திருக்குறள். திருவள்ளுவர்
மனித குலத்திற்கு அளித்த கொடை.
உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில், பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்.
பல்வேறு அறிஞர்கள் இந்த நூலுக்கு விளக்கவுரை எழுதி உள்ளனர். இருந்தாலும், சில விளக்கங்கள் முழுமையான மெய்ப்பொருளை எடுத்துரைக்கவில்லையோ என்ற சந்தேகமும் வருகிறது.
அப்படிப்பட்ட குறள்களுக்கு புதிய கோணத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளன. அவை சரியா என்பதை முடிவுசெய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.
பித்தன்
............................................................................................................................................................
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் ... ...
(குறள் 121)
“அடக்கம் என்னும் பண்பு
ஒருவனைத் தேவர் நடுவே கொண்டு சேர்க்கும்; அடங்காமை என்னும் குணம் நரகத்தில்
தள்ளிவிடும்”.
…………………………………………………………………………………………………………
இந்த குறளில் உள்ள ‘அடக்கம்’ என்ற வார்த்தையை கொஞ்சம் ஆராய வேண்டி உள்ளது.
கீழே கொடுத்துள்ள வார்த்தை ஜோடிகளைப் பாருங்கள்.
அடக்கு அடங்கு
அடக்குதல் அடங்குதல்
அடக்காமை அடங்காமை
அடக்கம் ?????????
கேள்விக்குறி உள்ள இடத்தில் என்ன வார்த்தையைப் போடவேண்டும்?
அங்கும் ‘அடக்கம்’ என்ற வார்த்தைதானே வரும்.
மேலே உள்ள குறளில் ‘அடங்காமை’ என்ற வார்த்தை வருவதினால், இங்கு ‘அடக்கம்’ என்பது ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கத்தைதானே குறிக்கும்.
‘அடங்குதல்’ என்று சொல்லும்பொழுது, மனம் அடங்குவதையே, அதாவது ஒரு மனிதனின் ‘தன்முனைப்பு’ (அஹங்காரம்) அடங்குவதையே குறிப்பிடுகிறோம்.
‘அடங்குதல்’ காரணமாக வரும் ‘அடக்கம்’, எந்த மனிதனுக்கு சாத்தியமாகும்?
குணத்தைப் பொறுத்து மனிதனை மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவர்களில் யாருக்கு இந்த ‘அடக்கம்’ கைகூடும்?
‘தமோ’ குணம் உள்ள மனிதன், மற்றவரின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு நடப்பவன். அவனிடம் பணிவும், அடக்கமும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அந்த ‘அடக்கம்’ அடங்குதல் காரணமாக வரும் அடக்கமாக இருக்கமுடியாது.
‘இரஜோ’ குணம் உள்ள மனிதன் தன்முனைப்பு மிக்கவனாக இருப்பான். எனவே அவனது செயலில் பரபரப்பும், மனதிற்குள் கொந்தளிப்பும் இருந்துகொண்டே இருக்கும். அத்தகைய மனிதனிடம் அடக்கத்தை எதிர் பார்க்கமுடியாது. அதையும் மீறி, அவன் அடக்கத்தை வெளிப்படுத்தினால், அதுவும் நிச்சயமாக ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கமாக இருக்க முடியாது.
‘சத்துவ’ குணம் உள்ள மனிதனிடம் மட்டுமே, ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கத்தை காணமுடியும். ஆனால் இங்கும், திருவள்ளுவர் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறார்.
‘சத்துவ’ குணம் உள்ளவர்களிடம் இயல்பாகவே ஆன்மிக விசயங்களை கற்றுக்கொள்வதிலும், அவற்றில் உள்ள மெய்ப்பொருளை உணர்வதிலும், தான் உணர்ந்ததை பிறருக்கு எடுத்துச் சொல்வதிலும் ஒரு ஆர்வம் இருக்கும். அதனாலேயே அவர்களிடம் ‘அடங்குதல்’ காரணமாக வரும் ‘அடக்கமும்’ இருக்கும் என்று சொல்லமுடியாது என்கிறார் அவர். குறள் 834 -ஐ பாருங்கள்:
“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின்
பேதையார் இல்”.
இங்கும் அவர் ‘தானடக்கா’ என்று சொல்லவில்லை; ‘தானடங்கா’ என்றுதான் சொல்லுகிறார்.
அதாவது ‘அடங்குதல்’ காரணமாக வரும் அடக்கத்தைதான் அவர் குறிப்பிடுகிறார்.
………………………………………………………………………………………………………….
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
... ... (குறள் 215)
“உலகத்தார் நன்றெனக் கொண்டவற்றை விரும்பிச் செய்யும் அறிவாளியின்
செல்வம் ........”
............................................................................................................................................................
“பேரறிவாளன்” என்பதற்கு மேலே கொடுக்கப்பட்ட அர்த்தம் சரியானதுதானா?
ஓரறிவு, ஈரறிவு என்ற வரிசைப்படிப் பார்த்தால் மனிதன் ஆறறிவு படைத்தவன். இருந்தாலும் அவனும் சிற்றறிவாளன்தான். ஏனெனில் ஆறாவது அறிவைத் தொடர்ந்து, ஏழாவது அறிவு, எட்டாவது அறிவு என்றெல்லாம் சொல்கிறார்களே!
அப்படியானால், பேரறிவாளன் என்பவன் யார்?
எவனொருவன் பேரறிவை, இறைத்தன்மையை அறிந்துகொள்கிறானோ, அவனே பேரறிவாளன் ஆகிறான்.
அத்தகைய மனிதனின் செல்வம் மட்டுமே ஊருணி நீராக உலகத்தாருக்கு பயன்படும்.
மற்றவர் செய்யும் ஈகை, பயனை எதிர்பார்க்கும் தன்மை உடையதாகவும் இருக்கலாம் அல்லவா?
..................................................................................................................................................................
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு ... ...
(குறள் 31)
“அறம் மக்களுக்குச் சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும்; எனவே,
அவ்வறத்தைக் காட்டிலும் நன்மை தருவது வேறில்லை”
...........................................................................................................................................................
திருவள்ளுவர் சிறப்பையும், செல்வத்தையும் என்றா சொல்லியிருக்கிறார்?
சிறப்புஈனும், செல்வமும் ஈனும் என்றுதானே சொல்லியிருக்கிறார். சிறப்பு என்று சொன்னவர், செல்வம் என்று சொல்லவில்லை; செல்வமும் என்று சொல்லியிருக்கிறார்.
எதனால் இந்த வேற்றுமை?
ஒரு கற்பனை காட்சி:
தாத்தா: இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு, உனக்கு பட்டுப்
பாவாடையும்,
பட்டுச் சட்டையும் வாங்கித் தருகிறேன்.
பேத்தி: அப்ப, பட்டாசு?
தாத்தா: பட்டாசும் வாங்கித் தருகிறேன்.
பாவாடை, சட்டை என்றவர், பட்டாசும் என்று ஏன் சொன்னார்?
தாத்தாவைப் பொறுத்தவரை பாவாடை, சட்டை இரண்டும்தான் முக்கியம்;
இருந்தாலும் பேத்தி கேட்டதால், பட்டாசும் வாங்கித் தருகிறேன் என்கிறார்.
அறத்தின் வழியில் நடந்தால் சிறப்புஈனும் என்று சொன்ன வள்ளுவர், அறத்தின் வழியில் நடந்தால் செல்வம் கிடைக்காதா என்று நினைக்கக் கூடும் என்பதால், செல்வமும் ஈனும் என்கிறார்.
இதில் ஒரு மெய்ப்பொருளும் அடங்கி இருக்கிறது. அறத்தின் வழியில் நடந்தால் சிறப்பு வரும்; அந்த மனிதனுக்கு அவனது தகுதிக்கு ஏற்ப செல்வமும் வரலாம்; ஆனால் அவனுக்கு அதில் எந்தவித ஈர்ப்பும் ஏற்படாது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
..................................................................................................................................................................____________________________________________________________________________
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு ... ...
(குறள் 786)
“ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று;
அன்பால் மனமும் மலர நட்புக் கொள்வதே நட்பாகும்”.
............................................................................................................................................................
இந்தக் குறளில் மூன்று வார்த்தைகளை சற்று விரிவாகப் பார்க்கவேண்டி உள்ளது.
அவை ‘முகம்’, ‘நெஞ்சம்’ மற்றும் ‘நெஞ்சத்து அகம்’.
மனிதனின் உருவம் ஐந்து உறைகளால் போர்த்தப்பட்டது என்று மறை ஞானிகள் சொல்கிறார்கள். அவை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்.
அவற்றிற்கு முறையே உணவு உறை, காற்று உறை, மன உறை, புத்தி உறை மற்றும் ஆனந்தமய உறை என்று பெயர் சூட்டயுள்ளார்கள்.
இவற்றில் உணவு உறை மற்றும் காற்று உறை இரண்டும் உடலைச் சார்ந்து இருப்பவை.
ஞானியர் உடலைப் பருவுடல் என்றும், மனதை நுண்ணுடல் என்றும் சொல்கிறார்கள்.
மனம் என்று சொல்லும்பொழுது அதனை உணர்வு மனம் என்றும், உணர்வற்ற மனம் என்றும் பிரித்துச் சொல்வார்கள். உணர்வற்ற மனதை ஆழ்மனம் என்றும் சொல்வதுண்டு.
