நிம்மதியின்மை
பதிவு 1
'எல்லாம் இருந்தும், மனதில் நிம்மதி மட்டும் இல்லை' என்ற எண்ணம், வயதான காலத்தில் பலருக்கும் வருவதைக் காண முடிகிறது. இதற்கான தீர்வுதான் என்ன?
'ஞான மார்க்கத்தில்' பயணிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்காது.
'கர்ம மார்க்கத்தில்' செயல் படுபவர்கள் கூட இதைப்பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை; ஏனெனில், அவர்கள் பிறருக்காக தங்களை வருத்திக் கொள்பவர்கள். எனவே தன்னைப் பற்றி கவலைப்பட
அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.
ஆனால் நம்மில் பெரும்பாலோர் 'பக்தி மார்க்கத்தை' கடைப்பிடித்து வாழ்பவர்கள். தவறாமல் கடவுளை தினந்தோறும் வழிபடுகிறவர்கள். இருப்பினும் மனதில் நிம்மதியின்றி புலம்பித் தவிக்கிறவர்களாக, குறிப்பாக வயதான காலத்தில், வாழ்ந்து வருகிறார்கள்!?
அதற்கு .. அந்த நிம்மதியற்ற தன்மைக்கு .. அவர்கள்தான் காரணமா? அப்படியானால் அதற்கான காரணம்தான் என்ன?
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 2
"என்னை நான்கு வகையான மனிதர்கள் வழிபடுகிறார்கள்" என கிருஷ்ணன் கூறுகிறார்.
(கீதை 7.16)
இதில் "என்னை" மற்றும் "வழிபடுகிறார்கள்" என்ற இரண்டு வார்த்தைகளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
"என்னை" என்று சொல்லும்போது, அது கிருஷ்ணனை மட்டும் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நாம் எந்த உருவத்தை வழிபட்டாலும், அது நமக்கு கடவுள்தான்.
"வழிபடுகிறார்கள்" என்றால் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள் எனப் பொருள் கொள்ளக்கூடாது. சிலர் தமக்குள்ளேயே கடவுளை வழிபடலாம். பூசலார் நாயனார் அதைத்தான் செய்தார். "தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்" என்கிறார்
திருமூலர்.
சிலர் வழிபாடு என்று எதுவும் செய்ய மாட்டார்கள்; ஆனாலும், அவர்கள் கடவுள் நினைப்பிலேயே காலத்தை கழிப்பார்கள். இதற்கு பல சித்தர்களை உதாரணமாக சொல்லலாம்.
அந்த நான்கு வகையான மனிதர்கள் யாரென்று பார்ப்போம்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 3
கிருஷ்ணன் குறிப்பிடும் அந்த நான்கு வகையான மனிதர்கள் யார் யாரென்று பார்ப்போம்:-
1. எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் தாங்கமுடியாத துன்பத்தை சந்திப்பவர்கள். இவ்வகை மனிதர்களை "ஆர்த:" என்று குறிப்பிடுகிறார்.
2. புறவுலக வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற வேண்டும் என ஆசைப் படுபவர்கள். இவ்வகை மனிதர்களை "அர்தார்தீ" என்று குறிப்பிடுகிறார்.
3. இறைவனைப் பற்றி, இறைத்தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதில் அதிகமான ஆர்வம் உள்ளவர்கள். இவ்வகை மனிதர்களை "ஜிஜ்ஞாஸு:" என்று குறிப்பிடுகிறார்.
4. மெய்ஞ்ஞானம் பெற்றவர்கள். இவ்வகை மனிதர்களையே "ஞானி" என்று குறிப்பிடுகிறார்.
இந்த நான்கு வகை மனிதர்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக அலசுவோம்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 4
1. "ஆர்த:"
வாழ்க்கையில் நாம் காணும் பல மனிதர்கள் கடவுளைப் பற்றிய சிந்தனையே இல்லாதவர்களாக இருப்பார்கள்.
ஆனால், எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் தாங்கமுடியாத துன்பத்தை சந்திக்கும்போது அவர்கள் கடவுளின் கருணையை நாட ஆரம்பித்து விடுவார்கள்.
"திக்கற்றவனுக்கு தெய்வமே
துணை" என்று ஒரு பழமொழி கூட புழக்கத்தில் உண்டு அல்லவா!?
இராமாயணத்தை இயற்றிய
வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகத்தான் தனது இளமைக் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர்.
அதனால் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அவரை துயரக்கடலில் ஆழ்த்தியது. அதன் பின்னரே அவர் வால்மீகியாக புதிய அவதாரம் எடுத்தார்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 5
புறவுலக வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற வேண்டும் என ஆசைப் படும் மனிதர்களை "அர்தார்தீ" என்று குறிப்பிடுகிறார்.
"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று சொன்னாலும் கூட,
இவர்களுக்கு பொதுவாக "போதும்" என்ற மனநிலை வருவதே இல்லை.
மனிதன் ஆசைப்பட்டது கிடைத்து விட்டால், ஆசை அடங்குவதற்குப் பதிலாக ஆசைகள் பல்கிப் பெருகுவதை காண்கிறோம்.
விளைவு!? வாழ்க்கை முடிவுறும் நேரம் புலம்பலும், வேதனையுமே மிஞ்சுகிறது.
ஒரு சிலர் மட்டுமே இறைவனது கருணையால், அவன் தரும் எதிர்பாராத அதிர்ச்சியால், பொருள் நாட்டத்திலிருந்து விடுபட்டு அருளைத் தேடி ஓடுகிறார்கள்; அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் இந்த வகையினர்.
"பொருள்தேடி புண்பட்டு
பொய்யுலகில் வாழாமல்
அருள்தேடி அன்புற்று
அகமகிழ்வ தெக்காலம்?"
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 6
இறைவனைப் பற்றி, இறைத் தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதில் அதிகமான ஆர்வம் உள்ள மனிதர்களை "ஜிஜ்ஞாஸு:" என்று குறிப்பிடுகிறார்.
"ஜிஜ்ஞாஸு" என்று குறிப்பிட்டாலும் இறைவனை, இறைத் தன்மையை புரிந்து கொள்ள விரும்பும் மனிதர்களை பல வகையாகப் பிரிக்கலாம்.
அவற்றில் முக்கியமான மூன்று பிரிவுகளைத் திருமூலர் கூறுகிறார்:-
1. கற்ற பசுக்கள்:
குழந்தைத் தனமான ஆர்வத்தில், வாழ்வியல் உண்மைகளை அரைகுறையாகப் புரிந்து கொண்டு பிற மனிதர்களிடம் உளறித் திரிபவர்கள் ..
"கற்ற பசுக்கள் கதறித் திரியினும்" என்கிறார் திருமூலர்.
2. கொற்ற பசுக்கள்:
இவ்வகை மனிதர்களின் நோக்கம் 'தமக்குத் தேவையானவற்றை, தமக்கு விருப்பமான கோணத்தில் புரிந்து கொண்டு', அவற்றை மூலதனமாகக் கொண்டு எப்படி சம்பாதிப்பது என்பது மட்டும்தான். மற்றபடி இறைத் தன்மையை அறிந்து கொள்வது பற்றி முழுமையாக ஆர்வம் காட்டுவதில்லை. ..
"கொற்ற பசுக்கள் குறி கட்டி மேயினும்" என்கிறார் திருமூலர்.
3. முற்றபசுக்கள்:
இவ்வகை மனிதர்களை "முமூக்சா" என்பார்கள். இவர்கள் இறுதி நிலை வரை முயற்சியில் தளராமல் பயணம் செய்து வெற்றி அடைபவர்கள். ..
"முற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்.." என்கிறார் திருமூலர்.
முற்ற பசுக்களிலும் உட்பிரிவுகள் உள்ளன. ஆனாலும் நாம் அதனை ஆராயப் போவதில்லை.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 7
(Life is a paradox. The things of the world are not what they appear to be.
