Monday, 1 May 2023

ஆற்றில் கிடந்தும்

ஆற்றில் கிடந்தும்...

முன்னுரை

நம்மில் பெரும்பாலோர் பின்பற்றுவது "பக்தி மார்க்கம்". ஆலயங்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது, வீட்டில் பூஜை செய்வது, சடங்கு, சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பது, ஆக எல்லாவற்றிலும் மன திருப்தியோடு கலந்து கொள்கிறோம்.

'எல்லாம் அவன் செயல்' என்பதையும் புரிந்து கொள்கிறோம். ஆனாலும், மனம் தேவையற்ற கவலைகளினாலும், பயத்தினாலும் அல்லல் படுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. அதிலும் முதுமை வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்; 'கவலைப் படுவதே' முக்கிய வேலையாக மாறிவிடுகிறது.

இதிலிருந்து விடுபடுவதற்காக ஒரு சின்ன பயிற்சியை மேற்கொண்டால் போதும். அதைச் செய்வதற்கு 'இடம், நேரம், காலம்' என எதுவும் தேவையில்லை. நடைமுறையில் உள்ள எந்தவொரு பழக்கத்தையும் மாற்ற வேண்டியதும் இல்லை.

புத்த மதத்தில் இதுபோன்ற பயிற்சிகளை 'அஸ்பர்ச யோகா' என்பார்கள். இதைப்பற்றி "மாண்டூக்ய உபநிடத்தில்" இரண்டு இடத்தில் விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் "இந்த வகை யோகப் பயிற்சி நமக்கு சுகத்தைத் தரும்; அதே நேரம் அது யாரையும் தொந்தரவு செய்யாது". ஏனெனில் இது நமக்குள்ளே மௌனமாக செய்வது; எனவே வெளியில் யாருக்கும் தெரியப் போவதில்லை.

பயிற்சி மிகவும் எளிமையானது. ஆனால், அதைச் செய்வதற்கு ஒரு ஈர்ப்பு வரவேண்டுமென்றால், அதற்கான அவசியத்தை நாம் கொஞ்சம் ஆராய வேண்டும். அத்துடன், இந்தப் பயிற்சியை மேற்கொள்வதால் நமக்குக் கிடைக்கப் போகும் பயன்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில், இந்தப் பயிற்சிக்கான அவசியம் பற்றி ஆராய்வோம். 

இனி, ஆற்றில்..

                  (பயணிப்போம்)


ஆற்றில் கிடந்தும் ..

பதிவு 1

வாழ்வியல் தத்துவம் பற்றி பட்டினத்தார் பல கோணங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

"ஒன்றென்றிரு தெய்வம்
உண்டென்றிரு.." என்று பாடும் போது பட்டினத்தார் 'மனமே உனக்கு உபதேசம் இதே', 'நெஞ்சே உனக்கு உபதேசம் இதே' என்று அறிவுரை சொல்கிறார்.

ஆனால், அவரே இன்னொரு பாடலில் மனதைக் கடுமையாகக் கடிந்து கொள்கிறார். அந்தப் பாடல் ..
"நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? 
நீ மனமே 

மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல் 

ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்? 

ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!"

நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. பட்டினத்தார் உண்மையில் அவரது மனதைத்தான் கடிந்து கொண்டாரா அல்லது நம்மைத்தான் (பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டவர்களை) கண்டனம் செய்கிறாரா?

பாடலின் இரண்டாவது வரியில் "மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை" என்று சொன்னவர், கடைசி வரியில் 'படித்துறை இருந்தும் வழியறியாமல் அலைகின்றையே!' என்று சொல்லியிருக்கலாம்; பதிலாக 'ஆற்றில் கிடந்தும்'
என்ற வார்த்தையைக் கூடுதலாகப் சேர்த்து
"ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!" என்று ஏன் சொன்னார்?

தவிர, "ஆற்றில் கிடந்தும்" என்ற வார்த்தையில் ஒரு அழுத்தம் தெரிகிறது.

கூடவே 'குடும்ப வாழ்க்கையை' ஏன் 'ஆற்றோடு' ஒப்பிடுகிறார்?

நிச்சயமாக இதற்கு ஒரு காரணம் இருக்கும். அது என்னவாக இருக்கும்?

                       (தொடரும்)


ஆற்றில்  கிடந்தும் ..

பதிவு 2

பட்டினத்தார் இந்தப் பாடல் மூலம் பக்தர்களைக் கடிந்து கொள்கிறாரோ எனத் தோன்றினாலும், "ஆற்றில் கிடந்தும்" என்ற வார்த்தைகளைப் பார்த்ததும் அவர் ஏதோ குறிப்பிட விரும்புகிறார் எனப் புரிந்தது.