ஆனந்தமய உறையின் மேல் பதிவுகள் நிகழும் பொழுது, அது ஆழ்மனம் என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பதிவுகளின் தன்மையைப் பொறுத்து ஒரு மனிதனின் அஹங்காரம் தன்முனைப்பாகவும், திமிராகவும், செருக்காகவும் உருவெடுக்கிறது.
உணர்வு மனம் மூலமாகவே ஆழ்மனதில் பதிவுகள் நிகழ்கின்றன. ஆழ்மனப் பதிவுகளின் அடிப்படையில் புறவுலகில் செயல்பட விரும்பினாலும் அதுவும் உணர்வு மனம் மூலமாகவே நடைபெறவேண்டும்.
நெஞ்சம் என்பது பொதுவாக மனதைக் குறிக்கும். வள்ளுவர் ‘நெஞ்சத்து அகம்’ என்று சொல்வதால் ‘நெஞ்சத்துப் புறம்’ என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?
அகம் என்பது உள்ளே உள்ளதைக் குறிப்பது; புறம் என்பது வெளியே உள்ளதைக் குறிப்பது. அப்படியானால், ஆழ்மனதை அகம் என்றும், உணர்வு மனதை புறம் என்றும் சொல்லலாம் அல்லவா?
முகத்தில் ஏற்படும் “நக”, உணர்வு மனம் சம்மதித்தால் மட்டுமே வரும். ஆனால் அது பலநேரங்களில் போலியாகவே, உண்மையான உணர்வுகளை மறைத்து, (சூழ்நிலைக்கு ஏற்ப) வெளிப்படுத்துவதாகவே இருக்கும். ஆகவே அது உண்மையான “நக” ஆகாது என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவர் உண்மையான “நக” என்பது ஆழ்மனதில் ஏற்பட வேண்டும் என்கிறார்.
______________________________________________________________________________
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. ... ...
(குறள் 29)
“நற்குணம் என்னும் மலையின் மேல் ஏறி நின்ற துறவியின் சினம் நிற்பது
சிறு பொழுதே என்றாலும், எவர்க்கும் அதன் விளைவைத் தாங்குதல் முடியாது”.
............................................................................................................................................................
நற்குணம் நிறைந்த சான்றோரிடம் பழி உணர்ச்சி சிறிதும் இருக்காது. பின் எதற்காக “சினம் கொண்டால் தாங்க மாட்டாய்” என்று பொருள் கொள்ள வேண்டும்? அதுவும் நீத்தார் பெருமையை கூறவந்த இடத்தில்.
சினம் எப்பொழுது வெளிப்படுகிறது?
மந்தரைக்கு இராமன் மேல், அவன் சிறுவனாக இருக்கும்பொழுது, கோபம் வந்தது. அவன் இராஜகுமாரன் அல்லவா; அதனால் அவளால் தனது கோபத்தை வெளிக்காட்டமுடியவில்லை.
ஆனாலும் நடந்த சம்பவத்தை மீண்டும், மீண்டும் நினைத்துகொண்டிருந்ததால், மனதில் இருந்த கோபம் ஆழ்மனம் வரைக்கும் இறங்கிவிடுகிறது. அங்கே அது தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கனன்று கொண்டிருக்கிறது. அவள் எதிர்பார்த்த சந்தர்ப்பம், இராமனுக்கு திருமணம் நடந்து, பட்டாபிஷேகத்திற்கு தயாராக நின்ற போது வருகிறது. உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த சினத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறாள்.
ஆக, சினம் வரவேண்டுமென்றால் ஆழ்மனதில் அதற்குரிய காரணம் பதிவாகி இருக்கவேண்டும். சான்றோரைப் பொறுத்தவரை ஆழ்மனதில் எந்தவிதப் பதிவும் இருக்காது. எனவே அவர்கள் சினம் கொள்வது மிகவும் அரிது.
அப்படியானால் வள்ளுவர் சொல்லவந்தது என்ன?
நமக்கு யாரேனும் தீங்கு இழைத்தால், நமக்கு கோபம் வருகிறது. ஆனால் நம்மால் அந்த நேரம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால், அந்த கோபம் நமக்குள் தங்கிவிடுகிறது; நாமும் கோபம் வருவதற்கு காரணமாக இருந்த சம்பவத்தைப் பத்திரமாக ‘அடைகாக்க’ ஆரம்பித்து விடுகிறோம். மீண்டும், மீண்டும் நடந்து முடிந்த சம்பவத்தை நினைக்கும் பொழுது, நமது கோபம் ஆழ்மனம் வரை சென்று விடுகிறது. நாமும் பழிவாங்குவதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
சான்றோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு யாரேனும் தீங்கு செய்தால், சாதாரணமாக கோபம் வராது; அப்படியே வந்தாலும் கணநேரம் கூட அதை ‘அடைகாக்க’ மாட்டார்கள் என்று வள்ளுவர் சொல்கிறார்.
குறளை கீழ்க்கண்டவாறு பிரித்துப் பாருங்கள்: - -
‘குணமென்னும் குன்றேறி நின்றார்,
வெகுளி, கணமேயும் காத்தல்
அரிது’
இன்னொன்றும் சொல்லவேண்டி உள்ளது, குணமென்னும் குன்றேறி நிற்பவர் துறவியாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல; இல்லறத்தில் உள்ளவனும் குணமென்னும் குன்றேறி நிற்கமுடியும்._____________________________________________________________________________
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. ... ...
(குறள் 347)
“பற்றுக்களைப் விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத் துன்பங்கள் விடாமல்
இறுகப்பற்றி நிற்கும்”.
............................................................................................................................................................
குறளுக்கான பொருள் சரியாக இருந்தாலும், எதிர்மறையாக இல்லாமல், நேரடியாகவே பொருள் கொள்ளலாமே. எப்படி?
“பற்றினைப் பற்றாதவரை, இடும்பைகள் பற்றாது” – இது நேரடியாகவும், எளிதாகவும் இருக்கிறதல்லவா?
______________________________________________________________________________
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை ...
... (குறள் 37)
“அறத்தின் பயன் இன்னதன்மையுடையது என்று சொல்ல வேண்டியதில்லை;
பல்லக்கைச் சுமந்து செல்பவனுக்கும், அதில் ஏறிச் செல்பவனுக்கும் உள்ள வேற்றுமையே
அதனைக் காட்டிவிடும்”.
............................................................................................................................................................
இந்தக் குறளுக்கு வேறு வித விளக்கங்களும் உள்ளன. நாம் புதிய கோணத்தில் இதனைப் பார்ப்போம்.
வள்ளுவர் காலத்தில் பயணம் செய்வதற்கு பல்லக்கு ஒரு முக்கிய வாகனம். அதில் பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள், மதகுரு, மந்திரி மற்றும் பணக்காரர்கள் போன்றோர் போவதுண்டு.
இவர்களில் மதகுரு, மந்திரி இருவரும் அறம் என்றால் என்னவென்று தெரிந்தவர்கள்; பணக்காரர்களுக்கும் அறம் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும், அதனைப் பற்றிய கேள்விஞானம் இருப்பதுண்டு.
இவர்கள், அறம் என்றால் என்னவென்று தெரிந்திருந்தும், கால்களால் நடக்காமல் பல்லக்கில் அமர்ந்து ஊர்ந்து செல்லலாமா; இவர்களிடம் அறத்தைப் பற்றி பேசி என்ன பயன் என்கிறார் வள்ளுவர்.
அடுத்தவர்களைத் துன்பப்படுத்தி, அவர்கள் சுமக்கும் பல்லக்கில் ஊர்ந்து செல்பவர்களிடையே அறத்தைப் பற்றி பேசுவது வீண் என்கிறார் வள்ளுவர். இதில் ஒரு சமுதாயச் சாடல் தெரிகிறது.
அடுத்தவன் முதுகில் சவாரி செய்பவனிடமும், அடுத்தவன் வயிற்றில் அடித்து பிழைப்பவனிடமும் அறத்தைப் பற்றிப் பேசாதே என்கிறார் வள்ளுவர்.
______________________________________________________________________________
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
... ...
(குறள் 42)
“துறவியர்க்கும் ஏழைக்கும் ஆதரவின்றி இறந்தவர்க்கும் இல்வாழ்க்கையில்
இருப்பவன் துணையாவான்”
............................................................................................................................................................
‘இறந்தார்க்கும்’ என்பதற்கு ஆதரவின்றி (உடல்) இறந்தவர்கள் என்று சொல்வது சரிதானா?
உடல் இறப்பது ஒன்றுதான் இறப்பா? வேறுவகையான இறப்பு என்று எதுவும் இல்லையா?
“சினம் இறக்கக் கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே” என்பதற்கு என்ன பொருள்?
இரமண மகரிஷி வாலிபப் பருவத்தில், அண்ணாமலையில் கடும் தவம் செய்த பொழுது, அவர் மனம் இறந்த நிலையில் இருந்தார். பிச்சை எடுத்து உடலைக் கவனிக்கவேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாத நிலையில் அவர் இருந்தார். அப்பொழுது பல இல்லறத்தார்கள் அவரைப் பராமரித்து வந்தனர்.