What we want we do not get; what we get we cannot possess; what we possess we cannot enjoy; what we enjoy does not give us permanent satisfaction and even when we think the satisfaction is permanent, it proves to be boring.
.. Excerpt from the book
"Meditation written by the Monks of the Ramakrishna Mission)
முற்ற பசுக்கள் என்று யாரை திருமூலர் சொல்கிறாரோ, அவர்கள் ஞானத்தின் அனைத்து நிலைகளிலும் தெளிவு பெற்று இறைத்தன்மையைப் பற்றி முழுமையாக உணர்ந்து பற்றற்று வாழ்பவர்கள். அவர்களைத்தான் "ஞானி" என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
ஆனால், நாமெல்லாம் "அர்தார்தீ" வகையைச் சேர்ந்தவர்கள். நாம் விரும்பினால் கூட, வாழ்க்கை சூழ்நிலை நம்மை 'எளிமையாக' வாழ விடாது.
நமக்கு தேவைகள் அதிகம்; எனவே ஆசைகளும் அதிகம். இதன் காரணமாகவே இறைவனிடம் இவை இவையெல்லாம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறோம். நாம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறினால் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, எவற்றையெல்லாம் நாம் பெற்றோமோ அவற்றையெல்லாம் சந்தோஷமாக அனுபவிக்கிறோம். ஆனால், அந்த சந்தோஷம் நிலைத்து நிற்கிறதா? நிலைத்து நிற்கிறது என்றால் வயதான காலத்தில் ஏன் புலம்பித் தவிக்கிறோம்? காரணம் நாம் ஒரு உண்மையை நினைத்துப் பார்ப்பதில்லை.
பட்டினத்தார் கூறுகிறார் ..
"வாழ்க்கை குடங்கவிழ் நீரின் ஓட்டமென்றே இரு.."
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 8
ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு கால அளவு இருக்கிறது. அது முடிவதற்குள் நாம் பலவற்றை அனுபவித்து மகிழ வேண்டும் என நினைக்கிறோம்; மகிழ்ச்சியாக அனுபவிக்கவும் செய்கிறோம். அதில் தவறேதும் இல்லை. ஆனால், எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நாம் அடைய வேண்டியது "நிலையான மன அமைதி" என்பதை மறந்து விடுகிறோம்.
"மன அமைதி" என்பது வேண்டி பெறக் கூடியதல்ல. நாம்தான் அதனைத் தேடி அடைய வேண்டும். உண்மையில் அது வெளியில் எங்கேயும் இல்லை; நமக்குள்ளேதான் இருக்கிறது. நாம் ஏன் தேடுவதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை?
காரணம்:-
1. அகத்தாய்வு (introspection) செய்வதற்கு நேரமில்லை.
2. அகத்தாய்வு எப்படி செய்வது என்று தெரியவில்லை.
3. அகத்தாய்வு செய்ய விருப்பமில்லை.
இது போன்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அகத்தாய்வு செய்யாதவரை 'மன அமைதி' கிட்டுவது கடினமே.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 9
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு ஏன் முக்கியம்?
ஞான மார்க்கம் மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில், அது கூறும் வாழ்வியல் தத்துவங்களைப் புரிந்து கொள்ள பொறுமை மிகவும் அவசியம். அத்துடன் தத்துவங்களை வெறுமனே படித்தால் மட்டும் போதாது; அவை கூறும் மெய்ப்பொருளை அறிந்து கொள்ள 'ஆராய்ச்சி செய்யும் தன்மை' (inquisitive mind) நம்மிடம் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு திருக்குறளை எடுத்துக் கொள்ளுங்கள். நமது புரிந்து கொள்ளும் திறமை கூடக்கூட குறளின் அர்த்தங்கள் மாறுபடுவதைக் காணலாம்.
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" .. குறள் 121
இந்தக் குறளின் பொதுவான அர்த்தம் எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், "அடக்கம்" என்பது அடக்குதல் காரணமாக வரும் அடக்கமா அல்லது அடங்குதல் காரணமாக வரும் அடக்கமா என்று யோசித்திருப்போமா?
தவிர, 'அடக்குதல்' 'அடங்குதல்' ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை அறிவோமா?
கர்ம மார்க்கத்தை பொறுத்தவரை அதில் ஈடுபடுவதற்கு விருப்பம் வேண்டும்; அதற்கு அதிகமான நேரம் செலவிட நேரிடலாம்; குடும்பத்தை பற்றிய அக்கறை குறைந்து விடும். இது போன்ற பல விஷயங்கள் நம்மை கர்ம மார்க்கத்தில் ஈடுபட முடியாமல் தடுத்து விடலாம்.
எஞ்சி இருப்பது தியான மார்க்கம். குடும்பத்தின் மீது அதிக பாசம் உள்ள மனிதர்களால் 'பிரத்யாஹாரத்தை' அவ்வளவு எளிதாக மேற்கொள்ள முடியாது. பிரத்யாஹாரத்தை சரியாக கடைப்பிடிக்க முடியாதபோது, தியானம் கைகூடுவது கடினமாகி விடும்.
ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் அகத்தாய்வில் வெற்றி காண்பது எளிது தான். எல்லாம் சரி ..
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு ஏன் முக்கியம்?
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 10
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு ஏன் முக்கியம்?
அகத்தாய்வு ஏன் முக்கியம் என்று பார்ப்பதற்கு முன்னர், யாரெல்லாம் அகத்தாய்வு செய்ய வேண்டும்; அகத்தாய்வு செய்யும் முறையில் ஏதாவது மாற்றங்கள் உண்டா என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
தியான மார்க்கத்தை மேற்கொள்பவர்களுக்கு அகத்தாய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பிரத்யாஹாரம் சரியாக அமைந்து விட்டால், அவர்கள் "தாரணையை" பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். தாரணையை ஒழுங்காக பயிற்சி செய்தால் மனதில் உள்ள சுமைகள் ஒவ்வொன்றாக மறைந்து 'சலனமற்ற மனதை' அடைந்து விடலாம்.
கர்ம மார்க்கத்தில் அகத்தாய்வு பெரும்பாலும் பிற மனிதர்களைப் பற்றியதாக இருக்கும். பொது வாழ்க்கையில் ஈடுபடும் போது பல விதமான விமர்சனங்களை காண நேரிடும். அவை உள்ளுக்குள் பிற மனிதர்களைப் பற்றிய அகத்தாய்வில் ஈடுபட வைத்து விடும்.
ஞான மார்க்கத்தில் அகத்தாய்வு என்பது தத்துவங்களின் பின்னே மறைந்திருக்கும் மெய்ப்பொருளை அறிந்து கொள்வதுதான். அதற்கான முயற்சியில் வெற்றிபெறும் பொழுது, சலனமற்ற மனம் தானே வந்து விடும்.
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு என்பது மனதில் தேங்கியிருக்கும் தேவையில்லாத குப்பைகளை பற்றியதாக இருக்க வேண்டும். அதற்கான செயல் முறை என்னென்ன!!??
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 11
இரயிலில் பயணம் செய்பவர்கள் இரயில் பெட்டிகளில் இந்த வாசகத்தை கவனித்திருக்கலாம்:-
"Less luggage, more comfort;
make the journey pleasant"
(குறைவான சுமைகள் .. இனிமையான பயணம்)
இந்த வாசகம் மனதிற்கும் பொருந்தும். மனதில் பாரம் குறையக் குறைய, உள்ளுக்குள் அமைதி பெருகுவதை காணலாம்.
மனதில் உள்ள பாரங்களைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு அகத்தாய்வு என்பது அகத்தை பற்றிய ஆய்வுதான்; 'அகத்தில் உள்ள குப்பைகளை எப்படி அகற்றுவது' என்று சிந்திப்பதுதான். அதற்கு தேவை "தனிமை"
வயதான காலத்தில் நாமே தனிமையில் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருந்தாலும் மனதளவில் தனித்திருக்க பழக வேண்டும்.