அது என்னவாக இருக்கும் எனச் சிந்தித்த போது,
தென்கச்சி 
திரு. சுவாமிநாதன் அவர்கள் சொன்ன கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.
அந்தக் கதை .. 

ஒரு வீட்டில் ஐந்து சகோதரர்கள் இருந்தனர். (அவர் சகோதரர்கள் என்று சொன்னது ஐந்து விரல்களைத்தான்). சகோதரர்களுக்கிடையே ஒரு சந்தேகம் வந்து விடுகிறது .. 'தங்களுக்குள் யார் பெரியவரென்று?'.

கட்டை விரல் சொல்கிறது .. "நான்தான் பெரியவன். கிணற்றில் நீர் இறைத்தால் நீங்கள் நால்வரும் ஒரு பக்கம் கயிற்றைப் பிடிக்கிறீர்கள்; நான் ஒருவன் மட்டுமே  கயிற்றை மறுபக்கம் பிடிக்கிறேன். அப்படியானால் நான்தானே பெரியவன். அது மட்டுமல்ல; பத்திரங்களில் எனது ரேகையை மட்டும்தானே நம்புகிறார்கள்".

சுட்டு விரல் சொல்கிறது ..
"நீ சொல்வது உண்மைதான். ஆனால், மற்றவர்கள் தவறு செய்யும்போது அதை சுட்டிக் காட்டும் தகுதி எனக்கு மட்டும்தானே உள்ளது. எனவே நான்தானே பெரியவன்"

நடு விரல் சொல்கிறது ..
"அதெல்லாம் எதற்கு; எல்லாரும் எழுந்து நிற்போம். யார் பெரியவர் என்பது தானேத் தெரிந்து விடும்".

மோதிர விரல் சொல்கிறது .. "எது எப்படியோ; எல்லாரும் என்மீது தானே மோதிரத்தைப் போட்டு அழகு பார்க்கிறார்கள். அப்படியானால் எல்லாரையும் விட நான்தானே உசத்தி".

சுண்டு விரலுக்குத் தன்னைப் பற்றி பெருமையாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. இதைக் கண்டு மற்றவர்கள் எள்ளி நகையாட, அந்தக் கடைக்குட்டி பையன் சோர்வாக ஓர் மரத்தடியில் அமர்ந்து அழ ஆரம்பிக்கிறான். 

அங்கு வந்த நாரதர் அவன் காதில் எதையோ சொல்கிறார். அதைக் கேட்டதும் சுண்டு விரல் மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து சொன்னது..
"நீங்கள் ஆயிரம் சொல்லலாம். ஆனால், கடவுளுக்குப் பக்கத்தில் யார் இருக்கிறார் என்பதுதானே முக்கியம். நாம் எல்லாரும் சேர்ந்து கடவுளை வணங்கும் போது நான்தானே முதலில் நிற்கிறேன். அப்படியானால் நான்தானே பெரியவன்!?".

நாரதர் என்ன சொல்லியிருப்பார்? 
உங்கள் ஐந்து பேரில், நீ மட்டும்தான் கடவுளின் அருகில் இருக்கிறாய். அது தெரியாமல், அண்ணன்களிடம் உள்ள தகுதிகள் போன்று தன்னிடம் ஒன்றும் இல்லையே என்று புலம்புகிறாயே! அதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா என சொல்லியிருக்கலாம்.

                       (தொடரும்)


ஆற்றில்  கிடந்தும் ..

பதிவு 3


மேலே சொன்ன கதை  நினைவிற்கு வந்ததும், பட்டினத்தார் "ஆற்றில் கிடந்தும்" என்ற வார்த்தைகளை ஏன் குறிப்பிட்டார் என்பது புரிந்தது. 

மேலே சொன்ன கதையில் ஐந்து சகோதரர்கள் என்றால், இங்கு நான்கு சகோதரர்கள் ..
ஞானத்தை தேடுபவர், கர்மத்தில் ஈடுபடுபவர், தியானத்தில் கவனம் செலுத்துபவர் மற்றும் பக்தியில் நாட்டம் கொள்பவர்.

பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டவன் மற்றவர்களைப் பார்த்து, நம்மால் அவர்களைப் போல் ஞான மார்க்கத்திலோ, கர்ம மார்க்கத்திலோ, தியானத்திலோ ஈடுபாடு கொள்ள முடியவில்லையே என்று நினைத்திருக்கலாம். 