ஆக, உடல் இறந்த மனிதருக்கல்ல, மனம் இறந்த மனிதருக்கு இல்வாழ்வான் துணைநிற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஏனெனில் மனம் இறந்த துறவியர்கள் இல்லறத்தான் இருக்கும் வீடு தேடிவந்து பிச்சை கேட்கமாட்டார்கள்.
...................................................................................................................................................................
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து ...
... (குறள் 125)
“அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நல்லதாகும்; அவெல்லாருக்குள்ளும்
செல்வர்க்கே அது மற்றொரு செல்வமாகும் சிறப்பினையுடையது”.
............................................................................................................................................................
இந்த குறள் ‘அடக்கமுடைமை’ என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது. ‘அடக்கமுடைமை’ என்று சொல்லும்பொழுது, அடங்குதல் காரணமாக வரும் அடக்கம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதே அதிகாரத்தில் ஒரு குறளில் “கற்றடங்கல் ஆற்றுவான்” என்று வள்ளுவர் சொல்கிறார். கற்றால் மட்டும் போதாது; மனம் அடங்கவேண்டும் என்கிறார்.
மனம் எப்பொழுது அடங்கும்? மனம் இறந்தால் மட்டுமே மனம் அடங்கும். சற்று விரிவாகப் பார்ப்போம்.
‘பணிதல்’ என்பது போலியாக இருக்கலாம்; நிர்பந்தம் காரணமாக இருக்கலாம்; வேறு எந்தக் காரணமாகவும் இருக்கலாம்; ஆனால் அது உண்மையான ‘பணிதலாக’ இருக்கமுடியாது.
இயல்பாக, ஒரு மனிதனின் சுபாவமாக ‘பணிவு’ இருப்பதற்கு என்னசெய்ய வேண்டுமென்று இந்த குறளில் ஒரு குறிப்பு தருகிறார் வள்ளுவர்.
“அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து” என்பதை “அவர் உள்ளும்செல்வர்க்கே செல்வந் தகைத்து” என்று பிரித்துப் பொருள்கொண்டால் நமக்கு உண்மை விளங்கும்.
“உள்ளும்செல்வர்க்கே” என்றால் ‘அகத்தாய்வில் ஈடுபடுபவர்க்கே’ என்று எடுத்துகொண்டால், அதனால் விளையும் பலன்கள் ஒன்றன் பின் ஒன்றாக நமக்குத் தெரியவரும்.
ஒரு மனிதன் அகத்தாய்வில் ‘அதி தீவிரத்துடன்’ முழு மூச்சாக ஈடுபடும்பொழுது, அந்த அகத்தாய்வு .அவனை ஆத்ம விசாரம்வரை கொண்டு செல்லுமானால் அவனது ‘தன்முனைப்பு’ சிறிது, சிறிதாக குறையத் தொடங்குகிறது.
அத்துடன் அவன், ‘என்னுடைய’ என்னும் பற்றிலிருந்து விடுபட்டு ‘உடமைத்தனம்’ இல்லாதவனாக மாற ஆரம்பிக்கிறான்.
‘உடமைத்தனமின்மையின் அளவு பூரணமாகும்பொழுது, அவனது ‘சித்ததின்மேல்’ உள்ள பதிவுகள் (ஆழ்மனதிற்கு காரணமாக இருந்தவை) ஒவ்வொன்றாக மறைகின்றன.
அவனது ஆழ்மனம் நிர்மலமாகிறது. (இதனைத்தான் மனம் இறத்தல் என்று சொல்கிறோம்)
ஆழ்மனம் நிர்மலமாக இருப்பதால், அதன்பின் அவனிடமிருந்து எந்தவித எண்ணங்களும் பீரிட்டு கிளம்புவதில்லை.
“யோகம்” என்பதற்கு பலபேர் பலவிதமாகப் பொருள்கொள்வதுண்டு. ரிஷி பதஞ்சலி இதற்கு “சித்த விருத்தி நிரோத” என்கிறார். அதாவது சித்தத்திலிருந்து எந்தவித சிந்தனையும் எழும்பாமல் இருப்பது.
இப்பொழுது அந்த மனிதனிடம் இருப்பது உண்மையான, போலித்தனமில்லாத “பணிவு”; அதனை “நாணம்” என்றும் சொல்லலாம்.
இந்தப் பணிவு, அந்த மனிதனுக்கு ஒரு ‘அணிகலனாக’ மாறிவிடுகிறது; “அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு” என்கிறார் வள்ளுவர்.
அவனுக்கு ‘சச்சிதானந்தின்’ பொருள் விளங்குகிறது.
அவன், பத்திரகிரியார் சொல்வதுபோல, “தூங்காமல் தூங்கி சுகம்காண” ஆரம்பிக்கிறான்.
இதுவே எல்லா செல்வத்தையும் விட பெரிய செல்வம்.
..................................................................................................................................................................
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை ...
... (குறள் 1014)
நிறைகுணமுடையவர்க்கு, செய்யத்தகாதவற்றைச் செய்ய நாணுதல் ஓர் அணி
போன்றதாகும்; ...........
............................................................................................................................................................
இந்தக் குறள், நாணுடைமை என்கிற அதிகாரத்தின் கீழ் வருகிறது. இதில் உள்ள பத்து பாடல்களுக்கும் பொருள் விளக்கம் சொல்லும்பொழுது, நாணம் என்ற வார்த்தையே உபயோகிக்கப் பட்டுள்ளது.
நாணம் என்ற வார்த்தைக்கு பலவித பொருள் உள்ளது; நாணம், வெட்கம், கூச்சம் என்று பல அர்த்தங்கள். ஆங்கில மொழிபெயர்ப்பில் shame என்ற வார்த்தை கையாளப்பட்டுள்ளது. அதற்கு கூச்சம் என்ற பொருள் இருந்தாலும், அவமானம் என்ற பொருளையும் மக்கள் தவறாக எடுத்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது.
வள்ளுவர் நாணம் என்று சொல்லும்பொழுது, அதற்கு மேலே சொல்லப்பட்ட அர்த்தங்கள் சரியாக இருக்கமுடியுமா?
ஒரு அறிவில்லாத மனிதனை, அறிஞர்கள் சபையில் பேசச் சொன்னால், அவனுக்கு கூச்சமாக இருக்கும்; அதனை வள்ளுவர் சொல்லும் நாணத்தோடு ஒப்பிடமுடியுமா?
திருமணப் பெண்ணுக்கு, மணவறையில் அமர்ந்திருக்கும்போழுது ஒருவித நாணம் இருக்கும்; அதனை வள்ளுவர் சொல்லும் நாணத்தோடு ஒப்பிடமுடியுமா?
அப்படியானால் வள்ளுவர் சொல்லும் நாணம் எத்தகையது?
‘சான்றோர்’ என்பவர் யார்? ‘கற்றடங்கல் ஆற்றுவான்’ என்கிறார் வள்ளுவர். கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்று, மனம் அடங்கியவனை சான்றோர் என்கிறார். அத்தகைய சொன்றோரின் பண்பு எப்படி இருக்கும்?
·
‘..........
நாயினும் கடையேன்’
·
‘..........
தொண்டருக்குத் தொண்டரென’
·
‘..........
மனமிறக்க கல்லாற்கு வாயேன் பராபரமே’
·
‘தன்னைத்
தாழ்த்திகொள்பவன் உயர்த்தபடுவான்’
·
‘மீண்டும்
குழந்தையாக மாறாதவரையில்.......’
மனம் இறந்த மனிதனிடம் தற்பெருமை, தன்னைப்பற்றிய பெருமிதம், தன்முனைப்பு என்று எதுவுமே இருக்காது. அவன் இறைவனின் கருவியாக மாறிவிடுகிறான். அதன்பின் அவனால் எந்தவித ஆடம்பரத்தையும், புகழ்ச்சியையும் விரும்பமுடியாது.
‘சித்தத்தில் எந்தவித விருத்தியும்’ இல்லாததால், அவன் ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையாக (மனதளவில்) மாறிவிடுகிறான்.
அதன்பின், அவனிடமிருந்து வெளிப்படும் நாணம், அவனது இயல்பாகவே இருக்கும்.
அது, தன்னில் தன்னைக் கரைத்துவிட்ட நிலையில் வருவது. ______________________________________________________________________________
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு ... (குறள் 299)
பொய்யா விளக்கே விளக்கு ... (குறள் 299)
புற இருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்குகள் ஆகா; குணத்தால்
நிறைந்தவருக்கு மன இருள் போக்கும் பொய் பேசாமையாகிய விளக்கே விளக்கு.
............................................................................................................................................................
“எல்லா விளக்கும்” என்பதற்கு ‘புற இருளைப் போக்கும் விளக்குகள்’ என்று அர்த்தம் கொள்வது சரிதானா?
விளக்கு என்பதற்கு ‘ஞானம்’ என்றும் சொல்வதுண்டு.
“விளக்கினை யேற்றி வெளியை அறிமின்.............(1818)” என்கிறார் திருமூலர். அதாவது, ஞானம் என்ற விளக்கினை ஏற்றி எல்லை அற்ற பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார்.
‘விளக்கு’ என்பதற்கு ஞானம் என்று பொருள்கொண்டால், இந்தக் குறளுக்கு என்ன அர்த்தம்?
