Friday, 2 March 2018

திருக்குறள் .. புதிய பார்வை

திருக்குறள்.  திருவள்ளுவர் மனித குலத்திற்கு அளித்த கொடை.

உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில், பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்.

பல்வேறு அறிஞர்கள் இந்த நூலுக்கு விளக்கவுரை எழுதி உள்ளனர். இருந்தாலும், சில விளக்கங்கள் முழுமையான மெய்ப்பொருளை எடுத்துரைக்கவில்லையோ என்ற சந்தேகமும் வருகிறது.

அப்படிப்பட்ட குறள்களுக்கு புதிய கோணத்தில் விளக்கம்  தரப்பட்டுள்ளன. அவை சரியா என்பதை முடிவுசெய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.

                                                          பித்தன்                                          
............................................................................................................................................................

அடக்கம் அமரருள் உய்க்கும்  அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்           ...        ...      (குறள் 121)

“அடக்கம்  என்னும் பண்பு ஒருவனைத் தேவர் நடுவே கொண்டு சேர்க்கும்; அடங்காமை என்னும் குணம் நரகத்தில் தள்ளிவிடும்”.
…………………………………………………………………………………………………………

இந்த குறளில் உள்ள ‘அடக்கம்’ என்ற வார்த்தையை கொஞ்சம் ஆராய வேண்டி உள்ளது.

கீழே கொடுத்துள்ள வார்த்தை ஜோடிகளைப் பாருங்கள்.

          அடக்கு               அடங்கு
          அடக்குதல்            அடங்குதல்
          அடக்காமை           அடங்காமை
          அடக்கம்               ?????????

கேள்விக்குறி உள்ள இடத்தில் என்ன வார்த்தையைப் போடவேண்டும்?
அங்கும் ‘அடக்கம்’ என்ற வார்த்தைதானே வரும்.

மேலே உள்ள குறளில் ‘அடங்காமை’ என்ற வார்த்தை வருவதினால், இங்கு ‘அடக்கம்’ என்பது ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கத்தைதானே குறிக்கும்.

அடங்குதல்’ என்று சொல்லும்பொழுது, மனம் அடங்குவதையே, அதாவது ஒரு மனிதனின் ‘தன்முனைப்பு’ (அஹங்காரம்) அடங்குவதையே குறிப்பிடுகிறோம்.

‘அடங்குதல்’ காரணமாக வரும் ‘அடக்கம்’, எந்த மனிதனுக்கு சாத்தியமாகும்?

குணத்தைப் பொறுத்து மனிதனை மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவர்களில் யாருக்கு இந்த ‘அடக்கம்’ கைகூடும்?

‘தமோ’ குணம் உள்ள மனிதன், மற்றவரின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு நடப்பவன். அவனிடம் பணிவும், அடக்கமும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அந்த ‘அடக்கம்’ அடங்குதல் காரணமாக வரும் அடக்கமாக இருக்கமுடியாது.

‘இரஜோ’ குணம் உள்ள மனிதன் தன்முனைப்பு மிக்கவனாக இருப்பான். எனவே அவனது செயலில்  பரபரப்பும், மனதிற்குள் கொந்தளிப்பும் இருந்துகொண்டே இருக்கும். அத்தகைய மனிதனிடம் அடக்கத்தை எதிர் பார்க்கமுடியாது. அதையும் மீறி, அவன் அடக்கத்தை வெளிப்படுத்தினால், அதுவும்  நிச்சயமாக ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கமாக  இருக்க முடியாது.

‘சத்துவ’ குணம் உள்ள மனிதனிடம் மட்டுமே, ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கத்தை காணமுடியும்.  ஆனால் இங்கும், திருவள்ளுவர் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறார்.

‘சத்துவ’ குணம் உள்ளவர்களிடம் இயல்பாகவே ஆன்மிக விசயங்களை கற்றுக்கொள்வதிலும், அவற்றில் உள்ள மெய்ப்பொருளை உணர்வதிலும், தான் உணர்ந்ததை பிறருக்கு எடுத்துச் சொல்வதிலும் ஒரு ஆர்வம் இருக்கும். அதனாலேயே அவர்களிடம் ‘அடங்குதல்’ காரணமாக வரும் ‘அடக்கமும்’ இருக்கும் என்று சொல்லமுடியாது என்கிறார் அவர்.  குறள் 834 -ஐ பாருங்கள்:

   “ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
   பேதையின் பேதையார் இல்”.

இங்கும் அவர் ‘தானடக்கா’ என்று சொல்லவில்லை; ‘தானடங்கா’ என்றுதான் சொல்லுகிறார்.

அதாவது ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கத்தைதான் அவர் குறிப்பிடுகிறார்.
………………………………………………………………………………………………………….

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு           ...        ...      (குறள் 215)

உலகத்தார் நன்றெனக் கொண்டவற்றை விரும்பிச் செய்யும் அறிவாளியின் செல்வம் ........”
............................................................................................................................................................

“பேரறிவாளன்” என்பதற்கு மேலே கொடுக்கப்பட்ட அர்த்தம் சரியானதுதானா?

ஓரறிவு, ஈரறிவு என்ற வரிசைப்படிப் பார்த்தால் மனிதன் ஆறறிவு படைத்தவன். இருந்தாலும் அவனும் சிற்றறிவாளன்தான். ஏனெனில் ஆறாவது அறிவைத் தொடர்ந்து, ஏழாவது அறிவு, எட்டாவது அறிவு என்றெல்லாம் சொல்கிறார்களே!

அப்படியானால், பேரறிவாளன் என்பவன் யார்?

எவனொருவன் பேரறிவை, இறைத்தன்மையை அறிந்துகொள்கிறானோ, அவனே பேரறிவாளன் ஆகிறான்.

அத்தகைய மனிதனின் செல்வம் மட்டுமே ஊருணி நீராக உலகத்தாருக்கு பயன்படும்.

மற்றவர் செய்யும் ஈகை, பயனை எதிர்பார்க்கும் தன்மை உடையதாகவும் இருக்கலாம் அல்லவா?

..................................................................................................................................................................

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு           ...        ...      (குறள் 31)

“அறம் மக்களுக்குச் சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும்; எனவே, அவ்வறத்தைக் காட்டிலும் நன்மை தருவது வேறில்லை”
...........................................................................................................................................................

திருவள்ளுவர் சிறப்பையும், செல்வத்தையும் என்றா சொல்லியிருக்கிறார்?

சிறப்புஈனும், செல்வமும் ஈனும் என்றுதானே சொல்லியிருக்கிறார். சிறப்பு என்று சொன்னவர், செல்வம் என்று சொல்லவில்லை; செல்வமும் என்று சொல்லியிருக்கிறார்.

எதனால் இந்த வேற்றுமை?

ஒரு கற்பனை காட்சி:

   தாத்தா: இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு, உனக்கு பட்டுப்
           பாவாடையும், பட்டுச் சட்டையும் வாங்கித் தருகிறேன்.

   பேத்தி:  அப்ப, பட்டாசு?

   தாத்தா: பட்டாசும் வாங்கித் தருகிறேன்.

பாவாடை, சட்டை என்றவர், பட்டாசும் என்று ஏன் சொன்னார்? 

தாத்தாவைப் பொறுத்தவரை பாவாடை, சட்டை இரண்டும்தான் முக்கியம்; 

இருந்தாலும் பேத்தி கேட்டதால், பட்டாசும் வாங்கித் தருகிறேன் என்கிறார்.

அறத்தின் வழியில் நடந்தால் சிறப்புஈனும் என்று சொன்ன வள்ளுவர், அறத்தின் வழியில் நடந்தால் செல்வம் கிடைக்காதா என்று நினைக்கக் கூடும் என்பதால், செல்வமும் ஈனும் என்கிறார்.

இதில் ஒரு மெய்ப்பொருளும் அடங்கி இருக்கிறது. அறத்தின் வழியில் நடந்தால் சிறப்பு வரும்; அந்த மனிதனுக்கு அவனது தகுதிக்கு ஏற்ப செல்வமும் வரலாம்; ஆனால் அவனுக்கு அதில் எந்தவித ஈர்ப்பும் ஏற்படாது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
..................................................................................................................................................................____________________________________________________________________________

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு            ...        ...      (குறள் 786)

“ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று; அன்பால் மனமும் மலர நட்புக் கொள்வதே நட்பாகும்”.
............................................................................................................................................................

இந்தக் குறளில் மூன்று வார்த்தைகளை சற்று விரிவாகப் பார்க்கவேண்டி உள்ளது.

அவை ‘முகம்’, ‘நெஞ்சம்’ மற்றும் ‘நெஞ்சத்து அகம்’.

மனிதனின் உருவம் ஐந்து உறைகளால் போர்த்தப்பட்டது என்று மறை ஞானிகள் சொல்கிறார்கள். அவை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

அவற்றிற்கு முறையே உணவு உறை, காற்று உறை, மன உறை, புத்தி உறை மற்றும் ஆனந்தமய உறை என்று பெயர் சூட்டயுள்ளார்கள்.

இவற்றில் உணவு உறை மற்றும் காற்று உறை இரண்டும் உடலைச் சார்ந்து இருப்பவை.

ஞானியர் உடலைப் பருவுடல் என்றும், மனதை நுண்ணுடல் என்றும் சொல்கிறார்கள்.

மனம் என்று சொல்லும்பொழுது அதனை உணர்வு மனம் என்றும், உணர்வற்ற மனம் என்றும் பிரித்துச் சொல்வார்கள். உணர்வற்ற மனதை ஆழ்மனம் என்றும் சொல்வதுண்டு.

ஆனந்தமய உறையின் மேல் பதிவுகள் நிகழும் பொழுது, அது ஆழ்மனம் என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பதிவுகளின் தன்மையைப் பொறுத்து ஒரு மனிதனின் அஹங்காரம் தன்முனைப்பாகவும், திமிராகவும், செருக்காகவும் உருவெடுக்கிறது.

உணர்வு மனம் மூலமாகவே ஆழ்மனதில் பதிவுகள் நிகழ்கின்றன. ஆழ்மனப் பதிவுகளின் அடிப்படையில் புறவுலகில் செயல்பட விரும்பினாலும் அதுவும் உணர்வு மனம் மூலமாகவே நடைபெறவேண்டும். 

நெஞ்சம் என்பது பொதுவாக மனதைக் குறிக்கும். வள்ளுவர் ‘நெஞ்சத்து அகம்’ என்று சொல்வதால் ‘நெஞ்சத்துப் புறம்’ என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?

அகம் என்பது உள்ளே உள்ளதைக் குறிப்பது; புறம் என்பது வெளியே உள்ளதைக் குறிப்பது. அப்படியானால், ஆழ்மனதை அகம் என்றும், உணர்வு மனதை புறம் என்றும் சொல்லலாம் அல்லவா?

முகத்தில் ஏற்படும் “நக”, உணர்வு மனம் சம்மதித்தால் மட்டுமே வரும். ஆனால் அது பலநேரங்களில் போலியாகவே, உண்மையான உணர்வுகளை மறைத்து, (சூழ்நிலைக்கு ஏற்ப) வெளிப்படுத்துவதாகவே இருக்கும். ஆகவே அது உண்மையான “நக” ஆகாது என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் உண்மையான “நக” என்பது  ஆழ்மனதில் ஏற்பட வேண்டும் என்கிறார்.
______________________________________________________________________________

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி   
கணமேயும் காத்தல் அரிது.           ...        ...      (குறள் 29)

நற்குணம் என்னும் மலையின் மேல் ஏறி நின்ற துறவியின் சினம் நிற்பது சிறு பொழுதே என்றாலும், எவர்க்கும் அதன் விளைவைத் தாங்குதல் முடியாது”.
............................................................................................................................................................

நற்குணம் நிறைந்த சான்றோரிடம் பழி உணர்ச்சி சிறிதும் இருக்காது. பின் எதற்காக “சினம் கொண்டால் தாங்க மாட்டாய்” என்று பொருள் கொள்ள வேண்டும்? அதுவும் நீத்தார் பெருமையை கூறவந்த இடத்தில்.

சினம் எப்பொழுது வெளிப்படுகிறது?

மந்தரைக்கு இராமன் மேல், அவன் சிறுவனாக இருக்கும்பொழுது, கோபம் வந்தது. அவன் இராஜகுமாரன் அல்லவா; அதனால் அவளால் தனது கோபத்தை வெளிக்காட்டமுடியவில்லை.

ஆனாலும் நடந்த சம்பவத்தை மீண்டும், மீண்டும் நினைத்துகொண்டிருந்ததால், மனதில் இருந்த கோபம் ஆழ்மனம் வரைக்கும் இறங்கிவிடுகிறது. அங்கே அது தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கனன்று கொண்டிருக்கிறது. அவள் எதிர்பார்த்த சந்தர்ப்பம், இராமனுக்கு திருமணம் நடந்து, பட்டாபிஷேகத்திற்கு தயாராக நின்ற போது  வருகிறது. உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த சினத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறாள்.

ஆக, சினம் வரவேண்டுமென்றால் ஆழ்மனதில் அதற்குரிய காரணம் பதிவாகி இருக்கவேண்டும். சான்றோரைப் பொறுத்தவரை ஆழ்மனதில் எந்தவிதப் பதிவும் இருக்காது. எனவே அவர்கள் சினம் கொள்வது மிகவும் அரிது.

அப்படியானால் வள்ளுவர் சொல்லவந்தது என்ன?

நமக்கு யாரேனும் தீங்கு இழைத்தால், நமக்கு கோபம் வருகிறது. ஆனால் நம்மால் அந்த நேரம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால், அந்த கோபம் நமக்குள் தங்கிவிடுகிறது; நாமும் கோபம் வருவதற்கு காரணமாக இருந்த சம்பவத்தைப் பத்திரமாக ‘அடைகாக்க’ ஆரம்பித்து விடுகிறோம். மீண்டும், மீண்டும் நடந்து முடிந்த சம்பவத்தை நினைக்கும் பொழுது, நமது கோபம் ஆழ்மனம் வரை சென்று விடுகிறது. நாமும் பழிவாங்குவதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

சான்றோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு யாரேனும் தீங்கு செய்தால், சாதாரணமாக கோபம் வராது; அப்படியே வந்தாலும் கணநேரம் கூட அதை ‘அடைகாக்க’ மாட்டார்கள் என்று வள்ளுவர் சொல்கிறார்.

குறளை கீழ்க்கண்டவாறு பிரித்துப் பாருங்கள்: - -

             ‘குணமென்னும் குன்றேறி நின்றார்,
     வெகுளி, கணமேயும் காத்தல் அரிது’

இன்னொன்றும் சொல்லவேண்டி உள்ளது, குணமென்னும் குன்றேறி நிற்பவர் துறவியாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல; இல்லறத்தில் உள்ளவனும் குணமென்னும் குன்றேறி நிற்கமுடியும்.­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­_____________________________________________________________________________

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்    
பற்றி விடாஅ தவர்க்கு.           ...        ...      (குறள் 347)

பற்றுக்களைப் விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத் துன்பங்கள் விடாமல் இறுகப்பற்றி நிற்கும்”.
............................................................................................................................................................

குறளுக்கான பொருள் சரியாக இருந்தாலும், எதிர்மறையாக இல்லாமல், நேரடியாகவே பொருள் கொள்ளலாமே. எப்படி?

“பற்றினைப் பற்றாதவரை, இடும்பைகள் பற்றாது” – இது நேரடியாகவும், எளிதாகவும் இருக்கிறதல்லவா?
______________________________________________________________________________

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை     
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை    ...     ...    (குறள் 37)

“அறத்தின் பயன் இன்னதன்மையுடையது என்று சொல்ல வேண்டியதில்லை; பல்லக்கைச் சுமந்து செல்பவனுக்கும், அதில் ஏறிச் செல்பவனுக்கும் உள்ள வேற்றுமையே அதனைக் காட்டிவிடும்”.
............................................................................................................................................................

இந்தக் குறளுக்கு வேறு வித விளக்கங்களும் உள்ளன. நாம் புதிய கோணத்தில் இதனைப் பார்ப்போம்.

வள்ளுவர் காலத்தில் பயணம் செய்வதற்கு பல்லக்கு ஒரு முக்கிய வாகனம். அதில் பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள், மதகுரு, மந்திரி மற்றும் பணக்காரர்கள் போன்றோர் போவதுண்டு.

இவர்களில் மதகுரு, மந்திரி இருவரும் அறம் என்றால் என்னவென்று தெரிந்தவர்கள்; பணக்காரர்களுக்கும் அறம் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும், அதனைப்  பற்றிய கேள்விஞானம் இருப்பதுண்டு.