அவனைப் பார்த்து பட்டினத்தார் 'அவர்கள், தாங்கள் ஆற்றங்கரையில் தான் இருக்கிறோம் என்பதை உணராமல், அவர்களுக்கே உரிய வழியில் ஆற்றைத் தேடி வெளியே ஓடுகிறார்கள். முடிவில் நீ இருக்கும் ஆற்றுக்கு வந்துதான் அடுத்த கரையில் ஏற முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் திரும்பி வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நீயோ "எல்லாம் அவன் செயல்" என்று எண்ணி ஆற்றில் இறங்கி விட்டாய். அப்படி இருந்தும், எதிரே இருக்கும் படித்துறையில் ஏறுவதை விடுத்து, வீணே இங்கும் அங்குமாக அலைகின்றாயே'
என்கிறார்.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு ... "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தானாம்" என்று. கையில் இருக்கும் வெண்ணையை உருக்குவதற்குப் பதிலாக, மற்றவர்களைப் பார்த்து அவர்களெல்லாம் நெய் வாங்கக் கடைக்குப் போகிறார்கள்; என்னிடம் நெய் வாங்கப் பணம் இல்லையே என்று புலம்புவதைப் போல, எதிரே இருக்கும் படித்துறையில் ஏறுவதை விடுத்து எதற்காக மற்றவர்களைப் பார்த்துப் புலம்ப வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், "ஆற்றில் கிடந்தும்.." என்று பட்டினத்தார் கூறுகிறார்.

                         (தொடரும்)


ஆற்றில்  கிடந்தும் ..

பதிவு 4

ஆறு, மனிதனின் வாழ்க்கை இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?

ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். மனிதனின் மனத்திலும் எண்ண அலைகள்,  சிந்தனை என்று ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கும்.

வெள்ளம் வரும்போது ஆற்றுத் தண்ணீர் கலங்கி காணப்படும். மனிதனிடமும் கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் பொங்கி வழியும் போது, தேவையற்ற தவறான எண்ண அலைகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

எல்லாம் சரி; ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் உண்டு. மனிதனின் வாழ்க்கையும் இரண்டு கரைகளுக்கு ஊடே தான் பயணம் செய்கிறதா?

"மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை" என்று பட்டினத்தார் கூறும்போது, 'இதே கரையில் மீண்டும் மீண்டும் பிறக்காதே; அடுத்த பிறவியிலாவது மறு கரையில் பிறக்க முயற்சி செய்' எனக் கூறுகிறாரா?

ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை இருப்பது போல், சம்சார பந்தத்தில் உழல்பவனுக்கும் இரண்டு பக்கமும் கரைகள் உண்டா எனக் கேட்டால், ஆமாம், உண்டு என வள்ளுவர் கூறுகிறார்.

வள்ளுவர் கூறுகிறார் ..
"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு"
.. குறள் 374.

ஒன்று பொருள் சார்ந்த உலகம்; மற்றொன்று அருள் சார்ந்த உலகம்.

நாம் அனைவருமே பொருள் சார்ந்த உலகம் இருக்கும் கரையில் தான் பிறந்து வளர்கிறோம். அதிலேயே மடிந்தும் போகிறோம். பொருள் சார்ந்த உலக வாழ்க்கையை விடுத்து, சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு அருள் சார்ந்த உலகம் நிறைந்த கரையில் பிறக்கும் வகை அறிந்தாலும், அதனால் கிடைக்கும் பயன்கள் நமக்குத் தெரிவதில்லை.

மறுகரையில் ஏறினால் அவனது மனதில் உள்ள ஆசைகள் ஒவ்வொன்றாக மறைந்து விடும்.  அவன் "ஆணவம், கன்மம், மாயை" இவற்றிலிருந்து விடுபட்டு விடுவான். ஒருவேளை அவன் மீண்டும் பிறக்க வேண்டும் என இறைவன் விரும்பினால், அவன் ஒரு "அவதார புருஷனாகத்தான்" பிறப்பான்.

நமது நோக்கம் நம்மை ஆட்டுவிக்கும்
பொருட்செல்வம் என்ற கரையிலிருந்து விலகி அருட்செல்வம் நிறைந்த கரையை அடைவதுதான் என்பதாக இருக்க வேண்டும். அது ஒன்றே பிறப்பினை உருவாக்கும் ஆசைகளை அறுக்கும் வழியாகும்.

அதனால்தான் வள்ளுவரும் ..
"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள"
(குறள் 241) எனப் பாடுகிறார்.

மும்மலமும் நீங்கினால் "அவதார புருஷனாகப்" பிறக்கலாம். ஆனால், மறு கரையில் ஏறி விட்டோம்; மும்மலமும் நீங்குவதற்கு முன்பாக மரணம் சம்பவித்தால் என்ன நடக்கும்?

                     (தொடரும்)


ஆற்றில் கிடந்தும் ..