வேதாந்தம், சித்தாந்தம் என்று திருமறைகளில் உள்ள பலப்பல நூல்களைக் கற்று ஞானம் தெரிந்த மனிதனாக இருந்தாலும், மன இருள் போக்கும் பொய் பேசாமையாகிய விளக்கே உண்மையான விளக்கு என்று சொல்கிறார் வள்ளுவர்.
______________________________________________________________________________
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். ...
... … (குறள் 292)
குற்றமற்ற நன்மையை உண்டாக்குமானால், பொய்யான சொற்களும் உண்மை என்று
நினைக்கத்தக்க இடத்தைப் பெறுவனவாகும்.
............................................................................................................................................................
‘வாய்மை’ என்ற அதிகாரத்தில் வரும் ‘பொய்’ என்ற சொல்லுக்கு, பொய் பேசுவது, பொய்யை நினைப்பது போன்றே அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அர்த்தம் மட்டும் போதுமா?
பொய்யான சொற்கள் மட்டுமல்ல, பொய்யான, தவறான – இன்னும் சொல்லப்போனால் உண்மைக்குப் புறம்பான – செயல்கள்கூட பொய்ம்மைதான். தவறான எண்ணங்கள் மனதில் தோன்றினால்கூட, அதுவும் பொய்ம்மைதான்.
கர்ணன் அம்பு எய்தபொழுது, அர்ஜுனனைக் காப்பதற்காக கிருஷ்ணர் தேரைக் காலால் அழுத்தியதும் பொய்ம்மைதான்; மல்யுத்தத்தில் பீமன் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக தனது தொடையைத் தட்டிக் காட்டியதும் பொய்ம்மைதானே.
எனவே, பொய்ம்மை என்பதற்கு, ‘உண்மைக்குப் புறம்பான’ என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும் அல்லவா?
______________________________________________________________________________
.
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோவா தவர். ...
... … (குறள் 270)
உலகத்தில் செல்வமுடையவர் சிலரும், செல்வமில்லாதவர் பலருமாக
இருப்பதற்குக் காரணம், தவம் செய்கின்றவர்
சிலரும், தவம் செய்யாதவர் பலருமாக இருத்தலே.
............................................................................................................................................................
தவம் செய்பவருக்கு நோக்கம் ஞானம் பெறுவதாக இருக்குமே அல்லாது, செல்வம் பெறுவதற்காக இருக்காது.
குறள் 267, துன்பம் சுடச் சுட தவம் செய்பவருக்கு ஞானம் கைகூடும் என்றுதான் சொல்கிறது. எனவே,
“உலகத்தில் செல்வமுடையவர் சிலரும், செல்வமில்லாதவர் பலருமாக இருப்பதற்குக் காரணம்” என்பதற்குப் பதிலாக
“உலகத்தில் ஞானமுடையவர் சிலரும், ஞானமில்லாதவர் பலருமாக இருப்பதற்குக் காரணம்” என்று புரிந்துகொள்ளவேண்டும்.
..................................................................................................................................................................
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. ...
... (குறள் 126)
ஆமை தன் உறுப்புகளை உள்ளே இழுப்பதுபோல ஒருவன் ஒரு பிறப்பில்
ஐம்பொறிகளையும் அடக்குவானெனில், அஃது அவனை அடுத்த ஏழு பிறப்புகளிலும் தீமையிலிருந்து
பாதுகாக்கும்.
............................................................................................................................................................
ஐம்பொறிகளை அடக்குவது என்றால் என்ன? ஐம்பொறிகளை அடக்க முடியுமா என்ன?
கண்ணால் பார்க்கிறோம், காதால் கேட்கிறோம் என்று சொல்வார்கள். ஆனால் கண்ணால் பார்க்கமுடியுமா அல்லது காதால்தான் கேட்க முடியுமா?
ஒரு சம்பவம் நடக்கும்பொழுது, கண் அதைப் பார்க்கிறது; காதும் அங்கு நடக்கும் உரையாடல்களைக் கேட்கிறது. ஆனால் அந்த நேரத்தில், குறிப்பிட்ட மனிதனின் மனம் அங்கு இல்லையென்றால், அந்த மனிதனால் நடைபெற்ற சம்பவத்தை நினைவு கூற முடியுமா?
உண்மையில் கண்ணும், காதும் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உதவும் கருவிகளே. அவற்றின் பின்னே ஐம்புலன்கள் உள்ளன. ஐம்புலன்கள் ஐம்புலன்கருவிகளுக்கும், மனதிற்கும் இடையே இணைப்புபாலமாக செயல்படுபவை.
‘ஐந்தடக்கல்’ என்று சொல்லும்பொழுது, அது ஐம்புலன்களின் அடக்கத்தையே குறிக்கிறது. ஆனால், ஐம்புலன்கள் எப்பொழுது அடங்கும்?
மனிதனிடம் உள்ள தன்முனைப்பு, அதன் தீவிரத் தன்மையிலிருந்து குறையும்பொழுது
மட்டுமே, அவனது மனமும் அடங்க ஆரம்பிக்கும். மனம் அடங்க, அடங்க, அது
புறவுலகிலிருந்து ஒதுங்க ஆரம்பிக்கும்; அதன்பின் அது ஒடுங்கவும் ஆரம்பித்துவிடும்.
மனம் ஒடுங்க, ஒடுங்க, அது ஊமையாகிவிடுகிறது; அப்போழுதுமட்டுமே, ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கின்றன.
அதனால்தான் ‘பத்திரகிரியாரும்’ - -
ஆமை வருமாட்கண்டு
ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்? –
என்று பாடுகிறார்.
...................................................................................................................................................................
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. ...
... (குறள் 266)
தவம் செய்கின்றவரே தமக்கு உறுதியாகிய நற்செயலைச் செய்பவராவர்; தவம்
செய்யாதவர் ஆசையாகிய வலையில் சிக்கித் தமக்குத் தீமை செய்பவராவர்.
............................................................................................................................................................
‘தவம் செய்கின்றவரே’ என்று சொல்லும்பொழுது, தியானம் செய்கிறவர்கள் மற்றும் துறவிகள் மட்டுமே என்று நினைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அது சரிதானா?
அத்துடன் ‘தவம் செய்யாதவர் தமக்குத் தீமை செய்பவராவர்’ என்பதும் சரியான பொருளைத் தருவதாகத் தெரியவில்லை.
தவம் செய்பவர்கள் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்; அவர்கள் பெரும்பாலும் துறவு நிலையை விரும்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் தமது இயல்புக்குத் தகுந்த செயல்களில்தான் ஈடுபடுவார்கள்; அதனையே ‘தங்கருமம்’ என்று எடுத்துக்கொள்ளலாம்.
அதேநேரம், ‘உயிர்க்குறுகண் செய்யாமை தவத்திற்கு உரு’ (குறள் 261) என்று வள்ளுவர் சொல்வதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?
குறள் 374-ல் ‘திருவேறு தெள்ளியராதலும் வேறு’ என்கிறார். அதாவது, வாழ்க்கைத் தரத்தில் (செல்வத்தில்) நாட்டமுள்ளவர்கள், வாழ்க்கை நெறியில் (ஞானத்தில்) நாட்டமுள்ளவர்கள் என மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்.
செல்வத்தில் நாட்டமுள்ளவர்களில், சிலர் வாழ்வியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செல்வம் சேர்க்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
மற்றவர்கள் வாழ்வியல் நெறி முறைகளுக்குக் கட்டுப்படாமலும் செல்வம் சேர்க்க விரும்புவார்கள். அவர்களிடம் ஆசை மிகுந்து காணப்படும்.
வாழ்வியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்புரிபவர்கள், ‘உயிர்க்குறுகண்’ செய்யமாட்டார்கள். எனவே, அவர்கள், இல்லற தர்மத்தில் இருந்தாலும், தவம் செய்பவர்களே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
நெறிமுறைகளுக்குக் கட்டுப்படாத மற்றவர்கள் மட்டுமே, தமக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் தீமை புரிபவர்களாக இருப்பார்கள்.
______________________________________________________________________________
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. ...
... (குறள் 355)
எந்தப் பொருள் என்ன இயல்புடையதாக காணப்பட்டாலும், அந்தப் பொருளின் உள்ளே உள்ள உண்மைப் பொருளை அறிந்துகொள்வதே தெளிந்த அறிவாகும்.
............................................................................................................................................................
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. ...
... (குறள் 423)
எப்பொருளை எத்தகையோர் சொல்லக் கேட்டாலும், அப்பொருளின் உண்மைப் போருளைக்க் காண்பதுதான் அறிவாகும்.
............................................................................................................................................................
வள்ளுவர் ‘மெய்ப்பொருள்’ என்று சொல்வதற்கு, ‘உண்மைப் பொருள்’ என்று அர்த்தம் சொல்வது சரிதானா? மெய், உண்மை என்கிற இரண்டு சொற்களுக்கும் ஒரே அர்த்தம்தானா?
‘மெய்’ என்ற சொல்லுக்கு எதிர்மறையாக ‘பொய்’ என்று சொல்கிறோம்; ‘உண்மை’ என்ற சொல்லுக்கும் எதிர்மறையாக ‘பொய்’ என்றுதான் சொல்கிறோம். அதனாலேயே ‘மெய்’ மற்றும் ‘உண்மை’ என்கிற இரண்டு சொற்களும் ஒரே பொருளைத்தான் தரும் என்று சொல்லலாமா?
