சனாதன தர்மம் - பாகம் 2
முன்னுரை
'சனாதன தர்மம்' பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதில், சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. இது, சனாதன தர்மம் என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.
எனவே, நாமும் நமது பங்கிற்கு நமது கருத்துக்களைச் சொல்லி வைப்போம் என முடிவு செய்து விட்டேன்.
எனது கருத்துக்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் நாத்திகவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சனாதன தர்மத்தை நம்புகிற மனிதர்களுக்குள்ளும், பலர் எனது கருத்துக்களுக்குத் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்த நேரிடலாம்.
இருப்பினும், சிலருக்காவது நமது கருத்துக்கள் பயன் படலாம் என எண்ணியே இந்தத் தொடரை வெளியிடுகிறேன்.
தேவைப்படும் இடங்களில் எனது ஆதங்கத்தை கேள்விகளாக முன் வைக்கிறேன். அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும் மற்றும் சமயம் சார்ந்த தலைவர்களும் அவற்றை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிக் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை வணங்கி, தொடரைத் தொடங்குகிறேன்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 1
ஏற்கனவே, "சனாதன தர்மம்" என்ற தலைப்பில் நிரந்தர உண்மையாக இருப்பது பரம்பொருளின் ஒரு பகுதியாக உள்ள "ஜீவாத்மா"
மட்டுமே; அதனை ஊகிப்பதன் மூலம் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் என எழுதியிருந்தேன்.
(பகவான் கிருஷ்ணர் "ஆத்மா என்பது சனாதனமாக இருப்பது; அதனை அழிக்க முடியாது" என்கிறார் - - பகவத்கீதை 2.24)
"சனாதன தர்மம்" என்றால் இதுதான் அர்த்தமா? வேறு விளக்கங்கள் கிடையாதா என சந்தேகம் வரலாம். சொல்லப்போனால் சமீபத்தில் ஒரு அன்பர் "சனாதனம் சொல்லும் அறநெறிகள்தான் என்ன?" என ஒரு கேள்வியை முன்வைத்தார். அவருக்கு "சனாதனம்" என்ற வார்த்தையே பிடிக்காது; ஆனாலும் அவரது கேள்வி மிகவும் நியாயமானதே!?
இந்த சந்தேகம் "சனாதன தர்மத்தில்" நம்பிக்கை உள்ளவர்களுக்கும் ஏற்படலாம். எனவே இதற்கான விளக்கங்களை, நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில், இந்தத் தொடரில் கூறுகிறேன்.
இந்தியாவில் உள்ள சமய நூல்களில் இருந்து நான் கற்றது 'கையளவு' கூட இல்லை; வெறும் 'விரல்' அளவு கூட இருக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான். எனவே பதிவுகளில் வரும் எனது கருத்துக்களை சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில், எனது கருத்துக்களில் சில நடைமுறையில் நாம் நம்பும் கருத்துகளுக்கு மாறுபட்டதாக இருக்கும்.
அவை சிந்தனைக்கு உகந்ததாக இருந்தால், அந்தக் கருத்துக்கள் உங்களுக்கு சரி எனத் தோன்றினால் மட்டும் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லையெனில் அவற்றை மறந்து விடுங்கள்.
ஏனெனில், இது ஒரு சாமானிய மனிதன் எழுதும் தொடர் மட்டுமே!!
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 2
இந்து மதத்தைத் தாக்குவதற்கு திராவிடக் கழகமும், அதன் கூட்டாளிகளும் கையிலெடுக்கும் மிக முக்கிய வார்த்தைகள் 'சனாதன தர்மம், மனு தர்மம் மற்றும் வர்ணாஸ்ரம தர்மம்' ஆகியவை.
இவற்றில் மனுதர்மம் என்பது ஒரு காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் மட்டுமே. இப்பொழுது அது புழக்கத்தில் இல்லை. அது காலாவதியான ஒன்று. அதை வைத்து இந்து மதத்தை தாக்குவது எந்த வகையில் சரியென்று தெரியவில்லை.
"அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு" என்றார்கள். பின்னர் ஒரு காலகட்டத்தில் அதனை விட்டு விட்டார்கள். அவர்கள் வேண்டாமென்று விட்டு விட்ட கொள்கையைச் சுட்டிக்காட்டி, சுடுகாட்டுக்கு ஏன் போகவில்லை என்று இப்போது நாம் கேட்டால் அது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம். அது போன்றதுதான் மனு தர்மத்தை சுட்டிக்காட்டி இந்து மதத்தை தாக்கிப் பேசுவதும்!?
அது சரி, இந்து மதம் என்றால் என்ன?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 3
"கேள்வி 1"
"வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள சமயங்கள் ஆறு இந்தியாவில் இருக்கின்றன. ..
சைவம் (சிவம்),
வைஷ்ணவம் (விஷ்ணு), சாக்தம் (அம்பிகை), கணபத்யம் (கணபதி), கௌமாரம் (கார்த்திகேயன்),
சௌரம் (சூரிய நாராயணன்)
என இந்த ஆறு சமயங்கள் பெயர் பெறுகின்றன. இவைகளின் தொகையே இக்காலத்தில் ஹிந்து மதம் என வழங்கி வருகிறது" .. (திருவாசகம் .. பக்கம் 71
- - விளக்கியவர்
சுவாமி சித்பவானந்தர்)
இந்த ஆறு சமயங்களிலும் உள்ள வேதாந்தக் கருத்துக்களில் பெரும்பாலும் ஒருமித்த கருத்து இருக்கும். ஆனாலும், சமீப காலமாக சைவ சமயத்தில் உள்ள பலர் 'நாங்கள் இந்துக்கள் அல்ல; எங்கள் மதம் சைவ மதம் மட்டுமே' எனக் கூறி வருகின்றனர். இது சரிதானா?
இத்தகைய வேறுபட்ட கருத்துக்கு முடிவு கட்ட வேண்டியது அனைத்து சமயத் தலைவர்களின் கடமை அல்லவா? இத்தகைய போக்கு தேவையில்லாமல் இந்துமத ஒற்றுமையை குலைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லையா? சமயத் தலைவர்கள் மௌனமாக இருப்பது சரியா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 4
"சனாதன தர்மம்" என்பதை மூன்று கோணங்களில் ஆராய வேண்டும் ..
1. சனாதனம்
2. சனாதன தர்மம் சொல்லும் தத்துவக் கோட்பாடுகள்
3. சனாதன தர்மம் சொல்லும் வாழ்வியல் நெறிகள்.
இந்த மூன்றையும் சரியாகப். புரிந்து கொண்டால் மட்டுமே, நமது நாட்டின் சமய நூல்கள் மற்றும் சமயம் சாராத நூல்கள் ஆகியவை சொல்லும் தத்துவங்களும், வாழ்வியல் நெறிகளும் எவ்வளவு சிறப்பானவை என்பது புரியும்.
நமது நாட்டில் மட்டும் அதிகமான தத்துவங்கள் இருப்பதற்கான காரணங்கள் என்ன? ..
1. ஒன்றுக்கு மேற்பட்ட சமயங்கள்
2. அதனால், மாறுபட்ட கோணங்களில் வெளிவரும் தத்துவக் கோட்பாடுகள்
3. சமய நூல்கள் தவிர்த்து ஏராளமான இலக்கியப் படைப்புகள்
இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. பிற நாடுகளில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையூறு நேரிட்டால், வேறு இடத்தில் மகிழ்ச்சியைத் தேட ஆரம்பித்து விடுவார்கள்!?
நமது நாட்டிலோ அது போன்ற சந்தர்ப்பங்களில், பலபேர் "ஆத்ம விசாரத்தில்"
இறங்கி விடுவதுண்டு.
அதனால்தான் நமது நாட்டை "ஞான பூமி" என்று அழைக்கிறார்கள்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 5
"சனாதன தர்மம்" என்பது
தத்துவக் கோட்பாடுகளையும், வாழ்வியல் நெறிகளையும் வலியுறுத்துவது. "தர்மம்" என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. 'அறம், இயல்பு, சுபாவம், பண்பு, உண்மை' போன்று பல அர்த்தங்கள் உண்டு.
தத்துவக் கோட்பாடுகளும், வாழ்வியல் நெறிகளும் எக்காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும், எப்போதும் பொருந்துவதாக இருந்தால் மட்டுமே, அவை சனாதன தர்மத்தில் அடங்கும். (சில விதிவிலக்குகளும் உண்டு.
அவற்றை பின்னர் பார்க்கலாம்).
மற்றபடி கருத்துக்களைச் சொல்பவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா, அத்தகைய கருத்துக்கள் சமய நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்.......;
எப்பொருள் எத்தன்மைத் தாயினும்.....;
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என வள்ளுவர் கூறுகிறார்.
சனாதன தர்மத்திற்கு மிகவும் ஆழமான விளக்கங்கள் உண்டு. அவை நமக்குத் தேவையில்லை; அத்துடன் அத்தகைய விளக்கங்களை சொல்லக்கூடிய தகுதியும் எனக்கு இல்லை. இருப்பினும் இங்கு தரப்படும் விளக்கங்கள் பல்வேறு கோணங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 6
இந்தத் தொடரில் வரும் பதிவுகள் அனைத்தும் எனது புரிதலை ஒட்டியது; அத்வைத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நான் ஒன்றும் பெரிய பண்டிதர் அல்ல. எனவே எனது பதிவுகளில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
சனாதன தர்மத்தை சரியான கோணத்தில் புரிந்து கொண்டால், அந்த நாட்டின் அரசும், மக்களும் நன்கு செயல் படுவார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
சனாதன தர்மம், சாதி அமைப்பு .. இந்த இரண்டிற்கும் இடையே எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதேபோல் ஒரு காலத்தில் இருந்து, பின்னர் காலாவதி ஆகும் சட்டங்களும் (உ.ம். .. மனு தர்மம்) இதனுள் அடங்குவதில்லை.
"சனாதன தர்மம்" என்பதை மூன்று கோணங்களில் ஆராய வேண்டும் என்று சொல்லியிருந்தோம். முதலில் "சனாதனம்" பற்றி பார்ப்போம்.
1. சனாதனம்
1.1. சனாதனம் என்றால் எல்லாக் காலங்களிலும் நிரந்தரமாக இருப்பது எனக் குறிப்பிடிருந்தோம். எனவே சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவற்றிற்கும், சனாதன தர்மத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
பிரபஞ்சத்தில் வாழ்வது அனைத்தும் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டவை .. அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம். இவற்றில் எப்பொழுதும் நிரந்தரமாக இருப்பது 'ஆகாயம்' மட்டுமே.
ஆனால், இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லையென்றால், ஆகாயமும் இருக்கப் போவதில்லை. எனவே இதனை நிரந்தரம் என்று சொல்ல முடியாது.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 7
1.2. ஒரு மனிதனை எடுத்துக் கொள்வோம். அவனுக்கு நிறைய உறவுகள் மற்றும் சொத்துக்கள் இருக்கலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல அந்த உறவுகளும், சொத்துக்களும் அவனை விட்டு விலகிவிடும்.
ஏதேனும் அவனுடன் இருந்தாலும், அவைகளை விட்டு விட்டு அவன் இறந்து போகிறான். அவன் இறந்தாலும், அவன் உயிருடன் இருந்தபோது அவன் இயங்குவதற்கு ஊட்டமளித்து வந்த உயிர் சக்தி .. அதாவது ஜீவாத்மா அவன் இறக்கும் தருவாயில் அவன் உடலை விட்டு வெளியேறி விடுகிறது.
எனவே அந்த 'ஜீவாத்மா' மட்டுமே சனாதனம் என்று சொல்ல முடியுமா?
ஏனெனில் ஜீவாத்மா உடலிலிருந்து மூன்று விதமாக வெளியேறும் வாய்ப்பு உள்ளது. அவை என்னென்ன?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 8
1.3. 'அத்வைத' கொள்கைப்படி ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியே. அதை 'சித்' என்றும்
பரமாத்மாவை 'சித்-ஆகாசம்' என்றும் சொல்வார்கள்.