பதிவு 5


அன்பர் ஒருவர் 'மறு கரையைப்' பற்றி சில கேள்விகளை முன் வைத்தார்.

 

இது சம்பந்தமாக நான் முன்னரே நினைத்ததுண்டு. தேவையில்லாமல் அதைப் பற்றி எழுத வேண்டாம் என நினைத்தேன். இப்பொழுது எழுத வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.


எனது எண்ணங்கள் "அத்வைத" கோட்பாட்டின் படி நான் புரிந்து கொண்டவை.


"பொருள் தேடி புண்பட்டு

பொய்யுலகில் வாழாமல்

அருள் தேடி அன்புற்று 

அகமகிழ்வ தெக்காலம்?"


ஒரு கரையில் நாம் பிறந்து அங்கு பொருளைத் தேடி ஓடுகிறோம். மறு கரைக்கு சென்று விட்டால் அருள் நம்மைத் தேடி வரும்.


மறு கரையை அடைந்து அதன் பின் இறப்பு வந்தால், அதன்பின் மூன்று விதமான விளைவுகள் ஏற்படும். அவை ..

1. மறு கரையை அடைந்து விட்டோம்; ஆனாலும் மும்மலங்களும் முழுமையாக மறையவில்லை.

அந்த நிலையில் இறப்பு வந்தால், மீண்டும் பிறக்கும்போது அருள் நாட்டம் உள்ள மனிதனாக பிறப்போம்.


2. மும்மலங்களும் ஆழ்மனதிலிருந்து முழுமையாக நீங்கிய பின் (ஜீவாத்மாவை சுற்றியுள்ள மாயத்திரை விலகுமுன் மரணம் நேர்ந்தால்), அந்த மனிதனுக்கு மீண்டும் பிறப்பதற்கான தேவை எதுவும் கிடையாது. அந்த நிலையில் இறைவன் விரும்பினால் மட்டுமே மீண்டும் ஒரு பிறவி வரும். அதுபோன்ற பிறவியில் அவன் ஒரு ஞானியாக, ஒரு சித்தராக அல்லது ஒரு "அவதார புருஷனாக" இந்த பூமியில் வலம் வருவான். 


3. ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியே. இருப்பினும், அது ஒரு மாயத் திரையின் உள்ளே இருப்பதால், அதனை ஜீவாத்மா என பிரித்து உணர்கிறோம்.

ஜீவாத்மாவை சுழ்ந்துள்ள மாயத் திரையின் மீது, நமது வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களைப் பதிவு செய்கிறோம்; அதன் காரணமாக அதனை "ஆழ்மனம்" என்கிறோம். இந்தப் பதிவுகள் அனைத்தும் நீங்கப் பெற்று, அதன்பின் ஜீவாத்மாவைச் சூழ்ந்துள்ள மாயத் திரையும் அழிந்து விட்டால், அந்த மனிதன் மோட்ச நிலையை அடைந்து விடுகிறான். இனி ஜீவாத்மா உடலை விட்டு "சகசிரதளம்" வழியாக வெளியேறி விடும்.

உடலை விட்டு நீங்கிய பின் அது பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடும்.

பின் அந்த மனிதனுக்கு 'மறுபிறவி' என எதுவும் கிடையாது.


                      (தொடரும்)


ஆற்றில் கிடந்தும் ..

பதிவு 6


பட்டினத்தார் பக்தனிடம்

'மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாதே. நீ ஆற்றில்தானே இருக்கிறாய். எதிர்த்தால் போல் படித்துறை இருக்கிறது. போய் ஒவ்வொரு படியாக ஏறி கரையின் மேலே போ' எனக் கூறுகிறார்.


('இரண்டு கரைகள்' என்றதும் அன்பர்களுக்கு பலவிதமான சந்தேகங்கள் வருகின்றன. இரண்டு கரைகள் என்பது உதாரணத்திற்காக சொல்லப்பட்ட ஒன்று. உண்மையில் கரையென்று எதுவும் கிடையாது.


சரியாகச் சொல்வதென்றால், 'பந்தங்களில் மாட்டிக் கொண்ட நிலை', 'பந்தங்களில் இருந்து விலகி விட்ட நிலை' எனச் சொல்லலாம்.)


படித்துறையில் ஏறுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் காட்டுகின்றனர்.


ரிஷி பதஞ்சலி "ஈஸ்வர ப்ரணிதானத்" என்கிறார். அதாவது இறைவனை சரணடைவதின் மூலம் படிகளைக் கடந்து செல்லலாம் என்கிறார்.


பத்திரகிரியார் "ஓசைமணி தீபத்தில் ஒன்றிவிடு" என்கிறார்.


