பதிவு 1
'பாவ மன்னிப்பு' படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் ...
"கருணை பொங்கும் உள்ளம்
- அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்."
மிக சாதாரணமாக தோன்றும் வரிகள். ஆனால், ஆழமான பொருள் நிறைந்த வரிகள்.
இதில் முதல் இரண்டு வரிகளுக்கான விளக்கத்தை தொடரின் முடிவில் தருகிறேன். கடைசி இரண்டு வரிகளை மட்டும் கொஞ்சம் ஆராய்வோம்.
மூன்றாவது வரியில்
"கருணை மறந்தே வாழ்கின்றார்" என்று சொல்கிறார். 'மறந்தே' என்ற வார்த்தைக்கு எந்த மாதிரி பொருள் கொள்வது?
தந்தை தன் குடும்பத்தாருடன் வெளியே கிளம்புகிறார். வீட்டைப் பூட்டிவிட்டு, காருக்கு அருகில் வந்தபின்தான் 'கார் சாவியை' எடுத்துவர மறந்து விட்டது நினைவிற்கு வருகிறது.
'மறந்து விட்டது' என்றால் காருக்கு சாவி இருக்கிறது; ஆனால், வீட்டிலிருந்து அதை எடுத்துவர மறந்து விட்டார் என பொருள் கொள்ளலாம்.
"கருணை மறந்தே வாழ்கின்றார்" என்ற வரியில் உள்ள "மறந்தே" என்ற வார்த்தையை எப்படி புரிந்து கொள்வது?
கருணை என்பது ஒரு பொருளாக இருந்தால், எங்கேயோ மறந்து வைத்து விட்டார் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், அது பொருள் அல்லவே!?
அப்படியானால் இதை எப்படி புரிந்து கொள்வது?
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 2
கருணை என்பது நமது மனதிலிருந்து வெளிப்படும் ஒரு உணர்வு.
'மறந்தே' என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? கருணை என்ற ஒன்று உள்ளது; முறையாக பயிற்சி செய்தால் எந்த மனிதனும் அதை அடைய முடியும்.
"கருணை பொங்கும் உள்ளம்" .. அதை அடைவதுதான் மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், இந்தப் புரிதல்கூட இல்லாமல் வாழும் மனிதன், அடிப்படை உண்மையை மறந்துவிட்டு வேறு எதற்காகவோ கடவுளைத் தேடி அலைகின்றானே என எண்ணி வருந்துகிறார் கவிஞர்.
உண்மையான பக்தன் என்றால் அவன் மனதில் கருணை பொங்கி வழிய வேண்டும். இறைவனிடம் 'சரணாகதி' அடைந்தால் மட்டுமே, உள்ளத்தில் கருணை பொங்கும். ஆனால், நம்மிடம் 'சரணாகதி' பாவனை இல்லையே!? நாம் வேறு பல வேண்டுதல்களை அல்லவா கடவுள் முன் வைக்கிறோம்.
அதற்கு காரணமாக இருப்பது, நமது ஆழ்மனதில் இருக்கும் 'பதிவுகள்தானே'!?
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 3
சென்ற தொடருக்கான பதிவுகள் வெளிவந்த போது, 'ஆழ்மனம்' சம்பந்தமாக சில கேள்விகள் முன்வைக்கப் பட்டன. அவை ...
1. ஆழ்மனத்தில் (sub-concious mind) பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன?
2. அது எவ்வாறு அகங்காரமாக மாறுகிறது?.
3. சூப்பர் கான்சியஸ் மைண்ட் என்று ஒன்று உள்ளதே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?
4. ஆழ்மனது பதிவை (பதிவுகளை) எப்படி நீக்குவது?
இந்தத் தொடரில், ஆழ்மனம் பற்றி மட்டுமே சிந்திக்கப் போகிறோம். ஆழ்மனம் என்பது அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் ஒரு பகுதிதான். இருப்பினும், மனிதன் எதிர்கொள்ளும் எல்லாவித துன்பங்களுக்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஆழ்மனம் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்வோம்.