மனித உடலில் 'ஆனந்தமய உறை' என்னும் மாய திரைக்குள் இருந்து மனிதன் இயங்குவதற்குத் தேவையான சக்தியை அது கொடுக்கிறது. ஆனந்தமய உறையுடன் சேர்த்து அதனை 'சித்தம்' எனச் சொல்கிறார்கள்.
வானத்தில் படர்ந்துள்ள மேகங்கள் போல, மனிதன் ஏற்படுத்தும் பதிவுகள் சித்தத்தின் மேலாகப் படர்ந்து விடுகின்றன. இப்பொழுது அதனை 'ஆழ்மனம்'
(Sub-conscious mind) என்று அழைக்கிறார்கள்.
ஜீவாத்மா உடலிலிருந்து மூன்று விதமாக வெளியேறும் எனச் சொல்லியிருந்தோம்.
அவை - -
1. மனிதன் இறக்கும் தருவாயில், ஜீவாத்மா 'ஆழ்மனப் பதிவுகளோடு' வெளியேறினால், அது மீண்டும் ஒரு பிறவியை எடுக்க நேரிடும்.
2. 'ஆழ்மனப் பதிவுகள்' ஏதுமின்றி ஜீவாத்மா வெளியேறினால், அது மறுபிறவியை வேண்டாது. இறைவன் அதனை மீண்டும் பிறக்க வைத்தால், அந்த மனிதன் ஒரு அவதார புருஷனாகவோ, ஒரு தலைசிறந்த ஞானியாகவோ பிறந்திடுவான்.
3. மனிதன் இறப்பதற்கு முன், ஆழ்மனப் பதிவுகள் அனைத்தும் நீங்கப்பெற்று ஜீவாத்மாவைச் சூழ்ந்திருந்த 'ஆனந்தமய உறை' என்னும் மாயத் திரையும் விலகி விட்டால், மனிதன் இறக்கும் சமயம் அந்த ஜீவாத்மா 'சகசிரதளம்' வழியே உடலை விட்டு வெளியேறி பரமாத்மாவுடன் ஒன்றாகக் கலந்து விடும். பின்னர் அதனைத் தனியாக இனம் காண முடியாது.
ஆக, ஜீவாத்மாவும் 'சனாதனம்' அல்ல; அப்படியானால் பரமாத்மாதான் சனாதனமா?
ஜீவாத்மா சனாதனம் இல்லையென்றால் ஆத்மா சனாதனம் என்று கிருஷ்ணன் சொன்னது தவறா எனத் தோன்றலாம்.
அதற்கான விளக்கத்தைப் பின்னர் வரும் பதிவில் காணலாம்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 9
1.4. பரமாத்மா என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பது 'பரமாத்மா' என்றால், அதை எப்படிப் புரிந்து கொள்வது?
பரமாத்மா என்பது உருவாக்கப் பட்டதோ அல்லது படைக்கப் பட்டதோ அல்ல. அது வேறு ஒன்றிலிருந்து தோன்றியது!
கடலில் இருந்து அலைகள் தோன்றுவது போல், கண்ணுக்குத் தெரியாத, புலன்களுக்குப் புலப்படாத ஒன்றிலிருந்து தோன்றுவது தான் பரமாத்மா எனப்படும்.
அதனால்தான் புலன்களுக்கு புலப்படாத அதனை அவன் என்றோ, அவள் என்றோ கூறாமல் "அது" என்று கூறுகிறோம் (தத்துவமஸி).
"ஏகம் ஸத் விப்ரோ
பஹூதா வதந்தி" .. இது ரிக்வேதத்தில் வரும் வாசகம். இதன் பொருள் "மெய்ப்பொருள் ஒன்று; அதற்கு சான்றோர் பல பெயரிட்டு அழைக்கின்றனர்".
அதனை "பரம்பொருள்" என்று சொல்கிறோம். அதனையே இறைவன், சிவம், அல்லா, பரம பிதா என்று பல பெயர்களில் பலரும் சொல்வதுண்டு.
கடல் ஒன்றுதான்; ஆனால், அதற்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகா சமுத்திரம், பசிபிக் பெருங்கடல் என பல பெயர்கள் உண்டல்லவா?; அதே போல் எல்லாம் வல்ல இறைவனையும் பல பெயரில் அழைக்கிறார்கள்.
கடலிலிருந்து அலை தோன்றுவது போல், பரம்பொருளில் (unmanifest) இருந்து பிரபஞ்சம் தோன்றுகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் நன்கு இயங்குவதற்காக பரம்பொருளின் ஒரு அம்சமாக பரமாத்மா (manifest) என்னும் இறை சக்தி வெளிப்பட்டு பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.
"ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க" என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். இதில் "ஏகன்" புலன்களுக்குப் புலப்படாதது (unmanifest); "அநேகன்" புலன்களால் புரிந்துகொள்ளக் கூடியது (manifest).
பரமாத்வின் ஒரு பகுதிதான் ஜீவாத்மா எனப்படுகிறது.
எனவே ஜீவாத்மாவும் நிரந்தரமான ஒன்றுதான். யுகம் முடியும் தருவாயில் ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் அழிவதில்லை; அவை 'பரம்பொருளில்' ஒடுங்கி விடுகின்றன. மீண்டும் அடுத்த யுகம் ஆரம்பிக்கும் பொழுதுதான் அவை தோன்ற முடியும். எனவே உண்மையான சனாதனமாக இருப்பது "பரம்பொருள்" மட்டுமே!!
"பரமாத்மா" பரம்பொருளின் வெளிப்பாடு ஆகும்.
ஜீவாத்மாவை "Consciousness" என்று சொல்கிறார்கள்; அதேபோல் பரமாத்மாவை "Pure-consciousness" என்றும், பரம்பொருளை "Absolute-consciousness" என்றும் அழைக்கிறார்கள்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 10
பரம்பொருள், அதிலிருந்து தோன்றிய பரமாத்மா, அதன் ஒரு பகுதியான ஜீவாத்மா எல்லாமே உருவமற்றவை தான்.
இவற்றில் ஜீவாத்மா 'முக்தி' கிடைக்கும்வரை ஒவ்வொரு பிறவியாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து, முக்தி அடையும் போது பரமாத்மாவில் கலந்து விடும். அதன் பின்னர் அதனைத் தனியாக இனம்காண முடியாது. அதனுடைய நிரந்தரத் தன்மை (சனாதனம்) அத்துடன் முடிந்து விடுகிறது.
பரமாத்மா யுகம் முடியும் வரை நீடித்திருக்கும். யுகம் முடியும் போது, அது மீண்டும் பரம்பொருளில் ஒடுங்கி விடும். அதனுடைய நிரந்தரத் தன்மையும் (சனாதனம்) அத்துடன் முடிந்து விடுகிறது.
பரம்பொருள் ஒன்றுதான் எல்லாக் காலங்களிலும் நிலைத்து நிற்பது.
மேலே சொன்ன மூன்றும் உருவமற்றவை. அப்படியானால் கடவுள் எங்கிருந்து, எதற்காக வந்தார்? அதற்கான அவசியம்தான் என்ன?
பல வருடங்களுக்கு முன்னர்
நடந்த சம்பவம் - -
என் மனைவியிடம் வேடிக்கையாக ஒரு கேள்வியை எழுப்பினேன். "கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்கிறார்கள். பேசாமல் என்னைக் கும்பிட்டுவிட்டு வீட்டில் இருக்கலாம் அல்லவா? எதற்காக உடலை வருத்திக் கொண்டு கோயில், கோயிலாக அலைகிறாய்?".
அவளிடமிருந்து அப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை!
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 11
எனது மனைவி அமைதியாக பதிலைக் கூறினாள் ..
"வாஸ்தவம் தாங்க; எனக்கு நீங்கதான் கடவுள். காலையில் குளித்துவிட்டு உங்களை மூன்று முறை சுற்றிவந்து நமஸ்கரித்தால், எனக்கு அதுவே போதும். ஆனால், நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று நான் யாரிடம் வேண்டுவது? அதற்காகத்தான் நான் கோயிலுக்குப் போகிறேன்."
என்னால் மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும்.
அவற்றை யாரிடம் முறையிடுவது? கண்ணுக்குத் தெரியாத இறைவனிடம் முறையிட எல்லோராலும் முடியாது. இதனால்தான் மனிதர்கள் பல்வேறு கடவுள்களை நாடிச் செல்கிறார்கள்.
கடவுளை வணங்கும் பொழுது, கடவுளின் உருவத்தை விட, நமது வணங்கும் பாவனைதான் முக்கியம். அதனால்தான் வயல்களிலும், தோட்டத்திலும் வேலை செய்பவர்களால் அங்கு ஒரு கல்லை நட்டு அதில் கூட கடவுளைக் காண முடிகிறது.
உருவ வழிபாடு எல்லா மதத்திலும் கடைப்பிடிக்க படுவதில்லை. சில பிரிவினர் கடவுளே இல்லையென்றும் சொல்வதுண்டு.
அப்படியானால், நாம் வழிபடும் கடவுள்கள் 'சனாதன' வரம்புக்குள் வருவதில்லையா?
கடவுளை வழிபடும் பக்தர்களுக்கு, அது 'சனாதனம் தான்'. இந்தப் பாடலைப் பாருங்கள்..
"ஊருஞ் சதமல்ல,
உற்றார் சதமல்ல,
உற்றுப் பெற்ற பேருஞ்
சதமல்ல,
பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல,
செல்வஞ் சதமல்ல,
தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே".
.. பட்டினத்தார் பாடிய பாடல் இது.
சனாதனம் என்று சொன்னாலும், சதம் என்று சொன்னாலும் இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது என்று பொருள் .
கடவுள் மீது பக்தி கொண்டவர்களுக்கு, அவனது "திருவடி" ஒன்றே சதம்.
ஆனால், யுகம் முடியும் போது பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் அழிந்து போய்விடும் என்பதுதான் உண்மை. ஒரு வித்தியாசம்.
பரம்பொருளில் இருந்து தோன்றிய 'இறைசக்தி' அதாவது 'பரமாத்மா' அழிவதில்லை; மாறாக மீண்டும் பரம்பொருளில் ஒடுங்கி விடும்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 12
இனி நாம் பார்க்க இருப்பது
"சனாதன தர்மம் சொல்லும் தத்துவக் கோட்பாடுகள்" என்றால் என்ன என்பதுதான்.
சனாதனம் என்றால் என்னவென்று கூறினேன். அதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. "சனாதன தர்மம்" ஏற்றுக்கொள்ளும் வாழ்வியல் நெறிகளை பற்றி
சொல்வதிலும் எனக்கு எந்தவித தயக்கமும் இருக்கப் போவதில்லை.
ஆனால், தத்துவக் கோட்பாடுகளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்தில் நிறைய மாறுபாடுகள் இருக்கும். அவற்றை நிதானமாக உள்வாங்கி, அலசி ஆராய்ந்து பின்னர் ஒரு முடிவிற்கு வாருங்கள்.
"கற்க கசடற" என்கிறார் வள்ளுவர். அதனை "ஐயம் திரிபு அற" என்றும் சொல்கிறார்கள்.
அதாவது எந்தவித சந்தேகமும் இன்றி, சொல்லும் கருத்தில் மாறுபாடு இல்லாமலும், திரித்து சொல்லாமலும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
"தேற்றித் தெளிமின்" .. அதாவது "அறிந்து தெளிவடையுங்கள்" என்கிறார் திருமூலர்.
தத்துவக் கோட்பாடுகளைப் பொறுத்தவரை நிறைய "திரிபு" உள்ளன என்பது எனது கருத்து. தவிர ஒன்றுக்கொன்று மாறுபட்ட விளக்கங்களும் நிறைய உள்ளன.
எனவே நான் சொல்லும் கருத்துக்களை நன்கு ஆராய்ந்து, சரியென்று தோன்றினால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 13
தத்துவக் கோட்பாடுகளைப் பற்றி கூறுவதற்கு முன்பாக நாம் ஒரு சில விஷயங்களில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் நிறைய கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
உதாரணத்திற்கு, ஜீவாத்மா முக்தி அடைந்தால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடும் என்று கூறினேன். அது 'அத்வைத' தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய இரண்டும் ஜீவாத்மா முக்தி அடைவது பற்றி வேறு வேறு கோணங்களில் முடிவு செய்பவை. எனவே அந்த தத்துவங்களை ஏற்றுக் கொண்டவர்கள் எனது கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் அது 'விவாதத்திற்கு' உரிய பொருளல்ல. 'ஜீவாத்மா' என்பது சனாதனமா, இல்லையா என்பதைப் பற்றி மட்டும் சிந்தித்து முடிவு செய்யுங்கள்.