நமக்கு அதன் அவசியம் பற்றி தெரியவில்லை. அதனால்தான் பிள்ளைகளோ, மற்றவர்களோ நம்மை ஒதுக்கி வைக்கும் போது, தேவையில்லாமல் புலம்பித் தவிக்கிறோம். உண்மையில் நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், அகத்தை ஆய்வு செய்ய அவர்கள் நமக்கு நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 12
பக்தி மார்க்கத்தில் பயணம் செய்பவர்கள் "அகத்தை ஆய்வு செய்வது" அவசியமா என்றால், அவசியம் இல்லைதான்.
மனம் அமைதி பெற இறைவனிடம் சரணடைந்தால் அதுவே போதுமானது. பொறுப்பை அவனிடம் கொடுத்துவிட்டு விருப்பு, வெறுப்பு இன்றி நமது வேலைகளை கவனித்து வரலாம். அதனால் ஏற்படும் விளைவுகளை "அவன்" தரும் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மட்டும் வேண்டும். அத்தகைய பக்குவம் வந்து விட்டால், மனதில் அமைதி தானே வந்து விடும்.
ஆனால், அஹங்காரத்தால் நிறைந்த மனம் சரணடைய எளிதில் இடம் தராது. அதன் காரணமாகவே தனிமையில் இருந்து அகத்தை ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அகத்தை எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு முன் அடிப்படையான சில விஷயங்களில் நாம் தெளிவான முடிவுக்கு வரவேண்டும். அதில் நிச்சயமற்ற தன்மை எதுவும் இருக்கக்கூடாது.
அதற்குப் பின்னர் நாம் செய்ய வேண்டியது எளிமையான பயிற்சி மட்டும்தான்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 13
'பயிற்சி' என்பது நாம் செய்ய வேண்டியதைக் குறிக்கிறது.
'முயற்சி' என்பது நாம் முறையாக எந்தவித தொய்வுமின்றி பயிற்சி செய்வதற்கு நம்மை தயார் படுத்துவதை குறிக்கிறது.
முயற்சி மட்டும் போதாது; கூடவே பயிற்சி செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.
முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்:-
1. வயதான காலத்தில் "தனிமை" என்பது சாபமல்ல; அது ஒரு வரம். தன்னைப் பற்றி சிந்திக்க காலம் அளித்த வரம்.
2. பண்டைய காலத்தை விட இப்போது மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது. எனவே பயிற்சி செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது.
3. பத்து நிமிடம் அமைதியாக இருந்து மனதில் என்னென்ன ஓடுகிறது என்று கவனியுங்கள்; ஏதேதோ நினைவுகள் வரும்; எத்தனை நினைவுகள் என்று உத்தேசமாக கணக்கிடுங்கள். அதில் இறைவனைப் பற்றிய நினைவு இருக்கிறதா என்று பாருங்கள். அந்த பத்து நிமிட நேரத்தில் ஏதேதோ நினைவுகள் வந்தன; ஆனால், இறைவனைப் பற்றிய நினைவு மட்டும் வரவில்லை என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 14
4. இறைவனைப் பற்றிய நினைவு மட்டும் வரவில்லை என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
ஆழ்மனத்தில் என்னவெல்லாமோ தங்கி இருக்கிறது; இறைவனைப் பற்றிய நினைப்பு மட்டும் இல்லை என்றாகிறது.
நாம் தினந்தோறும் கடவுளை வழிபடுகிறோம்; இருந்தும் ஆழ்மனத்தில் இறைவனைப் பற்றிய நினைப்பு மட்டும் பதியவில்லை என்றால், அது தவறுதானே!?
இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார் .. "தாய் சமையல் வேலையில் இருந்தாலும் அவளது கவனம் எப்போதும் தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையின் மீதே இருக்கும்". அதேபோல் நாம் எந்த வேலையில் இருந்தாலும், ஆழ்மனம் இறை நினைப்பிலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமது மனம் எந்த நிலையிலும் வேதனைப் படாமல் இருக்கும்.
பட்டினத்தார் திரைப் படத்திலிருந்து சில பாடல் வரிகள்:-
"கண்ணிருந்தும் குருடாய்
இருந்து விட்டேன் - நான்
காலமெல்லாம் வீணே
கழித்து விட்டேன்".
"பொன்பொருள் சதமென்று
பூமியிலே அலைந்து
பொய்யை மெய்யென்று
நம்பி விட்டேன்
உன்மலர் பாதாரம்
மறந்து விட்டேன் - ஐயா
உண்மையை இன்றுதான்
உணர்ந்து கொண்டேன்".
இந்த வரிகளை எப்படி புரிந்து கொள்வது!?
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 15
பொன்னும், பொருளும் நிரந்தரம் என்று எண்ணி அவற்றைப் பெருக்குவதிலேயே எனது வாழ்நாளை கழித்து விட்டேனே; உன் திருவடிகளை மறந்து விட்டேனே எனப் பட்டினத்தார் புலம்புகிறார். இந்தப் புலம்பல் எல்லாருக்கும் பொருந்துமா?
மனிதன் தனது வசதியைப் பெருக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அதனை அனுபவிக்கவும் பாடு படுவதில் எந்தவித தவறும் இல்லை.
ஆனால், வயதான காலத்தில் தனது மனதில் உள்ள பாரங்களை எல்லாம் உதறித் தள்ளி, இறை நினைப்பு மட்டும் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமென்றால், "சஞ்சித கர்மாவில்" பாரம் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், நம்மிடம் அதைப் பற்றிய சிந்தனை இருக்கிறதா?
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 16
5. ஆகாமியம், பிராரப்தம்,
சஞ்சிதம் என மூன்று கர்மாக்களை சான்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் ஆகாமியம் மற்றும் சஞ்சிதம் இரண்டும் "வங்கியில் மாத ஆரம்பத்திலும் மற்றும் மாத இறுதியிலும் உள்ள கையிருப்பு" போன்றவை.
வங்கியில் உள்ள கையிருப்பு ஒருவனது சேமிப்பில் உள்ள பணமென்றால், ஆகாமியம் மற்றும் சஞ்சிதம் ஆகிய இரண்டிலும் குவிக்கப் பட்டிருப்பது ஆழ்மனப் பதிவுகளே. இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம்!?
வங்கியில் மாத இறுதியில் பணத்தின் சேமிப்பு அதிகரிக்க பாடுபடுகிறோம்; சஞ்சித நிலையில் ஆழ்மனப் பதிவுகளின் எண்ணிக்கையும், அவை ஏற்படுத்தும் அழுத்தமும் குறைவதற்காக பாடுபட வேண்டும். ஆனால், சஞ்சித நிலையை அடைவதற்குள் ஆழ்மனப் பதிவுகளின் எண்ணிக்கையைக் குறைக்க பாடுபடுகிறோமா?
ஆழ்மனப் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே "சலனமற்ற மனம்" என்றால் என்ன என்பது தெரிய வரும்.
எனவே தனிமையில் இருக்க அதிக நேரம் கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்தி ஆழ்மனப் பதிவுகளைக் குறைக்க முயற்சி செய்யலாமே!?
இனி, நாம் செய்ய வேண்டிய பயிற்சிகளை பார்ப்போம்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 17
நாம் செய்ய வேண்டிய ஒரு சில பயிற்சிகளைப் பற்றி பார்ப்போம். இதற்காக நடைமுறையில் உள்ள எந்த பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டியதில்லை.
தவிர, இந்த பயிற்சிகள் அனைத்தும் நாமே, எவ்வித துணையுமின்றி, செய்யக் கூடியதுதான்; குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் கிடையாது.