திருவள்ளுவர் "பற்றற்றான் பற்றினை பற்றிக்கொள்" என்கிறார்.


இவை கூட வேண்டாம்; கடவுளை வணங்கும் போது பொருள் சார்ந்த எதையும் வேண்டாமல், அதற்குப் பதிலாக "இறைவா, நீ எதைக் கொடுத்தாலும், அதை உன் பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறேன். ஒருவேளை நீ கொடுப்பது எனக்கு மிகுந்த வேதனையைத் தருமானால் அதைத் தாங்கக்கூடிய சக்தியை மட்டும் கொடு" என்று வேண்டுங்கள். நீங்கள் கரையேறி விடலாம்.


ஆனால், எத்தனை பேர் எதைச் சொன்னாலும், மனம் ஒத்துழைக்க வேண்டுமே; அதுதானே நமக்குப் பிரச்சினையாக உள்ளது.


என்ன பிரச்சினை என்று தோன்றுகிறது அல்லவா?

கொஞ்சம் சிந்திப்போம்!


                     (தொடரும்)



ஆற்றில் கிடந்தும் ...

பதிவு 7


பட்டினத்தார் "மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என்று சொல்லும்போது, ஆழ்மனதில் உள்ள பதிவுகளின் நீக்கத்தையே குறிப்பிடுகிறார்.

பொருளைத் தேடி ஓடும் மனிதன் அருளை நாட வேண்டுமென்றால், அவனை உசுப்பேத்தும் ஆழ்மனப் பதிவுகள் அவனை விட்டு நீங்க வேண்டும் அல்லது உசுப்பேத்த முடியாத அளவிற்கு அவை வலுவிழந்து போக வேண்டும்.

ஆழ்மனப் பதிவுகள் என்றால் என்ன? அவற்றை எப்படி வகைப் படுத்துவது?

நமது சித்தத்தின்  மீது படரும் பதிவுகளையே "ஆழ்மனப் பதிவுகள்" என அழைக்கிறோம். படர்வது என்றால் அது நீர் மேல் படரும் பாசியைப் போன்றவை அல்ல; அவை வானில் மிதக்கும் மேகக் கூட்டங்கள் போன்றவை. அவற்றில் முக்கியமான மூன்று வகைப் பதிவுகளைப் பற்றி பார்ப்போம்.

1. நினைவுப் பெட்டகம்.

நாம் மனனம் செய்த பலவும் இதில் அடங்கும். தவிர நமக்குப் பிடித்த கதைகள், பாடல்கள் ஆகியவையும் இங்குதான் பதிவாகும். இவை நினைவலைகளாகத் தங்கிவிடும். தேவைப்படும்போது நாம் நினைவு கொள்ளலாம். மற்றபடி இவற்றால் நமக்கு தொந்தரவு ஏதும் இருப்பதில்லை.

2. ஆசை வலைகள்.

நம் மனதில் எழும் ஆசைகள் காரணமாக ஏற்படும் பதிவுகள். இவைகளை பாசம், பேராசை, இச்சை (வடமொழியில் 'அபிநிவேஷ்') என மூன்றாகப் பிரிக்கலாம்.

'அபிநிவேஷ்' என்பதற்கு பல வகையான விளக்கங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் 'இல்லாத ஒன்றை எண்ணி ஏங்குவது' எனச் சொல்லலாம்.

இவற்றால் நமக்கு தொந்தரவு இல்லை என்றாலும், இவற்றிற்குப்  ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நமக்குள் பிரச்சினை உருவாகும் வாய்ப்புகள் உண்டு.

3. எதிர்மறை உணர்ச்சிகள். நமக்கு ஏற்படும் அனுபவங்கள் காரணமாக ஏற்படும் பதிவுகள். அவற்றை கோபம், வெறுப்பு, வேதனை, விரக்தி எனப் பலவாறாக வகைப்படுத்தலாம்.

பெரும்பாலும் இவைதான் நம்மை சும்மா இருக்கவிடாமல் உசுப்பேத்தி விடும்.

இந்தப் பதிவுகளின் நீக்கத்தையே பட்டினத்தார் வேறு விதமாகக் குறிப்பிடுகிறார்.


                     (தொடரும்)


ஆற்றில் கிடந்தும் ..

பதிவு 8


"இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது

"இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க" என்கிறார்.


நம்மால் அப்படிக் கூற முடியுமா? அவர் எதனால் "என்னெஞ்சில் நீங்காதான்" என்று உறுதியாகக் கூறுகிறார்?


அவரது "பிடித்த பத்து" பாடல்களைப் பாருங்கள். ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் "சிவனே! நான் உன்னை சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். எனவே நீ என்னைவிட்டு வெளியே செல்ல முடியுமா" என்கிறார். அவர் சமயக் குரவர். அவருக்கு அது எளிதான காரியமாக இருக்கலாம்! 