சுருக்கமாகச் சொன்னால் ...
மனிதனைப் பொறுத்தவரை "ஜீவாத்மா" சனாதனம்;
பஞ்ச பூதங்களை பொறுத்தவரை "ஆகாயம்" சனாதனம்;
பிரபஞ்சத்தை பொறுத்தவரை "பரமாத்மா" சனாதனம்;
ஆனால், சனாதனம் என்ற சொல் பரம்பொருளுக்கு மட்டுமே உரியது. அதனை இறைவன், இறை சக்தி, பிரம்மம், சிவம், அல்லா, பரமபிதா என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 14
சனாதன தர்மம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு சரியான முறையில் பொருளைப் புரிந்து கொள்ளப் பழக வேண்டும்.
திருக்குறளில் உள்ள ஒரு பாடல் வரியைப் பாருங்கள்...
"அந்தணர் என்போர் அறவோர் ..."
இதைப் படித்து விட்டு 'அந்தணர்கள் எல்லாரும் அறவழியில் நடப்பவர்கள்' என்று முடிவு செய்தால், அது சரியா?
எல்லா அந்தணர்களும் அறவழியில் நடப்பவர்களே என்று உறுதியாகக் கூற முடியுமா? தவிர, அந்தணர்களை தவிர்த்து வேறு யாரும் அறவழியில் நடக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல முடியுமா? அப்படியானால்,
உண்மையான பொருள் என்ன!?
'அறவழியில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அந்தணர்களே' எனக் கருதினால், அது அறிவுக்கு ஏற்றதாக இருக்குமல்லவா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 15
சில நேரங்களில் பொருளைச் சரியாக சொல்லி விடுவோம். ஆனால், புரிதலில் 'முழுமை' இருக்காது. கீழே உள்ள பாடலைப் பாருங்கள்....
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" (குறள் - 121)
(அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும்)
பொருளில் குற்றம் எதுவும் இல்லை. ஆனால், அடக்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று அடக்குதல் காரணமாக வரும் அடக்கம்; மற்றொன்று அடங்குதல் காரணமாக வரும் அடக்கம்.
வள்ளுவர் 'அடக்கம்' என்று சொல்லும்போது எந்த வகை அடக்கத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்? குறளின் இரண்டாவது வரியில் 'அடங்காமை' என்று வருவதால், அவர் குறிப்பிடும் 'அடக்கம்' மனம் அடங்குவதன் காரணமாக வருவது. மனம் அடங்குவதால் என்ன பயன்? மனம் அடங்கினால் 'ஆணவ மலம்' நீங்கும். ஆணவ மலம் நீங்கினால், கன்மம், மாயை இரண்டும் வலுவிழந்து போகும். அவனும் 'குணமென்னும் குன்றேறி நின்றார்' எனப் போற்றப்படுவான். 'நிர்குணம்' நிறைந்த வாழ்க்கைதானே 'அமரருள் சேர்த்து வைக்கும்' வாழ்க்கையாக மாறும்!?
ஆகவே 'தத்துவக் கோட்பாடுகளை' முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அறநெறி சொல்லும் போதனைகளில் உள்ள மெய்ப்பொருளை உணர முடியாமல் போய்விடும்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 16
தர்மம் என்றால் தமிழில் அறம் என்று சொல்கிறோம். அதனை வலியுறுத்தும் விதமாக 'அறத்துப்பால்' எனப் பெயரிட்டு பல பாடல்களை திருவள்ளுவர் எழுதியுள்ளார்.
அவற்றில் சடங்கு, சம்பிரதாயங்கள் முதலியவற்றை சுட்டிக்காட்டும் பாடல்கள் உள்ளனவா என்று பாருங்கள்? அறம் என்றால், அது வாழ்வியல் நெறிகளை விளக்கும் நீதி நெறிகள் அல்லது போதனைகளாக மட்டுமே இருக்கும்.
"வாழ்வியல் நெறி" என்பது எல்லா மனிதர்களுக்கும், எல்லாக் காலங்களிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் தத்துவம். எனவே 'தர்மம்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'சனாதன' என்ற வார்த்தை தேவையில்லை எனத் தோன்றலாம்.
ஆனால், வடமொழியில் 'தர்மம்' என்ற வார்த்தைக்கு, இயல்பு, சுபாவம், உண்மை என பலவிதமான அர்த்தங்கள் உண்டு. எனவே 'சனாதன தர்மம்' என்று சொன்னால், அதில் வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் நீதி நெறிகள் மற்றும் போதனைகள் மட்டுமே அடங்கும் என்று அர்த்தம். அதில் சடங்கு, சம்பிரதாயம் போன்ற எதற்கும் இடமில்லை.
வாழ்வியல் நெறிகளை தவறாது கடைப்பிடிப்பதால் என்ன நன்மை? அறிந்தோ அல்லது அறியாமலோ நமக்கு 'ஞானம்' பற்றிய உணர்வு வர ஆரம்பிக்கும்.
மனிதன் 'ஞானம்' பெற வேண்டிய அவசியம் என்ன?திருமூலர் கூறுகிறார் ..
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை .."
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 17
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நகரின் மிக்காரே"
.. திருமந்திரம் 1467
"ஞானத்தை விட சிறந்த அறநெறி நாட்டில் இல்லை" என்கிறார் திருமூலர். கூடவே, "ஞான நிலைக்கு நம்மை கொண்டு செல்லாத சமயமும் நல்ல சமயம் இல்லை" என்றும் சொல்கிறார்.
இந்தியாவில் பிறந்த எல்லா சமயங்களிலும் மனிதனை ஞான நிலைக்கு கொண்டு செல்வதற்கான நீதி போதனைகள் நிறைய உள்ளன.
ஆனால், நாம் சமயங்கள் சொல்லும் தத்துவங்களையும், அவை சார்ந்த விதிகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தினால், பாதை தெரிந்தும் எப்படி பயணிப்பது என்று தெரியாமல் பின்தங்கி விடுகிறோம்.
ஒரு உதாரணம்:-
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" .. இது சமயம் சாராத வாசகம்.
"வாசுதேவ குடும்பம்" .. இது ஒரு சமஸ்கிருத வாசகம்.
"அன்பே சிவம்" .. இது சைவ சமயம் சொல்லும் வாசகம்.
மூன்று வாசகங்களும் சொல்லும் கருத்து ஒன்றாகத்தான் தோன்றுகிறது. ஆனால், "அன்பே சிவம்" எனும் வாசகம் எவ்வளவு பெரிய தத்துவத்தை உள்ளடக்கி இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 18
"அன்பே சிவம்"
வீடு, கடைகள், கோயில் எனப் பல இடங்களில் இந்த வார்த்தைகளை காணலாம். ஆனால் நாம் அதில் அடங்கியுள்ள மெய்ப்பொருளை அறிவோமா?
முதலில் "சிவம்" என்ற வார்த்தையின் பொருள் என்னவென்று பார்ப்போம்.
கீழே உள்ள இரண்டு பாடல்களையும் பாருங்கள்:-
"சீவன் எனச் சிவனார் என்ன வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலார்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பரே"
.. திருமந்திரம் 2017
"அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"
.. திருமந்திரம் 270
முதல் பாடலில் சிவனைப் பற்றி கூறுகிறார். இரண்டாவது பாடலில் சிவம் பற்றி கூறுகிறார்.
முதல் பாடலில், பாரெங்கும் நிறைந்திருக்கும் சிவன், "சீவனார்" உள்ளும் இருக்கிறார் என்கிறார்.
இரண்டாவது பாடலில், உள்ளத்தில் அன்பு இருந்தால்
அந்த மனிதன் "சிவமாக" அமர்ந்திருப்பார் என்று கூறுகிறார்.
"சிவம்" எங்கும் நிறைந்த இறைவன்; உருவமற்றது.
"சிவன்" சிவத்தின் வெளிப்பாடு. "தெற்கலையின் நாயகன்" அவன்.
அதனால்தான் மாணிக்கவாசகர்
"தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்று பாடுகிறார்.
அன்பே சிவம் என்ற சொற்றொடர் எதனை வலியுறுத்துகிறது?
'நீ சிவனை வழிபடு; அதே நேரம் சிவமாகும் வழியை தேடு' என்கிறது.
சிவமாக வேண்டுமென்றால், நம்மிடம் 'அன்பு' இருக்க வேண்டும். ஆனால், நம்மிடம் அன்பு இருக்கிறதா!?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 19
எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு குடிகொண்டிருக்கும்.
ஆனால், நாம் எதன் மீது அன்பு வைக்கிறோமோ, அதன் மீது பற்று வைத்தால் அன்பு ஆசையாக மாறி விடுகிறது. அந்தப் பற்று தொடரும் போது, ஆசை பாசமாக, பேராசையாக, காமமாக, இச்சைகளாக மாறி, நீரில் படர்ந்த பாசி போன்று, சித்தத்தின் மீது படர்ந்து 'ஆழ்மனம்' எனப் பெயர் பெற்று விடுகிறது. அதன்பின் அந்த மனிதனிடம் இருப்பது அன்பு அல்ல.
என்னிடம் பலரும் சொல்வதுண்டு .. "பாசம் என்று சொன்னாலும், அதில் அன்பும் இருக்கும் தானே!".
உண்மை; பாசத்தில் அன்பும் இருக்கும். ஆனால், அது சுயநலம் பிடித்த அன்பாக இருக்கும். தூய அன்பாக இருக்காது. தூய்மை இல்லாத அன்பை உடைய மனிதனால் 'சிவமாக' அமர முடியுமா?
பாசத்தில் ஊறி நிற்கும் அன்பு, கடவுளிடம் (சிவனிடம்) நிறைய கோரிக்கைகளை வைக்கும். பாசத்தில் இருந்து விடுபட்ட அன்பு தூய்மையான அன்பாக மாறி விடும். அது ஒன்றே "சிவத்தை" நாடி நிற்கும்.
விளைவு ...
"அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"!!
"ஆசைவலை பாசத்து
அகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தில்
ஒன்றிநிற்ப தெக்காலம்?"
.. பத்திரகிரியார்
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 20
தத்துவங்களைக் குறிப்பிடும்போது, பொதுவாக அவற்றில் வினைச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை. வினைச்சொல் காலத்தைக் குறிக்கும் என்பதுதான் அதற்கான காரணம்.
அதனால்தானோ என்னவோ, பல இடங்களில் தத்துவங்களின் மெய்ப்பொருளைத் தவிர்த்து, வேறு விதமான அர்த்தங்களைக் கற்பித்து விடுகிறார்கள். நாமும் அவற்றை நம்பி மெய்ப்பொருளைத் தவறவிட்டு விடுகிறோம்.
உதாரணத்திற்கு "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறந்த குழந்தைக்கு அம்மாவைத்தான் தெரியும்; அம்மா சொல்லி அப்பாவையும், அப்பா கைகாட்டி குருவையும் தெரியும்; குரு தெய்வத்திற்கு வழி காட்டுவார் என பலர் சொல்வதுண்டு. எனது நண்பனும் ஒருமுறை அதையே சொன்னான்.
நான் அவனிடம் கேட்டேன் .. "குழந்தை பிறந்ததும் அம்மா இறந்துவிட்டால், அந்தக் குழந்தைக்கு அப்பா யாரென்றே தெரியாமல் போய்விடுமா?"
அப்படியானால் இந்த சொற்றொடர் எதனைக் குறிக்கிறது?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 21
"மாதா, பிதா, குரு, தெய்வம்" ;
இந்த சொற்றொடர் எதனைக் குறிக்கிறது?
ஒரு குழந்தை பிறந்தால், அதற்கு முதலில் தெரிய வேண்டியது 'அன்பு'. அதை தெரிய வைக்கத் தகுதியானவள் "மாதா”.