பயிற்சி 1:- தெருவில் ஏதேனும் ஊர்வலம் போனால் வேடிக்கை பார்ப்போமல்லவா? அதைப் போன்று அமைதியாக அமர்ந்து கொண்டு, ஆழ்மனதில் ஓடும் நினைவலைகளை வேடிக்கை பார்க்க வேண்டும்; எந்தக் காரணம் கொண்டும் அவைகளோடு தொடர்ந்து பயணம் செய்யக்கூடாது.
அவற்றை வெறுமனே வேடிக்கை பார்க்கிறோம்; மற்றபடி அதனுடன் பயணிக்க வில்லை என்றால், நாளடைவில் பல பதிவுகள் ஆழ்மனதிலிருந்து மறைந்து விடும்.
இந்தப் பதிவுகள் பெரும்பாலும் உணர்ச்சியின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட பதிவுகளாக இருக்கும்.
(Impressions recorded out of emotional reactions or inner resistance to the incidents one had met)
ஆழ்மனப் பதிவுகள் குறையக் குறைய, மனதிலும் பாரம் குறைவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 18
பயிற்சி 2:- வாலிபப் பருவத்தில் நமக்கு நிறைய கனவுகள் (இச்சைகள்) இருந்திருக்கும்.
எதை எதையோ அடைய விரும்பியிருப்போம்; எதை எதையோ சாதிக்க விரும்பியிருப்போம். பலவற்றில் வெற்றியும் கண்டிருப்போம்.
அதே சமயம், நிறைவேறாத இச்சைகள் மனதை நெருடிக் கொண்டிருக்கும். இப்போது அவற்றைப் பற்றி நிதானமாக சிந்திக்க வேண்டும்.
வயதான காரணத்தினால் நமது 'தன்முனைப்பு' குறைந்திருக்கலாம். தன்முனைப்பு குறைந்து விட்டால் செயலில் தீவிரம் காட்ட முடியாது. அப்படியானால் செயல் மூலமாக நிறைவேற்றக் கூடிய ஆசைகளை மறந்து விடவேண்டும்.
நிறைவேற்றக் கூடிய ஆசையாக இருந்தாலும், அது தேவைதானா என சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவை இல்லையெனில் அதனையும் மறந்துவிடவேண்டும்.
மொத்தத்தில் நிறைவேறாத மற்றும் நிறைவேற்றத் துடிக்கும் ஆசை என எதுவும் ஆழ்மனதில் இருக்கக்கூடாது.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 19
பயிற்சி 3:- இந்தப் பயிற்சி செய்வதற்கு முன், இதனை ஏன் செய்ய வேண்டும் என்ற புரிதல் மிகவும் அவசியம்.
பயிற்சி மிகவும் எளிதானதுதான். ஆனால், சரியான புரிதல் இல்லையென்றால், இந்தப் பயிற்சியை செய்ய மனம் ஒத்துழைக்காது.
இந்தப் பதிவில் சொல்லப்படும் கருத்துக்கள் உங்களைக் காயப்படுத்துவது போல் தோன்றலாம். அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
முதல் பயிற்சி உணர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பதிவுகள் பற்றியது. இரண்டாவது பயிற்சி நிறைவேறாத ஆசைகள் பற்றியது.
இனி நாம் காணப்போவது நாம் ஆசையுடன் பற்றி இறுகப் பிடித்து வைத்திருக்கும் ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம், பாசம் போன்றவைகள் சம்பந்தப் பட்டது. எனவே சரியான புரிதல் இன்றி பயிற்சியை மேற்கொள்ள முடியாது.
இது ஒரு நீள் பதிவு. பொறுமையாக கடந்து செல்வோம்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 20
பயிற்சி 3.1:-
(Success in life is measured by the tranquility of the mind ..
Swami Chinmayananda)
வாழ்க்கையில் வெற்றி என்பது ஒரு மனிதனின் "சலனமில்லாத மனதைப் பொறுத்தது" என்கின்றனர் சான்றோர்கள்.
"சலனமில்லாத மனதை" ஒரு மனிதன் அடைந்து விட்டான் என்பதற்கு என்ன அடையாளம்?
1. ஆழ்மனதில் எந்தவிதப் பதிவுகளும் இருக்கக்கூடாது.
2. ஆழ்மனதில் பதிவுகள் இருந்தாலும், அவற்றால் அந்த மனிதனுக்கு எந்தவித சலனத்தையும் ஏற்படுத்த முடியாது என்ற நிலையில் இருக்க வேண்டும்.
3. அவனது உணர்வு மனம் (conscious mind) புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். (integrated mind)
4. எந்த சூழ்நிலையிலும் அவனால் "அகத்தாய்வை" (விசாரம்) எளிதாக மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருக்க வேண்டும்.
மனதில் சலனங்கள் இருந்தால், சாதாரண மனிதனால் அகத்தாய்வில் ஈடுபடுவது கடினமாக இருக்கும்.
அப்படியானால், ஆழ்மனதில் பதிவுகள் இருந்தால் அகத்தாய்வில் கவனம் செலுத்த முடியாதா?
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 21
பயிற்சி 3.2:-
'அகத்தாய்வு' என்றால் என்ன? தனக்குள்ளேயே கேள்விகள் கேட்டு, தனுக்குள்ளேயே விடைகளைக் தேடுவதை 'அகத்தாய்வு' என்று சொல்லலாம். இதனை "விசாரம்" என்று சொல்வார்கள்.
புலன்களின் உதவியின்றி இதனை செய்ய வேண்டும். இந்த முயற்சியில் இரண்டு விதத்தில் விடை கிடைக்கும்:-
1. விவேகத்துடன் கூடிய ஆய்வு. இதனை "நேரடியாக புலன்களின் உதவியின்றி அறிந்து கொள்ளுதல்" என்பார்கள்.
2. நாம் எவ்வளவுதான் முயன்றாலும் நமது கேள்விகளுக்கான விடையை நம்மால் அறிய முடியாமல் போகலாம். ஆனால், விடையைத் தேடும் தவிப்பு நம்மிடம் இருந்தால், என்றாவது ஒருநாள் "உள்ளிருந்து!!" விடை கிடைக்கும். ஆக, விடை கிடைக்க வேண்டும் என்ற தவிப்பும், விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தால் கண்டிப்பாக நமக்கான விடை கிடைக்கும்.
சலனங்கள் நிறைந்த மனம் உடைய மனிதனால், இந்த பயிற்சியை மேற்கொள்ள முடியாது.
இதற்கான மாற்று வழி என்ன?
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 22
பயிற்சி 3.3:-
'அகத்தாய்வு' செய்வதற்கு இரண்டு மாற்று வழிகள் உள்ளன:-
1. ஊகத்தின் மூலம் உண்மையைப் புரிந்து கொள்வது.
2. சான்றோர்கள் வாய்மொழி கேட்டு அவர்கள் கூறும் கருத்துக்களை அகத்தாய்வு செய்வது.
இவற்றில் ஊகத்தின் மூலம் சிந்தித்து முடிவு எடுக்கும்போது, தவறான முடிவு எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
எனவே சான்றோரின் வாய்மொழி அறிவுரைகளைக் கேட்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு அகத்தாய்வு செய்யும்போது அது நல்ல பலனைத் தர வாய்ப்பு உண்டு. ஆனால், சான்றோர்களைக் கண்டு பிடிப்பது கடினமான ஒன்று.
எல்லாவற்றிலும் மேலான ஒரு வழிதான் "அறநூல்களை படித்து" அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை சிந்தித்துப் பார்ப்பது. இந்த வழி நல்ல பலனைத் தரும்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 23
பயிற்சி 3.4:-
இளமைப் பருவத்தில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துகிறோம். அதில் தவறேதும் இல்லை.
முதுமை என்று வந்துவிட்டால் நமது கவனம் முழுவதும் "மன நிம்மதி" அடைவது எப்படி என்பதிலேயே இருக்க வேண்டும். ஆனால் நாமோ பொருளைத் தேடி ஓடுகிறோம்; பொருளைத் தேடி ஓட முடியவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் புலம்பித் தவிக்கிறோம். மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைக்க வேண்டியது அவசியம் என்ற நினைப்பே நமக்கு வருவதில்லை.
