின் அடிப்படையில் பலமுறை நடந்து விடுகிறது.


நான்கு வர்ணங்கள் என்பது மனோதத்துவ அடிப்படையில் சொல்லப்பட்ட ஓர் ஒப்பற்ற அற்புதம். அதை சரியாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் தவறாகப் புரிந்து கொள்வது எவ்வளவு பெரிய சமுதாயக்கேடு என்பதை பகுத்தறிவுவாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள் அறிவார்களா?


ஆன்மீகவாதிகள் என்று தங்களை கூறி கொள்பவர்கள் கூட (உண்மையான ஆன்மீகவாதிகள் அல்ல) இதனை தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர். 



         8. வர்ணாஸ்ரம தர்மம்


 வர்ணங்கள் நான்கு என்பது போல் ஆஸ்ரமத்திலும் நான்கு நிலைகள் உண்டு. ஆகவே இதனை வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம் எனப் பிரித்து பொருள் கொள்ள வேண்டும்.


ஆஸ்ரமம் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளை நான்கு நிலைகளாக, பருவங்களின் அடிப்படையில் பிரித்துக் காட்டுவது. ஆனால் வர்ணங்கள் என்பது ஒவ்வொரு மனிதனையும் அவனது குணத்திற்கும் மனோபாவத்திற்கும் ஏற்ப நான்கு பிரிவுகளாக பிரிப்பது.


அற்புதமான ஒரு தத்துவம் சரியாக புரிந்து கொள்ளப் படாவிட்டால் அந்த நாட்டின் கலாச்சாரமே சீரழிந்து போகும் என்பதற்கு வர்ண தர்மம் ஒரு அருமையான எடுத்துக்காட்டு.


நான்கு வர்ணங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், குணமும் மனோபாவமும் ஒரு மனிதனிடம் எப்படி ஏற்படுகிறது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.



     9. தெரிதலும், புரிதலும்


ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் என்பது வேறு; புரிந்து கொள்ளுதல் என்பது வேறு. 


ஒரு சிறுவனிடம் சூரியனைத் தெரியுமா என்றால், அவனது விடை தெரியும் அல்லது தெரியாது என்பதாகத்தான் இருக்கும். ஒரு விஷயத்தைப் பற்றி தெரியுமா என்றால் தெரியும் அல்லது தெரியாது என்ற இரண்டு விடைகளில் ஒன்றுதான் வெளிவரும். 


ஆனால், புரிந்து கொள்ளுதலில் பலவிதம் உண்டு. அதே சிறுவனிடம் சூரியனைப் பற்றி என்னவெல்லாம் தெரியும் என்றால், அவன் சொல்லும் பதிலிலிருந்து அவன் எந்த அளவிற்கு சூரியனைப் பற்றி புரிந்து கொண்டிருக்கிறான் என்பது தெரியவரும்.


உதாரணத்திற்கு:-

1. சூரியன் ஒரு நெருப்பு கோளம் என்றால்,

அது சரியாகப் புரிந்து கொள்ளுதல்.

2. எதனால் அந்த நெருப்பு கோளம் எனத் தெரியாது என்றால், 

அது புரியாதிருத்தல். 

3. சூரியன் கிழக்கே உதிக்கும் என்றால், 

அது தவறாகப் புரிந்து கொள்ளுதல். 

4. சூரியன் உதிக்கும் போது சிகப்பாக இருக்கும்; ஆனால் ஏன் எனத் தெரியாது என்றால்,

அது அரைகுறையாக புரிந்து கொள்ளுதல்.


வேதம் சொல்லும் உண்மைகளை சரியாகப் புரிந்து கொண்டவர்களை விட, வேறு வகைகளில் புரிந்து கொண்டவர்களே அதிகம்.



    10. மனிதனும், தாக்கமும் 


மனிதன் பிறந்ததிலிருந்து தன் வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றி இருக்கும் புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த தாக்கங்கள் அவனிடம் வந்து சேர்வதை அவனால் தடுக்க இயலாது. 


அந்த தாக்கங்களின் காரணமாக, அவன் அறிந்தோ அறியாமலோ அவனுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.