குழந்தை வளர்ந்த பின் அதற்குத் தேவையான 'அறிவை' கொடுக்க வேண்டியவர் 'பிதா'. மாதாவால் அறிவைக் கொடுக்க முடியாதா என நினைக்கலாம். ஆனால், பிதாவிற்கு அனுபவ அறிவு அதிகம் இருக்கும்; அதனால் 'பிதா' என்றார்கள்.
அறிவில் முதிர்ச்சி பெற்றாலும், ஞானத்தை பற்றிய அறிவு இருந்தால்தான், அமைதியான வாழ்க்கை வாழ முடியும். அந்த ஞானத்தை பற்றிய அறிவை வழங்குபவர் யாராக இருந்தாலும், அவரே அவனுக்கு 'குரு'.
அடுத்து 'தெய்வம்' என்ற வார்த்தை வருகிறது. ஆனால், 'தெய்வம்' என்று சொன்னவர்கள் எதை மனதில் எண்ணி சொன்னார்கள் என்பது நமக்கு தெரியாது.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 22
'தெய்வம்' .. அது தெரியக்கூடிய ஒன்றல்ல; உணர வேண்டிய ஒன்று. ஆனால், அதற்கு குருவின் துணை மிகவும் அவசியம்.
ஞானத்தின் வாயிலைத் திறந்து வைக்க, கண்டிப்பாக ஒரு 'குரு' தேவை. அவர் நமக்கு ஞானத்தை தரமாட்டார். நமது சுபாவம் எதுவென்று தெரிந்து, நமக்கான பாதையைக் காட்டுவார். நாம்தான் அந்தப் பாதையில் நம்பிக்கையுடன் பயணித்து ஞானம் என்றால் என்னவென்று உணர வேண்டும். அதை உணரும்போது 'தெய்வம்' பற்றிய புரிதலும் தெரியவரும்.
குரு என்பவர் மனித உருவில் தான் வர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. என்னுடைய 'குரு' "Kindle Life" என்ற புத்தக வடிவில் தான் வந்தார்.
குருவை நாம் தேடிப் போக வேண்டியதில்லை. நமக்குள் 'குரு' வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால், குருவே நம்மை தேடி வருவார்.
தவிர, நாம் குருவை தேடிச் சென்றால் பல நேரங்களில் தவறான மனிதரிடம் மாட்டிக் கொள்வோம்.
திருமூலர் கூறுகிறார்...
"குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே"
.. திருமந்திரம் 1680
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 23
தத்துவங்கள், தத்துவம் சார்ந்த விதிகள் மற்றும் அறநெறி உணர்த்தும் நீதி போதனைகள் ஆகியவற்றை எல்லாராலும், எல்லாக் காலங்களிலும் ஏற்றுக் கொள்ள முடியுமென்றால், அவற்றை 'சனாதன தர்மம்' எனக் கூறலாம். அத்துடன், அவற்றைக் கடைப்பிடிக்கும் பொழுது, நமது பண்பு நிலையில் நல்லதொரு முன்னேற்றமும் இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் எங்கோ தவறு செய்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து தத்துவங்களையும் நாம் ஆராய்ச்சி செய்யப் போவதில்லை. எந்தெந்த தத்துவங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை என நான் நினைக்கிறேனோ, எந்தெந்த தத்துவங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டன என நான் நினைக்கிறேனோ அவற்றைப் பற்றி மட்டுமே என்னுடைய கோணத்திலிருந்து விளக்குகிறேன்.
அதற்கு முன்னர், தத்துவங்களை சரியாகப் புரிந்து கொள்வதற்கு தடையாக உள்ள சிலவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 24
தத்துவங்களை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாமல் தடுக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது, நம்முடைய 'முன்முடிவுகளே'
(pre-conceived notion).
முதலில், 'முன்முடிவு' என்றால் என்ன என்று பார்ப்போம்.
"எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு"
சரி.
"நான் தினமும் சிவனை வழிபடுகிறேன்"
சரி.
"என்னைப் பொறுத்தவரை சிவன் தான் முழு முதல் கடவுள்"
சரி
"சிவன் மட்டுமே முழு முதல் கடவுள் "
.. இதுதான் முன்முடிவு எனப்படும்.
முதலில் இருந்தது நம்பிக்கை; அடுத்தது கடவுள் மேல் உள்ள பற்று; 'மட்டுமே' என்று சொல்லும்போது, மாற்றுக் கருத்தை ஒப்புக்கொள்ள முடியாத அளவிற்கு 'பற்றுடன் உணர்ச்சியும்' சேர்ந்து கொள்கிறது. இதன்பின் "நான் சொல்வதுதான் சரி" என்ற உணர்வு வந்து விடும்.
இது போன்ற முன்முடிவுகள் புதிய கருத்துக்களை மாறுபட்ட கோணங்களில் பரிசீலனை செய்ய அனுமதிக்காது.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 25
அடுத்த காரணி, நம்மிடம் 'lateral thinking' இல்லாததுதான்; அதாவது மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க தயங்குவது.
நமது கவனத்திற்கு வரும் கருத்து எதுவாக இருந்தாலும், அது சரிதானா என்ற சந்தேகம் வருமானால் அதற்கான மெய்ப்பொருளை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான கருத்து நமக்கு தெரியவரும்.
இந்தக் குறளை பாருங்கள்..
"அறத்தாறு இதுவென வேண்டா - சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை"
.. குறள் 37
இதற்கு பலரும் கொடுத்த பொருள் ...
"பல்லக்கை சுமப்பவனிடத்திலும், பல்லக்கில் அமர்ந்து செல்பவனிடத்திலும் அறத்தை பற்றி பேசாதே"
டாக்டரிடமும், நர்ஸிடமும்; வக்கீலிடமும், வக்கீல் குமாஸ்தாவிடமும்... இது போன்ற அர்த்தத்திலா வள்ளுவர் சொல்லியிருப்பார்!?
அவர் பல்லக்கில் செல்பவர்களை பார்க்கிறார்.
அதில் படித்த பணக்கார மனிதர்கள், மந்திரி, ராஜ குரு, மதத் தலைவர்கள் போன்றோர் போவதைப் பார்த்து, இவ்வாறு நினைத்திருக்கலாம் .. "இவர்களெல்லாம் அறம் என்றால் என்ன என்று அறிந்திருந்தால், அடுத்தவனை சுமக்க வைத்து உடல் நோகாமல் பயணம் செய்வார்களா?"
பாடல் சொல்லும் உட்கருத்து
... "அடுத்தவன் வயிற்றில் அடித்து வாழும் மனிதனிடம் அறத்தை பற்றி பேசாதே" என்று இருக்கலாம் அல்லவா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 26
இந்தியாவில் தோன்றிய அனைத்து சமயங்களும், இந்து மதம் சார்ந்தது என்பது எனது கருத்து.
மற்ற மதங்களுக்கும், இந்து மதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
பிற மதங்களில் கட்டுப்பாடுகள் உண்டு. அங்கு அவர்களது மத நூலில் சொன்னதற்கு மாறாக, யாரும் எதுவும் சொல்லக்கூடாது; சொல்லவும் முடியாது.
பெரும்பாலும் பிற சமயங்களில் ஒன்றிரண்டு நூல்கள் மட்டுமே இருக்கும். நமது நாட்டிலோ ஒரு பெரிய நூலகத்தில் வைக்கும் அளவிற்கு எண்ணிலடங்காத சமய நூல்கள் உண்டு.
சமய நூல்கள் தவிர்த்து பல்வேறு பிற நூல்களிலும் "வாழ்வியல் நெறிகளை" வலியுறுத்தும் கருத்துக்களைக் காணலாம்.
பல்வேறு சித்தாந்தங்கள் இருப்பதால், இந்து சமயத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தை எதிர்கொள்ளும் போது, அதனைப் புறக்கணிக்க கற்றுக்கொள்ள
வேண்டும்.
அந்தக் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எழுந்தால் மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.
பொதுவாக பிறர் கூறும் கருத்துக்களை எதிர்கொள்ளும் நேரத்தில், அவற்றை நமது கருத்தோடு ஒப்பீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஒப்பீடு செய்து கொண்டிருந்தால், பிறர் கூறும் கருத்துக்களை சரியாக உள்வாங்கிக் கொள்ள மாட்டோம்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 27
மதம், ஆன்மிகம் .. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
பல சமய நூல்களில் பக்தி முதற்கொண்டு ஆன்மிகம் வரை எல்லா வழிமுறைகளும் கலந்து சொல்லப் பட்டிருக்கும். ஆனாலும், ஆன்மிகம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. அது "ஞானத்திற்கான" பாதையின் திறவுகோல் போன்றது. ஞானத்தில் நிறைவு கண்டால், சாஸ்திர சம்பிரதாயங்கள் தேவையில்லை என்ற நிலை வந்துவிடும். அதனால்தான் "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்று சொல்கிறார்கள்.
ஆன்மிகம் என்பது
மதத்தில் ஒரு பகுதிதான். ஆனால், அது மதங்களைக் கடந்தது. ஏனெனில், ஆன்மிகத்தில் தத்துவங்கள் மற்றும் வாழ்வியல் நெறிகள் மட்டுமே இருக்கும். அவை மட்டுமே "சனாதன தர்மம்" என்ற கொள்கைக்குள் அடங்கும். சடங்கு, சம்பிரதாயங்கள் போன்றவற்றிற்கும், சனாதன தர்மத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
"சனாதன தர்மம்" என்ற வார்த்தைகளை முதலில் சொன்னது யார்? எதைக் குறித்து அந்த வார்த்தைகளை சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது.
ஆனால், "சனாதன தர்மம்" என்றால், அது எல்லாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும்.
அத்தகைய தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளையும் மாற்று சமயத்தவர்கள் சொல்லியிருந்தாலும், சமயம் சாராத மனிதர்கள் சொல்லியிருந்தாலும், சமயத்தை வெறுப்பவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லியிருந்தாலும், அவைகளும் 'சனாதன தர்மத்தில்' அடங்கும்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 28
"The level of understanding
will depend upon
the level of understanding".
நம்முடைய புரிந்து கொள்ளும் தன்மை என்பது
நமது புரிந்து கொள்ளும் திறமையைப் பொறுத்தது.
ஒரு மனிதனின் "விவேகம்" முதிர்ச்சி அடைய, அடைய அவனது 'புரிந்து கொள்ளும் திறமையும்' கூடிக்கொண்டே போகும். அதற்கு, 'தத்துவங்களுக்கான விளக்கங்களைக் கேட்டு அவற்றைப் பற்றி சிந்திப்பது'
என்பது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பாருங்கள்..
"சும்மா இருப்பதே சுகம்"
".. தூங்காமல் தூங்கி சுகம் பெறுவ தெக்காலம்?"
".. அலைவற்றிரு மனமே"
".. மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே"
".. மாண்டு விடும் முன்னேனான் மாண்டிருப்ப தெக்காலம்?"
"சித்த விருத்தி நிரோத"
எல்லாப் பாடல் வரிகளும் ஒரே விஷயத்தை பற்றித்தான் சொல்கிறது. ஆனாலும், ரிஷி பதஞ்சலி
"சித்த விருத்தி நிரோத" என்று சொல்லும்போது, அது "விருத்தி"-க்கான" காரணங்களையும், "நிரோத"-விற்கான அவசியத்தையும் மறைமுகமாக தெரியப் படுத்துகின்றது.
அவை ..!?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 29
"சித்த விருத்தி நிரோத" ..
சித்தத்தில் இருந்து எண்ணங்கள் ஏதும் வராமல் நிறுத்த வேண்டும் என்று ரிஷி பதஞ்சலி சொல்கிறார். அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டியது "சித்த சுத்தி".
சித்த சுத்தி எதற்காக செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? செய்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
சித்தம் எப்போதும் சுத்தமாகத்தானே இருக்கும். அதில் அசுத்தம் எப்படி சேர்கிறது? அவற்றை வகைப்படுத்த முடியுமா?