‘உண்மை’ என்று நாம் சொல்வது, எப்பொழுதும் உண்மையாக இருப்பதில்லை; ஆனால் ‘மெய்’ என்று சொல்லும்பொழுது, அது எப்பொழுதும் உண்மையாக இருப்பது என்று அர்த்தம்.
நாம் உண்மை என்று நினைப்பது அல்லது முடிவுசெய்வது நிரந்தரமான, மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத வகையில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ‘மெய்ப்பொருள்’ என்று வள்ளுவர் சொல்கிறார்.
ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்பொழுது, அவனது உடம்பு ‘உண்மை’; ஆனால் அவனது உடம்பு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. ஆகவே, அது ‘மெய்’ அல்ல. இருந்தாலும் ‘மெய்யுடம்பு’ என்று சொல்கிறோம். ஏன்?
“......உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்; உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான்....” என்று திருமூலர் பாடுகிறார். இதற்கு என்ன அர்த்தம்? உடம்பு உண்மை; ஆனால் நிரந்தரமில்லாதது. உள்ளே உள்ள ‘உறுபொருள்’ – அதாவது ‘இறைவன்’ – நிரந்தரமானது; அதனால் அது ‘மெய்’. ஆகவே, ‘உண்மை’ என்று நாம் நினைப்பது, நிரந்தர உண்மையாக இருந்தால் அது ‘மெய்’.
“ஊருஞ் சதமல்ல; உற்றார் சதமல்ல; உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல; பெண்டீர் சதமல்ல; பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல;
செல்வஞ் சதமல்ல; தேசத்திலே
யாருஞ் சதமல்ல; நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே!” என்று பாடுகிறார் பட்டினத்தார்.
அதாவது, “ஏகம்பர நாதன்” ‘மெய்’,
மற்றவையெல்லாம் ‘உண்மை’, ஆனால் ‘மெய்யல்ல’ என்கிறார்.
______________________________________________________________________________
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. ...
... (குறள் 452)
தண்ணீர் சேர்ந்த நிலத்தின் இயல்புக்கேற்ப மாறுபட்டு நிற்கும்; அதபோல மக்களின் அறிவும் தாம் சேர்ந்த இனத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்.
............................................................................................................................................................
இந்தக் குறள் ‘சிற்றினம் சேராமை’ என்கிற அதிகாரத்தின் கீழ் வருகிறது.
இந்த அதிகாரத்தில் ‘இனம்’, ‘இனநலம்’, ‘இனந்தூய்மை’ ‘சிற்றினம்’
மற்றும் ‘தீயினம்’ போன்ற வார்த்தைகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் பொருள் கூறும்பொழுது
‘இனம்’ என்ற வார்த்தையே உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.
‘இனம்’ என்று சொல்லும்பொழுது, குறிப்பிட்ட மனிதனுடன் இருக்கும் மக்கள்
எனப் பொருள்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. பலரும் இப்படியே நினைக்கவும்கூடும்.
மேலே சொன்ன குறளில், நீரைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார். நீரைச் சேர்ந்த இனமென்று எதைச் சொல்லலாம். பனி, பனித்துளி, நீராவி அனைத்தும் நீரைச் சேர்ந்தவைதான்; ஏன், மேக கூட்டத்தையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால், நதி, ஆறு, குளம், குட்டை, அருவி, ஓடை, வாய்க்கால், கடல் போன்றவைகளையும்கூட இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால், நிலம் நீரின் இனத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதது.
வள்ளுவர் ஏன் அதைக் குறிப்பிடுகிறார்?
உடலை விற்றுப் பிழைக்கும் பெண் அவள்; இருந்தாலும் தன் செயலுக்கு வருந்தி இறைவனை நோக்கி மனம் நோக அழுது புலம்புகிறாள். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எதிர்புறம் வசிக்கும் துறவியோ, தனது மதச் சடங்குகளைத் தவறாமல் செய்து வந்தாலும், எதிர்வீட்டுப் பெண்ணின் தொழிலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்; அத்துடன் அவளிடம் அவள் எவ்வளவு பாபங்கள் செய்கிறாள் என்று எடுத்துச் சொல்லி, நல்லபடி நடக்க அறிவுரையும் வழங்குகிறார். இருவரும் ஒரே நேரத்தில் இறக்க, பெண் சொர்க்கத்திற்கும், துறவி நரகத்திற்கும் செல்ல நேரிடுகிறது. பரமஹம்சரின் உபமான கதையிது.
இந்த உபமானக் கதையின்படி, உடலை
விற்றுப் பிழைக்கும் பெண்ணுடன் இருந்தது ‘நல்லினம்’; துறவியுடன் இருந்ததோ ‘தீயினம்’.
இனம் என்று சொல்லும்பொழுது, கூட இருப்பவர்கள் என்று பொருள்
கொள்ளக்கூடாது; மனித மனம் எதைச் சார்ந்திருக்கிறதோ, அதுவே அவனது இனத்தைக்
குறிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
______________________________________________________________________________
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். ...
... (குறள் 216)
பிறருக்கு உதவி செய்பவனிடத்தில் செல்வம் உண்டாகுமானால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிக்க மடத்தில் பழம் பழுத்தது போன்றதாகும்.
............................................................................................................................................................
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். ...
... (குறள் 217)
உதவி செய்யும் பெருந்தன்மை யுடையவனிடத்தில் செல்வம் உண்டானால், அது, தனது எல்லா உறுப்புகளும் மருந்தாகி நோயைத் தவறாது தீர்க்கும் மரம் போன்றதாகும்.
............................................................................................................................................................
இந்த இரண்டு குறள்களுக்கும், வேறு ஒரு கோணத்திலும் பொருள்கொள்ளலாம்.
கவி கம்பனிடம் ஒரு செல்வம் இருந்தது; ஆனால் அது ஒரு நயனுடையான் கண்ணில் பட்டபொழுதுதான் உலகுக்கு அறிமுகமானது.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும் அதேபோலத்தான்; மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்ற மறுத்துவிட்ட சம்பவம், ஒளவையார் கவனத்திற்கு வந்தபொழுதுதான் அது பொற்றாமரைக் குளத்தில் அரங்கேறியது.
ஆக, இந்த இரண்டு குறள்களுக்கும், ‘செல்வம் நயனுடையான் கண்ணில் பட்டபொழுது’, ‘செல்வம் பெருந்தகையான் கண்ணில் பட்டபொழுது’ என்றும் பொருள் சொல்லலாம்.
______________________________________________________________________________
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு. ...
... (குறள் 396)
மணலிடத்திலுள்ள கேணி தோண்டிய அளவுக்கேற்ப நீர் ஊறும்; அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற அளவுக்கேற்ப அறிவு பெருகும்.
............................................................................................................................................................
குறளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் சரியானதுதான் என்பதுபோல் தோன்றினாலும், ‘பெருகும் அறிவு’ என்று சொல்லாமல் ‘ஊறும் அறிவு’ என்று வள்ளுவர் சொல்வதன் அர்த்தம் என்ன?
பொதுவாக நாம் பெற்றிருக்கும் அறிவு, பெரும்பாலும் வெளியிலிருந்து வந்ததாகத்தான் இருக்கும். கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும் மற்றும் பல நூல்களைப் படித்தும் தெரிந்துகொண்டவைதான். தெரிந்துகொண்டவைகளை உள்ளே பதிவு செய்யும்பொழுது, நமது மனம், உண்மைக்கு மாறாக, அதற்கே உரிய முறையில் திருத்தியும், பதிவு செய்திருக்கலாம். ஆக, நமது அறிவின் பெருக்கம் அனைத்தும் வெளியிலிருந்து வந்தவைதான்.
அவற்றை நாம் உபயோகிப்பது என்பது, தொட்டியில் தண்ணீரை ஊற்றி, பின் அதனை கோரி உபயோகிப்பதைப் போன்றதுதான். அதனை ‘ஊறும் அறிவு’ என்று எப்படிச் சொல்லமுடியும்?
மணல் கேணியில் தண்ணீர் ஊற்றெடுக்கத் தயாராக உள்ளது; இறைக்க, இறைக்க ஊறும்தான். ஆனால் தண்ணீர் வெளிப்படமுடியாமல் மணலால் மூடப்பட்டிருக்கும்பொழுது, மூடியுள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. அதன்பின் மட்டுமே, நம்மால் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் நீரை உபயோகிக்க முடியும்.
நமக்குள்ளும், ஒரு பேரறிவு ஊற்றாக பெருக்கெடுத்து நமக்குப் பெரும்பயனைக் கொடுக்கத் தயாராக உள்ளது. ஆனால், காமம், வெகுளி, மயக்கம் போன்ற மலங்கள், மணலைப்போன்று பேரறிவை உணரமுடியாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.
கற்கவேண்டிய அனைத்தையும் கற்று, சித்தத்தின் மேல் படிந்திருக்கும் மும்மலங்களையும் அகற்றினால், அதன் காரணமாக உள்ளிருந்து பெருகும் அறிவே, ‘ஊறும் அறிவு’ எனப்படும்.