அதேபோல் பூசலார் நாயனார் மனதிற்குள் சிவனுக்கு கோயிலைக் கட்டினார். அவருக்கு வேறு வேலை இல்லை; அதுவே முழு நேர வேலையாக இருந்தது.


நமக்கோ குடும்ப வாழ்வில் பலவிதமானப் பிரச்சினைகள். நமக்கு அது முடியாத காரியம் எனத் தோன்றுகிறது. நாம் இறைவனை வணங்குவதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்குகிறோம். மற்ற நேரங்களில் நமக்கு வேறு வேலைகள் வந்து விடுகின்றன. 


இருந்தாலும், இறைவனை 'இமைப்பொழுதும்' மறவாது 'சிக்கெனப் பிடிக்க' வழி ஒன்று உண்டு. அது என்னவென்று பார்ப்போம்.


'சிக்கெனப் பிடிப்பதற்கும்', பட்டினத்தார் சொல்வது போல துறையறிந்து படியேறுவதற்கும் என்ன சம்பந்தம்?


                        (தொடரும்)


ஆற்றில்  கிடந்தும் ..

பதிவு 9


"நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின் 

ஊன்பற்றி நின்ற  உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே"

.. திருமந்திரம் 85


மேலே உள்ள பாடலின் கடைசி இரண்டு வரிகளில் வரும் வார்த்தைகளை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


இப்பொழுது நாம் பயிற்சியைப் பார்க்கப் போகிறோம். இது முன்னமே வேறொரு தொடரில் சொன்ன பயிற்சிதான். அப்போது ஊகத்தின் அடிப்படையில் கூறினேன். இப்போது நான் அனுபவித்து அறிந்த உண்மைகளையும் சேர்த்து சொல்கிறேன்.


நமது சுவாசத்திற்கும், "ஓம் நமசிவாய" எனும் மந்திரத்திற்கும் இடையே ஒரு ஒத்திசைவு உள்ளது.


சுவாசம் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் 1:2 என்ற விகிதத்தில் இருக்கும். "ஓம் நமசிவாய" எனும் மந்திரமும் அதே விகிதத்தில் தான் உள்ளது. 


எனவே, மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் போது மௌனமாக "ஓம்" என்று உச்சரியுங்கள்; மூச்சுக் காற்றை வெளி விடும் போது மௌனமாக "நமசிவாய" என்று உச்சரியுங்கள்.


மற்ற மந்திரங்கள் 1:2 என்ற விகிதத்தில் இருக்காது. ஆனால், பயிற்சி செய்யும் பொருட்டு சிறிய மாற்றங்கள் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு - -

ஓம் சரவணாய

ஓம் கிருஷ்ணாய

ஓம் வெங்கடேச

ஓ லார்ட்

ஓ ஜீசஸ்


இதனை 'பிரணாயாமப் பயிற்சி' செய்யும்போதும் பயன்படுத்தலாம்; சும்மா இருக்கும் மற்ற நேரங்களிலும், மூச்சு வந்து போவதைக் கவனித்து அதனுடன் இந்த மந்திரத்தைச் சேர்த்து சொல்லலாம்.


இந்தப் பயிற்சியை முறையாக செய்து வந்தால், அது உங்களுக்கும், ஆழ்மனப் பதிவுகளுக்கும் இடையே ஒரு நிரந்தரப் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி விடும். அதன்பின் ஆழ்மனதில் உள்ள எதிர்மறை உணர்ச்சிகளால் உங்களை உசுப்பேத்த முடியாது. இதனால்தான் மாணிக்கவாசகரும் "இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி" என்று பாடினாரோ?


பாதுகாப்பு கவசம் எப்படி உருவாகிறது எனப் பார்ப்போம்.


                     (தொடரும்)


ஆற்றில் கிடந்தும் ..

பதிவு 10


நாம் தினந்தோறும் தேவாரம். திருவாசகம், கந்த சஷ்டி கவசம் என ஏதாவது ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறோம். அவை ஆழ்மனதில் நினைவுப் பெட்டகத்தில் தங்கி விடுகின்றன. தேவைப்படும்போது அவற்றை நாம் நினைவு கூறுகிறோம்.


நாம் சாப்பிடும் உணவு உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் வழியாகப் பயணிக்கிறது.


உணவிலிருந்து சத்துக்களைப் பிரித்தெடுத்து அது இரத்தமாக மாறி நாளங்களிலும், நாடிகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.


ஆக, ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது.


ஆனால், நாம் சுவாசத்தோடு "ஓம் நமசிவாய" மந்திரத்தை உச்சரிக்கும்போது என்ன நடக்கிறது?