கண்ணாடி எப்போதும் சுத்தமானதுதான். அதேபோல் சித்தமும் எப்போதும் சுத்தமாகத்தான் இருக்கும். கண்ணாடியில் படியும் தூசி போல், சித்தத்தின் மீது பல்வேறு பதிவுகள் படர்கின்றன. இதனை "வாசனா" என்று வடமொழியில் சொல்வதுண்டு. சித்தத்தின் மீது பதிவுகள் நேர்ந்தால், அதனை "ஆழ்மனம்"
(Sub-conscious mind) என அழைக்கிறோம்.
இந்தப் பதிவுகள் தான் நமது மன அமைதியை இல்லாமல் செய்து விடுகின்றன. அத்துடன் சித்தத்தின் உள்ளிருக்கும் "உள்ளொளியை" பெருக்க விடாமலும் தடுக்கின்றன.
எனவே இந்தப் பதிவுகளை சித்தத்தின் மீது படிந்த அசுத்தம் என்கிறோம். இந்தப் பதிவுகள் எப்படி ஏற்படுகின்றன? அவற்றை வகைப்படுத்த முடியுமா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 30
ஒரு மனிதனின் சித்தத்தில் படரும் பதிவுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்:-
1. பாசம் காரணமாக ஏற்படும் பதிவுகள்.
2. புதுப்புது அனுபவங்களை எதிர்கொள்ளும் போது ஏற்படும் உணர்ச்சியின் காரணமாக ஏற்படும் பதிவுகள்.
3. தேவையற்ற கற்பனைகள் மூலம் ஏற்படும் பதிவுகள்.
4. நினைவில் வைத்திருக்க விரும்பும் பதிவுகள். (ஆன்மிக கருத்துக்கள், கந்த சஷ்டி கவசம், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாடல்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல வகையான பதிவுகள் இதில் அடங்கும். ஆனால், இந்த வகைப் பதிவுகள் நம்மை எந்த விதத்திலும் துன்புறுத்துவது இல்லை)
முதலில் சொல்லப்பட்ட மூன்று வகையான பதிவுகள் மனதில் கொந்தளிப்பை உண்டு பண்ணுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.
அவற்றை அந்தந்தப் பெட்டகத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால், அதுவே "சித்த சுத்தி" எனப்படும். அதனால் ஏற்படும் பயன் தான் ரிஷி பதஞ்சலி சொல்லும் "சித்த விருத்தி நிரோத".
"சித்த விருத்தி நிரோத" வெற்றிகரமாக நடந்து முடிந்தால், ஆழ்மனம் முற்றிலுமாக அமைதி அடைந்து விடும்.
மேலே சொன்னவற்றில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைப் பதிவுகள் ஆழ்மனதில் இருந்து முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டியவை.
முதல் வகைப் பதிவுகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த முடியாது. ஆனால், அவற்றை நான்காவது வகையான நினைவுப் பெட்டகத்திற்கு மாற்றி விட வேண்டும்.
உதாரணத்திற்கு ....
நான் சிவனை வணங்குகிறேன். "அவன்" மேல் எனக்கு பற்று அதிகம். எனவே "அவனைப்" பற்றிய பதிவு முதல் பெட்டகத்தில் இருக்கும்.
"ஆசை அறுமின்கள்
ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும்
ஆசை அறுமின்கள்..." என்று சொல்லும்போது, ஈசனை மறந்து விட சொல்கிறார் என்ற அர்த்தமில்லை; ஆனால் , நாம் ஈசனைப் பற்றிய நினைவை, முதல் பெட்டகத்திலிருந்து நினைவுப் பெட்டகத்திற்கு மாற்றி விட வேண்டும்.
இதனால் ஏற்படும் மாறுதல் என்ன? ஈசனைப் பற்றிய பதிவு முதலாவது பெட்டகத்தில் இருந்தால், ஈசன் "மட்டுமே" முழுமுதற் கடவுள் என்ற எண்ணம் தோன்றலாம். அதுவே நாலாவது பெட்டகத்தில் இருந்தால், "மட்டுமே" என்ற எண்ணம் தோன்றாது.
(ஆழ்மனதில் நான்கு வகையான பெட்டகங்கள் உண்டு என்று எங்கே சொல்லப் பட்டிருக்கிறது என்று கேட்க வேண்டாம். உங்கள் புரிதலுக்காக கற்பனையாக சொல்லப்பட்டது தான் அது)
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 31
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"
.. குறள் எண் : 129
(ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது)
................................................
இந்தக் குறளுக்கான பொருள் சரியாகவே உள்ளது. ஆனாலும், 'தீயால் சுட்ட புண்', 'நாவால் சுட்ட வடு' இரண்டிற்கும் இடையே ஒரு மெய்ப்பொருள் மறைந்துள்ளது.
தீயால் சுடும் போது, அதனால் தோல், அதன் உள்ளே உள்ள சதை இரண்டும் பாதிக்கப் படுகின்றன. நாளடைவில் தீக்காயம் குணமாகி சதைப்பகுதி முற்றிலும் ஆறி விடும்; ஆனாலும், தோலில் உள்ள வடு நீங்காது.
தீக்காயம் புறத்தே நிகழ்ந்த நிகழ்வு. நாவினால் சுட்ட வடு நெஞ்சில் நிகழ்கிறது? அதை நெஞ்சில் நிகழ்த்தியது யார்?
கொடிய வார்த்தைகளை சொன்னவனால் நெஞ்சில் காயத்தை ஏற்படுத்த முடியாது. அதை ஏற்படுத்துவது நமது மனமே!?
பாஞ்சாலி கொடிய வார்த்தைகளை கூட கொட்டவில்லை; கேலியாக சிரித்தாள். அதுகூட துரியோதனன் மனதில் நீங்காத வடுவாக மாறி யுத்தம் வரை சென்றுவிடுகிறது.
ஆக, யுத்தத்திற்கு காரணம் பாஞ்சாலியின் கேலி சிரிப்பா அல்லது அதை உதாசீனப் படுத்த தெரியாமல், துரியோதனன் தன் நெஞ்சில் ஏற்படுத்திக்கொண்ட வடுவா?
ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. குடும்ப விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். என் உறவினர் ஒருவரும் வந்திருந்தார். அவருக்கு என்னை பிடிக்கும்; என்னை கேலி செய்வது மிகவும் பிடிக்கும்.
நான் அணிந்திருந்த செருப்பை பார்த்துவிட்டு "ஏண்டா, முருங்கை மரத்தில் கட்ட வேண்டிய செருப்பை இப்படி கால்ல போட்டிருக்க?"
(நான் செருப்பு வாங்கினால் அது பழுதடையும் வரை மாற்றுவதில்லை. ஆனால், அவரோ அடிக்கடி புது செருப்பு வாங்கி விடுவார்)
அவர் கேலியாக சொன்னாலும், நாலு பேர் முன்னால் சொன்னால், நமக்கு கோபம் வருவது சகஜம் தானே!?
ஆனால், நான் கூறிய பதில் "சத்தம் போட்டு சொல்லாதீர்கள்; இந்த செருப்பையே அங்கே இருந்துதான் எடுத்து வந்தேன்". எனது உறவினர் உட்பட, அங்கிருந்த அனைவரும் உடனே சிரித்து விட்டார்கள்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி:-
தீ போன்றவைகளால் ஏற்படும் காயத்தை நம்மால் தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால், நெஞ்சில் வடு ஏற்படுவதும், ஏற்படாமல் போவதும் நம் கையில் தான் உள்ளது.
அதற்கு நாம் செய்ய வேண்டியது.. 'நாம் சந்திக்கும் விரும்பாத நிகழ்வுகளை உதாசீனம் செய்வது எப்படி' என்று கற்றுக் கொள்வதுதான்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 32
Disciple: How to understand what you understand?
Guru: To make you to understand what I understand, first I must understand what you understand!?
இது கேலியாக நான் எழுதிய வரிகள். ஆனால், உண்மையான, நமக்குத் தேவையான வரிகளைத் தருகிறார் 'Eckhart Tolle' அவர்கள் - -
People would occasionally come up to me and say: "I want what you have. Can you give it to me, or show me how to get it?" And I would say: "you have it already. You just can't feel it because your mind is making too much noise."
.. Eckhart Tolle in his book "The Power of Now"
(மக்கள் எப்போதாவது என்னிடம் கேட்பதுண்டு: "உங்களிடம் உள்ளதை நாங்களும் அடைய விரும்புகிறோம். எங்களுக்கு அதைத் தருவீர்களா அல்லது அதை எப்படி பெறுவது என்பதை சொல்வீர்களா?"
நான் அவர்களிடம் சொல்வேன்: "அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது. உங்களால் அதை உணர முடியவில்லை; காரணம், உங்கள் மனம் மிக அதிகமாக சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கிறது.")
................................................
நமது ஆழ்மனம், அதனுள் இருக்கும் பதிவுகள் காரணமாக எப்பொழுதும் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், நமக்கு அது தெரிவதில்லை.
ஆழ்மனம் பதிவுகள் ஏதுமின்றி நிசப்தமாக இருக்குமானால், Eckhart Tolle-யால் உணர முடிந்ததை நம்மாலும் உணர முடியும்.
அதற்கு நாம் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. நமது சுபாவத்திற்கு ஏற்ற வழியைக் கண்டறிந்து, அதில் பயணிக்க வேண்டும். கூடவே தினந்தோறும் சில மணித் துளிகளாவது மௌனமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது .. குறிப்பிட்ட நேரத்தில் புறவுலகத் தொடர்பிலிருந்து (உடலளவில்) ஒதுங்க வேண்டும்; பின், மனம் உள்ளுக்குள் ஒடுங்க வேண்டும். இதனைத்தான், ரிஷி பதஞ்சலி "பிரத்யாகாரம்" என்கிறார்.
"வெற்றிடத்தில் ஓடி
வெந்துமனம் வாடாமல்
உற்றிடத்தை தேடி
உறங்குவது எக்காலம்?"
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 33
'தர்மம்' என்ற வார்த்தைக்கு பலவிதமான அர்த்தங்கள் உண்டு.
"அம்மா, தாயே, தருமம் போடுங்கம்மா" என்று வாசலில் யாராவது குரல் கொடுத்தால், அவர்கள் உணவு கேட்கிறார்கள் என்று அர்த்தம்.
"அவர் நிறைய தான தர்மங்கள் செய்வார்" என யாராவது சொன்னால், குறிப்பிட்ட நபர் நிறைய நல்ல காரியங்கள் செய்கிறார் என்று அர்த்தம்.
"தர்ம, அர்த்த, காம, மோட்க்ஷ" என்ற சொற்றொடரில் வரும் 'தர்ம' என்ற வார்த்தைக்கு, எல்லா ஜீவராசிகளும் அதனதன்/அவரவர் சுபாவத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும்/கொள்வார்கள் என பொருள் கொள்ளலாம்.
சனாதன தர்மம் என்றால், 'நிரந்தரமான உண்மை' என்பதுதான் அர்த்தம் என நான் நினைக்கிறேன். எந்த ஒரு உண்மையும் நிரந்தரமாக எல்லோராலும் கடைப்பிடிக்க முடியுமென்றால், அந்த உண்மையை கடைப்பிடித்தால் அது நமது பண்பு நிலையில் ஏற்றம் கொடுப்பதாக இருக்குமென்றால், அந்த உண்மை மட்டுமே சனாதன தர்மத்தில் அடங்கும்.
சனாதன தர்மம் என்ற வார்த்தையை முதலில் சொன்னது யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், அதில் சடங்கு, சம்பிரதாயங்கள் எதுவும் அடங்காது என்பது எனது கருத்து.
(பதிவு 3-ல் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இது 2-வது கேள்வி)
தத்துவங்களையும், தத்துவம் சார்ந்த விதிகளையும், அதற்குண்டான வாழ்வியல் நெறிகளை உணர்த்தும் நீதி போதனைகளையும் சுட்டிக் காட்டுவது தான் "சனாதன தர்மம்". எனவே, அதனை குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே உரியது எனக் கூறுவது சரியா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 34
"The present is the product of the past; the future is the modification of the past in the present"
.. Swami Chinmayananda
(நிகழ்காலத்தில் நடப்பவை எல்லாம் கடந்த கால நிகழ்வுகளின் தொடர்ச்சியே; வருங்கால நிகழ்வுகள் என்பது நாம் நிகழ்காலத்தில் செய்யும் மாற்றத்தை பொறுத்தது)
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வரிகள்!!