நம்மால் ஆழ்ந்து சிந்திக்க முடியாமல் போகலாம். ஆனால், சிந்திக்கவே தெரியாது என்று சொல்ல முடியுமா?
முன்னோர்கள் சொன்ன வாழ்வியல் தத்துவங்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாலே போதும்; 'தனிமையில் வாடுகிறேன்' என்று சொல்லவே மாட்டோம்.
இரண்டு உதாரணங்கள்..
"என்னுடைய வீடு" என்று சொன்னால், வீடு வேறு நான் வேறு என்றாகிறது. அத்துடன் "நான்" உரிமையாளன், "வீடு" என்னுடைய உடமைப் பொருள் என்றாகிறது.
"என்னுடைய உடம்பு", "என்னுடைய மனம்",
"என்னுடைய புத்தி" என்று சொல்லும்போது, உடல், மனம், புத்தியில் இருந்து நான் வேறானவன் என்பது புரிகிறது. அப்படியானால் "நான்" என்பது 'எதை' அல்லது 'யாரை' குறிக்கிறது!?
தவிர "என்னுடைய உடம்பு" என்று சொல்வதைப் போன்று "என்னுடைய ஆன்மா" என்று சொல்ல முடியுமா? ஏனெனில், "ஆன்மா" நம்முடைய உடமைப் பொருள் இல்லையே!! அப்படியானால் "ஆன்மா" என்பது என்ன? நம் உடலில் அது ஏன் இருக்கிறது? அதன் தேவைதான் என்ன?
சற்று சிந்தியுங்கள்!!??
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 24
பயிற்சி 3.5:-
நம் உள்ளிருக்கும் "ஆன்மாவின்" காரணமாகத்தான் நம்மால் இயங்க முடிகிறது. அதனை இறைசக்தி எனவும் சொல்வதுண்டு. கடவுளை "பூரணம்" என்றும், ஆன்மாவை "பூரணத்திலிருந்து வந்த பூரணம்" என்றும் சொல்வார்கள்.
திருமூலர் இவ்வாறு கூறுகிறார்..
"சீவன் எனச் சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே" ..
திருமந்திரம் 2017
அவர் "சீவன்" என்று எதைக் குறிப்பிடுகிறாரோ, அதைத்தான் நாம் ஆன்மா என்று குறிப்பிடுகிறோம்.
அந்த சக்தி புருவ மத்தியில் ஜோதி வடிவில் இருப்பதாக சித்தர்கள் சொல்கிறார்கள்.
"உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே”
யாரேனும் சிறியதாக ஒரு உதவி செய்தால் கூட நாம் நன்றி எனச் சொல்கிறோம். ஆனால், நமது வாழ்நாள் முழுவதும் நாம் இயங்க சக்தி தரும் இறையருளை என்றேனும் நினைத்தோமா?
"நித்தம் விளக்கெரிந்தும்
நினைவிலது இல்லையடி"
எதனால் அதைப்பற்றிய நினைவு நமக்கு இருப்பதில்லை?
"சித்தம் கலங்கியதால்
சிந்தனையும் போனதடி"
ஆழ்மனப் பதிவுகள் பாசிபோல சித்தத்தின் மீது படிந்து விட்டதால், நம்மால்
அதைப் பற்றி சிந்திக்க முடிவதில்லை. விளைவு!?
"அத்தன் இருப்பிடத்தை
ஆராயத் தெரியாமல்
பெத்தமனம் பித்தாகப்
புலம்பித் தவிக்குதடி"
வயதான காலத்திலாவது ஆன்மாவைப் பற்றி சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்; ஆழ்மனதில் உள்ள சுமைகள் மறைந்து விடும்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை - அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு"
.. திருவள்ளுவர்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 25
பயிற்சி 3.6:-
ஒருமுறை அன்பர் ஒருவர் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் "நாங்களெல்லாம் சுயநலவாதிகளாக இருக்கிறோம். உங்களைப் போல் இருக்க முடியவில்லையே" என வருத்தப்பட்டாராம்.
அதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் சிரித்துக் கொண்டே இவ்வாறு பதிலளித்தார் .. "நீங்கள் தப்பாக கூறுகிறீர்கள். நீங்கள் சுயநலவாதி அல்ல; நான்தான் சுயநலவாதியாக இருக்கிறேன்.
நீங்கள் குடும்பத்திற்காக உழைக்கிறீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப் படுகிறீர்கள்.
மற்றபடி உங்களைப் பற்றி நினைப்பதே இல்லை.
நானோ பிறரைப் பற்றி கவலைப்
படுவதேயில்லை. என் கவலையெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றியதுதான். ஆகவே நான்தான் சுயநலவாதி".
..... ..... ..... .....
ஒருவகையில் அவர் கூறுவது சரிதானே!
நாம் தனிமையை விரும்பி ஏற்றோமா அல்லது தனிமையை நோக்கி பிறரால் தள்ளப்பட்டோமா என்பதல்ல பிரச்சினை.
இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்று சுயநலம் பிடித்த மனிதராக மாற என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பிரச்சினை.
நீங்கள் செய்ய வேண்டியது...
1. "தனிமை" ஒரு வரம் என நம்புங்கள்.
2. தனிமையில் இருக்க நேர்ந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
3. நமது அஹங்காரம் (ஆணவ மலம்) குறையக் குறைய, மன அமைதி 'உள்ளிருந்து' வெளிப்படும் என்பதை நம்புங்கள்.
4. "மன அமைதிதான்" பிறப்பறுக்கும் பாதையின் நுழைவாயில் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
5. தனிமையில் அமர்ந்து நமக்குள்ளேயே வாழ்க்கையில் நாம் காணும் புதிர்களுக்கான விடையைத்
தேட முயற்சி செய்யுங்கள்.
மேலே சொல்லியவற்றை நீங்கள் கடைப்பிடித்தால், இரண்டு எளிய பயிற்சிகளை மட்டும் செய்தால் போதும். மன அமைதி தானே வெளிப்படும். அது உள்ளேதான் இருக்கிறது; ஆழ்மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைத்தால் போதும்; மனம் அமைதியாகி விடும்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 26
முதலாவது பயிற்சியினை தினந்தோறும் தவறாமல் செய்துவர வேண்டும்; சிறிய பயிற்சிதான்.
அறநெறி கூறும் மறைநூல்களை தினந்தோறும் படிக்க வேண்டும். படித்து அவை சொல்லும் கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் மெய்ப்பொருளை அறிய முயற்சி செய்ய வேண்டும். இது கொஞ்சம் கடினமான காரியமாகத் தோன்றலாம்.
அப்படியானால், அதற்குப் பதிலாக தினம் ஒரு திருக்குறளைப் படியுங்கள். அதில் அறநெறிகளை வலியுறுத்தும் குறட்பாக்கள் நிறைய உள்ளன. பல பாடல்களை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். பின் அந்தப் பாடல் சொல்லும் கருத்தினை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் ஒப்பிட்டு அகத்தாய்வு செய்யுங்கள்.
ஒரு உதாரணம் ..
"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது"
.. திருக்குறள் -- பாடல் 7
பாடலைப் படித்தவுடன் புரிந்து விட்டது என்று முடித்து விடாதீர்கள். அதனை அகத்தாய்வு செய்யுங்கள்.
அகத்தாய்வு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 27
"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது"
இந்தப் பாடலை மூன்று பகுதிகளாகப் பிரித்து, அவற்றை எப்படி அகத்தாய்வு செய்வது என்று பார்ப்போம்.
..... ..... ..... ..... .....
"தனக்குவமை இல்லாதான்"
நான் சிவனை வணங்குகிறேன். எனவே சிவன்தான் "தனக்குவமை இல்லாதவன்" என்று நான் கூறலாம்.