நாம் சுவாசிக்கும் போது ஆக்சிஜன் மட்டும் வருவதில்லை; கூடவே பிராண வாயுவும் (பிராண சக்தி) உள்ளே வருகிறது. நாம் உச்சரிக்கும் மந்திரம் பிராண வாயுவோடு இணைந்து விடுகிறது.


பிராண வாயு மட்டுமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லக் கூடிய தன்மை உடையது. ஆக, உடல் பிராண வாயுடன் வரும் மந்திரத்தைப் பற்றிக் கொண்டு விடுகிறது.


இதனைத்தான், இந்தப் பற்றுதலைத் தான் திருமூலர்

 "..ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்.." எனக் கூறுகிறார்.


அடுத்த வரியில் "தான் பற்றப் பற்ற" என்று சொல்கிறாரே; அந்தத் "தான்" எதைக் குறிக்கிறது?


                     (தொடரும்)



ஆற்றில் கிடந்தும் ..

பதிவு 11


"தான்" என்பது ஊனுடம்பைத்தான் குறிக்கிறது. அப்படி என்றால், "ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்" என்று சொன்னவர் "தான் பற்றப் பற்ற" என மீண்டும் ஏன் சொல்கிறார்?


உடம்பைப் பார்த்து திருமூலர் "ஒரு தடவை மந்திரத்தைப் பற்றிக் கொண்டதும் நிறுத்திவிடாதே. அந்த மந்திரம் உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் பரவ வேண்டும். ஆகவே மீண்டும் மீண்டும் மந்திரத்தைப் பற்றிக் கொண்டே இரு. அப்படிப் பற்றினால்தான் உன்னால் 'தலைப்பட' முடியும்" எனக் கூறுகிறார்.


"தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே". 'தலைப்படும்' என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. நாம் நமக்கே உரிய பாணியில் அதனைப் புரிந்து கொள்வோம்.


உடல் மந்திரத்தை உள்வாங்கி உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் அதனைப் பரவச் செய்து விட்டால், தன்னிச்சையாக அந்த மந்திரம் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.

அத்துடன் நாம் என்ன செயல் செய்தாலும், அந்த மந்திரமும் கூடவே சொல்லப்பட்டு வரும்.


நாம் அதை உணராமல் இருக்கலாம். ஆனாலும், அது தன்னிச்சையாக உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.


இரண்டு தருணங்களில் நாம் அந்த உண்மையை உணர முடியும். அவை ..


                       (தொடரும்)


ஆற்றில்  கிடந்தும் ..

பதிவு 12


நம் உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் மந்திரத்தை நம்மால் இரு தருணங்களில் உணர முடியும்.


வேலைகள் எதுவுமின்றி சும்மா இருக்கும்போது, நாம் பயிற்சியின் போது  உச்சரித்து வந்த மந்திரம் தானே முன்வந்து நிற்கும் .. (தலைப்படும் தானே!). தவிர, நமது சுவாசத்தைக் கவனித்தால் அதன் கூடவே பயணிக்கும் மந்திரத்தின் அதிர்வலைகளை உணரலாம். சிலரால் அதை உணர முடியாமல் போகலாம்.

ஆனால் அதை உணரக் கூடிய இரண்டாவது தருணம் மிகச் சரியாக அதை உணர வைக்கும்.


நமது ஆழ்மனதில் உள்ள மூன்று வகையானப் பதிவுகளைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஒன்றான 'எதிர்மறை உணர்ச்சியின்' காரணமாக உருவாகும் பதிவுகள், நமது முதல்தர எதிரிகளாகும்.


அவை எப்போதும் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நம்மை உசுப்பேத்தி விடத் தயங்காது. அதன் காரணமாக நாமும் சில காரியங்களைச் செய்து பின்னர் அதன் விளைவுகளைச் சந்தித்து வருந்த நேரிடும்.


இப்பொழுதோ அந்தப் பிரச்சினை இருக்காது. ஏனெனில் நம்முள் உச்சரிக்கப்படும் மந்திரம் ஒரு தடுப்பு கவசமாக மாறி 'எதிர்மறை உணர்ச்சிகள்' நம்மை உசுப்பேத்த விடாமல் பார்த்துக் கொள்ளும்.


நாளடைவில் எதிர்மறை உணர்ச்சிப் பதிவுகள் ஆழ்மனதிலிருந்து நீங்கிவிடும். நாம் முயன்று பார்த்தாலும் எதனையும் நம்மால் பார்க்க முடியாது.


'எதிர்மறை உணர்ச்சி பதிவுகள்' நீங்க, நீங்க நாமும் நம்மை அறியாமலே சத்துவ குணம் மிக்க மனிதர்களாக மாற ஆரம்பித்து விடுவோம்.