இவர்கள், அறம் என்றால் என்னவென்று தெரிந்திருந்தும், கால்களால் நடக்காமல்  பல்லக்கில் அமர்ந்து ஊர்ந்து செல்லலாமா; இவர்களிடம் அறத்தைப் பற்றி பேசி என்ன பயன் என்கிறார் வள்ளுவர்.

அடுத்தவர்களைத் துன்பப்படுத்தி, அவர்கள் சுமக்கும் பல்லக்கில் ஊர்ந்து செல்பவர்களிடையே  அறத்தைப் பற்றி பேசுவது வீண் என்கிறார் வள்ளுவர். இதில் ஒரு சமுதாயச் சாடல் தெரிகிறது.

அடுத்தவன் முதுகில் சவாரி செய்பவனிடமும், அடுத்தவன் வயிற்றில் அடித்து பிழைப்பவனிடமும் அறத்தைப் பற்றிப் பேசாதே என்கிறார் வள்ளுவர்.
______________________________________________________________________________

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்      
இல்வாழ்வான் என்பான் துணை     ...     ...    (குறள் 42)

துறவியர்க்கும் ஏழைக்கும் ஆதரவின்றி இறந்தவர்க்கும் இல்வாழ்க்கையில் இருப்பவன் துணையாவான்”
............................................................................................................................................................

‘இறந்தார்க்கும்’ என்பதற்கு ஆதரவின்றி (உடல்) இறந்தவர்கள் என்று சொல்வது சரிதானா?

உடல் இறப்பது ஒன்றுதான் இறப்பா? வேறுவகையான இறப்பு என்று எதுவும் இல்லையா?

“சினம் இறக்கக் கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே” என்பதற்கு என்ன பொருள்?

இரமண மகரிஷி வாலிபப் பருவத்தில், அண்ணாமலையில் கடும் தவம் செய்த பொழுது, அவர் மனம் இறந்த நிலையில் இருந்தார். பிச்சை எடுத்து உடலைக் கவனிக்கவேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாத நிலையில் அவர் இருந்தார். அப்பொழுது பல இல்லறத்தார்கள் அவரைப் பராமரித்து வந்தனர்.

ஆக, உடல் இறந்த மனிதருக்கல்ல, மனம்  இறந்த மனிதருக்கு  இல்வாழ்வான் துணைநிற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஏனெனில் மனம் இறந்த துறவியர்கள்  இல்லறத்தான் இருக்கும் வீடு தேடிவந்து பிச்சை கேட்கமாட்டார்கள்.
...................................................................................................................................................................

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து   ...     ...    (குறள் 125)    

அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நல்லதாகும்; அவெல்லாருக்குள்ளும் செல்வர்க்கே அது மற்றொரு செல்வமாகும் சிறப்பினையுடையது”.
............................................................................................................................................................

இந்த குறள் ‘அடக்கமுடைமை’ என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது. ‘அடக்கமுடைமை’ என்று சொல்லும்பொழுது, அடங்குதல் காரணமாக வரும் அடக்கம்   என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதே அதிகாரத்தில் ஒரு குறளில் “கற்றடங்கல் ஆற்றுவான்” என்று வள்ளுவர் சொல்கிறார். கற்றால் மட்டும் போதாது; மனம் அடங்கவேண்டும் என்கிறார்.

மனம் எப்பொழுது அடங்கும்? மனம் இறந்தால் மட்டுமே மனம் அடங்கும். சற்று விரிவாகப் பார்ப்போம்.

‘பணிதல்’ என்பது போலியாக இருக்கலாம்; நிர்பந்தம் காரணமாக இருக்கலாம்; வேறு எந்தக் காரணமாகவும் இருக்கலாம்; ஆனால் அது உண்மையான ‘பணிதலாக’ இருக்கமுடியாது.

இயல்பாக, ஒரு மனிதனின் சுபாவமாக ‘பணிவு’ இருப்பதற்கு என்னசெய்ய வேண்டுமென்று இந்த குறளில் ஒரு குறிப்பு தருகிறார் வள்ளுவர்.

“அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து” என்பதை “அவர் உள்ளும்செல்வர்க்கே செல்வந் தகைத்து” என்று பிரித்துப் பொருள்கொண்டால் நமக்கு உண்மை விளங்கும்.

“உள்ளும்செல்வர்க்கே” என்றால் ‘அகத்தாய்வில் ஈடுபடுபவர்க்கே’ என்று எடுத்துகொண்டால், அதனால் விளையும் பலன்கள் ஒன்றன் பின் ஒன்றாக நமக்குத் தெரியவரும்.

ஒரு மனிதன் அகத்தாய்வில் ‘அதி தீவிரத்துடன்’ முழு மூச்சாக ஈடுபடும்பொழுது, அந்த அகத்தாய்வு .அவனை  ஆத்ம விசாரம்வரை கொண்டு  செல்லுமானால்  அவனது ‘தன்முனைப்பு’ சிறிது, சிறிதாக குறையத்  தொடங்குகிறது.

அத்துடன் அவன், ‘என்னுடைய’ என்னும் பற்றிலிருந்து விடுபட்டு ‘உடமைத்தனம்’ இல்லாதவனாக மாற ஆரம்பிக்கிறான்.

‘உடமைத்தனமின்மையின் அளவு பூரணமாகும்பொழுது, அவனது ‘சித்ததின்மேல்’ உள்ள பதிவுகள் (ஆழ்மனதிற்கு காரணமாக இருந்தவை) ஒவ்வொன்றாக மறைகின்றன.

அவனது ஆழ்மனம் நிர்மலமாகிறது. (இதனைத்தான்  மனம் இறத்தல் என்று சொல்கிறோம்)

ஆழ்மனம் நிர்மலமாக இருப்பதால், அதன்பின் அவனிடமிருந்து எந்தவித எண்ணங்களும் பீரிட்டு கிளம்புவதில்லை.

“யோகம்” என்பதற்கு பலபேர் பலவிதமாகப் பொருள்கொள்வதுண்டு. ரிஷி பதஞ்சலி இதற்கு “சித்த விருத்தி நிரோத” என்கிறார். அதாவது சித்தத்திலிருந்து எந்தவித சிந்தனையும் எழும்பாமல் இருப்பது.

இப்பொழுது அந்த மனிதனிடம் இருப்பது உண்மையான, போலித்தனமில்லாத “பணிவு”; அதனை “நாணம்” என்றும் சொல்லலாம்.

இந்தப் பணிவு, அந்த மனிதனுக்கு ஒரு ‘அணிகலனாக’ மாறிவிடுகிறது; “அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு” என்கிறார் வள்ளுவர்.

அவனுக்கு ‘சச்சிதானந்தின்’ பொருள் விளங்குகிறது.

அவன், பத்திரகிரியார் சொல்வதுபோல, “தூங்காமல் தூங்கி சுகம்காண” ஆரம்பிக்கிறான்.

இதுவே எல்லா செல்வத்தையும்  விட பெரிய செல்வம்.

..................................................................................................................................................................

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை    ...     ...    (குறள் 1014)    

நிறைகுணமுடையவர்க்கு, செய்யத்தகாதவற்றைச் செய்ய நாணுதல் ஓர் அணி போன்றதாகும்; ...........
............................................................................................................................................................

இந்தக் குறள், நாணுடைமை என்கிற அதிகாரத்தின் கீழ் வருகிறது. இதில் உள்ள பத்து பாடல்களுக்கும் பொருள் விளக்கம் சொல்லும்பொழுது, நாணம் என்ற வார்த்தையே உபயோகிக்கப் பட்டுள்ளது.

நாணம் என்ற வார்த்தைக்கு பலவித பொருள் உள்ளது; நாணம், வெட்கம், கூச்சம் என்று பல அர்த்தங்கள். ஆங்கில மொழிபெயர்ப்பில் shame என்ற வார்த்தை கையாளப்பட்டுள்ளது. அதற்கு கூச்சம் என்ற பொருள் இருந்தாலும், அவமானம் என்ற பொருளையும் மக்கள் தவறாக எடுத்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது.

வள்ளுவர் நாணம் என்று சொல்லும்பொழுது, அதற்கு மேலே சொல்லப்பட்ட அர்த்தங்கள் சரியாக இருக்கமுடியுமா?

ஒரு அறிவில்லாத மனிதனை, அறிஞர்கள் சபையில் பேசச் சொன்னால், அவனுக்கு கூச்சமாக இருக்கும்; அதனை வள்ளுவர் சொல்லும் நாணத்தோடு ஒப்பிடமுடியுமா?

திருமணப் பெண்ணுக்கு, மணவறையில் அமர்ந்திருக்கும்போழுது ஒருவித நாணம் இருக்கும்; அதனை வள்ளுவர் சொல்லும் நாணத்தோடு ஒப்பிடமுடியுமா?

அப்படியானால் வள்ளுவர் சொல்லும் நாணம் எத்தகையது?

‘சான்றோர்’ என்பவர் யார்? ‘கற்றடங்கல் ஆற்றுவான்’ என்கிறார் வள்ளுவர். கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்று, மனம் அடங்கியவனை சான்றோர் என்கிறார். அத்தகைய சொன்றோரின் பண்பு எப்படி இருக்கும்?

·         ‘.......... நாயினும் கடையேன்’
·         ‘.......... தொண்டருக்குத் தொண்டரென’
·         ‘.......... மனமிறக்க கல்லாற்கு வாயேன் பராபரமே’
·         ‘தன்னைத் தாழ்த்திகொள்பவன் உயர்த்தபடுவான்’
·         ‘மீண்டும் குழந்தையாக மாறாதவரையில்.......’

மனம் இறந்த மனிதனிடம் தற்பெருமை, தன்னைப்பற்றிய பெருமிதம், தன்முனைப்பு என்று எதுவுமே இருக்காது. அவன் இறைவனின் கருவியாக மாறிவிடுகிறான். அதன்பின் அவனால் எந்தவித ஆடம்பரத்தையும், புகழ்ச்சியையும் விரும்பமுடியாது.

‘சித்தத்தில் எந்தவித விருத்தியும்’ இல்லாததால், அவன் ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையாக (மனதளவில்) மாறிவிடுகிறான்.

அதன்பின், அவனிடமிருந்து வெளிப்படும் நாணம், அவனது  இயல்பாகவே இருக்கும்.

அது, தன்னில் தன்னைக் கரைத்துவிட்ட நிலையில் வருவது. ______________________________________________________________________________


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்            
பொய்யா  விளக்கே   விளக்கு     ... (குறள் 299)    

புற இருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்குகள் ஆகா; குணத்தால் நிறைந்தவருக்கு மன இருள் போக்கும் பொய் பேசாமையாகிய விளக்கே விளக்கு.
............................................................................................................................................................

“எல்லா விளக்கும்” என்பதற்கு ‘புற இருளைப் போக்கும் விளக்குகள்’ என்று அர்த்தம் கொள்வது சரிதானா?

விளக்கு என்பதற்கு ‘ஞானம்’ என்றும் சொல்வதுண்டு.

“விளக்கினை யேற்றி வெளியை அறிமின்.............(1818) என்கிறார் திருமூலர். அதாவது, ஞானம் என்ற விளக்கினை ஏற்றி எல்லை அற்ற பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார்.

‘விளக்கு’ என்பதற்கு ஞானம் என்று பொருள்கொண்டால், இந்தக் குறளுக்கு என்ன அர்த்தம்?

வேதாந்தம், சித்தாந்தம் என்று திருமறைகளில் உள்ள பலப்பல நூல்களைக் கற்று ஞானம் தெரிந்த மனிதனாக இருந்தாலும், மன இருள் போக்கும் பொய் பேசாமையாகிய விளக்கே உண்மையான விளக்கு என்று சொல்கிறார் வள்ளுவர்.
______________________________________________________________________________

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.    ...     ...          …      (குறள் 292)    

குற்றமற்ற நன்மையை உண்டாக்குமானால், பொய்யான சொற்களும் உண்மை என்று நினைக்கத்தக்க இடத்தைப் பெறுவனவாகும். 
............................................................................................................................................................

‘வாய்மை’ என்ற அதிகாரத்தில் வரும் ‘பொய்’ என்ற சொல்லுக்கு, பொய் பேசுவது, பொய்யை நினைப்பது போன்றே அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அர்த்தம் மட்டும் போதுமா?

பொய்யான சொற்கள் மட்டுமல்ல, பொய்யான, தவறான – இன்னும் சொல்லப்போனால் உண்மைக்குப் புறம்பான – செயல்கள்கூட பொய்ம்மைதான். தவறான எண்ணங்கள் மனதில் தோன்றினால்கூட, அதுவும் பொய்ம்மைதான்.

கர்ணன் அம்பு எய்தபொழுது, அர்ஜுனனைக் காப்பதற்காக கிருஷ்ணர் தேரைக் காலால் அழுத்தியதும் பொய்ம்மைதான்; மல்யுத்தத்தில் பீமன் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக  தனது தொடையைத் தட்டிக் காட்டியதும் பொய்ம்மைதானே.

எனவே, பொய்ம்மை என்பதற்கு,  ‘உண்மைக்குப் புறம்பான’ என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும் அல்லவா?
______________________________________________________________________________
.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோவா தவர்.    ...     ...          …      (குறள் 270)    

உலகத்தில் செல்வமுடையவர் சிலரும், செல்வமில்லாதவர் பலருமாக இருப்பதற்குக்  காரணம், தவம் செய்கின்றவர் சிலரும், தவம் செய்யாதவர் பலருமாக இருத்தலே. 
............................................................................................................................................................

தவம் செய்பவருக்கு நோக்கம் ஞானம் பெறுவதாக இருக்குமே அல்லாது, செல்வம் பெறுவதற்காக இருக்காது.

குறள் 267, துன்பம் சுடச் சுட தவம் செய்பவருக்கு ஞானம் கைகூடும் என்றுதான் சொல்கிறது. எனவே,  

உலகத்தில் செல்வமுடையவர் சிலரும், செல்வமில்லாதவர் பலருமாக இருப்பதற்குக்  காரணம்” என்பதற்குப் பதிலாக

“உலகத்தில் ஞானமுடையவர் சிலரும், ஞானமில்லாதவர் பலருமாக இருப்பதற்குக் காரணம்” என்று புரிந்துகொள்ளவேண்டும்.

..................................................................................................................................................................

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.    ...     ...         (குறள் 126)    

ஆமை தன் உறுப்புகளை உள்ளே இழுப்பதுபோல ஒருவன் ஒரு பிறப்பில் ஐம்பொறிகளையும் அடக்குவானெனில், அஃது அவனை அடுத்த ஏழு பிறப்புகளிலும் தீமையிலிருந்து பாதுகாக்கும்.
............................................................................................................................................................ 

ஐம்பொறிகளை அடக்குவது என்றால் என்ன? ஐம்பொறிகளை அடக்க முடியுமா என்ன?

கண்ணால் பார்க்கிறோம், காதால் கேட்கிறோம் என்று சொல்வார்கள். ஆனால் கண்ணால் பார்க்கமுடியுமா அல்லது காதால்தான் கேட்க முடியுமா?

ஒரு சம்பவம் நடக்கும்பொழுது, கண் அதைப் பார்க்கிறது; காதும் அங்கு நடக்கும் உரையாடல்களைக் கேட்கிறது. ஆனால் அந்த நேரத்தில், குறிப்பிட்ட மனிதனின் மனம் அங்கு இல்லையென்றால், அந்த மனிதனால் நடைபெற்ற சம்பவத்தை நினைவு கூற முடியுமா?

உண்மையில் கண்ணும், காதும் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உதவும் கருவிகளே. அவற்றின் பின்னே ஐம்புலன்கள் உள்ளன. ஐம்புலன்கள் ஐம்புலன்கருவிகளுக்கும், மனதிற்கும் இடையே  இணைப்புபாலமாக செயல்படுபவை.

‘ஐந்தடக்கல்’ என்று சொல்லும்பொழுது, அது ஐம்புலன்களின் அடக்கத்தையே குறிக்கிறது. ஆனால், ஐம்புலன்கள் எப்பொழுது அடங்கும்?
மனிதனிடம் உள்ள தன்முனைப்பு, அதன் தீவிரத் தன்மையிலிருந்து குறையும்பொழுது மட்டுமே, அவனது மனமும் அடங்க ஆரம்பிக்கும். மனம் அடங்க, அடங்க, அது புறவுலகிலிருந்து ஒதுங்க ஆரம்பிக்கும்; அதன்பின் அது ஒடுங்கவும் ஆரம்பித்துவிடும்.

மனம் ஒடுங்க, ஒடுங்க, அது ஊமையாகிவிடுகிறது; அப்போழுதுமட்டுமே, ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கின்றன.

அதனால்தான் ‘பத்திரகிரியாரும்’ - -
   ஆமை வருமாட்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
   ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்? – என்று பாடுகிறார்.
...................................................................................................................................................................