______________________________________________________________________________
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. ...
... (குறள் 220)
பிறர்க்கு உதவி செய்வதால் பொருட்கேடு உண்டாகும் என்றால், ஒருவன் தன்னை விற்றாயினும் வாங்கும் தகுதி உடையது அது.
............................................................................................................................................................
‘பிறர்க்கு உதவி செய்வதை’ வைத்து ஒருவனை ஒப்புரவாளன் என்று சொல்ல முடியுமா?
தவறான வழிகளில் பணம் சேர்த்து, அதிலிருந்து ஒருவன் உதவி செய்தால் அதனை ‘ஒப்புரவு’ என்று நினைக்க முடியுமா?
தனது நலனை, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், பிறரது நலனுக்காக பாடுபடுபவர்களைத்தானே ‘ஒப்புரவாளர்கள்’ என்று சொல்ல முடியும்.
மஹாத்மா காந்தி, விவேகானந்தர், மதர் தெராசா போண்றோரை அல்லவா ‘ஒப்புரவாளர்கள்’ என்று சொல்ல வேண்டும்.
...................................................................................................................................................................
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். ...
... (குறள் 243)
உயிர்களிடத்தில் கருணையுள்ள மனமுடையவர்கள், இருள் நிறைந்த துன்பமுடைய நரகத்தில் செல்லமாட்டார்.
............................................................................................................................................................
‘இன்னா உலகம்’ என்றுதான் வள்ளுவர் சொல்கிறார்; உலகம் முழுவதும், அந்த மனிதனைப் பொறுத்தவரை, துன்பத்தால் நிரம்பியிருக்கிறது போன்ற உணர்வைத்தரும் என்கிறார். மற்றபடி, ‘நரகம்’ என்ற வார்த்தையை அவர் உபயோகிக்கவில்லை.
அருள் நிறைந்த மனிதனுக்கு, உலகத்தில் துன்பம் என்பதே கிடையாது என்கிறார். அப்படியானால் அவர்கள் உலகத்தில் துன்பம் எதையும் சந்திக்கமாட்டார்களா என்ன?
‘அன்பு’ என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. இருந்தாலும் மனிதர்கள் இரண்டு வகையானவர்கள் என்கிறார் வள்ளுவர். “திரு வேறு; தெள்ளியராதல் வேறு” என்கிறார். அதாவது பொருளைத் தேடி ஓடுபவர்கள்; அருளைத் தேடி ஓடுபவர்கள் என இரண்டாகப் பிரிக்கிறார்.
பொருளைத் தேடி ஓடும் மனிதர்கள், பொதுவாக ‘பேராசை’, ‘பாசம்’, ‘காமம்’ போன்ற தளைகளில் மாட்டிக்கொண்டு, தான் நினைத்ததை அடையவேண்டும் என்று போராடுபவர்களாக இருப்பார்கள். நினைத்ததை அடையமுடியவில்லை என்றால், அவர்கள் படும் துன்பம் இருள் நிறைந்த உலகம் போன்று தோன்றும்.
மாறாக, அருளைத் தேடி ஓடும் மனிதனோ, எந்தவித தளைகளிலும் மாட்டிக்கொள்ளதவனாக இருப்பான்; இறைவனின் திருவருளைத் தேடி ஒடுபவனாக இருப்பதால், கருணை நிறைந்த மனிதனாக அவன் மாறி விடுவான். அதன்பின் அவனுக்குத் துன்பம் வந்தால்கூட, அதையும் அவன் இறைவன் தரும் பிரசாதமாகவே எடுத்துக்கொள்வான்.
அவனைப் பொருத்தவரை ‘இருள் சேர்ந்த இன்னா உலகம்’ என்பதே கிடையாது.
............................................................................................................................................................
அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் 72)
அன்பில்லாதவர் எப்பொருளையும் தாமே அனுபவிப்பர். அன்புடையவர் தம் பொருள் மட்டுமன்று, தமது உடலையும் பிறர்க்கு உரிமையாக்குவர்.
............................................................................................................................................................
‘அன்பிலார்’ என்பதை பிறரிடம் அன்பில்லாதவர் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
அன்பு என்று சொல்லும்பொழுது மனிதர்களை மூன்று வகையாகப்
பிரிக்கலாம்.
தாம் நேசிக்கும் மனிதர்களிடம் மட்டும் அன்பு வைப்பவர்கள்; தாம் நேசிக்கும் மனிதர்களிடம் அன்பு வைப்பதுடன், பிறரிடமும் இரக்கம் காட்டுபவர்கள்; தன்னுடன் இருக்கும் மனிதர்களைவிட மிக அதிகமாகப் பிற மனிதர்களையும் நேசிப்பவர்கள்.
இந்த மூன்றில், முதலில் குறிப்பிட்ட மனிதர்களையே ‘அன்பிலார்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் உள்ள மனிதர்கள் ‘அன்புடையார்’ எனப் படுபவர்.
இருந்தாலும், இந்த இருவருக்குமிடையில் ஒரு வித்தியாசமுண்டு.
பழைய சினிமாப் பாடல் ஒன்று உண்டு –
“பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக இருப்பவர் தெய்வமடி;
தன் பசியைக்
கருதாது பிறர்க்கு கொடுப்போர்கள் தெய்வத்தின்
தெய்வமடி”.
இதையே இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் வரும் மனிதர்களுக்கு
உரியதாக எடுத்துக்கொள்ளலாம்.
............................................................................................................................................................
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619)
முயன்ற தொழில் ஊழ்வயத்தால் கருதிய பயனைக் கொடுக்கவில்லையாயினும், அம்முயற்சி உடம்பை வருத்திய அளவுக்குக் கூலி தரும்.
............................................................................................................................................................
இங்கு 'மெய்’ என்பதற்கு ‘உடம்பு’ என்று பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஞானியர் ‘மனதையும்’ உடம்பின் ஒரு பகுதிதான் என்கிறார்கள்.
அவர்கள் ‘உடல்’ ‘மனம்’ இரண்டையும் ‘பரு-உடல்’ மற்றும் ‘நுண்-உடல்’ என்று அழைக்கிறார்கள்.
ஆக, தான் எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றியடைய, உடலை மட்டுமல்ல தன்னுடைய மனதையும் வருத்த தெரிந்திருக்க வேண்டும்.
மனதை வருத்துவது என்றால் என்ன? மனிதன் முயற்சியில் ஈடுபடும்பொழுது, மனதை வேறு எங்கும் அலைபாயவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அது ஒன்றே மனதை வருத்துவதற்கு அடையாளம்.
............................................................................................................................................................
ஆராஇயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
(குறள் 370)
ஒருபோதும் நிரம்பாத இயல்புடைய அவாவை ஒருவன் ஒழித்தால், அந்நிலை, அப்பொழுதே அவனுக்கு எப்பொழுதும் ஒரே நிலைமையுடையாதாகிய இன்பத்தைத் தரும்.
............................................................................................................................................................
இன்பம் எப்பொழுதும் ஒரே நிலைமையுடையது அல்ல; இன்பம் என்பது நிரந்தரமானதும் அல்ல. எந்த நேரத்திலும் அது துன்பமாக மாறலாம்.
‘இயற்கை’ என்பதற்கு ‘இன்பம்’ என்பதற்கு பதிலாக, ‘ஆனந்தம்’ என்று எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், ஆனந்தம் ஒன்றே நிரந்தரமானது; மாற்றமில்லாதது.
இன்பம் என்பதற்கு எதிர்ப்பதமாக துன்பம் இருப்பது போல், ஆனந்தம் என்பதற்கு எதிராக எதுவும் கிடையாது.
அது மனிதன் விழிப்புணர்வு பெற்ற நிலையில், அவனது உள்ளிருந்து வெளிப்படுவது. (அதனால்தான் சத் + சித் + ஆனந்தம் என்கிறார்கள்).
அவா (முற்றுமாக) அறுத்த நிலையில், அது உள்ளிருந்து பெருகுவதை உணர்கிறோம்; அதை உணர்ந்தபின், இன்பம்-துன்பம் போன்ற இரட்டைகளிலிருந்து விலகிவிடுகிறோம்; எதுவும் நம்மை பாதிப்பதில்லை.
இன்பம் எதன்காரணமாகவோ வருவது; ஆனந்தம் என்பதோ எதுவும் இல்லாத நிலையிலும், அவா அறுத்த நிலையில் வருவது.
ஒருதடவை அந்த ‘ஆனந்த’ ஊற்றை உணர்ந்துகொண்டால், அதன்பின் அது நிரந்தரமாக குடிகொண்டுவிடும்.
............................................................................................................................................................
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”.
(குறள் 350)
பற்றற்ற கடவுளின் பக்தியை மனத்திற் கொள்ளுதல் வேண்டும். ஆசாபாசங்களை
விடுவதற்குப் பற்றப்படுவதாகிய கடவுளைப் பக்தி செய்தல் வேண்டும்.
..................................................
“ஆசாபாசங்களை விடுவதற்கு” என்பதற்குப் பதிலாக “ஆசாபாசங்கள் உன்னை
விடுவதற்கு” என்று இருக்கவேண்டும்.
“பற்று விடற்கு” என்றுதான் வள்ளுவர் கூறுகிறார்; “பற்றை விடற்கு”
என்று சொல்லவில்லை.