இது தவிர, வேறு ஒரு முக்கிய நன்மையும் நமக்குக் கிட்டும். எந்தவித இடைஞ்சலும் இன்றி நாம் தியானம் செய்ய ஆரம்பித்து விடலாம்.


                        (தொடரும்)


ஆற்றில் கிடந்தும் ..

பதிவு 13


நாம் செய்த மந்திரத்தோடு இணைந்த மூச்சுப் பயிற்சிக்கும், அட்டாங்க யோகத்தில் வரும் "தாரணைக்கும்" உள்ள வித்தியாசம் என்ன?


"பிரத்தியாகாரம்" என்பது வெளியே சஞ்சரிக்கும் மனதை தடுத்து, அதை உட்பக்கமாக கவனம் செலுத்த வைக்கும் ஒரு செயலாகும். ஏனெனில், மனம் வெளியே செல்லாமல் இருந்தால்தான் நம்மால் "தாரணையைச்" சரியாக கடைப்பிடிக்க முடியும். தாரணை வெற்றி பெற வேண்டுமானால் மனதைக் கட்டுக்குள் வைப்பது அவசியமான ஒன்று.

 (It is an act of 'over-powering')


மூச்சுப் பயிற்சியில் இதற்கானத் தேவை எதுவும் இல்லை. காரணம் இந்தப் பயிற்சி மனதின் உதவியின்றி நடப்பது.

(It is an act of 'overcoming')


தாரணையில் நாம் மனதில் ஒருமுக கவனத்தைக் கொண்டுவந்து, அதை தியானம் செய்வதற்காகப் பக்குவப் படுத்துகிறோம். தாரணையில் ஈடுபடும்போது மனதை தியான நிலைக்குப் பக்குவப் படுத்த வேண்டுமென்ற ஒரு நோக்கம் இருந்தது. 


ஆனால், நாம் செய்யும் மூச்சுப் பயிற்சியில் அந்த விதமான நோக்கம் எதுவும் கிடையாது. இருப்பினும், பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றால், மனம் அதற்கான பக்குவத்தை அடைந்து விடுகிறது.


                  (தொடரும்)


ஆற்றில் கிடந்தும் ..

பதிவு 14


நாம் செய்து வந்த மூச்சுப் பயிற்சியினால் கிடைக்கும் இரண்டாவது மிகப்பெரிய நன்மை, நம்மால் எளிதாக தியான நிலையை அடைந்து விட முடியும் என்பதுதான்.


தியானம் செய்வது எப்படி என்று பலரும் பல விதமாகச் சொல்லித் தருவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது 'அஹங்காரத்தின் அழிவு'.


தியானம் செய்வது பற்றிய முயற்சியில் நான் கண்டு கொண்ட உண்மைகள் ..

1. மூளையின் அடிப்பாகத்தில்  'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்தை குறிவைத்து அதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

2. மனம் உள்ளுக்குள் ஓரிடத்தில் நிலை நிறுத்தப் பட்டால், பிராணன் என்கிற வாயுவும் வெளியே செல்லாமல் மனதோடு தங்கிவிடும்.

(மன்மனம் எங்குண்டோ 

 வாயுவும் அங்குண்டு

 மன்மனம் எங்கில்லை

 வாயுவும் அங்கில்லை ..

 .. திருமந்திரம்)

இங்கு 'வாயு' என்று சொல்வது பிராணன் என்று சொல்லப்படும் வாயுவைத்தான்.

3. பிராணன் உடலை விட்டு வெளியே செல்லாவிடில் மனதாலும் வெளியே செல்ல இயலாது. ஆகவே தியானம் செய்வதில் எந்தவித இடைஞ்சலும் இருக்காது.

4. தியானம் செய்யும்போது 'உருவமற்ற' ஒரு பொருளை நினைத்து தியானம் செய்ய வேண்டும். உருவம் உள்ள பொருளை நினைத்தால் மனம் வெளியே சென்று விடும் வாய்ப்பு உள்ளது.

5. உருவமற்ற பொருள் எது என்று தேட வேண்டாம். "ஆத்மா" என்பது உருவமற்ற பொருள் தானே. அதை நினைத்து தியானம் செய்யலாம். 


தியானம் செய்வது எப்படி என்ற எனது அனுபவத்தை "தியானம்" என்ற தலைப்பில் ஒரு தொடராக பதிவிட்டுள்ளேன். அதனை 'முகநூலிலும்' (facebook), "piththantnv@blogspot.com" என்ற வலைத்தளத்திலும் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.


                  (முற்றும்)




 

No comments:

Post a Comment