மாலை நேரமாகி விட்டால், அவனுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்காது; வெளியில் சென்று நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து விட்டு வருவது வழக்கம்.
என்றாவது ஒரு நாள், பொழுதை வீணாகக் கழிக்கிறோமே என்று அவன் உணர்ந்தால், உரிய மாற்றங்களை அவன் செய்ய வேண்டும். அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதற்கு பதிலாக, அவன் கோயிலுக்கு செல்லலாம், நல்ல நூல்களைப் படிக்கலாம். இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், தேவையற்ற பழக்கங்களில் இருந்து விடுபடலாம்.
ஆக, தவறுகளைத் திருத்திக் கொள்ள தேவையான மாற்றங்களை உரிய நேரத்தில் செய்ய வேண்டும்.
கேள்வி 3:
மதங்களைப் பொறுத்தவரை திருத்தங்கள் அடிக்கடி தேவைப்படலாம். ஏனெனில் பெருவாரியான மக்கள் மதங்களைப் பின்பற்றும் போது தவறுகள், சில நேரம் மன்னிக்க முடியாத தவறுகள் கூட நேர்ந்து விடலாம். அவற்றை சரி செய்வதற்காக உரிய மாற்றங்களை செய்வது சமயத் தலைவர்களின் கடமை அல்லவா?
(உ.ம்) தீண்டாமை??
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 35
"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"
.. குறள் எண் – 190
கடவுளை நம்பாத நாத்திக வாதிகள், மத நம்பிக்கை உள்ளவர்கள் மீது நிறைய தேவையில்லாமல் பழி சுமத்துகிறார்கள் என்று வருத்தப் படுகிறோம். அவர்கள் மீது நாமும் நமது கண்டனங்களை வெளிப்படுத்தலாம்.
ஆனால், அதைவிட நம்மிடம் உள்ள குறைகளைக் களைவது முக்கியம் இல்லையா?
கேள்வி 4:-
"வசுதைவ குடும்பகம்" என்று சொல்வதில் பெருமைப் படுகிறோம். இதன் பொருள் "உலகம் ஒரே குடும்பம்" என்பதாகும். இதில் இந்தியாதான் உலகுக்கே வழிகாட்டி என்றும் சொல்கிறோம்.
இது உண்மையாக கடைப்பிடிக்க படுகிறதா? அப்படியானால் "தீண்டாமை" இன்னமும் இருக்கிறதே!? ஊருக்குள் மட்டுமல்ல, சில ஆலயங்களிலும் இதனைப் பார்க்கிறோமே!?
இதை தடுக்க வேண்டியது மதத் தலைவர்களின் கடமை இல்லையா? அவர்கள் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லையே? ஏன்?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 36
ஒரு அமெரிக்க விஞ்ஞானிகள் குழு மாபெரும் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. அதன்படி சுமார் 15 லட்சம் மக்களிடம், உலகளாவிய அளவில், கருத்துக்கணிப்பு நடத்தியது. அவர்களிடம் 44 முதல் 300 வரை கேள்விகள் கேட்கப்பட்டன.
அந்த குழு தங்களது கருத்துக்கணிப்பு முடிவை “Nature Human Behaviour” என்ற பத்திரிகையில் 2018-ம் வருடம் வெளியிட்டது.
அந்த முடிவின்படி, மனிதர்கள் நான்கு வகையானவர்கள் என்று உறுதிப்படுத்தி உள்ளனர் .. அதாவது “Reserved, role model, self-centred and average” என நான்கு பிரிவுகள். பல்வேறு கட்டத்தில், பல்வேறு குழுக்கள் நீண்ட காலமாக நடத்திவந்த ஒரு பிரச்சனைக்கு, இப்பொழுது நடந்த கருத்துக்கணிப்பு முடிவே சரியானது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் குழு அறிவித்த முடிவை யாரும் குறை கூறியதாகத் தெரியவில்லை.
மனிதர்களின் இந்த நான்கு வகைப் பிரிவுகளை, இந்திய தத்துவ ஞானிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்து உள்ளனர். அதற்கு அவர்கள் இட்ட பெயர்கள், முறையே “பிராமணன், க்ஷத்ரியன், வைஷ்யன் மற்றும் சூத்திரன்” என்பதுதான்.
கேள்வி 5:-
விஞ்ஞானிகள் சொன்னதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஞானிகள் சொன்னதை நம்மில் பலரால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அதற்கு ...
யார், யாரோ தவறான விளக்கங்கள் கொடுத்ததுதான் காரணமா?
நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று நினைக்க தூண்டியதுதான் காரணமா? அல்லது,
இதை வைத்து சாதிய அமைப்பை ஏற்படுத்தி, தேவையற்ற பிரிவினைகளை ஏற்படுத்தியதுதான் காரணமா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 37
சமீபத்தில் ஒரு பெரியவர் பேசியதைக் கேட்டேன். அதில் அவர் " மூன்று ஆச்சாரியார்களும் .. ஆதி சங்கரர், மத்வாச்சாரியார், இராமானுஜர் .. ஒரு மனிதன் இறக்கும் போது சத்துவ குணம் மிகுந்து காணப்பட்டால், அவன் அடுத்த பிறவியில் 'பிராமணனாக' பிறப்பான்
எனக் கூறியிருக்கிறார்கள்" என்று பேசியிருந்தார்.
இது சம்பந்தமாக எனக்கு சில கேள்விகள் உள்ளன. அவற்றை அடுத்த பதிவில் கேட்கிறேன்.
இப்பொழுது ..
கேள்வி 6:-
"வர்ணாஸ்ரம தர்மத்தில்" 'பிராமணன்' என்றொரு பிரிவு உள்ளது. சாதி வாரியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தியபோது, அதிலும் 'பிராமணன்' என்றொரு சாதி வருகிறது.
எனது கேள்வி என்னவென்றால், 'வர்ண' பிராமணனுக்கும், 'சாதி' பிராமணனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது
என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். எனது எண்ணமும் அதுதான்.
இது சம்பந்தமாக மடாதிபதிகள்/சமயத் தலைவர்கள் ஏதேனும் கருத்து சொல்லியிருக்கிறார்களா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 38
மூன்று ஆச்சாரியார்களும்
.. ஆதி சங்கரர், மத்வாச்சாரியார், இராமானுஜர் .. ஒரு மனிதன் இறக்கும் போது, அவனிடம் சத்துவ குணம் மிகுந்து காணப்பட்டால், அவன் அடுத்த பிறவியில் 'பிராமணனாக' பிறப்பான்
எனக் கூறியிருக்கிறார்கள் என ஒரு பெரியவர் பேசியிருந்தார்.
அது உண்மைதான். ஒரு மனிதனின் ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகளின் தன்மையைப் பொறுத்து, அவனது குணமும் அமையப் பெறும். ஆக, ஒரு மனிதனிடம் சத்துவ குணம் மேலோங்கி இருந்தால், அவனது ஆழ்மனதில் அதற்குறிய பதிவுகளே இருக்கும். எனவே அவனது அடுத்த பிறவியில் அவன் பிராமணனாக பிறப்பான் எனக் கூறியிருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக சில கேள்விகள் ...
கேள்வி 7:-
ஆச்சாரியார்கள் கூறிய காலத்தில் 'பிராமணன், பிள்ளை, செட்டியார், தேவர்' போன்ற சாதிப் பிரிவுகள் இருந்தனவா?
இல்லையெனில் அவர்கள் குறிப்பிட்டது "வர்ண" பிராமணனைத்தானே?
"வர்ண" பிரிவைச் சேர்ந்த பிராமணன் எந்த சாதியிலும் பிறக்கலாம் அல்லவா?
அப்படிப்பட்ட மனிதன் "பிராமண" சாதியில் மட்டும்தான் பிறப்பான் என்றால், உபநிடதம் சொன்ன "சத்யகாம ஜாபாலன்" கதையின் கருத்து தவறா?
தவிர, பிராமண சாதியில் பிறந்த அனைவரும் "வர்ண" பிராமணனுக்கு ஒப்பான வர்கள் என்று கூற முடியுமா?
"சாகும்போது சத்துவ குணம் மிகுந்து காணப்பட்டால்" என்று சொன்னால், அப்பொழுதே, அந்தப் பிறவியிலேயே அவன் "வர்ண" பிராமணனாக ஆகிவிட்டான் என எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
இதன் மூலம் ஒரு மனிதன் எந்த வர்ணத்தில் பிறந்தாலும், அவனது பண்பு நிலையில் நல்லதொரு ஏற்றம் காணப்பட்டால் அவன் வாழும்போதே "வர்ண" பிராமணனாக மாறிவிடலாம் அல்லவா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 39
"வர்ணாசிரம தர்மம்" என்பது மிகச் சிறந்த உளவியல் தத்துவம் என்பது எனது கருத்து. அதைப்பற்றி விரிவாக "மழலையின் கீதை" என்ற தலைப்பில் 5 பாகங்களாக எழுதியுள்ளேன். அதனை "Google Search"-ல் தேடினால் கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் அவற்றைப் படித்துப் பாருங்கள்.
"வர்ணாசிரம தர்மம்" என்பது பலருக்கு பிடிக்காத ஒன்று என்பதை அறிவேன். ஆனால், அதை எதற்காக "மனு தர்மத்தோடு" இணைத்து பேசுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
மனு தர்மம் என்பது ஒரு சட்டம். ஆனால், வர்ணாசிரம தர்மம் என்பது ஒரு வாழ்வியல் தத்துவம். எனவே ஒன்றோடு ஒன்றை ஒப்பிடுவது தவறு என்பது எனது கருத்து.
சட்டம் காலப்போக்கில் மாறிவிடும். ஆனால், தத்துவங்கள் நீண்ட காலம் இருக்கக் கூடியது.
ஒரு அன்பர் 'தத்துவங்கள் எல்லாம் வெறும் குப்பை' எனக் குறிப்பிட்டிருந்தார். ஒரு கோணத்தில் பார்த்தால், அவரது கூற்று சரிதான். ஆனால், யாருக்கு குப்பை? எப்போது குப்பை? என்று யோசித்தால் கொஞ்சம் சிந்திக்கத் தோன்றுகிறது.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 40
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்".
.. குறள் எண் – 972
மனிதர்கள் எல்லாரும் சமம் என்று சொல்பவர்கள், குறளின் முதல் வரியைக் குறிப்பிடுவார்கள்.
இருக்கலாம்; ஆனால், மனிதர்கள் செய்யும் தொழிலைப் பொறுத்து அவர்களது சிறப்பு மாறுபடும் என்று சொல்பவர்கள் பகவத் கீதையில் வரும் "குண, கர்ம விபாகசஹ" என்ற சொற்றொடரை மேற்கோள் காட்டுவார்கள். பொதுவாக 'கர்ம' என்றால் 'செய்யும் தொழில்' என்று அர்த்தம் என சொல்வதுண்டு. ஆனால், இந்த இடத்தில் அது தவறு எனத் தோன்றுகிறது. அதைப் பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.
குறளில் வள்ளுவர் 'செய்தொழில் வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'செய்தொழில் வேற்றுமையான்' எனக் கூறுகிறார். 'வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'வேற்றுமையான்' என ஏன் கூறுகிறார்?
சிலர் 'தொழில் செய்பவரின் திறமையைப் பொறுத்து, சிறப்பானது வேறுபடும்' என்று சொல்கிறார்கள்.
ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்ய பல மந்திரிகள் இருப்பார்கள். அதில் சிலர் நாட்டு நலனுக்காக உழைப்பார்கள்; சிலர் தங்களது வீட்டு நலனுக்காக உழைப்பார்கள். அவர்களின் தொழில் ஒன்றாக இருந்தாலும், அவர்களின் நோக்கத்தில் மாறுபாடு இருக்கிறது. ஆக, 'வேற்றுமையான்' என்பதற்கு 'செய்யும் தொழிலின் பின்னே மறைந்திருக்கும் நோக்கத்தைப் பொறுத்து தொழில் செய்பவர்களின் சிறப்பு மாறுபடும்' என்றும் சொல்லலாம் அல்லவா?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 41
"மனிதர்களை குணம் மற்றும் கர்மாவின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கிறேன்" என பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார்.