‘கந்த சஷ்டி கவசத்தில்”, ‘பாச வினைகள் பற்றது நீங்கி’ என்றுதான்
வருகிறது; ‘பற்றினை நீக்கி’ என்று வரவில்லை.
உலகப் பொருட்களில் நாம் கொண்ட ‘பற்றை’, நம்மால் நீக்க முடியாது.
இறைவன்பால் பக்தியைச் செலுத்தி, அதன்காரணமாக அவன்மேல் நம் பற்றினை வளர்த்தால்,
உலகப் பொருட்களில் நாம் கொண்ட பற்றின் காரணமாக ஏற்பட்ட ஆசாபாசங்கள் நம்மை விட்டு
விலகிவிடும்.
வாழைத்தாரில் காய்கள் பருத்து வளரும்பொழுது, அந்தக் காய்களின் ஒவ்வொரு
‘சீப்பின்’ மேலும் படர்ந்திருந்த தோல்கள், ஒவ்வொன்றாக உதிர்ந்து விடுவதுபோல்,
இறைவன்பால் நமது பக்தி வளர, வளர, நம்மைப் பீடித்திருக்கும் ‘ஆசாபாசங்கள்’
ஒவ்வொன்றாக விலகிவிடும்.
அது சரி! இறைவன்பால் நாம் கொண்ட பக்தி எப்பொழுது வளரும்? வேண்டுதல்
ஏதுமின்றி, எப்பொழுது இறைவனிடம் சரணாகதி அடைகிறோமோ (ரிஷி பதஞ்சலி இதனை “ஈஸ்வர
ப்ரணிதான்” என்கிறார்), அப்போழுதுமட்டுமே நமது பக்தி வளரும்.
இந்தக் குறளில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
குறளை மூன்று பகுதிகளாகப் பிரித்து, அது கூறும் உட்பொருளைப் பார்ப்போம்.
1. பற்று விடற்கு
2. பற்றுக பற்றற்றான்
பற்றினை
3. அப்பற்றைப் பற்றுக
"பற்று உன்னை விட்டு நீங்குவதற்கு, பற்றற்றான் பற்றினைப் பற்றுக" என்று மட்டும் சொல்லாமல், கூடவே "அப்பற்றைப் பற்றுக" என்று கூடுதலாக வள்ளுவர் ஏன் சேர்த்தார்?
பொதுவாக நாம் குறிப்பிட்ட வேளைகளில் இறைவனை வணங்குகிறோம். மற்ற நேரங்களில் நாம் நமது வேலைகளில் மூழ்கி விடுகிறோம். அந்த நேரங்களில் நாம் இறைவனை நினைக்கிறோமா?
இறைவன் மீது நாம் வைக்கும் பற்றை, நாம் இறைவனை வணங்காத நேரங்களிலும் விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார். அது முடிகிற காரியமா?
ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் .. ஒரு தாய் எந்த வேலையில் இருந்தாலும் அவள் கவனமெல்லாம் தொட்டிலில் உறங்கும் குழந்தையின் மேலேயே இருக்கும். அதேபோன்று நாமும் எந்த வேலை செய்துகொண்டு இருந்தாலும், நமது கவனம் எப்போதும் இறைவன் மீது இருக்க வேண்டும்".
இதைக் குறிக்கும் விதமாகத்தான் "அப்பற்றை பற்றுக" என்கிறார் வள்ளுவர்.
...................................................
“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு”.
(குறள் 23)
பிறப்பு, வீடுகளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பில் துறவு
மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்தது.
.....................................................................................................................................
மனித வாழ்க்கையின் இறுதியான கொள்கையை, இந்தக் குறளுக்கான பொருள்
விளக்குகிறது.
இருந்தாலும், நாம் வேறு ஒரு கோணத்திலும் இதற்கான பொருளைப்
பார்க்கலாம்.
‘இருமை வகைதெரிந்து’ என்று சொல்லும்பொழுது, அது ‘பொருட்செல்வம்’
மற்றும் ‘அருட்செல்வம்’ இரண்டையும் குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.
உலகம் இரு மாறுபட்ட தன்மைகளைக் கொண்டது; திரு வேறு, தெள்ளியராதல் வேறு
என்று வள்ளுவர் சொல்கிறார். (குறள் 374). அதாவது செல்வம் வேறு, ஞானம் வேறு என்கிறார்.
ஒன்று பொருட்செல்வத்தைக் குறிக்கிறது; மற்றொன்று அருட்செல்வத்தைக்
குறிக்கிறது.
இந்த இரண்டிலும்,
அருட்செல்வமே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர். (குறள் 241).
அருட்செல்வத்தை நாடி
தன் வாழ்க்கையைத் தொடரும் மனிதன், தர்ம நெறிகளுக்குக் கட்டுப்பட்டே தன் வாழ்க்கையை
நடத்துவான்; அதனையே வள்ளுவர் ‘அறம்பூண்டார்’ என்று சொல்கிறார்.
ஒருவேளை, அவன் தர்மநெறிகளுக்குப் புறம்பாக நடக்க நேரிட்டால், அது
குற்றமற்ற நன்மைக்காக மட்டுமே இருக்கும். (குறள் 292).
‘தர்ம நெறிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவன்’, அவனே அறியாமல்கூட துறவு
மனப்பான்மையை அடையக்கூடும்.
...........................................................................................................................................
“இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு”. (குறள் 352)
மயக்கத்தினின்று தெளிந்து குற்றம் தீர்ந்த மெய்யறிவுடயவருக்கு அம்மெய்யறிவு
துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும்.
.....................................................................................................................................
“மருள்நீங்கி” என்று வள்ளுவர் சொல்கிறார். “மருள்” என்பதற்கு மயக்கம்
என்று பொருள் சொல்கிறார்கள். உண்மையில் மயக்கம் என்பது என்ன?
நிலையில்லாதவற்றை நிலையென எண்ணுவதும், நிலையான ஒன்றை நினைக்காமல் இருப்பதும்தான் உண்மையான மயக்கம் ஆகும். மற்ற மயக்கங்கள் அனைத்தும் இதிலிருந்து வருவதுதான்.
இந்த மயக்கம் (மருள்) நீங்கிவிட்டால், இருள்நீங்கி இன்பம் பயக்கும் என்கிறார் வள்ளுவர்.
“இருள்நீங்கி” என்பதற்கு, துன்பம் நீங்கி என பொருள் தரப்பட்டுள்ளது. உண்மையான இருள் என்பது, “நான்”, “எனது” என்ற எண்ணம்தான்.
“நான்”, “எனது” என்ற எண்ணம் இருக்கும் வரையில், நமக்கு துன்பம் ஏதாவது ஒரு வழியில் வந்துகொண்டிருக்கும்; அந்த எண்ணம் இல்லாதபொழுது, எந்த துன்பம் வந்தாலும் அது துன்பமாகத் தெரியாது.
“நான்”, “எனது” என்ற எண்ணம் இல்லாத மனிதன் மட்டுமே, “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்று சொல்லமுடியும். .................................................................................................................................................................“
நாள்தோறும் நாடுக மன்னன், வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு”. (குறள் 520)
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும்
வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
........................................................................................................................
வினைசெய்வான் என்பதற்கு தொழில் செய்கின்றவன் என்று சொல்வது முழுமையாக
இல்லை.
விவசாயி, தொழில் செய்கின்றவன், வணிகன் ஆகிய மூவருமே வினை
செய்பவர்கள்தான்.
விவசாயி நிலத்தில் விளைபொருட்களை உற்பத்தி செய்கிறான்; தொழில்
செய்கின்றவன் தனக்குரிய இடத்தில் பொருளை உற்பத்தி செய்கிறான்; வணிகன் அந்தப்
பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறான்.
ஆக, மூவருமே வினைசெய்பவர்கள்தான். ஆகையால் மன்னன் நாள்தோறும் இந்த
மூவருடைய நிலைமையையும் ஆராய வேண்டும்.
............................................................................................................................................................ “தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்”. (குறள் 293)
நெஞ்சாரப் பொய் பேசாதீர்; பேசினால் பேசியவன் நெஞ்சே அவனைத் தண்டிக்கும். ஒருவன் தனது மனசாட்சிக்கு மாறாகப் பொய் கூறலாகாது. அவ்வாறு பொய் கூறினால் பின்னர் தானே வருந்த நேரிடும்......
........................................................................................................................
இந்தக் குறள் “வாய்மை” என்ற அதிகாரத்தில் வருகிறது.
இதில் ‘பொய்ம்மை’, ‘பொய்யற்க’, ‘பொய்த்தபின்’, ‘பொய்யாது’, ‘பொய்யாமை’ போன்ற வார்த்தைகளுக்கு ‘பொய் பேசுதல்’ என்றே பொருள் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் ‘மனம், மொழி, மெய்’ மூன்றின் மூலமாகவும் ‘பொய்ம்மை’ நடைபெறலாம்; மற்றும் ‘வாய்மை’ இல்லாமலும் இருக்கலாம். வாய்மை இல்லாதிருந்தால், அதுவும் ஒருவகையில் பொய்ம்மைதானே?