வேறு ஒருவருக்கு "பெருமாள்" தனக்குவமை இல்லாதவராகத் தோன்றலாம்.
யார் யாருக்கு எது எது இஷ்ட தெய்வமோ, அதைப் பொறுத்து "தனக்குவமை இல்லாதவன்" மாறுபடும்.
நம்மில் பலர் பல தெய்வங்களை வணங்குவதுண்டு. அவற்றில் ஏதாவது ஒரு தெய்வத்தை "தனக்குவமை இல்லாதவனாக" தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருமுறை ஒரு அன்பரிடம் அவரது இஷ்ட தெய்வம் எது என்று கேட்டேன். அதற்கு அவர் "ஹனுமான்" எனப் பதிலளித்தார். "ஹனுமான்" கடவுள் அல்ல; கடவுளின் அவதாரமுமல்ல. இருப்பினும் அவரைப் பொறுத்தவரை "ஹனுமான்தான்" தனக்குவமை இல்லாதவன்.
பல மனிதர்கள் கிராம தேவதைகளை வணங்குவார்கள். அவர்களுக்கு அவைதான் "தனக்குவமை இல்லாதவர்கள்".
ஆக, "தனக்குவமை இல்லாதவன்" என்பது, நமது மனம் யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறது என்பதைப் பொறுத்தது.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 28
"தாள்சேர்ந்தார்க்கல்லால்"
தனக்குவமை இல்லாதவன் திருவடிகளை சேராதவரை (மனக்கவலைகளை மாற்றுதல் அரிது என்கிறார் திருவள்ளுவர்)
திருவடிகளை சேருதல் என்றால் என்ன? உடல்ரீதியாக சேர முடியாது; மனதால் "தனக்குவமை இல்லாதவன் திருவடிகளை"
பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
வெகு தொலைவில் இருக்கும் நெருங்கிய சொந்தங்களின் நினைவாகவே இருக்கிறோம் அல்லவா? அதைப் போன்று தனக்குவமை இல்லாதவனின் நினைவும் இருக்க வேண்டும்.
வள்ளுவர் "சேர்ந்தார்" என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியிருக்கிறார். அந்த வார்த்தையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் கோவிலுக்கு செல்கிறோம்; கடவுளை வணங்குகிறோம்; பின் வீட்டிற்கு வந்து விடுகிறோம்.
"சேர்ந்தார்" என்றால், அது சேர வேண்டிய இடத்தைக் குறிக்கிறது. சேர வேண்டிய இடத்தைச் சேர்ந்தபின் அங்கிருந்து திரும்ப வேண்டியதில்லை.
தனக்குவமை இல்லாதவனை தொடர்ந்து மனதால் பற்றிக் கொண்டிருந்தால் (அவன் நீங்கள் தேர்ந்தெடுத்த சாதாரண மனிதனாக இருந்தாலும்), என்றேனும் ஒருநாள் "அவனோடு" மனதளவில் சேர்ந்து விடுவீர்கள்; அதாவது "அவனது" நினைவு உங்கள் ஆழ்மனதில் நிரந்தரமாக தங்கி விடும். அதன்பின் "அவன்" உங்களை விட்டு பிரிவதே இல்லை. அதனால்தான் மாணிக்கவாசகர் "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி" எனக் கூறுகிறார்.
உங்களாலும் அவரைப் போன்று கூற முடியும். முயற்சி செய்யுங்கள்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 29
"மனக்கவலை மாற்றல் அரிது"
இறைவனது திருவடியைச் சேர்ந்தால் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று திருவள்ளுவர் மறைமுகமாகக் கூறுகிறார்.
அது எப்படி நடக்கும் என்பதை கொஞ்சம் ஆராய்வோம்.
அன்பு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், எந்த ஒன்றின் மீது பற்று வைத்தாலும் அது ஆசையாக மாறி விடும். பின்னர் அதுவே பாசமாகவும், பேராசையாகவும் மாறி விடுகிறது.
நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டுதான் வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
சான்றோர்கள் வட்டத்தை உடைத்து விடுகிறார்கள்;
பொது நலத்தில் நாட்டம் உள்ளவர்கள் தங்கள் வட்டத்தை விரிவு படுத்துகிறார்கள்; மற்றவர்கள் பாசம், பேராசை போன்ற காரணங்களினால் தங்களது வட்டத்தை சுருக்கி விடுகிறார்கள் .. அதன் காரணமாக அவர்களிடம் உள்ள அன்பு தூய்மையற்ற அன்பாக மாறிவிடுகிறது
தூய்மையற்ற அன்பு துயரங்களை சந்திப்பது/விளைவிப்பது என்பது இயல்பான ஒன்றுதான். இந்த கருத்து பலரால் ஏற்றுக் கொள்ள முடியாததாக தோன்றலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள் ..
வட்டம் சுருங்கியதன் காரணமாகத்தானே சமூகத்தில் தீண்டாமை, சாதியின் பெயரால் உண்டாகும் வன்முறைகள் போன்றவைகள் நடைபெறுகின்றின.
வள்ளுவர் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் ..." என்று கூறுகிறார். அதன் பொருள்..
நம்மைச் சுற்றியுள்ள வட்டம் விரிவடைய வேண்டும் என்பதுதான். பின்பு அது உடைபட வேண்டும். அதற்கு ஒரே வழி ஆழ்மனதில் உள்ள சுமைகளை (பதிவுகளை) நீக்குவதுதான்
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 30
இறைவனது திருவடியைச் சேர்ந்தால் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று திருவள்ளுவர் இந்தக் குறளில் மறைமுகமாக கூறுகிறார். அது எப்படி என்று பார்ப்போம்.
பொதுவான விதி ஒன்று உண்டு. எந்த ஒன்றின் மீது நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தாலும், மனம் அந்த ஒன்றின் மீது ஒன்றி விடும்.
(Mind will succumb to the thing to which it is repeatedly diverted)
நாம் வணங்கும் ஒன்றின் மீது தொடர்ந்து நமது கவனத்தை செலுத்தி வந்தால், நமது மனம் அதன் திருவடிகளை பற்றிக் கொள்ளும். பின் அதன் ஞாபகமாகவே மனம் இருப்பின், பற்றுதல் காரணமாக நம்முள் இருந்த மற்ற பதிவுகள் அனைத்தும் வெறும் நினைவலைகளாக மாறி விடும்.
நம்மிடம் உள்ள அன்பும் மாசு இல்லாத தூய அன்பாக மாறி விடும். இதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு குறள் பற்றி சிந்திப்போம்.
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"
'வேண்டுதல் வேண்டாமை என எதுவுமே இல்லாத இறைவனின் திருவடியைப் சேர்ந்தவற்கு எப்பொழுதும் துன்பங்களே கிடையாது' என வள்ளுவர் கூறுகிறார்.
வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் கலந்துதானே இருக்கும். ஆனால், வள்ளுவர் 'துன்பங்களே கிடையாது' என்று கூறுவது எப்படி சரியாகும்?
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 31
முதலில் நாம் பார்த்த குறளும், இப்போது நாம் பார்க்கும் குறளும் ஒரேவிதமான பொருளைத் தருவதாகத் தோன்றினாலும், திருவள்ளுவர் ஒரு நுட்பமான குறிப்பை இந்த குறளில் குறிப்பிடுகிறார்.
முதலாவது குறளில் "தனக்குவமை இல்லாதவனின் திருவடியைச் சேர்ந்தால் மனதில் கவலைகள் இருக்காது" என்கிறார். அதாவது எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயமோ, கவலையோ இருக்காது என்கிறார்.
மனதில் ஆசைகள் இல்லையென்றால், அந்த மனிதனிடம் பயமும், கவலையும் இருக்காது என்பது இயற்கை. ஆனாலும், நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டால் அது நம்மை துன்பத்தில் ஆழ்த்தி விடும்.