அந்த தாக்கங்களின் காரணமாக அதற்குப் பதிலாக அவன் செய்யும் காரியங்கள் புறவுலகில் புதிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 


இவ்வாறு தாக்கங்களை வாங்குவதிலும், கொடுப்பதிலும் மனிதன் ஈடுபடும் பொழுது, அவன் பெரும் புதுப்புது அனுபவங்களின் சங்கமம் அவனது தலைவிதியையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றுவிடுகிறது.


சமுதாயம் என்பது தனி மனிதர்களின் கூட்டமைப்பு என்பதனால், சமுதாயத்தில் உள்ள அனைத்து மனிதர்களின் அனுபவ சங்கமத்தைப் பொறுத்து, அதன் கலாச்சாரம் மேன்மை பெறுகிறது அல்லது கீழ்மை அடைகிறது.


         11. ஐவர் கூட்டணி 

மனிதன் என்பவன் ஒருவனாகத் தோற்றமளித்த போதிலும், அவனுக்குள் ஐந்து தனித்தனி இயக்கங்கள் நடைபெறுகின்றன. அவை உடல், மனம், புத்தி, ஆழ்மனம் (வாசனா) மற்றும் ஆன்மா எனப்படும்.


இவற்றில் ஆன்மா என்பது மனிதன் இயங்குவதற்கு உயிரை கொடுத்து அவனது செயல்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஜீவாத்மா ஆகும். பரமாத்மாவுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டி விடுதலை கிடைக்கும் வரை, அது அமைதியாக விழித்துக் கொண்டிருக்கும் 


மற்ற நான்கிற்கும், தனித்தனியாகவோ, ஒன்றுடன் ஒன்று இணைந்தோ அல்லது கூட்டாகவோ செயல்பட வேண்டிய கட்டாயம் உண்டு. 


அவற்றின் செயல்பாட்டினைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு, அந்த மனிதன் தன்னை புரிந்தவன் ஆகிறான். 


தன்னை புரிந்தவனே தரணியையும் புரிந்தவன் ஆகிறான்.


தன்னில், தன்னை, தானே அறிவது; அதுதானே ஆன்மீகம்.



             12. தாக்கமும், உடலும்


இங்கு உடல் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களைக் குறிக்கிறது. புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்வது இவைதான். ஆனால் கண் பார்க்கிறது; காது கேட்கிறது என்று நாம் சொன்னால் வேதங்கள் அதனை ஒப்புக் கொள்வதில்லை. ஏன் அப்படி?


இருவர் சுவராசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை அழுது கொண்டே அவர்களை கடந்து செல்கிறது. சிறிது நேரம் கழித்து அங்கு வரும் அதன் தாய் அந்த இருவரிடமும் ஐயா என் குழந்தையை பார்த்தீர்களா என்று கேட்கிறாள். இருவரும் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறினால் அதற்கு என்ன அர்த்தம்? அந்த குழந்தை அவர்களின் கண் முன்னேதான் நடந்து சென்றது; இருந்தும் அவர்கள் ஏன் அதைப் பார்க்கவில்லை?


நாம் நன்கு உறங்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தமான பாடல் ரேடியோவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் நம்மால் அதை கேட்க முடிவதில்லை; என்ன காரணம்?


உண்மை என்னவெனில் புறவுலக தாக்கங்களை எதிர்கொள்வது உடலாக (ஐம்புலன்களாக) இருந்தாலும், அதனால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு இன்னொன்று தேவைப்படுகிறது. அதுதான் "மனம்".


          13. தாக்கமும், மனமும்


கண் பார்ப்பதில்லை, கண் மூலமாக மனம் பார்க்கிறது; காது கேட்பதில்லை, காது மூலமாக மனம் கேட்கிறது என்று வேதம் சொல்கிறது. 


எந்தவொரு தாக்கமும் உடல் மூலமாக மனதை அடைந்தால்தான், அதன் மூலம் புதுப்புது அனுபவங்களும், மாற்றங்களும் ஏற்படும். மனக்தவு திறக்காவிட்டால் எந்தவித அனுபவமும் ஏற்படுவதில்லை. 


மனக்கதவு திறந்திருந்தாலும் மனம் தான் பெறும் தாக்கத்தை விரும்பி அனுபவித்தால் மட்டுமே அங்கு ஒரு பதிவு நிகழும்.


