Monday, 10 March 2025

திருமந்திரம்.. பாடல் 803

திருமந்திரம் ..  பாடல் 803

“நாவின் நுனியை நடுவே விசிறிடில்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே"

பாடலின் முதல் இரண்டு வரிகளும் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன. 

"நாவின் நுனியை நடுவே விசிறிடில்" ..... 
'நடுவே விசிறிடில்' என்று சொல்லும்போது, மேலே உள்ள அண்ணாக்கின் நடுப்பகுதியைக் குறிப்பிடுகிறார். 

நாவை மேல்நோக்கி மடித்து வெறுமனே அண்ணாக்கின் நடுப்பகுதியைத் தொடுவதை 'கேசரி முத்திரை' என்கிறோம். 

அண்ணாக்கின் நடுப்பகுதியை நாவினால் தொடுவதற்குப் பதிலாக, நாவை வைத்து ஒரு அழுத்தம் கொடுத்தால், அங்கு உமிழ்நீர் அதிகம் சுரக்கும். அதனை உள்ளே இறக்கினால், அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். 

நாவால் தொடுவது, நாவால் அண்ணாக்கை அழுத்துவது என்ற இரண்டையும் விட்டு திருமூலர் 'விசிறிடில்' என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாவால் அண்ணாக்கை தொடும் போதும், அழுத்தும் போதும் நமது கவனம் வேறு இடத்திற்கு சென்றுவிட வாய்ப்பு உண்டு. கவனம் அண்ணாக்கின் நடுவே இருக்க வேண்டும் என்பதற்காக 'விசிற' வேண்டும் என்கிறார். 

ஆனால், 'விசிறிடில்' என்ற வார்த்தை சரிதானா? பாடலுக்கு விளக்கவுரை எழுதிய சில உரையாசிரியர்கள் 'உரசிடில்' என  குறிப்பிடுகிறார்களே!? 

'விசிறுதல்', 'உரசுதல்'.. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்? 

விசிறும்போது விசிறிக்கும், 
யாருக்கு (அல்லது எதற்கு) விசிறுகிறோமோ அவருக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கும்.  உரசும் போது அந்த இடைவெளி இருப்பதில்லை. 

நுனி நாக்கு மேல்நோக்கி மடியும்போது அண்ணாக்கின் நடுப்பகுதியைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவே 'உரசிடில்' என்ற வார்த்தையே சரியெனத் தோன்றுகிறது. ஆனால், திருமூலர் 'விசிறிடில்' என்று ஏன் சொன்னார்? அதற்கு ஒரு காரணம் உள்ளது. 

பொதுவாக விசிறி உரசினால், விசிறுவது தடைப்படும்.  தவிர, அப்போது சிராய்ப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆனால், நுனி நாக்கு அண்ணாக்கின் நடுவே உரசினால் கூட விசிறுவது தடைப்படுவதில்லை. ஏனெனில், நுனி நாக்கு மற்றும் அண்ணாக்கு இரண்டிலும் ஈரப்பதம் இருப்பதால் 'உரசுதல்' என்ற வார்த்தைக்கு அங்கு இடமில்லை. உரசினாலும் விசிற முடியும் என்கின்ற காரணத்தினால்தான் 'விசிறிடில்' எனத் திருமூலர் கூறுகிறார். 

இனி, பாடலின் இரண்டாவது வரியை ஆராய்வோம். 

"சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்" ... 

"ஆக்ஞா" சக்கரம் எங்கே இருக்கிறது என்று  கேட்டால், நம்மில் பலர் புருவ மத்தியைக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அது இருப்பது நெற்றியின் 
வெளிப்புறத்திலா அல்லது உட்புறத்திலா என்றால் 
சந்தேகம் வந்து விடும்.  

எல்லா சக்கரங்களும் உடலின் உட்பகுதியில் இருக்கும்போது, "ஆக்ஞா" சக்கரம் மட்டும் எப்படி வெளியே இருக்க முடியும்? 

பல சித்தர்கள் "ஆக்ஞா" சக்கரம் இருக்குமிடம் எதுவென்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

திருமூலரும் "உச்சிக்கு கீழது, அண்ணாவுக்கு மேலது" எனக் குறிப்பிடுகிறார்.. திருமந்திரம் 1780.

நாவின் நுனி அண்ணாக்கின் நடுவே விசிறுவதற்கும், "ஆக்ஞா" சக்கரத்திற்கும் என்ன சம்பந்தம்? நாவின் நுனி தொடர்ந்து அண்ணாக்கின் நடுவே விசிறும்போது நமது கவனம் அண்ணாக்கின் நடுப்பகுதிக்கு சென்று விடும். அத்துடன்  நமது கவனம் நாம் அறியாமலே "ஆக்ஞா" சக்கரத்திற்கும் சென்று விடும். 

அந்த இடத்தில்தான் "ஜீவசக்தி" ஒளியாக உள்ளது என சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனைத்தான் 'சீவன்' எனக் குறிப்பிடுகிறோம். ஆக, நாம் எவ்வித முயற்சியும் இன்றி தியான நிலைக்கு சென்று விடுகிறோம். 

அத்வைத கருத்துப்படி
சீவன் என்பது சிவனின் (கடவுளின்) ஒரு பகுதிதான். நாம் இயங்குவதற்கு அதுதான் சக்தியைத் தருகிறது. திருமந்திரம் 2017-ஐ பாருங்கள்:-
"சீவன் எனச் சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே"

பின் குறிப்பு:-
தியான மார்க்கத்தில் பயணம் செய்பவர்களில் பல பேர் தியானம் செய்வதில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவிப்பதுண்டு. காரணம் அவர்கள் இயமம், நியமம் இரண்டையும் முறையாகக் கடைபிடிக்காமல் ஆசனம், பிராணாயாமம் இரண்டையும் கற்க ஆரம்பித்து விடுவதுதான். 

கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கடைபிடிக்காமல் தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் நல்ல முறையில் ஒத்துழைக்காது. 

ஆனால், நாம் நாவின் நுனியால் அண்ணாக்கின் நடுவே விசிறும்போது நமது செயலைப் பார்க்கும் மனம், நமது கவனம் நம்மை அறியாமலே ஆக்ஞா பக்கம் செல்வதை கவனிக்கத் தவறிவிடும். 

ஆகவே, நம்மிடம் இயமம், நியமம் கடைபிடிப்பதில்  குறைபாடு இருப்பினும், நம்மால்.. நாம் அறியாமலே.. ஆக்ஞா சக்கரத்தில் தொடர்ந்து தொய்வின்றி கவனம் செலுத்த முடியும்; மனம் எந்த இடையூறும் செய்யாது. நல்ல முறையில் தியானம் செய்வதற்கு இது ஒரு சுலபமான வழி. 

முயற்சி செய்து பாருங்கள்; உண்மை புரியும். 

(முற்றும்)

No comments:

Post a Comment