மனம் என்றால் என்ன?
நமக்கு மூளை என்றால் எது என்று தெரியும். புத்தி என்றாலும் எதுவென்று தெரியும்; மூளையின் ஒரு பகுதிதான் புத்தியாக செயல்படுகிறது என்பதும் தெரியும். ஆனால், மனம் என்றால் என்னவென்று கேட்டால், ஒரே மாதிரியான பதில் கிடைப்பதில்லை.
Mind is the impression of the past experiences .. Swami Chinmayananda
மனம் என்பது புறவுலகில் நாம் சந்திக்கும் அனுபவங்கள் சங்கமிக்கும் இடம். அது மூளையில்தான் நடைபெறுகிறது.
ஆக, மூளையின் ஒரு பகுதி புத்தியாகவும், மற்றொரு பகுதி மனமாகவும் இயங்குகின்றன. மனமும் 'உணர்வு மனம்', 'உணர்வற்ற மனம்' என இரணடு பிரிவுகளாக இயங்குகிறது. உணர்வற்ற மனதைத்தான் நாம் ஆழ்மனம் என்று சொல்கிறோம்.
உணர்வு மனதில் ஏற்படும் பதிவுகள் நீடித்து நிற்பதில்லை; ஆனால், ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை.
இந்த ஆழ்மனப் பதிவுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 4
முதலாவது கேள்வி:-
ஆழ்மனத்தில் (sub-concious mind) பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன?
ஆழ்மனதில் பதிவுகள் எந்தெந்த வழிகளில் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
புறவுலகில் இருந்து வரும் தாக்கங்களை உணர்வு மனம் ஐம்புலன்களின் உதவியுடன் எதிர்கொள்கிறது. அதனால் ஏற்படும் அனுபவத்தை அது ஏற்றுக்கொள்ளலாம்; அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். எது எப்படி இருப்பினும், மனம் எதிர்கொள்ளும் தாக்கம் ஆழ்மனம் வரை சென்றுவிடும். அந்தத் தாக்கத்தை ஆழ்மனம் விரும்பி ஏற்றுக்கொண்டால், அங்கு ஒரு பதிவு நிகழ்ந்து விடும். (உ-ம்) சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்பட பாடலைக் கேட்டேன். அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. குறிப்பிட்ட பாடலை இரண்டொரு தடவைதான் கேட்டிருப்பேன். இருந்தாலும் அந்தப் பாடல் என்னை மிகவும் ஈர்த்ததால் முழு பாடலும் என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அந்தப் பாடலில் இருந்து ஒரு சரணம் ...
".. ஏழடுக்கு மாளிகையில்
இருக்கிற பேர்வழிகள்
எத்தனையோ தப்புத்தண்டா
பண்ணுவாங்க
ஏழை எளியவங்க
இல்லாத காரணத்தால்
ஏதோ சிறு தவறு
பண்ணுவாங்க
இது தெரியும்
அது தெரியாது .."
ஆழ்மனதில் பதிவுகள் நிகழ்வதற்கு இது ஒரு வழி. அடுத்த வழி ...
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 5
வீட்டில் குழந்தை பிறந்தால், அதன் தாய் அதனிடம் அன்பை பொழிகிறாள். அந்த வீட்டின் வேலைக்காரியும் அந்தக் குழந்தையை எடுத்து கொஞ்சுகிறாள். இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?
குழந்தையின் தாய் அன்பை வெளிப்படுத்துவதுடன் அந்தக் குழந்தையின் மீது பற்றும் வைக்கிறாள். (it is only a mental attachment and not any physical attachment). விளைவு .. அன்பாக இருந்த ஒன்று பாசமாக மாறி ஆழ்மனதில் பதிவாகி விடுகிறது.