இரண்டாவது குறளில் வரும்
"அடி சேர்ந்தார்க்கு" என்ற வார்த்தைகளை எடுத்துவிட்டு மீதி வார்த்தைகளைக் கவனியுங்கள்.
"வேண்டுதல், வேண்டாமை இலான் ..... யாண்டும் இடும்பை இல"
இறைவன் திருவடியை மனதால் பற்றிக் கொள்கிறோம்; மனதில் கவலைகள் இல்லை. மனதில் ஆசைகள் இல்லாமல் இருந்தாலும் சிலது நடக்கக் கூடாது என நினைப்போம். எனவே நாம் விரும்பாதது நடந்தால் மனதில் துயரம் தொற்றிக் கொள்வது இயற்கை.
வள்ளுவர் கூறுகிறார் "வேண்டும் என்ற ஆசைகளை விட்டு விடுவதைப் போன்று, வேண்டாம் என்கிற நினைப்பையும் விட்டு விட்டால் எதிர்காலத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் துன்பத்தை தராது".
இதை எப்படி புரிந்து கொள்வது?
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 32
நாம் எந்த ஒன்றின் மீதும் தொடர்ந்து நமது கவனத்தை செலுத்தி வந்தால், பற்றின் காரணமாக ஏற்கனவே பதிவாகியிருந்த மற்ற பதிவுகள் அனைத்தும் வெறும் நினைவலைகளாக மாறி விடும். தொட்டி நல்ல தண்ணீரால் நிரப்பப் படும்போது, அதில் உள்ள உப்புநீர் வெளியேறுவதைப் போன்று, கவனம் "தனக்குவமை இல்லாதவன்" மீது நிலைபெறும் பொழுது, பாசம், பேராசை போன்றவைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறி வெறும் நினைவலைகளாக மாறிவிடும்.
பாசம் இல்லையென்றால் உறவுகளை விட்டு விலகி விடுவோமோ என ஒரு சந்தேகம் வரலாம். அது போன்ற சந்தேகம் தேவையற்றது.
அப்பொழுதும் உறவுகளிடம் எப்போதும் போலவே நடந்து கொள்வோம். ஆனால் ஒரு வித்தியாசம் உள்ளது.
பற்று உள்ளவன் போலவே பற்றை விட்டவனும் நடந்து கொள்வான். பற்று உள்ளவன் பேரக் குழந்தைகளுடன் விளையாடினால் மனதில் குதூகலம் பொங்கும். குழந்தைகளுடன் விளையாடினால் கூட பற்றை விட்டவனது மனம் குதூகலிக்காது; வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.
பற்றை விடாதவனிடம் physical involvement-ம் mental involvement-ம் இருக்கும்; பற்றை விட்டவனிடம் physical involvement இருக்கும், ஆனால் mental involvement இருக்காது.
இது, புளியங்காய்க்கும், புளியம்பழத்துக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. புளியங்காய் தோட்டுடன் ஒட்டியேயிருக்கும்; புளியம்பழமோ தோட்டுக்குள்
இருந்தாலும் அதனுடன் ஒட்டாமல் விலகியே இருக்கும்.
"..புளியம்பழமும் தோடும்போல்
ஆவதினி யெக்காலம்" என்று புலம்புகிறார் பத்திரகிரியார்.
முறையாகப் பயிற்சி செய்தால் உணர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பதிவுகளும், இச்சை மற்றும் கனவுகள் காரணமாக உருவாகிய பதிவுகளும் மறைந்து விடும்.
அதேபோல் "தனக்குவமை இல்லாதவன்" மீது (அது தனி மனிதர்களாகக்கூட இருக்கலாம்; உங்களைப் பொறுத்தவரை அவர்கள் "தனக்குவமை இல்லாதவர்கள்தான்) நமது பற்று நிலைகொள்ளும் பொழுது, பற்றுதல் காரணமாக முன்னர் ஏற்பட்ட பதிவுகள் அனைத்தும் நினைவலைகளாக மாறிவிடும். அதன்பின் எந்தவொரு நிகழ்வும் நம்மை துன்பத்தில் ஆழ்த்தாது.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 33
முதுமையில் தனிமை என்று வந்துவிட்டால் நேரமே போவதில்லை என வருந்துகிறோம். நேரம் நிறைய இருக்கிறது அல்லவா, அதனைப் பயன்படுத்தி "அகத்தாய்வு" செய்யுங்கள் என்றால், பின் எதற்காக தயங்குகிறோம்?
"விவேகம்", "வைராக்கியம்"
.. இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தத்தையும், அவற்றின் இணைப்பையும் சரியாகப் புரிந்து கொண்டால் நமக்கு "அகத்தாய்வு" செய்வதில் தயக்கம் வராது.
விவேகம் என்றால் பொருட்களின் உண்மைத்தன்மையை சுய சிந்தனை மூலம் பகுத்து அறிவது எனப் பொருள் கொள்ளலாம். முதலில் நமது பழக்க வழக்கங்களை ஆராயக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை 'சுயபரிசோதனை'
(introspection)என்று சொல்லலாம். இதன் வழியாகத்தான் நாம் உணர்ச்சி பதிவுகளையும், இச்சை (கனவு) பதிவுகளையும் வெளியேற்றுகிறோம்.
பற்றுதல் காரணமாக ஏற்பட்ட பதிவுகளை நீக்குவதற்கு, நாம் நமது மனதை 'தனக்குவமை இல்லாதவனை' நோக்கி திருப்ப வேண்டும் என பார்த்தோம். இதனை விவேகம் என்று சொல்ல முடியாது. வெறுமனே மனதை மடைமாற்றம் செய்கிறோம் என்று சொல்லலாம்; அவ்வளவுதான். இதனுடன் கூட விவேகமும் இருந்தால்தான் நமது முயற்சி நல்ல பலனைத் தரும்.
விவேகம் மூலமாக நாம் வெளி உலகின் உண்மை தன்மையை .. அது வெறும் வெற்றிடம் என்பதை .. புரிந்து கொள்கிறோம்.
(Objective knowledge)
இந்தப் புரிதலானது உள் உலகில் பயணம் செய்வதை எளிதாக்கும்; இறுதியான எல்லைக் கோட்டை (மன அமைதி) அடைவதற்கு துணை புரியும்.
(Subjective achievement)
மனிதனுக்கு மனிதன் புரிந்து கொள்ளும் திறமை மாறுபடலாம். நம்மிடம் அந்தத் திறமை குறைவாக உள்ளது என்று எண்ணி சுய சிந்தனையை விட்டுவிடக் கூடாது.
விவேகம் மூலம் நமது
புரிதலின் தன்மை கூடக்கூட
பற்றற்ற தன்மை வளரும். பற்றற்ற தன்மை வளர வளர, புரிந்து கொள்ளும் திறமையும் வலுப்பெறும்.
ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருப்பதால் நாம் விவேகமாக சிந்திப்பதை விட்டுவிடக் கூடாது.
எதை சிந்திப்பது, எப்படி சிந்திப்பது என்பதை நமக்கு கற்றுக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என வள்ளுவர் வழிகாட்டுகிறார்.
(தொடரும்)
நிம்மதியின்மை
"தன்னிலை விளக்கம்"
"பொறுப்புகள் இருக்கும்போதே சரணாகதி முழுமையாக பெறுவதெப்படி?" .. இந்த கேள்வியை ஒரு அன்பர் கேட்டிருந்தார்.
இதற்கான விளக்கம் கொடுப்பது கடினமான ஒன்று. ஏனெனில், "சரணாகதி" என்பது மனதளவில் கடைப்பிடிக்கும் ஒரு பாவனை. அதை எப்படி விளக்குவது? எல்லாருக்கும் ஒரே மாதிரி மனம் இருப்பதில்லையே!?