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.    ...     ...         (குறள் 266)    

தவம் செய்கின்றவரே தமக்கு உறுதியாகிய நற்செயலைச் செய்பவராவர்; தவம் செய்யாதவர் ஆசையாகிய வலையில் சிக்கித் தமக்குத் தீமை செய்பவராவர்.
............................................................................................................................................................ 

‘தவம் செய்கின்றவரே’ என்று சொல்லும்பொழுது, தியானம் செய்கிறவர்கள் மற்றும் துறவிகள் மட்டுமே என்று நினைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அது சரிதானா?

அத்துடன் ‘தவம் செய்யாதவர் தமக்குத் தீமை செய்பவராவர்’ என்பதும் சரியான பொருளைத் தருவதாகத் தெரியவில்லை.

தவம் செய்பவர்கள் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்; அவர்கள் பெரும்பாலும் துறவு நிலையை விரும்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் தமது இயல்புக்குத் தகுந்த செயல்களில்தான் ஈடுபடுவார்கள்; அதனையே ‘தங்கருமம்’ என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதேநேரம், ‘உயிர்க்குறுகண் செய்யாமை தவத்திற்கு உரு’ (குறள் 261) என்று வள்ளுவர் சொல்வதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?

குறள் 374-ல் ‘திருவேறு தெள்ளியராதலும் வேறு’ என்கிறார். அதாவது, வாழ்க்கைத் தரத்தில் (செல்வத்தில்) நாட்டமுள்ளவர்கள், வாழ்க்கை நெறியில் (ஞானத்தில்) நாட்டமுள்ளவர்கள் என மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்.

செல்வத்தில் நாட்டமுள்ளவர்களில், சிலர் வாழ்வியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செல்வம் சேர்க்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

மற்றவர்கள்   வாழ்வியல் நெறி முறைகளுக்குக் கட்டுப்படாமலும் செல்வம் சேர்க்க விரும்புவார்கள். அவர்களிடம் ஆசை மிகுந்து காணப்படும்.  

வாழ்வியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்புரிபவர்கள், ‘உயிர்க்குறுகண்’ செய்யமாட்டார்கள். எனவே, அவர்கள், இல்லற தர்மத்தில் இருந்தாலும், தவம் செய்பவர்களே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

நெறிமுறைகளுக்குக் கட்டுப்படாத மற்றவர்கள் மட்டுமே,  தமக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் தீமை புரிபவர்களாக இருப்பார்கள்.
­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­______________________________________________________________________________

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.    ...     ...         (குறள் 355)    

எந்தப் பொருள் என்ன இயல்புடையதாக காணப்பட்டாலும், அந்தப் பொருளின் உள்ளே உள்ள உண்மைப் பொருளை அறிந்துகொள்வதே தெளிந்த அறிவாகும்.
............................................................................................................................................................ 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.    ...     ...         (குறள் 423)    

எப்பொருளை எத்தகையோர் சொல்லக் கேட்டாலும், அப்பொருளின் உண்மைப் போருளைக்க் காண்பதுதான் அறிவாகும்.
............................................................................................................................................................ 

வள்ளுவர் ‘மெய்ப்பொருள்’ என்று சொல்வதற்கு, ‘உண்மைப் பொருள்’ என்று அர்த்தம் சொல்வது சரிதானா? மெய், உண்மை என்கிற இரண்டு சொற்களுக்கும் ஒரே அர்த்தம்தானா?

‘மெய்’ என்ற சொல்லுக்கு எதிர்மறையாக ‘பொய்’ என்று சொல்கிறோம்; ‘உண்மை’ என்ற சொல்லுக்கும் எதிர்மறையாக ‘பொய்’ என்றுதான் சொல்கிறோம். அதனாலேயே ‘மெய்’ மற்றும் ‘உண்மை’ என்கிற இரண்டு சொற்களும் ஒரே பொருளைத்தான் தரும் என்று சொல்லலாமா?

‘உண்மை’  என்று நாம் சொல்வது, எப்பொழுதும் உண்மையாக இருப்பதில்லை; ஆனால் ‘மெய்’ என்று சொல்லும்பொழுது, அது எப்பொழுதும் உண்மையாக இருப்பது என்று அர்த்தம்.

நாம் உண்மை என்று நினைப்பது அல்லது முடிவுசெய்வது நிரந்தரமான, மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத வகையில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ‘மெய்ப்பொருள்’ என்று வள்ளுவர் சொல்கிறார்.

ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்பொழுது, அவனது உடம்பு ‘உண்மை’; ஆனால் அவனது உடம்பு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. ஆகவே, அது ‘மெய்’ அல்ல. இருந்தாலும் ‘மெய்யுடம்பு’ என்று சொல்கிறோம். ஏன்?

“......உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்; உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான்....” என்று திருமூலர் பாடுகிறார். இதற்கு என்ன அர்த்தம்? உடம்பு உண்மை; ஆனால் நிரந்தரமில்லாதது. உள்ளே உள்ள ‘உறுபொருள்’ – அதாவது ‘இறைவன்’ – நிரந்தரமானது; அதனால் அது ‘மெய்’. ஆகவே, ‘உண்மை’ என்று நாம் நினைப்பது, நிரந்தர உண்மையாக இருந்தால் அது ‘மெய்’. 

“ஊருஞ் சதமல்ல; உற்றார்   சதமல்ல; உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல; பெண்டீர்  சதமல்ல; பிள்ளைகளுஞ்
சீருஞ்   சதமல்ல; செல்வஞ் சதமல்ல; தேசத்திலே
யாருஞ் சதமல்ல; நின்றாள்  சதங்கச்சி ஏகம்பனே!” என்று பாடுகிறார் பட்டினத்தார்.  அதாவது, “ஏகம்பர நாதன்” ‘மெய்’, மற்றவையெல்லாம் ‘உண்மை’, ஆனால் ‘மெய்யல்ல’ என்கிறார்.
______________________________________________________________________________

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.    ...     ...         (குறள் 452)    

தண்ணீர் சேர்ந்த நிலத்தின் இயல்புக்கேற்ப மாறுபட்டு நிற்கும்; அதபோல மக்களின் அறிவும் தாம் சேர்ந்த இனத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்.
............................................................................................................................................................ 

இந்தக் குறள் ‘சிற்றினம் சேராமை’ என்கிற அதிகாரத்தின் கீழ் வருகிறது.
இந்த அதிகாரத்தில் ‘இனம்’, ‘இனநலம்’, ‘இனந்தூய்மை’ ‘சிற்றினம்’ மற்றும் ‘தீயினம்’ போன்ற வார்த்தைகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் பொருள் கூறும்பொழுது ‘இனம்’ என்ற வார்த்தையே உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.
‘இனம்’ என்று சொல்லும்பொழுது, குறிப்பிட்ட மனிதனுடன் இருக்கும் மக்கள் எனப் பொருள்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. பலரும் இப்படியே நினைக்கவும்கூடும்.

மேலே சொன்ன குறளில், நீரைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார். நீரைச் சேர்ந்த இனமென்று எதைச் சொல்லலாம். பனி, பனித்துளி, நீராவி அனைத்தும் நீரைச் சேர்ந்தவைதான்; ஏன், மேக கூட்டத்தையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

இன்னும் சொல்லப்போனால், நதி, ஆறு, குளம், குட்டை, அருவி, ஓடை, வாய்க்கால், கடல் போன்றவைகளையும்கூட  இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால், நிலம் நீரின் இனத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதது. வள்ளுவர் ஏன் அதைக் குறிப்பிடுகிறார்?

உடலை  விற்றுப் பிழைக்கும் பெண் அவள்; இருந்தாலும் தன்  செயலுக்கு வருந்தி இறைவனை நோக்கி மனம் நோக அழுது புலம்புகிறாள். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எதிர்புறம் வசிக்கும் துறவியோ, தனது மதச் சடங்குகளைத் தவறாமல் செய்து வந்தாலும், எதிர்வீட்டுப் பெண்ணின் தொழிலைத் தொடர்ந்து கவனித்து    வருகிறார்; அத்துடன் அவளிடம் அவள் எவ்வளவு பாபங்கள் செய்கிறாள் என்று எடுத்துச் சொல்லி, நல்லபடி நடக்க அறிவுரையும் வழங்குகிறார். இருவரும் ஒரே நேரத்தில் இறக்க, பெண் சொர்க்கத்திற்கும், துறவி நரகத்திற்கும் செல்ல நேரிடுகிறது. பரமஹம்சரின் உபமான கதையிது.

இந்த உபமானக் கதையின்படி, உடலை  விற்றுப் பிழைக்கும் பெண்ணுடன் இருந்தது ‘நல்லினம்’; துறவியுடன்  இருந்ததோ ‘தீயினம்’.

இனம் என்று சொல்லும்பொழுது, கூட இருப்பவர்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது; மனித மனம் எதைச் சார்ந்திருக்கிறதோ, அதுவே அவனது இனத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­______________________________________________________________________________

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.    ...     ...         (குறள் 216)    

பிறருக்கு உதவி செய்பவனிடத்தில் செல்வம் உண்டாகுமானால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிக்க மடத்தில் பழம் பழுத்தது போன்றதாகும்.
............................................................................................................................................................ 

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.    ...     ...         (குறள் 217)    

உதவி செய்யும் பெருந்தன்மை யுடையவனிடத்தில் செல்வம் உண்டானால், அது, தனது எல்லா உறுப்புகளும் மருந்தாகி நோயைத் தவறாது தீர்க்கும் மரம் போன்றதாகும்.
............................................................................................................................................................ 

இந்த இரண்டு குறள்களுக்கும், வேறு ஒரு கோணத்திலும் பொருள்கொள்ளலாம்.

கவி கம்பனிடம் ஒரு செல்வம் இருந்தது; ஆனால் அது ஒரு நயனுடையான் கண்ணில் பட்டபொழுதுதான் உலகுக்கு அறிமுகமானது. 

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும் அதேபோலத்தான்; மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்ற மறுத்துவிட்ட சம்பவம், ஒளவையார் கவனத்திற்கு வந்தபொழுதுதான் அது பொற்றாமரைக் குளத்தில் அரங்கேறியது.

ஆக, இந்த இரண்டு குறள்களுக்கும், ‘செல்வம் நயனுடையான் கண்ணில் பட்டபொழுது’, ‘செல்வம் பெருந்தகையான் கண்ணில் பட்டபொழுது’ என்றும் பொருள் சொல்லலாம்.
______________________________________________________________________________

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.    ...     ...         (குறள் 396)    

மணலிடத்திலுள்ள கேணி தோண்டிய அளவுக்கேற்ப நீர் ஊறும்; அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற அளவுக்கேற்ப அறிவு பெருகும்.
............................................................................................................................................................ 

குறளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் சரியானதுதான் என்பதுபோல் தோன்றினாலும், ‘பெருகும் அறிவு’ என்று சொல்லாமல் ‘ஊறும் அறிவு’ என்று வள்ளுவர் சொல்வதன் அர்த்தம் என்ன?

பொதுவாக நாம் பெற்றிருக்கும் அறிவு, பெரும்பாலும் வெளியிலிருந்து வந்ததாகத்தான் இருக்கும். கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும் மற்றும் பல நூல்களைப் படித்தும் தெரிந்துகொண்டவைதான். தெரிந்துகொண்டவைகளை உள்ளே பதிவு செய்யும்பொழுது, நமது மனம், உண்மைக்கு மாறாக, அதற்கே உரிய முறையில் திருத்தியும், பதிவு செய்திருக்கலாம். ஆக, நமது அறிவின் பெருக்கம் அனைத்தும் வெளியிலிருந்து வந்தவைதான்.

அவற்றை நாம் உபயோகிப்பது என்பது, தொட்டியில் தண்ணீரை ஊற்றி, பின் அதனை கோரி உபயோகிப்பதைப் போன்றதுதான். அதனை ‘ஊறும் அறிவு’ என்று எப்படிச் சொல்லமுடியும்?

மணல் கேணியில் தண்ணீர் ஊற்றெடுக்கத் தயாராக உள்ளது; இறைக்க, இறைக்க ஊறும்தான். ஆனால் தண்ணீர் வெளிப்படமுடியாமல் மணலால் மூடப்பட்டிருக்கும்பொழுது, மூடியுள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. அதன்பின் மட்டுமே, நம்மால் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் நீரை உபயோகிக்க முடியும்.

நமக்குள்ளும், ஒரு பேரறிவு ஊற்றாக பெருக்கெடுத்து நமக்குப் பெரும்பயனைக் கொடுக்கத் தயாராக உள்ளது. ஆனால், காமம், வெகுளி, மயக்கம் போன்ற மலங்கள், மணலைப்போன்று பேரறிவை உணரமுடியாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.

கற்கவேண்டிய அனைத்தையும் கற்று, சித்தத்தின் மேல் படிந்திருக்கும் மும்மலங்களையும் அகற்றினால், அதன் காரணமாக     உள்ளிருந்து பெருகும் அறிவே,  ‘ஊறும் அறிவு’ எனப்படும்.
______________________________________________________________________________

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.    ...     ...         (குறள் 220)    

பிறர்க்கு உதவி செய்வதால் பொருட்கேடு உண்டாகும் என்றால், ஒருவன் தன்னை விற்றாயினும் வாங்கும் தகுதி உடையது அது.
............................................................................................................................................................

‘பிறர்க்கு உதவி செய்வதை’ வைத்து ஒருவனை ஒப்புரவாளன் என்று சொல்ல முடியுமா?

தவறான வழிகளில் பணம் சேர்த்து, அதிலிருந்து ஒருவன் உதவி செய்தால் அதனை ‘ஒப்புரவு’ என்று நினைக்க முடியுமா?

தனது நலனை, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், பிறரது நலனுக்காக பாடுபடுபவர்களைத்தானே ‘ஒப்புரவாளர்கள்’ என்று சொல்ல முடியும்.

மஹாத்மா காந்தி, விவேகானந்தர், மதர் தெராசா போண்றோரை அல்லவா ‘ஒப்புரவாளர்கள்’ என்று சொல்ல வேண்டும்.
...................................................................................................................................................................

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.    ...     ...         (குறள் 243)    

உயிர்களிடத்தில் கருணையுள்ள மனமுடையவர்கள், இருள் நிறைந்த துன்பமுடைய நரகத்தில் செல்லமாட்டார்.
............................................................................................................................................................

‘இன்னா உலகம்’ என்றுதான் வள்ளுவர் சொல்கிறார்; உலகம் முழுவதும், அந்த மனிதனைப் பொறுத்தவரை, துன்பத்தால் நிரம்பியிருக்கிறது போன்ற உணர்வைத்தரும் என்கிறார். மற்றபடி, ‘நரகம்’ என்ற வார்த்தையை அவர் உபயோகிக்கவில்லை.

அருள் நிறைந்த மனிதனுக்கு, உலகத்தில் துன்பம் என்பதே கிடையாது என்கிறார். அப்படியானால் அவர்கள் உலகத்தில் துன்பம் எதையும் சந்திக்கமாட்டார்களா என்ன?

‘அன்பு’ என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. இருந்தாலும் மனிதர்கள் இரண்டு வகையானவர்கள் என்கிறார் வள்ளுவர். “திரு வேறு; தெள்ளியராதல் வேறு” என்கிறார். அதாவது பொருளைத் தேடி ஓடுபவர்கள்; அருளைத் தேடி ஓடுபவர்கள் என இரண்டாகப் பிரிக்கிறார்.

பொருளைத் தேடி ஓடும் மனிதர்கள், பொதுவாக ‘பேராசை’, ‘பாசம்’, ‘காமம்’ போன்ற தளைகளில் மாட்டிக்கொண்டு, தான் நினைத்ததை அடையவேண்டும் என்று போராடுபவர்களாக இருப்பார்கள். நினைத்ததை அடையமுடியவில்லை என்றால், அவர்கள் படும் துன்பம் இருள் நிறைந்த உலகம் போன்று தோன்றும்.

மாறாக, அருளைத் தேடி ஓடும் மனிதனோ, எந்தவித தளைகளிலும் மாட்டிக்கொள்ளதவனாக இருப்பான்; இறைவனின் திருவருளைத் தேடி ஒடுபவனாக இருப்பதால், கருணை நிறைந்த மனிதனாக அவன் மாறி விடுவான். அதன்பின் அவனுக்குத் துன்பம் வந்தால்கூட, அதையும் அவன் இறைவன் தரும் பிரசாதமாகவே எடுத்துக்கொள்வான்.

அவனைப் பொருத்தவரை ‘இருள் சேர்ந்த இன்னா உலகம்’ என்பதே கிடையாது.
............................................................................................................................................................