நண்பர் ஒருவர் வெளியூர் செல்லும்பொழுது, பாதுகாப்பு கருதி தன்னிடம் உள்ள நகையை கொடுத்துச் செல்கிறார். சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். அவர் நம்மிடம் நகையை கொடுத்தது யாருக்கும் தெரியாது; நாம் யாரிடமும் இதைப்பற்றி சொல்லாது மறைத்துவிட்டால், அதை என்னவென்று சொல்வது? ‘பொய்ம்மை’ என்றுதானே சொல்லவேண்டும்.
செந்தண்மை பூண்டு
ஒழுகலான்” (குறள் 30)
எல்லா உயிர்கள் மீதும் அருளுடையவராக நடந்து கொள்வதால், அந்தணர் என்று சொல்லப் பெறுபவர் பற்றினை விட்ட துறவியர் ஆவர்.
........................................................................................................................
பற்றினை விட்ட துறவியர் மட்டுமே அந்தணர் என்று சொல்வது சரியா?
எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அனைவருமே அந்தணர் என்று அழைக்கத்தக்கவர்தானே?
செந்தண்மை பூண்டு ஒழுகுதல் என்றால் என்ன? இல்லறத்தில் உள்ளவர்கள் அப்படி இருக்க முடியாதா?
இல்லறத்தில் உள்ளவர் செந்தண்மை பூண்டவர் என்று எப்படி தெரிந்து கொள்வது?
ஆசை, பாசம் இவற்றிலிருந்து விடுபட்டவர் மட்டுமே செந்தண்மை பூண்டு ஒழுக முடியும். ஏனெனில் இவர்கள் மட்டுமே பற்றின்றி இருப்பார்கள்.
“ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்....” என்கிறார் பத்திரகிரியார். இதிலிருந்து விடுபட்ட இல்லறத்தார் எப்படி இருப்பார்கள்? அதற்கும் அவரே விடை தருகிறார்; அதாவது “..புளியம்பழமும் தோடும்போல்...” என்கிறார்.
இல்லறத்தில் இருந்தாலும் ‘தாமரை இலை தண்ணீராக’ இருப்பார்கள். (Detached Attachment).
பற்றற்ற துறவியர் மட்டுமல்ல, பற்றின்றி வாழும் இல்லறத்தாரும் அந்தணர்தாம். அவர்களும் செந்தண்மை பூண்டு ஒழுகும் குணம் உடையவர்கள்தான்.
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”. (குறள் 202)
தீய செயல்கள், தம்மைச் செய்தவனுக்குத் துன்பம் தருதலால், அவை தீயைவிட அதிகமாக அஞ்சத் தக்கவையாகும்.
...................................................
தீயவை என்பதற்கு தீய செயல்கள் என பொருள் தரப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் தீய செயல்கள் செய்வதற்கு காரணமாக இருப்பது அவன் மனதில் உள்ள தீய எண்ணங்கள். (உ.ம். பொறாமை, வெறுப்பு, பழியுணர்ச்சி போன்றவை). இந்த எண்ணங்களுக்கு காரணமாக இருப்பது அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் மூலமாக வரும் பதிவுகள்.
ஒவ்வொரு மனிதனிடமும் உணர்வு மனம், உணர்வற்ற மனம் என்று இரண்டு வகை உண்டு. உணர்வற்ற மனதை ஆழ்மனம் என்றும் சொல்வதுண்டு.
உணர்வு மனதில் ஏற்படும் பதிவுகள் மாறிக்கொண்டேயிருக்கும். ஆனால், ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும். இதில்தான் தீய எண்ணங்கள் உருவாக காரணமாக இருக்கும் பதிவுகளும் ஏற்படுகின்றன.
இத்தகைய பதிவுகளைத்தான் தீயினும் அஞ்சத்தக்கவைகளாக நினைக்கவேண்டும்.
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"
.. குறள் எண் : 129
(ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது)
இந்தக் குறளுக்கான பொருள் சரியாகவே உள்ளது. ஆனாலும், 'தீயால் சுட்ட புண்', 'நாவால் சுட்ட வடு' இரண்டிற்கும் இடையே ஒரு மெய்ப்பொருள் மறைந்துள்ளது.
தீயால் சுடும் போது, அதனால் தோல், அதன் உள்ளே உள்ள சதை இரண்டும் பாதிக்கப் படுகின்றன. நாளடைவில் தீக்காயம் குணமானாலும், தோலில் உள்ள வடு நீங்காது; இருப்பினும் உள்ளே உள்ள சதைப்பகுதி முற்றிலும் ஆறிவிடும்.
தீக்காயம் புறத்தே நிகழ்ந்த நிகழ்வு. நாவினால் சுட்ட வடு நெஞ்சில் நிகழ்கிறது? அதை நெஞ்சில் நிகழ்த்தியது யார்?
கொடிய வார்த்தைகளை கொட்டியவனால் நெஞ்சில் காயத்தை ஏற்படுத்த முடியாது. அதை ஏற்படுத்துவது நமது மனமே!?
பாஞ்சாலி கொடிய வார்த்தைகளை கொட்டவில்லை; கேலியாக சிரித்தாள். அதுகூட துரியோதனன் மனதில் நீங்காத வடுவாக மாறி யுத்தம் வரை சென்றுவிடுகிறது.
ஆக, யுத்தத்திற்கு காரணம் பாஞ்சாலி செய்த கேலி சிரிப்பா அல்லது அதை உதாசீனப் படுத்த தெரியாமல், துரியோதனன் தன் நெஞ்சில் ஏற்படுத்திக்கொண்ட வடுவா?
ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. குடும்ப விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். என் உறவினர் ஒருவரும் வந்திருந்தார். அவருக்கு என்னை பிடிக்கும்; என்னை கேலி செய்வது மிகவும் பிடிக்கும்.
நான் அணிந்திருந்த செருப்பை பார்த்துவிட்டு "ஏண்டா, முருங்கை மரத்தில் கட்ட வேண்டிய செருப்பை இப்படி கால்ல போட்டிருக்க?"
(நான் செருப்பு வாங்கினால் அது பழுதடையும் வரை மாற்றுவதில்லை. ஆனால், அவரோ அடிக்கடி புது செருப்பு வாங்கி விடுவார்)
அவர் கேலியாக சொன்னாலும், நாலு பேர் முன்னாலே சொன்னால், நமக்கு கோபம் வருவது சகஜம் தானே!?
ஆனால், நான் கூறிய பதில் "சத்தம் போட்டு சொல்லாதீர்கள்; இந்த செருப்பையே அங்கே இருந்துதான் எடுத்து வந்தேன்". அங்கிருந்த அனைவரும், எனது உறவினர் உட்பட, உடனே சிரித்து விட்டார்கள்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி:-
தீ போன்றவைகளால் ஏற்படும் காயத்தை நம்மால் தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால், நெஞ்சில் வடு ஏற்படுவதும், ஏற்படாமல் போவதும் நம் கையில் தான் உள்ளது.
அதற்கு நாம் செய்ய வேண்டியது.. 'எப்படி உதாசீனம் செய்வது' என்று கற்றுக் கொள்வதுதான்.
.....................................
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்".
.. குறள் எண் – 972
மனிதர்கள் எல்லாரும் சமம் என்று சொல்பவர்கள், குறளின் முதல் வரியைக் குறிப்பிடுவார்கள்.
இருக்கலாம்; ஆனால், மனிதர்கள் செய்யும் தொழிலைப் பொறுத்து அவர்களது சிறப்பு மாறுபடும் என்று சொல்பவர்கள் பகவத் கீதையில் வரும் "குண, கர்ம விபாகசஹ" என்ற சொற்றொடரை மேற்கோள் காட்டுவார்கள். பொதுவாக 'கர்ம' என்றால் 'செய்யும் தொழில்' என்று அர்த்தம் என சொல்வதுண்டு. ஆனால், இந்த இடத்தில் அது தவறு எனத் தோன்றுகிறது. அதைப் பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.
குறளில் வள்ளுவர் 'செய்தொழில் வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'செய்தொழில் வேற்றுமையான்' எனக் கூறுகிறார். 'வேற்றுமையால்' என்று சொல்லாமல் 'வேற்றுமையான்' என ஏன் கூறுகிறார்?
சிலர் 'தொழில் செய்பவரின் திறமையைப் பொறுத்து, சிறப்பானது வேறுபடும்' என்று சொல்கிறார்கள்.
ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்ய பல மந்திரிகள் இருப்பார்கள். அதில் சிலர் நாட்டு நலனுக்காக உழைப்பார்கள்; சிலர் தங்களது வீட்டு நலனுக்காக உழைப்பார்கள். அவர்களின் தொழில் ஒன்றாக இருந்தாலும், அவர்களின் நோக்கத்தில் மாறுபாடு இருக்கிறது. ஆக, 'வேற்றுமையான்' என்பதற்கு 'செய்யும் தொழிலின் பின்னே மறைந்திருக்கும் நோக்கத்தைப் பொறுத்து தொழில் செய்பவர்களின் சிறப்பு மாறுபடும்' என்றும் சொல்லலாம் அல்லவா?
........................................
உணர்வற்ற ஆழ்மனதில் சச் சித் ஆனந்தம் பெருகட்டும்
ReplyDeletehttp://thiruththam.blogspot.com/2009/11/blog-post.html
ReplyDelete