நாம் எந்த ஒன்றின் மீது பற்று வைத்தாலும் .. அந்த ஒன்று நம்மிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் .. அதன் நினைவு ஆழ்மனதில் பதிவாகி விடுகிறது.
ஒன்றின் மீது பற்று வைத்தால் முதலில் அது ஆசையாகவும், பின்னர் அது பாசமாகவோ, பேராசையாகவோ ஆழ்மனம் வரை சென்று விடுகிறது.
பிரச்சனை என்னவென்றால், எந்த ஒன்றின் மீது ஆசை வைத்தாலும், அதன் பின்னணியில் பயமும், கோபமும் இருக்கும்.
ஆசைப் பட்ட ஒன்று கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயம்; கிடைக்கா விட்டால் கோபம் -- அந்த ஒன்று கிடைத்து விட்டாலோ, அது தன்னை விட்டு போய்விடுமோ என்ற பயம்; போய்விட்டாலோ அதற்கு யார் காரணமோ அவர் மீது கோபம்.
ஆழ்மனப் பதிவு என்று வந்துவிட்டால் இது ஒரு தவிர்க்க இயலாத சுழற்சியாகிவிடுகிறது.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 6
பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத்தை மனப்பாடம் செய்கிறார்கள். அதன் நோக்கம் என்ன?
குறிப்பிட்ட பாடத்தை திரும்பத் திரும்ப படிக்கும் போது, அந்தப் பாடத்தை பற்றிய நினைவு ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. அதன்பின் அதனை எளிதாக நினைவு படுத்திக் கொள்ளலாம்.
கடவுளை வணங்கும் போது நமக்கு பிடித்த பாடல்களை பாடுகிறோம். தொடர்ந்து பாடி வந்தால் அந்தப் பாடல்கள் நமது ஆழ்மனதில் பதிவாகி விடுகின்றன. பின்னர் அவற்றை நினைவில் கொள்வது எளிதாகி விடுகிறது.
திருக்குறள் பாடல்களை படித்து நினைவில் கொள்ள விரும்புகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதல் நாள் முதலாவது குறளை பத்து தடவை படிக்க வேண்டும். மறுநாள் முதலாவது குறளை ஒருதடவை படித்து விட்டு, அடுத்த குறளை பத்து தடவை படிக்க வேண்டும். அடுத்த நாள் முதல் இரண்டு குறள்களையும் ஒருதடவை படித்துவிட்டு அடுத்த குறளை பத்து தடவை படிக்க வேண்டும். இந்த முறையைக் கடைப்பிடித்தால், நாம் படித்த பாடல்கள் அனைத்தும் எளிதாக ஆழ்மனம் வரை சென்று விடும்.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 7
குடிப்பழக்கம் இல்லாத ஒருவன் எப்படி குடிகாரனாக மாறுகிறான்?
நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக குடிக்கப் பழகியவன், தொடர்ந்து குடித்து வந்தால் அது பழக்கமாக மாறி ஆழ்மனதில் ஒரு பதிவை ஏற்படுத்தி விடுகிறது. பின்னர் 'குடிப்பது' என்பது தன்னிச்சையாக நடைபெறும் செயலாகி விடுகிறது.
Pizza, புரோட்டா, ஐஸ்கிரீம், அதிக உப்பு கலந்த தின்பண்டங்கள், குடிப்பழக்கம், பீடி, சிகரெட் போன்றவை உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும், அவற்றை ஏன் அடிக்கடி உபயோகிக்கிறோம்?
அதற்கு காரணமாக இருப்பது அவற்றைப் பற்றிய பதிவுகள் ஆழ்மனதில் இருப்பதால்தான். நமக்கு அது தெரிவதில்லை; ஆனால், அந்தப் பதிவுகள்தான் அவற்றை மீண்டும் மீண்டும் உபயோகிக்க நம்மை தூண்டுகின்றன.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 8
நல்ல அனுபவங்களாக இருந்தாலும், கெட்ட அனுபவங்களாக இருந்தாலும் உணர்ச்சி பொங்க அவற்றை எதிர் கொள்ளும்போது, அவை நமது ஆழ்மனதில் புதிய பதிவுகளை ஏற்படுத்தி விடும்.