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.    (குறள்  72)

அன்பில்லாதவர் எப்பொருளையும் தாமே அனுபவிப்பர். அன்புடையவர் தம் பொருள் மட்டுமன்று, தமது உடலையும் பிறர்க்கு உரிமையாக்குவர்.
............................................................................................................................................................ 

‘அன்பிலார்’ என்பதை  பிறரிடம் அன்பில்லாதவர் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

அன்பு என்று சொல்லும்பொழுது  மனிதர்களை மூன்று வகையாகப் 
பிரிக்கலாம்.

தாம் நேசிக்கும் மனிதர்களிடம் மட்டும் அன்பு வைப்பவர்கள்; தாம் நேசிக்கும் மனிதர்களிடம் அன்பு வைப்பதுடன், பிறரிடமும் இரக்கம் காட்டுபவர்கள்; தன்னுடன் இருக்கும் மனிதர்களைவிட மிக அதிகமாகப் பிற மனிதர்களையும் நேசிப்பவர்கள்.

இந்த மூன்றில், முதலில் குறிப்பிட்ட மனிதர்களையே ‘அன்பிலார்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் உள்ள மனிதர்கள் ‘அன்புடையார்’ எனப் படுபவர்.

இருந்தாலும், இந்த இருவருக்குமிடையில் ஒரு வித்தியாசமுண்டு.
பழைய சினிமாப் பாடல் ஒன்று உண்டு –

     “பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக இருப்பவர் தெய்வமடி;
     தன் பசியைக் கருதாது பிறர்க்கு கொடுப்போர்கள் தெய்வத்தின்  
         தெய்வமடி”.

இதையே இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் வரும் மனிதர்களுக்கு
உரியதாக எடுத்துக்கொள்ளலாம்.
............................................................................................................................................................

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்.    (குறள்  619)

முயன்ற தொழில் ஊழ்வயத்தால் கருதிய பயனைக் கொடுக்கவில்லையாயினும், அம்முயற்சி உடம்பை வருத்திய அளவுக்குக் கூலி தரும்.
............................................................................................................................................................ 

இங்கு 'மெய்’ என்பதற்கு ‘உடம்பு’ என்று பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஞானியர் ‘மனதையும்’ உடம்பின் ஒரு பகுதிதான் என்கிறார்கள்.

அவர்கள் ‘உடல்’ ‘மனம்’ இரண்டையும் ‘பரு-உடல்’ மற்றும் ‘நுண்-உடல்’ என்று அழைக்கிறார்கள்.

ஆக, தான் எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றியடைய, உடலை மட்டுமல்ல தன்னுடைய மனதையும் வருத்த தெரிந்திருக்க வேண்டும்.

மனதை வருத்துவது என்றால் என்ன? மனிதன் முயற்சியில் ஈடுபடும்பொழுது, மனதை வேறு எங்கும் அலைபாயவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அது ஒன்றே மனதை வருத்துவதற்கு அடையாளம்.
............................................................................................................................................................

ஆராஇயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா  இயற்கை  தரும்.   (குறள்  370)

ஒருபோதும் நிரம்பாத இயல்புடைய அவாவை ஒருவன் ஒழித்தால், அந்நிலை, அப்பொழுதே அவனுக்கு எப்பொழுதும் ஒரே நிலைமையுடையாதாகிய இன்பத்தைத் தரும்.
............................................................................................................................................................ 

இன்பம் எப்பொழுதும் ஒரே நிலைமையுடையது அல்ல; இன்பம் என்பது நிரந்தரமானதும் அல்ல. எந்த நேரத்திலும் அது துன்பமாக மாறலாம்.

‘இயற்கை’ என்பதற்கு ‘இன்பம்’ என்பதற்கு பதிலாக, ‘ஆனந்தம்’ என்று எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், ஆனந்தம் ஒன்றே நிரந்தரமானது; மாற்றமில்லாதது.

இன்பம் என்பதற்கு எதிர்ப்பதமாக துன்பம் இருப்பது போல், ஆனந்தம் என்பதற்கு எதிராக எதுவும் கிடையாது.

அது மனிதன் விழிப்புணர்வு பெற்ற நிலையில், அவனது உள்ளிருந்து வெளிப்படுவது. (அதனால்தான் சத் + சித் + ஆனந்தம் என்கிறார்கள்).

அவா (முற்றுமாக) அறுத்த நிலையில், அது உள்ளிருந்து பெருகுவதை உணர்கிறோம்; அதை உணர்ந்தபின், இன்பம்-துன்பம் போன்ற இரட்டைகளிலிருந்து விலகிவிடுகிறோம்; எதுவும் நம்மை பாதிப்பதில்லை.

இன்பம் எதன்காரணமாகவோ  வருவது; ஆனந்தம் என்பதோ எதுவும் இல்லாத நிலையிலும், அவா அறுத்த நிலையில் வருவது.

ஒருதடவை அந்த ‘ஆனந்த’ ஊற்றை உணர்ந்துகொண்டால், அதன்பின் அது நிரந்தரமாக குடிகொண்டுவிடும்.
............................................................................................................................................................

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”.               (குறள் 350)
பற்றற்ற கடவுளின் பக்தியை மனத்திற் கொள்ளுதல் வேண்டும். ஆசாபாசங்களை விடுவதற்குப் பற்றப்படுவதாகிய கடவுளைப் பக்தி செய்தல் வேண்டும்.
..................................................
“ஆசாபாசங்களை விடுவதற்கு” என்பதற்குப் பதிலாக “ஆசாபாசங்கள் உன்னை விடுவதற்கு” என்று இருக்கவேண்டும்.
“பற்று விடற்கு” என்றுதான் வள்ளுவர் கூறுகிறார்; “பற்றை விடற்கு” என்று சொல்லவில்லை.
‘கந்த சஷ்டி கவசத்தில்”, ‘பாச வினைகள் பற்றது நீங்கி’ என்றுதான் வருகிறது; ‘பற்றினை நீக்கி’ என்று வரவில்லை.
உலகப் பொருட்களில் நாம் கொண்ட ‘பற்றை’, நம்மால் நீக்க முடியாது. இறைவன்பால் பக்தியைச் செலுத்தி, அதன்காரணமாக அவன்மேல் நம் பற்றினை வளர்த்தால், உலகப் பொருட்களில் நாம் கொண்ட பற்றின் காரணமாக ஏற்பட்ட ஆசாபாசங்கள் நம்மை விட்டு விலகிவிடும்.
வாழைத்தாரில் காய்கள் பருத்து வளரும்பொழுது, அந்தக் காய்களின் ஒவ்வொரு ‘சீப்பின்’ மேலும் படர்ந்திருந்த தோல்கள், ஒவ்வொன்றாக உதிர்ந்து விடுவதுபோல், இறைவன்பால் நமது பக்தி வளர, வளர, நம்மைப் பீடித்திருக்கும் ‘ஆசாபாசங்கள்’ ஒவ்வொன்றாக விலகிவிடும்.
அது சரி! இறைவன்பால் நாம் கொண்ட பக்தி எப்பொழுது வளரும்? வேண்டுதல் ஏதுமின்றி, எப்பொழுது இறைவனிடம் சரணாகதி அடைகிறோமோ (ரிஷி பதஞ்சலி இதனை “ஈஸ்வர ப்ரணிதான்” என்கிறார்), அப்போழுதுமட்டுமே நமது பக்தி வளரும்.

இந்தக் குறளில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

குறளை மூன்று பகுதிகளாகப் பிரித்து, அது கூறும் உட்பொருளைப் பார்ப்போம்.

1. பற்று விடற்கு
2. பற்றுக பற்றற்றான்   
    பற்றினை
3. அப்பற்றைப் பற்றுக

"பற்று உன்னை விட்டு நீங்குவதற்கு, பற்றற்றான் பற்றினைப் பற்றுக" என்று மட்டும் சொல்லாமல், கூடவே "அப்பற்றைப் பற்றுக" என்று கூடுதலாக வள்ளுவர் ஏன் சேர்த்தார்?

பொதுவாக நாம் குறிப்பிட்ட வேளைகளில் இறைவனை வணங்குகிறோம். மற்ற நேரங்களில் நாம் நமது வேலைகளில் மூழ்கி விடுகிறோம். அந்த நேரங்களில் நாம் இறைவனை நினைக்கிறோமா?

இறைவன் மீது நாம் வைக்கும் பற்றை, நாம் இறைவனை வணங்காத நேரங்களிலும் விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார். அது முடிகிற காரியமா?

ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் .. ஒரு தாய் எந்த வேலையில் இருந்தாலும் அவள் கவனமெல்லாம் தொட்டிலில் உறங்கும் குழந்தையின் மேலேயே இருக்கும். அதேபோன்று நாமும் எந்த வேலை செய்துகொண்டு இருந்தாலும், நமது கவனம் எப்போதும் இறைவன் மீது இருக்க வேண்டும்".

இதைக் குறிக்கும் விதமாகத்தான் "அப்பற்றை பற்றுக" என்கிறார் வள்ளுவர்.
...................................................
“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற்று உலகு”.               (குறள் 23)

பிறப்பு, வீடுகளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பில் துறவு மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்தது.
.....................................................................................................................................

மனித வாழ்க்கையின் இறுதியான கொள்கையை, இந்தக் குறளுக்கான பொருள் விளக்குகிறது.

இருந்தாலும், நாம் வேறு ஒரு கோணத்திலும் இதற்கான பொருளைப் பார்க்கலாம்.

இருமை வகைதெரிந்து’ என்று சொல்லும்பொழுது, அது  ‘பொருட்செல்வம்’ மற்றும் ‘அருட்செல்வம்’ இரண்டையும் குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

உலகம் இரு மாறுபட்ட தன்மைகளைக் கொண்டது; திரு வேறு, தெள்ளியராதல் வேறு என்று வள்ளுவர் சொல்கிறார். (குறள் 374). அதாவது செல்வம் வேறு, ஞானம் வேறு என்கிறார்.

ஒன்று பொருட்செல்வத்தைக் குறிக்கிறது; மற்றொன்று அருட்செல்வத்தைக் குறிக்கிறது.
இந்த இரண்டிலும், அருட்செல்வமே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர். (குறள் 241).
அருட்செல்வத்தை நாடி தன் வாழ்க்கையைத் தொடரும் மனிதன், தர்ம நெறிகளுக்குக் கட்டுப்பட்டே தன் வாழ்க்கையை நடத்துவான்; அதனையே வள்ளுவர் ‘அறம்பூண்டார்’ என்று சொல்கிறார்.

ஒருவேளை, அவன் தர்மநெறிகளுக்குப் புறம்பாக நடக்க நேரிட்டால், அது குற்றமற்ற நன்மைக்காக மட்டுமே இருக்கும். (குறள் 292).


‘தர்ம நெறிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவன்’, அவனே அறியாமல்கூட துறவு மனப்பான்மையை அடையக்கூடும்.
...........................................................................................................................................  

“இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு”.       (குறள் 352)   
   
மயக்கத்தினின்று தெளிந்து குற்றம் தீர்ந்த மெய்யறிவுடயவருக்கு அம்மெய்யறிவு துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும்.  
.....................................................................................................................................
“மருள்நீங்கி” என்று வள்ளுவர் சொல்கிறார். “மருள்” என்பதற்கு மயக்கம் என்று பொருள் சொல்கிறார்கள். உண்மையில் மயக்கம் என்பது என்ன?

நிலையில்லாதவற்றை நிலையென எண்ணுவதும், நிலையான ஒன்றை நினைக்காமல் இருப்பதும்தான் உண்மையான மயக்கம் ஆகும். மற்ற மயக்கங்கள் அனைத்தும் இதிலிருந்து வருவதுதான்.

இந்த மயக்கம் (மருள்) நீங்கிவிட்டால், இருள்நீங்கி இன்பம் பயக்கும் என்கிறார் வள்ளுவர்.

“இருள்நீங்கி” என்பதற்கு, துன்பம் நீங்கி என பொருள் தரப்பட்டுள்ளது. உண்மையான இருள் என்பது, “நான்”, “எனது” என்ற எண்ணம்தான்.

“நான்”, “எனது” என்ற எண்ணம் இருக்கும் வரையில், நமக்கு துன்பம் ஏதாவது ஒரு வழியில் வந்துகொண்டிருக்கும்; அந்த எண்ணம் இல்லாதபொழுது, எந்த துன்பம் வந்தாலும் அது துன்பமாகத் தெரியாது.

“நான்”, “எனது” என்ற எண்ணம் இல்லாத மனிதன் மட்டுமே, “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்று சொல்லமுடியும்.                        .................................................................................................................................................................

நாள்தோறும் நாடுக மன்னன், வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு”.        (குறள் 520)

தொழில்  செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.    
........................................................................................................................

வினைசெய்வான் என்பதற்கு தொழில் செய்கின்றவன் என்று சொல்வது முழுமையாக இல்லை.

விவசாயி, தொழில் செய்கின்றவன், வணிகன் ஆகிய மூவருமே வினை செய்பவர்கள்தான்.

விவசாயி நிலத்தில் விளைபொருட்களை உற்பத்தி செய்கிறான்; தொழில் செய்கின்றவன் தனக்குரிய இடத்தில் பொருளை உற்பத்தி செய்கிறான்; வணிகன் அந்தப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறான்.

ஆக, மூவருமே வினைசெய்பவர்கள்தான். ஆகையால் மன்னன் நாள்தோறும் இந்த மூவருடைய நிலைமையையும் ஆராய வேண்டும்.
............................................................................................................................................................    
“தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்”.     (குறள் 293)

நெஞ்சாரப் பொய் பேசாதீர்; பேசினால் பேசியவன் நெஞ்சே அவனைத் தண்டிக்கும். ஒருவன் தனது மனசாட்சிக்கு மாறாகப் பொய் கூறலாகாது. அவ்வாறு பொய் கூறினால் பின்னர் தானே வருந்த நேரிடும்......    
........................................................................................................................

இந்தக் குறள் “வாய்மை” என்ற அதிகாரத்தில் வருகிறது.

இதில் ‘பொய்ம்மை’, ‘பொய்யற்க’, ‘பொய்த்தபின்’, ‘பொய்யாது’, ‘பொய்யாமை’ போன்ற வார்த்தைகளுக்கு ‘பொய் பேசுதல்’ என்றே பொருள் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் ‘மனம், மொழி, மெய்’ மூன்றின் மூலமாகவும் ‘பொய்ம்மை’ நடைபெறலாம்; மற்றும் ‘வாய்மை’ இல்லாமலும் இருக்கலாம். வாய்மை இல்லாதிருந்தால், அதுவும் ஒருவகையில் பொய்ம்மைதானே?

நண்பர் ஒருவர் வெளியூர் செல்லும்பொழுது, பாதுகாப்பு கருதி தன்னிடம் உள்ள நகையை கொடுத்துச் செல்கிறார். சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். அவர் நம்மிடம் நகையை கொடுத்தது யாருக்கும் தெரியாது; நாம் யாரிடமும் இதைப்பற்றி சொல்லாது மறைத்துவிட்டால், அதை என்னவென்று சொல்வது? ‘பொய்ம்மை’ என்றுதானே சொல்லவேண்டும்.
............................................................................................................................................................    “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்”      (குறள் 30)     

எல்லா உயிர்கள் மீதும் அருளுடையவராக நடந்து கொள்வதால், அந்தணர் என்று சொல்லப் பெறுபவர் பற்றினை விட்ட துறவியர் ஆவர்.
 ........................................................................................................................
பற்றினை விட்ட துறவியர் மட்டுமே அந்தணர் என்று சொல்வது சரியா?

எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அனைவருமே அந்தணர் என்று அழைக்கத்தக்கவர்தானே?

செந்தண்மை பூண்டு ஒழுகுதல் என்றால் என்ன? இல்லறத்தில் உள்ளவர்கள் அப்படி இருக்க முடியாதா?

இல்லறத்தில் உள்ளவர் செந்தண்மை பூண்டவர் என்று எப்படி தெரிந்து கொள்வது?

ஆசை, பாசம் இவற்றிலிருந்து விடுபட்டவர் மட்டுமே செந்தண்மை பூண்டு ஒழுக முடியும். ஏனெனில் இவர்கள் மட்டுமே பற்றின்றி இருப்பார்கள்.

“ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்....” என்கிறார் பத்திரகிரியார். இதிலிருந்து விடுபட்ட இல்லறத்தார் எப்படி இருப்பார்கள்? அதற்கும் அவரே விடை தருகிறார்; அதாவது “..புளியம்பழமும் தோடும்போல்...” என்கிறார்.

இல்லறத்தில் இருந்தாலும் ‘தாமரை இலை தண்ணீராக’ இருப்பார்கள். (Detached Attachment).