இருந்தாலும் "புரியவைக்க முடியாத ஒன்றை புரியவைக்க முயற்சிப்பது ஒரு ஆன்மிகவாதியின் கடமையாகும்".
சரணாகதி என்பது ஒரு பாவனை. அதனை பொறுப்புகள் இருக்கும்போதும் கடைப்பிடிக்க முடியும்.
நான் அதை எப்படி கடைப்பிடித்தேன் என்பதை விளக்குகிறேன். அதன் மூலம் சரணாகதி பற்றி ஒரு தெளிவு கிடைக்கும் என நினைக்கிறேன்.
எனது வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:-
1. குடும்ப வாழ்க்கை
2. அலுவலக வாழ்க்கை
3. ஆன்மிக வாழ்க்கை
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை என் தந்தையின் வாழ்க்கை முறையை பின்பற்றினேன். அதாவது தந்தையிடம் சரணாகதி அடைந்து விட்டேன்.
அலுவலக வாழ்க்கையைப் பொறுத்தவரை நான் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அரசியல் தூய்மையை அலுவகத்தில் பின்பற்றினேன். அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் மனதை செம்மை படுத்தின.
அதன் காரணமாக பொது வாழ்க்கையிலும் "கர்ம மார்க்கத்தை" கடைப்பிடிக்க முடிந்தது.
ஆன்மிகத்தை பொறுத்தவரை எனக்கு நிறைய குருமார்கள் உதவினர். திருவள்ளுவர் முதற்கொண்டு சுவாமி சின்மயானந்தர் வரை நிறைய பேர் எனக்கு வழி காட்டினார்கள். ஆனாலும் நான் சரணடைந்தது "பகவத் கீதையிடம்".
நாம் யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறோம் என்பது முக்கியமல்ல. அவர்கள்/அவைகள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கிறோமா என்பதுதான் முக்கியம்!!
என்னதான் விளக்கினாலும், நடைமுறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை கூறினால், கேள்வி கேட்ட அன்பர் 'சரணாகதி' என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
இந்த சம்பவம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது.
எனது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு காரியத்தை செய்யச் சொன்னார். நான் முடியாது என மறுத்து விட்டேன்.
"எல்லாரும் இதனைச் செய்கிறார்கள்; நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்" என்றார்.
நான் அவரிடம் "என் அப்பாவிற்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன்" என்றேன்.
அவர் "உங்கள் அப்பா என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார்?" என்றார்.
நான் "இல்லை; அவர் காலமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது" என்றேன்!?
எனது பதிலைக் கேட்டதும் அவர் மௌனமாகி விட்டார்.
..... ..... ..... ..... ..... ..... .....
சரணாகதி என்றால் என்ன என்று இப்போது புரியும் என நம்புகிறேன்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 34
இரண்டாவதாக நாம் செய்ய வேண்டியது நமக்கான வழிகாட்டியை தேடி, அவரை துணையாக கொண்டு நமது பயணத்தை தொடர வேண்டும். அவர் கூறும் கருத்துக்களை உள்வாங்கி நிதானமாக அவற்றை நமது அனுபவங்களோடு ஒப்பிட்டு 'அகத்தாய்வு' செய்ய வேண்டும்.
அகத்தாய்வு செய்யும் பொழுது நமக்கு சில தெளிவு பிறக்கும். "தெள்ளத் தெளிந்தார்க்கு ..." என்கிறார் திருமூலர்.
தெளிவு பிறந்தால் பற்றற்ற தன்மை வளரும். பற்றற்ற தன்மை வளரும்போது நமது புரிந்து கொள்ளும் திறமை கூடுவதை காணலாம். "விவேகம், வைராக்கியம்" ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து 'மன அமைதியை' நோக்கி நம்மை அழைத்து செல்லும்.
ஆக, நாம் நமக்கான வழிகாட்டியை கண்டுபிடிக்க வேண்டும். திருவள்ளுவர் நமக்கான வழிகாட்டி எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குறள் அதிகாரம் 45-ல், விரிவாகக் கூறுகிறார்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 35
"The company of the wise is the surest remedy to cool down the bosom to a state of peace and happiness when it is in conflagration, fed by desires and hatreds, attachments and yearnings".
.. Swami Chinmayananda.
(Excerpts from the book
"Talks on Sankara's Vivekachoodamani)
திருவள்ளுவர் திருக்குறளில் அதிகாரம் 45-ல் "பெரியவர்களை ஏன் வழித்துணையாகக் கொள்ள வேண்டும்" எனக் கூறுகிறார்.
இந்த அதிகாரத்தில் அவர் நாட்டை ஆளும் அரசனுக்காக பெரியோரின் துணை எவ்வளவு அவசியம் எனக் கூறுகிறார். இருந்தாலும், அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் நமக்கும் பொருந்தும்.
பெரியவர் என்றால் வயதானவர் என்று நினைக்கக் கூடாது. அவர் நம்மைவிட ஆன்மிக சிந்தனையில் தெளிவாக இருப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.
பெரியோரின் துணை எதற்காக வேண்டும்? பொதுவாக மனிதர்கள் இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு, வெற்றி-தோல்வி என இரண்டு முனைகளிலும் வாழ்ந்து வருபவர்கள். அதனால், மனதில் நிம்மதி இன்றி புலம்பித் தவிக்க நேரிடும்.
இந்தப் புலம்பலில் இருந்து விடுபட்டு "மன அமைதியை"
அடைவது எப்படி என்ற வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவிட உறுதுணையாய் இருப்பவர்களைத்தான் "பெரியோர்கள்" என திருவள்ளுவர் கூறுகிறார்.
எனவே, தக்க பெரியார் ஒருவரை கண்டு பிடித்து அவரை வழித்துணையாகக்
கொள்ளுங்கள். உங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்களுக்கு உரிய விடைகளை அவர் தருவார்.
(தொடரும்)
நிம்மதியின்மை
பதிவு 36
மேலே சொன்ன இரண்டு பயிற்சிகளையும் முழு மனதோடு செய்து வந்தால் நிச்சயம் மனதிலுள்ள பாரம் குறைந்து விடும். நீங்களும் "மன அமைதி" என்றால் என்னவென்று புரிந்து கொள்வீர்கள்.
நமக்கு "மன அமைதி" வந்து கொண்டிருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது? அதற்கான அடையாளங்கள்:-
1. Sama .. calmness of the mind .. மனம் கொந்தளிப்பு எதுவும் இன்றி அமைதியாக இருக்கும்.
2. Dama .. self-control .. உணர்ச்சிகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
3. Uparati .. self-withdrawal .. தேவையெனில் மனதை புறவுலகில் சஞ்சரிக்காமல் தடுக்க முடியும்.
4. Titiksa .. forbearance .. சகித்துக்கொள்ளும் தன்மை வளரும்.
5 Sraddha .. the capacity to know the "truth" .. மெய்ப்பொருளை அறிந்து கொள்ளும் ஆர்வமும், திறமையும் கூடி வரும்.
6. Samaadhana .. tranquility .. மனம் சலனமின்றி இருக்கும்.
இதனை "Shad sampatti" என்று சொல்கிறார்கள்.
நாம் அமைதியின்றி தவிப்பதற்கு மூல காரணமாக இருப்பது நம்மிடம் இருக்கும் 'அஹங்காரமே"!? இதை 'ஆணவம்' என்றும் 'அகந்தை' என்றும் சொல்வார்கள்.
அஹங்காரத்தின் தீவிரம் குறையக் குறைய, மனதில் அமைதி வளர்ந்து வரும்.
அஹங்காரம் (அகந்தை) முற்றிலும் அழிந்து விட்டால் என்ன நடக்கும்? அங்குதான் நமது வாழ்க்கையின் எல்லைக்கோடு ஆரம்பமாகிறது.
அது ..
"அகந்தை அழியுமிடம்
ஆண்டவனை அறியுமிடம்"
(முற்றும்)
No comments:
Post a Comment