இந்தப் பிரிவுகளை தொழிலை வைத்துப் பிரித்துப் பார்ப்பது தவறு என்பது எனது கருத்து. இதனால்தான் ஏகப்பட்ட கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.
தங்களது வசதிக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவே நம் முன்னோர்கள் செய்த தவறு, ஒரு அற்புதமான உளவியல் தத்துவத்தை பலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய் விட்டது.
குணம், கர்மா இரண்டும் தனித்தனி வார்த்தைகள் அல்ல. அது ஒரு சங்கிலித் தொடரில் உள்ள கண்ணிகள். அதில் முதல் கண்ணி 'குணம்'; கடைசி கண்ணி 'கர்மா'. இடையில் வேறு சில கண்ணிகளும் உள்ளன. அனைத்து கண்ணிகளுக்கும் இடையே முறையான 'ஒருங்கிணைப்பு' இருந்தால் மட்டுமே தொழில் ரீதியான பிரிவை சரியென்று சொல்லலாம்.
ஒருவேளை முற்காலத்தில் குணம் மற்றும் கர்மாவிற்கு இடையே ஒரு 'ஒருங்கிணைப்பு' இருந்திருக்கலாம். ஆனால், அது எப்பொழுதும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா?
எனவே கர்மா என்பதற்கு 'தொழில்' என்று பொருள் கொள்வதற்கு பதிலாக சரியான பொருள் எதுவென்று பார்க்க வேண்டும்.
முதலில் சங்கிலியில் உள்ள கண்ணிகளை பார்த்து விடுவோம்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 42
சங்கிலியில் உள்ள கண்ணிகள்:-
குணம் (character)
இயல்பு/சுபாவம் (nature)
மனோபாவம் (mental attitude)
எண்ணம்/சிந்தனை (thought)
சொல் (speach)
கர்மம்/செயல் (action)
மனிதர்களிடம் உள்ள குணத்தை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்:-
1. சத்துவ குணம்
2. ரஜோ குணம்
3. தமோ குணம்
இவர்களில் சத்துவ குணம் நிறைந்த மனிதர்களிடம் 'தன்முனைப்பு' குறைந்து காணப்படும். அதனால் அவர்கள் செயலில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
(Unactive type)
தமோ குணம் நிறைந்த மனிதர்கள் பெரும்பாலும் பிறரது விருப்பத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருப்பார்கள். சொந்தமாக சிந்தித்து செயல்பட மாட்டார்கள். (Inactive type)
ரஜோ குணம் நிறைந்த மனிதர்களிடம் மட்டுமே 'தன்முனைப்பு'
(அஹங்காரம்) அதிகம் இருக்கும். அவர்கள் செயலிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். (Active type)
ஆனால், இவர்களிடம் உள்ள சுபாவம் (nature) இரண்டு விதமாக இருக்கும். சிலர் பொதுநலத்தில் நாட்டம் உள்ளவர்களாகவும், சிலர் சுயநலத்தில் நாட்டம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
அதேபோல், ஒரு மனிதனின் செயல்கள் வெளியே தெரியுமுன், தனது செயல்களைப் பற்றி அவன் மனதுக்குள் நிறையவே கற்பனை செய்திருப்பான்.
எனவே, 'வர்ணப் பிரிவு' என்பது ஒரு மனிதனின் இயல்பான சுபாவம் மற்றும் அவனது மனோபாவம் இரண்டையும் பொறுத்து அமையக்கூடியது.
வர்ணாஸ்ரமம் பற்றி ஒரு அன்பர் வெளியிட்ட கருத்து இது:- "வர்ணாசிரமம் என்பது இடைச்சொருகல் மட்டுமல்ல தேவையில்லாத ஆணி".
இதுபோன்ற எண்ணங்கள் பலரிடத்திலும் இருப்பதை அறிவேன்.
உண்மையில் இந்த "ஆணி" தேவையா, தேவையில்லையா? நான் என்னில் அனுபவித்து உணர்ந்த உண்மையைக் கூறுகிறேன்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 43
எனது வாழ்க்கையில் இரண்டு விஷயங்களில் நான் உறுதியாக இருந்தேன்:-
1. பொது வாழ்வில் நேர்மையாக இருப்பது.
2. முடிந்தவரை பிறருக்காக சேவை செய்வது மற்றும் உதவுவது.
இவற்றை ஓரளவு சரியாகவே கடைப்பிடித்தேன். இருந்தாலும் மனதில் தேவையற்ற குழப்பங்கள், இனம் புரியாத வேதனைகள் இருந்துகொண்டுதான் இருந்தன. கூடவே வேறு சில உடல் உபாதைகளும் இருந்தன.
நான் அதிகம் விரும்பி படித்தவை திருக்குறளும், பகவத்கீதையும் தான். ஆனால், திருக்குறளை புரிந்து கொண்டதுபோல் பகவத்கீதையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பின்னர் சுவாமி சின்மயானந்தர் எழுதிய "Kindle Life" என்ற புத்தகம் பகவத்கீதையை எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது. அதன்பின் அதில் உள்ள தத்துவங்கள் புரிய ஆரம்பித்தன; அதிலும் குறிப்பாக "வர்ணாசிரம தர்மம்".
நாம் பொதுவாக 'அறிவு' என்று கூறுவதுண்டு. வடமொழியில் இதை 'ஞானம்' என்று சொல்வார்கள். ஆனால், அறிவில் இரண்டு விதம் உண்டு.
ஒன்று, நாம் தெரிந்து கொண்ட விஷயங்களை ஐயம், திரிபு இல்லாமல் அறிந்து கொள்வது.
இரண்டாவது, நாம் அறிந்து கொண்டவற்றை அனுபவத்தில் நடைமுறைப்படுத்தி, அவற்றின் உண்மைத் தன்மையை 'உணர்ந்து கொள்வது'.
அதனால்தான், ஆன்மிகத்தை "அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று" என நான்
சொல்வதுண்டு.
வர்ணாசிரம தர்மத்தைப் புரிந்துகொண்ட பின் எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
அவை...
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 44
"வர்ணாசிரம தர்மம்" என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டபின், எனது சிந்தனையில் நிறைய மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன.
வர்ணாசிரம தர்மத்தை இரண்டாகப் பிரித்து பார்க்க வேண்டும்; ஒன்று "வர்ண தர்மம்", மற்றொன்று "ஆஸ்ரம தர்மம்".
ஒரு மனிதனின் "வர்ண தர்மத்தை" தொழிலை வைத்து உறுதி செய்வது தவறு எனத் தோன்றியது.
"குண, கர்ம" என்ற தொடரில் வரும் குணம் என்ற வார்த்தைக்கு (வடமொழியில்) சுபாவம் என்று அர்த்தம்.
கண்ணன் தெளிவாகச் சொல்கிறான் ..
"அவர்களது தொழிலை அவர்களிடம் இயல்பாக அமைந்துள்ள சுபாவம் மற்றும் அதைச் சார்ந்த அவர்களின் தரத்தை (quality) ஒட்டி நான்காக பிரிக்கிறேன்"
(Their duties are divided according to the qualities inherent in their nature ..
Gita 18.41)
சரி; அவர்களது சுபாவம் பற்றி கண்ணன் என்ன சொல்கிறான்? உதாரணத்திற்கு ஒன்று.
கீதையில் கண்ணன் இப்படிப்பட்ட சுபாவங்கள் இருந்தால், அவன் பிராமணன் என்று அழைக்கத் தக்கவன் எனக் கூறுகிறார். "Brahma karma svabhavajam" (Gita 18.42)
அவை:-
அமைதி .. .. .. serenity
சுயக்கட்டுப்பாடு .. self-restraint
சிக்கனம் .. .. austerity
தூய்மை .. .. purity
மன்னித்தல் .. forgiveness
நேர்மை straightforwardness
அறிவு .. .. .. .. knowledge
ஞானம் .. .. .. wisdom
நம்பிக்கை .. .. faith in God/scriptures
கண்ணன் இதில் பிறப்பை பற்றி எதுவுமே சொல்லவில்லை. மேலே சொல்லப்பட்ட சுபாவங்கள் உடைய ஒரு மனிதன் எந்தத் தொழிலை செய்தாலும் அவன்தான் "வர்ண ரீதியான பிராமணன்" என நான் உணர்ந்து கொண்டேன்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 45
"பிராமணன், க்ஷத்ரியன், வைஷ்யன், சூத்திரன்" என்பதற்கு நான் எடுத்துக் கொள்ளும் பொருள் ..
" வழிகாட்டி, பொதுநலவாதி, சுயநலவாதி, மற்றவர்" என்பதே. இந்த விளக்கம் முன்னர் சொன்ன "Reserved, Role-model, Self-centred, Others" என்பதற்கு ஒப்பாக இருக்கிறது அல்லவா?
இந்தக் கருத்து நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்தப் பிரிவுகளை "வேண்டாத ஆணி" என்று சொல்ல முடியுமா? ஒரு உதாரணம்...
சுயநலவாதிகள் எந்த காரணம் கொண்டும் அரசியலுக்கு வரக்கூடாது. அவர்களை வரவேற்பது மட்டுமல்ல; ஆட்சி பீடத்திலும் அமர வைக்கிறோம். பின்னர் அதை நினைத்து புலம்புவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதைப் புரிந்து கொண்டு, அனைத்து கட்சிகளிலும் உள்ள சுயநலவாதிகளுக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்தால், நாடு நன்றாக இருக்கும் அல்லவா!?
இதைப் போன்றே "ஆஸ்ரம தர்மத்தையும்" வேறு கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது!?
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 46
சென்ற பதிவில் "சுயநலவாதி" என்று குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு அன்பருக்கு சந்தேகம் வந்து விட்டது; நியாயமான சந்தேகம்தான்.
பெரும்பாலான மனிதர்கள் 'தான், தன் குடும்பம்' என்று வாழ்வார்கள். அவர்களுக்குள் நேர்மையாக, யாருக்கும் துரோகம் செய்யாமல் வாழ்பவர்களும் இருப்பார்கள். பல காரணங்களால் அவர்களால் பிறருக்காக சேவை செய்ய முடியாமல் போகலாம்; ஆனாலும், அவர்களும் பொதுநலவாதிகள் என்று அழைக்கத் தக்கவர்களே.
..... ..... .....
ஆஸ்ரம தர்மத்திலும் நான்கு வார்த்தைகள் .. "பிரமச்சரியம், க்ரஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம்".
தத்துவங்களுக்கு விளக்கம் சொல்லும் போது, அது கால சூழ்நிலைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். முதலில் சொன்ன விளக்கம்தான் சரியென்று வாதிடக் கூடாது.
உதாரணத்திற்கு, பிரமச்சரியம் என்றால், அதில் இருப்பவன் வேதம் கற்றுக் வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த விளக்கம் அந்த காலத்திற்கு பொருந்தி இருக்கலாம்; எல்லா காலத்திற்கும் அது பொருந்தக் கூடியதா?
ஆஸ்ரம தர்மத்தை "மாணவப் பருவம், வாலிபப் பருவம், வயோதிக பருவம், துறவுப் பருவம்" என பொருள் கொள்ளலாம்.
"பிரமச்சரியம்"
மாணவப் பருவம்:- இது கற்றுக் கொள்ளும் பருவம். பிறரை சார்ந்திருக்கும் பருவம்.
"க்ரஹஸ்தம்"
வாலிபப் பருவம்:- இது பிறரை சார்ந்திராமல், தன் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பருவம்.