பற்றற்ற துறவியர் மட்டுமல்ல, பற்றின்றி வாழும் இல்லறத்தாரும் அந்தணர்தாம். அவர்களும் செந்தண்மை பூண்டு ஒழுகும் குணம் உடையவர்கள்தான்.
……………………………………………………………………………………………………………………………………………………                    

“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”.      (குறள் 202)     

தீய செயல்கள், தம்மைச் செய்தவனுக்குத் துன்பம் தருதலால், அவை தீயைவிட அதிகமாக அஞ்சத் தக்கவையாகும்.
...................................................
தீயவை என்பதற்கு தீய செயல்கள் என பொருள் தரப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தீய செயல்கள் செய்வதற்கு காரணமாக இருப்பது அவன் மனதில் உள்ள தீய எண்ணங்கள். (உ.ம். பொறாமை, வெறுப்பு, பழியுணர்ச்சி போன்றவை). இந்த எண்ணங்களுக்கு காரணமாக இருப்பது அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் மூலமாக வரும் பதிவுகள்.

ஒவ்வொரு மனிதனிடமும் உணர்வு மனம், உணர்வற்ற மனம் என்று இரண்டு வகை உண்டு. உணர்வற்ற மனதை ஆழ்மனம் என்றும் சொல்வதுண்டு.

உணர்வு மனதில் ஏற்படும் பதிவுகள் மாறிக்கொண்டேயிருக்கும். ஆனால், ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும். இதில்தான் தீய எண்ணங்கள் உருவாக காரணமாக இருக்கும் பதிவுகளும் ஏற்படுகின்றன.

இத்தகைய பதிவுகளைத்தான் தீயினும் அஞ்சத்தக்கவைகளாக நினைக்கவேண்டும்.
.............................................

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"
.. குறள் எண் : 129

(ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது)

இந்தக் குறளுக்கான பொருள் சரியாகவே உள்ளது. ஆனாலும், 'தீயால் சுட்ட புண்', 'நாவால் சுட்ட வடு' இரண்டிற்கும் இடையே ஒரு மெய்ப்பொருள் மறைந்துள்ளது.

தீயால் சுடும் போது, அதனால் தோல், அதன் உள்ளே உள்ள சதை இரண்டும் பாதிக்கப் படுகின்றன. நாளடைவில் தீக்காயம் குணமானாலும், தோலில் உள்ள வடு நீங்காது; இருப்பினும் உள்ளே உள்ள சதைப்பகுதி முற்றிலும் ஆறிவிடும்.

தீக்காயம் புறத்தே நிகழ்ந்த நிகழ்வு. நாவினால் சுட்ட வடு நெஞ்சில் நிகழ்கிறது? அதை நெஞ்சில் நிகழ்த்தியது யார்?

கொடிய வார்த்தைகளை கொட்டியவனால் நெஞ்சில் காயத்தை ஏற்படுத்த முடியாது. அதை ஏற்படுத்துவது நமது மனமே!?

பாஞ்சாலி கொடிய வார்த்தைகளை கொட்டவில்லை; கேலியாக சிரித்தாள். அதுகூட துரியோதனன் மனதில் நீங்காத வடுவாக மாறி யுத்தம் வரை சென்றுவிடுகிறது.

ஆக, யுத்தத்திற்கு காரணம் பாஞ்சாலி செய்த கேலி சிரிப்பா அல்லது அதை உதாசீனப் படுத்த தெரியாமல், துரியோதனன் தன் நெஞ்சில் ஏற்படுத்திக்கொண்ட வடுவா?

ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. குடும்ப விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். என் உறவினர் ஒருவரும் வந்திருந்தார். அவருக்கு என்னை பிடிக்கும்; என்னை கேலி செய்வது மிகவும் பிடிக்கும்.

நான் அணிந்திருந்த செருப்பை பார்த்துவிட்டு "ஏண்டா, முருங்கை மரத்தில் கட்ட வேண்டிய செருப்பை இப்படி கால்ல போட்டிருக்க?"
(நான் செருப்பு வாங்கினால் அது பழுதடையும் வரை மாற்றுவதில்லை. ஆனால், அவரோ அடிக்கடி புது செருப்பு வாங்கி விடுவார்)

அவர் கேலியாக சொன்னாலும், நாலு பேர் முன்னாலே சொன்னால், நமக்கு கோபம் வருவது சகஜம் தானே!?

ஆனால், நான் கூறிய பதில் "சத்தம் போட்டு சொல்லாதீர்கள்; இந்த செருப்பையே அங்கே இருந்துதான் எடுத்து வந்தேன்". அங்கிருந்த அனைவரும், எனது உறவினர் உட்பட,  உடனே சிரித்து விட்டார்கள்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி:-
தீ போன்றவைகளால் ஏற்படும் காயத்தை நம்மால் தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால், நெஞ்சில் வடு ஏற்படுவதும், ஏற்படாமல் போவதும் நம் கையில் தான் உள்ளது.

அதற்கு நாம் செய்ய வேண்டியது.. 'எப்படி உதாசீனம் செய்வது' என்று கற்றுக் கொள்வதுதான்.
.....................................

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்".
.. குறள் எண் – 972

மனிதர்கள் எல்லாரும் சமம் என்று சொல்பவர்கள், குறளின் முதல் வரியைக் குறிப்பிடுவார்கள்.

இருக்கலாம்; ஆனால், மனிதர்கள் செய்யும் தொழிலைப் பொறுத்து அவர்களது சிறப்பு மாறுபடும் என்று சொல்பவர்கள் பகவத் கீதையில் வரும் "குண, கர்ம விபாகசஹ" என்ற சொற்றொடரை மேற்கோள் காட்டுவார்கள். பொதுவாக 'கர்ம' என்றால் 'செய்யும் தொழில்' என்று அர்த்தம் என சொல்வதுண்டு. ஆனால், இந்த இடத்தில் அது தவறு எனத் தோன்றுகிறது. அதைப் பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.

குறளில் வள்ளுவர் 'செய்தொழில் வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'செய்தொழில் வேற்றுமையான்' எனக் கூறுகிறார். 'வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'வேற்றுமையான்' என ஏன் கூறுகிறார்? 

சிலர் 'தொழில் செய்பவரின் திறமையைப் பொறுத்து, சிறப்பானது வேறுபடும்' என்று சொல்கிறார்கள்.

ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்ய பல மந்திரிகள் இருப்பார்கள். அதில் சிலர் நாட்டு நலனுக்காக உழைப்பார்கள்; சிலர் தங்களது வீட்டு நலனுக்காக உழைப்பார்கள். அவர்களின் தொழில் ஒன்றாக இருந்தாலும், அவர்களின் நோக்கத்தில் மாறுபாடு இருக்கிறது. ஆக, 'வேற்றுமையான்' என்பதற்கு 'செய்யும் தொழிலின் பின்னே மறைந்திருக்கும் நோக்கத்தைப் பொறுத்து தொழில் செய்பவர்களின் சிறப்பு மாறுபடும்' என்றும் சொல்லலாம் அல்லவா?
........................................

                 

Monday, 26 February 2018

மழலையின் கீதை .. பாகம் 5

மழலையின் கீதை  ..  பாகம் 5  


                                         பொருளடக்கம்
 
55. ஞானம் எனும் நெருப்பு

56. ஞானத்திற்கான பாதை

57. நீரில்லாத ஆறு

58. சச்சிதானந்தம்

59. இருள்சேர் இருவினைகள்

60. தன்முனைப்பு

61. வளர்ச்சியும், மலர்ச்சியும்

62. யான், எனது

63. நான் யார்?

64. இந்த நானும், அந்த நானும்

65. பந்தம்

66. நாமும், நமக்கான பாதையும்

67. மார்க்கமும், யோகமும்

68. பக்தி மார்க்கம்

69. கர்ம மார்க்கம்

70. தியான மார்க்கம்

71. ஞான மார்க்கம்

72. ஞான மார்க்கம் – பாதை 1

73. ஞான மார்க்கம் – பாதை 2

74. ஞான மார்க்கம் – பாதை 3

75. ஞான மார்க்கம் – பாதை 4

76. விழிப்புணர்வு

77. பலூனும் புல்லாங்குழலும்

78. நன்றியுரை
                 .................................................................




பாகம் V  …  ஞானம்


55. ஞானம் எனும் நெருப்பு 

“ஞானம் என்ற நெருப்பு  சகல கர்மங்களையும் எரித்துவிடும்” என்று சொல்கிறார் கிருஷ்ணன். இதனைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டும்.

‘கர்மங்கள்’ என்று சொல்லும் பொழுது வெறுமனே செயல்கள் மட்டுமல்ல, மனதிலிருந்து எழக்கூடிய  எண்ணங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஞானம் என்ற நெருப்பு செயல், எண்ணம் மட்டுமின்றி, நம்மிடம் உள்ள அஹங்காரத்தையும் முற்றிலுமாக அழித்துவிடும்.

எல்லாம் சரி; நாம் ‘ஞானத்தை’ நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

ஒரு பூந்தோட்டத்தை நெருங்கும் பொழுது மலர்களின் வாசத்தை உணர்வது போல, அருவிக்கரையை நெருங்கும் பொழுது அருவி  விழுவதின் சத்தத்தைக் கேட்பது போல, சில அறிகுறிகளைக் கொண்டு நாம் ஞானத்தின் பாதையில் முன்னேறுவதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒருசில அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்: -
     
     பற்றின்மை

     நாணுடைமை (humility)

     உள்ளார்ந்த அமைதி
     
     உடைமைத்தனமின்மை

     தனிமையை  விரும்புதல்

     எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை

     எதிர்கொள்ளும் எதனையும் இறைவனின் பிரசாதமாக
                    ஏற்றுகொள்ளுதல்
   
  இணக்கமாகவும், இளக்கமாகவும் நடந்து கொள்ளுதல்    
              
     ‘கர்த்தா’ என்ற நிலையிலிருந்து விடுபடுதல்
             
     விருப்பு-வெறுப்பு போன்ற இருமைகளில் இருந்து விடுதலை

இந்த அறிகுறிகளில் சிலவற்றையாவது நாம் பெற்றிருப்பதாக உணர்ந்தால், நாம் ஞானத்தின் பாதையில் முன்னேறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஞானம் அடைவதற்கான  பாதை ஒன்றா அல்லது பல பாதைகள் உண்டா? 

பல பாதைகள் என்றால், நமக்கான பாதை எது? அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பாதை மட்டும் தெரிந்தால் போதுமா? அதில் எப்படி பயணம் செய்வது என்று தெரிய வேண்டாமா?

முதலில் தெரிய வேண்டியது நாம் யார்? நமக்கான பாதை எது? என்பதுதான். அதனைத் தெரிந்துகொண்ட பின்னர்தான் பயணம் செய்வதைப் பற்றி முயற்சி செய்ய வேண்டும்.



56. ஞானத்திற்கான பாதை

ஞானம் பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும், பொதுவாக மக்கள் பயன்படுத்துவது நான்கு வழிகளைத்தான். அவை - -
1
   ஞான     மார்க்கம்

   கர்ம        மார்க்கம்

   பக்தி       மார்க்கம்

   தியான மார்க்கம்

.     
இந்த நான்கு மார்க்கங்களில் நமக்கு உரிய மார்க்கம் எது என  அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

அதற்கு நாம் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். நாம் யார் என்பதை அறிந்து கொண்டால்தான் நமக்கான பாதை எது என்பது புலப்படும்.

நாம் யார் என்பதையும், நமக்கான பாதை எது என்பதையும் அறிந்து கொண்டபின், நமக்கான பாதையில் எப்படி பயணம் செய்ய வேண்டும் என்றும் புரிந்து கொள்ளவேண்டும்.

பலரும் ஞானம் பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால் தமக்கான பாதை எது என்று தெரியாமலும், தெரிந்தாலும் சரியான வகையில் பயணம் செய்கிறோமா என்பது புரியாததாலும், தமது குறிக்கோளை அடைய முடியாமல் தவித்து, முடிவில் கடவுளையே குறை சொல்லும் அளவுக்கு சென்று விடுகிறார்கள்.



57. நீரில்லாத ஆறு

நதியில் தண்ணீர் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அதனை ஆறு என்று சொல்கிறோம். ஆற்றில் தண்ணீர் இல்லையென்றால், அந்த நேரத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த இடத்தை பார்த்தால், அந்த இடத்தை என்ன பெயர் சொல்லி அழைப்போம்? ஆற்றுப்படுகை என்றுதானே.

அந்த ஆற்றின் கரைகள் இரண்டும் நீக்கப்பட்டுவிட்டால், அப்பொழுது அதனை என்னவென்று சொல்வோம். அதுவும் பூமியின் ஒரு பகுதிதானே.

ஆற்றின் கரைகள் இல்லாதிருந்தால் (அதுவும் பூமியின் மேல்தான் இருக்கிறது), அப்பொழுது அந்த இடத்திற்கு ஆறு என்ற பெயர் இருக்குமா?

ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஒரு பகுதிதான். ஆற்றுக்கு கரை இருப்பது போல, ஜீவாத்மாவைச் சுற்றி ஒரு மாயத்திரை இருப்பதால் அதனைத் தனியாக பிரித்துப் பார்க்கிறோம்.

அந்த மாயத்திரையை இல்லாமல் செய்வது நமது கையில் இல்லை. ஆனால் அது இல்லாமல் போகவேண்டுமென்றால், அதன்மேல் எந்தவித அழுக்குகளும் இல்லாமல் செய்யவேண்டியது நமது கடமை. அதை நாம்தான் செய்ய வேண்டும். மற்றவர்கள் யாரும் நமக்கு உதவி செய்ய முடியாது; அவர்களால் நமக்கு வழி மட்டுமே காட்ட முடியும்.

 

58. சச்சிதானந்தம்

‘சத்’, ‘சித்’, ‘ஆனந்தம்’ என்ற மூன்று வார்த்தைகளின் கூட்டு வார்த்தையே ‘சச்சிதானந்தம்’ என்பது.

‘சத்’ என்பது எப்போதும் உள்ளது என்பதைக் குறிக்கிறது. அதற்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் கிடையாது.

‘சித்’ என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியான ஜீவாத்மாவைக் குறிக்கிறது. பரமாத்மாவின் ஒரு பகுதி மாயத்திரையால்   சூழப்பட்டு நமது உடலுக்குள் இருந்து கொண்டு நமது இயக்கத்திற்கு சக்தி கொடுக்கிறது என்றால், அதுவே ‘சித்’ என்று அழைக்கப்படுகிறது.

‘சித்’ மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள மாயத்திரை இரண்டையும் சேர்த்து ‘சித்தம்’ என்றும்  சொல்வதுண்டு.

‘ஆனந்தம்’ என்பது  ‘சித்’ எப்பொழுதும்  ஆனந்தமாகவே இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

‘சித்’ எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது என்றால், நம்மால்  ஏன் அதை உணர முடிவதில்லை?

கண்ணாடியில் முகம் சரியாகத் தெரியவில்லை என்றால், கண்ணாடி அழுக்காக இருக்கிறது என்கிறோம்.

உண்மையில் கண்ணாடி அழுக்காக இருக்கிறதா அல்லது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா?

அடுத்த கேள்வி: கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா?

அடுத்த கேள்வி: கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு படர்ந்திருக்கிறதா?

ஆக, கண்ணாடியில் நமது முகம் தெரியவில்லை என்றால், அதற்கு காரணமாக இருப்பது கண்ணாடியா அல்லது அதன்மேல் படர்ந்துள்ள அழுக்கா?

கண்ணாடியின் மேல் முதலில் தூசிதான் படிகிறது. அதுவே பின்னர் அழுக்காக மாறுகிறது. உரிய சமயத்தில் அதை துடைக்காவிட்டால் அதுவே அட்டாகவும்  மாறி விடுகிறது.

கண்ணாடியின் மேல் படிந்த தூசி (அழுக்கு, அட்டு) போன்று, நமது சித்தத்தில் உள்ள மாயத்திரையின் மேல் படர்ந்துள்ள தூசியின் காரணமாகத்தான் நம்மால் உள்ளிருந்து வரும் ஒளியை (ஆனந்தத்தை) உணர முடிவதில்லை.



59. இருள்சேர் இருவினைகள்


புதிதாக ஓர் அணையைக் கட்டி விவசாயத்திற்காக ஓரு நீர்வழிப் பாதையை ஏற்படுத்தும் போது என்ன நடக்கிறது?

பரந்து, விரிந்த நிலப்பகுதியில் ஒரு சிறு பகுதியை நீர்வழிப் பாதையாக்க  முடிவு செய்தால் அந்த குறிப்பிட்ட பகுதியில் நிலத்தை வெட்டி, இருபுறமும் கரைகளை அமைக்கின்றனர். அதன்பின் அந்த இடத்தை ஆற்றுப்படுகை என்றும், தண்ணீர் ஓடினால் ஆறு என்றும் அழைக்கிறோம்.