மனிதனுக்கு ஏற்படும் இனவெறி, சாதிவெறி, மதவெறி போன்றவைகளுக்கு காரணமாக இருப்பது அவனுள் தோன்றும் உணர்ச்சி பெருக்கம் தான்.
பல நேரங்களில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் உணர்வு மனதோடு தங்கிவிடும். ஆனாலும், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால், குறிப்பிட்ட அனுபவம் ஆழ்மனம் வரை சென்று விடும்.
நமது மனம் புண்படும்படி ஒருவர் பேசி விடுகிறார். அது நமது உணர்வு மனதில் ஒரு பதிவை நிகழ்த்துகிறது. பின்னர் நாம் அதையே நினைத்துக் கொண்டிருந்தால், அந்தப் பதிவு ஆழ்மனம் வரை சென்று விடும்.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 9
அடுத்தது, கற்பனையில் செய்யப்படும் பதிவுகள்.
இதில் பல வகையான பதிவுகள், அந்தந்த மனிதனின் மனநிலைக்கு ஏற்றவாறு நடைபெறும்.
இல்லாததை நினைத்து ஏங்குவது, அடைய முடியாத ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவது, தேவையில்லாமல் கவலைப் படுவது போன்று விதவிதமான பதிவுகள் ஆழ்மனதில் இடம் பெறும்.
'மனப்பிராந்தி' என்று பலர் சொல்வதுண்டு. அது பெரும்பாலும் தேவையற்ற பயத்தை குறிப்பதாகவே இருக்கும். இதுவும் கற்பனையின் காரணமாக ஏற்படும் பதிவுதான்.
இவை அனைத்தும் ஆரம்பத்தில் ஒரு எண்ணமாக மட்டுமே தோன்றும். அதையே மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால், அந்த எண்ணங்கள் ஆழ்மனம் வரை சென்று விடும்.
ஆழ்மனதில் பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதற்கு இந்த விளக்கங்கள் போதும் என எண்ணுகிறேன்.
இனி, இந்தப் பதிவுகள் காரணமாக என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 10
ஆழ்மனப் பதிவுகள் காரணமாக ஏற்படும் விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.
1. "மனமே உனது உற்ற நண்பன்; அதுவே உனது முக்கிய எதிரியும் கூட" என்று கிருஷ்ணன் கூறுகிறார். அவர் மனம் என்று பொதுவாகக் கூறினாலும், நண்பனாகவோ, எதிரியாகவோ இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது "ஆழ்மனப் பதிவுகள்தான்".
2. மனிதனுக்குள் ஏற்படும் inner-suffocation, depression போன்றவைகளுக்கு இவையே காரணம்.
3. மனிதன் பல நேரங்களில் தன்னிலை மறந்து தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்தால், அவற்றின் பின்னணியில் இருப்பதுவும் ஆழ்மனப் பதிவுகளே.
4. இரவு நேரத்தில் மனிதனை தூங்கவிடாமல் அல்லல் படுத்துவதும் இந்தப் பதிவுகளே.
5. "பெற்றது பொய்யுடல்
முன்செய் வினைப்பயன்..."
மனிதன் இறக்கும் போது ஆழ்மனதில் பதிவுகள் இருந்தால், அவனுக்கு மறுபிறவி உண்டு என சில சமயங்கள் சொல்கின்றன. அதனால்தான் வள்ளுவர் "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" எனக் கூறுகிறார்.
6. மனிதனின் உள்ளத்தில் 'கருணை' பெருக்கெடுக்கத் தடையாக இருப்பதும், இந்த ஆழ்மனப் பதிவுகளே.