"வானபிரஸ்தம்"
வயோதிக பருவம்:- பிறரை சார்ந்து வாழும் பருவம். இந்தப் பருவத்தில் 'ஒதுங்கி' வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். (Be in the family; be far-away from the family)
"சந்நியாசம்"
துறவுப் பருவம்:- ஒதுங்க கற்றுக்கொண்ட மனிதனுக்கு, உள்ளுக்குள் 'ஒடுங்க' தெரிய வேண்டும்; தான் யார் என்பதை புரிந்து கொள்ள 'அகத்தாய்வு' செய்வது மிகவும் அவசியம். அதற்கு 'மனதால் உள்ளுக்குள் ஒடுங்குதல்' உதவியாக இருக்கும்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 47
திருக்குறள் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று சொல்கிறது. பகவத்கீதை அப்படி வாழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
கீதையில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிய பின், "நான் யார், எனக்கான பாதை எது, அதில் எப்படி பயணிக்க வேண்டும்" என்பதைப் புரிந்து கொண்டேன். எனக்கான பாதையில் பயணித்த போது பல உண்மைகள் வெளிப்பட்டன:-
1. மனம் இரு பகுதிகளாக செயல்படுகிறது; ஒன்று உணர்வு மனம், மற்றொன்று உணர்வற்ற மனம் அல்லது ஆழ்மனம்.
2. புறவுலகில் இருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்ளும் பொழுது ஏற்படும் அனுபவங்கள், உணர்வு மனதில் பதிவுகளை ஏற்படுத்துகின்றன. அந்தப் பதிவுகள் ஆற்றில் விழுந்த சருகைப்போல கால ஓட்டத்தில் மறைந்துவிடும்.
3. ஆனால், ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகள் நீண்ட காலம் தங்கி இருக்கும்.
4. இந்த ஆழ்மனப் பதிவுகள் தான் ஒரு மனிதனின் அஹங்காரத்தை நிர்ணயம் செய்கின்றன. அத்துடன், அவை உள்ளிருந்து பெருகக்கூடிய
'உள்ளொளியையும்' உணர முடியாமல் தடுத்து விடுகின்றன.
5. பதிவுகள் அதிகமாக, அதிகமாக அஹங்காரமும் தீவிரத் தன்மையை அடைந்து விடுகிறது.
6. அஹங்காரம் தீவிரமடைந்தால், புறவுலக தாக்கங்களை எதிர்கொள்ளும் போது, உணர்ச்சி வசப்படுவதும், எதிர்வினை (reaction) ஆற்றுவதும் மிகுந்து காணப்படும்.
7. அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதால், விவேகத்துடன் சிந்திக்கும் திறனும் குறைந்து விடுகிறது.
8. ஆழ்மனப் பதிவுகள்தான் நமது 'அமைதியின்மைக்கு' காரணம் என்பது புரியாமலே வாழ்ந்து வருகிறோம்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 48
உண்மைகள் புரிந்தபின் எனக்கான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.
அதிகமாக ஞான நூல்களைப் படித்து, அவை சொல்லும் தத்துவங்களைப் பற்றி சுயமாக சிந்திக்க ஆரம்பித்தேன். இதனை ரிஷி பதஞ்சலி "சவிசாரம்" என அழைக்கிறார்.
அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. "என்னை சுற்றிலும் உள்ளோர் என்னை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைத்திருந்தேன். அது தவறு. நான்தான் உலகத்தை புரிந்து கொள்ளத் தெரியாத ஒரு முட்டாளாக வாழ்ந்து வந்திருக்கிறேன்" என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன்.
அதன்பின், எனது வாழ்க்கையில் சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
யாராவது தேவையில்லாமல் என்னை சீண்டினால், உடனே எதிர்வினை (reaction) ஆற்றுவது என் பழக்கமாக இருந்தது. அந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
ஆழ்மனதிலிருந்த கொந்தளிப்புகள் குறையத் தொடங்கின. அதன் காரணமாக என்னிடமிருந்த 'அகங்காரம்' நலிவடையத் துவங்கியது.
"As the man progresses in his inward expansion, the lower tendencies in him automatically drop off" என்கிறார் சுவாமி சின்மயானந்தர்.
(ஒரு மனிதனின் உள்முகப் பயணம் .. கட+ உள் .. விரிவடையும் போது, அவனிடமிருந்த தேவையில்லாத பதிவுகள் ஒவ்வொன்றாக வெளியேறிவிடும்).
"Peace of mind" .. மன அமைதி; இதை உச்சரிக்காத மனிதர்களே இருக்க முடியாது. எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், மனதில் அமைதி இல்லையென்றால் அந்த மனிதனால் நிம்மதியாக வாழ முடியாது. ஆனால், மன அமைதி எங்கிருக்கிறது என்பதை அறியாமல் பலரும் தவித்து வருவதை நாம் அறிவோம்.
சுவாமி சின்மயானந்தர் சொல்கிறார்:- "Success in life is measured by the tranquility of the mind". வாழ்க்கையில் வெற்றி என்பது சலனமற்ற மனம் சார்ந்தது என்கிறார்.
சலனமற்ற மனம் என்றால் என்ன? ஆழ்மனதில் நம்மை உசுப்பேத்தும் பதிவுகள் இல்லையென்றால், அதை சலனமற்ற மனம் என அழைக்கலாம்.
சலனமற்ற மனம் உள்ளவனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) மிகவும் நலிவடைந்து காணப்படும்.
'நான், எனது' என்ற எண்ணங்கள் மறைந்து விடும். "தான்" என்ற உணர்வு மட்டும் இருக்கும்.
"விழிப்புணர்வு" பெற விரும்பும் மனிதனுக்கு, அவனது லட்சியத்தை அடைய இதுதான் முதல் படி.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 49
பகவத்கீதையை ஒரு மனோதத்துவ நூல் என்று நம்புகிறேன்.
மனிதனின் "அந்தக்கரணங்களின்" செயல்பாடுகளை ஒரு வரைபடமாக (flow-chart) உருவாக்க எண்ணினேன். அத்துடன் "வர்ணாஸ்ரம தர்மம்" பற்றி பலரிடம் சரியான புரிதல் இல்லையே என்ற ஆதங்கமும் இருந்தது.
இதன் காரணமாகவே "மழலையின் கீதை" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினேன்.
எனது நண்பர் ஒருவருக்கு நான் கீதை படித்தது, நண்பர்களுடன் அதைப்பற்றி பேசுவது என எதுவுமே பிடிக்கவில்லை. இருப்பினும் பதிப்பில் இருந்து ஒரு பிரதியை, திரு. சுகி சிவம் அவர்களுக்கு அனுப்பி அவர்களது அபிப்ராயத்தை கேட்டிருந்தார். (நண்பருக்கும் திரு. சுகி சிவம் அவர்களுக்கும் இடையே நல்ல உறவு உண்டு).
திரு. சுகி சிவம் அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்து ஒரு பகுதி :-
"... கீதையை சமுதாயம் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை...தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதே என்கிற ஆதங்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
வர்ணாச்ரம தர்மம், பகுத்தறிவு வாதிகளால் வேண்டும் என்றே திரிக்கப்பட்டு பிரச்சனை ஆக்கப்பட்ட விஷயம். அதுபற்றி தெளிவு காணும் முயற்சியில் பல விளக்கங்கள் தந்திருக்கும் ஆசிரியரை பாராட்டுகிறேன்.
என்றாலும் இதில் தரப்பட்டிருக்கும் விளக்கங்களும் தவறுதலாக புரிந்து கொள்ளப்படும் என்று கவலையுறுகிறேன்...".
புத்தகம் வெளிவந்த பின் எனக்கு அறிமுகம் ஆகியிருந்த ஒரு பிராமண பண்டிதரிடம் (சமஸ்கிருதம் நன்கு கற்றறிந்த அறிஞர்) ஒரு பிரதியை கொடுத்து அவரது அபிப்ராயத்தை கேட்டேன். புத்தகத்தை படித்துவிட்டு அவர் சொன்னது:-
"நீங்கள் (புத்தகத்தில்) சொல்லி இருப்பதுதான் சரி. ஆனால், யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்".
அவர் "யாரும்" என்று யாரைக் குறிப்பிட்டு சொன்னார் என்பதைச் சொல்லவில்லை; நானும் அதைக் கேட்கவில்லை.
சமய நூல்களிலும், சமயம் சாராத நூல்களிலும், மற்றும் பல்வேறு மனிதர்களிடம் இருந்தும் தத்துவங்கள் வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் "வர்ணாசிரம தர்மம்" மிக முக்கியமான ஒன்று என்பது எனது எண்ணம்.
நான் எண்பது (80) வயதைக் கடந்து விட்ட மனிதன். என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் பலரும் 60, 70 வயதைக் கடந்தவர்களே. அவர்களில் பலர், வசதிகள் இருந்தும் கவலையுடன் வாழ்வதை அறிவேன். அவர்களுக்கு "வர்ணாசிரம தர்மம்" பற்றியும், "வானபிரஸ்தம்" பற்றியும் சரியான புரிதல் இருந்திருந்தால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லையே என நினைத்துக் கொள்வேன்.
ஒரு 'சத்சங்க' நிகழ்ச்சியின் போது ஒரு பெண்மணி (65 வயது இருக்கும்) "ஐயா, எனக்கு அடிக்கடி கோபம் வருகிறதே; அதை எப்படி நிறுத்துவது?" என கேட்டாள்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 50
வயதான காலத்தில் கோபம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
நமக்கு குழந்தைகள் பிறந்து வளரும் போது, அவர்களுக்கு நமது அரவணைப்பும், பாதுகாப்பும் தேவைப்படும். அவர்கள் வளர்ந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் நாம் ஒதுங்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒதுங்கி வாழ்வது என்றால் என்ன?
நம் பிள்ளைகள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், நாம் என்ன செய்கிறோம்? முதலில் தண்ணீரில் இறங்கி பிள்ளைகளை கைகளில் தாங்கி, அவர்கள் கைகளையும், கால்களையும் எப்படி அசைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். பின்னர் அவர்களைத் தாங்கிப் பிடிக்காமல், அதே நேரத்தில் பக்கத்தில் நின்று கொண்டு, அவர்களை நீச்சல் அடிக்க பழக்குகிறோம். அவர்கள் நீச்சலை நன்கு கற்றுக்கொண்ட பின், நாம் அவர்களை விட்டு விலகி விடுகிறோம்.
அதேபோல், நமது பிள்ளைகள் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபின், நாம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல், அவர்களை விட்டு மனதளவில் விலகிவிட வேண்டும். மனதளவில் விலகிவிடுவதை "வானபிரஸ்தம்" என்று சொல்லலாம். (Physically be in the family; mentally be far away from the family).
இந்த ரகசியம் தெரிந்து கொண்டால், நமக்கு கோபம் வராது. மாறாக மனம் அமைதியை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடும்.
(தொடரும்)
சனாதன தர்மம் - பாகம் 2
பதிவு 51
"நேர்மையாக வாழ்ந்தால் போதாதா? தத்துவங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமா?" என் ஒரு அன்பர் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் சொல்வது உண்மைதான். நேர்மையாக வாழ்ந்தால் நல்லதுதான். ஆனால், நேர்மையாக வாழ்பவர்களும் வயது முதிர்ந்த நிலையில் வருந்துவது ஏன்?
தத்துவங்களின் மெய்ப்பொருளை அறிந்து கொண்டால், வயதான காலத்தில் வருந்தாமல் எப்படி வாழ்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.
தத்துவங்கள் சமய நூல்களில்தான் உள்ளன என்று நினைக்க வேண்டாம். ஆத்திச்சூடி போன்ற பல நூல்களிலும் அவற்றைக் காணலாம். திரைப்பட பாடல்களில் கூட தத்துவங்கள் நிறைந்த பாடல்களை கேட்க முடியும்.
கவிஞர் கண்ணதாசன் சொல்லாத தத்துவங்களா!?
அவரது மிகச் சிறந்த பாடல் வரிகளாக நான் நினைப்பது 'பாவ மன்னிப்பு' படத்தில் இடம் பெற்றுள்ளது. அது ..
"கருணை பொங்கும் உள்ளம்
- அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்."
எளிமையாகத் தோன்றும் வரிகள்; ஆனால், ஆழமான பொருள் நிறைந்த வரிகள்.
இதற்கு நீண்ட விளக்கம் தேவை.
"கருணை பொங்கும் உள்ளம்" என்ற தலைப்பில் புதிய தொடரை ஆரம்பித்து அதனை விரிவாக விளக்குகிறேன்.
அது 'ஆழ்மனம்' பற்றிய தொடர்தான்.
(முற்றும்)
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ReplyDelete