தினந்தோறும் காலையில் பலகாரம் சாப்பிடுகிறோம். நாக்கு பலகாரத்தின் ருசியை உணருகிறது. அந்தப் பலகாரம் நன்கு பழகிவிட்ட காரணத்தால் அதில் புதிதாக எந்த விருப்பமும் இல்லை. எனவே எந்த பதிவும் அங்கே நிகழ்வதில்லை.


மாறாக, அன்றைய தினம் புதிதாக ஒரு பலகாரம் செய்து பரிமாறினால், நாக்கு அதன் ருசியை உணர்வதோடு மனமும் அதன் சுவையை விரும்பி அனுபவித்தால், அதன் காரணமாக அங்கே புதிதாக ஒரு பதிவு நிகழ்கிறது.


        14. தாக்கமும், புத்தியும்


எந்த ஒரு தாக்கமும் மனதை அடைந்து விட்டால், மனம் மூலமாக பதிவு நிகழ்ந்தாலும், நிகழாவிட்டாலும் அடுத்து புத்தியையும் சென்று அடைகிறது. 


புத்தி தன்னை வந்தடையும் தாக்கத்தைப் பரிசீலித்து அது தனக்கு தேவை என்றால், தானும் ஒரு பதிவினை ஏற்படுத்துகிறது.


மனம் மூலமாக செய்யப்படும் பதிவுகள் உணர்ச்சியையும், சுபாவத்தையும் வெளிப்படுத்துகின்றன. 


அதேபோல் புத்தி மூலமாக செய்யப்படும் பதிவுகள் அறிவையும், ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.


இந்த இரண்டு பதிவுகளும் மூளையில்தான் நிகழ்கின்றன.


மனம் மற்றும் புத்தி மூலமாக செய்யப்படும் பதிவுகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

1. இரண்டின் மூலமும் பதிவுகள் நிகழ்கின்றன.

2. இரண்டிலும் பதிவுகள் நிகழ்வதில்லை. 

3. ஏதாவது ஒன்றில் மட்டுமே பதிவுகள் நிகழ்கின்றன.


மனிதனுக்குள் பதிவுகள் ஏற்பட மூன்று விஷயங்கள் அவசியமாகின்றன. மனிதன்; புறவுலகில் இருந்து அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏதோ ஒன்று; மனிதனுக்கும் அந்த ஒன்றிற்குமான தொடர்பு. 


இந்த மூன்றும் இணையும் பொழுது அவனுக்குள் ஏற்படும் அனுபவமே அவனுக்குள் பதிவுகளை ஏற்படுத்தி, அவனது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கிறது.


அதனால் தான் கீதை மனிதனின் வாழ்க்கையை "அனுபவ தாரா" என்கிறது.


"அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் 

ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன் 

ஆண்டவன் கொஞ்சம் அருகினில் வந்து

அனுபவம் என்பதே நான்தான் என்றான்" 

                        --கண்ணதாசன்.


       15. காரணமே காரியம்

நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்குமான காரணம் நமக்குள் ஏற்கனவே பதிவாகி விடுகிறது. அதனால்தான், நம்மால் வேறு மாதிரியாக செயல்பட முடிவதில்லை.


பெட்டியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டுமெனில், ஏற்கனவே அதனை பெட்டியில் போட்டிருக்க வேண்டும். 


பீரோவில் இருந்து துணிமணிகளை எடுக்க வேண்டுமெனில், ஏற்கனவே அவை அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.


கணிப்பொறியிலிருந்து நமக்கு தேவையான விவரங்கள் வெளிவர வேண்டுமென்றால், அதற்குரிய தொகுப்புகள் உள்ளே செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.


ஒரு மாம்பழம் நம் கைக்கு கிடைத்தால் அதனைப் பிரியமாக சாப்பிடுகிறோம். காரணம் அதன் சுவையைப் பற்றிய பதிவுகள் நமக்குள் இருப்பதுதான். ஒரு வேளை நாம் பார்த்தே இராத ஒரு பழம் நமக்கு கிடைத்தால், அதை தயக்கம் இன்றி சாப்பிடுவோமா? மாட்டோம். ஏனெனில் நம்மிடம் அந்த பழத்தை பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை.