கருணை, இரக்கம் .. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 11
கருணை, இரக்கம் .. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?
இரக்கம் என்பது உணர்ச்சியில் பிறப்பது. கொடிய மனம் படைத்த மனிதனிடம் கூட இரக்கம் பிறப்பதைக் காணலாம். பேரிடர் காலங்களில் பலரும் இரக்கம் காட்டுவதைக் காண முடியும். பல சமயம், தனி மனிதர்களும், தேவைப்படின், பிறரிடம் இரக்கம் காட்டுவதுண்டு.
கருணை என்பது உணர்வில் கலந்தது. அது குறிப்பிட்ட மனிதர்களிடம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். ஆனால், அதை அவர்கள் வெளியே பறைசாற்றுவதில்லை. நாமாக அதை உணர்ந்தால் தான் உண்டு.
எல்லா மனிதர்களிடமும் இரக்கம் இருப்பதைப் போன்று, கருணையும் இருக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதற்கான காரணத்தை பின்னர் பார்ப்போம்.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 12
இரண்டாவது கேள்வி:-
அது (ஆழ்மனப் பதிவுகள்) எவ்வாறு அகங்காரமாக மாறுகிறது?.
ஆழ்மனப் பதிவுகளை "பீஜம்"
என்கிறார் ரிஷி பதஞ்சலி. பீஜம் என்றால் உயிர்ப்புடன் கூடிய விதைகள் என்று பொருள்.
ஆழ்மனப் பதிவுகள் அகங்காரமாக மாறுவதில்லை. ஆழ்மனப் பதிவுகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, மனிதனின் தன்முனைப்பு (அகங்காரம்) செயல்படத் துவங்குகிறது.
ரஜோ குணம் மிகுந்த மனிதனிடம், தன்முனைப்பின் வேகம் மிகுந்து காணப்படும்.
அவன் சத்துவ குணத்தில் பிரவேசித்தால், அகங்காரம் நலிவடையத் தொடங்கி விடும்.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 13
மூன்றாவது கேள்வி:-
சூப்பர் கான்சியஸ் மைண்ட் என்று ஒன்று உள்ளதே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?
நான்காவது கேள்வி:- ஆழ்மனது பதிவை (பதிவுகளை) எப்படி நீக்குவது?
நான்காவது கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு, மூன்றாவது கேள்விக்கு வருவோம்.
ஆழ்மனப் பதிவுகளை நம்மால் நீக்க முடியாது என்பதுதான் உண்மை. அவைகளாக நீங்கினால் தான் உண்டு.
".. பாச வினைகள் பற்றது நீங்கி" ... 'பற்றது நீக்கி' என்று
பாடவில்லை.
".. அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" .. 'பற்றை விடற்கு' என வள்ளுவர் பாடவில்லை.
"ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தில் ஒன்றிநிற்ப தெக்காலம்?"
.. பத்திரகிரியார்.
ஆசை வலைபின்னி பாசத்தில் நம்மை தள்ளி விடுகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? ஓசைமணி தீபத்தில் ஒன்றி நிற்க வேண்டும் என்கிறார்; அதாவது இறை சிந்தனையில் இரு என்கிறார்.
ரிஷி பதஞ்சலி "ஈஸ்வர ப்ரணிதானத்"; இறைவனிடம் சரணடைவது
என்கிறார்.
முழு நேரமும் இறை சிந்தனையில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தால், ஆழ்மனதில் இருந்த தேவையற்றப் பதிவுகள் ஒவ்வொன்றாக நம்மைவிட்டு நீங்கிவிடும்; பாச உணர்வும் மறைந்து விடும்.
மனம் இறை சிந்தனையால் நிரம்பியிருந்தால், உள்ளத்திலிருந்து பாசம் விலகிவிடும்; தூய்மையான அன்பு மட்டுமே அங்கு குடிகொள்ளும்.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 14
'சூப்பர் கான்சியஸ் மைண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன?' என ஒரு அன்பர் கேட்டிருக்கிறார்.