நீக்கமற எங்கும் வியாபித்திருக்கும் பரமாத்மாவின் ஒரு பகுதி, மாயத்திரைக்குள் கட்டுப்பட்டு மனித உடலுக்குள் இருக்கும்பொழுது ஜீவாத்மா (சித்தம்) என்றும், மாயத்திரையின் மீது பதிவுகள் ஏற்படும் பொழுது ஆழ்மனம் என்றும் அழைக்கிறோம்.

இந்த ஆழ்மனப் பதிவுகள்தான் ஆன்ம ஒளியை உணர முடியாமல் அதனை  மறைத்து விடுவதோடு, மனிதனின்  மறுபிறவிக்கும்  காரணமாக அமைகின்றன.

தீவினைகள் காரணமாக ஏற்படும் பதிவுகள் மட்டுமல்ல, நல்வினைகள் காரணமாக ஏற்படும் பதிவுகளும் (கண்ணாடியின் மேல் படர்ந்த தூசியைப் போன்று) நமது ஆழ்மனதில் பரவும் இருளுக்கு காரணமாக இருக்கின்றன.

அதனால்தான் திருவள்ளுவர் தனது குறளில் -

“இருள்சேர் இருவினையும் சேரா – இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”            - - என்கிறார்.



60. தன்முனைப்பு

மனிதனின் ஆழ்மனப் பதிவுகளை “வாசனா” என்று சொல்கிறோம். அந்த வாசனாவின் தன்மையைப் பொறுத்து, ஒரு மனிதனின் அஹங்காரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அஹங்காரம் என்றால் திமிர் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், இங்கு அஹங்காரம் என்பது ஒரு மனிதனின் தன்முனைப்பை மட்டுமே குறிக்கிறது.

எங்கு தன்முனைப்பு இருக்கிறதோ, அங்கு ஆசை கண்டிப்பாக வெளிப்படும். அந்த ஆசையின் அளவும், தன்முனைப்பின் தீவிரத்தைப் பொறுத்து இருக்கும்.

எங்கு ஆசை இருக்கிறதோ, அங்கு அதனைத் தொடர்ந்து பயமும், கோபமும் வருவது தவிர்க்க முடியாது.

ஆசை இருந்தால், ஆசைப்பட்ட பொருள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம்; கிடைக்காவிட்டால் கிடைக்கவில்லையே என்ற  கோபம்.

ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ  அது தன்னைவிட்டு போய்விடுமோ என்ற பயம்; போய்விட்டாலோ அதனால்  ஏற்படும்  கோபம்.

இவை அனைத்தும் ஒன்றை ஒன்று தொடர்ந்து வரக்கூடியவை.

வரைபடத்தைப் பாருங்கள் - -


                        


பயம், கோபம் போன்றவை எதிர்மறை உணர்ச்சிகள். இவையெல்லாம் இருக்கக்கூடாது என்றால், அஹங்காரத்தை விட்டால்தான் முடியும். ஆனால். தன்முனைப்பு இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு வளர்ச்சி என்பதும்  இருக்கமுடியாது. இதற்கு வழிதான் என்ன?



61. வளர்ச்சியும், மலர்ச்சியும்

அஹங்காரம் (தன்முனைப்பு) ஒரு மனிதனுக்குத் தேவையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். ஏனெனில் - -

“அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது;

 அஹங்காரம் இருந்தால்  மலர முடியாது”.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், தன்முனைப்பு மிகவும் அவசியம்; தன்முனைப்பு இல்லையென்றால் அவனால் முனைப்புடன் செயலில் இறங்க முடியாது. முனைப்பு இல்லாத செயல் நாம் ஆசைப்படும் விளைவை கொடுக்காது.

தன்முனைப்பு ஆசையைத் தூண்டக்கூடியது; அதே நேரம் தன்முனைப்பு உள்ள மனிதனிடம் அமைதியை எதிர்பார்க்க முடியாது. அமைதி இல்லாத மனதில் அகமலர்ச்சி மலர முடியாது.

ஒரு மனிதனின் ஆழ்மனதில் உள்ள வாசனா பதிவுகள் அனைத்தும் அழிந்துவிடும்பொழுது மட்டுமே, அந்த மனிதன் தனது சித்தத்தின் உள்ளே இருக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.

மலர்ச்சி என்று சொல்லும்போது, நாம் வாசனாவில் உள்ள பதிவுகளின் நீக்கத்தையே மனதில் கொள்ளவேண்டும்.

அமைதி தரும் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதன் மட்டுமே ஞானம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடமுடியும். மற்றவர்கள் முயற்சி செய்தாலும், அதில் வெற்றி பெறுவது கடினம்.


62. யான், எனது

“யான்எனது என்னும் செருக்கு அறுப்பான்  வானோர்க்கு               உயர்ந்த உலகம் புகும்”. – - திருவள்ளுவர் 

தன்முனைப்பு, செருக்கு (திமிர் என்றும் சொல்லலாம்) இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

ஒரு மனிதன் தன்முனைப்புடன் செயலில் இறங்கும்பொழுது, அதன் விளைவாக பொன், பொருள் என்று சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். அவனது வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பிக்கிறது.

தான் நினைத்ததை சாதிக்கமுடிந்ததன் காரணமாக அவனுக்கு தன்னை நினைத்தே ஒரு பெருமிதம் வந்து விடுகிறது. அது தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அதன்கூடவே, அவனையும் அறியாமல் ஒரு விதமான செருக்கும் வந்து விடுகிறது.

‘நான்’ மற்றும்  ‘என்னுடைய’ என்னும் இந்த உணர்வுகளே மனிதனின் அமைதி குலைவதற்கு காரணமாகின்றன.

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மனிதன் பாடுபடுவதில் தவறு இல்லை; வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதனால் ஏற்படும் சுகத்தை அனுபவிப்பதிலும் தவறு இல்லை. 

ஆனால் ‘என்னுடைய’ என்ற உடைமைத்தனத்திலிருந்து அவன் விடுதலை ஆகாத வரை அவனால் அமைதியும், அதனால் வரும் ஆனந்தத்தையும் உணர முடியாது.

‘நான்’, ‘எனது’ என்ற இந்த இரண்டு கட்டுகளிலிருந்தும் விடுபடுவது, ஞானம் அடைய விரும்பும் மனிதனுக்கு மிகவும் அவசியம்.



63. நான் யார்?

ஞானம் பெறுவது எப்படி என்று பகவான் ரமண மகரிஷியிடம் கேட்டால், அதெல்லாம் தேவையில்லை; தனியாக அமர்ந்து ‘நான் யார்’ என்று உன்னையே கேட்டுக்கொண்டு, விடையையும் தேடு   என்று சொல்வார். 

பெரும்பாலும் ‘நாம் யார்’ என்று தெரியாமலே, நமது வாழ்நாளைக் கழித்துவிடுகிறோம். இதில் உள்ள மறைந்திருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள சில விளக்கங்களைப் பார்ப்போமா?

இது என்னுடைய வீடு என்று சொல்லும்பொழுது, வீடு உடைமைப் பொருளாகவும், நான் அதன் உரிமையாளனாகவும் இருக்கிறேன். வேறு வகையில் சொன்னால் வீடு பார்க்கப்படும் பொருளாகவும், நான் பார்ப்பவனாகவும் இருக்கிறேன். இது என்னுடைய உடம்பு என்றால், அதன் உரிமையாளன் யார்? அதனைப் பார்ப்பவன் யார்?

ஒரு வீடு கட்டும்பொழுது, கல், மணல், சிமெண்ட், இரும்புக் கம்பி, மரம்  இப்படி பல பொருட்களை உபயோகித்து, முடிவில் அவை சுவராகவும், தளமாகவும், கூரையாகவும், கதவு, ஜன்னலாகவும்  மாறி விடுகின்றன. ஆனால், இவற்றில் எது அந்த வீட்டின் உரிமையாளனாக குடியிருக்கிறது? இவற்றிற்கு சம்பந்தம் இல்லாத யாரோ ஒருவர்தானே, அந்த வீட்டில் குடியிருக்கமுடியும்?

இந்த உடம்பும் தோல், சதை, எலும்பு, இரத்தம்  போன்று பல  பொருட்களால் உருவாக்கப்பட்டதென்றால், இவற்றில் எது இந்த உடலில் வசிக்க முடியும்? வேறு ஏதோ ஒன்றுதானே இந்த உடலில் வசிக்க முடியும்?

‘நான் யார்’ என்ற கேள்விக்கான  பதில் இங்குதான் ஆரம்பமாகிறது.


64. இந்த நானும், அந்த நானும்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ‘நான்’கள் உள்ளன.

ஒன்று உண்மையான நான்; மற்றொன்று ‘நான்’ என்று நினைக்கின்ற நான் உண்மையில் நானில்லை என்பதை  அறியாத நான்.

உண்மையை அறியாத நானிடம், உண்மையான நானைக் கண்டுபிடிக்க  ‘நான் யார்’ என்ற விசாரத்தில் (சிந்தனையில்) இறங்கு என்கிறார் பகவான் இரமண மகரிஷி.

ஆனால், வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதனால் முடிகிற காரியமா இது.

அந்த உண்மையான ‘நானை’ கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், இப்பொழுது நாம் எந்த வர்ணப் பிரிவில் இருக்கிறோம்; நமக்கான பாதை எது என்பதை அறிய வேண்டும்.

அவற்றை அறிவதற்கு முன்னால், அந்த முயற்சியில் ஈடுபட முடியாத அளவிற்கு நம்மைத் தடுக்கும் காரணி எது  என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்தக் காரணியை  அறிந்துகொண்டபின், அதனை  நீக்கத் தயாராக இருக்கிறோமா என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக இல்லையென்றால், நமது முயற்சி எந்தவித பலனையும் தராது.


65. பந்தம்

‘சொந்தபந்தம்’ மற்றும் ‘பந்தபாசம்’ என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘சொந்தபாசம்’ என்ற வார்த்தையை  எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

மனிதன் தனக்குப் பிறந்த குழந்தையிடம் அன்பு வைப்பதோடு அதனுடன் பற்றும் கொண்டுவிடுகிறான். அதன்பின் அவனுக்கு அந்த குழந்தையின் மீது இருப்பது அன்பு அல்ல, ஆசை.

அதே மனிதன் தனது வீட்டிற்கு காவலாக (தேவையென எண்ணி) ஒரு நாயை வளர்க்கிறான். எங்கிருந்தோ வாங்கியது. இருந்தாலும் நாளாக, நாளாக அவனுக்கு அதன்மேல் பற்று வந்துவிடுகிறது. அதன்பின் அவனுக்கு அந்த நாயிடம் இருப்பது ஆசையாக மாறிவிடுகிறது.

இந்தப் பற்றுதான், முதலில் ஆசையாகவும் பின்னர் அதுவே உயிருள்ள ஜீவனாக இருந்தால் பாசமாகவும், பொருளாக இருந்தால்   பேராசையாகவும், பெண்ணாக இருந்தால்  காமமாகவும்  மாறி விடுகிறது.
இதனைத்தான் பந்தம் என்று சொல்கிறார்கள் (இதனையே கட்டு என்றும், தளை என்றும் சொல்வதுண்டு).

ஞான மார்க்கத்தின் வெற்றியே, இந்த பந்தத்திலிருந்து விடுபடுவதில்தான் இருக்கிறது.


வரைபடத்தைப் பாருங்கள் - -


ஆக, மனிதனிடம் உள்ள பந்தத்திற்கு மூலகாரணமாக இருப்பது இந்த பற்றுதான். ஞானமார்க்கத்திற்குத் தடையாக இருப்பதும் இந்த பற்றுதான்.
  
   “...பாசவினைகள் பற்றது நீங்கி”          - -    கந்தசஷ்டி கவசம்.

   “... அப்பற்றை பற்றுக பற்று விடற்கு”    - -    திருக்குறள்

   “ஆசைவலைப்  பாசத் தகப்பட்டு மாயாமல்....” – பத்திரகிரியார்




66. நாமும், நமக்கான பாதையும்

ஞானம் பெறுவதற்கு நான்கு முக்கிய வழிகள் உள்ளன என்று ஏற்கனவே பார்த்தோம்.

இவற்றில் ஒரு வழி நமக்குரிய பாதையாக இருக்கவேண்டும். அது நமது வர்ணப்பிரிவிற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும். வேறு பாதைகளைப் பயன்படுத்த விரும்பினால், அது நடைமுறை வாழ்க்கைக்கு உதவி செய்வதாக இருக்கவேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு மருத்துவரை எடுத்துக்கொள்வோம். தனக்கு வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை; ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்படுகிறார். பொதுநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அவரை ஒரு க்ஷத்திரியன் என்றுதான் அழைக்கவேண்டும். ஆனால், மத நம்பிக்கை உள்ளவராக இருந்து, மாதத்தில் பத்து நாட்கள், ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தால் அவரது க்ஷத்ரிய தர்மம் என்னாவது? அவர் கடைப்பிடிக்கும் பக்தி மார்க்கம், அவரது க்ஷத்ரிய தர்மத்திற்கு உதவியாக இருக்கவேண்டாமா?

நமது வர்ணப்பிரிவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற பாதையில் பயணத்தை தொடங்குகிறோம் என்றாலும், அந்தப் பாதையின் அடிப்படை விதியினைத் தெரிந்துகொள்ளவேண்டும். அவை - -

“அறிந்து வருவது     ஞான மார்க்கம்

அறியாமல் வருவது  பக்தி மார்க்கம்

அடிபட்டு வருவது    கர்ம மார்க்கம்

கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்”



67. மார்க்கமும், யோகமும்

ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் என்றும் சொல்வார்கள்; ஞான யோகம், கர்ம யோகம் என்றும் சொல்வார்கள். ஏன் இந்த வித்தியாசம்?

மார்க்கம் என்பது நாம் பயணம் செய்யும் பாதையைக் குறிக்கிறது; பாதையின் முடிவில் எல்லைக்கோட்டை அடைந்தால்,  மார்க்கம் யோகத்தில் முடிகிறது என்றும் சொல்லலாம். யோகம் என்ற வார்த்தைக்கு இணைதல் (இறைவனோடு, பிரம்மத்தோடு) என்றும் சொல்வதுண்டு.

மார்க்கம் என்பது சரியான பாதையாக இருந்து, நாமும் சரியான முறையில் நமது பயணத்தைத் தொடர்ந்தால், நாம் யோகத்தின் வழியில் இருக்கிறோம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

நான் பக்தி மார்க்கத்தை ஒழுங்காக கடைப்பிடிக்கிறேன். நாள் தவறாமல் கோவிலுக்கு சென்று வருகிறேன். தவறாமல் விரதங்கள், அனுஸ்டானங்கள் எல்லாவற்றையும் கடைப்பிடிக்கிறேன். அப்படியானால் நான் பக்தி யோகத்தில்தானே இருக்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் இதுவே பக்தி யோகத்தில் இருக்கிறேன் என்று சொல்வதற்கு போதுமானதாகுமா?

ஒவ்வொரு மார்க்கத்திற்கும் வேறுவேறு நெறிமுறைகள் இருக்கின்றன; அவற்றில் சில கடைப்பிடிக்க மிகவும் எளிதானவைதான். இருந்தாலும் அவற்றை சரியாகக்  கடைப்பிடிக்காதவரையில் மார்க்கம் யோகமாக இருக்க முடியாது.

ஒவ்வொரு மார்க்கமாக பார்ப்போம்.



68. பக்தி மார்க்கம்

இருக்கும் எல்லா மார்க்கங்களிலும் மிகவும் எளிதானது பக்தி மார்க்கம்தான். பெருவாரியான மக்கள் கடைப்பிடிக்கும் மார்க்கமும் இதுவே.

ஆனாலும், பக்தி மார்க்கத்தில் ஈடுபடும் மக்களில் பெரும்பாலோர் மனதில் அமைதி இல்லாமல் உழன்று வருவதற்கு என்ன காரணம்? பக்தி மார்க்கத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தும், அவர்களால் பற்று என்னும் தளையிலிருந்து ஏன்  விடுபடமுடியவில்லை?

“பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”.                - -    திருவள்ளுவர்

பற்றின் காரணமாக   வரும் ஆசாபாசங்களை விடுவதற்கு, கடவுளின் திருவடியைப்  பற்றி பக்தி செய்யவேண்டும் என்கிறார்கள்.