 

பதிவுகள் (காரணம்) நல்லதாக இருந்தால் நம்மிடம் இருந்து வெளிப்படும் காரியமும் நல்லதாக இருக்கும்.


பதிவுகள் (காரணம்) மோசமாக இருந்தால், நம்மிடம் இருந்து வெளிப்படும் காரியமும் மோசமாகவே இருக்கும்.


காரியம் என்பது காரணத்தின் வெளிப்பாடே!



          16. பதிவும், செயலும்


மனம் மூலமாக செய்யப்படும் பதிவுகள் ஒரு மனிதனின் உணர்ச்சியையும், அவனது சுபாவத்தையும் குறிக்கும். 


புத்தி மூலமாக செய்யப்படும் பதிவுகள் ஒரு மனிதனின் அறிவையும், அவனது ஞானத்தையும் குறிக்கும்.


இந்த பதிவும், செயலும் எப்படி நடைபெறுகிறது; மனிதனுக்கு மனிதன் ஏன் வேறுபடுகிறது என பார்ப்போம்.


பள்ளியில் இருந்து வரும்பொழுது பையன் அழுது கொண்டே வருகிறான். அப்பா அவனைப் பார்த்து கேட்கிறார்:

"ஏண்டா அழுகிறாய்?" "ஸ்கூல்ல ஒரு பையன் அடிச்சிட்டாம்'பா"

 "ஏண்டா அவன் முரடனா" "ஆமாம்'பா" 

"நாளை முதல் அவன் பக்கத்தில் உட்காராதே" 


அப்பாவின் கட்டளை முரட்டு பையனின் பக்கத்தில் அமராதே என்ற பதிவினை அவனுக்குள் ஏற்படுத்துகிறது. மறுநாள் அந்தப் பையனை பார்த்ததும் ஏற்கனவே செய்யப்பட்ட பதிவின் காரணமாக என்ன செய்ய வேண்டும் என்பது மனதிற்கு தெரிகிறது. மனம் கட்டளை பிறப்பிக்க உடல் மூலமாக செயல்பாடு நிகழ்கிறது. பையன் முரட்டு பையனை விட்டு விலகி வேறு இடத்தில் அமர்கிறான். இங்கு அப்பாவின் கட்டளைப்படி ஏற்படும் பதிவு "காரணம்"; மறுநாள் விலகி அமரும் செயல் "காரியம்".


இதே பையனிடம் அவனது அப்பா, "ஏண்டா பார்த்துக்கிட்டா இருந்த; பதிலுக்கு அவன் கையை ஒடிக்க வேண்டாமா" என்று சொன்னால், பதிவு வேறு விதத்தில் நிகழும்; செயல் சண்டையில் முடியும்.


மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடுவதன் காரணமாக, அவனது சுபாவங்களும் மாறுபடுகின்றன. ஆனால் புத்தி மூலமாக ஏற்படும் பதிவுகள் எல்லா மனிதர்களிடமும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே இருக்கும்.



           17. மனமும், புத்தியும் 


மனமும், புத்தியும் ஒரு மனிதனுக்குள் இருந்தாலும் இரண்டின் செயல்பாட்டிலும்தான் எத்தனை வேறுபாடுகள்!


மனம் என்பது மனித உடலில் எந்த இடத்தில் உள்ளது என்பது பற்றி உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், உணர்ச்சி வசப்படும் பொழுது இருதயம் அதிகமாக துடிப்பதால் அந்தப் பகுதியே மனம் இருக்கும் இடம் என சொல்லப்படுகிறது. 


எது, எப்படி, எங்கு இருந்தாலும் அது செய்யும் பதிவுகள் மூளையில்தான் நிகழ்கின்றன.


மனம் எந்தவொரு தாக்கத்தை விரும்பினாலும் (ஒருவனை காயப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதுவும் ஒருவகை விருப்பம்தான்) 'தான்' என்ற உணர்வோடு, பற்றுடன் பதிவு செய்கிறது.


புத்தியினால் ஏற்படும் பதிவில் 'தான்' என்ற உணர்வும், பற்றும் கிடையாது.