இந்தத் தொடருக்கும், 'சூப்பர் கான்சியஸ் மைன்ட்'-கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற சந்தேகம் வரலாம். நிச்சயமாக சம்பந்தம் உண்டு.
கான்சியஸ் மைன்ட் (conscious mind) -- உணர்வு மனம்;
சப்-கான்சியஸ் மைன்ட் (Sub-conscious mind) .. ஆழ்மனம். இதை உணர்வற்ற மனம் (unconscious mind) என்றும் சொல்வார்கள்.
மேலே சொல்லப்பட்ட இரண்டு மனங்களும் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டவை. ஆனால்,
'சூப்பர் கான்சியஸ் மைண்ட்'
(Super-conscious mind)
விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாத ஒன்று.
இது உணர்வு மனம் மற்றும் உணர்வற்ற மனம் இரண்டும் கடந்த நிலை!! இதை எப்படி புரிந்து கொள்வது?
".. மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று பாடுகிறார் தாயுமானவர்.
"..மனமிறக்க.." என்றால், மனம் இல்லாமல் போய் விடும் என்று அர்த்தமல்ல; மனம் இருக்கும், ஆனால் மனதை ஆழ்மனப் பதிவுகள் மூலம் ஆட்டிவைத்த "நான்" என்ற அகங்காரம், "எனது" என்ற மமகாரம் இரண்டும் நலிந்து அவற்றின் 'தன்முனைப்பு' வெகுவாகக் குறைந்து விடும்.
அதன் பின்னர், அந்த மனிதனின் இயக்கம் இரண்டு வழிகளில் மாறிவிடும்:-
1. ஆழ்மனதின் உந்துதல் இல்லாமல், ஐம்புலன்களின் எந்தவித உதவியும் இன்றி அந்த மனிதன் புறவுலகத் தாக்கங்களை நேரடியாக எதிர் கொள்கிறான். இதை ரிஷி பதஞ்சலி "பிரத்தியட்சம்" என்று குறிப்பிடுகிறார். புறவுலகத் தாக்கங்களை நேரடியாக எதிர்கொள்ளும் பொழுது, அவற்றின் பின்னணியில் இருக்கும் 'காரணிகளையும்' அவனால் புரிந்து கொள்ள முடிகிறது.
2. அவனது இயக்கத்தில் பெரிய மாறுதல்கள் இருந்தாலும், அதன் பின்னணியில் இருப்பது "சித்தத்தின் உள்ளிருந்து பெருக்கெடுத்து அவனை முற்றிலும் சூழ்ந்து கொள்ளும் உள்ளொளிதான்".
இந்த நிலையில் அந்த மனிதனை இயக்குவது "சூப்பர் கான்சியஸ் மைண்ட்" (super-conscious mind) என்று சொல்லலாம். இது எனது தனிப்பட்ட கருத்து.
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 15
பொதுவாக நாம் எல்லோரும் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். (இது ஒரு கற்பனைதான்)
'நான்' என்று சொல்லும் போது, அது வெறும் புள்ளிதான். ஆனால், கூடவே 'எனது' என்ற ஒன்று வந்துவிட்டால் .. அது உயிருள்ளதாக இருந்தாலும், உயிரற்றதாக இருந்தாலும்.. அங்கு ஒரு வட்டம் உருவாகி விடும். வெகு விரைவில் 40, 50 'எனது' ஒன்றுகூடி வட்டத்தைப் பெரிதாக்கி விடும். 'எனது' என்பதன் எண்ணிக்கை கூடக்கூட, மனிதனின் அகங்காரம் மேலும் மேலும் வலுவடைந்து விடும்.
அகங்காரம் உள்ள மனிதனிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அகங்காரம் புறவுலகம் சார்ந்தது; கருணை அகவுலகம் சார்ந்தது.