மீண்டும் ஒருமுறை திருக்குறளைப் பாருங்கள். அதில் “பற்று விடற்கு” என்றுதான் வருகிறது; “பற்றை விடற்கு” என்று வரவில்லை. அதாவது பற்றை நாம் துறக்க முடியாது; ஆனால் கடவுளின் திருவடியைப் பற்றினால், பற்று நம்மை விட்டுவிடும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அதே நேரம், திருமூலர் சொல்வது வேறாக இருக்கிறது. அவர் சொல்வது -

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

 ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
                  
                 ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
                 
                 ஆசை விடவிட ஆனந்த மாமே”.

பற்றின் காரணமாக வரும் ஆசாபாசங்களிலிருந்து விடுபடுவதற்கு, இறைவனின் திருவடியைப் பற்றினால், அதுவும் ஆசையாக மாறிவிடுமே என்கிறார் திருமூலர். ஆசை இல்லாத மனதில்தான் அமைதியும் அதனைத் தொடர்ந்து ஆனந்தமும் கிடைக்கும் என்கிறார்.

இந்தப் புதிருக்கான விடையை, ரிஷி பதஞ்சலி தருகிறார். அதற்கு அவர் தரும் மந்திரம் “ஈஷ்வர ப்ரணிதானாத்”. அதாவது கடவுளிடம் சரணடைவதன் மூலம் என்கிறார்.

நினைத்துப் பாருங்கள், நாம் கடவுளிடம் எதை எதையோ வேண்டுகிறோம்; ஆனால் கடவுளிடம் சரணடைகிறோமா?

சரணடைவது என்றால் என்ன? அவர் எதைத் தந்தாலும் அதனை அவரிடம் இருந்து வரும் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தர வேண்டும் என்று மட்டும் வேண்டினால், அதுவே உண்மையான  சரணாகதி ஆகும்.

சரணாகதி ஒன்றே பக்தி மார்க்கம் முழுமை அடைய உதவும்.





69. கர்ம மார்க்கம்

க்ஷத்ரியன், அதாவது பொது நலனில் அக்கறை உள்ள மனிதன் மட்டுமே 
கர்ம மார்க்கத்தில் (பலனை எதிர்பார்க்காமல்) ஈடுபடமுடியும்.

பொது நலனில் அக்கறை உள்ள மனிதன் சமூகத்தில் செயல்படும் பொழுது, அவனுக்கு பலவிதமான சோதனைகள் வர வாய்ப்புண்டு. அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு வழிகாட்டியின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும்.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”       - - திருவள்ளுவர்

செயல், அந்த செயல்  புறவுலகில் ஏற்படுத்தும்  விளைவு, அதனால் ஏற்படும்  பின்விளைவு இவற்றின் காரணமாக அவன்  வெளியில் ஓடும் மனதை உள்முகமாகத் திருப்பி, அகத்தாய்வில் ஈடுபட வேண்டிவரும். விளைவு, பின்விளைவு, மனதை உள்முகமாகத் திருப்புதல், அகத்தாய்வு  போன்ற காரியங்கள் ஒரு தொடர் சங்கிலியாக வந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் அவனுக்குக் கண்டிப்பாக ஒரு நல்ல வழிகாட்டியின் உதவி தேவைப்படும்.

“உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்”  என்கிறார் திருவள்ளுவர்.



70. தியான மார்க்கம்

“கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்” என்று முன்னர் சொல்லியிருந்தோம். அது எதனால் என்று பார்க்கவேண்டும்.

நம்மைச் சுற்றி பல இடங்களில் ஆசனம், பிராணாயாமம்  மற்றும் தியான வகுப்புகள்  நடைபெறுவதை பார்க்கிறோம். ஆனாலும் நம்மால் உள்ளிருக்கும் மையத்தை ஏன் நெருங்கக்கூட முடியவில்லை?

ஆசனம், பிராணாயாமம் இரண்டுமே நமது உடலுக்கும், மனதிற்கும் நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் ஆழ்மனதில் உள்ள பதிவுகளைக் களைவதில் அவை எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.

தியானத்தைப் பொறுத்தவரை  அதனை ஒரு பயிற்சியாக செய்யமுடியாது; எந்தவித முயற்சியும் இன்றி ஏகாந்தமாக இருப்பதே தியானம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், தியான வகுப்புகள் என்று சொல்வதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது.

“அம்மா, பசிக்கிறது” என்று பையன் சொன்னால், “கொஞ்சம் பொறு, இட்லி அவித்துத் தருகிறேன்” என்று அம்மா சொல்கிறாள். உண்மையில் அம்மா இட்லி அவிக்கிறாளா, அல்லது இட்லிக்காக மாவை அவிக்கிறாளா? மாவுதான் அவிக்கிறாள்; இருந்தாலும் முடிவில் அந்த மாவு இட்லி ஆகும் என்ற எண்ணத்திலேயே “இட்லி அவித்துத் தருகிறேன்” என்று கூறுகிறார். இது நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதைப்போன்று, தியான நிலையை அடைவதற்கான ஒரு பயிற்சியை தருவதைத்தான் ‘தியான வகுப்புகள்’ என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் பயிற்சியை ‘தாரணை’ என்று அழைத்தால் அதுவே சரியாக இருக்கும்.

இந்த மூன்று பயிற்சிகளும் ‘தியான’ நிலையை அடைவதற்கு முழுமையாக உதவ முடியாததற்கு என்ன காரணம்?

தியான மார்க்கத்தில் முழுமை அடைவதற்கு, ரிஷி பதஞ்சலி எட்டு படிநிலைகளை அமைத்திருக்கிறார். அவை, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு படிநிலைகள்.

இவை ஒவ்வொன்றாக கடக்கப்படவேண்டியவை. சத்துவ குணம் நிறைந்த மனிதன்  மட்டுமே   நேரடியாக   ‘தாரணை’   நிலைக்குப் போகமுடியும். 
ஏனெனில்   ‘பிரத்யாஹாரம்’      என்பது அவனுக்கு இயல்பான ஒன்று.

ஆசனத்தையும், பிராணாயாமத்தையும் பயிற்சி செய்கிறவர்கள் தியான நிலை வரைக்கும் போக எண்ணினால், அவர்கள் நிச்சயம்  யமம், நியமம் இரண்டையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும். 

யமம், நியமம் என்றால் என்ன என்பதை ஒரு குறள் அழகாக குறிப்பிடுகிறது.

     “செய்தக்க அல்ல செயக்கெடும் – செய்தக்க
      செய்யாமை யானும் கெடும்”.            - - திருவள்ளுவர்

இந்த இரண்டு கட்டளைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அந்த மனிதனால் தியான நிலையை அடைவது மிகவும் கடினம். அவனது பாதை, இலக்கை சென்று அடைய உதவாது.

எட்டு படிநிலைகளில் ஒன்றான  ‘பிரத்யாஹாரம்’ என்பது, வெளியில் ஓடும் மனதை அகத்தாய்வுக்காக உள்முகமாக திருப்புவதையே குறிக்கிறது.

முதல் இரண்டு கட்டளைகளான ‘யமம் மற்றும் நியமம்’ ஆகியவற்றை கடைப்பிடிக்க முடியாத மனிதனால், ‘பிரத்யாஹாரத்தை’ மேற்கொள்ள  முடியாது.


71. ஞான மார்க்கம்

அறிந்து வருவது ஞான மார்க்கம். ஆனால், அறிவு பூர்வமாக ஞானம் அடைவதற்கு பல படிகள் தாண்டவேண்டி உள்ளது.

தெரிதல், அறிதல், புரிதல், தெளிதல், தெள்ளத் தெளிதல், உணர்தல் எனப் பல  நிலைகளைத் தாண்டவேண்டி உள்ளது.

தெரிந்து கொள்வது என்பது எல்லோராலும் முடிவதுதான்.

ஆனால் தெரிந்த விஷயங்களைப்  பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கு, வெறும் அறிவு மட்டும் போதாது.

விஷயங்களைப் பற்றிய உண்மைகளை பகுத்து அறிய தெரிந்திருக்க வேண்டும். அதற்கான விவேகம் இல்லையென்றால் நாம் அறிவது சரியாக இருக்காது. விவேகம் உள்ள மனிதனும், உணர்ச்சி வசப்படுகிறவனாக இருந்தால், அவனது விவேகம் சரியான முறையில் செயல்பட முடியாது.

அறிந்துகொண்ட உண்மைகளை நடைமுறைப் படுத்தும் பொழுதுதான், அதனால் ஏற்படும் அனுபவங்களின் மூலமாக நமக்கு முறையான புரிதல் ஏற்படும்.

தெரிந்துகொண்ட விஷயங்களைப் புரிந்துகொண்டபின், மேலும் மேலும்  கிடைக்கும் அனுபவங்களின் மூலம் நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

தெளிந்தால் மட்டும் போதாது; தெள்ளத் தெளிய வேண்டும் என்கிறார் திருமூலர். தெள்ளத் தெளிந்தால் மட்டுமே ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை தெரியவரும் என்கிறார்.

“.....தெள்ளத் தெளிந்தாற்கு சீவன் சிவலிங்கம்”           - -        திருமூலர்.

அதாவது, ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை விளங்கும் என்கிறார். இதுவே உணர்தல் எனப்படுகிறது.

ஜீவாத்மாவைப் பற்றிய உண்மைகளை அறிவையும், விவேகமான சிந்தனையைக்கொண்டும் புரிந்து தெளிய முடியும். ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகள்  (நல்வினைப் பதிவுகளாக இருந்தாலும், தீவினைப் பதிவுகளாக இருந்தாலும்) இருக்கும்வரை ஞானம் பெறுவது என்பது முடியாத காரியம்.

ஆழ்மனதில் உள்ள அனைத்து பதிவுகளையும்  நீக்கினால் மட்டுமே, ஞானம் கைகூடும். அதுவரை ஞானத்தைப் பற்றிய உணர்வு மட்டுமே இருக்கும்.

ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்க, நாம் என்னன்ன செய்யவேண்டும் என்று கீதை நெடுகிலும் நிறைய குறிப்புகள் உள்ளன.

இருந்தாலும் நாம் எந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்ந்தால் அந்த இலக்கை அடையலாம், முடிவான இலக்கு எப்போது, எப்படி அடையப்படும் என்று ரிஷி பதஞ்சலி விரிவாக எடுத்துரைக்கிறார்.

அதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.



72. ஞான மார்க்கம் – பாதை 1

ஞான மார்க்கத்தில் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது, ஆழ்மனதில் உள்ள பதிவுகளே. ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகளுக்குக் காரணமாக இருப்பது நமது உணர்வு மனமே. எனவே, சுத்திகரிப்பு வேலையை முதலில் உணர்வு மனதிலிருந்தே தொடங்கவேண்டும் என்கிறார் ரிஷி பதஞ்சலி.

உணர்வு மனதில் உள்ளவை வெறும் கடந்த கால எண்ணங்கள் மட்டுமே. அவை நமக்கு  ஏற்படும் அனுபவங்களால் மட்டும் பெறப்பட்டவை அல்ல. நம்மை சுற்றி இருப்பவர்களால்  – நமது பெற்றோர் முதற்கொண்டு நண்பர்கள் வரை – நமக்குள் திணித்து வைத்தவைகளும் சேர்ந்தே இருக்கும். அத்துடன், அவற்றில் பலவும் நமது உணர்ச்சிகளைத் தூண்டுபவையாகவே இருக்கும்.

மனதில் உணர்ச்சிகள் அதிகரிக்க அதிகரிக்க, நாம் உணர்வு மனதுடன் ஒன்றிவிடுகிறோம். அதன்பின், உணர்வு மனம் நமக்கு எஜமானனாக மாறிவிடுகிறது. அதனால்தான், நாம் எதிர்கொள்ளும் தாக்கங்களுக்கு உடனுக்குடன், சற்றும் சிந்திக்காமல், மனமே  எதிர்விளைவை உண்டுபண்ணுகிறது

ஒரு மனிதன் அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், உணர்ச்சிவசப் படுகிறவனாக இருந்தால், அவனது மனம் புத்தியை கலந்து கொள்ளாமல்  தன்னிச்சையாக   முடிவு எடுத்து, தானே ஒரு பின்விளைவை  ஏற்படுத்தி விடுகிறது.

எனவே, முதலில் உணர்வு மனதில் கடந்த காலத்தில் பதிவாகியுள்ள எண்ணங்களில் உள்ள  அசுத்தங்களை நீக்க  நாம் “சவிதர்க்க சமாதியை” கடைப்பிடிக்கவேண்டும் என்கிறார்.

“சவிதர்க்க” என்பதை பிரித்து, ‘தர்க்க’, ‘விதர்க்க’ மற்றும் ‘சவிதர்க்க’ என ஒவ்வொன்றாக அவற்றின்  பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதில், ‘தர்க்க’ என்பது விவாதத்தைக் குறிக்கிறது. விவாதம் என்பது பல நேரங்களில் பலருடன் பல்வேறு காரனங்களுக்காக ஏற்படுகிறது. ஆனால், அது ‘விதர்க்கமாக’ இருக்கவேண்டும் என்கிறார்.

தர்க்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று குதர்க்கம்; மற்றொன்று விதர்க்கம்.

மக்கள் ‘தான்’ என்ற உணர்வோடும், உணர்ச்சி மிகுந்தும்  விவாதத்தில் கலந்து கொண்டால், பெரும்பாலும் அது ‘குதர்க்கத்தில்’ தான் முடியும். அத்தகைய விவாதத்தில்  ஒரு நியாயமான முடிவுக்கு வருவது மிக கடினம்.

‘விதர்க்கம்’ என்று சொல்லும்பொழுது,  விவாதத்தில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் ஒரு ஒத்திசைவு இருக்கும். அவர்கள் விவாதத்தின் கருப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவேண்டும் என்பதில், எல்லோருக்குமிடையே ஒரு உடன்பாட்டுத்தன்மை இருக்கும்.

விதர்க்கத்தில் கருப்பொருள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால், ‘சவிதர்க்கம்’ என்று வரும்பொழுது, அதிலிருந்து தனது குணத்தின் பண்புகளை எப்படி உயர்த்திக் கொள்வது என்பது மட்டுமே ஒரு மனிதனின் நோக்கமாக இருக்கவேண்டும்.

ஆக, சவிதர்க்கத்திற்கு உதவியாக இருப்பது நண்பர்களாக இருக்கலாம்; சத்சங்கமாக இருக்கலாம்; ஏன், ஒரு புத்தகமாக கூட இருக்கலாம். ஆனால் நோக்கம்  என்பது ஒன்றே ஒன்றுதான்; தனது குணத்தின் பண்புகளை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதுதான் அது.

‘சவிதர்க்க சமாதி’ பாதை என்றால், அது போய்ச்சேரும் இடத்தை  ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார். அந்த இடத்தை அடைந்துவிட்டோம் என்பதை அறிந்துகொள்வதற்கு சில குறிப்புகளை தெரிந்துகொள்வோம்- -
1.     
     உணர்வு மனதிலிருந்து அஹங்காரம் குறையத் தொடங்கும்.

     வெளியில் ஓடி புறவுலகில் இருக்கும் ஆரவாரம், பரபரப்பு இவற்றை              இரசிப்பதிலிருந்து உணர்வு மனம் விலக ஆரம்பிக்கும். 

     உணர்ச்சிகளை அடக்கிவைப்பதற்கு பதிலாக, உணர்ச்சிகள் அடங்க                ஆரம்பிக்கும்.
   
     உணர்ச்சிகள் அடங்குவதன் காரணமாக, உணர்வு மனம்                         தன்னிச்சையாக முடிவெடுக்காமல் புத்தியைக் கலந்து                    செயல்பட ஆரம்பிக்கும்.

     உணர்ச்சியின் காரணமாக வரும் எதிர்விளைவுகள் குறைய                      ஆரம்பிக்கும்.

     நான் என்பது மனமல்ல என்ற உண்மை புரிய ஆரம்பிக்கிறது; அதன்              காரணமாக மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறோம்.

    விவேகம் மிகுந்து காணப்படுவதால் பற்றற்ற தன்மை (வைராக்கியம்)              வளர ஆரம்பிக்கும்.

    உணர்வு மனதில் உள்ள அசுத்த எண்ணங்களை வெளிப்படுத்தக்                  கூடிய  பதிவுகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.

  ஜீவாத்மாவைப் பற்றிய உணர்வே இல்லாதிருந்த மனிதன், ஆன்மாவைப்     பற்றி சிந்திக்கத் தொடங்குகிறான்           .

     பகுத்தறியும் தன்மையில் தெளிவான பார்வை கிடைக்கும்.

வரைபடத்தைப் பாருங்கள்:-

வரை படத்தில் உள்ள ‘சவிதர்க்க சமாதி’ என்பது ஞானமார்க்கத்தில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பாதையைக் குறிக்கிறது.

அந்தப் பாதையில் மனிதன் முறையாகப் பயணம் செய்தால், அவன் சென்று அடையும் இடம் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார்.