ஒருவன் தலைசிறந்த அறிவாளியாக இருக்கலாம். ஆனால் அதை நினைத்து அவன் கர்வம் கொண்டால், மனம் மூலம் ஒரு பதிவு நடைபெற்று விடுகிறது.


தன்னை வந்தடையும் தாக்கத்திற்குப் பதிலாக ஒரு செயலை மனிதன் செய்ய விரும்பினால், மனம் அதற்குரிய பெட்டகத்தில் உள்ள பதிவுகளின் படி செயல்படும்; புத்தி அதற்குரிய பெட்டகத்தில் உள்ள பதிவுகளின் படி செயல்படும்.


மனம் புத்தியின் கட்டுப்பாட்டில் இருந்தால், புத்தியிடம் உத்தரவு கேட்டு வாங்கி, அதன்படி செயல்பட உடலுக்கு கட்டளையிடும். கட்டுப்பாடு இல்லாத போது உணர்ச்சியின் அடிப்படையில் மனம் தன்னிச்சையாக செயல்படும். அந்த செயல் சரியானதாக இருக்கும் என சொல்ல முடியாது. 


மனிதன் ஒரு தாக்கத்தைச் சந்திக்கும் பொழுது உணர்ச்சிவசப்பட்டு விட்டால், அந்த சமயத்தில் அவனது மனதிற்கும் புத்திக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது. 


ஒருவன் சட்டம் படித்தவனாக, தர்ம நியாயம் தெரிந்தவனாக இருந்தாலும், ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கிறான். அது எதனால்? காரணம், பெண்ணைக் கண்டபோது மனம் உணர்ச்சிவசப்பட்டு விடுவதால், மனதிற்கும் புத்திக்கும் இடையே உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது. 


அதேபோல் மனமும், புத்தியும் ஒரு தாக்கத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் வெவ்வேறு சமயங்களில் அனுபவிப்பதும் உண்டு.


அவர் ஒரு நேர்மையான நீதிபதி. இரவில் சாப்பிட அமர்கிறார். மனைவி பரிமாறுகிறாள். சாப்பாட்டை பிசைந்து கொண்டே இருக்கிறார். ஆனால் சாப்பிடவில்லை. மனைவியை காரணம் கேட்க 'இன்று ஒரு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை கொடுத்து விட்டேன்; அவன் மனைவி கைக்குழந்தையுடன் அழுது கொண்டிருந்தது மனதை என்னவோ செய்கிறது' என்கிறார்; ஏன்?


நீதிமன்றத்தில் அவர் புத்தி மட்டும் வேலை செய்தது. புத்தியில் உள்ள பெட்டகத்தின் பதிவுகளின் படி தூக்குத்தண்டனை கொடுக்கிறார். அவரது தீர்ப்பினால் அவனது மனைவி துடித்த துடிப்பு காரணமாக அவரது மனதில் ஒரு பதிவு நிகழ்கிறது. இரவில் அது நினைவுக்கு வர சாப்பிட முடியாமல் தவிக்கிறார்.



         18. காரண, காரியம்


ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். இது சாதாரண விஷயம்தானே என நினைக்கலாம். அப்படி நினைத்தால் அது தவறாகும்.


காரண, காரியம் என்பது ஒரு தொடர் சங்கிலியாக நமது வாழ்க்கையையே -- நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ -- மாற்றி அமைக்கிறது. அவை காட்டும் சித்து விளையாட்டுகளை நாம் பொருட்படுத்தாவிட்டால் நமது வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது.


அந்த சிறுவன் அடிக்கடி தந்தை கூட கடைத்தெருவிற்குப் போகிறான்., "அப்பா, அப்பா இந்த கடையில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வா" என்று ஒரு நாளும் கேட்காத அவன் அன்று மட்டும் ஏன் கேட்கிறான்? அன்றைய தினம் பள்ளியில் வைத்து அவனது நண்பன் அந்த கடை ஐஸ்கிரீமை பற்றி சொன்னதுதான் காரணம். அவன் கடைத் தெருவிற்கு போகும் போதெல்லாம் அந்த குறிப்பிட்ட கடையைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் அவனுக்குள் எந்த பதிவும் நடைபெறவில்லை. பள்ளியில் வைத்து நண்பன் சொன்னதும் ஒரு பதிவு நிகழ்கிறது. மாலையில் கடையைப் பார்த்ததும் பதிவு நினைவிற்கு வர அதை வாங்கி சாப்பிடுகிறான். காரணத்தில் இருந்து காரியம்.