மனிதனிடம் கருணை பிறக்க வேண்டுமென்றால், அவனது அகங்காரம் நலிவடைய வேண்டும். அதற்கு, பற்றின் காரணமாக வட்டத்தில் இருக்கும் 'எனதின்' (my) எண்ணிக்கை குறைந்து, முடிவில் வட்டம் காணாமல் போக வேண்டும்; அல்லது 'எனது' என்ற பற்று நம்மை விட்டு நீங்க வேண்டும்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒரு சிலரே 'வட்டத்தில்' மாட்டிக் கொள்ளாமல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். ரமண மகரிஷி, ஆதி சங்கரர் போன்றவர்கள் சிறு வயதிலேயே புறவுலக வாழ்க்கையைத் துறந்து வெளியேறியவர்கள்.
இன்னும் சிலர் வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த அதிர்ச்சி காரணமாக வட்டத்தை துறந்து வெளியேறி விடுகின்றனர் ...
பட்டினத்தாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஒரு "காதறுந்த ஊசி";
பத்திரகிரியாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஒரு "கழுமரம்";
அருணகிரிநாதருக்கு
அதிர்ச்சியைக் கொடுத்தது அவரது "சகோதரி".
புத்தரைப் போன்றவர்கள் தங்களைத் துளைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை தேடி வட்டத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
அப்படியானால், வட்டத்தில் சிக்கித் தவிக்கும் இல்லற வாசிகள் உள்ளத்தில் கருணை மலர வாய்ப்பே இல்லையா?
(தொடரும்)
கருணை பொங்கும் உள்ளம்
பதிவு 16
ஆழ்வார்கள், நாயன்மார்கள் எனப் பலர் நம்மால் வணங்கத்தக்கவர்களாக உள்ளனர். அவர்களில் இல்லறவாசிகளும் அடங்குவர். அந்த அளவிற்கு அவர்கள் உயர்ந்து நிற்க காரணம் என்ன?
நம்மிடம் இல்லாத ஒரு சிறப்பு அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அது எது?
நம்மிடம் இருக்கும் ஒன்று அவர்களிடத்தில் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான காரணம். அது நம்மை ஆட்டிப் படைக்கும் "அகங்காரம்".
ஜனக மகாராஜா ஒரு நாட்டையே ஆட்சி செய்தார். இருந்தும் அவரால் அகங்காரத்தை விட்டு பற்றற்ற வாழ்க்கை வாழ முடிந்தது. அவரோடு ஒப்பிட்டால், நம்முடைய 'எனதின்' (my) எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் நம்மால் பற்றின்றி வாழ முடியவில்லை. பற்றின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் அனைவரும் இறைவனிடம் சரணடைந்தவர்கள். இறைவனிடம் சரணடைந்து விட்டால், அதன்பின் அந்த மனிதனிடம் அகங்காரம் இருப்பதில்லை. பல்வேறு காரணங்களால் நம்மால் சரணடைய முடியவில்லை என்றால், அடுத்து என்ன செய்யலாம்?
தினந்தோறும் சில மணித் துளிகள் ஒதுக்கி அகத்தாய்வு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். முறையாக செய்து வந்தால் சில வாழ்வியல் உண்மைகள் புரியும்; எனது (my) என்று எதையெல்லாம் நினைக்கிறோமோ, அவற்றின் மீது கொண்ட பற்று குறைந்துவிடும்.
நாளடைவில் நமது எண்ண ஓட்டம் "ஆக்ஞா" சக்கரத்தை நோக்கி நகர்ந்து விடும். அது இறைவனின் இருப்பிடம் அல்லவா? அதன்பின் "கருணை" உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்ளும்.
அதனால்தான் கவிஞர் ..
"கருணை பொங்கும் உள்ளம்
- அது
கடவுள் வாழும் இல்லம்" என்கிறார்.
(முற்றும்)
No comments:
Post a Comment