யதார்த்த உலகில் வாழும் மனிதனுக்கு ‘சவிதர்க்க சமாதியில்’ ஈடுபட நேரம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். சவிதர்க்க சமாதியில் ஈடுபட நேரம் இருந்தாலும், அதில் ஈடுபடும் மனிதனுக்கு புத்தி மற்றும் பகுத்தறியும் தன்மை முழுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

மற்றவர்களுக்கு ஞானம் பற்றிய மெய்ப்பொருளை அடையவேண்டும் என்கின்ற ஆர்வம் தீவிரமாக இருந்தால், தகுந்த சான்றோரை நாடித் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பல நேரங்களில் நாம் யாரை நாடிச் செல்கிறோமோ, அவருக்கு  அதற்குரிய தகுதி இல்லாதிருக்கலாம். ஆனால், அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல், நமக்கு நிறையப் பாடம் எடுப்பார்கள்.


‘குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவீழு மாறே”             - - திருமூலர்


சம்பிரஞ்ஞாத சமாதி நிலையை அடைந்த மனிதனுக்கு நிறையவே குழப்பங்கள் வரும். ஏனெனில், அவனது உணர்வு, உணர்வுமனதிலிருந்து நகர ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் ஆன்மாவைப் பற்றிய முழுமையான தெளிவு இல்லாததால் அவனுக்குப் பல இடத்திலிருந்தும் நெருக்கடிகள் வரும். தனது பயணத்தின்  அடுத்தடுத்த பாதைகளை அவன் தைரியமாக  தொடரவேண்டும். இல்லையேல் நிலைகுலைந்து போகும் வாய்ப்பு உண்டு.
தன்மீதும், தனது முயற்சிகளின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு பயணத்தைத் தொடரவேண்டும்.


“தானே தனக்குப் பகைவனும் நட்டானும்;

தானே தனக்கு மறுமையும் இம்மையும்;

தானே  தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்;

தானே தனக்கு தலைவனும் ஆமே”             - - திருமூலர்


இதற்கு, அறத்தின் இயல்பை அறிந்து சிறந்த அறிவுடையவரது உறவைத் தேடி தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.


“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்”.                - - திருவள்ளுவர்



 73. ஞான மார்க்கம் – பாதை 2

மனிதன் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ நிலையை அடையும்பொழுது, அவனது மனம்  புத்தியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துகொள்ள ஆரம்பிக்கிறது. அத்துடன் அவனது அஹங்காரம் குறையக்  குறைய, அவன் புறவுலகின் யதார்த்த நிலைகளைப் புரிந்துகொண்டு அதனுடன் இசைவாகவும், இணக்கமாகவும்  நடந்துகொள்ள ஆரம்பிக்கிறான்.

ஒவ்வொரு நிகழ்வுகளையும் பகுத்தறிவின்  துணையுடன் தர்க்கம் செய்வதிலிருந்து விலக ஆரம்பித்துவிடுகிறான்.  எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்வதை விட்டுவிடுவதால், அவனது மனதில் உணர்ச்சிகள் பொங்கிப் பெருகுவது நின்றுவிடுகிறது. மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும்  குறைய ஆரம்பிக்கிறது.

சவிதர்க்க சமாதியின் காரணமாக, அவனுக்குள் வாழ்வியல் உண்மைகளைப் பற்றிய தெளிவு கிடைக்கிறது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக சவிதர்க்க சமாதியிலிருந்து விடுபட்டு, ‘நிர்விதர்க்க சமாதியில்’ நுழைந்துவிடுகிறான்.

‘நிர்விதர்க்க சமாதியில்’ தர்க்கம் நின்றுவிடுகிறது. அகத்தாய்வில் கவனம் செலுத்துகிறான். ஆனாலும், அந்த அகத்தாய்வு அவன் மனதில் சேகரித்து வைத்திருக்கும் எண்ணங்களின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த எண்ணங்களோ பல பேரிடம் இருந்து வாங்கியவைகள்; அவற்றில் அவர்களது சொந்தக் கருத்துகளும் இடம் பெற்றிருக்கும். 

கடன்வாங்கிய எண்ணங்களாக இருந்தாலும், புறவுலகில் செயல்படுவது குறைந்து, அகத்தாய்வில் நாட்டம் அதிகமாவதால்  நாளடைவில் அவனது மனம், அவனையும் அறியாமலே புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதால், அதனை ‘ஒருங்கிணைந்த மனம்’ என்றும் சொல்லலாம்.

சுத்தமான எண்ணங்களால் அவனது மனம் நிரம்பி இருந்தாலும், புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அதனால் தன்னிச்சையாக இயங்க முடியாது. அது பதிவுகள் இருந்தும் இல்லாதது போல ஆகிவிடுகிறது. மனம் புத்தியுடன் தன்னை இணைத்து கொள்ளும் நிலையில் அது ‘அசம்பிரஞ்ஞாத சமாதி’ என்று அழைக்கப்படுகிறது.

வரைபடத்தைப் பாருங்கள்:-



இந்த நிலையில், அவனது மனம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு குழப்பம் அடைகிறது. மனதில் ஏற்படும் குழப்பங்களையும், வேதனைகளையும் தாங்கிக்கொள்ள அவன் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் அவனால் அடுத்த பாதைக்குள் நுழைய முடியும்.



74. ஞான மார்க்கம் – பாதை 3

‘அசம்பிரஞ்ஞாத சமாதி’  அடைந்த மனிதனின் மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. அவனது உணர்வு மனதில் சுத்தமான எண்ணங்கள் மட்டுமே இருக்கும் என்றாலும், ஒருவகையில் அவை அசுத்தமான எண்ணங்களே. ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை மற்றவர்களிடமிருந்து இரவலாகப் பெற்றவை.

‘அசம்பிரஞ்ஞாத சமாதி’  நிலையை அடைந்த மனிதனுக்கு ஒரு தவிர்க்க முடியாத குழப்பம் வரும். அதுவரை அவனது உணர்வு மனம் தன்னிச்சையாக முடிவு எடுத்தது. அத்துடன் அது எடுக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை  ஆழ்மனதால் தூபம் போடப்பட்டதாக இருக்கும்.

இப்பொழுதோ அது புத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஆழ்மனதில் இருந்து வரும் ஆலோசனைகளை அதனால் நிறைவேற்ற முடியாது; ஏனெனில் புத்தியிலிருந்து வரும் ஆலோசனைகள் வேறுவிதமாக இருக்கும்.

ஒரு இரண்டும்கெட்டான் நிலையில் இருக்கின்ற காரணத்தால், மனதில் குழப்பங்கள் உருவாகும். மேலும், அவனது மனமும் செயல்படும் (active) நிலையிலிருந்து செயல்பட விரும்பாத தன்மைக்கு (un-active) மாறிக்கொண்டிருக்கும்.

செயல்பட விரும்பாத தன்மையில், மனம் அமைதியாக இருக்கும்பொழுது, அந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்தி மனிதன் ‘சவிசார சமாதி’ என்னும் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கவேண்டும்.

‘விசாரம்’ என்பது சிந்தனையைக் குறிக்கிறது. இந்த சிந்தனை ஆராய்ச்சி செய்யும் பாவனையுடன் இருக்கவேண்டும். மேலும் இந்த சிந்தனையில் எந்த விதமான உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.

உணர்வு மனம் முன்னால்  செய்த சிந்தனைகளுக்கும், இப்பொழுது நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனைகளுக்கும் வித்தியாசம் உண்டு.

முன்பு நாம் உணர்வு மனதில் சேகரித்து வைத்திருந்த எண்ணங்களின் அடிப்படையில் நமது சிந்தனை இருந்தது. அந்த எண்ணங்கள் நம்முடையதாகவும் இருக்கலாம்; பிறரிடமிருந்து வாங்கியவையாகவும் இருக்கலாம்.

இப்பொழுது செய்யப்படும் சிந்தனையோ  நமக்குள்ளேயே வாழ்வியல் புதிர்களுக்கு விடை தேடும் விதமாக இருக்கும். உணர்வு மனதில் இருந்த சலனங்கள் பெருமளவில் குறைந்திருப்பதால், நம்மால் தெளிவாக சிந்திக்க முடிகிறது.

நம்மால் தெளிவான முடிவிற்கு வரமுடியாத போது, சான்றோரிடமோ அல்லது சத் சங்கங்களில் கலந்தோ தெளிவு பெற முடிகிறது.

விசாரத்தில் நமது சிந்தனைக்குத் தேவையான கருப்பொருள் புறவுலகில் இருந்து மட்டுமல்ல, ஆழ்மனதில் இருந்தும்  பெறப்படுகிறது. 

விசாரத்தில் தெளிவு கூடக் கூட, அதுவே ‘சவிசாரமாக’ மாறிவிடுகிறது. அதாவது ஆழ்மனதில் உள்ள அசுத்தமான பதிவுகளும் ஒவ்வொன்றாக வெளியேறிவிடுகிறது. சுத்தமான பதிவுகள் மட்டுமே அதில் உள்ளன.

‘சவிசார சமாதி’ எனும் பாதையில் பயணம் செய்தால், பாதையின் முடிவில் அவன் அடையும் இடம் ‘சபீஜ சமாதி’.

வரைபடத்தைப் பாருங்கள்:-



‘சபீஜ சமாதி’ நிலையை அடைந்த மனிதனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) பெருமளவில் குறைந்துவிடுகிறது. “தான்” என்கிற உணர்வு மறைந்து “தன்னைப்” பற்றிய நினைவு மட்டும் இருக்கிறது.



75. ஞான மார்க்கம் – பாதை 4

‘சபீஜ சமாதி’ நிலையில் மனிதனுக்கு இன்னமும் சிந்தனை புறவுலகப் பொருட்கள், அவற்றால் ஆழ்மனதில் ஏற்படும்  அனுபவங்கள் இவற்றை நோக்கியே இருக்கும். மெய்ப்பொருள் பற்றிய உண்மையை அறிந்திருந்தாலும், அவனால் சிந்தனையிலிருந்து விடுபட முடிவதில்லை.

‘நிர்விசார சமாதியின்’ பாதையில்  அவன் பயணத்தை ஆரம்பித்தவுடன், சிந்தனை இல்லாமல் பொருட்களைப் பார்க்கக் கற்றுக் கொள்கிறான். புலன்களின் உதவியின்றி அறிந்துகொள்ளும் திறனில் அவன்  மேன்மை அடைகிறான்.

வாழ்க்கையில் அவன் செயல் புரிந்தாலும், செயல் புரியாவிட்டாலும் அனைத்தையும் சாட்சி பாவத்துடன்   பார்க்க ஆரம்பிக்கிறான்.

சாட்சி பாவத்திற்கு வந்தவுடன், அவனுக்கு தியான நிலை இயல்பாகவே கைகூடிவரும். மனதில் எந்த எண்ணமும் இல்லாமல், அவனால் தியானத்தில் இருக்கமுடிகிறது.

“எண்ணமில்லாத நிலையே உண்மையான தியானம்”

எண்ணம் பற்றிய எண்ணமும் இல்லாத நிலையில், அவன்  ‘நிர்பீஜ சமாதி’ என்ற இலக்கை வந்தடைகிறான்.

பேரண்டத்துடன் அவனுக்கு ஓர் ஒத்திசைவு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு பேருண்மையும்  அவனுக்குப் புரிகிறது.   அது - - -

“இது இல்லாத போது, அது இருக்கிறது”                       

வரைபடத்தைப் பாருங்கள்:-




‘நிர்பீஜ சமாதி’ நிலையை அடைந்தவுடன், உள்ளிருந்து வரும் இறையருளை  உணரத்தொடங்குகிறான்.


76. விழிப்புணர்வு

நாம்  பார்ப்பது எதுவாக இருந்தாலும், அது பொருளாக இருக்கும்; அல்லது பொருளில் இருந்து வந்ததாக இருக்கும்,

‘இருட்டு’ என்பது பொருளா அல்லது பொருளிலிருந்து வந்ததா? இரண்டுமே இல்லை.

மாலை நேரம் வந்ததும் கிழக்கிலிருந்து மேற்காக இருட்டு பரவுகிறது. ஆனால் நமது வீட்டில், விளக்கு எரிந்துகொண்டிருந்தால், அந்த இருட்டு நமது வீட்டிற்குள் வருவதில்லை. நமது வீட்டை கடந்து சென்றாலும்கூட, அதனால் நம் வீட்டிற்குள் நுழைய முடிவதில்லை. 

நாம் ‘இருட்டு’ என்று நடைமுறை பழக்கத்தில் சொல்வதாக இருந்தாலும், உண்மையில் அது வெளிச்சத்தின் இல்லாமையே.

ஒரு மனிதன் ஞான நிலை அடையும்பொழுது, அதனை ‘விழிப்புணர்வு’ (வித்யா) என்று சொல்வார்கள்.

விழிப்புணர்வு இல்லாதபோது, அதனை விழிப்புணர்வின்மை (அவித்யா) என்று சொல்வார்கள்.

நாம் உபயோகிக்கும் பல பொருட்கள், உடல்நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் நாம் அவற்றை ஏன் உபயோகிக்கிறோம்? உடல்நலத்திற்கு கேடு என்ற உண்மை தெரிந்தும், அவற்றை உபயோகிப்பதைத்தான் விழிப்புணர்வின்மை என்கிறோம்.

“எல்லாம் அவன் செயல்” என்று நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொண்டால், அது விழிப்புணர்வுதான். நாம் விரும்பாத ஒன்று நடக்கும்பொழுது, நாம் வருந்துகிறோமே; அதற்கு என்ன பெயர்?


77. பலூனும், புல்லாங்குழலும்

ஞானம் பெறுவது முதல்படி என்றால், விழிப்புணர்வு ஞானத்தின் பாதையில் கடைசிப்படி என்று சொல்லலாம்.

விழிப்புணர்வு பற்றி அறிந்துகொண்டவர்கள், உண்மையிலேயே விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார்களா  என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

பலூன், புல்லாங்குழல் இரண்டுமே காற்றில் இயங்குவதுதான். ஆனாலும், அவற்றிற்கிடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

பலூனில் காற்று அடைக்கப்பட்டால், அது தன் விருப்பம்போல் பறக்க ஆரம்பித்துவிடும். ஒரு நூலில் அதை இணைத்தாலும், அந்த நூலையும் சேர்த்து இழுத்துக்கொண்டு பறக்கும்.

புல்லாங்குழலும்  காற்றில் இயங்குவதுதான். இருந்தாலும் அது தன்னிச்சையாக வாசிப்பதில்லை. அதற்கு, அதனை எடுத்து வாசிப்பதற்கு, வேறு ஒருவர் வேண்டும்.

நாம் பலூனாக இருக்கிறோமா அல்லது புல்லாங்குழாக இருக்கிறோமோ? புல்லாங்குழலாக இருக்கிறோம் என்றால், நாம் நம்மை அவன் கையில் ஒப்படைத்துவிடவேண்டும். நாம் கருவி, அவன் இசைப்பவன் என்றாகிவிடவேண்டும்.


நம்மை இசைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது அவனது விருப்பம். கருவியே வேண்டாம் என்று நினைத்தாலும், அதுவும் அவனது  விருப்பமே. பலூனாக இருக்கும் நாம், எப்பொழுது புல்லாங்குழலாக மாறுகிறோமோ, அன்றுதான் விழிப்புணர்வு என்றால் என்னவென்றும், அதனால் வரும் ஆனந்தத்தையும் புரிந்துகொள்வோம்.




78

நன்றியுரை

இதுவரை இதனுடன் பயணித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இந்திய வேதங்கள் ஒரு மாபெரும் பாற்கடல். வேதவியாசர் அருளிய பகவத்கீதையோ ஒரு அமுதக் கலசம்.

அதில் இவன் பருகியது ஒரு துளி மட்டுமே. அதுவே இவன் திகட்டுவதற்குப் போதுமானதாக இருந்தது. அதனைச் சுவைக்கக் கற்றுத் தந்தவர் ‘ஸ்வாமி சின்மயானந்தா’ அவர்களே.

எந்த மழலையும் தான் புதிதாக கற்றுக் கொண்டதை மற்றவர்களிடம் சொல்லிக்காட்டத் துடிக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது, அதற்கே உரிய கூச்சத்துடன், தனக்குத் தெரிந்ததை சொல்லிக்காட்டும். அந்த மழழையின் கூற்றில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், நாம் அவற்றைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவோம்.

இவனது குழந்தைத்தனமான கூற்றிலும் பல குறைகள் இருக்கலாம்; இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள். ஏனெனில்,
இது ஒரு மழலையின் கீதை”

                                           நன்றியுடன்,

                                             பித்தன்