நண்பன் சொன்னபோது அந்தக் கடை ஐஸ்கிரீம் பற்றி ஒரு ஊகம்தான் பதிவாகி இருந்தது. அதனை சுவைத்து சாப்பிட்ட பின், ஏற்கனவே உள்ள பதிவு மேலும் அழுத்தம் பெறுகிறது. காரியத்தில் இருந்து காரணம்.


நண்பர்களின் வற்புறுத்துதல் காரணமாக மதுவை ருசி பார்ப்பவன் கடைசியில் குடிகாரனாக மாறுவதும் இதனால்தான். 


இதனைத்தான் "cause and effect theory" என்கிறார்கள். அதாவது காரண காரியம். இதில் காரணம் என்பது நடந்து முடிந்தது. காரியம் என்பது இப்பொழுது நடப்பது. ஆனால் காரியம் நடந்து முடிந்ததும் அதுவே எதிர்கால காரியத்திற்கான காரணமாக மாறிவிடுகிறது.


"The present effect which is because of the past cause becomes, after its effect, the cause for future effect". 

.. Swami Chinmayanandha.


ஏற்கனவே பதிவாகியுள்ள காரணத்தின் காரணமாக இப்பொழுது நிகழும் காரியம், காரியம் முடிந்ததும், நாளைய காரியத்திற்கான காரணமாக மாறிவிடுகிறது.


இப்படி தொடர் சங்கிலியாக நடக்கும் காரண காரிய நிகழ்ச்சிகள் மனிதனின் குணத்தை அல்லவா நிர்ணயம் செய்கின்றன.



                     19. பற்று


சிறுவன் முதல் தடவையாக அப்பாவிடம் ஐஸ்கிரீம் கேட்டதற்கு காரணம், நண்பன் சொன்னதை வைத்து அந்த குறிப்பிட்ட கடையின் ஐஸ்கிரீம் நன்றாக இருக்கும் என ஒரு பதிவு நிகழ்ந்ததுதான். அந்தப் பதிவு நடைபெற்ற பொழுது அவன் அந்த ஐஸ்கிரீமின் சுவையை அறிந்திருக்கவில்லை.


ஒருவேளை அந்த கடையில் வாங்கிய ஐஸ்கிரீம் சுவை அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் அவனிடமிருந்து அந்தப் பதிவு புதுப்பிக்கப்படாமல் மறைந்துவிடும். அந்த ஐஸ்கிரீமின் சுவை அவனுக்கு பிடித்திருந்தால், அவன் அதனை விரும்பிச் சாப்பிடும் பொழுது ஏற்கனவே உள்ளிருந்த பதிவு மேலும் அழுத்தம் பெற்று பற்றாக மாறுகிறது.


ஒரு தாய் தன் குழந்தையை கொஞ்சுகிறாள். அந்த வீட்டின் வேலைக்காரியும் அதனைக் கொஞ்சுகிறாள். ஆனால் ஒரு வித்தியாசம் அந்த வேலைக்காரிக்கு அந்த குழந்தை தன் குழந்தை அல்ல என நன்றாக தெரியும். தான் வேலையை விட்டு நின்று விட்டாலோ அல்லது நிறுத்தப்பட்டுவிட்டாலோ அந்தக் குழந்தையை தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது என்பதும் தெரியும். அதனால்தான் அவள் அந்தக் குழந்தையை கொஞ்சினாலும், அதனிடம் எந்தவிதப் பற்றும் வைப்பதில்லை. அவள் காட்டுவது வெறும் அன்பு மட்டும்தான்.


ஆனால் அதன் தாய்க்கோ அது தன் குழந்தை என்பதால் அதன் மேல் பற்று ஏற்பட்டு விடும் அன்பிற்கு பதிலாக குழந்தையின் மேல் ஆசை வைக்கிறாள். அதாவது அன்பு + பற்று = ஆசை.


பெற்றோர்கள் பையனுக்கு பெண் தேடுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் தட்டிப் போகிறது. கடைசியில் ஒரு பெண்ணை பேசி மணம் முடிக்கிறார்கள். மகனுக்கு ஒரு மனைவி வேண்டும் என்ற தேவை பூர்த்தி ஆகிறது. முன்பு பார்த்த பெண்கள் தட்டிப் போனதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. ஒருவேளை முன்பு பார்த்த பெண் அவனது காதலியாக இருந்து அந்த திருமணம் நின்று போய் இருந்தால் அவனது மனம் என்ன பாடுபடும்? எதனால் அப்படி?


மகன் காதலித்த பெண்ணை பெற்றோருக்கும் பிடித்து திருமணமும் நடந்திருந்தால், மகனின் தேவை மட்டுமல்ல ஆசையும் பூர்த்தியாகிறது. ஏனெனில் அவள், அவன் பற்று வைத்த பெண். அதாவது தேவை + பற்று = ஆசை.


ஆசையே அழிவிற்கு காரணம் என்கிறார் புத்தர். ஆனால் ஆசைக்கு காரணமாக இருக்கும் இந்த பற்றுதான் மனிதனை படுகுழியில் தள்ளுகிறது. சகல துன்பங்களுக்கும் காரணமான இந்தப் பந்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது?


"பற்றுக பற்றற்றான் பற்றினை   - அப்பற்றை                                        பற்றுக பற்று விடற்கு" என்கிறார் வள்ளுவர். 


எளிதில் முடிகிற காரியமா அது?



                     20. வாசனா


நண்பர்கள் கூடி கேலியாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடும். "ஏண்டா, இவன் இந்த கத்து கத்துகிறான்" "விடுடா, போன ஜென்மத்து வாசனையாக இருக்கும்". போன ஜென்மத்தில் கழுதையாக பிறந்திருப்பான்; அதனால்தான் இப்படி கத்துகிறான் என்ற ரீதியில் பேசுவார்கள். 


கேலியாகத் தோன்றினாலும் வாசனாவைப் பற்றிய ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முக்தி கிடைக்கும் வரை ஆன்மாவும், அதனை மாயத்திரையாக சூழ்ந்திருக்கும் வாசனாவும் ஒவ்வொரு பிறவியாக தமது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும். 


"வாசனா" எப்படி உருவெடுக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுமுன்--


வீட்டின் முன் 'ஹால்' முழுவதும் காற்று நிரம்பி இருக்கிறது. ஆனால் கண்ணால் பார்க்க முடிவதில்லை. வெளியில் சென்று விட்டு வந்த அப்பா, அம்மா, மகன் மூவரும் ஹாலில் அமர்கிறார்கள். இப்பொழுது அறையில் மட்டுமின்றி மூவரின் உடலுக்குள்ளும் காற்று இருக்கிறது. 


தந்தை மகனுக்காக தான் வாங்கி வந்த பலூனை ஊதுகிறார். இப்பொழுது அவர் உடலில் இருந்து காற்று பலூனுக்குள்ளும், அறையில் இருந்து காற்று அவருக்குள்ளும் இடம் பெயர் கிறது. 


அறை முழுவதும் நிறைந்துள்ள காற்று நம் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் பலூனுக்குள் அடைப்பட்ட காற்று இடம் பெயர்வது பலூனுக்குள் அடைபட்ட காரணத்தினால் நமக்கு தெரிகிறது. 


ஒருவேளை பலூன் வெடித்து விட்டது என்றால், அப்பொழுது என்ன நடக்கிறது? பலூன் தரையில் விழுகிறது. பலூனுக்குள் இருந்த காற்று பலூன் வெடித்த இடத்திலேயே வெளிக்காற்றுடன் கலந்து விடுகிறது. பின்பு அதனைத் தனியாக நம்மால் உணர முடிவதில்லை. 


அறையில் நிறைந்திருக்கும் காற்றினைப் போல் பரமாத்மா உலகமெங்கும் வியாபித்து இருக்கிறார். ஜீவாத்மாவோ ஒவ்வொரு உடலிலும் 'வாசனா' என்னும் மாய பலூனுக்குள் சிறையுண்டிருக்கிறது. உடல் மரித்தாலும் வாசனா என்னும் பலூன் வெடிக்காத வரை ஜீவாத்மாவிற்கு முக்தி இல்லை. அது மீண்டும் ஒரு பிறவியை எடுக்கிறது.


இந்த வாசனா எங்கிருந்து, எப்படி வருகிறது? அதனை எப்படி வெடிக்கச் செய்வது என அறியும் முன் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக இருப்பது நாம் பெரும் அனுபவங்களே என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? 


இந்த அடிப்படை உண்மையை அறிந்து, நாம் வாழும் பொழுதே வாசனா என்னும் கூட்டை உடைத்து விட்டால் -- அதை நாம் தான் செய்ய வேண்டும் -- ஜீவாத்மா முக்தி பெற்று பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.


அதன்பின் அதற்கு பிறவியேதும் கிடையாது.



                     21. ஆன்மா 


தினம், தினம் தூங்கி விழிக்கும் மனிதன் என்றாவது ஒருநாள் நிரந்தரமாக தூங்கி விட்டால், அதன் பின் அந்த மனித உடலுக்கு விழிப்பு கிடையாது. அந்த நேரத்தில் மனிதர்கள் பொதுவாக சொல்வது 'அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்'. அப்படியானால் ஆன்மாவிற்கு சாந்தியற்ற நிலை என ஒன்று இருந்ததா?


'வாளால் வெட்ட முடியாததும், நெருப்பால் சுட முடியாததும், நீரால் நனைக்க முடியாததும், காற்றால் உலர்த்த முடியாததும்' ஆன ஆன்மாவை யாரால் துக்கப்பட வைக்க முடியும்? பின் ஏன் இந்த சாந்தியற்ற நிலை?


அது ஒரு விரிந்து பரந்த வெட்ட வெளி. உற்றுப் பார்த்தால் நடுவில் ஒரே ஒரு வீடு. யாரிடமாவது என்ன தெரிகிறது என்றால் தூரத்தில் ஒரு வீடு தெரிகிறது; அதைச் சுற்றி நாற்புறமும் வெட்ட வெளியாக இருக்கிறது என்பார்கள். 


அப்படியானால் வீடு இருக்கும் இடத்தில் வெட்டவெளி கிடையாதா? ஒருவேளை வீட்டின் சுவர்கள் இடிந்து விட்டால் மீண்டும் அந்த இடம் வெட்ட வெளிதானே! அதுவரை அந்த வெட்டவெளி எங்கு இருந்தது? 


அது அங்கேயேதான் இருந்தது. நாம் வீட்டைப் பார்த்ததால் வெட்டவெளியை மறந்து விட்டோம். "மரத்தை மறைத்தது மாமத யானை" என்ற கதைதான்.


அகிலமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளின் ஒரு பகுதிதான் உடலுக்குள் இருக்கும் ஆன்மாவும். உடலை மட்டும் பார்க்கும் நாம் ஆன்மாவை உணர்வதில்லை; பரமாத்மாவின் ஒரு பகுதிதான் அது என்பதும் புரிவதில்லை.


வீட்டின் சுவர் இடிந்ததும், வீட்டில் இருந்த வெட்டவெளி மீண்டும் வெளியில் உள்ள வெட்டவெளியில் கலந்து விடுகிறது. ஆன்மாவோ மனிதன் மரித்தாலும், வாசனாவின் மாய சிறைக்குள் இருப்பதால், பரமார்த்தவுடன் இணைய முடிவதில்லை. 


மனிதனின் "வாசனா", குண நலன்களை ஒட்டி அமைவதால், அதனில் ஆசை, ஏக்கம், வெறுப்பு, கோபம் போன்ற பல பதிவுகள் மிக ஆழமாகப் பதிவாகி இருக்கும். அதனால் அந்த வாசனா சாந்தியற்ற நிலையில், சூட்சும உடலுடன் ஆன்மாவையும் உள்ளடக்கி உலவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் நாம் வேண்டும் சாந்தி என்பது, அந்த வாசனாவிற்கு மட்டுமே.


"ஆன்மா" என்பது வாசனாவிற்கும், வாசனா மூலமாக உடலுக்கும் உயிர் கொடுக்கும் ஒரு ஒளி மட்டுமே.